Monday 30 July 2018

சில்ற - சிறுகதை

சில்லறைக் காசுகளை சேமிக்கும் பழக்கம் எப்படி ஏற்பட்டதென நினைவில்லை. ஆனால் நாங்கள் குடியிருந்த பழைய வீட்டில் டி.வி வைப்பதற்காக வீட்டின் வடகிழக்கு மூலையில் நான்கடி அளவிற்கு ஒரு கான்கிரீட் பிளேட்டை நீட்சி போல் செருகி இருப்பார்கள். அந்த பிளேட்டில் வைக்கப்பட்டிருக்கும் ஒளி ஊடுருவ முடியாத கனமான ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் தான் சில்லறைகளை சேர்க்கத் தொடங்கினேன் என்பது மட்டும் நினைவில் உள்ளது. அதனுடைய உடல் அழுத்தம் பார்வையில் உணரும் அழுத்தத்தை விட அதிகம். பல வருட விடுதி வாழ்வுக்குப் பிறகு வீட்டிற்கு திரும்ப வந்திருந்தேன். நண்பர்களுடைய தொடர்பு ஏறக்குறைய முழுமையாக நின்று விட்டிருந்தது. கல்லூரி நினைவாக என்னுடன் இருந்தது ரஞ்சித் என்னிடம் கொடுத்த ஒரு சதுரங்கப் பலகையும் சதுரங்கக் காய்களை போட்டு வைக்கும் ஒரு பெட்டியும் தான். ஒரு ஸ்கிப்பிங் கயிறையும் என்னிடம் கொடுத்திருந்தான். அந்தக் கயிறு நாடாவால் ஆனது கிடையாது. நெகிழ்வுத் தன்மையுடைய ரப்பரால் செய்யப்பட்டது. ஸ்கிப் செய்பவரின் உயரத்துக்கு ஏற்றது போல் அதன் உயரத்தையும் மாற்றிக் கொள்ளலாம். சுற்றும் போது காலில்பட்டால் சதையை சுண்டியது போல வலி உயிர் போய் வரும். ஆனால் அடிபட்டதற்கான தடமே தெரியாது. அந்த கயிற்றில் தான் மிக வேகமாக ஸ்கிப்பிங் செய்யப் பழகினேன். ஒவ்வொரு நாள் எழும்போதும் முதலில் நினைவில் வருவது அந்தக் கயிறு தான். எப்போதும் விழிக்கையில் என் எதிரே இருக்கும் அல்லது அது கிடக்கும் இடம் நோக்கி விழி திறப்பேன். கண்ணில் பட்டவுடன் நெளிவது போல அந்தக் கயிறு தோற்றம் கொள்ளத் தொடங்கும்.

