Tuesday 22 June 2021

சங்கீதா ஸ்ரீராமின் பசுமைப்புரட்சியின் கதை

சூழியல் தீவிரவாதிகள் என்ற பதத்தை முதன்முறையாக கேட்டபோது நான் அடைந்த அதிர்ச்சி மிக ஆழமானது. சூழியல் குறித்த எந்தவொரு பேச்சினை தொடங்கும்போது நவீனத்துவ மனநிலை கொண்டவர்கள் ஊடேபுகுந்து 'இதெல்லாம் பகற்கனவு', 'மக்கள் நலன்தான் முக்கியம்', 'நாட்டின் வளர்ச்சி தடுக்கப்பட்டுவிடும்' என்ற வாதத்தை முன்வைப்பார்கள். இவர்களுடைய பேச்சில் ஒரு 'நியாயம்' இருப்பதான தோற்றம்கூட ஏற்படும். பசுமைப்புரட்சியின் ஆதரவாளர்களும் இதுபோன்ற வாதங்களை முன்வைக்கிறவர்கள்தான். அதாவது பசுமைப்புரட்சி இங்கு செயல்படுத்தப்படாமல் போயிருந்தால் இந்தியாவில் உணவுப்பஞ்சம் தலைவிரித்து ஆடியிருக்கும் என்பது இவர்கள் தரப்பு. சங்கீதா ஸ்ரீராம் இவர்களுக்கு பதில் சொல்லும் விதமாகத்தான் தன்னுடைய 'பசுமைப்புரட்சியின் கதையை' சொல்லத் தொடங்குகிறார். ஆனால் அக்கதை நவீன வேளாண்மை×பாரம்பரிய வேளாண்மை, வன்முறைப் பொருளாதாரம்× சமாதானப்பொருளாதாரம், சர்வாதிகாரத் தொழில்நுட்பம்×ஜனநாயகத் தொழில்நுட்பம், துண்டுபட்ட அறிதல்×முழுமையான அறிதல் என்று பல தளங்களைத் தொட்டு விரிகிறது.


தரவுகள் அடிப்படையில் நிதானமான மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் ஒரு சிறந்த புனைவு அளிக்கும் மனக்கொந்தளிப்பையும் சோர்வையும் அளிக்கிறது.



சங்கீதா ஸ்ரீராம் 



பசுமைப்புரட்சியின் கதையை சொல்லத் தொடங்குவதற்கு முன் பாரம்பரிய இந்திய வேளாண்மையின் தன்மையை விவரிக்கிறார்

. பாரம்பரிய வேளாண்மை பல நூற்றாண்டு காலத் தொடர்ச்சி உடையது. ஆயிரம் வருடங்களாக ஒரு சமூகம் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்யும்போது இயல்பாகவே அவ்விஷயத்தில் ஒரு 'தேர்ச்சியை'ப் பெற்றுவிடுகிறது. பாரம்பரிய வேளாண்மையில் இந்தியர்கள் பெற்றிருந்த தேர்ச்சியை பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி சிதைத்தது என்பதை தரவுகள் அடிப்படையில் விளக்குகிறார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை ஒட்டுமொத்தமாக சுரண்டித் தின்னப்பட வேண்டிய ஒரு உணவுப்பண்டம் என்பதைத்தாண்டி வேறுதுவுமாகவும் பார்க்கவில்லை என்பது இன்று நிறுவப்பட்டுவிட்ட ஒரு உண்மை. இந்தியாவை ஒரு பசு என்று உருவகித்தால் அதன் காம்புநுனிகளின் வழியே கரக்கப்படும் செல்வம் மட்டுமே ஆங்கிலேயர்களுக்கு முக்கியமாக இருந்தது. ஆங்கில அரசாங்கம் இந்தியாவில் செய்ததாக சொல்லப்படும் அத்தனை 'நலத்திட்டங்களும்' இந்த முலைக்காம்புகளை பராமரிக்க மட்டுமே. பசு குற்றுயிராக மாற்றப்படுவது குறித்த அக்கறை அவர்களுக்கு இருந்திருக்கவே இல்லை. அதனால்தான் அவர்களால் மாவட்டத்தில் உச்ச அதிகாரம் பெற்ற நிர்வாக அதிகாரியை District Collector (மாவட்ட வசூலதிகாரி) என்று குறிப்பிட முடிந்திருக்கிறது. (இன்றும் நாம் அந்தப்பெயரைத்தான் பயன்படுத்துகிறோம்!)


