வெண்முரசு நாவல் வரிசை - அறிமுகக் குறிப்புகள்
எழுத்தாளர் ஜெயமோகன் மகாபாரதத்தை முழுமையாக மறு ஆக்கம் செய்து எழுதிய நாவல் வெண்முரசு. இருபத்தாறு தனித்தனி நாவல்களாக எழுதப்பட்டுள்ள வெண்முரசை இணைத்து ஒரே நாவலாகவும் வாசிக்க இயலும். ஜனவரி 1, 2014 முதல் வெளிவரத்தொடங்கிய வெண்முரசு ஜூலை 16, 2020ல் முடிந்திருக்கிறது. இந்த நாவல் வரிசையை www.jeyamohan.in மற்றும் www.venmurasu.in ஆகிய தளங்களில் வாசிக்கலாம். அனைத்து நாவல்களும் கிண்டிலும் கிடைக்கின்றன. (வெண்முரசு நாவல்களை கிண்டிலில் வாங்குவதற்கான சுட்டி - https://amzn.in/dFTj7xN/)
வெண்முரசு நாவல்களை வாசிக்க விரும்பும் வாசகர்களுக்காக ஒவ்வொரு நாவலிலும் நிகழும் மைய நிகழ்ச்சிகள் குறிப்புகளாக கீழே தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிநாவலும் தன்னளவில் பல்வேறு வடிவப்புதுமைகளைக் கொண்டிருந்தாலும் வெண்முரசை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அதிலொரு நேர்க்கோட்டுத் தன்மை இருப்பதைக் காண முடிகிறது.
நூல் ஒன்று - முதற்கனல்
அஸ்தினபுரியின் அரசனாக பொறுப்பேற்கவிருக்கும் விசித்திரவீரியனுக்காக காசிநாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரையும் பீஷ்மர் சிறையெடுத்து வருகிறார். விசித்திரவீரியனின் இறப்பும், பீஷ்மரை அம்பை சபிப்பதும், அம்பிகைக்கு திருதராஷ்டிரரும், அம்பாலிகைக்கு பாண்டுவும் பிறப்பது வரையிலான நிகழ்வுகள் நாவலில் இடம்பெறுகின்றன.
நூல் இரண்டு - மழைப்பாடல்
திருதராஷ்டிரர் காந்தாரியை மணமுடிப்பதும் குந்தி பாண்டுவை மணப்பதும் இந்த நாவலில் இடம்பெறுகின்றன. பாண்டுவை மணப்பதற்கு முன் குந்திக்கு கர்ணன் பிறப்பதும் மணமுடித்த பிறகு குந்திக்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் பிறப்பதும் மாத்ரிக்கு நகுல சகதேவர்கள் பிறப்பதும் திருதராஷ்டிரருக்கு துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் பிறப்பதும் நாவலில் வருகின்றன. பாண்டுவுடன் வனவாசம் சென்ற குந்தி சிறுவர்களான பாண்டவர்களை அழைதுதுக் கொண்டு அஸ்தினபுரி வருவதுடன் இந்நாவல் நிறைவுபெறுகிறது.
நூல் மூன்று - வண்ணக்கடல்
பாண்டவர்களின் கௌரவர்களின் இளமைக்காலத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது. துரோணரை துருபதன் வஞ்சிக்கிறார். துரோணர் அர்ஜுனனுக்கு ஆசிரியராவதும் கௌரவர்கள் பீமனுக்கு நஞ்சூட்டுவதும் நிகழ்கின்றன. இந்த நாவல் இளநாகன் என்ற தமிழகப் பாணனின் வழியாக சொல்லப்படுகிறது.
நூல் நான்கு - நீலம்
நீலம் மகாபாரத வரிசையில் இருந்து விலகி பாகவத மறு ஆக்கமாக அமைகிறது. கிருஷ்ணனின் இளமைக் காலத்தை ராதையின் வழியாகச் சொல்கிறது. கவித்துமான நடை கொண்ட ஆக்கம்.
நூல் ஐந்து - பிரயாகை
துரோணரின் ஆணைக்கிணங்க பாண்டவர்களும் கௌரவர்களும் துருபதனை வென்று சிறைபிடிக்கின்றனர். கிருஷ்ணன் தன் நாட்டினை மீட்க தன் அத்தையான குந்தியிடம் உதவி கேட்டு வருகிறான்.துருபதன் தவம் இயற்றி திரௌபதியை பெறுகிறார். பாண்டவர்களை எரித்துக்கொல்ல வாரணவதத்தில் கௌரவர்கள் அரக்கு மாளிகை அமைக்கின்றனர். அங்கிருந்து தப்பும் பாண்டவர்கள் இடும்பவனத்திற்கு செல்கின்றனர். அங்கு பீமன் இடும்பியை மணக்கிறான். திரௌபதியை பாண்டவர்கள் மணமுடிப்பதுடன் பிரயாகை நிறைவுறுகிறது.