வேகமாக ஸ்கிப் செய்யும் போது இடது கால் சுண்டு விரலில் தான் பெரும்பாலும் அடிபடும். மிக நொய்மையான உறுப்பு அது. பல நேரங்களில் அது என் உடலில் இருக்கிறதா அல்லது துப்பிய சுயிங்கம் காலில் ஒட்டிக் கொள்வது போல ஒட்டிக் கொண்ட உறுப்பா என சந்தேகம் எழும். ஆனால் அந்தக் கயிறு சுண்டு விரலை முத்தமிடுகையில் பலமுறை வாய்விட்டு கதறி இருக்கிறேன். விடுதியின் மொட்டை மாடியில் பெரும்பாலும் நான் ஸ்கிப் செய்யும் நேரத்தில் குறைவானவர்களே இருப்பார்கள். இருந்தும் சுண்டு விரலில் அடிபட்டு நான் அலறும் சத்தம் கேட்டு சிலர் எழுந்து பார்ப்பார்கள். அந்த அவமானத்தை தவிர்ப்பதற்காக இன்னும் சீக்கிரம்  எழுந்து கொள்ளத் தொடங்கினேன். புறங்காலிலும் சுண்டு விரலிலும் சுள் சுள்ளென ஸ்கிப்பிங் கயிறு வீசிச் செல்லும். தாரை தாரையாக கண்ணீர் வழியும். மறுநாள் அந்தக் கயிற்றினை எடுக்கவே கூடாது என்ற எண்ணத்துடன் தான் அறைக்கு இறங்கி வருவேன். சீக்கிரமாக எழ மாட்டேன். கண்ணை மூடிக் கொண்டு விழித்த பிறகும் படுத்தே கிடப்பேன். நன்றாக விடிந்துவிடும். நேரங்கழித்து எழுபவர்கள் கூட குளிக்கச் சென்று விடுவார்கள். நான் மட்டும் படுத்துக் கிடக்கிறேன். இன்றிலிருந்து ஸ்கிப்பிங்கும் வலியும் கிடையாது என கண்ணை மூடிக் கொண்டே சந்தோஷப்பட்டுக் கொள்வேன். விழி திறக்கும் போது கரிச்சான் கூட கூவியிருக்காது. என்னைப் பார்த்து நெளிந்து சிரித்தபடியே செருப்புகளுடனோ ஷெல்பிலோ படுக்கைக்கு கீழோ ஸ்கிப்பிங் கயிறு கிடக்கும். நாட்கள் செல்லச் செல்ல பழகிவிட்டது. இறுதியாண்டு நடந்த விடுதி விழாவில் நானும் நண்பனொருவனும் இணைந்து ஸ்கிப்பிங்கில் பல நடனங்களை லாவகமாக செய்து காட்டினோம்.அதன்பிறகு அக்கயிறு நெளியவில்லை. எனக்கும் அதனுடன் இருக்கப் பிடிக்கவில்லை. ரஞ்சித்திடம் திரும்ப அளித்துவிட்டேன்.

சதுரங்கம் அப்படியல்ல. அதன் ஒரு நகர்த்தல் கூட எனக்கு கைகூடவில்லை. சிறு வயதில் பெருமாள் கோவில் திருவிழா நடைபெறும் திடலில் வரிசையாக விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடை போட்டிருப்பார்கள். துப்பாக்கி கார் பஸ் என அனைத்தும் கிடைக்கும். வருடம் முழுக்க சிறுக சிறுக சேர்க்கும் தொகை அன்று தான் வெளியே எடுக்கப்படும். அந்த வருடம் பரமபதம் வாங்க வேண்டும் என எண்ணியிருந்தோம். ஒரு கண சதுரத்தின் ஆறு முகங்களிலும் ஒன்றிலிருந்து ஆறு வரை பொறிக்கப்பட்டிருக்கும் எண்கள். அதை சுழற்றுகையில் விழும் எண்ணிக்கையின் அடிப்படையில் கொத்து வாங்கப் போகிறோமோ ஏணியில் ஏறப் போகிறோமா என்பது முடிவாகும். பிங்க் நிறத்தில் இருக்கும் அந்த கண சதுர சோழிகளை அதற்கு முந்தைய வருடம் பார்த்திருந்தேன்.

காசு கொடுக்கப் போகும் நேரத்தில் "அது என்னக்கா செஸ் போர்டா?" என்றான் அண்ணன்.

"ஆமா புள்ள"

"செஸ் போர்ட் எவ்வளவுக்கா"

"பதினஞ்சு ரூவா தம்பி"

"பரமபதம்"

இருவது"

