Thursday 30 June 2016

பெருஞ்சுழி 13


கம்பளிப் படுதாக்கள் விரிக்கப்பட்ட கூடாரத்தை நோக்கி சுனதன்  நடந்தான். கூடாரத்திற்கு வெளியே வெற்றுடலுடன் சிலரைப் படுக்க வைத்து அரக்கினை உருக்கி  மார்பிலும் தொடையிலும் முத்திரையிட்டனர். வண்டல் மணல் பரப்பப்பட்ட வலுப்போர்  கொட்டடி பகலிலும்  இருண்டிருந்தது. தீப்பந்தங்களின்  சடசடப்பு உள் நுழைந்த போது சுனதனுக்கு  ஒரு வித நடுக்கத்தை ஏற்படுத்தியது. பின்னிருந்து ஒரு கை அவனை தள்ள முயன்றது. தள்ளிவிடும் எண்ணத்தோடு அவன் மீது கொடுக்கப்பட்ட விசை அவனை அசைக்காதது கண்டு தள்ளியவன் விழி விரித்தான்.
"உன் பெயர்?" என அங்கு வந்த கொட்டடிப் பணியாள் கேட்டான்.
"சுனதன்"
போர்முறைகளை அறிவிப்பதற்கு  மணி ஒலித்தது. கலைந்து நின்றவர்கள்  ஒவ்வொருவராய் வந்தமர்ந்தனர். ஐம்பது  பேராவது அங்கிருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் உடல் பருத்த சிறியவர்கள். அவர்கள்  கண்களில்  பயமும்  நடுக்கமும்  தெளிவாகவே தெரிந்தது. கொட்டடிப் பணியாள் அறிவிப்பினைத் தொடர்ந்தான்.
"உங்களுக்கு  இரு வாய்ப்புகள் உள்ளன. எதிர்  நிற்பவனை அரை நாழிகைக்குள்  கொல்லுதல் அல்லது  ஒரு நாழிகைக்குள்  வீழ்த்துதல். அரை நாழிகையில்  கொல்பவன் மாவலியரின் பிரதான  சேனை ஒன்றில்  வீரனாக  சேர்க்கப்படுவான். ஒரு நாழிகையில்  வீழ்த்துபவன் உப சேனை ஒன்றில்  வீரனாகலாம். தோற்று உயிரோடிருப்பவன் மார்பிலும் தொடையிலும் முத்திரை பெற்று இறக்கும் வரை மாவலியத்தில் ஊதியம் இல்லா ஊழியம் புரிய வேண்டும். வென்றும் அங்கத்தில் குறைபாடு ஏதேனும்  தெரிந்தால்  அவன்  அக்கணமே கொல்லப்படுவான்" என்றான். "இன்று  இருபத்தைந்து பொருதல்கள்  இக்களத்தில் நடக்கும். முதல்  பொருதலுக்கு எழுபவன் எழலாம்" என்றான்.
மாவலியர் தன் தகப்பனைக் கொன்று  ஆட்சியமைத்து இருபது ஆண்டுகளே  ஆகியிருந்தன.இருபது  மந்திரிகளும்  அவர் மஞ்சம் நுழையும்  பெண்ணும்  அவரிடம்  போர்  பயிற்சி  பெரும்  புதல்வர்களும் மட்டுமே  அவனைக்  காண  முடிந்தது.நெருங்க முடியாததை  மேலும்  அந்நியமாக்குவது  அதன்  மீது  உருவாக்கப்படும்  பயம்.  மாவலியர் எங்குமில்லை. அதனாலேயே  எங்குமிருந்தார். அணுக  முடியாததை  விட  அணுக்கமானது எது?  இருப்பினை  விட  தொலைவும் அமைதியும்  பெரும்  பயத்தை  உருவாக்கும்.  மாவலியரை  திருப்தி  செய்வது  போரும்  செல்வமுமே.  மாவலியத்தின்  மொத்த வலுவும்  திருவும்  தன்னை  நோக்கி குவியச் செய்தார்.  அதன்  ஒரு சிறு  பகுதியே  வலுப்போர்  களம். 
“நீ  என்னுடன்  நிகர்  நிற்கவேண்டும்” சுனதனை கை காட்டியவாறே பேருடல் கொண்ட ஒருவன் எழுந்தான்.
“சரி” என்று  சிரித்தான்  சுனதன்.
"தெரிதன்" என் பெயர் எனச் சொல்லி  சுனதனை இறுக்கி அணைத்தான்.
“ஏனடா  சிரிக்கிறாய்? அரை நாழிகையில் நம்மில்  ஒருவன்  நிச்சயம்  இறப்போம். உன்னைக்  கண்டதும்  உன் உடல் வலுவை  சோதிக்கவே அணைத்தேன். நீ எஞ்சப் போவதில்லை  என்பது  இப்போதே உறுதி” என்று “கலத் தலைவரே  என் போரிணை இவனே” என்றான்.
“உன்  பெயர்?” என்றான்  கலத்தலைவன். “தெரிதன்” என்று  மீண்டும் சொன்னவன் சுனதனை  நோக்கினான்.
“என் பெயர்  சுனதன்” என்ற வார்த்தையை  சுனதன்  முடிப்பதற்கு  முன்னே  அவன்  பிடரியை பிடித்து  முகம்  மண்ணில்  அழுந்த  இழுத்து தேய்த்தான் தெரிதன். விரைந்தெழுந்தான் சுனதன்.  உயிர்  விரும்பும்  ஆதிவிசை இயக்க  சுனதன்  பெருங்கல் ஒன்றை  தூக்கி  நெருங்கிய  தெரிதனை அக்கல்லுடன்  கீழே  தள்ளினான். சினம்  கொண்டவனாய் தெரிதன்  சுனதனை  நோக்கி  இரு  கைகளையும்  முறுக்கியவாறு ஓடிவந்தான்.  “என்னை  மன்னித்துவிடு  தெரிதா” என்று தெரிதனின் மொத்த  உடலையும்  அவன்  இடுப்பின்  வழியே  வலக்கையில்  வாங்கி  தலை மண்ணில்  அறையுமாறு நிலத்தில்  குத்தினான். உடலில்  தோன்றிய விதிர்ப்புடன்  தெரிதன்  நினைவிழந்தான். மீசையை  நீவியவாறே கலத்தலைவன்  “கொல் அவனை” என்றான். “இவரை நான்  எப்படிக் கொல்ல வேண்டும்  கலத் தலைவரே?” என்று  புரியாமல் கேட்டான்  சுனதன். 
விளங்கா  விழிகளுடன்  அவனைப்  பார்த்த  கலத்தலைவன் “மூடனே!   வீழ்த்திய  உனக்கு  கொல்லத் தெரியாதா? கொல் அவனை” என்றான்.
“ஆணை” என்று  சுனதன்  தெரிதனின்  கை பிடித்தபடி  உதட்டை  குவித்து  ஒலியெழுப்பினான்.  நிரத்துவன்  கொட்டடிக்குள் சீறி நுழைந்தான். கலத்தலைவன்  காட்சியினை  உணருமுன்னே தெரிதனை  புரவியின் மேல் வீசி தானும்  பாய்ந்தேறினான்  சுனதன். நிரத்துவனை  வில்லும்  ஈட்டியும் கொண்டதொரு குறும்படை  துரத்த  தொடங்கியது. சுனதன்  தன்  பாதையை  முடிவு  செய்தான். மாவலியரை மண் கொண்டு வரும்  பாதையது.

Wednesday 29 June 2016

பெருஞ்சுழி 12


பாலை கடந்ததன் தடங்கள் தென்படத் தொடங்கின. மேற்கிலிருந்து  பறவைகள் கலைந்தெழும் ஒலி கேட்கத் தொடங்கியது. சுனதன்  தன் மனதில்  ஒரு இதம் பரவுவதை உணர்ந்தான். அதற்கென  தன்னை நொந்து கொண்டான். பாலையும்  சோலையும் வேறுபடுவதை ஆழ்மனம்  இன்னும்  உணர்கிறது என்ற எண்ணம்  அவனை துணுக்குறச் செய்தது.
பசும் பரப்புகளைக் கண்டதும் நிரத்துவன்  துள்ளத் தொடங்கியது. மதீமம் என்றொரு ஆறு பாலையைக் கடந்ததும்  தொடங்குமென மாசறியான்  சொல்லியிருந்தார். அவ்வாற்றுக்கு கரையெடுக்கும் பணிகள்  நடந்து கொண்டிருப்பதை  சாலைகள்  காட்டின. அடர் கருப்பு நிறத்தில்  திட்டுகளாய்  ஒட்டியிருந்தது  மாட்டு வண்டிகளில்  கொண்டு செல்லப்பட்டது கரை மண். பொழுதடைந்திருந்ததால் சாலை வெறிச்சிட்டுக் கிடந்தது.  ஒரு காத தூரம்  பயணித்த பின் நிரத்துவன்  இடப்பக்கம்  தலை திருப்பினான். நினைவுகளில்  ஆழ்ந்திருந்த சுனதன்  இடப்பக்கம்  நோக்கினான். கொதிக்கும் மீன் வாசம் எழுந்தது. சாலையில்  இருந்து  பிரிந்த ஒற்றையடிப் பாதையின்  மீது நிரத்துவன்  நடந்தது. சற்று மறைவிடம்  நோக்கி நிரத்துவனை  ஒதுக்கி  அங்கிருந்த ஈச்ச ஓலைக் குடிசைகளை கவனித்தான்  சுனதன.
இரண்டு பெரும் அடுப்புகள்  எரிந்து கொண்டிருந்தன. கரிய பெண்கள்  சிலர் அடுப்பை சுற்றியமர்ந்து ஊதுகுழல்களால் மூட்டிக் கொண்டிருந்தனர். சிறு குழந்தைகளை தூக்கி எறிந்து சற்றே பெரிய குழந்தைகள்  விளையாடிக் கொண்டிருந்தன. "யேய் ய்யேய்" என கத்திக் கொண்டே விண்ணில்  பறந்தன குழவிகள். பனங்கள் பானைகளில் இருந்து அள்ளிக் குடித்து இளிவரல்  பேசிக் களித்திருந்தனர் இளையோர். நிரத்துவன்  அவர்களை நெருங்கியது.
சுனதனைக் கண்டதும்  உடலில்  இயல்பின்மை  பரவ பெண்கள்  எழுந்து உடல் ஒடுக்கினர். வாயைத் துடைத்துக்  கொண்டு கள் அருந்தியவர்கள் எழுந்து குறுகி நின்றனர். சுனதன்  ஒரு நொடி  தளர்ந்தான்.
"இல்லை  நான் காவலன் அல்ல. வழிப்போக்கன். அஞ்ச வேண்டாம்" என நிரத்துவனை  விட்டிறங்கினான்.
"வழிப்போக்கனா?"என்று கேட்டவாறே  ஒரு இளைஞன்  அவனைத் தொட்டான். பின் மோவாயில் கை வைத்து "ஏய் மவிந்தா இவர் தான்  சுனத மகானாக இருப்பாரோ?".
"ஆனால்  அவர் பல்லாயிரம்  வருட வயதுடையவர் என்கின்றனர். இவர் இன்னும்  இளமை மாறவில்லை. "
"மகான்கள்  அப்படித்தான்  இருப்பார்கள். நாள் முழுவதும்  அவர்களால்  புணர முடியும். பின் உலகைப் படைப்பதானால் புல்லில் இருந்து புலிகள்  வரைப் புணர்ந்தாக வேண்டாமா? உன்னைப் போல் ஒன்றிரண்டுக்கே தளர்ந்தால் உலகை எப்படிப் படைப்பது. அவர்கள்  மூப்படைவதே இல்லை. சரிதானே வழிப்போக்கரே?" என்று சுனதன்  முகத்துக்கு  நேரே கை நீட்டினான்.
"சரிதான்" என முறுவலித்தான் சுனதன்.
"அவர் பிறந்த கதை சொல்லட்டுமா உமக்கு?" என்றான்  உற்சாகம்  ஏறியவனாய்.
சுனதனும்  கதை கேட்க அமர்ந்தான்.
"சுமதனி  எட்டு வயது முதலே கனவில்  நாகங்களைக் காண்பவள். உதிர வாயில்  திறந்து ஒரு மண்டலம்  கூட காத்திராமல் அவள் தந்தை அவளை மாசறியானுக்கு மணமுடித்துக் கொடுத்தான். அவள்  கொதித்துப் போய் காத்திருக்க அவன் மக்கள்  வருந்துவதாகவும் தன்னால்  ஒன்றும்  இயற்ற முடியவில்லை  என்றும்  அழுதான். 'சரி ஆற்ற வேண்டியது  ஆற்றலாமே' என அவன் கரம் பற்றினாள்  சுமதனி. அவனும்  அவள் கரம் பற்றி ஒரு விரிவுரை நிகழ்த்தத் தொடங்கினான். சுமதனி  பாதியிலேயே தூங்கிவிட்டாள். அதை கவனிக்காமல்  'என்ன சரிதானே?' என்றான்  மாசறியான். என்ன கேட்டான்  எனப் புரியாமல்  'சரி சரி ' எனச் சொல்லி  கச்சையை அவிழ்க்கப் போனாள் சுமதனி. அப்போதுதான் நாடு கடந்து காடு செல்வோம்  எனக் கேட்டிருக்கிறான் என அவளுக்குப் புரிந்தது.
மாசறியானை விட விரைவாக  சுமதனி  நடந்தாள். செல்கிற வழியில்  மாவலியன்  என்றொரு  வீரனைப் பற்றிக் கேட்டாள். கனவிலும்  அவன் பெயர்  உளறினாள். பொறாமை தாளாமல்  அவளைப் புணர்ந்தான் மாசறியான். அவள் மாவலியனையே நினைத்திருந்தாள். அவளின்  கனவையும்  அவன் பொறாமையையும் ஒருங்கே நிகர்க்கும்  விதமாய் இறைவனே வந்து பிறந்தான். இறைவனுக்கே குழப்பம்  எழுகிறது  தான் பிறந்தது  மாவலியனுக்கா மாசறியானுக்கா என. தெளிவடையும் போது சுனதர் மாவலியனையோ மாசறியானையோ வதம் புரிவார். அது வரை கள்ளுண்டு களித்திருப்போம். கண் மூடி பொறுத்திரு...." என சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதை சொல்லி சரிந்தான்.
சுனதன்  சிரித்துக்  கொண்டிருந்தான். ஒவ்வொருவராக உடல் தளர்ந்து  உறங்கினர். விளக்கொளியில்  சுனதன்  முகம்  மின்னியது.
"மைந்தா" என்றவாறே அருகில் வந்தாள்  பேருடல் கொண்ட ஒரு அன்னை.
"அம்மா" என்றான்  சுனதன்.
"முதன்முறை  தாயைப் பிரிந்திருக்கிறாய் அல்லவா?" என்றாள் அன்னை.
சுனதன்  திடுக்கிட்டான். "எப்படி  அறிவீர்கள்? " என்றான்.
"மைந்தர்கள்  அனைவருக்கும்  முகம்  ஒன்றுதான். உறங்கு" என அவன் தலை கோதிச் சென்றாள் அன்னை. சுனதன்  ஆழ்ந்து உறங்கினான். மறுநாள்  புத்துணர்வுடன்  அவர்களிடம்  விடைபெற்று பயணத்தைத் தொடர்ந்தான்.
சுனதன்  கடற்கரை  பாதையை  தேர்ந்தெடுத்தான். சதுப்புக் காடுகளின்  வழியே  சோர்வுற்று  நிகழ்ந்தது  அவன் தனிப்  பயணம்.  மலைக்காடு அகன்றதுமே  அவனுள்  எப்போதும்  குடியிருக்கும்  குதூகலம்  மறையத் தொடங்கியது. குலம்  நீங்கியதாலோ அறியாதது  நோக்கிச்  செல்வதாலோ தோன்றும்  பயமல்ல அது. இருப்பினை  தக்கவைத்துக்  கொள்ள  நினைக்கும்  வலிமையற்றவர்களை  சந்தித்ததால்  எழுந்த  சோர்வு  பெறுகி மனம் நிறைந்திருந்த  குதூகலத்தை  முற்றாக  அழித்தது. அவன்  குதிரை  நிரத்துவன்  மட்டுமே  சுனதனுக்கு நிம்மதி  அளிப்பதாய் இருந்தது. ஒரு  வருடம்  அவன்  பயணித்த  பின்பு  மாவலியம்  தொடங்கும் பிரதான  நிலப்பகுதியை  அடைந்தான். 
“உன் மனைவியை  புரவிச்சேனன்  வீட்டிற்கு  அனுப்பினானா? இல்லை  இன்றும் அவனுடன்  தங்குகிறாளா?” என்று  சுனதனின்  கடிவாளம்  இழுத்து  நிறுத்தி  ஒருவன்  கேட்டான்.
அடிமை ஊழியம்  தவிர வாழ்வில்  ஒரு நொடி கூட  தனக்கென  இல்லாதவன் என்பதை  அவன்  விழி  காட்டியது.
“மூத்தவரே என் பெயர்  சுனதன்  என்பதாம். நீங்கள்  சொல்கிறபடி எனக்கு  மனைவி  யாருமில்லை.” என்றபடி  குதிரையை  விட்டிறங்கினான்.
“ஓ அப்படியா  அழகிய  செம்புரவியை பெற பலர்  மனைவியை  சேனன் மனைக்கு  அனுப்புவார்கள். நீயும்  முகத்தில்  முடி  மண்டி வெற்றுடலுடன் நிற்கிறாயா அதனால்  கேட்டேன்” என்றான்.
“மாவலியம்  நோக்கிச்  செல்கிறேன். இளைப்பாறு மண்டபம்  ஏதேனும்  இவ்விடம்  உண்டா?” என்று  சுற்றி  நோட்டமிட்டவாறே  கேட்டான்  சுனதன்.
ஏளனமாக  நகைத்தவாறே “நீ  வடக்கில்  இருந்துதானே  வருகிறாய்? மூடா!மாவலியம் நாற்பது காத தூரத்திற்கு  முன்னே  தொடங்கிவிட்டது.  போ!நீ பார்க்கவும்  வலுவானவனாகவே தெரிகிறாய். இன்னும்  சற்று தூரம்  முன் சென்றால்  வலுப்போர் களம்  தயாராக  இருக்கும்.  அங்கு  நிச்சயம்  உன்னை  விடமாட்டார்கள்.” என்று  அவன்  நகைத்தான்.
“வலுப்போர் களமா?” என்றான்  சுனதன்.
“ஆம்  நீ அங்கு  கட்டாயப்  போரில் ஈடுபட  வேண்டும். உடல்வலு கொண்ட  ஒவ்வொருவனும்  தனக்கே  படைக்கப்பட்டதாக மாவலியர் அருளியுள்ளார்.  அவர்  இறைச்சேனைக்கான வீரர்களை  தேர்ந்தெடுக்கும்  அரும்பணியே வலுப்போர். வென்றால்  மாவலியரின் சேனையில்  உயிர் பிரியும்  வரை  போரிடவேண்டும்.  தோற்றால் உயிர்  போகும்  வரை  மாவலியத்தில் தொண்டூழியம்  புரிய  வேண்டும். உன்  போன்ற  உடல்  கொண்டவர்களுக்கு மாவலியத்தில் இறப்பு  ஒன்றே மீட்சி.” என்றான்  சிரிப்புடன்.
“நான்  மறுத்தால்” என்றான்  சுனதன்.
“மறுப்பிற்கான அசைவு  எழுந்தால்  அடுத்த  அறுபது  நாழிகைகளில்  உன் உயிர் போகும். ஆனால்  அந்த  நாழிகைகளில்  நீ அனுபவிப்பதை  பார்ப்பவன்  அவன்  வாழ்நாளில்  மறுப்பு  என்பதை சிந்திக்கமாட்டான். முப்பது  நாழிகை  முடிகையில்  அரை நாழிகை  இடைவெளி  விடுவார்கள். பெரும்பாலும்  அந்நேரத்தில்  தண்டனை  பெற்றவன் நிச்சயம்  தற்கொலை செய்து  கொள்வான்.” என்று  கூறியவன்  குரலில்  நடுக்கம்  தெரிந்தது.
சுனதன்  நிரத்துவனை  நீங்கினான்.  அவன்  மனவோட்டம்  புரிந்தவனாய் நிரத்துவன்  மறைவிடம்  நோக்கிச்  சென்றான்.
களிற்று  மத்தகங்களோடும்  சிம்ம  உகிர்களோடும்  போரிட்டிருந்த  சுனதன்  ஒரு  மனிதனையும்  வெல்லும்  நோக்கத்தோடு  தீண்டியது  கிடையாது.  இடைசுற்றியிருந்த  ஒரு  துணியை  மார்பில்  மூடி  சடைமுடியும்  நீள்தாடியும்  புரள  வலுநடை வைத்து  வலுப்போர்  நடைபெறும்  கொட்டடி நோக்கிச் சென்றான்.

