அன்பு போன்ற ஒன்று
அன்பு போன்ற ஒன்று
கோபிகிருஷ்ணன் சிறுகதைகள் முழுத்தொகுப்பினை வாசித்தேன். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்ற நவீனத்துவ அலையின் உச்ச எழுத்தாளர்களுக்கும் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் ,கோணங்கி போன்ற பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட தலைமுறைக்கும் இடைப்பட்டவர். ஆகவே இவ்விரு போக்குகளின் தன்மைகளையுமே கோபிகிருஷ்ணனின் கதைகளில் காணமுடிகிறது. நவீனத்துவத்தின் விரக்தியும் சலிப்பும் அவநம்பிக்கையும் கதைகளுக்குள் ஒலித்தாலும் அவற்றை மீறிச்செல்லும் எத்தனமும் கதைகளில் தெரிகிறது. நவீனத்துவம் புனைவின் வடிவக் கச்சிதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது. கோபிகிருஷ்ணன் இந்த கச்சிதத்தை மீறிச் செல்கிறார்.மக்கள் தினசரி - ஒரு தேசிய நாளேடு, பூச்சிகள், மொழி அதிர்ச்சி, பீடி போன்ற தொடக்ககால கதைகளிலேயே பல்வேறு பாணிகளை முயன்று பார்க்கிறார்.
ஒருவகையில் நவீனத்துவத்தை தர்க்கமனம் அடையும் வாதை என்று வகுக்க முடியும். முழுமையை அல்லது ஒழுங்கை கற்பனை செய்து கொண்டு அந்த ஒழுங்கு சமூகத்தில் நிலவவில்லையே என்று துக்கப்படும் ஒரு சிந்தனைப்போக்கு. அல்லது அந்த ஒழுங்கின்மைக்கு எதிராக சீற்றமும் பதற்றமும் கொள்ளும் போக்கு. கோபிகிருஷ்ணன் இந்த ஒழுங்கின்மைக்கு எதிராக நின்று சிரிக்கிறார் என்று சொல்லலாம்.
உளவியல் விசாரங்களில் அதீத கவனம் செலுத்திக் கொண்டிருக்காமல் உளவியல் ஆய்வுகளின் பின்னுள்ள ஒற்றைப்படைத்தன்மையை பயனின்மையை கேலி செய்கிறார். தொடர்ச்சியான வீடு மாற்றம், வேலைகள் மாற்றம், பணமுடை, ஒன்றையே திரும்பச் செய்வதன் சலிப்பு என்ற நவீன வாழ்வின் அத்தனை சிக்கல்களையும் கோபிகிருஷ்ணனின் கதைமாந்தர்கள் தன்னகத்தே கொண்டிருந்தாலும் இந்த அலைபாய்தல்களை தாண்டிப்போகும் ஒரு எத்தனத்தை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கின்றனர். அந்த எத்தனமே பகடியாக வெளிப்படுகிறது.
இரு உலகங்கள் போன்ற கதைகள் அவை எழுதப்பட்ட காலத்தைக்கொண்டு பார்க்கும் போது ஆச்சரியம் தரவே செய்கிறது. இன்றைய உலகமயச் சூழலில் கலாச்சார மோதல்களும் சமரசங்களும் இயல்பாக மாறிக் கொண்டிருக்கிறது. அத்தகையதொரு மோதலையும் சமரசத்தையும் அக்கதை மிக அழகாக சித்தரிக்கிறது.
கோபிகிருஷ்ணனின் இன்னொரு விசேஷ அம்சம் பூச்சிகள் மீதான அவருடைய காருண்யம். பூச்சிகள் என்ற கதை அந்த காருண்யத்தின் உச்சம். பல கதைகளில் கரப்பான்கள், எறும்புகள், ஈக்கள் எல்லாம் அடித்துக் கொல்லப்படுவது குறித்த சங்கடமும் குற்றவுணர்வும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மக்கள் தினசரி - ஒரு தேசிய நாளேடு மற்றும் உயிர்ப்பு - நாட்குறிப்புப் பதிவுகள் போன்றவை கச்சிதமான குறுஞ்சித்தரிப்புத் தொகுப்புகள். இதில் மக்கள் தினசரி - ஒரு தேசிய நாளேடு செய்தித்தாள்களின் மொழியை கேலி செய்யும் நல்ல பகடிக்கதை. மொழி அதிர்ச்சி, தகவல் தொடர்பு சாதன வாழ்க்கை என அன்றாடத்தின் கிறுக்குத்தனங்களை கேலிசெய்யும் தனிக்கதைகளும் தொகுப்பில் உள்ளன.
இந்த தொகுப்பின் பலம் என்பது சிதறலான வடிவம், உறுத்தாத வடிவப் பரிசோதனைகள், கசப்பில்லாத கேலிகள் என்றால் பலவீனம் என்பது தனிமனித பிரக்ஞையே. கதைகளில் பெரும்பாலானவை ராஜ் அல்ல கோபி என்ற இருவரின் பார்வையிலேயே நடக்கின்றன. அவர்கள் ஒரே மாதிரியானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கண்ணுற நேரம் சம்பவங்கள் வழியாக மட்டுமே கதை நகர்வதால் பெரும்பாலான கதைகள் ஒற்றைப்படைத்தன்மை கொண்டு விடுகின்றன.
கோபிகிருஷ்ணன் கதைகளில் திரும்பத் திரும்ப "போன்ற ஒன்று" என்ற பதத்தை பயன்படுத்துகிறார். அன்பு போன்ற ஒன்று, கருணை போன்ற ஒன்று, நம்பிக்கை போன்ற ஒன்று. வாழ்க்கை குறித்தும் மனித உணர்வுகள் குறித்தும் தீர்மானமாக எதுவும் சொல்லத் தயங்கும் கோபிகிருஷ்ணனின் படைப்புலகம் எனக்கு அணுக்கமாக இருப்பதற்கு இந்த "போன்ற ஒன்று" முக்கியமான காரணம்.
கோபிகிருஷ்ணன் படைப்புகள்
நற்றிணை பதிப்பகம்
Comments
Post a Comment