Saturday, 8 April 2017

நவீன இந்தியாவின் சிற்பிகள் - ராமச்சந்திர குஹா (தமிழில் - வி.கிருஷ்ணமூர்த்தி)

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் தான் வரலாற்றின் மீது எனக்கொரு ஈர்ப்பை ஏற்படுத்திய முதல் நூல். மன்னர்கள் அவர்களின் ஆட்சிப் பரப்பு ஆண்ட வருடங்கள் எதிர்கொண்ட போர்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் செய்த குளறுபடிகள் என்று வரலாறு ஒரு பெரும் புனைவாக (grand fiction) என் நினைவில் நின்றிருந்தது. ஆனால் வருடங்களை நினைவில் நிறுத்துவது எளிமையானதாக இல்லை. இருந்தும் இந்திய வரலாறு குறித்தும் தமிழக வரலாறு குறித்தும் ஒரு தோராயமான பொதுச் சித்திரம் மனதில் உருவாகி இருந்தது. பெரும்பாலானவர்களுக்கு துல்லியமாகவோ தோராயமாகவோ அத்தகையதொரு வரலாற்று சித்திரம் இருக்கவே செய்யும். ஆனால் வரலாறு காலத்தில் நெருங்கி வர வர அறிவு சார்ந்ததாக இல்லாமல் ஆகிறது. வரலாற்று விசைகளோடு நம் நாடு நம் மொழி நம் சாதி நம் மதம் அல்லது நம் குலதெய்வம் கொண்டிருந்த தொடர்பென்ன ஆற்றிய பங்களிப்புகள் என்னென்ன அடைந்த லாப நஷ்டங்கள் என்ன என்று தேடத் தொடங்கி விடுகிறோம். தூரத்தில் இருக்கும் போது ஒரு திரைக்கு பின் நடக்கும் படம் போல வரலாறு நம்மை கொந்தளிக்கச் செய்கிறது மயிர்கூச்செறிய வைக்கிறது சிந்திக்க வைக்கிறது விழுமியங்களை கற்றுக் கொடுப்பதாக இருக்கிறது. ஆனால் திரைகள் கிழிபட்டு காலம் நெருங்க நெருங்க வரலாற்றில் நம்மால் ஏற்பட்ட பாதிப்பென்ன(நாம் என்பது சாதி மொழி மதம் இன்னபிற) என்ற ஆதாயப் பார்வை தோன்றிவிடும் வாய்ப்பே அதிகம் தெரிகிறது. அந்த பார்வையின் அடிப்படையிலான முன் முடிவுகள் ஒருவருக்கு இருக்க வேண்டிய வரலாற்று உணர்வையும் பார்வையையும் மொத்தமாக அழித்து மொத்த வரலாறும் தங்களுக்கு எதிராக செய்யப்பட்ட சதி அல்லது வரலாற்றுப் பெருமிதங்கள் அத்தனையும் தங்களுக்கே சொந்தமானவை என்ற எல்லைக்கு கொண்டு சென்று நிறுத்துகிறது. வரலாற்றின் மீது அத்தகைய முன் முடிவுகளுக்கு நம்மை இழுத்துச் செல்லும் முக்கியமான காரணி "நம்மவர்கள்" என எண்ணும் ஆளுமைகள் குறித்தப் பெருமிதமும் "அயலவர்கள்" என எண்ணும் ஆளுமைகள் மீதான வெறுப்புமே ஆகும். பெருமிதம் ஆளுமைகளை புனிதர்களாக மாசற்றவர்களாக கட்டமைக்கிறது. வெறுப்பு ஆளுமைகளை அயோக்கியர்களாக கேடு நிறைந்தவர்களாக சித்தரிக்கிறது.
