Wednesday, 27 April 2016

பெரியம்மா வீடுவாய் திறப்பதற்கு  முன் கண் திறந்து விட வேண்டும் என்ற எண்ணம்  வாய்க்கு முதலில் வந்துவிட்டதால்  மூடிய  இமைகளில் விழியுருண்டைகள் அசைந்து கொண்டிருக்க குணா லேசாக வாயைத் திறந்து விட்டான். நெடியுடைய எச்சில்  இடக்கை மணிக்கட்டில் பட்டதும்  துடித்துப்  போய்  எழுந்து கொண்டான். நல்லவேளை  தலையணையில் எச்சில் படவில்லை  என்ற நிம்மதி. பின் பெரியம்மா வீட்டில்  தானே இருக்கிறோம்  என்ற அலட்சியம். மணி ஆறடித்தது. வழக்கத்தை  விட  வெளிச்சம் குறைவு என எண்ணிக்  கொண்டான். டிராயரை முழங்கால்  வரை கழற்றிக்  கொண்டு ஆற்றரெதிரே ஒன்னுக்கடித்தான். மார்பு வரை பாவாடையை  உயர்த்திக்  கட்டி ஆற்றில் குளித்துக்  கொண்டிருந்த பெண்ணொருத்தி பக்கத்தில்  நீந்தியவளிடம் “இங்கேருடி கெலுத்தி மீன சொறுகி வெச்சிருக்கான்” என்றாள். “போடி” என தலையை நொடித்துக்  கொண்டு டிராயரை உயர்த்திக் கொண்டான்  குணா. ஷாலை இடுப்பில்  இறுக்கி முடிந்தவாறு சுகன்யா துவைத்த  துணிகளோடு எதிர வந்தபோது  குணா இடதுகையால் பிரஷ்ஷை வாய்க்குள்  விட்டுத்  துலாவிக் கொண்டிருந்தான். சுகன்யாவின் முகம்  குழப்பத்தில்  கோணியது.
பசை நுரையை துப்பிவிட்டு “என்னடி” என்றான்.
“அக்கான்னு  சொல்றான்னா” என்று லேசாக பல்லைக்  கடித்துக் கொண்டு  அவனை குட்டினாள்.

“போடி வெள்ள உளுவ” என்றவாறே  வாய் கொப்பளிக்க  ஓடினான். அப்போது தான் கவனித்தான்  லேசாக இருட்டியிருந்தது.

“நாலு மணி நேரம்  தூங்கினா ராப்பகல் எப்படித் தெரியும்” என்றவாறே  பெரியம்மா  கூட்டிக் கொண்டிருந்தாள்.

குணாவால் அப்போதும்  அது மாலையென நம்ப முடியவில்லை. சனிக்கிழமை  ஐந்தரை மணி படத்தைப்  பார்த்தும்  சந்தேகம்  கொண்டான். எல்லோரோடும் சேர்ந்து  கொண்டு சூரியனும் தன்னை ஏமாற்றுவதாக  நினைத்தான். கோபம் வந்தது. வெளியே ஓடினான். சூரியன்  இல்லை. சுகன்யா  ஏதோ படித்துக்  கொண்டு அமர்ந்திருந்தாள். நிலவின்  மங்கலான வெளிச்சத்தில்  புன் முறுவலுடன் அவள் முகம் உறைந்திருந்தது அழகாக  இருந்தது. குணா ஸ்விட்சை தட்டினான்.
“ஆஂப் பண்றா” என்றாள்  சுகன்யா.

முகம் சுண்டிப் போய் அணைத்தவன் மீண்டும் தானொரு  ஆண் அதிலும்  பேண்ட் போடுமளவு தனக்கு வயது வந்துவிட்டது  என நினைவு வந்தவனாய் சுவிட்சை  தட்ட கையை  கொண்டு சென்றான். அதற்குள்  சுகன்யா  அவனை இழுத்து தன் தொடையில்  அமர்த்திக்  கொண்டாள். அவள் விழிகள்  சிரித்தன.