Tuesday 28 June 2016

பெருஞ்சுழி 11

சகேரீதம் வீழ்ந்த பிறகு மாவலியருக்கு எதிர்ப்பென ஏதும் எழவில்லை. சகேரீதத்தை துணைத்த அத்தனை கூட்டரசுகளும் பணிந்தன. மாவலியத்தின் எல்லை விரிந்த வண்ணம் இருந்தது . அடர் கானகங்களில் வாழ்ந்த குடிகள் வரை சென்று தொட்டது மாவலியரின் பெரும் சேனை. எதிர்ப்பவர்கள் மறுமொழி இன்றி கொன்று வீழ்த்தப்பட்டனர். குடி முறைகள் பகுக்கப்பட்டன. ஊர் எல்லைகள் வகுக்கப்பட்டன.
மாவலியத்தை கட்டுவதொன்றே கடனென உழைத்தனர் மக்கள். தீருந்தோறும் மேலு‌ம் உறிஞ்சவே விழைவேறும் என்பதைப் போல வலுவிழந்தவர்களை மென்று உமிழ்ந்தது மாவலியம். மாவலியர் இருக்கும் போதே இல்லாமல் ஆகிக் கொண்டிருந்தார். அமைச்சர்களும் அணுக்கர்களும் மனைவிகளுமன்றி மாவலியரை கண்டவர் கிடையாது. ஆனால் பிறக்கும் ஒவ்வொரு கருவும் அப்பெயர் கேட்டு திகைத்தது. சோர்ந்தது. தான் பிறந்ததின் நோக்கம் தான் உருவாவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டதென அறிந்து அரற்றியது. அவர்களின் கதைகளிலும் கனவுகளிலும் மாவலியரே நிறைந்தார். கனவில் ஒவ்வொரு பெண்ணும் நூறு முறை அவரைப் புணர்ந்தாள். ஒவ்வொரு வீரனும் ஆயிரம் முறை அவரைக் கொன்றான். ஒவ்வொரு மதியாளனும் கோடி முறை அவரை வென்றான்.
சிற்றூர்களுக்கு செம்மண்ணிலும் நகரத் தெருக்களுக்கும் பெரும்  பாதைகளுக்கும் கருங்கல்லிலும் சாலைகள்  அமைக்கப்பட்டன. நாளும்  வளர்ந்தது மாவலியம். நிர்வாக முறைகள் இறுகின. அழுதும் அரற்றியும் உயிர்விட்டனர் மக்கள். உழைத்து வலி தாளாமல் உயிர்விடுவதே ஒரு சடங்கென்றானது சில மலைக்குடிகளில்.தண்டனை  என ஒரு விழி தோண்டி எடுக்கப்பட்ட இளைஞன் தன் இறப்புக்கு விறகுகள் அடுக்கி  எரிபடுக்கை அமைத்துக்  கொண்டிருந்தான். அவன் இடக்கண் இருந்த குழியில்  குருதி வழிந்து கொண்டிருந்தது. இலுப்பை  ஊற்றி எரிபடுக்கை அவனுக்கென ஒளிர்ந்து காத்திருந்தது. எரி புகுந்த பின் எழுந்து விடக்கூடாது  என்பதற்காக  தன் கால்களை  கட்டிக்  கொண்டான். ஊர் மூத்தோர்  இருவர் அவன்  கைகளைக் கட்டினர். இல்லாத இடவிழியில் சீழுடன் குருதியும்  வல விழியில்  நீரும்  வழிந்தன. பெண்கள்  ஆடைத் தலைப்பால் வாய் பொத்தி அழுதனர். குழந்தைகள்  ஆவலுடன்  வெறித்திருந்தன. மூத்தோர்  குற்றவுணர்வுடன் குனிந்து அமர்ந்திருந்தனர். மக்களை நோக்கித் திரும்பினான்  ஒருவிழி அற்றவன். கை கூப்பி அழுது கொண்டிருந்தவனின் பின்னே இலுப்பையில் எரி எழும் ஓசை கேட்டது. சொடுக்கி நிமிர்ந்தான்  அவன்.
"என் இனமே! விரைக! வடக்கில்  எழுகிறான் நம் ஆதவன். அத்திசை நோக்கி விரைக! சுனதா! என்  இறையே!" என கட்டியிருந்த கால்களுடன்  உந்தி எரி புகுந்தான்  அவன். நெருப்பில்  அவன் அவிந்த ஓசையுடன்  உள்ளிழுத்த மூச்சின் ஒளி ஒன்றிணைய மொத்தமும்  சொல்லவிந்து அமர்ந்திருந்தனர் அக்குடியினர்.
எழுந்தாள் ஒரு மூத்தவள். "எழுக! அஞ்சிக் குறுகி மிதிபட்டு இறப்பதனினும் எழுந்து நடந்து தலையறுபட்டு இறப்பது  மேல். எழுக!" என்றாள். அன்றிலிருந்து  வடக்கு நோக்கி பயணிக்கத் தொடங்கினர் மக்கள். சுனதனும்  கதைகளாய்  மக்களிடம்  வந்து கொண்டிருந்தான். நூற்றுக்கு ஒருவர்  கூட வடக்கே விரிந்திருந்த பெரும்  பாலையை கடக்க முடியவில்லை. பாலையிலேயே மடிந்தனர் பலர். முன்பு  இறந்தவர்களின்  உடல் மிச்சங்களை உண்டு எஞ்சியவர்கள்  நகர்ந்தனர். வடக்கு  நோக்கி நகர்பவர்களின் எண்ணிக்கை  பெருகவே மாவவியத்தின் படைகள்  வடக்கில்  எழுந்தன. குடும்பத்துடன் வடக்கை கடப்பவர்களை யானைக் கொட்டடிக்கு கொண்டு சென்று குழந்தைகளை ஒரு கூண்டில் அடைத்து மூத்தவர்களை களிறுகளின் காலுக்கு கீழே கிடத்தினர். தனக்கு  முலையூட்டியவளும் தோளில் சுமந்தவனும் குருதிச் சேறாகி சுழித்துக் கிடப்பதைக் கண்டன குழந்தைகள். பித்தேறி இறந்தன. வெறிபிடித்து அடித்துக் கொண்டன. ஓடிச் சென்று களிறுகளின் காலுக்கு கீழே  தலை வைத்தன. ஒருவன் மட்டும் "வடக்கு " என்ற வார்த்தை மட்டும் உதட்டில் ஒட்டியிருக்க எவர்தொடாமேட்டினை அடைந்தான். களிற்றின்  மேல்  நின்றிருந்த சுனதனைக் கண்டான். "என் இறையே" என தலைக்கு  மேல்  கை கூப்பி ஓடி வந்தவன் களிற்றின்  கால்களில்  ஆங்காரத்துடன் மோதி மண்டை  பிளந்து இறந்தான். துடித்திறங்கிய சுனதன் மெல்லத் தளர்ந்து அவனை அள்ளித் தூக்கி சிதையமைத்து எரித்தான்.
வானத்தை  வெறித்தவாறு படுத்திருந்தான் சுனதன். மாசறியான் "புறப்பட உளம் கொண்டுவிட்டாயா? ” என்று கேட்டபடியே களிற்றின் மேல் படுத்திருந்த சுனதன் அருகே வந்தார்.
"ஆம் தந்தையே" என எழுந்தமர்ந்தான்  சுனதன். மாசறியான்  ஏதோ சொல்ல வர அவரைத் தடுத்து "அவர்கள்  என்னை மிகைப்படுத்திக் கொள்கிறார்கள். கடுங்குளிரில் நடுங்குபவனுக்கு சிறு பொறியும் பெரு நெருப்பென்றே தெரியும். மேலும்  இங்கும் நாளும்  மக்கள்  பெருகுகின்றனர். மாவலியருக்கு  இப்பாலையை கடப்பது  வீண் வேலை  என்ற எண்ணம்  இருப்பதாலேயே இவ்விடம்  எஞ்சி இருக்கிறது. மக்கள்  பெருக்கம்  அதிகமாகிறது  என்று  அறிந்தால்  அவர் படைகள் கொடும் பாலையைக் கடந்து எவர்தொடாமேட்டினையும் கைக்கொள்ளும். மக்களிடம் நம்பிக்கை என ஓரிடம் எஞ்சியிருக்க வேண்டும்  தந்தையே. அதற்காகவேனும் இவ்விடம்  இருந்தாக வேண்டும். நான்  புறப்படுகிறேன்" என்றான். செங்குதிரையான நிரத்துவன்  அவனருகில்  வந்தது. மாசறியான்  துணுக்குற்றார். “ மைந்தா! அன்னையிடமும் குடியிடமும் விடைபெற வேண்டாமா?" என்றார்  பதறிய குரலில். அதற்குள்  அவன் நிரத்துவன்  மீது ஏறியிருந்தான். மாசறியானைத் திரும்பி நோக்காது "கனி விழும் தருணத்தை மரம் நிர்ணயிப்பதில்லை தந்தையே" என்றான்.
பின்னர்  ஒரு நீள் மூச்சுடன் "கனியும்  நிர்ணயிப்பதில்லை”  எனச் சொல்லி  அவர் பார்வையிலிருந்து  மறைந்தான்.

