Monday, 26 December 2016

மூத்திர தரிசனம் - கதை

நான் அணிந்திருந்த பேண்டின் முதல் பிடிமானம் கொக்கி இரண்டாவது பிடிமானம் பொத்தான். இத்தகைய பேண்டுகளை அணிவதற்கு பெரும்பாலும் நான் விரும்புவதில்லை. இரண்டுமே கொக்கி அல்லது ஒரு பொத்தான் மட்டும் உடைய பேண்டுகளை அணிவதே வழக்கம். அதுவும் தொப்பை பெருத்துக் கொண்டே செல்வதால் சற்றே "பரந்து விரிந்த" கீழாடைகளை அணிவதே எளிமையாக உள்ளது. வழக்கம் போல் டயருக்கு மேலிருக்கும் முண்டுக்கு பயந்து அவ்விருக்கையின் ஜன்னலோரம் காலியாகக் கிடந்தது. அங்கு அமர்ந்ததும் நான் செய்த பெருந்தவறு.

முதலில் பெரிதாக ஒன்றும் வேறுபாடு தெரியவில்லை. மூத்திர தரிசனம் எனும் கதை எழுதும் எண்ணம் இருந்தது. இந்த வரி வரை எழுதி நிறுத்தி இருந்தேன். எனக்கு அப்படித்தான் சிறப்பான ஒரு வரி மனதில் தோன்றிவிட்டால் முதல் வரியிலேயே நிறுத்தி விடுவேன். ஆனால் நிறுத்திய பிறகே என்னை நிறுத்த வைத்தது அந்த நமைச்சல் தான் எனப் புரிந்தது. அலட்சியம் செய்தால் சமாளித்து விடலாம் என்று முடிவெடுத்ததும் தப்பு தான். வயிற்றுக்குக் கீழே கனம் கூடியபடியே வந்தது. ஒரு வித கூச்சமும் தவிப்பும் உடல் முழுவதும் பரவியது.ஜன்னல் இருக்கையோடு அழுத்தமாக ஒட்டிக் கொண்டேன்.

"அயித்தானே அயித்தானே" என தமிழ் தெரியாத பெண்ணின் குரலில் ஒலித்த மூடித் துளையின் வழியே வெளியேறும் நீர் போன்ற குரல் பெரும் பரவசவமைதியை மனதில் உண்டாக்கியது. அந்தப் பாட்டு முடியும் வரை மனதில் அப்பாட்டை நிலைக்க விட முடிந்தது. ஆனால் பாடல் முடிந்து விட்டது. கலவியின் உச்சத்தில் கனவு கலைந்து எழுவது போல பெரும் பதட்டம் தொண்டையைக் கவ்வியது. பேருந்து மணலியைத் தான் தாண்டி இருந்தது. திருவாரூர் செல்ல இன்னும் முக்கால் மணி நேரம் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த போது பயம் மேலு‌ம் பெருகியது.

ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய நிதானத்துடன் நடந்து கொண்டிருந்தன. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடலாமா என்ற எண்ணம் வந்தது. அது மட்டும் கூடாது என முடிவு செய்து கொண்டேன். என் அவசரம் புரிந்தவர் போல் ஓட்டுநர் மட்டும் விரைவாக பேருந்தை நகர்த்தத் தொடங்கினார். பேருந்தின் விரைவு கூடுவது சற்றே ஆசுவாசத்தை அளித்தது. அநேகமாக தமிழகத்தின் மிக மோசமான பேருந்துகள் செல்லும் தடம் இந்த திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ஆகவே இருக்க வேண்டும். எனினும் நான் சென்று கொண்டிருந்தது விரைவுப் பேருந்து என்பதால் ஓரளவு விரைவாகவே சென்றது. இந்த ஆசுவாசங்கள் சற்றே என் பிரச்சினையை மறக்கச் செய்திருந்தன. பிண்ணனியில் "கண்ணுக்குள்ள கெளுத்தி" என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்பாடல் நின்ற போது மீண்டும் பதற்றம் ஏறிவிட்டது.

