Tuesday 8 September 2020

நூல் ஒன்று - முதற்கனல்

 நூல் ஒன்று - முதற்கனல்


என் கொள்ளுப்பாட்டியின் வழியாக நம் மரபின்  சில தொன்மங்களையாவது கேட்டு வளரும்  பேறு பெற்றவன் நான். நுட்பமான  கதை சொல்லலும் பல திசைகளில் விரிந்து எழும் கதை நகர்வும் கொண்ட வெண்முரசின்  முதல் நாவலான  முதற்கனல் முதல் முறை வாசிக்கும்  போது  எனக்குள் பெருந்திகைப்பை ஏற்படுத்தாமல் உள்ளே அனுமதித்ததற்கு என்னுடைய  வாசிப்புத் திறனை மெச்சிக் கொள்ள முடியாது. மானசாதேவி  என்ற நாகர் குலத்தலைவி தன் ஏழு வயது மகன் ஆஸ்திகனுக்கு சொல்லும்  கதைகள் என்னை ஏற்று உள்ளிழுத்துக்  கொண்டதற்கு சிறு வயதில்  கொள்ளுப்பாட்டியின் இழுவையும் ஏளனமும்  நிறைந்த குரலில் கேட்ட தொன்மங்களே காரணம்.


மானசாதேவிக்கும் ஜரத்காரு முனிவருக்கும் பிறந்த  ஏழு வயதான  ஆஸ்திகன்  குருஷேத்திர போர் முடிந்து இரு தலைமுறைகள்  கடந்த பின் அஸ்தினபுரி அரசனான ஜனமேஜயன் தீமைகளை அழிக்க எண்ணி நிகழ்த்தும்  சர்ப்பசத்ர வேள்வியை தடை செய்யும்  பொருட்டு எழுகிறான். காமமாகவும் அகங்காரமாகவும் மண்ணில்  பெருகும் நாகங்கள் அழிக்கப்படுவதை வைதிகனாகவும் நாகனாகவும் ஒருசேர நின்றெதிர்க்கிறான் நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஸ்திகன். தீர்ப்புரைக்க முதிர்ந்து பழுத்த வியாசனை சபைக்கு இழுக்கிறான் ஜனமேஜயன். தட்சப்பெரு நாகத்தை  "இவ்வுலகெங்கும் காமமும் அகங்காரமும் பெருகச் செய்வாயாக" என வாழ்த்தி அனுப்புகிறார் கிருஷ்ண துவைபாயன வியாசர். திகைத்து நிற்கும்  ஜனமேஜயனின் மனநிலையை எளிய மானுட நீதிகளை மட்டும் அறிந்து பிரபஞ்சத்தை ஆளும் பெரு நியதியை அதுவரை காணாத  எந்த மனதினாலும் உணர முடியும். நன்மை தீமை கடந்து எழும் பேரரறத்தை வலியுறுத்தும்  விதமாய் எழுகிறது வியாசனின் சொல் அவர் மாணவரான வைசம்பாயணரின் குரலில்  முதற்பகுதியான வேள்விமுகத்தில்.


முதற்கனலின்  இரண்டாவது  பகுதியான  பொற்கதவம் பேரரசி  சத்யவதியையும் பீஷ்மரையும் வியாசனையும் அறிமுகம்  செய்கிறது. திரை விலக்கப்பட்டு கூப்பிய  கைகளுடன்  அறிமுகம்  கொள்வது போல் நிகழ்வதில்லை  அவர்களுடனான நம் சந்திப்பு. மகாபாரத காலகட்டத்தில்  பாரதம் முழுக்க பரவியிருந்த சூதர்கள்  எனும் கதைப்பாடகர்கள்  வழியாகவே  நாம்  இன்று  அறியும்  பல தொன்மக் கதைகள்  சொல்லப்படுகின்றன. பொற்கதவம்  என்ற இரண்டாவது பகுதி  தொடங்குவதே சூதர்களின் அறிமுகத்துடன் தான். ஒவ்வொருவரின் உளநிலையும் அவர்களிடம் சொல்லப்படும்  சூதர் பாடல்களின் வழியாகவும் அல்லது  தொன்மங்களின் வழியாகவும்  விளங்கிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. காசி நாட்டு இளவரசிகளை கவர்ந்து வர சத்யவதி ஆணையிட்டதும் மனம் குழம்பும்  பீஷ்மர்  தீர்க்கசியாமர் என்ற விழியற்ற சூதரை அழைக்கிறார். சத்யவதிக்கு பராசர முனிவரில் பிறந்த வியாசனின் கதையை பாடுகிறார் தீர்க்கசியாமர். அப்பாடலின் வழியாகவே  தன் வழியை உணர்ந்து வியாசனை நோக்கிச் செல்கிறார் பீஷ்மர். வியாசர் குடியிருக்கும்  வேதவனத்தில் சித்ரகர்ணி என்ற கிழ சிம்மம் குடிலில்  கட்டியிருக்கும் பசுவினை வேட்டையாட நெருங்குகிறது. பெரும்பாலானவர்கள்  அறிந்திருக்கும் சிபி சக்ரவர்த்தி  புறாவிற்காக தன் உடலைக் கொடுத்த கதையை சொல்கிறார் வியாசர். ஆனால் மிகக் கூரிய நியாங்களை பேசும்  நவீனமாக ஒலிக்கிறது அக்கதை. மானுட  உணர்வு பிரபஞ்ச விதிகளுடன் போட்டியிட்டு பேருணர்வாவதை சொல்லிச் செல்கிறது. பீஷ்மர்  தெளிவடைந்து வெளியேறுகையில் சித்ரகர்ணி தன் வேட்டையை முடித்திருக்கிறது.


ஒவ்வொருவரின் ஊழும் முன்னேற வகுக்கப்பட்டுவிட்டதாகவே விரிகின்றன சூதர்களின்  சொற்கள். காசி நாட்டு இளவரசிகளான அம்பையும் அம்பிகையும் அம்பாலிகையும் கேட்பது தட்சனுக்கும் சிவனுக்கும்  இடையே நின்று தவிக்கும்  தாட்சாயிணியின் கதையை. எரி புகுந்து விண்ணடைந்து கணவனை அடைகிறாள் தாட்சாயிணி என்பதிலிருந்தே அந்த இளவரசியரின் ஊழ் நகரும்  திசை தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. தான்  வடித்தெடுத்த சால்வ மன்னனை அடைய முடியாமல்  பீஷ்மரால் சிறையெடுக்கப்பட்ட பின் அவரிடம்  மீண்டு சால்வனை அடைகிறாள் அம்பை. அவள் வரைந்த  சித்திரம்  அழிந்து வெறும்  அரசாளனாக நின்று பேசுகிறான் சால்வன். தன் பிறந்த நாடான காசிக்கு செல்கிறாள். அத்தேசமும் அவளை மறுக்கிறது. சுவர்ணை சோபை விருஷ்டி என்ற தேவதைகளின் வழியாக அம்பை தன் காதலை பீஷ்மரிடம் கண்டு கொள்ளும்  கணம் சிலிர்க்க வைக்கிறது. அனைத்தடையாளங்களையும் இழந்து கன்னியெனவும் அன்னையெனவும் பீஷ்மர்  முன் அவர் நிற்கும்  கணங்களும் தன் பேரன்பு புறக்கணிக்கப்பட்டதும் கொற்றவையென எழும் சீற்றமும்  பெரும்  அகச்சலனங்களை ஏற்படுத்தி அச்சலனம் தணியாததாகவே மனதில்  எஞ்சுகிறது.


வியாச பாரதம் "ஜெய" என்ற பெயரில்  எழுதப்பட்ட  ஆயிரம்  பக்கங்களுக்கு  அதிகம்  சென்றுவிடாத ஒரு காவியமே. பின்னாட்களில்  அது பல்வேறு  காலகட்டங்களில்  விரித்தெடுக்கப்பட்டிருந்தாலும் பீஷ்மர்  ஜராசந்தன் அர்ஜுனன்  பீமன் என வலுவானவர்களே விரிந்துரைக்கப்பட்டிருந்தனர். பெண்ணைக் கூடினால்  இறந்து விடுபவனாக உடல் நலம்  குன்றி பிறக்கும்  சத்யவதியில் சாந்தனுவிற்கு பிறந்த இரண்டாம்  மைந்தன்  விசித்திர வீரியன் அவன் அத்தனை  குறைகளுடனும் பெரும்  ஆளுமையாகவே சித்தரிக்கப்படுகிறான். கட்டளைகளை மட்டுமே  வீசும்  அவன் அன்னை சத்தியவதியை அவன் எதிர் கொள்ளும்  விதமே அவன் ஆளுமையை சொல்லி விடுகிறது. நெஞ்சக்கனல் அணையாது வராஹியாகித் திரியும்  அம்பாதேவியிடம் சிரம் பணிந்து பீஷ்மரிடம்  நின்று ததும்புகிறான். தீர்க்கசியாமர் கங்காதேவியில் சாந்தனுவிற்கு பிறக்கும்  பீஷ்மனின் கதையை விசித்திர  வீரியனிடம்  சொல்கிறார்.   /மாபெரும் வல்லமைகளில் இருந்தே மாபெரும் தீமை பிறக்க முடியும்/ என்றறிகிறான். சூதர்கள்  சொல்லும்  கதைகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன நாகர்கள் சொல்லும் கதைகள். சங்குகர்ணன் விசித்திர  வீரியனிடம் சொல்லும்  கதை அத்தகையது. காசி நாட்டு இளவரசிகளின் அன்னையான புராவதி துறவு பூண்டு அன்னையாகி நிற்கும்  மகளைக் கண்டு இறக்கிறாள். விசித்திர  வீரியனிடம்  அம்பிகை காதல்  கொள்ளும்  தருணங்கள் ஒளிமிக்கவை. விடியலின்  பொன்னொளி என அக்காதல் மிகக்குறைந்த காலம்  நீடிப்பதே அதை மேலு‌ம்  ஒளிகொள்ளச்  செய்கிறது. சத்யவான் சாவித்திரியின் கதையை அம்பிகை விசித்திர  வீரியனிடம்  சொல்லும்  தருணங்கள்  அவள் பதைப்பினை நம்முள்ளும் உணர வைக்கின்றன. சாவித்ரியின் சௌப நாட்டிலேயே அம்பையை புறக்கணித்த சால்வனும் பிறக்க நேர்ந்து அந்நாட்டு  சூதர்கள்  சால்வனின் வீழ்ச்சியை பீஷ்மரிடம்  சொல்லும்  போது விசித்திர  வீரியன்  இறந்துவிடுகிறான்.


தன் துயர் மறைத்து அரசியலுக்காக அம்பிகையையும் அம்பாலிகையையும் பராசரில் தனக்கு பிறந்த மகனாக  வியாசன் கூடட்டும் என பீஷ்மரிடம்  பணிக்கிறாள் சத்யவதி. வேதவனத்தில்  சித்ரகர்ணியை குஹ்யஜாதை எனும் கழுதைப்புலி தன் குட்டிகளுடன்  உண்பதை பார்த்து நிற்கும்  வியாசர் அதற்கு  ஒப்புக் கொண்டது சொல்லப்படுகிறது. வியாசர் அஸ்தினபுரி  வரும்  போது திறந்து கொள்கிறது சத்யவதியின் மனம். தந்தையின்  ஆணைக்கேற்ப தாய் ரேணுகையை கொன்ற பரசுராமரின் கதை அறிந்ததே எனினும்  சத்யவதியின் தோழி சியாமையின் வழியாக அவளிடம்  கூறப்படும்  அத்தொன்மம் பல தளங்களை சுட்டி நிற்கிறது.


இரு இளவரசியருடன் சூதப்பெண் சிவயையும் கூடிய  பின் தன் மகனான  சுகனை தேடி பயணிக்கிறார் வியாசர். தென்னகத்தின்  பெருங்கவிஞனான பெருஞ்சாத்தனை சந்திக்கிறார். /நீங்கள்  சிரஞ்சீவியாக இருந்து உங்கள்  உயிர் முளைத்த வனத்தின்  வாழ்வனைத்தையும் காணுங்கள்/ என அவரை உந்துகிறான் சுகன்.


வியாசரின் பயணத்துக்குப் பிறகு சிகண்டினியை சிகண்டியாகக் காணும்  அம்பையின் பயணம்  தொடங்குகிறது. பன்றியின் மூர்க்கத்துடனும் பசியுடனும் வளர்கிறாள் சிகண்டினி. படகோட்டியான நிருதனிடம் விடைபெற்று சிதையேறுகிறாள் அம்பை. அனைத்து உக்கிரங்களும் அடங்கி / என் சிதைச்சாம்பலைக் கொண்டு நீங்களும் உங்கள்  குலமும் உங்கள்  சிறு தங்கைக்கு நீர்க்கடன் செய்யுங்கள். உங்கள்  குலத்தில்  நான் என்றென்றும்  பிறந்து கொண்டிருப்பேன்/ என அம்பை நிருதனிடம்  சொல்லும்  போது நெஞ்சு விம்மி விடுகிறது. ஸ்தூனகர்ணனை எண்ணித் தவம் புரிந்து பெண்ணென்று இல்லாமல்  ஆகிறாள் சிகண்டினி.  ஒற்றை நோக்கம் கொண்ட கர்மயோகியென எழுகிறான்  சிகண்டி. தனுர்வேதத்தை பயிற்றுவிக்கும்  அக்னிவேசர் சிகண்டிக்கு விடைகொடுக்கையில் நிகழும்  உரையாடல் ஆழம் கொண்டது. அழகிய  கிராமம்  ஒன்றில்  உர்வரை என்ற இளம்பெண்  பீஷ்மரை மணக்க எண்ணுகிறாள். சிகண்டியும் அவளும்  ஒரே நேரத்தில்  கண்ட கனவுகள்  அவளை சீற்றம்  தணிந்து பீஷ்மரை காக்க எண்ணும்  அம்பையென எண்ணச் செய்கிறது.


முற்றறிவதே பீஷ்மரைக் கொல்லும்  வழியெனக் கண்டு அவரை களத்தில்  எதிர்த்த பீஷ்மரின் சிறிய தந்தையான பால்ஹிகரை சந்திக்க சிபி நாடு சென்று மீள்கிறான் சிகண்டி.  அம்பையால் அரண்மனை  நீங்குகிறார் பீஷ்மர். சிகண்டி பீஷ்மரிடம்  யாரென்று  அறியாமல்  பீஷ்மரைக் கொல்ல  தனுர்வேதம் கற்பிக்குமாறு வேண்டுகிறான். ஈனாத தாயென அம்பையை உணர்ந்தவன் அவளுள்  வஞ்சத்தை ஏற்றிய பீஷ்மரை தன் தந்தையென கண்டு கொள்வதோடு முதற்கனல்  நிறைவுறுகிறது.


பெண்களின்  கண்ணீர்  என்றே விரிகிறது  முதற்கனல். முதியவர்களை மட்டுமறிந்த சத்யவதி முது வயதில் "அனகி" என தன் விளையாட்டு பொம்மையின் பெயர் சொல்லி உயிர்விடும் சுனந்தை "பாண்டுரன்" என்ற பளிங்குபாவையை மறக்காத அம்பாலிகை வழியின்றி வியாசரிடம் கரு ஏற்கும்  சிவை என அத்தனை  பெண்களின் கோபமும்  பிரதிபலிக்கும்  களம். அனைத்திற்கும்  மேலாக  சிதை நெருப்பென எரியும்  அம்பை. பாண்டவ கௌரவர்களின் தந்தைகளான பாண்டுவும் திருதராஷ்டிரனும் பிறப்பதோடு நிறைவடைந்தாலும் தன்னளவில்  தனித்தே நிற்கிறது  முதற்கனல். ஒரு கணத்தில்  நாகர்களின் வஞ்சமாக மீண்டும்  மீண்டும்  எதிரொலிப்பது பெண்ணின்  வஞ்சமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. 


நிகழு‌ம்  ஒவ்வொரு  தருணத்தையும் முந்தைய  தருணத்தோடு பொறுத்திப் பார்க்க முடிகிறது. அண்ணனை பிரிந்த பால்ஹிகன் சாந்தனுவிற்கு அளிக்கும்  சாபம் சாந்தனுவின் பெயரர் பிறப்பிலும் எதிரொலிக்கிறது. ஆண்டுகள் பல கடந்த பின்னும்  பால்ஹிகர் ஒளியை பார்க்காமல்  இருப்பது அவர் அண்ணன்  தேவாபியின் நினைவினால்.  யயாதியாக பீஷ்மர் தன்னைக் காணும் தருணமும் அப்படிப்பட்டதே.


ஆஸ்திகன் தன் குடிலடையும் போது நாகர்களுக்கும் ஷத்ரியர்களுக்குமான போராகவும் முதற்கனல்  தெரிகிறது.


வெண்முரசின் அணிவாயிலாக ஆசிரியரால் சொல்லப்படும் முதற்கனல் இன்றைய  சாரமற்ற எதார்த்தத்துடன் தன்னை இணைத்துக்  கொள்ளாமலும் நம்பகத் தன்மையற்ற கதைகளுக்குள்ளும் நுழையாமல்  நான்காயிரம்  ஆண்டுகளாக நீடித்து வரும்  காவிய நாயகர்களை அவர்களுக்கே உரிய கம்பீரத்துடனும் கூர்மையுடனும் அறிமுகப்படுத்துகிறது. ஒரு விதத்தில்  முதற்கனல்  வெண்முரசின்  ராஜபாட்டை.