பெரும்பாலும் இத்தகைய முன் முடிவுகளுக்கு நம்மை இழுத்துச் செல்பவை கட்சி,மதம் போன்ற நிறுவனங்களே. நிறுவனங்களுக்கு தேவனையும் சாத்தானையும் உருவாக்க வேண்டிய கட்டாயம் எப்போதும் உண்டு. அத்தகைய முன் முடிவுகளின் ஒரு பக்கச் சார்பை உணர்ந்த யாரும் நிறுத்தப்படுவது ஒரு வரலாறற்ற வெட்ட வெளியில் தான். அங்கே போற்றவும் தூற்றவும் பெரும்பாலும் ஆட்கள் கிடைக்காமல் போகிறது. ஆகவே உடனடியாக வரலாற்ற மனிதர்களாக மாறிப் போகிறோம். வரலாறு என்றாலே மன்னர் காலமும் அரியணையும் போரும் அரண்மணைகளும் அந்தப்புரங்களும் மட்டுமே நினைவுக்கு வருகின்றன. நவீன வரலாற்றை நெருங்கிப் பார்க்க ஒவ்வாமையும் சோர்வும் ஏற்படுகிறது. அங்கு சதிகளும் வசைகளும் மட்டுமே இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து நிற்கிறோம். இந்த வெட்ட வெளியைக் கடந்து நவீன வரலாற்றை குறிப்பாக நவீன இந்தியாவின் வரலாற்றை உருவாக்கிய மனிதர்களை அவர்களின் சொற்கள் வழியாகவே தரிசிக்க வைக்கிறது குஹாவின் இந்த நூல்.


வரலாற்றை எழுதிக் கொள்ளுதல்
ஆங்கில இந்து நாளிதழின் கட்டுரைகள் வழியாகவே குஹாவின் எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கினேன். அதன்பின் பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும் அவருடைய பிரபலமான நூலான "காந்திக்குப் பின் இந்திய வரலாறு" என்ற நூலை அண்ணனின் நண்பரனான லட்சுமணனின் வழியாக வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையில் குஹாவின் கட்டுரைகள் தமிழ் இந்துவில் மொழிபெயர்க்கப்பட்டு அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன. மிகுந்த உற்சாகத்துடன் "காந்திக்குப் பின் இந்திய வரலாறு" என்ற நூலை வாசிக்கத் தொடங்கினேன். ஏனோ இருநூறு பக்கங்களுக்கு மேல் அந்த நூலை தொடர முடியவில்லை. ஒரு முட்டுக்கட்டை இருந்தபடியே இருந்தது. ஆனால் சமகால வரலாற்றை வெறும் சம்பவங்களாக நிகழ்ச்சிகளாக வெற்றிகளாக தோல்விகளாக அல்லமால் வரலாறாக மாற்றி பதிவு செய்து பார்க்கும் ஒரு பாங்கு அந்த நூலில் இருப்பதை உணர முடிந்தது. குஹாவின் கட்டுரைகளிலும் அத்தகைய நிதானம் வெளிப்படும்.
விஷ்ணுபுரம் விருது விழாவில் சந்தித்த நண்பர் பிரகாஷ் அலைபேசயில் உரையாடிய இரண்டு முறையும் நவீன இந்தியாவின் சிற்பிகள் நூல் குறித்து குறிப்பிட்டார். குஹாவைப் படிக்கும் ஆர்வமும் இருந்ததால் இந்நூலை நியூஸ்ஹண்ட்டில் தரவிறக்கினேன். அச்சிடப்பட்ட நூலை விட விலை குறைவு. என்ன அலைபேசியில் படிப்பதால் சற்று தலைவலியை பொறுத்துக் கொள்ள வேண்டும். முதல் பக்கதிலேயே தொகுப்பாசிரியர் என்ற வாக்கியம் சற்றே மனச்சோர்வை அளித்தது. குஹா இந்நூலை தொகுக்கவே செய்திருக்கிறார். நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பத்தொன்பது ஆளுமைகளின் உரைகள் கட்டுரைகள் பதில்கள் பேட்டிகள் என விரிந்து பரவும் இந்நூலிற்கு தன்னை தொகுப்பாசிரியர் என்று மட்டுமே சொல்லிக் கொள்வது ஆசிரியரின் தன்னடக்கம் மட்டுமே.