பிரிட்டிஷ் அரசாங்கம் அனைத்தையும் மையப்படுத்தவே முனைந்தது. அதன் நீள நீளமான நில அளவைகள், தண்டவாளங்கள் என அனைத்தும் தனக்கு கிடைக்க வேண்டிய செல்வம் எவ்வளவு என்பதை துல்லியமாக கணக்கிடுவதற்காக செயல்படுத்தப்பட்ட 'வளர்ச்சித் திட்டங்கள்' தான். அவ்வகையில் இந்திய வேளாண்மையும் முழுமையாக லாப நோக்கில் மட்டுமே அணுகி ஒரு நீண்ட பண்பாட்டுத் தொடர்ச்சியை தங்களுடைய மூர்க்கத்தாலும் அறிவீனத்தாலும் லாப வெறியாலும் மட்டுமே சிதைத்திருக்கின்றனர்.


இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மையின் பொதுக்கூறுகளாக சிலவற்றை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். பயிர்களை வளரச்செய்யும் மேல் மண்ணைப் பாதுகாத்தல். மூடாக்குப் போடுதல், மேல் மண்ணை மர ஏரினைக் கொண்டு மென்மையாக உழுதல், பயிரின் அடிப்பகுதியை மண்ணோடு சேர்த்து உழுதல் போன்ற செயல்கள் வழியாக மேல்மண்ணின் வளத்தை தக்க வைத்துள்ளனர். சுழற்சி முறையில் பயிர் செய்யப்பட்டு வந்ததால் மண்ணிற்குத் தேவையான சத்துகளும் பயிருக்கு தேவையான சத்துகளும் ஒரு சமநிலையை பேணி இருக்கின்றன. வெள்ளம் ஆற்றுக் கரைகளில் இருந்து நிலத்தில் வடியும்போது நிலத்தில் கொண்டுவந்து சேர்க்கப்படும் வண்டல் படிவுகள் மண்ணை மேலும் வளமாக்குகின்றன.


பிரிட்டிஷ்காரர்கள் கைகளுக்கு நிலம் சென்றவுடன் உணவு தானியங்களுக்குப் பதிலாக ஓப்பியம், பருத்தி, அவுரி, ரப்பர்,தேயிலை  போன்ற பணப்பயிர்கள் பெரிய அளவில் பயிர் செய்யப்படுகின்றன. இப்பணப்பயிர்களின் விற்பனை உலக அரசியல் சூழலுடன் தொடர்புடையது என்பதால் இவற்றை பயிர் செய்த விவசாயிகளுடைய வருமானம் நிரந்தரமானதாக இல்லாமல் போகிறது. மேலும் மிகப்பெரிய நிலப்பரப்பில் ஒற்றைப் பயிராக விதைக்கப்படுவதால் மண்ணிலிருந்து சத்துகள் உறிஞ்சப்படுகின்றன. அடுத்ததாக பாசனப்பரப்பை பெறுக்குவதற்காக கட்டப்பட்ட பெரிய அணைகளால் வெள்ளம் ஏற்படும் போது நிகழும் மண் அரிப்பு மண் வளத்தை சீர்குலைக்கிறது. மண் மற்றும் சூழலின் தன்மைக்கு ஏற்றவாறு நிகழ்ந்து கொண்டிருந்த பாரம்பரிய விவசாயம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மையப்படுத்துக் கொள்கைகளால் சீர்குலைந்ததை நூலின் முற்பகுதி விளக்குகிறது. இத்தகைய சீர்குலைவுகளுக்குப் பிறகும்கூட இந்திய மண் இந்தியர்களுக்குத் தேவையான உணவை வழங்கும் திறன் கொண்டதாகவே இருந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி சுதந்திரம் அடையும் வரை இந்தியாவில் ஏற்பட்ட உணவுப்பஞ்சமும் அதனால் நிகழ்ந்த பட்டினிச்சாவுகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போர்வெறியாலும் லாப வெறியாலும் நிர்வாகத் திறனின்மையாலும் நிகழ்ந்ததே அன்றி உணவு உற்பத்தி குறைவினால் நடைபெறவில்லை என்று தரவுகளுடன் இந்நூல் பேசுகிறது. 





பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவைவிட்டு நீங்கி பதினைந்து ஆண்டுகள் கழித்தே ரசாயன உரம், கலப்பின விதைகள் என்று பசுமைப்புரட்சி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த பதினைந்து ஆண்டு இடைவெளியில் இந்திய அரசு மேற்கொண்டு வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளை மிக விரிவாக நூல் அறிமுகம் செய்கிறது. பசுமைப்புரட்சி இந்தியாவின் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று இங்கு கொண்டுவரப்படவில்லை என்பதையும் பசுமைப்புரட்சிக்கு எதிராக அன்று ஒலித்த குரல்களையும் நூல் பதிவு செய்கிறது. பசுமைப்புரட்சி கொண்டுவரப்பட வேண்டிய அளவுக்கு அன்றைய இந்தியாவில் உணவுப்பஞ்சமும் இருக்கவில்லை என்கிறபோது ரசாயன உரங்கள், அந்நிய விதைகள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னணியை நூல் விவரிக்கிறது. ஏறக்குறைய ஒரு 'சதிக்கோட்பாட்டினை'ப் போன்ற தன்மையை இவ்விவரிப்பு கொண்டிருந்தாலும் ரிச்சாரியா போன்ற வேளாண் விஞ்ஞானிகள் பசுமைப்புரட்சியை கடுமையாக எதிர்த்து இருக்கின்றனர் என்கிற போது இவ்விவரிப்புகளை நம்பாமல் இருக்க முடியவில்லை.


நவீன வேளாண்மை என்பதே ரசாயனவியலிலிருந்து உருவானது முதன்மையான முரண். அங்கிருந்து நவீன வேளாண்மை எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் பெரும் அழிவினைத் தூண்டுவதாகவே இருந்திருக்கிறது. நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில அபாயங்களை மட்டும் சொல்லலாம். ஆய்வகங்களில் உருவாக்கி அளிக்கப்படும் விதைகளை ஓரிரு முறை அறுவடை செய்த பிறகு அடுத்த விதைப்புக்கு அவற்றிலிருந்து 'விதைநெல்' என எதுவும் கிடைப்பதில்லை. ஒவ்வொரு விதைப்புக்கும் விவசாயி அரசாங்கத்தையே சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அளவுக்கதிமாக மண்ணில் கொட்டப்படும் உரத்தால் பயிர்கள் பூச்சிகளை கவரும் அளவுக்கு அதீத 'பச்சையாக' வளர்கின்றன. இப்பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. பாரம்பரிய வேளாண்மையைவிட  நவீன வேளாண்மைக்கு அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. வயல்வெளிகளில் இருந்து வெளியேறும் நீரில் கலந்துள்ள ரசாயனம் நீர்நிலைகளில் கலந்து மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அளவுக்கு அதிகமான ரசாயன உரங்களால் ஏற்படும் உடல் உபாதைகள் அனைத்தையும் விட பெருந்தீங்கு. இந்தியாவில் பசுமைப்புரட்சி பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்சாபில் இருந்து ராஜஸ்தானுக்கு புற்றுநோய் பிணியாளர்களை அழைத்துச் செல்வதற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது என்பது பசுமைப்புரட்சியின் உண்மையான முகத்தை நமக்கு காட்டக்கூடியது. ஃபோர்ட் பவுண்டேஷன், ராக்கஃபெல்லர் பவுண்டேஷன் போன்ற ஒருசில தனியார் அமைப்புகள் விஞ்ஞானிகளையும் பட்டதாரிகளையும் விலைக்கு வாங்கி செய்த பிரச்சாரமும் அரசியல்வாதிகளின் லாபவெறியையும் தாண்டி பசுமைப்புரட்சி இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எந்த முகாந்திரமும் இருக்கவில்லை என்பதை இந்த நூல் மூலம் அறிய முடிகிறது.


பசுமைப்புரட்சியின் 'தீய விளைவுகளை' பேசுவதை இந்நூல் நோக்கமாகக் கொண்டிருந்தால் நாம் இந்நூலை பசுமைப்புரட்சிக்கு எதிரான ஒரு பிரச்சாரம் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் சங்கீதா ஸ்ரீராம் பசுமைப்புரட்சியை ஒரு ஆழமான வாழ்க்கை நோக்குகளுக்கு இடையேயான மோதலாக சித்தரிக்கிறார். நவீன அறிவியலின் அனைத்தையும் பிளவுபடுத்திப்பார்க்கும் தன்மைக்கும் பாரம்பரிய இந்திய அறிதலின் அனைத்தையும் இணைத்துப் புரிந்து கொள்ளும் தன்மைக்கும் இடையிலான மோதலின் பின்னணியிலேயே பசுமைப்புரட்சி இந்த நூலில் பேசப்படுகிறது. மையப்படுத்தும் சிந்தனைக்கும் பரலாக்க சிந்தனைக்கும் இடையிலான மோதலாகவும் இந்நூலை பார்க்க இயலும். மையப்படுத்துதல் என்பது சிந்தனையளவில் இன்றொரு பழமைவாதம் மட்டுமே. இத்தகைய சூழலில் மையப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சில தனியார் கம்பெனிகளின் லாப நோக்கத்தில் உருவாக்கப்பட்ட பசுமைப்புரட்சி போன்ற நவீனத்துவ சிந்தனைகள் பின்னடைவது இயல்பான ஒன்றும்கூட!