(2017ல் எழுதிய கட்டுரை)

நூல் இரண்டு - மழைப்பாடல்

 


கங்கைக்ரையில் அமைந்த தொன்மையான  ஷத்ரிய குலங்களை கடந்து பார்ப்பவராக அறிமுகமாகிறார் பீஷ்மர். பழம்பெருமைகளால் குலப்பூசல்களில் ஈடுபட்டிருக்கும் அதிகாரம்  மிக்க  ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளை முற்றாக  தவிர்த்து விட்டு பாரதவர்ஷத்தின் எல்லை நிலங்களில்  இருந்து அரசுகள் உருவாகி வருகின்றன. மகாபாரதத்தை மிக மிக எளிமைப்படுத்தப்பட்ட குடும்பப் பகையாகவும் அதன் மீது போடப்பட்ட தொன்மங்களின் வழியாக  ஒரு மாயாஜால  கதையாகவும் நம்மில்  பலர்  அறிந்திருப்போம். ஆனால்  அக்கால  இந்தியா வரலாற்றின்  ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் மகாபாரதத்தில்  உள்ளது. மழைப்பாடல் அவ்வரலாற்றை தொட்டுச் செல்லும்  அதே நேரத்தில்  பெரும் ஆளுமைகளையும் அவர்களின்  முழு விரிவோடு அறிமுகம்  செய்கிறது. 


விழியற்றவனுக்குரிய பதற்றத்துடன்  அறிமுகமாகும்  திருதராஷ்டிரன் பீஷ்மரை மல்யுத்தத்திற்கு அழைத்து அவரிடம்  அடைக்கலம்  கொள்கிறான். விதுரன்  அரசு சூழ்கையில் பீஷ்மருக்கு இணையாக  ஏறி வரும்  இடத்திலிருந்தே மிக நுண்மையான  வார்த்தைகளில்  நிகழும் அரசியல்  உரையாடல்களும் தொடங்கி  விடுகின்றன. பண்டைய  இந்தியாவின் ஆட்சியதிகாரத்தில் மண நிகழ்வுகள்  அரசியலுடன் தொடர்புடையவாக இருந்திருக்கின்றன. அஸ்தினபுரியை ஷத்ரிய  நாடுகளை  கடந்து முழு பாரதவர்ஷத்தையும் வென்றெடுக்கும்  வல்லமை மிக்க தேசமாக  மாற்ற விரும்புகிறாள் சத்யவதி. கிழக்கில்  வணிகத்தாலும் பொன்னாலும் புது வல்லமை பெற்று வளரும்  காந்தாரத்திற்கு திருதராஷ்டிரனுக்கு மகற்கொடை கேட்டு புறப்படுகிறார் பீஷ்மர். அஸ்தினபுரியின் மன்னனான யயாதியால் ஆட்சி மறுக்கப்பட்ட துர்வசு பாலையின் தொல் குடிகளான லாஷ்கரர்களுடன் இணைந்து அமைத்த அரசு காந்தாரம். மூன்று நெருப்புகளின் மீதேறி  வரும்  மூன்று  காற்றுகளாக பாலையின்  நில விரிவும் பாலை நில மக்களின் குணமும்  விவரிக்கப்பட்ட பின் காந்தார இளவரசனான சகுனி  அறிமுகமாகிறான்.


பாரதவர்ஷத்தை வென்றெடுக்கும் அதே நோக்கத்துடன் வளர்கிறான்  சகுனி. நாக சூதன் ஒருவன்  சகுனியிடம் சொல்லும்  ஒரு கதை அவன் முடிவுகளை கட்டுப்படுத்தவதாக அமைகிறது. ஒரு செங்கழுகினை சகுனி  அம்பெய்து வீழ்த்துவதும் ஓநாய் ஒன்று அக்கழுகினை உண்பதை சகுனி  பார்த்து நிற்பதும்  அவனுள் உருவாக்கும்  நிலையின்மை அவன் ஒவ்வொரு  செயலிலும்  அவனைத் தொடர்கிறது. மூர்க்கமும் பேரன்பும் கலந்தவனாக திருதராஷ்டிரனும் அவனை நன்கறிந்து வினை புரிபவனாக விதுரனும் உருப்பெறுகின்றனர். காந்தாரத்தின் பதினொரு இளவரசியரும் திருதராஷ்டிரனுக்கு மணமுடிக்கப்படுகின்றனர். வசுமதியாகிய காந்தாரி நகர் நுழையும்  போது பெய்யும்  பெருமழையுடன் யமுனையில் அறிமுகமாகிறாள் குந்தி.


தன் வயிற்றுக் கருவை கலைக்க  வரும் மருத்துவச்சியிடம் நிமிர்வுடன் கட்டளையிடும் போதே குந்தியின்  ஆளுமை வெளிப்பட்டு விடுகிறது. யயாதியால் வெளியேற்றப்பட்ட இன்னொரு மைந்தனான யதுவின் குலமாக வளர்ந்து நிற்கிறது  யாதவ குலம். சூரசேனரின் மகளாய் மதுவனத்தில் வசுதேவனுடன் பிறக்கிறாள் குந்தி. குலங்கள் ஒருங்கிணைந்து யாதவ குடிகள்  தலைமை நோக்கி நகரும்  சித்திரம்  குந்தியின் பிறப்பினூடாக சொல்லிச் செல்லப்படுகிறது. வசுதேவன் மதுராபுரியின் அமைச்சனாக உயர்கிறான். துர்வாசரின் மந்திரத்தால் ஒருவனை கவரும்  குந்தி அவனால்  கருவுறுகிறாள். நாகங்களின் துணையோடு நிகழும் கர்ணனின்  பிறப்பும் குந்தி அவனை பிரிவதும்  ராதை கண்டெடுப்பதும் கொந்தளிக்கச் செய்யும்  அனுபவங்கள். 


அதேநேரம் அரசியல்  காய் நகர்த்தல்களும் நிகழ்கின்றன. அஸ்தினபுரியிலிருந்து குந்தியை பெண் கேட்டு தூது வருகிறது. கம்சன்  குந்தியை சிறையெடுக்க முயல்கிறான். தன்னை மீட்டுக்  கொண்டு  அரசியல்  நுட்பத்துடன்  குந்தி எடுக்கும்  முடிவுகள்  பிரம்மிக்க  வைக்கின்றன. குந்தி பாண்டுவை தேர்ந்தெடுக்கிறாள். தன் நிமிர்வினால் அனைத்தையும்  கடந்து செல்கிறாள். குந்தியின்  மீதான  விதுரனின் நுண்ணிய  காதலும் அவள்  வளர்ப்பு அன்னையான  தேவவதியிடம் அவள் அதனை கூர்மையுடன் வெளிப்படுத்தும்  விதமும்  எதற்கும்  நடுங்காதவளாக குந்தியை விரித்தெடுகின்றன. பாண்டுவை அவள் அன்னையெனவே அணுகுகிறாள். உடற்குறையால் அவன் சூடிக் கொண்டு வேடத்துக்கு  அப்பால் அவனை கண்டு கொள்கிறாள்.


திருதராஷ்டிரனின் உலகில்  முழுதாய்  நுழைந்து விட கண்களை கட்டிக் கொள்கிறாள் காந்தாரி. அவள்  அரசியல் நுட்பங்களும் அச்செயலினூடாக கரைகின்றன. குஹ்யமாசனம் எனும்  தடாகத்தில்  குந்தி தன் முகத்தை  காணும்  போது அதில்  அவள் காணாத  வஞ்சம்  நிறைந்த காந்தாரியின் கண்களை காண்கிறாள் எனும்  சித்தரிப்பே அஸ்தினபுரியை மையமாக்கி குந்தியும் காந்தாரியும் நிகழ்த்தும்  ஆடலாக மழைப்பாடலை மாற்றுகின்றன. சகுனி ஒரு பக்கமும்  விதுரன்  மறு பக்கமும்  நின்று  அவ்வாடலை நிகழ்த்துகின்றனர். 


அம்பிகையும்  அம்பாலிகையும்  தொடங்கி வைத்த எளிய அச்சங்களால் ஆன சிக்கலே பெரும்  வஞ்சங்களாக வளர்கிறது. திருதராஷ்டிரன் மணிமுடி சூட முடியாமல்  அச்செய்தியை திருதராஷ்டிரனிடம் தெரிவித்து பாண்டுவை மன்னனாக்கும் இடத்தில்  அவன் கூர்மதியும் தற்செயல்களை கையாளும்  திறனும்  அவன் அண்ணன்  மீதான  நம்பிக்கையும்  வெளிப்படுகிறது. காந்தார  குடிகள்  நகர் நுழையும்  போதும்  விதுரன்  அதையே செய்கிறான். அரியணை ஏற்று மாத்ரியை மணந்த பின் பாண்டு அவர்களுடன் வனம்  நோக்கிச் செல்கிறான்.


துரியோதனனின் பிறப்பு கலியுகத்தின் பிறப்புடன் இணைத்து சொல்லப்படுகிறது. குந்தி பாண்டுவிடம் தனக்கொரு மகனிருப்பதை சொல்கிறாள். அவன் இச்சையை ஏற்று மற்ற மகவுகளையும் பிறப்பிக்கிறாள். பாண்டவர்கள்  ஒவ்வொருவரின் பிறப்பும் ஒரு பருவத்துடனும் தெய்வத்துடனும் மிருகத்துடனும் இணைத்து சொல்லப்படுகிறது. அவர்களுடைய  உயிரியல்  தந்தைகளையும் நேரடியாக அறிவிக்காமல்  கோடிட்டுச் செல்கிறது மழைப்பாடல். 


தந்தையென்ற முழுமையை உணர்ந்த பின் பாண்டு  இறக்கிறான். மாத்ரியும் அவனுடன் சிதையேறுகிறாள். அதுவரை  நிகழ்ந்தவை பொருளற்றுப் போக அம்பாலிகையை அழைத்துக்  கொண்டு  காடேகுகின்றனர் சத்யவதியும் அம்பிகையும். 


முதல் முறை படித்தபோது மழைப்பாடல் அதிர்ச்சியூட்டவதாகவே இருந்தது. பல்வேறு திசைகளில் நகர்வதாகவும் தெரிந்தது. மறு வாசிப்பின் போதே மழைப்பாடலின் இறுக்கமான மொழி நடையினுள் இயல்பாக நுழைந்து கொள்ள முடிந்தது. பருவநிலை தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. திருதராஷ்டிரனின் அரியணை ஏற்பு நிகழ்வு பெரு மழைக்குப்பின் ஒருங்குகிறது. காந்தாரி அஸ்தினபுரி நுழைவதற்கு முன் கடும் வெயிலும் குந்தி மார்த்திகாவதி நீங்குவது வரை பெரும் மழையும் துரியோதனன் பிறப்புக்கு முன் வெயிலும் இறுதியாக சத்யவதி தன் மருகிகளுடன் வனம் புகும்போது மழை பெய்யத் தொடங்குவதுடன் மழைப்பாடல் முடிகிறது.


கரவும் கூர்மையும் நிறைந்த நுண்மையான அரசியலாடல்கள் குந்தியாலும் விதுரனாலும் சகுனியாலும் முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில் அவர்களின் உயரத்தை நினைவுறுத்தும் விதமாய் விதுரனிடம் அம்பிகையும் குந்தியிடம் அம்பாலிகையும் சகுனியிடம் அவன் சகோதரிகளும் நடந்து கொள்கின்றனர். 


ஷத்ரிய தர்மங்களும் நியதிகளும் அன்றைய ஆட்சியதிகாரத்தை எவ்வாறு முன்னெடுத்தன என்பதையும் மழைப்பாடல் சொல்லிச்செல்கிறது. சிவை சம்படை என கைவிடப்பட்ட பெண்கள் மழைப்பாடலிலும் தொடர்கின்றனர். 


ஒரு யுகத்தின் தொடக்கம் என்பது மனநிலைகளிலும் நியதிகளிலும் ஏற்படும் மாற்றமே. அதனை பல்வேறு விசைகள் கட்டுப்படுத்துகின்றன. மையமும் விளிம்பும் போரிடுகிறது. மையமாக தொல் குடி ஷத்ரியர்களும் விளிம்பாக புதிதாக எழுந்து வரும் அரசுகளும் மோதப்போகும் பெரு நிகழ்வின் களம் ஒருங்கும் சித்திரத்தை மழைப்பாடல் அளிக்கிறது. ஒரு தலைமுறையினர் தங்களை கனவுகளை விடுத்து வனம் நுழைகின்றனர். அக்கனவுகளின் உச்சத்தை அடுத்த தலைமுறை ஏற்று வனத்தில் இருந்து மீள்கிறது. மத்திய மற்றும் வட இந்திய நிலப்பரப்பின் பல்வேறு உட்கூறுகளையும் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வியலையும் முழுமையாகவே தொட்டுச் செல்லும் அதே நேரம் அன்றிலிருந்து இன்றுவரை நீளும் ஒரு தொடர்ச்சியையும் அளிக்கிறது. 


தொன்மங்களை கதை நகர்வுடன் இணைத்து விவரித்துக் கொள்ளும் பயிற்சியை முதற்கனல் அளித்திருந்தாலும் மழைப்பாடல் மேலு‌ம் சிக்கலான பரிணாமம் கொண்ட தொன்மங்களைக் கொண்டுள்ளது. அதேநேரம் அவற்றை இணைத்துக் கொள்ள முடியாததும் வாசிப்பிற்கு தடையாக இருக்காது என்றே எண்ணுகிறேன். மேலும் பல அத்தியாயங்கள் தொடங்கும் இடத்திலிருந்து பல்வேறு நிகழ்வுகளினூடாக பயணித்து மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்து நிற்கின்றன. எக்குறிப்புகளும் இல்லாமல் அத்தியாயத்தின் திசை மாறுவதையும் மீண்டும் வந்து இணைந்து  கொள்வதையும் துல்லியமாக பிரித்தறிய முடிகிறது.


மழைப்பாடலில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் கை நீட்டினால் தொட்டுவிடக்கூடிய தூரத்தில் நின்று புன்னகைக்கின்றனர். ஆவலும் அச்சமும் மேலிட நானும் புன்னகைக்கிறேன்.


(2017ல் எழுதிய கட்டுரை)

நூல் மூன்று - வண்ணக்கடல்


நம் ஒவ்வொருவரின் முடிவுகளின் மீதும் வரலாறு தனக்கான ஒரு முடிவினை கொண்டிருக்கும் போலும். ஆனால் வரலாறு என்பதென்ன? ஒரு சொல். அதன் மீது ஏற்றப்படும் அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. சிலவற்றை மறக்கிறோம். சிலவற்றை மறு கண்டுபிடிப்பு செய்கிறோம். அக்கணத்தில் வாழ்ந்து விடும் உரம் பெற்றவர்களால் சொல்லப்படும் வரலாறே வண்ணக்கடல். சூதர்களின் ஒளிமிக்க சொற்கள் வழியாக உயிர்பெற்று வருகின்றது ஒரு இந்திய சித்திரம். ஆரியவர்த்தம் என்றழைக்கப்பட்ட கங்கைக் கரையமைந்த நிலப்பகுதியின் அரசியல் களத்தினை இதற்கு முந்தைய நூலான மழைப்பாடல் அறிமுகம் செய்திருக்கும். அதிகாரத்திற்கே உரிய இறுக்கமும் தெளிவும் கொண்ட படைப்பது. அக்களம் தெளிவாக வரையப்பட்ட பின் களத்தில் நிற்கப் போகிறவர்களின் இளம் பருவத்தை விவரிக்கிறது வண்ணக்கடல்.


ஏழ்பனை நாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் மூதூர் மதுரையிலிருந்து அஸ்தினபுரி நோக்கி பயணிக்கிறான். இளநாகனாக நின்று இப்படைப்பை அணுகுவதே உகந்தது என்பது என் எண்ணம். முதல் முறை படித்தபோது பல இடங்களை கடக்க முடியாமல் இணைத்துக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டதற்கு இந்த முடிவினை எடுக்காததே காரணம் என நினைக்கிறேன். வரைமுறை அறியாத பரிசில் அளிக்கும் ஒரு நிலக்கிழாரை "வஞ்சமாக புகழ்ந்து" அதை அவர் அறிவதற்கு முன்னே அங்கிருந்து புறப்படுகிறான் இளநாகன். சொல்லினை மட்டும் துணையெனக் கொண்டு மதுரை முதூரை அடைகிறான். வடபுல சூதர்களையும் கூத்தர்களையும் சந்திப்பதன் வழியாக அஸ்தினபுரியின் சித்திரம் விரிகிறது. 


