Wednesday 18 May 2016

கன்னி மேரி


       சக இலக்கிய  வாசகரும் எனது தோழியுமான திருமதி. மேரி எர்னஸ்ட்  கிறிஸ்டி அவர்களின் முதல்  சிறுகதை  இது. 


 மேரியின் நினைவெழுகிறது. வேளாங்கண்ணி கான்வெண்ட்டில் ஒரு குயர் கோடுபோட்ட நோட்டில் கதையெழுதிக் கொண்டிருப்பாள். மாநிறம். சிறிய வட்ட முகம். ஒல்லியான தேகம். முழு பாவாடை சட்டை போட்டிருப்பாள். பதினைந்து வருடங்கள் ஆகின்றன. இந்நேரம் அந்த நாவலைப் பிரசுரித்திருப்பாளா தெரியாது. ஒரு இரண்டு பக்கங்கள் கூட வாசித்திருக்க மாட்டேன். கான்வெண்ட் அம்மாங்க கூப்பிட்டுவிட்டார்கள். மூன்று அம்மாங்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் மெழுகுவர்த்தி அம்மா. ஒருவர் நிர்வாக அம்மா. ஒருவர் பூஜை அம்மா. நிர்வாக அம்மா சமையல் நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்வார். சமையல் செய்யும் துருதுரு அரைக்கால் பாவாடை சட்டை போட்ட சிறிய பெண் ரோசி ஏழாவதுதான் படித்திருப்பதாக சொன்னாள் அவளுடன் சேர்த்து நாங்கள் ஐந்து பேர் தங்கியிருந்தோம். தினமும் ஃபாதர் காலை 0630க்கு வந்து திருப்பலி நிறைவேற்றுவார். பலிபீடத்தை நாங்கள் பூஜையம்மாவுடன் சேர்ந்து அலங்கரித்து திருப்பலிக்குத் தயார் செய்வோம். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து அரைகுறை வெளிச்சத்தில் குழாயடியில் வாளியில் தண்ணீர் நிரப்பி குளித்துத் துவைத்து ஒரேயொரு கழிவறை அதில் காலைக்கடன்களை முடித்துவிட்டு ஆறு மணிக்கு ரோசி தரும் தேநீரை அருந்திவிட்டு ஆறேகாலுக்கு பூஜையறையில் இருப்போம். பூஜையம்மா அங்கு நின்று ரோஜாக்களை வரிசைப்படுத்திக் கொண்டிருப்பார். நாங்கள் பலிபீடத்தை பட்டுச்சரிகைத் துணியால்  போர்த்திவிட்டு இரண்டு கலர் புடவைகளை மடித்து மேலிருந்து கீழாக பீடத்தின் முன்புறம் தொங்கவிட்டு மடிப்புகள் வைத்து பூக்களையோ வேறு ஏதேனும் டிசைனையோ செய்து குண்டூசியால் குத்தி அலங்காரத்தை முடித்து திருப்பலிப்பாடல்களைத் தயார் செய்துகொண்டு அமர்ந்திருப்போம். ஃபாதர் வருவார். திருப்பலி நிறைவேற்றுவார். ரோசி தரும் தேநீரை அருந்திவிட்டு செல்வார். நாங்கள் எங்கள் அறைக்குச் செல்வோம். ஒரே அறை. ஒரு சன்னல். ஒரு வென்டிலேட்டர். ஒரு சீலிங் ஃபேன். மூலையில் ஒரு குடிபானைத் தண்ணீர்.  சுறுசுறுப்பாக சமையல்வேலையை முடிப்பதில் ரோசிக்கு நிகர் ரோசிதான். எட்டரைக்குள் காலை உணவு தயார்செய்து எனக்கு மதிய உணவையும் என் டிபன்பாக்ஸில் கட்டிவைத்திருப்பாள். கூட்டிப் பெருக்கும் வேலையை மேரி செய்வாள். கழுவித் துடைக்கும் வேலையை திலகவதி செய்வாள். இன்பெண்டா இருவருக்கும் தேவையான உதவிகளை கூடமாட செய்வாள். அல்லது ரோசிக்குக் கம்பெனி கொடுத்துக் கொண்டிருப்பாள். அங்கு எனக்கு ஒரு வேலையும் கிடையாது. நான் நாகப்பட்டினம் அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருந்தேன். எங்கள் ஊரிலிருந்து நாகப்பட்டினம் இரண்டு மணிநேரம் இரண்டு பேருந்துகள் மாறிச் செல்லவேண்டும் என்பதால் வேளாங்கண்ணி கான்வெண்டில் பணம் கட்டி தங்கியிருந்து சென்றேன். நானும் ஏதாவது செய்கிறேன் என்று அருகே சென்றால்கூட பரவாயில்லை மேடம் நீங்கள் போங்கள் நாங்களே கொஞ்சநேரத்தில் முடித்துவிடுவோம் என்று அனுப்பிவிடுவார்கள். ஆலாய்பறந்து பூச்செடிகளை நறுக்கிவிடுவார்கள். தண்ணீர் ஊற்றுவார்கள். தோட்டத்தை சுத்தம் செய்வார்கள். பூ கட்டும் வேலையும் அவர்களுடையதே. சிரிப்பொலிகளோடு அவர்கள் செய்துகொண்டிருக்கும்போதே நான் சாப்பிட்டுவிட்டு மதிய சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பிவிடுவேன். ஒன்பது மணிக்கு பேருந்தைப் பிடித்தால்  ஒன்பதே முக்காலுக்கு அலுவலகத்தில் இருப்பேன்.  அலுவலகம் சென்றுவிட்டால் எனக்கு வெளியுலகம் மறந்துவிடும். மாலை ஐந்தே முக்காலுக்குதான் வீடு பற்றிய பிரக்ஞை எழும். அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பி  மடத்துக்கு வந்து சேர ஏழு மணியாகிவிடும்.  ரோசி எனக்காக தேநீர் எடுத்து வைத்திருப்பாள். அவள் வாய் சும்மாவே இருக்காது. எதையாவது லொடலொடவென்று பேசிக்கொண்டேயிருப்பாள். ஆனால் உணர்ச்சிவேகத்துடன் தலையையும் கைகளையும் ஆட்டி கண்களை உருட்டியும் விழித்தும் வெகுளியாய் பேசுகையில் எனக்கு உள்ளூர சிரிப்பு வரும். ஆனால் அவள் மிகவும் சீரியஸாக அன்று நடந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருப்பாள்.
                 