காலம் துளித் துளியாக அடி அடியாக இசை இசையாக பாடல் பாடலாக பயம் பயமாக கோபம் கோபமாக மூச்சு மூச்சாக அசைவு அசைவாக நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அனைத்தின் மேலு‌ம் வெறுப்பு ஏற்படத் தொடங்கியது. இரண்டு நாட்களாக தொடர்ந்த பேருந்து பயணம். இன்று காலை முதல் குறைவாக தண்ணீர் குடித்தது. மாலையில் மசாலா பால் குடித்தது. கழிப்பறை செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை சோம்பலால் ஒத்திப் போட்டது என ஒவ்வொன்றாக நினைவுக்கு வரத் தொடங்கியது. நாளை முத‌ல் எப்படி இருக்க வேண்டுமென திட்டமிடத் தொடங்கினேன். சீக்கிரம் எழுந்து விட வேண்டும். நடைப் பயிற்சி செய்ய வேண்டும். இடுப்பளவு அடுத்த செண்டிமீட்டருக்கு சென்று விடக் கூடாது அனைவருடனும் இன்முகத்துடன் பழக வேண்டும் என்னால் ஆன உதவிகளை செய்தபடியே இருக்க வேண்டும் பிறனுக்கு ஏற்படும் துன்பங்களை எனதென்று ஏற்று ஆற்றுப்படுத்த வேண்டும் மாலையில் வீட்டிற்கு திரும்பும் போது அலுவலகத்தில் மூத்திரம் பெய்து விட்ட வர வேண்டும் அதாவது அலுவலக கழிப்பறையில்.

இவ்வளவு யோசித்தும் இறுதிச் சொட்டு மூத்திரம் போல சில துளிகள் மட்டுமே காலம் சொட்டியிருந்தது. இக்கணத்தில் இருத்தல் எவ்வளவு சிரமமானது என்பது அப்போது புரிந்தது. மனம் மீண்டும் மீண்டும் திருவாரூரின் கட்டணக் கழிப்பிடத்தை மட்டுமே நினைவில் ஓட்டியது. அங்கு செல்ல இன்னும் அரை மணி நேரமாகும். காதலிக்காக மட்டுமல்ல கழிப்பறைக்காக காத்திருப்பவனும் காலத்தை கிழித்து முன் செல்லவே விழைகிறான் போலும்.

மனதின் வேகத்தை பேருந்தோ சாலையோ என்மீது சாய்ந்து குறட்டை விடுபவரோ அடையவே இல்லை. மாங்குடிக்கு முதல் நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது மாங்குடியில் இறங்கி விட வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டேன். கால் கிலோமீட்டர் சுற்றளவிற்கு மாங்குடியில் கடைகளும் குடியிருப்புகளும் இருக்கும். அவற்றைத் தாண்டிச் சென்று சிறுநீர் கழித்து விட்டு அடுத்த பேருந்தை பிடிக்க எப்படியும் கால் மணி நேரத்திற்கு மேலாகிவிடும். இன்றும் சிவரஞ்சனியுடன் அலைபேச முடியாது. அவள் பெயர் நினைவுக்கு வந்ததும் இன்னதெனத் தெரியாத ஒரு வைராக்கியம் மனதைப் பிடித்தது. கால்களும் வயிறும் இடுப்பும் எவ்வளவு வற்புறுத்தியும் மாங்குடியை பேருந்தில் இருந்தவாறே ஏக்கத்துடன் கடந்து சென்றேன். தொடை மேல் பை இருந்தது அப்போது தான் நினைவிற்கு வந்தது. பேருந்தில் கூட்டமும் இல்லை. பையும் வாட்டர் புரூப் தான். ச்சே ச்சே அப்படி செய்யக் கூடாது என முடிவு செய்து கொண்டேன். ஆனால் திருவாரூரில் இறங்கினால் இந்தப் பையுடன் கழிவறைக்கு செல்ல முடியாது. வெளியே வைத்திருந்தாலும் பத்திரமாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அக்கவலை வேறு அரிக்கத் தொடங்கிவிட்டது. திருவாரூர் பேருந்து நிலையத்தின் நாற்றமெடுத்த கழிவறையைத் தவிர வேறெதுவுமே எண்ணத்தில் எழவில்லை.