சதசிருங்கத்திலிருந்து குந்தி பாண்டவர்களுடன் அஸ்தினபுரி மீள்கிறாள். பூச்சிகளால் ஆனதாக சகதேவனின் பாதையும் மரங்களால் ஆனதாக நகுலனின் பாதையும் பறவைகளால் ஆனதாக அர்ஜுனனின் பாதையும் மிருகங்களால் ஆனதாக பீமனின் பாதையும் சொற்களால் ஆனதாக தருமனின் பாதையும் விரிகையிலேயே அவர்களின் குணநலன்கள் முழுமையாக விரிந்து விடுகின்றன. பீமனும் துரியோதனனும் தங்கள் உடல் மூலமாகவே மற்றவரை கண்டு கொள்கின்றனர். ஆணவம் நிறைந்தவர்களின் பேரன்பு அவ்வாணவம் சீண்டப்படுகையில் எழும் பெருவஞ்சமுமாக பீமனின் மீதான துரியோதனனின் அன்பு உருமாற்றம் கொள்கிறது. இந்தியாவின் தத்துவ தரிசனங்களை அவற்றின் உச்ச நிலை விவாதங்களை சூதர்கள் வழியே அறிகிறான் இளநாகன். மனிதர்களின் முடிவுகளின் மேல் வரலாறும் தத்துவமும் குலமும் குடும்பமும் குருதியும் கொள்ளும் மேலாதிக்கம் திகைக்கச் செய்கிறது. சைலஜமித்ரரின் வழியாக சாங்கியத்தை அறிகிறான் இளநாகன். பாண்டவ கௌரவர்களின் சந்திப்பு அங்கே நிகழ்கிறது. கௌசிக குலத்து கூத்தரான காரகன் வாலியையும் சுக்ரீவனையும் கொண்டு நிகழ்த்தும் அங்கத நாடகம் நுண்மையான நகைச்சுவைகள் நிறைந்திருக்கிறது. அக்கதை வழியாகவே பீமதுரியோதனர்களின் நட்பு வெளிப்படுகிறது. தார்க்கிக மரபுக் கூத்தரான காரகரின் சொற்களின் வழியே சௌனகரின் விழிகளில் பாண்டவ கௌரவர்களுக்கு இடையேயான வஞ்சத்தின் முதல் துளி விழும் அத்தியாயம் பிழை நோக்கி நிற்கும் மனதை தட்டி எழுப்பி அமரச் செய்கிறது.


சிவயோக மரபினரின் சிலிர்ப்பும் அச்சமும் கொள்ள வைக்கும் வெறியாட்டினை கண்ட பின் கீகடரை சந்திக்கிறான் இளநாகன். அதற்குள் அவன் புகார் காஞ்சியின் வழியாக தமிழ்நிலத்தை கடந்து விடுகிறான். சென்னியம்மை அளித்த பழைய சோற்றை உண்டபின் வீரகுந்தலன் எனும் மன்னனிடம் கீகடர் உரைக்கும் பாடல் நகைப்பை வரவழைத்தாலும் அது வரலாற்றின் நோக்கிய சிரிப்பாகவே மாறி நிற்கிறது. 


பிருகு பிராமணர்களுக்கும் யாதவ குலத்து ஹேகயர்களுக்குமான தலைமுறை பழி துரியோதனனின் வந்து முடிவடைவது போலத் தோன்றினாலும் அது துரோணர் வரைத் தொடர்கிறது. ஹ்ருதாஜி எனும் வேடர் குலப்பெண்ணில் பரத்வாஜ முனிவருக்கு பிறக்கிறான் துரோணன். அவனை வளர்க்கும் விடூகரால் அக்னிவேச குரு குலத்தில் சேர்கிறான். "வில் என்பது ஒரு புல்" என்பதில் தொடங்குகிறது அவன் அறிதல். தர்ப்பை அவனுடன் என்றும் இருக்கிறது. அவன் அடையாளமாக அவன் விடுதலையாக. புறக்கணிக்கப்படும் திறமையாளனுள் எழும் ஏளமும் கடுமையும் துரோணனில் கூடுகிறது. தனுர்வேத ஞானி சரத்வானின் மகள் கிருபியை மணந்து அமைகிறான். தன்னுள் காயத்ரி உச்சரிக்கும் பிராமணனை உதறாமல் அதே நேரம் ஷாத்ர குணத்தையும் இழக்க விரும்பால் துரோணருள் எழும் தத்தளிப்பே வஞ்சமாக அவருள் நிறைகிறது.


இந்திரவிழாவில் அர்ஜுனன் தன் தனிமையை உணர்கிறான். புகழும் மக்கள் திரளை கடந்து அத்தனை பேருக்குள்ளும் ஊறும் அவனை வென்று செல்லும் விழைவை காணும் போதே அவன் முதிர்ந்து விடுகிறான். நஞ்சூட்டப்பட்டு கங்கையில் எறியப்பட்டு பாதாளத்தின் கொடுநஞ்சை அருந்தி வெளிவரும் பீமனின் அத்தியாயம் அவனை வகுத்து விடுகிறது. காடுகளுக்குள் அலையும் கசப்பூறியவனாக அக்கசப்பினாலேயே பெரும் கருணை நிறைந்தவனாக மாறுகிறான். அடுமனையில் மந்தரரிடம் அவன் அர்ஜுனனை அமர வைத்து பாடம் கேட்கும் போது அவன் உள்ளம் வெளிப்படுகிறது.


இந்தியாவின் வணிக முறைகளையும் விரிவாக அறிமுகம் செய்கிறது நெற்குவை நகர் பகுதி. அர்க்கபுரியில் இளநாகன் சூரியனை அறிமுகம் செய்து கொள்வதோடு தொடங்குகிறது கர்ணனின் அத்தியாயம். மன்னனின் பாதுகைகளில வைத்து வழங்கப்படும் தங்க மோதிரத்தை ஏழைத்தாய் ஒருத்திக்கு அளிக்கிறான். இயற்கையின் பெரு நிகழ்வுகளை விண்ணக தேவர்களோடு ஒப்பிட்டு விரித்தெடுக்கப்படும் கதைகள் மேலும் துலக்கம் பெறுகின்றன. துருபதனால் அவமதிக்கப்பட்டு வெளியேறும் துரோணர் புல் மீது விழுகையில் குசையெனும் பேரன்னையின் உருவகம் அத்தகைய ஒன்று. அது போலவே சஹஸ்ரபாகுவான இருளுடன் கர்ணன் சண்டையிடுவதும்  புலரியில் சூரியனை காண்பதும் விவரிக்கப்படுகிறது. அங்க மன்னனை எதிர்க்கும் இடத்தினில் பெரு வீரனாக வெளிப்பட்டு பீமன் உமிழும் போது குன்றிப் போகிறான். அர்ஜுனனை எதிர்க்கும் இடத்தினில் அவமானப்பட்டு வெளியேறும் கர்ணன் துரோணரில் வெளிப்படும் சீற்றம் வெவ்வேறு விதமாக பொருளளிக்கிறது. 


"வில் என்பது ஒரு சொல்" என்பதில் தொடங்குகிறது அர்ஜுனனின் அறிதல்.அஸ்வத்தாமனுக்கும் அர்ஜுனனுக்குமான பகையை துரோணர் அஞ்சி அர்ஜுனனிடம் வாக்கு பெற்று அர்ஜுனனை முதல் மாணவனாக அறிவிக்கும் இடத்தில் அர்ஜுனன் வெறுமையையே உணர்கிறான். நிறைவற்ற பெரு வீரனுக்கான கீதை அப்போதே உருக்கொள்ளத் தொடங்கி விடுகிறது போலும்.


அருகநெறியினர் அறைசாலை அமைத்து சமணத்தின் முதல் ஐந்து படிவர்களை வழிபடும் சித்திரத்தையும் இளநாகன் காண்கிறான்.  ஆசுர நாடுகளை அடையும் போது ஒரு தலைகீழ் வரலாறு விரிகிறது. மாபலியும் இரண்யனினும் அணுக்கமாகின்றனர். இரண்யனுக்கும் பிரஹலாதனுக்குமான விவாதங்கள் ஜடவாதம் பிரம்மத்துடன் நிகழ்த்தும் விவாதமாக சித்தரிப்பது இன்றைய பொருள்முதல் வாத கருத்துமுதல் வாத சித்தாதங்களுடன் பொருந்துகிறது. அசுர குலத்தின் கதைகளுடன் அறிமுகமாகிறான் ஏகலவ்யன். துரோணர் அவனிடம் கட்டை விரலை கோரும் இடத்தினில் அவன் அன்னை சுவர்ணை கழுத்தறுத்து விழும் இடத்தில் மனம் திகைத்து நின்று விடுகிறது. ஏதாவது ஒரு வழியை கண்டறிந்து ஒழுகி விடத் துடிக்கும் நீரோடை போல மனம் யார் மீதாவது பழி சுமத்தி தப்பிக்க நினைக்கிறது. நான்கு விரல்களால் தன் குலத்தவர்க்கு அம்பெய்ய கற்றுக் கொடுக்கும் ஏகலவ்யனை எண்ணும் போது மனம் மெல்லிய அமைதியை உணர்கிறது. 


இளநாகன் அஸ்தினபுரியை நெருங்க நெருங்க கதை நகர்வின் போக்கும் தெளிவடைந்தபடியே உள்ளது. அரங்கேற்ற நிகழ்வில் அர்ஜுனனை எதிர்க்கும் கர்ணனுக்கு மணிமுடி சூட்டப்படுவதோ வண்ணக்கடல் நிறைவுகிறது.


அசுரர்கள் குறித்தும் நிஷாதர்கள் குறித்தும் வண்ணக்கடல் அளிக்கும் சித்திரம் புதுமையானது. பெருவிழைவாலும் பெருஞ்சினத்தாலும் உந்தப்படுகிறவர்களாக விவரிக்கப்படும் அசுரர்கள் ஒரு குலம் என்பதைக் கடந்து அசுரனாக தன்னை உணர்வது வலிமையின் எல்லை என்ற எண்ணத்தையும் விதைக்கிறது.


வண்ணக்கடலின் தொடக்கம் முதலே தேர்ந்த நகையாடல்களும் அவற்றினூடாக கூரிய வினாக்களும் எழுந்தவண்ணமே உள்ளன. மொழியிலும் நுண்ணிய வேறுபாடுகள் தெரிகின்றன. மதுரை மூதூரின் மொழியும் கலிங்கத்தின் மொழியையும் ஒப்பு நோக்கும் போது தொடங்கிய இடத்திலிருந்து வெகுதூரம் கடந்து வந்துவிட்ட உணர்வேற்படுகிறது. தொன்மங்களும் தத்துவ விளக்கங்களும் மனித மனத்தோடு கொள்ளும் உறவுகளை உணர முடிகிறது. துரோணரின் வழியாக வெளிப்படும் தனுர்வேத சொற்களும் குதிரையேற்றத்தின் போதும் யானை ஏற்றத்தின் போதும் அவரின் வெளிப்பாடுகளும் தனியே எழுதப்பட்டு விவாதிக்கப்பட வேண்டியவை. புல்லின் தழல் என்ற குறு நாவலாக துரோணரின் அத்தியாயங்கள் மட்டும் தனித்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் மகாபாரதத்தை பொதுவாக அறிந்திருப்பதால் பின்வரும் நாட்களில் நடைபெற இருப்பவையோடு வண்ணக்கடல் கொண்டிருக்கும் தொடர்பினை உணர்ந்தறிய முடியும். அஸ்வத்தாமன் எனும் யானை அர்ஜுனனுள் விதைக்கும் அலைகழிப்பும் துருபதன் முன் துரோணர் வெகுண்டு நிற்பதும் அத்தகைய தருணங்கள். முழுக்கவே கலைஞர்களின் சொல்லில் நிற்பதால் வண்ணக்கடலின் வாசிப்பனுபவம் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. அதேநேரம் ஆழமான உள்ளோட்டங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் நுண்தகவல்களை மேலு‌ம் நெருங்க பாரதவர்ஷம் குறித்து மேலும் அறிய வேண்டும். மற்றொரு மறு வாசிப்பினை கோரும் நூலாக நிற்கிறது வண்ணக்கடல்.


(2017ல் எழுதிய கட்டுரை)

Tuesday 21 July 2020

பிம்பச்சிறை - சில குறிப்புகள்

எம் எஸ் எஸ் பாண்டியனின் பிம்பச்சிறை என்கிற நூலை வாசித்தேன். எம் ஜி ஆர் இறந்த சில வருடங்களில் எழுதப்பட்ட இந்த நூல் எம் ஜி ஆர் என்ற 'பிம்பம்' எப்படி மக்கள் மனதை வெற்றிக் கொண்டு எம் ஜி ராமச்சந்திரனை பதினோரு ஆண்டுகள் வெல்ல முடியாதவராக ஆட்சியில் அமர்த்தியிருந்தது என்பதை புரிந்து கொள்ள முயல்கிறது. எம் ஜி ராமச்சந்திரன் இறந்த சில வருடங்களில் எழுதப்பட்டதாலோ என்னவோ இந்த நூலில் சில உற்சாகமான முன்முடிவுகள் தென்படுகின்றன. முப்பத்தோரு அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலின் தொடக்க அத்தியாயங்கள் சில எம் ஜி ராமச்சந்திரனின் பதினோரு ஆண்டுகால ஆட்சி ஏன் தமிழகத்தின் 'இருண்ட காலம்' என்பதை சில தரவுகளின் அடிப்படையில் சொல்கின்றன. அந்த இருண்ட காலம் அடித்தட்டு மக்களுக்கு தீமை விளைவித்திருக்கிறது. ஆனாலும் அடித்தட்டு மக்கள் ஏன் எம்ஜிஆருக்கு அவர் இறக்கும் வரை - இறந்த பிறகும் கூட - ஏன் விசுவாசமாக இருந்தனர் என்பதை விளக்க முயல்கிறது.

எம்ஜிஆர் என்ற பிம்பம் மக்கள் மனதில் எப்படி வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என்பதை விளக்குவதில் எடுத்துக்கொண்ட சிரத்தையை ஆசிரியர் எம்ஜிஆர் ஆட்சியின் பாதகங்களை(?) சுட்டுவதில் செலுத்தவில்லையோ என்று தோன்றுகிறது. ஒருவேளை எம் எஸ் எஸ் பாண்டியன் இந்த நூலில் கரிசனத்துடன் நோக்கியிருக்கும் 'அடித்தட்டு' மக்களை இன்னும் கொஞ்சம் இறங்கி வந்து புரிந்து கொண்டிருந்தால் எம்ஜிஆர் இறந்த பிறகும் அஇஅதிமுக எப்படி பதினைந்து வருடங்கள் ஆட்சியில் இருக்கிறது - இன்னும் இருக்கிறது - என்பதை விளங்கிக் கொள்ள ஏதுவாக இருந்திருக்கும்.


முன்முடிவு என்று நான் சொன்னதை இரண்டாக பகுத்துக் கொள்கிறேன். எம்ஜிஆர் ஆண்ட பதினோரு ஆண்டுகள் இருண்ட காலம் என்ற சந்தேகத்து அப்பாற்பட்ட முன்முடிவு ஒருபுறம். மற்றொருபுறம் அடித்தட்டு மக்கள் என்பவர்கள் எளிதாக மயங்கக்கூடியவர்கள். (நடுத்தட்டோ உயர்தட்டோ இப்படி மயங்காது என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை). இந்த முன்முடிவுகளுடன் எம்ஜிஆரை என்ற பிம்பத்தை மட்டுமே கூர்ந்து கிழித்துச் செல்லும் இந்த நூல் இன்னும் பத்து வருடங்கள் கழித்து எழுதப்பட்டிருந்தால் ரஜினியையும் இருபது வருடங்கள் கழித்து எழுதப்பட்டிருந்தால் விஜயையும் கூட இப்படி பகுப்பாய்வு செய்திருக்கும். உலகம் முழுக்க வணிக சினிமாவின் வழி புகழ்பெற்ற கதாநாயகர்கள் அனைவருக்குமே இந்த பகுப்பாய்வை பொருத்திப் பார்க்க முடியும். அடித்தட்டு மக்களிடம் எம்ஜிஆருக்கு இருந்த செல்வாக்கு திரைபிம்பம் மற்றும் போலி வரலாறுகளால் மட்டுமே ஆனது என்று நிறுவும் இந்த நூலை முப்பது வருடங்களில் அடித்தட்டினரின் எண்ணிக்கை குறைந்து போலி வரலாறுகளின் எண்ணிக்கை அதிகரித்து இந்த காலத்தில் இருந்து பார்க்கும்போது மிகை உற்சாகத்தில் எழுதப்பட்ட நூல் என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

நான் சிறுவனாக இருக்கும்போது 'திமுகவுக்கு ஓட்டு போடுறவன் எல்லாம் படித்தவன் அதிமுகவுக்கு ஓட்டு போடுறவன் எல்லாம் எம்ஜிஆர் ரசிகன்' என்ற கூற்று ஊரில் நிலவும். இதுபோன்றதொரு மேம்போக்கான ஒரு கூற்றாக மட்டுமே பிம்பச்சிறை என்ற இந்த நூலை பார்க்கலாம்.

இதுபோன்ற கூற்றுகள் எப்படி உருவாகின்றன?

இவை ஒரு வகையான அறிவுஜீவி பாவனை என்று எனக்குத் தோன்றுகிறது. வெகுஜனத்தின் ரசனைகள் மீதும் அபிலாஷைகள் மீதும் ஒரு அறிவுஜீவிக்கு ஒவ்வாமை இருப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. அறிவுஜீவியின் செயற்களம் 'வெகுஜனமாக' இருக்கும் வரை அறிவுஜீவி அந்த ஒவ்வாமையை பேணிக் கொள்வதில் சிக்கல் இல்லை. ஆனால் வெகுஜனத்தை புரிந்து கொள்ள முயலும்போது அறிவுஜீவி தன் ஒவ்வாமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு திறந்த மனதுடன் வெகுஜனத்தை அணுக வேண்டும். அப்படி அணுகும்போது மட்டுமே அதன் செல்திசையை ஓரளவு நெருங்கி ஊகிக்க முடியும். பாண்டியனின் இந்த நூல் தன் பீடத்தை விட்டு ஒரு படியும் இறங்காமல் வெகுஜனத்தின் மீது தீர்ப்பெழுதுகிறது. நுண்ணுணர்வு கொண்ட ஒரு அறிவுஜீவி பிம்பக் கட்டமைப்பு என்ற செயலில் யார் பிம்பமாகிறாரோ(இங்கு எம்ஜிஆர்) அவர் மட்டுமின்றி யாருக்காக (அடித்தட்டு) அந்த பிம்பம் உருவாகிறதோ அவர்களும் பங்கேற்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்வார். இந்த கவனம் ஒரு வகையில் பின்நவீனத்துவத்துடன் தொடர்புடையது.

