Tuesday 21 July 2020

பிம்பச்சிறை - சில குறிப்புகள்

எம் எஸ் எஸ் பாண்டியனின் பிம்பச்சிறை என்கிற நூலை வாசித்தேன். எம் ஜி ஆர் இறந்த சில வருடங்களில் எழுதப்பட்ட இந்த நூல் எம் ஜி ஆர் என்ற 'பிம்பம்' எப்படி மக்கள் மனதை வெற்றிக் கொண்டு எம் ஜி ராமச்சந்திரனை பதினோரு ஆண்டுகள் வெல்ல முடியாதவராக ஆட்சியில் அமர்த்தியிருந்தது என்பதை புரிந்து கொள்ள முயல்கிறது. எம் ஜி ராமச்சந்திரன் இறந்த சில வருடங்களில் எழுதப்பட்டதாலோ என்னவோ இந்த நூலில் சில உற்சாகமான முன்முடிவுகள் தென்படுகின்றன. முப்பத்தோரு அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலின் தொடக்க அத்தியாயங்கள் சில எம் ஜி ராமச்சந்திரனின் பதினோரு ஆண்டுகால ஆட்சி ஏன் தமிழகத்தின் 'இருண்ட காலம்' என்பதை சில தரவுகளின் அடிப்படையில் சொல்கின்றன. அந்த இருண்ட காலம் அடித்தட்டு மக்களுக்கு தீமை விளைவித்திருக்கிறது. ஆனாலும் அடித்தட்டு மக்கள் ஏன் எம்ஜிஆருக்கு அவர் இறக்கும் வரை - இறந்த பிறகும் கூட - ஏன் விசுவாசமாக இருந்தனர் என்பதை விளக்க முயல்கிறது.

எம்ஜிஆர் என்ற பிம்பம் மக்கள் மனதில் எப்படி வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என்பதை விளக்குவதில் எடுத்துக்கொண்ட சிரத்தையை ஆசிரியர் எம்ஜிஆர் ஆட்சியின் பாதகங்களை(?) சுட்டுவதில் செலுத்தவில்லையோ என்று தோன்றுகிறது. ஒருவேளை எம் எஸ் எஸ் பாண்டியன் இந்த நூலில் கரிசனத்துடன் நோக்கியிருக்கும் 'அடித்தட்டு' மக்களை இன்னும் கொஞ்சம் இறங்கி வந்து புரிந்து கொண்டிருந்தால் எம்ஜிஆர் இறந்த பிறகும் அஇஅதிமுக எப்படி பதினைந்து வருடங்கள் ஆட்சியில் இருக்கிறது - இன்னும் இருக்கிறது - என்பதை விளங்கிக் கொள்ள ஏதுவாக இருந்திருக்கும்.


முன்முடிவு என்று நான் சொன்னதை இரண்டாக பகுத்துக் கொள்கிறேன். எம்ஜிஆர் ஆண்ட பதினோரு ஆண்டுகள் இருண்ட காலம் என்ற சந்தேகத்து அப்பாற்பட்ட முன்முடிவு ஒருபுறம். மற்றொருபுறம் அடித்தட்டு மக்கள் என்பவர்கள் எளிதாக மயங்கக்கூடியவர்கள். (நடுத்தட்டோ உயர்தட்டோ இப்படி மயங்காது என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை). இந்த முன்முடிவுகளுடன் எம்ஜிஆரை என்ற பிம்பத்தை மட்டுமே கூர்ந்து கிழித்துச் செல்லும் இந்த நூல் இன்னும் பத்து வருடங்கள் கழித்து எழுதப்பட்டிருந்தால் ரஜினியையும் இருபது வருடங்கள் கழித்து எழுதப்பட்டிருந்தால் விஜயையும் கூட இப்படி பகுப்பாய்வு செய்திருக்கும். உலகம் முழுக்க வணிக சினிமாவின் வழி புகழ்பெற்ற கதாநாயகர்கள் அனைவருக்குமே இந்த பகுப்பாய்வை பொருத்திப் பார்க்க முடியும். அடித்தட்டு மக்களிடம் எம்ஜிஆருக்கு இருந்த செல்வாக்கு திரைபிம்பம் மற்றும் போலி வரலாறுகளால் மட்டுமே ஆனது என்று நிறுவும் இந்த நூலை முப்பது வருடங்களில் அடித்தட்டினரின் எண்ணிக்கை குறைந்து போலி வரலாறுகளின் எண்ணிக்கை அதிகரித்து இந்த காலத்தில் இருந்து பார்க்கும்போது மிகை உற்சாகத்தில் எழுதப்பட்ட நூல் என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

