Saturday, 26 January 2019

காந்தி - தன்முழுமையின் செயல் வடிவம்

2012ஆம் ஆண்டு இளங்கலை பொறியியல் முடித்து என்ன வேலையும் கிடைக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் கல்லூரியைவிட்டு வெளியேறி வீட்டில் கிடந்த சமயம் அண்ணன் ஆசிரியராக பணிபுரிந்து ஓஎம்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சில மாதங்கள் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பள்ளியில் இயற்பியல் பாடமெடுத்த ஆசிரியர் எதிர்பாராத விடுப்பில் சென்றிருந்ததாலும் மாணவர்களுக்கு உடனடியாக ஒரு ஆசிரியர் தேவைப்பட்டதாலும் இந்த தற்காலிக ஏற்பாடு.  பொறியியல் படித்தவன் பள்ளி மாணவர்களுக்கு இயற்பியல் எடுப்பது ஒரு மெல்லிய ஏளனப்பார்வையையும் என் மீது படரவிட்டிருந்தது அப்போது. அடுத்த ஆண்டு நடைபெற இருந்த கேட் (Graduate Aptitude Test for Engineering என்பதன் சுருக்கம்) தேர்வுக்கு படித்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்த நாட்கள் அவை. யாரும் ஏதேனும் சொல்லி விடுவார்களோ என்ற பதற்றம் எப்போதும் மனதில் இருந்தது. பாடமெடுத்தது போக மற்ற நேரங்களில் அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அறையில் யாருடனும் அதிகமாக பேச்சு கொடுக்காமல் ஏதேனும் புத்தகத்தை எடுத்து தலைகவிழ்ந்தபடிக்கு அமர்ந்து கொள்வேன்.

காந்தியின் சுயசரிதை நூலான The story of my experiments with truth அப்படி தலைகுனிந்து கொள்வதற்கான ஒரு சாக்காக எனக்குத் தென்பட்டது. அந்த ஆசிரியர் அறையின் ஒரு மூலையில் அந்த நூலைக் கண்டிருந்தேன். ஓஎம்டி பள்ளியின் முன்னாள் தாளாளர் நூல்கள் வாங்கிச் சேர்ப்பதிலும் பேராளுமைகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதிலும் ஆர்வமுடையவர் என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.  காந்தி என்ற ஆளுமை மீது அதுவரை எனக்கிருந்த சித்திரம் பெரும்பான்மை தமிழர்களைப் போன்றே ஒரு விருப்ப விலக்க அல்லாட்டம் மட்டுமே. குடும்பத்தின் திராவிட பின்னணியின் காரணமான மனவிலக்கமும் அன்று தேசியத்தின் மீதிருந்த நம்பிக்கையின் காரணமான விருப்பமும் காந்தியின் மீதிருந்தன எனக்கு. ஆனால் இவ்விரு சித்திரமுமே காந்தியை ரொம்பவும் தள்ளிநின்று பார்த்து உருவாக்கிக் கொண்டவை. காந்தி "அணுகப்படமுடியாதவர்" என்ற மலைப்பு ஒருபுறமும் அந்த வயதுக்கே உரிய பேராளுமைகளாக சித்தரிக்கப்பட்டவர்களின் மீதான சந்தேகம் மறுபுறமுமான அலைகழிப்புகளுடனேயே அந்த நவஜீவன் மலிவுவிலை பதிப்பு நூலினை வாசிக்கத் தொடங்கினேன்.

காந்தி "தன் தாத்தாவின் கைகளில் ஒன்று போர்பந்தருக்காக எப்போதும் வணக்கம் செலுத்துவதாக இருந்தது" என்று ஓரிடத்தில் சொல்லியிருப்பார். அதை வாசித்தபோது சிரிப்புதான் முதலில் வந்தது. அதுபோல "என் நோக்கம் கடவுளை நேருக்கு நேர் காண்பதே" என்று அவர் அறுதியிட்டு சொன்ன வரிகள் அவர்மீது ஏளனத்தையே ஏற்படுத்தின. ஆனால் நூலின் பக்கங்கள் போகப்போக அதுவரை எனக்கு நன்கு பரிச்சயமான எந்தவொரு மனிதரும் நெருங்கித்தொட இயலாத அளவுக்கான அபாயகரமான அருகாமையில் காந்தி என்னருகே வந்து நிற்கத் தொடங்கினார். சொகுசின்பாற்பட்ட என் நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துகிறவராக என் சுய பிசகிற்கும் திறனறியாமைக்கும் நான் எவ்வாறெல்லாம் சூழலையும் பிறரையும் அரசியலையும் வரலாற்றையும் காரணம்காட்டி மனச்சமநிலை பேணிக்கொண்டு இருக்கிறேன் என்பதையும் காந்தியின் அந்நூல் எனக்கு எடுத்துக் காட்டியது. அதற்கு முன்பு மனதுக்கு முழுமையாக அணுக்கமானதாக மாறிய எந்நேரமும் உள்ளுக்குள் உருப்போட்டபடியே இருந்த வேறொரு நூலினை நான் வாசித்திருக்கவில்லை. ஆனால் காந்தியின் மொழி(நான் வாசித்தது ஆங்கிலத்தில். மூலம் குஜராத்தி என்பதையும் சொல்லிவிட வேண்டும்) ஆழ்ந்த சமநிலை கொண்டது. வாசகனை கொந்தளிப்படையச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் துளியும் அற்றது. ஆனால் ஒவ்வொரு கணமும் உண்மையின் முன் நிற்கிறோம் என்ற உணர்வையும் உண்மையை அப்பட்டமாக எவ்வடிவில் எதிர்கொள்ள நேர்ந்தாலும் மனதில் ஏற்படும் துணுக்குறலையும் அளித்தபடியே இருப்பது அந்த உரைநடை. மூன்று மாதங்கள் அந்த நூலுடனேயே பயணித்தேன்.( பயணித்தேன் என்பதை உருவகமாகச் சொல்லவில்லை. எங்கு சென்றாலும் என் தோள்பையில் The story of my experiments with truth இருந்தது). உண்மையில் காந்தி அந்த நூல் வழியாக ஒளிக்கான எந்த நம்பிக்கையையும் எனக்குள் விதைக்கவில்லை. வாழ்வை இறுகப் பற்றுவதற்கான உயவெண்ணெய் என் கைகளில் தடவி விடவில்லை. மாறாக ஒவ்வொரு கணமும் நிதர்சனத்தை எதிர்கொள்ளும் விழிப்புணர்வுடன் கடக்க வேண்டியது என்பதை எடுத்துக் காட்டினார். அந்த விழிப்புணர்வுடன் எந்நேரமும் என்னால் இருக்க இயலவில்லை எனினும் தொடர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபடுவதை ஒரு லட்சியமாக காந்தி என்னுள் நிறுத்தியிருக்கிறார் என்றே இன்று உணர்கிறேன்.

