இலக்கிய விமர்சனம் - பத்துக் கட்டளைகள் - ஒரு சுயபரிசோதனைக் குறிப்பு

இதுவொரு சுயபரிசோதனைக் குறிப்பு.


இணைய ஊடகங்களின் பெருக்கம் இலக்கியத்தின் மீது எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறது என்ற வகையிலான உரையாடல்களை சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பார்க்க நேரிடுகிறது. அவ்வுரையாடல்கள் தொழில்நுட்பரீதியான மாற்றங்கள் குறித்துத்தான் அதிகமும் அக்கறை கொள்கின்றனவே தவிர இலக்கிய வாசிப்பு, ரசனை, வாசகனில் படைப்பு உண்டாக்கும் தாக்கம் போன்ற சங்கதிகள் குறித்து அதிகமும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. எழுதும் முறை மாறியிருக்கிறது. நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து அலைபேசியைத்தான் பயன்படுத்துகிறேன். பேனா பிடிப்பதற்கு பதிலாக தட்டச்சு செய்யத் தொடங்கியது போல இரண்டு கட்டைவிரல்களை மட்டும் பயன்படுத்தி தற்போது எழுதுகிறோம். இதுபற்றி அதிகம் பேச ஒன்றுமில்லை.‌ இந்த செயற்கை தொழில்நுட்பம் பற்றிய பேச்சுகள் அது இலக்கியத்தை அழித்துவிடுமா இல்லையா என்பதெல்லாம் கூட ஒரு வகையான 'சமகால' மோஸ்தரை ஒட்டிய பேச்சுகள்தானே தவிர அப்பேச்சுகளுக்கும் இலக்கியத்துக்கும் பெரிய தொடர்பில்லை.


இலக்கியம் என்பது காலங்காலமாக படைப்பாளியின் உள்ளம் உணரும் உண்மையை‌ மொழியின் ஒரு வெளிப்பாட்டு வடிவத்தில் பொதிந்து வைப்பதாகவே இருந்துள்ளது. அந்த உண்மையின் பிரத்யேகத்தன்மை மற்றும் தகுதி காரணமாக அது திரும்பத் திரும்ப வாசிக்கப்படுகிறது. துன்பப்படும் மனதிற்கு ஆறுதலைவிட உண்மைதான் அவசியம்.‌ அறிகுறிகள் தென்பட்ட பிறகு 'நோய் சரியாகிவிடும்' என்ற ஆறுதலைவிட அது என்ன நோய் எப்படி‌ சரிப்படுத்தலாம் என்ற உண்மைதான் நோயாளிக்கு பயனுள்ளது. தீவிர இலக்கியமும் அத்தகையதுதான். இலக்கிய விமர்சனம் என்பது படைப்பின் உண்மைத்தன்மையை சோதிக்க உண்மையான படைப்புகள் சரியான வாசகனை சென்று சேர அவசியம்.


இங்கு இரண்டு கேள்விகள் வருகின்றன. உண்மை என்றால் என்ன? இலக்கிய விமர்சனத்துக்கும் முதல் கேள்வியில் சொல்லப்படும் உண்மைக்கும் என்ன தொடர்பு?


