Tuesday 17 December 2019

ஒரு நாள் கழிந்தது சிறுகதை - எதிர்வினைகள் 2

கனலியில் வெளியான ஒரு நாள் கழிந்தது சிறுகதை

ஒரு பெண்ணின் ஆசை ஆதங்கம் இயலாமை  இவைகளை சுற்றி வருகிறது கதை.அது எவ்வாறு எரிச்சலாக பதற்றமாக கோபமாக பொறாமையாக எதிர்வனையாக வெளிப்படுகிறது என்பதும் அதை நிழலை போல தொடர்ந்து வருகிறது .

இதில் பெண் , அதுவும் ஒரு சித்தாள் , அம்மா , மனைவி , நடுத்தர வயது என்று வேறு வால்யூமை நன்றாக கூட்டி வைத்திருக்கிறார் ஆசிரியர் :)

கிழவிகளோடும் நிற்க விருப்பமில்லை , கல்லூரி பெண்களோடும் போய் சேர்ந்து நிற்க முடியாது பள்ளி தோழிகள் பார்த்து விடுவார்களோ என்ற பயம் ..அமுதாவும் வராமல் போய்விடுவாளோ என்னும் கைவிடப்படுதலின் தனிமை ...

அதுவே அமுதா கடைசி நிமிடத்தில் வரும் போது திடீர்  பாசமாகவும்  மேஸ்திரி அப்புறமா அழுதுகொள் என்றதின் போது ஆழ்ந்த புறக்கணிப்பாகவும் , அந்த பெரியவர் உட்கார்ந்துகொள் என்று சொல்லும்போது கருணையான அடைக்கலமாகவும் அமுதாவிடமிருந்து வெளிப்படுகிறது .

மேஸ்திரியை முன்வைத்து அமுதா அபிராமியிடம்
நிகழும் அந்த உடைவு பெண்கள் ஏன் பெண்களாக திரள முடியாது என்பதற்கான நல்ல உதாரணம் :) 

இந்த சிக்கலான தப்பிக்கவே முடியாத அழுத்தும் சூழலில் இருந்து ஒரு நுட்பமான வகையில்
வெளியேறுகிறாள் .ஒரு பெண் என்பதன் desirability யை இறுக்க பற்றிக்கொள்கிறாள்.

அவள் கோபத்தின் மூலமும் அழுகையின் மூலமும் 
அந்த சூழலில் குற்ற உணர்வு இடம்மாறி அந்த பெரியவர் அடிக்கப்படுவது அமுதாவின் redemption ஆக நிறைவேறுகிறது.

அவளுக்கு வக்காலத்து வாங்க அந்த பெரியவர் அறையப்படும் போது .. she becomes a mysterious point of both desiring / desirable object at the same time .

இவ்விரண்டும் இணைந்துகொண்ட  அந்த புள்ளியில் எழுந்து நடந்து போகும்போது உடல் சிலிர்க்கிறாள் 

மனித உறவுகளின் ஆதாரமே ஒவ்வொரு மனிதனும் மற்றொருவனால் பொருட்படுத்தப்படவேண்டும் / விரும்பப்படவேண்டும் என்ற அடிப்படை  விழைவில் இருந்து எழுவதே 

இதுவே மரியாதை , அன்பு , காதல் , நட்பு , ஆசை
என்று பல தளங்களில் வெளிப்படுகிறது .
அமுதாவின் விஷயத்தில் , அவள் சூழல் ,அது desire என்னும் தொடர்புறுதலாக மட்டுமே வெளிப்பட முடியும் என்பதாக இருக்கிறது.

கார்த்திக், சிட்னி

அன்புள்ள சுரேஷ்,
    ஒருநாள் கழிந்தது சிறுகதை அன்றாடம் வேலைக்குச் செல்லும் எல்லாப்பெண்களும் அனுபவிக்கும் சித்ரவதை. அதை எள்ளலுடனும் அங்கதத்துடனும் எழுதியிருப்பதற்கு என் பாராட்டுக்கள். ஆனால் உள்ளூற ஒரு சோகம் இழைகிறது. 
     பெண்களின் இயல்பு இதில் மிக நுணுக்கமாக சுட்டிக்காட்டப்படுவது எனக்கு மிக வியப்பைத் தருகிறது. என்னால் அவ்வியல்பை நன்றாக புரிந்துகொள்ளமுடிகிறது. 
        அங்கங்கே வரும் கெட்ட வார்த்தைகள் எனக்கு சற்று விலக்கத்தைக் கொடுத்தன. மிக கொச்சையாக அசிங்கம் பேசுவதும் நான் விரும்பாத ஒன்று. ஆனால் விளிம்புநிலை மனிதர்களின் இயல்பு இப்படிப் பேசுவதுதான் என நவீன இலக்கிய எழுத்தாளர்கள் விதிகள் வகுத்திருந்தால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. மிகப் பெரும் எழுத்தாளர்களே ஒன்றும் சொல்லாதபோது என்னால் என்ன செய்யமுடியும்? 
          புண்ணின் மேல் மண் கொட்டினால் வரும் எரிச்சல் மிகச்சிறந்த உவமானம். 
          அபிராமியின் பெயர் வருமிடத்தில் அமுதா என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என நினைக்கிறேன். ஏனெனில் மனவிலக்கம் காண்பிப்பவள் அமுதாதான். அபிராமி அல்ல என்பது என் அபிப்ராயம். 
           இவ்வளவு தூரம் பெண்ணாக நடந்துகொள்பவள் ஏன் ஆணைப்போலக் குடிக்க விரும்புகிறாள் என்றுதான் எனக்குப் புரியவில்லை. அப்புறம் அழுதுகொள் என்ற கொத்தனாரின்மேல் வருகின்ற கோபத்தையும் தன்னைக் கண்டுகொள்ளாத கணவன்மேல்  வருகின்ற கோபத்தையும் அடக்கவோ தவிர்க்கவோ இருக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது. 
             எப்படியோ இத்தனை எளிமையான ஒரு சிறுகதையை நான் சுரேஷிடம் எதிர்பார்க்கவில்லை. கதை நேரடியாக இருக்கிறது. வாசகர் சிந்தித்து நிரப்புவதற்கு கற்பனை செய்வதற்கு எவ்வித இடமுமில்லை. மிக உணர்ச்சிகரமான சிறுகதை. கோபமும் எரிச்சலும் கொண்ட மனநிலை நம்மையும் அப்படியே தொற்றிக்கொள்கிறது. அதனால் அதை மீறி என்னால் வேறு எதுவும் சிந்திக்க இயலவில்லை. இது முழுக்க முழுக்க என் கருத்து. மாற்றுக்கருத்துகளும் இருக்கலாம். 
            கூடிய விரைவில் சிக்கலான களச் சிறுகதையின் எதிர்பார்ப்புடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அன்புடன் கிறிஸ்டி.

ஒரு நாள் கழிந்தது சிறுகதை - எதிர்வினைகள் 1


ஒருநாள் கழிந்தது டிபிகல் சுரேஷ் கதை. ஆனால் வழக்கமாக இருக்கும் ஒரு எதிர்பாரா அதிர்ச்சி இதில் இல்லை.

அமுதாவின் பாத்திரம் மெல்ல மெல்லத்தான் துலங்கிவருகிறது.. முதலில்  புதிதாக குடிக்க கற்றுக்கொண்ட கொளுத்து வேலைக்கு போகின்றவள் என்று ஒரு குடிசை வீட்டில் குடிகாரக்கணவனுடன் இருக்கும் ஒருத்தியைக்குறித்தான உளச்சித்திரம் ஏற்பட்டிருந்தது. பின்னர் பசுமை வீடு என்றதும் கொஞ்சம் தேவலாம் போல என்று அச்சித்திரம் கொஞ்சம் மெருகேறியது, பின்னர் கேஸ் அடுப்பு, சேமியா பாத்  ,ஒரு நல்ல பள்ளியில் படிக்கும் மகள், தொலைக்காட்சி  சீரியல் பார்ப்பவள்  என்று முதலில் எண்ணியதற்கு முற்றிலும் மாறான ஒரு அமுதாதான் சைக்கிளில் பேருந்துநிலையம் செல்கிறாள். அவள் படித்தவளும்  கூட என்று பேருந்தில் ஏறியதும் தெரிகின்றது.  படித்த அமுதா கட்டிடவேலைக்கு போவது ஆச்சர்யமாகவே இருந்தது.

அபிரமியின் பாத்திரம் அச்சு அசல் கொளுத்து வேலைக்கு போகும்  அடுத்த நாளைக்கான வேலையை எப்படியும் உறுதிப்படுத்திக்கொண்டே வீட்டுக்கு திரும்பும் , நான் அன்றாடம் காணும் பலநூறு பெண்களுடையது.

வழக்கம் போலவே சில வாக்கியங்கள் திகைப்பும் பிரமிப்பும் ஏற்படுத்தின.strong  என்று நான் எப்போதும் நினைக்கும்படியும் சுரேஷ் எப்படி இதெல்லாம் எழுதறாரு என்று வியக்கும்படியும் இருக்கும் சில வரிகள்/வார்த்தைகள் இருந்தன இதிலும்.

//புதுப்பத்தினியாக //மீண்டும் வேலைக்கு போவது

//புண்ணில் கொட்டிய மண்//

//திறமையும் வேட்கையும் கொண்ட கொத்தனார்கள்//

கார்களில் செல்கிறவளின் ஞாபகம் // ஒரு துரோகச்செயலைப்போல // மீண்டும் வருவது. (மீள  மீள வாசித்தேன் இதை)

பேருந்தில் இப்படி கொஞ்சம் எல்லை மீறி நடத்துனர், ஓட்டுநர் மற்றும் அருகிலிருக்கும் ஆண்களிடம் பேசிக்கொண்டு வரும் பெண்களை நிறைய பார்த்திருக்கிறேன். இந்த மீறல் அவர்களுக்கு ஒருவித விடுதலையை அளிக்கின்றது என்று நினைப்பேன்.

சென்ற வாரம் கூட ஒரு  மில் வேலைக்கு செல்லும், தோழிகளுடன்   வந்திருந்த பெண், அப்போதுதான் பஸ்ஸில் ஏறிய ஓட்டுநரிடம் ’’எந்நேரம் நிக்கறது, இப்போ பஸ்ஸை எடுக்கலைன்னா உங்களை டைவோர்ஸ் பண்ணிருவேன் பாத்துக்குங்க’’ என்றாள், அவர் ’’டைவோர்ஸ் பன்ணிட்டு வேறெ எங்கே போவே?" என்றதும் உடனிருந்தவர்கள் பலமாக சிரித்ததும்  நினைவுக்கு வந்தது

கலவனை வழித்து வீசி பூசுவது, கலவைக்கு மணல் எடுத்துக்கொண்டு போவது, கதவுகளின்னும் வைத்திருக்காத கூடம், சட்டை அனிந்துகொண்டு பூச்சுவேலையை நாசூக்காக செய்யும் மேஸ்திரி இதெல்லாம் எப்படி எழுதினீங்க?

கமலாபுரம் திருவாரூர் திருத்துறைப்பூண்டி என்று அந்த ஊர்களின் பெயர்களை சொல்வது கதையுடன்  ஒரு  ஒட்டுதலைத் தருகிறது.

அந்த கச்சிதமான  உடற்கட்டுடன் இருந்த மேஸ்திரி அன்று  அமுதாவுக்கு எற்படுத்திய எரிச்சலும் ஒவ்வாமையையும் புரிந்துகொள்ள முடிந்தது. நீங்கள் விளக்கவில்லையெனினும் அபிராமி தொட்டவுடன் ஏற்படும் அருவருப்பும் அப்படியேதான் அமுதாவாக இருந்து வாசிக்கையில் புரிந்துகொள்ள முடிந்தது.