செஸ் போர்டுடன் வீட்டிற்கு வந்தோம். வெற்றி பெறுவதற்காக என்னையும் அந்த விளையாட்டில் இணைத்துக் கொள்வான் அண்ணன். எனக்கு இளவரசனை பிடிக்கவே பிடிக்காது. இளவரசன் என்றால் காதலித்துக் கொண்டு தான் இருப்பான் என்பது என் அன்றைய எண்ணம். அதுபோலவே எப்போதும் கோணலாகவே நகர்வான். ராணியைத் தான் ரொம்ப பிடிக்கும். எவ்வளவு பலம் பொருத்தியவள்! அங்கிங்கு நகர முடியாத ராஜா. எப்படியும் நான் தோற்றுப் போவேன். முழுக்க முழுக்க சுயத்தை மட்டுமே நம்பி ஆடும் அந்த ஆட்டத்தில் ஒருமுறை கூட நான் வென்றதில்லை என்பதே என்னை சதுரங்கத்திற்கு அணுக்கமானவனாக்கியது. கிரிக்கெட் போட்டிகளைக் கூட தொலைக்காட்சிகளில் பார்க்க மாட்டேன். ஆனால் ஒரு சதுரங்க ஆட்டம் விடாமல் பார்த்துவிடுவேன். போரிஸ் கெப்லாண்ட் ஆனந்திடம் தோற்கவே பிறந்தவர் போல் இருந்தார். ஆனால் அந்த சிறுவன் கார்ல்சனை பார்த்த போதே தெரிந்தது. அது அப்படித்தான். தோல்வியையே அறியாத சிலர் உலகில் உண்டு. இவன் அவர்களில் ஒருவன் என. அவனைவிட இளையவனால் அவனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாதவனால் மட்டுமே அவனை வெல்ல முடியும்.

அண்ணன் வாங்கி வந்த அந்த செஸ் போர்ட் சிறியது. ஒரு சாதாரண அட்டையின் மேல் பாலிதீன் பேப்பரில் வெள்ளையும் கருப்பும் அடித்து ஒட்டப்பட்டது. காய்களும் ஊதினால் பறந்து விடுமளவு எடை குறைந்தவை. ஆனால் ரஞ்சித் என்னிடம் கொடுத்தது உரித்த பாம்புத் தோல் போன்ற ஒரு வகை லெதரால் செய்யப்பட்ட பலகை. அதன் கறுப்புக் கட்டங்கள் கறும்பச்சை நிறமானவை. வெள்ளைக் கட்டங்களுக்கு இளம்பச்சை. அதே நிறத்திலான காய்கள். அந்தப் பலகையை எடுத்து வைத்து காய்களைப் பரப்பி பார்த்துக் கொண்டிருப்பதும் காய்களின் எடையை உணரும் வகையில் நுனி விரலால் அவற்றைச் தூக்குவதும் என்னுடைய இன்றியமையாத பொழுது போக்குகள். அந்தக் காய்களை போட்டு வைத்திருக்கும் பிளாஸ்டிக் டப்பா மட்டும் சில நாட்களில் எஞ்சியது. காய்களையும் பலகையையும் நெருப்பில் தூக்கிப் போட்டு விட்டேன்.

"புராஜெக்ட்" என்ற வார்த்தையில் இருக்கும் கனத்துடன் எங்கள் மேலாளர் ஒரு திட்டத்தை விளக்கும் போது பெரும்பாலும் சிரிப்பு வந்துவிடும். ஏனெனில் அதற்கான தீர்வுகள் எளிமையானதாகவே இருக்கும். எளிமையானவற்றை பார்க்காமல் ஆகும் போது நானும் மேலாளனாகிவிடுவேன் என்ற எண்ணம் மேலு‌ம் சிரிப்பு மூட்டக் கூடியது. அத்தகைய "புராஜெக்டுகளில்" ஈடுபடுவதே எங்கள் பணி. சமூக வலைதளங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் மனநிலையை துல்லியமாக கணிக்கக் கூடிய தரவுகளை உருவாக்கி அவற்றின் மூலம் விருந்தோம்பல் சேவைகளை அளிப்பதே எங்கள் நிறுவனத்தின் பணியமைப்பு. தொடக்கத்தில் பிறருடைய அந்தரங்களில் நுழைந்து பார்ப்பது அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தது. ஆனால் அது என் தொழில் என்றானபோது அதன் சாதக பாதகங்களை உணர்வுநிலைகளை பார்க்காமல் ஆனேன். மேலோட்டமாக பார்க்கும் போது ஏதோ  இணையம் வழியான பயண ஏற்பாட்டு சேவை  நிறுவனம் போலத்தான் தெரியும். ஆனால் எங்கள் பணி மிக மிக அந்தரங்கமானது. ஒரு பயணத்திற்கு சில லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரை செலவழிக்கத் தயாராகும் ஒரு வாடிக்கையாளர் போகிற போக்கில் தன் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்வதை எப்படி அனுமதிக்க முடியும். அவர்  விசிறி எறியும் ஒவ்வொரு ரூபாயும் எங்கு சென்று விழ வேண்டும் என்பதை தீர்மானிப்பதே எங்கள் நிறுவனத்தின் உண்மையான பணி.

