Tuesday 24 July 2018

நதிக்கரை சிறுகதை விவாத நிகழ்வு - கதிரேசன்

நதிக்கரை இலக்கிய வட்டத்தின் ஒரு சிறப்பு கூட்டம் இன்று திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறுகதை வடிவம், சிறுகதைக்கான தோற்றம், ஆரம்ப கால சிறுகதைகள், நவீனத்துவ பின்நவீனத்துவ சிறுகதைகள், அதன் போக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழில் பாரதி தொடங்கி தற்கால இளம் எழுத்தாளர்கள் சிறுகதைகள் வரை பேசப்பட்டன.சிறுகதையின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,வளர்ச்சி போக்குகள் என ஒரு ஒட்டு மொத்த சிறுகதைகள் குறித்த விவாதமாக  இக்கூட்டம் இருந்தது.

 எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் சிறுகதைகள் தோற்றம் குறித்தும் எட்கர் ஆலன்போ, ஓ ஹென்றி முதலான ஆரம்பகால எழுத்தாளர்கள் குறித்தும் மேலைநாடுகளில் பிரபுக்குடும்பங்களில் சிறுகதைகள் ஒரு கேளிக்கை நிகழ்வாக சொல்லப்பட்டது குறித்தும் சொன்னார். ஆசிரியன் கதை சொல்லும்போதே கேட்பவர்கள் கதையின் முடிவை தாங்களாகவே ஊகித்துக்கொண்டு கதையை பின்தொடர்வார்கள். கதை சொல்லியின் சவால் என்பது வாசகன் ஊகிக்கும் அத்தனை முடிவுகளையும் தாண்டி அவன் முற்றிலும் எதிர்பார்க்காத வேறொரு முடிவை சொல்வது. இப்பாணியே ஆரம்பகால சிறுகதைகளுள் பின்பற்றப்பட்டு பின் சிறுகதைகளுக்கு உரிய இலக்கணமாகிறது. (  இந்த இலக்கணத்தை மீறுபவர்கள் வரவேற்கப்பட்டார்கள் .ஆனால் அது வடிவம் குறித்த முழுமையான பிரக்ஞ்சையோடு மீறப்படவேண்டும் இல்லையேல் அபத்தமாகிவிடும்.)

 தமிழில் சிறுகதைக்கான முதல் சாத்தியக்கூறு உள்ள படைப்பு பாரதியின் படைப்புகளிலேயே தென்பட்டன. வ.வே.சு.அய்யரின் குளத்தங்கரை அரசமரம் மங்கையர்கரசியின் காதல் போன்றவை சிறுகதைக்கான வடிவ நேர்த்தி கொண்ட படைப்புகள்.  பாரதியின் சந்திரிகையின் கதை மற்றொரு உதாரணம் .அக்கதையில் பாரதி சந்திரிகையை தனக்கான லட்ட்சிய பெண்ணாக உருவகித்து தனக்கான கனவுகளை அவள் மூலமாக வெளிபடுத்துகிறது. ஆனால் நவீன இலக்கியம் மரபிலக்கியத்திலிருந்து வேறுபடும் புள்ளி என்பது சமூகம் மேல் அது வைக்கும் விமர்சனம் தான்.

மரபிலக்கியம் ஒரு வகையான லட்சியவாதத்தை முன்னிறுத்துகிறது. ஒரு வகையில் நீதிபோதனை மரபிலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வேறுபடும் புள்ளியை. இரு நாவல்கள் கொண்டு விளக்கலாம் ஒன்று விக்தர் ஹீயூகோவின் ஏழைபடும் பாடு மற்றொன்று டால்ஸ்டாயின் போரும் அமைதியும். விக்தர் ஹீயுகோ வின் ஏழைபடும்பாட்டில் இருக்கும் வடிவத் தெளிவு  போரும் அமைதியில் இருக்காது. அதில் வடிவத்தெளிவு மட்டுமல்ல கதையின் உள்ளடக்கம் என்பதுகூட ஒட்டுமொத்தமாக வேறானது.  பல்வேறு கதாபாத்திரங்களினூடே வேறுபட்ட கதைக்களத்திய ஒரே படைப்பில் பேசுவது.