அவன் தோளில்  தலையை  வைத்தவாறு “உனக்கு  ஹரி  மாமாவ…..” என சொல்லத் தொடங்கிய  போது  பெரியப்பாவின்  டி.வி.எஸ் பிப்டி வாசலில்  வந்து நின்றது. சிரிக்காமல் “தம்பி” என்று  அழைத்தால்  குடிக்கவில்லை. சிரித்தார். குணாவின் முகம்  வாடியது. அதுவரை  உற்சாகம் மின்னிய  சுகன்யாவின்  விழிகள் இருண்டன.
“ப்ச்” என்றாள்  அவர் உள்ளே  போனதும்.
“என்னாச்சுக்கா” என்றான் குணா. கேட்ட  பிறகு அவனுக்கே  அக்கேள்வி  சம்பந்தம்  இல்லாததாக தோன்றியது  அதேநேரம்  சரியாகவும்  பட்டது. சுகன்யா  அவனை அணைத்துக்  கொண்டாள். குளித்த மணம்  அவளிடம்  வெளிப்படுவதாக குணா நினைத்தான். அவள் நகர்ந்த  போது காரணமே  இல்லாமல்  அவனுக்கு  கோபம் வந்தது.

வீட்டிற்குள்  நுழைகையில்  கூடத்தில் யாருமே இல்லை  என்று  நினைத்த  உடனே அவ்விருப்பு அவன் நினைவில்  எழுந்தது. தொலைபேசி. அவன்  உறவினர்  வீடுகளில் பெரியம்மா  வீட்டில்  மட்டும் தான்  தொலைபேசி இருந்தது. சென்ற வருடம்  கோடையில் மீனாவுக்கு  திருமணம்  ஆகியிருக்கவில்லை. அன்று  அவள் வீட்டின் பின்புறமிருந்த குளக்கரையில்  தோழிகளுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தாள். தொலைபேசி  ஒலித்தது. சனியனுக்கு குணா மட்டும்  தான் வீட்டில் இருக்கிறான்  என்ற அறிவே  இல்லை. அவன் அதுவரை  தொலைபேசியை தொட்டது கூட கிடையாது. ஒலித்தது. உள்ளே  மெல்லிய குறுகுறுப்பு  குடையவே ரிசீவரை எடுத்துவிட்டான்.

“ஹலோ” என்று அவன் சொன்னது  அவனுக்கே கேட்கவில்லை. எதிர்புறம்  பேசிக் கொண்டே இருந்தது. தன் தரப்பையே கேட்காமல் முடிவெடுக்கும்  அப்பா ஞாபகம்  வந்தது. ஆவேசம்  வந்தவனாய் “நான்  குணா  பேசுறேன்” என்று  கத்தினான். மீனா  உட்பட  அனைத்து பெண்களும்  அலறிப் புடைத்துக்  கொண்டு கூடத்திற்கு  ஓடிவந்தனர். ஒரு கையில் ரிசீவருடன் மீனாவை பாவமாக  பார்த்தான். எதிர்முனை துண்டிக்கப்பட்டிருந்தது.
மீனாவின்  தோழிகளில் ஒருத்தி  கமறாலாக “ம்க்ம்” என்று  சிரிப்பை  வெளியேற்ற முயன்றாள். அனைவரும்  வெடித்துச்  சிரிக்க அந்த ஒலியே போதுமானதாக  இருந்தது.
“அந்த  பக்கம்  இருந்தவனுக்கு ஹார்ட்  ப்ராப்ளம் இல்லாம  இருக்கனுமே கர்த்தாவே” என்றாள்  ஒருத்தி.
குணாவுக்கு கோபம்  பொத்துக் கொண்டது. பின்ன ஆறு வயசாச்சுல்ல. கோபத்தை அழுகையாய் வெளிப்படுத்துவது  ஆண் மகனுக்கு  அழகல்ல என்று அவன்  இன்னமும்  கற்றுக் கொள்ளவில்லை. இருந்தும்  அக்காவின் தோழிகள் முன்பு அழக்கூடாது என உதட்டை இறுக்கிக்  கொண்டான். அவர்கள்  சென்றதும் மீனாவை பார்த்தான். அழ முயன்றான். ‘அய்யய்யோ  என்னது  அழுகை  வரமாட்டுதே’. அதன்பின்  எப்படியோ  ஏற்கனவே  அழுத தருணங்களை  எல்லாம்  ஒன்றுதிரட்டி தேம்பத் தொடங்கினான். அன்றிரவு  அவனை சமாதானப்படுத்தி  அணைத்தவாறே மீனா தூங்கிப் போனாள். சமாதானம்  ஆனாலும்  தொலைபேசி மீது அவனுக்கு  பயம் போக வில்லை.
இப்போது  மணி ஒலித்து விடக்  கூடாதே என்ற தயக்கத்துடன்  வாசலிலேயே  நின்றான். பின் கட்டு வழியாக  உள் நுழைந்த சுகன்யா  அவனைப் பார்த்து  சிரித்தாள். கோபம் வந்தவனாய்  அவளை அடிக்க  ஓடினான். இரு கைகளையும்  வலுவாகப் பற்றி அவனை மடி மீது அமர்த்திக்  கொண்டாள். திமிறிக்  கொண்டே இருந்தவன் “நாளைக்கு ஆத்தூர்  போகனுமாம். பெரியம்மா சொன்னிச்சு” என்று  சொன்னவுடன் “நீ வருவியா” என்றான். அவள் “பார்ப்போம்” என உதட்டை பிதுக்கினாள்.