அதேநேரம் பாரம்பரிய வேளாண்மை என்பதை ஒரு 'பொற்கால கனவாக' முன்வைக்காமல் தற்போதைய நடைமுறை சாத்தியங்களையும் இந்நூல் பேசுகிறது. வேளாண்மை என்கிற தளத்தைக் கடந்து சூழியல், தத்துவம் என பல தளங்களிலும் சங்கீதா ஸ்ரீராமின் இந்த நூல் முக்கியமான ஒன்று.

Saturday 5 June 2021

மதிப்பிடுதல்

தனிமனிதர்களுக்கு அறவுணர்வு என்று ஏதும் இருப்பதாக நினைக்கிறீர்களா? உண்மையில் ஒவ்வொரு மனிதனையும் நாம் 'தனிமனிதன்' என்று அழைப்பது எவ்வளவு தூரத்துக்குச் சரி? உண்மையில் தனிமனிதர் என்பவர் உலகின் சிறுபான்மை இனம்தான். மற்ற அனைவரும் சராசரிகளே. இதை எழுதிக் கொண்டிருக்கும் நானும் வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கூட சராசரியில் ஒருவராக இருக்கலாம். சராசரி என்று மனிதர்களை அடையாளப்படுத்துவதைவிட சராசரித்தனம் என்ற ஒன்றை அடையாளப்படுத்துவது இன்னும் சரியானது. ஒவ்வொரு நாளும் நாமொரு சராசரியாகவோ அல்லது சராசரித்தனத்துக்கு எதிராகப் போராடும் தனிமனிதராகவோ நம் செயல்களை வகுத்துக் கொள்கிறோம். நீங்கள் முகநூலுக்குள் செல்லும்போது ஒரு சராசரியாகிறீர்கள். அது வெகுமக்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு வெளி. அங்கு புழங்கும் ஒரு சொல்கூட 'தனிமனித' சிந்தனை வெளிப்பாடு கிடையாது. வீரியம் நிறைந்த ஒவ்வொரு சொல்லும் வெகு மக்கள் ரசனை என்ற படுகுழியில் விழுந்து சாகிறது. சிந்தனையாளனுக்கு முதலில் வெகுமக்கள் ரசனையை தான் மாற்றி அமைப்பதான மயக்கத்தை முகநூல் வெளி ஏற்படுத்துகிறது. ஆனால் அவன் மெல்ல மெல்ல தன் ஆற்றலனைத்தையும் இழந்து ஒரு சராசரியாக ஆகிறான். உண்மையில் சராசரித்தனம் என்று உலகில் ஒன்று இருப்பதை உணராதவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்குப் பிரச்சினையே இல்லை. உண்டு புணர்ந்து கிழண்டு இறந்து போகலாம். இடையிடையே தான் நம்பும் அரசியல் சித்தாந்தங்கள் குடும்பமும் தொழில்தளமும் நட்பு வட்டமும் உருவாக்கும் போலியான உணர்வுநிலைகள் என்று இவற்றில் உழன்றே இவையே சாசுவதம் என்றெண்ணியே வாழ்ந்து முடிக்கலாம். எளிய நிம்மதியான வாழ்க்கை. ஆனால் இப்படி ஒரு எளிய வாழ்க்கை இருப்பது தெரிந்து அதில் வாழ்ந்து கொண்டு எளிமையாக வாழாதவர்களால் உருவாக்கப்பட்ட கனவுநிலைகளை சராசரித்தனத்துக்குள் இழுக்கும் ஒரு கூட்டம் உண்டு. இவர்கள் தங்களுக்கும் ஆபத்தானவர்கள் பிறருக்கும் ஆபத்தை விளைவிப்பவர்கள். கலை விஞ்ஞானம் ஆன்மீகம் என அனைத்திலும் லட்சிய நிலைகளை போதிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் உங்களின் தனிமனித வேட்கையை அழித்து உங்களை சராசரித்தனத்துக்குள்ளும் தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஆகவே உங்களை