உதாரணமாக வழக்காமான ஜீன் வால்ஜீன் எனும் குற்றவாளியின்   முழுபோராட்டாமே ஏழைபடும்பாடு நாவல் ஆனால் போரும் அமைதி என்பது அடிப்படையில் ஒரு கதாபாத்திரத்தையோ ஒரு கதை களத்தையோ பேசுவது அல்ல.அதில் ஆண்ட்ரூ, பீயர்,போரிஸ், நட்டாஷா, சோனியா என்ற புனைவுப்பாத்திரங்கக்ளையும், நெப்போலியன் ,சார் மன்னர் அலெக்சாண்டர், என வராலாற்றில் வாழ்ந்த நிஜ மனிதர்களையும் அவர்களின் வாழ்வையும் கதா பாத்திரமாகக் கொண்டது. ஏழைபடும்பாட்டில் இருக்கும் சீரான வடிவம் என்பது போரும் அமைதியில் இல்லை. இந்த வேறுபாடே நவீன இலக்கியத்திற்கும் அதற்கு முந்தைய  இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடு. 

தமிழில் பாரதியில் தொடங்கும் நவீன சிறுகதையின் வரலாறு தோராயமாக இருபது வருடங்களில் தனது உச்சத்தை அடைந்து விட்டது. அதைச் செய்தவர் புதுமைப்பித்தன் எனும் பிரம்மராட்ஸன்.மிகச்சிறந்த புதிய வடிவங்களை முயன்ற அனைத்து கதைகளுக்கும் புதுமைப்பித்தனே முன்னோடி படைப்பாளி. சிறுகதைக்கான அனைத்துவகையான சாத்தியங்களயும் அவர் தன் சிறுகதைகளில் முயன்றிருக்கிறார்.

அவரை பின் தொடர்ந்தவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.சுந்தராமசாமி, மற்றொருவர் அசோகமித்ரன். தமிழில்  சிறுகதையில் நவீனத்துவ முன்னோடிகள் என இவ்விருவரையும் குறிப்பிடாலம்

சுந்தராமசாமி புதுமைபித்தனை ஆதர்சமாக கொண்டு எழுதவந்தவர். ஆரம்பத்தில் முற்போக்கு சங்கத்தில் தீவிரமாக செயல்பட்டவராதலால் ,சுந்தராமசாமியால், நவீனத்துவத்தை தாண்டி யோசிக்க வில்லை ,சமூகம் மீதான விமர்சனத்தை தன் கதைகளில் புதுமைபித்தன் அளவிற்கு தூக்கி பிடித்தவர் சுந்தராமி, பொதுவாக நவீனத்துவ எழுத்தாளர்கள் குறைவாக எழுதுவார்கள் என்றால் எடுத்துக்காட்டு சுந்தரராமசாமி.

 லா ச ரா  மெளனி போன்ற படைபாளிகள் இவ்வலைக்கு வெளியே இருந்தவர்கள். மெளனியால் மிகக்குறைவாகவே எழுத முடிந்ததற்கு காரணம் அவரிடம் விரிவான பேசுபொருட்களை கையாளும் எத்தனம் இல்லை என்பதுதான்.

ஆரம்ப கால தமிழ் எழுத்தாளர்களுக்கு ரஷ்ய இலக்கியங்களே பெரும் ஆதர்சம். உதாரணம் பாரதி முதல் சுந்தராமசாமி வரை ஆனால் அசோகமித்திரன் ஐரோப்பிய இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதியவர் .அவருடைய தொடர்ச்சியோ அல்லது பின்விளைவாக சாருநிவேதிதா, எஸ் ராமகிருஷ்ணன் முதலானோர் இலத்தின் அமெரிக்க சிறுகதைகளை முன்னெடுத்தனர் இதுவே ஒட்டு மொத்தமாக தமிழ்சிறுகதைகளின் பொதுபோக்கு இதில் மெளனி, லா சா ரா, கோணங்கி போன்றவர்கள் இந்த அலைகளால் பாதிக்கப்படாமல் தன் போக்கில் எழுதிய நல்ல சிறுகதையாசிரியர்கள்.