நூல் ஆறு - வெண்முகில் நகரம்
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பகை முற்றுகிறது. அவர்களுக்கு இடையேயான பிரிவினை முற்றி இந்திரபிரஸ்தம் என்ற நகரை பாண்டவர்கள் அமைக்கின்றனர். கிருஷ்ணனின் துவாரகையையும் இந்த நாவல் விவரித்துச் செல்கிறது.
நூல் ஏழு - இந்திரநீலம்
இந்நாவலும் மகாபாரதத்தின் மையக் கதையில் இருந்து விலகி கிருஷ்ணன் மணமுடிக்கும் அரசிகள் வழியாக நகர்கிறது.
நூல் எட்டு - காண்டீபம்
இந்திரபிரஸ்தம் அமைக்கப்பட்ட பிறகு அர்ஜுனன் யாத்திரை புறப்படுவதை இந்நாவல் விவரிக்கிறது. உலூபி, சித்ராங்கதை ஆகியோரை அர்ஜுனன் மணப்பதை சித்தரிக்கும் இந்த நாவல் கிருஷ்ணனின் தங்கையான சுபத்திரையை மணப்பதுடன் நிறைவடைகிறது. சமண சமயத்தின் தோற்றம் குறித்த சித்தரிப்புகள் நாவலில் உள்ளன.
நூல் ஒன்பது - வெய்யோன்
கர்ணனின் அங்க தேசத்தையும் அவன் மனைவியருடனான அவள் வாழ்வு குறித்தும் இந்நாவல் பேசுகிறது. துரியோதனன் இந்திரபிரஸ்தத்தின் பளிங்கு மாளிகையில் தடுமாற்றம் கொள்வதும் அவன் பாண்டவர்களின் மீது வஞ்சம் கொள்வதும் இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன.
நூல் பத்து - பன்னிரு படைக்களம்
சேதிநாட்டு அரசன் சிசுபாலன் கிருஷ்ணனனாலும், மகதத்தின் அரசான் ஜராசந்தன் பீமனாலும் கொல்லப்படுவதை சொல்கிறது. யுதிஷ்டிரன் நாற்கள விளையாட்டில் இந்திரபிரஸ்தத்தை இழக்கிறார். திரௌபதியின் துகிலுரிதலுடன் இந்த நாவல் நிறைவு பெறுகிறது.
(வெண்முரசின் அடுத்த நாவல்களான சொல்வளர்காடு, கிராதம், மாமலர் ஆகியவை பாண்டவர்களின் கான்வாழ்க்கையையும் நீர்க்கோலம் அவர்களின் தலைமறைவு வாழ்வையும் சித்தரிக்கின்றன)
நூல் பதினொன்று - சொல்வளர்காடு
பாண்டவர்களின் வனவாசத்தின் தொடக்கத்தைச் சொல்லும் நாவல். நச்சுப் பொய்கையில் நீரருந்தி பாண்டவர்கள் மாண்டு பிழைப்பதுடனும் யுதிஷ்டிரன் தன் மெய்மையை கண்டடைவதுடன் நாவல் முடிகிறது.
நூல் பன்னிரண்டு - கிராதம்
இந்திரனுக்கும் விருத்திரனுக்குமான போரினை ஒரு இழையாகவும் சைவ நெறிகளை மறு இழையாகவும் இந்த நாவல் பின்னுகிறது. அர்ஜுனன் பாசுபதத்தை அடைவதுடன் நாவல் நிறைவேறுகிறது.
நூல் பதிமூன்று - மாமலர்
பீமன் திரௌபதிக்காக கல்யாண சௌந்திக மலரை தேடிச்செல்லும் பயணம் இந்த நாவலில் உள்ளது. இணையாக யயாதியின் கதை தேவயானி மற்றும் சர்மிஷ்டையின் வழியே சொல்லப்படுகிறது.
நூல் பதினான்கு - நீர்க்கோலம்
பாண்டவர்களும் திரௌபதியும் விராட தேசத்தில் தலைமறைவாக வாழ்வதை இந்த நாவல் சித்தரிக்கிறது. இணையாக நளன் தமயந்தியின் கதை சொல்லப்படுகிறது.
நூல் பதினைந்து - எழுதழல்
உப பாண்டவர்கள் மற்றும் உப கௌரவர்களைப் பற்றிய சித்தரிப்புகள் இந்த நாவலில் இடம்பெறுகின்றன. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான பகை முற்றி போரை நோக்கிச் செல்கிறது.
