Wednesday 29 April 2020

கற்றாழைக் கிணறு - எதிர்வினைகள்

கற்றாழைக் கிணறு - சிறுகதை

கற்றாழைக் கிணறு சிறுகதை குறித்து அரவிந்தன்

அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு:

இரவு நேரங்களில் பேய் கதை கேட்பதே ஒரு பரவச உணர்வு. அதை விட ஒரு படி மேல் நாட்டார் தெய்வங்களின் கதை கேட்பது.அவற்றை வழிபடும் முறை ஒரு அமானுஷ்ய நிகழ்வே.சுநில் அவர்கள் 'குருதி சோறு ' கதையில் எழுதியதை போல.காட்டேரி முதலியவை தெய்வமா ? பேயா ? என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு என்று தான் நினைக்கிறேன்.

கதையின் ஆரம்பத்தில் ஒரு கிராம தெய்வ கதையென்றே நினைத்தேன்.ஆனால் இது ஒரு பேய் கதையும் கூட.தொடர்ந்து பலி கேட்கும் உயிர் குடிக்கும் கதை.ரத்தம் குடித்து குடித்து கள்ளி கற்றாழையாக, அதாவது ஒரு பேய் ,தெய்வமாக மாறும் இடம்.உண்மையில் குறத்திக்கும்(வள்ளி) ,மயிலுக்கும்(முருகன்) உள்ள இணைவு அவளை முன்பே ஒரு தெய்வத்தன்மை படுத்துகிறது.

மாணிக்கம், மூங்கில்வீரன்,கேசவன் மூவரும் ஒன்றே என்று படுகிறது.ஏனெனில் குறத்தி சாகும் முன்னர் மூங்கில்வீரனை சபிக்கவில்லை தன்னவனை சபிப்பதாகும் என்று அவள் நினைத்திருப்பாளோ? என்னவோ?

தேடுபவருக்கு உண்மை ஒரு சிறு ஒளியுடன் கதைவை திறந்து வைத்துக்கொண்டு காத்துக்கொண்டே இருக்கிறது போலும்.அது மட்டுமல்ல தான் பொய்யல்ல பொய்யல்ல என்று வேறு சொல்ல வேண்டியிருக்கிறது.தேய்வங்கள் என்றாலும் நான் இருப்பதாக 'நான் சாமிடா' என்று சூளுரைக்க வேண்டிவுள்ளது.

பார்வதியின் மெய்மை,மறுக்கப்பட்ட நீதி அம்மையாக காளியிடம் சொன்னதன் விளைவாக குறத்தியை கேட்கிறது.அதைவிட மேலாக செண்பக குறத்திக்கு மறுக்கப்பட்ட அனைத்தும் ஊரையே கேட்கிறது.அம்மையாகவும் ,பாம்பாகவும்.

நரசிம்மனின் மகனை விழுங்கிவிட்டு இறுதியாக கிணற்றுக்கு அடியில் சிரிகிறாள் குறத்தி.

புறச்சித்தரிப்பு அனைத்தும் மிக இணக்கமாக இருந்தது.

வாழ்துக்கள்...:fullmeals சாப்பிட்டது போல நிறைவு.ஆனாலும் ஏதோ ஒன்று எஞ்சி தான் உள்ளது.

அ.க.அரவிந்தன்.

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் எழுதிய "கற்றாழைக்கிணறு" சிறுகதையை முன்வைத்து

தற்போது தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர்களில் ஒரு Promising எழுத்தாளர் என சுரேஷ் பிரதீப்பைச் சொல்லலாம்.

எழுத வந்த குறைந்த காலங்களில் நிறைய எழுதியவர்.எழுதிக் கொண்டிருப்பவர்.

சிறுகதைகளில் எல்லாவிதமான வடிவ முயற்சிகளையும் மேற்கொண்டவர் புதுமைப்பித்தன்.

அதிகமாக சமூகத்தின் புற நிகழ்வுகளை சிறுகதைகளாக எழுதிய புதுமைப்பித்தன் பரிசோதனை முயற்சியாக காஞ்சனை எனும் பேய்க் கதையையும் எழுதியிருப்பார்.

அந்த வகையான ஒரு முயற்சிதான் சுரேஷ் பிரதீப்பின் இந்த கற்றாழைக்கிணறு சிறுகதையும்.

கோயில்கள்,தெய்வங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் நரசிம்மன் என்பவரால் அனுப்பப்பட்டு பாண்டவனுருக்கும்,பாயா நிலத்துக்கும்ம் இடைப்பட்ட குறத்திமேட்டுப்பகுதியில் மூங்கில் வீரன்,செண்பககுறத்தி கதையை ஆராய்வதற்கு வரும் சுரேஷ் என்ற முனைவர் பட்ட மாணவனின் பார்வையில் கதை நகர்கிறது.

தெய்வங்களைப் பற்றிய,மனிதர்களைப் பற்றிய தொன்ம,அமானுஷ்ய கதைகளை கி. ராஜநாராயணன்,சோ.தர்மன் படைப்புகளை படித்ததிலிருந்து அந்தக் கதைகள் மீது எனக்கு ஒரு பெரிய ஈர்ப்பு உண்டாகியது.

