Wednesday 25 May 2022

சிறை

 வானை அடைத்துப் பறந்தது மாபெரும் காகம். காகத்தை நோக்கி நிமிர்ந்த என் எண்ணம் முழுவதும் அதனால் உறிஞ்சப்பட்டிருந்தது. அது காலமற்ற வெளியா வெளியற்ற காலமா என்பதை என் பிரக்ஞை உணரவில்லை. நான் உடலா மனமா எண்ணமா இருப்பா ஏதுமின்மையா என்பதையும் என்னால் அறிய முடியவில்லை. ஆனால் கடற்கரையில் பதிந்த காலடிச்சுவடென என் பிரக்ஞை எங்கிருந்து நகர்கிறதோ அங்கெல்லாம் தன் தடத்தை பதித்துக் கொண்டே வந்தது.‌ எல்லாமும் இற்றுப்போகும் ஒரு நிலைக்கென நான் எப்போதும் ஏக்கம் கொண்டிருக்கிறேன். அதுதான் அப்போதெனக்கு நிகழ்ந்து கொண்டிருந்ததா? பறக்கும் காகத்தின் சிறகு வழியே காற்றென வீசுகிறது ஒளி. எத்தனை வண்ணங்கள் அவ்வொளிக்கு. காக்கையின் சிறகுகள் எந்நிறத்தையும் உள்ளனுமதிக்காத கருமை என்று எண்ணியிருந்தது எவ்வளவு பெரிய தவறு! அது ஒவ்வொரு நிறத்தையும் ஒளிரச் செய்து கொண்டிருந்தது. நான் ஒளியை உண்டு கொண்டிருக்கிறேன். வண்ண வண்ண ஒளிகள். எவ்வளவு காலமெனத் தெரியவில்லை. என் உடலில் ஆடை இருந்ததா என் உடலே இருந்ததா என்றெல்லாம் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் ஓரிடத்தில் இல்லை என்பது மட்டும் வெட்ட ஓங்கிய கொலைவாளென விரைத்திருக்கும் பளபளப்பான காக்கையின் சிறகின் வழியே அறிய முடிந்தது. எனக்கு வியர்க்கவில்லை. குளிரவில்லை. நாற்றமோ மணமோ நாசியில் ஏறவில்லை.‌ ஒலியோ ஒலியின்மையோ என் செவிகளில் இல்லை. இன்னதென எண்ணிக் கொண்டிருக்கும்போதே இன்னொன்றென மாறிவிடும் வண்ணங்களன்றி என் கண்களில் காட்சிகளும் இல்லை. ஆனால் நான் இருந்தேன்.‌என்னை நான் மிகத்தெளிவாக உணர்ந்தேன். நான் இருப்பதால்தான் இந்த இன்னதென விளக்கிவிட முடியாத பறத்தல் எனக்கு அச்சத்தை தருகிறது. சிறிய வீட்டில் பெரிதாகத் தெரிந்த பொருள் பெரிய வீட்டில் சிறிதாகவும் அசிங்கமாகவும் தெரிவதுபோல என் சின்னப் பிரக்ஞை அந்தப் பெரும் பிரக்ஞையுடன் முரண்டு கொண்டிருக்கிறதா?