இன்றும் நம்முடைய அறிவுஜீவிகளில் பலர் இந்த பின்நவீனத்துவ சிந்தனை போக்குக்கு வந்து சேரவில்லை என்பதை அவர்கள் ஒரு அசைவியக்கத்தை அணுகும் விதத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அந்த புரிதலின்மைக்கான உதாரணமாக பாண்டியனின் இந்த நூலைச் சொல்லலாம். பாண்டியன் எம்ஜிஆர் என்ற பிம்பத்தை ஒரு இடைச்செருகலாக சதிக்கோட்பாடாக மட்டுமே காண்கிறார். இவற்றைக் கடந்து பிம்பங்களும் கடவுள்களும் மதங்களும் தீர்க்கதரிசிகளும் லட்சியவாதிகளும் எதிரிகளும் லட்சியங்களும் மக்களுக்கு ஏன் தேவைப்படுகின்றன என்பதை விளங்கிக்கொள்ள முயல்வதில் இருந்தே உண்மையான சமூக அவதானங்கள் தொடங்க இயலும்.

Sunday 19 July 2020

வெண்முரசு நாவல் வரிசை - அறிமுகக் குறிப்புகள்

எழுத்தாளர் ஜெயமோகன் மகாபாரதத்தை முழுமையாக மறு ஆக்கம் செய்து எழுதிய நாவல் வெண்முரசு. இருபத்தாறு தனித்தனி நாவல்களாக எழுதப்பட்டுள்ள வெண்முரசை இணைத்து ஒரே நாவலாகவும் வாசிக்க இயலும். ஜனவரி 1, 2014 முதல் வெளிவரத்தொடங்கிய வெண்முரசு ஜூலை 16, 2020ல் முடிந்திருக்கிறது. இந்த நாவல் வரிசையை www.jeyamohan.in மற்றும் www.venmurasu.in ஆகிய தளங்களில் வாசிக்கலாம்.  அனைத்து நாவல்களும் கிண்டிலும் கிடைக்கின்றன. (வெண்முரசு நாவல்களை கிண்டிலில் வாங்குவதற்கான சுட்டி  - https://amzn.in/dFTj7xN/)

வெண்முரசு நாவல்களை வாசிக்க விரும்பும் வாசகர்களுக்காக ஒவ்வொரு நாவலிலும் நிகழும் மைய நிகழ்ச்சிகள் குறிப்புகளாக கீழே தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிநாவலும் தன்னளவில் பல்வேறு வடிவப்புதுமைகளைக் கொண்டிருந்தாலும் வெண்முரசை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அதிலொரு நேர்க்கோட்டுத் தன்மை இருப்பதைக் காண முடிகிறது.




நூல் ஒன்று - முதற்கனல் 


அஸ்தினபுரியின் அரசனாக பொறுப்பேற்கவிருக்கும் விசித்திரவீரியனுக்காக காசிநாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரையும் பீஷ்மர் சிறையெடுத்து வருகிறார். விசித்திரவீரியனின் இறப்பும், பீஷ்மரை அம்பை சபிப்பதும், அம்பிகைக்கு திருதராஷ்டிரரும், அம்பாலிகைக்கு பாண்டுவும் பிறப்பது வரையிலான நிகழ்வுகள் நாவலில் இடம்பெறுகின்றன.


நூல் இரண்டு - மழைப்பாடல் 


திருதராஷ்டிரர் காந்தாரியை மணமுடிப்பதும் குந்தி பாண்டுவை மணப்பதும் இந்த நாவலில் இடம்பெறுகின்றன. பாண்டுவை மணப்பதற்கு முன் குந்திக்கு கர்ணன் பிறப்பதும் மணமுடித்த பிறகு குந்திக்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் பிறப்பதும் மாத்ரிக்கு நகுல சகதேவர்கள் பிறப்பதும் திருதராஷ்டிரருக்கு துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் பிறப்பதும் நாவலில் வருகின்றன. பாண்டுவுடன் வனவாசம் சென்ற குந்தி சிறுவர்களான பாண்டவர்களை அழைதுதுக் கொண்டு அஸ்தினபுரி வருவதுடன் இந்நாவல் நிறைவுபெறுகிறது.


நூல் மூன்று - வண்ணக்கடல்


பாண்டவர்களின் கௌரவர்களின் இளமைக்காலத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது. துரோணரை துருபதன் வஞ்சிக்கிறார். துரோணர் அர்ஜுனனுக்கு ஆசிரியராவதும் கௌரவர்கள் பீமனுக்கு நஞ்சூட்டுவதும் நிகழ்கின்றன. இந்த நாவல் இளநாகன் என்ற தமிழகப் பாணனின் வழியாக சொல்லப்படுகிறது.


நூல் நான்கு - நீலம்


நீலம் மகாபாரத வரிசையில் இருந்து விலகி பாகவத மறு ஆக்கமாக அமைகிறது. கிருஷ்ணனின் இளமைக் காலத்தை ராதையின் வழியாகச் சொல்கிறது. கவித்துமான நடை கொண்ட ஆக்கம்.


நூல் ஐந்து - பிரயாகை


துரோணரின் ஆணைக்கிணங்க பாண்டவர்களும் கௌரவர்களும் துருபதனை வென்று சிறைபிடிக்கின்றனர். கிருஷ்ணன் தன் நாட்டினை மீட்க தன் அத்தையான குந்தியிடம் உதவி கேட்டு வருகிறான்.துருபதன் தவம் இயற்றி திரௌபதியை பெறுகிறார். பாண்டவர்களை எரித்துக்கொல்ல வாரணவதத்தில் கௌரவர்கள் அரக்கு மாளிகை அமைக்கின்றனர். அங்கிருந்து தப்பும் பாண்டவர்கள் இடும்பவனத்திற்கு செல்கின்றனர். அங்கு பீமன் இடும்பியை மணக்கிறான். திரௌபதியை பாண்டவர்கள் மணமுடிப்பதுடன் பிரயாகை நிறைவுறுகிறது.


நூல் ஆறு - வெண்முகில் நகரம் 


பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பகை முற்றுகிறது. அவர்களுக்கு இடையேயான பிரிவினை முற்றி இந்திரபிரஸ்தம் என்ற நகரை பாண்டவர்கள் அமைக்கின்றனர். கிருஷ்ணனின் துவாரகையையும் இந்த நாவல் விவரித்துச் செல்கிறது. 


நூல் ஏழு - இந்திரநீலம் 


இந்நாவலும் மகாபாரதத்தின் மையக் கதையில் இருந்து விலகி கிருஷ்ணன் மணமுடிக்கும் அரசிகள் வழியாக நகர்கிறது. 


நூல் எட்டு - காண்டீபம்


இந்திரபிரஸ்தம் அமைக்கப்பட்ட பிறகு அர்ஜுனன் யாத்திரை புறப்படுவதை இந்நாவல் விவரிக்கிறது. உலூபி, சித்ராங்கதை ஆகியோரை அர்ஜுனன் மணப்பதை சித்தரிக்கும் இந்த நாவல் கிருஷ்ணனின் தங்கையான சுபத்திரையை மணப்பதுடன் நிறைவடைகிறது. சமண சமயத்தின் தோற்றம் குறித்த சித்தரிப்புகள் நாவலில் உள்ளன.


நூல் ஒன்பது - வெய்யோன்


கர்ணனின் அங்க தேசத்தையும் அவன் மனைவியருடனான அவள் வாழ்வு குறித்தும் இந்நாவல் பேசுகிறது. துரியோதனன் இந்திரபிரஸ்தத்தின் பளிங்கு மாளிகையில் தடுமாற்றம் கொள்வதும் அவன் பாண்டவர்களின் மீது வஞ்சம் கொள்வதும் இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன.


நூல் பத்து - பன்னிரு படைக்களம் 


சேதிநாட்டு அரசன் சிசுபாலன் கிருஷ்ணனனாலும், மகதத்தின் அரசான் ஜராசந்தன் பீமனாலும் கொல்லப்படுவதை சொல்கிறது. யுதிஷ்டிரன் நாற்கள விளையாட்டில் இந்திரபிரஸ்தத்தை இழக்கிறார். திரௌபதியின் துகிலுரிதலுடன் இந்த நாவல் நிறைவு பெறுகிறது.


(வெண்முரசின் அடுத்த நாவல்களான சொல்வளர்காடு, கிராதம், மாமலர் ஆகியவை பாண்டவர்களின் கான்வாழ்க்கையையும் நீர்க்கோலம் அவர்களின் தலைமறைவு வாழ்வையும் சித்தரிக்கின்றன)


நூல் பதினொன்று - சொல்வளர்காடு 


பாண்டவர்களின் வனவாசத்தின் தொடக்கத்தைச் சொல்லும் நாவல். நச்சுப் பொய்கையில் நீரருந்தி பாண்டவர்கள் மாண்டு பிழைப்பதுடனும் யுதிஷ்டிரன் தன் மெய்மையை கண்டடைவதுடன் நாவல் முடிகிறது. 


நூல் பன்னிரண்டு - கிராதம் 


இந்திரனுக்கும் விருத்திரனுக்குமான போரினை ஒரு இழையாகவும் சைவ நெறிகளை மறு இழையாகவும் இந்த நாவல் பின்னுகிறது. அர்ஜுனன் பாசுபதத்தை அடைவதுடன் நாவல் நிறைவேறுகிறது.


நூல் பதிமூன்று - மாமலர் 


பீமன் திரௌபதிக்காக கல்யாண சௌந்திக மலரை தேடிச்செல்லும் பயணம் இந்த நாவலில் உள்ளது. இணையாக யயாதியின் கதை தேவயானி மற்றும் சர்மிஷ்டையின் வழியே சொல்லப்படுகிறது.


நூல் பதினான்கு - நீர்க்கோலம் 


பாண்டவர்களும் திரௌபதியும் விராட தேசத்தில் தலைமறைவாக வாழ்வதை இந்த நாவல் சித்தரிக்கிறது. இணையாக நளன் தமயந்தியின் கதை சொல்லப்படுகிறது.


நூல் பதினைந்து - எழுதழல் 


உப பாண்டவர்கள் மற்றும் உப கௌரவர்களைப் பற்றிய சித்தரிப்புகள் இந்த நாவலில் இடம்பெறுகின்றன. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான பகை முற்றி போரை நோக்கிச் செல்கிறது.


நூல் பதினாறு - குருதிச்சாரல் 


போரினை தடுப்பதற்காக பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ணன் துரியோதனனிடம் தூது செல்வது பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் மனைவியர் வழியே சொல்லப்படுகிறது.


நூல் பதினேழு - இமைக்கணம் 


இந்த நாவல் கீதையின் மறு ஆக்கம். மகாபாரத மாந்தர்கள் ஒவ்வொருவரின் வழியாக கீதையின் ஒவ்வொரு யோகங்களும் விவரிக்கப்படுகின்றன. கீதையைப் போலவே இந்த நாவலும் ஒரு மாயவெளியில் நடைபெறுகிறது.


நூல் பதினெட்டு - செந்நா வேங்கை 


குருஷேத்திர போர் நடைபெறுவது உறுதியான பிறகு பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் தரப்புக்கு வலு சேர்த்துக் கொள்வதற்காக ஈடுபடும் பேரங்கள் நாவலில் இடம்பெறுகின்றன. நாவலின் இறுதியில் குருஷேத்திரப்போர் தொடங்குகிறது.


நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம் 


குருஷேத்திர களத்தில் பீஷ்மர் நிகழ்த்தும் அழிவுகளும் அவரது வீழ்ச்சியும் நாவலில் இடம்பெறுகிறது.


நூல் இருபது - கார்கடல் 


துரோணரின் மரணம் வரையிலான குருக்ஷேத்திர போர் இந்த நாவலில் இடம்பெறுகிறது.


நூல் இருபத்தொன்று - இருட்கனி 


துரோணரின் மரணத்துக்குப் பிறகு கர்ணன் கௌரவரப் படைக்குத் தலைமை ஏற்பதும் கர்ணன் அர்ஜுனனால் கொல்லப்படுவது வரையிலான நிகழ்வுகளும் நாவலில் இடம்பெறுகின்றன.


நூல் இருபத்தியிரண்டு - தீயின் எடை 


இந்த நாவலுடன் பாரதப்போர் நிறைவடைகிறது. துரியோதனனின் மரணம் மற்றும் பாண்டவ மைந்தர்கள் அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனால் தீயிட்டுக் கொல்லப்படுவதில் முடிகிறது.


நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர் 


பாண்டவர்கள் இறந்துபோன கௌரவர்களுக்கும் தங்கள் மைந்தர்களுக்கும் நீர்க்கடன் செய்வது வரையிலான நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன.


நூல் இருபத்திநான்கு - களிற்றியானை நிரை 


பாரதப்போரை வென்ற பிறகு அஸ்தினபுரி மெல்ல நிலைமீள்வதையும் பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய நாடாக உருவெடுப்பதையும் இந்த நாவல் சித்தரிக்கிறது.


நூல் இருபத்தைந்து - கல்பொரு சிறுநுரை


கிருஷ்ணனின் மைந்தர்கள் தங்களுக்குள்ளாக போரிட்டுக்கொண்டு அழிவதையும் துவாரகையின் வீழ்ச்சியையும் சொல்கிறது. கிருஷ்ணனின் மரணத்துடன் நாவல் முடிகிறது.


நூல் இருபத்தியாறு - முதலாவிண் 


வெண்முரசின் இறுதி நாவல் முதலாவிண். பாண்டவர்களின் வானப்பிரஸ்தத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது.


வெண்முரசு நாவல்களை வாங்குவதற்கான சுட்டி 


https://www.jeyamohan.in/வெண்முரசு-நாவல்-வரிசை/




Sunday 5 July 2020

வெண்முரசை என்ன செய்வது?








சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த 'அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் 'நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?' என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை, அயோத்திதாசரை என நம்மிடம் புதிதாக 'கண்டெடுக்கப்பட்டு' கொடுக்கப்படும் எதையுமே நமக்கு - அதாவது தமிழர்களுக்கு - முறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை என்பதன் தொடர்ச்சியாக மேற்சொன்ன கேள்வியை முன்வைத்தார்.


வெண்முரசின் இறுதி நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு இன்று காலையும் மாலையுமாக ஜெயமோகன் வெண்முரசு வாசகர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இதை ஒட்டி தமிழ் அறிவுச்சூழலில் ஒரு மெல்லிய சலனம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சலனத்தை கவனிக்கும் போது அதனுள் இந்த நாவல் வரத்தொடங்கிய ஜனவரி 1, 2014 முதல் நாம் அதை எவ்வளவு தோல்விகரமாக எதிர்கொண்டிருக்கிறோம் என்ற காரணத்தைக் காண முடிகிறது.


முதலில் வெண்முரசு நாவல் வரிசைக்கு நவீன இலக்கியத்தில் என்ன இடம் கொடுப்பது என்ற குழப்பமும் பதற்றமும் ஏற்படுகிறது. இதுவரை தமிழில் வெளியான பல நல்ல நாவல்களை இந்த நாவல் உருவ அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் சிறுத்துப் போகச் செய்வதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தமிழின் விமரிசன மரபை பின்தொடர்ந்து ஏற்றுக்கொண்டு விவாதித்து தனக்கென ஒரு நாவல் வரிசையை ஒவ்வொரு வாசகரும் தன் மனதில் உருவாக்கி இருப்பார். அந்த வரிசையின் மீது வெண்முரசு நாவல் வரிசை ஒரு பெரும் மோதலை நிகழ்த்துகிறது. குறைந்தது வெண்முரசின் ஆறு நாவல்களை 'சிறந்த நாவல்கள்' என்று நான் நம்பும் பட்டியலுக்குள் நுழைக்க வேண்டியிருக்கிறது. (வெண்முரசின் இருபத்தைந்து நாவல்களையும் முழுமையாக வாசித்து இருக்கிறேன்) நிச்சயமாக எதிர்காலத்தில் இந்தப் பட்டியல் மாறுபாடும். ஆனால் இந்தப் பட்டியலுக்கு ஒரு இயைந்து போகும் தன்மை உண்டு. என் ரசனையை கட்டமைத்ததில் முன்னோடிகளின் ரசனைக்கும் அழகியல் தேர்வுக்கும் முக்கிய பங்கு உண்டு. போலவே தமிழ் இலக்கியத்தை விமர்சனப்பூர்வமாக அணுகும் பார்வையை கட்டமைத்ததிலும் முன்னோடிகளின் தாக்கம் நிச்சயம் இருக்கும். அத்தகைய விமர்சகர்களால் ஒரு வரிசை உருவாக்கப்படும் போது வெண்முரசு அவ்வரிசையில் பெரியதொரு இடத்தை எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.


