Wednesday, 1 May 2019

பழியுணர்வின் உளவியல் - நிழலின் தனிமை நாவலை முன்வைத்து


இலக்கிய ஆக்கங்களை ஒரு வசதிக்காக நேரடியானவை பூடகமானவை என இரண்டு வகைமைகளாக பிரித்துக் கொள்ளலாம். நேரடியாகச் சொல்லப்படுவதும் பூடகமாக எழுதப்படுவதும் எழுதும் ஆசிரியனின் தேர்வு மற்றும் படைப்பின் தேவை சார்ந்தது. நேரடியான ஆக்கங்களை தட்டையானவை என்றும் பூடமான ஆக்கங்களை நுட்பமானவை என்றும் கொண்டாடும் ஒரு தட்டையான பார்வையை வாசகர்களிடம் சூழலில் அவதானிக்க முடிகிறது. என் அவதானிப்பில் நேரடியாகவும் எளிமையாகவும் கதைகூறல் முறையை அமைத்துக் கொண்ட ஆக்கங்கள் மானுடத்தின் மையச்சிக்கல்களை பேசுகிறவையாகவும் சிடுக்கான மொழியும் வடிவமும் கொண்ட ஆக்கங்கள் காலமாற்றம் உற்பத்தி செய்யும் சிக்கல்களை பேசுகிறவையாகவும் இருக்கின்றன. காலம் நகர்ந்து செல்லும்போது சிக்கலான ஆக்கங்கள் எளிமையடைவதையும் காண்கிறோம். கரமசோவ் சகோதரர்கள் ஒரு உதாரணம். அதுபோல இன்றின் சிக்கல்கள் மானுடத்தின் ஒரு பகுதியாக ஏற்கப்படும்போது நாளை அவற்றின் வடிவமும் எளிமைப்படும்.

தேவிபாரதியின் நிழலின் தனிமை மனித குலம் சமூகமாகத் திரளத் தொடங்கியதில் இருந்தே எதிர்கொண்டு வரும் ஒரு சிக்கலை பேசுகிறது. கணநேரத்தில் தோன்றி மறையும் ஒரு உணர்வினால் ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்கவும் பீடிக்கப்பட வாய்ப்பிருக்கும் அவலத்தையும் அப்படி பீடிக்கப்படும் ஒரு மனம் அடையும் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் பேசும் படைப்பாக நிழலின் தனிமை நிலைகொள்கிறது. தன்வரலாற்றுத் தொனி கொண்ட, கதை சொல்லியின் பார்வையிலேயே நகரும் எளிமையான கட்டமைப்பை நிழலின் தனிமை கொண்டிருக்கிறது. ஆனால் பழியுணர்வு என்ற ஒற்றை உணர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தன் முழுவாழ்வையும் விசாரித்துக் கொள்ளும் அல்லது வீணடித்துக் கொள்ளும் கதைசொல்லியின் வழியாக மிக அடங்கிய குரலில் நாவல் முன் வைக்கும் சமூக விமர்சனமும் அதிகாரத்துக்கு பின்னிருக்கும் இயல்பான குரூரத்தை நேரடியாகச் சென்று தொட்டிருப்பதும் நிழலின் தனிமையை எத்தரப்பும் மறுக்க முடியாத ஒரு ஆக்கமாக மாற்றி விடுகின்றன.

கதைசொல்லியின் பெயர் நாவல் முழுக்கச் சொல்லப்படுவதில்லை. கதையின் மற்றொரு முக்கிய பாத்திரமான சாரதா கதைசொல்லிக்கு அக்காவாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் சாரதாவுக்கும் கதைசொல்லிக்குமான உறவுநிலை சாரதா,கதைசொல்லி மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யார் வாயிலாகவும் சொல்லப்படுவதில்லை. கதைசொல்லியின் ஊர்ப்பெயரும் அவன் இடம்பெயர நேர்ந்த பிறகு வசிக்க நேரும் ஊர்ப்பெயரும் கூட நாவலில் நேரடியாக இடம்பெறுவதில்லை. பழிவாங்கத் துடிக்கும் ஒரு மனதின் கூர்மையையும் எச்சரிக்கையையும் வெறுப்பையும் பேணிக்கொண்டபடியே தான் முழு நாவலின் கதை சொல்லலும் நீள்கிறது.   இந்தப் பதற்றம் நிறைந்த மொழியின் வழியாகவே தேவிபாரதி இந்த நாவலை நகர்த்திச் செல்கிறார்.இளம் வயதில் சாரதாவை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய கருணாகரனை கதைசொல்லி முப்பதாண்டுகள் கழித்து தன்னுடைய நாற்பதுகளில் இருக்கும்போது சந்திக்கிறான். கதைசொல்லி ஒரு அரசுப்பள்ளியில் எழுத்தராக இருக்கிறான். கருணாகரன் சாரதாவை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய போதிருந்ததை விட இப்போது அதிகாரம் பெருகியவனாக கதை சொல்லி பணிபுரியும் பள்ளிக்கு வருகிறான். சாரதா கணவன் ,மகன் என நிம்மதியான வாழ்க்கையை மேற்கொண்டாலும் கருணாகரன் மீதான பழியுணர்வை அழியாமல் பாதுகாத்துக் கொள்கிறாள். கதைசொல்லியின் உள்ளும் அப்பழியுணர்வு நீடித்தவண்ணமே இருக்கிறது. 