ஒரு விமான விபத்தில் இருபதுபேர் இறந்ததாகச் செய்தி வருகிறது. கொஞ்ச நேரத்தில் மேலும் சில சடலங்கள் கண்டறியப்படுகின்றன. அப்படியெனில் முதலில் சொல்லப்பட்டது பொய்யாகிவிடுமா? ஆகிவிடாது. அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் எத்தனை சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன எத்தனை பேர் காணாமலாயினர் உயிர்பிழைத்தவர்கள் எத்தனைபேர் என்று அத்தனை தகவல்களையும் இணைத்துப் பார்த்தால்தான் நமக்கு 'உண்மை' புலப்படும்.‌அப்போதும் உறுதியாகச் சொல்லிவிடுவதற்கில்லை.‌ யாருக்குமே தெரியாத ஒருவன் விமானத்தின் நொறுங்கிய பாகம் விழுந்து இறந்திருக்கலாம். விமான விபத்தின் செய்தியைக் கேள்விப்பட்ட அதிர்ச்சியில் ஒரு உயிர் போயிருக்கலாம். அப்படியெனில் அந்த விபத்தில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்று சொல்லிவிடவே முடியாது என்று தோன்றுகிறது அல்லவா? அதுவொரு வகையான சலிப்பினையும் நமக்குக் கொடுக்கும். உண்மை என்ற ஒன்று இல்லை என்று சொல்கிறவர்கள் தங்கள் வாதத்தை இப்படித்தான் அடுக்குவார்கள்! உண்மை என்ற ஒன்று இல்லை என்று அவர்கள் சொல்வதை முதலில் நாம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் உண்மையை நோக்கிப் பயணப்பட முடியும். எத்தனை பேர் இறந்தார்கள் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்றெல்லாம் தேடும்போது நாம் இயல்பாகவே உண்மையை நோக்கித்தான் போகிறோம். நம்முள் உறையும் அக்கறை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மையை நோக்கி நம்மை நகர்த்தும். ஒரு நிகழ்வுக்கு சரியான விதத்தில் அக்கறையுடன் எதிர்வினையாற்றும்போது நாம் உண்மையை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம்.


இலக்கியம் முன்வைக்கும் உண்மையும் இத்தகையதுதான். ஒரு படைப்பாளி தன்னுடைய சிறுகதை அல்லது கவிதை அல்லது நாவல் அல்லது வேறொரு இலக்கிய வகைமையின் வழியாக தான் உணர்ந்தது என்றொரு உண்மையை முன்வைக்கிறார். அது நேரடியாக சொல்லப்பட்டிருக்கலாம். அல்லது மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கலாம். அது குறிப்பிட்ட அர்த்தத்தை தரலாம். ஒரு அர்த்தமும் தரமறுப்பதாக இருக்கலாம். ஆனால் நம்முன் உள்ள பிரதி 'தான் உண்மை' என்று சொல்லிக் கொண்டுதான் நம்முன்னே நிற்கிறது. இங்கு உண்மை என்பது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற நிரூபண உண்மை கிடையாது. நான் மேலே குறிப்பிட்டதுபோல தொடர்ந்து 'தேடப்பட' வேண்டிய உண்மை.


அந்த 'தேடப்பட' வேண்டிய உண்மையை தன்னுடைய கருவாகக் கொண்ட படைப்புகளையே இலக்கியப் படைப்புகள் என்று மதிப்பிடுகிறோம். உண்மையைப் பற்றிய இந்த வரையறையில் மேலும் இரண்டு கேள்விகள் வருகின்றன.‌ ஒன்று அந்த தேடப்பட வேண்டிய உண்மையை எப்படி அடையாளம் காண்பது? இரண்டாவது இலக்கிய வாசிப்புக்கு இப்படி 'உண்மையைத் தேடுதல்' என்று மட்டும் பாத்தி கட்ட முடியுமா?


உண்மையை நம்மால் அடையாளம் காணமுடியும். காந்தத்தை மண்ணில் பிரட்டினால் அது இரும்புத்துகள்களை எடுத்துக் கொள்வதுபோல ஒரு வாசகரின் மனதால் உண்மையை அடையாளம் காண முடியும். அதற்கு நம் மனம் காந்தமாக வேண்டும். இலக்கிய வாசிப்பில் மிகக் கடினமான கட்டம் இதுதான். உண்மைத் துகள்களை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றிக் கொள்வது. இலக்கிய வாசகர்கள் எல்லா காலத்திலும் மிக மிகச் சொற்பமாக இருப்பதற்குக் காரணமும் உண்மை மீது நாட்டம் கொள்ள வேண்டியதை இலக்கியம் ஒரு முன்நிபந்தனையாக விதிப்பதுதான். நம் வாழ்வினை மயக்கங்கள் இன்றி அணுக கற்றுக் கொள்ள வேண்டும். 


