Tuesday, 11 October 2016

வைத்தீஸ்வரன் கோவில் - ஒரு பயணம்

இரண்டு பாட்டிலில் அண்ணன் தண்ணீரை எடுத்து கைப்பையில் வைத்தபோது கடுப்பாக இருந்தது.

"அப்ப ரெண்டு நா வெளில தங்குறதுன்னா வாட்டர் டேங்க எடுத்து பைக்குள்ள வெப்பியா" என்றேன். வழக்கம் போல் அவன் பொருட்படுத்தவில்லை.

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நாடி ஜோசியம் பார்ப்பதற்காக அல்லாமல் ஒரு அர்ச்சனை செய்வதற்காக அனைவரும் புறப்பட்டோம். மிகவு‌ம் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் சென்றேன் என நான் இணைத்துக் கொள்வேன் என உங்களுக்குத் தெரியும். ஏனெனில் முற்போக்கோ அல்லது அதற்கு கொஞ்சம் முன்ன பின்ன போக்குள்ளவர்கள் இது போன்ற பரிகார ஸ்தலங்களுக்கு செல்லமாட்டார்கள் அல்லவா! அதுவும் பின் நவீனத்துவம் பேசுபவன் பின் நவீனத்துவத்தை அன்றி வேறு எது பேசினாலும் நிராகரிப்பவன் எப்படி பரிகார ஸ்தலங்களுக்கு செல்ல முடியும். ஒருவேளை செல்லாமல் இருந்தால் இன்னும் பல "பரிகாரம்"செய்ய வேண்டியிருக்கும் என்பதால் பகுத்தறிவுடனும் வருவதுணரும் முற்போக்கறிவுடனும் "வற்புறுத்துவதற்கு" முன்னமே ஒப்புக் கொண்டேன். மேலும் பயணமென்பதே மலர்ச்சியூட்டும் அனுபவமல்லவா! "நல்லா சமாளிக்கடா டேய்" என்பன போன்ற கிண்டல்கள் தாராளமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

விடிவெள்ளி மறைவதற்கு முன் அதாவது அஞ்சுலேர்ந்து ஆறுக்குள்ள பஸ் ஏறிடணும்னு பிளான். பஸ்ஸும் ஏறியாச்சு. திடீர்னு வேட்டையாடு விளையாடு படத்துக்குள்ள பூந்தது மாதிரி பயங்கரமா சத்தம். அதன்பிறகே அது பேருந்தின் தீம் மியூசிக் எனத் தெரிந்தது. அந்த அரசுப் பேருந்தில் எங்கு கை வைத்தாலும் இசை வரும் என்பது போல் "கடகடகடகட"த்துக் கொண்டிருந்தது. நடத்துநரிடம் மிகப்பணிவன்புடன் ரயில் நிலையத்தில் நிறுத்துமாறு அப்பா கோரிக்கை விடுத்தார். நடத்துநர் கண்டுகொள்ளாத போதும் கோரிக்கையை நினைவுறுத்தும் வகையில் நடத்துநரைப் பார்த்து புன்னகை பூத்தது எனக்கு எரிச்சல் ஏற்படுத்தியது. கோரிக்கை நிறைவேறியும் புண்ணியமில்லை. சேவை புரிவதெற்கென்றே - பல சமயங்களில் தேவைப்படாத போதும் - காத்திருக்கும் சில நல் உள்ளங்கள் இனிய முகத்துடன்  மயிலாடுதுறை செல்லும் அந்த விரைவுத் தொடர்வண்டி அன்றைய தினம் வராது என்றனர். அண்ணன் பம்மினாலும் அம்மா விடவில்லை. "முன்னாடியே கேட்டு வெக்கமாட்டியா இதெல்லாம்" என்றுவிட்டு என்னையும் முறைத்தார். ஆனால் அந்த "ரயில் ஐடியா" அவனுடையதே. சென்னை செல்லும் ஒரு ஏசி கோச் பேருந்தை ஓடிப்போய் பார்த்தேன். சத்தியமாக அது ஏ.சிப் பேருந்து என எனக்கு அப்போது தெரியாது. சும்மா "சாஞ்சு உட்காந்துட்டு" போகலாமென்ற ஒரு நப்பாசைதான். நப்பாசை நிறைவேறவில்லை.

ஒரு சுமாரான பேருந்தில் ஏறி பயணமானோம். மூக்கு வழியாக பெயர்களை உச்சரிக்க வேண்டிய தகழியின் "கயிறு" நாவலை வாசிக்கத் தொடங்கினேன். தகழி கயிறுக்கு எழுதியிருந்த முன்னுரையே அவரை அணுக்கமாக உணர வைத்து விட்டது. கயிறு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல். சி.ஏ.பாலன் மொழிபெயர்த்திருக்கிறார். சாகித்திய அகாதெமியே...அய்யய்யோ இது பயணக் கட்டுரையல்லவா. சரி கோந்நோத்து பிள்ளையும் கோடாந்திர ஆசானும் நங்ஙயவரும் கோந்நாச்சரும் அப்படியே இருக்கட்டும். பயணம் தொடரலாம்...ரைட்..

