Saturday 5 June 2021

மதிப்பிடுதல்

தனிமனிதர்களுக்கு அறவுணர்வு என்று ஏதும் இருப்பதாக நினைக்கிறீர்களா? உண்மையில் ஒவ்வொரு மனிதனையும் நாம் 'தனிமனிதன்' என்று அழைப்பது எவ்வளவு தூரத்துக்குச் சரி? உண்மையில் தனிமனிதர் என்பவர் உலகின் சிறுபான்மை இனம்தான். மற்ற அனைவரும் சராசரிகளே. இதை எழுதிக் கொண்டிருக்கும் நானும் வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கூட சராசரியில் ஒருவராக இருக்கலாம். சராசரி என்று மனிதர்களை அடையாளப்படுத்துவதைவிட சராசரித்தனம் என்ற ஒன்றை அடையாளப்படுத்துவது இன்னும் சரியானது. ஒவ்வொரு நாளும் நாமொரு சராசரியாகவோ அல்லது சராசரித்தனத்துக்கு எதிராகப் போராடும் தனிமனிதராகவோ நம் செயல்களை வகுத்துக் கொள்கிறோம். நீங்கள் முகநூலுக்குள் செல்லும்போது ஒரு சராசரியாகிறீர்கள். அது வெகுமக்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு வெளி. அங்கு புழங்கும் ஒரு சொல்கூட 'தனிமனித' சிந்தனை வெளிப்பாடு கிடையாது. வீரியம் நிறைந்த ஒவ்வொரு சொல்லும் வெகு மக்கள் ரசனை என்ற படுகுழியில் விழுந்து சாகிறது. சிந்தனையாளனுக்கு முதலில் வெகுமக்கள் ரசனையை தான் மாற்றி அமைப்பதான மயக்கத்தை முகநூல் வெளி ஏற்படுத்துகிறது. ஆனால் அவன் மெல்ல மெல்ல தன் ஆற்றலனைத்தையும் இழந்து ஒரு சராசரியாக ஆகிறான். உண்மையில் சராசரித்தனம் என்று உலகில் ஒன்று இருப்பதை உணராதவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்குப் பிரச்சினையே இல்லை. உண்டு புணர்ந்து கிழண்டு இறந்து போகலாம். இடையிடையே தான் நம்பும் அரசியல் சித்தாந்தங்கள் குடும்பமும் தொழில்தளமும் நட்பு வட்டமும் உருவாக்கும் போலியான உணர்வுநிலைகள் என்று இவற்றில் உழன்றே இவையே சாசுவதம் என்றெண்ணியே வாழ்ந்து முடிக்கலாம். எளிய நிம்மதியான வாழ்க்கை. ஆனால் இப்படி ஒரு எளிய வாழ்க்கை இருப்பது தெரிந்து அதில் வாழ்ந்து கொண்டு எளிமையாக வாழாதவர்களால் உருவாக்கப்பட்ட கனவுநிலைகளை சராசரித்தனத்துக்குள் இழுக்கும் ஒரு கூட்டம் உண்டு. இவர்கள் தங்களுக்கும் ஆபத்தானவர்கள் பிறருக்கும் ஆபத்தை விளைவிப்பவர்கள். கலை விஞ்ஞானம் ஆன்மீகம் என அனைத்திலும் லட்சிய நிலைகளை போதிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் உங்களின் தனிமனித வேட்கையை அழித்து உங்களை சராசரித்தனத்துக்குள்ளும் தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஆகவே உங்களை நீங்கள் தனிமனிதனாக இருத்திக் கொள்ள அதீத விழிப்புணர்வு தேவை. ஏன் நம்மை நாம் தனிமனிதனாக இருத்திக்கொள்ள வேண்டும். முதல்வரியை