உடலும் உள்ளமும் களைத்த அமுதா மாலை  பயணிக்கும்பேருந்தில் அந்த முதியவர் சலுகை எடுத்துக்கொண்டு பேசுவதும் திடீரென அந்த சலுகை எல்லைமீறியதாக பிற ஆண்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு, காட்சி சட்டென மாறுவதும், அமுதாவின் எப்போதோ ஏற்பட்டிருந்த  ஏதோதோ காயங்களுக்கு அங்கு மருந்து போடப்படுவதுமாய்  அந்த கடைசிப்பகுதி பிரமாதம்.

மிக நல்ல வலுவான கதை இது சுரேஷ்.

 அன்புடன்

தேவி

இக்கதை பல்வேறு வாசிப்பு சாத்தியங்களை கொண்டிருந்தாலும், எனக்கு வலுவாக தோன்றியது ஒரு பெண் தன் உடலை அவதானிப்பதின் பதற்றங்கள் தான் கதை மையம் என.

உண்மையில் அமுதா மனதளவில் சிறுமிதான், ஒரு வளர்ந்த பெண்ணுக்கு தாயான போதும் அமுதாவின் அகத்துள் உள்ள சிறுமி புறத்தின் ஈவு இரக்கமற்ற எதார்த்தத்தை எதிர்கொள்ள நேரிடுவதை ஆசிரியர் கூர்ந்த மொழியால் சிற்சில வார்த்தைகளிலேயே கனமாக காட்சிப் படுத்தியுள்ளார்.

வேட்டை, பழங்குடி காலகட்டங்களில் பெண்கள் இயல்பாக மது அருந்தி இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன், ஒரு நீண்ட அகழிக்கு பின் பெரும்பான்மை பெண்கள் இயல்பாக மது அருந்த தொடங்கும் காலம் இது, இவளின் புதிய மதுப்பழக்கத்தை இயல்பாக கணவன் கடந்துசெல்லும் காட்சி அதை காட்டுகிறது.

வீட்டில் பணியிடத்தில், பயணத்தில், என எங்குமே தன்னை வெறும் உடலாக நுகர் பொருளாக எல்லோரும் பார்ப்பது குறித்து அவளுக்கு பெரிய வருத்தம் ஒன்றும் இருப்பது போல் தெரியவில்லை, உள்ளார்ந்து தான் மேலும் அழகாக இருக்க வேண்டும் இளமை குன்றாது இருக்க வேண்டும் எல்லா இன்பங்களையும் துய்க்க வேண்டும் என்றுதான் பதட்டம் கொள்கிறாள்.

நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இதை விடவும் பாலியல் சீண்டல்கள் இருந்திருக்கும் தோட்ட வேலைகளுக்கு செல்லும் பெண்களுக்கு, அந்தப் பெண்களின் துயரமும் அமுதாவின் துயரமும் ஒன்றுதானா?

யாரிடமும் எந்த எதிர்ப்பும் காட்டாத அமுதா அந்த பெரியவரின் வார்த்தைகளால் ஏன் அவ்வளவு சீற்றம் கொள்கிறாள் ? அமுதாவே அறியாத ஆழத்து உண்மையை அவர் அசைத்துப் பார்க்கிறாரா? 

கதிர் முருகன் 

கோவை




Monday 16 September 2019

நாயகிகள் நாயகர்கள் குறித்து சுபா

அன்புள்ள சுரேஷ்,

நாயகிகள் நாயகர்கள் நேற்றும் இன்றுமாய் வாசித்து முடித்தேன். உங்கள் சிறுகதைகள் இணையத்தில் அவ்வப்போது வாசித்து வருகிறேன் என்றாலும் ஒரு தொகுப்பாக வாசிப்பது இதுவே முதல் முறை. 

உடனிருப்பவன், ஈர்ப்பு, நீலப்புடவை, சொட்டுகள், இடைவெளி போன்ற (இன்னும் சில விடுபட்டிருக்கலாம்) கதைகளை வாசித்தவுடன் அக்கதைகளின் ஏதோவொன்று சலனமேற்படுத்துவதையும் சில நாட்களுக்கேனும் உள்ளே வாதமும் எதிர்வாதமுமாய் சரடுகள் நீட்சி கொண்டிருந்ததும் உண்டு. எனில் தொகுப்பாக வாசிக்கும்போது ஒருவேளை இதுதான் சுரேஷ் எழுத்து என்று மனது ஒன்றை அடையாளப்படுத்திவிடுமோ என்று தோன்றியது. எனில் ஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒன்று புதிதாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. 

கதைகளின் பொதுவான தன்மையெனச் சொல்ல வேண்டுமெனில் 'எல்லாவற்றையும் மீண்டும் தொடங்குதல்' நாயகனைப் போல எல்லாவற்றையும் மூன்றாகப் பார்ப்பது என்று சொல்லலாம். எனில் பார்வையின் செல்திசை வாசகனைப் பொறுத்தளவில் முதலில் மேல்தளத்தில் கதைமாந்தருக்கு நிகழ்வதை உணரும் நுகர்வுப் பார்வை, இரண்டாவது உங்கள் கதைகள் பலவற்றிலும் கதைமாந்தர்களின் தொடர் மனவொழுக்கின் வழி கட்டமைத்து உருவாகி வரும் நிபுணத்துவப் பார்வை, மூன்றாவது அருவமாக அது வாசகனின் உள்ளே அவனறிந்தும் தொட்டுவிட இயலாது இருக்கும் ஏதோ ஒரு கசங்கலையோ, அழுகலையோ காட்டிவிடும் கலைஞனின் பார்வை. இதில் மூன்றாவதாக வாசகன் தொட நேரும் அந்த மூலப்பொருளைக் கலைப்படுத்துவதில் உங்கள் எழுத்து தொடர்ந்து வெற்றிபெற்றிருக்கிறது. ஆலரசுக்குளத்தில் வருவதைப் போல காலில் குத்திய கண்ணாடியைப் பிடுங்கும் போது மண்டைக்குள் குடையும் வலி போல ஒன்றை இக்கதைகள் வாசித்தபின் சில நாளைக்கு ஏற்படுத்துகின்றன.

அடுத்ததாக காட்சி சித்தரிப்புக்கு பயன்படுத்தும் சில உவமைகள். மாசிலன் கதையின் தொடக்க வரி போல: 
//நாயின் பளபளக்கும் உடலில் விழுந்த செஞ்சிராய்ப்பென இரவினைக் கிழித்துக்கொண்டு ஓசையில்லாமல் லெனின் முன் விரைந்து சென்றது ஒரு இரு சக்கர வாகனம்//

//பளிங்குக் கல்லை வாயில் போட்டு மெல்லுவது போல ஒரு சொரணையற்ற அசூசையை தனா தன்னுள் உணர்ந்தான்.// - வீட்டில் அம்மா இல்லாதபோது

//மொத்த உடலும் ஒரு நொடி கண்ணாடியில் வைத்து இறுக்கப்பட்டது போல முறுக்கிக் கொண்டது.//- ஆலரசுக்குளம்
கதைநாயகர்களின் இயல்புக்கேற்றார் போன்ற சொற்கள் வழி காட்சியை கடத்திவிடும் சூட்சுமம் பல இடங்களில் தெரிகிறது. 

நெரிசலும் வியர்வையைமாய் பேருந்துப் பயணத்தின் ஒவ்வாமை பல கதைகளில் வந்து போகிறது, அவ்விதம் பயணம் செய்த பல தருணங்களை நினைவூட்டி யாருடைய வியர்வையோ படிந்துவிட்ட என் கையை சற்று அருவருப்புடன் விலக்கிய படியே வீடுவரை நடந்த பொழுதுகள் நினைவிலெழுந்தன. பெரியம்மா வீடு சிறுவனைப் போல நெரிசல்களில் சில நிமிடங்களில் அழுந்தி கொல்லப்படப்போவதாக, தொலைந்துவிட்டதாக உணர்ந்த பால்யம் கண் முன் வந்தது. அது இன்றும் திரளின் மீதான விலக்கமாக, கூட்டங்களில் உள்ளுக்குள் சுருங்கிக் கொள்ளும் தன்மையாக இருந்து கொண்டேயிருக்கிறது. 

சில்ற, குற்றுளம் எனப் பல கதைகளில் பேருந்துப் பயணம் வந்து போகிறது. நாளின் கணிசமான பகுதி பயணங்களில் கழிவதால் நெரிசலான பேருந்து உங்களை சலனப்படுத்தும், சலிப்பேற்படுத்தும் சில்லறைத் தன்மைகளின் குறியீடாகவே ஆகிவிட்டதெனத் தோன்றுகிறது.
//தலையில் எண்ணெய் வைக்காமல் செம்பட்டை பிடித்த முடியோடு வாயிலோ கழுத்திலோ பாக்கெட்டின் வெளியிலோ கர்சீப்பை தொங்க விட்டவாறு, எதிலும் அலட்சிய பாவனையும் முகத்தில் ஒரு மெல்லிய வெறுப்பும் கலந்து தங்களை அணுக முடியாதவர்களாகக் காட்டிக் கொள்ளும் இறுக்கமான உடையணிந்த பலரை நான் பயணிக்கும் பேருந்தில் காண முடியும்.//- குற்றுளம்

//பேருந்தில் பேசப்படுவதும் பழையதாகவே இருக்கும். ஏதோவொரு நாளில் உறைந்து போய்விட்ட ஊர்.// - அலுங்கலின் நடுக்கம். 
தேடிச் சோறுநிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி..பாரதியின் வேடிக்கை மனிதர்களைப் போன்ற ஒரு விளாசல் விழுந்து கொண்டே இருக்கிறது 😊

நடையின் சீரான வேகமும், எண்ணவொழுக்கை அதன் உளவியலோடு எழுதும் நுட்பமும் தங்களுடைய பெரிய பலமென நினைக்கிறேன். ஆண் பெண் உறவுகள் மட்டுமல்ல, அனைத்து வகையான உறவுகளின் அடியோடும் உளவியல் சிடுக்குகளை வெகு நேர்த்தியாக தொட்டெடுக்கிறீர்கள். 
சொட்டுகள் கதை மட்டும் மனவோட்டத்தின் விதம் பெண்ணுடையாதாய் இல்லாமல் ஆணுடையது போல உணர்ந்தேன். ஒருவேளை எனக்கு அந்நியமாகப் படுகிறதோ என்னவோ.

அன்புடன்,
சுபா

Thursday 22 August 2019

என் படைப்புகள் குறித்த கருத்தரங்கு

கவிஞர் சமயவேல் என்னுடைய நூல்கள் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யலாமா என்று கேட்டபோது எனக்குத் திகைப்பாக இருந்தது. மூத்த எழுத்தாளர் ஒருவர் எழுத வந்து மூன்று ஆண்டுகள் கூட ஆகாத ஒரு இளம் எழுத்தாளனின் நூல்களுக்கு கூட்டம் நடத்த முன்வருவது (இந்த நிகழ்வுக்கு முன்புவரை நாங்கள் சந்தித்ததும் இல்லை) தமிழ்ச்சூழலில் அரிதாகவே நடக்கும் நிகழ்வாகவே எனக்குப்படுகிறது. நிகழ்வுக்கான அறிவிப்பு வெளியான சமயம் சுனில் கிருஷ்ணனும் இதுவொரு ஆரோக்கியமான சமிக்ஞை என்று தெரிவித்தார். ஞாயிறு காலை புறப்பட்டு காரைக்குடியில் இருக்கும் சுனில் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து நாங்கள் இருவருமாக மதுரைச் சென்றோம். வீட்டிற்கு வந்ததில் இருந்து மதுரை செல்லும்வரை ஏறக்குறைய ஐந்து மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். படைப்புச் செயல்பாடு அந்தரங்கத்தன்மை உடையது. ஆனால் எழுத எண்ணும் ஒரு படைப்பு குறித்த சாத்தியங்களை விவாதங்களின் வழி விரிவு செய்து கொள்ள இயலும் என்ற நம்பிக்கையை சுனிலுடனான இந்த உரையாடல் அளித்தது.



