ஒருதுளிக் கண்ணீர்

நம்பிக்கை தரக்கூடிய சொற்களை மட்டுமே கேட்க வேண்டும் நல்லதையே நினைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தொடர்ந்து இப்பதிவை வாசிக்க வேண்டாம். இது ஒரு புலம்பல் மட்டுமே. எனக்குள்ளாகவே நான் புலம்பிக் கொள்ளப் போகிறேன். அதைப் பதிந்து வைக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். இந்த புலம்பலை நினைத்து எதிர்காலத்தில்(அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை)  நான் சிரிக்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகின்றேன்.

கொரோனா வைரஸ் பற்றிய முதல் தகவல் ஜனவரியில் கிடைத்தது. அந்த வைரஸுடைய பெயரே விரும்பத்தகாததாகத் தோன்றியது. மெல்ல மெல்ல ஒரு நமைச்சலைப் போல இந்த வைரஸைப் பற்றிய எண்ணம் நமக்குள் நுழைந்தது. இந்த வைரஸை விட பல மடங்கு வேகமாக வைரஸ் பற்றிய தகவல்கள் பரவின. இன்னமும் பரவிக் கொண்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கானவர்கள் சீனாவில் ஒரே நாளில் இறந்தபோதும் தென்கொரியாவில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு இந்த தொற்று பரவியபோதும் நாமொரு தூரத்து அதிர்ச்சியை அடைந்தோம். கேரளாவில் மூவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டாலும் அவர்கள் ஆரோக்கியமாக இருந்ததும் நாட்டில் வேறெங்கும் தொற்று பரவாததும் நமக்கு ஆறுதல் அளித்தது. இத்தாலியில் கொரோனா பலியெடுக்கத் தொடங்கியபோதுதான் உண்மையில் நமக்கு லேசாக கவலை தொற்றியது. யோசித்துப் பார்த்தால் இந்த கவலை தொற்றி இன்னமும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால் இக்காலம் நீண்டதாகத் தெரிகிறது. மிக மிக நீண்டதாகத் தெரிகிறது. இதுவரை உயிரோட இருந்த நாட்களைவிட இந்த காலம் நீண்டதாகத் தெரிகிறது. 

காலம் என்பது ஒரு ஒப்பீட்டு அலகுதான். நாம் எதிர்கொள்ளாத சூழல் நமக்கு நீண்டதாகவோ குறுகியதாகவோ தோன்றும். முதற்காதல் நமக்கு ஒரு இனிமையான தன்னுணர்வை அளிக்கிறது. அந்த காலம் மிகக்குறுகியதாகத் தெரிகிறது. ஒவ்வொருநாளும் ஏறக்குறைய பறக்கின்றன. எவ்வளவு இனிமையை இந்த மனதால் மாந்திக் களிக்க முடியும் என்பதை அப்போது உணர்கிறோம். ஆனால் ஒரு இனியவரின் எதிர்பாராத மரணம்? துளித்துளியாக காலம் நகர்கிறது. எதையோ உந்தி நம் வாழ்வில் இருந்து தள்ளிவிட முயல்கிறோம். அதுவரை நாம் நம்மை எந்தக் கல்லில் அமர்த்திக் கொண்டு வாழ்க்கையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோமோ அந்த கல் சற்று உடைகிறது. இதுவரை பார்த்த உலகம் இன்னொன்றாகத் தெரிகிறது. நம் மனம் இனிமைக்கும் துன்பத்துக்கும் ஒரு முறை மட்டும் உச்சகட்ட எதிர்வினையை ஆற்றுகிறது. அந்த உச்சகட்டம் இனிமையையும் துன்பத்தையும் முதல்முறையாக எதிர்கொள்ளும் போதே நிகழ்ந்து விடுவதால் வாழ்வில் அதன்பிறகு அனுபவிக்க நேரும் இன்ப துன்பங்களை எதிர்கொள்ள நமக்குள் எதிர்ப்புயிரி உருவாகிவிடுகிறது.