நீங்கள் தனிமனிதனாக இருத்திக் கொள்ள அதீத விழிப்புணர்வு தேவை. ஏன் நம்மை நாம் தனிமனிதனாக இருத்திக்கொள்ள வேண்டும். முதல்வரியை திரும்பப் படியுங்கள். தனிமனிதர்களுக்கு அறவுணர்வு உண்டு. ஆனால் சராசரிகளுக்கு அது இருக்காது. நீங்கள் சராசரிகளில் ஒருவராக மாறும்போது அவர்களின் சொற்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் பிரதிபலிக்கத் தொடங்குவீர்கள். மனித வாழ்க்கை உன்னதமானது அதில் அன்பு பிரதானமானது என்றெல்லாம் நம்பத் தொடங்குவீர்கள்! அல்லது மனிதர்கள் அனைவருமே சுயநலக்காரர்கள் உலகம் தீங்கானது இரக்கமற்றது போட்டிபோட்டு வெல்லப்பட வேண்டியது என்றெல்லாம் எண்ணுவீர்கள்! ஒவ்வொரு சூழலுக்கும் சிந்தித்து எதிர்வினை ஆற்றுவதற்கு பதிலாக 'சமூகம்' என்று சொல்லப்படும் சராசரிகளின் தொகுப்பில் எழுதப்பட்ட உணர்வுகளை பிரதிபலிப்பீர்கள். ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கேள்விப்பட்டவுடன் உடனே பெண்கள் பாதுகாப்பு குறித்து அக்கறைப்படுவீர்கள். ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்தால் அடிப்படைவாதம் குறித்து கவலைப்படுவீர்கள். யாராவது தன்னுடைய பணத்தை 'மக்களின் துயர் துடைக்க' அளித்தால் மனிதம் குறித்து விம்முவீர்கள். இந்த சராசரித்தனங்கள் ஒரு சூழலுக்கு எவ்வளவு குறைவாக மனவினை அளிக்க வேண்டுமோ அல்லது எவ்வளவு உண்மையாக மனவினை அளிக்க வேண்டுமோ அதைவிட அதிகமாக ஊதிப்பெருக்கப்பட்ட ஒன்றை உங்களிடம் உற்பத்தி செய்கிறது. உங்களைப்போலவே அழும் சிரிக்கும் விம்மும் இன்னொரு சராசரியைப் பார்த்து 'மானுட சமுத்திரம் நானென்று' கூப்பாடு போடத் தொடங்குவீர்கள். இது எவ்வளவு பெரிய வீழ்ச்சி! அறம் என்பது அன்றாடத்தில் இருந்து முடிவு செய்யப்படுவது. அன்றாடத்தின் நிறங்களை நிதானிக்க முடியாத ஒரு சராசரி எப்படி அறத்துடன் வாழ இயலும்? இன்றைய சராசரிகளின் ரசனையைப் பாருங்கள். அவர்களுடைய அதிகப்படியான சாதனையே ஜனநாயகம்தான். அதாவது தங்களுடைய சராசரித்தனத்தை அதிகாரம் செலுத்தும் இடத்தில் கொண்டு போய் வைத்துவிட்டார்கள். அதிகாரம் இச்சராசரிக்களுக்கான சொற்களை பிரதிபலிக்கிறது. மனிதாபிமானம், பிரதிநிதித்துவம், மக்கள் நலம்…! எத்தனை எத்தனை சராசரிகளின் சொற்கள். ஆனாலும் இந்த சராசரித்தனங்களின் முதலை வாயிலிருந்து தப்பித்து நம்மை தனிமனிதனாக இருத்திக்கொள்வது ஒரு உயர்ந்த செயல்பாடு மட்டுமல்ல மகிழ்ச்சியான செயலும்கூடதான். ஆகவே நாம் நம்மை கேட்டுக்கொள்ள வேண்டியது நான் இன்று எத்தனை பங்கு சராசரியாகவும் எத்தனை பங்கு தனிமனிதனாகவும் இருந்தேன் என்று கேட்டுக்கொள்வதுதான். இப்பத்தியை எழுதும் இக்கணத்தில் நான் சராசரித்தனத்துடன் இல்லை என்பது இன்றுக்கான எனது ஆசுவாசம்.

