சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் - 1
யாரிடமோ பேசிக்கொண்டிருந்த போது அம்மா சொன்னார். "தேவிடியா வாக்கு...அப்படியே பலிக்கும் பாத்து நடந்துக்க". என் அம்மாவை இன்னொரு பெண்ணாக அன்றுணர்ந்தேன். அம்மா அப்படி சொன்னதன் திகைப்பு அடங்க நெடுநாள் ஆனது. ஆண்களை திறனையும் பெண்களை பாலியல் ஒழுக்கத்தையும் மட்டுமே கொண்டு அளவிடும் ஒரு கிராமத்துப் பெண்ணிடமிருந்து அப்படி ஒரு வார்த்தை எதிர்பார்க்கக் கூடியது அல்ல. இன்றைய இளைஞன் என்பவனின் அதிகப்டச கனவு ஒரு ஐரோப்பியனாகவோ அமெரிக்கனாகவோ தன்னை மாற்றிக் கொள்வது தான். ஒவ்வொருவரும் தன் வலுவுக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்றவாறு ஒரு "உயர் நாகரிகத்தை" அடைய முயன்றபடியே உள்ளனர். அது பெரும்பாலும் இன்னொன்றாக இங்கில்லாத மற்றொன்றாக தன்னை மாற்றிக் கொள்வதில் போய் முடிகிறது. முற்போக்கானவர்களாக மூட நம்பிக்கைக்கு எதிரானவர்களாக நாகரிகமானவர்களாக தன்னை எண்ணிக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெற்றிகரமாக ஒரு ஐரோப்பிய கருத்தியலுக்குள் தன்னை பொருத்திக் கொள்ளக் கூடியதற்கான பயணத்தில் இருப்பவர்களே. நம் நவீன சமூகம் நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கல்வியால் உருவாக்கப்பட்டது. ஆகவே ஒரு சில குடும்ப பழக்கங்களைத் தாண்ட...