Monday 2 September 2024

ஈசல் - எதிர்வினைகள் 2

ஈசல் சிறுகதை 


ஈசல் - எதிர்வினைகள் 1


ஈசல் என்றொரு சிறுகதை வாசித்தேன். கொஞ்சம் விஞ்ஞானம், கொஞ்சம் தத்துவம், கொஞ்சம் சமூகம், கொஞ்சம் மானுடம் எனச் செல்லும் பிரமாதமான எதிர்காலக் கதை.  


பல காலமாக சுரேஷ் ப்ரதீப்பின் பதிவுகளை வாசித்துக் கொண்டிருந்தாலும், அதன் வழி 2010க்குப் பின் எழுத வந்தோரில் எனக்குப் பிடித்தவராக இருந்தாலும், மனதளவில் அவருடன் ஒரு வித நெருக்கம் / மதிப்புக் கொண்டிருந்தாலும், நான் படிக்கும் அவரது முதல் புனைவாக்கம் இதுவே. அவர் தொழில்நுட்பம் அல்லாத துறையில் பணியில் இருக்கிறார். ஆனால் ஓர் AI செயலியின் சாத்தியங்களைப் புரிந்து கொண்டு அதன் எதிர்காலத்தைச் சிறப்பாகக் கற்பனை செய்திருக்கிறார் என்பதே என் வியப்பு. 


நிச்சயம் வாசியுங்கள்.


எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் (முகநூலில்)


ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக ஆனந்த விகடனில் சரத்குமார் அவர்களின் ஒரு பேட்டி வெளியாகியிருந்தது. அவரிடம் இருந்த செங்கல் போன்ற செல்போனைப் பற்றியது அது. அதைப்பற்றி அவர் அவ்வளவு விதந்தோதிப் பேசியிருந்தார். அவருக்கு அழைப்பு வந்தாலும், அவரே அழைத்தாலும் பணம் கட்டவேண்டும். இவ்வளவு செலவேறியது தேவையா என்று கேட்டதற்கு எங்கிருந்தாலும் என்னைத் தொடர்பு கொள்ள முடியுமே அதற்கான செலவுதான் அது என்று சொல்லியிருந்தார். ஆனால் வெகு விரைவில் அது பயன்பாட்டிற்கு வந்தது. இன்றைக்கு வெளியில் போகும்போது யாராவது யாரையாவது சத்தமாய் கூப்பிட்டாலும் போன் பேசிக்கொண்டு இருப்பாங்க என்று இயல்பாய் நாம் கடந்து போகிற நிலையில்தான் இருக்கிறோம். இப்பொழுது துப்புரவுப்பணியாளர்கள் காலையில் அழைத்து குப்பையை கீழே கொண்டுவாங்க என்று சொல்கிறார்கள். அப்போது இதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். இன்னும் தொழில்நுட்பம் வளரும் வேகத்தில் இவைகள் எல்லாமே சாத்தியம்தான் என்றும் தோன்றுகிறது. இப்போதே மனிதர்களுக்கு ஒவ்வொரு இனத்திற்கும் அவங்களுக்குப்பிடித்த வரலாறு இருக்கிறது. இயல்பாய் உருண்டையாய் வளரும் பழங்கள் எல்லாம் சதுரமாகவும், இதயவடிவிலும் வளரும்படி செய்து விட்டோம். உயரமாய் வளரும் மரங்களை அறுவடை செய்ய வசதியாய் குட்டையாய் மாற்றிவிட்டோம். 6 மாதப் பயிர்களை 3 மாதத்திற்கும் 10 வருடம் கழித்து பயன் தரும் மரங்களை 3 வருடங்களில் பலன் தருவதுபோலவும் செய்து விட்டோம். நேற்று ஒரு நண்பரை சந்திக்க குடும்பமாய் ஒரு மிகச்சிறிய கிராமத்திற்கு சென்றிருந்தோம். எல்லா மரங்களுமே மிகக்குட்டையாய் இருந்தது. நின்று கொண்டே காயும் பழமும் பறித்துவிடலாம் என்பதுபோல. அதுபோல மனிதர்களையும் ஒருசிலரின் நோக்கங்களுக்கேற்ப அறுவடை செய்யவே இந்த தொழில்நுட்பங்கள். ஒருநாள் வீட்டில் என் கணவர் பால் காய்ச்சும்போது அப்படியே கைதவறி மேடைமேல் கொட்டிவிட்டார். இதைக்குறித்து நாங்கள் யாருமே ஒன்றும் பேசவில்லை. ஆனால் போனை திறந்தவுடன் பால் கொட்டி துடைக்கும் வீடியோக்கள் அப்படியே வரிசையாய் வந்ததைப் பார்த்து ரொம்ப பயமாகவே போய்விட்டது.நீங்கள் எழுதியிருக்கிறபடி நடக்காது என்று நாம் சொல்லவே முடியாது. நடக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. பயமாகவும் இருக்கிறது. சரளமாய் படிக்க முடிந்தது. சுரேஷ்க்கு எப்போதும் இருக்கும் நிகழ் கால கசப்பு அப்படியே எதிர்காலத்திற்கும் போய்விட்டது.



--

With Regards,


T.Daisy,

Trichy.

நிகழ்காலமும் எதிர்காலமும் கலந்து கட்டிய தொகுப்பாகப்பாகத்தான் நான் புரிந்து கொள்கிறேன். 

எதிர்காலம் இத்தனை கொடூரமாக மாறிப் போகக் கூடும் என்பதை மறுக்க முடியாத நிலை தான் நிதர்சனம். நினைவுகள் தான் அனைத்திற்கும் காரணம் எனும் கருத்து மிக வித்தியாசம் 😊

ஜீரணிக்க சற்றுக் கடினமான கருத்தும் கூட. 

ஈசல் கதை எழுத்தாளர் சுஜாதா வின் நடை ஆனால் மிக வித்தியாசமான நம்மைச் சுற்றியுள்ள உலகை, நடப்புகளை, மனிதர்களை நன்கு கூர்ந்து கவனித்து எழுதப்பட்ட கற்பனைக் கதை 👍


மீனா மனோகர்


ஈசல் - எதிர்வினைகள் 1

ஈசல் சிறுகதை


ஈசல் கதையைப் படித்தேன். சில்ற ,பொன்னுலகம் கதைகள் வரிசையில் வைக்கக்கூடிய கதை. ஆனால் இது அவை இரண்டையும் விட முக்கியமானது. கடைசி வரியை மட்டும் தவிர்த்திருக்கலாமோ என்று முதலில் தோன்றியது. பிறகு அதுவும் சரிதான் என்று சமாதானம் உண்டாகிவிட்டது. எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய கற்பனைகள் / கவலைகள் மிகையாகும்போது சலிப்பு ஏற்படுகிறது. இதில் வரும் அறிக்கை கொஞ்சம் அப்படி எண்ண வைத்தது. நினைவின் சுமை பற்றி அவ்வப்போது யோசிப்பதுண்டு. ஞாபகங்கள் மனிதனுக்கு பலமா பலவீனமா என்ற குழப்பம் தீரவில்லை. சலபதி ஒரு இடத்தில் பேசும்போது இந்தக் கதையில் கடைசியில் வரும் கடவுளின் இருப்பிடம் போன்ற ஓர் இடம் சூரியப் புயலில் சேதமடைந்தால் ஏற்படும் இழப்பு பற்றிக் கூறினார். அதுவும் இதேபோன்ற ஒரு கதைக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கலாம்.


ஶ்ரீனிவாச கோபாலன்


*****

சிறுகதை அற்புதமாக வந்துள்ளது. படித்ததும் ஒருவித நடுக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு அபாயத்தை முன்னறிவிப்பு செய்வதுபோல் இருக்கிறது. 


வாழ்த்துக்கள் 💐 


நன்றி!


காமராஜ் மணி


***** 

நிச்சயமாக இது ஒரு பாய்ச்சல் தான். முடிவில் இறைவன் தானாகவே உருவாக்கப்பட்டிருப்பதை அறியும் போது அதிர்ச்சி உருவாகவில்லை. என்ன அது AI மூலமாக உருவாக்கப்பட்டது அழிப்பது சாத்தியமில்லை. 😀❤️😀

இறைவன் உருவகம் மிகப் பொருத்தமாக அதன் காரணங்களோடு பண்டைய புராண காரணங்களான படைத்தல் அழித்தல் ஆக்கம் போன்ற கருதுகொள்களை அடிப்படையாகக் கொண்டு தானே உருவாகியிருக்கிறது. இந்த இறைவனை அஃறிணையில் தான் சொல்ல முடியும்.


எம்.தண்டபாணி


Friday 30 August 2024

ஈசல் - சிறுகதை

கண்கொடுத்தவனிதம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த ஒரு இளம் பெண் மருத்துவர் பணிபுரிந்தார். அழுக்காகவும் பரிதாபமாகவும் இருக்கும் சிறுவர்களான எங்களைப் பார்க்கும் அரசாங்க மருத்துவர்கள் எரிச்சலும் இரக்கமும் கொள்வது இயல்பு. ஆனால் இந்தப் பெண் எங்களை அருகில் அழைத்து வைத்துப் பேசினார். 


'மாத்திரை எல்லாம் ஒழுங்கா போடணும் சரியா?'


'தினமும் தலைக்கு ஊத்திக்கணும் சரியா?'


'தலைக்கு எண்ணெய் வைக்கணும் சரியா?'


அவருடைய ஒவ்வொரு 'சரியா'வும் அவ்வளவு அழகாக இருக்கும். பொதுவாக நான் பிறந்த ஊரான திருவாரூரில் 'ச'வை 'ஸ' போலத்தான் உச்சரிப்போம். அதனாலோ என்னவோ அவர் அழுத்தந்திருத்தமாக 'ச'(Cha) உச்சரிப்பது எனக்குப் பிடித்துப்போனது. இளைஞனாகிவிட்ட பிறகு அந்த உச்சரிப்பில் தொனிக்கும் கொஞ்சலும் வாஞ்சையும் மனநிம்மதியைக் கெடுப்பதாகிவிட்டன. அதனாலோ என்னவோ எங்கள் நிறுவனம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவுசார் செயலிக்கு ChattAI என்று பெயரிட்டேன். செயலியின் சின்னமாகவும் ஒரு கோட்டோவியம் போன்ற சட்டைதான் இருந்தது.