என்னுடைய வேலை "அட்டவணை" தயாரிப்பது. வாடிக்கையாளர்களை எப்படி "இன்ப அதிர்ச்சியில்" ஆழ்த்தலாம் என்பனவற்றைத் தொகுப்பது. அவர்களுக்கு மிகவும் பிடித்தவர்களை ஒரே விடுதியில் "எதிர்பாராமல்" சந்திக்க வைப்பது. வாடிக்கையாளர் தங்கியிருக்கும் விடுதியில் கிடைக்க சாத்தியமேயற்ற உணவு வகைகளை வருவிப்பது. அது எவ்வளவு சுகாதாரக் கேடு உடையதெனினும் வாடிக்கையாளர் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை.  மிக நுண்ணுணர்வு கொண்டவர்களாக காட்டிக் கொள்பவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கான திட்டங்கள் வேறு வகையானவை.

சந்தன் வாடிக்கையாளர்களுடன் நேரடி அனுபவம் உடையவன். ஊர் ஊராகச் சுற்றுபவன். தெற்கினை ஒப்பிட வட இந்தியாவின் விடுதிகள் பெரும்பாலும் விலை குறைந்தவை. என் சுபாவத்தினாலோ பணியமைப்பினாலோ நான் அதிகம் வெளியே சுற்றுவதில்லை. எனக்குத் தெரிந்த வெளிநாடுகள் அனைத்தும் கார் ஜன்னலுக்கு வெளியேயும் அலுவலகத்துக்கு உள்ளேயும் விமான நிலையத்திலுமே இருந்தன. மனிதர்களை நான் சமூக வலைதளங்களில் தரிசிப்பதே அதிகம். அதிலும் எனக்கு இரண்டு முகங்கள். ஒரு பெருநகரத்தில் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சொந்த கிராமத்தின் மீது தீராத அன்பும் அக்கறையும் கிராமங்கள் அழிவது குறித்த சீற்றமும் கொண்ட புரட்சிகர இளைஞன். இது நடிப்பதற்கு மிக எளிமையான வேடம். ஆனால் இன்னொன்று தான் என் இருப்பிற்கான நியாத்தை செய்யும் வேடம்.  ஏற்கனவே பணத்தில் திளைப்பவர்கள் திடீரென நிறைய பணம் பார்க்க நேர்கிறவர்களை கூர்ந்து கவனிக்கும் ஒருவன். ஒரு லட்சத்திற்கு மேல் மாதச்சம்பளம் கொடுக்கும் நிறுவனங்களில் நடுத்தர வர்க்க பின்னணியில் இருந்து போய்ச் சேருகிறவர்கள்  குடும்ப சொத்துக்கு நீதிமன்ற உத்தரவுகளால் திடீர் வாரிசாக நேர்கிறவர்கள் வித்தியாசமான ரசனைகள் கொண்டவர்கள் என நாங்கள் லாபம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் தேவைகளை பெருக்குவதே என் இன்னொரு முகத்தின் வேலை.

ஒவ்வொரு இடுகையையும் பகிரப்படும் புகைப்படங்களையும் கொண்டு வாடிக்கையாளரின் புத்திசாலித்தனம் மனவிரிவு ஆழத்தின் வக்கிரங்கள் என அனைத்தையும் என்னால் காண முடிந்தது. பெரும்பாலும் கடவுள் குறித்து அதிகம் பகிர்பவர்கள் பாலுறவு ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள். சமூக மாற்றம் குறித்துப் பேசுகிறவர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்கள். புகைப்படத்தை பதிவேற்றி பாராட்டு பெற நினைப்பவர்கள் சோம்பேறிகள். கெட்ட வார்ததைகளை நேரடியாகப் பயன்படுத்துகிறவர்கள் பெரும்பாலும் பயங்கரமாக தங்களை காட்டிக் கொள்ள நினைக்கும் அப்பாவிகள். இவை அனைத்தும் சொற்களே. ஆனால் இவற்றைத் தாண்டி வலைச்செய்திகளைக் கொண்டு ஒருவனை என்னால் ஆழம் வரை சுரண்டிப் பார்க்க முடியும். அதனாலேயே "பருவடிவில்" தோலும் குருதியுமாக அருகில் அமர்ந்திருக்கும் மனிதனை நான் அஞ்சுகிறேன்.

