பெருஞ்சுழி 45

சுனதபாங்கத்தின்  வடக்கெல்லை கடலை சந்திக்கும்  துவாரத்தில்  விரைந்து கொண்டிருந்தார் கணபாரர். வன்தோளனின்  விரைவு  சவில்யத்தின்  வீரர்களை  வியந்து நிற்க வைத்தது. நேர் போரில்  அவனே பங்கு பெறுவான் என ஆதிரை எதிர்பார்த்திருக்கவில்லை. புகிந்தத்தில்  இருந்து எட்டு காத தூரத்தில்  வன்தோளனின்  படைகள்  நிலைகொண்டன. பொட்டல் வெளியாக கிடந்த வறண்ட  நிலங்களில் வீரர்கள்  கூடாரம்  அமைக்கத் தொடங்கினர். சவில்யத்தில்  சுனதபாங்கத்தின்  படை நிலை கொண்டது வீரர்களை  சோர்வுறச் செய்தது. ஒரே நாளில்  வெகு தூரம்  பின்னே சென்று விட்ட எண்ணம்  ஒவ்வொரு  வீரனின்  நெஞ்சிலும்  உதித்தது.
கணபாரர்  கடல் வழியே சவில்யத்தின்  தலைநகரை நோக்கிச்  சென்றார். அங்கிருந்து அவரும் புகிந்தம்  நோக்கி நகர்ந்தார். ஆதிரை புகிந்தத்தில்  இருந்து கிளம்பியிருந்தாள். கணபாரர்  ஆதிரையுடன் இணைந்து கொள்ளும்  செய்தியறிந்த பின்னர்  சவில்யத்தின்  வீரர்கள்  சற்றே நிம்மதி  அடைந்தனர். வன்தோளன்  அந்நிம்மதியை நீடிக்கவிடவில்லை.
இரவிலும் யுத்தத்தை தொடர்ந்தான்.
"நேர் போர் தொடங்குவதற்கு முன் நம் வீரர்களிடம்  உள்ளார்ந்த அவநம்பிக்கையை விதைக்கவே வன்தோளன்  இப்போர் முறையை கையாள்கிறான். விடிவதற்குள் அவர்கள்  அமைத்திருக்கும் தடமின்றி நூறு கூடாரங்களும் அழிக்கப்பட்டாக வேண்டும்  கணரே. இல்லையேல்  நாம் தோற்பது உறுதி" என குதிரையில்  பயணித்தவாறே சொல்லிக்  கொண்டிருந்தாள் ஆதிரை. தீவிரமான  இக்கட்டுகளில் அவளிடம்  கூடும் நிதானம்  கண்டு வியந்தார் கணபாரர்.
"ஆனால்  அவனும்  அதையே எதிர்பார்த்திருப்பான் ஆதிரை. மேலும்  அந்தக் கூடாரங்கள்  அழிக்கப்படுவது நம் வீரர்களை  மீட்டாலும் அவர்களிடம் எச்சோர்வையும் ஏற்படுத்தாது. இந்நேரத்தில் நீ விகந்தரிடம் பேசுவதே முறை. மதீமத்தின்  வழியாக  உன்னை நான்  சுனதபாங்கத்திற்கு அனுப்புகிறேன். நீ அவருடன் உரையாடு. இது வன்தோளன்  முன்னெடுத்த போர். சுனதபாங்கத்தின்  படைகள்  இறங்காவிடில் ஆநிலவாயிலும்  மிதஞ்சிகமும் தானே பின் வாங்கும்" என்றார்  கணபாரர்.