 சௌந்தரராஜன் சுரேஷிடம் செண்பகக்குறத்தி இறந்ததை மட்டும் சொல்லும் தொடர்ச்சியற்ற கதைக்கு அவள் ஏன் இறந்தால்,எப்படி இறந்தால் என்பதை கேசவன் சொல்லும் கதைதான்
தொடர்ச்சியற்ற கதைக்கு கண்ணியாக இருக்கிறது.

பாண்டவனூர் மூங்கில் வீரன் கிணற்றில் நிறைமாத கர்ப்பிணியான செம்பக குறத்தி விழுந்து இறந்து விடுவதால் அந்த கிணறு  முழுவதும் முதலில் கள்ளி முளைக்கிறது.பின் குறத்திக்கு பூஜை செய்து வணங்குவதால் கிணற்றில் கள்ளி மறைந்து கற்றாழை முளைக்கிறது.
இங்கு கள்ளி என்பது தீமையின் குறீயீடு. கற்றாழை என்பது தெய்வத்தின் குறியீடு.

பாயாநிலத்தில் மயில்கள் குறைவதால் நாகங்கள் வந்து ஊரையே அழிப்பதாக சொல்வதில் மயில் குறத்தியின் வடிவமாகவும்,நாகம் தீமையின் வடிவமாகவும் காண்பிக்கப்பட்டுள்ளது.

மூங்கில் வீரன் சாமியாடி மாணிக்கத்தை கொல்லும் அவனது மனைவி பார்வதி, மாணிக்கத்தால் கருவுறும் செம்பக குறத்தியை பாண்டவனூரை விட்டே துரத்துவதால் கிணற்றில் விழுவதற்கு முன் உன் ரத்தத்தில் உருவாகும் வம்சத்தை அழிக்கும் வரை இந்த கிணற்றில் கள்ளியாக இருப்பேன் என சபித்துவிட்டு கிணற்றில் விழுந்து இறந்து போகிறாள் குறத்தி.

நரசிம்மனுக்கு கற்றாழைக்கிணற்றை புகைப்படம் எடுத்து சுரேஷ் அனுப்பும் போது கற்றாழைகளுக்கு மத்தியில் ஒரு கள்ளிப்புதர் இருப்பதை உற்றுப் பார்த்தால் தெரியும் என கடிதம் அனுப்புகிறான்.

இரவில் சுரேஷ் கேசவனிடம் பேசிவிட்டு பாயாநிலத்திலிருந்து பாண்டவனூர் நோக்கி செல்லும் போது உடல் நிலை சரியில்லாமல் இருந்த நரசிம்மனின் மகன் இறந்து போய்விட்ட செய்தியை அறிந்து செல்போன் டார்ச்சை கிணற்றுக்குள் சுரேஷ் அடித்துப் பார்க்கும் போது கற்றாழைக்கு மத்தியில் இருந்த கள்ளிப்புதர் காணாமல் போய் விடுகிறது.

நரசிம்மன் மகன் இறப்பதற்கு காரணம் நரசிம்மனின் கீழ்த் தஞ்சையின் தெய்வங்கள் என்ற நூலில் மூங்கில் வீரனுக்கு சிலை இல்லை அப்படியொரு தெய்வம் இல்லை என்று கூறுவதால் கூட குறத்தி நரசிம்மன் மகனை கு குறத்தி கொன்றிருக்கலாம்.இதுநம்பிக்கைக்கும்,அவநம்பிக்கைக்குமான சண்டையை குறிக்கிறது.

காலையில் சௌந்தரராஜனுடன் பாயாநிலத்தைச்சுற்றி பார்க்கும் போது பாயாநிலத்தில் எந்த வீடும் இல்லை என செளந்திரராஜன் சொன்னது சுரேஷ்க்கு நியாபகம் வரும் போது தான் இது ஒரு அமானுஷ்ய பேய் கதை என நம்மால் உணர முடிகிறது.

வாழ்த்துக்கள் சுரேஷ்

❤❤❤❤

வேலு மலையன்


Wednesday 22 April 2020

என் சிறுகதைகள் குறித்து அ.க.அரவிந்தன்

அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு:

நான் ஐந்து வயது குழந்தை இலக்கியத்தில். சில தினங்களுக்கு முன்பு முகநூலில் உலாவுகையில் உங்கள் 'ரக்த மணம்' கதையை படிக்க நேர்ந்தது.சற்று முன்னதாகவே நீங்கள் எனக்கு அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று தோன்றியது.கதையின் முடிவிலிருந்த விலாசத்தை பார்த்துவிட்டு துணுக்குற்றேன்.பின்னர் யூட்டூபில் உங்கள் உரைகள் அனைத்தையும் பார்த்தேன்.நீங்கள் திருவாரூர் என்பதால் அந்த துணுக்குற்றல்.டெல்டா மாவட்டங்களில் நிலம் சார்ந்தும் ,மொழி சார்ந்தும் வேறுபாடு இல்லை என்று கருதுகிறேன். ஆம் ,நான் தஞ்சாவூரின்,திருக்காட்டுப்பள்ளி என்னும் சிற்றூர். கோவில்வெண்ணி கிராமத்தில் பொறியியல் இறுதி ஆண்டு படிக்கிறேன்.