அரைக்கிலோமீட்டர் தாண்டினால் "ஒருங்கிணைந்த" தஞ்சை முழுவதும் வயல்வெளிகள் தான். மயிலாடுதுறையும் அவ்வாறே. ஆனால் "போர்" பாசனம் அதிகம் என்பதால் நம்மூர் சேனல்களில் சூடாக காவிரிப் பிரச்சினை நடந்த போதே விதைத்துவிட்டனர். பெரும்பாலான வயல்கள் இளம்பச்சையாகத் தெரிந்தன. மயிலை பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு குறுகிய சந்தைக் கடந்து இன்னொரு பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

"வைஸ்வர்ன் சீகாழி சிம்பம்" என்று புரியாத மொழியில் அந்த தனியார் பேருந்தின் நடத்துநர் கத்திக் கொண்டிருந்தார். பின்னர் அது வைத்தீஸ்வரன் கோவில் சீர்காழி சிதம்பரம் என நானே ஊகித்துக் கொண்டேன். வழக்கம் போல் அப்பா முன்படி வழியாக ஏறி  மூன்று பேர் அமரும் இருக்கையில் மிகுந்த கருணையுடன் அம்மாவுக்கு ஜன்னல் இருக்கையை கொடுத்துவிட்டு அமர்ந்து கொண்டார். இதைத் தொடர்ந்து எங்களூர் பக்கம் கவனிக்க முடிகிறது. ஆஸ்த்துமா நோயாளிகள் போல் ஆண்கள் அனைவரும் ஜன்னல் பக்கம் போய் அமர்ந்து கொள்கிறார்கள். சற்று மாறி அமருங்கள் என்று சொன்னால் பிச்சை போட கையில் பணமில்லாதவர்கள் பிச்சைக்காரர்களை கண்டு கொள்ளாமல் அமர்ந்திருப்பது போல தலையை திருப்பிக் கொள்வார்கள். அல்லது அவர்கள் மகளையோ தங்கையையோ ஆபாசமாகத் திட்டியது போன்ற ஒரு பாவனை முகத்தில் சூடிக் கொள்வார்கள். மாறி அமருமாறு அப்பாவிடம் அண்ணனை விட்டு சொல்லச் சொன்னேன். 

"ஷி டூ வான்னா கம் ஹியர் நா" என சிவந்த பெண் ஒருவர் கோவிலுக்கு வெளியே வந்தவாறு பேசியதே நான் முதலில் இறங்கியதும் கேட்டது. திருவாரூர் நாகை மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக சுற்றுலாத் தளங்களில் ஒன்று வைத்தீஸ்வரன் கோவில். நவக்கிரகத் தளங்களிலும் ஒன்று. ஆனால் இந்த நவக்கிரகத் தளங்கள் அனைத்திலும் நடைபெறுவது அப்பட்டமான கொள்ளையடிப்பு. கொஞ்சம் உப்பும் மிளகும் இணைந்த ஒரு பொட்டலம் விற்கிறார்கள். பத்து ரூபாய் என்பது அதற்கு மிக அதிகம். அதுபோலவே மஞ்சள்பையில் ஒரு தேங்காயுடன் அர்ச்சனை பொருட்கள் ஐம்பது ரூபாய். தேங்காய் இல்லாமல் முப்பது ரூபாய். நிச்சயம் இது பகல்கொள்ளை. நவக்கிரகத் தளங்கள் அனைத்திலும் கிட்டதட்ட ஒன்றுபோல் இதுபோன்ற கொள்ளையடிப்புகளை காணலாம். வெளி மாநிலத்தவர்களும் நகரவாசிகளும் கேள்வி கேட்காமல் "தோஷம்" கழிவதற்காக வாங்கிச் செல்கின்றனர். கழிவறைப் பயன்படுத்துவதற்கு ஐந்து ரூபாய். எங்கும் காணப்படுவது போன்ற அசிங்கமான டாய்லெட்.

கோவில் பற்றிய விக்கிபீடியா தகவல்களுக்கு மேல் என்னிடம் ஏதுமில்லை. அரளிப்பூ மாலை அணிந்தவாறு சில ஆண்களும் பெண்களும் கோவிலை சுற்றி வந்தனர். தாவணி அணிந்த ஒரு பெண் பார்ப்பதற்கு அழகாக இருந்தால். ஒல்லியான தேகம். பொன்னிறம். அவள் தெலுங்கு என்று ஏன் எண்ணினேன் என இன்னும் தெரியவில்லை. " இங்கவே நிக்க எடம் இருக்குல்ல" என்று அவள் சொல்லியும் இன்னும் மனம் அவளை தெலுங்காகவே எண்ணுகிறது. செவ்வாய்க்கு அர்ச்சனை செய்த பிறகு சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டுமாம். இரண்டு அர்ச்சனை தட்டுகள். அறுபது ரூபாய். குறைந்தது ஐந்து நூற்றாண்டு பழமையுடைய சிவன் கோவிலை இழுத்துக்கட்டி இன்றைய வடிவத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கோவிலுக்கு எப்பக்கமிருந்து நுழைந்தாலும் ஒரு கோவிலுக்குரிய எந்த அம்சத்தையும் அங்கு காண முடியாது. வண்ணம் பூசப்படாத கோபுரம் பார்க்க விகாரமாக இருக்கிறது.

