Thursday 7 February 2019

தனிமையெனும் நிரந்தர நிலை

/இக்கேள்வியை வெவ்வெறு வகைகளில் நண்பர்களிடமிருந்து எதிர்கொண்டபடியே இருக்கிறேன். இக்கேள்வியின் ஊற்றான உளக்கசப்பை அடைந்து அதைக் கடக்கும் முனைப்பில் இருப்பவன் என்ற முறையில் தோழி ஒருவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்ட இக்கேள்வியையும் அதற்கு நான் சொன்ன பதிலையும் அவரது அனுமதியுடன் பகிர்ந்து கொள்கிறேன்/

தனிமை வரமா, சாபமா? எதுவாயினும் மனித மனத்தை பொறுத்து தான், எனினும், தனிமையை விட கடுமையானது எதுவும் உண்டோ என்பது போல தோன்றி விடுகிறது, சில சமயங்களில் நம்முடைய எண்ண ஓட்டத்தின் வீரியத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் போது.

-----

அன்புள்ள -----

தனிமையை வரம் சாபம் என்றெல்லாம் பொதுமைபடுத்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் தனிமையின் சாதக பாதக அம்சங்களை நன்கறிவேன். இளவயதில் மனித உறவுகளில் மற்ற எல்லோரையும் விட சற்று அதிகமான புனிதத்தை கற்பனை செய்ததாலோ என்னவோ உறவுகள் அப்படி இல்லை என்ற விஷயத்தை உணரத் தொடங்கியபோது உள்ளொடுங்கியவனாகி விட்டேன். மனித உறவுகளை இரக்கமேயின்றி கீறி பார்க்கும் ஒரு மனநிலை ஏற்பட்டுவிட்டது. சமீபமாக அதிலிருந்தும் சலித்து வெளியேறுகிறேன். ஆனால் உறவுகளை நம்பியபோதும் கசந்து விலகியபோதும் தனிமையில் தான் இருந்திருக்கிறேன். அத்தனிமை ஒன்றை உணர்த்தியது. உறவுகள் சமூகம் என்ற அமைப்பினால் மனிதனுக்குள் தோன்றிய உணர்வுகளுக்கு வடிகால்களாக அமைபவை மட்டுமே. இப்படிச் சொல்லலாம். ஒரு அலுவலகத்தில் புறச்சூழல் மாற மாற அலுவலக விதிகள் மாறிக்கொண்டே இருக்கிறது அல்லவா. உதாரணமாக நேரம் தவறாமல் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்ற கட்டாய விதியை அலுவலகத்தின் மேற்பார்வையாளர் ஒருவர் முன்பு கண்காணித்துக் கொண்டிருந்தார். இன்று அதற்கென ஒரு இயந்திரம் இருக்கிறது. விதி தளரவில்லை. அதை கட்டாயமாக பாவிக்கும்படியான சூழலை இந்த இயந்திரம் உருவாக்கி விடுகிறது.

அதுபோலத்தான் எல்லா மனித உறவுகளும். தேவை சார்ந்தவை. புறத்தின் ஒழுக்க விதிகளும் உறவு வரைமுறைகளும் மாறுவதற்கு ஏற்றது போல மாறிக்கொண்டிருப்பவை. அவற்றை நிரந்தரமானவை புனிதமானவை என்று நம்ப வைப்பது சமூகம் நீடிப்பதற்கு தேவையானதொரு தந்திரம்.  இந்தப் புரிதல் நான் உணர்ந்து அடைந்தது.இந்த சமூக ஏற்பாட்டிற்குள் வாழும் நாம் நம்மைச்சுற்றி புழங்கும் உறவுகளை தவிர்த்து விலகி நிற்க இயலாது. ஆனால் அவ்வுறவுகள் எதுவும் நம் தனிமையை போக்கிவிட முடியாது.

உறவுகள் பொழுதுபோக்குக்காக மட்டுமே. கணவன் மனைவி காதல் குழந்தை என எதுவானாலும் அனைத்தும் ஒருவகையான உணர்வுப்பூர்வமான பொழுதுபோக்குதான்.  மனிதர்களின் உணர்வு வீரியத்தைப் பொறுத்து உறவுநிலைகள் அமைகின்றன. நமக்கு இந்த உணர்ச்சி பொழுதுபோக்கில் ஆர்வமிருப்பின் அதில் நாம் ஈடுபடலாம். திளைக்கலாம். இதை அறிந்தோ அறியாமலோதான் அத்தனைபேரும் உறவில் திளைக்கிறார்கள். இதை அறிந்து திளைப்பதும் வெளியேறுவதும் நம்மை சமநிலையில் வைத்திருக்கும்.