'ரக்த மணம்' மிகவும் பிடித்த கதையாக இருந்தது.பிற டெல்டா படைப்பாளிகளை நான் படித்ததில்லை. முகநூலில் பின்தொடருகிறேன்.உண்மையில் உங்கள் பெயரை நான் சுநில் கிருஷ்ணன் அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.ஆனால் படித்ததில்லை..
ரக்த மணம் தொடர்ந்து தங்களின் முதல் தொகுப்பான 'நாயகிகள் நாயகர்கள்' கிண்டலில் வாங்கி வாசித்தேன்.அதனால் அதை பற்றியும் இன்னும் சில உங்கள் சிறுகதை பற்றியும் வாசித்த அனுபவத்தையும் மற்றும் அவதானிப்புகளையும் பகிர விரும்புகிறேன் அல்லது ஏதோ ஒரு வகையில் தங்களது கதைகளை வகைபடித்திக்கொள்ள விழைகிறேன்.

'நாயகிகள் நாயகர்கள்' வாசித்தபோது  பெருந்தேவி அவர்களின் ஒரு கவிதை மனத்திரையில் வந்தது.

ஒவ்வொரு முக்கிலும்
பலிகளைக் 
கேட்டும் கொண்டும் 
நகர்கிறது குடும்பத்தேர் 
மயானத்தை நோக்கி.

உங்கள் கதைகளின் மாந்தர்கள் மிக எளிய மனிதர்கள்.மிக நெருக்கமாக அன்றாட பார்க்கும் ,பழகும் மனிதர்களாக இருக்கிறார்கள். நவினவாழ்க்கையின் தொடர் இன்னல்களில் உழலும் மனிதர்கள்.இதை பெருவாரியான கதைகளில் தொட முடிகிறது.இதில் தங்களது கதை முடிவு பெறவில்லை. அதாவது எஞ்சும் சொற்கள், ரக்த மணம் போல முடிவு ஒருவகை நிறைவை தருவதில்லை. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கதையின் பிரதான பாத்திரம் தப்புவித்து ஓடுகிறது(அலுங்களின் நடுக்கம் , அம்மா வீட்டில் இல்லாதபோது) அல்லது நின்று விழிக்கிறது(சொட்டுக்கள்).

என் நினைவு சரியென்றால் ஒரேயொரு அம்மாவுக்கு மட்டும் தான் நீங்கள் பெயர் வைத்துள்ளீர்.(வாசுகி)
பொதுபடுத்துவது மூலமாக ஒரு பலகுறல் தன்மை வருகிறது. சொட்டுகள் கதையில் அம்மாவுக்கு ,அவளுக்கும் பெயர் இல்லை.அதனால் அது சட்டென்று தீண்டுகிறது என்று நினைக்கிறேன். பின்னர் இதிலுள்ள நவினமனம் என்பது அவள் தோல்வி அடையவிரும்புவதில்லை என்று பொருள் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவள் அன்னை தான் ஆனால்  அவள் தன் அம்மாவிடமும் ,பிள்ளையிடமும் தொல்வியை தழுவ விரும்புவதில்லை.
அதேபோல 'குற்றுளம் 'கதையில் அவன் அம்மாவை யேசும் பெண்ணை உதைகிறான்.அது அவனை அவமானபடுத்துவதாக எண்ணுகிறான்.அங்கு அவன் தன்னை வெற்றி அடைந்தவனாக எண்ணி தோற்றுவீழ்கிறான்.

அது சில்ற கதையில் அற்பதனமாக  வெளிபடுகிறது.ரஞ்ஜனிக்கும்,நவினுக்கும் உள்ள உறவை சில்ற எனகொண்டால்.சில்ற பெட்டியை வீசியவுடன் அவன் அடைவது விடுதலை.அவன் அவளிடம் மன்னிப்பு கேட்டதற்கான குறியீடு என்றும் நினைக்கிறேன்.அம்பிகாவை ஏமாற்றுவது சில்ற என கொண்டு சிதறியதை அள்ளுகிறான்.

நன்கு கூரிய வார்த்தைகளாலும்
மொழியின் உச்சத்தினாலும் முழுதும் படிக்காத உணர்வே மேலெழுகிறது.அது வலுசேர்க்கும் விதமாகவும் அமைகிறது.அகம்,எல்லாவற்றையும் மீண்டும் தொடங்குதல்,கண்ணாடிச் சில்லுகளும் கருங்கூழல் நோட்டுகளும் ஆகிய கதைகளில் தெரிகிறது மொழியின் கூர்மை.அகம் கதையின் புறம் எழுதப்படவேண்டும் என்பதை உங்களின் கருத்தாக கொண்டால்.நீங்கள் அதை 'உடனிருப்பவன்' கதையின் அடைகிறீர் என்று யூகிக்கிறேன்.'கண்ணாடி சில்லு...' கதையின் அகமனிதன் புறமனிதனை ஓடவிடுகிறான்.புறமனிதன் தோல்வியுற்று வெளியேறுகிறான்.ஆனால் 'உடனிருப்பவன்'கதையில் அகமனிதனும் புறமனிதனும் சமரசம் செய்துகொள்கிறார்கள் அல்லது அதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். கதையின் நடுவில் அகமனிதன் நல்லவன். கடையில் புறமனிதன் நல்லவன்.அந்த இடம் நீங்கள் கண்டுணர்ந்ததாக ,சென்றடைந்ததாக எண்ணுகிறேன்.

அகம் கதையின் வரும் சுகனும் ,வதை கதையின் சுகனும் ஒன்று என்றால் அகம் சுகன் வென்று விடுகிறான் ,வதை கதையில் தோல்வி.