என் மீது சாய்ந்து தூங்குபவரின் வாயிலிருந்து வெற்றிலை எச்சில் வழியக் காத்திருந்தது. நானும் அதற்கென்றே காத்திருந்தேன். என் மேல் வழிந்தால் சாய்ந்திருப்பவனை அடித்துப் புரட்டி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். அடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததுமே அந்த ஆள் மேல் குடல் புரட்டும் அருவருப்பு எழத் தொடங்கியது. அறுத்து வைத்த ஆட்டுக்கறியைப் போல சூடான சதை ஒட்டும் உடல். எலும்புகள் துருத்தித் தெரியும் அசிங்கமான முகம். பார்க்கப் பார்க்க வெறுப்பு பெருகிக் கொண்டே இருந்தது. அவனை எப்படியெல்லாம் வதைக்கலாம் என்ற எண்ணம் கிட்டத்தட்ட ஒரு முன்புணர்வுக் கிளர்ச்சியை மனதில் உருவாக்கியது. அவன் சட்டையை கழட்டி விட்டு வெறுங்காலால் அவன் உடம்பில் உதைக்க வேண்டும். சரியாக என் கால் அவன் உடம்பில் படும் போது அவன் அலற வேண்டும். ஒவ்வொரு அலறிலிலும் என் வெறி கூடியபடியே சென்றது. மீண்டும் மீண்டும் அவன் முதுகுப் பள்ளத்திலேயே உதைத்துக் கொண்டிருந்தேன். துவண்டு போய் விழுந்தவனை மெல்லத் தூக்கி நிலையமர்த்தி அவனுக்கு ஆறுதல் சொல்லி குடிக்க நீர் கொடுத்து மீண்டும் எழுப்பி நிறுத்தி முதுகின் அதே பகுதியிலேயே உதைத்தேன். இம்முறை இன்னும் கவர்ச்சியாக அலறினான். உலகின் ஒவ்வொரு உயிரிடத்தும் உலகை ஈர்க்கும் கவர்ச்சி இருக்கவே செய்கிறது. அதனை வெளிப்படுத்தும் விதங்களே வேறுபடுகிறது எனும் பெரும் தரிசனத்தை அடைந்தேன். நெளியும் முசுக்கட்டையை காலால் நசுக்கும் போது பச்சை திரவம் வெளிப்பட அது இறப்பதைக் காண்பதே பெருங்கவர்ச்சியாக இருக்கும். மொத்தமாக புழுக்களை தேய்த்துக் கொல்லுதல் எறும்பு வரிசைகளில் தண்ணீர் ஊற்றுதல் நூற்றுக்கணக்கான மனிதர்களை ஒரே நேரம் தூக்கிலிடுதல் என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கவர்ச்சி இருக்கவே செய்கிறது. ஆனால் அக்கவர்ச்சி பார்வையாளனுடன் தொடர்புடையது. நான் உதைத்த இடம் கிட்டத்தட்ட புண்ணாகி விட்டது. கால் வைப்பதற்கே அருவருப்பாக இருந்தது. அவனை மன்னித்து விடலாம் என நான் முடிவெடுப்பதற்குள் வாளவாய்க்கால் வந்து விட்டது. என் மீது எச்சில் சாறு ஒழுகாமலேயே அவன் இறங்கிச் சென்று விட்டான். நான் பெரும் ஏமாற்றத்தை அடந்தேன். மீண்டும் என் அடி வயிறு கனத்திருப்பது நினைவிற்கு வந்து விட்டது. இம்முறை இன்னும் மெதுவாக காலம் நகர்ந்தது.