நான் சிறுவனாக இருக்கும்போது 'திமுகவுக்கு ஓட்டு போடுறவன் எல்லாம் படித்தவன் அதிமுகவுக்கு ஓட்டு போடுறவன் எல்லாம் எம்ஜிஆர் ரசிகன்' என்ற கூற்று ஊரில் நிலவும். இதுபோன்றதொரு மேம்போக்கான ஒரு கூற்றாக மட்டுமே பிம்பச்சிறை என்ற இந்த நூலை பார்க்கலாம்.

இதுபோன்ற கூற்றுகள் எப்படி உருவாகின்றன?

இவை ஒரு வகையான அறிவுஜீவி பாவனை என்று எனக்குத் தோன்றுகிறது. வெகுஜனத்தின் ரசனைகள் மீதும் அபிலாஷைகள் மீதும் ஒரு அறிவுஜீவிக்கு ஒவ்வாமை இருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. அறிவுஜீவியின் செயற்களம் 'வெகுஜனமாக' இருக்கும் வரை அறிவுஜீவி அந்த ஒவ்வாமையை பேணிக் கொள்வதில் சிக்கல் இல்லை. ஆனால் வெகுஜனத்தை புரிந்து கொள்ள முயலும்போது அறிவுஜீவி தன் ஒவ்வாமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு திறந்த மனதுடன் வெகுஜனத்தை அணுக வேண்டும். அப்படி அணுகும்போது மட்டுமே அதன் செல்திசையை ஓரளவு நெருங்கி ஊகிக்க முடியும். பாண்டியனின் இந்த நூல் தன் பீடத்தை விட்டு ஒரு படியும் இறங்காமல் வெகுஜனத்தின் மீது தீர்ப்பெழுதுகிறது. நுண்ணுணர்வு கொண்ட ஒரு அறிவுஜீவி பிம்பக் கட்டமைப்பு என்ற செயலில் யார் பிம்பமாகிறாரோ(இங்கு எம்ஜிஆர்) அவர் மட்டுமின்றி யாருக்காக (அடித்தட்டு) அந்த பிம்பம் உருவாகிறதோ அவர்களும் பங்கேற்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்வார். இந்த கவனம் ஒரு வகையில் பின்நவீனத்துவத்துடன் தொடர்புடையது.

இன்றும் நம்முடைய அறிவுஜீவிகளில் பலர் இந்த பின்நவீனத்துவ சிந்தனை போக்குக்கு வந்து சேரவில்லை என்பதை அவர்கள் ஒரு அசைவியக்கத்தை அணுகும் விதத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அந்த புரிதலின்மைக்கான உதாரணமாக பாண்டியனின் இந்த நூலைச் சொல்லலாம். பாண்டியன் எம்ஜிஆர் என்ற பிம்பத்தை ஒரு இடைச்செருகலாக சதிக்கோட்பாடாக மட்டுமே காண்கிறார். இவற்றைக் கடந்து பிம்பங்களும் கடவுள்களும் மதங்களும் தீர்க்கதரிசிகளும் லட்சியவாதிகளும் எதிரிகளும் லட்சியங்களும் மக்களுக்கு ஏன் தேவைப்படுகின்றன என்பதை விளங்கிக்கொள்ள முயல்வதில் இருந்தே உண்மையான சமூக அவதானங்கள் தொடங்க இயலும்.