Monday 27 June 2016

பெருஞ்சுழி 10

    மாவலியன் அரியணை  அமரவில்லை. ஒவ்வொரு  நாளும்  ஒரு நிலம்  அவன் வெல்வதற்காக  காத்து  நின்றது. தன் நிலம்  நோக்கி  மாவலியன்  வருகிறான்  என்று  அறிந்ததுமே மன்னர்  பலர் மணிமுடியை  அரியணையில்  வைத்து  நகரொழிந்தனர்.
முமனகம் என்ற சிற்றரசின்  தவைவன் “மாவலியனை  மண்ணில் சாய்ப்பேன். என் உயிர்  இவ்வுடல் நீங்காமல்  அவன் என் நிலம்  நுழைய  அனுமதியேன்” என வஞ்சினம் உரைத்தான். முமனகத்தின் மன்னன்  அனங்கன் பேரழகன். 
மாவலியன்  அவனினும் இளையவன். அனங்கனின் வஞ்சினம்  மாவலியனை எட்டியது.  முமனகம்  வீழ்ந்தது. மாவலியன்  அனங்கனைக் கொல்லவில்லை. அவன் கண் முன்னே  அவன் ஆறு புதல்வர்களின் தலையும்  வெட்டப்பட்டு  அவை  வளையீட்டியில் கோர்க்கப்பட்டு அனங்கனுக்கு மாலையெனப் போடப்பட்டது. வெறித்த விழிகளோடு பித்தேறி நிற்கும்  அனங்கனை புழுக்கள்  மண்டிய  அவன் புதல்வரின் சிரங்களுடன் நகர்வலம்  அனுப்பினான்  மாவலியன்.  அக்காட்சி  கொடுத்த அதிர்ச்சி  எதிர்க்க  முடியாதவனாய் அவனை  உருப்பெறச் செய்தது. அவன்  விவாதிப்பதில்லை. ஆணைகள்  மட்டுமே  அவன்  வாயுதிறும்.
சகேரீதம் முமனகத்தினும் படை வல்லமை மிகுந்த அரசு. திவலகன் என்றவன்  ஆளுகைக்கு  உட்பட்டிருந்த அந்நாடு மாவலியனின்  கனவுகளுக்கு எல்லையென குறுக்கே நின்றது. எழுந்த சிம்மத்தின் ஆற்றல் அறிந்த ஆடுகள்  என திவலகனனை நோக்கி பல சிறு குடிகள் தங்களை  ஒப்புக்  கொடுத்து ஒன்றிணைந்தன. இறந்த புழுவினை இழுக்கும்  எறும்புகள்  என நாளும்  சகேரீதத்தை நோக்கி அரசர்களும்  சிறுகுடித் தலைவர்களும் ஊர்ந்து நெருங்கினர். வல்லமை பெருகப் பெருக  திவலகன்  முறுக்கேறினான்.  கூட்டரசுகளின் செல்வமும்  படையும்  கொடுத்த ஊக்கத்தில் கைப்பற்றப்பட்டிருந்த முமனகத்தின்  வடக்குப் பகுதியை போரிட்டு வென்றான்  திவலகன். மாவலியன்  எவ்வெதிர்ப்பும் காண்பிக்கவில்லை.
அவன் நிலையழிந்திருப்பதை உணர்ந்த மாவலியத்தின் தளபதி அனிந்தர் "முமனகத்தை சில நாட்களில்  கைப்பற்றி விடலாம். உங்கள்  அனுமதி  மட்டுமே  வேண்டும்" என்றார். கைகளை  பிசைந்து கொண்டே  பீடத்தில்  அமர்ந்திருந்த மாவலியன் "இல்லை  அனிந்தா! இந்நேரத்தில்  போரிட்டால் நாம் அழிவோம். திவலகருடன் நான்  சமாதானம்  கொள்ள விழைகிறேன். அவரின்  கோரிக்கைகள் என்னவென்று  கேள்" என்றான். அனிந்தருக்கு திவலகனின் கோரிக்கைகள்  தெரியும். மாவலியம் என்றான வெண்குடி நாட்டின்  பசுக்களும் பெண்களும். யாரும்  எதிர்பார்த்திராத  இன்னொரு  கோரிக்கையும் வைத்தான் திவலகன். நட்பரசுகளுக்கே அது அதிகம்  எனப்பட்டது "மாவலியன்  என் தாள் பணிந்து மன்னிப்பு  கோரிச் செல்ல வேண்டும்" என்றான். மாவலியனும்  அவ்வாறு  செய்து மாவலியம் மீண்டான். நாட்கள்  செல்லச்  செல்ல  மாவலியன்  மீதிருந்த மக்களின்  மதிப்பும்  பயமும்  நீங்கியது. மாவலியன் குறித்து இளிவரல் பேச்சுகள் பெருகின. அனிந்தருக்கு  மட்டுமே  மாவலியனின்  நிலைப்பாடு  புரிந்தது.
சில மாதங்கள்  கடந்தன. தன்னை சந்திக்க வருமாறு மாவலியன் அனிந்தரை அழைத்திருந்தான்."புறப்படலாம் அனிந்தா" என்றான் மாவலியன். அவனே தொடரட்டும்  என அனிந்தர் காத்திருந்தார். "திவலகன் திறன் படைத்த  வேட்டை நாய். ஆனால்  மாமிசத் துண்டுகளில் மகிழ்வு கொண்டுவிடும் எளிய மனம்  கொண்டவன். அவனுக்கு  நான்  அளித்தது  அது தான்  என அறியாமல் இன்பத்தில் மூழ்கிச் சத்திழந்துவிட்டான் மூடன். நம் படை நகரட்டும். எண் திசைகளிலும்  சகேரீதமும் அதன் கூட்டரசுகளும் சூழப்படட்டும். எதிர்க்கும்  ஒவ்வொருவனையும்  கொன்ற பிறகே நம் படை முன்னேற வேண்டும் . கால் அறுந்தோ கண்ணிழந்தோ கரங்கள்  வெட்டப்பட்டோ ஒருவனும் எஞ்சக் கூடாது. இவ்வாணை மட்டும்  எங்கும்  நின்றாக வேண்டும். உயிர்  பறிக்காமல் ஒருவனும்  விடப்படக் கூடாது." அதே அமைதியுடன்  மாவலியன்  சொல்லிக்  கொண்டிருந்தான். "இன்னும்  ஒரு நாழிகையில்  மாவலியத்தின்  கிழக்கெல்லையில்  நம் படைகள்  புறப்பட்டாக வேண்டும். பருங்கம் என்ற நதியில்  மேற்கில்  இருக்கும்  அத்தனை வீரர்களையும்  ஓடத்தில்  ஏற்றுங்கள். நதிகளின்  கரைகளில்  சறுகடர்ந்த மரங்களே அதிகம். கொள்ளுமளவு ஓடங்களில் இழுப்பை எண்ணெய்  பீப்பாய்களை ஏற்றுங்கள். எறிபொறி அமைத்து பீப்பாய்கள் கரையோரக் காடுகளில்  சென்று தைக்குமாறு வீசுங்கள். எரியம்புகள் எய்து காடுகளை கொளுத்துங்கள். வன மிருகங்கள்  நமக்கு முன் சகேரீதத்தை சூழும்." என்று சொல்லிக்  கொண்டிருக்கும்  போதே குறுக்கிட்ட அனிந்தர் "அரண்மனை  பாதுகாப்புக்கு?" என்றார்.
"ஆணெனப் பிறந்த எவனும்  மாவலியத்தில்  இருக்க வேண்டாம். நடக்க முடிந்த சிறுவர்கள்  உட்பட அனைவரையும்  நிரையில் இணையுங்கள். தேர்ந்த வீரர்களின் நிரை தனியெனவும் இவர்கள்  நிரை தனியெனவும்  அமையட்டும்." என எவ்வுணர்ச்சியும்  இன்றி  கூறினான் மாவலியன்.  துணைத் தளபதி அமதிரன் கோபமுற்றவனாய் எழுந்து "இதற்கு  நான் ஒப்ப முடியாது. மன்னன் மக்களின்  ஆணை பெற்று ஆள்பவன். தன் ஆணவத்திற்கென அவர்களை பலியிட அவனுக்கு  உரிமை இல்லை. என் உயிர் கொடுத்..." என அவன் சொல்லிக்  கொண்டிருக்கும்  போதே மாவலியன்  அலட்சியத்துடன்  விட்டெறிந்த வாள் அவன் தலையில்  பாதியை வெட்டி  நின்றது. இறுதிச் சொல் சில நொடிகள்  இதழில்  ஒட்டியிருக்க  அமதிரனின்  உடல் தரையில்  விழுந்தது . மாவலியன்  தொடர்ந்தார். "நம் படைக்கலங்கள் அனைத்தும்  வெளியே  எடுக்கப்படட்டும். ஒன்றும்  குருதி  பார்க்காமல்  உள்ளறைத் திரும்பக் கூடாது. புறப்படு அனிந்தா! இன்றிரவே சகேரீதத்தை முற்றழித்தாக வேண்டும். உன்னை திவலகனின்  அரண்மனையில்  சந்திக்கிறேன்" என்று உள்ளறை சென்றான்.
சில  நொடிகள்  திகைத்து  நின்ற  அனிந்தர்  அவசரமாக  விடுக்கப்பட்ட அந்த ஆணைகளின் கூர்மையையும் துரிதத்தையும் எண்ணினார். கூர்மை தான்  மாவலியனின்  பலம்  என எண்ணினார். ஒற்றர்கள்  அறிந்திருக்கவே முடியாத பெருந்திட்டம். செயல்படப் போகும் நொடி வரை அவன் ஒருவனே  அறிந்த சித்திரம். எண்ணும் போது இன்னும்  விரிந்தது  அவன் உருவம். எண்ணத்தை  கலைத்துவிட்டு  இறங்கி நடந்தார் அனிந்தர். தன் மனம்  அணுவளவும் விரும்பாத ஆணைகளை சித்தம்  செறிவான  சொற்களில்  வெளியிட்டுக் கொண்டிருப்பதை அவரே எண்ணி வியந்தார். வெறுப்பும்  வெறியும்  கொண்டு பெரும்புயலென சகேரீதத்தை  சூழ்ந்தனர் மாவலிய வீரர்கள். அனிந்தர்  உயிர் எஞ்சாது வீழ்த்த வேண்டும்  என மாவலியன் ஆணையிட்டது முதலில்  தவறென  எண்ணினார். ஆனால்  எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த கணம் கண்டவன்  என ஒவ்வொரு வீரனும்  ஊறித் திளைத்தான் அக்கொலை வெறியாட்டில். இறப்பவனின் ஓலமும் கெஞ்சலும் அருவருப்பும் இரக்கமும்  கொள்ளச் செய்ய அதுவே இன்பம்  என்றாவதை அனிந்தர் கண்டார். எதிர் நின்ற சகேரீதத்தின் வீரர்கள்  அஞ்சிப் பதுங்கினர். கால் பற்றி மன்றாடினர். ஒருவனும்  மிஞ்சவில்லை. மாவலியன்  தன் துணைவீரர்கள் நூற்றுவருடன் விரைவுப் புரவிகளில் சகேரீதம்  நுழைந்தான். வாளின் வேகத்தில்  கதை சுழற்றினர் வீரர்கள்  ஒவ்வொருவரும். கல்பட்ட நீரென எதிர் வந்தவர்களின்  சினங்கள் கலங்கித் தெரித்தன. ஒற்றைப் பெருவிசையென பெரும்புயலென பேரலையென பேரிடி என நூற்றுவர் கடந்து  சென்ற இடமெங்கும் தலை தெரித்து மடிந்து கிடந்தனர் சகேரீதத்தின் பெரு வீரர்கள்.
அனிந்தரின் படை நிரையில்  ஓசைகள் அவிந்து வந்தன. இறப்பவர்களின் வலி முனகல்கள் மட்டுமே  கேட்டுக்கொண்டிருந்தன. உயிருக்கு மன்றாடி ஊளையிட்டு மடிபவர்களின் ஓலங்கள் சில சமயம் உச்சமென கேட்டுக் கொண்டிருந்தன. பற்றி ஏற சருகுகள்  இல்லாத நெருப்பென மாவலியத்தின் வீரர்கள்  சடசடத்து வெறித்து நின்றனர். கொல்லப்படுவதற்கு வீரர்கள்  குறைந்த போதே அவர்கள்  நிகழ்த்தியவற்றை அவர்கள்  கண்டனர். புழுக்கள்  போல குருதியில்  நெளிந்தனர் இறப்பவர்கள். தாயொருத்தி இறந்து கொண்டிருக்கும் தன் கணவனை மார்போடு அணைத்து  தன் மகவிற்கு முலையூட்டிக் கொண்டிருந்தாள். அதனைக் கண்ட கணம் தலையறுத்து மண்ணில்  விழ நினைத்தான்  மாவலியத்தின் வீரன் ஒருவன். இன்னொன்றும் அவனை இயக்குவதை அனிந்தர்  கண்டார். இன்னொன்று  வென்றது. முலையூட்டியவள் மகவினை இழுத்து வீசிவிட்டு அவள் ஆடைகளை  அவிழ்த்தெறிந்து அவள் கணவன்  உடல் மேல்  அவளைக் கிடத்திப் புணர்ந்தான் அவ்வீரன்.வெறித்துத் திகைத்த விழிகளுடன்  கிடந்தாள் அப்பெண். அனிந்தர்  அவனைத் தடுக்க ஓரடி முன்னெடுத்து  வைத்தார். பின்னர்  "இல்லை" என தலையசைத்துக் கொண்டு தன் புரவியை திருப்பித் தட்டிவிட்டார்.
திவலகனின்  அரண்மனை  ஓலங்களால் நிரம்பியிருந்தது. திவலகனையும் நட்பரசர்களையும் தப்பிக்கச் செய்ய சகேரீதத்தின்  தளபதி  சுபனன் தலைமையில்  ஆயிரம்  தேர்ந்த வீரர்கள் நிறைவகுத்தனர். எறும்பு வரிசையை கலைக்கும் பெரு விரலென மாவலியனும்  நூற்றுவர்களும் ஆயிரவர் படையை சிதறடித்தனர். அம்புகளும் நெருங்க முடியாத வேகத்தில்  சரியான இடைவெளியில்  நூற்றுவர்கள்  கதை சுழற்றியவாறே திவலகன்  தப்பிச் செல்லவிருந்த சுரங்கத்தை நெருங்கினர். மாவலியனின்  காலடிச் சத்தம் கேட்டதுமே அதிர்ந்த திவலகன் "என் இறையே" என இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பிக் கொண்டு கண்ணீர்  வழிய மாவலியனை நோக்கி ஓடி வந்தான். கூப்பிய கரங்களை மணிக்கட்டுடன் வெட்டியெறிந்தான் மாவலியன். திவலகன்  திகைத்து  நின்றிருக்கவே கணுக்கால்  வரை கால்களை வெட்டினான். அது போன்றே அத்தனை நட்பரசர்களும் வெட்டப்பட்டனர். அதன்பின்  அவர்களை மாவலியன்  திரும்பி நோக்கவில்லை. எஞ்சிய  கரங்களையும்  கால்களையும்  இழுத்துக் கொண்டு முனகியவாறே அவ்வரசர்கள் ஊர்ந்தனர். அரண்மனையின்  பந்த ஒளிகளைத் தாண்டி இருளுக்குள்  அவர்கள்  ஊர்ந்தனர். வலியை அவமானத்தை பெருந்துக்கத்தை இருள் மட்டுமே  ஆற்றுப்படுத்த முடிகிறது.
அனிந்தர்  தனக்குப் பின்னே மாளிகைகளிலிருந்து பெண்கள்  தூக்கியெறியப்படும் ஓசைகளை கேட்டார். பெண்ணெனத் தென்பட்ட ஒருவரையும்  அவர்கள்  விடவில்லை. தொடக்கத்தில்  ஓலங்களும் அழுகைகளும் வசைகளும் கேட்டன. பின்னர் முனகல்கள்  ஆகி அவ்வோசை சிரிப்பொலிகளாக இளிவரல்களாக ஏளனங்களாக முத்தங்களாக அணைப்புகளாக கண்ணீராக சீர் மூச்சாக குறட்டை ஒலிகளாக மாறுவதை அனிந்தர்  கேட்டார். மானுடம்  என்பதை கடந்து அல்லது  மறந்து புணர்ந்தபின் உறங்கும்  வன மிருங்களாக அவர்கள்  கிடந்தனர். குருதியிழிந்த இறந்த உடல்களுக்கு  நடுவே புணர்ந்து இறுகிக் கிடந்தன உயிருள்ள உடல்கள். உயிரற்றவர்கள் மட்டுமே  ஆடையோடிருந்தனர். அனிந்தர் விண் நோக்கி தலை உயர்த்தினார். என்றும்  போல் அன்றும்  விண்மீன்கள் சிரித்துக் கொண்டிருந்தன. பாணன் பெருமூச்சுவிட்டான். சுனதனைத் தவிர  துயரவர்கள்  அனைவரும்  அதிர்ந்து அமர்ந்திருந்தனர். அவன் விழிகளில்  மட்டும்  விண்மீன்கள்  மின்னிக் கொண்டிருந்தன.

Sunday 26 June 2016

பெருஞ்சுழி 9

9
வெண்மை என்பது  நிறமல்ல. அது முழுமை.நிறைவு. வலிமை. ஆவல். முனைப்பு. வெற்றி. புகழ். தேக்கம். அழிவு. வெண்மையென்றாவதால் வாழ்கின்றன உயிர்கள்.
பெரும்  புல்வெளிகளால் சூழப்பட்ட அச்சிறு தேசம் அணுகிப் போரிட முடியாத இயற்கை அரண்களால் வளைக்கபட்டிருந்தது. குளிர் பரப்புகளுக்கு நடுவில்  நின்றிருந்த அத்தேசத்தின் காலம் விடியலின் புணர்ச்சி போல முனைப்பற்ற இன்பம்  கொண்டு  தேங்கித் ததும்பி நின்றது. புற்களால் முளைத்தன பசுக்கள். அசைபோடும் பசுக்கள்  போல துய்ப்பதன்றி வேறேதும்  அறிந்திருக்கவில்லை  வெண்குடிநாடு என்று அழைக்கப்பட்ட அப்புற்பரப்பின் மக்கள். ஓங்கிப் பேசினாலே அஞ்சினர். ஆணுடல்  பெண்ணுடலை தீண்டிக் கொண்டே இருந்தது. எப்போதும்  காமுற்றிருந்தனர் ஆண்கள். கனியக் காத்திருந்தனர் பெண்கள். பசு மெல்லும் ஒவ்வொரு  பசுமையும்  வெண்மையென அவர்கள்  கலன்களில் நிறைந்தது.
மட்கிய முதியவளும் மணம் வீசினாள். அவர்கள்  வியர்வையிலும் வெண்ணெய்  மணம்  எழுந்தது. பசுஞ்சாணமும் பசு நெய்யும்  மணத்துக் கிடந்தன  வீதிகள். விழுந்தே அறியாததால் விழுந்த பின் எழுகையில்  எழும் சுகம் அவர்கள்  அறியவில்லை. உயர்ந்தவை அனைத்திற்கும்  ஆழமும்  அதிகம். அவ்வாழத்தின் இருட்டு சரந்தகரின்  மனைவியரில் ஒருத்தியின்  வயிற்றில்  பிறந்தது. கருக்கொண்ட நாள் முதல்  உடலில்  ஒட்டி உறிஞ்சும்  அட்டையை தட்டுவது போல அடிவயிற்றை தட்டிக் கொண்டிருந்தாள். அருவருப்பு  புரளும்  முகத்துடன்  கால் விரித்து குறிவாயிலை  நோக்கினாள். குழந்தை  பிறந்த  தினம்  என்றுமில்லாத  ஒளியுடன்  விளங்கிய  அவள் முகம்  கண்ட ஒவ்வொருவரும்  காமுற்றனர். யாரும்  நோக்காத  ஒரு கணப்பொழுதில் அவள் வலக்கால் கட்டை விரலை  நாவால்  வருடினாள் மருத்துவச்சி. அதே நொடியில்  தன் மீது  படியும்  கூர் விழி நோக்கை அவள்  உணர்ந்தாள். கருமணியென மாவலியனின் விழிகள் அவளை நோக்கி நின்றன. அப்போது  பிறந்த தொட்டில் குழந்தையின்  விழி நோக்கென நினைக்க முடியவில்லை  அதனை. தன் இருளை திரட்டி  தனக்கு காண்பிக்கப் போகும்  கொடுந்தெய்வமென  மாவலியனை அவள் நினைத்தாள். அவள் முகத்தில்  ஒரு சுழிப்பு உருவானது. மாவலியனைக் கண்ட ஒவ்வொரு  விழியிலும்  அச்சுழிப்பு நிலைத்தது.
அன்பிற்காக அன்றி அச்சத்தினால்  அணைத்துக்  கொண்டு உறங்கினர் ஆணும் பெண்ணும். அப்பெயர்  சித்தத்தில்  இருக்கும்  வரை அவர்கள்  புணர முடியவில்லை. சொல்லாமல்  விடுவது இல்லாமல்  ஆவதை அவர்கள்  உணர்ந்தனர். அவன் தாயும் பற்கள்  முளைத்தவன்று அவனை நீங்கினாள். இல்லாதவனாகவே ஆகிவிட்டான் மாவலியன். ஆறு குதிரைகள்  பூட்டி தேரோட்டப் பந்தயங்கள்  நிகழ்ந்தன. பண்ணிரெண்டு  குதிரைகள்  பூட்டி யாரும்  அறியாமல்  விளையாடிக் கொண்டிருந்தான் மாவலியன்.
எந்நேரமும்  எதிலும்  நிறைவு  கொள்ளாமல் அவன் ததும்பிக் கொண்டே  இருந்தான்.  உயிரென அழகென அன்பென எதையும்  அவன்  அறியவில்லை.  வலுவும்  வலுவின்மையுமே அவன் சிந்தையை  நிறைத்திருந்தன. தன்னைக்  கடந்த  ஒருவனை  அவன் வெறுத்தான்.  அவனை  வெல்லும்வரை அவனாகவே  மாறித்  திரிந்தான்.  பயன் நுகர்வதே அவன்  வாழ்வென்றானது. மனிதர்கள்  வெறும்  உற்பத்தி  கருவிகள். மிருகங்கள்  வெறும்  உணவுக்  கூறுகள்.  மலர் வனங்களை  அவன் தன் அரண்மனையில்  அனுமதிக்கவில்லை.  இசையும்  நாட்டியமும்  என்னவென்றே  அவன் அறியவில்லை.  விழைந்து பெண் கூடல்  அவன் வாழ்வில்  நிகழ்ந்ததில்லை. அவன் பசி மட்டுமே  கொண்டவன்  ருசி அவனுக்கு  பொருட்டல்ல. அறுபது  நாழிகைகளில்  ஆறு  நாழிகைகளே உறங்கினான். இறைவனும் நெருங்க  முடியாக் கொடுந்தனிமையில்  தன்னை  ஆழ்த்திக் கொண்டான்.  எவ்வறமும் எவ்வுணர்வும்  அவனை அலைகழிக்கவில்லை. புகழ்பாடி பொருள்  சேர்த்தனர்  அறிதவர்கள் .  அப்பொய் புகழில் மயங்கி  அடிமைகளின்  குருதி  பிழிந்து  அள்ளிக்  கொடுத்தார் சரந்தகர் .  காமத்தின்  புது  உச்சங்கள் காண்பது  பற்றியே  அவைகளில்  பெரிதும்  விவாதிக்கப்பட்டது. வீரம்  நிறைந்தவர்கள் அந்த  அவை நுழைய  வெட்கினர். மாவலியன்  தன் குறும்படை  கொண்டு  தகப்பனின்  அரண்மனை  நுழைந்தான். “என்ன  மைந்தா! இது அவை. இங்கெதற்கு ஆயுதம்  தரித்து  நுழைந்தாய்” என்று  அவன்  ஆற்றல்  புரியாமல்  ஏளனத்தோடு கேட்டார்  வெண்குடிநாட்டின் தலைவர் சரந்தகர்.
“உங்கள்  மணிமுடியை  என் தலை சூட்டி  இந்த  அவை நிறைத்திருக்கும் வீணர்களுடன்  இக்கணமே நீங்கள்  விலகினால்  என் படை  குருதி பார்க்க  வேண்டிய  அவசியம்  இருக்காது” என்றான்  குரலில்  உணர்ச்சியென ஏதுமின்றி. முதலில்  எண்ணிச்  சொல்லப்பட்ட அச்சொற்களின் ஆணவம்  நிறைந்த  கட்டளை போரே கண்டிராத  சரந்தகரை அச்சம்  கொள்ளச் செய்தது. ஆனால்  இருநூறு  வீரர்களோடு தன்னை  இரண்டாயிரம்  வீரர்கள்  கொண்ட  அரண்மனையை எதிர்க்க  நினைக்கும்  பதினேழு  வயது சிறுவன்  அவ்வார்த்தைகளை  சொன்னான்  என்பதை  சரந்தகரால் பொறுக்க முடியவில்லை. “சிறுவனே ! நீ என் மைந்தன் என்ற நினைவு  எனக்கிருப்பதால் இன்னும்  உயிரோடு நிற்கிறாய். ஆனால்  நீ என் எந்த  மனைவிக்கு  பிறந்தவனென்று நினைவிலில்லை.  உன்  வார்த்தைகளுக்காக என் கால் தொட்டு வணங்கி  ஓடிவிடு.  இல்லையெனில்  உன்னையும்  உன்னை  ஈன்றவளையும் அம்மணமாக்கி  அரண்மனை  தூண்களில்  கட்டிவிடுவேன்” என்று  மாவலியனை  அவமதிக்கும்  பொருட்டு சொன்ன  வார்த்தைகள் அவனை ஒன்றும் செய்யவில்லை.  அவன் சிறு வயதில்  கண்டிருந்த அவையினர் அவன் தயாராகிவிட்டதை ஊகித்திருந்தனர். பெருமூச்சுடன்  தலை தாழ்த்தினர். அவர்கள்  மாவலியனுக்காக வருந்துவதாக சரந்தகர்  எண்ணினார். 
ஓங்கி  கருத்த வில்லென  நீண்ட  அவன் உடலில்  சில அசைவுகள்  நிகழ்ந்தன.  கோபமுற்ற சரந்தகர்  “இவனை  அம்மணமாக்கி இழுத்துச்  சென்று  இவன் தாய்  முன் நிறுத்தி  அவளையும்  அவ்வாறே  இழுத்து வாருங்கள்” என்று  ஆணையிட்டார். மாவலியனின்  ஆடை நுனியை தீண்டுவதற்கு  முன்பே  ஒரு வீரன்  அவனால்  அறைபட்டு தரையில்  விழுந்து  சில  நொடிகள் உடல் துடித்து  பின் இறந்தான். ஒரு நொடி  அதிர்ந்த  சரந்தகர்  அரண்மனை  காவல்  வீரர்கள்  அனைவரையும்  அவை  நோக்கி  அழைக்கும்  வெண்கல முரசினை முழக்க கைகாட்டினார்.அவ்வொலியில் உந்தப்பட்டு  மாவலியனின்  வீரர்களும்  அவை நுழைந்தனர். மாவலியன்  இடைவாளினை உருவி சுழற்றி  எறிந்தான்  . வீரன் ஒருவனின்  தலை பறித்த  அவ்வாள் சரந்தகரின் காலடியில்  அத்தலையுடன்  விழுந்தது. மாவலியன்  தன்  மேலாடையில்  பூண்டிருந்த  அவன் உடல் நீளத்திற்கான  இரு வாட்களை உருவினான்.
முதலில்  அவ்வாட்களை அவன் கரங்கள்  இயக்கின. அவன் விரைவு  கூடிக்கூடி வந்தது.  வாளும் கரமும் ஒன்றென்றாகி பின்  அவற்றை  தாங்கும்  உடலும் அதனுடன்  ஒன்றானது போல்  போர்புரிந்தான். அழகிய  நடனமென அவன்  உடலோடு அவ்வாள்  இணைந்தாடியது.  அவன்  சூழ்ந்து  தாக்கியவர்கள்  விழுந்து  கொண்டே  இருந்தனர்.  உடலும்  இல்லாமலாகி உயிர்  பறிக்கும்  ஒரு இயக்கம்  என அவன் மாறி விட்டிருந்தான். மண்ணிலிருந்து  விண்ணடையும் செம்மழையென அவனை சூழ்ந்து  தாக்கியவர்களின் குருதி  தெளித்தது.
ஒருவனை  ஒருமுறைக்கு  மேல்  அவன் வாள்  தீண்டவில்லை. வாள்பட்டால் அறுந்து  உடலை  செயலிழக்கச் செய்யும் நரம்பு  முடுச்சுகளை கூர்மையாகத்  தாக்கினான்.  அமானுட விசையொன்றுடன் போரிடுவதுபோல்  சரந்தகரின்  வீரர்கள்  திகைத்தனர்.  அவனுடைய  இருவாள் சுழற்சி  உருவாக்கிய  அரணை முதலில் அவர்கள்   வாள்  நெருங்க  முடியாமலானது. பின் அவர்கள் விழியும்  அச்சுழற்சியை அறியவில்லை.  பின் அவர்களின்  சுவாசமும்  தீண்ட  முடியாத தனிமையில்  அவன் சுழன்று  கொண்டிருந்தான்.  மாவலியனின்  வீரர்களும்  ஒருவன்  அறுவனை நிகர்க்கும்  திறம்  பெற்றிருந்தனர். சுழலென அவன் சென்ற  இடமெல்லாம்  வீரர்கள்  வீழ்ந்தனர்.  நான்கு நாழிகைக்குள் போர்  முடிந்தது. அச்சிறிய அரண்மனையின்  சிற்றறை ஒன்றில்  அதிர்ந்து  போய் ஒளிந்திருந்த  சரந்தகரை  மாவலியன் உச்சித்  தலைமயிர்  பற்றி  அரண்மனை  உப்பரிகைக்கு  இழுத்துச்  சென்றான்  . மாவலியனின் இடக்கையில் மணிமுடி  இருந்தது. கூப்பிய  கரங்களோடு மக்கள்  பார்க்கும் படி நின்று  சரந்தகரிடம் “இம்மணிமுடியை  நீங்களே  மக்கள்  முன்  எனக்கு  சூட்டினால் உங்களுடைய  பிற மனைவியரும் பிள்ளைகளும்  வதைபடுவதை  பார்க்க  வேண்டியிராது” என்று  சொன்னான். நடுங்கும்  கரங்களுடன்  அவனுக்கு  முடி சூட்டினார்  சரந்தகர். “வெண்குடிநாட்டின்  வேந்தன்  வாழ்க” என்றொரு குரல்  எழுந்தது.
அதற்குள் மாவலியனின்  இடிகுரல் அதனை  தடுத்தது. “ நிறுத்துங்கள்! வெண்குடிநாடு  என்ற பெயர்  இனி உங்கள்  சிந்தையிலும் இருக்கக்  கூடாது.  இனி இந்நாடு  மாவலியம் என்றே  அழைக்கப்படும்.  என்னைக்  கடந்தவொன்றை இனி யாரும்  சிந்திக்கத்  தேவையில்லை” என்றான்.   உணர்ச்சிகள்  அவிந்து எளிமையான  சரந்தகர்  ஒரு நீள்  மூச்சு விட்டார்  .சரந்தகர்  தான் மிகவும் சோர்ந்திருப்பதாகவும் அச்சோர்வினை போக்க இள மங்கை ஒருத்தியைப் புணர வேண்டும் எனவும் எண்ணினார். மக்களை பார்த்தவாறு  நின்றிருந்தார் சரந்தகர். திரும்பி அரியணை நோக்கி நடந்த மாவலியன் திரும்பி நோக்காது  வாளினால் சரந்தகரின் தலையைக் கிள்ளி உப்பரிகைக்கு  வெளியே எறிந்தான். முதுகிற்குப் பின்னே முண்டத்தின் கழுத்தில்  குருதி கொப்பளிக்க  அவன் அரியணை நோக்கி  நடந்தான். 

