Wednesday 22 June 2016

பெருஞ்சுழி 5

5
"அன்னையைப்பாட எழுந்த மைந்தன் என எனைக்  கொள்ளட்டும் இத்தேசம். அறிக! அன்னையால் நிறைகிறது இங்கு வாழ்வென." சவில்யத்தின் வணிக மன்றில் பாணன்  ஒருவன் ஆதிரையின் கதையை பாடத் தொடங்கினான். சாளரத்தின் வழி அவன் உடலசைவுகளை கவனித்தவாறே சிலைத்து அமர்ந்திருந்தாள் மோதமதி.

சுனத வனம் எனப்பட்ட பெருங்காட்டில்  தனித்தலைந்து கொண்டிருந்தாள்  ஆதிரை.  அவளை  அக்காடறியும். பிறந்தது  முதல்  பிரிதொன்றும்  அறிந்திராத  பேதை  அவள்.  சிம்மம்  அவளை சினந்து  நோக்காது. நாகங்கள் நட்பென அவளைத்  தழுவும்.  சுனத  வனத்தின்  பெரு  மூப்பன் அலங்கன் நீண்டு  மெலிந்த  உடல்  கொண்டவன். ஆதிரையின்  தகப்பன்.  பதினாறு  மகன்களுக்கு  பிறகு  பிறந்தவள்  ஆதிரை.  கறுத்த  தேகத்தினலாய்  அவள்  மண்  நுழைந்தபோது அலங்கன் துணுக்குற்றான். நீள்  விழியும் நீள்  உடலும்  கொண்ட  ஆதிரை  கொட்டும் மழைநாளில் பிறந்தாள்.

ஏடுகள்  கற்கத்  தொடங்கியவன்றே வாளும்  பழகினாள்.
நான்காம்  பிராயம் கடந்த  சில நாட்களில்  அவள்  பேச்சு  குறைந்தது.  எந்நேரமும்  மென் புன்னகை  மட்டுமே  அவள்  இதழ்களில்  ஒட்டியிருந்தது.  ஏடொன்றினை கையில்  ஏந்தி  அவள்  அமர்ந்திருக்க  அலங்கன்  அவளை  தன்  மடிமீது அமர்த்திக்  கொண்டு “என்  சிறு பெண்  ஏன் சித்திரமென அமைதி கொண்டிருக்கிறாள்?” என்று  ஆதிரையின்  முகம்  வளைத்துக்  கேட்டான்.  அவளைத் தொடும் போதெல்லாம்  இனி அவளை இனி இவ்வாறு தொட முடியாதோ என்ற பதற்றம் எப்போதும் எழும். நரை மண்டிய அவன்  மார்பிலிருந்து தன்னை  விடுவித்துக்  கொண்டு  “சூறைக் காற்றின்  மையக்கண்ணை விட  பேரமைதி கொண்ட நிலம் எது தந்தையே?” என்று கேட்டு  அகன்றாள் ஆதிரை. அந்தச்  சூறை மையத்திற்கான சுழல்  உருவாகுமென அலங்கன்  உணர்ந்தான். நிலையில்லாமல்  தவிப்பவள் காடுகளுக்குள் தனித்தலையும் போது   தன்னை  அடைவாள். தேன்  நிறைந்த  கூடுகள்  அன்னை  முலையென அவளுக்கு  அமுதூட்டும். நீள் கிளைகளின்  தாலாட்டில்  உறங்கிப்போவாள். களிற்று  துதிக்கைகளே  அவள் ஊஞ்சல்.  ஏழு  களிறுகள் ஆதிரையை  தூக்கி  எறிந்து  பந்து  விளையாடுவதைக் கண்ட  தோழி ஒருத்தி  காட்டிலேயே  மயங்கி  விழுந்தாள்.

பதிமூன்றாம்  பிராயத்தை ஆதிரை  அடைந்தபோது சுனத  வனத்  தலைவன்  அலங்கனின் தலைமகன்  நிவங்கன் தலைமை  பெற  முனைந்தார்.  சுனதர்களின்  குடி  மரபுப்படி  பருவம்  எய்திய  உடன்பிறந்தாளை மணமுடித்து கொடுத்தபின்னே சகோதரன் தலைமை  கொள்ள  முடியும்.  குடி அவை நிவங்கனின் அரியணை  ஏற்பு  நாள்  குறித்தவன்று புன்னை  இலைகளை  அணிந்தவளாய் ஆதிரை  ஒரு  பெருங்களிற்றின்  மீதேறி  சுனத  வனத்தின்  தலைச்சபை கூடிய  இடம்  அடைந்தாள்.  அவள்  அணிந்து  சென்றிருந்த பொன்னூல் ஆடையை  அவள்  அன்னையை  நோக்கி  எறிந்தாள். அதில்  உதிரக் கோடு விழுந்திருந்தது.
குடி  மூத்தவரான  சனையர் முகம்  மலர  எழுந்து  “இரு  மங்கலங்கள் ஒருங்கே  நிகழட்டும்.  நிவங்கா உன்  தமக்கைக்கு உற்ற  துணை  தேர்ந்தெடுத்து  அவள்  திருமணத்தையும்  உன்  அரியணை ஏற்பையும் ஒருங்கே நிகழ்த்து “ என்றார்.
ஆதிரை  ஏதோ  சொல்லவந்தாள்.  அதற்குள்ளாகவே  இச்சந்தர்ப்பத்திற்கெனவே  காத்திருந்தவன் போல்  “ என்னுயிர்  தோழன் அகைதனுக்கு ஆதிரையை  கையளிக்கிறேன்” என்றான்.
ஆதிரை  சபை  முறை  அறியாதவளாய் “ நான்  என் தமையனை மறுக்கிறேன் “ என்று  அழுதுவிடுபவள்  போல்  சொன்னாள்.
அவளுக்கு  இறங்குவது  போல் பாவனை செய்த  அரிந்தர் “ சரி குழந்தை.  அவையினில் மறப்புரைத்து  விட்டாய்.  உன் தமையனையும்  அவன்  உனக்கு  தேர்ந்த  மணாளனையும் வாட்போருக்கு  அழை.  அவர்களை  நீ  வென்றுவிட்டாயெனில் நீ  அகைதனை மணக்கத் தேவையில்லை “ என்று அவள்  மோவாயை நிமிர்த்திச்  சொன்னார்.