நான் இதை அறிந்து வைத்திருப்பதாகவே நம்புகிறேன். உறவுகளை வெறும் தேவை சார்ந்து அணுகாமல் அதேநேரம் ரொம்பவும் உணர்வுபூர்வமாக மாற்றிக் கொள்ளாமல் ஒரு நடுநிலை பேணுகிறேன். நடுநிலையை நீடித்துக் கொள்ள சிரமமாகவே இருக்கிறது. ஆனால் அதுவே சரியான புள்ளி என்றொரு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவற்றை கழித்துவிட்டு பார்த்தால் என் அன்றாடம் முழுத்தனிமையால் ஆனது. அது எனக்கு பல வகையிலும் நலம் பயப்பதாகவே அமைகிறது. தனிமைப்பட்டு இருக்கிறோம் என்ற எண்ணம் எழும்போதெல்லாம் தனிமை அளிக்கும் சுதந்திரத்தை மனதில் கொண்டு அவ்வெண்ணத்தைக் கடக்கிறேன்

சுரேஷ் பிரதீப்

Friday 1 February 2019

காதலெனும் உடன்பாடும் ஐக்கியமும் - பஷீரின் பால்யகால சகியை முன்வைத்து

காதல் இலக்கியத்தில் பல்வேறு விதங்களில் சொல்லப்பட்டுவிட்டதாகச் சொல்வார்கள். ஆனால் வாசிப்பு கூடக்கூட ஒரு சில மேதைகளன்றி காதல் யாராலும் சரியாகச் சொல்லப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கூர்மையும் நுட்பமும் கொண்ட எழுத்தாளன் காதல் என்ற விஷயத்தை அவ்வளவு எளிதில் தன் படைப்பின் பேசுபொருளாக்கி விடுவதில்லை. அவன் அறிவான் காதல் என்ற அந்த மிக எளிய அனைவராலும் சொன்னாலே உணர்ந்து கொள்ளப்படக்கூடிய எல்லோருக்குள்ளும் ஒரு ரகசிய மௌனவெளியை உருவாக்கி அந்த வெளியினுள் மனம் கசிந்து புன்னகைக்கச் செய்யும் அவ்வுணர்வு எழுதும் போது அவ்வளவு எளிதான ஒன்றாக ஆகிவிடுவதில்லை என. யோசித்துப் பார்த்தால் எளியவைகள்தான் எழுதுவதற்கு பெரும் சவால்களை அளிக்கக்கூடியவை என்ற எண்ணம் எழுகிறது. காதல் என்கிற எளிய விஷயமும் அனைவரும் அறிந்தது அனைவருக்குள்ளும் ஏதோவொரு வடிவில் நீடிப்பது. அதை எத்தனையோ வகையில் சொல்ல முயன்று சொல்ல முயன்று கலை தோற்கிறது. பல சமயங்களில் காதல் வெறும் வியாபாரமாகக்கூட ஆகிவிடுகிறது.

மெல்லிய இவ்வுணர்வை சொல்ல முயன்று மெல்லுணர்வு கிசுகிசுப்பாக மாறிவிடும் பல கதைகளுக்கு மத்தியில் எழுதப்பட்டு எழுபதாண்டுகள் கடந்த பின்னும் காதலின் மிக முக்கியமான ஒரு பரிணாமத்தை மிக அழகாக கடத்துகிறது பஷீரின் பால்யகால சகி. கச்சிதமான சொல்லாட்சி என்பதைத் தவிர வேறெந்த நுட்பங்களையும் எழுபது பக்கங்களுக்கும் குறைவான இக்குறுநாவலில் நம்மால் காண இயலாது. மிக எளிய நேர்க்கோட்டுத் தன்மையிலான (நனவோடை கூட கிடையாது) கதை. கதை சொல்லலிலும் பஷீர் அந்த எளிமையின் இறுக்கமின்மையை பரவவிட்டிருக்கிறார். பணக்கார வீட்டுப் சிறுவனான மஜீதும் ஏழைவீட்டு சிறுமியான சுகறாவும் வழக்கமான எல்லா சிறுவர்களையும் போலவே தொடக்கத்தில் முட்டிக்கொண்டு பின்னர் நட்பாகின்றனர்.