முதல் ஆளாக தான் தான் எழுந்திருக்க  வேண்டும் என்பதில்  குணா உறுதியாக  இருப்பான். பெரியம்மா வீட்டில்  அதற்கொரு விஷேசக் காரணமும்  இருந்தது. தூக்கக்  கலக்கத்துடன் பெரியம்மா முன் போய் நின்றால்  அவள் சிரித்தபடி தலையைக்  கோதுவாள். அது குணாவுக்கு  பிடிக்கும். சுண்டிய முகத்துடன் சுகன்யா படுக்கையை  வெளியே  கொண்டு போனாள். அவள் ஆத்தூர்  வரப்போவதில்லை என எண்ணிக்  கொண்டான். “ எப்ப  பெரிம்மா போறோம்?” என்றான். “நைட்டு முழுக்க இததான் மண்டையில  உருட்டினியா. எட்ர வண்டில போலான்டா” என்று  அவன்  கன்னத்தை இடித்தாள்.

ஒரு இடத்தில் தொடர்ந்து  நிற்பது  குணாவுக்கு பிடிக்காது. பெரியம்மாவின்  சேலைத் தலைப்பினை கையால் சுற்றியவாறு பேருந்து வரும்  திசையையே பார்த்து நின்றான். பெரியப்பாவும்  உடன் வருவது அவனுக்கு காரணம்  புரியாத  குதூகலத்தை  அளித்தது. ஜன்னல் கம்பிகளை  பல்லால்  கடித்தவாறே வேடிக்கை  பார்த்துக்  கொண்டே  வந்தான். சித்திரை  மாதமென்பதால் வறண்டு போய் கிடந்தது  வெளி. பொட்டலின் வெளிர் மஞ்சள்  நிறத்தில்  கீதாரிகள் செம்மறி ஆட்டுக்  கிடையை ஓட்டி வருவது பொட்டலே அசைந்து அலையடித்து முன்னேறுவது போலிருந்தது. சில நிமிடங்கள்  அசைவற்று இருந்தவன் பெரு மூச்சு விட்டான். பட்டென்று  முதுகில்  அடி விழுந்தது. அது பெருமூச்சு  விட்டதற்கு.