என் பதற்றங்கள் என்னிடமிருந்தன.‌என் ரகசிய ஏக்கங்கள் அப்போதுமெனக்கு கிளர்ச்சி அளித்துக் கொண்டிருந்தன.‌‌ என் பயங்கள்‌‌ என்னை வதைக்கத் தவறில்லை.‌ ஆனாலும் நான் இருந்தேன். நான் இருப்பதை‌ உணர உணர மண்ணிலும் இறங்கிக் கொண்டிருந்தேன். வானம் காகத்தால் மூடப்பட்டிருந்தது. உச்சி வெயிலில் கிரகணம் நிகழ்ந்தது போல‌ சூழல் ஒளி கொண்டிருந்தது. மனிதர்கள் கண்ணுக்குத் தெரியத் தொடங்கினர். காற்றென வீசியது அக்காகத்தின் பெருமூச்சு. வெட்டவெளியில் படர்ந்த நிழலென அக்காகத்தின் கருவிழிகளை நான் கண்டேன். அக்காகம் அங்கிருக்கிறது என்ற எண்ணமே எனக்கு அச்சத்தையும் ஆறுதலையும் தந்து கொண்டிருக்கிறது. நான் என் பிரக்ஞையை மீட்டுக் கொண்டு கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். அது ஒரு கல்லூரி வளாகம் போலத் தெரிந்தது. வெகுகாலத்துக்கு முன்பு நான் அங்கே படித்திருக்கிறேன் அல்லது எதிர்காலத்தில் படிக்கவிருக்கிறேன். எதிர்பட்டவர்கள் அனைவரையும் நான் அறிந்திருந்தேன். அறிந்திருத்தல் என்றால் பெயரையோ நபரையோ அறிந்திருப்பதல்ல. அவர்களுடைய ஆழம் என் கண்களுக்குத் தெரிந்தது. அதுவே என்னை அச்சுறுத்தியது. இந்த அறிதல் நிகழ்ந்து கொண்டிருந்த கணத்திலேயே ஒரு பெண் ஓடிவந்து என்னை அறைந்தாள். நான் அங்கு ஆடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறேன் என்பது அவள் அறைந்தபிறகே எனக்கு உரைத்தது. நான் குன்றிப்போனேன். ஆனால் என் உடலை எனக்கு‌ மறைக்கத் தோன்றவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் நான் ஆடையில்லாமல் இருப்பது சரியென்றும் எனக்கும் தோன்றியது. ஆனால் அத்தோன்றல் என் அவமான உணர்வை அகற்றிவிடவில்லை. வெளித்தோற்றத்துக்கு கல்லூரி போலத் தெரிந்த அவ்விடம் தொடர்ந்து தன் முகத்தை மாற்றிக் கொண்டே வந்தது. மண்சுவர் கொண்ட ஒரு குடிசையில் பிரசவக் கவிச்சியுடன் ஒரு குழந்தை கிடக்கிறது. தெளிந்த நீரோடும் வாய்க்காலில் சேமையிலையில் நீர்சேந்திக் குடிக்கிறான் ஒரு சிறுவன். இன்னும் முடிக்கப்படாத தார்ச்சாலையின் மணத்தை நுகர்ந்தபடி சைக்கிளில் செல்கிறான் மற்றொருவன். வெள்ளைச் சீருடை வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டியிருக்க மிட்டாய் தின்கிறாள் ஒரு சிறுமி. பம்புசெட் அறையில் இருந்து முனகல்கள் கேட்கின்றன. வாழைத்தோப்புகளில் தவளைகள் குதிக்கின்றன. ஈரம் சொட்டும் தலையுடன் கோலமிடுகின்றனர் தாவணி அணிந்த பெண்கள். கைகளை உதட்டுக்கு நேரே குவித்து கண்மூடி கடவுளை வணங்குகிறாள் ஒருத்தி. மூக்கைத் துளைக்கிறது துளசியின் மணம். விந்தின் நாற்றம் சூழ நாக்கு வெளித்தள்ளி கயிற்றில் தொங்கிக் கிடக்கிறான் ஒரு ஆள். சிறுவனொருவனை அழுதுகொண்டே புணர்கிறான் நூறு கிலோ எடை கொண்ட மற்றொருவன். கோவில் மறைவில் விபூதி பூசி விட்டு முத்தமிட்டு ஓடுகிறாள் ஒருத்தி. சோற்றை உருட்டி விழுங்குகிறாள் ஒரு கிழவி. கண்விழித்துப் படித்துக் கொண்டிருப்பவன் கழிவறைக்கு எழுந்து ஓடுகிறான். புகையும் அடுப்புக்கு எதிரே அமர்ந்து கொண்டிருப்பவளின்‌ முதுகு நனைந்து போயிருக்கிறது. எழுதிக் களைத்தவர் கைகளில் நெட்டி முறிக்கிறார். முதன் முறை புணர்ந்த ஆண்குறியில் ரத்தம் வழிகிறது. ரசமட்டம் வைத்து சுவற்றின் நேர் பார்க்கிறார் கொத்தனார். பரவசத்துடன் காதல் கவிதை எழுதிக் கொண்டிருந்தவன் எழுதி முடித்த பரபரப்பில் சுயமைதுனம் செய்து கொள்கிறான். அடுத்தவன் மனைவியை வெறியுடன் புணர்கிறான். தத்துவ நூல்களை ஆழ்ந்து படிக்கிறான். முழுதாக தன்னை நிர்வாணப்படுத்திக்கொண்டு விஷம் குடிக்கிறாள். தூங்க இயலாமல் தவிக்கிறான். காலையில் எழுந்து சோம்பல் முறித்தவர் மாரடைத்து விழுகிறார். நெடி கொண்ட வேப்பங்குச்சியால் சுளீரென‌ கையில் அடிவிழுகிறது. நீலத் தாவணி அணிந்த பள்ளி மாணவியின் காலில் விழுந்து அழுகிறார் மனைவியை இழந்த கண்ணாடி அணிந்த ஆசிரியர். புறக்கழுத்தில் வெட்டிய அரிவாளை உருவ முடியாமல் வெட்டப்பட்டவனின் உடல் நீர் நிரம்பிய குடம்போலத் தள்ளாட அங்கேயே விட்டுவிட்டு ஓடுகிறான். யாருமில்லாத வகுப்பில் இரண்டு மாணவர்கள் கஞ்சா இழுக்கின்றனர். மறுநாள் திருமணத்துக்கென விடிய விடிய தாம்பூலப்பை போடுகின்றனர். குழந்தையின் முகத்தில் வேறொருவனின் சாயலைக்கண்ட தகப்பன் பிரசவ அறையைவிட்டு பிணம்போல வெளியேறுகிறான். ஒரே மூச்சில் ஒரு பியர் பாட்டிலை குடிக்கிறாள். மறுநாள் வேலை போய்விடும் என்று தெரிந்தவன் அன்றிரவு முழுக்க ஒரு வேலையை முடித்து நல்ல பேர் வாங்கப் போராடி அது இயலாததால் தூக்கம் அழுத்தும் காலை நான்கு மணிக்கு எச்சில் ஒழுக இனிய சிரிப்புடன் உறங்கும் மகளின் முகம் நினைவிலிருக்க மணிக்கட்டை அறுத்துக் கொள்கிறான்.