Sunday 19 July 2020

வெண்முரசு நாவல் வரிசை - அறிமுகக் குறிப்புகள்

எழுத்தாளர் ஜெயமோகன் மகாபாரதத்தை முழுமையாக மறு ஆக்கம் செய்து எழுதிய நாவல் வெண்முரசு. இருபத்தாறு தனித்தனி நாவல்களாக எழுதப்பட்டுள்ள வெண்முரசை இணைத்து ஒரே நாவலாகவும் வாசிக்க இயலும். ஜனவரி 1, 2014 முதல் வெளிவரத்தொடங்கிய வெண்முரசு ஜூலை 16, 2020ல் முடிந்திருக்கிறது. இந்த நாவல் வரிசையை www.jeyamohan.in மற்றும் www.venmurasu.in ஆகிய தளங்களில் வாசிக்கலாம்.  அனைத்து நாவல்களும் கிண்டிலும் கிடைக்கின்றன. (வெண்முரசு நாவல்களை கிண்டிலில் வாங்குவதற்கான சுட்டி  - https://amzn.in/dFTj7xN/)

வெண்முரசு நாவல்களை வாசிக்க விரும்பும் வாசகர்களுக்காக ஒவ்வொரு நாவலிலும் நிகழும் மைய நிகழ்ச்சிகள் குறிப்புகளாக கீழே தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிநாவலும் தன்னளவில் பல்வேறு வடிவப்புதுமைகளைக் கொண்டிருந்தாலும் வெண்முரசை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அதிலொரு நேர்க்கோட்டுத் தன்மை இருப்பதைக் காண முடிகிறது.




நூல் ஒன்று - முதற்கனல் 


அஸ்தினபுரியின் அரசனாக பொறுப்பேற்கவிருக்கும் விசித்திரவீரியனுக்காக காசிநாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரையும் பீஷ்மர் சிறையெடுத்து வருகிறார். விசித்திரவீரியனின் இறப்பும், பீஷ்மரை அம்பை சபிப்பதும், அம்பிகைக்கு திருதராஷ்டிரரும், அம்பாலிகைக்கு பாண்டுவும் பிறப்பது வரையிலான நிகழ்வுகள் நாவலில் இடம்பெறுகின்றன.


நூல் இரண்டு - மழைப்பாடல் 


திருதராஷ்டிரர் காந்தாரியை மணமுடிப்பதும் குந்தி பாண்டுவை மணப்பதும் இந்த நாவலில் இடம்பெறுகின்றன. பாண்டுவை மணப்பதற்கு முன் குந்திக்கு கர்ணன் பிறப்பதும் மணமுடித்த பிறகு குந்திக்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் பிறப்பதும் மாத்ரிக்கு நகுல சகதேவர்கள் பிறப்பதும் திருதராஷ்டிரருக்கு துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் பிறப்பதும் நாவலில் வருகின்றன. பாண்டுவுடன் வனவாசம் சென்ற குந்தி சிறுவர்களான பாண்டவர்களை அழைதுதுக் கொண்டு அஸ்தினபுரி வருவதுடன் இந்நாவல் நிறைவுபெறுகிறது.


நூல் மூன்று - வண்ணக்கடல்


பாண்டவர்களின் கௌரவர்களின் இளமைக்காலத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது. துரோணரை துருபதன் வஞ்சிக்கிறார். துரோணர் அர்ஜுனனுக்கு ஆசிரியராவதும் கௌரவர்கள் பீமனுக்கு நஞ்சூட்டுவதும் நிகழ்கின்றன. இந்த நாவல் இளநாகன் என்ற தமிழகப் பாணனின் வழியாக சொல்லப்படுகிறது.


நூல் நான்கு - நீலம்


நீலம் மகாபாரத வரிசையில் இருந்து விலகி பாகவத மறு ஆக்கமாக அமைகிறது. கிருஷ்ணனின் இளமைக் காலத்தை ராதையின் வழியாகச் சொல்கிறது. கவித்துமான நடை கொண்ட ஆக்கம்.


நூல் ஐந்து - பிரயாகை


துரோணரின் ஆணைக்கிணங்க பாண்டவர்களும் கௌரவர்களும் துருபதனை வென்று சிறைபிடிக்கின்றனர். கிருஷ்ணன் தன் நாட்டினை மீட்க தன் அத்தையான குந்தியிடம் உதவி கேட்டு வருகிறான்.துருபதன் தவம் இயற்றி திரௌபதியை பெறுகிறார். பாண்டவர்களை எரித்துக்கொல்ல வாரணவதத்தில் கௌரவர்கள் அரக்கு மாளிகை அமைக்கின்றனர். அங்கிருந்து தப்பும் பாண்டவர்கள் இடும்பவனத்திற்கு செல்கின்றனர். அங்கு பீமன் இடும்பியை மணக்கிறான். திரௌபதியை பாண்டவர்கள் மணமுடிப்பதுடன் பிரயாகை நிறைவுறுகிறது.