ஆணவம் ஒரு மயக்கநிலை. அந்த மயக்கநிலை ஏராளமான மயக்கநிலைகளைத் தோற்றுவிக்கும். நான் நம்புவதே சரி என்பது அத்தகைய எளிதான ஒரு மயக்கநிலை. தான் சார்ந்திருக்கும் கொள்கைதான் உலகத்தை உய்விக்கும் ஒரேவழி என்பது தீவிரமான மயக்கநிலை. இத்தகைய ஏராளமான நிலைகளைச் சுட்ட முடியும். ஒரு நல்ல இலக்கிய வாசகர் நிச்சயமாக தன்னுடைய 'ஆணவத்தின்' மீது அடி விழுந்த அனுபவம் பெற்றிருப்பார். நிலைகுலைந்து போகவும் வாழ்க்கைப் பற்றிய அடிப்படைப் பார்வையை மாற்றிக் கொள்ளவும் தன்னை அனுமதித்து இருப்பார். 


உண்மையை அடையாளம் காண்பதற்குச் சரியான வழி உண்மை என்று நம்முன்னே வந்து நிற்பது நம்மை சற்றாவது அசைக்கிறதா என்பதை உற்று நோக்குவதுதான். அதற்கும் ஒரு முன்நிபந்தனை இருக்கிறது. நாம் ஒரு படைப்பை எவ்வளவு தீவிரமாக அணுகுகிறோம் அது நம்மிடம் சொல்கிற விஷயத்தை எவ்வளவு மனவிரிவுடன் உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அப்படைப்பு முன்வைக்கும் உண்மையை நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். 


அடுத்ததாக உண்மையைத் தேடுதல் என்று இலக்கிய வாசிப்புக்கு பாத்திகட்ட முடியுமா என்ற கேள்வி. முதலில் புனைவை உண்மை என்று பார்க்க வேண்டும் என்று நான் சொல்வதே சிலருக்கு விசித்திரமாகத் தெரியலாம். முன்பு சொன்னதுபோல இங்கு உண்மை என்பது எழுத்தாளரின் டைரிக்குறிப்பு இல்லை. டைரிக்குறிப்புமே கூட ஒரு கோணம்தான். 'இன்று ஒரு ஆழகிய பெண் என்னைப் பார்த்து சிரித்தாள்' என்று நான் டைரியில் எழுதி வைக்கிறேன் என்று கொள்வோம். அவள் நான் பேண்ட்டில் ஜிப் போடாமலிருப்பதைப் பார்த்துக்கூட சிரித்திருக்கலாம் என்ற சாத்தியம் என் வரையிலான உண்மையை காலி செய்து விடுகிறது. ஆகவே இலக்கியத்தில் முன்வைக்கப்படும் உண்மை என்பது நிகழ்ச்சிக் குறிப்பு அல்ல. சொல்லப்படும் சமயத்தில் 'அட ஆமால்ல' என்று நம் மனம் இயல்பாகவே எதை ஆமோதிக்கிறதோ அது.


உண்மைக்கு இத்தகைய நெகிழ்வான விளக்கத்தைக் கொடுத்தபிறகு உண்மையை வைத்து இலக்கியத்திற்கு பாத்தி கட்டுவது அப்படி ஒன்றும் தவறான விஷயமாகப்படவில்லை.


அடுத்ததாக இலக்கிய விமர்சனம் உண்மைக்கான தேடலை எவ்வாறு வலுப்படுத்துகிறது? 