அர்ச்சனை சிறிது நேரத்தில் முடிந்துவிடும் என நினைத்தால் "என் நேரம்" அபிஷேகம் தொடங்கிவிட்டது. "ஸ்லிம்மான" செவ்வாய் சிற்பத்தில் விபூதியை பால் ஆகியவை ஊற்றப்பட்டு பின்னர் கழுவப்பட்டன. பெரும்பாலான அர்ச்சகர்கள் கைலாயத்தின் பூத கணங்கள் போல் பேருருவம் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அர்ச்சனை சீட்டு மூன்று ரூபாய் தான்.

செவ்வாய் அர்ச்சனை முடிந்து சிவனை நோக்கி நடந்தோம். அடிதடி நடப்பதற்கான அத்தனை அம்சங்களும் நிறைந்த கூட்டம். இருந்தும் பெண்கள் அதிகமாக இருந்ததாலோ என்னவோ அப்படி ஏதும் நடக்கவில்லை. நாங்கள் சிவ தரிசனத்துக்கு முண்டியடிக்கையில் கந்த ஷஷ்டி கவசத்தை பாடியபடி ஒரு ஆள் முன்னே சென்றார். பக்தி பரவசத்துடன் அவருக்கு பலர் வழிவிட்டனர். நானும் இதே "உபயத்தை" கையாண்டிருக்கலாம்.

ஒரு அம்மா குண்டுக் குழந்தையை தூக்கியபடி தூரத்தில் தெரிந்த சிவனைக் காண முயன்றார். "வேணா வேணா...வேண்ணா" என அந்த குழந்தை ஆழ்வார்க்கடியான் போல் சிவனைப் பார்க்க விடமால் முண்டியது. அதன் அம்மா எப்படி பிடித்தாலும் வழுக்கி நழுவக் கற்றிருக்கிறது அது. சில நொடிகள் கடும் கோபத்துடன் என்னைப் பார்த்தது. கருப்புப் பெண்ணொருத்தி கண்ணை மூடியவாறு வாய்க்கு நேராக வணங்கியபடி வேண்டிக் கொண்டிருந்தாள். அழகி. அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். சுட்டு விரலின் அடியிலிருந்து நுனி வரை அவள் வாய் திறந்தது. அருள் வந்துவிட்டதோ என ஒரு நொடி பயந்துவிட்டேன். பின்னரே கொட்டாவி விட்டிருக்கிறாள் எனத் தெரிந்தது. பாதகத்தி பக்தியில் தூங்கிவிட்டாள் போல.

"யய்யா யய்யா கொஞ்சுணூன்டு நவுந்துக்கையா இத மட்டும் அய்யங்காலுல வெச்செடுத்துட்டு போயிடுறேன்" என்றவாறே ஒரு வயதான ஆத்தா ஆதார் கார்டை லிங்கத்துக்கு நேரே வைத்தது. பின்னர் எடுத்துக் கொண்டு "ஆறு மாசமா அலையவிட்டானுவய்யா. இங்குன வந்து வேண்டிப்போனதும் ஒடனே கெடச்சுட்டு" என்று வெற்றிக் களிப்புடன் கூறிவிட்டு சென்றது ஆத்தா. தெலுங்கச்சியை மீண்டும் சிவன் சந்ததியில் பார்த்தேன். நிறைய பேர் அப்படி அவளை பார்த்திருப்பார்கள் போல. அந்த அலட்சியமும் திமிறும் ஒவ்வொரு அசைவிலும் அவளில் வெளிப்பட்டு மேலும் அழகூட்டியது. நம்மவர்கள் பலர் "முடிச்சிட்டேண்டா மாப்ள" என்று வெற்றிக் களிப்புடன் பிதுங்கிய கூட்டத்தில் தீபத்தை எடுத்து வைந்த அர்ச்சகரிடம் தங்களின் அர்ச்சனை பொருட்களை வாங்கியவாறு வெளியேறினர். பெரும்பான்மையினரின் திருப்தி ஒரு வேலையை முடித்ததால் ஏற்படுவது போலவே தெரிந்தது.

கோவில் முகப்பில் அது முகப்பென்றே சொல்லி விட முடியாத அளவிற்கு நிறைய கடைகள். முகப்பு வரை நடந்து சென்றுவிட்டு மீண்டும் "கொள்ளப்பக்கம்" வந்தோம். நிறைய குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

"வாற வழிலயே குடிக்கவும் கைகழுவவும் தனித்தனியா தண்ணி இருக்கு சாமி. நானும் உங்கள மாதிரி தரிசனத்துக்கு வந்தவன் தான். அந்த வழியா வந்ததாதல சொல்றேன்" என்று காவி உடுத்திய ஒருவர் சொன்னது அப்பாவை ரொம்பவே திருப்தி கொள்ளச் செய்தது.