தேவிபாரதியின் பிற ஆக்கங்களை பார்க்கும்போது அதிகாரத்தால் சிதைக்கப்படுகிறவர்களின் மன உணர்வுகளை தொட்டுக்காட்டுவதாக அவை இருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த நாவலிலும் சாரதா கருணாகரனால் அத்தகைய அதிகாரத்தாலேயே சிதைக்கப்படுகிறாள்.
அதிகாரத்தைக் கொண்டு ஆளுகை செலுத்துகிறவர்களுக்கும் அந்த அதிகாரத்துக்குள் அடங்கி வாழ நேர்கிறவர்களுக்குமான மனமோதலே பழியுணர்வு என்று இந்த நாவல் சித்தரிக்க முயல்கிறது. 

நிலப்பிரபுத்துவம் இன்றும் முற்றாக நீங்கிவிடாத நம் சமூகத்தில் நிலமும் அது சார்ந்த ஜாதியப் புனைவுகளுமே அதிகாரமாக முன்வைக்கப்படுகின்றன. இன்றும் நம்மிடம் உலவும் பெருமிதக் கதைகள் பலவும் இந்த நிலப்பிரபுத்துவ கால மனநிலையின் திரிந்த வடிவங்களாகவே இருக்கின்றன. அதிகார அடுக்கு என்ற ஒன்று இல்லாத மானுட சமூகம் ஒட்டுமொத்த மனித குலத்தின் நெடுங்கனவாக இருக்கலாம். ஆனால் யதார்த்தத்தில் சமூகத்தின் இயல்பான ஒழுங்குக்கு அதிகாரம் அவசியமானதாகவே இருக்கிறது. நிறைய பேரை உள்ளடக்கிய ஒரு சமூக ஒழுங்கினை நடைமுறைப்படுத்துவதற்காக மேல் கீழ் என்ற அதிகார அடுக்கு இக்காலத்திலும் நமக்கு தேவைப்படவே செய்கிறது. இந்த அதிகார அமைப்பின் தன்மை மாறினாலும் - உதாரணமாக நிலப்பிரபுத்துவத்தை விட ஜனநாயகம் என்ற அதிகார அமைப்பு மாறுபட்டது. - அவற்றின் சில பொதுக்கூறுகள் பெரிய மாற்றங்களுக்கு உட்படுவதில்லை. அத்தகைய பொதுக்கூறுகளில்  பார்வைக்கு புலப்படும் ஒன்று நாற்காலி. ஆளுகை செலுத்துகிறவர் உயரத்திலும் ஆளுகைக்கு உட்படுகிறவர் சற்றுத் தாழ்ந்தும் அமர்ந்திருக்கும் வடிவம் இன்றுவரை தொடரவே செய்கிறது. சில நவீன அமைப்புகள் இந்த வடிவத்தை மேசையின் இருபுறமும் சமமான உயரமுடைய இருக்கையில் அமரும்படி மாற்றிக் கொண்டிருக்கின்றன. அப்படி மாற்றினாலும் மேசையின் முதன்மை நுனியில் அமர்கிறவரும் அவருக்கு அருகில் அமர்கிறவர்களும் அதிகாரத்தை தங்களிடம் அதிகம் உணர்கிறவர்களாகவே இருப்பார்கள். 