Saturday 25 June 2016

பெருஞ்சுழி 8

8
அன்பு கொண்டொழுகுதலன்றி சுனதன்  வேறேதும் அறிந்திருக்கவில்லை. குலம்  காக்க  வந்த  தெய்வமென  அவனை வணங்கியது மலை நோக்கி  தினம்  தினம்  வந்த  துயரவர்  கூட்டம்.  முதலில்  நிரை வகுத்து அவ்விடம்  அடைந்த  நூற்றியிருபது பேரும்  மக்களை மலை நோக்கி  கொண்டு  வந்தனர். சமவெளி  மட்டுமே  கண்டிருந்த  மக்கள்  அம்மலை வாழ்வை  விரும்பவில்லை.  தங்கள்  தலைவனென மதித்த  மாசறியானும் தெய்வமெனத் தொழுத சுனதனும் இருக்கையில்  அவ்விடம்  நீங்கவும்  அவர்கள்  விரும்பவில்லை.  பேசும்  மொழியன்றி அவன்  எந்த  நூலும்  கற்கவில்லை.  இயற்கை  அள்ளி  விரித்தது  அவன் முன் அறிதலின்  பெரும்பாதையை.
அவன்  கால்கள்  அனிச்சையாய்  அறிந்தன அக்காட்டினை. தொடக்கத்தில்  அவன்  செய்கை  கண்டு  பயந்தாள்  அவன் தாய் சுமதனி . ஆனால்  கருநாகக் குஞ்சுகளை  தாய்  நாகத்திடம்  அவன்  நழுவவிட்ட  போது  தன் மகன்  இனி  தன்னவன் கிடையாது  என தனக்குள்  அழுது  கொண்டாள்.  அவனை  தாய்  மறந்தாள். தகப்பன்  துறந்தான். துயரவர்  நினைவிலும்  அவன்  இல்லாமலாகிக் கொண்டிருந்தான். காமம்  கொண்டவன்  கொள்பவளின் அசைவுகளின் நுண்ணிய  அர்த்தம்  அறிவது  போல்  சுனதன்  அக்காட்டினை  அறிந்தான். மனிதன்  அக்காட்டினுள் உருவாக்கிய சமன்  குலைவினை மாசறியானும் அவனைப்  போல்  இயற்கை  நூல்  கற்ற  பிறரும்  அறிந்தனர்.  ஆனால்  சுனதன்  அந்த  சமன்  குலைவினைத் தாண்டி  உருவாகும்  சமநிலை  கண்டான்.  கருணையின்  கண்ணுருத் தோற்றமாய் அவன்  முன் நின்றது  அக்கானகம். காதல்  கொண்டவனின் கண்விழி நோக்குடனே அக்காட்டினை  அவன்  பார்த்தான். காற்றாய்  அவனை  அள்ளித்  தழுவினாள். நீராய்  அவனை அடித்துத் துவைத்தாள். நெருப்பாய் நெருங்கிச் சுட்டாள். நிலமாய்  அவனை  அணைத்து  உறங்கினாள். வான்  விரிவாய் முடிவற்ற  வெளியில்  அவனை  இழுத்துச்  சுழற்றினாள்.  அனைவரும் அன்னையென  வணங்கிய  இயற்கையை சுனதன்  கொதித்து நெருங்கும்  குமரியெனக் கண்டான். இயற்கையென அவள்  அளித்த  அகக்  கிளர்ச்சி  எப்பெண் முகமும்  அவனுக்கு  அளிக்கவில்லை.  அவளுடன்  விளையாடி  அவளை  உண்டு  அவளுள்  உறங்கி  அவளை  உடுத்தி  அவளுள்  ஒன்றாகி  அவளையும்  தன்னுள்  ஒன்றாக்கி  வளர்ந்தான். இயற்கையோடு மகிழ்ந்திருக்கையில் நெடுமரங்களின் உச்சிக்  கிளை வளைத்து  மறு மரம்  தாண்டுவான். கோபம்  கொள்கையில் குளிர்  பாறையென கொட்டும்  பேரருவியில்  கூர்ந்து  நிற்கும்  பெருங்கற்களில் கை நுழைத்து  மேலேறுவான்.கடுந்தேனின் இனிப்பும்  கொடு நஞ்சின்  கசப்பும்  சுனதன்  ஒன்றென உணர்ந்தபோது  அவனுக்கு  முடிவின்மை நோக்கிய  முதல்வினா மனதில்  எழுந்தது.
ஐம்புலன்களில் இயற்கையின்  ஐந்து  வல்லமைகளையும் உணர்ந்தவன்  அவ்வியற்கையை விலக்கி  அமர நினைத்தான்.  பசுங்குளிர் பரப்பென கண் முன்  கிடந்த  கானகம்  துறக்க  கண்  மூடினான். மூடிய  விழியினுள்ளும்  துரத்தின காட்சிகள்.  வென்றான். களிற்றின் பிளிறலில் இருந்து  மலரும்  மொட்டின் ஓசை  வரை  அவன்  செவிகள் தன்  செயல்  அவித்தன. மலரின்  மணம்  முதல்  ஒளி  பட்டு  மாறும்  நீரின்  மணம் வரை  அவன்  நாசி  கடந்தது.  நுகர்வு  உண்டாக்கும்  நுண்ணிய  சுவையையும்  நா  தவிர்த்தது. குளிரையும்  வெயிலையும்  நீரையும்  மறந்தது  தோல்.  அணைக்கும் இயற்கை  முன்  தன்  ஒவ்வொரு  மயிர்காலும்  நடனமிடுவதை  சுனதன்  உணர்ந்தான். உடலெனும் சிறை  கடந்து  சிந்தை  விரிந்தது.  இயங்குவிதி அவனுக்குப் புரிந்தது.  விரிந்த  களத்தில்  நடக்கும்  பெரு விளையாட்டில்  தானொரு சிறு  கருவியென உணர்ந்தான். விழி திறந்தான்  சுனதன்.  முதுகில்  பரவிக்  கிடந்த  நீள்  முடியை  அலையடிக்கச் செய்தாள் வளிமங்கை. ஒவ்வொரு  உடல்  தசையும்  முழுமையில் நிகர்நிலையில்  நிலைத்திருக்க  நீர்க்கன்னி இடுப்பை  சுற்றியிருந்த  ஆடை  நனைத்திருக்க வலுவான  அடிகள்  வைத்து  ஏழு வருடங்கள்  கழிந்தபின் உள் காடு  விடுத்து  தன் மக்கள்  நோக்கி  வந்தான்  சுனதன்.  அவன் களம்  காத்திருந்தது.
நிலம்  முழுதும்  நிகழ்ந்தவை கூறினர் பாணர்களும் விறலியரும். அவர்கள் சொல்லில் புகுந்தான்  சுனதன். இரக்கமும் கருணையும்  இயல்பெனக் கொண்டவன் வதைபடும்  ஒவ்வொரு  உயிருக்கெனவும் கண்ணீர்  விடுபவன்  தன்னுள்  முனைப்பின் முளை எழுவதை உணர்ந்தான். புணர்வும் பொருள்  சேர்ப்பும்  வாழ்வெனக்  கொண்டவர்கள் பெருகியிருப்பதை அடங்கிய அவன் உள்ளம்  உணர்ந்தது.  அத்தனை ஒளியையும்  தன்னுள்  அழுத்தும்  மாலையென நிலத்தில்  நடக்கும்  அனைத்திற்கும்  நடுவென நின்றிருந்தான்  ஒருவன். "மாவலியர்" என்று  அவன்  பெயர் சொன்னதும்  சொல்லுதிர்த்த பாணனின் சிரம் சிலிர்த்தது. விழிகள்  மின்னின. வலியென அவன் சொற்களில்  நடித்தது உலகை இயக்கும் அப்பெருங்கிளர்ச்சி. அக்கிளர்ச்சி உடல் பின்னும்  நாகமென  மனம்  இறுக்கும்  காமமென தினம் நடிக்கும்  வீரமென தன்னுள்  பற்றி ஏறுவதை சுனதன்  உணர்ந்தான். செல்வம்  கொடுக்கும்  சிறப்பனைத்தும்   பெற்று  பெரும்  வலுவும்  கூர்மதியும்  கொண்டு  இன்பமும்  வெற்றியும்  மட்டுமே  வாழ்வெனக்  கொண்டவன்  மாவலியன். சுனதனின்  தன் நிகர் வல்லவனின்  சிறப்புகளை  கேட்கத்  தொடங்கினான்.  கொடுமைகளே  உருவான  அவன்  குருதி  குடித்த  வரலாறு  அன்பே  உருவான  சுனதனை கிளர்ச்சி  கொள்ளச் செய்தது.  நிகர்  கொண்டே பிறக்கின்றன அனைத்து  பெருஞ்செயல்களும் என்பது  எவ்வளவு  உண்மையென சுனதன்  வியந்தான்.

Friday 24 June 2016

பெருஞ்சுழி 7

7
ஆதியில்  இருந்தது  என்ன?  அதுவும்  அறிந்திருக்கவில்லை.  அறியவில்லை  என  அறிந்த  போது  அறிதலாகி வந்த  தன்னை  அது  உணர்ந்தது.  அறிதலுக்கு முந்தைய  கணத்தை மீட்டெடுக்க முயன்று  முயன்று  தோற்றது. அவிழ்த்துக்  கொட்டி தன்னைத்  தேடத்  தொடங்கியது.  யுகங்கள்  கடந்த  அந்தப்  பெருந்தேடலில் புடவியென்றாகி  அதில்  புவியென நின்றது.  அறிக! அறிதலின் வேட்கையில்  எரிகிறது  இப்புடவி. அவ்வனலில் கொதிக்கிறது  இப்புவி. அறிக! புல்லிலும் புனலிலும் சொல்லிலும் அது தேடுவது தன்னைத்தான்.ஆக்கியது  தன்னை  வகுத்துக்  கொண்டது.  ஆக்கியவளென்றும்  ஆக்கியவனென்றும். இருமையிலிருந்து  ஒருமை  நோக்கிச்  செல்ல  நினைத்து  மும்மை உருவாகியது. அதன்  குழந்தைகள் நாம்.  இறை  என நாம்   அழைக்கும்  அதனை  வணங்குவோம். மோதமதி  சுனதனின்  கதை  சொல்லும் முன்  இறைவனை  துதித்துக்  கொண்டாள்.  சுனதன் முதல் வடித்த பாடலென சொல்லப்படும் அதனுள்  அரிமாதரன்  பொருள்  புரியாவிட்டாலும்  விழுந்தான்.  மூன்று  வயதினை நெருங்கிக்  கொண்டிருக்கும் அவனுக்கு  அப்பாடல்  ஆர்வமூட்டுவது  மோதமதிக்கு  வியப்பளித்தது. அவள்  கதையைத்  தொடர்ந்தாள்.  உடை  அணியத்  தொடங்கிய போது  இல்லாதவற்றை உருவாக்கிக்  கொண்டது  மனிதம்.  அன்று  முதல்  பிளவு  உருவாகியது.  பிளவினை உணர்ந்தவர்கள்  சேர்க்கத்  தொடங்கினர். கிடைப்பது  உண்டு  காமுறும் போது  புணர்ந்து  பெருகி இயற்கை  அளிக்கும்  இடர்களிலும்  மூப்பிலும் இறந்து   கொண்டிருந்த  இனத்தின்  நிலையை  இறைவன்  விரும்பவில்லை.  முனைப்பென ஒன்று  பிறந்தது  முதல்  மனத்தில்.  அதிகாரமும்  ஆழ்துயரும் தரும்  அம்முனைப்பினை  கொண்டவர்கள் தங்களை  வீரியம்  மிக்கவர்களென்றும்  அதனால்  தாங்கள்  வீரர்கள்  என்றும்  உணர்ந்தனர்.   முனைப்பினை கண்டு  அஞ்சியவர்களும்  முனைப்பினை  அஞ்சாமல்  அம்முனைப்பிற்குள்ளும் செல்லாமல்  அறிதல்  மட்டுமே  நான்  வேண்டுவது என இருந்தவருமாய் மூன்றெனப் பிரிந்தது மனிதம். அஞ்சியவன் குடியெனவும் அச்சுறுத்தியவன் அரசனென்றும் பிரிந்தனர். சபை என்றும் குடியென்றும் அரசென்றும் தன்னைக் கட்டிக் கொண்டது மனிதம். குடிக்கும் கொற்றவனுக்கும் சமநிலை நிலவ எழுந்தனர் அறிதலில் தன்னை உணர்ந்த அறிதவர்கள். அவர்களின் சொல் நின்றது குடிக்கும் கொற்றவனுக்கும் நடுவில்.