"தர்மம் பண்ணிட்டு போங்க சாமி" என்றதும் என் குடும்பத்தினரின் முகம் போன போக்கை பார்க்காமல் விட்டுவிட்டேன்.

"மத்தியானம் எனக்கு திருவண்ணாமலை ட்ரெயின். எதாவது தர்மம் பண்ணுங்க சக்தி" என்றவாறே பின்னால் வந்தார். தீர்க்கமான முகம் அவருக்கு. இருந்தும் என் குடும்பத்தினருக்கு அவர் இழிந்தவர் தான். நம்மிடம் பிச்சை கேட்பவர்களை இழிந்தவர்களாக தானே நாம் எண்ணுவோம்!

ஓரிடத்தில் அமர்ந்து சாப்பிட்டோம். அவர் சொன்னது போல் கை கழுவுவதற்கு இரு திருகிகளும் குடிப்பதற்கு நீர் சுத்திகரிப்பு அமைப்புடன் கூடிய இரு குழாய்களும் இருந்தன. நீர் சுத்திகரிப்பு அமைப்பில் தண்ணீர் வரவில்லை.

"தண்ணி வந்தா நம்ம மக்கள் தான் அதுல போய் பாத்திரம் வெளக்கிட்டு நிக்குமே" என்றான் அண்ணன். உண்மை.

வெளியே புறப்படும் போது முறுக்கு சீடை போன்ற "தேவஸ்தான பிரசாதங்கள்" விற்கும் கடையில் ஒரு "டிப்பிக்கல்" இந்திய தகப்பன் ஏதோ சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.

"கோவிலுக்கு வந்துட்டு கரச்சல் பண்ணாம கெளம்புங்க சார்" என்றார் அந்த கடைக்காரர்.

அந்த நிதானம் அவரை கோபப்படுத்தியது. அவருடைய இரு பெண்களும் மனைவியும் மருண்ட விழிகளால் அவரை பார்த்து நிற்பதில் இருந்து வீட்டிலும் சத்தம் போடுபவர் என ஊகித்துக் கொண்டேன். பெரும்பாலும் தன்னுடைய தோற்றமும் பாவனையும் அனைவரையும் மிரட்டிவிடும் என்ற பழங்குடி நம்பிக்கை கொண்ட எளிமையான மனிதர். சரியான சொற்களில் பேசாமல் மற்ற பாலூட்டிகள் போல "ஆய் ஊய் ஏய் ஆங் ஓங்" என்று சத்தமிடுபவர் போல.

சொற்கள் கிடைக்காததால் அவர் சொன்னதையே மாற்றி "கோவில்ல வேல பாக்கிறவங்க கரச்சல் பண்ணாம இருக்க கத்துக்கங்க" என்றார். நான் சிரித்துவிட்டேன்.

காலில் ஏதோ அடிபட்டு கட்டு போட்டிருந்த ஒரு தாத்தா (முன்னவரின் அப்பாவாக இருக்கலாம். அந்த இளம் பெண்கள் இரு பக்கமும் அவரை பிடித்திருந்தனர்) "என்னடா என்னடா பேசுற. மரியாதையா பேசு மரியாதையா பேசு" என்று மிரட்டும் தொணியில் பேசினார். ஆனால் அவர் குரல் பரிதாபமாகவே ஒலித்தது. வெளியே சில குடும்பங்கள் குரங்குகளுக்கு பழம் கொடுத்துக் கொண்டிருந்தன. ஒரு பெரிய "நட்சத்திர ஜன்னலில்" குடும்பம் வட்டமாக அமர்ந்திருந்தது. அருகில் நாங்களும் அமர்ந்தோம். அண்ணன் அம்மன் சன்னிதியில் உப்பு கொட்டுவதற்காக சென்றிருந்தான். நட்சத்திர ஜன்னல் குடும்பத்தில் பாட்டியின் புட்டத்துக்கு நேரே தலை வைத்தவாறு அந்த குடும்பத்தின் பேரன் படுத்திருந்தான். ஓங்கி குசு விடும் சத்தம் கேட்டது. அந்தப் பையன் சட்டென எழுந்து கொண்டு கண்டபடி திட்டினான். குசு சத்தம் கேட்டபோது கூட அது கேட்காதது போல் பாவனை செய்தேன். ஆனால் அந்தப் பையன் எழுந்து கொண்டதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அலைபேசியை பார்த்தவாறே சிரித்துக் கொண்டு அவர்களை கடந்து சென்றுவிட்டேன்.

பேருந்தில் ஏறியபோது வழக்கம் போல் மனைவிக்கு ஜன்னல் இருக்கை கொடுத்திருந்த ஒருவரிடம் அம்மாவை அமர வைப்பதற்காக மாறி அமரும்படி சொன்னேன். "இல்ல.." என இழுத்தவர் "வொய்புக்கு வாந்தி வரும் அதான்" என்றார். இப்படி கூசாமல் பொய் சொல்ல தமிழனால் மட்டுமே முடியும் என எண்ணிக் கொண்டேன். இருந்தும் கோபமே வரவில்லை. வைத்தீஸ்வரனின் அருள் போல.