சிறுவர்களின் ஏமாற்றத்தை தொடும் கதையாக பெரியம்மாவின் வீடு,அம்மா வீட்டில் இல்லாத போது ,பிரைமரி கம்ப்லெஸ் முதலிய கதையை கொண்டால் 
இவ்வகை கதையில் மட்டும் நெகட்டிவ் தன்மை இல்லை என்று நினைக்கிறேன். மத்த கதையில் அனைத்தும் ஒரு வகையாக grey side வருவதாக தெரிகிறது.ஏமாற்றம் என்னும் வார்த்தை நிலையற்றதாக எண்ணுகிறேன். அம்மா வீட்டில் இல்லாத போது கதையில் அவன் 'என்னிடம் சொல்லிவிட்டு செய்யேன்' என்ற மனநிலையில் இருக்கிறான் பெரியாம்மாவின் வீடு கதையில் அவன் வீட்டிற்கு சொல்லாமல் அழைத்து செல்லபடும் போது ஏமாற்றம் அடைகிறான்.
ஏமாற்றத்தின்  நிலையின்யால் ஏற்படும் ஒரு நிம்மதி.நிரந்தரத்தில் கிடைபப்பதில்லை. 

ஆண் கதைமாந்தர்கள் அதிகமாக இருந்தாலும் பெண் பற்றிய கருதுகோள்களால் மோதவிட்டு தத்திளிப்பதாக தெரிகிறது.நவினமனம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையாக தெரிகிறது.
'அய் நீட் யூ ' என்று சுகன் சொல்லும்போது அவள் பொருள்கொள்ளவில்லை.
பின்னர், வதை கதையில் அவனுக்கு நினைவிற்கு வருவது பெண்கள் தான்.

உங்கள் கதையின் 'பார்கவி' கதைதான் சொல்லகூடிய கதை, மற்ற கதையை சொல்லி புரியவைக்க முடியாது என்று தோன்றுகிறது.
'ராஜராஜ சோழன்  நான்' என்று மணி உணர்வதை வைத்து தான் அவனின் முழு சித்திரத்தையும் உருவாக்கி கொள்ள முடியும்.
அதே போல 'வதை 'யில் இந்த வீடு தன் தாத்தா அவரின் ஆசை நாயகிக்கு தந்தது என்று சுகந்தினி சொல்வது  காதபாத்திரத்தை உணர்ந்துக்கொள்ள உதவும் என்று கருதுகிறேன். இதை விட்டுவிட்டு சொன்னால் அது வேறும் மெல்லுணர்ச்சி கதையாக நின்றுவிடும்.

குற்றுளம்,சொட்டுகள், ஆகிய கதையில் நாய்யின் படிமம் வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனுக்கு யானை போல உங்களுக்கு நாயோ? :)..
ஒரு குடும்பத்தின் கதையை sarcasticகாக நாயகிகள் நாயகர்கள் கதையில் எழுதியதாக படுகிறது.

முதல் தொகுப்பிலே 'எல்லாவற்றையும் மீண்டும் தொடங்குதல் 'கதையைதான் இறுதியில் எழுதபட்டதாக யூகிக்கிறேன். அதில் மெல்லிய பகடி இழையோடும்.எனக்கு பிடிந்த கதை அதுதான்.கவி என்பது இறுதியில் அவனின் அகத்திடம் நடத்தும் உரையாடல் என்றும் பொருள் படவைப்பது என்னை தொடும் ஒன்று.அது அவன் எழுதும் கதையென்றாலும் என்னை தொடும்.

எஞ்சும் சொற்கள் முடிவு ஒரு பெரிய அகதிரப்பை தந்தது.தாழ்த்தப்பட்ட மக்களின் அனைத்து மனநிலையும் நன்கு வெளிவந்த கதை.நான் grey side என்ற சொல்வது இதில் அவன் நல்லவன் புதியவன் என்று எனக்கு படுகிறது.ஆனால் 'உஷா உப்த்துப்' போல ஒரு பெண்ணை பார்த்து நசுக்க விரும்புகிறான்.இது போன்ற இடம் பெருவாரியான கதையில் இருக்கிறது.என்னை தொடும் இடமாக அது நினைவில் உறைந்து நிர்க்கிறது.

மொழி நன்கு வெளிபட்ட கதையாக 'ஒரு நாள் கழிந்தது' கதையை சொல்வேன்.அதாவது நிலத்தின் மொழி.வட்டார மொழி இல்லாத நிலம் என்றாலும் அதில் எழுத பட்டமொழி மிக இணக்கமாக இருந்தது எனக்கு.அதிலும் ஒரு நவினமனம் ,நவினவாழ்க்கையின் சிக்கல் நன்கு வெளிவந்துள்ளது.தன்னை selfi எடுத்து பார்த்து சோகப்படும் சித்தாள் என்பது நல்ல உதாரனம்.பத்தினியாக இருக்க வேண்டும்  ஆனால் மேஸ்திரி தன்னை அடைய முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கிறாள்.அபிராமி தான் மேஸ்திரி தன்னை மதியாதற்கு காரணம் என்று எண்ணி வேறுக்கும் இடம் மற்றோறு உதாரணம்.ஒரு தீண்டல் வேண்டும் ,தன்னை பிறர் கவனிக்க வேண்டும் , தன் பெயர் கெடகூடாது என்ற ஒரு வகையாக angst அவளுக்கு.