நூல் ஆறு - வெண்முகில் நகரம் 


பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பகை முற்றுகிறது. அவர்களுக்கு இடையேயான பிரிவினை முற்றி இந்திரபிரஸ்தம் என்ற நகரை பாண்டவர்கள் அமைக்கின்றனர். கிருஷ்ணனின் துவாரகையையும் இந்த நாவல் விவரித்துச் செல்கிறது. 


நூல் ஏழு - இந்திரநீலம் 


இந்நாவலும் மகாபாரதத்தின் மையக் கதையில் இருந்து விலகி கிருஷ்ணன் மணமுடிக்கும் அரசிகள் வழியாக நகர்கிறது. 


நூல் எட்டு - காண்டீபம்


இந்திரபிரஸ்தம் அமைக்கப்பட்ட பிறகு அர்ஜுனன் யாத்திரை புறப்படுவதை இந்நாவல் விவரிக்கிறது. உலூபி, சித்ராங்கதை ஆகியோரை அர்ஜுனன் மணப்பதை சித்தரிக்கும் இந்த நாவல் கிருஷ்ணனின் தங்கையான சுபத்திரையை மணப்பதுடன் நிறைவடைகிறது. சமண சமயத்தின் தோற்றம் குறித்த சித்தரிப்புகள் நாவலில் உள்ளன.


நூல் ஒன்பது - வெய்யோன்


கர்ணனின் அங்க தேசத்தையும் அவன் மனைவியருடனான அவள் வாழ்வு குறித்தும் இந்நாவல் பேசுகிறது. துரியோதனன் இந்திரபிரஸ்தத்தின் பளிங்கு மாளிகையில் தடுமாற்றம் கொள்வதும் அவன் பாண்டவர்களின் மீது வஞ்சம் கொள்வதும் இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன.


நூல் பத்து - பன்னிரு படைக்களம் 


சேதிநாட்டு அரசன் சிசுபாலன் கிருஷ்ணனனாலும், மகதத்தின் அரசான் ஜராசந்தன் பீமனாலும் கொல்லப்படுவதை சொல்கிறது. யுதிஷ்டிரன் நாற்கள விளையாட்டில் இந்திரபிரஸ்தத்தை இழக்கிறார். திரௌபதியின் துகிலுரிதலுடன் இந்த நாவல் நிறைவு பெறுகிறது.


(வெண்முரசின் அடுத்த நாவல்களான சொல்வளர்காடு, கிராதம், மாமலர் ஆகியவை பாண்டவர்களின் கான்வாழ்க்கையையும் நீர்க்கோலம் அவர்களின் தலைமறைவு வாழ்வையும் சித்தரிக்கின்றன)


நூல் பதினொன்று - சொல்வளர்காடு 


பாண்டவர்களின் வனவாசத்தின் தொடக்கத்தைச் சொல்லும் நாவல். நச்சுப் பொய்கையில் நீரருந்தி பாண்டவர்கள் மாண்டு பிழைப்பதுடனும் யுதிஷ்டிரன் தன் மெய்மையை கண்டடைவதுடன் நாவல் முடிகிறது. 


நூல் பன்னிரண்டு - கிராதம் 


இந்திரனுக்கும் விருத்திரனுக்குமான போரினை ஒரு இழையாகவும் சைவ நெறிகளை மறு இழையாகவும் இந்த நாவல் பின்னுகிறது. அர்ஜுனன் பாசுபதத்தை அடைவதுடன் நாவல் நிறைவேறுகிறது.


நூல் பதிமூன்று - மாமலர் 


பீமன் திரௌபதிக்காக கல்யாண சௌந்திக மலரை தேடிச்செல்லும் பயணம் இந்த நாவலில் உள்ளது. இணையாக யயாதியின் கதை தேவயானி மற்றும் சர்மிஷ்டையின் வழியே சொல்லப்படுகிறது.