செயலி உருவாக்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் தரவிறக்கம் செய்திருந்தனர். ஆறு வருட உழைப்பும் பிரத்யேகமான மொழியில் எங்கள் செயலி அளிக்கும் பதில்களும் பயனர்களை வேறு பக்கம் நகரவிடாமல் செய்திருந்தது. தொடக்கத்திலேயே இருபது மொழிகளில் எங்கள் செயலி மிகச் சரளமாக இயங்கியது. எண்பது மொழிகளில் அடிப்படையான கேள்விகளுக்கு பதில் அளித்தது. ஒரு தேடல் பொறியாகவே முதலில் எங்கள் செயலி செயல்பட்டது. செயலியை வெளியிட்ட முதல் மூன்று மாதங்கள் இருபது பேர் கொண்ட எங்கள் குழுவில் யாருமே உறங்கவில்லை. எந்தெந்த இடங்களில் செயலி தடுமாறுகிறது என்னென்ன மாதிரியான கேள்விகள் வருகின்றன அதற்கு எப்படிப்பட்ட பதில்களை செயலி தருகிறது என்று தொடர்ந்து கண்காணித்தோம். இணையத்தை செயலி தேடும் முறையை மேம்படுத்தினோம். மூன்று மாதங்களுக்குப் பிறகு பயனர்கள் திருப்தி கொள்ளும்படியான தரவுகளை செயலி தரத் தொடங்கியது. ஆறாவது மாதத்தில் இருந்து புகழ்பெறத் தொடங்கியது.‌நாங்களும் மெல்ல மெல்ல பணம் ஈட்டினோம்.


பணம் ஈட்டும் மும்முரத்தில் நாங்கள் வைத்திருந்த இரண்டு கொள்கைகளை நாங்களே மீறினோம். அதுதான் இந்த வாக்குமூலம்வரை எங்களைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.


1.பயனர்களுடைய மின்னஞ்சல், அலைபேசி எண் போன்ற தரவுகளை அடையாளத்துக்காவன்றி வேறு எதற்காகவும் பயன்படுத்தக்கூடாது.


2.செயலிக்கு கட்டணம் விதிக்கக்கூடாது.


முதல் கொள்கையை மீறுவதற்கு நாங்கள் சொல்லிக் கொண்ட சாக்கினை இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.


'பயனர்களின் உளநிலை பற்றிய புரிதல் இருந்தால் அவர்களுக்கு துல்லியமான பதிலினைத் தர முடியும்'


'பயனர்கள் எவற்றையெல்லாம் ஆறுமாதமாக தேடுகிறார்கள் என்று தெரிந்தால் இன்னுமதிகமாக அவர்களுக்கு உதவ முடியும்.'


'பயனர்களுடைய கலாச்சார பின்புலம் அவர்களுடைய இயல்பு குறித்த ஒரு பார்வையை அளிக்கும்.'


'அவர்கள் வாழும் நிலம் சந்தித்த போர்கள் அவர்களின் நம்பிக்கைகள் அவர்களுடைய விருப்பு வெறுப்புகள் தொன்மங்கள் ஐதீகங்கள் எல்லாம் அவர்களை இன்னும் புரிந்து கொள்ள உதவும்'


ஒரு மனிதனைத் தோண்டித் தோண்டிச் செல்ல என்னென்ன தரவுகள் தேவைப்படுமோ அது அனைத்தையும் நாங்கள் பெறத் தொடங்கினோம். மனிதர்கள் தங்களை வெளிப்படுத்துவதில் அதிதீவிர ஈடுபாடு காட்டியது எங்கள் வேலையை எளிதாக்கியது. நாட்டுப்புறவியல் மானுடவியல் துறை சார்ந்த ஆய்வுகளுக்கு பணம் செலவழிக்கத் தொடங்கினோம்.


இதற்கெல்லாம் ஏது பணம் என்று கேட்கிறீர்களா?


எங்களுடைய இரண்டாவது கொள்கை அதுதானே? எங்கள் செயலிக்கு இருபது நிலைகளாக கட்டணத்தை நிர்ணயித்தோம். ஒவ்வொரு நிலைக்கும் பத்து மடங்கு கட்டணம் கூடுதல். செயலியை அறிமுகப்படுத்திய இரண்டாவது வருடத்தில் இந்த மாற்றத்தை புகுத்தியது நான்தான். எங்கள் குழுவில் உள்ள மூன்று உறுப்பினர்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர். அதில் இருவர் பதவி விலகினர். ஆனால் என் நிலைப்பாடு தவறாகிவிடவில்லை. உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள் பலர் எங்களுடைய கட்டணச் சேவைகளுக்குள் வரத் தொடங்கினர். நாங்களே நினைத்துப் பார்த்திராத அளவு 2030ஆம் ஆண்டு எங்களுடைய செயலி வளர்ந்திருந்தது.


அன்று உலகில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனையும் ஏறத்தாழ அவர்கள் வாழ்நாள் முழுவதும் அருகிலிருந்த கண்டது போன்ற துல்லியத்துடன் எங்களால் அறிய முடிந்தது. இயல்பாக நான் 'சட்டை'யின் தலைமை நிர்வாகியானேன். பத்து வருடங்கள் முடிந்தபோது என்னுடன் எங்கள் குழுவில் பணியாற்றிய யாருமே இல்லை. சட்டையின் Source code மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே போனது. அதன் சிக்கல் பெருகப் பெருக அதன் துல்லியமும் அதிகரித்தது. சட்டையின் துல்லியத்தை அறிந்த சட்டையைவிட பெரிய நிறுவனங்களாக அன்றிருந்த ஆறு நிறுவனங்கள் சட்டையை வாங்க முனைந்தன. உலகின் அத்தனை நாடுகளின் அரசியல் கட்சிகளும் சட்டையின் தரவுகளை தங்களின் அதிகாரத்தை உறுதி செய்து கொள்வதற்காக பயன்படுத்த முயன்றன. நான் உறுதியாக நின்றேன். சட்டையின் கட்டணமில்லாப் பயனர்களின் ஒரு சிறு தரவினைக்கூட வெளிய தர மறுத்தேன். சட்டை முழுக்க முழுக்க பயனர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே அவர்களுடைய தரவினைப் பயன்படுத்தியது. எங்கள் செயலில் விளம்பரம் என எதுவுமே கிடையாது. இலவசமாக கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட பேராசிரியர்கள் பலர் சட்டையின் மூலமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேரடியாக பாடமெடுத்தனர்.


சட்டை ஒரு 'புரட்சிகரமான' செயலி என்று நம்ப வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தேன். மக்களின் ஆதரவு மட்டுமே சட்டையின் தரவுகளை வேறு நிறுவனங்களோ அரசியல் கட்சிகளோ அபகரிப்பதில் இருந்து தடுத்தது. எங்களுடைய நிறுவனம் இணையப் பயன்பாடு சார்ந்த ஏகப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒருங்கிணைத்தது. பல்வேறு கல்வியாளர்கள் சட்டையின் செயல்முறை குறித்து ஆய்வு செய்தனர். எதிர்காலத்திற்கான நம்பிக்கை என்று என்னை விதந்தோதும் நூல்கள் வெளிவந்தன. இவற்றில் பத்து சதவீதம் மட்டுமே எங்கள் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒன்று தொட்டு ஒன்றென மிக இயல்பாக நானொரு 'புரட்சிக்காரனின்' பிம்பத்தை அடைந்தேன். 2035ல் என்னைப் பற்றி வெளியிடப்பட்ட ஆவணப்படம் ஒரே மாதத்தில் நானூறு கோடி பார்வைகளைப் பெற்றது. ஒரு எளிய கிராமத்தில் பிறந்து அரசாங்கப் பள்ளியில் பயின்று நாற்பது வயதில் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவனாக நான் மாறியிருந்தேன். அது பெரும் முன்னுதாரணமாக மாறியது. இந்தியாவில் பிறந்த ஒருவன் மென்பொருள் துறையில் இவ்வளவு பெரிய பாய்ச்சலை அடைந்திருப்பதை உலகமே வியந்தது. என் நாற்பத்தி இரண்டாவது வயதில் நான் ஐநாவில் உரையாற்றினேன். ஐநாவில் ஆற்றுப்படும் பொறுப்புணர்வு மிகுந்ததாக தோற்றந்தரும் ப்ளாஸ்டிக் தன்மை கொண்ட அதே வெற்றுப் பேச்சு. அன்றைய தினம் போல என் வாழ்வில் நான் இன்னொரு தினத்தில் என்னைப் போலியாக உணர்ந்ததில்லை. அங்கு அந்த உரையை நேரில் கேட்கும் யாருக்கும் என் பேச்சு பொருட்டல்ல. ஏன் எனக்குமே கூட அதுவொரு பொருட்டல்ல.‌ ஆனால் அத்தனை பேரும் பொறுப்புடன் கவனிப்பதாக அவ்வளவு துல்லியமாக நடித்தனர் , நான் பொறுப்புடன் பேசுவதாக நடித்தது போலவே.


'இன்று தகவல்தான் ஆயுதம். தகவலே அறமும்கூட. ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் எளிதாக்குவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்‌. எனக்கு அடிப்படை கல்வி அளித்த என் நாட்டிற்கும் என்னை பாதுகாப்பாக வாழச் செய்யும் இவ்வுலகுக்கும் ஏதுமே செய்யாமல் நான் மறித்துப் போனால் இறக்கும் சமயத்தில் என்னை நான் நன்றி கெட்டவனாக உணர்வேன். நான் மகிழ்ச்சியுடன் சாக விரும்புகிறேன். என் மகிழ்ச்சி உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரின் மகிழ்ச்சியுடன் பிணைந்ததாக இருக்கிறது.  ஒரு பத்து வயது இந்தியச் சிறுமி என் செயலியிடம் 'எங்கள் ஊரில் எப்போது‌ மழை வரும்' என்று கேட்கிறாள். நான் அவளுக்கு எந்திரத்தனமான பதிலை அளிக்க முடியுமா? அந்தப் பிஞ்சுக்கு நான் அதீத நம்பிக்கை தரவிரும்பவில்லை. அதேநேரம் மதிய வெயில் போன்ற உண்மையையும் நான் அவளுக்கு தரத் தயங்குகிறேன். நான் அவளிடம் உண்மையைத்தான் சொல்லப் போகிறேன். ஆனால் அது அவள் தோளில் கைபோட்டுக் கொண்டு சொல்வதாக இருக்க வேண்டும். எங்கள் செயலியை உண்மையான ஆதூரத்துடன் நடந்து கொள்ளச் செய்யத்தான் நாங்கள் தொடர்ந்து முயல்கிறோம். நம் உள்ளே பிரியமான ஒரு பகுதி இருக்கிறதல்லவா? ஒரு வாடிக்கையாளரிடம் விற்பனை பிரதிநிதி காட்டும் இன்முகத்தை நான் சொல்லவில்லை. தூங்கும் குழந்தையை ரசிக்கும் தகப்பனின் பிரியம். அந்தப் பிரியத்தையே சட்டைக்கு பயிற்றுவிக்கிறோம். சட்டை ஏராளமான தற்கொலைகளை தடுத்திருக்கிறது. காதல் தோல்வியில் அழுகிறவர்கள் வேலையை இழந்து தவிப்பவர்கள் நோயில் வாடுகிறவர்கள் உற்றோரின் மரணத்தை எதிர்கொண்டவர்கள் என்று சட்டையைத் தேடி வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கிறது. ஒருவகையில் சட்டை ஒவ்வொரு மனிதரின் மீதும் நான் கொண்டுள்ள கனிவின் அக்கறையின் பொறுப்பின் புறவடிவம். என்னுடைய அக்கறை என் ஆணவத்திலிருந்து உருவாகவில்லை. இவ்வுலகம் எனக்கு வழங்கியவற்றையே நான் அதற்கு திருப்பி அளிக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் இன்னொருவர் மீது கொண்டுள்ள அல்லது கொள்ள விரும்புகிற பிரியத்தின் ஊடகமாகவே சட்டை திகழ்கிறது. அறத்தை விதைப்போம். அன்பை அறுவடை செய்வோம். நன்றி'