பேருந்து நிலையத்தில் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து பிச்சை கேட்கிறார் முதியவர். ஆர்டர் பண்ணிய பிரியாணி வருவதற்கென நாக்கில் எச்சில் ஊறக் காத்திருக்கிறான். மாதவிடாய் தொடங்காத பெண்ணை அறுப்பு முடிந்த வயலில் கிடத்திப்புணர்கிறார் அவள் தாத்தா வயதுடைய தலைநரைத்தவர். கொளுத்தும் வெயிலில் கம்மங்கூழ் வாங்கிக் குடிக்கிறான். செருப்பை கழற்றிவிட்டு சாப்பிடத் தொடங்குகிறான். இரவு முடியுமிடத்தை பார்ப்பதற்காக கண்விழித்து அமர்ந்திருக்கான். குறுஞ்செய்திகள் அனுப்பி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். வானத்துக்கு அந்தப் பக்கம் போய்விடுகிறான். அலுவலக கணினி முன்னே அமர்ந்து கொண்டு வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறான்.‌ பற்களை கடிக்கிறாள். ஒரே பைக்கில் சென்ற நான்கு நண்பர்களில் இரண்டு பேர் லாரிக்கு அடியில் செல்ல அதில் ஒருவன் தலை நசுங்குவதைப் பார்த்து ஒருவன் சிரிக்கிறான் மற்றொருவன் வாந்தி எடுக்கிறான். கழிவறையில் அமர்ந்து குறிக்குள் விரல் வைத்து நோண்டும் தோல்வியைச் பார்த்தவள் வாயில் ஒழுகும் எச்சிலை துடைத்துக் கொள்கிறாள். பற்குச்சியை வாயில் வைத்திருக்கும் வீங்கிய கண்களுடன் கண்ணாடியை பார்க்கிறான். கால் நொடித்து பக்கத்தில் நடந்த பெண்ணின் பெரிய முலையில் விழுந்தவனுக்கு செருப்படி விழுகிறது. மூத்த எழுத்தாளர் கடைசி காலத்தில் கவனிக்க ஆளின்றி தனிமையில் குடித்து செத்துக் கிடக்கிறார். வேலை முடித்து வந்து ஆசையாய் தூக்கிய குழந்தை வியர்வை நாற்றத்தால் இறங்கிக் கொள்கிறது.