வீட்டிற்குள்  நுழைகையில்  திண்ணையிலேயே அபினேஷ் தவழ்ந்து கொண்டிருப்பதை கண்டுவிட்டான். அவனை மீனா வந்து தூக்கிக் கொள்ளக்  கூடாது  என நினைத்திருந்த போதே  அவனை எடுத்துக்  கொண்டு “என்னடா முறைக்கிற. திருட்டுப்  பயலே  உள்ளே வா” என் வலக்கையில்  குணாவின் தோளைப் பற்றி உள்ளே இழுத்தாள். குணா மீனாவையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘எவ்வளவு  மாறிட்டா  அக்கா. கல்யாணமாகி  ஆத்தூர் வந்தப்ப  என்ன செஞ்சாலும்  அவகிட்ட  ஒரு தயக்கம்  இருக்கும். பெரியம்மா வீட்டில்  அவ வெச்சது தான் சட்டம். பெரியப்பா குடிச்சிட்டு  சலம்பல் பண்ணாறுன்னா “ஒழுங்கு மரியாதையா போய் படுத்துக்க. இல்லன்னா  அப்பன்னு கூட பாக்க மாட்டேன்” என்பாள். அதுக்கப்புறம்  சத்தமே  இருக்காது. அதனாலேயே  மீனா  கல்யாணம்  வரைக்கும் சுகன்யா  அவளிடம்  பேசமாட்டாள். ஆனா இப்ப மீனா அப்படி  இல்லையே. அதனால்தான் சுகன்யா அவளிடம்  நல்லா பேசுறாளோ என்னவோ. தேங்காய் துருவலை  வாயில்  அள்ளிப்  போட்டுக் கொண்டு மீனாவின்  இடையை வளைத்தவாறு “நீ முன்ன மாதிரியே  இல்ல. மாமாவையும் கூட்டிட்டு  வந்துடுக்கா. நம்ம வீட்டுக்கு போயிடலாம்” என்றான். அபினேஷையும் அக்கா கூட்டி வந்து விடுவாளோ என்ற பயம் வேறு. அவனை குனிந்து  தலைகோதி சிரித்தாள் . உதடு சிரிக்கும்  போது கண்ணகளில் நீர் வழிவதை குணாவால்  புரிந்து  கொள்ள முடியவில்லை.

“குணா சாப்பிட  வரலையா?” என்று இலைக்குப் பின்னிருந்து  எட்டிப்  பார்த்தபடி  பெரியப்பா கேட்டார். “அவன் எங்கூட  சாப்பிடுவான்” என்று மீனாவின்  குரல்  மட்டும்  பின் கட்டிலிருந்து கேட்டது.

“திருவாரூர்  போயிட்டு  போயிடலாம்” என பெரியப்பா சொன்னது  முதலில்  இன்ப அதிர்ச்சியாக  இருந்தது. பின் அங்கிருந்து  தன் வீட்டிற்கு  அழைத்துப் போய் விடுவார்களோ என்று  பயந்தான். பின்ன அவன் உருவாக்கியிருந்த விதவிதமான  விளையாட்டுப் பொருட்கள்  சுகன்யா  காட்டிய  காமிக்ஸ் புத்தகங்கள்  நரம்புத்  தொட்டில் பெரியப்பா செதுக்கிக் கொடுத்த  மர கிரிக்கெட்  பேட் இதெல்லாம்  பெரியம்மா வீட்டில்  இருக்கிறது. அவனுக்காக  யார் இதெல்லாம்  மெனக்கெட்டு எடுத்து  வருவார்கள்? அதோடு மீனா மாதிரி சுகன்யாவும் கல்யாணமாகி  வேற வீட்டுக்குப் போயிடுவா. நல்லவேளை பெரியம்மாவுக்கு மட்டும்  கல்யாணம்  ஆகாது . எல்லா  கோடையிலும் தன்னுடன்  இருப்பாள் என நினைத்தது  ஆறுதலாக  இருந்தது. வீட்டுக்கு போக அனுமதிக்கக் கூடாது.  பெரியப்பா அழைத்தால்  என்ன செய்வது. அவர் குணாவை ரொம்ப நல்ல பிள்ளை  என நினைத்திருக்கிறார். அழைக்க மாட்டார். அவரும்  நல்ல பிள்ளை தானே என  குணா  எண்ணிக் கொண்டான். பேருந்து  வாளவாய்க்காலை தாண்டிய  போது மேம்பாலத்தை  பேருந்து  கடக்கும்  போது ஒரு ரயில் வண்டி கூவிக் கொண்டு கீழே செல்ல வேண்டுமென  வேண்டினான். “என்னடா” என்றார் பெரியப்பா. அவன் சொல்லவில்லை. சொன்னால் வேண்டுதல்  பலிக்காதல்லவா! பலித்தது. தைலம்மை தியேட்டரில்  படையப்பா படம் ஓடிக் கொண்டிருந்தது. பனை மரமளவிற்கு இருந்த ரஜினி சுருட்டு  பிடிக்கும்  படத்தையே  பார்த்துக் கொண்டிருந்தவன்  பெரியம்மா  வெடுக்கென இழுத்ததும் நிலை குலைந்து  விட்டான். “ இறங்கலாம்  வா” என்று அவன் இடக்கையயை பிடித்துக்  கொண்டு  பெரியம்மா  நகர்ந்தாள். குணா நெரிசலில்  முண்டியடித்தான். பெரியம்மாவின் பிடி நழுவியது.