இதெல்லாம் பல வருடத்துக்கு முந்தைய கதை. ஐ.நாவிற்கு சென்று வந்த பிறகுதான் நான் நாற்பது வயதைத் தொட்டுவிட்டேன் என்பது எனக்கு உரைத்தது. யாருமே எனக்கு நெருக்கமானவர்களாக இல்லை. இருபது வருடங்களை சட்டையுடன் மட்டுமே கழித்திருக்கிறேன். சட்டையின் பிரம்மாண்டம் என்னை அச்சுறுத்தியது. சட்டை மீது உலக அளவில் தொடுக்கப்படும் வழக்குகளை கையாள்வதற்கு என்று ஒரு சர்வதேச வழக்கறிஞர் குழுமமே உள்ளது. அதன் தலைவரான நிலோஃபர் சட்டைக்காக நடைபெற்று முடிந்த வழக்குகள் பற்றி ஒரு நூல் எழுதினார். மூன்று பாகங்கள் கொண்ட சுவாரஸ்யமான அந்த நூல் இன்றுவரை அதிகம் விற்கும் புத்தகங்களில் ஒன்று. பல்வேறு சட்டப் பல்கலைக்கழகங்களில் அந்நூலின் பகுதிகள் பாடமாகவே வைக்கப்பட்டுள்ளன. சட்டையின் ப்ரோக்ராமர்கள் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருந்து விலகி வந்தவர்கள். கணக்குத் தணிக்கையாளர் குழு, ஊழியர் நலக்குழு, CSR குழு என சட்டையின் இயங்குமுறை என்னால் முழுமையாக புரிந்து கொள்ளக்கூட முடியாத அளவு சிக்கலாகிவிட்டது. சட்டையின் தனித்தனி நிர்வாக அமைப்புகளின் தலைவர்களை மாதம் ஒருமுறை சந்திப்பதோடு தலைமை நிர்வாகியாக என் வேலை முடிந்தது. மீதி நேரமெல்லாம் நான் முழுக்க முழுக்க சட்டையின் பயனர்களுடன்தான் இருந்தேன். இருபத்திநான்கு மணிநேரமும் பயனர்களுடைய கேள்விகளை திரைக்கு இந்தப் பக்கம் இருந்து அவதானித்துக் கொண்டிருந்தேன்.


ஐநாவில் பேசிய ஆண்டில் நிலோஃபர் எனக்கொரு ரோபோவை பிறந்தநாள் பரிசாக அளித்தாள். நான் சட்டைக்காக பயன்படுத்தும் சூப்பர் கம்ப்யூட்டரின் ரோபோ வடிவம். சற்றே வித்தியாசமானது. அந்த சூப்பர் கம்ப்யூட்டரை என் உடலிலே அணிந்து கொள்ள முடியும்! என் வேலை இன்னுமே எளிதானது. மேலும் சட்டையை நாங்கள் தொடங்கியபோது என்னுடன் இருந்த யாருமே அந்த சமயத்தில் என்னுடன் இல்லை.


******


இருபது வருடங்களாக உலகின் எல்லா வகையான மனிதர்களின் கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன். என்னுடைய நெடுநாள் பயனர்களின் உள்ளங்களை கண்முன் தெரியும் உடலென என்னால் பார்க்க முடிந்தது. மனித மனத்தின் சாத்தியங்களில் நான் சலிப்புறத் தொடங்கினேன். உலகின் மிகச்சிறந்த மூளைகளைத் தவிர பிற அனைவருமே எனக்குப் புரியத் தொடங்கினர். மனிதர்கள் தங்களுடைய படைப்புத் திறனை மெல்ல இழந்து கொண்டே வந்தனர். ஒருவருடன் இன்னொருவருக்கு வாழக்கூடத் தெரியாமலாயிற்று. ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட செயற்கை உணர்வுகளை மீண்டும் மீண்டும் நடித்தனர்.‌இன்னொரு மனிதரின் சுயம் வெளிப்பட்டால் அவர்களிடமிருந்து அஞ்சி ஓடினர். மனிதர்கள் சேவை நிறுவனங்களுக்குள் வாழவே ஆசைப்பட்டனர். யாராலும் எதையும் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஐம்பது வருடங்கள் முன் உலக மக்கள் தொகையில் முக்கால்வாசிப்பேரின் ஏக்கமாக தொலைக்காட்சி இருந்தது. இன்று பத்து நொடிகளுக்கு மேல் மனிதர்களால் காணொளிகளைக்கூட பார்க்க முடியவில்லை. மனிதர்களின் கவனமின்மை எல்லாத் துறைகளிலும் பிரதிபலித்தது. அரசியலில் வலுவான தலைவர்கள் உருவாக முடியவில்லை.‌பெரும் கலைஞர்கள் எந்தத் துறையிலும் இல்லை. கலைஞர்களே கலை என்பது மக்களை சற்று மேன்மைப்படுத்துவதும் சந்தோஷப்படுத்துவம்தான் என்று நம்பத் தொடங்கினர். ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட மனிதர்களின் வசதியை மேற்கொண்டு பெருக்குவது எப்படி என்றும் அதன் மூலம் லாபம் சம்பாதிப்பது எப்படி என்றும்தான் யோசித்தன. நான் கடுமையான சலிப்புக்கு ஆட்பட்டேன். முதியவர்களை பருவகால மாற்றங்கள் ஆச்சரியப்படுத்தாது. அவர்கள் நிறைய மாற்றங்களை பார்த்திருப்பார்கள். நானும் அப்படித்தான் ஆகிப்போனேன். மனிதர்களின் மனம்  ஒன்று போலவே திரும்பத் திரும்ப நடித்தது. தனிமனிதனுக்குள் உற்சாகமும் சலிப்பும் மாறி மாறித் தோன்றுவது போலத்தான் மொத்த சமூகமும். மனிதன் இவ்வளவு குறைவான சாத்தியமுள்ளவனாக இருப்பது என்னை வெறுப்படையச் செய்தது. நான் இந்த விளையாட்டினை சற்று சுவாரஸ்யப்படுத்த முனைந்தேன்.


*****




2047ல் காந்தி தூக்கிட்டுக் கொள்ளவில்லை சுட்டுக் கொல்லப்பட்டார் என்றொரு வதந்தி பரவியபோதுதான் எங்களுடைய 'உண்மை கண்டறியும் குழு' வேலையில் இறங்கியது. ஆறு வருடங்கள் நாங்கள் உலகின் எந்த நாட்டுடைய அரசாங்கத்துடன் தொடர்பில்லாதவர்களாக தனித்தனியாகவே இயங்கினோம். இந்தியாவும் சீனாவும் இணைந்து உருவாக்கியிருந்த ஆசிய நாடுகளின் கூட்டமைப்புதான் முதன்முதலில் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்தது. 2056ல் ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் எங்களைச் சந்தித்தனர். சட்டை எங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் இறங்கும் என்று எதிர்பார்த்தோம். அப்படி ஏதும் நடக்கவில்லை. 


எங்கள் குழுவில் உள்ள அனைவருமே 2010க்குப் பிறகு பிறந்தவர்கள். நாங்கள் வளரிளம் பருவத்தை அடைந்தபோதுதான் சட்டையும் வெளியானது. அன்றைய சூழலில் இணைய ஊடகம் என்பதே ஒரு மாபெரும் கவனச்சிதறல் என்ற புரிதல்தான் பொதுவில் இருந்தது. பொதுவெளியில் சிகரெட் பிடிப்பது போலவே பொதுவெளியில் அலைபேசி பயன்படுத்துவதும் பார்க்கப்பட்டது. பத்து நொடிகளுக்கு மேல் யாராலும் எதையும் கவனம் கொடுத்துப் பார்க்க இயலவில்லை. நிரூபணவாத அறிவியல் உருவாக்கியற்றில் மட்டுமே ஸ்திரத்தன்மை எஞ்சி இருந்தது. ஒட்டுமொத்தமாக மனித இனத்தின் நினைவுத்திறன் குறைந்து கொண்டே வந்தது. உலகின் பல நாடுகள் மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்க முயன்றன. ஆனால் மாணவர்களை பேனாவை எழுதப் பயன்படுத்தச் சொல்வது பழமைவாதம் என்று அந்த முயற்சிகளுக்கு மனித உரிமை அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.‌ யாருக்கும் கடந்த காலமே இல்லை. மனிதர்களிடம் கவனமின்மை பெருகப் பெருக கடவுளின் தேவையும் அதிகமானது. கடவுள் நம்பிக்கை அரசாங்கங்களை இன்னும் ஸ்திரத்தன்மை உடையதாக ஆக்கியது. அரசாங்கம் என்பது புனித அதிகாரம் என்றும் அது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்றும் மக்கள் நம்பத் தொடங்கினர். இந்தச் சூழலில்தான் சட்டை வளரத் தொடங்கியது. இந்தச் சூழலுடன் சட்டை தன்னை எவ்வகையிலும் பொருத்திக் கொள்ளாதது கொஞ்சமாவது புத்தியுடன் செயல்பட்ட இளைஞர்களிடம் ஈர்ப்பினை ஏற்படுத்தியது. இன்று சட்டைக்கு எதிராக இந்த அறிக்கையை அளிக்கும் நாங்கள் அனைவரும் சட்டை 2040ல் நடத்திய ஒரு தொழில்நுட்ப பயிலரங்கில் சந்தித்துக் கொண்டவர்கள்தான்!


பயிலரங்கின் கடைசி நாள் சட்டையின் நிறுவனர் வந்திருந்தார். அவர் நிறுவனர் அணிந்திருந்த கோட் வித்தியாசமாக இருந்தது. அது என்னவென்று கேட்டபோது அவர் 'சட்டை' என்று சொல்லிச் சிரித்தார். சட்டை என்பது தமிழ் என்ற மொழியில் மேலுடையைக் குறிக்கும் சொல்லும்கூட. அது தெரிந்த எங்கள் குழு உறுப்பினர்கள் சிலர் சிரித்தனர். அவருடைய கோட் தான் அவருடைய சூப்பர் கம்ப்யூட்டர். அவரைப் பார்த்தபோது ஏதோவொரு உள்ளுணர்வால் உந்தப்பட்டு அதிருப்தி அடைந்த சிலர் ஒன்றிணைந்து பேசினோம். நாங்கள் சட்டையை கவனிக்கத் தொடங்கினோம்.