ஒரு வழியாக புற்றுக்குள் நுழையும் பாம்பு போல நிதானமாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது. நிலையடைவதற்கு முன்னே குதித்திறங்கி விட்டேன். ஊழியர் மிகக் கனிவுடனே நடந்து கொண்டார். என் பையை வாங்கி ஒரு நல்ல இடத்தில் அமர்த்தி வைத்தார். நான் நிம்மதியுடன் கழிவறைக்குள் சென்றேன்.

பிறை நிலவினை தரையில் வீழ்த்தி கருப்புச் சாயம் பூசியது போல வெள்ளை பீங்கான் மையத்தில் உடைந்திருந்தது. நான் எதிர்பார்த்த அளவிற்கு நாற்றம் இல்லை. பேண்டை கழட்டி மாட்டுவதற்கு சரியான் ஸ்டாண்ட் இல்லை என்பது ஒரு குறை. ஆண்மை குறைவு விறை வீக்கம் என பாலியல் தொடர்புடைய நோய்களுக்கு மருந்து கொடுக்கப்படுவதாக ஒரு கலர் தாள் ஒட்டப்பட்டிருந்தது. கழிவறைக்குள் இருந்தவாறே திருவாரூரின் ஓசைகளை கேட்டுக் கொண்டிருந்தேன். விலக்கெண்ணெய்யில் வாழைப்பழத்தை முக்கித் தின்ற பிறகு வெளியேறும் மலம் போல காலம் லகுவாக வழுக்கிச் சென்று கொண்டிருந்தது.

வெளியே வந்த போது மிக மெதுவாக இயங்கும் ஒரு உலகத்தை கவனித்தேன். கழிவறையின் உடைந்த மேற்கூரையின் வழியே ஒரு பாம்பு இறங்கிச் சென்றது.

1 comment:

  1. தலைவலியும் வயிற்றுவலியும் பல்வலியும் அப்படித்தான். தனக்கென்று வரும்போதுதான் மனிதன் எந்தளவிற்கு சுயநலத்தையும் சுகத்தையும் தேடுகிறான் என்பதையும் தன் கடமையை ஒத்திப்போடுவதற்கும் அவன் தயங்குவதில்லை எனவும் புரிந்துகொள்ளமுடியும். இக்கதையில் எனக்கு இரண்டு தரிசனங்கள் கிடைத்தது. ஒன்று இந்த அவஸ்தைகள் வந்தால் அனைத்து மனிதர்களின் இயல்பும் ஒன்றுதான் எனவும் அதைக் குறைபட்டுக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பது. மற்றொன்று ஒவ்வொரு உயிரிலும் ஒரு கவர்ச்சி உள்ளதும் அதை வெளிப்படுத்தும் விதமும் என்று சொன்னது. இது மிகச் சரியான ஒன்று. அதில் பார்வையாளனின் பார்வையும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
    கதை முடிவில் அந்த பாம்பு மேற்கூரையில் இல்லாமல் கழிவறையின் கைப்பிடியில் சுருட்டிக்கொண்டு தலையை உயர்த்தி வரவேற்றிருந்தாலும் கூட அவன் அதற்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு நான் முதலில் மூத்திரம் பெய்துவிடுகிறேன். பிறகு நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று சமரசம் செய்துகொண்டிருப்பான் எனத் தோன்றியது. ஏனெனில் அவ்வளவு விரைவு அவன் மனதில். ஆனால் இவ்வளவு விரைவு மூத்திரம் பெய்வதற்காக அல்ல என்பது கழிவறையைவிட்டு வெளிவந்ததும் அனைத்தும் மிக மெதுவாக நடப்பதை சுட்டிக்காட்டியபோது எழுத்தாளனின் மனம்படும் வேதனையை வெளிப்படுத்துவதாக இருந்தது. அவனின் விரைவையும் வேகத்தையும் அவன்மேல் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தவன் முதற்கொண்டு அடையவேண்டும் என்ற பதட்டத்தை என்னுள் உருவாக்கியது.

    ReplyDelete