இறுக்கப்பட்ட அனைத்தும் தளர்ந்தாக வேண்டும். தளர்ந்தது அறிதவர்களின் சமன். அறத்தில் நில்லாதொழுகினர் மன்னர். அவர்கள் ஒழுகியதை அறமென வகுத்தனர் அறிதவர். அறிதவர்களில் ஒதுங்கியது ஒரு கூட்டம். துயரவர் என தன்னை வகுத்து நெறிப்படி ஒழுகுதல் மட்டுமே தங்கள் வாழ்வெனக் கொண்டனர். பேருழைப்பின் பலனாய் நிமிர்ந்தெழுந்தது ஒவ்வொரு அரசும். ஒளி கொண்டனர் வலு உள்ளவர்கள். இதுவே என்றென்றைக்குமான நீதி என நிறுத்தினர் அறிதவர். அவர்களை நில்லாது எதிர்த்தனர் துயரவர். மாசறியான் பிறந்தவன்று துயரவர் கூட்டம் தன் பலம் மொத்தமும் இழந்திருந்தது. சமனும் பொதுவும் இனி இல்லை என மாறியது நிலை. தன்னெறி தவறாது வளர்ந்தான் மாசறியான். சுமதனி அவனை விரும்பி மணந்தாள். அவர்களின் முதற்புணர்வு நாளில் அவள் கரம் பற்றிக் கேட்டான் "இக்கீழ்மைகளில் முளைக்க வேண்டுமா என் உதிரம்" என. "இல்லை" என தலையசைத்தாள் சுமதனி. அவர்கள் நடந்தனர். நடை பெருந்தவம் என்றானது. கீழ்மைகள் நெருங்கா ஓரிடம் நோக்கி நடந்தனர்.
அறிதவர்களின் இல்லங்களிலிருந்து பெண்கள் அழுது கொண்டும் உயிரற்றும் வெளியேறிக் கொண்டிருந்தனர். சுமதனியும் மாசறியானும் விழிநீர் வற்றாது நடந்தனர் வடக்கு நோக்கி. வெண்குடி நாடெனும் குறுந்தேசத்தில் மாவலியன் என்றொருவன் தன் தந்தையைக் கொன்று அரியணையைக் கைப்பற்றினான் என்பதே அவர்கள் இறுதியாக அறிந்த செய்தியாக இருந்தது. அன்று சுமதனி வாயிலெடுத்தாள். அவள் கரு வளர வளர அவர்கள் வடக்கு நோக்கி நகர்ந்தனர். நிலவில்லா ஓரிரவில் மண் அடைந்தான் சுனதன்.

சுனதனின்  பிறப்பு  நிகழ்ந்தவன்று ஆயிரம்  பேர்  கொடுமைகள்  தாளாமல்  கடல்  புகுந்து  உயிர்விட்டனர் என மாசறியான் அறிந்தார்.  கருமுத்தென கிடந்த தன் மகனின் மீது ஒரு கணம் வெறுப்பெழுவதை உணர்ந்தார். மறுநொடி அவனை அள்ளி அணைத்து அவ்வெறுப்பினை கடந்தார்.சுனதனின்  தகப்பன்  மாசறியான்  மனித  நடமாட்டம்  இல்லாத  ஒரு  மலையுச்சியில்  குடியேறினார்.  சுனதன்  வளர்ந்தான். மனிதக்  கீழ்மைகள்  அவனை  நெருங்கவே  இல்லை.  அவன்  பயணிக்கும்  வாகனமென சிம்மமே இருந்தது.  அச்சம்  என்பதை  அவன்  அறிந்திருக்கவில்லை.  துயரவர்களின் இறுதி நம்பிக்கையான மாசறியான்  நாடு  நீங்கியதும்  அறத்  தயக்கங்கள் முழுமையாக  நீங்கின. தங்கள்  விருப்பத்திற்கேற்ப  விதி  சமைத்தனர் அறிதவர்கள். அறிதவர்களுக்கு எப்பெண்ணையும்  எந்நேரத்திலும்  புணரும் உரிமை  அளிக்கப்பட்டது.  அறிவு  நீட்சிக்கும் இறையை  அடையவும்  ஆயிரம்  ஆயிரம்  பெண்கள்  அறிதவர்  இல்லங்களில்  நிறைந்தனர். எதிர்ப்பு  என்ற உணர்வே  இல்லாமலாக்கப்பட்டனர்.  மாசறியான்  சென்ற  இடம்  நோக்கி  துயரவர்கள்  புறப்பட்டுக் கொண்டே  இருந்தனர்.  அறிதவரையும் மன்னரையும் எதிர்த்து  மக்களை  காக்க  முடியாதவர்களாய் அழுகையும்  ஓலமுமாய் நாடு  நீங்கினர் துயரவர்கள். மாசறியான்  அடைந்த  மலையுச்சி எளிதில்  அடையக்  கூடியதல்ல. கொடும்பாலை கடப்பதற்கு  முன்னரே  பெரும்பாலானவர்கள்  இறந்தனர்.  உயிரின்  கடைசி  துளி  நம்பிக்கை  ஒட்டியிருக்க நூற்றியிருபது  பேர்  மாசறியானின் குடிலில்  எழும்  புகை  கண்டனர்.  பன்னிரு  சிம்மங்கள் அவர்களை  நோக்கி  ஓடி  வந்தன.  இனி  இறைவனே  தங்களை  காக்கட்டும் என அவர்கள்  கண்  மூடியபோது “கார்ர்ர்” என்ற  சத்தத்துடன்  பதிமூன்றாவது சிம்மத்தில் அவர்கள்  முன்  எழுந்தான்  சுனதன். “ இறைவன் பணிந்தவனையும் துணிந்தவனையும் கைவிடுவதில்லை “ என்று  ஒரு  குரல்  கேட்டது.  காரிடி என பதிமூன்று  சிம்மங்களின் குரலும்  உயர  நூற்றியிருபது  பேரின்  குரலும்  இணைய  விரைவு  கொண்டு  வீழ்த்தும்  கருணை  கொண்டு  நோக்கும்  வலுச்சிம்மமென  நின்றிருந்தான் பத்து  வயது  சிறுவன் சுனதன்.

Thursday 23 June 2016

பெருஞ்சுழி 6


6

அறிக நொடி நொடியாய்  துயரை தனிமையை  வலியை உணரும்  உயிர்களால்  உய்கிறது  இவ்வுலகென. பாணன்  தொடர்ந்தான்.

முப்பக்கமும் கடல் சூழப்பட்ட பெருநிலமான ஆழிமாநாட்டின் வடக்கெல்லையாய் உயர்ந்திருந்த எவர்தொடாமேடு   என்றழைக்கப்பட்ட  பெரு மலையின்  மையமே சுனத வனம்.ஆழிமாநாட்டின் விரிவின் உச்சமாய் நின்றிருந்தது  எவர்தொடாமேடு.  நூற்றியிருபது தனியரசுகளாய் பரவியிருந்த  ஆழிமாநாடு  சுனத  வனம்  என்பதை  கதைகளாய் மட்டுமே  அறிந்திருந்தது. அங்கு உறைகின்றனர்  நம் மூதாதையர்  என ஒவ்வொரு நாளும் அத்திசை தொழுதனர் மக்கள்.சுனத  வனத்தினரும் தங்கள் எல்லை  தாண்டி  ஆழிமாநாட்டின்  நிலம் நோக்கிச்  சென்றதில்லை.  அவர்களின்  தேவைகள்  அனைத்தும்  பெருங்கருணையின் வடிவென  நின்றிருந்த  சுனத  வனத்திற்குள்ளேயே நிறைவேறியது. பெருந்தந்தை சுனதன் பிறந்த  குடி வனம் கடந்து  மண்  அடைவதில்லை  என்ற  கொள்கையே வகுக்கப்பட்டிருந்தது சுனத  வனத்தினில். துயரவர்களில்  தலைமையானவர்கள் என தங்களை  கூறிக்  கொள்வதில்  சுனத  வனத்தில்  பரவியிருந்த  அத்தனை  சிறு  குடிகளும் பெருமை  கொண்டன.

அலங்கனின்  முப்பாட்டன்  பெருவயன் குடிப்  பெருமைகளை  நம்ப மறுத்தார்.  குளிரும்  இருளும்  சுனத  வனத்தினருக்கு பயத்தை  அளிக்க பெருவயன் மட்டும்  அவற்றை  விரும்பினார். ஒவ்வொரு  நாளும்   அவர் சிந்தையிலும்  செயலிலும் சுனதன்  என்ற ஒற்றைப்  பெயரே பற்றி  எரிந்தது. சுனதன்  மீது அவர் கொண்ட  வெறுப்பை  பெறும் பக்தியென நம்பியது சுனத வனம்.சுனத  வனத்தின்  அனைத்து  சிறு  குடிகளையும்  ஒன்றிணைத்தார் பெருவயர். அவருக்குப்  பின்  சுனத  வனத்தின்  அனைத்து  குடிகளுக்கும்  அவர்  உதிர வழியினரே தலைமை  தாங்கினார்.  ஆனால்  பெருவயரின் தனிமை  விரும்பும்  குணமும்  இரக்கமற்ற  வீரமும்  ஒற்றுமை  உண்டாக்குவதில்  இருக்கும்  ஈடுபாடும்  அவருக்கு  பின்  தலைமையேற்ற யாரிடமும்  இருக்கவில்லை.

ஆதிரை  அகைதனையும் நிவங்கனையும் மண் வீழ்த்தியபோது சுனத  வனம்  அதிரவில்லை. கண்ணீர்  உகுத்தது. “பெருவயர் மண் நிகழ்ந்துவிட்டார்” என்று  கூட்டத்தின்  எல்லையில்  இருந்து  எழுந்த  ஒலி உற்சாக  பெருமூச்சென சுனத வனம்  சூழ்ந்தது. ஆதிரையின்  வயதே  ஆன நிவங்கனின்  மகன் பல்லைக்  கடித்தபடி  வாளேந்தி ஓடி வந்தான். மார்பை நோக்கிப் பாய்ந்த அவன் வாளினை இடம்பக்கம் உடல் வளைத்துத் தடுத்து முன் நெற்றியில் ஓங்கி அறைந்து அவனை வீழ்த்தினாள்.

சூழ்ந்திருந்தவர்களில் "மாயம் நிறைந்தவள்" என்ற குரல் எழுந்தது. சொடுக்கி நிமிர்ந்தாள் ஆதிரை. சுனத வனம் கேட்டிராத இடிக்குரலில் முழங்கினாள்.

"இவ்வனத்தின் ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் மகவையும் அறைகூவுகிறேன். என் எதிர் நின்று என்னைக் கொல்ல விரும்புகிறவர் முன் வரலாம்" என்றாள். குரல் முழங்கிய போதும் முகம் முற்றமைதியே கொண்டிருந்தது. இறந்த உடல்களில் எறும்புகள் ஏறத் தொடங்கின. சனையரை நோக்கி "எறும்புகள் சொல்கின்றன என் தமையனும் அவர் துணையனும் மண் நீங்கியதை. கழுகுகள் சொல்லும் வரை காத்திருக்கப் போகிறீரா?" ஆதிரை கேட்டாள். அலங்கன் எழுந்தார். தன் கையணிந்த காப்பையும் கோலையும் ஆதிரையிடம் கொடுத்து அவளை தன் பீடத்திற்கு இட்டுச் சென்று அமர்த்தினார்.

காற்று மட்டுமே பேசிக்கொண்டிருந்த அவ்வேளையில் எங்கோ ஒரு மூலையில் எழுந்தது ஒரு குரல். "சுனதரின் தவப்புதல்வி ஆதிரை மண் நிகழ்ந்து விட்டாலென". சருகில் பற்றிய நெருப்பென நெஞ்சடைத்த சுனதம் நெஞ்சே வெடிபடும் அளவிற்கு உடைந்து கதறியது. மறக்கப்பட்டு பெயரென மட்டுமே நினைவில் நின்ற சுனதனின் மகள் மீண்டும் உருவென மாறுவதை மோதமதி கண்டாள். அரிமாதரனுக்கு அக்கதை சொல்லத் தொடங்கினாள்.

Wednesday 22 June 2016

பெருஞ்சுழி 5

5
"அன்னையைப்பாட எழுந்த மைந்தன் என எனைக்  கொள்ளட்டும் இத்தேசம். அறிக! அன்னையால் நிறைகிறது இங்கு வாழ்வென." சவில்யத்தின் வணிக மன்றில் பாணன்  ஒருவன் ஆதிரையின் கதையை பாடத் தொடங்கினான். சாளரத்தின் வழி அவன் உடலசைவுகளை கவனித்தவாறே சிலைத்து அமர்ந்திருந்தாள் மோதமதி.

சுனத வனம் எனப்பட்ட பெருங்காட்டில்  தனித்தலைந்து கொண்டிருந்தாள்  ஆதிரை.  அவளை  அக்காடறியும். பிறந்தது  முதல்  பிரிதொன்றும்  அறிந்திராத  பேதை  அவள்.  சிம்மம்  அவளை சினந்து  நோக்காது. நாகங்கள் நட்பென அவளைத்  தழுவும்.  சுனத  வனத்தின்  பெரு  மூப்பன் அலங்கன் நீண்டு  மெலிந்த  உடல்  கொண்டவன். ஆதிரையின்  தகப்பன்.  பதினாறு  மகன்களுக்கு  பிறகு  பிறந்தவள்  ஆதிரை.  கறுத்த  தேகத்தினலாய்  அவள்  மண்  நுழைந்தபோது அலங்கன் துணுக்குற்றான். நீள்  விழியும் நீள்  உடலும்  கொண்ட  ஆதிரை  கொட்டும் மழைநாளில் பிறந்தாள்.

ஏடுகள்  கற்கத்  தொடங்கியவன்றே வாளும்  பழகினாள்.
நான்காம்  பிராயம் கடந்த  சில நாட்களில்  அவள்  பேச்சு  குறைந்தது.  எந்நேரமும்  மென் புன்னகை  மட்டுமே  அவள்  இதழ்களில்  ஒட்டியிருந்தது.  ஏடொன்றினை கையில்  ஏந்தி  அவள்  அமர்ந்திருக்க  அலங்கன்  அவளை  தன்  மடிமீது அமர்த்திக்  கொண்டு “என்  சிறு பெண்  ஏன் சித்திரமென அமைதி கொண்டிருக்கிறாள்?” என்று  ஆதிரையின்  முகம்  வளைத்துக்  கேட்டான்.  அவளைத் தொடும் போதெல்லாம்  இனி அவளை இனி இவ்வாறு தொட முடியாதோ என்ற பதற்றம் எப்போதும் எழும். நரை மண்டிய அவன்  மார்பிலிருந்து தன்னை  விடுவித்துக்  கொண்டு  “சூறைக் காற்றின்  மையக்கண்ணை விட  பேரமைதி கொண்ட நிலம் எது தந்தையே?” என்று கேட்டு  அகன்றாள் ஆதிரை. அந்தச்  சூறை மையத்திற்கான சுழல்  உருவாகுமென அலங்கன்  உணர்ந்தான். நிலையில்லாமல்  தவிப்பவள் காடுகளுக்குள் தனித்தலையும் போது   தன்னை  அடைவாள். தேன்  நிறைந்த  கூடுகள்  அன்னை  முலையென அவளுக்கு  அமுதூட்டும். நீள் கிளைகளின்  தாலாட்டில்  உறங்கிப்போவாள். களிற்று  துதிக்கைகளே  அவள் ஊஞ்சல்.  ஏழு  களிறுகள் ஆதிரையை  தூக்கி  எறிந்து  பந்து  விளையாடுவதைக் கண்ட  தோழி ஒருத்தி  காட்டிலேயே  மயங்கி  விழுந்தாள்.

பதிமூன்றாம்  பிராயத்தை ஆதிரை  அடைந்தபோது சுனத  வனத்  தலைவன்  அலங்கனின் தலைமகன்  நிவங்கன் தலைமை  பெற  முனைந்தார்.  சுனதர்களின்  குடி  மரபுப்படி  பருவம்  எய்திய  உடன்பிறந்தாளை மணமுடித்து கொடுத்தபின்னே சகோதரன் தலைமை  கொள்ள  முடியும்.  குடி அவை நிவங்கனின் அரியணை  ஏற்பு  நாள்  குறித்தவன்று புன்னை  இலைகளை  அணிந்தவளாய் ஆதிரை  ஒரு  பெருங்களிற்றின்  மீதேறி  சுனத  வனத்தின்  தலைச்சபை கூடிய  இடம்  அடைந்தாள்.  அவள்  அணிந்து  சென்றிருந்த பொன்னூல் ஆடையை  அவள்  அன்னையை  நோக்கி  எறிந்தாள். அதில்  உதிரக் கோடு விழுந்திருந்தது.
குடி  மூத்தவரான  சனையர் முகம்  மலர  எழுந்து  “இரு  மங்கலங்கள் ஒருங்கே  நிகழட்டும்.  நிவங்கா உன்  தமக்கைக்கு உற்ற  துணை  தேர்ந்தெடுத்து  அவள்  திருமணத்தையும்  உன்  அரியணை ஏற்பையும் ஒருங்கே நிகழ்த்து “ என்றார்.
ஆதிரை  ஏதோ  சொல்லவந்தாள்.  அதற்குள்ளாகவே  இச்சந்தர்ப்பத்திற்கெனவே  காத்திருந்தவன் போல்  “ என்னுயிர்  தோழன் அகைதனுக்கு ஆதிரையை  கையளிக்கிறேன்” என்றான்.
ஆதிரை  சபை  முறை  அறியாதவளாய் “ நான்  என் தமையனை மறுக்கிறேன் “ என்று  அழுதுவிடுபவள்  போல்  சொன்னாள்.
அவளுக்கு  இறங்குவது  போல் பாவனை செய்த  அரிந்தர் “ சரி குழந்தை.  அவையினில் மறப்புரைத்து  விட்டாய்.  உன் தமையனையும்  அவன்  உனக்கு  தேர்ந்த  மணாளனையும் வாட்போருக்கு  அழை.  அவர்களை  நீ  வென்றுவிட்டாயெனில் நீ  அகைதனை மணக்கத் தேவையில்லை “ என்று அவள்  மோவாயை நிமிர்த்திச்  சொன்னார்.