    மேரி, திலகவதி, இன்பெண்டா வருவதற்கு இரவு மணி ஒன்பதரை ஆகிவிடும். மெழுகுவர்த்தி அம்மா(பூஜை அம்மாங்க)அவர்களுக்கு வேளாங்கண்ணி திருத்தல பழையகோவிலில் மெழுகுவர்த்தி விற்கும் இடத்தில் வேலை கொடுத்திருந்தார்கள். வர்த்தி தவிர ஜெபமாலை, மோதிரம், செயின், தீர்த்தப்புட்டிகள், சுரூபங்கள் இவற்றையும் விற்பனை செய்து  இரவு வத்தி அம்மாவிடம் கணக்கு ஒப்படைக்க வேண்டும். தினப்படியா அல்லது மாதசம்பளமா அதைப்பற்றியெல்லாம் நான் விசாரித்துக் கொண்டதில்லை. மதிய சாப்பாட்டை ஒரு சிறு டப்பாவில் கட்டி எடுத்துக்கொண்டு பத்து மணிக்கு ஸ்டாலில் இருக்க வேண்டுமாம். மேரி இராமநாதபுரம் தாண்டி ஒரு சிறு குக்கிராமத்திலிருந்து பெற்றோரால் ஒன்பதாவதுக்கு மேல்  படிக்க வைக்க முடியாததால் இங்கு வந்து இந்த வேலையில் சேர்த்து விட்டதாகக் கூறியிருந்தாள். அவளுடைய ஒரு தங்கையும் தம்பியும் அவளூரிலேயே படித்துக் கொண்டிருந்தார்கள். நான் இருந்த ஒரு வருடத்தில் அவளைப் பார்க்க அவள் அம்மாவோ அப்பாவோ வந்ததில்லை. ஒரு தொலைபேசி அழைப்பும் வந்ததில்லை. அவள் மட்டும் மாதாமாதம் வீட்டுக்கு பணம் அனுப்பும்படி நிர்வாக மதரிடம் பணம் கொடுத்துவிடுவாள். திலகவதியும் இன்பெண்டாவும் வத்தியம்மாவுக்கு தெரிந்தவர்களின் சிபாரிசுகளால் வந்து சேர்ந்து வேலைபார்த்துக் கொண்டிருப்பவர்கள். இருவரும் பத்தாம் வகுப்பைத் தாண்டாதவர்கள். சுடிதார் அணிபவர்கள். திலகவதி அப்போது ஒரு பையனைக் காதலித்துக் கொண்டிருந்தாள். அவள் எப்போதும் அந்தப் பையனின் கடிதங்களை வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருப்பாள். இல்லாவிட்டால் அவனுக்குப் பதில் கடிதம் இன்லேண்ட் லெட்டரில் எழுதிக் கொண்டிருப்பாள். மேரி கூட நீலநிற இன்லேண்ட் லெட்டரில் மாதம் ஒரு கடிதம் எழுதுவாள். அது அவளது அப்பா ராமுவுக்கு. என்னிடம் கொடுத்துதான் தபால்பெட்டியில் சேர்க்கச் சொல்லுவாள். உன் பெயர் மேரி உன் அப்பா பெயர் ராமு ஏன் என கடைசிநாள் அவளிடம் பிரியாவிடை பெற்றுப் பிரியும்வரை கேட்டதில்லை. அவள் முதுகை சுவரில் சாய்த்துக் கொண்டு முட்டிகளை மேல்நோக்கி நிமிர்த்தி தொடைகளில் நோட்டை வைத்துக்கொண்டு நீலநிற ரெனால்ட் பேனாவால் தலைசாய்த்து குனிந்து எழுதிக் கொண்டேயிருப்பதை ரசித்துக்கொண்டேயிருப்பேன். அருகில் அமர்ந்து என்ன எழுதுகிறாள் என்றுகூட பார்க்கமாட்டேன். ஆர்வம் அடங்கமாட்டாமல் ஒரே ஒருநாள் என்ன கதை என்று கேட்டேன். ஒரு நாவல் என்று மட்டும் சொன்னாள். கொடு பார்ப்போம் என்று சொல்லி வாங்கி அப்போது எழுதிக் கொண்டிருந்த இரண்டு பக்கங்களை வாசித்தேன். உள்ளே ஒரு பெண் தன் காதலனிடம் தன்னை ஏற்றுக்கொள்ளச் சொல்லி வாதம் புரிந்துகொண்டிருந்தாள். சாட்டையடி போல அவள் பேசியதில் எனக்கு ஒரு கணம் மெய்சிலிர்த்துவிட்டது. ஆரம்பத்தை தேடப்போனேன். "மேடம் இது எட்டாவது நோட்டு. ஆரம்பமெல்லாம் என் பெட்டியில் இருக்கிறது. எதுவும் ஒழுங்குமுறையில் இருக்காது. எழுதிமுடித்துவிட்டு திரும்பவும் முதலிலிருந்து சரிபார்த்து வரிசைப்படுத்தவேண்டும்" என்றாள். இன்னும் கொஞ்சநேரம் அவளுடன் பேசிக்கொண்டிருக்கவேண்டும் போலத் தோன்றியது. அப்போதுதான் என்னை மதர் அழைத்த நேரம். போய் திரும்பி வருவதற்குள் அவள் அந்தப் பெண்ணை அவள் காதலனுடன் சேர்த்து வைப்பதில் மூழ்கிப் போனாளோ அல்லது புதுமைப் பெண்ணாக்கி புரட்சி காணச்சென்றுவிட்டாளோ அக்கதை பற்றி  மேலும் தொந்தரவு செய்யக்கூடாது என அதற்குப்பிறகு எதுவும் கேட்கவில்லை. ஆனால் எப்படி கதை எழுதுகிறார்கள் நாவலெல்லாம் எழுதுகிறார்கள் இந்த சின்னஞ்சிறு பெண்ணுக்கு என்ன வாழ்க்கையைப் பற்றித் தெரியும் அவளின் நாவலில் வரும் பெண்ணை என்னமாய் பேசவைக்கிறாள் என்று யோசித்துக் கொண்டிருப்பேன். என் சிந்தனையைக் கலைக்குமளவுக்கு திடீரென்று கொல்லென்று சிரிப்பொலி கேட்கும். ரோசிதான் கைதட்டி குதூகலித்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு திலகாவை நோண்டி நோண்டி அவளின் காதலை கிண்டல் செய்வதுதான் வேலை. இன்பெண்டாவும் இந்த கிண்டலில் சேர்ந்துகொண்டு திலகாவை வெட்கமுறவோ சினமுறவோ வைப்பாள். நான் கையில் இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை வைத்துக் கொண்டு இந்த சம்பாஷணைகளுக்கும் காதுகொடுத்துக் கொண்டிருப்பேன். சிலநேரம் நானும் வாய்விட்டுச் சிரித்துவிடுவேன். ஆனால் மேரிக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதுபோல அவள் கை எழுதிக் கொண்டேயிருக்கும். இரவு பதினோரு மணிவரை எழுதுவாள். நான் பத்தரைக்கு படுத்துவிடுவேன். மற்ற மூவரும் படுத்தாலும் அருகருகே படுத்துக்கொண்டு மெதுமெதுவாக சிரித்தபடி பேசிக்கொண்டிருப்பார்கள். நான் தூக்கம் வரும்வரை மேரியையே பார்த்துக் கொண்டிருப்பேன். அவளுக்கு படுக்கவே மனமிருக்காது. ஆனால் பதினோரு மணிக்குமேல் டியூப் லைட் எரியக்கூடாது என நிர்வாக அம்மா உத்தரவு. அதனால் நோட்டை எழுதிய கடைசிப் பக்கத்தில் அடையாளத்திற்கு பேனாவை வைத்து மூடிவிட்டு என் பக்கத்தில் வந்து படுத்துக் கொள்வாள். அதை ஏனோ என் மனம் விரும்பியது. ரோசி கடைசியாக ஒரு முறை வெளியே போய்விட்டு விளக்கை அணைத்துவிட்டு வந்து படுப்பாள். ஆனாலும் அவள் வாய் ஓயாது. ஸ்டாலில் அன்று நடந்ததை அவளுக்கு சொல்லியாகவேண்டும். திலகாதான் அதட்டி அவளைத் தூங்கவைப்பாள். ஒரு சிறிய இரவு விளக்கு எங்கள் அறையில் இரவு முழுதும் எரியும். நான் புரண்டு இடது பக்கம் திரும்பி படுக்கும்போது மெல்லிய விளக்கொளியில் மேரி மல்லாக்க படுத்துக்கொண்டு இருகைகளையும் கோர்த்து மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் படிய வைத்துக் கொண்டு கண்களைத் திறந்தபடி ஏதோ யோசனையில் மூழ்கியிருப்பது தெரியும். அவளைப் பிரிந்த நாள் வரை அவள் கண்மூடித் தூங்கி நான் பார்த்ததில்லை. அப்படி என்னதான் யோசிப்பாள்? இப்போதும் அப்படித்தான் இருப்பாளா? அவள் என்ன நினைத்துக் கொண்டிருப்பாளோ எனக்குத் தெரியாது ஆனால் நான் எப்போதும் அவளைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருப்பேன்.
               மேரி அமைதியானவள்.கணுக்கால் வரை தொங்கும் முழுப் பாவாடையைத் தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு காலை முதல் இரவு வரை ஓயாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் சோர்வென்றோ முடியவில்லை என்றோ ஒருநாளும் முணுமுணுத்ததில்லை. ரோசியும் இன்பென்டாவும் அம்மாங்க திட்டியதை பகிர்ந்து கொண்டபோது கூட அவள் யாரையும் குறைகூறியதில்லை. அவள் வாயிலிருந்து முத்து உதிர்வதைப் போல அடிக்கடி வரும் வார்த்தைகள் "சித்த பொறுமையா இருங்களேண்டி" என்பதுதான். சொல்வது ஒன்று செய்வது ஒன்று கிடையாது அவளிடம். பொறுமையாக இருக்கும் அவள் எளிமையுமானவள் என ஒருநாள் அவள் துணிவைக்கும் பெட்டியைப் பார்த்தபோது தெரிந்துகொண்டேன். ஒரு இரும்பு டிரங்கு பெட்டி வைத்திருந்தாள். அதில் மாற்றி மாற்றி தினமும் அணிந்து கொள்ளும் நான்கு ஜோடி பாவாடை சட்டைகள். எப்போதாவது என கட்டிக்கொள்ள ஒரு புடவை கூட கிடையாது. கதையெழுதிய கத்தை கத்தையாய் காகிதங்களும் பத்து பதினைந்து ஒரு குயர் நோட்டுகளுமே அவள் இரும்புப் பெட்டியை நிறைத்திருந்தன. திலகவதி நல்ல புடவைகள் வைத்திருந்தாள். அதிகமானவை அவளின் காதலன் அவளுக்கு காதல் பரிசாக வழங்கியவை. என்றாவது ஒரு ஞாயிறன்று வற்புறுத்தி அவள் புடவையை மேரிக்கு அணிவித்துவிடுவாள். நான் அப்பொழுதெல்லாம் சுடிதார்தான். திருமணத்திற்கு பிறகுதான்  புடவைக்கு மாறினேன். ரோசி ஞாயிறன்று கண்டிப்பாக புடவைதான் அதுவும் திலகா வைத்திருக்கும் புடவையிலேயே பளபளவென எது மின்னுகிறதோ அதை எடுத்து உடுத்திக் கொள்வாள். எல்லாவற்றிலும் அன்னியோன்யத்தை கடைப்பிடித்தவள் .புடவையை அணிந்துகொண்டு முந்தானை நுனியைப் பிடித்துக் கொண்டு அவள் பூனை நடை நடந்து காண்பிப்பதைப் பார்த்து நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம். மேரிக்கு புடவை அணிந்ததும் அந்த சிறு முகத்தில் இயல்புக்கு மேல் வெட்கம் வந்துவிடும். இலேசாகத் தெரியும் மேரியின் இடுப்பில் விரலை விட்டு ரோசி கிச்சுகிச்சு மூட்டிவிடுவாள். ஒரு கையால்  முகத்தை மூடிக் கொண்டு மறுகையால் அவளைத் தடுத்து "ஏய் போதும்டி விட்றி" என மேரி நாணிக் கோணி சிரிக்கும்போது அது  நாட்டிய அபிநயம் போலவே தோணும். "நேரமாகிவிட்டது வாருங்கள்" என பூஜையம்மாவின் அழைப்புக்குரல் கேட்டதும் அவர்களின் பின்னால் பெரிய திருத்தலத்திற்கு ஞாயிறு காலை திருப்பலி பூசைக்கு ஓடுவோம். மேரிக்கு புடவையைத் தூக்கிக் கொண்டு வேகமாக நடக்கத் தெரியாது. எனக்கோ மெதுவாக நடக்க வராது. வேகமாக நடந்து முன்னே சென்று ஓரிடத்தில் நின்றுகொள்வேன். தூரத்தில் மேரி புடவையில் நடக்கத் தெரியாமல் சாவி கொடுக்கப்பட்ட பதுமைபோல் நடந்துவரும் அழகை ரசித்துக் கொண்டிருப்பேன். ரோசி தன்னிடமிருந்த ஜிமிக்கி தோடு ஒன்றை மேரிக்கு போட்டுவிட்டிருந்தாள். இன்பெண்டா அவள் கைவண்ணத்தை மேரியின் நீள கரிய கூந்தலில் காட்டியிருந்தாள். ஆகமொத்தத்தில் அந்த இளங்காலைத் தோற்றவெளியில் அவள் நடந்து வந்தது இருபக்கமும் சேடியர் அணைத்துத் தாங்கி அந்தப்புரத்திலிருந்து அரண்மனைக்கு அழைத்துவரப்படும் இளவரசி போலவே என் கண்ணுக்குத் தோன்றியது. கதையெழுதுபவளைப் பற்றியே கனவு கண்டுகொண்டிருந்ததால் எனக்கும் கற்பனைகள் வந்துவிட்டதோ என நினைத்து சிரித்துவிட்டேன். அந்நேரம் அருகே அவர்கள் வந்துவிட மேரிக்கு ரொம்பவும் கூச்சமாகிப் போய்விட்டது. அவள் திலகாவைப் பார்த்து, "பாருடி புடவையெல்லாம் வேணாம்னு சொன்னா கேக்கிறியா மேடம் கூட சிரிக்கிறாங்க பாருடி" என்று சிணுங்கிக்கொண்டே பொய்க்கோபம் காட்டினாள். அது எனக்கு இன்னும் அழகாய்த் தோன்றவே சிரிப்பை மேலும் வரவழைத்தது. "போங்க மேடம்" என்று தொடர்ந்து செல்ல ஆரம்பித்தாள். ஆனால் புடவை அவள் காலில் மிதிபட்டு எங்கே அவள் குப்புற விழுந்துவிடப் போகிறாளோ என்று அவள் பதட்டத்துடன் நடந்துவந்ததை அவள் நெற்றி வியர்வை காண்பித்துக் கொடுத்தது. புடவை அவளுக்கு சௌகரியப்படவில்லைதான். ஆனாலும் எங்களுக்காக அந்த சிரமத்தை ஏற்றுக்கொண்டு ஒருவழியாக வந்து சேர்ந்தாள். மேரி வரவும்  திருப்பலி தொடங்கவும் சரியாக இருந்தது. இத்தனை நேரம் மேரிக்காகவே அனைத்தும் காத்திருந்ததைப் போல எனக்குத் தோன்றியது. 
                   

   நான் நாகப்பட்டினத்திலிருந்து மாற்றலாகி  வந்தபிறகு வேளாங்கண்ணி செல்லும்போதெல்லாம்  பழைய கோவிலுக்கு மேரியைப் பார்ப்பதற்காக செல்வேன். அங்கே ஸ்டாலில் அதே புன்னகையுடன் மெலிதான குரலில் பேசுவாள். நாவல் என்னவாயிற்று எனக் கேட்பேன். "வேலை சரியாயிருக்கு மேடம். இங்கேர்ந்து கிளம்பவே சில நாள் லேட்டாயிடுது. எழுத நேரம் கிடைக்கல" என புன்னகைப்பாள். எனக்கு உள்ளுக்குள் மனம் எதையோ எண்ணி கனத்தாலும்  வெளியே சிரித்து திலகாவிடமும் தலையாட்டிவிட்டு விடைபெறுவேன். அடுத்தமுறை சென்றபோது திலகவதிக்கு அந்த பையனோடு திருமணம் ஆகிவிட்டது என்று சொன்னாள் மேரி. இன்பெண்டாவையும் அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்களாம். ரோசிக்கு திருமண தேதி குறித்துவிட்டார்களாம். அவளும் சீக்கிரமே மடத்திலிருந்து கிளம்பிவிடுவாள். நீங்களெல்லாம் இருந்தபோது நான் வீட்டைப்பத்தி எந்த நினைவும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தேன். நீங்களெல்லாம் இல்லாமல் எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை அக்கா.  ஆனால் வீட்டுக்கும் செல்லமுடியாது ஏதோ இங்கு கொஞ்சம் சம்பாதிக்கிறேன். இதைவிட்டால் என் குடும்பத்துக்கு வேறு கதியில்லை என்று அவள் என் கையைப் பிடித்துக்கொண்டு அவள் நா தழுதழுக்க கண்கள் கலங்கி பேசுவதை அன்றுதான் நான் கண்டேன். இதுவரை மேடம் மேடம் என்று சொன்னவள் அக்கா என்று அழைத்ததும் எனக்கு உள்ளம் உடைந்து அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை வெளிப்படுத்திவிட்டேன். அவளிடம் நான் எதிர்பார்த்திருந்தது இதைத்தானோ? உதட்டைக் கடித்து இருவரும் அழுகையை அடக்கினோம். அந்த சிறிய வட்ட முகம்  துயரக் கண்களுடன் பாவாடை சட்டையணிந்து சிறு புன்னகை உதட்டில் தவழ எனக்கு விடையளித்ததுதான் இன்றுவரை என் கண்களில் பதிந்து போய் உள்ளது. ஏனெனில் அடுத்தமுறை நான் சென்றிருந்தபோது வத்தியம்மாவைத் தவிர மற்ற பெண்கள் அனைவரும் புதியவர்கள். யாருக்கும் மேரியைத் தெரியவில்லை. சிஸ்டரிடம் கேட்டேன்.  "மேரி இங்கு இல்லை. அவள் போய்விட்டாள்" என்று மட்டும் சொன்னார்கள். மேற்கொண்டு எதுவும் கேட்கமுடியாத அளவுக்கு அங்கு ஒரே கூட்டம். விற்பனையை மும்முரமாக வத்தியம்மா கவனித்துக் கொண்டிருந்தார்கள்.  சிறிது நேரம் அவள் வேலை பார்த்த இடத்தை வெறித்துப் பார்த்துவிட்டு அங்கிருக்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டேன். அதன்பிறகும் வேளாங்கன்னிக்குச் செல்கிறேன். ஆனால் பழைய கோவிலுக்குப் போவதில்லை. ஏனெனில் மேரி அங்கு இல்லை.

Monday 16 May 2016

தோரணை எனும் தோற்ற மயக்கம்

                       சிறு வயதில் ஆத்தா  வீட்டிற்கோ ( திருவாரூர்  உட்கிராமங்களில்  பாட்டியை  ஆத்தா  என்று அழைப்பதே வழக்கம்) பெரியம்மா  வீட்டிற்கோ செல்லும்  போது  ஒன்றை கவனித்திருக்கிறேன். வீட்டு வாசல் வரை மட்டுமே  அம்மாவின்  கை என்னைப்  பற்றி  இருக்கும். திண்ணையிலேயே  மாமாவோ பெரியப்பாவோ என்னை இழுத்துக் கொள்வார்கள். அம்மா அவளுடைய  உலகத்திற்குள்  சென்று விடுவாள். உறவினர்  வீடுகள்  ஒவ்வொன்றும் ஒவ்வொரு  மாதிரி. இருந்தும்  அங்கு காணப்படும்  பொதுவான ஒன்று வீட்டின்  பின்புறம்.  ஆத்தாக்களும் பெரியம்மாள்களும் சின்னம்மாள்களும் கூடியிருக்கும்  இடம் வீட்டின் பின்புறமே. நான்கைந்து  வயதாகும்  வரை ஆண் பிள்ளைகளுக்கு  வீட்டின் குளிர்ந்த இருண்ட பின்புறம்  என்பது  இன்னொரு  கருவறை. கூட்டுக்  கருவறை. அதன்பின் அங்கு இடம் கிடையாது. பாட்டிகளின் அன்னைகளின் சிரிப்பொலிகள் மட்டும்  இன்னும்  செவிகளில்  எஞ்சி நிற்கின்றன. சிறு வயதில்   நண்பர்கள்  பலரது  இல்லங்களிலும் (பழமையானவை) இந்த “ இருண்ட  பின்கட்டினை” காண முடிந்தது.  தன்  கணவனை  அழைப்பதற்கு  பின்  கட்டிலிருந்து  வரும் பிரத்யேக  ஒலிகளைக் கேட்க முடியும். இது ஏன்? “தமிழ் பெண்ணின்  இயல்பான  நாணம்” என்பதெல்லாம் நம்பத்  தலைப்படாத பதில். பழங்குடி  சமூகங்களில்  பலம் என்பது  மனிதர்களின் எண்ணிக்கை மட்டுமே. எண்ணிக்கையை  பெருக்க அத்தியாவசியத்  தேவை பெண். எனவே  பெண் கவர்தல்  அக்கால  வலிமைப் பெருக்கத்தில்  முக்கியமான  செயல். பெண்ணைக்  “காக்க” வேண்டிய  அவசியம்  அவ்வாறு  ஏற்பட்டது. ஒரு வீட்டில்  பெண் இருக்கிறாள்  என்பதே தெரியாத  அளவிற்கு “மூடி” மறைக்கப்பட்டது. அதற்கேற்றவாறே அந்த வீட்டின்  அமைப்பும் இருக்கும். அந்த அவசியம்  மெல்லத்  தளர்ந்தாலும் பின் கட்டினை விட்டு வெளிவர  சென்ற  தலைமுறை  வரை பெண்ணுக்கு  ஒரு மனத்தடை இருந்தது. என் சகோதரிகளிடம் அது முழுமையாக  நீங்கியது.  இப்போது கட்டப்படும்  வீடுகளிலும்  அந்த “மறைவின்மை”யைக்  காண முடியும். ஒரு பழக்கம்  உக்கிரமாக  பின்பற்றப்பட்டு அதற்கான  தேவை குறையும்  போது  ஒரு குறியீடாக  மாறும். இரு கரம்  கூப்பி  வணங்குவது  பழங்காலத்தில்   என் கையில்  எந்த ஆயுதமும்  இல்லை  என்பதை உணர்த்துவதற்கான ஒரு செயலாக  இருந்திருக்கலாம். 