கணக்குப்பாடம் சரியாக வராத மஜீதை ஆசிரியர் "ஒண்ணும்  ஒண்ணும் எவ்வளவு" என்று கேட்க "கொஞ்சம் பெரிய ஒண்ணு" என்கிறான். சுகறாவை ராஜகுமாரி என்று வர்ணித்தே தன்னை பயமுறுத்தும் அவள் கைகளில் இருக்கும் நகங்களை வெட்டச்செய்கிறான் மஜீது. இந்த கொஞ்சம் பெரிய ஒண்ணும்,ராஜகுமாரியும் தங்களையறியாமலேயே பிரியங்களை பரிமாறிக் கொள்கின்றனர். சுகறாவின் அப்பா இறந்துவிட அவள் உயர்நிலை பள்ளியில் சேர முடியாமலாகிறது. உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் மஜீது ஒரு நோயுற்ற தருணத்தில் சுகறாவின் மீதான தன் காதலை கண்டு கொள்கிறான். சுயம் பரிபூரணமாக துளிர்த்து நிற்கும் அவ்வயதில் அப்பாவுடன் பிணக்கு ஏற்பட வீட்டைவிட்டு வெளியேறுகிறான். அவனது நாடோடி வாழ்க்கை தொடங்குகிறது. அவ்வாழ்க்கையில் ஒரு கணமும் அவன் சுகறாவை மறப்பதில்லை. அதேநேரம் அவளுக்கு கடிதம் எழுதவும் அவனுக்குத் தோன்றுவதில்லை. மஜீது வீட்டுக்கு வரும்போது நிலைமை தலைகீழாகி இருக்கிறது. அப்பாவின் சொத்துகள் பரிபோயிருக்கின்றன. தங்கைகள் திருமணத்துக்கு வளர்ந்து நிற்கின்றனர். சுகறா மணமுடித்தவளாக தன் அழகையெல்லாம் இழந்து நிற்கிறாள். மஜீது சுகறாவை தன் கொடுமைக்கார கணவனிடம் திரும்பச்செல்ல வேண்டாம் என்கிறான். அவளை தான் மணமுடித்துக் கொள்வதாகச் சொல்கிறான். அதற்கு முன் தங்கைகளுக்கு மணமுடித்து வைக்க வேண்டும் என்ற பொறுப்பினை ஏற்று மறுமுறை வீட்டுவிட்டுக் கிளம்புகிறான். இம்முறை நாடோடியாக அல்ல ஒரு குடும்பத்தை தாங்க வேண்டிய கட்டாயத்தால் உந்தப்பட்ட இளைஞனாக. மஜீது வெளியேறிய பிறகு மஜீதுக்கும் சுகறாவுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் நடைபெறும் துயரங்களே இக்குறுநாவல்.

எளிமையான கதைக்கட்டுமானம் கொண்ட இந்த நாவலில் முக்கியமான அம்சமாக நான் எண்ணுவது காதல் கொண்டவர்களுக்கு இடையேயான பரிபூரண உடன்பாட்டினை தொட்டுக்காட்டிய இதன் பான்மையைத்தான். நினைக்க நினைக்க ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அம்சம் இது. வேறெந்த படைப்பும் காதலிணைகளின் இவ்வுடன்பாட்டினை இவ்வளவு இயல்பாகத் தொட்டிருக்கின்றனவா என்று சந்தேகம் எழுகிறது. அதென்ன உடன்பாடு? பார்க்கலாம்.

காதல் என்றல்ல எந்தவொரு உண்மையான மானுட உறவுமே முரண்பட்டு மோதிக்கொண்ட பிறகு உருவாகும் ஒரு சமநிலையில்தான் தன்னை நீட்டித்துக் கொள்கிறது. ஒரு புது இடத்தில் பணியில் சேர்கிறோம். அதன் சூழல் பழகும் வரை பதற்றமும் அலைகழிப்பும் நம்மை நிலைகுலையச் செய்கிறது. பணிச்சூழலின் லயத்துடன் ஒத்துப்போகத் தொடங்கும்போது பதற்றம் குறைகிறது. ஒரு புது மனிதர் நமக்கு அளிக்கக்கூடிய எரிச்சல் விலக்கம் பரவசம் உற்சாகம் என்று அனைத்துமே அவருக்கும் நமக்கும் இடையேயான லயம் உருவாகி வருவதன் படிநிலைகளே. மணவுறவு போன்ற நிரந்தர உறவு நிலையாயினும் சக பணியாளர் போன்ற தற்காலிக உறவாயினும் பிறருக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு நம்மை தொடர்ச்சியாக திருகிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இதை நாம் எவ்வளவு மழுப்பினாலும் பெரும்பாலும் பிரக்ஞைபூர்வமாகவே செய்கிறோம். ஆனால் அப்படி இல்லாமல் பிரக்ஞை இல்லாமல் இயல்பாக ஒருவரை ஒருவர் பரிபூரணமாக உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு மஜீதுக்கும் சுகறாவுக்கும் கிட்டிவிடுகிறது. இதுவரை உலகில் உயிரோடு வாழ்ந்து இறந்த ஒருவருக்கும் அது கிட்டாமல் போயிருக்கலாம். ஆனால் இவர்களுக்கு கிட்டியிருக்கிறது.