ஒரு பரந்த நோக்கில் நன்மை தீமைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் சுதந்திர போராட்டமும் சுதந்திரப் போராட்டத்துடன் ஊடாடியும் விலகியும் நடைபெற்ற சமூக சீர்திருத்த நடவடிக்கைகளும் சமய மற்றும் சமூக மறுமலர்ச்சி நடவடிக்கைகளும் ஒற்றைப் பெருஞ்செயல் என்று சொல்லி விட முடியும். ஆங்கிலமும் ஐரோப்பிய வாழ்வு முறையும் இந்தியாவுக்கு கொண்டு வந்தவைகளும் இந்தியா கொண்டு வரப்பட்டவற்றுடன் நிகழ்த்திய உரையாடல்களும் ஏற்புகளும் மறுப்புகளும் அடங்கிய கால கட்டமாக ஏற்கப்படக்கூடியது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தது இந்திய சுதந்திரம் ஸ்திரத்தன்மை அடைந்த சுதந்திர இந்தியாவின் முதல் இருபது வருடங்கள் வரை நீளும் காலகட்டம். நூற்றைம்பது வருடங்களைத் தாண்டும் இந்த காலகட்டத்தை ஒரு வரலாற்று காலமாக கண் முன் கொண்டு வருகிறது இந்நூல். கொள்கை சார்புடைய யாருக்கேனும் நவீன இந்தியாவின் சிற்பிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர் மீதேனும் கசப்பு இருக்கவே செய்யும். இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சிற்பிகளில் ஒருவர் கூட கடந்த இரு பதிற்றாண்டுகளில் உயிருடன் இருக்கவில்லை. இறந்து இருபது வருடம் ஆகிய ஒருவர் மேல் காழ்ப்புடன் இருக்கும் ஒருவர் இந்நூலை அல்ல எந்த நூலையுமே வாசிக்க உகந்தவர் அல்ல என்பது என் எண்ணம். ஆகவே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்நூலின் பன்முகத் தன்மையை ஏற்று உள் நுழைவதே சிறந்தாக இருக்க முடியும்.
நூல் அமைப்பு
"மெல்லத் திறக்கும் இந்திய மனது." பலமுறை பரவசத்துடன எண்ணிக் கொள்ள வைத்த முதல் பகுதியின் தலைப்பு இது. இப்பகுதியுடன் சீர்திருத்தவாதிகளும் புரட்சியாளர்களும், தேசத்தை வளர்த்தெடுத்தல்,ஜனநாயகம்:விவாதமும் விளக்கமும்,வலுவாக்கப்பட்ட பாரம்பரியம் என ஐந்து பகுதிகளைக் கொண்ட நூல். இந்த ஐந்து பகுதிகளையும் ஊடாடித் தழுவும் ஐந்து புரட்சிகள் இந்தியாவில் ஒரே சமயம் நிகழ்ந்ததாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். தொழில் புரட்சி,நகர்ப்புற புரட்சி, ஜனநாயகப்புரட்சி, சமூகநீதிக்கான புரட்சி, தேசியப்புரட்சி என அவற்றை வர்ணிக்கும் ஆசிரியர் அவை  முன்னெடுக்கப்பட்டதற்கு பல்வேறு வகையில் முக்கிய காரணமாய் விளங்கியவர்களை நவீன இந்தியாவின் சிற்பிகள் என வர்ணித்து அவர்களின் குறிப்பிடத் தகுந்த உரைகளையும் சில நேரங்களில் கவனிக்கப்படாமல் விடப்பட்ட கட்டுரைகள் மற்றும் உரைகளையும் தொகுத்தளிக்கிறார். மேலும் மற்ற நாட்டு தலைவர்களுக்கும் இந்திய சிற்பிகளுக்கும் உள்ள மூன்று வேறுபாடுகளை தெளிவாக சுட்டுகிறார்.