"நான்  சுனதபாங்கம் செல்கிறேன்  கணரே. இப்போரை தொடங்கியது  அவன். இதனை நிறுத்த நமக்கு உரிமை  உண்டு. ஆனால்  கூடாரங்கள்  இன்றிரவே அழிக்கப்பட வேண்டும்  என்பதில்  எந்த மாற்றமும்  இல்லை. நம்முடைய  எறிவிசைப் பொறிகளை எல்லைகளிலும்  தயாராக  நிறுத்துங்கள். வன்தோளனின்  வீரர்களில் ஒருவன் கூட கொல்லப்பட கூடாது" என்றவளின் எண்ணத்தை கணபாரர்  உணர்ந்த போது அவர் உடல் மெல்லிய  சிலிர்ப்பினை அடைந்தது. ஆதிரையை வணிகப் படகுகளில்  ஏற்றி சுனதபாங்கம்  அனுப்பி வைத்த பின் கணபாரர் வன்தோளனின்  படைகள்  கூடாரம்  அமைத்திருந்த இடம்  நோக்கிச் சென்றார். கூடாரத்தை நெருங்கும்  சவில்யத்தின்  வீரர்களை  வீழ்த்திய பின் ஆயுதங்களை தங்களுடன் எடுத்துச் சென்றிருந்தனர். வன்தோளன்  அக்களத்தில்  இல்லையென கணபாரர்  உணர்ந்திருந்தார். அங்கிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திய பின் அவன் கூட்டு நாடுகளின்  படைகளுடன்  சேர்ந்து கொள்ள சென்றிருப்பான் என இரு நாழிகைகள் அவ்விடத்தை கவனித்ததும் உய்த்துணர்ந்து கொண்டார். உடன்வந்த வீரர்களிடம் தாழ்ந்த குரலில்  உத்தரவுகளை பிறப்பித்த பின் கூடாரங்களுக்கு தண்ணீர்  கொண்டு செல்பவர்கள்  சிலரை வீழ்த்தி கணபாரரும் ஓரிரு வீரர்களும் ஒரு சில கூடாரங்களில்  நுழைந்தனர். பொழுது முழுமையாக  புலர்ந்து விடவில்லை. எனவே ஒரு கூடாரத்தின் உச்சியில்  சவில்யத்தின்  கரும்பன்றி கொடி ஏறுவதை அவர்கள்  கவனிக்கவில்லை. ஒவ்வொரு  கூடாரமாக கரும்பன்றிக் கொடி ஏறிக் கொண்டிருந்தது.
தலைநகரிலிருந்தும் புகிந்தத்தில்  இருந்தும்  படைகள்  வந்தவண்ணம் இருந்தன. வன்தோளனின் வீரர்கள் கூடாரம்  அமைத்த இடம் எரிந்து கொண்டிருந்தது. கணபாரர்  படை நிலைகள்  ஒருங்கியதும் எதிர்தேச படைகளுக்கு  தூதனுப்பினார். எதிர்பார்த்தது போலவே அத்தூது நிராகரிக்கப்பட்டது. சுனதபாங்கத்தில் இருந்து செய்தி வருமென கணபாரர்  எதிர்பார்த்திருந்தார். போர் தொடங்குவதற்கு  ஒரு நாழிகைக்கு முன் ஆதிரை போர்க்களம்  அடைந்தாள். அவள் தேர்தட்டில் அரிமாதரன்  ஆர்வம் மின்னும்  விழிகளுடன் எட்டிப் பார்த்துக்  கொண்டிருந்தான்.