தொன்னுறுகு பின்பு அல்லது இரண்டாயிரத்தின் துவக்கத்தில் தமிழில் மரபை, தொன்மங்களை, வரலாற்றை மறுஆக்கம் செய்யக்கூடிய நாவல்கள் சிறுகதைகள் வரத்தொடங்கின .தற்போதைய பொதுப்போக்கு என்பது மிகக்கறரான சொற்சிக்கனத்தோடு பேசுபொருளின் அனைத்து கோணங்களையும் விரித்தெழுவது. தமிழில் சுரேஷ் பிரதீப், அனோஜன் பாலகிருஷ்ணன், நவீன் முதலியவர்கள் இதற்கு உதாரனம்.

பொதுவாக புதிதாக ஒருவர் சிறுகதை எழுதமுயற்சிக்கும்போது கவனிக்கப்படவேண்டியவை.

சிறுகதை எழுதத்துவங்கும் போது கதையின் முடிவை அறிந்து கொண்டு எழுதக்கூடாது. எழுத்தாளன்  கதையின் முடிவை எழுதி கண்டு பிடித்தலே கதையின் சுவாரசியம்.

முடிந்த அளவிற்கு தேய்வழக்குகளை (கிளிஷே) தவிர்க்க வேண்டும். எ .கா என்று அவன் சொன்னான், போல

சிறுகதை ஒற்றை படிமத்தை (singular image) கொண்டிருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட படிமங்கள் கதை மையம் நோக்கி நகர்வதை தடுக்கும்.

ஒரு நல்ல சிறுகதையில் தேவையில்லாத ஒரு சொல் கூட இருக்காது. ஒரு வரியை நாம் தவறவிட்டால் கூட வாசிப்பின் சுவையை நாம் இழக்க நேரிடலாம்

ஒரு நல்ல சிறுகதையின் முடிவு என்பது ஒருபோதும் வாசகன் ஊகிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். அம்முடிவிலிருந்து நாம் செல்லும் தூரமும்(வாசக இடைவெளி) அதிகமாக இருக்கும். கதைக்குள் இருக்கும் கதை SUBTEXT என்று இதைகூறலாம்

சிறந்த கதை ஒருபோதும் ஒருபடைப்பை பின் பற்றும் போலச்செய்தல் போல் இல்லாமல் பிறிதொன்றில்லா தன்மை கொண்டதாக இருக்கும்.

வழக்கம்போல செறிவான நீர்த்துபோகாத விவாதம். சுரேஷ் பிரதீப்பின் நெறியாள்கை ,திரும்பும் போது நுலகத்திலிருந்து புத்தகம் என மகிழ்ச்சியான ஒரு நாளாக அமைந்தது.   

தமிழ் சிறுகதைகள் பற்றி சமீப்த்தில் வந்த புத்தகங்ககள்

 இலக்கிய முனோடி –ஜெயமோகன்

பழுப்பு நிற பக்கங்கள்-சாருநிவேதிதா

நூறு தமிழ் சிறுகதைள்_வீ அரசு

கதவிலாசம்-எஸ் ராமகிரிஸ்னன்

நவீன தமிழிலக்கிய அறிமுகம்-ஜெயமோகன்

எழுதும் கலை-ஜெயமோகன்

குறிப்பு

இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள பெரும்பாலான கருத்துக்கள் ஜெயமோகனின் நவீன தமிழிலக்கிய அறிமுகம், எழுதும் கலை ஆகிய நூல்களில் காணப்படுகிறது.

No comments:

Post a Comment