மேற்சொன்ன அவதானிப்பு என் ரசனை சார்ந்த மிகை நம்பிக்கை என்றும் எடுத்துக் கொள்ளலாம். படைப்பு நிலைத்திருப்பதும் அழிவதும் காலத்தால் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இன்று வெண்முரசு எவ்வாறு அணுகப்படுகிறது? இரண்டு விதங்களில் பார்க்கலாம். வாசகர்கள் மத்தியில் வெண்முரசு தற்போதே புகழ்பெற்ற நாவல் வரிசையாகத்தான் விளங்குகிறது. வெண்முரசு நாவல் வரிசைக்கென வரும் கடிதங்கள் தனியொரு வலைப்பூவில் தொகுக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான கடிதங்கள் கொண்ட வலைப்பூ அது. நானும் குறைந்தது இருபது கடிதங்கள் எழுதி இருப்பேன். ஒரு வாசகனாக வெண்முரசின் செல்வாக்கை மறுப்பதற்கில்லை. ஆனால் அடுத்த படிநிலைகளில் வெண்முரசு எப்படி பார்க்கப்படுகிறது எனும்போதுதான் ஒரு குழப்பம் வருகிறது. எழுத்தாளர்கள், விமர்சகர்கள் வட்டத்தில் வெண்முரசு பெரும்பாலும் மௌனத்தையே உருவாக்கியிருக்கிறது. இந்த கனத்த மௌனத்தைத்தான் நான் சந்தேகம் கொள்கிறேன். பிரம்மாண்டமான ஆக்கங்களை எதிர்கொள்ளும் பயிற்சி நம் பண்பாட்டுச்சூழலுக்கு இல்லையோ என்று ஐயுறுகிறேன்.


முகநூல் போன்ற கருத்து சொல்லும் ஊடகங்களின் பெருக்கத்தால் வெண்முரசு குறித்து நிறைய கருத்துகள் சொல்லப்பட்டுவிட்டன. அந்த கருத்துக்களில் பெரும்பாலானவை பொருட்படுத்தத் தக்கவையாக இல்லை. காரணம் பெரும்பாலான கருத்துகள் இப்படியொரு முயற்சி உருவாக்கும் ஒரு ஆழமான அதிர்ச்சியை சிரமப்பட்டு விழுங்கிய பிறகு நூலினை வாசிக்காமலேயே சொல்லப்படும் கருத்துகள். வெண்முரசு குறித்த இத்தகைய பொருட்படுத்த அவசியமில்லாத கருத்துதிர்ப்புகளை திரட்டினால் அது வெண்முரசு நாவல் வரிசையை விட இரு மடங்கு பெரிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. 


இத்தகைய கருத்துகளின் ஊற்றுக்கண் எது? நான் அதிர்ச்சி என்றுதான் கருதுகிறேன். ஒரு மிகப்பெரிய செயல் நாம் வாழும் காலத்தில் நிகழும்போது ஏற்படும் அதிர்ச்சி. அந்த அதிர்ச்சி தான் காழ்ப்பாகவும், அரசியல் சரிநிலை சார்ந்த எதிர்ப்பாகவும் வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன். 


பொது ஊடகப் பெருக்கம் விளைவித்த இன்னொரு தீங்கு எல்லோரையும் அரசியல் நிலைப்பாடு எடுக்கச் சொல்வது. முன்பு நாமெல்லாம் ஜாதி பார்த்து பழகிக் கொண்டோம். இன்று ஜாதியின் இடத்தை அரசியல் நிலைப்பாடு எடுத்துக் கொண்டது என நினைக்கிறேன்.


'நீங்க திராவிடமா, தமிழ்தேசியமா, இந்துத்துவமா, இந்தியதேசியமா?' என்று கேட்டு நாம் பேசிக்கொள்ள நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த அரசியல் நிலைப்பாடு சார்ந்த கூச்சல்கள் தொடர்ச்சியாக வெண்முரசின் மீது வீசப்படுகிறது. அதிர்ச்சிக் கூச்சல்களுக்கு அடுத்ததாக இந்த அரசியல் கூச்சல்களை வைக்கலாம். இதற்கிடையே வெண்முரசு நாவல் வரிசைக்கு எழுதப்படும் போதே நல்ல வாசிப்புகளும் விமர்சனங்களும் வந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் படைப்புகளின் அளவையும் தரத்தையைம் வீச்சையும் ஒப்பிடும்போது விமர்சனங்கள் போதாமை நிறைந்தவைகளாகவே தெரிகின்றன.


அதிர்ச்சி மற்றும் அரசியல் நிலைப்பாடு சார்ந்த கூச்சல்களுக்கு அடுத்ததாக வெண்முரசு சார்ந்து நிலவும் மௌனம் வருகிறது. இந்த மௌனத்துடன் புழங்குவதற்கான வாய்ப்பு எனக்கு கடந்த ஐந்து வருடங்களில் கிட்டியிருக்கிறது.


ஒரு வகையில் அந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்ததுமேகூட வெண்முரசு என்றுதான் சொல்ல வேண்டும். நான் வாசித்த ஜெயமோகனின் முதல் ஆக்கம் வெண்முரசின் முதல் நூலான முதற்கனல் தான். தீவிர இலக்கியம் சார்ந்த புரிதல் இல்லாமல் அனைத்தையும் 'கொத்தாக' வாசித்துக் கொண்டிருந்த என்னை இலக்கியத்தின் பக்கம் இழுத்துவிட்டது முதற்கனல்தான். அதன் பிறகான தொடர்ச்சியான வாசிப்பு, என் எழுத்து என அனைத்திற்குமான முதல் புள்ளி என அந்த நாவலைச் சொல்லலாம்.


அதன் வழியாக தமிழிலக்கிய உலகப் பரிச்சயம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் மேற்சொன்ன இலக்கியம் குறித்து ஏதும் அறியாத கூச்சல்காரர்கள் சத்தம் போடுகிறார்கள் என்றால் இலக்கியவாதிகள் மௌனம் சாதிக்கின்றனர் என்று கண்டு கொண்டேன். இந்த மௌனத்துக்கு என்ன காரணமாக இருக்கும்? முதலில் அந்த நாவலின் பிரம்மாண்டம். எந்தவொரு இலக்கியவாதியும் சமகாலத்தை சற்று சந்தேகத்துடனேயே அணுகுவார். ஒரு சமகால நூலின் மீதான தன்னுடைய வாசிப்பு சரியாக இருக்கிறதா தான் எதையும் தவற விடுகிறோமா அல்லது பிறரால் சுமாரான ஆக்கம் என்று சொல்லப்படும் ஒன்று தன் பார்வைக்குச் சிறந்ததாகத் தெரிகிறதா என்ற வகையான ஊசலாட்டம் ஒரு இலக்கியவாதியிடம் நிரந்தரமாக இருக்கும். வெண்முரசு சார்ந்தும் அத்தகைய ஊசலாட்டம் இருக்குமானால் அது புரிந்து கொள்ளக்கூடியதே. 


ஆனால் இத்தகையதொரு நிகழ்வே இங்கு நடக்கவில்லை என்ற வகையிலான பாவனைகள் ஆபத்தானவை. ஏதோவொரு வகையில் தமிழ் இலக்கிய உலகம் வெண்முரசை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அதை எவ்வளவு விரைவாகவும் தெளிவாகவும் செய்யவிருக்கிறோம் என்பதைப் பொறுத்தே தமிழ் இலக்கியத்தில் வெண்முரசின் தாக்கம் என்ன என்பது தமிழ்ச் சூழலுக்குத் தெரியவரும்.


நான் உணரும் ஒன்று உண்டு. என்னுடன் எழுதிக் கொண்டிருக்கும் சமகால எழுத்தாளர்களில் வெண்முரசால் உந்ததுலும் உற்சாகமும் பெற்றவர்கள் பலர். சூழலில் இப்படி ஒரு பெருநிகழ்வு நடைபெறும்போது இயல்பாகவே அது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல உப நிகழ்வுகளை உருவாக்கி விடுகிறது. வெண்முரசு அப்படி நிகழ்த்தி இருப்பது என்ன என்பதை அறிவதற்கும் தமிழ் அறிவுச்சூழல் இந்த நாவல் வரிசையை நேர்மையுடன் எதிர்கொண்டாக வேண்டும். வெண்முரசு ஒரு பெரும் நூலாக தன்னுடைய நிறைவினை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அநேகமாக இந்த மாதம் முடிவடையும். அதன்பிறகாவது வெண்முரசு சார்ந்த உரையாடல்கள் தமிழ்ச்சூழலில் எழ வேண்டும். அயோத்திதாசர் போல சங்க இலக்கியம் போல வெண்முரசும் அது என்ன என்று புரிந்து கொள்ளப்படாமலேயே நம்முடைய கலைச்செல்வ கருவூலத்திற்கு அனுப்பப்பட்டுவிடக்கூடாது.

புகைப்பட உதவி: http://venmurasudiscussions.blogspot.com/2016/09/blog-post_5.html?m=1

Wednesday 24 June 2020

பரிசுப்பொருள் - சிறுகதை

பாண்டவையாற்றை குறுக்காகக் கடந்த கமலாபுரம் பாலத்தில் வெயில் விரிந்து கிடந்தது . மோனிகா பயணப்பையுடன் கமலாபுரத்தில்  இறங்கிய போது சாலையில் பரவலாக தேங்கியிருந்த மழைநீர் காலைச் சூரியன் பட்டு அவள் கண்களை கூசச் செய்தது. புறங்கையை கண்களுக்கு நேரே நீட்டிக் கொண்டு நின்று பேருந்தில் வந்ததால் ஏற்பட்ட உடற்சமநிலையின்மையை சரிபடுத்த முயன்றாள்.  கை மூட்டுகளிலும் விரல் பொருதுகளிலும் உடலிலும் மெல்லிய உலைச்சல் எடுக்க நின்றபடியே சோம்பல் முறித்தாள்.  ரொம்ப சாயக்கூடாது என்பது நினைவிற்கு வர அப்படியே நின்றுவிட்டாள். உடலில் ஒரு சமநிலையின்மை சில கணங்கள் நீடித்தது. இருந்தாலும் ஒரு  விடுதலையை உணர முடிந்தது. வெறுமையுடன் புன்னகைத்துக் கொண்டாள். அவளெதிரே வந்து நின்ற சன்ஸ்கிரீன் ஒட்டப்பட்ட ஃபார்சூனர் காரில் முகத்தைப் பார்த்தாள். சிகையை பின்னுக்குத் தள்ளி விலகியிருந்த சிறிய ஸ்டிக்கர் பொட்டினை நெற்றி நடுவே அமைத்தபோது முகம் பொலிவுற்றது. அவள் முகம் திருப்தியைக்காட்ட அதற்கெனவே நின்றிருந்தது போல அந்த ஃபார்ச்சூனர் கடந்து சென்றது.

ஓரக்கண் சற்று தூரத்தில் பழக்கப்பட்ட உடலசைவுகளை காட்டியது. சிவக்குமார் தான். சென்னையில் இருக்கிறான். அவனும் அவளும் பிரபாகரனும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். பிரபாகரன் சற்று மூத்தவன்.கனமான தன்னுடைய பயணப் பைகளை கைமாற்றி தோளுக்கு கொண்டு சென்று மீண்டும் கைக்கு மாற்றி சென்று கொண்டிருந்தான். 

அவனைப் பார்த்து புன்னகைத்தபடி நெருங்கிக் சென்று "நா வேனா தூக்கிட்டு வரவா" என்றாள் மோனிகா . திடுக்கிட்டு திரும்பியவன் சில நொடிகள் அவள் யாரெனக் குழம்பி உறுதி செய்து கொண்டு புன்னகைத்தபடி வேண்டாம் என தலையசைத்தான்.சிவக்குமாரும் சென்னையில் தான் இருக்கிறான் என உறுதிபடுத்திக் கொண்டு"அப்போ பிரபாகரன உங்களுக்குத் தெரியும்ல?" என்றாள் சற்றே தயங்கியபடி.

கமலாபுரத்தில் இருந்து இறங்கும் சாலையோரம் உள்ள சிறிய மாதா வழிபாட்டிடத்திற்கு அவர்கள் வந்துவிட்டிருந்தனர். 

"ஸ்கூல்ல ஒன்னாதான படிச்சோம். அப்ப பாத்ததுதான். அதுக்கப்புறம் மீட் பண்ண சான்ஸ் கெடக்கல" என்றான்.

காலை வெயிலின் தன்மை மாறிக் கொண்டிருந்தது. குளத்தில் பிடிக்கப்பட்ட விரா மீன்களும் சாணிக் கெண்டைகளும் பக்கத்தில் இருந்த மீன் கடையில் குவிந்து கொண்டிருந்தன. சிவக்குமார் மெலிதாக மூக்கைச் சுளித்தான்.மோனிகா சங்கடத்துடன் சிரித்தாள். அவனுடன் தொடர்ந்து பேசுவது அநாவசியம் எனப்பட்டது. இருந்தும் பிரபாவைப் பற்றி வேறு யாரிடமும் கேட்க முடியாது.

"இல்ல...நீங்க வேளச்சேரில இருக்கீங்கன்னு சொன்னாங்க..." என இழுத்தவுடன் அதைச் சொன்னது யாரென கேட்டுவிடுவானோ என பயந்தாள். ஆனால் சிவக்குமார் அப்படி கேட்கக்கூடியவன் அல்ல என்பதும் அவளுக்குத் தெரியும். எவ்வளவு நெருங்கிச் சென்று எதைக் கேட்டாலும் அதை வேறொரு கோணத்தில் பார்க்கத் தெரியாதவன். பார்க்கத் தெரியாதவன் என்பது கூட சரி கிடையாது. அப்படி பார்ப்பதைத் தவிர்ப்பவன். 

"இல்ல ஒன் இயர் முன்னாடி அங்க இருந்தேன். இப்ப அடையார்ல" என்றான்.

எப்படி இவனால் தன்னை எப்படியும் அழைக்காமல் பேச முடிகிறது என அவளுக்கு வியப்பாக இருந்தது. இந்நேரம் கொஞ்சம் அறிமுகமான வேறொருவனெனில் இப்படி வழியக்க சென்று பேசுவதற்கு ஒரு "மா" அல்லது "மோனிகா" அல்லது "மோனி" என்று தான் அழைத்திருப்பான். அது கூசச் செய்யும் அனுபவம். பெயரை பெயராக மட்டும் சொல்லி அழைப்பதில் ஆண்களுக்கு என்னதான் சங்கடம் என பலமுறை யோசித்திருக்கிறாள். ஏன் ஒரு குழைவோ உரிமையோ பெயரைச் சொல்லும் போது வரவேண்டும்?

"எனக்கு செவன் தர்ட்டிக்கு பஸ்" என அவளை சொல்லத் தூண்டினான்.

"நானும் அதுலதான் போகணும்" என்று சொல்லிவிட்டு மோனிகா நாக்கை கடித்துக் கொண்டாள்.

"பஸ்ல பேச முடியாது இப்பவே சொல்லுங்க" என்றான்.

தயங்கியபடியே "பிரபாகரனப் பாத்தா இத கொடுக்கணும்" என கைப்பையில் இருந்து வெல்வெட் உறையால் மூடப்பட்ட சற்று கனமான ஒரு பிளாஸ்டிக் டப்பாவை எடுத்தாள். கைக்கு சற்றே பெரிதாக இருந்தது அது. அது என்னவென்று கூட அவன் கேட்கவில்லை. 

அதை வாங்கியபடியே "அட்ரெஸ் தெரியுமா" என்றான்.

அவள் உதட்டை பிதுக்கினாள். அப்படி செய்திருக்கத் தேவையில்லை என ஒரு எண்ணம் குறுக்கே ஓடியது.

"அவன் நம்பர் என்ட்ட இருக்கு. நான் பேசிக்கிறேன்"என்று அவன் விலகத் தொடங்கினான். அவளுக்கு வெறிச்சென இருந்தது. சிவக்குமார் மேல் கோபம் வந்து அது தன்னிரக்கமாக மாறியது.

"எங்கூடவெல்லாம் பேசினா யாரும் தப்பாவெல்லாம் நெனக்கமாட்டாங்க" என்று சொன்னபோது அவள் குரல் பரிதாபமாக ஒலித்தது. சிவக்குமார் அறை வாங்கியவன் போல அதிர்ந்து போய் நின்றான். அந்த முகத்தோடு அவன் சிரித்தது அழுகை போல இருந்தது.

"இல்லல்ல அப்படி ஒன்னும் இல்ல. உங்களுக்கும் வேலை இருக்குமேன்னுதான்..." என முதன்முறையாக குரலில் குழைவு  தெரிய இழுத்துப் பேசினான்.

மோனிகா மலர்ந்தாள். அவனும் இலகுவானான்.

"ஒரே க்ளாஸ்ல தான படிச்சோம். பின்ன எதுக்கு வாங்க போங்க" என சிரித்தாள்.

அவன் தத்தளித்து "ஆமால்ல சரி நீங்க சிவான்னே கூப்பிடுங்க" என்றான்.

"நீயும் மோனிகான்னே கூப்பிடு" என்றாள். ஆனா சிவக்குமார் அவளை அப்படி அழைக்கவில்லை. மோனிகாவிற்கு அந்த காலை திடீரென ஏனோ மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கத் தொடங்கி இருந்தது.