நூல் பதினான்கு - நீர்க்கோலம் 


பாண்டவர்களும் திரௌபதியும் விராட தேசத்தில் தலைமறைவாக வாழ்வதை இந்த நாவல் சித்தரிக்கிறது. இணையாக நளன் தமயந்தியின் கதை சொல்லப்படுகிறது.


நூல் பதினைந்து - எழுதழல் 


உப பாண்டவர்கள் மற்றும் உப கௌரவர்களைப் பற்றிய சித்தரிப்புகள் இந்த நாவலில் இடம்பெறுகின்றன. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான பகை முற்றி போரை நோக்கிச் செல்கிறது.


நூல் பதினாறு - குருதிச்சாரல் 


போரினை தடுப்பதற்காக பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ணன் துரியோதனனிடம் தூது செல்வது பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் மனைவியர் வழியே சொல்லப்படுகிறது.


நூல் பதினேழு - இமைக்கணம் 


இந்த நாவல் கீதையின் மறு ஆக்கம். மகாபாரத மாந்தர்கள் ஒவ்வொருவரின் வழியாக கீதையின் ஒவ்வொரு யோகங்களும் விவரிக்கப்படுகின்றன. கீதையைப் போலவே இந்த நாவலும் ஒரு மாயவெளியில் நடைபெறுகிறது.


நூல் பதினெட்டு - செந்நா வேங்கை 


குருஷேத்திர போர் நடைபெறுவது உறுதியான பிறகு பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் தரப்புக்கு வலு சேர்த்துக் கொள்வதற்காக ஈடுபடும் பேரங்கள் நாவலில் இடம்பெறுகின்றன. நாவலின் இறுதியில் குருஷேத்திரப்போர் தொடங்குகிறது.


நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம் 


குருஷேத்திர களத்தில் பீஷ்மர் நிகழ்த்தும் அழிவுகளும் அவரது வீழ்ச்சியும் நாவலில் இடம்பெறுகிறது.


நூல் இருபது - கார்கடல் 


துரோணரின் மரணம் வரையிலான குருக்ஷேத்திர போர் இந்த நாவலில் இடம்பெறுகிறது.


நூல் இருபத்தொன்று - இருட்கனி 


துரோணரின் மரணத்துக்குப் பிறகு கர்ணன் கௌரவரப் படைக்குத் தலைமை ஏற்பதும் கர்ணன் அர்ஜுனனால் கொல்லப்படுவது வரையிலான நிகழ்வுகளும் நாவலில் இடம்பெறுகின்றன.


நூல் இருபத்தியிரண்டு - தீயின் எடை 


இந்த நாவலுடன் பாரதப்போர் நிறைவடைகிறது. துரியோதனனின் மரணம் மற்றும் பாண்டவ மைந்தர்கள் அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனால் தீயிட்டுக் கொல்லப்படுவதில் முடிகிறது.


நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர் 


பாண்டவர்கள் இறந்துபோன கௌரவர்களுக்கும் தங்கள் மைந்தர்களுக்கும் நீர்க்கடன் செய்வது வரையிலான நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன.


நூல் இருபத்திநான்கு - களிற்றியானை நிரை 


பாரதப்போரை வென்ற பிறகு அஸ்தினபுரி மெல்ல நிலைமீள்வதையும் பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய நாடாக உருவெடுப்பதையும் இந்த நாவல் சித்தரிக்கிறது.


நூல் இருபத்தைந்து - கல்பொரு சிறுநுரை


கிருஷ்ணனின் மைந்தர்கள் தங்களுக்குள்ளாக போரிட்டுக்கொண்டு அழிவதையும் துவாரகையின் வீழ்ச்சியையும் சொல்கிறது. கிருஷ்ணனின் மரணத்துடன் நாவல் முடிகிறது.


நூல் இருபத்தியாறு - முதலாவிண் 


வெண்முரசின் இறுதி நாவல் முதலாவிண். பாண்டவர்களின் வானப்பிரஸ்தத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது.