2013ல் நடந்த கேட் தேர்வில் தகுதி மதிப்பெண்ணுக்கு ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்று தோற்றேன். இருபத்தோரு வயதுவரை எத்தேர்விலும் தோற்றதில்லை. சந்தித்த முதல் தோல்வி அந்த கேட் தேர்வுதான். ஒருவேளை காந்தியை வாசிக்காமல் விட்டிருந்தால் அங்கே நான் உடைந்து போயிருக்கவே வாய்ப்பதிகம். வேறுபல மனச்சள்ளைகளும் அந்நேரம் என்னை அலைகழித்துக் கொண்டிருந்தாலும் இத்தோல்வியை ஏற்றுக் கொள்ளும்படியானதாக அதற்கான காரணங்களை ஆராயச் செய்ததாக மாற்றியதில் காந்திக்கு பங்குண்டு. அதன்பிறகு பொறியியலில் மனம் செல்லவில்லை. விவேகானந்தரின் கீதை நூலை வாசிக்கத் தொடங்கினேன். காந்திக்கென்றே என் சுயபுராணத்தை சொல்ல வேண்டியதாயிற்று. இனி காந்திக்கே திரும்பி விடுகிறேன்...


நான் சொல்லியது போன்ற காந்தியால் "ஈர்க்கப்பட்ட" ஒரு அனுபவத்தை என் நண்பர்களில் சிலர் என்னிடமும் சொல்லி இருக்கின்றனர். காந்தியின் சுயசரிதை நூலை வாசித்தபின் கடந்த இந்த ஆறு வருடங்களில் காந்தி  காந்திய செயல்பாடுகள் காந்தியின் ஏற்பு மறுப்பு குறித்து அறிய நேர்ந்தவற்றின் அடிப்படையில் அவரை எனக்காக தொகுத்து புரிந்து கொள்ள முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம். ஆகவே காந்தி குறித்த விவாதங்கள் வரலாற்று தரவுகள் அவரது செயல்களுக்கான நியாயப்படுத்தல்கள் எதையும் நான் செய்ய முயலவில்லை. தரிசன ரீதியாக காந்தி எனக்கு எப்படி பொருள்படுகிறார் என்று புரிந்து கொள்ளவே முயல்கிறேன். 

வரலாற்றின் தலைசிறந்த ஆளுமைகள் யாரும் தன்னுடைய செயற்களத்தில் இருந்து முற்றாக தன்னை துண்டித்துக் கொண்டு தான் எதை உண்மை என நம்புகிறோமோ அதை அப்படியே மக்கள் மத்தியில் செயல்படுத்த நினைத்தவர்களாக இருந்ததில்லை. தன்னுடைய சுய லட்சியங்களை மேன்மையான நம்பிக்கைகளை சமூகத்தின் செயல்திட்டமாக மாற்ற நினைக்கும் எந்தவொரு தலைவராலும் பேராளவிலான வன்முறையே நிகழ்ந்திருக்கிறது என்பது வரலாற்றில் இருந்து நமக்கு கண்கூடாகவேத் தெரிகிறது. அதேநேரம் மக்களுடன் புழங்கி மக்களை புரிந்து கொண்டு அவர்களில் ஒருவனாகவே வாழ்ந்து மடிந்து விடுகிறவர்களால் அவர்கள் வாழும் காலத்தில் அவர்களின் செயற்களத்தில் இருந்த மக்களுக்கு நன்மைகள் ஏற்பட்டிருக்குமானாலும் எவ்விதமான சமூக மாற்றங்களையும் அவர்களால் ஏற்படுத்தியிருக்க இயலாது. இவ்விரு சிக்கல்களுக்கும் அடிப்படை காரணம் ஒன்றே. அறிவுஜீவித்தன்மை. முன்னவர்கள் தங்கள் செயற்களத்தில் அல்லது சமூகத்தில் நிலவும் கீழ்மைகளுக்கு தீர்வுகளை "வெளியில்" இருந்து கொண்டு வருகிறவர்களாக இருப்பார்கள். தாங்கள் நம்பும் சூத்திரத்தை வெற்றிகரமாக சமூகத்துக்குள் செலுத்திவிட்டால் அமைப்பு ரீதியான மாற்றம் நடைபெற்று சமூகம் உய்வடைந்துவிடும் என்று நம்புகிறார்கள். இவர்களது சூத்திரத்தால் அச்சமூக மக்கள் கொள்ளும் ஒவ்வாமைகளையும் மக்களிடம் உருவாகும் எதிர்ப்புகளையும் இத்தகையவர்கள் கணக்கில் எடுப்பதில்லை. பின்னவர்கள் ஒவ்வொரு கணமும் அவர்களது செயற்களத்துக்கு வெளியே இருந்து அவர்கள் களத்தை வந்தறையும் விசைகள் குறித்த பிரக்ஞை அற்றவர்களாக இருப்பார்கள். முன்னவர்களிடம் தென்படும் அறிவுஜீவித்தன்மையும் பின்னவர்களிடம் தென்படாத அறிவுஜீவித்தன்மையும் இவ்விரு தரப்புகளாலும் உண்மையான மாற்றங்களை விளைவிக்க இயலாததற்கு காரணமாகிறது. இவ்விடத்தில்தான் காந்தி பொருள்படுகிறார் என்று நான் எண்ணுகிறேன். காந்தி மக்களை ஒரே சமயம் புரிந்து கொள்கிறவராகவும் கண்காணிக்கிறவராகவும் இருந்தார். இந்த தனித்துவமே காந்தியை அவர் வாழ்ந்த நூற்றாண்டை கடந்தும் அரசியல் ரீதியாகவும் தத்துவரீதியாகவும் பொருள்படுகிறவராக மாற்றியிருக்கிறது.