“அதிகாரமும் அழகுமுத்து சாரும்” கட்டுரையின்  தொடர்ச்சியாக  சிலவற்றை  இங்கே  குறிப்பிட  வேண்டும்  என்பதற்காக  இந்த குறியீடு  தொடர்புடைய  உதாரணத்தைச் சொன்னேன். அதிகாரமும்  அப்படிப்பட்ட  குறியீடுகளால் நிலை  நிறுத்தப்படுவதே. மன்னன்  என்று சொன்னதும்  அரியணையும் கிரீடமும்  செங்கோலும் நினைவில்  எழுகின்றன  அல்லவா? அதே போன்று இன்றைய  நவீன  ஆட்சியதிகாரத்தில் சில குறியீடுகள்  உள்ளன. கீழ்படிதல் , உடைகள், யார் முதலில்   வணக்கம்  சொல்வது,  எந்த  வார்த்தைகளைக்  கொண்டு அழைப்பது  ஆகியவற்றின்  வழியாக  அவை வெளிப்படச் செய்கின்றன. முந்தைய  கட்டுரையில்  நான் ஆட்சிப்  பணி   தேர்வுகளுக்கான  முறையில்  மாறுதல்   கொண்டுவர   வேண்டும்  என்கிற  ரீதியில்  எழுதியிருப்பதாக நண்பன்  நினைப்பதாகச்  சொன்னான். ஆனால்  அக்கட்டுரையின்  நோக்கம்  இளம் திறமையாளர்கள்   “தோற்ற மயக்கங்களை” நோக்கித்  தள்ளப்படுவதை எதிர்ப்பதே. இன்றைய  உலகம்  முதலாளித்துவ   போக்குடையது. இதற்கென  சில குறியீடுகள்  இருக்கின்றன. அவற்றைப்  புரிந்து  கொள்ள  கால மாற்றத்தை புரிந்து  கொள்ள வேண்டியது  அவசியம். 

இருபது வருடங்களுக்கு  முன் ஒரு மாவட்ட ஆட்சியர்  என்பவர்  கருணை மிக்கவராகவும்   பெருந்தன்மை  உடையவராகவும்  இருந்திருக்க  வாய்ப்பு  அதிகம்.  ஏனெனில்  தாராளமயமாக்கல்(liberalisation) வருவதற்கு முந்தைய  அக்காலகட்டத்தில்  ஒரு ஆட்சியர் காணக்கூடிய “நாகரிகமான தன்னம்பிக்கை” மிகுந்தவர்களின் எண்ணிக்கை இன்று அவர்கள்  சந்திக்கும் அத்தகைய  “நாகரிகமான  தன்னம்பிக்கை” மிகுந்தவர்களின் எண்ணிக்கையை  விட  பல மடங்கு  குறைவாக  இருந்திருக்கும். விரும்பியவற்றை பெறுவதற்கான வாய்ப்புகளும் வாங்கும்  சக்தியும்  மக்களிடம்  பெருகியிருக்கும்  இன்றைய கால கட்டத்தில்  ஒரு ஆட்சியர்  தன்னை விட உயர்ந்த  நோக்கும்  திறனும்  உடையவரை தன் அதிகார எல்லைக்கு  கீழாகவே பல சமயம்  சந்திக்க  நேரிடும். எப்போதும்  உறபத்தி திறனுக்கும் கற்பனைக்கும்  முன் முதலில்  அடிபடுவது ஆணவமே. ஆட்சிப் பணிக்கான  பயிற்சியில்  மாற்றம் கொண்டு வரச்  சொல்லுமளவுக்கு அப்பயிற்சி குறித்து என் எண்ணம்  தெளிவாகவில்லை. ஒரு நுண்மையான  வேறுபாட்டினை  உணர்த்தவே  விழைகிறேன்.  தோரணை.  என் சகோதரிகளும் முந்தைய  தலைமுறையைப் பின்பற்றி இருளுக்குள் அமர்ந்து  பேசிக்  கொண்டிருந்தால் இன்றைய  சமூகத்துக்கு  பொருத்தமற்றவர்களாக போயிருப்பார்கள். அது போலவே  நம்முடைய  நிர்வாகத்தினரும்  பழைய “குறியீடுகளை” நம்பும் படி செய்யப்படுவதாக  நான் நினைக்கிறேன். அவர்கள்  சிக்கலான இந்திய சமூக கட்டமைப்பை புரிந்து கொள்ளும்  வாய்ப்பற்றவர்கள். இது வெற்று குற்றச்சாட்டல்ல. 

ஓய்வு பெற்ற  செயலர்கள்  வெளிநாட்டு  தூதுவர்கள்  போன்றோரின் எழுத்துக்களை வாசிப்பவன் என்பதால்  நிர்வாகத்தினரிடம் உருவாகி  இருக்கும்  மேட்டிமை மனநிலையை  என்னால்  உள்வாங்க  முடியும். தெரிந்தோ தெரியாமலோ நாம் பணியாற்றும் அல்லது  ஆர்வம்  கொண்டிருக்கும்  துறையோடு ஒரு எந்திரத்  தனமான  இசைவு உருவாகிவிடும். உதாரணமாக  பாரதி புதுமைப்பித்தன்  அசோகமித்திரன் ஜெயமோகன்   போன்ற பெயர்களை  கேட்டால்  என் தலை அப்பக்கம் திரும்பிவிடும். நிர்வாகத்தில்  மேட்டிமை  என்பது அப்படிப்பட்ட  எந்திரத்  தனமான  இசைவு தான். ஏனெனில்  பிரிட்டிஷார் இந்தியாவை  விஞ்ஞானப்பூர்வமாக உறிஞ்சிய போது உருவாக்கப்பட்ட அமைப்பு  நம் பொது பணியாளர் தேர்வாணையம். அதன் அன்றைய நோக்கம்  அரசுக்கு  வருமானம்  வரும்  வழிகளை  மட்டும்  கூர்ந்து  கவனிப்பது. இடையூறுகள்  ஏற்பட்டால்  அடக்குவது. இந்த முறையிலிருந்து  நாம் வெகு தூரம்  முன்னேறி வந்து விட்டாலும் “வருமானம்   வரும்  வழிகளுக்கு” முக்கியத்துவம்  அளிப்பது மட்டும்  குறையவில்லை. ஏனெனில்  நம் அதிகாரம்   மேட்டிமை  வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவது. எப்படி  பிரிட்டிஷ்  இந்தியாவில்  இந்திய  மனநிலையே இல்லாத  ஒரு ஆங்கிலேயர்  எளிமையாக  “கலெக்டர்” ஆகி விட முடியுமோ அதே போன்றே இந்திய மனநிலை  இல்லாத ஒரு  இந்தியர்  இன்றும்  ஆகி விட முடியும். அவரைப் “போன்ற” இந்தியரைத் தவிர அனைவரும்  “திருத்தப்பட வேண்டியவர்கள்”என்ற எண்ணம்  அமைந்து விடும். இதையே நான் மேட்டிமை  என்கிறேன். 

மேட்டிமை   வலிமையின்மையின் பழமையின்  குறியீடு. அத்தோரணைகளை நீக்க வேண்டுவது  நிர்வாக  ரீதியில்  எவ்வகையில்  முக்கியம்?  வெளித்  தோற்றத்திற்கு நிர்வாகத்தால் மக்கள்  கட்டுப்படுத்தப்படுவது  போல்  தெரிந்தாலும்  அரசியல்  வாதிகளின்  வழியாக  மக்களும் நிர்வாகத்தை கட்டுப்படுத்துகின்றனர். ஆகவே  மக்களின்  உளநிலையை புரிந்து  கொள்ள  முயற்சிப்பது  ஒற்றைப்  படைத்  தன்மை இல்லாத  கூர்மையான  தீர்வுகளுக்கு இட்டுச்  செல்லும்.  குறியீட்டு  மனநிலைகளை உதறுவது அதற்கான   பயிற்சியின்   வழியே   சாத்தியம். ஒரு ஆட்சியாளன்  கூரிய  வாள் நுனியாக தன்னைத்  தீட்டிக் கொள்ளலாம்  ஆனால்  அந்நுனி உடலின்   புற்றுக் கட்டிகளை  மட்டுமே  இரக்கமில்லாமல்  வெட்ட வேண்டும். நுண்மையின்மையால் உடல்  முழுக்க  வெட்டப்பட்டு   குருதி  வழிகிறது. 

Sunday 15 May 2016

அதிகாரமும் அழகுமுத்து சாரும்

       
                     ஏழாம்  வகுப்பு  படிக்கும்  போது அழகுமுத்து எனக்கு  தமிழாசிரியர். உமா பார்வதி என அவருக்கு  இரண்டு  மனைவியர். அவ்வயதில் இரண்டு மனைவிகளுடைய முருகனிலிருந்து கிட்டத்தட்ட  அதே பெயருடைய  என் தாத்தா  வரை அனைவரையும்  நான்  குற்றவாளிகளாகவே கருதினேன். அது போன்றே அழகுமுத்து “அய்யா” மீதும்  ஒரு சிறு  வெறுப்பு. ஆனால் இன்று  யோசிக்கும் போது அவ்வெறுப்புக்கு வேறு காரணங்கள்  தெரிகின்றன. உண்மையான  காரணங்கள். நான்  சந்தித்த இரண்டாவது  “கண்டிப்பான” ஆசிரியர்  அவர். முதலாமானவர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியம். ஆனால் ஒரு முறை  அவர்  இரு சக்கர  வாகனத்திலிருந்து விழுந்து  விபத்து ஏற்பட்ட  போது அவர் அரற்றியதை  கேட்க நேர்ந்ததால்  “இவருக்கா பயந்தோம்” என்றொரு  அலட்சியம் ஏற்பட்டுவிட்டது. அழகுமுத்து  நல்ல அடர் கருப்பு  நிறம். குள்ளமான  மனிதர். முழுக்கை வெள்ளை சட்டை அணிந்து முட்டி வரை மடித்து விட்டிருப்பார்  அல்லது  அரைக்கை சட்டை அணிந்திருப்பார். எதையுமே வெளிக்காட்டாத முகம். சில வார்த்தைகள் தான்  பேசுவார்.  முதல்  நாள்  கடவுள்  வாழ்த்து நடத்தி விட்டு  மறுநாள்  எழுதிக் காட்டச் சொன்னார். பெரும்பாலும்  நான்கைந்து  முறை ஆசிரியர்கள்  அழுத்திச்  சொல்லி  சென்ற பின்னே  அது போன்ற “டெஸ்டுகள்” எங்கள் வகுப்பில்  நடக்கும். ஆனால்  அழகுமுத்து “அய்யா” சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும்  கூர்ந்து  கவனித்தே வந்தோம். ஒருவரை கணிக்க முடியாவிட்டால் அவர் மீது பயம் பெருகி விடுகிறது. மறுநாள் அவர் வகுப்பிற்குள் நுழைந்ததும்  இன்னதெனச் சொல்ல முடியாத ஒரு குளிர்  போல பயம் வகுப்பு முழுவதும்  பரவியது. மாணவர்களை வரிசையாக  அமரச்  செய்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில்  எழுதுவதை நிறுத்தச்  செய்தார். முதலில்  ஒருவனை அழைத்தார். நடுங்கிக் கொண்டே சென்றான். சில வினாடிகள்  அவன் எழுதியதை  கவனித்திருப்பார். “கைய  நீட்டு” என்றார். அவன் தீர்த்தம் வாங்குவது  போல லேசாக  நீட்டினான். “சுளீர்” என ஒரு அறை விழும் சப்தம். எனக்கு  அடிவயிறு  கலங்கிவிட்டது. கண்களில்  நீர்  வழிய  கையை நீட்டினான். மர அளவுகோளால் வலது மற்றும்  இடது கரங்களில்  தலா மூன்று அடிகள் விழுந்தன. எனக்கு   முன் மேலு‌ம் சிலர்  சென்றனர். என் முறை வந்தபோது தான்  எத்தனை  தவறுகளோ அத்தனை  அடி என்பது  எனக்குப்  புரிந்தது. எனக்கு  மூன்று  தவறுகள். “அவ்வளவு  தானா” என ஆச்சரியப்பட்டுக் கொண்டே கையை நீட்டினேன். முதல்  அடி வலித்ததா அல்லது  அதிர்ச்சி  அடைய  வைத்ததா எனத்  தெரியவில்லை. நெஞ்சைத் தாண்டி  உதடு வரை அழுகை வந்து விட்டது. அழக்கூடாது  என உதட்டை  இறுக்கிக் கொண்டேன். இரண்டாவது  அடி விழுந்த  போது அழுகை வரவில்லை. மூன்றாவது  அடி வலிக்கவே  இல்லை.  நான்  அவ்வயதில்  “நோஞ்சான்”. என் வகுப்பில்  சக மாணவர்கள் சிலரைக்  கண்டு நான்  பயப்படுவேன். அப்படி நான்  பயப்படும்  சில சக மாணவர்கள்  கூட அடி  வாங்கிக்  கொண்டு அழுதவாறே திரும்பினர். அதைக் கண்ட போது ஒரு குரூர  திருப்தி. ஆனால்  அதன் பிறகு  ஒவ்வொரு  முறையும்  அழகுமுத்து  “அய்யாவின்” உத்திகள்  மாறிக் கொண்டே இருந்தன. எந்நேரமும்  கணிக்க முடியாதவராகவே இருந்தார். பிற ஆசிரியர்களிடம் கூட அந்த அதிகார பாவம் நீடித்தது. சில நாட்களுக்கு  முன்  திருத்துறைப்பூண்டியில்  ஒரு கம்யூனிஸ்ட்  கூட்டத்தில்  அவரைப் பார்த்தேன். என்னுள்  முழுமையாக  அப்போதும்  அவர் மீதான பயம் நீங்கியிருக்கவில்லை. அப்போது   ஒன்று புரிந்தது . அவர் அடிப்பதை விட அதற்கு முன் மேற்கொள்ளும்  பாவனைகளே மிரளச் செய்து என்னை விட வலிமையானவர்களையும் அழவைத்திருக்கிறது.