Thursday 3 June 2021

அற்றுப்போதல்

அறையில் இரண்டு மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருந்தன. சுவரில் பொருத்தப்பட்டிருந்த கடிகாரத்தின் முள்துடிப்பு விட்டுவிட்டு கேட்டுக் கொண்டிருந்தது. நான் கண் விழித்தது மாடி அறை என்பதால் வாகனங்களின் எஞ்ஜின் சத்தம் மெல்லக் கேட்டது. மனம் இத்தனை சத்தங்களில் இருந்தும் ஏதோவொன்றை உருவி எடுத்துவிட்டிருந்தது. கொஞ்ச நேரம் எதற்குமே எதிர்வினை புரியவில்லை அது. சில கணங்கள்தான். மீண்டும் அத்தனை கவலைகளும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. இக்கவலைகளிலிருந்து தப்பிச்செல்லதான் கீதை நமக்கொரு மார்க்கத்தைச் சொல்கிறது போலிருக்கிறது. 'ஆகவே செயல்புரிக!' ஆனால் ஆனால் செயல் எதுவும் செய்யாத போது எங்கிருந்தது வந்தது இந்த அமைதி? சுற்றி இருக்கும் எதுவும் மாறாத போது உள்ளே இருக்கும் ஒன்று மாறுவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் மாறியது. வெகுசில கணங்கள் மட்டும்தான் என்றாலும் மாறியது. மாற்றம் நிகழ்ந்த அந்த கணத்தை தற்போது திரும்ப எழுத இயலவில்லை. எதன்மீதும் கருத்தற்ற நிலை உருவானது என்று சொல்லலாமா? பயமற்ற நிலை என்றுகூட சொல்லலாம். சிந்தனையற்ற நிலை? இதுகூட சரியாகத்தான் தெரிகிறது. மொத்தத்தில் அதுவொரு 'அற்றநிலை'. உயிரற்ற நிலையும்கூடதான். அப்படியெனில் உயிர்தான் உள்ளிருந்து உடற்றும் துன்பமா? பசியா? காமமா? அச்சமா? அப்படியெனில் முக்திநிலை என்பது உயிரற்று போவதுதானா? தற்கொலை செய்து கொள்கிறவர்கள் உடனடியாக முக்தியை எய்துவிடுகிறார்கள் போலிருக்கிறது. தற்கொலையை தவறென்று சொல்வது ஒரு அரசாங்க மனநிலை. ஆமாம் அரசாங்கம் நடப்பதற்கு மனிதர்கள் உயிரோடு இருந்தாக வேண்டும். ஆகவே பெரிய பெரிய பிரச்சாரங்கள் வழியாக அரசாங்கம்தான் இங்கு தற்கொலைகளின் மீதான ஒரு எதிர்ப்புணர்ச்சியை உருவாக்கி வைத்திருக்கிறது. மற்றபடி முக்தியை விரும்பும் ஒருவன் எப்போதும் சாகலாம். உயிரோடும் இருக்க வேண்டும் முக்தியோடும் இருக்க வேண்டும் என்ற மெய்ஞானப் பேராசைதான் ஞானிகளை கடுமையான சாதகங்களை செய்யவும் லட்சியவாதிகளை பெரிய செயல்களைச் செய்யவும் தூண்டுகிறது. ஆகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி. மெய்ஞானம், லட்சியவாதம், தற்கொலை அனைத்தும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்துக் கொள்கின்றன.