பேருந்தினுள் அனைவரும்  சேர்ந்து தன்னை அழுத்திக்  கொல்லப் போவதாக குணா பயந்து விட்டான். ஆவேசமாய் தன்மீது  மோதிய ஒவ்வொரு  உடலையும்   பிடித்து  நகர்த்தி நகர்ந்து கொண்டிருந்த  பேருந்தில் இருந்து  வெளியே குதித்தான். “தம்பி டேய்” என்ற பெரியம்மாவின் குரல்  எங்கோ எனக் கேட்டது. நீளமாக  மூச்சை இழுத்து  விட்டு  நிம்மதி  அடைந்த பிறகு  தான் திருவாரூர்  பேருந்து  நிலையத்தில்  தனியே நிற்பது அவனுக்கு நினைவில்  தட்டியது. இருட்டவும் ஆரம்பித்தாயிற்று. திடீரென மனிதர்கள்  அனைவரும்  பேய்களாகவும் பூதங்களாகவும் தென்பட்டனர். கால்  ஒரு அடி கூட  நகர மறுத்தது. நகர்ந்து எங்கே செல்வது? அவ்வெண்ணம் மேலு‌ம்  பயத்தை தந்தது. சட்டை இல்லாமல்  கண் அழுகி  தலைக்கு எண்ணெய் வைக்காமல்  கோவில்  வாசலில் உட்கார்ந்திருக்கும் பிள்ளைகளை  எண்ணிய போது உடம்பு  உதறிக்  கொண்டது. அவன்  யார் முகத்தையும்  நிமிர்ந்து  பார்க்கவில்லை. அத்தனை பேரும்  “புள்ளபுடிக்கிறவனுங்க” எனபதே அவன் பிரதான  எண்ணமாக  இருந்தது. வாகனங்களை  கவனித்தான். அவை முடிவே இல்லாமல்  வந்து கொண்டிருந்தன. எண்ணலாமா  என நினைத்தான். அவனுக்கு நூறு வரைக்குந்தான்  எண்ணத்  தெரியும். பசியெடுப்பது போலவும்  மூத்திரம்  முட்டுவது போலவும்  இருந்தது .
“அழுதேன்னா புள்ள புடிக்கிறவன்  தூக்கிட்டு போயிடுவான்” என்று  பெரியம்மா  சொன்னது நினைவுக்கு  வந்தது. அழாமல்  குனிந்து நின்றான். ஏனெனத்  தெரியவில்லை. குனிந்தால் அழுகை குறைந்து  விடுகிறது.

காரணமே  இல்லாமல்  அவன் வாய்  கேவல் போன்ற  ஒலியில் “அம்மா” என்றது. சட்டென்று ஒரு கரம் அவன் கரத்தை பற்றியது. முழு பலத்தையும்  திரட்டி உதறிக் கொண்டு  நிமிர்ந்து பார்த்தான். பெரியம்மா  தான்.

“என்னடா  இப்படி  பண்ணிட்ட” என்ற குரலில் அழுகையும்   ஆத்திரமும்  முட்டியது. அவன் உதடுகளும்  லேசாக  துடித்தன. அவனை அணைத்து  தூக்கியபடி  குணாவின்  ஊருக்குச் செல்லும்  பேருந்தில்  ஏறினாள். அவன் மார்பே வெடித்து  விடும்படி கதறினான்.

அவன் அழுவதற்கான  காரணமாக  பெரியம்மா எதை நினைத்தாளோ அதற்காக  மட்டும்  அவன் அழவில்லை.