நூல் பதினாறு - குருதிச்சாரல்
போரினை தடுப்பதற்காக பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ணன் துரியோதனனிடம் தூது செல்வது பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் மனைவியர் வழியே சொல்லப்படுகிறது.
நூல் பதினேழு - இமைக்கணம்
இந்த நாவல் கீதையின் மறு ஆக்கம். மகாபாரத மாந்தர்கள் ஒவ்வொருவரின் வழியாக கீதையின் ஒவ்வொரு யோகங்களும் விவரிக்கப்படுகின்றன. கீதையைப் போலவே இந்த நாவலும் ஒரு மாயவெளியில் நடைபெறுகிறது.
நூல் பதினெட்டு - செந்நா வேங்கை
குருஷேத்திர போர் நடைபெறுவது உறுதியான பிறகு பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் தரப்புக்கு வலு சேர்த்துக் கொள்வதற்காக ஈடுபடும் பேரங்கள் நாவலில் இடம்பெறுகின்றன. நாவலின் இறுதியில் குருஷேத்திரப்போர் தொடங்குகிறது.
நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்
குருஷேத்திர களத்தில் பீஷ்மர் நிகழ்த்தும் அழிவுகளும் அவரது வீழ்ச்சியும் நாவலில் இடம்பெறுகிறது.
நூல் இருபது - கார்கடல்
துரோணரின் மரணம் வரையிலான குருக்ஷேத்திர போர் இந்த நாவலில் இடம்பெறுகிறது.
நூல் இருபத்தொன்று - இருட்கனி
துரோணரின் மரணத்துக்குப் பிறகு கர்ணன் கௌரவரப் படைக்குத் தலைமை ஏற்பதும் கர்ணன் அர்ஜுனனால் கொல்லப்படுவது வரையிலான நிகழ்வுகளும் நாவலில் இடம்பெறுகின்றன.
நூல் இருபத்தியிரண்டு - தீயின் எடை
இந்த நாவலுடன் பாரதப்போர் நிறைவடைகிறது. துரியோதனனின் மரணம் மற்றும் பாண்டவ மைந்தர்கள் அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனால் தீயிட்டுக் கொல்லப்படுவதில் முடிகிறது.
நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்
பாண்டவர்கள் இறந்துபோன கௌரவர்களுக்கும் தங்கள் மைந்தர்களுக்கும் நீர்க்கடன் செய்வது வரையிலான நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன.
நூல் இருபத்திநான்கு - களிற்றியானை நிரை
பாரதப்போரை வென்ற பிறகு அஸ்தினபுரி மெல்ல நிலைமீள்வதையும் பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய நாடாக உருவெடுப்பதையும் இந்த நாவல் சித்தரிக்கிறது.
நூல் இருபத்தைந்து - கல்பொரு சிறுநுரை
கிருஷ்ணனின் மைந்தர்கள் தங்களுக்குள்ளாக போரிட்டுக்கொண்டு அழிவதையும் துவாரகையின் வீழ்ச்சியையும் சொல்கிறது. கிருஷ்ணனின் மரணத்துடன் நாவல் முடிகிறது.
நூல் இருபத்தியாறு - முதலாவிண்
வெண்முரசின் இறுதி நாவல் முதலாவிண். பாண்டவர்களின் வானப்பிரஸ்தத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது.
வெண்முரசு நாவல்களை வாங்குவதற்கான சுட்டி
https://www.jeyamohan.in/வெண்முரசு-நாவல்-வரிசை/
மிகச்சிறப்பு சுரேஷ்... புதிதாக வாசிக்க வரும் யாவருக்கும் பயனளிக்கும். நன்றி.
ReplyDeleteசிறப்பான சுருக்கம்...புதிய வாசகர்கள் தொகுத்து கொள்ள உதவியாக இருக்கும்.
ReplyDeleteவெண்முரசை அணுகுவதற்கு முதற்படியாக அமைந்துள்ளது இப்பதிவு. மிகச்சுறுக்கமாகவும்,சிறப்பாகவும் உள்ளது. நன்றி.
ReplyDeleteமுக்கிமான பதிவு
ReplyDeleteThank you suresh
ReplyDeleteஅழகான சுருக்க வரைவு!
ReplyDeleteஅருமை...சிறப்பான தொகுப்பு...
ReplyDelete👌🏾👌🏾👌🏾🙏🏾🙏🏾🙏🏾
ReplyDeleteரொம்ப நன்றி!!! என்னை போல் புதிதாக படிப்பவர்களுக்கு உபயோகமானது👌
ReplyDelete