Wednesday 2 June 2021

மகிழ்தல்

மாறுதிசை மின்னோட்டம் (alternating current). பதினொன்றாம் வகுப்பில் இயற்பியல் ஆசிரியர் சொல்லக்கேட்ட இப்பதம் என் வாழ்வின் முதல் தத்துவக் குழப்பத்திற்கு காரணமாக இருந்தது. சனிக்கிழமை விடுமுறை என்றால் வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பும்போது மனதிலொரு இன்பக்கொதிப்பு இருக்குமில்லையா? காதலிக்கும் பெண் என்ன செய்தி அனுப்பி இருப்பாள் என்று எழுந்ததும் அலைபேசியைப் பார்ப்பதற்கும் இடையிலான சிலநொடிகளில் விரல்நுனிகளில் எல்லாம் ஒரு குறுகுறுப்பு ஏற்படுமில்லையா? பிடித்த எழுத்தாளரின் புத்தகத்தை பிரித்து படிப்பதற்கு முன்பே தொடுகையின் போதே அப்புத்தகத்தின் சாரம் உங்களுள் கடத்தப்படுவதை உணர்ந்திருக்கிறீர்களா? பறவைகளின் கீச்சொலி தவிர வேறெந்த ஓசையும் இல்லாத விடியலுக்காக உங்கள் மனம் ஏங்கி இருக்கிறதா? பாம்புகள் சீறும் புனையலோசையை கேட்டு அச்சத்துடன் அதைக்காண சென்றிருக்கிறீர்களா? ஊரிலிருந்து வரும் மனைவியை அழைக்க அவள் வருவதற்கு அரைமணி நேரம் முன்பே பேருந்து நிலையத்திற்கு சென்று நிலையில்லாமல் காத்திருந்து இருக்கிறீர்களா? இனிப்புகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு பயணித்திருக்கிறீர்களா? யோசித்துப் பார்த்தால் மகிழ்ச்சியான கணங்களைவிட அதற்கு முந்தைய கணங்கள்தான் மகிழ்ச்சியை பொதிந்து வைத்திருக்கின்றன என்று தோன்றுகிறது. முதல்வரியில் சொன்ன தத்துவக் குழப்பம் அதுதான். மாறுதிசை மின்னோட்டத்தினை எளிதாக கடத்தலாம். ஆனால் சேமிக்க முடியாது. மாறாக நேர்திசை மின்னோட்டத்தை (Direct current) சேமிப்பது எளிது. ஆனால் கடத்த முடியாது. இயற்கை எவ்வளவு பெரிய சிக்கலைப் பொதிந்து வைத்திருக்கிறது பாருங்கள்! நெய்வேலியிலோ கல்பாக்கத்திலோ உற்பத்தியாகும் நேர்திசை மின்னோட்டம் உற்பத்தியான உடனேயே நம் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியிலோ மின்விளக்குகளிலோ பிரதிபலித்து விடுகிறது. ஆனால் அதை எங்குமே தேக்க முடியாது. மகிழ்ச்சியும் அப்படித்தான் இருக்கும்போல. உற்பத்தியான கணமே செலவழிந்து விடுகிறது. மகிழ்ச்சிக்கு முந்தைய கணத்திலேயே மகிழ்ச்சியை உணர்ந்து கொள்கிறவன் மகிழ்த்திருக்க வேண்டிய கணத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான்? மகிழ்ச்சியை நடித்துக் கொண்டிருக்கிறானா? உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி என்பதுதான் உலகில் அதிகமுறை சொல்லப்பட்ட பொய்யாக இருக்குமோ? இன்பம் தேக்கி வைக்கப்படக்கூடியதல்ல என்ற எண்ணத்தின் கண்வழியே பார்த்தால் நம் வாழ்க்கை எவ்வளவு அபத்தமாகவும் துக்ககரமானதாகவும் மாறிவிடுகிறது. வங்கிகளில் பணமாக பிள்ளைகளில் நம்பிக்கையாக எவ்வளவு மகிழ்ச்சியை நாம் தேக்கி வைக்கிறோம்! ஆனால் தேக்கும் அந்நொடியே அது இன்மைக்குப் போய்விடுகிறது. ஆனாலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. இரண்டு மின்தகடுகளுக்கு இடையே ஒரு காந்தம் சுழலும்போது மாறுதிசை மின்னோட்டம் உற்பத்தி ஆகிவிடும். நம்முடைய தகடுகளுக்கு இடையே நம் காந்தம் எப்போது சுழலும் என்று நம்மால் கண்டறியவே முடியாது. லட்சியவாதிகள் 'செயல்வழியிலான மகிழ்ச்சி' என்ற போலியான செயற்கையான மகிழ்ச்சி உற்பத்தி நிலையை பரிந்துரைப்பார்கள். ஏமாந்து விடாதீர்கள்! எப்படி உங்களால் மகிழ்ச்சியை தேக்க முடியாதோ அதுபோல அதை உங்களால் உற்பத்தி செய்யவும் முடியாது. எது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. மிக நெருக்கமான ஒருவரின் இறப்பு உங்களுக்கு அளவிட முடியாத ஆனந்தத்தை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே பழுதுபட்ட மின் இணைப்பு கொண்ட ஈரமான வீட்டில் நடப்பது போல மகிழ்ச்சியிடம் செல்லுங்கள். நீங்கள் எப்போது வேண்டுமானலும் மகிழ்ச்சியால் தாக்கப்பட்டு கொல்லப்படலாம். 