"தீபாவளிக்கு கூட மொத நாள் தான் ஊருக்கு வரணுமா?" என்றாள். சுற்றி இருப்பவர்கள் குறித்து அவளது பிரக்ஞை மறையவில்லை எனினும் இலகுவானது. அவர்கள் தன்னையோ அவனையோ தவறாக எண்ணமாட்டார்கள் என எண்ணிக் கொண்டாள். தவறாக எண்ணுவது என்றாள் என்ன? இப்படி பேசிக் கொண்டிருந்தாள் நாங்கள் இன்றிரவு யாருக்கும் தெரியாமல் ஒன்றாக படுத்துக் கொள்ளப் போகிறோம் என்ற எண்ணம் தானே? அந்த எண்ணத்தால் ஏற்படப் போகும் பாதிப்பென்ன? நாளை மணப் பேச்சுகள் நடக்கும் போது யார் யாருடன் யார் யாரெல்லாம் படுத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்ற நிகழ்தகவு அலசப்படும்.

"அந்தப் பொண்ணு அவ்வளவு சரியில்லீங்க" என்ற சங்கட இளிப்புகள்.

"அந்த வீட்டுப் பையனா?" என்பது போன்ற இழுப்புகள்.

"அந்த வீடு வேணாமே" என்ற அறிவுரைகள்.

அதைப்பற்றிய கவலைகள் தனக்கில்லை என எண்ணிக் கொண்டாள்.அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே மற்றொரு பக்கத்தில் மோனிகாவின் எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. சிவக்குமாரின் முகம் மெல்லிய குழப்பத்தை அடைவது தெரிந்தது. தன் முகம் அச்சுறுத்தும் வகையில் சிவப்பதே அதற்கு காரணமென உணர்ந்தாள். இறுக்கமானவற்றை யோசிக்கும் போது தன் முகம் ஏன் இப்படி சிவக்கிறது என நினைத்தாள். ஆனால் அந்நேரம் தன் முகம் நிச்சயம் அழகாகவே இருக்கும் என மோனிகாவிற்கு ஒரு தீவிரமான நம்பிக்கை இருந்தது.

"ஹல்லோ" என அவள் முகத்துக்கு நேரே கையை அசைத்தான் சிவக்குமார். கடைத்தெரு திரளத் தொடங்கியிருந்தது. ஆண்கள் கூடுமிடத்தின் வழக்கமான கெட்டவார்த்தைகள் காதில் விழத் தொடங்கின. அவற்றை அவன் ரசிக்கிறானா என்று கவனித்து இல்லையென்றுணர்ந்து ஒரு திருப்தியை அடைந்தாள் மோனிகா.

என்ன உடை அணிந்திருக்கிறோம் என்ற தன்னுணர்வு வந்த கணமே ஒரு திடுக்கிடல் எழுந்தது அவளிடம். அவள் கருப்பு நிற சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள். ஆறு மாதங்களுக்கு முன் இவனைப் பார்க்க நேர்ந்த போதும் இந்த உடையை அணிந்திருந்த எண்ணம்தான் அவளை திடுக்கிட வைத்தது. அதை அவன் நினைவில் வைத்திருக்க மாட்டான் என்ற ஆசுவாசமும் எப்படி நினைவில் நிறுத்தாமல் இருக்கலாம் என்ற கோபமும் ஒருங்கே எழுந்தன.

மோனிகா தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆரம்பநிலை செவிலி. பணிக்குச் செல்லும் போது பெரும்பாலும் இரண்டு மூன்று சுடிதார்களைத்தான் மாற்றி மாற்றி அணிந்து கொள்வாள். ஒரு நாளைக்கு நான்கிலிருந்து எட்டுவரை அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் அவள் பணிபுரியும் ஃப்ளோருக்கு கொண்டுவரப்படுவார்கள். அவர்களுடைய உடற்சமநிலையை இரவு முழுவதும் கவனிப்பது இவளது பணி. பெண்களெனில் பெரும்பாலும் சிக்கலில்லை. சில பணக்கார அக்காக்கள் மட்டும் குறை சொல்லித் திட்டும். காப்பீட்டுத் திட்டத்தில் உதவிபெற்று அறுவைசிகிச்சை செய்து கொள்கிறவர்கள் தெய்வத்தின் முன் என மருத்துவமனையின் ஒவ்வொரு ஊழியர் முன்னும் அஞ்சி நிற்பார்கள்.

அவளது சிக்கல் நோயாளியின் உடன் வரும் ஆண்கள் தான். நோயாளியை தூக்கிப் படுக்க வைக்க எழுந்து நடக்க வைக்க என இணைந்து உதவும் போது பல முறை ஆண்களின் கை அவளைத் தடவியிருக்கிறது. அந்தத் தடவல் படுத்திருக்கும் நோயாளிக்கும் சூழ்ந்திருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூட தெரியாத அளவிற்கு அவ்வளவு நேர்த்தியாக செய்யப்படும். மருத்துவமனைக்கு அணிந்து செல்லும் உடைகளை தீட்டுத்துணி போல வீட்டுக்கு வெளியே துவைத்து காயப்போடுவாள்.

"அத உள்ளப் போட்டா என்னவாம்" என பலமுறை அம்மா கேட்டிருக்கிறாள்.

ஒருமுறை எரிச்சலுடன் "நீ செத்த பெறவு உம்முகூர்த்த பொடவைய உந்தங்கச்சிவோ சுத்திப்பாளுவளா? நெருப்புல தான போடுவீங்க" என ஆங்காரமாக கேட்டுவிட்டாள். சம்மந்தம் இல்லாதது போலத் தோன்றினாலும் மோனிகாவின் அப்பாவை அது எங்கோ தைத்தது. அன்று அவள் அப்பா அதிகமாக குடித்துவிட்டு வந்தார். கட்டிலில் படுத்திருந்த அவள் கால்களைப் பிடித்துக் கொண்டு மெல்ல விசும்பியபடியே இருந்தார். அவளுக்கு எரிச்சலும் அழுகையும் கலந்து வந்தன.

"பஸ் வந்துட்டு சிவா" என கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி பேசிக் கொண்டிருந்தவள் கண்களை மட்டும் மேற்காக காட்டினாள். வருகிறதா அசைகிறதா என்றறிய முடியாதபடி "ஆர்.எம்.எஸ் கிராமத்து ரதம்" வந்து கொண்டிருந்தது. அப்பேருந்தைப் பார்த்ததும் மோனிகா மீண்டும் குன்றிப் போனாள்.

கமலாபுரத்திலும் கொரடாச்சேரியிலும் டூவீலர் ஷோரூம்கள் நிறைய திறந்துவிட்ட பிறகு அந்த பேருந்தின் பயன் குறைந்துவிட்டது. டியூவில் வண்டி வாங்க முடியாதவர்களே அப்பேருந்தில் பயணித்தனர். அவளும் ஒரு இருசக்கர வாகனம் வாங்க வேண்டுமென பணம் சேர்ப்பாள். வீட்டு செலவுகளில் எப்படியோ கரைந்துவிடும். இழுத்துப்பிடித்து பத்தாயிரம் சேர்ந்த போது பிரபாகரனின் தம்பி அவன் அம்மாவுக்கு ஒரு அறுவைசிகிச்சை என்று வந்து அழுதான். தலையில் அடித்துக் கொண்டு பணத்தை அவனிடம் கொடுத்தாள். அவன் பிரபாகரன் சொல்லித்தான் வந்திருப்பான் என அவளுக்குத் தெரியும். பிரபாகரனுக்கும் அவன் வீட்டுக்கும் தொடர்பு விட்டுப்போய் ஆறாண்டுகள் ஆகின்றன. அதற்கு நான்கு மாதங்கள் முன்பிருந்து தான் அவளை அவன் காதலிக்கத் தொடங்கியிருந்தான். 

ஒருவேளை காதல் அப்படித்தான் முகிழ்க்கும் போல. அவளது பள்ளிநாட்களில் ஒரு மழையிரவில் ஆட்டோவில் இருவரும் ஒன்றாக வர நேர்ந்தது. மழை பெய்ததால் ஷட்டர் இழுத்துவிடப்பட்டிருந்தது வசதியாக போயிருக்காவிடில் தன் உடல் மணம் பிரபாகரனை கிளர்த்தி இருக்காது என அவனை நினைக்கும் போதெல்லாம் எண்ணிக் கொள்வாள். அவள் உதட்டில் அழுந்த முத்தமிட்டான். அம்முத்தம் அவளை தனக்குத்தானே முக்கியமானவளாக உணர்ந்து கொள்ளச் செய்தது. அதன் பிறகு பிற ஆண்களின் பார்வையில் இருக்கும் கள்ளத்தனத்தை அவளால் தெளிவாகவே உணர முடிந்தது. அந்த கள்ளத்தனம் மட்டுமே ஆணின் ஆளுமையில் சேர்க்கும் அழகினை மெல்ல ரசிக்கத் தொடங்கினாள். அதேநேரம் தான் ஒருவனை காதலிப்பதால் அப்படி ரசிப்பதை எண்ணி குற்றவுணர்வும் அடைந்தாள். பிரபாகரன் அவளைப் பார்ப்பதை தவிர்த்தே வந்தான். அம்மாவின் கனிவுடன் அவனை எப்போதும் நோக்கி நிற்பவளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளோடு அவள் உடல் மணமும் இணைந்தே நினைவில் எழுந்தது. அந்த மணத்திற்கு தொடர்பே இல்லாதது போன்ற அவளது விழிகளும் இணைந்து நினைவில் எழுந்து அவனைத் துன்புறுத்தின.  

இந்தக் குழப்பங்களுடன் ஒருமுறை அவளிடம் போய் அழுதபோது ஆதூரத்துடன் அவனை அணைத்துக் கொண்டு முதுகை தடவிக் கொடுத்து அவனைத் தேற்றினாள். அப்போது ஏனோ தன்னை விட இரண்டு வயது மூத்தவனான பிரபாகரன் குழந்தையாகத் தோன்றினான். மறுநாள் அவளிடம் சொல்லாமல் அவன் சென்னைக்கு புறப்பட்டிருந்தான். 

"ஆர்.எம்.எஸ் கிராமத்து ரதம்" சாத்தியமான அத்தனை குண்டு குழிகளிலும் இறங்கி ஆடி ஆடி மெதுவாகச் சென்ற போதும் எதிர்காற்று இரவெல்லாம் கண்விழித்து எண்ணெய் காய்ந்த மோனிகாவின் கேசத்தை பறக்கச் செய்து கொண்டிருந்தது. ஒரு செல்லச் சொல் போல விழிகளுக்கு கீழே ஒரு முடிக்கற்றை தொங்கிக் கிடந்தது. இடக்கையின் நடுவிரல் மற்றும் மோதிர விரலால் அச்சொல்லை கோதி தலைக்கேற்றி  சட்டென சிவக்குமாரை நோக்கித் திரும்பினாள். கண்களில் அதிர்ச்சி மின்ன தொண்டைக்குழி ஏறியிறங்க அவன் தலை குனிந்து கொண்டான். மோனிகா ஜன்னல் வழியே வெளியே பார்த்தவாறு புன்னகைத்தாள்.  தான் இப்படியெல்லாம் நடந்து கொள்வது முதன்முறை என்ற எண்ணம் அவன் மீதான ஏளனத்தையும் தாண்டி மலர்வினை ஏற்படுத்தியது.

பிரபாகரன் சென்னை ஓடிப்போய் இரண்டாண்டுகள் கழித்து திரும்பி வந்தான். உடல் நன்றாக ஊறியிருந்தது. முகத்தில் எப்போதும் இருக்கும் பதற்றம் மறைந்து அலட்சியம் குடியேறியிருந்தது. மோனிகாவை நம்பிக்கையுடன் பார்க்க அவனால் முடிந்தது. அவளும் டி.எம்.எல்.டி படித்துவிட்டு வேலைக்கு அலைந்து கொண்டிருந்தாள். முதலில் அவன் ஊருக்கு ஏன் வந்தான் என்று தான் அவளுக்குத் தோன்றியது. ஆனால் தன்னிடம் அழுதபடியே விடைபெற்று போனவனை நினைத்தபோது அவன் மீது அவளுக்கு கனிவு பிறந்தது. மோனிகாவை அப்போதும் நிமிர்ந்து பார்ப்பதை அவன் தவிர்த்தே வந்தான். ஊருக்கு வந்திருந்த போதும் தன் வீட்டில் அவன் தங்குவதில்லை. ஊர் எல்லையில் இருந்த சங்க கொட்டகையிலும் நண்பர்கள் வீட்டிலுமாக படுத்துக் கொள்வான். அவனைப் பார்க்க வேண்டும் என மன உந்த மோனிகா சங்க கொட்டகைக்குச் சென்றாள். 

அவளைப் பார்த்ததும் முதலில் அவன் உடலில் ஒரு மெல்லிய நடுக்கம் ஓடியது. எப்படி நடந்தது என்று அறிய முடியாமல் கண்ணீர் அழுகை என்று சென்ற  அச்சந்திப்பு புணர்வில் முடிந்தது.   பிரபாகரன் தான் ரொம்பவும் அழுதான். அவனைத் தேற்றிவிட்டுத் திரும்புகையில் மோனிகா சங்க கொட்டகைக்கு செல்வதற்கான முந்தைய நிமிடங்களை நினைத்துப் பார்த்தாள். ஒருவேளை திரும்பி நடந்தால் அங்கு நடந்து வந்து கொண்டிருக்கும் தன்னை கண்டுவிட முடியுமோ என்ற பிரம்மை தட்டியது. அவனைப் பார்க்கச் சென்றது முதல் அங்கிருந்து புறப்பட்டது வரையிலான நேரத்தை மட்டும் அவள் நினைவில் நிறுத்த விழையவில்லை. அச்செயல் அபத்தமாகத் தெரிந்தது. கற்பனை செய்தது போலவோ படங்களில் கண்டது போலவோ அது இருக்கவில்லை. அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று கூட நம்பிவிட முடியும் என்று தோன்றிய போது அவள் சிரிக்கத் தொடங்கினாள். ஆனால் சட்டென பிரபாகரன் முகம் நினைவில் வந்து காலில் ஏதோ மிதிபட்டது போல அவள் முகம் மாறியது. 

அடுத்த வருடம் இன்னும் மெருகேறியவனாக அவன் ஊருக்கு வந்தான். இம்முறை அவளுடன் இருப்பதற்கான சந்தர்ப்பங்களை மிகத் தெளிவாக அவனே உருவாக்கினான். அதை உறுக்கமாக உண்மையானதாக அவன் புனைவது அவளுக்குத் தெரிந்தே இருந்தது. தெரிந்தே அவனை ஏற்றுக் கொண்டாள். அதன்பிறகு பிரபாகரன் அடிக்கடி ஊருக்கு வரத் தொடங்கினான். இப்போது அவளை எடுத்து உடுத்திக் கொள்ளும் கழற்றி எறியும் உடைபோல பயன்படுத்தத் தொடங்கியிருந்தான். அவளும்  கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கினாள்.

அடிக்கடி உடற்சோர்வு ஏற்படத் தொடங்கியது. புணர்வின் போதும் சிறுநீர் கழிக்கும் போதும் வலி அதிகரிக்கத் தொடங்கியது. உதிரப் போக்கும் முன்னைவிட பெருகியது. ஆனால் அவள் வீடோ அவள் பணிபுரியும் மருத்துவமனையோ அதை ஒரு சந்தேகமாகக் கூட அறிந்திருக்கவில்லை. அது அவள் துயரை மேலும் பெருக்கியது. எல்லோர் மீதும் எரிச்சல் கொள்ளச் செய்தது. ஏன் யாரும் தன்னை பொருட்படுத்துவதேயில்லை என்று எண்ணி பிரபாகரனுடன் மேலும் ஆவேசமாக இணைந்து கொண்டாள். எப்படி தன்னைக் கையாண்டாலும் அவன் ஒருவனே தன்னை பொருட்படுத்துகிறவனாக இருக்கிறான் என எண்ணினாள். அவன் கற்பனைகளுக்கு தன் உடலில் இடமளிக்கத் தொடங்கினாள். உடற்சோர்வு எந்நேரமும் தசைகளை வலுவிழக்கச் செய்யும் அளவுக்கு பெருகியபோது தான் அவளுக்கு சந்தேகம்  ஏற்படத் தொடங்கியது. தலைமை மருத்துவரிடம் அவள் சென்ற போது அவர் அதை உறுதிபடுத்தினார்.

மோனிகாவிற்கு பி.ஐ டி பாதிப்பு இருந்தது. சற்று முற்றிய நிலை என அவளை பரிசோதித்த அவளது தலைமை மருத்துவர் கண்டறிந்தார். 

"பிட்சஸ்" என அந்த பெண் மருத்துவர் வாய்க்குள் முனகினார். மோனிகா அலறியழுதபடி அவரின் காலில் போய் விழுந்தாள். 

ஊர் நெருங்கியபோது பட்டாசு சத்தம் காதை துளைக்கத் தொடங்கியிருந்தது. சிவக்குமார் இப்போது நன்றாக ஊரை வேடிக்கை பார்த்தபடிவந்தான். அவனை திரும்பி பார்க்கும் எண்ணத்தை கட்டுப்படுத்தியபடியே மோனிகா ஜன்னல் பக்கம் திரும்பினாள். 