தொலைபேசியில் முத்தம் கொடுப்பவன் ரகசியமாகப் பேசுபவன் முறைத்துப் பார்ப்பவன் ஏளனமாக சிரிப்பவன் என யாரைக் கண்டாலும் எனக்கு நடுக்கம் ஏற்படத் தொடங்கிவிடும். புத்தகம் படிப்பவர்கள் அருகில் மட்டுமே சற்று இளைப்பாற முடியும். ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் தங்களை நுண்ணுணர்வு உடையவர்களாக எண்ணிக் கொள்கிறார்கள். எந்தக் கேள்விக்கும் முகத்தில் உமிழும் நேரடி பதிலை அளிக்காமல் முகத்தில் அழுத்தமான கைக்குட்டையைப் போட்டு பின்னர் உமிழ்கிறார்கள். வாசிக்கிறவனிடம் பிறனைப் பற்றிய பிரக்ஞையை எதிர்பார்க்கலாம் என்பதால் அவர்களிடம் மட்டும் சற்று இயல்பாக இருக்க என்னால் முடிகிறது.

சந்தனுடன் தான் முதன் முறையாக உத்திரபிரதேசம் சென்றிருந்தேன். லக்னோ தொடங்குவதற்குள் முடிந்து விடும் ஒரு நகரம். நகருக்கு வெளியே கட்டுமானப் பணிகள் முடிவடையாத பல வீடுகள். சிறிய வீடுகள்.

"அச்சு.... அச்சு நில்லுடா. ஓட வெக்காதடா ப்ளீஸ்" என்றபடியே எங்களுடைய ஹோட்டலில் நுழைந்த போது ஒரு பெண் தமிழில் கொஞ்சியபடி ஓடி வந்தாள்.பெரிய கண்களும் எச்சில் வழியும் உதடுகளும் கொண்ட உயரமான பையன் ஒருவன் எங்களை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தான். அச்சுவிற்கு பதிமூன்று வயதிருக்கும். சிரிப்பும் திக்கலுமாக என்னைக் கடந்து ஓட முனைந்தான். நான் அவனை பிடித்துக் கொண்டேன்.

"விடுங்க அங்கிள் விடுங்க அங்கிள்" என என் கையை பிடித்துக் கொண்டு குதித்துக் குதித்து சிரித்தான் அச்சு. கொழகொழப்பான எச்சில் இடப்பக்க கடவாயில் வழிந்து கொண்டிருந்தது அவனை பேரழகனாக காண்பித்தது. என் தோள்வரை உயரமுடைய சிறுவன். சந்தனை விட உயரம். வாயினுள்  வலப்பக்கம் ஏதோ அழுத்தமான இனிப்பினை குதக்கி இருந்தான். துரத்தி வந்தவளுக்கு பழிப்பு காட்டியபடியே ஒரு கையை விலக்கிக் கொண்டு என் இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டினான். நான் அசையாமல் நிற்கவே குழம்பிப் போய் என் முகத்தில் உழிந்தான். நான் துடைப்பதற்குள்ளாகவே ஓடிவிட்டான். மனம் மீண்டும் மீண்டும் அழகன் அழகன் என்றே சொல்லிக் கொண்டிருந்தது. ஓடிய ஒவ்வொரு இடத்தையும் அழகுபடுத்திக் கொண்டே சென்றான். எதிரே வந்த வெயிட்டரிடம் "ஒண்ணே ஒண்ணே அங்கிள். ப்ளீஸ் அங்கிள். ப்ளீஸ் அங்கிள். அச்சு பாவும் அச்சு பாவும் அங்கிள்" எனக் கொஞ்சியபடியே நின்றான். பின்னால் வந்த அம்மாவை வெயிட்டர் பார்க்க கொடுங்கள் என்பது போல் கண் காட்டினாள். மூன்று ஐஸ்கிரீம்களை வாங்கிக் கொண்டு கூடவே டிஷ்யூ பேப்பரையும் பிடுங்கிக் கொண்டு என்னிடம் ஓடிவந்தான். என் முகத்தை துடுத்துவிட்டபடி எனக்கும் ஐஸ்கிரீம் ஊட்டினான்.

