Tuesday 22 June 2021

சங்கீதா ஸ்ரீராமின் பசுமைப்புரட்சியின் கதை

சூழியல் தீவிரவாதிகள் என்ற பதத்தை முதன்முறையாக கேட்டபோது நான் அடைந்த அதிர்ச்சி மிக ஆழமானது. சூழியல் குறித்த எந்தவொரு பேச்சினை தொடங்கும்போது நவீனத்துவ மனநிலை கொண்டவர்கள் ஊடேபுகுந்து 'இதெல்லாம் பகற்கனவு', 'மக்கள் நலன்தான் முக்கியம்', 'நாட்டின் வளர்ச்சி தடுக்கப்பட்டுவிடும்' என்ற வாதத்தை முன்வைப்பார்கள். இவர்களுடைய பேச்சில் ஒரு 'நியாயம்' இருப்பதான தோற்றம்கூட ஏற்படும். பசுமைப்புரட்சியின் ஆதரவாளர்களும் இதுபோன்ற வாதங்களை முன்வைக்கிறவர்கள்தான். அதாவது பசுமைப்புரட்சி இங்கு செயல்படுத்தப்படாமல் போயிருந்தால் இந்தியாவில் உணவுப்பஞ்சம் தலைவிரித்து ஆடியிருக்கும் என்பது இவர்கள் தரப்பு. சங்கீதா ஸ்ரீராம் இவர்களுக்கு பதில் சொல்லும் விதமாகத்தான் தன்னுடைய 'பசுமைப்புரட்சியின் கதையை' சொல்லத் தொடங்குகிறார். ஆனால் அக்கதை நவீன வேளாண்மை×பாரம்பரிய வேளாண்மை, வன்முறைப் பொருளாதாரம்× சமாதானப்பொருளாதாரம், சர்வாதிகாரத் தொழில்நுட்பம்×ஜனநாயகத் தொழில்நுட்பம், துண்டுபட்ட அறிதல்×முழுமையான அறிதல் என்று பல தளங்களைத் தொட்டு விரிகிறது.


தரவுகள் அடிப்படையில் நிதானமான மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் ஒரு சிறந்த புனைவு அளிக்கும் மனக்கொந்தளிப்பையும் சோர்வையும் அளிக்கிறது.



சங்கீதா ஸ்ரீராம் 



பசுமைப்புரட்சியின் கதையை சொல்லத் தொடங்குவதற்கு முன் பாரம்பரிய இந்திய வேளாண்மையின் தன்மையை விவரிக்கிறார்

. பாரம்பரிய வேளாண்மை பல நூற்றாண்டு காலத் தொடர்ச்சி உடையது. ஆயிரம் வருடங்களாக ஒரு சமூகம் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்யும்போது இயல்பாகவே அவ்விஷயத்தில் ஒரு 'தேர்ச்சியை'ப் பெற்றுவிடுகிறது. பாரம்பரிய வேளாண்மையில் இந்தியர்கள் பெற்றிருந்த தேர்ச்சியை பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி சிதைத்தது என்பதை தரவுகள் அடிப்படையில் விளக்குகிறார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை ஒட்டுமொத்தமாக சுரண்டித் தின்னப்பட வேண்டிய ஒரு உணவுப்பண்டம் என்பதைத்தாண்டி வேறுதுவுமாகவும் பார்க்கவில்லை என்பது இன்று நிறுவப்பட்டுவிட்ட ஒரு உண்மை. இந்தியாவை ஒரு பசு என்று உருவகித்தால் அதன் காம்புநுனிகளின் வழியே கரக்கப்படும் செல்வம் மட்டுமே ஆங்கிலேயர்களுக்கு முக்கியமாக இருந்தது. ஆங்கில அரசாங்கம் இந்தியாவில் செய்ததாக சொல்லப்படும் அத்தனை 'நலத்திட்டங்களும்' இந்த முலைக்காம்புகளை பராமரிக்க மட்டுமே. பசு குற்றுயிராக மாற்றப்படுவது குறித்த அக்கறை அவர்களுக்கு இருந்திருக்கவே இல்லை. அதனால்தான் அவர்களால் மாவட்டத்தில் உச்ச அதிகாரம் பெற்ற நிர்வாக அதிகாரியை District Collector (மாவட்ட வசூலதிகாரி) என்று குறிப்பிட முடிந்திருக்கிறது. (இன்றும் நாம் அந்தப்பெயரைத்தான் பயன்படுத்துகிறோம்!)