மற்றொரு வெளித்தெரியாத பொதுக்கூறு காமம். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆளுகையில் இருப்பவர்கள் மீது காமம் சார்ந்த தங்களுடைய அதிகாரத்தை செலுத்தலாம் என்பது இன்றும் நடைமுறையில் இருக்ககூடிய ஒரு விஷயமே. ஆண் மைய சமூகத்தில் காமம் சார்ந்த இந்த அதிகார வடிவம் பெரும்பாலும் அதிகாரத்தில் இருக்கும் ஆண் ஆளுகையில் இருக்கும் பெண் மீது செலுத்துவதாக இருக்கிறது. காமம் என்கிற விஷயம் (மண உறவு போன்றவை மூலமாக) வரையறை செய்யப்பட்டதாக இருக்கும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஒரு அதிகார அமைப்பினுள் பல்வேறு இனக்குழுக்கள் வருகின்றன. அதாவது அதிகாரம் என்பது பரஸ்பர பலன்களுக்காக ஆளுகையில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் ஆளுகையில் இருப்பவர்களை பாதுகாப்பது என்ற பொறுப்புணர்வின் அடிப்படையில் ஆளுகிறவர்களிடம் கொடுக்கப்படுவதாகவும் இருக்கிறது. அதிகார மட்டத்தின் நேற்றைய பேரப்பொருளான நிலத்தை உடைமை கொண்டிருக்கிறவர்கள் சமூகத்தை கட்டுப்படுத்தும் விழுமியங்களை பேண வேண்டியது தங்களுடைய அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு வழியாக இருந்தது. அதேநேரம் காமம் சார்ந்த மேலாதிக்கம் சமூகத்தில் உயர் பாவனைகள் வழியாக தங்களை உயர்ந்தோனாக முன்னிறுத்திக் கொள்வது என்கிற எதிர்மறை விஷயங்களும் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களால் தொடர்ச்சியாக செய்யப்பட்ட வந்திருக்கிறது. அத்தகைய எதிர்மறைகளுக்கு எதிரான குரலாக பதிவு செய்யப்படுகிறவையும் அதிகாரம் யாருடைய கையில் இருக்கிறதோ அவர்களின் விழுமியங்கள் சார்ந்ததாகவே இருக்கின்றன. உதாரணமாக ஒரு பெண் அதிகாரத்தால் சிதைக்கப்படுகிறாள் எனில் அவளது "கற்பு" பறிபோய்விட்டது என்பது போன்ற புலம்பல்களும் அவளது எதிர்காலம் சார்ந்த கவலைகளுமாக மட்டுமே அக்குரல் வெளிப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவனுக்கு வாழ்வு மீது தோன்றும் நம்பிக்கை இழப்புகளும் வஞ்சங்களும் பெரும்பாலும் பேசப்படாததாகவே இருக்கிறது. பாதிக்கப்பட்டவன் உள்ளுணரும் பழியுணர்வையும் சாத்தியமான வழிகளில் அது வெளிப்படும் விதத்தையும் சமூகத்தின் மேம்பட்ட விழுமியங்களால் கைவிடப்பட்டவர்களுக்கு அப்பழியுணர்வு அளிக்கும் ஒரு வகையான பாதுகாப்பு உணர்வும் என பழியின் பல தளங்களை தொட்டு விரிகிறது நிழலின் தனிமை.

சாரதாவையும் கதை சொல்லியையும் பழியுணர்வு கொள்ள வைத்த கருணாகரனின் கோணம் நாவலுக்குள் சொல்லப்படவே இல்லை என்பது நாவலின் பலமாகவேத் தோன்றுகிறது. கருணாகரனை பழி தீர்க்கும்  முடிவினை கதைசொல்லி எடுக்கும்வரை அவனுடைய வாழ்வு மங்கியதாகவே இருப்பதை ஆசிரியர் மறைமுகச் சொல்கிறார். அவனுக்கு மணமாகி இருக்கவில்லை. மணமான தங்கை கணவனுடன் சண்டையிட்டு வீட்டில் இருக்கிறாள். அம்மா நோய்ப்படுக்கையில் இருக்கிறார். அக்காவும் ஒரு இயல்பான அன்றாடத்தை கழித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் கருணாகரனை சந்தித்த தினத்தில் இருந்து அவனது வாழ்வுக்கு அர்த்தம் கிடைத்துவிட்டதாக கதைசொல்லி உணர்கிறான். அவனைக்கொல்லப் போவதாக ஒரு கடிதத்தை கருணாகரன் சாரதாவை வன்புணர்ந்த இடத்திற்கு கீழிருக்கும் அஞ்சலகத்தில் இருந்தே அனுப்புகிறான்.

