Wednesday 23 November 2016

நீச பூசை - சிறுகதை

பாண்டவையின் கரைகள் நெருங்கி வளர்ந்த மரங்களால் இருளடைந்து உயர்ந்திருக்கும். வெயிலுக்குதந்தவாறு உடல் நெளித்து பாண்டவையின் மையம் கடந்து நீண்டிருந்தது உடலில் பெரு வளையங்கள் பரவிய தென்னை. மேகங்களின்றி தனித்திருக்கும் உச்சியின் சூரியனை நோக்குவதற்கென சேவுராயன் வழக்கம் போல் அத்தென்னையின் உடல் மையத்திற்கு வந்து நின்றான்.இடுப்பில் கை வைத்து அண்ணாந்து நோக்கி கண்கள் உச்சியில் நிலைத்த போது வழியத் தொடங்கியிருந்தன. அழுகை தொற்றிக் கொள்வதென்பதே அவனின் முதல் அறிதலாக இருந்தது. ஊர் மன்று கூடும் போதும் பிணத்தின் முன்னும் எழும் ஓலங்கள் நெருப்பு போல பற்றிப் பரவுவதை அவன் கண்டிருக்கிறான். விழிநீர் காய்ந்த முகத்தில் எஞ்சும் பிசுக்கென மூக்குறிஞ்சல்களாக பெருமூச்சுகளாக சிரிப்பாக அழுகையொலி பிசுபிசுப்பதை அவன் கண்டிருக்கிறான். கூர்ந்து நோக்கியதாலேயே அழுகை அவனிடம் இல்லாமலாயிற்று. கூர்ம கிருஷ்ணப்பனின் ஊட்டுப்புரையில் உணவு திருடியதாக அவன் தகப்பன் தலை சீவப்பட்டு ஊர் முற்றத்தில் மூன்று நாட்கள் ஊன்றப்பட்ட போதும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவன் தாய் அம்மணப்பித்தியாக நெஞ்சிலறைந்து கொண்டு ஊர் கிணற்றில் விழுந்ததைக் கண்ட போதும் அவன் அழவில்லை. பெற்றோர் கடனாக சேவுவின் தந்தை திருடிய உணவுக்கு அடிமையாக உழைத்த போதும் தாய் விழுந்து இறந்து மாசுபடுத்திய கிணற்றை ஒற்றை ஆளாக நின்று சுத்தப்படுத்திய போதும் அவன் அழவில்லை. மாறாக ஒரு நிமிர்வு அவனுள் எழுந்தது. கிணற்றுக்குள் நீர் வரும் வழிகளை அடைத்து நாற்பதடி மட்டத்திற்கு நீர் நின்ற கிணற்றை ஒற்றை ஆளாக இறைத்தான். அக்கிணற்றைப் பயன்படுத்திய வேளிர் தெருக்களுக்கும் தச்சர் தெருக்களுக்கும் பகல் முழுவதும் நீர் விநியோகம் செய்தான். பின்னிரவு நிலவு உச்சிக்கு வந்த பின் வந்து படுக்கையில் குறுகிய சந்து வழியாக வெளியேறத் துடிக்கும் திரளென அவன் உடலின் ஒவ்வொரு நரம்பும் உடல் நெருக்கி முண்டியடித்தது. யாருக்கோ நடப்பதென உடலை சித்தம் கவனித்துக் கொண்டிருக்கும். முதற்பறவையின் குரலெழுந்ததும் கண் விழிக்கும் முன் வலி விழித்து விடும். அதனை ஏமாற்றி எப்படி எழ நினைத்தாலும் எதிர்பாராத ஒரு திசையிலிருந்து தாக்கும். அதனுடன் சில நாட்கள் போராடியவன் அவ்வலியை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினான். கிணற்றை தூய்மை செய்து அடைப்புகள் திறக்கப்பட்டு நீர் மேலேறி வந்தது. விளிம்புகளில் கால் வைத்தமர்ந்து குனிந்து நோக்கினான். கிணற்றினுள் அவன் உருவத்திற்கு ஒவ்வாது ஒரு உருவம் அவனை அண்ணாந்து நோக்கியது. மெல்ல உடலை சமப்படுத்தி எழுந்து இடையில் கை வைத்து குனிந்து நோக்கினான். தசை புடைத்தெழுந்த ஒருவன் அவனை நோக்கிப் புன்னகைத்தான். யாரவன்? யாரவன்? என எண்ணி எண்ணி ஏங்கினான் சேவுராயன். பாண்டவையாற்றின் குறுக்கே நீண்டிருக்கும் அத்தென்னையின் நினைவெழுந்தது. வளியடங்கிய மத்தியப் பொழுதில் மெல்ல நடந்து தென்னையின் மையத்திற்கு வந்து தன்னை நோக்கினான் சேவுராயன். பளபளக்கும் கரிய மார்புடன் தன் முன்னே தலைகீழாக விழுந்து கிடப்பவனை நோக்கி புன்னகை செய்தான். அப்புன்னகை அவன் முகத்தில் என்றுமென நிலை கொண்டது.