வெம்மை என்னை பெரிதும் ஈர்க்காத ஒன்று.குந்தியின் பயம் தான் காரணம் என்று மிக சிறிய விடயம் தான் என்னிடம் சொல்ல இருக்கிறது.ஜெயமோகனின் 'பத்மவியூகம்' அளவுகோள் இயல்பாக என்னுள்ளே.அதனால் இருக்கலாம்.

ரக்த மணம் இன்று அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சமர்ப்பணம் என்றும் தோன்றியது.ஒரு வகையில் அரசு ஊழியர்கள் வேறு சிலருக்கு சொல்லும் பதிலென்றும் நினைக்கிறேன்.குற்றவுணர்ச்சியில் அவன் உழலும் போது புணர்ந்த பெண்னை வன்முறை செய்கிறான்.இறுதியில் ஒரு நிறைவு பின் கைதி விடுதலையாகும் போது.

அகம் சார்ந்த வெற்றியே நவினமனத்தின் சாரமாகவும் ,தேவையாகவும் இருக்கிறது.இதில் நிம்மதியாக இருக்கவேண்டும் என்றால் 'வெளியேறவேண்டும்'.அவ்வாறு செய்வது ஒரு வகையான கொலைத்தனம் என்றால் வாழ வேண்டும்.வாழவேண்டும் என்றால் நிலையில்லாதாவற்றின் பலபொருளை ஏற்றுக்கொண்டு அல்லது எதையும் பொருள்கொள்ளாமல் வாழலாம்.'இது எல்லாதுக்கும் உள்ளதுதான், இப்டிதா விடு' என்று ஏற்றுக்கொண்டு.பெரிதாக பொருள் படுத்தாமல் இருக்கும் மனநிலைக்கு வந்து .இச்சிந்தனையை கைவிடுலாம் என்று நினைக்கிறேன்.

என்றும் அன்புடன்
அ.க.அரவிந்தன்.

Monday 20 April 2020

ஒருதுளிக் கண்ணீர்

நம்பிக்கை தரக்கூடிய சொற்களை மட்டுமே கேட்க வேண்டும் நல்லதையே நினைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தொடர்ந்து இப்பதிவை வாசிக்க வேண்டாம். இது ஒரு புலம்பல் மட்டுமே. எனக்குள்ளாகவே நான் புலம்பிக் கொள்ளப் போகிறேன். அதைப் பதிந்து வைக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். இந்த புலம்பலை நினைத்து எதிர்காலத்தில்(அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை)  நான் சிரிக்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகின்றேன்.

கொரோனா வைரஸ் பற்றிய முதல் தகவல் ஜனவரியில் கிடைத்தது. அந்த வைரஸுடைய பெயரே விரும்பத்தகாததாகத் தோன்றியது. மெல்ல மெல்ல ஒரு நமைச்சலைப் போல இந்த வைரஸைப் பற்றிய எண்ணம் நமக்குள் நுழைந்தது. இந்த வைரஸை விட பல மடங்கு வேகமாக வைரஸ் பற்றிய தகவல்கள் பரவின. இன்னமும் பரவிக் கொண்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கானவர்கள் சீனாவில் ஒரே நாளில் இறந்தபோதும் தென்கொரியாவில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு இந்த தொற்று பரவியபோதும் நாமொரு தூரத்து அதிர்ச்சியை அடைந்தோம். கேரளாவில் மூவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டாலும் அவர்கள் ஆரோக்கியமாக இருந்ததும் நாட்டில் வேறெங்கும் தொற்று பரவாததும் நமக்கு ஆறுதல் அளித்தது. இத்தாலியில் கொரோனா பலியெடுக்கத் தொடங்கியபோதுதான் உண்மையில் நமக்கு லேசாக கவலை தொற்றியது. யோசித்துப் பார்த்தால் இந்த கவலை தொற்றி இன்னமும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால் இக்காலம் நீண்டதாகத் தெரிகிறது. மிக மிக நீண்டதாகத் தெரிகிறது. இதுவரை உயிரோட இருந்த நாட்களைவிட இந்த காலம் நீண்டதாகத் தெரிகிறது. 

காலம் என்பது ஒரு ஒப்பீட்டு அலகுதான். நாம் எதிர்கொள்ளாத சூழல் நமக்கு நீண்டதாகவோ குறுகியதாகவோ தோன்றும். முதற்காதல் நமக்கு ஒரு இனிமையான தன்னுணர்வை அளிக்கிறது. அந்த காலம் மிகக்குறுகியதாகத் தெரிகிறது. ஒவ்வொருநாளும் ஏறக்குறைய பறக்கின்றன. எவ்வளவு இனிமையை இந்த மனதால் மாந்திக் களிக்க முடியும் என்பதை அப்போது உணர்கிறோம். ஆனால் ஒரு இனியவரின் எதிர்பாராத மரணம்? துளித்துளியாக காலம் நகர்கிறது. எதையோ உந்தி நம் வாழ்வில் இருந்து தள்ளிவிட முயல்கிறோம். அதுவரை நாம் நம்மை எந்தக் கல்லில் அமர்த்திக் கொண்டு வாழ்க்கையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோமோ அந்த கல் சற்று உடைகிறது. இதுவரை பார்த்த உலகம் இன்னொன்றாகத் தெரிகிறது. நம் மனம் இனிமைக்கும் துன்பத்துக்கும் ஒரு முறை மட்டும் உச்சகட்ட எதிர்வினையை ஆற்றுகிறது. அந்த உச்சகட்டம் இனிமையையும் துன்பத்தையும் முதல்முறையாக எதிர்கொள்ளும் போதே நிகழ்ந்து விடுவதால் வாழ்வில் அதன்பிறகு அனுபவிக்க நேரும் இன்ப துன்பங்களை எதிர்கொள்ள நமக்குள் எதிர்ப்புயிரி உருவாகிவிடுகிறது.