குஹா "இந்த நூற்றாண்டு அறிவுஜீவிகளை நம்பியிருக்கிறது" என தன் நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார். உண்மையில் அறிவுஜீவித்தன்மை எது என தீர்மானிப்பதில் காந்தியின் பங்கு இன்றியமையாதது. சமூகத்தின் மீது விலகலான பார்வை கொண்டு அதன் குறைகளின் மீது ஒவ்வாமை கொண்டு விலகி நின்று தீர்வு சொல்வது இந்த நூற்றாண்டின் அறிவுஜீவித்தன்மையாக இருக்காது. அதன் அசைவியக்கங்களை சமூக செயல்பாடுகள் வழியாக புரிந்து கொண்டு தன்னையும் சமூகத்தின் ஒரு பகுதியாக உணர்கிறவர்கள் அதேநேரம் அதன்மீது விமர்சனமும் கொண்டவர்களாலேயே தீர்க்கமான வன்முறையற்ற மாற்ற முன்வைக்க முடியும் என்ற கூற்றுக்கான விளக்கமாக காந்தி வாழ்ந்து சென்றிருக்கிறார். காந்தியின் ஆச்சரியம் ஏற்படுத்தும் வெற்றிகள், சஞ்சலங்கள் ,தோல்விகள் என அனைத்தையும் அவருக்கும் இந்தியாவுக்கும் கடவுளை நேருக்கு நேர் காணவிழைந்த அவரது லட்சியத்துக்குமான தொடர்பிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இன்று நாம் அனைத்தையும் பகுத்துச் சிந்திக்கிறோம் (compartmentalised thinking). உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் மனிதர்களின் ஒவ்வொரு தேவைக்கும் ஒரு நிறுவனம் ஒரு தொழிற்சாலையின் ஒவ்வொரு மூலப்பொருளுக்கும் ஒரு முகவர் என பல்வேறு பகுப்புகளின் தொகுப்பாகவே செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  எந்தவொரு பிரச்சினையையும் நுட்பத்துடன் பகுத்துப் பகுத்து கையாள நம்மால் இயல்கிறது. இந்த பகுப்புகள் முழுமையானவையாகவே இருக்கின்றன. ஆகவே முழுமை என்ற ஒன்றில்லை வாழ்வின் வெவ்வேறு பகுப்புகளை தொகுப்பு பார்க்க நினைப்பது ஒரு விழைவு மட்டுமே. அப்படியொரு "தொகுப்பு" செவ்விலக்கிய படைப்புகளில் பழங்கோவில்களில் மட்டுமே சாத்தியமானது. அன்றாட வாழ்வில் நாம் கற்பனை செய்யும் "முழுமை" என்றொரு நிலை என்று நம்மால் எளிதாக வாதிட முடிகிறது. ஆனால் வரலாற்றில் எக்காலகட்டத்திலும் முழுமை கற்பனை செய்யப்படாமல் இருந்ததில்லை என்று வாதிடுபவர்களும் உண்டு. ஒரு வரலாற்றுகாலம் கடந்த பிறகு அதன் சாதக பாதகங்களை ஆய்ந்து அந்த முழுமை வரலாற்றை எழுதுகிறவர்களால் பின்னர் கற்பனை செய்யப்படுகிறதே அன்றி எந்தவொரு வரலாறும் "நிகழும்" காலத்தில் முழுமைக்கான ஏக்கத்தை தன்னுள் கொண்டிருப்பதில்லை என்று எதிர்வாதம் வைப்பவர்கள் சொல்வார்கள். இந்த எதிர்வாதத்துக்கு முழுமையாக எதிரானவராக காந்தி நின்றிருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அதாவது இந்திய சுதந்திர வரலாற்றின் உருவாக்க காலகட்டத்திலேயே மக்களிடம் முழுமையுணர்வை ஊட்ட முடியும் என்ற நம்பிக்கையை காந்தி விதைத்து அதை செயல்படுத்தவும் செய்திருக்கிறார்.  முன்பு சொன்னதுபோல தன்னையும் தன் வழியாக தன் செயற்களமான சமூகத்தையும் "முழுமை" செய்வதன் வழியாகவே காந்தியின் அனைத்து செயல்பாடுகளையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.காந்தி இயல்பிலேயே முழுமையை நோக்கிச் செல்கிறவராக இருந்தார். "அவருடைய வாழ்வே ஒரு பரிசோதனைக்களம்" என்று பிறர் சொல்வதும் "என் வாழ்க்கையே நான் முன்வைக்கும் செய்தி" என்று அவரே சொல்வதும் முழுமைக்கான இந்த பயணத்தையே என்று நான் எண்ணுகிறேன். உண்மையில் இச்சிந்தனை காந்திக்கு "வெளியில்" இருந்து கிடைக்கவில்லை. முழுமைக்கான கற்பனை என்பது நம்முடைய தத்துவங்களின் வழியாக ஒரு இந்தியத்தன்மை என்றும் நாம் அறிவோம். வேதாந்தம் தம்மம் என இந்தியாவின் உச்ச தரிசனங்கள் எதுவுமே வாழ்க்கையை நன்மைக்கும் தீமைக்குமான போராக சித்தரிக்கவில்லை. முழுமையின்மையின் தவிப்பும் முழுமை நோக்கிய பயணமும் முழுமையை உணர்வதால் தோன்றும் விடுதலையுமே நம் மரபில் மீட்சிக்கான வழியாக சொல்லப்படுகிறது. சாத்தானுடனான போரில் கடவுளுக்கு துணையாக நிற்க வேண்டிய கட்டாயத்தை இந்திய மரபு இந்தியர்களுக்கு வழங்கவில்லை.

இந்தியா காந்திக்கு முன்னும் முழுமையை கற்பனை செய்திருக்கிறது. மேற்கு மரபின் மீது ஒவ்வாமை கொண்ட ஆரம்பகால காந்தியும் அத்தகைய பழமையான இந்திய முழுமையையே உன்னதம் என எண்ணுகிறார். சாதி குறித்த காந்தியின் ஆரம்பகால பார்வைகூட பெரும்பாலும் பழமையுடன் ஒத்துப் போவதாகவே இருக்கிறது. ஆனால் இந்தியாவை சுற்றி அவர் மேற்கொண்ட பயணங்கள் அவர் எண்ணங்களை மாற்றத் தொடங்குகின்றன. புரட்சிகர சிந்தனையாளர்கள் போல உடனடியாக எதிர்நிலை எடுத்து "ஜாதியை அழிக்க வேண்டும்" என்று நடைமுறைக்கு ஒவ்வாத அபத்தங்களை பேசாமல் அதேநேரம் இந்திய ஜாதி முறையை அப்படியே ஏற்றும் கொள்ளாமல் ஜாதிகளுக்கு இடையேயான மணம் சிறிய ஜாதிகள் ஒன்றிணைவது போன்ற நடைமுறை செயல்பாடுகளையே தீர்வுகளாக முன்வைக்கிறார். அதாவது காந்தியால் எந்தவொரு சமூக சிக்கலுக்கும் சார்பெடுக்காத மத்திய தன்மை ஒரு நடைமுறை தீர்வினை முன் வைக்க முடிகிறது. முன்பு சொன்னதுபோல சமூக இயக்கத்தை கணக்கிலெடுக்காத புரட்சிகர சிந்தனையாளனுக்கும் கண்மூடித்தனமான செயல்பாட்டாளனுக்கும் இடையே காந்தி வந்து நிற்கும் புள்ளி இதுதான். மிகச்சிக்கலான புள்ளி இது. காந்தி ஒரேநேரம் சமூகத்தின் அங்கமாகவும் அதில் மாற்றங்கள் விளைவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவராகவும் தோன்றுகிறார். இதற்கான தீர்வாக காந்தி காண்பது தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமான இடைவெளியை குறைப்பது. "தனிமனிதன்" என்ற கருத்துருவத்தின் உருவாக்கமே நவீனமயமானது மனிதன் தன்னை சமூகத்தில் ஒருவனாக உணர்வது பழமையானது என நவீனத்துவர்கள் வாதிடலாம். ஆனால் காந்திய வழியிலான "உணர்தல்" என்பது சார்ந்திருக்கும் சமூகத்தை விமர்சனங்களற்று ஏற்றுக்கொண்டு அது கொடுக்கும் சாதக பாதகங்களை அனுபவித்து கடந்து போவதல்ல. சமூகத்தின் மீதான விமர்சனப்பார்வையுடன் அதில் தன்னை ஒருவனாக உணர்ந்து சமூகம் தன்னை பாதிக்க அனுமதிப்பதன் வழியாக தன் ஆளுமை சமூகத்தை பாதிக்க வைப்பது. காந்தியின் நடைமுறையாகவும் தரிசனமாகவும் நான் காண்பது இதையே. அவர் தன்னுடைய செயல்வெளியை ஒரு "உயிர்" போலவே கருதிக் கொள்கிறார். காந்தியின் பார்வை விரியும்போது அவரது செயல்வெளி இந்திய மக்களின் சுதந்திரம் என்பதில் இருந்து மானுட மீட்பு என்ற எல்லைக்கு நகர்கிறது. காந்தியின் நடைமுறை தரிசனமாவதும் இதுவரையிலான இந்திய மரபில் அவர் தன்னை இணைத்துக் கொள்வதும் அவர் உலகிற்கு அளித்த கொடையாக நான் எண்ணுவதும் விழிப்புற்ற சுயத்தின் வழியே மீட்பினை முழுமையை நோக்கிச் செல்வதற்கான இந்த எத்தனத்தையே. அதில் காந்தி வெற்றி பெற்றாரா இல்லையா என்பது விவாதத்துக்கு உரியதே. காந்தியின் இறுதிநாட்களில் பிரிவினையின் போது நிகழ்ந்த படுகொலைகளோ ஏன் பிரிவினையோ கூட அவருக்கு ஏற்புடையதல்ல. ஆனால் அத்தகைய ஒவ்வாத செயல்களுக்கும் காந்தி தன்னையே காரணமாக எண்ணுகிறார். தன்னுடைய வலிமை போதுமானதாக இல்லாததும் மக்கள் தன்மீது நம்பிக்கை இழந்ததுமே தேசப்பிரிவினைக்கும் வன்முறைக்கும் காரணம் என எண்ணுகிறார். காந்தியத்தின் மிக முக்கிய பண்பாக நான் கருதுவது பொறுப்பினை ஏற்றுக் கொள்ளும் இந்த தன்மையையே. தன் எதிர் தரப்பின் பிசகினை பலகீனத்தை கூட தன்னுடையதாக எண்ணிக்கொள்ளும் மனப்பாங்கு. அப்படியெனில் காந்தியத்தை பின்பற்றினால் மீட்பு சாத்தியமா? அதற்கு எவ்வுறுதியையும் காந்தி அளிக்கவில்லை என்பதே அவரே இந்த நூற்றாண்டுக்கான மனிதராக்குகிறது. பொதுவாக ஒரு கொள்கையின்படி நடக்க எத்தனிப்போர் பயனை எதிர்பார்ப்பது எவ்விதத்திலும் தவறானது கிடையாது. ஆனால் அப்பயனுக்கான உத்திரவாதத்தை காந்தி அளிக்கவில்லை. தன்முழுமைக்கான பயணமாக மட்டுமே காந்தியை பின்பற்றுவதை பரிந்துரைக்க முடியும். அங்கும் காந்தி மத்தியிலேயே நிற்பார். கொள்கையுறுதி கொண்டவர்களுக்கு மீட்பு சாத்தியமென்றோ சாத்தியமில்லை என்றோ காந்தியத்தால் சொல்ல இயலாது. கொள்கையுறுதி கொண்ட ஒரு மனிதனின் அதிகபட்ச சாத்தியத்தை காந்தி தன் வாழ்வை களமாக்கி நமக்கு காண்பித்திருக்கிறார்.