வேளிர்களும் தச்சர்களும் இணைந்து தங்களுக்குப் பொதுவென ஒரு தலைவனை தேர்ந்தெடுப்பது வழக்கம்.பாண்டவையில் ஆறு காத தூரம் நீந்திக் கடக்கும் ஊர்த்தலைவர்களின் பிள்ளைகள் மட்டும் கலந்து கொள்ளும் அச்சடங்கில் யார் வெல்ல வேண்டுமென முன்னரே முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பட்டம் சூட்டப்படும். பட்டம் சூட்டப்பட்ட சிறுவன் மணங்கொள்வது வரை அவன் சார்பாக ஏற்கனேவே இருக்கும் ஊர்த்தலைவரான அவன் தந்தை காணியக்காரராக இருப்பார். அந்த வருட போட்டிக்கான முரசறையப்படுவதை சேவுராயன் கேட்டான்.

அதே புன்னகையுடன் மன்றடைந்து "முரசறைவோரே காத்தனின் மகனான சேவுராயன் இவ்வருடம் போட்டியில் கலந்து கொள்கிறான். குறித்துக் கொள்ளுங்கள்" என்றான். ஒரு விநாடி திகைத்த மன்றாளுநர் பின் சிரித்து "அம்மையப்பனை இழந்தவனுக்கு இதையெல்லாம் சொல்லிப் புரிய வைப்பதில்லையா? சேவுராயரே இது கிணற்றில் நீரள்ளிக் கொட்டும் பணியல்ல. பாண்டவையில் ஆறு காத தூரம் நீந்த வேண்டும். பாதியில் கை சோர்ந்து கரை ஏறினாலோ மூழ்கி மயங்கினாலோ அடுத்த முழு நிலவன்று நவ கண்டம் செய்து இறக்க வேண்டும் அறிவீரா?" என்றார் ஏளனத்துடன்.

"நான் களமிறங்குகிறேன். என் உயிர் குறித்து கவலை கொண்டதற்கு வந்தனம் மன்றாளுநரே" என விலகினான்.