கொரோனாவைப் பொறுத்தவரை எதிர்ப்புயிரி இல்லையென்பதுதான் பிரச்சனை. இல்லை. நான் மருத்துவ கலைச்சொல் எதையும் பயன்படுத்தவில்லை. இந்த காலச்சூழலை எதிர்கொள்வதற்கான எதிர்ப்புயிரி நம்முடைய ஞானத்திரட்டில் இல்லை. சமீப ஆண்டுகளில் 'உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு' என்று ஒரு முன்னொட்டு அடிக்கடி பயன்படுத்தப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம். முன்னெப்போதும் இல்லாத அளவு பயணங்கள் அதிகரித்து இருக்கின்றன, விவாகரத்துகள் பெருகியிருக்கின்றன, தனிமனித ஆரோக்கியம் கூடியிருக்கிறது, எழுத்தறிவு உயர்ந்திருக்கிறது, தனிமனித வருமானம் உயர்ந்திருக்கிறது என்று இவ்வாறாக. உண்மையில் இத்தனை முன்னெப்போதும் இல்லாத அளவுகள் எல்லாம் ஒன்று சேர்ந்தே கொரோனாவுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியான நிலையை உருவாக்குவதற்கான வலிமையை அளித்திருக்கின்றன. இல்லை மறுபடியும் நான் உலகமயத்தை எதிர்க்கவோ உள்ளூர் மயத்தை ஆதரிக்கவோ இல்லை. 

நான் சொல்ல வருவது மனித இனத்தை மொத்தமாக தன்னைப் பற்றியே நாள் முழுவதும் சிந்திக்கச் செய்த இன்னொரு சக்தி இதற்கு முன் எப்போதும் தோன்றியதில்லை என்பதே. உலக சினிமா, உலக இலக்கியம் போன்றவை எல்லாம் இருக்க இயலாது என்று நிறுவப்பட்டு வரும் காலத்தில் உலகப்பதற்றம் என்ற ஒன்று இருக்க முடியும் என்று இந்த வைரஸ் நிறுவி இருக்கிறது. ஆம் நமக்கு ஆறுதலுக்கான ஒளி உலகின் எந்த மூலையில் இருந்தும் தெரியவில்லை. அதனால்தான் நாம் நம்மைத் தோண்டித் தோண்டி ஒளியை எடுக்கிறோம்.

சற்று நேரம் மனவெட்டியை கீழே வையுங்கள். நாம் கொஞ்சம் தெளிவாக சிந்திக்க முயற்சி செய்யலாம். உடலுக்கு வியாதி வந்தால் நாம் நம்முடைய அன்றாட செயல்பாடுகளை நிறுத்திவைத்து சில நாட்கள் ஓய்வெடுக்கிறோம். உடல் தான் முன்பு இயல்பாக இருந்த நிலையை அடைந்து இயல்பாக செய்தவற்றில் திரும்ப ஈடுபட சில 'இயல்பற்ற நாட்கள்' தேவைப்படுகின்றன. மீண்டும் காலம் நீண்டதாகத் தெரியும் புள்ளிக்கே வரலாம். ஏறக்குறைய உலகம் தன்னுடைய அத்தனை செயல்பாடுகளையும் நிறுத்திக் கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. சில இடங்களில் பதற்றமான கொண்டாட்ட மனநிலையில். சில இடங்களில் விரக்தியான பசியுடன். இது உலகுக்கான 'இயல்பற்ற நாட்கள்'. ஆனால் இந்த இயல்பற்ற நாட்கள் என்று முடியும் என்பது நோய் தொடங்கும் நாளிலேயே கண்டறிய முடியாது. நோய் தொடங்கும்போது நாம் நமக்கு அன்றிருக்கும் தலைவலியோ காய்ச்சலோ சரியானால் போதும் என்றுதான் நினைப்போம். அது முழுமையாக சரியான பிறகே நம்முடைய உள்வலிமை திரளத்தொடங்கும். கொரானாவின் இந்த நாட்கள் - அதாவது ஏப்ரல் 20,2020 வரை - காய்ச்சலும் தலைவலியும் குறையாது நீடிப்பதே நம்மை பதற்றப்படுத்துகிறது. மனதை சோர்வுற செய்கிறது. காலத்தை நீண்டதாகத் தோன்றச் செய்கிறது. இந்த பதற்றத்தை நாம் இதுவரை நேரடியாக எதிர்கொண்டதில்லை. எல்லோரும் சொல்வது போல இதுவொரு போரின் பதற்றம் அல்லது அதற்கும் அதிகமாக. சிக்கல் என்னவெனில் போரின் பதற்றமே இன்றைய உலகின் நினைவுத்தொகுப்பில் குறைவாகவே இருக்கிறது. 