ஆட்சியதிகாரத்தை அவருடன்  ஒப்பு நோக்கும் போது  ஒரு உண்மை விளங்குகிறது. அதனையே  விளக்க முயல்கிறேன். அதிகாரம் என்பதன் குறியீட்டு  வடிவமாக (symbolic  reference) அவரை நான்  எடுத்துக்  கொள்கிறேன். மனிதன்  அடிப்படையில்  தனக்கான  தனிப்பட்ட  விருப்பங்களும்  சுதந்திரமும்  கொண்டவன். குழுவாக  இணைந்து  வாழத்  தொடங்கும்  போதே அவனுடைய  தனிப்பட்ட  விருப்பங்கள்  கட்டுப்படுத்தப்படுகின்றன. திருமணம்  என்று ஒரு ஆணும் பெண்ணும்  குழுவாக்கப்படும் போது சில தனிப்பட்ட  விருப்பங்களை விட்டுக்  கொடுக்க வேண்டியிருப்பதைப் போல். பழங்குடி  சமூகங்களில்  பெரும்  பூசல்கள்  தொடர்வதற்கு முக்கிய  காரணம்  அவர்கள்  சுதந்திரமாக  இருக்க விழைவதே. சுதந்திரம்  என்பது  தலைமையை  ஏற்றுக் கொள்வதற்கு எதிரான  மனநிலை. ஆனால்  ஒரு சமூகம்  முன் செல்ல வேண்டுமானால்  ஒரு மையம்  அவசியமாகிறது.அம்மையத்தை ஏற்றுக்  கொள்ளச்  செய்வதும்  அவசியமாகிறது. அதற்காக  மையத்திற்கென ஒரு தோரணை  (posture) உருவாக்கப்படுகிறது. “இங்கு நீ கீழானவன். இதற்கு  நீ மதிப்பளித்தாக  வேண்டும்” என்ற எண்ணத்தை நிறுவுவதற்காக மையத்தில்  தலைவனாக வீற்றிருப்பவன் பிறரிடமிருந்து  “வித்தியாசப்படுவது” அவசியமாகிறது. மதம் கடவுள்  போன்றவற்றிற்குள் நான்  செல்லவில்லை. அதிகாரம்  செயல்படும்  விதத்தையே குறிப்பிடுகிறேன்.

அதிகாரத்தில்  பங்கு கொள்ள அவசியமான குணம்  இயல்பின்மை. எந்நேரமும்  ஒரு நாடகத்  தருணத்தைப் போன்று வாழ்க்கை நடத்துபவனே தலைமை  கொள்ள முடியும். சிறு  வயது முதலே  அதிகாரத்துடன்  பொருந்திப்  போகுமாறே நாம் வளர்க்கப்படுகிறோம். ஒரு குழந்தை  ஒன்பது  மணிக்கு  ஒரு பள்ளியில்  சென்று அமர வேண்டும்  என அறிவுறுத்தப்படும் போதே  அதன்மீது  மறைமுகமாக  அதிகாரம் செயல்படத்  தொடங்குகிறது. தலைமையின்  முக்கிய  நோக்கம்  அனைத்தையும்  ஒன்று போலாக்குதல். ஒரே மாதிரியான  சீருடை ஒரே மாதிரியான  பேச்சு ஒரே மாதிரியான  பிரார்த்தனை  என நாம் நிறைய  “ஒரே மாதிரிகளை” பார்த்தே வளர்வதால்  அந்த “ஒரே மாதிரிக்கு” வெளியே இருப்பவை இழிந்தவையாகவும் எதிரானவையாகவும் தெரிகின்றன. தாய் வழிச்  சமூகங்களில்  ஒரு பெண் பல ஆண்களை  மணந்து கொள்வது   நம் மரபில்  வழக்கத்தில்  இருந்த ஒன்று தான்  என்பது கூட “அதிர்ச்சி” அளிப்பதாக  இருக்கும். ஏனெனில்  அதிகாரத்தின்  வழியாக  நாம் தொடர்ச்சியாக  ஒற்றைப்படையாக சிந்திக்க  பழகுகிறோம்.

சிறு அரசுகள்  ஒன்றிணைந்து  பேரரசு  உருவாகும் போது  இந்த அதிகார இறுக்கம்  மேலும்  அதிகமாகும்.  பேரரசுகளும்  அழிவுற்று நம்மைப் போல் நூற்றியிருபது  கோடி மக்கள்  கொண்ட ஒரு பெரும்  ஜனநாயக  நாடு  அமையும்  போது அதிகாரம் அதன் உச்சத்தில்  செயல்பட்டால்  மட்டுமே   இந்நாட்டினை உடையாமல் காக்க  முடியும். அதே நேரம்  ஆட்சியதிகாரம் குறித்த  பார்வையை உருவாக்கிக்  கொள்ளாமல்  பணிந்தே நடந்தால்  அது அழிவிற்கே  இட்டுச்  செல்லும்.

ஒரு அடிப்படை  புரிதல். சமூக  இயக்கம் என்பது ஒரு வட்டம்.  மக்கள். மக்களுடைய  தேவைகளை நிறைவேற்றும்  பிரதிநிதி. அப்பிரதிநிதிகளிலிருந்து அமைச்சர்கள்.  அமைச்சர்களிலருந்து முதலமைச்சர்  அல்லது  பிரதம அமைச்சர். இது அரை வட்டம். மேலாண்மை வட்டம்  (management circle) எனவும்  சொல்லலாம். முடிவெடுக்கும்  அதிகாரம் (decision  makers ) படைத்தவர்கள் இவ்வட்டத்தினர். அதன்பின்  அரசின் முதன்மைச் செயலர்  (chief secretary) துறைச்  செயலர்கள்  மாவட்ட  ஆட்சியர்கள்  அவர்களுக்கு அடுத்த நிலையில் மாவட்ட கல்வி மருத்துவம் விளையாட்டு  என பிற துறை அலுவலர்கள் அதன்  பின்னர் வட்டாட்சியர்  வருவாய்  ஆய்வாளர்  என மக்களை  நேரடியாக  அணுகும் அலுவலர்கள். பின்  மக்கள். இது இன்னொரு  அரை வட்டம்.  இவ்வட்டத்தை நிர்வாக  வட்டம்  (administrative  circle) எனலாம். இவ்வட்டத்தில்  இருப்பவர்களை  செயல் அலுவலர்கள் (implementors) எனலாம்.  சுருக்கமாக  ஒரு குழந்தை அம்மாவிடம்  வெளியே  அழைத்துப்  போகச் சொல்லி அடம் பண்ணுகிறது. தாய் அதை எங்கே அழைத்துச்  செல்ல  வேண்டுமென  முடிவெடுக்கிறாள். தந்தை அழைத்துச்  செல்கிறார்  எனக் கொள்வோம். இங்கு குழந்தை  மக்கள் . தாய் மேலாண்மை. தந்தை நிர்வாகம். இந்த வட்டம்  உதாரணம்  எல்லாம்  ஒரு  பொதுப் புரிதலை உருவாக்கவே. இதன் வழியே புலப்படுவது மக்களின் தேவைகளுக்கு  ஏற்றவாறே  நிர்வாகமும்  மேலாண்மையும் செயல்பட வேண்டும் என்பதே.தங்களுடைய  தேவைகளை சரிவர உணராத  மக்கள் பெரும்பாலும்  தவறான மேலாண்மையாளர்களை தேர்வு செய்வார்கள். மேலாண்மை  நிர்வாகம்  இரண்டுமே  மக்களை அணுகி அறியும்  நுண்ணுணர்வு  கொண்டிருக்க வேண்டும். மேலாண்மையாளர்களான அரசியல்  வாதிகள்  மக்கள்  குறித்து ஒரே விதமான  கண்ணோட்டத்தை கொண்டிருக்க  முடியாது. ஏனெனில்  மேலாண்மை  நிரந்தரமல்ல. அவர்கள்  மக்களையும்  மக்கள்  அவர்களையும்  தொடர்ந்து  கண்காணிக்க  வேண்டியிருக்கிறது. ஆனால்  நிர்வாகம்?

குடிமைப்  பணிகள் (civil services) என்று சொல்லப்படும்  அரசு நிர்வாகத்தின்  முகமாகவே  எனக்கு  அழகுமுத்து  தெரிந்தார். பிரிட்டிஷ்  காலத்தில்   உருவாக்கப்பட்ட  குடிமைப் பணிகளுக்கான  ஆட்களை தேர்வு செய்யும்  முறை பெரிய அளவில்  மாற்றம்  இல்லாமல்  இன்றும்  அப்படியே  தொடர்கிறது  என்றே நினைக்கிறேன். ஏதேனும்  சம்பந்தமில்லாத  இரு துறைகளில்  அடிப்படை  அறிவு  ஒரு இளங்கலைப்  பட்டம்  “பயிற்சி” செய்து  பெறக் கூடிய “ஆளுமை”. இந்தத்  தகுதிகள்  இருந்தால் ஒரு  பயிற்சி மையத்தில் பயின்று ஒருவர் தன்  பெயருக்கு பின் ஐ.ஏ.எஸ்  அல்லது  இ.ஆ.ப என எழுதிக்  கொள்ளலாம். மிக இள வயதில்  அதிகாரம்  கைக்கு வந்துசேரும். நல்லது. ஆனால்  இன்றைய  சூழலில்  இத்தகைய  “பயிற்சி” பெற்ற நிர்வாகத்தினரா நம் தேவை? சற்று பின்னோக்கி யோசித்தால்  புரியும். நிலப்பிரபுத்துவ   காலத்தில்  நிர்வாகம்   மக்களை ஆண்டது தோரணைகள் வழியாகவே. அழகுமுத்து  என்ன நினைக்கிறார் எனத் தெரியாமல் நாங்கள்   பயந்தது போல ஆட்சியாளன்  என்ன நினைக்கிறான் எனத் தெரியாமல் மக்கள்  பயந்தே இருக்க வேண்டும். சுயத்தின் மீது  தனி மனிதனின்  நம்பிக்கை பெருகிக்  கொண்டிருக்கும்  இக்காலத்திலும் ஆட்சிப் பணிப் பயிற்சிகள்  நிலப்பிரபுத்துவ  கோட்பாடுகளையே தூக்கிப்  பிடிக்கின்றன. பணி பயிற்சி  முடிக்கும்  ஒருவர் தன் தலைமையை  முழுதேற்பவராக சாமானியர்கள் மீது ஒரு  வெறுப்புணர்வும்  பரிதாப உணர்வும்  கொண்டவராக “கண்டிப்பானவராக” தனித்தவராக வெளி வருகிறார். “ஒரே மாதிரிகளை” தாண்டி சிந்திக்கும்  அனைவரையும்   வெறுக்கிறார். அரசு எந்திரத்தில்  இன்னொரு  பரிதாபமான  கருவியாக  தன்னை இணைத்துக்  கொள்கிறார். இந்தியாவின்  அறிவார்ந்த  நிர்வாகவியல் உச்சத்தை அடைய அனைத்து சாத்தியங்களும் இருந்தும் இன்று வரை  இந்திய  ஆட்சிப்  பணியில் இருந்து ஒரு சிந்தனையாளர் கூட உருவாக முடியாததற்கு நம்முடைய   பழமையான  நிலப்பிரபுத்துவ  “பயிற்சி” முறைகளே காரணம்.