மதுரையில் சென்று இறங்கிய கொஞ்ச நேரத்திலேயே மழை பிடித்துக் கொண்டது. ஐந்தரைக்கு நிகழ்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நான்கைந்து நண்பர்கள் ஐந்தரைக்கே வந்துவிட்டிருந்தனர். ஆனால் மழையில் சிக்கிக் கொண்டவர்கள் ஒவ்வொருவராக வரத் தாமதமானது. விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்த நண்பர் துரைமுருகன் முழுக்க நனைந்தவராக அரங்கினுள் நுழைந்தது சற்று திகைப்பினை அளித்தது. ஆறு மணிவாக்கில் நனைந்தவாறே பலர் அரங்குக்கு வரத்தொடங்கினர். சென்ற வருடம் நண்பர் ஸ்ரீநிவாஸ கோபாலன் ஒருங்கிணைத்த அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டியில் முதல்பரிசு பெற்ற ரஞ்சனி பாசு அவருடைய கணவருடன் வந்திருந்தார். என் புனைவுகளின் தீவிரமான வாசகரும் கூட. எழுத்தாளர் ஆத்மார்த்தி, முகநூல் வழியாக மட்டுமே அறிந்திருந்த நண்பர்களான கவிஞர் அதீதன் சுரேன், ரமேஷ் கண்ணன் ஆகியோர் வந்திருந்தனர்.

சூழலுக்கு ஏற்றது போல அனைவரும் தேநீர் அருந்திவிட்டு நிகழ்வைத் தொடங்கினோம். முதலாவதாக எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் என்னுடைய நாயகிகள் நாயகர்கள் சிறுகதை தொகுப்பில் உள்ள நான்கு கதைகளை முன்வைத்து என் புனைவுலகில் பயின்றுவரும் நுட்பங்கள் குறித்து பேசினார். வாசகன் உள்நுழைந்து நிரப்பிக்கொள்ள வேண்டிய ஒரு தன்மை என் கதைகளில் விரவிக்கிடப்பதாக குறிப்பிட்டது எனக்கு புதிய அவதானிப்பாகப்பட்டது.








நிகழ்வில் ந.ஜெயபாஸ்கரன் மற்றும் ஸ்டாலின் ராஜாங்கம் இருவரையும் சந்தித்தது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது. ஸ்டாலினின் அயோத்திதாசர் வாழும் பௌத்தம் என்ற நூலினை பேருந்தில் வாசிப்பதற்கென எடுத்துச் சென்றிருந்தேன். அந்நூலில் கையெழுத்திட்டுத் தரச் சொன்னேன். கூச்சப்பட்டுக் கொண்டு மறத்துவிட்டார். அக்டோபரில் யுவன் சந்திரசேகர் கருத்தரங்கில் வாங்கிவிட வேண்டும் :)

ந.ஜெயபாஸ்கரன் நாயகிகள் நாயகர்கள் குறித்து சில நிமிடங்கள் பேச விழைவதாக சொன்னது முதலில் ஆச்சரியமாக இருந்தது. அத்தொகுப்பில் உள்ள கதைகளின் ஊடாக விரவிச் செயல்படும் "வதை" என்ற அம்சத்தினை மையப்படுத்தி பேசினார். எமிலி டிக்கன்சனின் ஒரு கவிதையுடன் என்னுடைய என் கதையுலகை இணைத்துப் பேசியது எனக்கு சில புதிய திறப்புகளாக அமைந்தது.




அடுத்ததாக சமயவேல் ஒளிர்நிழல் நாவல் குறித்து பேசினார். ஏறக்குறைய முப்பது பக்கங்கள் நீளும் ஒரு கட்டுரையில் இருந்து தனித்துப் பிரிக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு நாவலின் நிகழ்களத்தினை குறித்த ஒரு கோட்டுச்சித்திரத்தை முதலில் தெரிவித்தார். நாவலினுள் இரண்டு குடும்பங்களின் மூன்று தலைமுறை வரலாறு யதார்த்தபாணியில் அல்லாமல் அக வரலாறாகவே எழுதப்பட்டிருப்பது புதுமையாக இருப்பதாக கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். கூர்மையான மொழிப்பயன்பாடு இந்த நாவலை தமிழில்  முக்கியமான நாவல்களில் ஒன்றாக மாற்றியிருப்பதாகச் சொல்லி முடித்தார்.

சுனில் சில மாதங்களுக்கு முன்பே எஞ்சும் சொற்கள் வாசித்திருந்தார். இந்த நிகழ்வுக்கென மீண்டும் வாசித்து மிக விரிவானதொரு கட்டுரையை எழுதி முதல்நாளே எனக்கு அனுப்பி இருந்தார். என் சிறுகதை தொகுப்பு ஒன்றினைக் குறித்து எழுதப்பட்ட முதல் விரிவான கட்டுரை இதுவென்றே நினைக்கிறேன். (நாயகிகள் நாயகர்கள் மற்றும் எஞ்சும் சொற்கள் குறித்து ஏற்கெனவே கட்டுரைகள் வந்திருந்தாலும் விரிவானது என்ற வகையில் இது முதலாவது) என் கதைகளில் பலங்களாக தென்படக்கூடிய அம்சங்களை முதலில் குறிப்பிட்டு பின்னர் பலகீனங்களை பட்டியலிட்டார். பெரும்பாலும் ஒரு வாசகனாக நானும் உணரக்கூடிய குறைகளாகவே அவை இருந்தன. ஆகவே மாற்றுக்கருத்து என்று குறிப்பிடும்படி ஏதுமில்லை. எஞ்சும் சொற்கள் தொகுப்பின் சிறந்த கதையாக "பாரம்" என்ற கதையை குறிப்பிட்டு விரிவாகப் பேசினார். வீதிகள், எஞ்சும் சொற்கள், பரிசுப்பொருள், மறைந்திருப்பவை ஆகிய கதைகள் குறித்தும் ஒரு விரிவான சித்திரத்தை அளித்தார்.





ஏற்புரையாக எதைச் சொல்வது என்ற குழப்பம் எனக்கு முன்தினம் முதலே இருந்து வந்தது. இந்த நிகழ்வு என் எழுத்துச் செயல்பாட்டினை தொகுத்துப் பார்த்துக் கொள்ளும் ஒன்றாக அமையும் என்று எண்ணியிருந்தேன். அதுபோலவே வெவ்வேறு வகையான பார்வைகள் நான்கு எழுத்தாளர்களால் முன்வைக்கப்பட்டன. உடனடியாக அப்பார்வைகளுக்கான எதிர்வினையை என்னால் நிகழ்வில் வைக்க இயலவில்லை. சுருக்கமாக என் ஏற்புரையை முடித்துக் கொண்டேன்.

இலக்கிய வடிவம் சார்ந்த என் பார்வையை கட்டமைத்ததில் ஜெயமோகனின் நாவல் கோட்பாடு என்ற நூலுக்கு முக்கிய பங்குண்டு. அவரது மற்றொரு நூலான நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் ஒரு நூற்றாண்டை கடந்துவிட்ட தமிழ் இலக்கியம் குறித்த ஒரு பெரும்போக்கான புரிதலை எனக்கு அளித்தது. இதைக்குறிப்பிட வேண்டிய அவசியம் இருப்பதாக நினைக்கிறேன். எழுத்தின் மீது ஜனரஞ்சகத் தேவைகளின் அழுத்தம் இருந்தபோது இலக்கியம் அதற்கு எதிரானதாக நிலைகொண்டது புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் இன்று எழுத்து முதன்மையான கேளிக்கை ஊடகம் கிடையாது. இன்றைய வாழ்வின் வேகத்துடன் தங்களை பொருத்திக்கொள்ள முடியாதவர்களே கற்பனையான மெல்லுணர்வுக்கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை கணிசமானது எனினும் தீவிர இலக்கிய ரசனையின் மீது தாக்கம் செலுத்தக்கூடிய அளவு ஒரு தரப்பாக அவர்கள் உருவெடுக்கவில்லை.  இன்றைய நிலையில் ஒரு இலக்கிய வாசகன் "மரபான" ஒரு வழிமுறையின் வழியாகத்தான் இலக்கியத்துக்குள் வருவான் என்று எதிர்பார்க்க இயலாது. அவன் செயல்படும் துறையின் தீவிரத்தின் காரணமாகவே எந்த "இலக்கியச்சூழலின்" தொடர்பும் இல்லாமல் நேரடியாக இலக்கியம் வாசிக்க வருகிறவர்கள் உண்டு. (இளங்கலை கணிதம் படித்துக் கொண்டிருந்தபோது கணிதத்துடன் விஷ்ணுபுரத்தை என்னால் அதனுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது என்று ஒரு நண்பர் என்னிடம் சொல்லி இருக்கிறார்.) ஏறக்குறைய நானும் அப்படி நேரடியாக எழுத வந்தவனே. குழு அரசியல்,கோட்பாட்டு சிக்கல்கள் போன்றவற்றை இரண்டாம்பட்சமாக்கி நூலினை முதன்மைப்படுத்தி வாசிக்கும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள மேற்சொன்ன இவ்விரு நூல்களும் எனக்கு உதவின. என்னுடைய ஆதர்சனங்களான டால்ஸ்டாய்,புதுமைப்பித்தன் போன்றோரை எந்த "வழிகாட்டலும்" இல்லாமல் புரிந்து கொள்ள நாவல் கோட்பாடு பெருமளவு உதவியது.

இவ்வளவு நீளமாக இல்லாவிட்டாலும் இந்த விஷயத்தை சற்று பேசிவிட்டு என் புனைவுகள் சார்ந்த என் அவதானிப்பினை சொன்னேன்.



இந்த நிகழ்வுக்காக என் புனைவுகளை சற்று விலகி நின்று பார்க்கும்போது இக்கதைகளில் இருந்து மூன்று விஷயங்களை என்னால் அவதானிக்க இயன்றது.