பிரிட்டிஷ் அரசாங்கம் அனைத்தையும் மையப்படுத்தவே முனைந்தது. அதன் நீள நீளமான நில அளவைகள், தண்டவாளங்கள் என அனைத்தும் தனக்கு கிடைக்க வேண்டிய செல்வம் எவ்வளவு என்பதை துல்லியமாக கணக்கிடுவதற்காக செயல்படுத்தப்பட்ட 'வளர்ச்சித் திட்டங்கள்' தான். அவ்வகையில் இந்திய வேளாண்மையும் முழுமையாக லாப நோக்கில் மட்டுமே அணுகி ஒரு நீண்ட பண்பாட்டுத் தொடர்ச்சியை தங்களுடைய மூர்க்கத்தாலும் அறிவீனத்தாலும் லாப வெறியாலும் மட்டுமே சிதைத்திருக்கின்றனர்.


இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மையின் பொதுக்கூறுகளாக சிலவற்றை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். பயிர்களை வளரச்செய்யும் மேல் மண்ணைப் பாதுகாத்தல். மூடாக்குப் போடுதல், மேல் மண்ணை மர ஏரினைக் கொண்டு மென்மையாக உழுதல், பயிரின் அடிப்பகுதியை மண்ணோடு சேர்த்து உழுதல் போன்ற செயல்கள் வழியாக மேல்மண்ணின் வளத்தை தக்க வைத்துள்ளனர். சுழற்சி முறையில் பயிர் செய்யப்பட்டு வந்ததால் மண்ணிற்குத் தேவையான சத்துகளும் பயிருக்கு தேவையான சத்துகளும் ஒரு சமநிலையை பேணி இருக்கின்றன. வெள்ளம் ஆற்றுக் கரைகளில் இருந்து நிலத்தில் வடியும்போது நிலத்தில் கொண்டுவந்து சேர்க்கப்படும் வண்டல் படிவுகள் மண்ணை மேலும் வளமாக்குகின்றன.


பிரிட்டிஷ்காரர்கள் கைகளுக்கு நிலம் சென்றவுடன் உணவு தானியங்களுக்குப் பதிலாக ஓப்பியம், பருத்தி, அவுரி, ரப்பர்,தேயிலை  போன்ற பணப்பயிர்கள் பெரிய அளவில் பயிர் செய்யப்படுகின்றன. இப்பணப்பயிர்களின் விற்பனை உலக அரசியல் சூழலுடன் தொடர்புடையது என்பதால் இவற்றை பயிர் செய்த விவசாயிகளுடைய வருமானம் நிரந்தரமானதாக இல்லாமல் போகிறது. மேலும் மிகப்பெரிய நிலப்பரப்பில் ஒற்றைப் பயிராக விதைக்கப்படுவதால் மண்ணிலிருந்து சத்துகள் உறிஞ்சப்படுகின்றன. அடுத்ததாக பாசனப்பரப்பை பெறுக்குவதற்காக கட்டப்பட்ட பெரிய அணைகளால் வெள்ளம் ஏற்படும் போது நிகழும் மண் அரிப்பு மண் வளத்தை சீர்குலைக்கிறது. மண் மற்றும் சூழலின் தன்மைக்கு ஏற்றவாறு நிகழ்ந்து கொண்டிருந்த பாரம்பரிய விவசாயம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மையப்படுத்துக் கொள்கைகளால் சீர்குலைந்ததை நூலின் முற்பகுதி விளக்குகிறது. இத்தகைய சீர்குலைவுகளுக்குப் பிறகும்கூட இந்திய மண் இந்தியர்களுக்குத் தேவையான உணவை வழங்கும் திறன் கொண்டதாகவே இருந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி சுதந்திரம் அடையும் வரை இந்தியாவில் ஏற்பட்ட உணவுப்பஞ்சமும் அதனால் நிகழ்ந்த பட்டினிச்சாவுகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போர்வெறியாலும் லாப வெறியாலும் நிர்வாகத் திறனின்மையாலும் நிகழ்ந்ததே அன்றி உணவு உற்பத்தி குறைவினால் நடைபெறவில்லை என்று தரவுகளுடன் இந்நூல் பேசுகிறது. 





பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவைவிட்டு நீங்கி பதினைந்து ஆண்டுகள் கழித்தே ரசாயன உரம், கலப்பின விதைகள் என்று பசுமைப்புரட்சி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த பதினைந்து ஆண்டு இடைவெளியில் இந்திய அரசு மேற்கொண்டு வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளை மிக விரிவாக நூல் அறிமுகம் செய்கிறது. பசுமைப்புரட்சி இந்தியாவின் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று இங்கு கொண்டுவரப்படவில்லை என்பதையும் பசுமைப்புரட்சிக்கு எதிராக அன்று ஒலித்த குரல்களையும் நூல் பதிவு செய்கிறது. பசுமைப்புரட்சி கொண்டுவரப்பட வேண்டிய அளவுக்கு அன்றைய இந்தியாவில் உணவுப்பஞ்சமும் இருக்கவில்லை என்கிறபோது ரசாயன உரங்கள், அந்நிய விதைகள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னணியை நூல் விவரிக்கிறது. ஏறக்குறைய ஒரு 'சதிக்கோட்பாட்டினை'ப் போன்ற தன்மையை இவ்விவரிப்பு கொண்டிருந்தாலும் ரிச்சாரியா போன்ற வேளாண் விஞ்ஞானிகள் பசுமைப்புரட்சியை கடுமையாக எதிர்த்து இருக்கின்றனர் என்கிற போது இவ்விவரிப்புகளை நம்பாமல் இருக்க முடியவில்லை.