"சாரி சார். ஸ்டில் நௌ ஹி இஸ் அ சைல்ட்.  ஐ ரிக்ரெட் பார் யுவர் இன்கன்வினியஸ்" என்றாள். அவளுடைய ஆங்கிலம் சிரிப்பினை வரவழைத்ததும் "நீங்க தமிழ்லயே பேசலாம்" என்றேன்.

"ஓ நீங்க தமிழா" என்றபடியே விலகிச் சென்றாள் மீண்டும் அவன் பின்னே ஓடுவதற்காக. சூம்பிய வலக்காலை இழுத்து இழுத்து வைத்து ஓடினான் அச்சு. பார்வையிலிருந்து மறைந்த பின்னும் அவன் ஓடிய இடத்திலெல்லாம் வெளிவரும் சத்தத்தை கேட்க முடிந்தது. மகிழ்ச்சியாக சிரிக்கும் குழந்தைகள் சற்றே அதட்டும் பெரியவர்கள். பின்னர் பெரியவர்களின் சிரிப்பொலி. சந்தன் எரிச்சலுடன் என்னைப் பார்த்தபடி நின்றான்.

"என்னடா" என்றேன்.

"நத்திங்" என்றபடி விலகிச் சென்றான்.

விடுதிக்கு வெளியே மஞ்சள் வெயில் இறங்கி இருந்தது. அந்த நாளே துடைத்துவிட்டபடி ஆகிவிட்டிருந்தது. என் அறைக்குள் நுழைந்தேன். அங்கே ஏதொ அசிங்கத்தை சுத்தம் செய்ய வேண்டிய அவசரத்துடன். கைப்பையைத் திறந்தேன். எப்போதும் என் உடனிருக்கும் கனம். ரஞ்சித் கொடுத்த இளம்பச்சை நிற சதுரங்கக் காய் பெட்டிக்குள் முழுமையாக அடைக்கப்பட்டிருத்தன சில்லறைக் காசுகள். படிப்பு முடிந்து வீட்டில் தங்கியிருந்த நாட்களில் ஏற்பட்ட பழக்கம்  என நினைக்கிறேன். சரியாக சிவரஞ்சனியை பார்த்த பிறகு.

"நீ ஏன் இப்படி கொழகொழன்னு இருக்க?" என்றேன்.

புரியாமல் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் கையின் சதைப்பாங்கான பகுதியை பற்றினேன். ஓங்கி அறைந்தாள். நான் எண்ணியதை விட அவள் மிருதுவானவள். இளவயதில் உண்ணும் கேழ்வரகு களி நினைவில் எழுந்தது. களி ஆறியபின் அதன் மேற்பரப்பில் ஒரு படலம் உருவாகி இருக்கும். அவ்வளவு மிருதுவாக இருந்தது அவள் கை.

சில நாட்களில் அவள் என்னை விரும்புவதை ஒத்துக் கொண்டாள்.

முதல் முறை புணர்ந்த போது சொன்னாள் ஆங்கிலத்தில். "நவீன் நான் ஒரு விதவை."