யூடியூப் பார்த்து நடனம் கற்றுக் கொள்கிறாள். இடையளவு குறையவில்லை என ஏங்கி அழுகிறான். மீண்டும் பால் பொங்கிவிட்டதற்காக தன்னையே கடிந்து கொள்கிறான். மூங்கில் கூடையில் பீங்கான் பொம்மைகளின் தலைச்சுமை அழுத்த மயங்கி விழுகிறாள். மீண்டும் ஆத்திரத்தில் அலைபேசியை உடைக்கிறான். காலை மலர்ந்த செம்பருத்தி பூ ஒரு பெருமூச்சுடன் இரவுக்குள் விழுகிறது. புட்டத்தின் அருகிலிருக்கும் தன் புன்னை நக்குகிறது ஒரு நாய். தன் தனிமையை நினைத்து அன்றும் அழுகிறது சூரியன். உலகின் அத்தனை கடல்களும் பொங்குகின்றன. பிரபஞ்சம் என் பிரக்ஞைக்குள் மூழ்கிச் சிறைபடுகிறது. நான் கண் விழிக்கிறேன். என்னுள் ஒரு பிரபஞ்சம் சிறைபட்டிருப்பதே தெரியாமல் என் துக்கங்களை எடுத்து அணிந்து கொள்கிறேன். 


Thursday 5 May 2022

சரிவு

'அவன எதுக்கு உள்ளாற இழுத்து உடணும்' என்று சொன்னபடியே அம்மா என் கையைப் பற்றினாள். வாஞ்சை கூடிய பிடி. நான் அப்படியே நின்றுவிட நினைத்தேன். 


ஆனால் கண்ணாடியில் முகம் பார்த்தபடி சட்டை போட்டுக் கொண்டிருந்த அப்பா 'விடுடி அவன' என்றார். அம்மா பிடியை விடாமல் கண்ணாடிக்குள்ளிருந்த அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். கோபம் ஏறிய அப்பாவின் முகம் அம்மாவைப் பார்த்தது. அம்மா கையை விட்டுவிட்டாள்.‌ எனக்கு ஏமாற்றமாக இருந்தது. முன்பு போல‌ இல்லாமல் அப்பாவுடன் வெளியே செல்லும் விருப்பம் எனக்கு குறைந்து கொண்டே வந்தது. எதிர்விகிதத்தில் அவருக்கு என்னை உடனழைத்துக் கொண்டு செல்லும் விருப்பம் கூடிக்கூடி வந்தது.


'எவனோ ரெண்டாம் பங்காளி மூணாம் பங்காளி கல்யாணம் எழவுக்கெல்லாம் கூட்டிட்டு போனிய...இப்ப கோர்ட் ஸ்டேஷன்னு கூட்டிப்போய் அவனக் கெடுக்கணுமாக்கும்' என்று வாதம் புரியும் தொனியில் துணிகளை மடித்து வைத்துக் கொண்டே அம்மா கேட்டாள். அவளால் சீராக மடிக்கப்பட்டிருந்த மயில்கழுத்து நிறப் புடவையை பிரித்து அதன் மென்மையில் கையோட்டிக் கொண்டிருந்தேன்.


'ஆம்பளன்னா ஊர்ல என்ன நடக்குதுன்னெல்லாம் தெரியணும்டி... சும்மா வீட்லயே பொத்தி வச்சு மடப்பயலா போறதுக்கா' என்று சொன்னபடியே என் கையிலிருந்த புடவையை வாங்கி கட்டிலில் வீசினார்.‌ அது களைந்து விழுந்தது.


சிவப்பு ஓடுகள் புழுதியால் மூடப்பட்ட ஒரு ஓட்டுக் கட்டிடம்தான் காவல் நிலையம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.‌ டிவிஎஸ் பிப்டியை வாசலில் நிறுத்திவிட்டு என்னையும் அழைத்துக் கொண்டு அப்பா உள்ளே நுழைந்தார்.