ஒன்று இக்கதைகளில் அமைப்புகளின் மீதான நம்பிக்கை இழப்பு ஒரு பொதுத்தன்மையாக ஊடுருவியிருக்கிறது. வாழ்க்கை ஒழுங்கமைக்கப்பட்ட விதிகளாலும் கருத்துகளாலும் செயல்படுகிறது என்ற கருத்துக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களாக கதாமாந்தர்கள் இருக்கின்றனர். இரண்டாவதை முதல் அவதானிப்பின் தொடர்ச்சியாகவே கொள்ளலாம். அமைப்புகளால் அளிக்கப்படும் உணர்வுநிலைகள் வலுவானவை. குழப்பங்களும் சிக்கல்களும் அற்றவை. ஆனால் அமைப்புரீதியான உணர்வுநிலைகள் மீது நம்பிக்கையிழப்பினை அடைந்தவர்கள் ஒவ்வொன்றையும் தங்களுக்கு ஏற்றவாறு நீட்டியும் சுருக்கியும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தங்களுக்குள் நிகழும் உரையாடல்கள் வழியாகவே பிறருடன் பொருத்திக் கொள்வதற்கான சமநிலையை அடைய வேண்டியிருக்கிறது. என் கதைகளில் இடம்பெறும் மிக நீண்ட அக உரையாடல்களுக்கு இதுவொரு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

மூன்றாவதும் முதல் இரண்டுடனும் தொடர்புடையதே. அடையாளச் சிக்கல். தன் சுயத்தை என்னவாகவும் கற்பனை செய்து கொள்வதற்கான சுதந்திரத்தை இன்றைய காலம் நமக்கு வழங்கி இருக்கிறது. ஆயினும் எதையும் உறுதியாக தேர்ந்தெடுக்க தயக்கம் கொண்டவர்களாகவே இருக்கிறோம். பிற மனிதருடன் உறவு நிலைகளை அமைத்துக் கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய பாவனைகள் நம்மை நம்மிடமிருந்தே மேலும் மேலும் அந்நியப்படுத்துகின்றன. அதற்கு அஞ்சியே நாம் சாதாரண உறவுநிலைகளைக்கூட மிகுந்த உணர்ச்சிகரமானதாக கற்பனை செய்ய வேண்டியிருக்கிறது. இன்னொரு மனிதர் (காதல்,நட்பு,மணவுறவு) தனக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அளவுக்கு முக்கியானவரென்றும் நாம் சார்ந்திருக்கும் அமைப்பு (குடும்பம்,சாதி,தேசம்) நம்முடைய இருப்புக்கு அத்தியாவசியமென்றும் அவ்வமைப்புக்கும் நம்மேல் பரஸ்பர அன்பும் மரியாதையும் உண்டு என்றும் நம்பியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம். என் கதைகளில் இந்த அடையாளச் சிக்கல் வெளிப்படுவதாக நினைக்கிறேன்.

கடந்த சில மாதங்களாக நண்பர்களுடனான உரையாடல், நிகழ்வு நடந்தவன்று எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் என்னிடம் பகிர்ந்து கொண்ட என் சிறுகதைகள் குறித்த குறிப்புகள், எழுத்தாளர் அகில்குமார் நாயகிகள் நாயகர்கள் குறித்து முன்வைத்திருந்த அவதானிப்புகள் என அனைத்தும் சேர்ந்து என் எதிர்கால செயல்பாடுகள் குறித்த ஒரு தெளிவினை அளித்திருக்கின்றன. சுனில் கிருஷ்ணன் ஒளிர்நிழல் வந்தது முதலே என்னை கவனப்படுத்தி வந்துள்ளார். சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களை இவ்வாண்டு பிப்ரவரியில் சந்தித்தபோதே என் சிறுகதை தொகுப்பினை வாசித்திருந்தார். இருவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசியது ஊக்கமளிப்பதாக இருந்தது.

கவிஞர் சமயவேல் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்ததோடு ஒளிர்நிழல் குறித்து மிக விரிவாகப் பேசியது நிறைவும் நம்பிக்கையும் அளிப்பதாக இருந்தது.

அரங்கினைவிட்டு வந்தபோது மழை விட்டிருந்தாலும் சாலையில் நீர் தேங்கிக் கிடந்தது. உணவருந்துவிட்டு சுனில் மற்றும் கவியரசு நேசன் இருவருடன் காரைக்குடி வந்து சேர்ந்தேன். காரைக்குடியில் சுனில் விடைபெற்றார். உறக்கமோ சோர்வோ வீடுவந்து சேரும்வரை மனதில் இல்லை என்பது இந்த நிகழ்வு எனக்கு அளித்திருக்கும் உற்சாகத்தை உறுதி செய்வதாக இருந்தது.

புகைப்பட உதவி :விசாகன்

Sunday 18 August 2019

நாயகிகள் நாயகர்கள் குறித்து அகில்குமார்

சுரேஷ் பிரதீப்பின் நாயகிகள் நாயகர்கள்:

மனித மனதின் பாவனைகளும், போலித்தனங்களும் வெளிப்படும் கணங்களை கண்டுணரும் சுரேஷ் பிரதீப்பின் கதைகள், வென்றெடுப்பது அல்லது வெல்லக் கொடுப்பது என்பதாக உறவுகளை வரையறை செய்கிறது. ஆண் ஆதிக்கம், பெண் ஆதிக்கம் என்பதையெல்லாம் தாண்டி ஆதிக்கமற்ற உறவுகளுக்கான சாத்தியக்கூறுகள் எவ்வளவு உள்ளது என கேள்வி எழுப்புகிறது. ஆதிக்கம் என்பதுமேகூட எல்லா வேளைகளிலும் தீர்க்கமாக முன்முடிவு செய்யப்பட்ட ஒன்றாக இல்லாமல், மனம் சூழலுக்கேற்ப எடுக்கும் முடிவாகத்தான் இருக்கிறது. காதல் அல்லது காம உறவு என்பது மாறி மாறி செய்துகொள்ளும் ஆதிக்கத்தினால்தான் காப்பாற்றப்படுகிறது.

நாம் ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கும்போது வேறு ஒருவர் மீது ஏற்படும் அன்பு நம்மை அச்சுறுத்துகிறது. அந்த வேளையில் நாமே நம்மீது சந்தேகம் கொள்கிறோம், குற்றவுணர்வு கொள்கிறொம். ஆனால் அந்த உணர்வு தவிர்க்கமுடியாததாய் இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் மட்டுமே என்கிற பொய்மை அங்கே உடைந்து போகிறது. நாம் நேசிக்கும் அத்தனை பேரிலும் நிரம்ப நேசிக்கும் ஒருவரோடு அதிக நேரம் செலவிட நாம் விரும்புகிறோம், அவர்களை காதலிப்பதாக சொல்கிறோம், ஆனால் அவர்களை மட்டுமே நாம் காதலிக்கவில்லை, மீச்சிறு அளவில் வேறு சிலரையும் காதலிக்கிறோம் என்பதான ஒரு புரிதல் எனக்கு இருக்கிறது. மாசிலன் கதையில் வரும் லெனின் போல. அவன் மனைவி அகல்யா மீது அவனுக்கு அன்பு இல்லாமல் இல்லை, ஆனால் அனிதா மீதும் அவனுக்கு காதல் இருக்கிறது. அனிதாவை கொஞ்சம் காதலித்தால், அகல்யாவை நிரம்பக் காதலிப்பான். இதை அகல்யா எப்படி எடுத்துக்கொள்வாள் என்பது ஒரு விஷயம் என்றால், அகல்யாவுக்கும் இருக்க வாய்ப்புள்ள இத்தகைய உள் மன இச்சைகளை லெனின் எப்படி எடுத்துக்கொள்வான் என்பது இன்னொரு விஷயம். நூறு சத சுய வெளிப்பாடு என்பது எந்த உறவிலும் இருக்கமுடியாது.

இந்த தொகுப்பில் நாயகர்களைவிட நாயகிகள்தான் அதிகம் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அம்மாக்கள் பெரும்பாலான கதைகளில் வந்துவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் மகனைத் தோற்கடித்து அதிகாரம் செலுத்த நினைக்கிறார்கள், மகன்கள் அம்மாவை தோற்கடிக்கிறார்கள், அம்மா இறந்தபின் அதிகாரம் செலுத்த ஆளில்லாமல் தவிக்கும் கணவனை மனைவிகள் தோற்கடிக்கிறார்கள் (குற்றுளம்), இல்லையேல் மகனைப் பயன்படுத்தி அம்மாக்கள் அப்பாவைத் தோற்கடிக்கிறார்கள் (அலுங்கலின் நடுக்கம்), உறவினர்களைத் தோற்கடிக்கிறார்கள் (ஆலரசுக்குளம்). அம்மாக்களை வீழ்த்தி அதிகாரம் செலுத்த மருமகள்கள் முயல்கிறார்கள். இறுதியாக தங்கள் அம்மாக்களை மகள்களும் தோற்கடிக்கிறார்கள் (சொட்டுகள்). எல்லா இடங்களும் ஆதிக்கத்தாலும், அதிகாரத்தாலும் சூழப்படுகிறது. ஆதிக்கம் செலுத்த  ஒவ்வொருவரும் துடிக்கிறார்கள்.

கதை நாயகர்கள் பெரும்பாலும் பால்யத்தில் இருக்கிறார்கள் அல்லது பால்ய நினைவுகளை சுமந்தலையும் இளமையில் இருக்கிறார்கள். மகனின் வெறுப்புக்கு ஆளான அப்பா அவ்வப்போது வந்து போகிறார். பாவனைகளற்ற, ஆதிக்கமற்ற உறவுகள் சாத்தியமில்லை என்பதையே இந்தக் கதைகள் திரும்ப திரும்ப சொல்கின்றன.   பல உட்கதைகளுக்குள் புகுந்து செல்லும் சில கதைகள் நாவல்களுக்கான சொல்லல் முறையைக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது

வெல்தல், வெல்லப்படுதல் என்பதுதான் வாழ்வென்பது அவ நம்பிக்கை ஏற்படுத்துமென்றாலும், உன் இருப்பு முக்கியமற்றதென்றாலும் நீ வெறுமனே வாழ்ந்துகொண்டு இரு, இந்த ஆட்டத்தில் கலந்துகொண்டு ஊருக்கேற்ப நீயும் ஆடு, உன்னால் செய்ய முடிந்தது அவ்வளவே, உனக்கு விதிக்கப்பட்டது அதுதான் என்பதுதான் இந்தக் கதைகளில் ஊடாடி வரும் மையமெனத் தோன்றுகிறது.

கிழக்கு பதிப்பக வெளியீடு.

Saturday 29 June 2019

எஞ்சும் சொற்கள் - ஒரு வாசிப்பு

சமகால இளம் எழுத்தாளர்களின் கதைகளை தேடிப்பிடித்து படித்து வியப்பதிற்குண்டான ஆர்வத்திற்கேற்ற சரியானத் தீனிப்போட்டிருக்கிறதா இச்சிறுகதை தொகுப்பு என்றால் ஒருசில வகைகளில் மனமுவந்து ஆம் எனலாம். வளரும் எழுத்தாளரான சுரேஷ் பிரதீப்பின் எஞ்சும் சொற்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பன்னிரண்டு கதைகளின் தாக்கத்தின் துல்லியத்தை தெளிவுப்படுத்தக்கூடிய முயற்சியின் ஒரு சிறு துகள் தான் இக்கட்டுரையே தவிர மொத்தமாகவே அக்கதைகளை தராசில் நிறுத்தி பார்த்து தரம் பிரித்துப் பார்க்கும்  முயற்சியால் விளைந்தது அல்ல.