வேளிர்த்தலைவரின் மகன் முனியும் தச்சர் தலைவரின் மகன் காத்தனும் இரட்டையர்கள். பெருஞ்சினத்தாலும் பேராணவத்தாலும் இயக்கப்படுபவர்கள். பதினோறு வயதே ஆன முனி அவ்வூரின் அனைத்து மல்லர்களுடனும் தோள் கோர்ப்பான். அவன் வயதே உடைய காத்தன் கூர்ம கிருஷ்ணப்பனின் அவையில் அத்தனை அறிஞருடனும் சொல் கோர்ப்பான். விலகி நீந்தினாலும் நீரினுள் இருவரும் புணர்ந்து நெளியும் நாகங்களென்றே தெரிவர். மூவரே கலந்து கொள்ளும் நீச்சல் போட்டி தொடங்கியது. அம்பென நீண்ட உடல் கொண்டிருந்தான் காத்தன். விரிந்த மார்பனெனினும் குறுகிய இடையும் நீண்ட கால்களும் கொண்டவன் முனி. சேவுராயன் கரையில் ஏறியதுமே தெரிந்தது அவனே வெல்வான் என. மின்னும் அவன் உடற்கருமையை விட்டு விழி விலக்க முடியாமல் மயங்கி நின்றனர் கூட்டத்தினர்.நீரில் பாய்ந்த அம்பென மூவரும் உடல் குறுக்கி பாண்டவையினுள் மறைந்தனர். மத்தகம் தூக்கிப் பிளிறும் யானையென முனி பாய்ந்து நீந்தினான். நீரினுள் நுழைந்தவன் யாரும் ஊகிக்க முடியாத ஓரிடத்திலிருந்து மேலெழுந்து கர்ஜித்தான். காத்தன் நீர்ப்பாம்பென நெளிந்து நீந்தினான். சேவுராயன் புன்னகைக்கும் முகம் சூரியனை நோக்கித் திறந்திருக்க மல்லாந்து நீந்தினான். தலைகீழென அவன் முன்னே தென்னை தெரிந்தது. ஒரே அசைவில் உடல் திருப்பி நீரில் உடலை நேராக்கி எம்பினான். மறுகணம் தென்னையில் நின்றிருந்தவன் அடுத்தகணமே பல அடிகள் தாண்டி நீரினுள் விழுந்தான். அனல் கொட்டப்பட்டது போல் முனியும் காத்தனும் முகம் சுருங்கினர். கொலைத் தெய்வம் குடியேறியவர்கள் என அவர்கள் முன் பாய்ந்தனர். சேவுராயன் அவர்களைக் கண்டதாகவேத் தெரியவில்லை. நீள் பாய்ச்சல்களால் அவனை முன் கடந்து சென்றனர். நீள்நீச்சல் பயின்ற சிலரைத் தவிர அனைவர் முகங்களும் மலர்ந்தன. முனியோ காத்தனோ வெல்வது அவர்களுக்கு உறுதியாகியது. கரையில் இருப்பவர்கள் தொடர முடியாத வேகத்தில் இருவரும் நீந்தினர். பழைய நினைவென அந்தி மலரென சேவுராயன் சட்டென அவர்கள் நினைவிலிருந்து உதிர்ந்திருந்தான். அவர்கள் மூன்று காத தூரம் கடந்திருந்த போது சேவுராயன் ஒரு காத தூரமே கடந்திருந்தான். ஆனால் மெல்ல மெல்ல முனியும் காத்தனும் விரைவழியத் தொடங்கினர். முனி சினத்தால் பேருடல் எழுந்தமைய பெரு மூச்சுகளாக விட்டபடி நீந்திக் கொண்டிருந்தான். காத்தன் களைப்பினை முகத்தில் காட்டவில்லையெனினும் அவன் கைகள் சோர்வது ஒரு சில முறையற்ற உந்துதல்களில் வெளிப்பட்டது. இருட்பாம்பென அவர்கள் நினைவுகளில் மீண்டெழுந்து வந்து கொண்டிருந்தான் சேவுராயன். அனைவர் சித்தங்களிலும் முன் பாய்ந்து சென்றவர்களை திரும்பிக் கூட நோக்காதவனாக நீந்திக் கொண்டிருந்த சேவுராயன் அவ்வெண்ணங்களே உருக்கொண்டெழுவது போல தூரத்தில் ஒளிப்புள்ளியெனத் தெரிந்தான். நீர்வளைவுகள் ஒன்றிணைந்து அவனை பிரசவித்து வெளித்தள்ளுவது போல சேவுராயன் அதே புன்னகைக்கும் முகத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தான். முனியும் காத்தனும் கை தளர்ந்து மூழ்கிக் கொண்டிருந்தனர். கை தூக்கிவிட முயன்றவர்களை அவர்களின் தாதையர் தடுத்தனர். வலக்கையால் தலையறுத்து விழும் மைந்தர்களை அவர்களால் கற்பனிக்க முடியவில்லை. நீர்க்கொடிகளை அறுத்து தன் இரு கரங்களிலும் சுற்றிக் கொண்டான் சேவுராயன். முனியையும் சாத்தனையும் அக்கொடிகளால் பிணைத்து தன்னுடன் இழுத்தான். தலை மட்டும் மேலெழுந்து வர அவனுடன் மெல்ல நீந்தினர் இருவரும். சொல்லவிந்து பார்த்திருந்த கூட்டத்தில் பெண்கள் விசும்புவதும் ஆண்களில் சிலர் கை கூப்பி கண்ணீர் வழிய நிற்பதும் தெரிந்தது. கரையடைந்ததும் இருவரின் தசைகளையும் தளர்த்தி தன் உடல் வெம்மையுடன் இறுக அணைத்துக் கொண்டான் சேவுராயன். கூர்ம கிருஷ்ணப்பர் அவனுக்கு பட்டம் சூட்டினார். அவனை மார்போடணைத்து "பெருங்குடி வேளிர்களே பெருந்தச்சர்களே உங்கள் குலங்கள் மட்டுமல்ல என் செங்கோலும் இவனால் காக்கப்படட்டும் இனி" என கண்ணீர் உகுத்தார். அன்றிரவு முதலே ஒற்றை உயிரென மாறிய காத்தனையும் முனியையும் சேவுராயனையும் கொல்ல கூர்ம கிருஷ்ணப்பனின் ஒற்றர்கள் முயன்றனர். வலுவான தலைமை உடையவர்களிடம் கப்பம் வசூலிப்பது கடினமானது என அறியாத ஆட்சியாளர் எவர்?