ஐம்பதாயிரம் பக்கங்கள் நீளும் எழுத்து. ஐம்பது வருடங்களுக்கு மேலான தன்னலம் கருதாத பொதுவாழ்க்கை, உலகின் மிகப்பெரிய மக்கள் குழுவை நம்பிக்கை வாய்ந்ததாக மாற்றிக்காட்டிய அருஞ்செயல் என அத்தனைக்கு பின்னும் இருந்தது காந்தியின் தன்முழுமைக்கான தேடல் மட்டுமே. காந்தி கடவுளை தரிசித்தாரா இல்லையா என நம்மால் சொல்ல இயலாது. ஆனால் அதற்கான பயணத்தை மிக வெற்றிகரமாக காந்தி மேற்கொண்டிருக்கிறார். யூதர்களுக்கானவராக இருந்த இறைவனை உலக மக்கள் யாவருக்குமானவராக கிறிஸ்து மாற்றினார் என என் நண்பனொருவன் அடிக்கடி சொல்வான். நான் காந்தி குறித்து இப்படிச் சொல்வேன். ஞானிகளுக்கும் யோகிகளுக்குமான தன்முழுமைக்கான தேடல் சமூகத்துடன் ஒத்திசைந்து அதன் மகிழ்வுகளையும் துயர்களையும் ஏற்று வாழ்வதன் வழியாக ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியமே என காந்தி சொல்கிறார். காந்தி தன்முழுமையின் செயல் வடிவம்.

Sunday, 20 January 2019

சேப்பியன்ஸ் - உலகத்தின் கதை

பெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலாம். பேரரசுகளும் ஏகாதிபத்திய அரசுகளும் பெருங்கதையாடல்கள் மீதே தங்களுடைய அடித்தளங்களை அமைத்தன. அக்கதையாடல்களை மக்களை நம்பச் செய்ததன் வழியாக அவர்களை முடிவில்லாமல் சுரண்டி சமூகத்தின் மிகச்சிறு பகுதியினர் மட்டுமே நலம்பெறும்படியான ஒரு அரசினை ஏகாதிபத்தியங்கள் அமைத்துக் கொண்டன. ஆகவே ஒவ்வொரு பெருங்கதையாடலுக்குப் பின்னும் இருப்பது சர்வதேசக் கனவல்ல சர்வாதிகாரக் கனவே என்று அத்தரப்பு வாதிடும். சர்வதேச ராஜ்ஜியத்தை முன்வைத்து இயங்கிய கிறிஸ்துவம் இஸ்லாம் போன்ற மதங்களையும் பிரிட்டிஷ் அரசு போன்ற ஏகாதிபத்தியங்களையும் இப்பெருங்கதையாடல்களுக்கு நாம் உதாரணங்களாகச் சுட்ட முடியும். பெருங்கதையாடல்கள் அதிகாரத்தை மையம் நோக்கி குவிக்கின்றன. அந்த மையத்துடன் இசைவு கொள்ளாதவர்களை அக்கதையாடலின் மையத்தில் இருப்பவர்கள் ஒடுக்கிறார்கள்.  நடைமுறை அறிவும் இத்தகைய பெருங்கதையாடல் கொண்ட மதங்களும் அரசுகளும் பெரும் அளவிலான வன்முறையை விளைவித்திருக்கின்றன என்று நமக்கு காட்டுகின்றன. அப்படியெனில் பெருங்கதையாடல்கள் இனி தேவையே இல்லையா? ஒவ்வொரு மனிதனும் அவனது வட்டாரம் சார்ந்த கதையாடல்களுடன் புழங்கி வளர்ந்தால் மட்டும் போதுமா?


இக்கோட்பாட்டின் நகைமுரணமாக நம்முடைய புற உலகின் எல்லைகள் மேலும் மேலும் பலகீனமடைகின்றன. உலகின் எப்பகுதியின் எக்கருத்தியலும் நம்மை வந்து பாதிக்கக்கூடியதாக நம்முடைய புறவுலகம் மாறியிருக்கிறது. நம் அகமும் இத்தகைய சலனங்களுக்கு ஏற்றது போல தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க நம்மைச் சூழ்ந்து நிகழ்கிறவற்றை புரிந்து கொள்ளவே நமக்கு ஒட்டுமொத்த உலகின் இயல்பு குறித்த அறிவு தேவைப்படுகிறது. நம்முடைய கேள்விகள் குழப்பங்கள் அனைத்திற்குமான பதிலை ஒரு குறுகிய எல்லையைக் கடந்து மானுடம் என்ற பெரும் எல்லையில் தேட வேண்டிய கட்டாயத்திற்கு இன்றைய அறிவியல் உலகம் நம்மை தள்ளியிருக்கிறது.  அப்படியெனில் நமக்கு மீண்டும் பெருங்கதையாடல்கள் தேவைப்படுமா? நம்முடைய செயல்களை குணங்களை கட்டமைப்பதில் "உலகம்" என்ற கருத்தியலுக்கு பங்கு இருக்கும் போது நாம் உலகம் என்பதை ஒற்றை கருத்தியலாக்கி சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோமா? இந்த முரண்களை இவ்வாறாக இணைத்துப் பார்க்க முடியும்.