சிகப்பு  தலைப்பாகை  அணிந்த  உதவியாளன்  நீதிபதிகளின்  மேலங்கி உயிருக்கு போராடும் நோயாளியை நினைவுறுத்தும் ஊளையிடும் வாகனம் போன்ற  கடந்த கால குறியீடுகளை  களைவதன் வாயிலாக  இன்றைய  முதலாளித்துவ  மனநிலையை  மக்கள்  மத்தியிலும்  “கடுமையான” பணியாளர்கள்  மத்தியிலும்  உருவாக்க முடியும். தங்களை மேலானவர்களாக அவர்கள்  கற்பனை  செய்து  கொள்வதிலிருந்து தடுக்க  முடியும். நிர்வாகத்  துறை  சார்ந்த  அலுவலகங்களில் பெரும்பாலும்  மலத்தினை  கண்டால் ஏற்படும்  முகச் சுழிப்பு ஊழியர்கள்  மத்தியில்  உறைந்திருக்கும். அதற்கு  அடிப்படை  காரணம்  வேறென்ன  மீண்டும்  அழகுமுத்து தான். அங்கு  உட்ச அதிகாரத்தில்   இருப்பவர் தன்னை முற்றிலும்  மறைத்துக்  கொள்பவராக இருப்பார். மாணவர்களின்  மன ஓட்டம் அறிந்து தன்னையும் முன்னேற்றிக் கல்வித் தரத்தையும்  மேம்பாடடையச் செய்யும் நேர்மையான  ஒரு மாவட்ட கல்வி அலுவலர்  நிச்சயம்  எங்கும்  நிமிர்ந்து நிற்கும்  ஆணவத்தை கொண்டிருப்பார். அப்படிப்பட்ட  ஒருவரிடம்  ஒரு மாவட்ட  ஆட்சியர்  அலட்சியத்துடன்  தனக்கு  “கீழ்” உள்ளவர் தானே என அதிகாரம் செலுத்த  நினைத்தால்  அலுவலரின்  ஆணவம் அங்கு சீண்டப்படும்  அல்லது முறிக்கப்படும். அர்ப்பணிப்பு  மிக்கவர்களின் ஆணவம்  முறிந்தால் அந்த சமூகத்திற்கே அது கேடு.

மேட்டிமைத்  தனம் இல்லாத நுண்ணுணர்வு  கொண்ட நிர்வாகிகளை உருவாக்கும் வகையில்  நம் இ.ஆ.ப பயிற்சிகள்  மாறுமா? ம் பார்ப்போம்

Friday 13 May 2016

வாக்களித்தல் ஒரு உயர் நாகரிகச் செயல்பாடு

அன்பு  நண்பர்களுக்கு  வணக்கம்

    தினமலர்  நாளிதழில்  எழுத்தாளர்  திரு. ஜெயமோகன்  அவர்கள் “ஜனநாயக  சோதனைச் சாலையில்” என்ற தலைப்பில்  எழுதிய  தொடர் கட்டுரைகள்  வாக்களிப்பது  குறித்த பெருமிதத்தை  வாசித்தவர்களிடம் உருவாக்கி  இருக்கும்  என நம்புகிறேன். அத்தகைய  பெருமிதத்துடன்  சக குடிமகனாக  நான்  உணர்ந்தவற்றை உங்களுடன்  பகிர்வதே இக்கட்டுரையின்  நோக்கம்.

இனி…
              நம்முடைய அரசியல்  ரீதியான  பரிணாம  வளர்ச்சியை  உற்று நோக்கும்  போது  ஒன்று  புலப்படும். அரசாட்சியில்  பங்கேற்பவர்களின் எண்ணிக்கை  கூடிக்  கொண்டே  வந்திருக்கிறது  என்பதை  கவனிப்பவர்கள் உணர முடியும். பழங்குடி  இனங்கள்  பெரும்பாலும்  தலைமை  அற்றவை.  வலுவான  தலைமை  இல்லாத  எந்தவொரு  இனக்குழுவும் நீடிக்க  முடியாது. இவ்வுண்மையை உணர்ந்த இனங்களில்  ஒரு தலைவன்  உருவாகி வருவான். அவனுடைய  தலைமையை  அக்குழுவில்  உள்ள அனைவரும்  ஏற்க வேண்டும்  என்பதற்காக  பல தொன்மங்கள் உருவாக்கப்பட்டு அத்தலைவன் இறைவன் அளவிற்கு  உயர்த்தப்படுவான். அவனை ஏற்பது மட்டுமே  மக்களின்  கடமை. இது போன்ற  பல சிறு அரசுகள்  ஒன்றிணைந்து  பேரரசு உருவாகும்  போது மக்களால் ஏற்கப்பட்ட  சிற்றரசர்கள் இணைந்து  அவர்களினும் வலிமையான  ஒரு பேரரசனை ஏற்கிறார்கள். தமிழகத்தில்  அப்படி  உருவாகி வந்த ஒரு பேரரசன் ராஜராஜ சோழன். மன்னராட்சியில் மக்களுக்கு  பெரிதாக அதிகாரங்கள்  கிடையாது. யார் உயிரையும்  பறித்து விடும் ஏகபோக அதிகாரம் மன்னனிடம்  இருந்தது. தன்னுடைய  சுய விருப்புகளாலும் அரசியல்  காரணங்களுக்காகவும் ஆயிரக்கணக்கான  மக்களை  போர் புரிய  வைக்க  மன்னனால்  முடிந்தது. அறிவு  விரிவடைந்து  கொண்டே இருப்பது.  அறிவுடையவர்கள்  பெருகப்  பெருக  மன்னராட்சியில் இருக்கும்  எதேச்சதிகார  போக்கினை எதிர்க்கும்  மனநிலை  உலகம்  முழுக்கவே  வலுப்பெற்றது. மன்னனை ஒரு எல்லைக்கு மேல்  எதிர்த்து  பேசினாலே உயிர் போகும்  அபாயம்  இருந்த காலத்தில்  குருதி  உறவின் வழியாக  ஆட்சியாளன் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது   என்பதை  வலியுறுத்தியவர்கள் நிச்சயம்  உலகம்  முழுக்கவே  வேட்டையாடப்பட்டிருப்பார்கள். அப்படி  எண்ணற்ற போர்களின் கலகங்களின் கண்ணீரின்  வழியாகவே  ஜனநாயகம்  என்னும்  உயர் நாகரிகச் செயல்பாடு பிறந்து  வந்துள்ளது. 

மக்களாட்சி  என்பதே துதிபாடும்  மந்தை மனநிலைக்கு  எதிரானது. ஒவ்வொரு  தனி மனிதனின்  குரலும்  ஒலித்தாக வேண்டும்  என்பதே ஜனநாயகத்தின்  அடிப்படை. ஒண்டுவதற்கு குடிசை இல்லாதவனும் தனித் தீவுகளையே விலைக்கு  வாங்கி  வைத்திருப்பவனும் தன்னுடைய  ஆட்சியாளனை தேர்ந்தெடுக்கும்  போது ஒரே “மதிப்பு” உடையவர்களே. ஆனால்  ஜனநாயகம்  பற்றிய  அடிப்படை  புரிதல் திட்டமிட்டே நம்மிடம்  உருவாகாமல்  செய்யப்படுகிறதோ என்று  சந்தேகம்  கொள்ளும்  அளவுக்கு  நாம் மந்தைகளில்  ஒருவராக  இருப்பதையே  விரும்புகிறோம். யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று  கேட்டால்  இன்னும்  பெரும்பான்மையானவர்கள்  பதில்  “ஜெயிக்கிற  கட்சிக்கு” என்பார்கள் அல்லது ஏதேனும்  ஒரு கட்சியின்  பெயரையோ கட்சித்  தலைவரின் பெயரையோ சொல்வார்கள். தான் வாக்களிக்கப் போகும்  வேட்பாளரின் பெயர் கூட பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.கட்சிகள்  எப்போதுமே  தன் மந்தையில்  ஒருவராகவே  மக்களை  வைத்திருக்கவே விரும்பும். இதற்கு  எதிரான  மனநிலையான தனித்துச்  செல்வதே  ஜனநாயகத்தின்  இன்றியமையாத  பண்பு. பெரும்பாலும்  மக்களின்  எண்ணம் “ஒரேயொரு  ஓட்டினால் என்ன நடந்து விடப்  போகிறது” என்பதே. நாம் அனைத்தையும்  போட்டியாகவே காண விழைகிறோம்.  ஒரு கால்பந்து   விளையாட்டை  எந்த அணிக்கும்  ஆதரவோ எதிர்ப்போ தராமல்   காண்பவர்களால் அப்போட்டியை ஒரு அழகிய குழு நடனமாகக் காண முடியும். ஜனநாயகமும்  அப்படித்தான்.  நான் வாக்களிக்கப் போகும்  வேட்பாளன் குற்றவாளியாக இருக்கக்  கூடாது  என்ற ஒரு காரணியை மட்டும்  அடிப்படையாகக்  கொண்டால்  அரசியல்  கட்சிகள்  பணம் படைத்தவர்களை விடுத்து நேர்மையானவர்களை தேர்தலில்   நிறுத்த வேண்டிய  நிலை  ஏற்படும்.  இவையனைத்தும்   தொடங்க வேண்டிய  இடம்  வேட்பாளர்  குறித்த  நம் விழிப்புணர்விலிருந்தே. பெரும்பாலான மக்கள்  இன்றும்   வாக்களிப்பது   ஜாதியின்  அடிப்படையில்.  எனவே ஜாதி செல்வாக்கு   இருக்கக்  கூடியவர்களை கட்சிகள்  முன்னிறுத்துகின்றன. ஜாதி  நிலப்பிரபுத்துவ காலத்தில்  மக்களை  ஒருங்கிணைத்த  ஒன்று  தான்.  ஜாதியின் மீது போலியான வெறுப்பைக் கக்கிவிட்டு “நாகபதலியா நாகப்பதலியா” எனப் பார்க்கும்   முற்போக்கு  வாதிகள்  நம்மிடம்  அதிகம்.  ஜாதியை  என் கொள்ளு தாத்தாவிற்கு இணையாக நான்  மதிக்கிறேன்.  ஆனால்  அவர்  இறந்து  விட்டார்.  முழு  மரியாதையுடன்  அடக்கம்  செய்து விட்டு  நினைவில்  நிறுத்திக்  கொள்ள வேண்டியது தான்.  நடுக்கூடத்தில் அவருக்கு  அலங்காரம்  செய்து  அழுது  கொண்டிருந்தாலும் பிணம்  அழுகல் வாடை அடிக்கவே  செய்யும். “ஜாதி” எனும்  அளவுகோலிருந்து “நேர்மை” எனும் அளவுகோலுக்கு நாம்  மாறினால்  கட்சிகளுக்கு நேர்மையானவர்களை முன்னிறுத்துவதைத் தவிர  வேறு வழி இருக்காது.

உங்கள்  தொகுதியின் வேட்பாளர்  பட்டியலை  எடுத்துப்  பாருங்கள். நிச்சயம்  சில சுயேட்சை வேட்பாளர்கள்  இருப்பார்கள்.  ஜனநாயகத்தின்  மிக முக்கியமான  உறுப்பினர்கள்  இவர்கள்.  நோட்டாவிற்கு வாக்களித்து  ஜனநாயகத்தின்   மீதான  தங்கள்  “தார்மீகக்  கோபத்தை” காண்பிக்க நினைப்பவர்கள்   பெரும்பாலும்  பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள்  மீதே “கோபம்” கொண்டிருப்பார்கள். இந்த சுயேட்சைகள் ஏனோ அவர்கள்  கண்ணுக்குத்  தெரிவதில்லை.  வாக்கினை  பிரிப்பதற்காக அரசியல்  கட்சிகளால் நிறுத்தப்படுபவர்கள் மற்றும்  கட்சிகளில்  இருந்து  பிரிந்து  சுயேட்சையாக  நிற்பவர்கள்  இவர்களைக்  கடந்து நிச்சயம்  ஒருவரேனும்   மக்கள்   பிரச்சினைகளுக்காக  அலைபவராக உண்மையில்  தன் தொகுதிக்கு  ஏதேனும்  செய்து விட வேண்டும்  என்ற நினைப்புடையவராக இருப்பார்.  அத்தகையவர்களுக்கு  நாம்  வாக்களிப்பதால் இன்றைய  சூழலில்  செய்தி ஊடகங்களால்  உருவாக்கப்படும்  “தேர்தல்  திருவிழா” போன்ற மாயைகளை தாண்டி அவர்கள்  வெற்றி பெறுவது  சாத்தியமில்லை  எனினும்  உண்மையான  ஜனநாயக  நோக்கர்கள் சுயேட்சைகளுக்கான ஆதரவு  பெருகியிருப்பதையும் “மந்தை” மனநிலை குறைந்திருப்பதையும் கண்டு  கொள்ள முடியும். அவர்களுடைய  குரல்களை  தொடர்ந்து  கவனித்து வரும் அரசியல்  கட்சிகள்  மக்களின்  ஜனநாயக  விழிப்புணர்வு  பெருகியிருப்பதை உணர்ந்து  தங்களுடைய  “அசமந்தத்தை” சற்றேனும்  தளர்த்த வேண்டிய  நிலை உருவாகும். இது போன்ற செயல்பாடுகள்  தான் ஜனநாயகத்தை  மேலும்  மேலும்  வலிமை கொள்ளச்  செய்யும். மேலு‌ம்  ஒரு குற்றவாளிக்கு  நான் வாக்களிக்கவில்லை என்ற பெருமிதமும்  எஞ்சும். இது விடுத்து  தனிமனிதத் துதிகளும் தலைவர்களின்  பிம்பங்களை  நம்புவதும்  ஜனநாயகத்திற்கு  எதிரான  செயல்பாடே. ஜனநாயகம் குறித்து  உலகம் முழுக்க நடைபெறும்  ஆரோக்கியமான விவாதங்களையும் சோதனைகளையும் கவனிப்பதும்  பங்கு பெறுவதும் உலகின்  மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உறுப்பினராக நம் கடமை.  வாக்களியுங்கள். நன்றி

இப்படிக்கு

உங்கள்  சக குடிமகன் சுரேஷ் 

Monday 9 May 2016

நுண்ணுணர்வும் நுகர்வுணர்வும்




நுண்ணுணர்வும்  நுகர்வுணர்வும்

அந்நியமாதலும் ஆனந்தமாதலும்   என்ற கட்டுரையின்  தொடர்ச்சியாக இதனைக்  கொள்ளலாம்  எனினும்  இதன் பேசுபொருள்  தன்னளவில்  தனித்ததும் கூட.