கருவறைக் குழவிகளென அவர்களைக் காத்தது பாண்டவைபுரம். வாரம் ஒரு ஒற்றன் கொல்லப்பட்டு பாண்டவைக் கரையில் அடக்கம் செய்யப்பட்டான். சேவுராயன் அனைத்தையும் அறிந்தே இருந்தான். உச்சிப்பாறையில் பெய்த நீர் உடன் காய்வது போலவே அவன் நோக்கி இருக்கவே முனியும் காத்தனும் அவன் சிந்தை விட்டகன்றனர். அவர்களை தன் அகம் விலக்குகிறது என்ற உணர்வு தனக்குள் எத்துயரையும் அளிக்கவில்லை என்ற எண்ணம் கூட தனக்குத் துயரளிக்கவில்லை என எண்ணி வியந்தான். எதற்கும் கலங்காமல் தன்னுள் தன் அகம் இரும்புக் குண்டென கிடப்பதை உணர்ந்தான். அத்தனை நாள் அவர்களை நெருங்கி இருந்தது கூட அவர்கள் உயிர்காத்தது அவர்களுக்கு துயரளித்து விடக்கூடாது என்பதற்காகவே என உணர்ந்த போது இயல்படைந்தான்.

பதினெட்டு வயதான போது தலைமையேற்று அமர்ந்தான் சேவுராயன். முன்னரே முடிவு செய்து பெருந்தொகையை அபராதம் விதித்தே தீர்ப்பளித்துக் கொண்டிருந்தது தச்சர்களுக்கும் வேளிர்களுக்குமான பொது மன்று. சேவுராயன் அவை அமர்ந்ததும் ஒவ்வொரு குற்றத்தையும் நீண்ட நேரம் விசாரித்தான். பொழுது புலர்கையில் கூடி கதிரெழுவதற்கு முன்னரே முடிவுற்ற அவை நாள் முழுவதும் நீண்டது. திங்களுக்கு ஒரு முறை கூடிய அவையை வாரத்துக்கு ஒரு முறையென மாற்றினான். தீர விசாரித்து இருபது சவுக்கடிகளை ஒருவனுக்கு தண்டமென சேவுராயன் விதித்த போது அவை விதிர்த்தது. கூர்ம கிருஷ்ணப்பனின் அவைக்கும் ஓலைகள் அனுப்பப்பட்டன. பேரத்திற்கு ஒப்பவில்லையெனில் தஞ்சைக் களஞ்சியத்துக்கு நேரடியாகக் கூலமும் தச்சுப் பொருட்களும் சென்று சேருமெனக் குறிப்பிட்டிருந்தான். குருதியை நிகர் வைக்க கூர்மர் விரும்ப மாட்டார் என்ற வரியை அவர் படித்த போது மழுவேந்தி நிற்கும் முனியும் வில்லேந்தி நிற்கும் காத்தனும் அவர் நினைவில் எழுந்தனர். கூர்ம கிருஷ்ணப்பர் பணிந்தார்.