திரும்பப் படியுங்கள். தனிமனிதர்களுக்கு அறவுணர்வு உண்டு. ஆனால் சராசரிகளுக்கு அது இருக்காது. நீங்கள் சராசரிகளில் ஒருவராக மாறும்போது அவர்களின் சொற்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் பிரதிபலிக்கத் தொடங்குவீர்கள். மனித வாழ்க்கை உன்னதமானது அதில் அன்பு பிரதானமானது என்றெல்லாம் நம்பத் தொடங்குவீர்கள்! அல்லது மனிதர்கள் அனைவருமே சுயநலக்காரர்கள் உலகம் தீங்கானது இரக்கமற்றது போட்டிபோட்டு வெல்லப்பட வேண்டியது என்றெல்லாம் எண்ணுவீர்கள்! ஒவ்வொரு சூழலுக்கும் சிந்தித்து எதிர்வினை ஆற்றுவதற்கு பதிலாக 'சமூகம்' என்று சொல்லப்படும் சராசரிகளின் தொகுப்பில் எழுதப்பட்ட உணர்வுகளை பிரதிபலிப்பீர்கள். ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கேள்விப்பட்டவுடன் உடனே பெண்கள் பாதுகாப்பு குறித்து அக்கறைப்படுவீர்கள். ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்தால் அடிப்படைவாதம் குறித்து கவலைப்படுவீர்கள். யாராவது தன்னுடைய பணத்தை 'மக்களின் துயர் துடைக்க' அளித்தால் மனிதம் குறித்து விம்முவீர்கள். இந்த சராசரித்தனங்கள் ஒரு சூழலுக்கு எவ்வளவு குறைவாக மனவினை அளிக்க வேண்டுமோ அல்லது எவ்வளவு உண்மையாக மனவினை அளிக்க வேண்டுமோ அதைவிட அதிகமாக ஊதிப்பெருக்கப்பட்ட ஒன்றை உங்களிடம் உற்பத்தி செய்கிறது. உங்களைப்போலவே அழும் சிரிக்கும் விம்மும் இன்னொரு சராசரியைப் பார்த்து 'மானுட சமுத்திரம் நானென்று' கூப்பாடு போடத் தொடங்குவீர்கள். இது எவ்வளவு பெரிய வீழ்ச்சி! அறம் என்பது அன்றாடத்தில் இருந்து முடிவு செய்யப்படுவது. அன்றாடத்தின் நிறங்களை நிதானிக்க முடியாத ஒரு சராசரி எப்படி அறத்துடன் வாழ இயலும்? இன்றைய சராசரிகளின் ரசனையைப் பாருங்கள். அவர்களுடைய அதிகப்படியான சாதனையே ஜனநாயகம்தான். அதாவது தங்களுடைய சராசரித்தனத்தை அதிகாரம் செலுத்தும் இடத்தில் கொண்டு போய் வைத்துவிட்டார்கள். அதிகாரம் இச்சராசரிக்களுக்கான சொற்களை பிரதிபலிக்கிறது. மனிதாபிமானம், பிரதிநிதித்துவம், மக்கள் நலம்…! எத்தனை எத்தனை சராசரிகளின் சொற்கள். ஆனாலும் இந்த சராசரித்தனங்களின் முதலை வாயிலிருந்து தப்பித்து நம்மை தனிமனிதனாக இருத்திக்கொள்வது ஒரு உயர்ந்த செயல்பாடு மட்டுமல்ல மகிழ்ச்சியான செயலும்கூடதான். ஆகவே நாம் நம்மை கேட்டுக்கொள்ள வேண்டியது நான் இன்று எத்தனை பங்கு சராசரியாகவும் எத்தனை பங்கு தனிமனிதனாகவும் இருந்தேன் என்று கேட்டுக்கொள்வதுதான். இப்பத்தியை எழுதும் இக்கணத்தில் நான் சராசரித்தனத்துடன் இல்லை என்பது இன்றுக்கான எனது ஆசுவாசம்.

No comments:

Post a Comment