முதலில் சிந்தனையாளர் மற்றும் செயல்வீரர் என இரண்டுமாக ஒரே நேரத்தில் விளங்கிய இந்தியத் தலைவர்கள். காந்தி-நேரு-அம்பேத்கர் என மூவருமே ஒரே நேரத்தில் சிறந்த சிந்தனையாளர்களாகவும் அரசியல் தலைவர்களாகவும் விளங்கினர் என்பது அனைவரும் அறிந்ததே.
இரண்டாவதாக கருத்தியல் தளத்தில் இவர்களின் நீண்ட கால தாக்கம். ரஷ்யா ஸ்டாலினையும் சீனா மாவோவையும் ஜெர்மனி ஹிட்லரையும் இங்கிலாந்து சர்ச்சிலையும் நினைவில் வைத்திருக்கும் காலத்தை விட இவர்களின் நினைவு இந்தியாவில் நீண்ட காலம் தொடர்கிறது.
மூன்றாவதாக இந்த சிற்பிகளுக்கு இடையேயான வேறுபாடு. கிராமப் பொருளாதாரம் குறித்து நேருவுக்கும் அம்பேத்கருக்கும் இருந்த கருத்துடன் காந்தி முரண்படுவார். தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து ஏறத்தாழ இந்த மூன்று பேருக்குமே ஆளுக்கொரு நிலைப்பாடு இருந்தது. நவீனக்கல்வி, பெண்கள் முன்னேற்றம் என அனைத்திலும் நுட்பமான வேறுபாடு கொண்டவர்களாகவே இவர்கள் இருந்து வந்திருக்கின்றனர். இந்த வேறுபாடுகள் இந்தியாவிற்கே உரிய சிறப்பம்சம் ஆகும்.
பரவலாக அறியப்பட்ட காலத்தில் முற்பட்டவரான ராம் மோகன் ராய் தொடங்கி சமீப காலத்தவரும் பரவலாக அறியப்படாதவருமான ஹமீத் தல்வாய் வரை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. வெரியர் எல்வின் ஹமீத் தல்வாய் போன்ற இருபதாம் நூற்றாண்டின் மனிதர்கள் அறியப்படாமல் விடுபட்டிருப்பதை ஒரு குறையுடன் எண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் சுபாஷ் சந்திர போஸ் வல்லபாய் பட்டேல் போன்ற அரசியல் தலைவர்களும் அயோத்திதாசர் நாராயண குரு போன்ற சிந்தனையாளர்களும் இப்பட்டியலில் சேர்க்கப்படாததற்கான காரணங்களையும் இந்நூல் குறிப்பிடுகிறது.
நூலின் ஒழுக்கு
மெல்லத் திறக்கும் இந்திய மனது என்பதை ஐரோப்பாவின் தொழிற்புரட்சியையும் ஜனநாயகப் புரட்சியையும் இந்தியா எதிர் கொள்ளத் தயாரானதை குறிப்பிடும் குறியீட்டுச் சொல்லாக எடுத்துக் கொள்ள முடியும். சதி ஒழிப்பு தொடங்கி பிரம்ம சமாஜத்தின் தோற்றம் வரை நவீன ஐரோப்பிய சிந்தனைகளுடன் உரையாடுவதற்கு இந்தியா தனக்கான களத்தை அமைக்கத் தொடங்கிய காலகட்டம் எனக் குறிப்பிடலாம். தன்னுடைய வளமான பாரம்பரியத்தையும் அதன் இருள்களையும் இந்தியா ஒரு பொது அரங்கில் பரிசோதிக்கத் தயாரானது. அம்மாற்றத்தின் தொடக்கப்புள்ளியான ராம்மோகன் ராயை மட்டும் அறிமுகம் செய்கிறது இந்தப் பகுதி. ஒவ்வொரு சிற்பி அறிமுகம் செய்யப்படும் போதும் அவர்களுக்கான முன் குறிப்பு ஒன்றை ஆசிரியர் அளிக்கிறார். அதனுடன் அவர்களுடைய உரைகளும் சேர்ந்து துலக்கம் பெறுகின்றன.