தன் முன்னே அழுது கொண்டிருந்த ஒரு கருநிறப் பெண்ணிடம் ஏதோ கடுமையாகப் பேசிக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் அப்பாவைப் பார்த்ததும் புன்னகையுடன் தலையை அசைத்து 'வாங்க சார்' என்று வரவேற்றார். திரும்பும் போது அவர் தலையிலிருந்த பெரிய கொண்டையைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது.‌ ஆனால் அதைவிட பயம் அதிகமாக மனதைக் கவ்விப் பிடித்திருந்ததாலோ என்னவோ நான் சிரிக்கவில்லை.


அப்பா அந்த கருநிறப்பெண்ணை கடுமையாகப் பார்த்தபடியே உதவி ஆய்வாளருக்கு எதிரே அமர்ந்தார்.


'பையனா?' என்று என்னைப் பார்த்துவிட்டு அப்பாவை கேட்டார்.‌ அப்பா ஆமோதிப்பாக தலையசைத்தார்.


நான் அப்போதுதான் அந்தப் பெண்ணிடமிருந்து சற்று தூரம் தள்ளி தமிழ் மாமா நிற்பதை கவனித்தேன்.‌ அவர் முகத்தில் அழுத கண்ணீர் கோடுகள் காய்ந்திருந்ததை பார்க்க ஒருவித ஒவ்வாமை எழுந்தது.‌ அழும் ஆண்கள் பலகீனமானவர்கள் என்று அந்த வயதில் நம்பியிருந்தேன். தமிழ் மாமாவுக்கு அருகிலேயே எனக்கு பெயர் தெரியாத என் ஊர்க்காரர்கள் சிலர் நின்றிருந்தனர்.‌‌ அவர்களுடைய உடல்மொழி மாமாவை அடிப்பது போல இருந்தது.‌ நான் மேலும் பயந்து போனேன்.


'இப்ப என்னடா சொல்ற நீ?' என்று சட்டென எழுந்து மாமாவை நோக்கிச் சென்றார் அப்பா. மாமா பயந்து பின்வாங்கினார்.


'சார் வக்கீல் வர்ற டைம். இவள நான் இங்க கூட்டிட்டு வந்ததுக்கே அந்த ஆளு என்னைய கொடைவான். ஒழுங்கா கேட்டு வைங்க' என்று உதவி ஆய்வாளர் சலிப்புடன் சொன்னார்.


அப்பா மாமாவை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்கு வெளியே இருந்த டீக்கடைக்கு வந்தார்.


'உட்காரு' என நாற்காலியை மாமாவிடம் காட்டினார்.


அவர் அமர்ந்ததும் 'தமிளு இவெல்லாம் நமக்கு ஒத்துவரமாட்டா. ஒரே ஜாதிதான். அதுக்குன்னு வந்தாருகுடி அதுவும் அவ அப்பன் கூலி வேலைக்குப் போறவன். இவல்லாம் நமக்கு ஒத்து வருமா சொல்லு' என்று தணிவாகச் சொன்னார்.


என்னைப் பார்த்து 'நீ அங்க போயி நில்லு' என்றார்.


நான் என் காதுகளை அவர்களிடம் விட்டுவிட்டு சற்று தள்ளி நகர்ந்தேன்.


அப்பா மேலும் தணிந்த குரலில் சொன்னார்.


'வயசுல இப்படி கை நெனைக்குறது சகஜம்தான். அதுக்குன்னு கல்யாணம் வரைக்கும் போகமுடியுமா சொல்லு'


'இல்லண்ணே அவ என்ன நம்புறா' என்று மாமாவின் குரல் மேலும் தணிவாக ஒலித்தது. தமிழ் மாமா அப்பாவின் அத்தை மகன்தான் என்றாலும் அப்பாவை அண்ணன் என்றுதான் கூப்பிடுவார். ஊரில் அவர் வயதை ஒத்த பலரும் அண்ணன் என்று மரியாதையாக அழைப்பவரை அத்தான் என்றோ மச்சான் என்றோ அழைக்க அவருக்கு கூச்சமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


'என்ன லவ் பண்றியாக்கும்' அப்பாவின் இளக்காரமான குரல் எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. தமிழ் மாமாவின் உடலில் ஒரு குன்றல் உருவானது.‌ அந்தக் குன்றலால் அவரை மேலும் வெறுத்தேன். 