முதல் கதையான ‘வீதிகளி'ல் வரக்கூடிய பிரவீணாவினூடாக ஒரு சிறிய கிராமத்தின் தெருக்களுக்கு அழைத்துச் செல்கிறது கதைக்களம்.  வருடங்கள் பல உருண்டோடிய பின் சந்திக்கும் தோழிகளின் உணர்வு ரீதியான கொந்தளிப்புகளையும் குறுகுறுப்பையும் வர்ணிக்கும் எழுத்தாளரின் சிரத்தை மிளிரும் இடமென்றால் அது தோழிகளில் ஒருத்தி மணமாகி கைக்குழந்தையுடன் இருப்பதையும் அவளை யதேர்ச்சயாக காணும் இன்னொருத்தியின் மனஅலைகளில் விரியும் வியப்புக்கலந்த நுண்ணுர்வுகளின் வெளிப்பாடுகளை விவரித்திருக்கிற விதத்தைச் சொல்லலாம். அதிலும் அவர்களின் உரையாடல்களின் தொனியை சிறிதேனும் கூர்ந்து நோக்கும் தருணங்களில் புலப்படுவது என்னவெனில் மெல்லிய நீரோடையின் சலனமற்ற ஓட்டமானது கிளைப்பிரிகையில் சற்றே ஆர்ப்பரித்தடங்கும் ஓசையை நினைவு கூர்வதாய் இருக்கிறது. இவ்விரு பெண்களின் அகப்போராட்டங்கள் பின்னிப் பிணைந்து புறத்தோற்றம் கொள்ளும் மனிதர்களை நாம் எங்கும் காணலாம். அத்தகையதொரு நிஜ மனிதர்களின் நிகழ்வுகளை எவ்வித்ததிலும் பூசி மொழுகாமல் உள்ளதை உள்ளபடிக்கே வாழ்வியல் யதார்த்தங்களோடு பொருந்திப்போகும் வண்ணம் கதைக்கூறல் முறையாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. திருமணம் என்னும் மையப்புள்ளி எப்படி அதில் இணைந்துவிட்டளுக்குள்ளும் அந்த நிறுவனத்திற்கு வெளியே நிற்பவளுக்குள்ளும் விவரிக்க முடியாத பல மென்சலனங்களை தோற்றுவித்து செல்லும் என்னும் பார்வையில் விரிந்திருக்கக் கூடிய கதையின் சொல்லாடல்களை எல்லாம் நன்றென்கிற இரகத்தில் நிச்சயம் சேர்த்துக்கொள்ளலாம். 

எஞ்சும் சொற்கள் என்ற கதையின் கதைக்களமானது மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் சாதிகள் சான்றிதழ் சரிப்பார்க்கும் பொருட்டு காத்திருப்போர் வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் இளைஞன் ஒருவனின் பார்வையில் விரிகிறது. கீழ்நிலை சாதிகளின் மேல் படிந்திருக்கும் எள்ளல்களும், எளக்காரத் தோரணைகளுடன் கூடிய உதாசீனப்படுத்தல்கள் எல்லாம் சாதீய அடுக்குகளில் மேல்லுள்ளவர்களால் மட்டுமல்ல சமயங்களில் அதிகார வர்க்கத்தினர்களின் எல்லைக்குட்படுகிறப் போது ஒரே பிரிவை சார்ந்தவர்களாலேயும் தரம் தாழ்த்தப்படக்கூடும் என்னும் பார்வை சற்றே புதுமையாய் தெரிகிறது. அதிலும் பொறியியல் படிப்பு முடித்து தற்போது இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் வேலை செய்பவனாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்கிற போதும் சாதீய அடிப்படையில் ஒன்றானவர்களே என்னும் உரிமையில் ஆட்சியர் தன் மீது விட்டெறிந்த வார்த்தைகள் தந்த கணத்தின் வலியையும், அருவருப்பையும் உணரும் இளைஞனின் மனக்கொதிப்பை கதையின் இறுதி வரிகள் மிக கச்சிதமாக படம் பிடித்துக்காட்டுகிறது.   

பரிசுப்பொருளில் எதிர்படும் மோனிகாவின் பாத்திரப்படைப்பில் பெரிதானதொரு மாற்றங்களை காணமுடியாவிட்டாலும் கூட நவீன யுகத்தின் பிரபலமானதொரு முழக்கமான உபயோகித்து தூக்கியெறியக்கூடிய பண்டமாகத் தான் பெண்களின் அவலநிலைகள் இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் நீட்சியினை சற்று அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

பதினொரு அறைகள் என்கிற தலைப்பு ஒருவித யூகத்தை தருவிக்கிற போதும் கதையின் விவரணைகள் எல்லாம் மையக் கதாபாத்திரமான இளைஞனுள் உறைந்துப்போய் இருக்கும் தாயை பழிவாங்க துடித்துக்கொண்டிருக்கும் அவனுடைய  வன்மங்கள் வடியும் தருணத்தை நோக்கியே பின்னப்பட்டிருக்கிறது. அதிலும் தாய் என்கிற பிம்பத்தின் எதிர்மறை படிமங்களும் வழக்கத்தில் நைந்துப்போன வாதமான பெற்ற மகன் குறித்த பாசப்பிணைப்பென்பது முற்றாக கட்டவிழும் தருணமானது கைவிடப்பட்ட மகனின் மனதில் எத்தகையதொரு எதிர்மறை தாக்கத்தினை ஊற்றெடுத்து விடக்கூடும் என்பதை கதையின் முடிவில் வரக்கூடிய நிகழ்வில் மிக நேர்த்தியாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொறியியல் மாணவனும் இந்நாள் இளம் எழுத்தாளன் என்கிற அடையாளத்துடனும் தன்னை நிறுவிக்கொள்ள விழையும் அசோக்கின் பாத்திரப்படைப்பானது மடி கதையில் மிக நன்றாகவே புனையப்பட்டிருக்கிறது. அசோக்கின் சலனமற்ற தன்மையிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டிருக்கிற திவ்யாவினுடைய ஆளுமையும், அவளின் தீர்மானிக்கப்பட்ட கேள்விக்கணைகள் எல்லாம் அவன் மீது மோதும் தருணங்களில் வெளிப்பட்டிருக்கும் சிற்சில ஊடல்கள் எல்லாம் ஒரு பறவையின் சிறகு உதிர்தலுக்கிணையாகவே அத்தனை நலினத்துடனும் இயல்புடனும்  வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. திவ்யாவின் உணர்வுப்பூர்வமான கொந்தளிப்புகள் தன்னை சூழ்ந்துக்கொள்ளும் நிமிடங்களை ஒருவித உறுதிதன்மையுடனே கையாண்டுக்கொண்டிருக்கும் அசோக்கின் பாதுகாப்பு வளையமான மென்கர்வங்கள் உடைப்படும் தருணங்களை கடந்துவரும் போது ஒரு கணம் நிஜ மனிதர்களின் உரையாடலை அவர்களின் ஜன்னலுக்கு வெளியே நின்று வேடிக்கைப்பார்ப்பதை போன்றதொரு பிரமிப்பை வாசிப்பு ஏற்படுத்தி தருகிறது.  இன்னும் ஒருப்படி மேலேப்போய் இன்றைய இளம் எழுத்தாளர் என்கிற மிடுக்குடன் சுரேஷ் மிளிரும் இடமென்று சொன்னால் அது கதையின் முடிவில் அவர் கையாண்டிருக்கக்கூடிய நுண்பகடியை சொல்லலாம். “அவளை வாசலில் கண்டபோதே இந்தக்காட்சி வேறெப்படியும் முடியாதென நான் ஊகித்திருந்தேன் என்பது இறுதி முத்தத்திற்கு பிறகு ‘லவ் யூ’ என்று அவள் மார்பில் சாய்ந்தபோது தெரிந்தது.”

கணவன் மனைவிக்கிடையேயான தாங்கிப்பிடித்தலும் தாக்குப்பிடித்தலுக்குமான பெரிதானதொரு சவாலாகவே தொத்தி நிற்கும் உளவியல் சிக்கல்களை அணுவணுவாக ‘மறைந்திருப்பவை’ கதையில் மிக யதார்த்தமாக கட்டியெழுப்ப முனைந்திருக்கும் எழுத்தாளர் தீபாவின் மனப்பிறழ்வின் பிண்ணனியை விவரிக்கும் தருணங்களில் மிதமானதொரு சறுக்கலை சந்தித்திருக்கிறாரோ என்றே எண்ணத்தோன்றியது அவளுடைய சிறுவயது அதிர்வுகளை பதிவு செய்திருக்கிற இடத்தினில். அதிலும் குட்டிகளை ஈன்றதுமே அவற்றில் ஒன்றை தின்றுவிடுகிற தாய் நாயை தீபா மிக அருகில் முதல் முறையாக காணும் போது என்று சொல்லப்பட்டிருக்கிற போதும் அப்படிப்பட்டதொரு குரூரத்தை நிகழ்த்திக்காட்டக்கூடிய ஜீவனாக (அது இயல்பே எனினும்) நாயை கற்பனை செய்துப்பார்க்க மனம் ஒப்பாமல் போய் விடுகிறது. மேலும் திருமணத்திற்கு பின்பான தீபாவின் மனத்தடுமாற்றங்களும் சரி அவளின் தொடர் வதைப்படலுக்கான கதை நகர்தலும் சரி வாசகர்களின் தர்க்க நெறிகளின்று சற்றே தள்ளியிருப்பதைப் போன்றதொரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுவதால் கதையின் மீதான பிடிப்பை தளர்த்திவிட்டதாகவே தெரிந்தது கதையின் நிகழ்வுகளை கடந்து வருகிற போது. குறிப்பாக கதையின் முடிவுமே கூட துரிதகதியில் ஒருவித நாடகத்தன்மையுடன் முடித்து வைக்கப்பட்டு விட்டதாகவே தோன்றியது தீபாவின் மரணச்செய்தியை வாசிக்கும் போதினில்.

சாதீய கட்டமைப்புகளின் இறுக்கத்தை வேறொரு கோணத்தில் பதிவு செய்ய முனைந்திருக்கும் ஆசிரியரின் கதைசொல்லல் தொனியானது “ஆழத்தில் மிதப்பது”வில் சற்றே மாறுப்பட்டிருக்கும் இடமென்றால் அது கதைசொல்லிகளாக மூன்று முக்கிய பாத்திரங்களின் வழியாக கதைபுனையப்பட்டிருப்பதை சொல்ல்லாம். மற்றபடி ரம்யாவின் உயிரியல்  பெற்றோர்களின் அடையாளமானது அவளிடமிருந்து மறைக்கப்படுவதற்கான அவசியம் ஏனோ அவசியமற்றதாக தெரிவதாலோ என்னவோ கதையின் ஆரம்பத்தில் உணரப்படும் சுவாரசியத்தொனியின் அழுத்தம் குறைவதான உணர்வை கொடுப்பதாக இருக்கிறது கதையை முடிக்கும் தருணத்தில்.

பதின்ம வயதுடைய மாணவனின் பார்வையில் விரியும் கதையான 446A கதையின் உள்ளடுக்கில் அவ்வெண் கொண்ட பேருந்தின் சிறு தூர பயணம் போலவே நரேனின் பதற்றத்துடனும், பரப்பரப்புடனும் அசுர வேகமெடுத்து மிதமான வேகத்தில் நகர்ந்து திடீர் திருப்பத்தில் போய் நிற்கிறது. அதிலும் நரேனின் மனதில் தேங்கியிருக்கும்  பெண்கள் குறித்தான நினைவுகள் எல்லாம் அவர்களின் வியர்வை நெடியுடனோ அல்லது மைசூர் சாண்டல் சோப் நறுமணத்துடனோ வந்துப்போவதென்பது அன்றாடங்களில் உழலும் பெண்களின் வாழ்வியல் கூற்றுகளில் ஏதோ ஒன்றுடன் இணைக்கப்பட்டதைப் போன்றதொரு எண்ணத்தை தோற்றுவிப்பதாய் இருக்கிறது. 