தலைமை  என்பது  அனைத்துத்  துறைகளிலும்  மதிக்கப்படும்  அறிவுடையவர்களால் விரும்பப்படும்  ஒன்றாகவே  இருந்து  வந்துள்ளது. ஒப்பு நோக்கும்  போது ஒரு தொழில் நிறுவனத்தில்  சற்று உயர்ந்த நிலையில்  இருக்கும்  ஒருவர்  ஒரு மாவட்ட  ஆட்சியரை விட அதிகம்  சம்பாதிப்பவராகவும் அதிக  சுதந்திரம்  உடையவராகவுமே இருப்பார். இந்திய  குடிமைப்  பணித்  தேர்விற்கு  உந்துதலோடு தீவிரமாக  தயார் செய்யும்  ஒரு மாணவருக்கு பெரும்பாலும்  இது தெரிந்தும்  இருக்கும். இருந்தும்  பெரும்பாலான  திறன் நிறைந்த  மாணவர்கள் தொடர்ந்து  குடிமைப்  பணிகளை நோக்கி  உந்தப்படுவது ஏன்? பெரும்  பணம்  சம்பாதிக்கும்  வேலையை  விடுத்து  லாபம்  குறைவென்றாலும் சுய தொழில் தொடங்க சிலர்  துடிப்பது  ஏன்? கணவனை இழந்தோ அல்லது  பிரிந்தோ வாழும்  பெண்களில்  சிலர்  பிடிவாதமாக  மறுமணத்தை மறுப்பது ஏன்?  அனைத்திற்கும்  வேறு வேறு காரணங்கள்  இருந்தாலும்  மேற்சொன்ன அனைவரையும்  ஒரு பொதுத்  தளத்திற்குள் கொண்டுவர  முடியும். இடர்பாடுகளை  தெரிந்தே  உழைக்கும்  ஒரு ஆட்சியாளர்  தன் ஆழ்மனதில் விரும்பும்  மாற்றத்தை  சமூகத்தில்  காண விழைகிறார். தன் மனம்  விரும்பும்  விதத்தில்  தன் துறையை  கட்டமைக்க  நினைக்கிறான்  தொழில் தொடங்க நினைக்கும்  ஊழியன். தயவுகளை நம்பாமல் தன்னை தலைமையாகக் கொண்டு  தன்னை சார்ந்திருப்பவர்களை வழி நடத்த  நினைக்கிறாள்  அப்பெண். ஒவ்வொரு  இடத்திலும்  தலைமையை ஏற்க விழைபவர்களின் அடிப்படை  எண்ணம்  ஒன்றாகவே  இருக்கிறது. தன் பங்களிப்பு  ஒரு செயலில் அதிகம்  இருக்க  வேண்டும்  என்ற எண்ணம். ஒரு செயலில்  தன்  பங்களிப்பு  அதிகமானதாகவோ அல்லது  தன்னால்  ஒரு செயல் முடிய  வேண்டும்  என்று நாம் எண்ணுவதோ ஏன்?  இதற்கு  சற்று ஆழமான  காரணம்  இருக்க வேண்டும். கொஞ்சமாவது புவியை  கவனிப்பவர்களுக்கு ஒன்று  புரியும். இந்த உலகிலும்  அது இடம் பெற்றிருக்கும்  இப்பேரண்டத்திலும் நம் கட்டுப்பாட்டிற்குள்  எதுவுமே  இல்லையென. பிறந்த அனைத்து  மனிதர்களும்  இறந்தும்  விட்டனர். விதிவிலக்குகள் இதுவரை  இல்லை.  தாள முடியாத  துக்கத்தினால் இறந்த சில மாமனிதர்கள்  உயிர்த்தெழுந்து விட்டதாகவும்  சிலர் இறக்கவே இல்லையென்றும் நாம் நம்பத்  தலைப்பட்டாலும் பிறந்தவர்கள்  சில ஆயிரம்  வருடங்கள்  நினைவுகளாய்  எஞ்சலாம் என்பதைத்  தாண்டி  இங்கு பிறந்த அனைவருமே  இறந்துதான் ஆக வேண்டும். பெரும் பிரபஞ்சத்தில்  நம் பிறப்பும் இறப்பும்  துளி நிகழ்வு. இவ்வளவு சோர்வு  தரும்  நிச்சயமின்மையிலிருந்து தப்பிக்க  ஒரு வழி உண்டெனில் அது நம்  பங்களிப்பு  இருக்கக்  கூடிய  செயல்களே. அத்தகைய  செயல்களில்  நம்மை ஈடுபடத்  தூண்டுவதே நம் நுண்ணுணர்வு. ஆங்கிலத்தில் instinct.

காதல்  அப்படிப்பட்ட  பங்களிப்பு  இருக்கக்  கூடிய  நுண்ணுணர்வு. தான் உடலுறவு  கொள்வதற்கும் சேர்ந்து  வாழ்வதற்கும்  இவன்/இவள் தான் சரி என்ற ஒரு முடிவு  எடுத்த பின் அந்த உணர்விற்காக அதுவரை இருந்த  தன்னுடைய  அடையாளங்களை  துறக்க வைக்கக்  கூடிய  அளவிற்கு  அவ்வுணர்விற்கு வலிமையுண்டு. எந்தத்  துறையில் நிபுணர்களாக இருந்தாலும்  அவர்களிடம்  நாம் காணக்கூடிய ஒரு அடிப்படை  ஒற்றுமை  துறை சார்ந்த  நுண்ணுணர்வு. எந்திரத்தின்  சப்தத்தை கொண்டு  அதில்  ஏற்பட்டிருக்கும்  சிக்கலையும்  குழந்தையின்  அழுகையைக் கொண்டு  அழுவதற்கான  நோக்கத்தையும் மக்களின்  உரையாடல்களைக் கொண்டு  அவர்களின்  உளநிலையையும் மாணவர்களின் நடவடிக்கைகளைக் கொண்டு அவர்களின்  நாடித்துடிப்பையும் அறிய முடிந்தவர்கள்  தத்தமது  துறைகளில்  வல்லுநராக நாள் அதிகம்  எடுக்காது. ஆனால்  நுண்ன
ணுணர்வின் அவசியம்  என்ன?  நாம்  அனைவரும்  ஏதோவொரு விதத்தில்  நம் தடங்களை  விட்டுச்  செல்லவே  விழைகிறோம். என்னைப்  பொறுத்தவரை  அது மிக நியாயமான  விழைவு. நிறைய சம்பாதித்தல் நிறைவான  மண வாழ்க்கை  போன்ற எளிய  இச்சைகளைக் கடந்து நமக்கே  உரித்தான  தீவிரமான  ஒரு திறனை நம்முள்  கண்டு  கொள்ளும்  போது  தான்  தடங்களை விட்டுச்  செல்வதற்கும் நுண்ணுணர்வுக்குமான நெருக்கம்  நமக்கு  புரிய வரும்.  உதாரணமாக  இந்திய சுதந்திரப்  போராட்டம் என்ற ஒற்றைப்  பெருஞ்செயலில் கோடிக்கணக்கானவர்கள் பங்கு பெற்றாலும்  ஒரு சிலர்  மிளிர்வதற்கு அவர்களின்  அதிகமான பங்களிப்பு  முக்கிய  காரணம். அதிலும்  அப்போரட்டத்தின் மையமாக  விளங்கிய  காந்தி உயர்ந்து தெரிவதற்கு  அவர் பங்களிப்பு  மட்டுமல்ல  நுண்ணுணர்வும் காரணம்.
நுண்ணுணர்வு என்பது  நம்மையும்  நம் சூழலையும்  தொடர்ந்து  கவனிப்பதால் உருவாகி  வரும்  குணம். நுண்ணுணர்வைப் புரிந்து  கொள்ள  அதற்கு  முற்றிலும்  எதிரான  குணமாக இன்னொன்றை புரிந்து  கொள்ள வேண்டுமென  நான் நினைக்கிறேன். அதற்கு  நான் இட்டிருக்கும்  பெயர் நுகர்வுணர்வு. நுகர்வு  கலாச்சாரம்  அதீத  நுகர்வு  போன்ற வார்த்தைகள்  புழக்கத்தில்  இருக்கின்றன. ஆனால்  நான்  நுகர்வினை (consumption) ஒரு உணர்வாகவே காண்கிறேன். சில  பத்தாண்டுகளுக்கு  முன்பு நிறைய பணம்  என்பது தந்தை வழியிலோ தாய் வழியிலோ பெறக்கூடிய  சொத்தாக மட்டுமே  இருந்தது. ஆனால்  எந்திரங்களின்  வளர்ச்சியும்  (குறிப்பாக  தானியங்கி  மற்றும்  மின்னனுவியல் ) உலக அளவிலான  தாராளமயமாக்கலும் குறிப்பிட்ட  எந்திரங்களையுளையும் கணிப்பொறிகளையும் சிறப்பாக  இயக்கினாலே குடும்பச்  சொத்தை விட அதிகமான பணத்தினை  நாற்பது வயதிற்குள்  அடைந்துவிடக் கூடிய  வாய்ப்பினை உருவாக்கின. கற்பனைக்கும் பங்களிப்புக்கும் எந்தவித முக்கியத்துவமும்  அளிக்காத  வறண்ட சூழலில்  வருமானத்தை  மட்டுமே  தகுதியின்  அளவுகோலாகக் காணும்   பெற்றோர்  மத்தியில்  வளர்வதால் நிறைய சம்பாதிப்பதற்கான வழியை  தேடிக்  கொள்வதில்  சிரமம்  இருப்பதில்லை. அதன்  பலனாய்  கிடைக்கும்  பணம்  எல்லையற்ற இன்பத்தை நல்கும்  என்ற நம்பிக்கை  அநேகரிடம் உண்டு. பசியோடு இருக்கும்  போது நிறைய சாப்பிட்டு  விடலாம்  என்ற வெறி எழுவது போல. இந்த இடத்தில்  தான்  நுகர்வுப்  பொருட்கள்  குவிகின்றன. விலையுயர்ந்த  நுகர்வுப்  பொருட்களை  உருவாக்குவதில் தான் உலகின்  அறிவும் திறனும்  பெரும்பாலும்  செலவழிகிறது என்பது என் தனிப்பட்ட  எண்ணம்.

ஏன்? குறிப்பிட்ட  அளவு  பணம்  சேர்ந்தவுடன்  இனி “வாழ்க்கையை  அனுபவிக்கலாம்” என்ற நோக்கத்தோடு  ஒருவன்  திரும்பும்  போது அவனுக்காக  நேர்த்தியான  விளையாட்டு  மைதானத்தின் பார்வையாளர்  இருக்கையும் உயர்தர  விடுதிகளின் வரவேற்பும்  சொகுசான வாகனங்களின்  அணிவகுப்பும் உயர்ந்த  மது வகைகளின் பளபளப்பும் ஆச்சரியமூட்டும் புதுப்புது  பொருட்களுடனான மின் சந்தையும்  எதிரே  விரிந்து  கிடக்கும். நுகர  நுகர  மேலும்  நுகர்வதற்கான  உத்வேகம்  பெருகும்.  இந்த உத்வேகத்தை அணைய  விடாமல்  பார்த்துக்  கொள்வது  மட்டுமே  வணிக  நிறுவனங்களின் வேலை. தன் நுண்ணுணர்வை சற்றேனும்  தீட்டிக்  கொள்பவர்கள்  தன்னுள்  பெருகியிருக்கும் நுகர்வுணர்வினை கண்டு  கொள்ள முடியும்  உடன் நுண்ணுணர்வு  மழுங்கி  இருப்பதையும். ஒரு செயலின் வழியாக  மகிழ்ச்சியை தேடுவது  நுண்ணுணர்வு. “பலனை” அடைய நினைப்பது  நுகர்வுணர்வு. கடவுள்  வரை இன்று  நுகர்வுப் பொருள்தான். இத்தனை மணிக்கு  “அப்பாயின்மென்ட்” இவ்வளவு  நேரம்  “தரிசனம்” செய்யக்கூடிய விதத்தில்  “பேக்கேஜாக” “கடவுள் வியாபார” நிறுவனங்களை நிறையவே  பார்க்க  முடிகிறது. இந்த “பொருள்” நுகர்வில்  திருப்தி  இழப்பவர்கள் அடுத்து  “லேண்ட்” ஆகும்  இடம் கடவுள். அது மீள்வதற்கு  வழி இல்லாத  துறை என்பதால்  அங்கே பெரும்பாலும்  தங்கி விடுகின்றனர். இறுதிவரை  உள்ளிருந்து  பிரச்சினையை  அணுக மட்டும்  நமக்கு  மனம்  வருவதே இல்லை. அனைவருக்கும்  தெரிந்தால்  எனக்கும்  தெரிய வேண்டும் .அனைவரும்  சிரித்தால் நானும்  சிரிக்க  வேண்டும்  என்கிற  ரீதியில்  “மந்தை” மனநிலையை  வளர்த்துக்  கொள்ளும்  போது நுண்ணுணர்வு  அழிகிறது. நம் நுண்ணுணர்வு  குறைந்திருப்பதை இப்போது  வரும்  நகைச்சுவை  காட்சிகளைக் கொண்டே புரிந்து  கொள்ள முடியும். உடல்மொழியும் நுணுக்கமான  வார்த்தை பிரயோகங்களும் இன்றி  பட்டிமன்ற  பேச்சாளர்கள்  போல நம் நகைச்சுவை  நடிகர்கள் ஏதோ உளறிக்  கொட்டுகிறார்கள். அது நகைச்சுவை  தானா  என்ற சந்தேகம்  வரக் கூடாது  என்பதற்காக  நம் தொலைக்காட்சிகளில்  நகைச்சுவைக்கென தனியே  சேனல் வேறு . அதில்  எதைக் காட்டினாலும் “கெக்கபிக்க” என நாம் சிரித்தாக வேண்டும். அரசியல்  கட்சிகளின்  கூட்டங்களிலும் எங்கு கைதட்ட வேண்டும்  என்ற அறிவு கூட இல்லாமல்  சாராயத்தை  குடித்துவிட்டு  அமர்ந்திருக்கிறோம். தன்னைக் குறித்து  கறாரான  சுய மதிப்பீட்டை  உருவாக்கிக்  கொள்பவர்கள் “மந்தைகளில்” ஒருவராகாமல் தடுத்துக்  கொள்ள முடியும்.