நேற்றின் பெருங்கதையாடல்கள் அனைத்தும் தற்செயலானவை அல்லது அக்கதையாடலை உருவாக்கிய தரப்பால் திட்டமிடப்பட்டவை. அதேநேரம் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதபாவனை கொண்டவை. பரலோக ராஜ்ஜியமோ இந்தியாவின் ஜாதிய அமைப்போ அவ்வளவு சுலபமாக கேள்விக்கு உட்படுத்தக்கூடியவையாக அவற்றின் உச்ச ஆதிக்கம் சமூகத்தில் நிலவியபோது இருக்கவில்லை.  ஆனால் இன்று உருவாகிவரும் மானுடம் என்ற கதையாடலின் கூறுகள் அனைத்துமே விமர்சனத்துக்கும் கேள்விகளுக்கும் உட்பட்டவை. உரையாடல் தன்மையும் தற்பகடித்தன்மையும் கொண்டவை.  அதேநேரம் பல்வேறு வகையான வரலாற்று அலைகளை கடந்து வந்திருக்கும், லட்சிய உத்வேகங்களின் மீது கசப்பற்ற அவநம்பிக்கை கொண்ட மனிதர்களை நோக்கி இன்றைய கதைகள் சொல்லப்படுகின்றன. கதைசொல்லியும் அவ்வளவாக அலட்டிக் கொள்ளாதவனாகவே நம் முன்வந்து நிற்க வேண்டியிருக்கிறது. அவன் உணர்ச்சியின் பக்கம் நகர்ந்து நேற்றின் பொற்காலங்களை பற்றி பேசத்தொடங்கும்போது அவனிடம் கதை கேட்பவன் சலிப்படைகிறான். கதை கேட்பவனுக்கு பொன்னுலகங்கள் பற்றிய கனவுகளோ நேற்று "சரியாக" இருந்து இன்று சீரழிந்துவிட்ட பண்பாடுகள் குறித்தோ அக்கறை இல்லை. உலகின் தொன்னூறு சதவீத கதை கேட்பவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த அவர்களின் பாட்டான்மார்கள் கற்பனையே செய்திராத கருத்தளவில் முந்தைய காலங்களை விட மேன்மையான ஜனநாயக அரசுகளில் வாழ்பவர்கள். ஆகவே உலகின் கதையை அவனிடம் சொல்லவரும் கதைசொல்லி உணர்ச்சிகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. உணர்ச்சியற்ற நிகழ்வு விவரிப்புகள் தகவல் தொகுப்புகளாக நின்றுவிடுகின்றன. மானுட அகத்துடன் உரையாடும் கதைகளாக அவற்றால் மாற இயல்வதில்லை. ஆக இன்று உலகின் கதையை சொல்லவரும் கதைசொல்லிக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் உணர்ச்சியற்ற தொனியில் தன் உணர்ச்சியை வெளிப்படுத்துவதே. அத்தகையதொரு நூலாக அறிவின் தொனியில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நூலாக சேப்பியன்ஸை நாம் காணலாம்.

யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் என்ற இந்த நூல் "மனிதகுலத்தின் விரிவான வரலாறு" என்ற பின்னொட்டினை கொண்டிருந்தாலும் நான் இதையொரு கதைப்புத்தகமாகவே வாசிக்க விரும்புகிறேன். வரலாறு என்பதே ஒருவகையான கதையாடல்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இந்த நூலினை நான் இவ்வாறாக வாசிப்பதாகக் கொள்ளலாம். ஒரு வரலாற்று நூலினை கதை என்று சொல்வது சற்று மனவிலக்கத்தை உருவாக்கலாம். அந்த விலக்கத்துக்கு அடிப்படை காரணம் நாம் வரலாற்றினை "உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பு" என்றும் கதையை "புனையப்பட்டு ஒன்று" என்றும் நம்புவதாக இருக்கலாம். ஆனால் ஒரு சரியான வரலாற்று நூல் சம்பவங்களை அடுக்குவதாக இருக்காது. அந்த சம்பவங்களில் இருந்து வரலாற்று மனிதர்களின் முடிவுகளுக்கு சாத்தியமாக ஊகங்களை முன்வைப்பதாக இருக்கும். உதாரணமாக சோழர்களின் வரலாற்றினை எழுதிய கே.எஸ்.நீலகண்டசாஸ்த்ரி "மெய்கீர்த்திகள்" என்று அழைக்கப்படும் சோழர்களின் புகழ்பாடும் கல்வெட்டுகள் பலவற்றை பொய்கீர்த்திகள் என்கிறார். கல்வெட்டுகளில் அளவுக்கதிகமாக எழுதப்பட்டிருக்கும்  புகழ்மொழிகள் அவற்றின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகிறது என்கிறார். இது வரலாற்றாசிரியரின் ஒரு ஊகமே. இந்த ஊகம் வரலாற்றிலிருந்து பல உணர்ச்சிகரமான கற்பனைகளை செய்து கொள்வதில் இருந்து நம்மைத் தடுக்கிறது.

அதுபோல ஹராரி இந்த நூலில் அத்தகைய பல தைரியமான துடுக்கான ஊகங்களை முன்வைக்கிறார். அந்த ஊகங்களையும் முடிவுகளையும் அவர் முன்வைக்கும் விதத்திற்கு பின்னிருக்கும் வலுவான தர்க்கம் அவற்றில் பல ஊகங்களை ஏற்றுக்கொள்ளும்படியாக ஆக்குகிறது.

பின்வரும் ஒரு உதாரணத்தின் வழியே இத்தர்க்கத்தை விளக்கலாம். அதற்கு முன்பாக நூலின் கட்டமைப்பு பற்றி சொல்வது சரியாக இருக்குமென நினைக்கிறேன். ஹராரி இன்றைய நவீன யுகம் உருவாவதற்கு முந்தைய நான்கு முக்கியமான காலக்கண்ணிகளை இந்த நூலின் நான்கு பதிகளாக பிரிக்கிறார்.

அறிவுப்புரட்சி என்ற பகுதியில் சேப்பியன்ஸ் என்ற நமது சிற்றினம் எப்படி பிற குரங்கினங்களில் இருந்து வேறுபடுகிறது என்றும்(தோராயமாக கிமு70000ல் இருந்து கிமு12000 ஆண்டுகள் வரை) அவ்வேறுபாடு எவ்வாறு அவ்வளவு பெரிய வேறுபாடாக இருக்கவில்லை என்பதையும் விளக்குகிறது. வேளாண்புரட்சி(தோராயமாக கிமு12000 முதல் கிமு5000) என்ற பகுதி மனித இனம் நாடோடியாகத் திரிவதில் இருந்து விவாசாய சமூகமாக மாறுவதையும் மனிதகுல ஒருங்கிணைப்பு என்ற பகுதி மதங்களும் வணிகமும் பேரரசுகளும் சிறுசிறு பகுதிகளாக இருந்த குலங்களை ஒன்றிணைத்து அரசுகளாக்குவதையும் (கிமு 4000 முதல் கிபி 1500 வரை) விளக்குகிறது. இறுதி பகுதியான விஞ்ஞான புரட்சி (தோராயமாக கிபி 1500 முதல் இன்றுவரை) இன்றைய சமூகங்கள் நவீன அறிவியலாலும் முதலாளித்துவ வணிக முறைகளாலும் இயங்குவதை விளக்குகிறது.