'இங்கபாரு.‌ அவ ஏற்கனவே ரெண்டு தடவ புள்ள அழிச்சிருக்கா. அதுக்கு சாட்சியெல்லாம் ரெடி பண்ணியாச்சு. உன்னைய பின்னாடி ஏதாவது மெரட்டுவான்னு பயந்தேன்னா புள்ள அழிச்ச கேஸ்ல அவள உள்ளத்தூக்கி போட்றலாம். அவ மெரட்டலுக்கு எல்லாம் பயந்துறாத என்ன' என்று மாமாவின் தோளில் தட்டினார்.


அப்பா ஏதோ தவறாகச் சொல்கிறார் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் மாமாவின் முகம் அப்பா சொல்வதை ஏற்றுக் கொள்வது தெரிந்தது. அந்த ஏற்பினை உணர்ந்து கொண்டவராக அப்பா மேலும் சொன்னார்.‌ அவர் குரல் இன்னும் தணிந்தது. 


'வயசுல இப்படித்தான் எவளோட நாத்தமாவது புடிக்கும். ஆனா காலத்துக்கும் அந்த நாத்தத்தோட வாழ முடியுமா சொல்லு.‌ அவளப்பாரு கரிக்கட்ட மாதிரி இருக்கா. நடந்து போனான்னா பேண்டுட்டு இருக்கிறவன் கூட எந்திரிக்க மாட்டான்.‌ இவளோட காலம்பூரா ஓட்டப்போறியா'


அப்பா மெல்ல மெல்ல மாமாவை ஜெயித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மாமாவின் முகம் சற்று தெளிந்திருந்தது. 


'உள்ளபோறப்ப அவளும் அவ அம்மாவும் என்னென்னவோ மாய்மாலமெல்லாம் காட்டுவாளுங்க,கால்ல வந்து விழுவாளுங்க,நெஞ்சுல அடிச்சிகிட்டு அழுவுவாளுங்க,சாபங்கொடுப்பாளுக,மெரட்டுவாளுக...ஆனா நீ சொல்ல வேண்டியது 'எனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல' இதையே திரும்பத் திரும்ப சொல்லு'  


தமிழ் மாமா அப்போது அப்பா அவரிடம் ஒரு கத்தியை கொடுத்து அந்த கருநிறப் பெண்ணின் தலையை வெட்டச் சொல்லி இருந்தால்கூட செய்திருப்பார் என்று தோன்றுகிறது. அவளைக் கைவிட அவர் சம்மதித்தது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.


மாமாவை வெளியில் நிறுத்திவிட்டு அப்பா என்னை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்குள் போனார். அப்பெண்ணின் அம்மாவும் - அவளும் அட்டைக் கருப்பு - வக்கீலும் வந்திருந்தனர்.


வக்கீல் அப்பாவைப் பார்த்து சிரித்தார்.


'என்ன சண்முகம் மச்சானுக்கு ஓத வேண்டியதெல்லாம் ஓதிட்டீங்களா' என சற்று கசப்பு தொனிக்க கேட்டார்.


'தேவல்லாத பேச்செல்லாம் எதுக்கு தம்பி. படிச்சு வக்கீலாகி நம்மாளுக கேஸெல்லாம் முடிச்சு வைப்பேன்னு பாத்தா நீ இப்படி ப்ரோக்கர் வேல பாத்துட்டு திரியுற. நான் ஏதும் உன்ன கேட்டனா' 


வக்கீலின் முகத்தில் அந்த எதிர்பாராத அடி பதற்றத்தை உருவாக்குவது தெரிந்தது. அவர் குரலில் இணக்கம் குறைந்து மீண்டும் வக்கீலானார்.


'மேடம் நீங்க பையன உள்ள வரச்சொல்லுங்க. அவஞ்சொல்லட்டும் இந்தப் பொண்ண லவ் பண்ணினா இல்லையான்னு' 


அப்பா சற்று கோபமாக இடைமறித்தார். 