Tuesday, 4 October 2016

எஞ்சுபவன் - சிறுகதை

மூத்திரம் பெய்வதற்கு வீட்டெதிரே செல்லும் சாலையை கடந்து சென்று குத்துக்காலிட்டு அமர்ந்தேன். தூரத்தில் ஒரு ஈருருளி நெருங்கும் ஒலி கேட்டது. மூத்திரம் இன்னும் வரத் தொடங்கவில்லை. அந்த வண்டி என்னைக் கடப்பதற்குள் பெய்துவிட வேண்டுமே என்ற பதற்றம் ஏறியது. இயல்பான தன்னுணர்வினால் மூத்திரம் பெய்வதற்கு அப்போது வரவில்லை. படுப்பதற்கு முன் இது ஒரு சடங்கு போலவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. படுக்கையை நனைக்காமல் இருக்க சிறு வயதில் பழக்கப்படுத்தப்பட்ட ஒன்று. மூத்திரம் பெய்து விட்டு கை கழுவி விட்டு வாய் கொப்பளித்த பின் படுக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கையில் அப்படியே உறங்கி விடுகிறவர்களை பார்க்கையில் அடக்க முடியாத குரோதம் எழும். நல்ல வேளையாக அந்த ஈருருளி கடப்பதற்கு முன்னே சில சொட்டுகள் பெய்து விட்டு சாலையைக் கடந்து வீட்டிற்கு வந்து விட்டேன்.

அந்த கண நேரப் பதற்றம் கூட வீட்டிற்குள் வந்ததும் பெரிதாகத் தெரிந்தது.

குணசேகர் சொல்வான் "குடும்பம் மீண்டும் மீண்டும் நம்மீது படியும் உலகின் சேறுகளை அகற்றிக் கொண்டே இருக்கிறது. சில சமயம் அந்த சேற்றில் பொதிந்திருக்கும் வைரங்களையும் சேர்த்து."

"என்னோட பேரு பௌத்தத்திலேர்ந்து வந்திருக்கணும்னு நெனைக்கிறேன். குலசேகரன்னா குலத்தைக் காப்பவன். குணசேகரன்னா குணத்தை காப்பவனா?" என்பதே அவனுக்கும் எனக்குமான முதல் உரையாடல். அவன் ஏதாவது சொல்லும் போதெல்லாம் புண்ணில் டிஞ்சர் படுவது போல் எரியும்.

"நீ ஏன் கல்யாணம் வேணான்ற?" என்றேன் ஒருமுறை. வேலை முடிந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தோம்.

"நீ என்ன நினைக்கிற?" என்றான்.

பிரசங்கம் நிகழ்த்தப் போவதற்கான முகபாவனை அவனுக்கு ஏற்கனவே வந்துவிட்டது.

"நீ இம்பொடெண்ட் இல்ல செக்ஸ் வச்சிக்க பயப்பட்ற" என்றேன். அவ்வார்த்தைகள் அவனை ஒன்றும் செய்யாது என்றும் மனம் சொல்லியது.

"கல்யாணத்துக்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம்? பெண் உடல் எனக்கு பழக்கம் தான்" என்றான்.

அதை ஏற்கனவே அறிந்தது போல பதறாமல் இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு "பட்டிக்காட்டு பதற்றம்" ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டாவது மனைவி உள்ளவனையே ஒழுக்கக் கேடானவனாக எண்ணிய அந்த அதீத ஒழுக்க மனநிலை என்னுள் மாறவில்லை என்பது அப்போது வெட்கமாக இருந்தது.

"பின்ன லட்சியவாதமா?" என்றேன் அவன் மறுப்பான் எனத் தெரிந்தும்.

சில வினாடிகள் புரியாதவன் போல் விழித்தான். நீளமாகப் பேசத் தொடங்குவதற்கு முன் அவன் மேற்கொள்ளும் பாவனை அது. அவன் நிச்சயம் வரலாற்றையும் சமூகத்தையும் தொட்டெடுத்தே தன் செயலுக்கு நியாயம் கற்பிப்பான் என எண்ணிக் கொண்டிருக்கும் போதே
"பழங்குடி சமூகங்களில் இருந்துதான் இந்த நவீனத்த நோக்கி நாம வந்திருக்கோம். தொடர்ச்சியான அப்டேஷன். இன்னிக்கு நாம இருக்குற தனித்த குடும்பம் அப்படிங்கற அமைப்பு எங்கேர்ந்து உருவானது. பழங்குடிகளுக்கு மேல அரசாங்கம்னு ஒன்னு உருவாகி வந்தப்ப தானே. அரசாங்கம் எந்த அளவுக்கு தனிப்பட்ட சமூகங்களோட தொடர்பு ஏற்படுத்திகிட்டோ அந்த அளவுக்கு அந்த சமூகத்தில விரிசல் விழ ஆரம்பிச்சது. திடமான பனிக்கட்டி உருகி மிதக்கற மாதிரி கூட்டான சமூகங்கள் விலகி விலகி சின்ன சின்ன சமூகங்களா ஆச்சு. அந்த சின்ன சமூகங்களோட இன்னும் சுருக்கப்பட்ட வடிவமே குடும்பம் இல்லையா?" என்று முதலில் எதையோ கண்டுபிடித்தவன் போல குறிப்பிட்டான். நான் தலையசைத்தேன்.