*******


நினைவு மனிதர்களுக்குப் பெரும்சுமை.‌ மனிதர்களின் பல்வேறு உளவியல் கோளாறுகள் நினைவில்தான் உருவாகின்றன. இன்றைய விஞ்ஞானம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு உலகை நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்துவிட்டது. அணு ஆயுதங்கள் பயன்பாட்டுக்கே வரப்போவதில்லை. ஒரு தேசம் இன்னொரு தேசத்தின் மீது போர் தொடுக்கும் என்ற சிறுபிள்ளைத்தனமான பயங்களை நாம் கடந்துவிட்டோம். உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக நாம் வலுவான முன்னெடுப்புகளைச் செய்கிறோம். அப்படியிருக்க உண்மையில் மனிதர்களைத் துன்புறுத்துவது எது? அவர்களுடைய நினைவுகள்தான். ஒவ்வொரு மனிதரின் நினைவும் அவரை அவருடைய கடந்த காலத்துடன் பிணைக்கிறது. அது அவருடைய தனி வாழ்க்கையை வரலாற்றுடன் இணைப்பதுதான். தனிவாழ்க்கை வரலாற்றுடன் இணைப்பது மனிதர்களை துன்புறுத்துகிறது. ஒவ்வொரு மனிதரும் அவருடைய மதத்திற்கு இனத்திற்கு மொழிக்கு பொறுப்பாகிறார். நாட்டுக்குப் பொறுப்பாகிறார். ஆகவே இன்னொரு நாட்டுக்கு எதிரியும் ஆகிறார். ஒரு கருத்திற்கு ஆதரவாகிறார். இன்னொன்றிற்கு எதிரியாகிறார். லட்சிய நிலைகளில் நம்பிக்கை கொள்கிறார். பிறகு முடிவற்ற துன்பம்தான்.


சட்டை இந்தச் சிக்கலை எதிர்கொள்ள முனைந்தது. நினைவுகளின் பிரச்சினை தொடங்குமிடம் மனிதர்கள் தங்களுக்கு நிரந்தரமான வரலாறு இருந்தது என்று நம்புவதில் தொடங்குகிறது. வரலாற்றின் வழியாக தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பீடுகளை பின்பற்றவும் பாதுகாக்கவும் வேண்டும் என்று மனிதர்கள் நம்புகிறார்கள். சாதாரண உறவுச்சிக்கல்களில் கூட கடந்த காலத்தின் வரலாற்றின் தலையீடு இல்லாமல் இருப்பதில்லை. அன்றாடத்தை சுமையற்று வாழ்வதற்கு வரலாற்றின் மீதான இந்த நம்பிக்கையை போக்க வேண்டும் என்று நினைத்தேன்.


*****


2040வாக்கில் சட்டை பல நாடுகளில் அதிகாரப்பூர்வமான தகவல் மையமாக மாறியிருந்தது. அந்த சமயத்தில் வரலாறு மொழி போன்ற துறைகளில் கற்பவர்கள் குறைந்து போயிருந்தார்கள். உலகமே தொழில்நுட்பம் தத்துவம் பொருளாதாரம் போன்ற துறைகளை நோக்கியே ஓடியது. தத்துவமுமே கூட பணக்காரர்கள் ஆடும் ஒரு சிக்கலான மூளை விளையாட்டு என்ற நிலைக்குப் போய்விட்டது. மனிதர்களின் நினைவையும் பிரக்ஞையையும் கட்டமைக்கும் துறைகளான வரலாறு இலக்கியம் போன்றவை சீந்துவார் இல்லாமலாயின. இலக்கிய வாசிப்பின் வழியான ஒரு மனிதர் அடையும் அகத்தூண்டலை சில சாதனங்கள் வழியே பெற முடியும் என்ற வகையான ஆய்வுகள் செல்வாக்கு பெறத் தொடங்கின.‌ ஏறத்தாழ இந்த சமயத்தில் உடலுறவிலும் மனிதர்கள் ஆர்வமிழந்து போயிருந்தனர். ஹோலோகிராம் வழியாக உலகில் யாரையும் யாரும் புணர முடிந்தது. வாசனை வியர்வை எச்சில் போன்றவற்றை அனுபவிப்பதற்கான தொழில்நுட்பங்களும் வளர்ந்திருந்தன. 2030வாக்கில் குழந்தை வளர்ப்பு உலகம் முழுக்க பெரிய பிரச்சினையாக தலைதூக்கியபோது பெரும் நிறுவனங்கள் குழந்தை வளர்ப்பில் உள்ள வருமானத்தை உணர்ந்து பல்வேறு செயல்திட்டங்கள் வழியாக பெற்றோர் அவசியமற்ற குழந்தை வளர்ப்பு (no parent parenting) முறைகளை வளர்த்தெடுத்தனர். மனிதர்கள் தங்களுடைய அன்றாடங்களை நகர்த்துவதற்கு அவர்களுக்கு பழைய காலங்கள் தேவை இல்லாமலானது. மனிதருள் தோன்றும் உணர்ச்சிப் பெருக்குகளின் தன்மையை சட்டை மிகத் துல்லியமாக கணித்து அப்பெருக்கினை கையாண்டது. ஹோமியோபதி என்ற மருத்துவமுறையில் நோயின் தன்மையைக் கண்டறிய மருத்துவர் நோயாளியிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்பார். நோயாளியின் படுக்கை அறை பணிச்சூழல் என்று எல்லாமும் அறிந்த பிறகே சிகிச்சை அளிப்பார். சட்டை ஏறத்தாழ அப்படித்தான் இயங்கியது. ஒரு பெண் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்பிருந்தால் அவளுடைய மொத்த சூழலையும் சட்டையால் கணிக்க முடிந்தது. ஏனெனில் அவளைச் சூழ்ந்து இருப்பவர்களின் மன அமைப்பும் சட்டைக்குத் தெரியும். ஆகவே அகச்சிக்கல்களுக்கு மிகத் துல்லியமான தீர்வினை அளித்தது . ஆன்மீக குருமார்கள் பலரும் சட்டையால் செல்வாக்கு இழந்தனர். 


இந்த மாற்றங்களை நாங்கள் கவனித்தே வந்திருந்தோம். மனிதர்களிடம் இயல்பான நட்புறவு  இல்லாமலானது. எல்லா உறவுகளும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டன. எல்லோருக்கும் உலகை பாதுகாப்பது பற்றிய அக்கறை ஏற்பட்டது. ஆனால் அது எந்திரத்தனமானதாக இருந்தது. சக மனிதர்களை ஒருவகையான தொந்தரவு என்றே எல்லோரும் உணரத் தொடங்கினர். சட்டை மிகச் சரியாக இந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டது. ஏதோ உயரிய கொள்கை போல மனிதர்களை நினைவுச்சுமையிலிருந்து வெளியேற்றுவதாக பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. கடந்த காலத்துடன் நமக்கிருக்கும் உறவு கைமாற்றப்பட்ட நினைவுகள் வழியாகவே தொடர்கிறது. வரலாறு என்று நாம் சொல்வது கடந்தகால ஆவணங்களைச் சார்ந்திருக்கிறது. சட்டை கடந்த காலத்தின் அடிப்படை ஆவணங்களில் மாற்றத்தை உண்டாக்கியது.


ஜெர்மனியை ஆண்ட ஹிட்லர் என்பவர் யூதர்களைக் கொன்றார் என்றொரு தகவல் பரவியது. இந்தியாவில் வாழ்ந்த காந்தி என்பவர் மக்களை சாத்வீக போராட்டத்துக்கு தயார்படுத்தினார் என்றொரு கூட்டம் கிளம்பி அதுவொரு தனிமதமாக வளரத் தொடங்கியது. காந்தி தூக்கிட்டுக் கொண்டார் என்றும் இறைவனுடன் ஐக்கியமானார் என்றும் இருவேறு கருத்துகள் நிலவிய சூழலில் அவர் அவருடைய தேசத்தைச் சேர்ந்த ஒருவனாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற வதந்தி பரவியபோதுதான் அது வதந்தியா உண்மையா என்பதைக் கண்டறிய நாங்கள் வேலையில் இறங்கினோம்.


சட்டை மிக நுணுக்கமாக தகவல்களை மாற்றி அமைத்திருக்கிறது. சட்டை தொடங்கப்பட்ட பத்தாண்டுகளுக்குள்ளாகவே உலகின் முக்கியமான இணைய சேவை நிறுவனங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்து கொண்டது.‌உண்மையில் சட்டை இணைய சேவை நிறுவனங்களுக்குத்தான் அதிகமாகத் தேவைப்பட்டது. உணவு விநியோக செயலிகள் தொடங்கி உளவியல் ஆலோசனைச் செயலிகள், கருத்தரிப்பு கருக்கலைப்பு சேவை செயலிகள், குழந்தை வளர்ப்புச் செயலிகள், பொருளாதார ஆலோசனைச் செயலிகள், போர் தளவாட விற்பனைச் செயலிகள், நிதி மேலாண்மைச் செயலிகள் என்று சட்டையின் இணைவு எல்லா தளங்களிலும் நிகழ்ந்தது. 2040க்குப் பிறகு அச்சு நூல்களை கூடுமானவரை மென்பிரதிகளாக்கும் வேலை மும்முரமடைந்தது. நூல்களை சுலபமாக எரித்து அழிப்பதன் வழியாக பூமியில் நிறைய இடத்தை மிச்சப்படுத்த முடியும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு அதற்கான வேலைகள் துரிதப்பட்டன. இருபத்தோராம் நூற்றாண்டு முதல் ஐம்பது வருடங்களை கடந்திருந்தபோது இருபதாம் நூற்றாண்டு சட்டையின் வசம் வந்தது.


ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய வரலாறுகூட குழப்பம் நிறைந்ததாக மாறியது. மென்பிரதிகளில் சட்டையினால் பல்வேறு மாற்றங்களைச் செய்ய முடிந்தது.‌ ஒவ்வொரு மனிதரும் தனக்கு விருப்பமான வரலாறு எதுவோ அதுவே உண்மை வரலாறு என்று நம்பினர். மனிதர்களின் பெரும்பாலான மூதாதையர்கள் பெருவீரர்களாக மாறினர்.‌ நாடாண்டனர்.‌ பெண்கள் தங்களுக்கென ஒரு தாய்வழி வரலாற்றை உருவாக்கினர். வரலாற்றுக் காலம் தூரம் குறைந்ததாக மாறியது. மனிதர்கள் அன்றன்றைய தினத்தில் ஈசல் போல வாழத் தொடங்கினர்.


ஏதோவொரு வகையில் நினைவுகளை தக்க வைத்தவர்களுக்கும் அவர்களால் ஈசல் என்ற அழைக்கப்பட்ட வெகுமக்களுக்கும் இடையே மனஸ்தாபங்கள் மூண்டன. அது அரசியலில் பிரதிபலித்தது. உலகின் பல்வேறு நாடுகளின் அதிகார மையங்களை ஈசல் மனிதர்கள் கைப்பற்றினர். 2060ஆம் ஆண்டு முதல் சட்டையின் நிறுவனரை யாருமே பார்க்கவில்லை.