கொரோனாவைப் பொறுத்தவரை எதிர்ப்புயிரி இல்லையென்பதுதான் பிரச்சனை. இல்லை. நான் மருத்துவ கலைச்சொல் எதையும் பயன்படுத்தவில்லை. இந்த காலச்சூழலை எதிர்கொள்வதற்கான எதிர்ப்புயிரி நம்முடைய ஞானத்திரட்டில் இல்லை. சமீப ஆண்டுகளில் 'உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு' என்று ஒரு முன்னொட்டு அடிக்கடி பயன்படுத்தப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம். முன்னெப்போதும் இல்லாத அளவு பயணங்கள் அதிகரித்து இருக்கின்றன, விவாகரத்துகள் பெருகியிருக்கின்றன, தனிமனித ஆரோக்கியம் கூடியிருக்கிறது, எழுத்தறிவு உயர்ந்திருக்கிறது, தனிமனித வருமானம் உயர்ந்திருக்கிறது என்று இவ்வாறாக. உண்மையில் இத்தனை முன்னெப்போதும் இல்லாத அளவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்தே கொரோனாவுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியான நிலையை உருவாக்குவதற்கான வலிமையை அளித்திருக்கின்றன. இல்லை மறுபடியும் நான் உலகமயத்தை எதிர்க்கவோ உள்ளூர் மயத்தை ஆதரிக்கவோ இல்லை. 

நான் சொல்ல வருவது மனித இனத்தை மொத்தமாக தன்னைப் பற்றியே நாள் முழுவதும் சிந்திக்கச் செய்த இன்னொரு சக்தி இதற்கு முன் எப்போதும் தோன்றியதில்லை என்பதே. உலக சினிமா, உலக இலக்கியம் போன்றவை எல்லாம் இருக்க இயலாது என்று நிறுவப்பட்டு வரும் காலத்தில் உலகப்பதற்றம் என்ற ஒன்று இருக்க முடியும் என்று இந்த வைரஸ் நிறுவி இருக்கிறது. ஆம் நமக்கு ஆறுதலுக்கான ஒளி உலகின் எந்த மூலையில் இருந்தும் தெரியவில்லை. அதனால்தான் நாம் நம்மைத் தோண்டித் தோண்டி ஒளியை எடுக்கிறோம்.

சற்று நேரம் மனவெட்டியை கீழே வையுங்கள். நாம் கொஞ்சம் தெளிவாக சிந்திக்க முயற்சி செய்யலாம். உடலுக்கு வியாதி வந்தால் நாம் நம்முடைய அன்றாட செயல்பாடுகளை நிறுத்திவைத்து சில நாட்கள் ஓய்வெடுக்கிறோம். உடல் தான் முன்பு இயல்பாக இருந்த நிலையை அடைந்து இயல்பாக செய்தவற்றில் திரும்ப ஈடுபட சில 'இயல்பற்ற நாட்கள்' தேவைப்படுகின்றன. மீண்டும் காலம் நீண்டதாகத் தெரியும் புள்ளிக்கே வரலாம். ஏறக்குறைய உலகம் தன்னுடைய அத்தனை செயல்பாடுகளையும் நிறுத்திக் கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. சில இடங்களில் பதற்றமான கொண்டாட்ட மனநிலையில். சில இடங்களில் விரக்தியான பசியுடன். இது உலகுக்கான 'இயல்பற்ற நாட்கள்'. ஆனால் இந்த இயல்பற்ற நாட்கள் என்று முடியும் என்பது நோய் தொடங்கும் நாளிலேயே கண்டறிய முடியாது. நோய் தொடங்கும்போது நாம் நமக்கு அன்றிருக்கும் தலைவலியோ காய்ச்சலோ சரியானால் போதும் என்றுதான் நினைப்போம். அது முழுமையாக சரியான பிறகே நம்முடைய உள்வலிமை திரளத்தொடங்கும். கொரானாவின் இந்த நாட்கள் - அதாவது ஏப்ரல் 20,2020 வரை - காய்ச்சலும் தலைவலியும் குறையாது நீடிப்பதே நம்மை பதற்றப்படுத்துகிறது. மனதை சோர்வுற செய்கிறது. காலத்தை நீண்டதாகத் தோன்றச் செய்கிறது. இந்த பதற்றத்தை நாம் இதுவரை நேரடியாக எதிர்கொண்டதில்லை. எல்லோரும் சொல்வது போல இதுவொரு போரின் பதற்றம் அல்லது அதற்கும் அதிகமாக. சிக்கல் என்னவெனில் போரின் பதற்றமே இன்றைய உலகின் நினைவுத்தொகுப்பில் குறைவாகவே இருக்கிறது. 