வெண்முரசு நாவல்களை வாங்குவதற்கான சுட்டி 


https://www.jeyamohan.in/வெண்முரசு-நாவல்-வரிசை/




Sunday 5 July 2020

வெண்முரசை என்ன செய்வது?








சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த 'அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் 'நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?' என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை, அயோத்திதாசரை என நம்மிடம் புதிதாக 'கண்டெடுக்கப்பட்டு' கொடுக்கப்படும் எதையுமே நமக்கு - அதாவது தமிழர்களுக்கு - முறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை என்பதன் தொடர்ச்சியாக மேற்சொன்ன கேள்வியை முன்வைத்தார்.


வெண்முரசின் இறுதி நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு இன்று காலையும் மாலையுமாக ஜெயமோகன் வெண்முரசு வாசகர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இதை ஒட்டி தமிழ் அறிவுச்சூழலில் ஒரு மெல்லிய சலனம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சலனத்தை கவனிக்கும் போது அதனுள் இந்த நாவல் வரத்தொடங்கிய ஜனவரி 1, 2014 முதல் நாம் அதை எவ்வளவு தோல்விகரமாக எதிர்கொண்டிருக்கிறோம் என்ற காரணத்தைக் காண முடிகிறது.


முதலில் வெண்முரசு நாவல் வரிசைக்கு நவீன இலக்கியத்தில் என்ன இடம் கொடுப்பது என்ற குழப்பமும் பதற்றமும் ஏற்படுகிறது. இதுவரை தமிழில் வெளியான பல நல்ல நாவல்களை இந்த நாவல் உருவ அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் சிறுத்துப் போகச் செய்வதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தமிழின் விமரிசன மரபை பின்தொடர்ந்து ஏற்றுக்கொண்டு விவாதித்து தனக்கென ஒரு நாவல் வரிசையை ஒவ்வொரு வாசகரும் தன் மனதில் உருவாக்கி இருப்பார். அந்த வரிசையின் மீது வெண்முரசு நாவல் வரிசை ஒரு பெரும் மோதலை நிகழ்த்துகிறது. குறைந்தது வெண்முரசின் ஆறு நாவல்களை 'சிறந்த நாவல்கள்' என்று நான் நம்பும் பட்டியலுக்குள் நுழைக்க வேண்டியிருக்கிறது. (வெண்முரசின் இருபத்தைந்து நாவல்களையும் முழுமையாக வாசித்து இருக்கிறேன்) நிச்சயமாக எதிர்காலத்தில் இந்தப் பட்டியல் மாறுபாடும். ஆனால் இந்தப் பட்டியலுக்கு ஒரு இயைந்து போகும் தன்மை உண்டு. என் ரசனையை கட்டமைத்ததில் முன்னோடிகளின் ரசனைக்கும் அழகியல் தேர்வுக்கும் முக்கிய பங்கு உண்டு. போலவே தமிழ் இலக்கியத்தை விமர்சனப்பூர்வமாக அணுகும் பார்வையை கட்டமைத்ததிலும் முன்னோடிகளின் தாக்கம் நிச்சயம் இருக்கும். அத்தகைய விமர்சகர்களால் ஒரு வரிசை உருவாக்கப்படும் போது வெண்முரசு அவ்வரிசையில் பெரியதொரு இடத்தை எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.