ஒரே அவையில் மூவருக்கும் மணம் முடித்தனர் மூத்தோர். விரைவு விரைவு என ஓடிய புரவி எல்லையைத் தொட்டதும் திகைத்து நின்றது. பகையும் வெறியும் வேட்கையும் நிறைந்த விழிகளையே கண்டிருந்தவன் அவன் கரம் பற்றியவளின் கனவு விழிகளைக் கண்டு போது திகைத்தான். வள்ளி என்றழைத்தனர் அவளை. அத்தனை தூரம் ஓடியது அவளிடம் வருவதற்காகவே என்றுணர்ந்தான் சேவுராயன். வெடித்துப் பறக்கும் மென்மையான இளவம் பஞ்சினை தடித்து முட்கள் செறிந்திருக்கும் அதன் அடிமரத்துடன் சேர்த்தே எண்ணிக் கொள்வான். எல்லா மென்மையும் ஏதோவொரு வன்மையால் நிகர் செய்யப்படுகிறது. கூந்தலில் நாசிக்கும் உதட்டுக்கும் இடையில் பூத்த வியர்வையில் பளபளக்கும் தோள்களில் முதுகில் சிறுத்துருண்ட முலைகளில் சதையற்ற இடையில் கீழாடை அழுந்தியதால் இடையெழுந்த வரியில் தொடைகளில் புயங்களில் கால்களின் பின்கதுப்பில் பாதத்திற்கு மேலெழுந்த மென் வரிகளில் வெள்ளையொளிர்ந்த பாதங்களில் என அவளைத் தொட்டுத் தொட்டுத் தேடினான் வன்மையை. குழம்பி அவன் தவித்திருக்கையில் அவன் தலைகோதி இழுத்து தன்மேல் அமைத்துக் கொண்டு அவள் சொன்னாள் "நீ" என. அவன் கேள்விகளுக்கு விடை கிடைத்தது. அன்று முதல் தன்னை தனித்துணராமல் ஆனான்.

கம்பளத்தில் அமர்ந்த பெண்கள் எழுந்து சென்ற பின் கலைந்திருந்த கம்பளம் கொண்டே அவள் அமர்ந்திருந்த இடம் அறிந்தான். புறங்கையால் முன் நெற்றி வியர்வையை துடைத்தவளின் கை சுவர்களில் தீண்டியிருந்தாலும் அவள் மணம் உணர்ந்தான். அவளிடம் சொல்லுரைத்து மீளும் பெண் முகம் கொண்டே அவள் உரைத்த சொற்களை அவளிடம் சென்று கூறுவான். காலையில் கண் விழிக்கையில் மொட்டு விரியும் தருணத்தை நோக்கி இருப்பவன் என அவள் முன்னே கண் இமைக்காமல் அமர்ந்திருப்பான். எழுந்தவளை மூச்சு முட்ட முத்தமிட்டு மீண்டும் படுக்க வைத்து விட்டு மலர் கொய்து வருவான். அமுது சமைத்து வருவான். உடை எடுத்து வருவான். அவளைக் குளிப்பாட்டி ஒப்பனை செய்வான். "நிறைந்திருக்கிறேன்" எனச் சொல்லி அவன் தோள் சாய்வாள். "எப்படி அறிகிறீர்கள்?" என்பாள். "கனவுகள் அனைத்தையும் கண் திறந்து நோக்கும் முதற் பொருளில் விட்டு விலகுகிறாள் பெண். அதனால்தான் உன் விழிகளில் ஊறிய கனவுகளைத் தாங்கும் முதற்கலமாய் என் விழிகளை அமைக்கிறேன். அவை சொல்கின்றன நீ என்ன விழைகிறாய் என" என்பான். அவளுக்குப் பிடித்த அவன் சமைத்தெடுத்த அவளை அவனுள் செலுத்தி விட விழைபவள் என அவனை அணைவாள்.