போர் முடிவது மனித மனங்களின் வலிமையின் எல்லையைப் பொறுத்தது. லட்சக்கணக்கானவர்களின் கோடிக்கணக்கானவர்களின் அபிலாஷைகளை எதிர்த்து நிற்பதற்கு போர் நிகழ்த்துகிறவர்களுக்கு ஒரு எல்லைக்கு மேல் வலிமை இருக்காது. ஆகவே மனிதர்கள் தொடுக்கும் போர் முடிவுக்கு வரும். ஆனால் இச்சூழல் முடிவுக்கு வருவது நம் கைகளுக்கு எத்தனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இன்றுவரை நாம் தடுப்புத் தாக்குதலை மட்டுமே நிகழ்த்தி வருகிறோம். அதையும் முழுதாக செய்ய இயலாமல் அங்கங்கே தடுப்பு உடைந்து உயிர்பலிகள் நிகழ்கின்றன. எதிர்த்துத் தாக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும் அல்லது இறுதிவரை தடுத்தே தாக்கிக் கொண்டிருக்க வேண்டுமா என்பதும் விளங்கவில்லை.

இறுதி. இதுவொரு நல்ல சொல். அச்சுறுத்தும் சொல்லும் கூட. இன்னும் எவ்வளவு நாட்கள் என்று ஏற்கனவே நாம் ஏங்கத் தொடங்கிவிட்டோம். எதிர்காலம் குறித்து, வாழ்வாதாரம் குறித்து, மனித உறவுகள் குறித்து, வரலாற்றுப் பார்வை குறித்தெல்லாம் எனக்குள் அச்சம் குமிழியிடத் தொடங்கிவிட்டது. நான் கற்றுகொண்டவை எனக்களித்த விவேகத்தை மனவுறுதியை இந்த வைரஸ் கேலி செய்கிறது. அவமதிக்கிறது. அடிமைகளை ஆண்டைகள் அவமதிப்பது போல. அடிமைகளுக்கு வேறு போக்கிடம் கிடையாது. மேலும் ஆண்டை அடியாள்,செல்வ பலத்துடன் இருக்கிறார்.

இதற்கு முன் நின்று என்ன செய்ய இயலும் என்ற கேள்வியே கலக்கம் தருகிறது. நம்முடைய சமூக நற்குணங்கள் அனைத்தும் செயற்கையானவை. சிக்கலானவை. ஒவ்வொரு அமைப்பும் தன்னுடைய அதிகாரத்தால் செல்வத்தால் வன்முறையால் மதிநுட்பத்தால் நம்முடைய சமூக நற்குணங்களை வடிவமைத்து இருக்கின்றன. அக்குணங்களை கண்காணிக்கின்றன. இந்த வைரஸ் அமைப்புகளையே சிதைக்கும் அளவு அதிகாரமும் செல்வமும் வன்முறையும் மதிநுட்பமும் கொண்டிருக்கிறது. இதுவரை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாம் மிகையாகப் போராடுகிறோம். இந்த போராட்டகாலமும் நீண்டு நீண்டு போகிறது. ஆனால் அந்த வைரஸின் அதிகாரத்தை நம்மால் சற்றும் தளர்த்த முடியவில்லை. அது நம் அமைப்பகளை வெற்றி கொண்டால் நான் என்னவாக ஆவேன் என்றுதான் நான் அஞ்சுகிறேன்.

ஆம் இதுவும் அந்த பிரபலமான தனிமனித அடையாளச்சிக்கல்தான். என்ன பிரச்சினை என்றால் இந்த அடையாளச்சிக்கலை நாம் அத்தனை பேரும் எதிர்கொள்ள நேரும் என்பதுதான். நெருக்கடிகளில் நாம் முதலில் இழப்பது பேணிக்கொண்ட நற்குணங்களைத்தான். நற்குணங்கள் இழந்த கோடிக்கணக்கானவர்களை நற்குணங்கள் இழந்த இன்னொருவனாக எதிர்கொள்ள நேருமோ என்பது என் முதன்மையான அச்சமாக உள்ளது.


அதிசயங்களுக்காக காத்திருக்கும் ஒரு காலம் வருமென நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் இப்போது அது ஒன்றே வழி. தர்க்கப்பூர்வமாக நடந்து கொண்டு உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மேசைக்காலில் சுண்டு விரல் சிக்கி இருக்கும்போது ஓங்கி அழுவதில் ஒன்றும் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். வள்ளுவன் சொன்னதுபோல அஞ்சுவதை அஞ்சவேண்டும். அஞ்சுவதோடு கொஞ்சம் அழவும் செய்வோம். அப்போதாவது அதற்கு நம்மீது இரக்கம் பிறக்கிறதா என்று பார்ப்போம். இது என் ஒரு துளிக் கண்ணீர்.

Tuesday 7 April 2020

அன்பு போன்ற ஒன்று

அன்பு போன்ற ஒன்று

கோபிகிருஷ்ணன் சிறுகதைகள் முழுத்தொகுப்பினை வாசித்தேன். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்ற நவீனத்துவ அலையின் உச்ச எழுத்தாளர்களுக்கும் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் ,கோணங்கி போன்ற பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட தலைமுறைக்கும் இடைப்பட்டவர். ஆகவே இவ்விரு போக்குகளின் தன்மைகளையுமே கோபிகிருஷ்ணனின் கதைகளில் காணமுடிகிறது. நவீனத்துவத்தின் விரக்தியும் சலிப்பும் அவநம்பிக்கையும் கதைகளுக்குள் ஒலித்தாலும் அவற்றை மீறிச்செல்லும் எத்தனமும் கதைகளில் தெரிகிறது. நவீனத்துவம் புனைவின் வடிவக் கச்சிதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது. கோபிகிருஷ்ணன் இந்த கச்சிதத்தை மீறிச் செல்கிறார்.மக்கள் தினசரி - ஒரு தேசிய நாளேடு, பூச்சிகள், மொழி அதிர்ச்சி, பீடி போன்ற தொடக்ககால கதைகளிலேயே பல்வேறு பாணிகளை முயன்று பார்க்கிறார்.