ஜனநாயகம் சமத்துவம் போன்ற கருதுகோள்களை அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். கலைத்துறைகளில் அது கூடாது. ஏனெனில் ஒரு மனிதனின் கலைத்தேட்டம் என்பது சமூக நடைமுறைகளின் விளைபொருள் அல்ல. அதுவேறு ஏதோவொன்று.‌அது என்னவென்று இன்றுவரை உறுதியாக வரையறுக்கப்படவில்லை. மக்களை 'குஷிப்படுத்துவது' கலையின் நோக்கமல்ல. அதற்கென்றே உருவான வணிகக் கலைகள்‌ இருக்கின்றன. ஒரு உயர்தரமான உணவகம் அல்லது பார்பர் ஷாப் போல 'வாடிக்கையாளர் திருப்தி' அளித்து நம்மை திருப்பி அனுப்புகிறவை அவை. ஆனால் உண்மையைத் தேடும் அல்லது ஏதாவது ஒரு உண்மையை திக்கத் திணறி நம்மிடம் சொல்ல முயலும் கலையை எந்த உதவியும் இல்லாமல் யாராலும் சென்று தொட்டுவிட முடியாது. இந்த இடத்திலேயே விமர்சகரின் தேவை உருவாகிறது. தொடர்வாசிப்பில் இருப்பவரே நல்ல விமர்சகராக முடியும். ஆகவே விமர்சகர்களின் சிபாரிசு வழியாகத்தான் இலக்கியம் வளர‌முடியும். 'தான்தோன்றித்தனமான' வாசிப்புகள் இலக்கியத்துக்கு எதையும் கொடுத்துவிடாது. 'எல்லாமும் சமம் எல்லாமும் அவசியம்' என்பது அரசியலுக்குப் பொருந்தும். இலக்கியத்துக்கு அல்ல.


தமிழ் இலக்கியச்சூழலில் விமர்சனம் தனித்துறையாக வளரவில்லை என்று அறுபது வருடங்களுக்கு முன்பு க.நா.சுப்ரமண்யம் எழுதினார். இன்றும் நிலைமை பெரிதாக முன்னேறிவிட்டது என்று சொல்ல முடியாது. பொருட்படுத்தத்தக்க இலக்கிய விமர்சனங்களை பெரும்பாலும் படைப்பாளிகளே எழுதுகின்றனர். வேறு வழியும் தற்போது இல்லை என்றே தோன்றுகிறது. இலக்கிய வாசிப்பில் தீவிரமாக ஈடுபடுகிறவர்கள் படைப்பாளிகளாகவே இருக்கின்றனர். ஆனால் இது ஆரோக்கியமான போக்கு இல்லை.‌ஒரு துறையில் ஆழமான அறிவுடையவர்கள் தன்னிச்சையாக உருவாகி வரவேண்டும்.‌புனைவெழுத்தாளர்களும் வேறு துறை நூல்களை அதிகம் வாசிக்க வேண்டும். புனைவெழுத்தாளர்கள் வரலாறு, அறிவியல், சிற்பம், ஓவியம் குறித்தெல்லாம் பேசுவது அவசியம்தான். ஆனால் இலக்கிய விமர்சனம் பற்றிப் பேசுவதால் அதைக் குறித்து விரிவாக எழுத இது இடமில்லை. ஒரு ஆரோக்கியமான வாசிப்புச்சூழல்தான் வலுவான விமர்சன மரபையும் உருவாக்க முடியும். ஒரே படைப்பு குறித்து முரண்பட்ட பார்வைகள் வெளிப்பட வேண்டும். அது எவ்வளவு அபத்தமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உண்மையானதாக இருக்க வேண்டும். இலக்கிய விமர்சனத்தில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கும் எனக்கும் சில விதிதளை இங்கு சொல்லி வைக்கிறேன். இன்றைய சமூக ஊடகச்சூழலில், அன்று தோன்றி அன்றே மறையும் போலியான பரபரப்புகளுக்கு மத்தியில், படைப்பாளிகளும் அத்தகைய பரபரப்புகளில் கால் நனைக்கும் அபாயம் கூடியிருக்கும் இந்நாட்களில் இவ்விதிகளை பின்பற்றுவதே என்னை காக்கும் என நம்புகிறேன். பிறருக்கும் இவ்விதிகள் பயன்படலாம்.


1.ஒரு படைப்பினை வாசித்து மனதில் அசைபோட்ட பிறகு அது உண்டாக்கும் உணர்ச்சிகளை எவ்வளவு அபத்தமெனத் தோன்றினாலும் ஏதோவொரு விதத்தில் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும்.