நெய்யூற்றப்பட்ட வீரர்கள்  எறிபொறிகளில் எழுந்த போது அவற்றின்  உயரம் காரணமாக வீரர்களின் அலறல்  எதிர் நின்றிருந்த முக்கூட்டு நாடுகளின்  படைகளில் எதிரொலித்தது. வீரர்களின்  கண்களில்  அச்சம்  பரவுவதை வன்தோளனும் காமிலரும்  உணர்ந்தனர். உயரமான தேக்கு மரங்களைக் கொண்டு செய்யப்பட்டிருந்த எறிபொறிகளின் முனைகளில்  பெருங்கற்களையும் தீக்குண்டுகளையும் வைத்தெறிவது வழக்கம். ஆனால்  அவற்றின்  முனைகளில் முந்தைய  தினம்  சவில்யத்தின்  படைகளை சிதறடித்த படைவீரர்கள்  பொருத்தப்பட்டிருந்தனர். சுனதபாங்கத்தின்  படைகள்  பார்த்திருக்கவே எறிபொறிகள் மீண்டும்  பின்னே சென்றன. மன்றாட்டுகளையும் கதறல்களையும் நெஞ்சின் ஆழத்தில்  ஒவ்வொரு  வீரர்களும் கேட்டனர். "வேண்டாம்  விட்டுவிடுங்கள்  எங்கள்  மனைவியர் மீதும்  குழந்தைகள்  மீதும்  கருணை காட்டுங்கள்  இறுதியாக  ஒருமுறை என் மனைவியை பார்த்து விடுகிறேன்  காலம் முழுதும்  உங்களுக்கு  அடிமை ஊழியம்  புரிகிறேன்" என எத்தனையோ மன்றாட்டுகள் வன்தோளனின்  செவிகளில்  நுழைந்தன. அவன் உடல்  கூசிச்  சிறுத்தது. 'மிருகங்கள்  உயிரன்றி ஒன்றைப் பற்றியும்  எண்ணத் தெரியாத மிருகங்கள். தன்னுயிர்  காத்துக்  கொள்ள மனைவி என்கிறான்  குழந்தை என்கிறான். அன்பென தியாகமென இவர்களுள் நடிப்பது உயிரிச்சை மட்டுமே.மரணமின்றி வாழ வேண்டும்  என்ற இச்சையே இவர்களை செலுத்துகிறது. நடிகர்கள். அருவருப்பூட்டும்  நடிகர்கள். மனைவியும்  குழந்தையும்  இவர்களின்  பேரப் பொருள்  மட்டுமே. எறிபொறிகளின் கை மட்டுமே  அதை விடுவித்து இவர்களை கொல்லப் போகிறவர்கள்  என இவர்கள்  அறியவில்லை. விடுவிக்கும்  கைகளுக்கும் மனைவியும்  குழந்தையும்  இருக்குமென்ற நம்பிக்கையில்  கதறுகிறார்கள். இச்செயலுக்கு உத்தரவிட்டவளுக்கு மகவை பேரமென வைக்கும்  பழக்கம் இல்லையென இவர்கள்  அறியவில்லை. வீரர்களே! கெஞ்சாதீர்கள்! கூக்குரலிடாதீர்கள்! நேற்று  நீங்கள்  நிகழ்த்தியவற்றை மிச்சமில்லாமல் உங்கள்  குரல்  வழியே அவள் அழித்து துடைத்துக்  கொண்டிருக்கிறாள். அவளை நீங்கள்  வெற்றியடைய  வைக்கிறீர்கள்' என அவன் எண்ணிக் கொண்டிருக்கும்  போதே எறிவிசைகளிலிருந்து அலறியவண்ணம் வீரர்கள்  பறந்தனர். அவர்கள்  விடுபட்ட வேகத்தில்  ஒவ்வொருவரின் உடலையும்  எரியம்பு துளைத்தது. நெய்யூற்றப்பட்ட  உடல்  எரிந்தவாறே சுனதபாங்கத்தின்  வீரர்கள்  முன் வந்து விழுந்து தெறித்தது. நடுக்கத்துடன் வீரர்கள்  நோக்கி நிற்கவே மேலு‌ம்  மேலு‌ம்  எரியுடல்கள் வந்து குவிந்தன.
காமிலர்  அப்போது  தான்  கவனித்தார். வரிசையாக நின்ற எரிபொறிகளின் மையத்தில்  இருந்து  புணர்ந்தெழும் நாகங்கள்  என இரு எறிபொறிகள் எழுந்தன. படை நகர ஆணை பிறப்பிக்க வன்தோளன்  திரும்பிய போது காமிலர்  அவன் கரம் பற்றி தடுத்தார். சீற்றத்துடன்  திரும்பிய வன்தோளனிடம் எறிபொறிகளில்  விகந்தரும் அகல்யையும் பிணைக்கப்பட்டிருப்பதை காட்டினார் காமிலர்.

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024