நவீனகால யுவதிகளின் குறியீடாகவே ‘அபி’ கதையில் வரும் அபியை காண முடிகிறது. அவளின் தெளிவும், துணிச்சலும், மன உறுதியும் நம்மை புருவமுயர வைத்து வியப்பில் ஆழ்த்துகிறது. கணவன் ஸ்ரீராமிடமோ காதலன் சரணிடமோ உணர்ந்துக்கொள்ள முடியாத நெருக்கத்தையும் அரவணைப்பையும் தோழி அர்ச்சனாவினிடத்தில் உணர்ந்துகொள்கிறாள். பொதுவாகவே சுரேஷின் கதைகளில் பெரிதும் வியக்க வைக்கிற காரணிகளாக தெரிவது எதுவென்றால் ஒரு தேர்ந்த உளவியல் நிபுணருக்கே உரித்தான நிதானத்துடனும் கூரிய அனுமானங்களுடனும் மனிதர்களின் உளவியலின் அடுக்குகளில் உள்புகுந்து அவற்றின் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடிய நுண்ணுர்வுகளையும் ஆழ்மனத்தகவல்களையும் எவ்வித சமரசமோ, மேல்பூச்சோ இன்றி வார்த்தைகளில் வடித்து விடக்கூடிய திறமையால் சற்றே தனித்து தெரிவதை சொல்லலாம். பல சமயங்களில் மனதின் தென்படக்கூடிய சமநிலையின்மையை உள்ளதை உள்ளபடிக்கே எப்படி இவரால் வார்த்தைகளாக கொண்டு வர முடிகிறதென்று வியக்க தோன்றினாலுமே சில சமயங்களில் மனவறையின் ஒருபாதியை பதிவு செய்ததுப்போக அதன் மறுபாதியை பதிவு செய்ய கவனமின்யாக தவறிவிட்டாரோ என்றும் நினைக்க தோன்றிகிறது. அதுப்போல தான் ஸ்ரீராமிடம் அறை வாங்கும் அபியை பார்க்கும் தருணத்தில் அர்ச்சனாவின் மனக்குரலாக எதிர்படும் வார்த்தைகளில் வெளிப்படும் மெல்லிய குரூரமானது அதற்கு பின்பான சிறிய வருத்தத்தையும் வெளிப்படுத்தாமல் முடங்கிப்போய் கிடப்பதில் சிறிய ஏமாற்றத்தை உணர முடிகிறது. “அந்த அறையை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டேன்” என்கிற உணர்வுகளின் அதிர்ச்சியைப்போலவே தோழிகளின் அத்தனை அந்நியோன்த்தை தாண்டியும் அபி மற்றும் ஸ்ரீராம் பிரிவிலோ அல்லது சரணுடன் அவள் இணைய முடியாமல் போனதினாலோ எவ்வித பாதிப்புகளையோ, பதற்றத்தையோ அர்ச்சனாவினுள் காண முடியாததை முழுமையாய் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது.

பொதுவாகவே சிறுகதைகளில் கையாளப்படுகிற கதை சொல்லல்பாணியான ஒருவித நேர்கோட்டுத் தன்மையில் பயணிக்கும் கதைக்களமானது ‘வரையறுத்தல்’ கதையில் பெரிதும் மாறுப்பட்டு  புதுமையை தாங்கி நிற்கிறது. குறிப்பாக காலவரிசைப்படி பலவருட இடைவெளிகளுடன் முன்னும் பின்னுமாக நகர்த்தப்பட்டிருக்கும் நிகழ்வுகளினால் படிப்போர் மனதில் மிதமானதொரு குழப்பத்தையும் ஏற்படுத்திடா வண்ணம் கனக்கச்சிதமாகவே கதையை புனைந்திருக்கிறார் ஆசிரியர். அதனோடுக்கூடவே நவீன காலத்திலும் சாதிகளின் இறுக்கத்தின் பிடி சற்றும் தளர்ந்திடா வண்ணம் மேலும் மேலும்  இறுகிக்கொண்டுப் போவதுப் பற்றியும் அது நீட்சிக்கொள்ளும் விதத்தைப் பற்றியும் அதன் குறியீடுகள் சமகாலத்தில் எவற்றிலெல்லாம் பிரதிப்பலித்துக் கொண்டிருக்கிறது என்பது பற்றியும் ஒரு பெரிய கூட்டத்தின் முன்பாக மாலதியின் உரையாக பதிவு செய்ய விழைந்திருக்கும் ஆசிரியரின் முயற்சி நம்மை சற்றே வியப்பில் ஆழ்த்துகிறது.  இன்னும் சொல்லப்போனால் துளியளவு இடறினாலும் பலத்த சறுக்கலை சந்தித்திருக்கக் கூடிய கதைக்களத்தையும் அதை பலத்த பிரயத்தனுங்களுடன் வடிவமைத்து சலிப்புத்தட்டாதப்படிக்கு சொல்லியிருக்கிற விதத்திற்காகவுமே ஆசிரியருக்கு பெரிதானதொரு பாராட்டுதல்களை வழங்கலாம்.  

இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளிலேயே வாசிப்பிலும், புரிதலிலும் மிகப்பெரிய சவாலாகிப்போன கதையென்றால் அது நிச்சயம் ‘ஈர்ப்பு’ என்பதில் சந்தேகமில்லை. வழக்கமானதொரு சுரேஷின் கதை சொல்லல் பாணியில் அமைந்த கதை என்பதாலோ என்னவோ தனிப்பட்ட மனிதனின் உளவியல் சிக்கல்களின் படிமுடிச்சுக்களை அவிழ்க்க வேண்டி மிகுந்த மெனக்கெடல்களை மேற்கொண்டிருக்கும் ஆசிரியரின் முயற்சிகளை ஒருவாறாக யூகிக்க முடிகிற போதும் வாசகரின் பார்வையில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய பிரமிப்பையும் புரிதலில் உணரப்பட்டிருக்க வேண்டிய நெருக்கத்தைப் பற்றியும் சிறிதேனும் கவனத்தில் கொண்டிருக்கலாமோ என்னும் கேள்வியை தவிர்க்க முடியாமல் போகிறது. குறிப்பாக கதையின் விவரணைகளை உள்வாங்கும் பொருட்டு   பெரிதானதொரு அயர்ச்சியை உணரும் போது. இருப்பினும் ஈர்ப்பை சுமார் ரக கதையென்று புறந்தள்ளிடவும் முடியா வண்ணம் அதன் உள்ளடக்கமானது மிதமானதொரு கனத்தை தாங்கி நிற்கிறது. கதையின் முடிவைத் தவிர வேறெங்கும் உணரப்படாத ஒட்டுதலின்மை வாசிப்பின் போது ஒருவித சலிப்பையும், அயர்ச்சியையும் கொடுக்கிற போதும் கதைசொல்லியாக வரும் நடுத்தர வயது ஆணின் தாழ்வு மனப்பான்மையால் விளையும் வெறுமையையும், பொறுமல்களையும் புதிதானதொரு முறையில் பதிய வேண்டி கதாசிரியர் பயணித்திருக்க கூடிய தொலைவு என்பது ஒருவகையில் பிரமிப்பை ஏற்படுத்தி ஒருசில இடங்களில் புதுமையான வார்த்தைகளுடன் சற்றே விசித்திரமாகவும் தென்படுகிறது.

இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கக் கூடிய இறுதி கதையான ‘பாரம்’ முழுக்கவே மனவியலின் படிமங்களாலும் வடிந்ததுப்போக மிச்சமிருக்கக்கூடிய ஆழ்மன நினைவடுக்குகளின் குறியீடுகள் பற்றிய விவரணைகளால் விரவிக்கிடக்கிறது. மேலும் பாரம் மற்றும் சுமை என்கிற குறியீட்டு சொற்களினூடாக எழுத்தாளர் சொல்ல விழைவது யாதெனில் மனிதர்களுள் உறைந்திருக்கும் வாழ்வியலை நீட்சிக்கொள்ளும் பேரவாவினை வலுப்படுத்தும் அக மற்றும் புறகாரணிகளாக தென்படுவது அவர்தம்மை இறுக்கிப்பிடித்திருக்கும் நினைவோடைகளினால் மட்டுமே என்னும் கருத்தை பதிவு செய்வதற்காக என்பதுப்போலவே இருக்கிறது. இக்கூற்றினை உறுதிப்படுத்தும் விதமாக  “எல்லா செயல்களிலும் இன்பம் என்பது கண நேர உணர்ச்சி தான். சுமை தான் நிரந்தரம். கரையான் அரித்த மரத்தூண் அந்தக் கரையான் உருவாக்கிய மண் படலத்தால் தாங்கப்படுவது போல மனிதர்கள் தங்கள் சுமைகளால் மட்டுமே உலகில் தாங்கப்படுகிறார்கள்” என்கிற வரியினூடாக ஆசிரியர் சற்றே அழுத்தந்திருத்தமாய் பதிவிட்டு செல்கிறார்.

- அசோக மலர் 

(அசோக மலர் இந்த வாசிப்பனுபவத்தை எழுதிய வாசகியின் புனைப்பெயர். ஷோபா சக்தியின் கதையொன்றில் இருந்து இப்பெயரை எடுத்துக் கொண்டதாக மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.)

Wednesday 10 April 2019

பொண்டாட்டி - பாலுறவைப் பேசும் நீதிக்கதை

எழுத்தாளன் தன்னை என்னவாக பாவித்துக் கொள்கிறான் என்பது புனைவின் அழகியல் ஒருமைக்கு ஒரு இன்றியமையாத அம்சம். அதோடு எழுத்தாளனின் புனைவு பாவனையை அறிந்து கொள்வது குறிப்பிட்ட எழுத்தாளனின் மனவெழுச்சிகளையும் அக்கறைகளையும் கண்டுகொள்ள வாசகனுக்கு பெருமளவு உதவக்கூடும். மானுடம் என்கிற பெருங்கொந்தளிப்பினை வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்கிறவனாக டால்ஸ்டாய் தன்னை போரும் வாழ்வும் நாவலில் பாவனை செய்து கொள்கிறார். ஜெயமோகனின் பெரும்பாலான ஆக்கங்களில் ஒரு வரலாற்று விசாரணையாளின் பாவனையை நம்மால் காண இயலும். புதுமைப்பித்தன் மதிப்பீடுகள் சரிவதால் கோபமும் கசப்பும் கொள்ளும் கூரிய நல்லுணர்ச்சி கொண்டவராக தன்னை பாவனித்துக் கொள்கிறார். இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்தவர்கள் பலரின் எழுத்துக்களுக்கு கசப்பும் விலகலும் முக்கியமான புனைவு பாவனையாக மாறியிருக்கிறது. அவ்வகையில் அராத்து என்கிற எழுத்தாளர் தன்னை என்னவாகப் புனைந்து கொள்கிறார் என்ற கேள்வி அவரது இந்த நாவலையும் பிற படைப்புகளையும் புரிந்து கொள்ள அவசியமானது என நினைக்கிறேன்.