2.அப்போது வாசிக்கும் இலக்கியக் கொள்ளைகள் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்றது போல படைப்புகளுக்கு விளக்கம் அளிக்கக்கூடாது. தன்னிச்சையாக மனதில் எழும் இணைவுகள் மட்டுமே முக்கியமானவை. மதிப்புரை, நூல் அறிமுகம், விமர்சனம் என்பதெல்லாம் வேறு வேறு என்றாலும் இலக்கிய விமர்சகர் இந்த தலைப்புகளை கண்டிப்புடன் பின்பற்றத் தேவையில்லை.


3.எழுத்தாளர் இதைச் சொல்வதால் புண்பட்டுவிடுவாரோ‌ என்று எண்ணத் தேவையில்லை. இலக்கிய விமர்சனம் நம் இலக்கியத்தின் தரத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கானதே தவிர குறிப்பிட்ட எழுத்தாளரை உயர்த்துவது நம் நோக்கமல்ல.


4.ஒரு எழுத்தாளரை தனிப்பட்ட முறையில் பிடிக்காது என்பதைக் கொண்டு அவருடைய படைப்புகளை அணுகக்கூடாது. நண்பர், காதலர், துரோகம் இழைத்தவர் என்று ஆளுக்கேற்றது போல மனச்சாய்வு கொள்ளக்கூடாது. ஆனால் ஒரு எழுத்தாளரின் படைப்பின் மீது இயல்பாகவே அதீதமான ஈர்ப்பு ஏற்பட்டால் அதையும் மறைக்கக்கூடாது.


5.நேர்மையாக விமர்சிக்கிறேன் என்ற தோரணையில் அனாவசியமான கடுஞ்சொற்களை பயன்படுத்தத் தேவையில்லை. சாதாரண சொற்களின் வழியாக மறுப்பினை முன்வைக்கும் கலை அறிய வேண்டும்.


6.ஒரு படைப்புக்கு விருது கொடுக்கப்படும்போது விருதுக்கு படைப்பு தகுதியற்றது என்று தோன்றினால் மறுத்து எழுத வேண்டும். ஒரு அமைப்பு தொடர்ந்து தகுதியற்ற படைப்புகளுக்கே விருது கொடுத்தாலும் மறுத்து எழுதுவதில் தவறில்லை.


7.இலக்கிய விமர்சனத்தின் வழியாக ஒரு படைப்பை தூக்கி நிறுத்துவதோ தூக்கியெறியச் செய்வதோ இயலாது என்ற புரிதல் விமர்சகருக்கு அவசியம். இலக்கிய விமர்சனத்தின் வழியாக தன் பார்வையை தொடர்ந்து கூராக்கிக் கொள்வதைத் தாண்டி இலக்கிய விமர்சகர் அடைவது ஒன்றுமில்லை என்ற தெளிவு அவசியம்.


8.பரிந்துரைக்கும்போது கவனம்தேவை.‌ ஒரு படைப்பு ஏன் வாசிக்கப்பட வேண்டும் என்ற குறிப்புடன் பரிந்துரைகளைச் செய்ய வேண்டும். 


9.விமர்சகர் முக்கியமென நினைத்தப் படைப்பு காலத்தால் மறக்கப்படலாம். தான் முக்கியமென நினைத்த ஒரு படைப்பு காலாவதியாகும்போது ஏன் அப்படி நிகழ்கிறது என்பதை சீர்தூக்கிப்‌ பார்க்க வேண்டும்.


10.தான் வாசித்தது குறைவு என்ற தெளிவு அவசியம். இலக்கியம் என்பது பெரும்பரப்பு. அதில் புதிதாகவும் உண்மையாகவும் ஒரு பார்வைக்கோணம் வரும்போது அதை ஏற்றுக் கொள்ளும் மனவிரிவு தனக்கிருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.‌ஒருவேளை இல்லையென்றால் அது ஏன் என்பதையும் தன்னால் எந்தக் கூறுடன் உடன்பட முடியவில்லை என்பதையும் முன்வைக்க வேண்டும்.



Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1