Monday, 18 April 2016

தெறி - என் விமர்சனம்

தெறி - என் விமர்சனம்

தமிழ்ச் சூழலில்  தேர்ந்த  பத்திரிக்கைகளில்  கூட திரைப்பட விமர்சனம்  என்பது  ஒரு படம்  பார்க்கத்  தகுதியானதா விறுவிறுப்பானதா “கருத்து” சொல்கிறதா கதாநாயகனும் நாயகியும்  எப்படி  நடித்துள்ளனர் தொழில்நுட்பமும் கலையும் எந்தளவிற்கு  திறம்பட  கையாளப்பட்டுள்ளன என்பதை  சொல்வதோடு நின்று விடுகின்றது. அதிலும்  பெரும்பாலான விமர்சனங்கள்  படம் வெளியாகி சில நாட்கள் கழித்து  பொது ரசனை  உருவான  பிறகு  அதனை ஒத்து  ஊதும்  பணியையே செய்கின்றன. இவ்வகையினதாக என் விமர்சனம்  இருக்காது  என்று  மட்டும் உறுதியாக  சொல்ல முடியும். இது முழுக்கவே  என்  உள்ளுணர்வும் ரசனையும் சார்ந்த  ஒன்று. துதிபாடலாகவோ வசைபாடலாகவோ “சுருக்கமானதாகவோ” இவ்விமர்சனம் இருக்காது.

இனி…….

பொதுவாக  தமிழகத்தின்  “மாஸ்” ஹீரோக்கள் என்று  நம்பப்படுபவர்களிடமிருந்து நுண்மையும் ஆழமும்  கொண்ட  திரைப்படங்களை எதிர்பார்க்க முடியாது. விஜய்யும்  அந்தப்  பட்டியலில்  இடம்  பெற்றிருப்பவர் என்பதால்  மிகக்  கூர்மையாக கவனிக்க  வேண்டிய  அவசியத்தை  தெறி  ஏற்படுத்தவில்லை.

அமைதியான  வாழ்க்கை  வாழும்  கதாநாயகன்  என்பதை  நிரூபிக்கும் விதமாக கேரளத்தில்  மகளுடன்  அறிமுகமாகிறார் கதாநாயகன்.  அவரால்  ஈர்க்கப்படும் பள்ளி ஆசிரியையாக எமி ஜாக்சன் வழக்கம் போல்.  கதாநாயகன்  மகளுடன்  அமைதியாக வாழ்வதால்  மகள் பிறப்பதற்கு  முன்பு அவனுக்கு  இன்னொரு வாழ்வு  இருந்தாக வேண்டும். எமி ஜாக்சன்  ஒரு புகாரால் நாயகனின்  இன்னொரு  “முகம்” வழக்கம் போல் ஆக்ரோஷமாக வெளிப்பட்டு திரையரங்கம் கரகோஷத்தில் நிறைகிறது. கதை தமிழ்நாட்டுக்குத் திரும்புகிறது. குறும்பும் தைரியமும்  கொண்ட  ஐ.பி.எஸ் அதிகாரியாக அறிமுகமாகிறார் விஜய் . சில  கடுப்பேற்றும் நாயகத் துதிகள். விஜய் ரசிகர்கள்  கூட  அவற்றை  விரும்பமாட்டார்கள். “சாமிகிட்ட நாம பேசுறோம். சாமி திரும்ப  பேசுதா ?அதுவா செய்யும்”, “ அந்த  ரௌடித்தம்பிய நெனைச்சா பயமாயிருக்கு” போன்ற  வசனங்களை  தவிர்த்தல்  நல்லது. “ஜித்து ஜில்லாடி” பாடல் தனிப்பட்ட  முறையில்  என்னைக்  கவர்ந்தது. சிறுவர்கள்  விரும்பும்  நாயகனாக விஜய் தன்னை  நீடித்துக்  கொள்கிறார் அப்பாடல்  மூலம். இரண்டு  நாயகிகள் இருந்தும்  விஜய்யே அதிக  அழகுடன்  மிளிர்கிறார். முதல்  பாதியை  அவர்  முகமே நகர்த்திச் செல்கிறது.  பொதுவாக  வணிகத்  திரைப்படங்களின் முக்கிய  நோக்கம் நாயகனை பல நல்லுணர்ச்சிகளின்  தொகுப்பாக காண்பிப்பதே. அதற்கான  முயற்சி எந்தளவிற்கு  வெளித் தெரியவில்லையோ அந்தளவு  படம் ஈர்க்கும். இவ்விடத்தில் அட்லீ தோற்கிறார். படத்தின்  ஒவ்வொரு  காட்சியும்  நாயகனின்  உணர்வு வெளிப்படுத்தப்பட என்பதற்கே என அப்பட்டமாகத் தெரிகிறது. பள்ளி மாணவனுக்கு கண்ணாடி  அணிவிப்பது  ஏழைகளுக்கு  இரங்குபவன்  என்ற  பிம்பத்தை  உருவாக்க. பிச்சைக்கார குழந்தைகளை காப்பற்றி (ஆனால்  செருப்பு  தைப்பவரும் மொபைல் கவர்  விற்பவருமே அந்தத்  தொழிலை கட்டுப்படுத்துவது  நம்பும்படி  இல்லை) பேரரறத்தானாக சமந்தாவின்  முன் நிமிர்கையில் அவர்  சிலாகிக்கிறார். பெரும்பாலும்  மகனை பெருமை பொங்க பார்க்கும்  தாய் போல விஜய்யை  சிலாகிப்பதையே செய்கிறார்  சமந்தா.