மேற்சொன்ன அவதானிப்பு என் ரசனை சார்ந்த மிகை நம்பிக்கை என்றும் எடுத்துக் கொள்ளலாம். படைப்பு நிலைத்திருப்பதும் அழிவதும் காலத்தால் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இன்று வெண்முரசு எவ்வாறு அணுகப்படுகிறது? இரண்டு விதங்களில் பார்க்கலாம். வாசகர்கள் மத்தியில் வெண்முரசு தற்போதே புகழ்பெற்ற நாவல் வரிசையாகத்தான் விளங்குகிறது. வெண்முரசு நாவல் வரிசைக்கென வரும் கடிதங்கள் தனியொரு வலைப்பூவில் தொகுக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான கடிதங்கள் கொண்ட வலைப்பூ அது. நானும் குறைந்தது இருபது கடிதங்கள் எழுதி இருப்பேன். ஒரு வாசகனாக வெண்முரசின் செல்வாக்கை மறுப்பதற்கில்லை. ஆனால் அடுத்த படிநிலைகளில் வெண்முரசு எப்படி பார்க்கப்படுகிறது எனும்போதுதான் ஒரு குழப்பம் வருகிறது. எழுத்தாளர்கள், விமர்சகர்கள் வட்டத்தில் வெண்முரசு பெரும்பாலும் மௌனத்தையே உருவாக்கியிருக்கிறது. இந்த கனத்த மௌனத்தைத்தான் நான் சந்தேகம் கொள்கிறேன். பிரம்மாண்டமான ஆக்கங்களை எதிர்கொள்ளும் பயிற்சி நம் பண்பாட்டுச்சூழலுக்கு இல்லையோ என்று ஐயுறுகிறேன்.


முகநூல் போன்ற கருத்து சொல்லும் ஊடகங்களின் பெருக்கத்தால் வெண்முரசு குறித்து நிறைய கருத்துகள் சொல்லப்பட்டுவிட்டன. அந்த கருத்துக்களில் பெரும்பாலானவை பொருட்படுத்தத் தக்கவையாக இல்லை. காரணம் பெரும்பாலான கருத்துகள் இப்படியொரு முயற்சி உருவாக்கும் ஒரு ஆழமான அதிர்ச்சியை சிரமப்பட்டு விழுங்கிய பிறகு நூலினை வாசிக்காமலேயே சொல்லப்படும் கருத்துகள். வெண்முரசு குறித்த இத்தகைய பொருட்படுத்த அவசியமில்லாத கருத்துதிர்ப்புகளை திரட்டினால் அது வெண்முரசு நாவல் வரிசையை விட இரு மடங்கு பெரிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. 


இத்தகைய கருத்துகளின் ஊற்றுக்கண் எது? நான் அதிர்ச்சி என்றுதான் கருதுகிறேன். ஒரு மிகப்பெரிய செயல் நாம் வாழும் காலத்தில் நிகழும்போது ஏற்படும் அதிர்ச்சி. அந்த அதிர்ச்சி தான் காழ்ப்பாகவும், அரசியல் சரிநிலை சார்ந்த எதிர்ப்பாகவும் வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன். 


பொது ஊடகப் பெருக்கம் விளைவித்த இன்னொரு தீங்கு எல்லோரையும் அரசியல் நிலைப்பாடு எடுக்கச் சொல்வது. முன்பு நாமெல்லாம் ஜாதி பார்த்து பழகிக் கொண்டோம். இன்று ஜாதியின் இடத்தை அரசியல் நிலைப்பாடு எடுத்துக் கொண்டது என நினைக்கிறேன்.


'நீங்க திராவிடமா, தமிழ்தேசியமா, இந்துத்துவமா, இந்தியதேசியமா?' என்று கேட்டு நாம் பேசிக்கொள்ள நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த அரசியல் நிலைப்பாடு சார்ந்த கூச்சல்கள் தொடர்ச்சியாக வெண்முரசின் மீது வீசப்படுகிறது. அதிர்ச்சிக் கூச்சல்களுக்கு அடுத்ததாக இந்த அரசியல் கூச்சல்களை வைக்கலாம். இதற்கிடையே வெண்முரசு நாவல் வரிசைக்கு எழுதப்படும் போதே நல்ல வாசிப்புகளும் விமர்சனங்களும் வந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் படைப்புகளின் அளவையும் தரத்தையைம் வீச்சையும் ஒப்பிடும்போது விமர்சனங்கள் போதாமை நிறைந்தவைகளாகவே தெரிகின்றன.


அதிர்ச்சி மற்றும் அரசியல் நிலைப்பாடு சார்ந்த கூச்சல்களுக்கு அடுத்ததாக வெண்முரசு சார்ந்து நிலவும் மௌனம் வருகிறது. இந்த மௌனத்துடன் புழங்குவதற்கான வாய்ப்பு எனக்கு கடந்த ஐந்து வருடங்களில் கிட்டியிருக்கிறது.