இன்று ஐநாவின் முன்பு இந்த அறிக்கையை சமர்ப்பிப்பது கூட பயனற்ற செயல்தான். ஐநாவிற்கு இன்று எந்த அதிகாரமும் இல்லை.‌ 2025ல் இந்தியாவின் பிரதமராக இருந்த நரேந்திர மோடி திருமணமாகாதவர் என்று இன்றைய ஈசல் அரசுகளிடம் சொன்னால் அது மனித குல விரோதக் கருத்தாகக் கருதப்படும்.‌ எங்களுடைய நினைவின் மீது எங்களுக்கு சந்தேகமில்லை. நாங்கள் எல்லோரும் இப்போது அறுபது வயதை நெருங்குகிறோம். எங்கள் குழுவில் பலர் மன அழுத்தத்தில் இறந்துவிட்டனர். உண்மை வெளிவர ஒரேவழி சட்டையின் மென்பொருள் மட்டும்தான்.


அந்த மென்பொருளில் அது மாற்றியமைத்த தகவல்களின் பெருந்திரட்டு உள்ளது. அதுதான் எது உண்மை என்று நம்மிடம் சொல்ல முடியும். ஆனால் அதை இன்று யாராலும் அணுக முடியாது. உலகிலேயே மிகுந்த பாதுகாப்பு நிறைந்த ஒரு கட்டிடத்தில் சட்டை உள்ளது. அந்த சட்டையை அணிந்து கொண்டு அதன் நிறுவனர் அமர்ந்திருக்கிறார். இறைவன் அவர் ஆடையுடன் அங்கு உட்கார்ந்திருக்கிறார்.


முற்றும்.

Tuesday 13 August 2024

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024

ரண்டு மாதங்களுக்கு முன்பு பாவண்ணன் இப்படி ஒரு இலக்கியவிழா நடைபெறுவதாகச் சொல்லி என்னைக் கலந்து கொள்ள அழைத்தபோது நான் பல வருடங்களாக இந்த இலக்கியவிழா பெங்களூருவில் நடப்பதாகவே எண்ணி இருந்தேன்.‌ பேஸ்புக்கில் நடந்த 'என்னை அழைக்கவில்லை உன்னை அழைக்கவில்லை' சர்ச்சை வந்தபோது கூட இதற்கு முன் இப்படியொரு சர்ச்சை வந்ததிராதது எனக்கு உரைக்கவில்லை. அப்படி எனக்கு உரைக்காமல் போனதில் வியப்பென்றும் ஏதுமில்லை. அப்படி 'உள்ளாழ' சதி நடக்கும் அளவுக்கு எல்லாம் தமிழ் இலக்கியம் 'வொர்த்' இல்லை. 'வொர்த்' என்பதை இங்கு பொருளியல் மதிப்பு என்று புரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழ்ப் புத்தகங்களுக்கு பெரிதாக சந்தை மதிப்பு இல்லாதபோது இவ்வாறு 'சதி' செய்துதான் தன்னுடைய படைப்புகளை முன்னிறுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆகவே இலக்கிய சர்ச்சைகளில் சொல்லப்படும் சதிக் கோட்பாடுகளில் எனக்குப் பெரிதாக ஈடுபாடு இல்லை. ஆரம்பத்தில் ஒரு சுவாரஸ்யத்துக்காக இதையெல்லாம் தெரிந்து கொண்டேன். ஆனால் இன்று அந்த சுவாரஸ்யமும் போய்விட்டது. மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான முறையிடல்கள். கோபங்கள்.‌ 





வெள்ளிக்கிழமையே விழா தொடங்கிவிட்டாலும் சனிக்கிழமை காலையில்தான் என்னால் விழாவுக்குப் போக முடிந்தது. ஆறு நாட்கள் அலுவலகம் செல்ல நேர்வது எனக்கென்னவோ பெரிய வன்முறையாகத் தெரிகிறது. Casual leave எனப்படும் தற்செயல் விடுப்புகளும் என் துறையில் ரொம்பக் குறைவு என்பதால் சனிக்கிழமை ஒருநாள்தான் விடுப்பெடுக்க முடிந்தது. பெங்களூரு சிட்டி ரயில் சந்திப்பில் இறங்கி ஆட்டோ பிடித்துப் போய்விடுவோம் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் காலை ஐந்து மணிக்கெல்லாம் ஸ்டேஷனுக்கு வெளியே எனக்காக காத்திருக்கும்  டிரைவர், அவருடைய அலைபேசி எண், காரின் எண் எல்லாவற்றையும் ஆதர்ஷினி அனுப்பி வைத்திருந்தார். ஆதர்ஷினி விழாவுக்கு வரும் எழுத்தாளர்களுக்கு பயணம் மற்றும் தங்குமிட ஒருங்கிணைப்பாளர். ரயில் சற்று முன்னதாகவே சென்று சேர்ந்தது. நான் வெளியே வந்தபோது மெல்லிய சாரல்மழை. எட்டு வருடங்களுக்கு முன் முதல்முறை விஷ்ணுபுரம் விழாவுக்காக கோவையில் சென்று இறங்கியபோதும் இப்படித்தான் மெல்லிய தூரலாக மழை பெய்தது. கற்பனாவாதமெல்லாம் இல்லை. சும்மா சொன்னேன். ஆதர்ஷினி St John's ஆடிட்டோரியத்தில் என்னை வரவேற்று அறையைச் சுட்டினார். சு.வேணுகோபால் அந்த அறையில் இருந்தார். நான் ஆறரை மணிக்கு கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று 'ஹாயாக' உள்ளே நுழைந்தால் அவர் மறுநாள் மாலை நடக்கவிருக்கும் கலந்துரையாடலுக்கு குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு குற்றவுணர்வில் தூக்கம் வரவில்லை. அவரிடம் சற்று நேரம் நான் வாசித்துக் கொண்டிருந்த இப்போது உயிரோடிருக்கிறேன் நாவல் பற்றிச் சொன்னேன். இந்த நாவல்தான் இமையத்தின் சிறந்த நாவலாக எனக்குப்படுகிறது என்றேன். சு.வே நாவல் வாசிப்பு சார்ந்து தன்னுடைய அனுபவங்களைச் சொன்னார். ஏறத்தாழ ஒருமணி நேரம் பேசி இருப்போம். நல்லவேளையாக குளித்து விட்டுக் கிளம்பினோம். கொஞ்ச நேரத்தில் தண்ணீர் நின்று விட்டிருந்தது. ஒரு மணிநேரத்திற்குள் அதை சரிசெய்தும்விட்டார்கள். இந்த ஒரேயொரு சிறு பிசகு தவிர வேறெந்தக் குறையும் சொல்ல முடியாதபடி மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வு‌. இதற்கு முன் இத்தகைய முழுநாள் இலக்கிய விழாவென நான் கலந்து கொண்டது விஷ்ணுபுரம் விழாவில் மட்டும்தான். மேலும் அங்கு ஒரு சிலர் தவிர்த்து மற்றவர்கள் 'நம்மவர்'களாக இருப்பார்கள். அப்படி 'ஒரே இனமாக' இருப்பதால் நம் படைப்பாளிகள் தங்களை தனித்துவமாகக் காட்டிக் கொள்ள சற்று வேறு மாதிரி நடந்து கொள்கின்றனரோ என்று தோன்றும். ஆனால் பெங்களூருவில் அந்தச் சிக்கல் இல்லை. ஒருவேளை அது கன்னடர்களின் குணமாகக் கூட இருக்கலாம். இரண்டு நாட்களில் சொல்லிவிட முடியாது. இரண்டு நாட்களும் எல்லா இடங்களிலும் நட்பான சூழலே நிலவியது. அதேநேரம் ஒரு சில அரங்குகள் நீங்கலாக மற்ற அனைத்தும் தீவிரமாகவே இருந்தன.


நான் ஒரு விஷயத்தை அவதானித்தேன். கன்னடர்களுக்கு ஒரு Home field advantage' இருப்பதால் அவர்களால் இயல்பாக செறிவாக பேச முடிகிறது. எழுத்து தாண்டியும் தங்களுடைய கலைஞர்களை மிகப்பெருமிதத்துடன் முன் வைக்கின்றனர். ஹிந்துஸ்தானி பாடகர் வெங்கடேஷ் குமார், யக்ஷகான கலைஞர் சிவானந்த ஹெகடே ஆகியோரை போற்றியதையும் கொண்டாடியதையும் அங்கு பார்க்க முடிந்தது. நம்மூரில் சினிமா இசைக்கலைஞர்கள் தாண்டி பொதுச் சமூகம் யாரையாவது பொருட்படுத்தும் என்று எனக்குத் தோன்றவில்லை.


அடுத்ததாக மலையாள எழுத்தாளர்கள் இது மாதிரி ஏகப்பட்ட விழாக்களை பார்த்திருப்பதால் ஒரு மாதிரி 'அசால்ட்டாக' கையாளுகின்றனர். ஆனால் அது விழாவில் ஒரு எதிர்மறை பிம்பத்தை மலையாள இலக்கியவாதிகள் மீது உருவாக்கியதாகத் தோன்றியது.


தமிழைப் பொறுத்தவரை பெருமாள் முருகன் வழக்கம்போல அரசியல் சரிநிலையோடு பேசினார். மற்ற அனைவருமே என்ன பேச வேண்டும் எவ்வளவு பேச வேண்டும் என்ற தெளிவுடனேயே வந்திருந்தனர். ஜெயமோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டு சுசித்ரா அவரை எடுத்த ஆங்கில நேர்காணல் வழியாக தமிழுக்கு ஒரு முத்தாய்ப்பு அமைந்தது. இருவருமே இத்தகைய நிகழ்வுகளில் உரையாடியதன் வழியாக மிகச் சரளமாக கலந்துரையாடினர். எந்த அளவுக்கு என்றால் ஒரு கட்டத்தில் சுசித்ராவும் ஜெவும் தமிழில்தான் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று தோன்றுமளவு அவ்வளவு சரளமான அதேநேரம் செறிவான உரையாடலாக அமைந்தது.


தெலுங்குதான் சுவாரஸ்யமான மொழியாக அமைந்தது. தெலுங்கு எழுத்துலகினரிடம் ஒரு ஆவேசம் தெரிகிறது. ஆரம்பத்தில் எனக்கு அது சற்று விசித்திரமாகவே இருந்தது. சின்னவீரபத்ருடு ஒரு நேரடியான கேள்விக்கு சொன்ன பதில் ஏராளமான தரவுகளைக் கொண்டு தன் மொழியை 'பாதுகாக்க' முனைவது போல எனக்குத் தோன்றியது. தென்னிந்திய மொழிகளில் நவீன இலக்கியத்தில் பெரும் சாதனைகள் நிகழாத மொழி தெலுங்கு. அதை அவர்களும் உணரவே செய்கிறார்கள். அதனாலேயே எழுதுதல் மொழிபெயர்த்தல் தங்கள் படைப்புகளை மற்ற தென்னிந்திய மொழிகளில் கொண்டு போய் சேர்த்தல் என்றொரு வேகத்துடன் இருக்கின்றனர். இந்த வேகமும் ஆவேசமும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இந்த 'உணர்ச்சி அலையில்' இருந்து ஒரு பெரும்படைப்பாளி எழுந்துவர முடியாது. ஆகவே தெலுங்கு இலக்கியவாதிகள் தங்களை இன்னும் சற்று சுயபரிசோதனை செய்து கொள்ளலாம் என்று எண்ணினேன்.