அவை  சிரிக்கத்  தொடங்கியது. அதற்குள்  ஆதிரை “ஒருவேளை  நான் அவர்களை  கொன்றுவிட்டால்” என்றாள்.  ஒரு நிமிடம்  அமைதியில்  உறைந்த  அவை  ஒரு மெல்லிய  நகைப்பொலி  கேட்டவுடன்  வெடித்துச்  சிரித்தது. வெகு  நேரம்  சிரித்துவிட்டு  வயிற்றை  பிடித்தவாறே  சனையர்  “அப்படியெனில்  சுனத  குலத்திற்கு  நீயே  மூத்தோள்” என்றார்.
“ அகைதரே உம்  கையிலிருக்கும்  வாளால்  ஆதிரை  கையிலிருக்கும்  வாளை  தட்டிவிட  வேண்டும்.  நிவங்கரே நீர்  தமக்கையை கையளித்ததால்  உடன் நின்று  போர் புரிய  வேண்டும் “ என்று  சிரித்தவாறே  மூவர்  கையிலும்  வாள்  கொடுத்தார் அரிந்தர்.  சுனத  குலத்தின்  பெரு வீரர்களுடன்  ஆதிரையை  நிறுத்தி  தன்  மனதில்  தெய்வமென  இருந்தவளை அவமதிப்பதை அலங்கன் காண  விரும்பாமல்    வேறுபுறம் திரும்பிக்  கொண்டார்.
அதுவரை  சேர்த்துத்  தொகுத்து வைத்திருந்த அவர் மகள் அன்று உடையப்  போகிறாள்.மனிதர்களை  அறியாதவள் அவள். சிம்மமும் எருதும் துணைக்கட்டும் என் பெண்ணை. என்ன உளறுகிறேன்! நான் மூப்படைந்துவிட்டேன்.நிவங்கன் தலைமை கொள்ளவிருக்கிறான்.ஆதிரை மணம் கொள்ளவிருக்கிறாள். நான் மகிழ்வல்லவா கொள்ள வேண்டு்ம்? ஏன்  என் மனம் அரற்றுகிறது?இல்லை இரண்டும் நிகழப்போவதில்லை என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கும் போதே வாள் ஒன்று  மண்  தொடும் ஒலி கேட்டது.  அலங்கன்  சலிப்பு  கொண்டார். ஆனால்  அந்நேரம்  கூட்டம்  கொண்ட  முற்றமைதியே  அவர்  உணரவில்லை.  அடுத்த  கணம்  இன்னொரு  வாள் தரையில்  விழுந்தது. ஆழிமாநாடு  அள்ளி நிறைத்துக்  கொள்ளப் போகும்  இரு  கணங்களை அவ்வளவு  அருகில்  இருந்தும் அவர்  காணவில்லை. அவர்  கண்டபோது அதரங்களிலும்  கழுத்திலும்  குருதி வழிய  ஆதிரை  நின்றிருந்தாள்.  திறந்த  வாயுடன்  இரு உடல்கள்  அவளின்  இருபுறமும்  கிடந்தன. மோதமதி  உடல்  சிலிர்ப்பதை  அரிமாதரன்  பார்த்து  நின்றான். 

Tuesday 21 June 2016

பெருஞ்சுழி 4

4
ஆதிரை  மாரதிரன்  தலை வீழ்த்தியவன்று  சவில்ய கோட்டம்  உறைந்திருந்தது. எந்த வித ஒற்றுச் செய்தியோ வதந்தியோ நகரில்  பரவவில்லை.  ஆதிரையின்  படைவீரர்கள்  அன்று  முழுவதும்  நகர்  நுழைந்தவண்ணம்  இருந்தனர்.  நாற்பதாயிரம்  வீரர்கள்  கொண்ட  மாரதிரன்  காலாட்படை  தளபதிகளின்  ஆணை  பெற முடியாமல்  செயலற்று  நின்றது. நள்ளிரவு  நகர்  புகுந்த  கணபாரனின்  குறும்படை ஆதிரையின்  வீரர்களில் திறன் வலுத்தவர்களையே கொண்டிருந்தது. உச்சி   எட்டும் வேளையில்  கோட்டையின் அனைத்து  புறங்களில்  இருந்தும்  உள் நுழைந்தனர்  நானூறு  வீரர்கள்.  வெகு  நாட்கள்  போர் அறிகுறிகள்  தென்படாமல் வாழ்ந்திருந்த கோட்டைக் காவலை  ஏமாற்றுவதும் சில இடங்களில்  வீழ்த்துவதும்  கணபாரனின்  நேரடி  கட்டுப்பாட்டிலிருந்த  வீரர்களுக்கு  சிரமம்  தருவதாக  இருக்கவில்லை.

 நான்கு  பெருந்தொகுதிகளாக தொகுதிக்கு பத்தாயிரம்  வீரர்களை தலைமை  தாங்கிய  மாரதிரனின் பெருந்தளபதிகள் நால்வர் முதலில்  கொல்லப்பட்டனர். அடுத்தபடி ஆயிரவர் தலைவர்களாய் இருந்த  நாற்பது பேரும்  அவர்களின்  வீரர்  நோக்கவே கிழித்தெறியப்பட்டனர். கணபாரனின்  நிலைப்பாடு  அது. வீரர்களின்  உறுதியையும்  நம்பிக்கையையும்  தகர்ப்பது. ஆணையிட்ட நகை பேசிய கண்டித்த  தண்டித்த தளபதிகள் கண் முன்னே தசைக்கூறுகளாய் கிழித்தெறியப்படுவதைக் கண்ட ஒவ்வொரு வீரனும் உளம் சோர்ந்தான்.பெரு மழைக்குப் பின் எழும் கடுங்குளிர் காற்றென அச்சோர்வு சவில்ய கோட்டத்தின் ஒவ்வொரு வீரனின் மீதும் தொற்றி ஏறியது. முதல் நிலை  வீரர்கள்  அதிர்ச்சியிலிருந்து  மீண்டு தங்களை தொகுத்துக்  கொண்ட போது  மாரதிரனின்  சினம் அரண்மனை  முகப்பில்  கொழு கொம்பொன்றில் குத்தப்பட்டு கொடியென ஏற்றப்பட்டது.  நிருவரனும்  இறந்துவிட  ஆதிரையின் பெரும்படை நகர்  நுழையத்  தொடங்கியது.

ஒருவனிடம்  கூட  வெறியோ விழைவோ தென்படவில்லை.  இக்கணம்  காணவே  மண் நுழைந்தவர்கள் என கொலை மட்டுமே  பணியென நிகழ்த்தினர். அவர்களில்  வெட்டுண்டு வீழ்ந்தவர்கள்  அரற்றவில்லை. வெட்டி வீழ்த்தியவர்கள்  தருக்கி நிமிரவில்லை. அவர்களின் ஓரிரு  வாள்  வீச்சே எதிர்  நிற்பவனை வீழ்த்த  போதுமானதாக  இருந்தது.  நகரின்  அதிர்ச்சி  மீள்வதற்கு  முன்னே களியாட்டுக்கும்  விழவுகளுக்கும்  எனச் சொல்லி நிறுத்தப்பட்டிருந்த  ஆதிரையின்  களிற்று நிறை ஆயிரம்  துதிக்கைகளுடன்  கோட்டை அடைந்தது.  மதியவேளைக்கு  முன்பே  போர்  முடிந்தது.  சவில்ய கோட்டத்தின் கிழக்கெல்லையில்  விரிந்து கிடந்தது  ஆழி.  பெரு நாவாய்கள் கட்டப்படாத காலம்  என்பதால்  ஒரு  மீன் பிடித்  துறைமுகம்  மட்டுமே  அங்கிருந்தது. வடக்கில்  ஆநிலவாயிலும்  மேற்கில்  சுனதபாங்கமும் சவில்ய கோட்டத்தின் அண்டை தேசங்களாக இருந்தன. சவில்ய கோட்டத்தின்  மேல்  பகை கொண்டிருந்த  அவ்விரு தேசங்களும் நிலைமை  சீரடையும்  வரை  ஆதிரையின்  முழு பலம்
அறியும்  வரை  அமைதி  காக்க  முடிவு  செய்தன. தெற்கில்  புதிதாக  உருவான  சிற்றரசாகிய திருமீடத்தின் மன்னன் தரிந்திரன்  ஆதிரையை  வீழ்த்தும்  பேராவலுடன் தன் படையை  சவில்ய கோட்டம்  நோக்கி  அனுப்பினான்.  கோட்டையை நெருங்குவதற்கு  முன்பே  அப்படையில் ஒருவரும்  மிச்சமின்றி கொல்லப்பட்டனர்.  விவசாயம்  செழிக்காத கடற்கரை  நகர்  சவில்ய  கோட்டம்.  உப்பும்  உவர்மீனுமே  சவில்யதின் உற்பத்தி  பொருட்கள். ஆதிரை  அரியணை  அமர்ந்த பின்  நிலை  மாறியது.  கோட்டையை  விரிவுபடுத்த  நினைத்தாள்.

சவில்யத்தின் மக்கள்  ஆதிரையை முழுதும்  ஏற்கவில்லை.  அவள் யார் ? எங்கிருந்து  வந்தவள்?  என்ற  கேள்விகள்  எஞ்சி  நின்றன.  ஆழி  வடிந்து  ஆழிமேடு  உருவானபோது  எவர்தொடாமேடு என்ற பெரு மலையின்  உச்சியில்  துயரவர்  தலைவனாகிய சுனதன்  வாழ்ந்தான்  என்றும்  அவன்  வழி வந்தவளே ஆதிரை  என்றும்  பாணர்கள் நகர்  முழுக்கப்  பாடினர்.  கருணையே  வடிவென  மக்கள்  முன்  தன்னை  அள்ளி வைத்தாள்  ஆதிரை.  மோதமதியின்  கரம் பற்றியே  அவள்  உலவியதால் மக்கள்  மனதிலிருந்த நெருடல்  பெரிதும்  விலகியது.  பாணர்களின் தொடர்ச்சியான புகழுரைகள் ஆதிரையை  அறத் தெய்வமெனவே காட்சி  கொள்ள  வைத்தன. நகர்  குழப்பங்களை  கணபாரனிடம் விட்டு  அவள் கோட்டையை விரித்துச் செல்வதை  சிந்திக்கத்  தொடங்கினாள். அரிமாதரன்  மோதமதியின்  கையில்  வளர்வதை  நகர்  மக்கள்  கண்ணீருடன்  பார்த்திருந்தனர். கணவனை  கொன்றவளின் குழந்தையை கருணையோடு வளர்க்கும்  அன்னையென மோதமதி  அவர்கள்  மனதில்  ஆதிரைக்கடுத்த உப தெய்வமானாள். கணிக்க  முடியாதவற்றை  செய்து  குழப்பமும்  ஆவலும்  மக்கள்  மனதை  கவ்வி  இருக்குமாறு  செய்வது  ஆட்சியாளரின்  உண்மையான  இலக்குகளை மக்கள் உணரக்  கூடாது  என்பதெற்கென மோதமதி  அறிந்திருக்கவில்லை.  ஆதிரை  உருவாக்கி  அளித்த  சித்தரத்தில் சவில்யம் நிம்மதி  பெரு மூச்சு  விட்டது.  ஆதிரை  தன்  அடுத்த  இலக்கில்  கண் நாட்டினாள். மோதமதி  சுனதனின்  கதையை  அரிமாதரனுக்கு சொல்லத் தொடங்கினாள்  ஆதிரையின்  அடுத்த இலக்குகள்  பற்றி சொல்லத்  தொடங்கினாள். அரிமாதரன் தன் அன்னையின்  இலக்குகள் அறியாதவனாய்  கதையில்  கண் ஊன்றினான. இலக்குகள் மட்டுமல்ல அவன் அன்னையையும் அறிந்திருக்கவில்லை.

Monday 20 June 2016

பெருஞ்சுழி 3

3

"தொடங்கியது  பெரும்  யுத்தம். மண்ணில்  நிகழ்ந்தவை  அனைத்தும்  இறைவனை கோபமுறச்  செய்தன.  மனிதன் வஞ்சம்  நிறைந்தவன். ஆணை  பெற்று  ஆள வேண்டியவன் ஆணை பிறப்பித்தவனை வீழ்த்த  நினைத்தான். மனித  பலம்  கூடிக்  கொண்டே  வந்தது.  பலம்  கூடுகையில் கடவுளின்  கருணை  சுரப்பான நீரின்  பரப்பு  குறையத்  தொடங்கியது.  இறைவனை  எதிர்க்கும்   மனிதனின்  யுக்தி  இறைவனைக்  குழப்பியது" மோதமதியின்  கதையை  புரிந்தும்  புரியாமலும்  கேட்டுக்  கொண்டிருந்தான் ஆதிரை மைந்தன்  அரிமாதரன். அவள்  தொடர்ந்தாள்.

 “மனித  இனத்திற்குள்ளாகவே இறைவனை  கசிந்துருகித்  தொழும் ஒரு  கூட்டம் உருவானது.மனிதனின்  செயல்கள்  ஒவ்வொரு  முறையும்  இறைவனின்  கோபத்தை தூண்டும்  போதும் அவர்களுக்குள்ளேயே  பக்தியும்  நம்பிக்கையும்  முதிர்ந்தவர்களால்  ஒவ்வொரு  முறையும்  காக்கப்பட்டது. அவர்கள்  இறையையும்  மறுக்கவில்லை  மனிதனையும்  வெறுக்கவில்லை. மனிதன்  உய்ய துயர் சூடி அலைந்தனர்.துயரவர்கள் என்றழைக்கப்பட்ட  அவ்வினத்தின் மூத்தோனாய் இருந்த சுனதன் ஒருமுறை  பெரு  வேதனை  கொண்டிருந்தான். தர்மம்  முழுதாக  அழிந்திருந்த  அக்காலத்தில்  இறை  நோக்கிய  அவன்  பக்தி  வலுத்திருந்தது.  அழிவுச் சாட்டையை  கை சுழற்றி  காத்திருந்த  இறைவனை  அவன்  அன்பே  கட்டியிருந்தது. ஆனால்  சுனதன்  அதை  அறிந்திருக்கவில்லை.  இனியும்  இவர்கள்  இருக்கக்  கூடாது  என நினைத்தான்.  உணவுக்கும்  உடல்  சுகத்திற்கும்  எதையும்  செய்யும்  கூட்டமாய்  வாழ்வு  தாண்டிய  மகத்துவங்களை  எண்ணத்  தெரியாத  மந்தையாய்  மாறியிருந்தது  மனித  இனம்.  “இறையே! எதற்கிருக்கிறேன்  நான்?" காற்றெனவும் வெளியெனவும் அவை  கடந்த  ஒன்றெனவும் நின்றிருந்த  இறைவனிடம்  பேசினான்  சுனதன். “ ஒன்றிலும்  நான்  பொருத்திப்  போக முடிவதில்லை. எனக்கு  தர்மமென தோன்றுவதை எண்ணி  நகைக்கின்றனர்  இவர்கள். இச்சைக்குள்  மூழ்கியே என்  இருப்பினை  உணர்த்த  வேண்டுமா?  என்னை  நிறைக்கும்  என் இறையே! இனியும்  மண் வாழ  வேண்டுமா  சுனதன்.  எழுவது அனைத்தும் வீழ்வதற்கே என்றறிருந்தும் எதைக் கட்டிக் கொண்டிருக்கிறேன் இங்கே நான்? உன்னிடமே  வருகிறேன். நீயே  தீர்ப்புரை.” என்று  சுனதன்  கடல்  புகுந்தான்.  அழிவாயுதம் சுழற்றி  எழுந்த  இறையை அன்னை மனம்  தடுத்தது.  அறிக மைந்தா! அறம் பிழைக்காதவனிடம்  அவ்வறத்தினால் இம்மியும் பயன் கொள்ளாதவனிடத்தில்  தெய்வமும்  எதிர்  நிற்க முடியாது.  சுனதனின் இச்சை  நிறைவேறும்  வரை அறத்துடன்  விளையாடட்டும்  மனிதன்  என நினைத்தான்  இறைவன்.

துயரவர் கூட்டம்  மட்டும்  தப்பி பிழைக்குமாறு  கடல்மட்டம்  உயர்ந்தது.  மலையுச்சிக்  குடில்களில்  வாழ்ந்த  துயரவர் இனம்  தனித்து  நின்றது.  மொத்த மனிதமும் கண்  முன்  அழிவதை  கண்டனர்  துயரவர். ஒரு அலை  மின்னலென  அம்மலையுச்சியில் விழுந்தது.  அதன் வழியே  தன் மக்கள்  நோக்கி  வந்தான்  சுனதன். சுனத மகானின் கருணையால் உலகே  நீரில்  மூழ்கி  இருக்க  இன்று  நிலமாய் விரிந்திருக்கும் ஆழிமேடு மட்டும்  எஞ்சியது.  பல்லாயிரம்  வருடங்கள்  கடந்தபின் துயரவர்களில் பல கிளைகள்  பிரிந்தன. நூற்றியிருபது  சிற்றரசுகளாய்  இன்றைய  நிலையை ஆழிமேடு அடைந்த  பின்  ஆழிமாநாடு என்றானது.  சுனதனின் கருணையால்  விரிந்து  பரந்த ஆழிமாநாடு  பெரும்  ஆறுகளால் சூழப்பட்டு  பசி என்பதே  இன்றி  வாழ்கிறது.  நூற்றியிருபது  சிற்றரசுகளும்  இருநூறு  ஆண்டுகளுக்கு  முன்பு  வரை சுனதனின் சொல்  மறவாமல்  ஆண்டனர்.  எல்லை  மீறல்  தொடங்கிய  அன்றே  ஆழிமாநாடு  அழியத் தொடங்கியது.  சுனதனைப் போல்  இன்னொருவன் இங்கு  எழுந்தால்  மட்டுமே  இறைக் கோபம்  தப்ப முடியும் . அறச் செல்வனாய் வளர்வாயடா என் செல்லமே" என்று  அரிமாதரனை  மடியில்  இருத்திக்  கொண்டாள் மோதமதி.ஆதிரையின் பாதக்குரடொலி கேட்டதும்  அரிமாதரனின் மீதான  பிடியை  லேசாகத்  தளர்த்தினாள்.

“ அன்னை” என  இரு கையும்  நீட்டியபடியே அவளிடம்  கால்  பின்ன  ஓடினான்.  அவள்  அவனை  அள்ளிக்  கொள்ளவில்லை.
“ பேரன்னை  சுனதனின்  கதை  சொன்னார்களா?” என்றாள்.
“ கடல்கோள் கடந்த  பின்  சுனதன்  நிகழ்த்தியவை சொன்னார்களா? “ என்று   மோதமதியை  பார்த்தாள்.
 அரிமாதரன்  உதட்டை  பிதுக்கினான்.
“ இவன்  அறிய  வேண்டியது  அதுவே  “ என்றுவிட்டு  அரசவை  நோக்கிச் சென்றாள்  ஆதிரை.  பெருமூச்சுடன் அரிமாதரனை  பார்த்தாள்  மோதமதி.  அவனைவிட  உயரமான  வாளொன்றை தூக்கிச்  சுழற்றிக்  கொண்டிருந்தான். 