தனக்கு பி.ஐ.டி இருப்பதை மோனிகா சொன்னவன்று பிரபாகரன் எதுவும் சொல்லவில்லை. 

மறுநாள் அவனே அழைத்தான். 

"நெட்ல பாத்தேன். அது பரவுமா?" என்றான். மோனிகா இணைப்பைத் துண்டித்தாள்.

முற்றிய நிலை என்பதால் கருப்பையை எடுக்க வேண்டியிருந்தது. காம்ப் எனச் சொல்லி அந்த பெண் மருத்துவர் மோனிகாவை திருச்சிக்கு கூட்டிச் சென்றிருந்தாள். சென்ற அன்றே அறுவைசிகிச்சை நடந்தது. கருப்பை பார்மலினில் போடப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது. ஒரு மாதம் கழித்து வேறு நோய்த் தொற்றுகள் ஏதுமில்லை என்ற தகவலுடன் உடலைத் தேற்றிக் கொண்டு தன்னுடைய பயணப் பையில் வெறுப்புடன் சிரித்தபடியே அந்த பெண் மருத்துவர் தன்னிடம் அளித்த தனது கருப்பையை ஒரு வெல்வெட் உரையை வாங்கி போட்டு மூடி கொண்டு வந்தாள்.

சிவக்குமார் எழப்போனான். 

அவன் அப்படி செய்யமாட்டான் எனத் தெரிந்தும் அழுகையை கட்டுப்படுத்திக் தயங்கியபடியே  மோனிகா அவனிடம் சொன்னாள்.

"அந்த பார்சல தயவுசெஞ்சு திறந்துடாத சிவா."

பிப்ரவரி 2018

நன்றி: காலச்சுவடு

Monday 15 June 2020

காத்திருத்தல் - குறுங்கதை



நான் ரொம்ப நேரமாக காத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் அவர் வரவில்லை. நான் காத்துக் கொண்டிருந்த அறையில் ஒரேயொரு ஜன்னல் திறப்பு இருந்தது. அத்திறப்பில் இருந்து எதிரே இருக்கும் ஆளில்லாத உயரமான கட்டிடங்களைப் பார்க்க முடிந்தது. நான் தரைத்தளத்தில் இல்லை  என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த அறை இருப்பது ஒரு பெரிய அடுக்ககத்தில் என்பது தெரிகிறது. எதிரே உள்ள ஜன்னல் வழியே தெரியும் கட்டிடம் போன்ற அமைதி நான் அமர்ந்திருக்கும் அறை இருக்கும் அடுக்ககத்தில் இல்லை. அறைக்கு வெளியே விதவிதமான சத்தங்கள் கேட்கின்றன. கதவை எழுந்து சென்று திறக்கலாம்தான். ஆனால் திறக்கப் பிடிக்கவில்லை அலுப்பாக இருக்கிறது. மேலும் நான் காத்திருக்கிறேன். காத்திருத்தல் என்ற வேலையில் ஈடுபட்டிருக்கும் போது ஏன் இன்னொரு தேவையில்லாத வேலையில் தலையை நுழைக்க வேண்டும்? இப்படி தலையை நுழைப்பது சரி கிடையாது. ஏனெனில் அது நம்மை இன்னொரு செயலுக்கு இட்டுச் செல்லும். மனதை நிலைக்க விடாமலடிக்கும். இப்படி அமர்ந்து கொண்டு இந்த அறையையும் ஆளரவம் அற்ற எதிர் கட்டிடங்களையும் பார்த்துக் கொண்டிருப்பதால் என்ன குறைந்துவிடப் போகிறது? இந்த அறையில் சுவரில் நான்கு பக்கமும் பக்கத்துக்கு ஒன்றாக நான்கு ஃபிரேம்கள் மாட்டப்பட்டுள்ளன. அவற்றினுள் புகைப்படமோ ஓவியமோ இல்லை. வெறுமனே ஃபிரேம்கள். ஒரு மேசை கிடக்கிறது. ஆனால் அதில் மேற்பரப்பு இல்லை. இரண்டு நாற்காலிகள் கிடக்கின்றன. ஆனால் அவற்றில் ஆசனங்கள் இல்லை. ஆயிரம் இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட பெரிய பெரிய புத்தகங்கள் இருக்கின்றன. ஒன்றிலுமே ஒரு வரி கூட எழுதப்படவில்லை. அழகிய பேனாக்கள் இருக்கின்றன. எதிலுமே இங்க் இல்லை. எனக்கு கோபமாக வந்தது. இதெல்லாம் நிரப்பப்படத்தானே நான் காத்திருக்கிறேன். அவர் வந்தால் இதெல்லாம் நிரப்பப்பட்டுவிடும். அவர் நிச்சயம் வந்துவிடுவார். முன்னர் அவரைப் பார்த்தவர்கள் அவர் இந்த அறைக்கு நிச்சயம் வருவார் என்று சொல்லி இருக்கின்றனர். ஆனால் நாம் விடாப்பிடியாக காத்திருக்க வேண்டும். நம் காத்திருப்பு அவரை மகிழ்ச்சியடைய வைக்க வேண்டும். நம் காத்திருப்பு அவரை கண்ணீர்விட வைக்க வேண்டும். நம் காத்திருப்பு அவரை அனிச்சையாக நம்மை நோக்கி ஈர்க்க வேண்டும். ஆனால் அவர் அறைக்கு வெளியே இருந்துதான் வருவார் என்று சொல்வதற்கில்லை.

Tuesday 2 June 2020

பூரணி சிறுகதை குறித்து மணிகண்டன்


அன்புள்ள சுரேஷ் 

பூரணி மோகமுள் நாவலை படித்திருப்பார் என்று எழுதி உங்களை வெறுப்பேற்ற ஆசையாக இருக்கிறது. நல்ல சீரான நடையில் எந்த வித குழப்புமின்றி கதை முடிகிறது. மிகவும் ரசித்து படித்தேன்.

ஒளிர் நிழல் குறித்து முன்னர் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.பூரணி கதையால் பாதிக்கப்பட்டேன் என்று கூற இயலாது, எனினும் நீங்கள் ஆளுமை சிக்கல் குறித்த பல நுட்பமான இடங்களை இந்தக் கதையில் பல இடங்களில் உராய்ந்து சென்றுள்ளீர்கள். நல்லது. 

நட்பு

இருப்பதிலேயே  எளிதானது நமது தேர்வின் வழி நாம் தேர்ந்தெடுக்கும் நமது நண்பர்களுக்கும் நமக்கும் உள்ள உறவை புரிந்து கொள்வது. நம் தேர்வின் வழி வருவதால் நமக்கு பிடித்தமானது அதே நேரத்தில் நண்பர்களின் மாற்று பார்வை நாம் ஆளுமையில் உராய்கையில் நாம் என்ன மாதிரி உணர்கிறோம், நட்பை எவ்வாறு தொடர்கிறோம் என்பதே நாம் ஆளுமையில் ஒரு பகுதியாகிறது. கதையில் விக்னேஷின் நண்பன் கசப்பான ஒன்றை கூறினாலும் அது மரபார்ந்த ஒன்றுக்கு அருகில் இருக்கிறது.

மரபு 

நாம் காலங்களின் அடுத்த சிக்கல் நாமே விரும்பி அணிந்து கொள்ளும் முற்போக்கு பாவனை , சமூக ஊடகங்கள் வழி இந்த பாவனையை நாம் உண்மை என்று நம்ப தொடங்குகிறோம் சமூக ஊடகத்தின் வெளியே  வாழ்வில் உள்ள அனைத்தையும் இந்த முற்போக்கு தராசில் வைக்கிறோம், அல்லது தராசில் வைக்கையில் முற்போக்கு பலமிழந்து மரபு பக்கம் நாம் சாய்கையில் நாம் ஆளுமை மீது நமக்கே நம்பிக்கை குன்றுகிறது. மரபு என்று வருகையில் குடும்ப பாரம் என்கிற ஓன்று ஆளுமையை பாதிக்கிறது. பொறுப்பு துறப்பை முற்போக்காக மீண்டும் மாற்றி பாவனை புனைகயில் மேலும் ஆளுமை சிக்கல் வருகிறது. விக்னேஷ் தேடுவது  குடும்ப பாரத்தை சுமந்து செல்ல 
இன்னொரு அம்மாவை என்று கருதவும் வாய்ப்பிருக்கிறது.
அலுவலகத்தில் மற்ற உறுப்பினர்கள் குடும்ப உறுப்பினர்கள் குறித்து கூறுகையில் பாவனை அணிய வேண்டிய தேவை விக்னேஷுக்கு இருக்கிறது இல்லையேல் இது குறித்து பெரிதாக அவன் அலட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. மரபான ஒரு சொல் , மரபான ஒரு வாழ்த்து மரபான ஒரு ஒப்பாரி அவனுக்கு கடினமான ஒன்றாக இருக்கிறது.

குடும்ப பாரம் 

இந்த குடும்ப பாரம் என்பது ஸ்தூலம் இல்லாதது எங்கெங்கும் வியாபித்து இருப்பது. அம்மாக்கு அப்பாவிற்கு தங்கைக்கு மனைவிக்கு குழந்தை களுக்கு பாட்டிக்குக் தம்பிக்கு அத்தைக்கு இன்னார்க்கு என பட்டியல் கேட்பது போல தோன்றுவது, செய்ய செய்ய வாங்க வாங்க குறையாத சம்சார சாகரம். எப்பேர்ப்பட்ட ஆளுமையையும் சரிக்கவோ தாங்கவோ வல்லமை உடையது ,இன்று வரை இதன் மாற்று பகல் கனவாய் இருக்கிறது. விக்னேஷின் ஆளுமை, பாவனைகளை வெறுக்கும் பாவனை விளையாட்டில் ஆட்டத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் காதலி ஆட்டத்தில் பங்கு பெற மறுக்கும் நண்பன் என அனைவரும் கசக்க தொடங்குகின்றனர், பூரணி ஒரு முறை ஆசைக்கு விளையாடுகிறார், விக்னேஷ் அம்மா, விக்னேஷ் தங்கை , விக்னேஷ் இடையே உள்ள உறவு பூடகமாக ஒன்றாக கதையில் வருகிறது. தந்தையின் இடத்தில் அவனை வைக்கவும் முடியாது அவன் குழந்தையும் கிடையாது , விக்னேஷ் ஆளுமை நிலைக்கு வரும் வரை தாயின் தங்கையின் பாடு சிக்கல், விதியின் வசத்தில் பூரணி அன்னையாகி விக்னேஷுக்கு அமூதூட்டுகிறாள். சற்றே நிலைக்கு வந்த பின் விக்னேஷ் தன் பாலபாடத்தை நினைவு கூறுகிறான். 

நல்ல கதை !

அன்புடன் 
மணிகண்டன்

Tuesday 19 May 2020

ஸ்ரீராம ஜெயம்


தி.ஜானகிராமனின் சிறுகதைகள்(முழுத்தொகுப்பு) வாசித்து வருகிறேன். சரளமாக வாசித்துச் செல்லக்கூடிய கதைகள். நவீனத்துவத்தின் இறுக்கம் கவிந்துவிடாத நேரடியான கூறல்  கொண்ட கதைகள். பெரும்பாலான கதைகளில் பசி முக்கிய பங்கு வகிக்கிறது. பாயாசம்,பரதேசி வந்தான்,கோயம்புத்தூர் பவபூதி,பஞ்சத்து ஆண்டி,குளிர், சிலிர்ப்பு என பல கதைகளில் வறுமையின் கையறு நிலை அப்பட்டமாக வெளிப்படுகிறது. மற்றொரு வகையான கதைகளில் காமத்தின் அலைகழிப்புகள் பேசு பொருளாகி இருக்கின்றன. பெரும்பாலும் வாலிப்பான உடல் கொண்ட இளம் விதவைகள் மீதான பச்சாதாபம் இக்கதைகளில் வெளிப்படுகிறது.சண்பகப்பூ, பசி ஆறிற்று, தூரப்பிரயாணம்,தவம்,ஆரத்தி போன்றவை இவ்வகை கதைகள். ஆனால் தி.ஜாவின் ஆகிருதி முதல் வகைக் கதைகளிலேயே பூரணமாக வெளிப்படுவதாகத் தோன்றுகிறது. 

எளியோரின் பசி கண்டு துயர் கண்டு இரங்கும் அவர்களின் கையறு நிலையை கனிவுடன் எடுத்துச் சொல்லும் முதல் வகைக் கதைகளே அவர் எழுதியவற்றில் முக்கியமானவை என்று நினைக்கிறேன். பெரும்பாலும் கதைகள் நேரடியாகவே சொல்லப்பட்டிருந்தாலும் ஸ்ரீராமஜெயம் என்ற கதை அதன் மௌனத்தால் தொடர்புறுத்தும் தன்மையால் அபாரமான கலைப்பெறுமானம் பெறுகிறது. 



ஒரு அச்சகத்தில் மெய்ப்பு பார்க்கிறவராக இருபத்தாறு ஆண்டுகள் பணிபுரிகிறார் ராகவாச்சாரி. இருபதாண்டுகளாக அங்கு காவலராக இருக்கிறார் வேலுமாரார். வேலுமாராரின் பார்வையில் ராகவாச்சாரி மிகுந்த நேர்த்தியுடன் கட்டமைக்கப்படுகிறார். ஏழு குழந்தைகளின் தகப்பன் வறுமையில் உழல்கிறவர் யாரிடமும் பேச்சு கொடுக்காத கூச்ச சுபாவி என ராகவாச்சாரி ஒரு பரிதாபகரமான ஆளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டே வருகிறார். எப்போதும் அலுவலகத்துக்கு தாமதமாகவே வருகிறவர் தொடர்ந்து நான்கு நாட்கள் சீக்கிரம் வருகிறார். ஐந்தாவது நாள் விடுப்பெடுக்கிறார். ஆனால் அன்று இன்னும் சீக்கிரமாகவே அலுவலகம் வருகிறார். முதலாளியின் அறையில் இருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை திருடுகிறார். அதை வேலுமாரார் பார்த்து விடுகிறார். 

இக்கதையின் முக்கியமான அம்சங்கள் இரண்டு. ஒன்று கதை வேலுமாராரின் வழியாகவே சொல்லப்படுகிறது. வேலுமாரார் ராகவாச்சாரி அளிக்கும் நேர்மறை சித்திரம் மெல்ல மெல்ல உருமாறுவதும் இறுதியில் அவர் களவை வேலுமாராரை கண்டுபிடிப்பதும் கதையில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. இரண்டாவது அம்சம் ராகவாச்சாரியின் மௌனம். எப்போதும் தாமதமாக வருகிறவர் ஏன் நான்கு நாட்கள் வழக்கமான நேரத்தைவிட சீக்கிரம் அலுவலகம் வந்தார் ஏன் ஒரு நோட்டுப்புத்தகத்தை திருடினார் என்று யோசித்தால் அந்த பாத்திரம் ஆழம் கொள்கிறது. இயல்பிலேயே யாரிடமும் எதையும் கேட்டுவிடாத மனிதர். தான் கவனிக்கப்பட வேண்டும் என நினைக்கிறார் கவனிக்கப்படுவதன் வழியாக தனக்கு நோட்டுப்புத்தகம் வேண்டும் என்பதை உணர்த்த விரும்புகிறார். அது கவனிக்கப்படாத போது தயங்கித் தயங்கி அதைத் திருடத் துணிகிறார். அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத பொருளை ஒரு நிரந்தர ஊழியர் ஏன் திருட வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் கதை இன்னும் ஆழம் பெறுகிறது. அதற்கான பதிலாக கதைத் தலைப்பு வந்து நிற்கிறது. ஸ்ரீராமஜெயம். ஆம்! ராகவாச்சாரி ஸ்ரீராமஜெயம் எழுதவே நோட்டுப்புத்தகத்தை திருட நினைத்திருப்பார். அது திருட்டு கூட கிடையாது. எடுத்துச் செல்வது. ஆனால் அதைச் செய்யவும் அவருக்கு திட்டங்கள் தேவைப்படுகின்றன. அந்த எச்சரிக்கையே அவரை சிக்கவும் வைக்கிறது. ராகவாச்சாரி ஸ்ரீராமஜெயம் எழுதினால் கஷ்டங்கள் தீரும் என்று நம்பும் ஒரு காலத்தைச் சேர்ந்தவர். அவரது நியாயங்களை புரிந்து கொள்ளாத ஒரு சமூகம் உருவாகி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவருக்கு அது புரிவதில்லை. அவர் தீர்வுகள் வேறெங்கோ இருப்பதாக நினைக்கிறார். 

காலம் ஒவ்வொரு முறையும் அதன் இயங்குதளத்தை புரிந்து கொள்ள முடியாத ராகவாச்சாரிகளை உற்பத்தி செய்து கொண்டே தான் இருக்கிறது. எக்காலத்திலும் அப்படியானவர்கள் உருவாகியபடியேதான் இருப்பார்கள். அவர்கள் அத்தனைபேரின் உளநிலையையும் பிரதிநிதித்துவம் செய்வதாக இக்கதை உள்ளது. அதேநேரம் வாசகன் கற்பனையில் நிரப்பிக் கொள்ளும் இடைவெளியையும் முழுக்க உள்ளடங்கிய ஒரு கூறல் முறையையும் கொண்டுள்ளது இக்கதை. நான் வாசித்த சிறந்த கதைகளில் ஒன்று.

