சாரு நிவேதிதாவை வாசித்தல் 2

எக்ஸைல் நாவலில் இடம்பெறும் சித்தரிப்பு. குணரத்தினம் என்றொருவரை எக்ஸைலின் கதை சொல்லியான உதயா ஃப்ரான்ஸில் சந்திக்கிறான். (சாருவின் பிற நாவல்களைப் போல ஏகப்பட்ட கிளைகளாகப் பிரிந்தாலும் இப்பெருநாவலிலும் கதை சொல்லி ஒருவன்தான்). குணரத்தினம் ஒரு இலங்கைத் தமிழர். இலங்கையில் பேராசிரியராக இருந்தவர். உதயாவிடம் நான்கு நாட்களாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். தகவல்கள் துல்லியமாக அவர் பேச்சில் வந்து விழுகின்றன. உதயாவிற்கு கழிப்பறை செல்லும் நேரம் தவிர பிற நேரங்களில் அந்தப் பேச்சிலிருந்து விடுதலையே கிடைப்பதில்லை. குணரத்தினம் ஒரு மார்க்ஸியரும்கூட. 


அவர் வீட்டில் தங்கி இருக்கும்போது மூன்றாம் நாள் இரவு உதயாவுக்கு ஒரு கனவு வருகிறது. அவன் எங்கோ கடத்திக் கொண்டு போகப்படுகிறான். தான் கொல்லப்படப் போகிறோம் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிகிறது. அதோடு மூத்திரம் வேறு முட்டுகிறது. தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறான். தான் செய்த எல்லாத் தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்கிறான். இனி எழுதவே போவதில்லை, உயிரோடு மட்டும் விடுங்கள் அதோடு மூத்திரம் பெய்யவும் அனுமதியுங்கள் என்று கெஞ்சுகிறான். அவனுடைய கால்சராய் நனைந்து போயிருக்கிறது. குணரத்தினத்தின் வீட்டில்தான் தூங்கிக் கொண்டிருக்கிறான்.





சாரு நிவேதிதாவின் படைப்புலகைப் புரிந்து கொள்ள இதுவொரு முக்கியமான கண்ணி என நினைக்கிறேன். குணரத்தினம் வெறுமனே பேசிக் கொண்டிருக்க மட்டுமே செய்கிறார். ஆனால் அந்தப் பேச்சு உதயாவுக்கு பல்வேறு ஞாபகங்களை இழுத்துவந்து உயிரச்சத்தை அவனிடம் உருவாக்கி விடுகிறது. மேம்போக்காகப் பார்க்கும்போது உதயாவின் அச்சம் அர்த்தமற்றதாகத் தோன்றலாம். ஆனால் அதீத தன்னுணர்வு கொண்ட உதயாவிற்கு அந்த சொற்களின் வழியாகவே மிகப்பெரிய வன்முறையை கற்பனை செய்து பார்த்துவிட முடிகிறது. எந்தவொரு வன்முறையும் நிகழ்ந்த பிறகு எல்லாவிதமான சமன்பாடுகளையும் மாற்றி விடுகிறது. அறிவுடைய யாருமே போரைத் தள்ளிப்போடவோ அல்லது தவிர்த்து விடவோதான் விரும்புகின்றனர். ஏனெனில் போர் சமூகத்தில் பல்வேறு காரணிகளால் உருவாக்கி நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமைதியை உடைத்து விடுகிறது. எல்லோரும் சந்தேகப்படத்தக்கவர்கள் துரோகிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. உயிரோடு இருப்பது மட்டுமே செய்யக்கூடிய ஒற்றைச் செயலென்று ஆக்கிவிடுகிறது. உதயாவின் அச்சத்தை இந்தப் பின்னணியில் வைத்தே நான் புரிந்து கொள்கிறேன். அதுவொரு தனிமனிதனின் சுயநலமான அச்சமல்ல. மொத்த சமூகமும் இரக்கமின்மையை வெளிப்படுத்தும் தருணத்தை முன் உணரும் ஒரு அகம்‌. இந்த அத்தியாயத்திற்கு சில அத்தியாயங்களுக்கு முன்புதான் கீழ் வெண்மணி இந்த நாவலில் இடம்பெறுகிறது. நாஜிப் படைகளால் எரிக்கப்பட்ட ஒரு நகரம் வருகிறது. குணரத்தினத்தின் பிசிறற்ற தர்க்கப்பூர்வமான பேச்சின் உள்ளுறையாக அமையும் வன்முறையை உதயா உணர்வதே அவனை நிலை கொள்ளாமல் அடிக்கிறது. கதை சொல்லியின் இந்த அக இயல்பு சாருவின் படைப்புகளைப் புரிந்து கொள்ள ஒரு முக்கியமான கண்ணி.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1