Sunday 19 June 2016

பெருஞ்சுழி 2


  2
 அவ்விடியலை மோதமதி  அவ்வாறு  கற்பனை  செய்திருக்கவில்லை. இறந்த  போன  ஆதிரையின்  உடலை  தான்  ஏக்கத்தோடு பார்த்திருப்போம் என்றோ அல்லது கசக்கி எறியப்பட்டவளாக ஆதிரை  விடியலில் அரண்மனையின்  குறுவாயில் விட்டு  பித்துப்  பிடித்தவளென வெளியேறுவாள் என்றோ  தான்  நினைத்தாள்.  அக்கணம் தன்னை  ஒன்றும்  செய்ய இயலாத  கருணையின் வடிவென நினைத்துக்  கொண்டிருந்தாள். ஆனால்  இன்று  ஆதிரையின்  மஞ்சமாக்கப்பட்ட  தன் நிலவறையில் உடல் சுருக்கி  தலை  கவிந்து அமர்ந்திருந்தாள்.  கொலைத் தெய்வமென வெறி நடனமாடிய  ஆதிரை  சீர்மூச்சு வெளிவர  துயின்று கொண்டிருந்தாள்.  முதல்நாள்  பின் மதியத்தில்  தான் மோதமதி  ஆதிரையை  முதன் முறைக்  கண்டாள்.  நிறைவயிற்று நாடோடியென தெருவில்  பாடிக்  கொண்டிருந்தவளின் மயக்கும் குரல்  அரசவைச் சென்று  கொண்டிருந்த  பாடல்  குழுவுடன்  அவளை இணைய  வைத்திருந்தது.  அரண்மனை  நுழைந்தது  முதல்  வெருண்ட விழிகளுடன்  குழந்தையென  ஒவ்வொன்றையும்  பயமும்  ஆர்வமும்  கலந்து  பார்த்து  நின்றாள். பாடும்போது அவளுள்  இருந்து  இன்னொருத்தி வெளிவந்தாள்.  மாரதிரன்  அவள்  அழகில்  தூண்டப்பட்டான் என்பது  எவ்வளவு  மடமை  நிறைந்த  எண்ணம்   என நினைத்து  போது  மோதமதியின்  உடல்  சிறுத்தது. அவனை  அவள்  தூண்டினாள் என்பதே  உண்மை.  ஒரு  வார்த்தை  அவள்  யாருடனும்  பேசவில்லை. நகரில்  விடியலில்  நடந்த  தீ வைப்பிற்கு பின் எந்த  குழப்பமும்  இல்லை. மாரதிரனின்  வாரிசுகள் அனைவரும்  மிகுந்த  மரியாதையுடன்  அவரவர்  அறைகளிலேயே சிறை  வைக்கப்பட்டனர்.நிருவரனின்  இழப்பு  அத்தேசத்தை  செயலற்றதாக்கி  இருந்தது.  நிருவரனின்  ஒற்றர்  திறன்  நன்கறிந்ததால்  வாளெடுக்காத அமைச்சனாயினும்  அவன் முதல்  சிந்தனை  சித்தம்  அடைவதற்கு  முன்னே அவனைக்  கொன்றாள். மோதமதி  தன்  இருப்பினை  இல்லாததாக்கிக் கொண்டிருநதாள்.  கணபாரனின்  தலைமையில்  பிரிந்த  படைகள் நகர்  முழுதும்  பரவினர். அரண்மனை நிகழ்வுகள்  ஏற்படுத்தியிருந்த அச்சம்  துடைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு படைவீரன் கூட  யாரையும் துன்புறுத்தவோ இழிந்துரைக்கவோ  இல்லை.

சவில்ய கோட்டம்  என்றழைக்கப்பட்ட  மாரதிரனால் ஆளப்பட்ட  அப்பகுதி நாற்பது  நாழிகைகளில்  ஆதிரையின்  வசம்  வந்தது.  மகன்  பிறந்து  முதல்  நீராட்டு  முடிந்தவுடன்  தூய  வெள்ளுடை அணிந்து  ஆதிரை துயில் புகுந்தாள்.  நம்பிக்கை  குன்றி  பயமும்  துயரும் கொண்டிருப்பவர்கள் ஓரிடத்தில்  இருந்தாலும்  மறக்கப்பட்டு  விடுவர்.  மோதமதி  ஆதிரையின்  அறையில்  இருந்ததை ஆதிரையின்  சேடிகளோ கணபாரனின்  படை வீரர்களோ நினைவில்  கொண்டிருக்கவில்லை. ஆதிரை மேலும்  ஆழ்ந்த துயிலில் இருப்பதை  கனவில்  சிரிக்கும்  லேசாக  விரிந்த  அவள் மென் குமிழ்  உதடுகள்  காட்டின.  தன்னை  ஒரு பொருட்டெனவே ஆதிரை  கொள்ளவில்லை என மோதமதி  நினைத்தபோது அவள் கையில் ஒரு  குறுவாள் இருந்தது.  ஆதிரையின் பெயரிடப்படாத மைந்தன்  இன்னொரு  அறையில்  செவிலியரிடம் இருந்தான். ஆதிரையை நெருங்க  நெருங்க  அவள் சித்தம்  குழம்பியது.  ஒரே நாளில் சவில்ய  கோட்டத்தை கைப்பற்றிவிட்டனர். யார்  இவர்கள்?  சூரையாடும் முரட்டுக்  கூட்டமாகவும் இவர்கள்  தெரியவில்லை.  அனைத்திற்கும்  மேல் இவள்  யார்?    மாந்தளிர் நிறம் வில்லென உடல்  மயக்கும்  விழிகள் குழந்தையின்  இதழ்கள் . அருளும்  வெறியும்  ஒருங்கே  கொண்டிருக்கிறாள். ஒரு தேசத்தை  மகனைச் சுமந்து கொண்டே  கைப்பற்றிவிட்டாள். அடுத்த நொடி  ஆழ்துயிலில். எப்படி? அனைத்தும்  வெறும் கனவா?  என்ற எண்ணம்  எழுந்த போது  ஆதிரையின்  அருகில் வாளுடன்  நெருங்கியிருந்தாள்.

 ஓங்கி மார்பில் வாளினை பாய்ச்சப் போகும்  அங்குல  இடைவெளியில்  ஆதிரை விழித்தாள். இடக்கழுத்தினை பிடித்து  மோதமதியை கீழே தள்ளினாள்.
சிவந்த  விழிகளுடன்  எழுந்து  அவிழ்ந்த  கூந்தலை  முடிபோட்டுக் கொண்டாள்.
 நிதானமாக  மோதமதியை தூக்கி  தன்னருகே அமரச்  செய்தாள்.
“இது பிழை  அரசியாரே. என் உயிர்  பறிக்க  நினைத்து  அனைவர்  சித்தத்திலும் ஒளிந்தது வரை  சரிதான்.  ஆனால்  வாள்  எடுத்து  எழுந்து நடக்கையில்  சரசரக்கும்  உங்கள்  மேலங்கியை அவிழ்த்திருக்க  வேண்டும. நீண்ட  வாளால்  என் பக்கவாட்டில்  நின்று  கொண்டு  கழுத்து  வழியே  தொண்டைக் குழியில்  வாளினைப்  பாய்ச்சி  இருந்தால்  வலி  குறைவுடன் இறந்திருப்பேன். என்  முகத்துக்கு  நேரே  நீங்கள்  வந்த  போதே என்  நீள்  மூச்சுக்  காற்று  தங்களை உணர்ந்திருக்கும்.” என்று  நிறுத்தினாள். அவள் குரல்  மோதமதிக்கு பயத்தையே வரவழைத்தது.  ஆதிரையின்  குரல்  மாறியது.
“ ஒரு  கணம்  இறந்த கணவனுக்கென இருக்கும் மைந்தர்களை  மறந்தாய். கீழ்மகளே உன்னை ஒரு கணம் அரசியென நீ உணர்ந்திருந்தாலும இச்செயல்  புரிந்து  உன் உயிர் விட எண்ணம்  கொண்டிருக்கமாட்டாய. உன் நலன் காத்துக்கொள்வதற்காக ஒரு பெண்ணின்  உயிருக்கெனவும மாரதிரனுக்கு எதிராக உன் குரல் எழவில்லை. அவன் சங்குடைத்து குருதி குடித்திருந்திருக்க வேண்டும் நீ. உன்னை அறத்தாள் என கற்பனித்துக் கொண்டு வாளாவிருந்தாய்.இன்றும் மனையாள் என்றும் என்னினும் தாழ்ந்தவள் என்ற இழிவினாலும் என் உயிர் பறிக்க நினைத்தாய்.ஒரு நொடி அரசியாய் உன்னை உணர்ந்திருந்தால் உன் மைந்தர்களை என் தாழ் பணிந்து இறைஞ்சி மீட்டு எனக்கெதிராய் வஞ்சம் வளர்த்திருப்பாய். இழிவு பொறுக்க முடியவில்லை அல்லவா  உன்னால். இன்று சொல்கிறேன் என் மகனுக்கு நீதான் செவிலி.  ஒவ்வொரு  நொடியும்  நீ யாரென  அவன்  அறிய  வேண்டும்.  என்னால்  அவனுக்கு  வென்றளிக்கப்பட்ட  பொருள்  நீ.  செல்.  அரிமாதரனை இங்கு தூக்கி வா" என  மோதமதியின்  விழி  நோக்கி  கட்டளையிட்டாள்.
அவள்  வெளியேறியதும்  கணபாரன்  உள் நுழைந்தான். “இதற்கு  அவளை  கொன்றிருக்கலாமே.” என்றான்.
“கணரே அவள்  இறப்பினை விழைந்து விட்டாள்.  விழைந்ததை கொடுப்பது  தண்டனை  அல்ல. அவள்  வாழ்வை  விரும்பும்  போது  அவள்  இறப்பு  நிகழும்” என்றாள்  வழக்கமான  உணர்ச்சியற்ற  குரலுடன்.

Saturday 18 June 2016

பெருஞ்சுழி 1

பெருஞ்சுழி 1


“வெற்றி  முழங்கட்டும்
எண்குடி வென்று மண்பகை கொன்று
விண் புகழ் நோக்கும் கோவே
வெற்றி  முழங்கட்டும் உன் வெற்றி முழங்கட்டும்
விண் அதிரட்டும் முழக்கம்  விண்ணை வெல்லட்டும்”

மாரதிரன் சபையில்  எட்டு  நாழிகை  நேரம் இடைவிடாமல் பாடிய ஆதிரை இவ்வரிகளுடன்  தன் கிணையை தாழ்த்தியபோது எழுந்தமைந்தது நிறைமாதத்தில் மேடிட்டிருந்த  அவள் வயிறு. கூர்ந்த விழிகளுடன்  உதட்டில்  இடக்கை  விரல்கள்  பதித்து  அவளை  நோக்கிய மாரதிரன் தன் நரைவிழுந்த மீசையை நீவிக் கொள்வதை கவலையும் பதட்டமும்  நிறைந்த விழிகளுடன் பார்த்திருந்தாள் அவன் அரசி மோதமதி. ஆதிரையை பார்த்தபோது அவளுக்கு  ஆத்திரம்  பொங்கியது. முதல்முறை கருத்தரித்திருக்கும் இளஞை. அவள் குரலுக்கும் பாடலின் உணர்வுக்கேற்ப  முகம் கொள்ளும் பாவனைகளுக்கும் அவை கொண்ட முற்றமைதியே பிண்ணனி என்றானது. அவள் தன் இறுதி வரியை பாடி முடித்ததும் அன்னை மடியில்  அனைத்தும்  மறந்து குறுஞ்சிரிப்புடன் உறங்கும் குழந்தையென கிடந்த அவை தன்னை தன் பொறுப்புகளுக்குள் இழுத்துக் கொண்டு மீண்டும் அமையுமா இப்படியொரு கணமென ஏக்கத்துடன்  எண்ணிக் கொண்டது. ஆனால் மாரதிரன்  மிருகத்தை  உணவென்று மட்டுமே  பார்க்கத்  தெரிந்தவன். சிம்ம  வேட்டையெனில் அதனை உண்டு பார்த்தபின்னே கிளம்புவான். மிருகத்தின் சுவை மட்டுமே  அவன் வேட்டை விசையைக் கூட்டும். மன்னனின்  விழைவு  மோதமதிக்கு சோர்வைக் கொடுத்தது. முதலமைச்சர்  நிருவரனின் விழிகளை மாரதிரன்  சந்தித்துவிட்டு எழுந்து உள்கூடம் அடைந்தான்.  அச்செய்தி  ஆதிரையை வந்தடைந்தபோது மோதமதி  அவள் முகத்தை  சந்திக்கும்  துணிவற்று அரியணையில் துவண்டு அமர்ந்திருந்தாள். நொடிக்கும்  குறைவான கணம்  அவளை நோக்கிய போது நேரே விழிகள்  முட்டின. என்ன  தெரிந்தது அவ்விழிகளில்? கோபமோ பயமோ தெரிந்திருந்தால்  மோதமதி  அவளை வெறுத்திருக்கலாம். ஆனால்  ஆதிரையின் விழிகளில் இன்னும் சில நாழிகைகளில் நடைபெறப் போகும் கேவலத்தின் வலி தெரிந்தது. மோதமதி  அவளை அப்படியே  அள்ளிச் சேர்த்து கழுத்தறுத்து  தானும் அப்படியே கழுத்தறுத்துக் கொண்டு இறக்க நினைத்தாள்.நடக்காது. அவள் ஆதிரையை  நெருங்கியபோது ஒரு வார்த்தையை  மட்டுமே கேட்டாள். “இன்றோ நாளையோ என் மகன் மண் அடைவான்” என்ற உறுதியான ஆதிரையின் குரல். மாரதிரன்  மஞ்சத்தில் காத்திருந்தான்.


     ஆதிரை  அக்கணத்தை நினைவிலிருந்து துரத்த  நினைப்பது போல் இருந்தது. பித்தழெச் செய்யும் பேரழகிதான். எனினும்  அவள் பிறப்பிக்கப் போகும் மகவிற்கென்றேனும் மாரதிரன் கருணை காட்டியிருக்கலாம் என்றென்னியபடியே சோர்வளிக்கும் அலுவல்களில் மூழ்கினார் முதலமைச்சர்  நிருவரன். மஞ்சள்  நீரில் முழுவுடலும் ஒற்றி எடுக்கப்பட்டது. மென்சிவப்பு ஆடை மட்டும் அணிவிக்கப்பட்டிருக்க மாரதிரன் மஞ்சத்தில் ஆதிரை நுழையும் முன்னே அவ்வாடையை கிழித்தெறிந்து  பின்னந்தலை பிடித்து மஞ்சத்தில் அவளை தள்ளினான். அவளுள் விசும்பலோ அழுகையோ எழாதது இன்னும்  கோபம்  கொடுக்கவே அவள் குழல் பிடித்திழுத்து முகத்தில்  உமிழ்ந்தான். அவளிடம் மாறுபாடில்லை. நிலைகுலைய வைக்காமல் எப்பெண்ணையும் அவன் புணர்ந்ததில்லை. ஆதிரையின்  அழுத்தம் குறையவில்லை. முகத்திலிருந்து முலை நோக்கி வழிந்த எச்சிலையும் துடைக்காமல் குனிந்து  நின்றிருந்தாள்.  மாரதிரன் தன்னிலையழிந்து அவள் தலையை வெட்ட வாள் ஓங்குவதற்கும் நள்ளிரவு அறிவிக்கும்  பறை முழங்கவும் சரியாய் இருந்தது. ஆனால் அவ்வொலி வழக்கமான ஒலியிலிருந்து மாறுபட்டிருக்கவே மன்னனை எச்சரிக்க மோதமதியும் நிருவரனும் ஓடிவர மாரதிரன் தலை முற்றத்தில் வந்து விழுந்தது. பொருளற்று மாரதிரன்  உடல் துடிக்க ஆடை திருத்தி சீர்நடை வைத்து வெளிவந்தாள் ஆதிரை. நடையும் முகமும் மாறியிருக்க அவள் வருவதையும் மாரதிரன்  தலை தனியே உருளும்  நிலையையும் நிருவரன் பொருத்திப் பார்க்க  எடுத்துக் கொண்ட கணம் ஆதிரைக்கு போதுமானதாக இருந்தது. மோதமதி பார்த்திருக்க நடனத்தின் லாவக அசைவென எழுந்த ஆதிரையின்  கைவாள் நிருவரனின்  தலையை  உடல் அகற்றியது.

“என்னை அரசவைக்குத் தூக்கிச் செல்” என மோதமதியின் கழுத்தில் கைவாள் பதித்தாள்.கணவனோ அமைச்சனோ மோதமதியின் சித்தத்தில் எழவில்லை. தன் உயிர் காத்துக் கொள்ள ஆதிரையை தூக்கிக் கொண்டாள். அரண்மனையை சூழ்ந்திருந்த அரசப்பெருவீதி உருக்குலைந்தது. மக்களின்  ஓலம்  அரண்மனை  நுழையவில்லை. ஆனால் திரைச்சீலைகளும் மரச்சட்டகங்களும் எரிவதால் எழுந்த கடுமணம் மோதமதியின் நாசி நுழைகையில் அவள் ஆதிரையை தூக்கியவண்ணம் மைய மண்டபம்  நுழைந்தாள்.  அரண்மனைக் காவலர்களை  வீழ்த்தியபடியே கணபாரன் தன் படையுடன்  உள் நுழைந்தான். பிறப்பு  வாயிலில்  ஆதிரைக்கு குருதி  வழியத் தொடங்கியது. “என்னை  அரியணையில்  அமரச் செய்” என்று மோதமதியைப் பணித்தாள். முழு  உடலும் வியர்வை  வழிய நீண்டு இருந்த அந்த  அரியணையின் உச்சியில்  அமர்ந்து  கால் விரித்தாள். ஆதிரையின்  அலறல்  கேட்டு அங்கு வந்த  சேடிப் பெண்கள் அவள் கரங்களைப்  பற்றிக்  கொண்டனர். அரண்மனைக் காவலர்கள்  முழுதும் ஒன்று திரண்டு  கணபாரனின் படையை  எதிர்த்தனர்.  அவர்களின்  ஒரே நோக்கமானாள் ஆதிரை.  தேர்ந்த  வீரர்களுக்கிடையே நடந்த போராகையால் ஒவ்வொருவனும் தன் ஒவ்வொரு  அசைவையும்  உயிர் பறிக்கும் ஆயுதமாக்கினான். வெண்பளிங்கில் ஒளிர்ந்த  அரசவை கொழுத்து வழியும் குருதியில் வழுக்கிச்  சிவந்தது. மாரதிரனின் வீரன் ஒருவன் எறிந்த  ஈட்டி  ஆதிரையின்  தொடையில் பதிந்தது. வலியில் முணகித் துவண்டிருந்தவள் தொடை வழியும்  குருதியினால் கோபமுற்று அவ்வீட்டியை பிடுங்கி  எறிந்தவனின் தலை  பிளந்தாள். போர் உக்கிரம் குறைந்து  வலி மிகுந்ததானது. சேற்றில்  புரளும்  மீன்களென ஒவ்வொருவரும் குருதியில்  புரண்டு உயிர்விட்டனர்.  வெறி கூடிய ஆதிரை விழி  சிவந்து  சிரிக்க  வீழ்ந்தவர்கள் ஓலம் உச்சம்  தொட அரியணையில் அழுதபடி  விழுந்தான்  ஆதிரையின்  மைந்தன்.