புணர்வின் போதே அது அவள் முதல் அனுபவம் அல்ல எனத் தெரிந்தது. இருந்தும் அந்த மிருதுவான உடலை அப்போது நான் இழக்க விரும்பவில்லை. "அதனால் என்ன?" என்றேன் ஆங்கிலத்தில். அழுதபடியே முகத்தில் முத்தமிட்டாள். அவள் கண்ணீரின் உப்புச்சுவை எங்களை சில நாட்கள் ஒட்டி வைத்திருந்தது. அவள் குறித்து கீழ்த்தரமாக கற்பனை செய்வேன். என்னால் முடிந்ததென்றால் எந்த ஒரு ஆணும் அவளை வளைத்து உறவு கொள்ள முடியும் என்ற எண்ணம் மிகப்பெரிய சுய வதையாக இருக்கும். அந்த வதையின் ஆனந்திற்காகவே மீண்டும் மீண்டும் பல்வேறு வகையில் அவள் பிற ஆண்களால் அனுபவிக்கப்படுவதை ஏமாற்றப்படுவதை கற்பனை செய்வேன். அவள் சிரித்துப் பேசும் ஒவ்வொரு ஆணும் அவளை ஏற்கனவே புணர்ந்தவனா அல்லது புணரப் போகிறவனா என்பது வரை என் கற்பனை ஓடும். அதன் செயற்கை தன்மையை தாழ்வினை உணர்ந்த போது திரும்ப வர முடியாத அளவிற்கு தள்ளிச் சென்றிருந்தேன். அவளுடைய மிருதுவான தோள்களையும் வறண்டு வெள்ளை படிந்திருக்கும் சிறிய உதடுகளையும் பார்க்கவே கூடாதென எண்ணிக் கொள்வேன். அந்த உறுதியை பேணிக்கொள்ள சதுரங்கக் காய்களை போட்டு வைக்கும் பெட்டியில் மீண்டும் சில்லறை சேர்க்கத் தொடங்கினேன். வீட்டில் தங்கியிருந்த போதும் வெளியே அறை எடுத்து தங்கிய போதும் அந்த பெட்டி என்னுடனே இருந்தது. என்னுடைய பாக்கெட்டில் எப்போதும் சில்லறை இருக்கும். குறிப்பாக ஐந்து ரூபாய் நாணயங்கள். பேருந்தில் சில்லறை கேட்டால் கூட நான் கொடுக்கமாட்டேன். ஐந்து ரூபாய் டிக்கெட் என்றால் நிச்சயம் பத்து ரூபாய் தாளைத்தான் நீட்டுவேன். உணவகத்தில் ஏதாவது சாப்பிடம் போது கூட ஐந்து ரூபாய் சில்லறை வருமளவிற்கே சாப்பிடுவேன். என்னுடைய டப்பாவும் நிறையத் தொடங்கியது. ஒரு நாள் சிவரஞ்சனி கனவில் வந்தாள். ஏதோ மிருகம் போலத் தெரிந்தது அவள் முகம். மனிதனும் நாயும் கலந்து குட்டியை ஈன்று அதனை கடித்துத் தின்று கொண்டிருந்தாள். விக்கித்துப் போய் எழுந்தமர்ந்தேன். என் எதிரே முழுமையாக நிரம்பிய சில்லறைப் பெட்டி இருந்தது. மறுநாள் அவளைத் தேடிச் சென்று அவள் காலில் விழுந்து "மன்னிச்சுடு" என அழுதேன். மன்னிப்பு கேட்க நான் வரவில்லையே என என்னுள் ஒரு எண்ணம் ஓடியது.

அவளும் எதையோ உணர்ந்தவளாக பெருமூச்சுடன் "சரி போ" என்றாள்.

நான் திரும்பி நடந்த போது முதுகில் துப்பாக்கியை குறி வைத்திருப்பது போன்ற பார்வை உணர்வு ஏற்படவே திரும்பி நோக்கினேன். அன்று சிவரஞ்சனியின் விழிகளை பார்த்த பிறகு அவளை நான் சமூக வலைதளங்களில் கூட தேடுவது கிடையாது.