Tuesday 1 June 2021

நினைக்கப்படுதல்

குறிப்பிட்டுச் சொல்லும்படி நேற்று ஒன்றும் நடக்கவில்லை. வேலைபோய்விடுமோ, கொரோனா தொற்று வந்து நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவோமோ, பெரிய அளவில் பண நஷ்டம் வந்துவிடுமோ என்ற வழக்கமான பயங்களைத்தவிர வேறெதுவும் இல்லாத இன்னொரு நாள். யோசித்துப் பார்த்தால் என் நாட்களின் பெரும்பகுதியை இந்த பயங்கள்தான் ஆக்கிரமித்து இருக்கின்றன. என்று தொடங்கியது இந்த பயம்? பள்ளியில் படிக்கும் போது? அதற்கு முன்பே கூட இருக்கலாம். யாரும் அவமானப்படுத்திவிடக்கூடாது என்பதுதான் இந்த பயங்களுக்கு எல்லாம் அடிப்படையாக இருக்கும்போல. எல்லோருக்குள்ளும் இந்த பயம் இருக்கிறது என்ற அறிதல் இன்றைக்கான மகிழ்ச்சியான செய்தி. நாம் எவ்வாறு நினைக்கப்பட வேண்டும் என்று ஒருவர் பாக்கி இல்லாமல் அத்தனை பேரும் விரும்புகிறோம். அதற்கெனவே உழைக்கிறோம். விஞ்ஞானிகளும் கலைஞர்களும் மட்டுமல்ல யோகிகளும் ஞானிகளும்கூட மரியாதையாக எதிர்காலத்தில் நினைக்கப்பட வேண்டும் என்றுதான் உழைக்கிறார்கள். உயிரின் அடிப்படை விழைவு, செயல்புரியும் இச்சை என்றெல்லாம் ஏதேதோ பெயர் கொடுத்து தாங்கள் எதிர்காலத்தில் எவ்வாறாக நினைக்கப்பட வேண்டும் என்பது குறித்த பதற்றத்தை மறைத்துக் கொள்கிறார்கள். எதிர்காலத்தில் தன் செயல்களின் மேன்மையை யாரோ ஒருவன் வந்து கண்டுபிடிப்பான் என்று ஆழ்மனதில் ரகசிய இச்சை இல்லாத ஒரு லட்சியவாதியையும் நீங்கள் பார்க்க முடியாது. எதிர்காலத்தில் எவ்வாறு நினைக்கப்படவிருக்கிறோம் என்ற இச்சை கொண்டோர்தான் சிலைகளாகவும் கருத்துகளாகவும் மெய்ஞானமாகவும் வரலாறாகவும் நமக்குத் தெரிகின்றனர். வெகுமக்கள் வரலாறு என்றெல்லாம் தற்போது பேசுகின்றனர். இப்பேச்சின் வழியாக வெகுமக்கள் தாங்கள் எதிர்காலத்தில் எவ்வாறு நினைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள் என்பதைத்தான் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஆகவே நாமனைவருமே நினைக்கப்பட விரும்புகிறோம். நினைக்கப்படும் அளவுக்கு பெருஞ்செயல்கள் எதையும் செய்யாதபோது - உதாரணமாக காந்தி, ஹிட்லர், ஜோசஃப் ஸ்டாலின், நெல்சன் மண்டேலா - வெகுமக்கள் வரலாறு, எளிய மக்களின் அபிலாஷைகள் என்றெல்லாம் பிதற்றத் தொடங்குகிறோம். இந்த இச்சையின் அடிப்படையில் நம் அனைவரையுமே ஒரு ஏணிப்படியில் கொண்டு வந்து நிறுத்திவிட முடியும். வரலாறு எவ்வாறு மனிதர்களை நினைவில் கொள்கிறது என்கிற சூட்சுமம் நமக்கு எவ்வளவு தெரியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படிகள் அமைகின்றன. அரசியல்வாதிகள்,சினிமாப் பிரபலங்கள் கடைசிப்படியில் நிற்கின்றனர். புகழும் அதிகாரமும் வரலாற்றில் கொஞ்சகாலம் மட்டுமே தாக்குப் பிடிப்பவை. சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எல்லாம் அடுத்தபடியிலும் லட்சியவாதிகள் அதற்கு அடுத்த படியிலும் மெய்ஞானிகள் எல்லோருக்கும் மேலே உள்ள படியிலும் நிற்கின்றனர். ஆகவே வரலாற்றின் சூட்சுமத்தை தெரிந்து கொள்ளுங்கள். இந்த சிந்தனை என்னளவுக்கே உலகில் உள்ளோர் அனைவரும் இழிந்த பயங்கள் கொண்டவர்கள் என்ற என் எண்ணத்தை உறுதிபடுத்துகிறது அல்லது இழிந்த பயங்கள் கொண்ட அனைவரும் அத்தனை உன்னதர்களுக்கும் இணையானவர்களே என்ற ஆசுவாசத்தை எனக்கு அளிக்கிறது. மானுடம் என்பது அதன் அஞ்சும் தன்மையால் சமத்துவத்தை எய்துகிறது. வாழ்க மானுட சமத்துவம்!