/மென்பொருள் துறையில் டிரெயினிங் & கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வரும் இவர், தொழில்முறை எழுத்தாளர் அல்ல. பொழுதுபோக்குக்காக எழுதுபவர். இவர் இதுவரை எந்த விருதும் வாங்கியதில்லை!/

இப்படி ஒரு குறிப்பினை அராத்து எழுதிய சில நூல்களில் காண முடிந்தது. இந்த நூலிலும் அதைக்காண முடிகிறது. இந்த நாவலின் தொனி அவரது பிற புனைவு நூல்களின் வெளிப்பாடு ஆகியவற்றைக் கொண்டு அராத்து தன்னையொரு "தீவிரமற்ற விளையாட்டான எதிர்தரப்பாக" புனைந்து கொள்ள முயல்கிறார் என ஊகிக்கலாம்.  ஆகவே அவர் இயல்பாக தமிழ் இலக்கியம் தீவிரமானது என்றும் விளையாட்டுத்தனங்களை மீறல்களை அனுமதிக்காதது என்றும் அந்த அனுமயின்மையின் வெளிக்கு வெளியே தன் புனைவுகள் இருப்பதாகவும் எண்ணிக் கொள்கிறார். அவர் படைப்புகளில் அழகியல் ஒருமையை பல இடங்களில் குலைப்பது அவரது இந்த புனைவு பாவனைதான். தீவிரமின்மை போலவே தீவிரமும் இலக்கியத்தில் ஒரு பாவனைதான் என்பது இலக்கியம் வாசிக்கத் தொடங்கிய ஒருசில வருடங்களிலேயே வாசகனுக்குத் தெரிந்துவிடும். சமூக அக்கறையுடனும் நம்பகத்தன்மை மிக்க தரவுகளுடனும் எழுதப்பட்டிருந்தாலும் ஒரு படைப்பின் அழகியல் ஒருமையும் தரிசனமுமே வாசகனுக்கு முக்கியமானதாக இருக்குமே ஒழிய அப்படைப்பின் கலகக்குரலோ,மீறல் தொனியோ அவனை எவ்வகையிலும் ஆர்வப்படுத்தாது. ஆகவே அராத்து நாவலின் முன்னட்டையில் "Fake novel" என்று குறிப்பிட்டிருப்பதையோ பின்குறிப்பில் "தொழில்முறை எழுத்தாளர் அல்ல" என்பது போன்ற ஆர்வத்தின் காரணமாகவோ சுயத்தின் மீதான நம்பிக்கையின்மை காரணமாகவோ எழுதப்பட்ட குறிப்பினை நீக்கிவிட்டு இந்த நாவலை வாசித்துச் செல்லலாம் என நினைக்கிறேன்.

வாசகனுக்கு எதையெல்லாம் இப்படைப்பு கொடுக்காது என எழுத்தாளர் பட்டியல் இட்டிருந்தாலும் "ஜாலியாக" எழுதப்பட்டது என விலகினாலும் ஒரு வாசகனாக நான் அத்தகைய பலகீனமான ஒப்புதல் வாக்குமூலங்களை விலக்கிவிட்டே இப்படைப்பை வாசிக்கிறேன்.



நாவலின் களம் பாலுணர்வுதான். பொழுதுபோக்குக்காக எழுதப்படும் பாலுணர்வெழுத்து மற்றும் காணொளிகளில் ஒரு பொதுக்கூறினை நம்மால் அவதானிக்க இயலும். பெரும்பாலான இத்தகைய பாலுணர்வெழுத்து "முறையற்ற" பாலுறவுச் சித்தரிப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதாவது சமூகம் பொதுவில் கணவன்-மனைவி என்ற ஒற்றைப் பரிணாமம் கொண்ட பாலுறவை மட்டுமே அனுமதிக்கிறது. அதைத்தவிர்த்த மற்றதனைத்துமே மீறல்கள். யோசித்துப் பாருங்கள் பெரும்பாலான பால்நுகர்வெழுத்தில் கணவன்-மனைவி உறவே சொல்லப்படாத. கணவனின் தம்பி, மனைவியின் தங்கை,நண்பனின் காதலி,தோழியின் காதலன்,அம்மாவின் தோழி,மகளின் தோழன், இன்னும் தீவிரமாக தந்தை,தங்கை,தம்பி, மகள்,அம்மா என இந்த முறையற்ற உறவுகளின் பட்டியல் நீளும்.  இத்தகைய எழுத்தில் ஒரு பிரபலமான வடிவம் வயது சற்று முதிர்ந்த பெண் முதிரா இளைஞன். இந்த வடிவம் அதிகம் காணப்படுவதற்கான காரணத்தை எளிதாக ஊகிக்கலாம். "கன்னித்தன்மை" உடைய இளம்பெண்களை விட இத்தகைய பேரிளம் பெண்ணின் உடல் காமத்தை நாடும் ஒரு இளைஞனக்கு அதன் போஷாக்கு காரணமாக ஈர்ப்புடையதாக இருக்கும் மற்றும் மேலும் அவ்வயது பெண்களிடம் 'கனிவினை' எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை. இத்தகைய எழுத்தின் நுகர்வோர் பெரும்பாலும் விடலைகள் என்பதால் அவர்கள் விரும்பும் இந்த 'வடிவம்' அதிகமாக வாசிக்க கிடைக்கும்.  எழுத்தின் வழியாக வாசகன் அடையும் கிளர்ச்சி என்பது காமம் துய்ப்பதை வாசிப்பது என்பதைத்தாண்டி அது பிறழ்வாக இருப்பதால் அடையப்படுவதாகவே இருக்கும்.

இந்த நாவல் சிக்கலான வடிவத்தில் காலத்தை முன்பின் நகர்த்தி எழுதப்பட்டது போலத் தெரிந்தாலும் இரண்டு பகுதிகளாக பிரித்துவிடும்படியாகவே நாவலின் கட்டமைப்பு உள்ளது. மீறல் அளிக்கும் கிளர்ச்சியை வாசகனுக்கு கடத்துவதாகவே முதல் அத்தியாயம் துவங்குகிறது. அன்னம் என்ற பெண் தன்னுடைய கணவன் கங்கநாதனை ஜாஃபர் என்ற அவளுடைய காதலனுடன் இணைந்து கொலை செய்கிறாள். அதற்கான காரணமாக அன்னத்தின் வறுமை சொல்லப்படுகிறது. வறுமை ஒழிந்ததே தவிர ஜாஃபரிடமிருந்தும் அவர் எந்த இன்பத்தையும் அடைவதில்லை. இதுபோல எண்ணிக்கையிடக்கூடிய பல மீறல்கள் ஒரு தலைமுறையில் நடக்கின்றன. உத்திரம்,பெரியய்யா,செந்தாமரை,சுமதி,பாலு,அமிர்தகடேஸ்வரன் என தொடர்ச்சியாக இதுபோன்ற பிறழ்வுறவுகள் சொல்லப்பட்டுக் கொண்டே வருகின்றன. இது நாவலின் ஒரு பகுதி. மற்றொரு பகுதியில் தீப்திகா அறிமுகமாகிறாள். அவளுடன் அவளுடைய தோழிகள்  கன்யா,ஆதிரை,பிரபா என மேலும் சிலர் அறிமுகம் கொள்கின்றனர். இந்தப்பகுதியின் கதைசொல்லல் சமகாலத்தைச் சொல்வதாக இருக்கிறது. ஆனால் முதல் பகுதியைப் போன்றே இப்பகுதியிலும் மீறல்களும் பிறழ்வுகளும் வரிசையாகச் சொல்லப்பட்டுக் கொண்டே வருகின்றன. புணர்வுச் சித்தரிப்புகளையும் முன்புணர்வுச் சித்தரிப்புகளையும் புணர்வுக்கு பிறகான சித்தரிப்புகளையும் அராத்து இந்த நாவலில் மிக விரிவாக எழுதி இருக்கிறார். ஆனால் அவற்றை சித்தரிப்பதில் இருக்கும் கற்பனை வளம் ஒரு போர்ன் திரைப்படத்தை தாண்டவில்லை என்பதே அவற்றை தட்டையாக்குகின்றன. ஒரு தரமான பிரதியில் சித்தரிக்கப்படும் காமம் என்பது நமக்குத் தெரிந்த ஒரு ஆளுமை காமம் துய்ப்பதை அறிய நேரும்போது நமக்குள் தோற்றுவிக்கும் நிம்மதியின்மையையும் கேள்விகளையும் தோற்றுவிக்க வேண்டும். வெண்முரசு நாவல் வரிசையில் திரௌபதி பாண்டவர்களுடன் கொள்ளும் காமம் வாசகனுக்குள் அத்தகைய அதிர்ச்சியை தரக்கூடியது. ஆனால் அராத்து தன் கதாமாந்தர்களை ஒரு போர்ன் படத்தில் நடிக்கும் அல்லது ஒரு தரமற்ற பாலியல் கதையில் எழுதப்படும் பாத்திரங்களைப் போலவே காமத்தில் சித்தரிக்கிறார். உண்மையில் ஆசிரியரின் அக்கறை காமத்தை விரிவாகப் பேசுவதுதான் என்றால் 'இந்த தலைமுறை செக்ஸையெல்லாம் ரொம்ப கேஷுவலா எடுத்துக்குது' என்பதைப் போன்ற மேலோட்டமான மனநிலையில் இருந்து தன்னுடைய பாத்திரவார்ப்புகளை செய்திருக்கமாட்டார்.

நாவலின் மைய இழை தீப்திகா அடைந்து இழக்கும் மூன்று காதல்களே. நாவலில் பொருட்படுத்தி வாசிக்கத்தக்க ஒரே பகுதியாக இருப்பது இதுதான். ஜெயமோகன்,ராமகிருஷ்ணன் மற்றும் சாருநிவேதிதா என்ற மூன்று வெவ்வேறு குண இயல்புகள் கொண்ட ஆண்களை காதலித்து தீப்திகா மீள்வதை மட்டும் ஓரளவு சரியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த மூன்று காதல் தோல்விகளுக்கும் பிறகு தீப்திகா கட்டில்லாமல் குடியிலும் காமத்திலும் ஈடுபட்டு மீள்கிறாள். அதன்பிறகும் அவள் அழகிழக்கவில்லை என்பது ஆசிரியரின் விருப்ப கற்பனையாகவே இருக்க வேண்டும். காமத்தில் நோய்கள் மிக எளிதாகப் பரவும். பால்வினை நோய்களைத்தாண்டி சருமக்கோளாறுகள் முத்தமிடுதலால் பரவக்கூடிய மென்மையான வியாதிகள் என எத்தனையோ இருக்க அவளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்படியான மிதமிஞ்சிய போதை பழக்கம் வேறு இருக்கிறது. ஆனால்  இத்தனைக்கும் பிறகும் கூட ஒரு அழகான ஆண் பொருட்படுத்தி காதலிக்கத்தக்க உடற்கட்டுடன் தீப்திகா இருக்கிறாள் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.

பாலுறவுச் சிக்கல்கள் பேசப்படக்கூடாதவை அல்ல. மிக விரிவாகவே அவற்றை பேசுவதற்கான தேவை இன்றைய தாராளமய சமூகத்தில் இருக்கவே செய்கிறது. கடவுள்களும் லட்சியங்களும் இறந்து போன ஒரு காலத்தில் தேவைக்கதிகமான பணம் ,பணத்திற்கு இணையாக தேவைகளை பெருக்கிக் கொள்ளச் சொல்லும் நுகர்விய கலாச்சாரம், மரபான சமூக அமைப்புகளில் ஏற்பட்டிருக்கும் சேதம் என்பது போன்ற காரணிகளை கணக்கில் கொள்ளும்போது ஆண்-பெண் உறவிலும் இவற்றின் தாக்கம் பிரதிபலிப்பதை நம்மால் உணர இயல்கிறது. அது பேசப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. ஆனால் அராத்து அவற்றை பேச எடுத்திருக்கும் மொழியும் இணையுடன் காமம் கொள்வதற்கு முன்னும் பின்னும் உறவுகளில் ஏற்படும் நுட்பமான வண்ண மாறுதல்களும் என எவ்வளவோ இருந்தும் காமத்தின் மேல்மட்ட சிக்கல்களை மட்டும் தொட்டிருக்கும் தட்டையான தர்க்கமுமே இதை பாலுறவுச் சிக்கல்களைப் பேசும் படைப்பு என்ற தரத்தில் இருந்து இழுத்து வெறும் பாலுறவுக் கிளர்ச்சி மட்டுமே பேசும் படைப்பு என்றாக்குகிறது.