மஜீது இரண்டுமுறை வீட்டைவிட்டு கிளம்பவும் சுகறாவே காரணமாகிறாள். (முதல்முறை மறைமுகமாகவும் மறுமுறை நேரடியாகவும்). அதுபோல முதல் பயணத்தில் மஜீது சுகறாவின் நினைவாகவே இருக்கிறான். ஆனால் அவளுக்கு கடிதம் எழுதுவதில்லை. அதுபோல சுகறாவும் அவனை எண்ணிக் கொண்டிருந்தாலும் குடும்பம் கட்டாயப்படுத்த மணம்புரிந்து கொள்கிறாள். அந்த மணம் எவ்விதத்திலும் மஜீதின் மீதான அவள் நேசத்தை குறைப்பதில்லை. தர்க்கப்பூர்வமாக இது சிலருக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்படியொரு ஏற்பின்மை உருவானால் அதுவே இப்படைப்பின் வெற்றி என்பேன்.

நான் முன்பு சொன்ன பரிபூரண உடன்பாடு என்பது இதுதான். 'நீ எங்கிருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் நமக்கிடையே உருவான புரிதல் மாறிவிடுவதில்லை'.

உண்மையில் நட்பு என்று வரும்போது இது ஓரளவு சாத்தியமானது. பத்து வருடங்கள் கழித்து சந்திக்கும் போது கூட நேற்று பேசிப்பிரிந்தவர்களைப் போல நண்பர்களால் உரையாடிக்கொள்ள இயலும். நட்பினை நாம் ஆழத்துக்குள் அனுமதிப்பதில்லை. நீருக்கு மேலே இருவர் கைகோர்த்து நிற்பதைப் போன்றது அது. ஆனால் காதலுறவு அப்படியானதல்ல. ஆழத்தில் கைகோர்ப்பது அது. ஒவ்வொரு நொடியும் நம்மை நெட்டி மேலே கொண்டுவர முயன்று கொண்டிருக்கும் அக புற அழுத்தங்களில் நீந்திக்கொண்டு உடன்பாட்டினை மேற்கொள்வது எளிதல்ல. குறிப்பாக சுகறாவின் வாழ்வில் வேறு ஆண் இருப்பதோ ஜமீது பல பெண்களை கடந்து வந்ததோ இருவரையும் பாதிப்பதில்லை. அவர்கள் தங்கள் ஆழத்தில் அவ்வளவு இறுகிப் பிணைந்திருக்கிறார்கள்.

இறுதியாக வறுமையில்  ஒருகால் போன நிலையில் பாத்திரம் துலக்கும் மஜீதுக்கு சுகறாவின் இறப்புச் செய்தி வருகிறது. சாதாரணமாக ஒருவன் அழுது புரண்டு தன் வாழ்வின் ஒளி தொலைந்துவிட்டதாக புலம்பும் தருணம் அது. ஆனால் மஜீது அந்தச் செய்தியை உள்வாங்கிக்கொண்டு மீண்டும் பாத்திரம் துலக்கத் தொடங்குகிறான். "அவன் நிலையாமையை பொருளின்மையை ஏற்றுக் கொண்டுவிட்டான்" என்று வறுமையான தத்துவத்தை உதிர்க்கலாம். அது மஜீதுக்கும் சுகறாவுக்குமான பரிபூரண உடன்பாட்டினை உணர முடியாதவர்கள் காதுகளில் ஒலிக்கட்டும். ஆனால் மஜீது உணர்வதாக நான் நினைப்பது வேறு. அவன் தன்னுடலிலேயே இனி ஜொகராவையும் சுமக்க வேண்டும். ஆம் அவள் மஜீதுடனான  தன்னுடைய மாற்றில்லாத உடன்பாட்டின் வழியாக அவனுள் ஐக்கியமடைந்து விடுகிறாள்.  கடைசியாக அவளைப் பார்த்த போது தன்னிடம் ஏதோ சொல்லவந்து சொல்ல முடியாமல் தயங்கி நின்ற ஜொகராவை ஜமீது நினைவுகூர்கிறான். அவள் என்ன எண்ணியிருப்பாள் என நினைத்துப் பார்க்கிறான். எனக்கென்னவோ ஜமீது அதை கண்டுபிடித்துவிடுவான் என்றுதான் தோன்றுகிறது.