கதைசொல்லியின் பழியுணர்வுகள் வேகங்கொள்ளும் இடமாக இதனை வகுத்துக் கொள்ளலாம். அதுவரையில் உள்ளடங்கியவனாக இருந்த கதைசொல்லி கருணாகரனுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட பிறகு தைரியமானவனாக மாறுகிறான். கருணாகரன் கதைசொல்லியை தன்னுடைய கணக்கு வழக்குகளைப் பார்க்க அவன் பணிபுரியும் பள்ளியில் இருந்து அவ்வப்போது அழைத்துக் கொள்கிறான். கருணாகரன் மகள் சுலோச்சனாவின் காதலைப் பெறுகிறான். அவனது பழியுணர்வு தடுமாற்றம் கொள்கிறது. அதேநேரம் செல்வாக்கான கருணாகரனுக்கு நெருக்கமானவனாக இருப்பதால் அவன் சமூக மதிப்பு உயர்கிறது.  சாரதா அவனால் பழிவாங்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறாள். எதிர்பாராத விதமாக கருணாகரனின் குடும்பம் அவன் மகன் செய்த கொலைகளால் நிலைகுலையத் தொடங்குகிறது. கருணாகரன் நோயில் படுக்கிறான். சுலோச்சனாவுக்கு திருமணமாகிறது. அக்குடும்பம் நசியத் தொடங்குகிறது.
நேரடியாக கதையென இந்த நாவலில் பயின்று வருவது இதுதான். ஆனால் நாவலில் கவனப்படுத்த வேண்டிய விஷயங்கள் விரவிக்கிடக்கின்றன.

உதாரணமாக பழியுணர்வு கதைசொல்லிக்கு அளிக்கும் வேகம். நம்முடைய வழக்கமான கதையாடல்களில் நன்றோ தீதோ ஒரு லட்சியத்தின் அடிப்படையிலேயே வாழ்வைப் பற்றிய எதிர்காலம் பற்றிய கற்பனைகள் கிளைவிட்டிருக்கும். ஏதேனும் ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டும் ஏதேனும் ஒரு உலகியல் இலக்கை அடைய வேண்டும் என்றெல்லாம் எதிர்காலம் குறித்த கற்பனைகளை நாம் வளர்த்துக் கொள்கிறோம். அன்றாடத்தில் சோர்வின்றி ஈடுபட லட்சியங்கள் ஒருநாள் நனவாகும் என்று நம்பிக்கை ஆதாரமாகிறது. லட்சியங்களோ சென்றடைய வேண்டிய முனைகளோ ஏதுமின்றியும் வாழ்வை நகர்த்தி விடுகிறவர்கள் உண்டு. ஆனால் பழியுணர்வு ஒருவனின் லட்சியமாக மாற முடியுமா என்ற கேள்வியை நாவல் எழுப்புகிறது. கதைசொல்லியின் ஆற்றல் முழுவதும் கருணாகரனை வீழ்த்தும் புள்ளிவரை திரண்டு திரும்பி வருகிறது. சுலோச்சனா அவன் மீது கொள்ளும் காதலையும் அவனது கூர்மையான பழிவுணர்வே கண்டு கொள்கிறது. சுலோச்சனா சீண்டுவதும் விலகுவதுமாக அவனை தவிக்க வைக்கிறாள். ஒரு திருவிழாவுக்குச் செல்லும்போது கதைசொல்லிக்கு கருணாகரனை கொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாய்ப்பினை அவன் வேண்டுமென்றே நழுவ விடுகிறான். பதிலீடாக அன்று அவனை சீண்ட வரும் சுலோச்சனாவுடன் உறவு கொள்கிறான். இதுவொரு நுட்பமான இடம். அவன் மனம் காமத்தாலும் பழியுணர்வாலும் அலைவுறும் சந்தர்ப்பத்தில் அவன் காமத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். சுலோச்சனாவுடம் அதன்பின்னர் பலமுறை உறவு கொள்ளும் போது அவன் மனம் அதனை பழிநிகர் எனவும் காதல் எனவும் மாற்றி மாற்றி சித்தரித்துக் கொள்கிறது.