நவீன வேளாண்மை என்பதே ரசாயனவியலிலிருந்து உருவானது முதன்மையான முரண். அங்கிருந்து நவீன வேளாண்மை எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் பெரும் அழிவினைத் தூண்டுவதாகவே இருந்திருக்கிறது. நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில அபாயங்களை மட்டும் சொல்லலாம். ஆய்வகங்களில் உருவாக்கி அளிக்கப்படும் விதைகளை ஓரிரு முறை அறுவடை செய்த பிறகு அடுத்த விதைப்புக்கு அவற்றிலிருந்து 'விதைநெல்' என எதுவும் கிடைப்பதில்லை. ஒவ்வொரு விதைப்புக்கும் விவசாயி அரசாங்கத்தையே சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அளவுக்கதிமாக மண்ணில் கொட்டப்படும் உரத்தால் பயிர்கள் பூச்சிகளை கவரும் அளவுக்கு அதீத 'பச்சையாக' வளர்கின்றன. இப்பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. பாரம்பரிய வேளாண்மையைவிட  நவீன வேளாண்மைக்கு அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. வயல்வெளிகளில் இருந்து வெளியேறும் நீரில் கலந்துள்ள ரசாயனம் நீர்நிலைகளில் கலந்து மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அளவுக்கு அதிகமான ரசாயன உரங்களால் ஏற்படும் உடல் உபாதைகள் அனைத்தையும் விட பெருந்தீங்கு. இந்தியாவில் பசுமைப்புரட்சி பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்சாபில் இருந்து ராஜஸ்தானுக்கு புற்றுநோய் பிணியாளர்களை அழைத்துச் செல்வதற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது என்பது பசுமைப்புரட்சியின் உண்மையான முகத்தை நமக்கு காட்டக்கூடியது. ஃபோர்ட் பவுண்டேஷன், ராக்கஃபெல்லர் பவுண்டேஷன் போன்ற ஒருசில தனியார் அமைப்புகள் விஞ்ஞானிகளையும் பட்டதாரிகளையும் விலைக்கு வாங்கி செய்த பிரச்சாரமும் அரசியல்வாதிகளின் லாபவெறியையும் தாண்டி பசுமைப்புரட்சி இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எந்த முகாந்திரமும் இருக்கவில்லை என்பதை இந்த நூல் மூலம் அறிய முடிகிறது.


பசுமைப்புரட்சியின் 'தீய விளைவுகளை' பேசுவதை இந்நூல் நோக்கமாகக் கொண்டிருந்தால் நாம் இந்நூலை பசுமைப்புரட்சிக்கு எதிரான ஒரு பிரச்சாரம் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் சங்கீதா ஸ்ரீராம் பசுமைப்புரட்சியை ஒரு ஆழமான வாழ்க்கை நோக்குகளுக்கு இடையேயான மோதலாக சித்தரிக்கிறார். நவீன அறிவியலின் அனைத்தையும் பிளவுபடுத்திப்பார்க்கும் தன்மைக்கும் பாரம்பரிய இந்திய அறிதலின் அனைத்தையும் இணைத்துப் புரிந்து கொள்ளும் தன்மைக்கும் இடையிலான மோதலின் பின்னணியிலேயே பசுமைப்புரட்சி இந்த நூலில் பேசப்படுகிறது. மையப்படுத்தும் சிந்தனைக்கும் பரலாக்க சிந்தனைக்கும் இடையிலான மோதலாகவும் இந்நூலை பார்க்க இயலும். மையப்படுத்துதல் என்பது சிந்தனையளவில் இன்றொரு பழமைவாதம் மட்டுமே. இத்தகைய சூழலில் மையப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சில தனியார் கம்பெனிகளின் லாப நோக்கத்தில் உருவாக்கப்பட்ட பசுமைப்புரட்சி போன்ற நவீனத்துவ சிந்தனைகள் பின்னடைவது இயல்பான ஒன்றும்கூட!


அதேநேரம் பாரம்பரிய வேளாண்மை என்பதை ஒரு 'பொற்கால கனவாக' முன்வைக்காமல் தற்போதைய நடைமுறை சாத்தியங்களையும் இந்நூல் பேசுகிறது. வேளாண்மை என்கிற தளத்தைக் கடந்து சூழியல், தத்துவம் என பல தளங்களிலும் சங்கீதா ஸ்ரீராமின் இந்த நூல் முக்கியமான ஒன்று.

No comments:

Post a Comment