"சமூகங்கள் ஒன்றிணைந்து தேசம்ங்கிறது உருவான பிறகு இன்னிக்கு இருக்கிற முதலாளித்துவம் வந்த பிறகு குடும்பமும் சுருங்கிச்சு. உடல் ரீதியா தொடர்பு இருக்கிறவங்களால மட்டும் உருவான குடும்பம். உடலுறவு கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் அந்த உடலுறவினால் உற்பத்தியான குழந்தைகள். இன்றைய குடும்பம் அவ்வளவு தான். அந்த குடும்பத்த ஒன்றிணைச்சது அவங்களோட ரத்தம். நீ உன்ன ஒரு உலகக் குடிமகனா உணர்ந்து கொண்டே வீட்டுக்கு நல்ல பிள்ளையாவும் இருக்க முடியாது. இனி அடுத்தகட்டம் இன்னிக்கு இருக்கிற குடும்பமும் இல்லாம ஆகணும்ங்கிறது தான். பொதுவா ஜாதி சொத்து எமோஷனல் நீட் செக்ஸ் இதத்தாண்டி ஒருத்தன் குடும்பத்தோட இருக்க நினைக்கிறது அநாவசியம். குடும்பம் அற்ற இந்த விடுதலைய நோக்கித்தான் நம்ம விஞ்ஞானமும் சமூகமும் இத்தனை வருஷம் பயணம் பண்ணிருக்குன்னு கொஞ்சம் நாம கடந்து வந்த பாதைய பாத்தாலே புரியும். செக்ஸ் தவிர ஒரு மனுஷன் தனக்கு தேவையான அத்தனையும் தானே உருவாக்கிக்க முடியும். சப்பைக்கட்டு கட்ட வேண்டிய அவசியம் இல்லாத தனியனா இருக்கிறது உண்மையிலேயே பெரும் சுதந்திரம். ஆனா அதை தைரியமானவங்களால மட்டும் தான் செய்ய முடியும். நான் அவர்கள்ல ஒருத்தன்" என்றான்.

"உன்னோட பயம்னு கூட சொல்லலாம்" என்றேன்.

"இன்னொருத்தன எந்த விதத்திலையும் சார்ந்திருக்காம இருக்க நினைக்கிறது பேரு பயம்னா அப்படியே இருக்கட்டும்" என்றான்.

"இல்ல நீ பெண்கள பயப்பட்ற" என்றேன். சீண்டப்பட்டு விட்டான்.

"இங்க பார்" அவன் குரலில் மெல்லிய எரிச்சல் தெரிந்தது " பெண்களோட விளையாடுறது சர்க்கிள்ல ரெண்டு டார்கெட் பிக்ஸ் பண்ணி ஓடுறது மாதிரி. பெண்ணுக்கு ஆணோட இருப்பு ஒரு முடிவிலி. அவ தொடர்ந்து எதிர்பார்த்துட்டே தான் இருப்பா. பெண்ணை எந்த விதத்திலும் ஒரு ஆண் திருப்தி படுத்த முடியாது. காதல் மாதிரி சில அசட்டுத்னங்கள வெச்சு பெண்ணை புரிஞ்சிக்கிற ஒன்ன மாதிரி இடியட்ஸ் தான் பெண்கள கடந்து போக கஷ்டப்படுவாங்க. பெண்ணை அவளோட அத்தனை நளினங்களையும் வேஷங்களையும் புறக்கணிச்சுட்டு அணுகுகிறவங்களுக்கு பெண் ஒரு பொருட்டே அல்ல. பெண்கள பொருட்படுத்தறவன் தான் அவ பின்னாலயே அலையுறான். மடத்தனமான பெண்கிட்ட கெஞ்சுறான். அவளோட உறுதி தெரிய வரும்போ அவள திட்றான். அடிக்கிறான். ஏன் கொலையே பண்ணிடறான். பொருட்படுத்தாம வெலகுறது தான் பெண்ணை சீண்டும். அவளை முடிவில்லாம வதைக்கும். இயற்கை அவளுக்கு கொடுத்த அத்தனையும் ஒரு பொருட்டாவே எடுத்துகாம போனா தான் பெண்ணை முடிவில்லாம புண்படுத்த முடியும். என் ஆட்டம் அது தான். ஒவ்வொரு பெண்ணை பத்தியும் ரொம்ப ஷார்ப்பா என்னால வர்ணிக்க முடியும். ஆனா அதுல என்னை மனசுல வெச்சுக்கங்கிற கெஞ்சல் இருக்காது. அது அவள சீண்டும். எங்கேயோ அவளை வழிபடுறதுக்கான திறப்பு எங்கிட்ட இருக்கும்னு தேடுவா. ஆனா அத கடைசிவரை கண்டுபிடிக்க முடியாது. அந்த ஆட்டத்தில் என் வாழ்க்கையை நான் வீணடிக்க விரும்பல. என் வீடும் எனக்கு அப்படித்தான். அதோட எனக்கு எந்தவித எமோஷனல் பாண்டேஜும் கிடையாது. என் பாக்கெட்டில இருக்கிற கடைசிப் பைசாவும் தீர்ந்து போற வரைக்கும் என்னால் அவங்களுக்காக உழைக்க முடியும். அது ஒரு நன்றிக்கடன். என் தலைமுறையோட என்னை இணைச்சதுக்கு என்னை உயிரோட இருக்க வெச்சதுக்கு." அவனுக்கே அதை சொல்லிக் கொண்டான் போல.