உலக வரலாற்றின் இந்த புறவடிவத்தை வெவ்வேறு கதைகளின் வரலாற்று நூல்களின் வழியாக நாம் ஏற்கனவே அறிந்தே வைத்திருப்போம். ஒரு வரலாற்றாசிரியனின் பணி என்பது இந்த பெரும்போக்கான புறச்சித்திரத்தில் நுண்ணிய தகவல்களை இணைப்பதும் முரண்கள் தோன்றினால் கிடைத்திருக்கும் புதிய தகவல்களைக் கொண்டு அதைக்களைய முயல்வதும் தன்னுடைய நுண்ணறிவால் மேலும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு சித்திரத்தை உருவாக்குவதுமாகும். ஹராரி இந்த நூற்றாண்டு அளிக்கும் ஆய்வு வசதிகள் மற்றும் தன்னுடைய தர்க்கத்திறன் இரண்டையும் பயன்படுத்தி அப்பணியை இந்நூலில் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த நூல் அளிக்கும் வாசிப்பு சுவாரஸ்யம் என்பது அவர் அளித்திருக்கும் உழைப்பின் வழியே வாசகரிடம் உருவாகி வருவதே.

இப்போது நான் சொன்ன உதாரணம்.நடோடி வாழ்க்கையில் இருந்து மனித இனம் ஓரிடத்தில் தங்கி விவசாயம் செய்து வாழத்தொடங்கியதை மனித இனத்தின் முக்கியமான மைல்கல் என்றே வரலாறு நம்மிடம் சொல்லி வந்திருக்கிறது. ஆனால் ஹராரி விவசாயப் புரட்சியை வரலாற்றின் மிகப்பெரிய மோசடி என்கிறார். நாடோடி மனிதனின் எலும்புச் சட்டகத்தை ஒப்பிடும்போது விவசாயம் செய்துவாழும் மனிதனின் எலும்புச் சட்டகம் பலகீனமடைந்ததாக தென்படுகின்றது. விவசாயச் சமூகத்தில் தங்கி வாழ்வதால் தவிர்க்கவே முடியாமல் உருவாகும் தனிச்சொத்துகளை மனிதன் மற்ற மிருகங்களிடமிருந்தும் இயற்கை சீற்றங்களில் இருந்தும் காப்பதற்காக போராடியிருக்கிறான். நாடோடி மனிதன் அத்தகைய கவலைகள் அற்றவன்.  மேலும் ஓரிடத்தில் தங்கி வாழத்தொடங்கியது நாடோடி மனிதர்களை விட விவசாய கிராமங்களில் வாழ்ந்தவர்களை அதிகமான நோய்த்தாக்குதலுக்கு உள்ளாக்கியது. நாடோடி மனிதர்களை விட அதிகநேரம் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். வருவாயும் பருவமாற்றங்களை ஒப்பிடும்போது மிகக்குறைவானதாகவே இருந்திருக்கிறது. இந்த சூழலை சற்று விளையாட்டாக ஹராரி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

'எல்லோரும் சொல்வதுபோல அரிசியையும் கோதுமையையும் மனிதன் தன்வயப்படுத்தவில்லை. அரிசியும் கோதுமையும் மனிதனை தன்வயப்படுத்திக்கொண்டன'விவசாயச் சமூகத்தினால் நிகழ்ந்த ஒரேயொரு நன்மை தங்கி வாழ நேர்ந்ததால் சேப்பியன்களின் எண்ணிக்கை அதிகமானது மட்டுமே என்கிறார் ஹராரி. புவியில் ஒரு உயிரினம் வெற்றிகரமானதா இல்லையா என்பதை தீர்மானிக்க அதன் எண்ணிக்கையையே அடிப்படை அலகாகக் கொள்கிறோம். அந்த அலகினை மட்டும் அடிப்படையாகக் கொண்டால் அதிக அளவிலான மனிதர்களை விவசாயச் சமூகம் உற்பத்தி செய்தது உண்மையே. ஆனால் அதிக எண்ணிக்கை என்பது மட்டுமே ஒரு உயிரினம் மண்ணில் வெற்றியடைந்ததாக மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கான அடையாளமாகிவிடுமா என்ற கேள்வியை இந்நூல் எழுப்புகிறது. இதுபோன்ற தைரியமான ஊகங்கள் மற்றும் கேள்விகளால் இந்த நூல் முக்கியமானதாகிறது.

இந்நூலின் முக்கிய பங்கெளிப்பென வாழ்வு பற்றிய நம் அடிப்படை கற்பனைகளின் மீது கேள்வியே என்றுகூட சொல்லிவிடலாம். மொழி,குடும்பம்,நிதி நிறுவனங்கள்,அரசுகள்,மதம்,விஞ்ஞானம் என ஒவ்வொரு காலத்திலும் மனிதனின் வாழ்வினை வழிப்படுத்திய ஒவ்வொரு கருதுகோளின் ஆரம்ப நிலைகளின் மீதான சில தெளிவுகளை இந்த நூலில் இருந்து பெற முடிகிறது. மனிதன் நிமிர்ந்து நடப்பதுதான் குலங்களும் குடும்பங்களும் உருவாகக் காரணம் என நம்மிடம் யாரும் வந்து சொன்னால் நாம் சிரித்துக் கடக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் அறிவியலின் பதில் அப்படியானதாகவே இருக்கிறது.

விவசாயச் சமூகத்தில் இருந்து உலகம் முழுக்க பெருஞ்சமூகங்கள் உருவாகி வருவதற்கு ஹராரி மூன்று காரணங்களை சுட்டுகிறார். வணிகம்,மதம்,பேரரசு என்ற இந்த மூன்று காரணிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னியிருக்கும் விதத்தையும் அவை மனிதர்களிடையே உருவாக்கும் பரஸ்பர நம்பிக்கையும் மூன்றாவது பகுதி விளக்குகிறது. மதம் குறித்த ஹராரியின் கருத்துக்கள் மிகவும் வெளியே நின்று விலகலுடன் சொல்லப்படுகிறவை. ஓரிறை வழிபாடு, பல கடவுள் வழிபாடு, இருமை வழிபாடு என ஹராரி மதங்களை சுருக்கிக் கொள்கிறார். கிறிஸ்துவம்,இஸ்லாம் போன்ற மதங்களை ஓரிறை வழிபாட்டுக்கு ஆதாரமாக்குகிறார். புத்த மதத்தை மதத்தின் மையத்தில் கடவுளே இல்லாத மதமாக அடையாளப்படுத்துகிறார். மதம் சார்ந்த இப்பார்வை ஒற்றைப்படைத் தன்மை கொண்டதாக இருந்தாலும் மதங்களின் அரசியலை இந்த நூல் சரியாகவே பேசியிருக்கிறது. அறிவியல் புரட்சியின் காலமாக நாம் வாழும் கடைசி ஐந்து நூற்றாண்டுகள் சுட்டப்படுகின்றன. அறிவியல் புரட்சியின் மையமாக ஐரோப்பா மாறுவதையும் அதன் வழியே அதன் பண்பாடு உலகம் முழுக்க இரக்கமற்ற போர்கள்,காலணியாதிக்கம்,ஏகாதிபத்தியம் என பல வழிகளில் பரவுவதை இந்தப் பகுதி விளக்குகிறது. நவீன அறிவியலுக்கும் அதற்கு முந்தைய அறிவியலுக்குமான வேறுபாடாக ஹராரி குறிப்பிடும் அம்சம் முக்கியமானது. மதத்துடன் பிணைந்திருந்த முந்தைய அறிவுத்துறைகள் 'அறியப்பட வேண்டியவை அனைத்தும் ஏற்கனவே அறியப்பட்டுவிட்டன' என்கிற தோரணையை மேற்கொள்கின்றன. அதாவது மனிதர்களுக்கு தேவையான அறிவனைத்தும் இறைவனால் அருளப்பட்டுவிட்டது. ஒருவேளை மனிதன் ஒரு விஷயத்தை அவனது புனித நூலில் காண இயலாவிட்டால் அவ்வறிவு அவனுக்கு தேவையானதல்ல என்று இறைவன் முடிவு செய்து விட்டதாக பழமையான அறிதல் முறைகள் சொல்கின்றன. ஆனால் நவீன அறிவியல் 'நாம் அறிந்தது சொற்பமே' என்ற தொனியுடன்தான் தன் தேடலையே தொடங்குகிறது என ஹராரி வாதிடுகிறார். இவ்வாதம் ஏற்றுக்கொள்ளும்படியானதாகவே நூலில் முன்வைக்கப்படுகிறது.