பாலுறவுச் சிக்கல்கள் தமிழில் எழுதப்படாத களமும் அல்ல. புதுமைப்பித்தனில் தொடங்கி கே.என்.செந்தில் வரை உண்மையான தீவிரத்துடன் பாலுறவுச் சிக்கல்கள் எழுதப்பட்ட பலநூறு பக்கங்களை உதாரணமாக எடுத்துவைக்க இயலும். தி.ஜானகிராமன்,இந்திரா பார்த்தசாரதி,ஆதவன்,சு.வேணுகோபால் என அனைத்து தட்டு மக்களின் பாலுறவுச் சிக்கல்களையும் அடையாளப்படுத்திய ஒரு வரிசை தமிழில் உண்டு.  தன்னை அந்த வரிசையில் பொருத்திக்கொள்ளும் விருப்பமோ இதுபோன்ற வரிசையமைப்பதில் நம்பிக்கையோ கொண்டவராக அராத்து இல்லை என்றே நினைக்கிறேன். அப்படியிருக்க அவர் தனக்கென ஒரு தனி "பாணியை" உருவாக்கி முன்வைக்க முயன்றிருக்கிறாரா இந்த நாவலில் என்றால் அப்படியும் ஏதும் தென்படவில்லை. மீண்டும் மீண்டும் பெரும்பாலானவர்கள் போர்ன் படங்களில் கண்டு சலித்த தட்டையான சித்தரிப்புகள். வேண்டுமெனில் போர்ன் பார்க்காத "நல்ல பிள்ளைகளுக்கு" இந்த நாவல் உத்வேகத்தை ஊட்டலாம்!

மையமின்மை விளையாட்டாக கலைத்து கலைத்து கதையை அடுக்குவது என்பது போன்ற பின்நவீனத்துவ விஷயங்களாலும் நாவல் கட்டப்படவில்லை. நாவலில் ஒரு பலகீனமான தரிசனமும் உள்ளது. அதை தரிசனம் என்பதைவிட ஒருவகையான எளிய பெண்ணிய முன்முடிவு எனலாம்.

/ஆண்களால் காமத்திற்கென பெண்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனர். ஒரு பெண்ணை 'அனுபவித்ததும்' ஆண் அவளிடமிருந்து விலகிவிடுகிறான்./

இந்த தியரியை மெய்ப்பிப்பதற்காக தந்திரமான (ஜெயமோகன்,சாரு நிவேதிதா) குரூரமான (அமிர்த கடேஸ்வரன்,லக்ஷ்மணன்) பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத (ஒரு லோகோ பைலட் பாத்திரம்,அர்ஜித்) என விதவிதமான "ஆண் எதிர்கதாப்பாத்திரங்களை" உருவாக்கி உலவவிட்டிருக்கிறார். பெண்கள் மீண்டும் மீண்டும் இந்த ஆண்களின் சதுரங்கத்தில் வெட்டப்படுகின்றனர் அல்லது தோற்கடிக்கப்பட்டு கீழே தள்ளப்படுகின்றனர். பெண் அன்புக்கு ஏங்குகிறவளாகவும் ஆண் காமத்துக்கு ஏங்குகிறவனாகவுமே எளிமையாக சித்தரிக்கப்படுகின்றனர். ஆண்-பெண் என்ற இருநிலைகளுக்கு இடையே பல்வேறு பால்நிலைகள் இருப்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன. அப்படியிருக்க அராத்து தன் நாவலில் வெறும் ஆண்களையும் பெண்களையும் மட்டுமே சித்தரித்து - இப்படிச் சொல்லக் காரணம் இது பாலுறவு நாவல் என்பதே - அவர்களின் எந்த உளநுட்பங்களுக்குள்ளும் அகநகர்வுகளுக்குள்ளும் செல்லாமல் வெறுமனே உடலையே மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்படி உடலை எழுதிவதிலும் ஒரு கள்ளமற்ற குழந்தைத்தனம்தான் வெளிப்படுகிறது. இந்த நாவலில் பெரும்பாலான பாத்திரங்களின் சிக்கல்கள் எப்படி கற்பிதங்களாகவே இருக்கின்றனவோ அதுபோலவே ஆதிரை,பிரபா,தீப்திகா போன்ற கதாப்பாத்திரங்களின் வழி நாவல் முன்வைக்கும் தீர்வுகளும் கற்பிதங்களாகவே இருக்கின்றன.

நேற்றைய ஒரு ஆணின் பகற்கனவில் பெண் சேவகியாக, துணிச்சலானவளாக,கல்வி கற்றவளாக,சுதந்திரமானவளாக அதேநேரம் நல்ல மனைவியாகவும் இருந்தது போல இந்த நாவல் முன்வைக்கும் பகற்கனவில் பெண் மேற்சொன்ன எல்லா குணநலன்களுடனும் "அன்புக்கு ஏங்குகிறவள்" என்ற ஒரு கூடுதலான விஷயமும் சேர்க்கப்பட்டுள்ளது. நல்ல மனைவி என்ற  ஷரத்து நீக்கப்படுகிறது.வாசிப்பதற்கு எந்த தடையையும் ஏற்படுத்தாத விரைவான நடை , திடீரென திறந்து கொள்ளும் மர்மங்கள் ,வாய்விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை சித்தரிப்புகள் போன்றவை நாவலை நிறுத்தாமல் வாசிக்க வைக்கின்றன. அதேநேரம் நாவல் குறித்து இவ்வளவு விரிவாக எழுதக் காரணம் இது போன்ற வேறு சில ஆழமற்ற படைப்புகளை வாசிக்க நேர்ந்ததும் அவற்றுக்கான இடம் வரையறுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும்தான். ஏனெனில் தமிழில் வெளிவந்தபோது கண்டுகொள்ளப்படாத ஆக்கம் பின்னர் எடுத்து வைக்கப்பட்டு அதீதமாக சிலாகிக்கப்படும். அந்த சிலாகிப்புகளைக் கடந்து அப்படைப்பை அணுகுவதற்கு மேலும் தாமதம் ஏற்படும்.

ஒட்டுமொத்தமாக இந்த நாவலின் அதிர்ச்சிகர சித்தரிப்புகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் ஆண்களுக்கு புத்திசொல்லும் ஒரு எளிய ஆக்கமாகவேத் தெரிகிறது.


Thursday 7 February 2019

தனிமையெனும் நிரந்தர நிலை

/இக்கேள்வியை வெவ்வெறு வகைகளில் நண்பர்களிடமிருந்து எதிர்கொண்டபடியே இருக்கிறேன். இக்கேள்வியின் ஊற்றான உளக்கசப்பை அடைந்து அதைக் கடக்கும் முனைப்பில் இருப்பவன் என்ற முறையில் தோழி ஒருவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்ட இக்கேள்வியையும் அதற்கு நான் சொன்ன பதிலையும் அவரது அனுமதியுடன் பகிர்ந்து கொள்கிறேன்/

தனிமை வரமா, சாபமா? எதுவாயினும் மனித மனத்தை பொறுத்து தான், எனினும், தனிமையை விட கடுமையானது எதுவும் உண்டோ என்பது போல தோன்றி விடுகிறது, சில சமயங்களில் நம்முடைய எண்ண ஓட்டத்தின் வீரியத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் போது.

-----

அன்புள்ள -----

தனிமையை வரம் சாபம் என்றெல்லாம் பொதுமைபடுத்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் தனிமையின் சாதக பாதக அம்சங்களை நன்கறிவேன். இளவயதில் மனித உறவுகளில் மற்ற எல்லோரையும் விட சற்று அதிகமான புனிதத்தை கற்பனை செய்ததாலோ என்னவோ உறவுகள் அப்படி இல்லை என்ற விஷயத்தை உணரத் தொடங்கியபோது உள்ளொடுங்கியவனாகி விட்டேன். மனித உறவுகளை இரக்கமேயின்றி கீறி பார்க்கும் ஒரு மனநிலை ஏற்பட்டுவிட்டது. சமீபமாக அதிலிருந்தும் சலித்து வெளியேறுகிறேன். ஆனால் உறவுகளை நம்பியபோதும் கசந்து விலகியபோதும் தனிமையில் தான் இருந்திருக்கிறேன். அத்தனிமை ஒன்றை உணர்த்தியது. உறவுகள் சமூகம் என்ற அமைப்பினால் மனிதனுக்குள் தோன்றிய உணர்வுகளுக்கு வடிகால்களாக அமைபவை மட்டுமே. இப்படிச் சொல்லலாம். ஒரு அலுவலகத்தில் புறச்சூழல் மாற மாற அலுவலக விதிகள் மாறிக்கொண்டே இருக்கிறது அல்லவா. உதாரணமாக நேரம் தவறாமல் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்ற கட்டாய விதியை அலுவலகத்தின் மேற்பார்வையாளர் ஒருவர் முன்பு கண்காணித்துக் கொண்டிருந்தார். இன்று அதற்கென ஒரு இயந்திரம் இருக்கிறது. விதி தளரவில்லை. அதை கட்டாயமாக பாவிக்கும்படியான சூழலை இந்த இயந்திரம் உருவாக்கி விடுகிறது.

அதுபோலத்தான் எல்லா மனித உறவுகளும். தேவை சார்ந்தவை. புறத்தின் ஒழுக்க விதிகளும் உறவு வரைமுறைகளும் மாறுவதற்கு ஏற்றது போல மாறிக்கொண்டிருப்பவை. அவற்றை நிரந்தரமானவை புனிதமானவை என்று நம்ப வைப்பது சமூகம் நீடிப்பதற்கு தேவையானதொரு தந்திரம்.  இந்தப் புரிதல் நான் உணர்ந்து அடைந்தது.இந்த சமூக ஏற்பாட்டிற்குள் வாழும் நாம் நம்மைச்சுற்றி புழங்கும் உறவுகளை தவிர்த்து விலகி நிற்க இயலாது. ஆனால் அவ்வுறவுகள் எதுவும் நம் தனிமையை போக்கிவிட முடியாது.

உறவுகள் பொழுதுபோக்குக்காக மட்டுமே. கணவன் மனைவி காதல் குழந்தை என எதுவானாலும் அனைத்தும் ஒருவகையான உணர்வுப்பூர்வமான பொழுதுபோக்குதான்.  மனிதர்களின் உணர்வு வீரியத்தைப் பொறுத்து உறவுநிலைகள் அமைகின்றன. நமக்கு இந்த உணர்ச்சி பொழுதுபோக்கில் ஆர்வமிருப்பின் அதில் நாம் ஈடுபடலாம். திளைக்கலாம். இதை அறிந்தோ அறியாமலோதான் அத்தனைபேரும் உறவில் திளைக்கிறார்கள். இதை அறிந்து திளைப்பதும் வெளியேறுவதும் நம்மை சமநிலையில் வைத்திருக்கும்.

நான் இதை அறிந்து வைத்திருப்பதாகவே நம்புகிறேன். உறவுகளை வெறும் தேவை சார்ந்து அணுகாமல் அதேநேரம் ரொம்பவும் உணர்வுபூர்வமாக மாற்றிக் கொள்ளாமல் ஒரு நடுநிலை பேணுகிறேன். நடுநிலையை நீடித்துக் கொள்ள சிரமமாகவே இருக்கிறது. ஆனால் அதுவே சரியான புள்ளி என்றொரு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவற்றை கழித்துவிட்டு பார்த்தால் என் அன்றாடம் முழுத்தனிமையால் ஆனது. அது எனக்கு பல வகையிலும் நலம் பயப்பதாகவே அமைகிறது. தனிமைப்பட்டு இருக்கிறோம் என்ற எண்ணம் எழும்போதெல்லாம் தனிமை அளிக்கும் சுதந்திரத்தை மனதில் கொண்டு அவ்வெண்ணத்தைக் கடக்கிறேன்

சுரேஷ் பிரதீப்