Tuesday 1 June 2021

நினைக்கப்படுதல்

குறிப்பிட்டுச் சொல்லும்படி நேற்று ஒன்றும் நடக்கவில்லை. வேலைபோய்விடுமோ, கொரோனா தொற்று வந்து நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவோமோ, பெரிய அளவில் பண நஷ்டம் வந்துவிடுமோ என்ற வழக்கமான பயங்களைத்தவிர வேறெதுவும் இல்லாத இன்னொரு நாள். யோசித்துப் பார்த்தால் என் நாட்களின் பெரும்பகுதியை இந்த பயங்கள்தான் ஆக்கிரமித்து இருக்கின்றன. என்று தொடங்கியது இந்த பயம்? பள்ளியில் படிக்கும் போது? அதற்கு முன்பே கூட இருக்கலாம். யாரும் அவமானப்படுத்திவிடக்கூடாது என்பதுதான் இந்த பயங்களுக்கு எல்லாம் அடிப்படையாக இருக்கும்போல. எல்லோருக்குள்ளும் இந்த பயம் இருக்கிறது என்ற அறிதல் இன்றைக்கான மகிழ்ச்சியான செய்தி. நாம் எவ்வாறு நினைக்கப்பட வேண்டும் என்று ஒருவர் பாக்கி இல்லாமல் அத்தனை பேரும் விரும்புகிறோம். அதற்கெனவே உழைக்கிறோம். விஞ்ஞானிகளும் கலைஞர்களும் மட்டுமல்ல யோகிகளும் ஞானிகளும்கூட மரியாதையாக எதிர்காலத்தில் நினைக்கப்பட வேண்டும் என்றுதான் உழைக்கிறார்கள். உயிரின் அடிப்படை விழைவு, செயல்புரியும் இச்சை என்றெல்லாம் ஏதேதோ பெயர் கொடுத்து தாங்கள் எதிர்காலத்தில் எவ்வாறாக நினைக்கப்பட வேண்டும் என்பது குறித்த பதற்றத்தை மறைத்துக் கொள்கிறார்கள். எதிர்காலத்தில் தன் செயல்களின் மேன்மையை யாரோ ஒருவன் வந்து கண்டுபிடிப்பான் என்று ஆழ்மனதில் ரகசிய இச்சை இல்லாத ஒரு லட்சியவாதியையும் நீங்கள் பார்க்க முடியாது. எதிர்காலத்தில் எவ்வாறு நினைக்கப்படவிருக்கிறோம் என்ற இச்சை கொண்டோர்தான் சிலைகளாகவும் கருத்துகளாகவும் மெய்ஞானமாகவும் வரலாறாகவும் நமக்குத் தெரிகின்றனர். வெகுமக்கள் வரலாறு என்றெல்லாம் தற்போது பேசுகின்றனர். இப்பேச்சின் வழியாக வெகுமக்கள் தாங்கள் எதிர்காலத்தில் எவ்வாறு நினைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள் என்பதைத்தான் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஆகவே நாமனைவருமே நினைக்கப்பட விரும்புகிறோம். நினைக்கப்படும் அளவுக்கு பெருஞ்செயல்கள் எதையும் செய்யாதபோது - உதாரணமாக காந்தி, ஹிட்லர், ஜோசஃப் ஸ்டாலின், நெல்சன் மண்டேலா - வெகுமக்கள் வரலாறு, எளிய மக்களின் அபிலாஷைகள் என்றெல்லாம் பிதற்றத் தொடங்குகிறோம். இந்த இச்சையின் அடிப்படையில் நம் அனைவரையுமே ஒரு ஏணிப்படியில் கொண்டு வந்து நிறுத்திவிட முடியும். வரலாறு எவ்வாறு மனிதர்களை நினைவில் கொள்கிறது என்கிற சூட்சுமம் நமக்கு எவ்வளவு தெரியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படிகள் அமைகின்றன. அரசியல்வாதிகள்,சினிமாப் பிரபலங்கள் கடைசிப்படியில் நிற்கின்றனர். புகழும் அதிகாரமும் வரலாற்றில் கொஞ்சகாலம் மட்டுமே தாக்குப் பிடிப்பவை. சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எல்லாம் அடுத்தபடியிலும் லட்சியவாதிகள் அதற்கு அடுத்த படியிலும் மெய்ஞானிகள் எல்லோருக்கும் மேலே உள்ள படியிலும் நிற்கின்றனர். ஆகவே வரலாற்றின் சூட்சுமத்தை தெரிந்து கொள்ளுங்கள். இந்த சிந்தனை என்னளவுக்கே உலகில் உள்ளோர் அனைவரும் இழிந்த பயங்கள் கொண்டவர்கள் என்ற என் எண்ணத்தை உறுதிபடுத்துகிறது அல்லது இழிந்த பயங்கள் கொண்ட அனைவரும் அத்தனை உன்னதர்களுக்கும் இணையானவர்களே என்ற ஆசுவாசத்தை எனக்கு அளிக்கிறது. மானுடம் என்பது அதன் அஞ்சும் தன்மையால் சமத்துவத்தை எய்துகிறது. வாழ்க மானுட சமத்துவம்!

1 comment:

  1. Precious words and it is a true one also superb sir.ur language something different

    ReplyDelete