பெருஞ்சுழி அறிமுகம்

நண்பர்களுக்கு  அன்பு வணக்கங்கள்

                                                  பெருஞ்சுழி என்ற தலைப்பிட்ட இக்கதை  தொகுதியின் வடிவம்  நாவலாக  இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு பெரு  நிலத்தில் நிகழும் வாழ்க்கையென  இத்தொடரை வகுத்துக் கொள்கிறேன். என்றென்றும் இருந்து வரும் "ஏன் இதெல்லாம் " என்ற வினாவின்  விடையைத்  தேடியே இப்படைப்பும் பயணிக்க இருக்கிறது. இணைந்து பயணிக்க என்னை வழிநடத்த என்னுடன் சண்டையிட கூர்தீட்ட உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். தினம்  இத்தொடர் sureshezhuthu.blogspot.in , perunchuzhi.blogspot.in ஆகிய இரு தளங்களில்  வெளிவரும் .

அன்புடன் 

சுரேஷ் 

Friday 17 June 2016

உள்ளெழுதல் - சிறுகதை

உயர எறியப்பட்டவளாக  உணர்ந்த மறுகணம் மண்ணில்   இருந்தேன். என்னுடன்  நான் மட்டும். எங்கே  நின்று கொண்டிருக்கிறேன். எதிரே ஏதேதோ  தெரிகிறது. ஏதேதோ  என்றா சொன்னேன். இல்லை  யாவும்  நான்  அறிந்தது தான். யாவும்  என எப்படி  சொல்ல முடியும். எல்லாவற்றின்  வழியாகவும்  என்னையே அறிந்த கொண்டிருந்த  நான் பார்த்தது  எல்லாம் நானே. நாணற்புதரில் நெளிந்த  ஒற்றை நாகத்தை   ஓராயிரம்  எனப்  பெருக்கி  என்னுள் நெளிய  வைத்தது   எது? நான்  அன்றுணர்ந்தது நாகத்தையா? நெளிவென என்னை முறுக்கிப் பிசையும் விசையையா? விழைவையா? இன்று எதிரே  தெரிகிறது  அன்னம். மண்ணில் விழைவது  விடுத்து  மண்ணையே உண்ண வைத்த அப்பருவத்தை அறியாப் பருவமென உதற  முடியுமா? காற்றில்  நீந்தி  நீரில் பிணைந்து  நெருப்பைத்  தீண்டி  வெளியில் விரிந்தெழ நினைத்தது  அறியாமையா?

அன்னம்  ஊட்டி அழ வைத்தனர்  என்னை. என் நீர் வழிந்தது  விழியில்  அனல் கொதித்தது குருதியில்  அலை எழுந்தது மூச்சினில் நின்
அத்தனையும் பார்த்து நின்றதொன்று வெளியில். “ஆம் நீ இன்னொருத்தி  தான்” எனச்  சொல்லி  அங்கமர்த்தினர்  என்னை. உள்ளிருப்பது விரும்பாதவற்றை ஒவ்வொரு நொடியும்  விழைந்தும் விரைந்தும் முடித்தது ஒன்று. ஒன்றை முடிக்கும்  போது  மற்றதில் பற்றி ஏறியது  ஒன்று. விரைவினால் விழைவேறுகிறதா விழைவினால் விரைவேறுகிறதா என்றறியுமுன்னே எல்லாம் கடந்து நகர்ந்து  கொண்டிருந்தது. “அய்யோ  இதுவல்லவேயடி அது இவளல்லவேயடி நீ” என்றென  கூவிக்  கொண்டிருக்கும்  ஒன்றை எங்கோ ஒரு ஆழத்தில்  என கண்டு கொண்டேன். பதறித் துடித்தெழுந்து  பழகிப் போனவற்றில் தொற்றிக்  கொண்டேன். தொற்றத் தொற்றவே உணர்ந்தேன்  என்பிடி தளர்ந்து என்மீது பிடி இறுகுகிறதென.

இன்பம்  இருக்கிறது  இங்கும்  என என்னிடம் என்னிடம்  சொன்னேன். “இங்கா?” என்றாள் ஒருத்தி  ஏளனத்துடன். “இதுவா?” என்றாள் இன்னொருத்தி  இளநகையுடன். “எங்கு?” என எழுந்தோடி வந்து விழி விரித்து தேடிச்  சலித்து  சிரித்தாள்  மற்றொருத்தி. “இங்குமெனில் வேறெங்கடி இருக்கிறது  இன்பம்” என்று அறியாச் சிறுமியரென நகைத்தனர் அனைவரும். கண்மூடி  கண்மூடி  விலகி விலகி நடந்தேன். அறிந்தேன்  மூடிய வழிகளில்  திறக்கிறது  முடிவிலாப் பாதைகளென. மூடிய  விழிகளில்  விரிகிறது முடிவிலியின் முதற்  பிம்பம். இருளாழங்கள் கடந்து வந்து நிற்கிறேனா இவ்விடத்தில். ஏதும் மாறிவிடவில்லை. இங்கு தான்  இருந்து கொண்டிருந்தேனா? இங்கும்  இருந்து கொண்டிருந்தேனா? இல்லை  இங்கு மட்டுமே இருக்க  விழைந்தேன்.

என்ன இடமிது? உண்டு  கொண்டிருக்கிறார்கள். உண்பவர்கள்  யார்?  எங்கோ  நான் கண்டவர்கள்  தான். என் பெயர்  சொல்லி அழைக்கிறார்கள். நான் ஒருவரையும் நோக்கவில்லை என எண்ணும்  போதே ஒவ்வொருவரையும்  நோக்கிக் கொண்டிருக்கிறது  மற்றொன்று. அன்னத்தில் புரண்டழும் குழந்தைகள்  எச்சில்  வடியும் இதழ்கள்  அருவருப்பூட்டும்  பல்லிடுக்குகள் மணம்  கமழும்  இன்நீர் என ஒவ்வொன்றையும்  நோக்கிக்  கொண்டே இருக்கிறேன். இருந்தும்  இல்லாத  ஒன்றை இன்னும் உணர்ந்து கொண்டும் இருக்கிறேன். உணவும்  கள்ளும் அளித்த  போதையில் தடுமாறிப்  பிசைகிறது கூட்டம். யார் விழிகளும்  என்னை  தீண்டவில்லை. எல்லோர் விழிகளிலும்  தன்னைத்  தீண்ட ஒரு தனித்தவன்  நடந்து வருகிறான். எரிபட்ட உலர் சருகென வழியமைத்து நகர்கிறது கூட்டம். எரியினைத் தழுவும்  புனலென அமைகிறது கூட்டம். சிற்றுடல் கொண்டவன். சிறுவன். பாதி மூடிய  ஒரு மென் கரத்தில்  தெரிகிறது உள்ளுதடுட்டின் புண் சிவப்பு. மறு கரம்   உலைகளனில் கொதித்து வார்த்த   இரும்பென இறுகிக் கிடக்கிறது. மண்ணில்  படுகையில் சிவந்து  கண்ணிப் போகிறது  மென் மலர்ப் பாதமொன்று. விரைவடி வைத்து  நிலம்  அதிர நெருங்குகிறது வலுப்பாதம் மற்றொன்று. அன்பு சுரந்து நுரைக்கிறதோர் விழி. அறிவு நிறைந்து  கணக்கிறது மறுவிழி. விழிகள். அவ்விழிகள் குறித்தா சொன்னேன்? எனையன்றி நோக்க  ஏதுமில்லை அவ்விழிகளுக்கு. அவன்  அங்கம் ஒவ்வொன்றாய் என் விழி தொட  விழி எனும் ஓரங்கம் மட்டுமாய் எனைக்  கண்டு எனை நோக்கி வருகிறான்  அவன்.

நானெனும் எண்ணத்தை  அடைந்தது  முதல் எனை நோக்கி வந்து கொண்டே இருப்பவன். கண்டதும் கேட்டதும் உண்டதும் உமிழ்ந்ததும் புணர்ந்ததும் பெற்றதும்  அவனையே  என அறிகிறேன்  இப்போது. இப்போதா? இல்லை இல்லை. அறிந்ததை  அறிவித்துக் கொள்கிறேன்  இப்போது. நெருங்கி  விட்டான். நெருங்குமுன்னே சலித்தும் விட்டான்.

ஏதேதோ  நினைத்திருந்தேன். எளிமையாய் கேட்டுவிட்டான் “ஏன் வந்தாய்?” என.

“என் தலையணிந்த ஆரமொன்றை தொலைத்துவிட்டேன்” என்றேன். உண்மையில்  நான் தான்  சொல்கிறேனா? எவ்வளவு  பொருளற்ற வார்த்தைகள்.

“வா” எனச்  சொல்லி  என் வலக்கை பிடித்தான். சேற்றினை பூசியது போல்  ஒரு அருவருப்பு எழுந்தது  என்னுள். என் கண் முன் தெரிந்த அவன் முதுகை  அப்படியே  மிதித்து கீழே சாய்க்க  எண்ணினேன். அவ்வெண்ணம்  எழும் போதே  என்னுள்  ஊறிய அருவருப்பு இல்லாமலாவதை இப்பக்கம்  என நின்று உணர்ந்தேன். ஓராயிரம்  வார்த்தைகள் பேசியிருப்பேன் அவனுடன். ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை. ஒரு நொடியில்  அவன் பிடிக்கும்  என் கரத்திற்கும் இடையே  காற்று நுழைய  நினைப்பதை  உணர்ந்தேன். அவன் தீண்டல் நீங்கினால்  அக்கணமே இறந்தழிவேன் என்ற எண்ணம்  சித்தம் தொடுவதற்குள் பிடியை  விட்டு  “இறந்துவிடமாட்டாய்” என எவ்வுணர்ச்சியும் இல்லாமல்  சொன்னான். என் இறுதிச் சொட்டு ஆற்றலும்  தீர்ந்தழியும் வரை வாஞ்சையுடன் அவனை வதைத்துக் கொல்லும் ஒன்று உடல் தொட்டு எழுந்தது  என்னுள்.

“என் ஆரமெங்கே?” என்றேன்.

பெருங்கதவொன்றின் முன் நின்றிருந்தோம். திறந்தான். ஒளியை மட்டுமே  உணர முடிந்தது உள்ளே. ஆதவன்  ஒருவனை அகச்சிறையிட்டது போல மின்னியது அவ்வறை. நீரலையில்  மூழ்கி  வெளித் தெரியும்  மலர்களென ஒளியில்  பிறந்து தெரிந்தன ஓராயிரம்  தலையணியாரங்கள். ஒவ்வொன்றையும்  எடுத்து  சூடினேன். பொன்னும் முத்தும்  வைரமும் மாணிக்கமும் மரகதமும் வைடூரியமும் என அள்ளி அள்ளிச் சூடினேன். அவற்றில்  புரண்டு ஆடிக் களைத்தேன். ஆடையாய் உடுத்தி அத்தனையும்  கலைந்தெறிந்தேன். பொன் முத்துத் துளிகளென வெற்றுடலில் வியர்வை பரவ  அக்குவியலில் அமிழ்ந்து கிடந்தேன். திடுக்கிட்டு  எழுந்த  போதே தெரிந்தது இவற்றில்  எதையும்  ஆற்றாமல் அவ்வறை வாசலில்  அவனருகே நிற்கிறேன்  என.

“எங்கே  என் ஆரம்?” என்றேன்  எவ்வுணர்ச்சியும் இன்றி.

“அள்ளிச்  சூடுகையில் கண்டு கொள்ளவில்லையா உன் ஆரத்தை நீ?” என்றான்.
சீற்றத்துடன்  திரும்பி  “நீ எப்படி  அறிவாய்?” என்றேன்.

சிரிப்புடன்  நிமிர்ந்து “நான் எப்படி  அறியாமல் இருப்பேன்?” என்றான்.

என் முத்தத்தால் அவன் மூச்சை நிறுத்தி அவனை கொன்று போட வேண்டுமென்ற வெறி எழுந்தது. “சரி  வா” என்றான்.
ஏதோ நினைவெழுந்தவள் என  வந்த வழியை திரும்பிப்  பார்த்தேன். வெகு தூரம்  வந்து விட்டிருந்தோம்.
“திரும்பிச்  செல்லும்  பாதை  மறந்து விட்டது” என்றேன்  அவன் இழப்புக்கு  நகரக்  கூடாதென. அவன் சில அடிகள்  முன் சென்றிருந்தான்.
“இங்கு யாரும்  வந்த வழியில்  திரும்ப முடியாது” என்றான்  என்னை திரும்பி நோக்காமல். “போகாதடி போகாதடி” எனக் கூவிய  அகத்தை அங்கே விட்டுவிட்டு  அவன் பின்னே  ஓடினேன். அரை வட்ட வடிவில் பெரிய  வீடுகள்  எங்களை  சூழ்ந்திருந்தன. மெல்ல  மெல்ல  அவ்வீடுகளில் கனவுத் தன்மை  ஏறி கோயில்களாயின. உள்ளிருப்போர் அனைவரையும்  என் அணுக்கமென  நான்  அறிந்திருந்தேன்.

ஒவ்வொரு  வீட்டிலும்  உள் நுழைந்து தேடினேன்  என் தலையணியை. மணிச்  சத்தம் ஒவ்வொரு  வீட்டிலும்  கேட்டது . என்னைக் காணாதவர்கள்  என அவர்கள்  மாறத் தொடங்கினர்.அலுத்துப்  போய்  அவன்  எதிரில் வந்தமர்ந்தேன்.
“கிடைத்ததா?” என்றான்.
“அது மட்டும்  இல்லை” என்றேன்.
“அவ்வணி தான்  உனக்கு வேண்டுமா?” என்றான்.
திடுக்கிட்டு  அவனைத்  திரும்பி நோக்க  என் கன்னத்தில்  கடுங்குளிரையும் கொடும் வெப்பத்தையும் ஒருங்கே  அளிக்கும்  அவன் சுட்டு விரல் தொட்டு வலப்பக்கம்  திருப்பியது. அகன்று  உயர்ந்திருந்த  கருவறையில் பன்னிரு  தடக்கைகளில் ஆயுதம்  ஏந்தி ஓங்கி நின்றாள்  பெருந்தேவி. அவள் முன் செந்நிற உடையணிந்து  முழுதலங்காரத்தில் நிறைந்து நின்றாள்  ஒரு பேரழகி. இல்லை  அவள்  நான். நான்  அவனருகில்  இருக்கிறேன். அப்பெருந்தேவியின் பாதங்களிலும் நிற்கிறேன்.

அருகில்  ஒருத்தி  அக்கருவறையில் அமைதியாய்  நிற்கிறாள். யாரவள் என் தாயா என எண்ணும் போதே  எந்தையாய் மாறுகிறது அவ்வுரு. நான்  கருவறை உள்ளிருக்கும்  நான் தேவியிடம்  பேசத்  தொடங்குகிறேன். வெளியிலிருக்கும் நான் நான் பேசுவதை கேட்டுக்  கொண்டிருக்கிறேன்.

“சலித்து விட்டேன்” என்றேன்  தேவியிடம் சீற்றத்துடன்.
கல்லென  அவளை எண்ணும்  போதே  அவள் குரல்  செவி நுழைகிறது. அல்லது  அதுவு‌ம் என் குரலா?

“எதனால்  சலித்தாய்?” என்றாள்  தேவி.

தாயாகவும்  தந்தையாகவும்  கணவனாகவும் மாறிக்  கொண்டிருந்த  அவ்வுருவத்தை சில நொடிகள் நோக்கிய  பின் “கொண்டும் கொடுத்தும்” என்றேன்.

“கொண்டதனைத்தையும் கொடுத்துவிட்டாயா?” என்றாள்  தேவி.

“ஆடித்  தீராது  இவ்விளையாட்டு என்றுணர்ந்தேன். நான்  முடிக்க விரும்புகிறேன்.”

“எப்படி?”

“இவர்கள்  அழிவின்  வழி” என மாறிக் கொண்டே இருக்கும்  அவ்வுருவத்தை  கை காட்டினேன். ஒரு நொடி தேவி சிலைத்தாள்.

“பழி சூடுகிறாய் மகளே” என்றாள்.

“அறிவேன்  அன்னையே” என்றேன்.

“ஒரு முறை யோசி” என்றாள்.

ஓரடி பின்னெடுத்தேன். “அய்யோ எத்தகைய  பாவம் சூட இருந்தேன். ஈனறோர் மணந்தோன் என் இருப்பில் மகிழ்ந்தோர் என ஒவ்வொருவரையும்  ஒன்றாய் நிறுத்தி கொல்வதா. எத்துனை  பிழை. வேண்டாம்  வேண்டாம்”  என அகம் அரற்றியது . ஒரு சொல் உதட்டில்  எழவில்லை.

“நான்  முடிவு செய்தாயிற்று” என்றேன்.

பெரு மூச்சுடன்  தேவி தன் படைக்கலன்களில் ஒன்றை எடுத்தாள்.
“சீ கீழ் மகளே. தாழ்த்து உன் படைக்கலத்தை. அவர்கள்  என் கையால்  நீக்கப்படட்டும்” என்றேன்.

தேவி உறைந்தாள். ஒரு எண்ணம் கருக்கொள்ளும்  நேரம்  அனைத்தும்  உறைந்தது. புடவியென்றாகி  நின்றது அறிந்தது  அவ்வுறைதலை. தேவி தலை உலுப்பினாள்.

“வேண்டாம்  மகளே. பழி சூழும்  உன்னை” என்றாள்.

“என் பழியை நான்  சுமக்கிறேன். அகன்று நில்லடி நீ" என்றேன். அவன் புன்னகைத்தான்.
தேவி “ஆகட்டும்”  என பெருமூச்செறிந்தாள்.

அம்மூச்சு இரவென குளிரென அனைத்தையும் சூழ்ந்தது . என் விழி நோக்கவில்லை. தேவியின்  அருகிலோ அவனருகிலோ என்னை நான்  உணரவில்லை. என் உடலாகவும் என்னை உணரவில்லை. நான் என்றொரு எண்ணமாக  நான் ஆற்றவிருக்கும் செயலாக  மட்டும் நான் நின்றிருந்தேன். எடையற்றிருந்தேன்.என்னுள்  எழுந்தது ஓரசைவு. என் காலில்  வெங்குருதியின் சூட்டை  உணர்ந்த போது மீண்டும்  விடிந்தது.
அவன் என்னை நிமிர்ந்து  நோக்கினான். என் ஆரம் அவன் வலக்கையில்  இருந்தது. ஆரத்தை சூடியவாறே எழுந்தமர்ந்தேன்.ஆரத்தை  அவ்வப்போது உணர்வது  மட்டுமே  என் ஆனந்தம் என்றுணர்கிறேன்.