சமூகத்தில்  ஏற்கனவே  வேரூன்றிய  மெல்லுணர்வுகளை அட்லீ  நன்கு  பயன்படுத்திக்  கொள்கிறார். தந்தையற்ற ஆண்  தாயற்ற பெண்  சகோதரிக்கு ஏங்கும் அண்ணன்  என எங்கு அடித்தால்  சமூகம்  “ஆஹா  ஓஹோ” எனத்  தொடை தட்டுமோ அவ்விடம்  நோக்கி  அடிக்கிறார்  அட்லீ. மெல்லுணர்வு  (sentiment) காட்சிகளை  அழகாக  சித்தரிக்கும்  இயக்குநர்  கதாநாயகன்  வீரன்  என்பதை  நிறுவ சிரமமே  இல்லாத  துறையான காவல்துறையை எடுத்துக்  கொண்டும் அது தொடர்புடைய  காட்சிகளில்  நேர்த்தி வெளிப்படவில்லை. நாயகனின்  அறவுணர்வு மேலோங்குவதற்காக ஒரு பலாத்காரம்  செய்யப்பட்ட  பெண்  கண்ணீருடன் இறக்கும் காட்சி  வைக்கப்பட்டுள்ளது. ஆனால்  அதனை  மையமாகக்  கொண்ட  ஒரு பழிவாங்கும்  படலத்தையே மீதி நேரம்  படத்தில்  காட்டப்  போகிறார்கள் என்பது சோர்வு  தருகிறது. இன்னும்  எத்தனை  படத்தில் “மினிஸ்டர்” பையன்  வில்லனாக இருப்பான்  எனத்  தெரியவில்லை.

முந்தைய  படங்களின் சாயல்  எதுவுமே  இல்லாத  தேர்ந்த  நடிப்பு  விஜய்யிடம் வெளிப்பட்டாலும் கதையில்  புதுமை  இல்லாததால்  அவருடைய  வித்தியாசம் காட்டும்  திறனையும்  மீறி படம்  ஏற்படுத்தும்  அயர்வினை தடுக்க  முடியவில்லை. ஒரு புள்ளிக்கு  பிறகு  அதீத  மெல்லுணர்வினை (sentiment)  மனதில்  தூண்டிவிட்டு ஒரு அதிர்ச்சி  தரும்  காட்சியாக  முடிப்பதன் மூலம்  விறுவிறுப்பு கூட்டிவிட முடியும் என அட்லீ  நினைத்துவிட்டார்  போலும். ஆனால்  சமந்தாவின்  அப்பாவை விஜய் சந்திக்கும்  இடம் தவிர  பிறவற்றை  ஊகித்து விட  முடிகிறது.