சுலோச்சனாவுக்கு மணமாகும் போது கருணாகரனின் குடும்பம் சிதைந்திருக்கிறது. கருணாகரன் நோயில் விழுகிறான். சுலோச்சனாவின் குடும்பம் கதைசொல்லியை ஜாதியைச் சொல்லி அவமதிக்கும் போது அவன் மீண்டும் சுலோச்சனாவை காயப்படுத்தி அங்கிருந்து வெளியேறுகிறான். அதன்பின் குடியேறும் நகரில் சுகந்தி என்ற ஏற்கனவே மணமான இன்னொரு பெண்ணுடன் உறவு கொள்கிறான். அவள் கணவனும் அவ்வுறவை எதிர்பின்றியே எதிர்கொள்கிறான். மீண்டும் சுகந்தியிடமிருந்து வெளியேறி கருணாகரனை மரணப்படுக்கையில் கதைசொல்லி சந்திக்கச் செல்லும் இடத்தில் நாவல் முடிகிறது.

வாசித்து முடித்தபிறகு மனதில் எஞ்சுவது கதைசொல்லியின் விசித்திரமான இரண்டு வருட வாழ்க்கைப் பயணமே. அதாவது அவன் செல்வாக்கு மிக்கவனாக வளர்ந்திருக்கும் கருணாகரனை முதன்முறையாக சந்திக்கும் காலம் தொடங்கி அவன் மரணப்படுக்கையில் கிடப்பதை காணநேரும் கணம்வரை. இக்காலகட்டத்தில் கதைசொல்லி அதிகாரம் காமம் என அனைத்தையும் ருசிக்கிறான். அவனுடைய வாழ்க்கை தொடக்கத்தை எண்ணிப் பார்க்கும்போது அவனுடைய துய்ப்புகள் அதீதமானவை. ஆனாலும் அவன் நிறைவடைவதில்லை. அவனது இயக்கு விசையாக இருக்கும் பழியுணர்வு அவனை அமைதியாக இருக்கவிடுவதில்லை. அதற்கான காரணம் சுருக்கமாக சொல்லப்படும் அவனது பால்யத்தில் இருக்கிறது. அவனது பால்யத்தை தேவிபாரதி கவனமாக கட்டமைக்கிறார். பள்ளி முடிந்து திரையரங்கில் முருக்கு விற்கும் ஏழைச்சிறுவன் அவன். நாவிதர் இனத்தைச் சேர்ந்தவன். அதனாலோ என்னவோ நாசுவன் குருவியின் மீது அலாதியான பிரியம் அவனுக்கு இருக்கிறது. அக்குருவியை அவன் நண்பன் தங்கவேலுவிடம் காட்டிக்கொடுக்க நேரும்போது அவன் அடையும் அதிர்ச்சி மற்றொரு நண்பனான வின்சென்ட் சாரதாவிற்கு நிகழ்ந்ததை விவரிக்கும் போது வின்சென்ட் எழுந்து சென்று சுய மைதுனம் செய்து வருவது என கதைசொல்லி இளமையிலேயே வாழ்வின் மீது விலக்கம் கொள்வதற்கான அத்தனை காரணங்களையும் அடைகிறான்.
அதிகாரமற்ற அவன் குடும்பம் சாரதாவிற்கு நிகழ்ந்ததற்கு எந்த பதிலீடும் செய்ய முடியுமால் ஊரைவிட்டு வெளியேறுகிறது. ஆகவே  எல்லோரும் கடந்து வருவதற்கு மாறான ஒரு பால்யத்தை கதைசொல்லி அடைந்திருக்கிறான். அப்பாவின் வேலையும் அவனது கல்வியும் ஜாதியின் பெயரால் சுமத்தப்படும் இழிவிலிருந்து அவனை மீட்டாலும் மனதின் ஆழத்தில் தங்கிவிட்ட பதற்றமும் சில எல்லைகளை மீற முடியாத தவிப்பும் மீறினால் கிடைக்கப்பெறக்கூடிய தண்டனையும் அவனை எந்நேரமும் அச்சத்திலேயே ஆழ்த்தி வைத்திருக்கின்றன.