அவை  சிரிக்கத்  தொடங்கியது. அதற்குள்  ஆதிரை “ஒருவேளை  நான் அவர்களை  கொன்றுவிட்டால்” என்றாள்.  ஒரு நிமிடம்  அமைதியில்  உறைந்த  அவை  ஒரு மெல்லிய  நகைப்பொலி  கேட்டவுடன்  வெடித்துச்  சிரித்தது. வெகு  நேரம்  சிரித்துவிட்டு  வயிற்றை  பிடித்தவாறே  சனையர்  “அப்படியெனில்  சுனத  குலத்திற்கு  நீயே  மூத்தோள்” என்றார்.
“ அகைதரே உம்  கையிலிருக்கும்  வாளால்  ஆதிரை  கையிலிருக்கும்  வாளை  தட்டிவிட  வேண்டும்.  நிவங்கரே நீர்  தமக்கையை கையளித்ததால்  உடன் நின்று  போர் புரிய  வேண்டும் “ என்று  சிரித்தவாறே  மூவர்  கையிலும்  வாள்  கொடுத்தார் அரிந்தர்.  சுனத  குலத்தின்  பெரு வீரர்களுடன்  ஆதிரையை  நிறுத்தி  தன்  மனதில்  தெய்வமென  இருந்தவளை அவமதிப்பதை அலங்கன் காண  விரும்பாமல்    வேறுபுறம் திரும்பிக்  கொண்டார்.
அதுவரை  சேர்த்துத்  தொகுத்து வைத்திருந்த அவர் மகள் அன்று உடையப்  போகிறாள்.மனிதர்களை  அறியாதவள் அவள். சிம்மமும் எருதும் துணைக்கட்டும் என் பெண்ணை. என்ன உளறுகிறேன்! நான் மூப்படைந்துவிட்டேன்.நிவங்கன் தலைமை கொள்ளவிருக்கிறான்.ஆதிரை மணம் கொள்ளவிருக்கிறாள். நான் மகிழ்வல்லவா கொள்ள வேண்டு்ம்? ஏன்  என் மனம் அரற்றுகிறது?இல்லை இரண்டும் நிகழப்போவதில்லை என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கும் போதே வாள் ஒன்று  மண்  தொடும் ஒலி கேட்டது.  அலங்கன்  சலிப்பு  கொண்டார். ஆனால்  அந்நேரம்  கூட்டம்  கொண்ட  முற்றமைதியே  அவர்  உணரவில்லை.  அடுத்த  கணம்  இன்னொரு  வாள் தரையில்  விழுந்தது. ஆழிமாநாடு  அள்ளி நிறைத்துக்  கொள்ளப் போகும்  இரு  கணங்களை அவ்வளவு  அருகில்  இருந்தும் அவர்  காணவில்லை. அவர்  கண்டபோது அதரங்களிலும்  கழுத்திலும்  குருதி வழிய  ஆதிரை  நின்றிருந்தாள்.  திறந்த  வாயுடன்  இரு உடல்கள்  அவளின்  இருபுறமும்  கிடந்தன. மோதமதி  உடல்  சிலிர்ப்பதை  அரிமாதரன்  பார்த்து  நின்றான். 

1 comment:

  1. குருதி வழிந்த வாளையும் ஆதிரையையும் அலங்கன் கண்டகணம் சித்திரச் சிறுபெண்ணின் அமைதியில் குடிகொண்டிருந்தது சூறைக்காற்றின் மையக்கண்ணெனக் கண்டு மோதமதியுடன் நானும் உடல்சிலிர்த்தேன். தமையனைக் கொன்று மூத்தோளாவது அதுவும் ஒரு குலத்துக்கே மூத்தோளாகும் கதை இதுவரை நான் கேள்விப்படாத ஒன்று.

    ReplyDelete