இன்றளவும் இந்தியாவில் பெரும் சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் தெளிவுகளையும் கோரி நிற்கும் சில துறைகள் உண்டு. சிறுபான்மையினர் நலன், தாழ்த்தப்பட்டோர் நலன், பெண்கள் நலன் போன்ற துறைகளில் தேவைப்படும் அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கான அடிக்கோடிட்டவர்களாக முறையே சையது அகமது கான், ஜோதிராவ் பூலே, தாராபாய் ஷிண்டே ஆகியோரை சீர்திருத்தவாதிகளும் புரட்சியாளர்களும் என்ற இரண்டாம் பகுதி எடுத்து விளக்குகிறது. தேசிய உணர்வை ஊட்டுவதில் தீவிரம் காட்டிய திலகரும் காங்கிரஸில் மிதவாதியாக அறியப்பட்ட சீர்திருத்தவாதியுமான கோகலேயும் இப்பகுதியில் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.
அடுத்த பகுதியான தேசத்தை வளர்த்தெடுத்தலில் ஒரு வகையில் இரண்டாம் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டவர்களின் சிந்தனைகள் பல்வேறு வகையில் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதை அச்சிந்தனை போக்குகளில் இருந்த உள் முரண்கள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை காண்பிக்கிறது. காந்தி, தாகூர்,அம்பேத்கர் ஈ.வே.ரா, ஜின்னா என பரவலாக அறியப்பட்ட பெருந்தலைவர்களே இப்பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். தாராபாய் ஷிண்டே போல் அல்லதா நடைமுறைப் பெண்ணியவாதியான கமலாதேவி சட்டோபாத்யாய மட்டுமே அவ்வளவாக அறியப்படாத சிற்பி. இந்திய சுதந்திர காலகட்டத்தை ஒட்டி இத்தலைவர்களின் கருத்துகளும் சிந்தனைகளும் அமைந்துள்ளன. சாதியை அழித்தொழிப்பதற்கான வழி என்ற அம்பேத்கர் உரையின் சுருக்கமும் ஒத்துழையாமை இயக்கம் குறித்த தாகூரின் ஐயமும் பாகிஸ்தான் கோரிக்கைக்கான ஜின்னாவின் நியாயங்களும் அவர்களின் சொற்கள் வழியே வெளிப்படுகின்றன. மேலும் இந்த மூன்று பேருமே காந்தியின் சிந்தனைகளையும் கொள்கைகளையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். காந்தியும் இவர்களின் சிந்தனையால் பாதிக்கப்படவே செய்கிறார். தாகூரின் ஐயப்பாட்டுக்கும் அம்பேத்கரின் கேள்விகளுக்கும் ஜின்னாவின் கொள்கைகளுக்கும் தனக்கான நிலைப்பாட்டை காந்தி தெரிவிப்பதாக மூன்றாம் பகுதியின் இறுதி அத்தியாயங்கள் அமைந்துள்ளன.