நிரம்பிய சில்லறைப் பெட்டியை பார்த்தபடியே அறையில் அமர்ந்திருந்தேன். அச்சுவின் முகம் நினைவில் எழுந்தது.  என் முகம் மலர்வதை என்னால் உணர முடிந்தது. அறைக்கதவை தாழிட்டபின் சில்லறைப் பெட்டியை திறந்து அறை முழுவதும் இறைத்தேன். மூச்சு முட்டும் கும்பலில் இருந்து திடீரென வெட்ட வெளிக்கு வந்தது போன்ற விடுதலை உணர்வு மனம் முழுவதும் பரவியது. அந்த அறையில் அனைத்தும் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தது. மேசை விரிப்புகளை உருவி எறிந்தேன். ஷெல்பில் இருந்த அலங்கார பொம்மைகளை வெளியே எடுத்து எறிந்தேன். காலணிகள் அணிந்தபடியே மெத்தையில் ஏறிக் குதித்து அழுக்காக்கினேன். ஏ.சியை அணைத்து விட்டு ஆடினேன். மொத்த உடலும் வியர்த்து வழிந்தது. அப்போது என் அருகில் ஒரு மனிதன் இருக்க வேண்டும் என விரும்பினேன். கருத்துகள் அற்றவனாக நம்பிக்கைகள் அற்றவனாக ஒரு மனிதனின் அருகாமையை அப்போது விரும்பினேன். எத்தனை மனிதர்கள் அப்படி என்னுடன் இருந்தனர்! அத்தனை பேரையும் இழந்த பிறகுதான் இந்த என்னை உருவாக்கிக் கொண்டேன். ஆனால் இப்போது எனக்கொரு மனிதன் தேவை. வெறுமனே அருகில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதன்.

சந்தன் அறைக்கதவை தட்டினான். அவன் தட்டியதுமே அவன் சொல்லப் போவது எனக்கு தெரிந்துவிட்டது எப்படி என எண்ணி வியந்தேன். அச்சுவிற்கு பின்னே ஓடிவந்த பெண். அவள் எங்கள் நிறுவனத்தின் நெடுநாளைய வாடிக்கையாளர். நிறைய பயணங்களை மேற்கொள்பவர். வித்தியாசமான ரசனைகளும் நிறைய பணமும் உடையவர்.

பிறகு இவ்வளவு நேரம் எப்படி மறந்திருந்தேன்!

முகம் மட்டும் தெரியுமாறு அறையைத் திறந்து "என்ன?" என்றேன்.

"உனக்கு உண்மையில் அது யாருன்னு தெரியலையா?"

"தெரியல" என்றேன். அவனே என்னை உடைக்கட்டும். எங்கள் நிறுவனத்தில் என் உயரத்தை அவன் அடைய பத்து வருடம் உழைக்க வேண்டும்.

"அம்பிகா. நம்மளோட நெடுநாள் வாடிக்கையாளர். அவங்களோட நீட்ஸ நீதான நவீன் சரியா கெஸ் பண்ணின."

சென்றுவிட்டான். ஆம் நான் தான் அவள் தேவைகளை கண்டறிந்தேன். ஒரு விதத்தில் அத்தேவைகளை ஊதிப் பெருக்கினேன். அவள் கையிருப்பை தெரிந்து கொண்டு அவளுடைய இச்சைகளை தூண்டி அவளுடைய மனதை கட்டமைத்தேன். அவளை ஒருமுறை கூட நேரில் பார்க்காமல் இதை என்னால் செய்ய முடிந்தது.

அறையை திரும்பிப் பார்த்தேன். கலைந்து கிடந்தது. அச்சுவின் மேல் அம்பிகா இந்நேரம் இயங்கிக் கொண்டிருப்பதற்கான நிகழ்தகவினை கணக்கிட்டபோது உடல் குலுக்கிக் கொண்டது. அச்சு என அவள் பெயர் சூட்டியிருக்கும் அந்தப் பையன் நாளை லக்னோவை சூழ்ந்துள்ளது ஏதோவொரு கிராமத்தில் பொருந்தாத விலையுயர்ந்த ஆடைகளை அணிந்த படி சுற்றி வந்து கொண்டிருப்பான் என்ற எண்ணம் சோர்வளித்தது.

சில்லறைக் காசுகளை டப்பாவில் அள்ளிப் போட்டேன்.