ஏறத்தாழ உலகின் தோற்றத்தில் இருந்து முதலாளித்துவ வணிகம் செயல்படும் விதம்வரை ஒரு கழுகுப் பார்வையில் இந்த நூல் அளிக்கிறது. மனிதன்(சேப்பியன்ஸ்) பரிணாம வளர்ச்சி அடைந்து நாடோடியாகத் திரிந்து தங்கி வாழ்ந்து பேரரசுகளை அமைத்து இன்றைய வாழ்க்கையை நோக்கி நகர்ந்த ஒட்டுமொத்த வரலாற்றையும் இந்த நூல் பேசியிருக்கிறது. இந்நூல் பொதுச்சமூக தளத்திலும் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்குவதற்கான விவாதங்களை தொடங்கி வைப்பதற்கான பல புள்ளிகளை கொண்டுள்ளது. இன்றைய உலகின் அரசியலை சமூக நகர்வுகளை தீர்மானிப்பதில் வெகுமக்கள் விருப்பங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. வெகுமக்கள் விருப்பங்களை சரிநிலைகளை பலவகையிலும் பாதிப்பதாக சேப்பியன்ஸ் அமையும். நூலாசிரியர் இஸ்ரேலியர்.  லண்டனில் கல்வி கற்றவர். எனினும் பொதுவாக மேற்கத்தியர்களுக்கே இருக்கும் "வெள்ளை மனிதனின் சிக்கல்"(white man's burden) ஹராரிக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. சொல்லப்போனால் கடந்த ஐந்து நூற்றாண்டுகளைக்கு முன்பு மேற்கு ஐரோப்பாவை எந்தவித வரலாற்று முக்கியத்துவமும் இல்லாத நிலப்பரப்பாகவே ஹராரி காண்கிறார். இன்றைய மனிதனின் மனதில் கட்டமைக்கப்படும் நவீன புனைவுகளையும் ஹராரி புனைவுகள் என்றே சொல்கிறார். மதம்,ஜாதி போன்ற பழமையான கருத்தாக்கங்கள் மட்டுமின்றி அரசு,நிறுவனம் போன்ற நவீன கருத்தாக்கங்களையும் புனைவுகள் என்றே ஹராரி சொல்கிறார்.

இறுதியாக மனித இனம் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறதா? மகிழ்ச்சியை எதைக்கொண்டு அளவிடுவது என்ற கேள்வியை முன்வைத்து நூல் முடிகிறது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனிதனின் வாழ்நாள் அதிகரித்து இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. இன்றிருக்கும் மனிதன் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு அறிவுத்துறைகளில் நாளை முன்னேற்றம் ஏற்படலாம். ஆனால் மனிதர்கள் உண்மையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா?

ஹராரியின் சொற்களில்

We are more powerful than ever before…Worse still, humans seem to be more irresponsible than ever. Self-made gods with only the laws of physics to keep us company, we are accountable to no one. - Sapiensபிறதுறை விஷயங்களில் ஹராரி நிகழ்த்தியிருக்கும் எல்லை மீறல்கள் குறித்த விமர்சனங்கள் பரவலாக இந்த நூல் மீது வைக்கப்படுகின்றன. எனினும் ஒரு பொதுவாசகனுக்கு பல திறப்புகளை அளிக்கவல்ல நூல் இது என்பதில் சந்தேகமில்லை.

Sapiens - A brief history of humankind

Sunday, 6 January 2019

சீர்மை குறித்து கதிரேசன்

நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக்  கூட்டம் இன்று(30.12.2018) திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளராகிய அரவிந்தனின் சீர்மை நாவல் பேசுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இச்சிறுநாவல் கென் வில்பர் என்ற அறிஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு வகையான Biograpahical fiction.

தன் வாழ்வின் முப்பது வயதுவரை மற்றவர்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் கென் வில்பருக்கு திடீரென மனதில் ஒரு மெல்லிய துக்கம் பரவுகிறது. மெல்ல அத்துக்கம் தேடலாகி மாறி அவரை அலைக்கழிக்கிறது. எதேச்சையாக தன் புத்தகவெளியீட்டில் சந்திக்கும் ஒருவரின் தூண்டுதல்  மூலம் உலகில் நிகழ்ந்து வரும்  ஒட்டுமொத்த அறிவுத் துறையையும் ஒன்றாக இணைக்க முடியுமா?  என்ற மாபெரும் முயற்சியில் ஈடுபடத்தொடங்குகிறார்.

இதற்கிடையில் அவருக்கு நண்பர்கள் ஏற்பாட்டின் மூலம் த்ரேயா என்ற பெண்ணுடன்  திருமணமாகிறது. மகிழ்ச்சியான அவர்களின் திருமண வாழ்க்கையில்  பெரும் அதிர்ச்சியாய் சிறிது நாட்களுக்குள்ளாகவே த்ரேயாவிற்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அது அவர்களின் இருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது. தொடர் சிகிச்கிச்சையால் அவதியுறும்  த்ரேயா ஒரு கட்டத்தில் சிகிச்சை போதுமென்று  வீட்டிற்கு  வந்துவிடுகிறாள். கென்னுக்கும் அவளுக்கும் உள்ள உறவு ஒருகட்டத்தில் தீவிர  வெறுப்பாக மாறுகிறது.


த்ரேயா  தன்  தனிமையை போக்க  ஓவியம் வரைய ஆரம்பித்து அதில் மூழ்கிறாள் .  கென் தன்  கவலை மறக்க  மதுவருந்தத் துவங்கியவன் கடைசியில் நண்பர்களுடன் சேர்ந்து தினமும் கஞ்சா அடித்து போதையில் மூழ்குகிறான் .ஒரு நாள் "அவ்வளவுதான்" என்று தன் கடைசி வார்த்தையை உதிர்த்து விட்டு த்ரேயா  இறந்து விட  கென் அவளை மறக்க  மீண்டும் தீவிரமாக எழுதுகிறார். தன் கனவான  theory of everything என்ற புத்தகத்தை எழுதி முடிக்கிறார் .  புத்தகம் மிகவும் பிரபலத்தையும் இந்த நூற்றாண்டின்  மாபெரும்  சிந்தனையாளர் என்ற புகழை கென்னும் பெறுகின்றனர். ஒரு நாள் தற்செயலாக    அவன் மனைவி வரைந்த ஓவியங்களைப்  பார்க்கிறான். அதில் அவள்  இறுதி நாட்களில் வரைந்த ஓவியங்கலின் உச்சபட்ச சீர்மை அவனை வியப்புறச் செய்கிறது. அதை நினைத்துக் கொண்டிருக்கும்போதே  இறுதியில் போட்டோ காமிரவில் இருந்து வெளிப்படும் பர்பெக்ட்  வெளிச்சத்தின் சீர்மையில்  முடிகிறது நாவல்.