போர் முடிவது மனித மனங்களின் வலிமையின் எல்லையைப் பொறுத்தது. லட்சக்கணக்கானவர்களின் கோடிக்கணக்கானவர்களின் அபிலாஷைகளை எதிர்த்து நிற்பதற்கு போர் நிகழ்த்துகிறவர்களுக்கு ஒரு எல்லைக்கு மேல் வலிமை இருக்காது. ஆகவே மனிதர்கள் தொடுக்கும் போர் முடிவுக்கு வரும். ஆனால் இச்சூழல் முடிவுக்கு வருவது நம் கைகளுக்கு எத்தனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இன்றுவரை நாம் தடுப்புத் தாக்குதலை மட்டுமே நிகழ்த்தி வருகிறோம். அதையும் முழுதாக செய்ய இயலாமல் அங்கங்கே தடுப்பு உடைந்து உயிர்பலிகள் நிகழ்கின்றன. எதிர்த்துத் தாக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும் அல்லது இறுதிவரை தடுத்தே தாக்கிக் கொண்டிருக்க வேண்டுமா என்பதும் விளங்கவில்லை.

இறுதி. இதுவொரு நல்ல சொல். அச்சுறுத்தும் சொல்லும் கூட. இன்னும் எவ்வளவு நாட்கள் என்று ஏற்கனவே நாம் ஏங்கத் தொடங்கிவிட்டோம். எதிர்காலம் குறித்து, வாழ்வாதாரம் குறித்து, மனித உறவுகள் குறித்து, வரலாற்றுப் பார்வை குறித்தெல்லாம் எனக்குள் அச்சம் குமிழியிடத் தொடங்கிவிட்டது. நான் கற்றுகொண்டவை எனக்களித்த விவேகத்தை மனவுறுதியை இந்த வைரஸ் கேலி செய்கிறது. அவமதிக்கிறது. அடிமைகளை ஆண்டைகள் அவமதிப்பது போல. அடிமைகளுக்கு வேறு போக்கிடம் கிடையாது. மேலும் ஆண்டை அடியாள்,செல்வ பலத்துடன் இருக்கிறார்.

இதற்கு முன் நின்று என்ன செய்ய இயலும் என்ற கேள்வியே கலக்கம் தருகிறது. நம்முடைய சமூக நற்குணங்கள் அனைத்தும் செயற்கையானவை. சிக்கலானவை. ஒவ்வொரு அமைப்பும் தன்னுடைய அதிகாரத்தால் செல்வத்தால் வன்முறையால் மதிநுட்பத்தால் நம்முடைய சமூக நற்குணங்களை வடிவமைத்து இருக்கின்றன. அக்குணங்களை கண்காணிக்கின்றன. இந்த வைரஸ் அமைப்புகளையே சிதைக்கும் அளவு அதிகாரமும் செல்வமும் வன்முறையும் மதிநுட்பமும் கொண்டிருக்கிறது. இதுவரை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாம் மிகையாகப் போராடுகிறோம். இந்த போராட்டகாலமும் நீண்டு நீண்டு போகிறது. ஆனால் அந்த வைரஸின் அதிகாரத்தை நம்மால் சற்றும் தளர்த்த முடியவில்லை. அது நம் அமைப்பகளை வெற்றி கொண்டால் நான் என்னவாக ஆவேன் என்றுதான் நான் அஞ்சுகிறேன்.

ஆம் இதுவும் அந்த பிரபலமான தனிமனித அடையாளச்சிக்கல்தான். என்ன பிரச்சினை என்றால் இந்த அடையாளச்சிக்கலை நாம் அத்தனை பேரும் எதிர்கொள்ள நேரும் என்பதுதான். நெருக்கடிகளில் நாம் முதலில் இழப்பது பேணிக்கொண்ட நற்குணங்களைத்தான். நற்குணங்கள் இழந்த கோடிக்கணக்கானவர்களை நற்குணங்கள் இழந்த இன்னொருவனாக எதிர்கொள்ள நேருமோ என்பது என் முதன்மையான அச்சமாக உள்ளது.


அதிசயங்களுக்காக காத்திருக்கும் ஒரு காலம் வருமென நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் இப்போது அது ஒன்றே வழி. தர்க்கப்பூர்வமாக நடந்து கொண்டு உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மேசைக்காலில் சுண்டு விரல் சிக்கி இருக்கும்போது ஓங்கி அழுவதில் ஒன்றும் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். வள்ளுவன் சொன்னதுபோல அஞ்சுவதை அஞ்சவேண்டும். அஞ்சுவதோடு கொஞ்சம் அழவும் செய்வோம். அப்போதாவது அதற்கு நம்மீது இரக்கம் பிறக்கிறதா என்று பார்ப்போம். இது என் ஒரு துளிக் கண்ணீர்.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024