முதல்  பாதி உருவாக்கும்  எதிர்பார்ப்பை இரண்டாம்  பாதி பூர்த்தி  செய்வதாக இல்லை. கதாப்பாத்திரங்கள்  இயல்பாக சித்தரிக்கப்பட்டது போல் தோன்ற வைத்து ரசிகர்களை  பதற்றம்   கொள்ள வைப்பதே  இருக்கை நுனிக்கு  கொண்டு வரும்  உத்தி. ஆனால்  இப்படத்தில்  விஜய்  “சாமியாகவும்” “பேயாகவும்” அவதாரம்  எடுத்து  வதம் செய்யும்  காட்சிகளில்   கதாப்பாத்திரங்கள்  தான் அதிர்கின்றன. பார்க்கும்  நமக்கு எந்த உணர்ச்சியும்  ஏற்படுவதில்லை.

“இது ஜனரஞ்சகமான  படம்” என்ற  லேபிளை  ஒட்டிக்  கொள்ள பொது மக்களும் பத்திரிக்கையும் தொலைக்காட்சியும் பரபரப்புடன்  நாயகனைப் பற்றி பேச வேண்டும் என்ற பழைய  உத்தியை பயன்படுத்துவதும் இப்படத்திற்கு  ஒரு சருக்கலே.

லஞ்சம்  வாங்கிக் கொண்டு குற்றவாளியை காப்பாற்றும்  காவலதிகாரி. பணம் கொடுத்து சாவினை மறைக்கும்  முதலாளி. இதெல்லாம்  நாயகன்  தன் சொந்தக் காரணத்திற்காக மட்டுமல்ல  சமூகத்தை “காப்பாற்றவும்” கொலை செய்கிறான் என்பது  போல வலிந்து  நுழைக்கப்பட்ட  காட்சிகள்  போல  துருத்தித் தெரிகின்றன. வில்லன்  கதாநாயகன்  குடும்பத்தை  நிர்மூலமாக்கி  வசனம்  பேசுவதை  பார்க்கும் போது பழைய  படம்  பார்ப்பது  போன்ற  உணர்வெழுகிறது.

ஓரளவிற்கு  கதை என்ற பெயரில்  ஒன்றை  வனைந்து கொண்டு  விஜய்  எனும் பிம்பத்தை  கொண்டே இரண்டாம்  பாதியை  இயக்குநர்  நகர்த்த  நினைத்திருப்பதாக சந்தேகம்  எழுகிறது.  பாடல்  பிண்ணனி  இசை  ஒளிப்பதிவு   படத்தொகுப்பு ஏன் வசனங்கள்  வரை கூர்மையாகவே இருக்கின்றன. ஆனால்  ஒரு தேய்ந்து  போன பழிக்குப்   பழி  கதை என்பதால் சலித்து விடுகிறது.

நாயகனை  அவன் பிம்பத்துக்குள்ளும் முழுமையாக  நுழைய  விடாமல்  தன் கதைக்குள்ளும் முற்றும்  பொருத்தாமல்  விட்டிருக்கும்  இயக்குநரின்  குழப்பம் படத்தில்  தொய்வாகத் தெரிகிறது. அதிகாரத்தினால்  நேர்மையான  அமைதியாக வாழ விரும்பும்  ஒரு காவல் துறை அதிகாரி  சந்திக்கும்  இன்னல்களை சொல்லியிருந்தாலும் அதையும்  அழுத்தமாகச் சொலலாமல் நழுவி விடுகிறார் இயக்குநர். இருந்தும்  “போலிஸ் வந்தே  பத்து நிமிஷம்  ஆச்சுடா”, “ட்ரெனிங்கல சுட்டது  அதுக்கப்புறம்  கன்ன  எடுக்கல” என்பது போன்ற வசனங்கள்  படத்தின் தரத்தை  உயர்த்துகின்றன.

இது மோசமான ரசிக்க  வாய்ப்பற்ற  வணிகத்
 திரைப்படம்இல்லையென்றாலும் எதிர்பார்ப்பினை பூர்த்தி  செய்ய இயலாமல்  தடுமாறி  தப்பிக்கிறது.