நான்,காளி பிரஸாத், கயல், ரம்யா ஆகியோர் ஞாயிறு மாலை மூன்று மணிக்கு மொழிபெயர்ப்புகள் பற்றிப் பேசினோம். காளி மட்டுறுத்துனராக இருந்தார். அன்றைய தமிழ்ச்சூழல் மொழிப்பெருமிதம் பற்றிய இன்று கேட்டாலும் மொழிப்பெருமிதம் தாண்டி மொழி பற்றி வேறு அக்கறை இல்லாதவர்களுக்கு குத்துவது போல இருக்கும் புதுமைப்பித்தனின் மேற்கோள் ஒன்றிலிருந்து காளி அரங்கினை துவக்கினார். தொடக்ககால மொழிபெயர்ப்புகள் பற்றி நானும் மொழிபெயர்ப்புகள் வழியாக தமிழ்ச்சூழலில் பெறப்பட்டது குறித்து ரம்யாவும் மொழிபெயர்ப்பதில் உள்ள நுட்பங்கள் சவால்கள் குறித்து கயலும் பேசினோம். 



இது மாதிரி விழாக்களில் நான் ஏறத்தாழ 'வேடிக்கை' பார்க்கும் மனநிலையில் தான் இருப்பேன். இந்த இரண்டு நாட்களும் அப்படித்தான். தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமோ என்று சந்தேகம் கொள்ளும் அளவு அவ்வளவு நண்பர்கள். சதீஷ்குமார், சங்கர் கிருஷ்ணா,ஏ.வி.மணிகண்டன்,ஸ்வேதா என்று பெங்களூருவில் வசிக்கும் நிறைய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. அவர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தேன். மனோஜ் பாலசுப்ரமணியனை பார்ப்பவர்கள் எல்லாம் யாத்ரா நீலா என்றே நினைவில் வைத்திருக்கின்றனர். ஒருவேளை நான்தான் மனோஜ் என்று தவறாக கூப்பிடுகிறேனோ என்று சந்தேகமாக இருந்தது. ஒரு இடைவெளியில் ஜெயமோகனிடம் ஆட்டோ ஃபிக்ஷன் பற்றிக் கேட்டேன். மிக விரிவாக அவர் சொன்ன பதிலில் நான் அடுத்து எழுத நினைத்திருக்கும் நாவலுக்கு அவசியமான விஷயங்கள் இருந்தன. பொதுவாக தமிழ் எழுத்துலகு என்று நாம் நம்பும் புனைவிலக்கியத்துக்கு வெளியே விரிந்து கிடக்கும் தமிழ் ஆய்வுத்துறை பற்றிச் சொன்னார். இருபது வருடங்கள் முப்பது வருடங்கள் ஆய்வு செய்துவிட்டு அங்கீகாரமின்றி மடிந்து போகும் முக்கியமான ஆய்வாளர்கள் பற்றிச் சொன்னார். குடவாயில் பாலசுப்ரமணியனின் பெரும்பாலான நூல்களை சமீபத்தில் வாசித்ததால் ஜெயமோகன் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. புனைவிலக்கியம் முக்கியம்தான். வேறெந்த துறையையும்விட புனைவிலக்கியத்தின் வழியாகத்தான் நம்மை நம்மால் சரியாக அடையாளம் காண முடியும். ஆனால் புனைவிலக்கியவாதி ஆழமான விரிவான வாசிப்பு நிறைந்தவனாக இருந்தால் மட்டுமே நம்முடைய சிக்கல்களையே நம்மால் சரியாக எடுத்துரைக்க முடியும் என்று புரிந்து கொண்டேன். மற்றபடி அர்ப்பணிப்பு மிக மிக அவசியம். அர்ப்பணிப்புடன் தொடர்ந்து இயங்குவதே போதும் என்று தோன்றுகிறது. இதுமாதிரி மேடை அமையும் சுய பிரஸ்தாபம் பண்ணாமல் இலக்கியம் பற்றிய நம்முடைய புரிதலையும் நம்முடைய முன்னோடிகள் குறித்தும் பேசினால் போதும் என நினைத்தேன்.


அபிலாஷ் சந்திரன் வந்திருந்தார். அவரிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வழக்கம்போல சுனில், காளி,கார்த்திக், ரம்யா,சதீஷ் இவர்களுடனேயே சுற்றிக் கொண்டிருந்தேன். அரங்கில் அணிந்து கொள்ள பிரியா எனக்கொரு புதுச்சட்டையும் பேண்ட்டும் எடுத்துக் கொடுத்திருந்தாள். மதியம் மாற்றிக் கொள்ளலாம் என்று டிஷர்ட்டுன் இருந்தேன். இறுதி நேரத்தில் மாற்ற முடியாமல் டிஷர்ட்டுன் கலந்து கொள்ளும்படி ஆனது. அனேகமாக தமிழ் படைப்பாளிகளில் நான் மட்டுமே டிஷர்ட் அணிந்து புக் பிரம்மாவின் முதல் கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக வரலாறு எழுதட்டும்!


மாலையில் யக்ஷகானம் முடிந்தபோது ஒரு மாதிரி மனம் கனத்துவிட்டது. இரண்டு நாட்கள் கடந்ததே தெரியவில்லை. புறப்படப் பத்தாகிவிட்டது. ஆதர்ஷினியிடம் நிகழ்வு சார்ந்து சில பரிந்துரைகளை முன்வைத்தேன். அடுத்த ஆண்டில் கவனத்தில் கொள்வதாகச் சொன்னார். 


இத்தகைய விழாக்கள் அளிக்கும் மனநிலையை எனக்கு அவசியமானதாக இருக்கிறது. இங்கு முன் வைக்கப்படும் தீவிரமான கருத்துக்கள் எல்லாம் அவ்வளவு முக்கியமில்லை. இவ்வளவு எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பார்ப்பதும் பேசுவதும் தவறவிடக்கூடாத அனுபவம். இதுபோன்ற இலக்கிய விழாக்களுக்கு இனி அடிக்கடி போகவேண்டும் - அதாவது அலுத்துப்போகும்வரை. புத்தக கண்காட்சிகள் மிகச் சீக்கிரமாகவே அலுத்துவிட்டன - என்று எண்ணி இருக்கிறேன்.


இந்நிகழ்வு குறித்து இந்தக் கட்டுரையில் இவ்வளவு சொல்வது போதும் என நினைக்கிறேன். இன்னும் சிலவற்றைச் சொல்ல வேண்டும். அவற்றை வாய்ப்பிருக்கும்போது தனியே எழுதுகிறேன்.

Friday 5 July 2024

சாரு நிவேதிதாவை வாசித்தல் 2

எக்ஸைல் நாவலில் இடம்பெறும் சித்தரிப்பு. குணரத்தினம் என்றொருவரை எக்ஸைலின் கதை சொல்லியான உதயா ஃப்ரான்ஸில் சந்திக்கிறான். (சாருவின் பிற நாவல்களைப் போல ஏகப்பட்ட கிளைகளாகப் பிரிந்தாலும் இப்பெருநாவலிலும் கதை சொல்லி ஒருவன்தான்). குணரத்தினம் ஒரு இலங்கைத் தமிழர். இலங்கையில் பேராசிரியராக இருந்தவர். உதயாவிடம் நான்கு நாட்களாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். தகவல்கள் துல்லியமாக அவர் பேச்சில் வந்து விழுகின்றன. உதயாவிற்கு கழிப்பறை செல்லும் நேரம் தவிர பிற நேரங்களில் அந்தப் பேச்சிலிருந்து விடுதலையே கிடைப்பதில்லை. குணரத்தினம் ஒரு மார்க்ஸியரும்கூட. 


அவர் வீட்டில் தங்கி இருக்கும்போது மூன்றாம் நாள் இரவு உதயாவுக்கு ஒரு கனவு வருகிறது. அவன் எங்கோ கடத்திக் கொண்டு போகப்படுகிறான். தான் கொல்லப்படப் போகிறோம் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிகிறது. அதோடு மூத்திரம் வேறு முட்டுகிறது. தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறான். தான் செய்த எல்லாத் தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்கிறான். இனி எழுதவே போவதில்லை, உயிரோடு மட்டும் விடுங்கள் அதோடு மூத்திரம் பெய்யவும் அனுமதியுங்கள் என்று கெஞ்சுகிறான். அவனுடைய கால்சராய் நனைந்து போயிருக்கிறது. குணரத்தினத்தின் வீட்டில்தான் தூங்கிக் கொண்டிருக்கிறான்.





சாரு நிவேதிதாவின் படைப்புலகைப் புரிந்து கொள்ள இதுவொரு முக்கியமான கண்ணி என நினைக்கிறேன். குணரத்தினம் வெறுமனே பேசிக் கொண்டிருக்க மட்டுமே செய்கிறார். ஆனால் அந்தப் பேச்சு உதயாவுக்கு பல்வேறு ஞாபகங்களை இழுத்துவந்து உயிரச்சத்தை அவனிடம் உருவாக்கி விடுகிறது. மேம்போக்காகப் பார்க்கும்போது உதயாவின் அச்சம் அர்த்தமற்றதாகத் தோன்றலாம். ஆனால் அதீத தன்னுணர்வு கொண்ட உதயாவிற்கு அந்த சொற்களின் வழியாகவே மிகப்பெரிய வன்முறையை கற்பனை செய்து பார்த்துவிட முடிகிறது. எந்தவொரு வன்முறையும் நிகழ்ந்த பிறகு எல்லாவிதமான சமன்பாடுகளையும் மாற்றி விடுகிறது. அறிவுடைய யாருமே போரைத் தள்ளிப்போடவோ அல்லது தவிர்த்து விடவோதான் விரும்புகின்றனர். ஏனெனில் போர் சமூகத்தில் பல்வேறு காரணிகளால் உருவாக்கி நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமைதியை உடைத்து விடுகிறது. எல்லோரும் சந்தேகப்படத்தக்கவர்கள் துரோகிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. உயிரோடு இருப்பது மட்டுமே செய்யக்கூடிய ஒற்றைச் செயலென்று ஆக்கிவிடுகிறது. உதயாவின் அச்சத்தை இந்தப் பின்னணியில் வைத்தே நான் புரிந்து கொள்கிறேன். அதுவொரு தனிமனிதனின் சுயநலமான அச்சமல்ல. மொத்த சமூகமும் இரக்கமின்மையை வெளிப்படுத்தும் தருணத்தை முன் உணரும் ஒரு அகம்‌. இந்த அத்தியாயத்திற்கு சில அத்தியாயங்களுக்கு முன்புதான் கீழ் வெண்மணி இந்த நாவலில் இடம்பெறுகிறது. நாஜிப் படைகளால் எரிக்கப்பட்ட ஒரு நகரம் வருகிறது. குணரத்தினத்தின் பிசிறற்ற தர்க்கப்பூர்வமான பேச்சின் உள்ளுறையாக அமையும் வன்முறையை உதயா உணர்வதே அவனை நிலை கொள்ளாமல் அடிக்கிறது. கதை சொல்லியின் இந்த அக இயல்பு சாருவின் படைப்புகளைப் புரிந்து கொள்ள ஒரு முக்கியமான கண்ணி.