இன்று மருத்துவம், கலை, இலக்கியம், மருத்துவம் என அனைத்து அறிவுத்துறைகளும் ஒரு வகையான நுண்மைகளை நோக்கி போய்கொண்டிருக்கின்றன. இத்துறைகளில் ஈடுபடும் ஒருவர் தன் வாழ்வில் தான் மேற்கொள்ளும் ஒட்டுமொத்த அறிவுச் செயல்பாட்டிற்கும்  அந்த ஒரு துறையிலிருந்தே தனக்கான விட கிடைக்கும் என்று நம்புகிறார். உதராணமாக மருத்துவத் துறை என்பது முன்பெல்லாம் பெரும்பாலும் மருத்துவர்கள் என்பவர்கள் பொதுவானவர்கள் ஆனால் இன்று ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒரு மருத்துவர் என்ற நுண்மையை நோக்கி சென்றுள்ளோம், அல்லோபதி மருத்துவம் படித்த ஒருவருக்கு மரபான மருத்துவம்  மீது எந்த அறிவும், பயிற்சியும் தேவையில்லை, அவர் அனைத்து நோய்களுக்கும் தான் சார்ந்த மருத்துவ முறையே சிறந்தது என்று நம்புகிறார்  . மற்ற மருத்துவத் துறையில் நடப்பது குறித்து அவனுக்கு தெரிவதற்கான அவசியமும் இல்லை, இங்கு தான் கென் வில்ல்பர், ஒரு அறிவுத்துறைக்கும் இன்னொரு அறிவுத்துறைக்குமான தொடும் புள்ளியை வைத்து அனைத்தையும் ஒட்டுமொத்தமாக  ஒரு புள்ளியில் தொகுத்து ( ஒரு சீர்மையை) கொண்டுவர முடியுமாவென்பதே அவருடைய  தியரி ஆப் எவ்ரிதிங்க் என்ற புத்தகம் அவர் வாழ்வின் ஏற்ற இறக்கத்தை தாண்டி முழுமை ( சீர்மை) அடையும் புள்ளியில் இந்நாவல் முடிகிறது.

ஒரு செவ்வியலாக்க படைப்பின்  தன்மையென்பது அது புழங்கும் துறையில் உள்ள ஒட்டு மொத்த அம்சத்தையும் அக்குறிப்பிட்ட படைப்பிற்குள்கொண்டு வந்து விடுவது.அடுத்து வரும் படைப்புகளுக்கு ஒரு முதன்மையாக இருப்பது. அந்த வகையில் சீர்மை நம் இலக்கிய பரப்பில் ஒரு செவ்வியல் படைப்பு என்றார் சுரேஷ் பிரதீப்.

மேலும் நாவலில் த்ரேயா புற்று நோயால்  அவதியுற்று இறக்கும் தருவாயில் அவளுக்கு கென் மேல் தோன்றும் உச்சபட்ச வெறுப்பு .உலகில்  எய்தி நிறைவடையும் வாழ்வைவிட அறுபட்டு முடியும் வாழ்வே அதிகம்.  அவ்வாழ்வின் மீதுள்ள உச்சபட்ச ஈடுபாடும்  விருப்பமும் எதிர்ப்பார்ப்புகள்  நடக்காமல் போகும் போது வரும் எரிச்சலையும் சில முதியோர்களின் மரணத்தருவாயில்  பார்த்திருக்கிறேன். இலக்கியத்திலும் இது விரிவாக்கப்  பேசப்பட்டிருக்கிறது  உதாரணம் (ஜெயமோனின் ரப்பர் நாவலில் வரும் பொன்னுபெருவட்டர்). தாரசங்கர் பானர்ஜியின் ஆரோக்யநிகேதனம் நாவல் இந்த புள்ளியைத் தான் இந்திய  மனமும் மேற்கத்திய மனமும் மரணத்தைக் குறித்து  எப்படிப்பட்ட பார்வையைக் கொண்டிருக்கிறார்கள்  என்பதை பிரத்யோத், ஜீவன் மாஸாய் இருவரின்  இரு தரப்பாக நின்று  சித்தரிக்கிறது.

மேலும் உண்மை   சம்பவங்கள் அல்லது வரலாற்றில் நடக்கும் இடைவெளியைக்  புனைவை கொண்டு நிரப்பப்படும் போது வரும் சவால்கள் அதன் எல்லைகள் குறித்து பேசப்பட்டது, குறிப்பாக, சமீபத்தில் வந்த சரவண கார்த்திகேயனின் ஆப்பிளுக்கு முன் நாவல், பிரபஞ்சன் எழுதிய வானம் வசப்படு, மானுடம் வெல்லும் ஆகிய நாவல்கள், ஜெயமோகனின் மெல்லிய நூல் சிறுகதை ஆகியன குறித்தும்  விவாதிக்கப்பட்டது.

வரலாற்று ஆய்வுகளும், தரவுகளும் மட்டுமல்லாமல் யூகங்களும், கற்பனைகளும், சேர்ந்தே விடுபடுகின்றன, வரலாற்றில் தரவுகளின் விடுபடல் அல்லது ஒருவரின் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட பகுதி நம் தர்க்கத்திற்கு அடங்காமல், அதைப்பற்றிய தெளிவான வரையறை ஏதும் இல்லாமல் இருக்கும் போது அதை புனைவாக எழுதிப்பார்க்கலாம். ஆனால் அது சர்ச்சைக்குரிய விஷயமாக, பொதுமனப்பான்மையிலிருந்து இல்லாமல்  , அப்படைப்பை எழுதும் படைப்பாளிக்கு நெருக்கமாக இருக்கவேண்டும். அவ்வகையில் எழுதப்பட்ட படைப்புகளில் ஒரு உச்சம் சீர்மை நாவல். சுரேஷ் பிரதீப் இவ்வாறு  இந்திய பழங்குடிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து, அவர்களைப் பற்றி நூல்கள் எழுதிய  இனவரையிலார் வெரியர் எல்வினைப் பற்றி ஒரு சிறுகதை எழுதுவதாகச் சொன்னார்.

இவ்வகை படைப்புகளின் குறைபாடு அல்லது எல்லை என்பது, ஆசிரியன் வரலாற்றில் விடுபட்ட இடத்தை மட்டுமே  தன கற்பனை கொண்டு நிரப்ப முடியும், அவனின் தனிப்பட்ட கொள்கைகள் அபிப்ராயங்களுக்கு இடமில்லை, தரவுகளை சரியாக சொல்லும் போது மட்டுமே அது உண்மைத் தன்மையை ஒரளவிற்கு நெருங்கி செல்கிறது கிறது. அவ்வகையில் சீர்மை தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறிய மிகச்சிறந்த படைப்பு.