அவனுடைய இன்னொரு அசைவென்றே தன்னை மாற்றிக் கொண்டாள். மன்றில் பெரும்பாலும் அவனுக்கு எதிர்ச்சொல் எடுக்கும் இறுதி ஆளாக அவளே இருப்பாள். அவன் தீர்ப்புகளும் முடிவுகளும் அவளால் இன்னும் கூர்மையாயின. மூன்றாவது முறை குருதி வாயில் திறக்காத போது அவள் உறுதி கொண்டாள். அவனைச் சூடியிருந்த அவள் சித்தம் அவள் வயிற்றில் ஒரு பங்கினை குவித்த கணத்தில் அவன் இல்லம் நுழைந்தான். மேழி பிடிக்கத் தெரியாதவனாய் இருந்தவனை அவளே "குடிகளின் தொழில் தெரியாதவன் அவர்களை ஆளலாம். ஆனால் ஒன்றிணைக்க முடியாது. உன் சொல்லை வேளிரில் மேழியாலும் தச்சரில் உளியாலும் நிறுவுவது வாளால் நிறுவதை விட எளிது" என்றாள்.

உழைத்துக் கலைத்திருந்தவனின் உள்ளம் அவள் மலர்ந்த முகத்தை முன்னரே எதிர்பார்த்து மலர்ந்திருந்தது. அவள் மைந்தனை நினைத்து மலர்ந்திருந்தாள். அந்நொடி அவளுக்கு அவனும் ஒரு பொருட்டெனப் படவில்லை.
அவர்கள் விழிகள் அன்று சந்தித்த போது தெய்வங்களின் பெரு மூச்சு காற்றொலிகள் எனச் சூழ்ந்தது. எளிதாக விலகுகவது இறுகப் பற்றியதாகவே இருந்தாக வேண்டும். ஏனெனில் அங்கு இருப்பது ஒரு வாய்ப்பே. வாய்ப்பினை உரசிப் பார்க்காத ஒரு உள்ளமும் இங்கில்லை. அவர்களும் உரசினர். அன்றிரவு அவள் மேலே அவன் கிடக்கையில் அவனுக்குத் தெரியும் எனினும் "மைந்தன்" என உணர்ச்சியை வடிகட்டிய குரலில் சொன்னாள். பொறாமையா பயமா வெறுப்பா ஆற்றாமையா துயரா என வகுத்து விட முடியாத தொணியில் "ம்" என்றான். அக்கணமே அவனை உதறி எழுந்தாள்.

"கொன்று விடாதே கொன்று விடாதே" என அழுது கூப்பிய கைகளுடன் சுவர் மூலையில் சாய்ந்தாள். எங்கோ இருந்தவன் விழுந்து மண்ணில் அறைபட்டது போல அதை அறிந்தான். அவன் தனிமையைப் போக்க எழப் போகும் ஒரு உயிர். அவன் உதிரம் பிறந்தெழப்போகிறது. அரிய பொருளை கை நழுவ விட்டவன் போல அவளை நோக்கி ஓடினான். ஆமையென தன்னை உள்ளிழுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் வள்ளி. நாய் போல ஆமையைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். அவனை நோக்கி அவள் விழி திருப்பவே இல்லை. உடலொட்டி குருதி உறிஞ்சும் அட்டையென அவ்வெண்ணம் அவனுடனே இருந்தது. ' இவ்வளவு மன்றாடியும் அவள் கனியவில்லையெனில் அது அவள் தவறே' என எண்ணிக் கொண்டிருந்த போது நடுக்குறாது அனைத்தையும் நோக்கிக் கொண்டிருக்கும் ஒன்றை தன்னுள் மீண்டும் உணர்ந்தான். இவ்வளவுக்குப் பிறகும் தன் விழியில் ஒரு துளி நீர் கூட வழியவில்லை என உணர்ந்த போது அதிர்ந்தான்.

அவள் வயிறு பெருத்தது. உணவெடுப்பது குறைந்தது. சொல்லற்றவள் ஆனாள். முகம் எப்போதுமே ஈரமாகி பிசுபிசுத்தது. குழந்தை வீரிட்ட போது உடல் பதைக்க உள்ளே ஓடினான் சேவுராயன். அழுத கணமே குழந்தையின் வாயோரங்கள் கிழிந்து குருதி வழிந்தது. அவன் கை படும் முன்னே இறந்தது. குழந்தை இறந்த கணமே விழிகளில் வெறியும் ஒளியும் எஞ்சியிருக்க வள்ளியும் இறந்தாள்.