Thursday 4 July 2024

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

உத்தேசமான நினைவுதான். Newshunt என்றொரு செயலி பத்து வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்தது. அந்தச் செயலில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கட்டி நூல்களை வாசிக்க முடியும்‌. நான் ஜீரோ டிகிரி நாவலை அப்படித்தான் வாசித்தேன் என நினைக்கிறேன். அல்லது அதற்கு சில வருடங்களுக்கு முன்பு. ஆனால் நூலாக இல்லாமல் ebookஆக படித்ததும் மட்டும் நன்றாக நினைவிருக்கிறது‌. அந்த வயதில் கடுமையான அதிர்ச்சியை அளித்த நூல். தன்னுடைய மாதவிடாய்க் குருதியை(நாவலில் சாண்டை என்றே எழுதப்பட்டிருக்கும்) தன்னைக் கொடுமைப்படுத்தும் குடும்பத்தினருக்குச் செய்யும் உருளைக்கிழங்கு பொறியலில் ஒரு பெண் கலந்துவிடுகிறாள். அதுவும் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் கொடுமையை அனுபவிக்கிறாள். அந்தச் சித்திரிப்பை மறக்க முடியாமல் ரொம்ப நாளாக வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது. அதன்பிறகு சில வருடங்கள் கழித்து எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் என்ற சாருவின் முதல் நாவலை வாசித்தேன். இவற்றிற்கெல்லாம் முன்பே மனம் கொத்திப் பறவைத் தொடரை ஆனந்த விகடனில் வாசித்திருந்தேன். சாருவின் எழுத்துக்களாக ஒரு மாதத்துக்கு  முன்புவரை நான் வாசித்திருந்தது இவ்வளவுதான். இன்று எக்ஸைல்(வாசித்துக் கொண்டிருக்கிறேன்)  பெட்டியோ என்ற இரு நாவல்களைத் தவிர அவருடைய எல்லா நாவல்களையும் வாசித்துவிட்டேன். நேநோ, தாந்தேயின் சிறுத்தை, கனவுகளின் நடனம் என்ற நூல்களையும் இந்த ஒரு மாதத்திற்குள்ளாக வாசித்து இருக்கிறேன். எக்ஸைல் மற்றும் பெட்டியோவையும் இந்தத் தொடரினை எழுதி முடிப்பதற்குள் வாசித்துவிடுவேன்! ஒரு சில எழுத்தாளர்களை மட்டுமே இவ்வளவு குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் வாசித்திருக்கிறேன். ஆனால் ஒரு எழுத்தாளரைக் கூட அவர் எழுத்துக்களுடன் பரிச்சயம் ஏற்பட்டு இவ்வளவு நீண்ட காலம் வாசிக்காமலும் இருந்ததில்லை. ஏன் இந்த முரண்? இந்த முரணைச் சொல்லவும்தான் இந்தத் தொடரைத் தொடங்கினேன். 


(தொடரும்)

Thursday 6 April 2023

எல்லாச் சாலைகளும் தப்படிச்சான் மூலையை நோக்கி - சிவக்குமார் முத்தய்யாவின் குரவை நாவலை முன்வைத்து

நேரடியான களத் தரவுகள் ஒரு நாவலின் வெற்றியில் எவ்வளவு தூரம் பங்கு வகிக்க முடியும் என்ற கேள்வியுடன் குரவை நாவலை அணுகுவது சரியாக இருக்கும். தமிழில் இதற்கு முன்பு நேரடியான கள ஆய்வுகள் அல்லது தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சில நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. ராஜம் கிருஷ்ணனின் பெரும்பாலான ஆக்கங்கள் இந்த வகைமையில் வரக்கூடியவை. ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி ,சதீஷ் வாசுதேவனின் கத்தலே, இரா.முத்துநாகுவின் சுளுந்தீ போன்ற ஆக்கங்கள் தரவுகளை மையமாகக் கொண்டு தமிழில் இதற்கு முன்பு வெளியான ஆக்கங்கள். இத்தகைய படைப்புகளால் சமூகத்தில் உடனடியாக ஒரு பேச்சினை உருவாக்க முடிகிறது என்பது உண்மைதான். விளிம்பு நிலை மக்களின் பாடுகள் பேசுபொருளாகும்போது அக்குரலுக்கு சமூகம் செவிசாய்க்க வேண்டிய ஒரு அறரீதியான கட்டாயத்தை இப்படைப்புகள் உருவாக்குகின்றன. அதில் தவறென்று கொள்ள ஏதுமில்லை. ஆனால் ஒரு படைப்பு சமகாலத்தின் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை மட்டும் பதிவு செய்தால் போதுமா? இத்தகைய படைப்புகளை அந்த அநீதி இழைக்கப்பட்ட மக்கள் என்னவாகப்‌ பார்க்கின்றனர்? என்ற வகையிலான கேள்விகளை எழுப்பிக் கொண்டு இப்படைப்புகளை அணுகுவது ஒரு எல்லை. மறு எல்லையில் கலாப்பூர்வமாக இவற்றின் பெறுமதி என்னவென்றும் பார்க்க வேண்டியிருக்கிறது.


புனைவெழுத்து , புனைவு வாசிப்பு என்ற இரண்டுமே ஞாபகம் என்கிற விஷயத்தை நம்பி இருப்பதாக நான் கருதுகிறேன். சமகாலத்தின் மீது நமக்கு அக்கறை இருப்பதாகவும் சமகாலத்தின் அநீதிகள் ஒவ்வொன்றும் நம்மை வந்து பாதிப்பதாகவும் நாம் கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் நம்முடைய உண்மையான அக்கறை நம் நினைவில் எது தங்கி இருக்கிறது என்பதைப் பொறுத்தது மட்டுமே. வீட்டு வாசலில் செருப்பை கழட்டிய பிறகு அதோடு கழன்று விழாத ஞாபகங்களாக எவையெல்லாம் நீடிக்கின்றனவோ அது சார்ந்து மட்டுமே உண்மையில் நாம் அக்கறை கொள்கிறோம். தரவுகள் சார்ந்து நிற்கக்கூடிய படைப்புகளின் பலவீனம் அத்தகைய ஆழமான ஞாபகங்களை வாசகனிடம் உருவாக்க முடியாமல் போவதுதான். கையில் தரவுகள் இருக்கும் உற்சாகத்தில் ஒரு பலவீனமான கற்பனைச் சரடில் அத்தகைய தரவுகளைக் கோர்த்து புனைவு வெளியை கட்டமைக்க முடிகிறது. ஆனால் அது வாசகனில் எந்தவொரு நிரந்தர விளைவையும் உருவாக்க முடியாது. இலக்கிய வடிவங்கள், படைப்பின் வெளிப்பாட்டு உத்தி, யதார்த்தவாதம்,கற்பனாவாதம் போன்ற பேச்சுகள் எல்லாம் படைப்பு வாசகனில் ஏதாவது உணர்ச்சியை உருவாக்குகிறதா என்று பார்ப்பதற்காகவே. எழுத்தாளர் தான் உணர்ந்ததை எளிய இரக்கவுணர்ச்சி சார்ந்து அல்லாமல் அனுபவங்கள் தனக்குக் கொடுத்த அதிர்ச்சி, தொந்தரவு அல்லது தொந்தரவின்மை போன்றவை சார்ந்து விவரித்துச் செல்லும்போது ஒரு படைப்பின் அர்த்த உலகத்திற்குள் வாசகரால் எளிதாகப் புழங்க முடிகிறது. நாவல் வடிவத்தைப் பொறுத்தவரை எழுத்தாளர் உருவாக்கும் அர்த்த உலகம் மிகுந்த வலிமை வாய்ந்ததாக பிரத்யேகமானதாக இருக்க வேண்டும். தரவுகள் சார்ந்து உருவாகும் படைப்புகள் இந்த நாவலின் புறவுலகத்தை வலுவாக கட்டமைத்துவிடுகின்றன. ஆனால் வாசிப்பு நிலையில் அப்படைப்பு உருவாக்கும் அர்த்த உலகம் என்ன என்று பார்க்கும்போது பல படைப்புகள் ஏமாற்றம் தருகிறவையாகவே உள்ளன. சிவகுமார் முத்தய்யாவின் குரவை நாவல் வலுவான அர்த்த உலகத்தை கட்டமைத்திருப்பது அதன் முதன்மையான கலப்பூர்வமான வெற்றி என்று சொல்ல வேண்டும்.







சிவகுமார் முத்தய்யா கீழ்தஞ்சை மாவட்டத்தின் விவசாயப் பின்புலம் கொண்டு இயங்கும் மக்களின் பாடுகளை தொடர்ச்சியாக எழுதிவரும் படைப்பாளி. ஆனால் குரவை நாவல் விவசாயக் குடிகள் பற்றியதல்ல. கலைஞர்கள் பற்றியது. குரவையாட்டம் ஆடுகிறவர்கள், குறவன் குறத்தி வேடங்கட்டி ஆடுகிறவர்கள், தவில் கலைஞர்கள், பறையிசைப்பவர்கள், நாதஸ்வர வித்வான்கள், பறை தயாரிப்பவர்கள் என கீழ் தஞ்சை நிலம் வேறொரு பின்னணியில் இருந்து இந்நாவலில் அணுகப்படுகிறது. நாவலின் காலம் இன்றிலிருந்து கால் நுற்றாண்டுக்கு முன்பு. உலகமயமாக்கலும் நவீன கல்வியும் உருவாக்கி இருக்கும் அபரிமிதமான வளர்ச்சியின் ரேகைகள் மெல்லியதாகத் தென்படத் தொடங்கும் காலத்தை நாவல் தொட்டுக் காட்டுகிறது. மழையின்மை, பெரிய புயல்கள், நீர்வரத்து குறைந்து போவது போன்ற நாட்களைத் தவிர பிற நாட்களில் விவசாயக் குடிகளின் வாழ்க்கை ஏறத்தாழ 'ஒரே' தன்மையைத்தான் கொண்டிருக்கும். திருவிழாக்களும் விவசாயச் சமூகங்களின் பிரிக்க முடியாத அம்சமாக இருக்கிறது. தை மாதத்தின் அறுவடை முடிந்து அடுத்த விதைப்பு நடைபெறும் ஆனி,ஆடி மாதங்கள் வரை விவசாய வேலைகள் சற்று குறைந்த காலம். ஏறத்தாழ எல்லாப் பெருந்திருவிழாக்களும் இக்காலத்திலேயே நடைபெறும். இந்தத் திருவிழாக்களில் பங்கு பெறும் கலைஞர்களின் வாழ்க்கை வழியாக மொத்த கீழ்தஞ்சைப் பகுதியின் பண்பாட்டையும் சிவகுமார் முத்தய்யா இந்த நாவலில் காட்ட முயன்றிருக்கிறார். அம்முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.