ஒருவகையில் நவீனத்துவத்தை தர்க்கமனம் அடையும் வாதை என்று வகுக்க முடியும். முழுமையை அல்லது ஒழுங்கை கற்பனை செய்து கொண்டு அந்த ஒழுங்கு சமூகத்தில் நிலவவில்லையே என்று துக்கப்படும் ஒரு சிந்தனைப்போக்கு. அல்லது அந்த ஒழுங்கின்மைக்கு எதிராக சீற்றமும் பதற்றமும் கொள்ளும் போக்கு. கோபிகிருஷ்ணன் இந்த ஒழுங்கின்மைக்கு எதிராக நின்று சிரிக்கிறார் என்று சொல்லலாம்.  

உளவியல் விசாரங்களில் அதீத கவனம் செலுத்திக் கொண்டிருக்காமல் உளவியல் ஆய்வுகளின் பின்னுள்ள ஒற்றைப்படைத்தன்மையை பயனின்மையை கேலி செய்கிறார். தொடர்ச்சியான வீடு மாற்றம், வேலைகள் மாற்றம், பணமுடை, ஒன்றையே திரும்பச் செய்வதன் சலிப்பு என்ற நவீன வாழ்வின் அத்தனை சிக்கல்களையும் கோபிகிருஷ்ணனின் கதைமாந்தர்கள் தன்னகத்தே கொண்டிருந்தாலும் இந்த அலைபாய்தல்களை தாண்டிப்போகும் ஒரு எத்தனத்தை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கின்றனர். அந்த எத்தனமே பகடியாக வெளிப்படுகிறது.

இரு உலகங்கள் போன்ற கதைகள் அவை எழுதப்பட்ட காலத்தைக்கொண்டு பார்க்கும் போது ஆச்சரியம் தரவே செய்கிறது. இன்றைய உலகமயச் சூழலில் கலாச்சார மோதல்களும் சமரசங்களும் இயல்பாக மாறிக் கொண்டிருக்கிறது. அத்தகையதொரு மோதலையும் சமரசத்தையும் அக்கதை மிக அழகாக சித்தரிக்கிறது.

கோபிகிருஷ்ணனின் இன்னொரு விசேஷ அம்சம் பூச்சிகள் மீதான அவருடைய காருண்யம். பூச்சிகள் என்ற கதை அந்த காருண்யத்தின் உச்சம். பல கதைகளில் கரப்பான்கள், எறும்புகள், ஈக்கள் எல்லாம் அடித்துக் கொல்லப்படுவது குறித்த சங்கடமும் குற்றவுணர்வும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மக்கள் தினசரி - ஒரு தேசிய நாளேடு மற்றும் உயிர்ப்பு - நாட்குறிப்புப் பதிவுகள் போன்றவை கச்சிதமான குறுஞ்சித்தரிப்புத் தொகுப்புகள். இதில் மக்கள் தினசரி - ஒரு தேசிய நாளேடு செய்தித்தாள்களின் மொழியை கேலி செய்யும் நல்ல பகடிக்கதை. மொழி அதிர்ச்சி, தகவல் தொடர்பு சாதன வாழ்க்கை என அன்றாடத்தின் கிறுக்குத்தனங்களை கேலிசெய்யும் தனிக்கதைகளும் தொகுப்பில் உள்ளன.

இந்த தொகுப்பின் பலம் என்பது சிதறலான வடிவம், உறுத்தாத வடிவப் பரிசோதனைகள், கசப்பில்லாத கேலிகள் என்றால் பலவீனம் என்பது தனிமனித பிரக்ஞையே. கதைகளில் பெரும்பாலானவை ராஜ் அல்ல கோபி என்ற இருவரின் பார்வையிலேயே நடக்கின்றன. அவர்கள் ஒரே மாதிரியானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கண்ணுற நேரம் சம்பவங்கள் வழியாக மட்டுமே கதை நகர்வதால் பெரும்பாலான கதைகள் ஒற்றைப்படைத்தன்மை கொண்டு விடுகின்றன.

கோபிகிருஷ்ணன் கதைகளில் திரும்பத் திரும்ப "போன்ற ஒன்று" என்ற பதத்தை பயன்படுத்துகிறார். அன்பு போன்ற ஒன்று, கருணை போன்ற ஒன்று, நம்பிக்கை போன்ற ஒன்று. வாழ்க்கை குறித்தும் மனித உணர்வுகள் குறித்தும் தீர்மானமாக எதுவும் சொல்லத் தயங்கும் கோபிகிருஷ்ணனின் படைப்புலகம் எனக்கு அணுக்கமாக இருப்பதற்கு இந்த "போன்ற ஒன்று" முக்கியமான காரணம்.

கோபிகிருஷ்ணன் படைப்புகள் 
நற்றிணை பதிப்பகம்