முழுக்க முழுக்க தன்னை பணிகளில் முக்கினான் சேவுராயன். அப்போதும் அவன் சித்தம் தனித்துக் கிடந்து துள்ளியது. அவன் ஊர் எல்லைகள் விரிந்தன. அவனைக் கட்டுக்குள் வைக்க கூர்ம கிருஷ்ணப்பர் முயன்று தோற்றார். சேவுராயன் மேலு‌ம் மேலும் தனிமை கொண்டான். நிலமும் காடும் அவனை நன்கறிந்தன. எதிர் வரும் அவன் ஊரார் வாய் பொத்தி தலை குனிந்து பணிந்து விலகிச் சென்றனர். முப்பது தொடும் முன்னே குல மூதாதை என்றானான். சிறு குழந்தைகள் அவனை தொல்லை செய்து விடக் கூடாதென குழந்தைகள் அவன் விழி எட்டும் தொலைவில் அனுப்பப்படவில்லை. ஆனால் அவன் ஏங்கியது அதற்காகவே. மனைவியோடு குழந்தையைத் தூக்கிச் செல்லும் ஆணைப் பார்க்கையில் அவனை வெட்டி எறிய வேண்டுமென வெறி எழும். பின் அவ்வெண்ணத்தை அஞ்சுபவன் என அவர்கள் மணமான இளையோரையே பார்க்காமலானான். அவனை நிலம் கற்கும் வேளிரும் மரம் கற்கும் தச்சரும் சொல் கற்கும் மாணவரும் படைக்கலம் கற்கும் இளையோரும் மட்டுமே அணுகினர். பின் பெண்களும் குழந்தைகளும் அவனைப் பார்க்கவே கூடாது என வகுத்தனர். கூர்ம கிருஷ்ணப்பரின் ஒற்றர்கள் சேவுராயன் நிலையழிந்திருப்பதை உணர்ந்தனர். முனியும் காத்தனும் ஊரகன்ற ஒரு நாளில் அவன் உணவில் நஞ்சு கலந்தனர். அந்நஞ்சை உண்டு ஒரு நாழிகை உயிர் தாங்குபவரே அதிகம் எனும் நிலையில் மூன்று நாழிகை படைக்கலம் கற்பித்தான் சேவுராயன். ஏதோ நினைவெழுந்தவனாய் ஒற்றைத் தென்னை நோக்கி நடந்தான்.

உச்சியின் சூரியனைக் கண்டு அவன் விழிகள் வழிந்தன. என்ன எண்ணிக் கொண்டிருந்தோம் என எண்ணினான். ஆம்! அழுகை ஒரு விழியிலிருந்து பரவும் என. வெய்யோன் அழுது கொண்டிருக்கிறானா? 'அவன் அழுகையை நான் மட்டுமே உணர்வேன்' என எண்ணிக் கொண்டான். பின்னர் 'தனித்திருக்கும் இப்பாண்டவை இந்த ஒற்றைத் தென்னை என அவன் அழுகையை இவர்களும் அறிவர்' என எண்ணினான். பாண்டவை பெறுகி ஓடிக் கொண்டிருந்தது. முன்னிரவின் கடுமழையினால் தென்னையின் வேர்ப்பிடிப்பு இளகியிருந்தது. பின் ஏதோவொரு கணத்தில் தென்னை பெயர்ந்து பாண்டவையாற்றில் விழுந்தது. வெய்யோன் ஒளியில் பாண்டவையின் அலைகளில் தென்னையில் மிதந்தபடி சென்ற சேவுராயனை பின்னர் யாரும் காணவில்லை.