இன்னும்  சொல்வதானால் நுண்ணுணர்வையும் நுகர்வுணர்வையும் இப்படி வேறுபடுத்தலாம். காதல்  இயல்பாக  கொண்டு  சென்று நிறுத்தும்  புணர்விற்கும் காசு கொடுத்துப் புணர்வதற்கும் உள்ள வேறுபாடு. 

Sunday 8 May 2016

24 - என் விமர்சனம்


ஒரு சமூகம் தன் கலை வடிவங்கள்  (இசை, ஓவியம், நடனம், எழுத்து போன்றவை) குறித்து  நுண்ணுணர்வும “மந்தைத்” தன்மை இல்லாத சுய ரசனை  சார்ந்த  பார்வையையும் உருவாக்கிக்  கொள்ளும்  போது  தான்  தனித்த  அடையாளங்கள்  கொண்ட  பன்மைத் தன்மை  அச்சமூகத்தின் முகமாக  அமைந்து வலுப்பெறும்.  பெரும்  பொருட்செலவிலும் அதிகமான  மனிதர்களின்  உழைப்பினாலும் உருவாக்கப்படும்  திரைப்படத்திற்கும் இக்கூற்று பொருந்தும். சுய ரசனை  சார்ந்த  பார்வையை  திரைப்படத்தின் மீதும்  உருவாக்குதே என் விமர்சனத்தின் நோக்கம்.

இனி….
       படத்தின்  பெயர்  மற்றும்  முன்னோட்டத்திலிருந்து (ட்ரைலர்) இதுவொரு நேரத்தில்  பயணிக்கும் வகையான  அறிவியல்  புனைவுத்  திரைப்படம்  என்ற எண்ணம்  ஏற்கனவே  உருவாக்கப்பட்டிருந்ததாலும் இயக்குநரின்  முந்தைய  படம் (யாவரும் நலம்) அளித்த  நம்பிக்கையாலும் இப்படம்  ஒரு நேர்மறையான எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி  இருந்தது. ஒரு கழுகின் பார்வையில்  தொடங்கும்  முதற்காட்சியும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்துவதாகவே உள்ளது. “ப்ரஸ்டீஜ்” திரைப்படத்தை சற்றே  நினைவுறுத்தினாலும் முதற்காட்சியில் காட்டப்படும் இயற்கைச்  சூழலும்  புகைவண்டியும் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளன.கடிகாரங்களையும் ரசாயனங்களையும் கொண்டு  ஒரு கையளவுடைய காலப்பயண எந்திரத்தை (time  traveller) உருவாக்க  முயன்று  கொண்டிருக்கிறார் விஞ்ஞானி  சூர்யா . பல படங்களில்  வருவதைப் போல இதிலும்  “விஞ்ஞானி” சூர்யாவுக்கு  கண்ணாடி  அணிந்த  அப்பாவி  முகம் . வழக்கம்  போல்  எந்திரம்  பூர்த்தி  அடையும்  போது  வில்லன்  வருகிறார். வில்லன்  கோட் சூட்  அணிந்து  ஒழுங்காக  சவரம்  செய்த  இன்னொரு  சூர்யா. விஞ்ஞானியின்  சகோதரன்.  உச்சரிப்பிலும் உடல்மொழியிலும் “வில்லன்” சூர்யாவிடம் நல்ல  முன்னேற்றம். அவருடைய  வில்லத்தனங்கள் ரசிக்கும்  படி உள்ளன. சில அறிவியல்  விளையாட்டுப்  பொருட்களைக் கொண்டு  தனது குழந்தையை  மட்டும்  தான் கண்டுபிடித்த  காலத்தில்  பயணிக்கும்  கடிகாரத்துடன் தப்பிக்க  வைத்து  விட்டு  சூர்யாவும்  அவர் மனைவி  நித்யா  மேனனும் இறக்கின்றனர். அப்போது  எசகுபிசகாக அடிபடும்  வில்லன்  சூர்யா  ஸ்டீபன்  ஹாக்கின்ஸ் போல் வீல் சேரில்  அமர்கிறார். கர்ணனும் கவச குண்டலமும் போல குழந்தையுடன்( இன்னொரு  சூர்யா) பயணிக்கிறது  அவன்  அப்பா கண்டுபிடித்த  கால எந்திரம். கருப்புத்  திரையில்  இருபத்தாறு  ஆண்டுகளுக்கு  பின் என வருகிறது. வழக்கம்  போல்  வில்லன்  சூர்யா  மீண்டும்  களம் இறங்குகிறார். அதே கால எந்திரத்தை உருவாக்க நினைக்கிறார். அதே நேரத்தில் வாட்ச்  மெக்கானிக்கான  கதாநாயகனுக்கு கையில்  அணியக்கூடிய வாட்ச்  போன்ற  கால எந்திரத்தை பூட்டி  வைத்திருக்கும்  பெட்டியின்  சாவி கிடைக்கிறது. இதுவரை ஒரு சிறந்த  அறிவியல்  புனைவிற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படம்  அதை துளியும்  நிறைவேற்றாமல்  நகர்கிறது. அந்தக்  கடிகாரத்தை திருகினால் மொத்த  உலகத்தையும் மியூசிக்  பிளேயர் போல “பார்வர்ட்”, “ரிவர்ஸ்”, “பாஸ்” செய்ய  முடியும். அப்படி  கதாநாயகன்  அடிக்கடி  “பாஸ்” செய்து  மழை வருதற்கு முன்பு  மொட்டை மாடியில்  காயும்  துணிகளை எடுக்கிறார் ஒரு சின்ன  பையனின்  ஐஸ்கிரீம்  கீழே விழாமல்  காப்பாற்றுகிறார் எச்சில்  துப்பும்  ஒரு “பொறுப்பற்ற” குடிமகனை அவன் துப்பிய  எச்சிலைக் கொண்டே  தண்டிக்கிறார் சமந்தாவுக்கு பூ பொட்டு வைத்து  விடுகிறார் தோனியுடன் செல்பி எடுக்கிறார். தொடக்கக் காட்சிகள்  ஏற்படுத்தும்  பரபரப்புக்கு சம்மந்தமே இல்லாமல்  சமந்தாவுடன் டூயட்  பாடுகிறார். பெரும்பாலும்  டூயட்டுகளில் ஐரோப்பிய நகரத் தெருக்களையும் உடைகளையும் நம் படங்கள் அதிகம் பயன்படுத்துவதாகத் தோன்றுகிறது.வில்லன்  சூர்யா  விரிக்கும் வலையில்  கதாநாயகன் சிக்கும்  இடைவேளையில் மீண்டும்  பெரிதாக  எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

தம்பியின்  மகனைக்  கொண்டே  காலத்தில்  பின்னோக்கிச் சென்று  தனக்கு  நடந்த  விபத்தினை தடுத்து  தன்னுடைய  இளமையை  மீட்டுக்  கொள்ள  நினைக்கிறார்  வீல் சேரில்  அமர்ந்திருக்கும்  வில்லன். கதாநாயகன் சூர்யாவுக்கு  தன்னுடைய  உண்மையான  பெற்றோர்  யாரெனத் தெரிகிறது. தன்னை  வளர்த்தவரான சரண்யாவை  அவருடைய  குடும்பத்தோடு சேர்க்கிறார். அதே குடும்பத்தை  சேர்ந்த  சமந்தாவோடு மீண்டும்  காதலை புதுப்பித்துக்  கொள்கிறார். வில்லன் சூர்யாவை நம்பி இருபத்தாறு  வருடங்கள்  அவர் பின்னோக்கிச் செல்ல  உதவுகிறார். கிட்டத்தட்ட  எதிர்பார்த்த  படியே  உச்சகட்டம்.

இத்திரைப்படத்தில்  முதல்  சிக்கல்  கதையின்  மையமான  அந்த “வாட்ச்” செயல்படும்  விதம் நம்பகத்தன்மையோடு குறைந்த அளவில்  கூட விளக்கப்படவில்லை. தற்செயலாக  விழும்  கழுகின்  சிறகினால் ஒரு ரசாயன  மாற்றம்  நிகழ்ந்து  அந்த எந்திரம்  உருவாகி  விடுகிறது  என்பதோடு இயக்குநர்  நிறுத்திக்  கொள்கிறார். படம்  முழுக்க  அதுவொரு  வித்தை காட்டும்  கருவியாக  மட்டுமே  உபயோகப்பட்டிருக்கிறது. போதிதர்மனை வைத்து  “கண் மயக்கு” காட்டியது  போலவே  இப்படத்திலும் அடிக்கடி  படத்தை  “நிறுத்தி” “ நிறுத்தி” விளையாடுகிறார்கள். தரமான  திரைப்படங்களை  உருவாக்க  நினைப்பவர்கள் நிச்சயம்  அத்திரைப்படம் கையாளும்  துறையைப்  பற்றிய  ஒரு நேர் முக அறிமுகத்தை  ஏற்படுத்திக்  கொள்வார்கள். இத்திரைப்படத்தில்  அப்படிப்பட்ட  அறிகுறிகள்  தென்படவில்லை. மேலு‌ம்  காலப் பயணம்  போன்ற வலுவான  பிண்ணனியை அமைத்துக்  கொண்டு  “இளமையை” மீட்டுக்  கொள்ளுதல்  போன்ற  வலுவற்ற   நோக்கங்களைக் கொண்டு படம்  நகர்வதும் அபத்தமாகவே உள்ளது. வில்லன்  சூர்யாவுக்கும்  கதாநாயகனுக்குமான சடுகுடு  படத்தை  கீழே விழுந்து  விடாமல்  தடுக்கிறது. பிரபலமான  ஒரு கதாநாயகனை வைத்து படமெடுத்தால் சில காட்சிகள் மட்டும் ரசிக்கும்  படி இருந்தால்  போதும்  என இயக்குநர்கள்  நினைக்கிறார்களோ என்ற சந்தேகம்  எழுகிறது. நாம்  இந்த “பிரபல  நாயகத்  துதிகளை” ஊக்கப்படுத்தாமல் இருப்பது  நல்லது. சமீபத்தில்  வந்த இந்த  பிரபலங்களின்  படங்கள்  “அருதப்பழைய” கதைகளைக்  கொண்டிருந்தும் சில காட்சிகளுக்காக வெற்றி பெறுவது  நம் ரசனை  இறக்கத்திற்கான உதாரணங்கள். ஒருவருக்காக பேசாமல்  இருக்கும்  குடும்பம்  சமந்தாவும் சத்யனும் ஷட்டரில் மாட்டிக்  கொள்வது  வில்லன்  வாயில்  பீடிங் ரப்பர்  வைப்பது  என ஆங்காங்கே  சில காட்சிகள்  ரசிக்க  வைக்கின்றன. தொழில்நுட்ப  ரீதியில்  குறைகள்  இல்லையென்றாலும்  பிண்ணனி  இசை ஏ.ஆர்.ரகுமான்  என்பதை  நம்ப முடியவில்லை. தொய்வாகவே சென்றாலும் சில ரசிக்கும்  படியான  காட்சிகளால்  ஏமாற்றம்  இல்லாமல்  திரையரங்கை விட்டு வெளிவர முடிந்தது.

Thursday 5 May 2016

அந்நியமாதலும் ஆனந்தமாதலும்

      
அந்நியமாதலும் ஆனந்தமாதலும்
வெகுநேரம்  குனிந்த  படியே  மண்வெட்டியால் தரையை  வறண்டிக் கொண்டிருந்து விட்டு நிமிர்ந்த  போது இடுப்புக்கும்  மார்புக்கும்  இடையே  ஒரு கூச்சம் தோன்றியது. பல நாட்களாக  ஒரு வேலையும்  செய்யாமல்  இருந்ததன்  பலன். இருந்தும்  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  தொடர்ந்து  மண்ணைக்  கிண்டினேன். உடல் முழுக்க வியர்வை  வழிவதை  பார்த்த  போது  திருப்தியாக  இருந்தது. மார்பிலிருந்து வயிற்றின்  வழியாக  கைலிக்குள் போன வியர்வைத்  துளிகள்  கூச்சத்தை ஏற்படுத்தின. ஒரு தோட்ட  வேலை செய்பவர்   நான்  கொடுத்த  ஒரு மணி நேர உழைப்பை  கிண்டல்  செய்து  விட்டு  கடந்து சென்று விடலாம். ஆனால்  எனக்கு அது மகிழ்ச்சியைக்  கொடுத்தது. ஏன் என யோசித்த போது நினைவெழுந்த வார்த்தை “அந்நியமாதல்”. அப்படி  என்றால்? ஒரு பொருளை உற்பத்தி  செய்வதற்கு  ஒரு உற்பத்தியாளன் நேரடியாக  எவ்வளவு  உழைக்கிறானோ அந்தளவிற்கு  அவனுடைய மகிழ்ச்சி பெருகும். ஒரு சிறந்த  தேநீர்  விடுதியில்  தேநீர்  குடிப்பதற்கும்  தன் கையால்  கலந்த ஒரு தேநீரைக் குடிப்பதற்கும்  உள்ள வேறுபாடு. இது என் சுய சிந்தனை  எல்லாம்  கிடையாது. ஏற்கனவே  மார்க்ஸியம் அலசி சலித்த  ஒன்று தான். “அந்நியமாதல்” என்பதை  நான் புரிந்து  கொண்டவாறு விளக்க  முயல்கிறேன். 