'பையனெல்லாம் வரசொல்ல முடியாது'


எனக்கு அப்பா ஏன் அப்படிச் சொன்னார் எனப் புரியவில்லை.‌ நான் அந்தக் கருநிறப்பெண்ணைப் பார்த்தேன். கழுத்து எலும்பின் மேல் ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி. குளத்தின் நடுவே கிடக்கும் பழுத்த இலை போல அவ்வளவு அழகாக இருந்தது அந்தச் சங்கிலி. நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் அழகியாகிக் கொண்டிருந்தாள். மாமாவின் அழகும் அவளிடம் சேர்ந்தது போலிருந்தது. சோகமே உருவென நின்று கொண்டிருந்தவளுக்கு உள்ளே எங்கோ ஒரு மூலையில் ஒருத்தி சற்று சலிப்புடன் இந்த அரசாங்க சூதுகளை கவனித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. கதையால் நனைக்கப்பட்ட பெண் எப்படி இருந்தாலும் அழகியாகிவிடுகிறாள். இப்போது அவள் உடல் என் மனதில் பதிந்த கதையின் முக்கிய அங்கமாகி இருந்தது. அப்பா ஏன் பதறுகிறார் எனப் புரிந்தது.


வக்கீலுக்கும் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிக் கொண்டிருந்தது. என்ன செய்து அவள் தமிழ் மாமாவை சம்மதிக்க வைக்கப் போகிறாள் என்பதை மட்டும் என்னால் ஊகிக்க முடியவில்லை. அப்பா சொன்னது போல அவள் அழவோ காலில் விழவோ போவதில்லை என்று நன்றாகவேத் தெரிந்தது. அதை அப்பாவும் உணர்ந்தவராக வெளியே ஓடினார். விரைவாக நடப்பவரெனினும் அவரிடம் ஒரு நிதானம் எப்போதுமிருக்கும்.‌ அந்த நிதானத்தை அவர் இழந்திருந்தார்.


கடைவாசலிலேயே உட்கார்ந்திருந்த தமிழ் மாமாவிடம் விரைவாகச் சென்றார்.‌‌ அவர் எழுவதற்குள்ளாகவே 'அந்தத் தேவிடியா கண்ண மட்டும் பாத்திராத' என்று முகத்துக்கு நேரே விரலை நீட்டி எச்சரித்தார். மாமா உள்ளே வந்தபோது மொத்த காவல் நிலையமும் அமைதியாக இருந்தது. மாமா உதவி ஆய்வாளரைப் பார்த்து 'மேடம் இவள எனக்கு தெரியும்.‌ஊர்க்காரப் பொண்ணு. ஆனா அவசொல்ற‌ மாதிரி நான் அவள லவ்வெல்லாம் பண்ணல. இனிமே இதுமாதிரி என்ன‌ இவ டார்ச்சர் பண்ணாம நீங்கதான் கண்டிச்சு விடணும்' என தமிழ் மாமா திக்கித் திணறி சொன்னார்.