நான்காவது பகுதி ஜனநாயகம்: விவாதமும் விளக்கமும். மக்களாட்சி குறித்த விவாதங்களில் அம்பேத்கர் தவிர்க்க முடியாதவர் ஆகையால் இப்பகுதியிலும் அவர் இடம்பெறுகிறார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சில வருடங்கள் முன்பு தொடங்கி நவீன இந்திய உருவாக்கத்தின் காலமான நேருவின் ஆட்சி காலம் வரையும் அதை சற்று கடந்தும் இப்பகுதி நீண்டு செல்கிறது. இந்திர அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டபோது அம்பேத்கர் ஆற்றிய உரை மீண்டும் அவரை இப்பகுதியில் கொண்டு வந்து நுழைக்கிறது. பிரதமராக பொறுப்பேற்ற பிறகு நேரு முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதங்கள் வழியாக பன்னாட்டு தொடர்புகள் குறித்தும் சீனப் போர் குறித்தும் அவருடைய நிலைப்பாடுகள் வெளிப்படுகின்றன. இந்து தேசியவாதியான கோல்வால்க்கர் சோஷலிஸ்டுகளான ராம மனோகர் லோஹியா மற்றும் ஜெய்பிரகாஷ் நாராயண் ஆகியோர் காங்கிரஸுக்கும் நேருவுக்கும் எத்தகைய எதிர்ப்புகளை அறிவார்ந்த முறையில் அளித்தனர் என்பதை அவர்கள் ஆற்றிய உரைகளும் எழுதிய கடிதங்களும் சொல்கின்றன. ஆகவே மையக் கருத்தியலுக்கு எதிராக இயங்கிய இவர்களும் சந்தேகம் இல்லாமல் இந்தியாவின் சிந்தனைகளை வடிவமைத்தவர்களில் சேர்க்கப்பட வேண்டியவர்களே. காந்திய வழி சிந்தனையாளரும் தமிழரே ஆனாலும் பெரும்பாலான தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டவருமான ராஜகோபாலச்சாரியார் நேருவுடன் மட்டுமல்லாது ஒட்டுமொத்த அரசுக் கொள்கைகளுடனும் விவாதிக்கும் வலிமை பெற்றிருந்ததை அவருடைய கட்டுரைகளும் நூல்களும் விளக்குகின்றன. அதோடு அவருடைய பெரும்பாலான கொள்கைகள் நவீன இந்தியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை இப்போது உணர முடியும். காந்தியைப் போல எழுபது வயது கடந்தும் ராஜாஜியும் அயராது உழைத்திருக்கிறார் என விளங்குகிறது. இந்நூலின் ஒரு சிற்பி மட்டும் சற்றே வித்தியாசமானவர். அவர் இந்தியர் கிடையாது. மேலும் அவருடைய செயல்தளமும் மேற்சொன்ன யாருடனும் ஊடாடவில்லை. இந்திய மக்கள் தொகையில் எட்டு சதவீதம் மட்டுமே இருந்த பழங்குடிகளின் நலனுக்காக பாடுபட்டு இருக்கிறார் வெரியர் எல்வின்.கிறிஸ்துவ மத போதகரான அவர் பழங்குடிகளிடம் சென்று பின் மதத்தை உதறி அவர்களுடன் இணைந்து அவர்களுக்காக போராடி இருக்கிறார். இந்திய அரசிலும் முக்கிய பங்காற்றி இருக்கிறார். அவர் எழுதிய நூலின் சில பகுதிகளும் சில கட்டுரைகளும் இந்நூலில் தரப்பட்டுள்ளனர்.
வலுவாக்கப்பட்ட பாரம்பரியம் என்ற ஐந்தாவது பகுதி ஒரு சிற்பியை அறிமுகம் செய்வதோடு முடிவுரையையும் கொண்டுள்ளது. ஹமீத் தல்வாய் என்று அறியப்படும் அந்த இஸ்லாமியரின் உரைகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான ஒரு எச்சரிக்கை குரலாக எழுபதுகளிலேயே ஒலித்துள்ளது. அக்குரலுக்கான தேவை இப்போது பெருகி இருப்பதையும் உணர முடிகிறது. இந்தியப் பெருஞ்சமூகத்துடன் சரியான குரலில் உரையாடும் ஒரு குரலாக அவரை எடுத்துக் கொண்டு அவரை வாசிக்க முனைவது நமக்கு பல நன்மைகளை அளிக்கும் என்றே எண்ணுகிறேன். வலுவாக்கப்பட்ட பாரம்பரியம் என்ற தலைப்பும்
மகிழ்ச்சியை அளிக்கிறது. பாரம்பரியம் நீண்ட நாள் செயல்பாடுகளில் இருந்து உருவாகி வருவது. சுதந்திர இந்தியாவின் ஆட்சிமுறை ஜனநாயகம் என வகுத்த போது அதை எள்ளி நகையாடியவர்களும் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா அழிந்து போகும் என்று ஆருடம் சொன்னவர்களுமே அதிகம். மேலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு முன்பே வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்துவிட்டது. அந்த தைரியமான முடிவின் அடிப்படையில் தான் நவீன இந்தியா கட்டமைக்கப்பட்டது. சீன மற்றும் பாகிஸ்தான் போர்கள் அதன் பொருளாதாரத்தை பாதித்தாலும் இந்தியா தன்னை மீண்டும் கட்டிக் கொண்டது. ஆகவே இங்கு பாரம்பரியம் எனக்குறிப்பிடப்படுவது ஜனநாயகமே. அது வலுவடைந்திருப்பதும் உண்மை.