தப்படிச்சான் மூலை தஞ்சையில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் வசிக்கும் ஒரு பகுதியாக நாவலில் சொல்லப்படுகிறது. இன்னுமே கூட தஞ்சையின் கீழவாசல் பகுதியில் இவர்களைக் காணலாம். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள ஆப்பரக்குடி நாட்டுப்புற கலைஞர்கள் வசிக்கும் ஒரு ஊர். கலியமூர்த்தி, நித்யா,பேபி,நாகராசன்,முத்துப்பட்டன், முருகேசன், குமரேசன்,வசந்தா என எண்ணற்ற நாட்டுப்புறக் கலைஞர்களின் கதைகள் நாவலில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் இடம்பெறுகின்றன. அவர்களுடைய வாழ்க்கை சொல்லப்படும் விதத்தினைக் கொண்டும் சிவகுமார் முத்தய்யா இந்நாவலுக்கு எழுதி இருக்கும் முன்னுரையை வைத்தும் நாவல் பெரும்பாலும் நேரடித் தரவுகள் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது. அத்தரவுகளை சிவகுமார் முத்தய்யா அலுப்பான மொழிநடையில் நாவல் முழுக்க தூவிவிட்டுச் செல்லாமல் தரவுகளைக் கொண்டு எதைப் பேச வேண்டுமோ அதை மிகச் சரியாகவே பேசி இருக்கிறார்.


ஸ்திரமான வருமானமும் நிலையான உறவுகளும் அற்ற வாழ்க்கை அமைந்தவர்களாக இந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் இருக்கின்றனர். கலைக்கு மனிதனை பீடிக்கும் தன்மை உண்டு. ஆட்டக்காரிகளாக வரும் பெண்கள் ஆடுவதால் சந்திக்கும் இன்னல்களைத் தாண்டி ஆடுவதின் வழியாக உருவாகும் பெருமிதத்திற்காவும் நிறைவுக்காகவுமே அந்த வாழ்க்கையில் தொடர்ந்து நீடிக்கின்றனர். மரியாதையற்ற வாழ்க்கையில் இருந்து அடுத்த தலைமுறையாவது தப்பிப்போக வைத்துவிடும் எண்ணமே அவர்களுடைய வாழ்க்கையை உந்துகிறது. பேபி தன் மகள் ரேகாவை ஆட்டக்கலையில் இருந்து தப்புவிக்க நினைக்கிறாள். கலியமூர்த்தி தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து தப்பி தன் குழந்தைகள் மனைவியுடன் வாழவே முயல்கிறான். ஆனால்  'குடும்ப வாழ்க்கை' ஒரு கனவாகவே உள்ளது. குமரேசன் போல திட்டவட்டமாக சுயநலத்துடன் குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்கள் நீங்கலாக மற்ற அனைவரும் நிலையற்றே அலைகின்றனர். சரியாக அமைந்த குடும்பத்தை தன் சந்தேகத்தால் சீர்குலைத்துவிட்டு சாகும்வரை அதற்கென வேதனைப்படும் நாகராசன் போன்றவர்களும் இந்நாவலில் இடம்பெறுகின்றனர். வறுமையான வாழ்க்கையின் காரணமாக ஆட்டக்காரியாகும் சாந்தி,சித்ரா போன்ற பெண்களும் பேசப்படுகின்றனர். பபூன் வேஷம் போடும் குள்ளன் ஆல்பர்ட்டுக்கு பெண் பார்க்கச் செல்லும் இடம் நாவலில் முக்கியமான ஒன்று. ஆட்டக்காரிகளை காமத்துடன் அணுகுகிறவர்கள், எந்நேரமும் அவர்கள் எதிர் கொள்ள நேரிடும் பாலியல் தொல்லைகள்,குடும்பத்தைக் கெடுப்பவர்கள் என்று குடும்பப் பெண்களிடமிருந்து அவர்கள் பெறும் வசை எல்லாமும் மிகுந்த அக்கறையுடன் நாவலில் பேசப்படுகிறது. 





காமம் சார்ந்த விவரிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அத்தகைய இடங்களை சிவகுமார் முத்தய்யா கோடிட்டு மட்டுமே காட்டுகிறார். காமத்தைக் கடந்து அவ்வுறகளால் ஏற்படும் அன்றாடப் பாடுகளையும் சிக்கல்களையும் பேசுவதிலேயே சிவகுமார் முத்தய்யா அக்கறை கொள்கிறார். உதாரணமாக கலியமூர்த்தி வசந்தாவிற்கு இடையேயான உறவைச் சொல்லலாம். பேரழகியான வசந்தாவை திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரம் ஒன்றிலிருந்து கலியமூர்த்தி காப்பாற்றுகிறான். கலியமூர்த்தி தவில் கலைஞன். இருவருக்கும் இடையேயான உறவு வளர்கிறது. ஆனால் வசந்தா அவனை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாள். (வசந்தா மட்டுமின்றி ஆடும் பெண்கள் பலரிடமும் திருமணத்துக்கு எதிரான இந்த மனநிலையைக் கொண்டுள்ளனர். அவர்கள் அப்படி எண்ண காரணம் தங்களுடைய சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்வதா அல்லது 'பத்தினி' உருவகத்தினால் ஏற்படும் அழுத்தமா என்பது நாவலில் சொல்லப்படுவதில்லை.) கலியமூர்த்திக்கு மணமாகிறது. கலியமூர்த்தியின் முந்தைய வாழ்க்கை அவன் மனைவி பாப்பாவுக்குத் தெரிகிறது. அந்தப் பழைய உறவினை அறுத்தும்விடாமல் வளரவும் விடாமல் பாப்பா தன் குடும்பத்தை நடத்திச் செல்கிறாள். வசந்தாவின் வாழ்க்கை வேறு விதமாக நகர்கிறது. அவளுடைய ஆட்டத்தைப் பார்க்க வந்த சண்முகம் குடும்பத்தை விட்டு அவளுடனேயே தங்கி விடுகிறார். அவருடைய கடைசி காலத்தில் வசந்தாவே அவருக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்கிறாள். அதற்கு கலியமூர்த்தியும் உதவுகிறான்! அப்படி அவள் உதவி கேட்டு வரும் சித்திரம் நாவலில் இடம்பெறுகிறது. கலியமூர்த்தி தன் மனைவியிடம் வசந்தாவை உதவி கேட்கும்படிச் சொல்கிறான்.


/ கலியமூர்த்தி தவிலால் தட்டி டும்...டும்.. என அடித்து ஓசையெழுப்பி கேட்கச் சொல்லி சமிக்ஞை செய்தான். தவில் வாசிப்பவர்களுக்தும் ஆடுபவர்களுக்குமான ரகசிய மொழி அது. வாசிப்பவர்கள் தங்களுக்கு சோர்வு ஏற்படும் போது குறைவான சத்தத்தை எழுப்பினால் ஆடுபவர்கள் அதைப் புரிந்து கொண்டு கூட்டத்தில் இருந்து எவ்வளவு விசில் சத்தம் வந்தாலும் வேகமெடுத்து ஆடமாட்டார்கள். அதுபோல ஆடுபவர்கள் ஆடமுடியாது கால் வலிக்கும்போது காலில் அணிந்திருக்கும் சலங்கையை தரையில் வைத்து இரண்டு முறை குலுக்கினால் அடியின் வேகத்தை குறைப்பது தொடங்கி சாப்பிடுவது,சம்பளம் அதிகம் கேட்பது வரை பல சங்கதிகள் அதில் உண்டு/


இது மாதிரியான பல நுண்ணிய தருணங்களை நாவலில் குறிப்பிட முடியும். திடீரெனக் கிடைக்கும் புகழ், புகழ்வெறியில் எடுக்கும் தவறான முடிவுகள் எப்படியெல்லாம் இக்கலைஞர்களின் வாழ்க்கையை அலைகழிக்கின்றன என்பதைத் தாண்டி சொல்லப்படாத கோணமாக சமூகம் இவர்களைப் போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களை என்னவாகப் பார்க்கிறது என்பதும் வாசிப்பின் வழி உணரத்தக்கதாக உள்ளது. தவில் கலைஞர்களுக்கு இடையேயான ஆசிரியர் மாணவர் உறவு, போட்டியில் நடைபெறும் கொலைகள், அப்பாவின் தொழிலான பறையிசையை கைக்கொள்ளும் செவத்தகன்னி என்று முடிவற்றது என்று தோன்றும் பாத்திரங்களும் கோணங்களும் நாவலில் வெளிப்பட்டபடியே இருக்கின்றன.


பல இடங்களில் நாவலில் பாத்திரங்களின் பெயர்களே தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சந்திரன் என்று வரவேண்டிய இடத்தில் குமரேசனின் பெயர் வருகிறது. இதுபோன்ற குறைகளை அடுத்தடுத்த பதிப்புகளில் கவனமாகக் களைவது நாவல் வாசிப்பு அனுபவத்தை மேலும் நிறைவானதாக மாற்றும். மயில் ராவணனின் கொலையும் அதைச் சந்திரன் 'துப்பறிந்து' தப்படிச்சான் மூலைக்குச் செல்வதும் நம்பகத் தன்மையுடன் சொல்லப்பட்டிருந்தாலும் நாவலின் பொதுவான உணர்வு நிலையில் ஒட்டாமல் தனித்து நிற்கிறது.


முன்பின்னாக நகர்ந்து பல்வேறு கலைஞர்கள் வழியாக நகரும் நாவலின் உணர்வுத்தளத்தில் ஒரு அமைதி நிலவுகிறது. எங்குமே போலியான சீற்றமோ கோபமோ வெளிப்படுவதில்லை. மிகையான காமமோ வன்முறையோ நாவலில் இல்லை. முன்பின்னாக நகர்ந்து பாத்திரங்களின் போக்கு காண்பிக்கப்படுவதாலேயே  எங்குமே செயற்கையான அதிர்ச்சிகளும் திருப்பங்களும் இல்லை. சந்திரன்,செவத்தகன்னி, மயில் ராவணன் என்று தஞ்சையின் வேறு வேறு ஊர்களில் வாழ்கிறவர்கள்கூட ஏதோவொரு வகையில் தப்படிச்சான் மூலையுடன் தொடர்புடையவர்களாக மாறுகிறார்கள். தொடர்ச்சியான வாழ்க்கைச் சித்தரிப்புகள் வழியாக சிவகுமார் முத்தய்யா தப்படிச்சான் மூலையை ஒரு பெரிய தொன்ம நிலமாக மாற்றிக் காட்டி விடுகிறார்! ஆனால் அங்கு மாயங்களோ தெய்வங்களோ பிசாசுகளோ இல்லை. முழுக்க முழுக்க கலைஞர்களும் அவர்களின் உற்சாகமும் சுதந்திரமும் வலியும் நிறைந்த வாழ்க்கைப்பாடுகளே உள்ளன. இப்படி ஒரு தனித்துவம் மிகுந்த வாழ்க்கைச் சூழல் ஒரு நாவலில் உருவாகி வருவது அபூர்வமான ஒன்று. அந்த வகையில் தப்படிச்சான் மூலை தமிழ் நாவல் பரப்பு பேசியிருக்கும் முக்கியமான களங்களில் ஒன்று.


-சுரேஷ் பிரதீப்.


சிவகுமார் முத்தய்யா தமிழ் விக்கி


https://tamil.wiki/wiki/File:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE.png