ஒரு வகையில் அந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்ததுமேகூட வெண்முரசு என்றுதான் சொல்ல வேண்டும். நான் வாசித்த ஜெயமோகனின் முதல் ஆக்கம் வெண்முரசின் முதல் நூலான முதற்கனல் தான். தீவிர இலக்கியம் சார்ந்த புரிதல் இல்லாமல் அனைத்தையும் 'கொத்தாக' வாசித்துக் கொண்டிருந்த என்னை இலக்கியத்தின் பக்கம் இழுத்துவிட்டது முதற்கனல்தான். அதன் பிறகான தொடர்ச்சியான வாசிப்பு, என் எழுத்து என அனைத்திற்குமான முதல் புள்ளி என அந்த நாவலைச் சொல்லலாம்.


அதன் வழியாக தமிழிலக்கிய உலகப் பரிச்சயம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் மேற்சொன்ன இலக்கியம் குறித்து ஏதும் அறியாத கூச்சல்காரர்கள் சத்தம் போடுகிறார்கள் என்றால் இலக்கியவாதிகள் மௌனம் சாதிக்கின்றனர் என்று கண்டு கொண்டேன். இந்த மௌனத்துக்கு என்ன காரணமாக இருக்கும்? முதலில் அந்த நாவலின் பிரம்மாண்டம். எந்தவொரு இலக்கியவாதியும் சமகாலத்தை சற்று சந்தேகத்துடனேயே அணுகுவார். ஒரு சமகால நூலின் மீதான தன்னுடைய வாசிப்பு சரியாக இருக்கிறதா தான் எதையும் தவற விடுகிறோமா அல்லது பிறரால் சுமாரான ஆக்கம் என்று சொல்லப்படும் ஒன்று தன் பார்வைக்குச் சிறந்ததாகத் தெரிகிறதா என்ற வகையான ஊசலாட்டம் ஒரு இலக்கியவாதியிடம் நிரந்தரமாக இருக்கும். வெண்முரசு சார்ந்தும் அத்தகைய ஊசலாட்டம் இருக்குமானால் அது புரிந்து கொள்ளக்கூடியதே. 


ஆனால் இத்தகையதொரு நிகழ்வே இங்கு நடக்கவில்லை என்ற வகையிலான பாவனைகள் ஆபத்தானவை. ஏதோவொரு வகையில் தமிழ் இலக்கிய உலகம் வெண்முரசை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அதை எவ்வளவு விரைவாகவும் தெளிவாகவும் செய்யவிருக்கிறோம் என்பதைப் பொறுத்தே தமிழ் இலக்கியத்தில் வெண்முரசின் தாக்கம் என்ன என்பது தமிழ்ச் சூழலுக்குத் தெரியவரும்.


நான் உணரும் ஒன்று உண்டு. என்னுடன் எழுதிக் கொண்டிருக்கும் சமகால எழுத்தாளர்களில் வெண்முரசால் உந்ததுலும் உற்சாகமும் பெற்றவர்கள் பலர். சூழலில் இப்படி ஒரு பெருநிகழ்வு நடைபெறும்போது இயல்பாகவே அது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல உப நிகழ்வுகளை உருவாக்கி விடுகிறது. வெண்முரசு அப்படி நிகழ்த்தி இருப்பது என்ன என்பதை அறிவதற்கும் தமிழ் அறிவுச்சூழல் இந்த நாவல் வரிசையை நேர்மையுடன் எதிர்கொண்டாக வேண்டும். வெண்முரசு ஒரு பெரும் நூலாக தன்னுடைய நிறைவினை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அநேகமாக இந்த மாதம் முடிவடையும். அதன்பிறகாவது வெண்முரசு சார்ந்த உரையாடல்கள் தமிழ்ச்சூழலில் எழ வேண்டும். அயோத்திதாசர் போல சங்க இலக்கியம் போல வெண்முரசும் அது என்ன என்று புரிந்து கொள்ளப்படாமலேயே நம்முடைய கலைச்செல்வ கருவூலத்திற்கு அனுப்பப்பட்டுவிடக்கூடாது.

புகைப்பட உதவி: http://venmurasudiscussions.blogspot.com/2016/09/blog-post_5.html?m=1