அந்நியமாதல்  என்ற கோட்பாடு வலுவடைந்ததற்கு முக்கிய  காரணம்  கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்குள்ளாக நடைபெற்றிருக்கும் எந்திரங்களின் வளர்ச்சி. உற்பத்திப் பொருள்  உற்பத்தி  செய்பவனிடமிருந்து விலகிச்  சென்று  கொண்டே  இருக்கிறது. உற்பத்தியின்  மீதான  உழைப்பாளியின் கட்டுப்பாடு இன்றைய  நிலையில் கிட்டதட்ட  இல்லை.

ஓ! உலக மக்களே! எந்திரங்களை  விடுத்து இயற்கைக்குத் திரும்புங்கள்  என்று நான் கோரிக்கை  வைக்கப்  போவதில்லை. எந்திரங்களால் நாம் நிறையவே அடைந்திருக்கிறோம். அதிகமான  உற்பத்தியை  குறைந்த  மனித பலம்  கொண்டே செய்ய முடிவதால்  உலகம்  முழுக்கவே பண்ணை  அடிமைகள்  விடுவிக்கப்பட்டு ஒரு மனிதன்  இன்னொருவனை விலைக்கு  வாங்குவது  ஆகப் பெரிய அநாகரிங்களில்  ஒன்றாக  இன்று பார்க்கப்படுவதற்கு எந்திரங்கள்  மிக முக்கிய காரணம். எனவே  உழைப்பிலிருந்து  அந்நியப்படுவது  தவிர்க்க  முடியாததாகிறது. சரி அப்படி  என்றால்  இந்த “அந்நியப்படுதலால்” நாம்  இழந்தது  என்ன? நம்மை சுற்றி கவனித்தாலே பதிலை அடைந்து  விட முடியும். நிறைய  நேரம்  நமக்கு  மிஞ்சியது. கேளிக்கைகள்  பெருகின. உடல் உழைக்கும்  போது நம்முள்  இருக்கும் ஏதோவொன்று  பெரும்  நிறைவினை  உணரும். உற்பத்திப் பொருள்  குறித்த  நிறைவு என்று கூட அதைச்  சொல்ல முடியாது. உழைப்பும்  ஒரு செயல்பாடு நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது  என்ற நம்பிக்கையும்  கொடுக்கும்  நிம்மதி  அது. செயலின்  மீதான  நம் கட்டுப்பாடு  எந்தளவிற்கு  குறைகிறதோ அந்தளவிற்கு  நாம் நிம்மதி  இழக்கிறோம். உதாரணமாக நான் வேலை பார்க்கும்  அஞ்சல்  துறையில் ஐம்பது  வயதைக்  கடந்தவர்களிடம் ஒரு பொதுவான  பேச்சினைக் காணலாம். கணிப்பொறி வேலையின்  மீதான  அவர்களின்  பிடிப்பையும்  கட்டுப்பாட்டையும் தளர்த்தி விட்டதாகக் குறை சொல்வார்கள். கையையும்  கண்ணையும்  நம்பி செயல்பட்டவர்கள் தாங்கள்  தட்டுவதற்கு அந்தப்  “பெட்டி” கொடுக்கப் போகும்  பதிலுக்காக பீதியுடன்  காத்திருக்கத் தொடங்கிய  போது தங்கள்  வேலையிலிருந்து அவர்கள்  அந்நியப்பட்டார்கள். இது  ஒரு சிறிய  உதாரணம்  மட்டுமே.  தன் பிடி உழைப்பில்  தளர்வதாக எண்ணும்  ஒருவன்  இயல்பாகவே  கேளிக்கை  நோக்கி நகர்கிறான். கேளிக்கைகளும் ஒரு கட்டத்தில்  சலித்து விடும். காரணம் நம்மையறியாமலேயே நம் மனம்  அந்த உழைப்பின்  நிறைவினை  கேளிக்கைகளில் அடைய  முடியாது  என்பதை உணர்ந்து  விடும். தன்னை தொடர்ந்து  கவனிக்கும் ஒருவரால்  ஒரு எல்லைக்கு  மேல் கேளிக்கைகளில்  திளைக்க  முடியாது. சினிமா பந்தயம்  போன்ற தீவிரமற்ற கேளிக்கைகளோ அரசியல்  ஆன்மீகம்  போன்ற தீவிரமான  கேளிக்கைகளோ ஒரு எல்லையில்   சலித்தவிடும். ஏனெனில்  நாம் எவ்வளவு சௌகரியமாக வாழ்ந்தாலும் உற்பத்தியினால் மட்டுமே  நிறைவடையும் நம் தொல்மனம்  அரற்றிக் கொண்டே  இருக்கும். அந்த அரற்றலை எதிர் கொள்வது பயங்கரமானது என்பது  சற்று நேரமாவது  அதனை எதிர் கொண்டவர்களுக்குத் தெரியும். அதற்கு  அஞ்சியே நாம் மேம்போக்கான சமூக  இணையங்களிலும் ரசனையற்ற கேளிக்கைகளிலும் தீவிரமற்ற  புரட்சிகளிலும் தெளிவற்ற உணர்ச்சியைத் தூண்டக்  கூடிய  ஒற்றை வரிச்  சிந்தனைகளிலும் வாழ்க்கையை கடத்திக்  கொண்டிருக்கிறோம்.

சிந்திக்கையில் இந்த சாரமின்மைக்கும் தீவிரமின்மைக்கும் காரணம்  நாம் கட்டுப்படுத்தக்  கூடிய  எதுவுமே  இவ்வுலகில் இல்லை  என்ற அப்பட்டமான உண்மை முகத்திலறையும் . எந்திரங்களின்  வருகைக்கு  முன்பு இயற்கையின் கட்டுப்பாடின்மைக்கு மட்டும்  அஞ்சி  தன் பொறிகளையும் செயல்களையும் தனக்கேற்றவாறு  அமைத்துக்  கொள்ள மனிதனால் முடிந்தது. ஆனால்  எந்திரங்கள் வளர்ந்த பின்னர்  அந்தப்  பிடியும்  தளர்ந்தது. உதாரணமாக  வீட்டிற்குள்  இருக்கும் ஒரு மண்ணெண்ணெய்  விளக்கு  எப்போது  அணையுமென்று  ஓரளவிற்கு  நாம் உறுதி கொள்ள முடியும். இன்வெர்ட்டர்  இல்லாத  ஒரு மின்விளக்கில் அந்த உறுதியைக்  கொடுக்க முடியாது. யோசித்துப்  பாருங்கள்  நடந்தே  கடந்த  நம் “மூத்த” சகோதர்களையும் நோடிபிகேஷன் பேனலில் எந்த விமானம்  எவ்வளவு  நேரம் தாமதம்  எனத்  தெரிந்து  “உச்” கொட்டும்  நம்மையும். அதனால்  எல்லா விமானங்களையும்  தொழிற்சாலைகளையும் உடைத்து  விட்டு  இலை தழைகளை அணிந்து  கொள்ளலாம்  எனச்  சொல்ல வரவில்லை. நாம் எவ்வளவு அந்நியப்பட்டிருக்கிறோம் என்பதை  உணர்த்த  விழைகிறேன். இந்த அந்நியமாதல் பெருகிக்  கொண்டு  தான் இருக்கும். உணவகங்களும்  தேவையை  நிறைவேற்றும் செல்பேசிச் செயலிகளும் அப்பார்ட்மெண்ட்களும் இன்ஸ்டன்ட ஆன்மீக  தீர்வுகளும் முப்பரிமாண  தொலை நேருரையாடல்களும் இன்னும்  பிற கேளிக்கை தொழில்நுட்பங்களும் சில  நாட்கள் கிளர்ச்சியைக்  கொடுத்து  ஒதுங்கி நகருமெனவே தோன்றுகிறது. இவ்வரிசையில் உடல்  இன்பத்தினை  மட்டுமே  நோக்கமாகக் கொண்ட உடலுறவையும் இணைத்துக்  கொள்ளலாம். மிதமிஞ்சிய  பணச் சேர்ப்பும் இந்த  அகச் சோர்வினை  மறைப்பதற்கான நாடகமே. தோட்டத்தில் இடுப்பு வலிக்க நிமிர்ந்த  போது ஒன்றை  எண்ணினேன். நம்முடைய  இயல்பான  பங்களிப்பும் கற்பனையும்  செயல்படாத  ஒரு வாழ்க்கை  எவ்வளவு  சொகுசு நிறைந்ததாக இருந்தாலும்  சலித்து விடும்.

ஒரு குழந்தையிடம்  இருந்து தொடங்கலாம். ஒரு பொருளை  குழந்தையின்  கையில் கொடுக்கும்  போது அது அப்பொருளை உடைக்கவே நினைக்கும். நீங்கள்  ஏற்கனவே உருவாக்கியதை அது விரும்பாது. அதனை உடைத்து  தன்னுடைய  “உற்பத்தி”ப் பொருளை உருவாக்கவே  குழந்தை முனைகிறது. இக்குணம் நம்மை விட்டு நீங்குவதே கிடையாது. இன்னொரு மனிதனின் உற்பத்திக்கான  செயல்பாடான உடலுறவு என்பது அறிவுத் தளத்திலும் உணர்வுத்  தளத்திலும் கவர்ச்சியான முக்கியத்துவம்  பெற்று விடுகிறது. அந்த உற்பத்திச்  செயல்பாட்டில்  அதிக பங்களிப்பு  பெண்ணுடையது  என்பதால்  “தாய்” என்ற அடையாளம் உலகின் அனைத்து நாகரிக  சமூகங்களாலும் மதிக்கப்படுகிறது. எல்லாத்  துறைகளிலும் எல்லை மீறி புதுமை புரிபவர்கள்  தீவிர  அடக்கு முறைக்கு  ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டு  இன்னல்களுக்கு  ஆளாகி அவர்கள்  வாழ்வின் அடிப்படையே தகர்ந்து  போகும்  நிலை வந்தாலும்  புதிய சிந்தனைகளையும்  செயல்களையும்  கைவிடவே மாட்டார்கள். “புதிய  உற்பத்தி” கொடுக்கும்  கவர்ச்சி  அது . நம்மில்  பலர் கேட்டிருக்கக் கூடிய  ஒரு உபதேசம்  “வீட்டில்  ஒரு பூச்செடியை  நட்டு அதில் பூக்கும் மலரில்  தினமு‌ம்  கண்  விழியுங்கள் உங்கள்  மனம்  மகிழ்வடையும்” என்பதாகும். அதற்கு காரணம்  அந்தப்  பூ மலர்வதில் நம்முடைய உழைப்பு அதிகம்  இருப்பதே காரணம். காந்தி  இறுதிவரை  ராட்டை சுற்றியதற்கும் இதுவே  காரணமாக இருக்குமோ?

இன்றைய சூழலில்  உலகம்  என்பது மூர்க்கமாக  முன்னேறும்  ஒற்றை விலங்கு. மனித  இனத்தை குறிப்பிட்ட கட்டமைக்கப்பட்ட  எந்த அமைப்பும்  ஆளவில்லை. மனிதர்கள்  மேலும் மேலும்  நெருங்கி  மேலும்  மேலு‌ம்  அறிந்து  மேலு‌ம்  மேலும் தங்களை உயர்த்திக்  கொள்ளவே  விழைபவர்கள். நாம் நுகர  நம்மைச்  சுற்றி நிறையவே  உள்ளன. ஆனால்  அந்த நுகர்வு  முடிந்ததும்  நுகர்வு  தொடர்புடையவை எல்லையற்ற  வெறுப்பினைத் தூண்டும். படம் முடிந்த திரையரங்கம் காலியான மதுக்  குப்பி  போன்றவையே அனைத்து  நுகர்வுகளும். புணர்ந்த உடலையும்  இந்த வரிசையில்  இணைத்துக்  கொள்ளலாம்  என்பது கேள்வி ஞானம்  மட்டுமே. ஆகவே பேரின்ப  பெருவாழ்வு  வாழ்வதற்கான  சாத்தியங்களை  நான் சொல்லவில்லை. நம்முடைய  நேரடியான  பங்களிப்பினை  அளிப்பதன்  வழியாக  சில செயல்களில் கட்டுப்பாட்டினையும் நிறைவினையும் கற்பனையையும் மீட்டுக்  கொள்ள  முடியும்.

டொனால்ட் ட்ரம்ப்  வெற்றி பெற்றாலோ ஆப்பிரிக்காவில்  ஜனநாயகம் மலர்ந்தாலோ நம் அண்டை நாடுகளில்  முன்னேற்றம்  விழைந்தாலோ மொத்த  ஐரோப்பாவும் தன்னை ஒரே நாடு  என அறிவித்துக்  கொண்டாலோ தமிழகத்  தேர்தலில் புதுமை ஏதேனும்  நிகழ்ந்தாலோ அது ஏதோவொரு  விதத்தில்  நம்மையும்  பாதிக்கும்  எனச் சொன்னால்  உங்களுக்கு  சிரிப்பு வரலாம். ஆனால்  அது உண்மை. உலகம்  மேலும் மேலும்  நெருங்கிக்  கொண்டும்  சுருங்கிக் கொண்டும்  வருகிறது. அப்படி இருக்கையில்  என் வாழ்வை  நானே  நிர்ணயிகக்கிறேன் என்பது  ஒரு குழந்தைத் தனமான  கற்பனையே.  சிறு வயது முதலே  இதை மட்டும்  செய் இதன் பிறகு மகிழ்ச்சியாய் இருக்கலாம்  என்றே சொல்லி வளர்க்கப்படுவதால் செய்வதில் இருக்கும்  ஆனந்தம்  அங்கீகாரம்  இல்லாமல்  அடங்கி விடுகிறது. அந்நியமாகாத போதே  ஆனந்தம்  ஏற்படும். உயிர் பிழைப்பதற்காக உழைப்பும்  கேளிக்கையும் இருக்கட்டும் . சற்று நேரமாவது  நம் கற்பனையோடும் ரசனையோடும் “வாழலாம்” என நான்  நினைக்கிறேன். நீங்கள்  என்ன நினைக்கிறீர்கள்?