:) :( - குறுங்கதை



12 MAY 2020

(2.02AM)

Dei thoonkittiya

illa di :)

Mani rendaguthu. Innum thoongama enna da panra

En rendu manikku thoonkidanuma? Nee ivlo neram enna panriyam?

Enakku hubby irukkan athanala thoongala :(

Enna pannineenga

Ellam night la panrathu than

(அவள் போர்வைக்கு வெளியே தெரிந்த தன் கால்களையும் தன் கணவன் கால்களையும் படம் எடுத்து அனுப்பினாள்)

Nude a irukkiya

Ama ethukku kekkura?

Chumma imagine panna than. Eppavum matter pannittu nude a than thoonguviya?

Dei uthai vanguva?

Chumma sollu di



Kobama?

Athellam illa

Appo sollu

Avan thoongiduvan. Naan konja neram yosichuttu paduththuruppen. Appuram nighty pottu thoonguven.

Oh

Enna "oh"

Sari kobapadatha.

Dei inime ithu paththi yellam kekkatha.

Ketta enna?

Kekkathanna viden

En kekka kudathu nu sollu

Ithu enga personal

Oho

Enna da oho

Appo avan tarture panrathu mattum enkitta sonna
*torture

Athukku nu avan matter panrathaiyum unkitta sollanum


Enna da pesa matra?

Nee ennai asingapaduthura

Poda idiot

Seriously I feel dishonoured

Nee enna cheque a?

Nee ippo enna kindal panna arambichutta. Pannu

Baby...en da ippadi pesura I love you da baby chellam

Okay bye

Chellam please purinjikko

Enna purinjikkanum

Chellam pls da sorry sorry sorry ten thousand times sorry

M okay

Un okay sari illa da chellam

Ippo enna pannanum

Nee than sollanum unna lip la kiss pannava

I don't need your imaginary kisses. பக்கத்தில் படுத்திருக்கிறவனை பண்ணு. Bye

bye :(

13 MAY 2020
(1.05 AM)

Chel....la...meeee...umma


Dei pesuda pls

14 MAY 2020
(12.14AM)

Nee intha message reply pannalanna I am not gonna talk to you anymore

14 MAY 2020
(11.07PM)

(அவள் உறங்கிய பிறகு. அவள் கணவன் அவள் அலைபேசியில் வரும் செய்தியின் ஒலியைக் கேட்கிறான். அவள் விரல் ரேகைகளை வைத்து அலைபேசியைத் திறக்கிறான)

Sorry di

(அலைபேசியின் இணைய இணைப்பை அணைத்துவிட்டு அந்த உரையாடலை வாசிக்கிறான்.)

Paravalla

Ippo enna panra

Yosichuttu irukken

Enna yosikkira

Unkitta pesalama venama nu

Pesitte yosikkiriya

Ama

:)

Dei unakku enna evlo padikkum

Enna di ippadi kekkira

Chumma sollen

Romba pidikkum

Konjam explain pannu

Enna innikku ennamo mathiri pesura

Athellam onnum illa nee sollu How much you love me?

Naan innikku varai marriage pannikkathathukku nee than reason. I can't think of another woman

Nee romba emotional agurada

நெஜம்மா சொல்றேன் மா

Ana enakku marriage agiduche. Enakku husband paiyan ellam irukkangale

Athanala enna?

Dei unakku puriyalaya. I can't be with you. Unakku thevaiyanatha ennala kodukka mudiyathu

Enakku athu vendam

Pinna enna than da venum

Unnoda love. Ennai vida athigama nee vera yaaraiyum love pannala. Enakku athu pothum

Ana naan thinam night innoruththan kuda sex vachikkiren. Unna athu hurt pannuthu thane

Ama

Appuram en da ennai nenachittu irukka. Maranthuden

You don't have the right to say like this :(

Sorry da. Love you. Kisses and hugs.

Kisses and hugs.

(அன்றைய உரையாடலை மட்டும் தேர்வு செய்து அழிக்கிறான்.)


16 MAY 2020
(12.35AM)

(அவள் கைரேகையை எடுத்துக் கொள்கிறான்)

Dei

Enna thoongalaya

Thookkam varala da

En thookkam varala

Ellam unnala than

Naan enna panninen

Ippadi detached a pesatha da kashtama irukku

Vera eppadi pesanum

Paasama peso

Oho

Dei pls I love you

Ippo ethukku Ithave sollittu irukka

Unmaiya sollu unakku enna pakkum pothu kiss pannava hug pannavo thonatha

Ippo ethukku athellam

Pls sollu da

Thonum

Appo en enna nee kiss panrathe illa


Sollu da pls

Unakku ellamum naane sollanuma? Nee enna guilty a feel panna vekkura

Eppadi

Pls purinjikko

Sari puriyuthu

Naan nambamatten

Nee namba naan enna pannanum

Nalaikku office la enna kiss pannanum

Sari

Lips la

Okay

Good night da darling

Good night

16 MAY 2020
(10.17 PM)

Innikku enna office la romba dull a iruntha

Onnum illa di

Romba pannatha sollu di

Avan enna innikku kiss pannittan

Evan :)

Avan than di chumma theriyatha mathiri kekkatha

Sari eppo

Lunch appo

Sari nee enna pannina

Slap pannitten

Hmm

En di panni irukka kudathu

Neeyum thana avana love pannina

Athukku?

Antha advantage la kiss panni irukkan

Sari di naan avan kitta clear a pesira poren

Mm athu than sari. Enna pesa pora

Enna maranthuttu innoru ponna marriage pannikka solli

Hmm

Enna di ennala solla mudiyathu nu nenaikkuriya

Athellam solliduva ana atha sonna unga bonding strong agum

Vera enna panrathu?

Avoid him

Ethuvarai?

Avano neeyo vera office pora varai

Sari try panren

Un husband ethum doubtful a pakkurara?

Appadi theriyala di. Ana konjam bayama irukku. Naan avarukku ethum drogam panrena?

Don't be silly

Sari di bye. Ippo oru clarity kedacha mathiri irukku

Sari bye

Bye di

17 MAY 2020
(01.28 AM)

(அவன் அவள் அலைபேசியை எடுத்துப் பார்க்கிறான். பின்னர் ஒரு மெல்லிய புன்னகை அவன் முகத்தில் எழுகிறது. பின்னர் பெருமூச்சுடன் உறங்கச் செல்கிறான்)

17 MAY 2020
(02.34 AM)

Dei unakku rendu naala message panninathu naan illa

:)





Monday 4 May 2020

ஒளிர்நிழல் குறித்து அ.க.அரவிந்தன்

அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு,

நாவல் வாசித்த பின்னர் 'ஒளிர்நிழல்' பற்றிய பிறர் கருத்துக்களை பார்த்தேன் .அதில் ரஞ்சனி பாசு அவர்கள் எழுதிய கருத்துக்களும் என் அவதானிப்புகளும் சற்றே ஒத்திருந்தது.அதனால் அதில் சொல்லப்பட்டதை தவிர்த்து வேறு சில கருத்துகளை எழுத விழைகிறேன்.

புயலிலே ஒரு தோணியில் ஆவன்னா என்ற ஒரு அத்தியாயமுண்டு.அதில் அந்த கதாபாத்திரம் ஒரு பெருங்கதையை சொல்லும்.எழுச்சி பெற்று வீழ்ச்சி அடைந்த ஒரு கதை அது.அதுதான் நாவலின் அடிநாதமென எனக்கு தோன்றும்.அதுதான் நாவலிலே நீண்ட அத்தியாயம் என்றும் நினைக்கிறேன்.

ஒளிர்நிழல் படித்தபோது அந்த நினைவு எட்டிப்பார்த்தது.ஆனால் இங்கு வீழ்ச்சியை மட்டும் அல்லது வீழ்ச்சிக்கு பின்னர் என்று நான் வரையறுத்துக்கொள்கிறேன். காத்தவராயன்,ராஜகோபால தேவர் சித்திரத்தை வைத்து இதை செய்கிறேன்.
எஞ்சும் சொற்கள் முன்னுரை என்று நினைக்கிறேன். நீங்கள் கதை சொல்லும் யுத்திக்கு முக்கியத்துவம் தருபவன் அல்ல என்று சொன்னீர்கள்.நாவலை படிக்கும் எவருமே அதை ஆமோதிக்கமாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.

ஒரு பெரிய வேலியமைத்து அதனுள்ளே நீங்கள்  மாட்டி, பின்னர் வெகுலாவகமாகவும் அறிவுப்பூர்வமாகவும் தவ்வி வந்ததுபோல தோன்றியது.நம் தமிழ்சினிமா போல நம் இலக்கியமும் இருந்துருந்தால் அல்லது பல கோடி மக்களால் இதை அணுகமுடிந்திருந்தால் எவ்வாறு இருக்கும் என்று நினைத்துப்பார்தேன்.நிச்சயமாக நாவலில் பேசப்பட்ட இரு இனங்களினாலும் நீங்கள் தாக்கப்பட்டிருப்பீர்கள் என்றே தோன்றியது.தவறாக உள்வாங்க அனைத்து சாத்தியமும் உண்டு என்று தோன்றியது.

'அவரவர் சரி அவரவருக்கு' என்ற தங்களின் வரியை எவரும் கவனித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.(அவ்வாறு நிகழ்ந்திருந்தால்).

நான் தங்களின் சிறுகதை வழி நாவலை அடைந்தாலும் சில அதிர்ச்சி இருந்தது தான்.ஒவ்வொரு அத்தியாயமும் முடியும்போதும் சற்றே 'பக்' என்றுதான் இருக்கிறது. தங்களின் சிறுகதையை விட ஒருபடிமேலாக.





முதலில் நாவல் வாசித்த பின்னர் ஒன்றுமே நிற்கவில்லை.தங்களின் கதை சொல்லும் முறையும்,மொழியும் தான் காரணம் என்று நினைக்கிறேன். விளைவாக மீண்டும் முக்கிய பகுதியென நான் எண்ணுவதை வாசித்தேன். ஒரு டார்சை வைத்து ஒரு சித்திரத்தில் மீது விட்டு விட்டு அடித்துக்காட்டுவதுபோல ஒரு உணர்வு. சிறுக சிறுக மண் சேர்த்து அதை மலையென குவித்து தானே தின்று செத்துபோனார் என்று முருகையன் கதாபாத்திரத்தை முடிக்கிறீர்கள்.
இது ஒரு பெரிய கனவு சிதைந்து வீழ்வதை காட்டியது.குணாவும் குரூப் 2 என்று சொல்லி பி.சி வரை செல்கிறான்.அது அனைத்துமே தங்களின் கதை சொல்லும் யுத்தியால் முதலில் கடந்துபோய்விட்டேன்.கதை சொல்லும் முறையின் வெற்றி அல்லது உச்சம் என்று நான் எண்ணுவது அனைத்து கதாபாத்திரமும் யார்,யாருக்கு,என்ன சொந்தம் என்று கண்டைவது முழுக்க முழுக்க வாசகனின் முயற்சியால் மட்டுமே அதனால் நாவலின் மீது எனக்கு ஈர்ப்பே உண்டாயிற்று.

குடும்பம் சார்ந்த சிக்கல் என்று என்னால் வரையறை செய்யமுடியவில்லை தங்களின் சிறுகதையைபோல. மாறாக ஆண் பெண் உறவு சிக்கலே அதிகம் வருவதாகப்பட்டது.சக்தி எழுதிய எதிர்சாத்தியதை வைத்து மதிப்பீட கூடாது என்று படுகிறது.ஒருவேளை அருணாவுக்கு சுந்தராலோ,சந்திரசேகரலோ சில கசப்பை அவள் எதிர்கொண்டால் அது குடும்ப சிக்கல் சார்ந்தது என்று வரையறை செய்திருப்பேன் என்று நினைக்கிக்றேன். அதே போல் தான் அனைத்து கதாபாத்திரத்திற்கும் என்று நினைக்கிறேன்.

அம்சவள்ளி முருகையனிடம் சபலம் கொள்வது மிக துல்லியமாக வந்து செல்கிறது.(அது சக்தி அருணா மீது கொள்ளும் சபலத்தை புரிந்துகொள்ள என்றும் நினைக்கின்றேன்)அதுபோல சக்தி தன் வருங்காலத்திற்கு அருணாவால் பாதிப்பு வரலாம் என்று எண்ணுகிறான் மற்றும் உரையை நிகழ்த்திய பின்னர் காருக்குள் சென்று சிரிப்பது.இது எல்லாமே சட்டென்று ஒரு துளி விஷமாக பட்டது.  நாவலின் நடுநடுவே வரும் சில விமர்சன கருத்துக்கள் எனக்கு மிகவும் பகடியாக பட்டது.அவ்வாறு சொல்ல சொல்ல வேறு சாத்தியம் என்ன என்று தான் யோசனை செய்ய வைக்கிறது.ஒருவர் ஒரு கருத்து சொல்லும் போது இயல்பாக மணம் வேறு எதிர் கருத்தை தேடுவதை போல அது நிகழ்ந்தது.கவிதையும் ,உரையும் , எதிர்சாத்தியமும் உச்சங்கள்.கீழறக்க முடியாத ஒரு ஆர்வம் நாவலின் மீது வருவதற்கு  அது முக்கிய காரணமாகிறது கதை சொல்லும் முறையுடன்.நானும் கிராமத்தான் என்பதால் கிராம இளைஞர்கள் சாதி கட்சியின்  பலி கேட்கும் கூர்வாளை நீட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை பார்க்கிறேன்.மிக்க சரியென்று ஆமோதித்தேன்.அனைத்து கதாபாத்திரத்திலும் ஒரு க்ரெய் டச் வைப்பது தங்களின் ஸ்டைலோ என்று நினைக்கிக்றேன்.அதனால் தான் என்னவோ ஒரு பெரிய அன்போ கருனையோ பாத்திரம் கோரவில்லை.

குறையென்று சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை என்றாலும் ஒரு சில என் உணர்வுகளை மட்டும் பகிர்கிறேன்.

நாவலில் கதைசொல்லும் முறை அதிவேகமாக இருந்தது அல்லவா அதனால் கதாபாத்திரம் எளிதில் மனதில் நிற்கவில்லை.(மீள்வாசிப்புக்கு காரணம் அதுவே).

உரையாடல் அதிகம் இல்லாததால் கதாபாத்திரத்திம் சற்றே தள்ளிதான் நிற்கிறது(இதை நீங்கள் உணர்ந்தே இருப்பீர்கள் என்று நினைக்கிக்றேன்).நாவல் பலரில் வாழ்க்கையை திட்டவட்டமாக கண்முன் காண செய்ய முயற்சிக்கிறது அதனால் இது அவசியமென்றே தோன்றுகிறது. கவிதையும் ,உரையும் ஒரு உரையாடலாக மாறி நெஞ்சில் நிற்கிறது. அதனால்தான் கவிதையை உரையாடலாய் மாற்றும் சக்திக்கு பெரும்பங்கு இருப்பதாக படுகிறது.கதாபாத்திரம் ஒன்றொடு மற்றொன்று உரையாடல் நிகழ்ந்தும் போது ஒரு புதிய வாசிப்பை நாவலில் நிகழ சாத்தியமிருந்திருக்கும்  என்று படுகிறது.(அதை தவிர்பது தான் உங்களின் யுத்தியாக இருக்காலம் )

சக்தியோ,ரகுவோ,கதைசொல்லியோ தங்களின் திறமையால் வாசகனை கட்டுகிறார்கள். அதனால் வாசகனுக்கு ஆமோதிக்கவே தோன்றுகிறது என்று நினைக்கின்றேன்.ஒருவேளை ஒரு கதாபாத்திரம் மீது இணக்கம் ஏற்பட்டு அதன் வழி முரண் வந்திருந்தால்.நான் செல்லும் தூரம் அதிகரித்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஒரு உரையில் நீங்கள் சொன்னீர்கள் 'சிறுகதை என்பது ஒருவகையாக விளையாட்டு போல தான் ஆனால் நாவல் அவ்வாறு அல்ல என்று'ஆனால் அந்த விளையாட்டை இங்கும் சற்று நிகழ்த்தியதாக பட்டது.

தவறான நம்பிக்கையின் மீது எழும் தற்பெருமை உண்மையைச் சந்திக்க நேரிடின் தன்னியள்பாக மாறிவிடும்.

                                                     -பா.சிங்காரம்
அவரவர் சரி அவரவருக்கு
                                                    -சு.பி

இந்த இரண்டு சொற்றொடர்களுக்கும்  இடையே காலத்தின் வளர்ச்சியை இங்கு நினைவுகூற தோன்றியது.முற்றிலும் நேர் எதிர் கருத்துக்கள் நிறைந்து,மாற்று விளிம்பியங்களும், கதைசொல்லும் முறையும் ,வேறு  வேறு குறல்களும் ,யுத்திகளும் 
காலத்தால் பெற்றெடுக்கப்பட்டதை இங்கு நன்கு உணர்கிறேன்.
(அதனால் தங்களின் கதை சொல்லும் முறையை நான் குற்றம் சொல்லவில்லை)

என்னை கட்டிக்கொண்டு வரிகளில் ஒன்று:

மன்னிக்கமுடியாதவற்றை மறப்பதற்கு ஒரே வழி அதை அப்படியே திரும்பச்செய்வது தான்.
                                              -சு.பி

அ.க .அரவிந்தன்.