அதிகாரத்துக்கான வேட்கையும் கருணையும் பழியுணர்வும் மாறி மாறி அவன் மனதை அலைகழிக்கிறது. ஒரு புள்ளியில் கதைசொல்லி தன்னையே கருணாகரனாக உணரும் இடம் நாவலின் உச்சம் எனலாம். மூன்று சந்தர்ப்பங்களில் கருணாகரன் சாரதா சிதைக்கப்பட்ட தன்னுடைய சொந்த ஊருக்குச் செல்கிறான். முதன்முறை அந்தப் பயணம் ஒரு யதார்த்த நிகழ்வாக சித்தரிக்கப்படுகிறது. அவன் மனதில் அப்போது பழியுணர்வு மட்டுமே உள்ளது. மறுமுறை கதைசொல்லி கருணாகரனின் குடும்பத்துடன் தொடர்புடையவனாக இருக்கும்போது சாரதாவுடன் செல்கிறான். உண்மையில் அப்பயணத்தின் நம்பகத்தன்மை மீது ஒரு சந்தேகம் விழுகிறது. அவனுடைய பழியுணர்வு குழப்பத்துக்கு உள்ளாகிறது.  மூன்றாம் முறை கருணாகரன் வீட்டைவிட்டு வெளியேறி சுலோச்சனாவைத்தேடிச் செல்கிறான். நாவலின் மிகச்சிறப்பான பகுதி என இந்த அத்தியாயத்தைச் சொல்லலாம். கதைசொல்லி சுலோச்சனாவைத் தேடுவதும் அவனுடைய பால்யமும் ஒரேநேரத்தில் சொல்லப்படுகின்றன. ஒருவித மாயத்தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும் இந்த அத்தியாயங்களில் கதைசொல்லி தன்னை கருணாகரனாகவே உணர்கிறான். பழியுணர்வு அவனை முற்றாக நீங்கியிருக்கிறது.

நாவல் மொத்தமும் கதைசொல்லியின் பார்வையிலேயே நகர்வதால் மற்ற அனைவருமே அவன் கண்ணிலிருந்து பிரதி எடுக்கப்பட்டவர்களாகவே இருப்பதும் ஒரு அரசுப் பள்ளி எழுத்தராக இருக்கும் கதைசொல்லிக்கு அவன் சூழலில் இருந்து அநேகமாக எந்த புறநெருக்கடிகளும் இல்லாமல் இருப்பதும் கதையின் பலகீனமான அம்சங்கள்.  மேலும் சில இடங்களில் மொழிபெயர்ப்பு ஆக்கத்தை வாசிப்பது போன்ற சொற்பிரயோகங்கள் பொருந்தாமல் நிற்கின்றன. திட்டுவதை "கடுமையாக விமர்சித்தான்" என்று எழுதுவதையும் "ஒரு முயலைப் போல பார்த்தாள்" என்று எழுதுவதையும் சற்று திணறுலடனே ஏற்க வேண்டி இருக்கிறது.

 ஒருவகையில் கதைசொல்லி கருணாகரனிடம் இறுதிவரை வேண்டி நிற்பது தன்னை எதிரியாக பாவிக்கும் ஒரு நிலையைத்தான். ஆனால் கருணாகரன் அவனை அறிந்திருக்கவில்லை எனும்போது கதைசொல்லி வன்மம் கொள்கிறான். ஆனால் கருணாகரனின் குடும்பத்தின் சரிவு சுலோச்சனாவின் மீதான காதல் என இயல்பாகவே கதைசொல்லி பழியுணர்வில் இருந்து மீள்வதற்கான வழியினை பற்றிக் கொள்கிறான். இறுதியில் கருணாகரனை சாரதா பார்ப்பதில் நாவல் உச்சம் பெறுகிறது. கருணாகரனை இறுதியாகப் பார்க்க வரும்போது கதைசொல்லி தன் மீட்சியை கண்டு கொள்கிறான் என்றே தோன்றுகிறது. ஆனால் சற்று ஆழ்ந்து பார்க்கும்போது அவனது மீட்சி இனி அவன் வாழ்வில் தொடங்கவிருக்கும் சரிவாகவே இருக்கும் என்று அவதானிக்க முடிகிறது. பழியுணர்வை வெல்லும் வேட்கையாகவும் மீட்சிக்கான ஏக்கத்தை சரிவாகவும் சித்தரித்து இந்த நாவல் செய்திருக்கும் தலைகீழாக்கமே நாவலின் தரிசனம் என்று கொள்ளலாம்.

ஆனந்த சந்திரிகை புத்தாண்டு மலருக்காக எழுதிய கட்டுரை - ஏப்ரல் 2019