வேளிரும் தச்சரும் ஊர் எல்லையில் சேவுராயனுக்கு கோவில் எழுப்பி நிறுவினர். மெல்ல மெல்ல கூர்ம கிருஷ்ணப்பரின் ஆளுகைக்குள் பாண்டவைபுரம் மீண்டது. ஆனால் சேவுராயனை வணங்கி மீள்கையில் அவர்கள் மாறியிருப்பார்கள். ஆண்டுக்கொரு இளைஞனில் சேவுராயன் சன்னதம் கொண்டெழுந்து கூட்டத்திற்கு அப்பால் நோக்கி கதறிய பின் தலையை அறுத்துக் கொண்டு மண் விழுந்து இறந்தான். கூர்ம கிருஷ்ணப்பரின் பெயரன் கோலப்பர்  காலத்தில் சேவுராயன் ஆலயமும் அவர்கள் வசம் வந்தது. பிராமணர் பூசை செய்யும் தளமாய் ஆனது. குழந்தைகளைக் கொஞ்ச விரிந்த கைகளும் விடாய் கொண்ட விழிகளுமாய் அமர்ந்திருந்தான் சேவுராயன். வைதீகர்கள் வரத் தொடங்கிய பின் ஆலயத்திற்கும் பெண்களும் வரத் தொடங்கினர். விழி விடாய் தீர குழந்தைகளை நோக்கி நின்றார் சேவுராயர்.

ஆங்கிலம் கற்ற வைதீகர் பழுத்த கனிகள் மரம் நீங்குவதைப் போல் அவ்வூர் நீங்கினர். சேவுராயர் மீண்டும் தனிமை கொண்டார். வேளிரின் கனவுகளில் தனித்தலைந்தார். சுப்ரமணியன் என்ற ஒரு பிராமணன் மட்டும் காலம் தவறாது அவருக்கு பூசை செய்து வந்தான். மனைவியை இழந்த ஒற்றைப் பிராமணன் என்பதால் ஊரே அவனை வெறுத்தது. அவன் விரும்பும் அவனை விரும்பிய ஒரே உயிராக அவன் மகனிருந்தான். ஆலயத்திற்கு அவனையும் அழைத்து வந்தான் சுப்ரமணியன். ஆசை தீர அவனைப் பார்த்து நின்றார் சேவுராயர். எண்ணையிட்டு அவரை அவன் துடைக்கையில் மெய் சிலிர்த்தார். அபிஷேகத்தின் போது அவர் விழி நீரும் இணைந்தே வழிந்தது. ஒரு நாள் சுப்ரமணியன் மகன் வெளியே விளையாடுகிறான் என விழிமயக்கு கொண்டு ஆலயக் கதவை மூடினார். ஆனால் அவன் உள்ளே இருந்தான். சேவுராயர் அவனை அள்ளி முகர்ந்தார். தலைமேல் தூக்கிக் கொண்டார். இரவு முழுவதும் கதை பேசினர் இருவரும். ஒரு நிமிடம் பேச்சு நின்று மௌனம் சூடவே அவ்வளவு நேரமும் வெளியே இருந்து கதவை ஓங்கி அறைந்த ஒலி கேட்டது.

"சுப்ரமணியா புலரியிலேயே இக்கதவு இனித் திறக்கும். உன் மகன் விடிகையில் வீட்டிலிருப்பான்" என்றார் சேவுராயர் கனிவுடன்.

"இல்லை என் மகனை அயலவன் ஒருவனிடம் விட்டுச் செல்ல மாட்டேன்" என அழுதான்.

"மூடா, நான் உன்னை புரப்பவன்" என்றார் சேவுராயர்.

"ஈன்றவன் என எப்பெண்ணையும் தந்தைப் புணர்வதில்லை" என்றான் பதைப்புடன்.

சேவுராயரின் மனம் இளகி அரைக்கதவு திறந்தது. அக்கணமே விழி மலர்ந்த அந்த தந்தையின் முகம் கண்டு ஒரு கணம் உளம் சுருங்கினார். மைந்தனின் உடல் பாதி வெளியே இருக்க மீண்டும் கதவு மூடியது. இரண்டாய் வகுந்து விழுந்தான் மைந்தன்.

"இனி உனக்கு நீசனே பூசை வைப்பான்" எனச் சொல்லி தன் பக்கம் விழுந்த மைந்தனை எடுத்துக் கொண்டு கிளம்பினான் சுப்ரமணியன்.

உக்கிர விழிகளோடு முதல் முறை சேவுராயனைக் கண்ட போதே அங்கே அன்னையின் பதற்றமும் தந்தையின் தவிப்பும் நிறைந்த ஒருவனை உணர்ந்தேன். மூதாதைகளின் கைகள் நடுங்காமல் இருக்கவே முடியாது என்பது ஒரு அறிதலாக என் முன்னே நின்றது.