அனைவருக்கும் அது பொய்யென்று தெரிந்தது. அப்படி ஒரு வெளிப்படையான ஆனால் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டிய ஒரு பொய் சொல்லப்படும்போது சூழலில் ஒரு மௌனம் உருவாவதை பலமுறை கவனித்து இருக்கிறேன்.‌ சமீபத்தில் கூட அதாவது நேற்று தமிழ் மாமா இறந்தவன்று நான் இரங்கல் கூட்டத்தில் என்ன பேசினேன்? வேதாரண்யத்தில் இரால் பண்ணையில் பங்குதாரராகி லட்ச லட்சமாக சம்பாதித்து சூப்பர் மார்க்கெட் பால்பூத் ஐஸ்க்ரீம் பார்லர் என ஏகப்பட்ட தொழில்கள் செய்து வளர்ச்சி அடைந்து ஊரெல்லாம் காசு கொடுத்து காதலிகளை உருவாக்கிக் கொண்டு அவர்கள் கொடுத்த சீக்கில் செத்துப்போனவர் தமிழ் மாமா. ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார். அவரைப்பற்றி உழைப்பால் உயர்ந்த உத்தமர் மனிதநேயம் மிக்கவர்  என்றெல்லாம் நான் பேசியபோது அக்கூற்றுகளில் இருந்த பாதி பொய்மைக்கே கூட்டம் அமைதியானதே! ஆனால் அன்று காவல் நிலையத்தில் அந்த அமைதியை அக்கருநிறப்பெண் வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டாள் என்று தோன்றுகிறது. ஒரு மெல்லிய மூக்குறிஞ்சல் கைகளை தழைத்துவிட்டதால் கண்ணாடி வளையல்கள் முட்டிக்கொள்ளும் ஒலி அவள் புடவையின் சரசரப்பு. இவற்றால் தாக்குண்டு தமிழ் மாமா முகத்தை நிமிர்த்திய போது அவள் கூந்தலில் இருந்து விழுந்த மஞ்சள் ரோஜா. தமிழ் மாமா அழுதுகொண்டே அவள் காலில் போய்விழ இவ்வளவு போதுமானதாக இருந்தது.‌ அப்பா என் மணிக்கட்டு வலிக்கும்படி கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு யார் முகத்தையும் பார்க்காமல் காவல் நிலையத்தைவிட்டு வெளியேறினார். 


அப்பா அதன்பிறகு சரிந்து கொண்டே இருந்தார்.‌ அவரிடமிருந்த மிடுக்கும் அலட்சிய பாவனையும் காணாமல் போனது. நானுமே அவருடன் சேர்ந்து சரிந்து கொண்டிருந்தே‌ன் என்று எட்டு வருடங்கள் கழித்து ஒரு உதவாத பொறியியல் கல்லூரிச் சான்றிதழுடன் தமிழ் மாமாவிடம் ஏதாவது வேலை வாங்கித் தரும்படி அப்பா என்னையும் அழைத்துக் கொண்டு போய் நின்றபோதுதான் எனக்குத் தெரிந்தது.


அன்று நானும் அப்பாவும் வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்பாகவே அம்மாவுக்கு அவளுக்கே உரித்தான பிரத்யேக வழிகளின் மூலம் காவல் நிலையத்தில் நிகழ்ந்தவை தெரிந்துவிட்டன. தனக்கே பதினோரு வயது மகள் இருக்கிறாள் எனினும் பொதுவாக காதலின் வெற்றி பெண்களுக்கு அளிக்கக்கூடிய உற்சாகத்துடன்,அந்த உற்சாகத்தை கவலையென மாற்றிக் கொண்ட தொனியில் 'என்ன அவ கால்ல போய் விழுந்துட்டானாமா' என்று கேட்டாள். 


இன்னும் வாசலிலேயே நின்று கொண்டிருந்த அப்பா 'அறைஞ்சு பல்லப் பேத்துருவேன். நாடுமாறி முண்ட...என்ன கொழுப்பெடுத்து திரியுறா' என்று அம்மாவை ஓங்கி அறைந்துவிட்டு புறப்பட்டுவிட்டார். இதுபோல அடிவாங்கும் சமயத்தில் எல்லாம் உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த அநீதியும் இழைக்கப்பட்டவள் போல அம்மா என்னை பார்ப்பாள். நானும் கரைந்து அழுதுவிடுவேன். ஆனால் அன்று அம்மா அடிவாங்கியது எனக்கு திருப்தியாக இருந்தது.‌‌ சாய்மானத்துக்கு என என் முகத்தை ஏறிட்டவள் அதிலிருந்து திருப்தியைக் கண்டு சற்று நடுங்கிப்போனாள். 


நான் நடுக்கத்தை கூட்டும் படி 'அவர்தான் கோவமா இருக்காருன்னு தெரியுதுல்ல அப்புறம் ஏம்மா வெவஸ்தகெட்டத்தனமா பேசுற?' என்று சொல்லி உள்ளே போனேன். அப்பா களைத்துப்போட்ட மயில்கழுத்து நிறச்சேலை மடித்து வைக்கப்பட்டிருந்தது. நான் சரியத் தொடங்கியது மிகச் சரியாக அந்த தருணத்தில் இருந்துதான்.