"பால குடிச்சிட்டு படுறா. ஏதாவது தின்னா தான உடம்புல தெம்பு நிக்கும். கருக்கள்ல முழிச்சிகிட்டு இடுப்ப வலிக்குது அடுப்ப வலிக்குதுன்னு சொல்லாத" என்றவாறே அருகே வந்தாள் அம்மா. சொறுகிய இமைகளை கிடுக்கியால் இழுத்தது போல வலி எழ விழித்துக் கொண்டேன்.

"ஏண்டி இப்படி கத்தித் தொலையுற. அமைதியா பேசத் தெரியாத உங்களுக்கெல்லாம். பொறந்தன்னைக்கே பொதைச்சு தொலச்சிருக்கலாம்ல. இந்த பால குடிச்சிட்டு தான் நாளைக்கு போய்  எல்லாத்தையும் பொரட்டி போறனா? எடுத்துட்டு போடி" என்ற வார்த்தைகளால் மனம் அலையடித்துக் கொண்டிருந்தது. சில நொடிகள் அப்படியே அம்மாவை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். என்னுள் கொந்தளிக்கும் அத்தனை வார்த்தைகளையும் அவள் அறிவாள். இருந்தும் ஏதும் நடக்காதது போல என் எதிர்ப்பும் கோபமும் எந்த பக்கமும் வெளிப்பட்டு விட முடியாதபடி ஒரு சொல்லெடுப்பாள். அது மேலும் என்னை கோபமுறச் செய்தாலும் கோபத்திற்கான குவிமையத்தை இழந்து விடுவேன். பாலை எடுத்துக் குடித்தேன்.

"உள்ள வந்து படு. பனில கெடந்தன்னா அப்புறம் ஆஸ்பத்திரிக்கு அழணும்" என்றவாறே உள்ளே சென்றாள். இன்னும் என்னை சிறுவனாக அவள் கட்டுப்பாட்டில் இருப்பவனாக எண்ணச் செய்யும் பாவனை அந்த வார்த்தைகள். குணசேகர் முகம் நினைவில் எழுந்தது. உலகின் கட்டக்கடையனாக என்னை உணர்ந்தேன். நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே கை முட்டியால் ஓங்கிக் சுவற்றை குத்தினேன். வலி மெல்லப் பரவி ஒரு நிம்மதியை உருவாக்கியது.

தொடர்ந்து வாழ்க்கை நிறமிழந்து வருவதாகப்பட்டது. சனி ஞாயிறு இரு தினங்களும் விடுமுறை என்றாலும் ஞாயிற்றுக்கிழமைகளின் விடியல் வித்தியாசமாகவே இருக்கும். புதுமையான அனுபவங்கள் ஏதுமில்லை தான். அப்பாவுடன் கறிக்கடைக்கு செல்வது கிரிக்கெட் மாலைத் திரைப்படம் என இன்று யோசிக்கையில் வழக்கமாகத் தெரியும் அந்த நாளை அழகாக்கியது எது? அப்பா தான். எழுந்ததும் முதல் நினைவு அவருடையதாகவே இருக்கும். ஞாயிறன்று மட்டும் இனிமையும் விரிவும் கொண்ட மனிதராக நடந்து கொள்ளும் அவரை மட்டுமே இன்று நினைவிருக்கிறது. என் எதிரே களைத்துச் சோர்ந்து நரைத்த தலையுடன் வானை வெறித்தபடி அமர்ந்திருக்கும் இந்த ஜடத்திற்குள்ளா அவர் இருந்தார். அவருக்குத் தெரியாதது எதுவும் இருக்க முடியாது என்ற நம்பிக்கை உடையத் தொடங்கிய பின்னே நான் வாழத் தொடங்கினேன். அதுவரை வாழ்ந்தது என் வாழ்க்கை கிடையாதா?

"தேவடியாப் பயலே அன்னிக்கு எங்கிட்ட என்ன கேட்ட? பொம்பள கூட படுக்க பயமான்னா?" வெகுநேரம் மௌனமாக குடித்துக் கொண்டிருந்தவன் திடீரெனப் பாய்ந்தான்.