முடிவும் எச்சரிக்கையும்
கடந்து போன "பொற்கால கனவுகளின்" வழியாக நிகழ்காலத்தை குறை சொல்லும் நோக்கத்துடன் இந்நூல் எழுதப்பட்டிருக்கவில்லை. இன்றைய அரசியலு களத்திலும் சமூகக் களத்திலும் செயல்படும் ஒருவருக்கு இத்தகைய ஆழமான பார்வைகள் இருக்குமா என்பது சந்தேகமே. அதுவும் அரசியல் தளத்தில் லாப நஷ்டங்களைக் கடந்து அடிப்படைகளை விவாதிக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள் ஏறத்தாழ இல்லையென்றே சொல்லிவிடலாம். மக்களை நேரடியாக கை நீட்டி கேள்வி கேட்கும் நேர்மையும் சமூகத்துக்கு பிடித்ததை அல்லாமல் உகந்ததை செய்யும் தைரியமும் இன்றைய அரசியலில் எதிர்பார்க்க முடியாத செயல்கள்.
உலகம் பனிப்போர்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் பற்றி பேசிக் கொண்டிருந்த நிலையில் இருந்து இந்திய ஜனநாயகம் உலகுக்கு அளித்ததை பேசத் தவறிவிட்டது. அத்தகையதொரு உலகளாவிய விவாதத்திற்கு அழைப்பு விடுப்பதை தன்னுடைய ஒரு குறிக்கோளாக கொண்டுள்ளது இந்நூல். மற்றொரு குறிக்கோள் சற்றே மனம் சுருங்கச் செய்தாலும் அது உண்மையே. இந்தியர்களின் சிந்தனைகளை கட்டமைத்தவர்களை இந்தியர்களுக்கே அறிமுகம் செய்கிறது இந்த புத்தகம். எந்த துறையில் மாற்றத்தை விரும்பும் விளைவிக்க நினைக்கும் இந்தியரும் தனக்கான பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கான கச்சாப் பொருட்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சிற்பிகளிடமே உள்ளன.
அரசியல் தன்னை முழுக்கவும் அறிவுச் செயல்பாட்டில் இருந்தும் ஆரோக்கியமான முன்னேற்றங்களில் இருந்தும் விடுவித்துக் கொண்ட நிலையிலேயே மூன்று பதிற்றாண்டுகளாக நீடிக்கிறது. ஆகவே அத்தளத்தில் அன்றி சிந்தனை தளத்தில் நிகழ வேண்டிய மாற்றங்களுக்கென அறைகூவுகிறது இந்நூல். மேலும் எதிர்காலம் அரசியலாளர்களிடம் இல்லை சிந்தனையாளர்களிடமே என்ற செய்தியையும் ஆழமாகப் பதிவு செய்து செல்கிறது.

1 comment:

  1. A good short essay regarding some topics normally give a wholesome details of any particular things which we ALWAYS like to know in brief.this is one such work of SURESH .... good. Continue this work....

    ReplyDelete