சட்டென நிதானப்படுத்திக் கொண்டு "தன்னை பத்தி யோசிக்கிறவன் குழந்தை பெத்துகிறது மாதிரி அயோக்கியத்தனமெல்லாம் பண்ண மாட்டான் மணி. என்னைப் பொறுத்தவரை என் பையனோ பொண்ணோ செய்யக்கூடாதுன்னு நெனைக்கிற ஒன்ன முதலில் அப்பன் செய்யாம இருக்கணும். குடிக்கிற எந்த அப்பனுக்கும் பையனத் தண்ணி அடிக்காதடான்னு சொல்ற உரிமை தார்மீகமா இல்லாம ஆயிடுது. தன்னை மறைச்சி ஒளிச்சு நெளிச்சு ஒரு அப்பன் தன்னை பத்தி பிள்ளைக்கு குடுக்கிற சித்திரம் ரொம்பவே ஆபாசமானது. அந்த ஆபாசத்துக்கு துணை நிக்கிறது தான் பெரும்பாலும் அம்மாக்கள் இங்க செய்றது" அவன் குரல் இடறியது. தன்னுடைய நொய்மையான இடம் நோக்கி அவன் நகர்ந்து கொண்டிருந்தான்.

"ப்ரீ மேரிட்டல் செக்ஸ் பத்தியோ தொடர்புகள் பத்தியோ நீங்க பசங்கள்ட்ட சொல்ல வேண்டாம். அட்லீஸ்ட் அவன் வளந்த பெறகாவது ஒழுங்கா இருக்கலாம்ல. பத்து வயசுப் பையன் குடிக்கவே மாட்டார்னு நெனச்ச அவனோட அப்பா அம்மாவோட சேர்ந்து குடிச்சிக்கிட்டு போர்னோகிராபி பிலிம் பாக்கிறது நேர்ல பாக்கிறது அவன எப்படி பாதிக்கும்ணு உனக்கு புரியாதுடா . ஏன்னா உன்ன பெத்ததுங்க எல்லாத்தையும் கவனமா பண்ணி இருக்குதுங்க" என்று பைத்தியம் போல சிரித்தான். என் தலை சூடாவதை உணர முடிந்தது.

"யோக்கியங்கிறவன் மத்தவனுக்கு தெரியாம தன்னோட ஆசைகளை நிறைவேத்திகிறவன். அவ்வளவு தானே" என்று மீண்டும் சிரித்தான்.

"ஒவ்வொரு தம்பதிகள்ட்டயும் நான் கேக்குற கேள்வி இதுதான். உங்க பிள்ளைக்கு நீங்க யோக்கியமா இருக்கீங்களா. நிச்சயமா கிடையாது. அந்த குற்றவுணர்வை போக்கிக்கத் தான் உங்க முட்டாள்தனமான மூளைக்கு எது நல்ல ஸ்கூல்னு தோணுதோ அங்க போய் எலும்பு துண்ட கடிக்கிற நாய் மாதிரி  நிண்ணு சீட்டு வாங்குறீங்க. லட்ச கணக்குல செலவு பண்றீங்க. குழந்தைகளுக்காக உங்களையே தேய்ச்சுகிறதா அசிங்கமா வேஷம் போடுறீங்க. உங்ககிட்ட அயோக்கியத்தனம் இருக்கிற வரைக்கும் உங்க பிள்ளை அயோக்கியனத்தான் உங்கள கஷ்டப்படுத்துறவனா தான் இருப்பான். அப்படி அவன் இருக்கிறது தான் சரி. முள் செருப்புல நடக்கிறதோ முட்டி போட்டு வேண்டிகிறதோ இல்ல உங்க பிள்ளைங்கள்ட்ட மன்னிப்பு கேளுங்க" என்ற போது முழுதாகவே அவன் உடைந்து விட்டான். வெகு நேரம் இரு கைகளாலும் தலையை மாறி மாறி அறைந்து கொண்டவன் திடீரென மதுப்புட்டியை எடுத்து ஒரே மூச்சில் குடித்துத் தீர்த்தான். பெரிதாக ஏப்பம் விட்டவன் மேசையில் சாய்ந்து விட்டான்.

திடீரென எழுந்து"கேட்க மாட்டீங்க. நீங்க யாரும் மன்னிப்பு கேக்க மாட்டீங்க. பெத்தவங்க பாவம் புள்ளைய தொடருங்கிறது ஒரு பழங்குடி நம்பிக்கை தான். ஆனா நீங்க பண்ற மொத்த செலவும் அந்த பழங்குடி நம்பிக்கைய மறுக்கத்தானே. உங்க புள்ள எதுவா வேணுன்னாலும் ஆகலாம். எந்த உச்சத்தை வேணுன்னாலும் தொடலாம். ஆனா எல்லாத்துக்கும் அப்புறம் உங்கள நம்பின பாவத்துக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்" என்றவாறே மீண்டும் படுத்துக் கொண்டான்.

பெருமூச்சுடன் எழுந்து வீட்டிற்குள் சென்றேன். அனலடிப்பது போன்ற வெக்கை. இருந்தும் தினமு‌ம் தூங்கும் இடம் என்பதால் அங்கேயே படுத்துக் கொண்டேன். தூக்கமும் வரவே செய்கிறது.