நூல் மூன்று - வண்ணக்கடல்
நம் ஒவ்வொருரின் முடிவுகளின் மீதும் வரலாறு தனக்கான ஒரு முடிவினை கொண்டிருக்கும் போலும். ஆனால் வரலாறு என்பதென்ன? ஒரு சொல். அதன் மீது ஏற்றப்படும் அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. சிலவற்றை மறக்கிறோம். சிலவற்றை மறு கண்டுபிடிப்பு செய்கிறோம். அக்கணத்தில் வாழ்ந்து விடும் உரம் பெற்றவர்களால் சொல்லப்படும் வரலாறே வண்ணக்கடல். சூதர்களின் ஒளிமிக்க சொற்கள் வழியாக உயிர்பெற்று வருகின்றது ஒரு இந்திய சித்திரம். ஆரியவர்த்தம் என்றழைக்கப்பட்ட கங்கைக் கரையமைந்த நிலப்பகுதியின் அரசியல் களத்தினை இதற்கு முந்தைய நூலான மழைப்பாடல் அறிமுகம் செய்திருக்கும். அதிகாரத்திற்கே உரிய இறுக்கமும் தெளிவும் கொண்ட படைப்பது. அக்களம் தெளிவாக வரையப்பட்ட பின் களத்தில் நிற்கப் போகிறவர்களின் இளம் பருவத்தை விவரிக்கிறது வண்ணக்கடல்.
ஏழ்பனை நாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் மூதூர் மதுரையிலிருந்து அஸ்தினபுரி நோக்கி பயணிக்கிறான். இளநாகனாக நின்று இப்படைப்பை அணுகுவதே உகந்தது என்பது என் எண்ணம். முதல் முறை படித்தபோது பல இடங்களை கடக்க முடியாமல் இணைத்துக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டதற்கு இந்த முடிவினை எடுக்காததே காரணம் என நினைக்கிறேன். வரைமுறை அறியாத பரிசில் அளிக்கும் ஒரு நிலக்கிழாரை "வஞ்சமாக புகழ்ந்து" அதை அவர் அறிவதற்கு முன்னே அங்கிருந்து புறப்படுகிறான் இளநாகன். சொல்லினை மட்டும் துணையெனக் கொண்டு மதுரை முதூரை அடைகிறான். வடபுல சூதர்களையும் கூத்தர்களையும் சந்திப்பதன் வழியாக அஸ்தினபுரியின் சித்திரம் விரிகிறது.
சதசிருங்கத்திலிருந்து குந்தி பாண்டவர்களுடன் அஸ்தினபுரி மீள்கிறாள். பூச்சிகளால் ஆனதாக சகதேவனின் பாதையும் மரங்களால் ஆனதாக நகுலனின் பாதையும் பறவைகளால் ஆனதாக அர்ஜுனனின் பாதையும் மிருகங்களால் ஆனதாக பீமனின் பாதையும் சொற்களால் ஆனதாக தருமனின் பாதையும் விரிகையிலேயே அவர்களின் குணநலன்கள் முழுமையாக விரிந்து விடுகின்றன. பீமனும் துரியோதனனும் தங்கள் உடல் மூலமாகவே மற்றவரை கண்டு கொள்கின்றனர். ஆணவம் நிறைந்தவர்களின் பேரன்பு அவ்வாணவம் சீண்டப்படுகையில் எழும் பெருவஞ்சமுமாக பீமனின் மீதான துரியோதனனின் அன்பு உருமாற்றம் கொள்கிறது. இந்தியாவின் தத்துவ தரிசனங்களை அவற்றின் உச்ச நிலை விவாதங்களை சூதர்கள் வழியே அறிகிறான் இளநாகன். மனிதர்களின் முடிவுகளின் மேல் வரலாறும் தத்துவமும் குலமும் குடும்பமும் குருதியும் கொள்ளும் மேலாதிக்கம் திகைக்கச் செய்கிறது. சைலஜமித்ரரின் வழியாக சாங்கியத்தை அறிகிறான் இளநாகன். பாண்டவ கௌரவர்களின் சந்திப்பு அங்கே நிகழ்கிறது. கௌசிக குலத்து கூத்தரான காரகன் வாலியையும் சுக்ரீவனையும் கொண்டு நிகழ்த்தும் அங்கத நாடகம் நுண்மையான நகைச்சுவைகள் நிறைந்திருக்கிறது. அக்கதை வழியாகவே பீமதுரியோதனர்களின் நட்பு வெளிப்படுகிறது. தார்க்கிக மரபுக் கூத்தரான காரகரின் சொற்களின் வழியே சௌனகரின் விழிகளில் பாண்டவ கௌரவர்களுக்கு இடையேயான வஞ்சத்தின் முதல் துளி விழும் அத்தியாயம் பிழை நோக்கி நிற்கும் மனதை தட்டி எழுப்பி அமரச் செய்கிறது.
சிவயோக மரபினரின் சிலிர்ப்பும் அச்சமும் கொள்ள வைக்கும் வெறியாட்டினை கண்ட பின் கீகடரை சந்திக்கிறான் இளநாகன். அதற்குள் அவன் புகார் காஞ்சியின் வழியாக தமிழ்நிலத்தை கடந்து விடுகிறான். சென்னியம்மை அளித்த பழைய சோற்றை உண்டபின் வீரகுந்தலன் எனும் மன்னனிடம் கீகடர் உரைக்கும் பாடல் நகைப்பை வரவழைத்தாலும் அது வரலாற்றின் நோக்கிய சிரிப்பாகவே மாறி நிற்கிறது.
பிருகு பிராமணர்களுக்கும் யாதவ குலத்து ஹேகயர்களுக்குமான தலைமுறை பழி துரியோதனனின் வந்து முடிவடைவது போலத் தோன்றினாலும் அது துரோணர் வரைத் தொடர்கிறது. ஹ்ருதாஜி எனும் வேடர் குலப்பெண்ணில் பரத்வாஜ முனிவருக்கு பிறக்கிறான் துரோணன். அவனை வளர்க்கும் விடூகரால் அக்னிவேச குரு குலத்தில் சேர்கிறான். "வில் என்பது ஒரு புல்" என்பதில் தொடங்குகிறது அவன் அறிதல். தர்ப்பை அவனுடன் என்றும் இருக்கிறது. அவன் அடையாளமாக அவன் விடுதலையாக. புறக்கணிக்கப்படும் திறமையாளனுள் எழும் ஏளமும் கடுமையும் துரோணனில் கூடுகிறது. தனுர்வேத ஞானி சரத்வானின் மகள் கிருபியை மணந்து அமைகிறான். தன்னுள் காயத்ரி உச்சரிக்கும் பிராமணனை உதறாமல் அதே நேரம் ஷாத்ர குணத்தையும் இழக்க விரும்பால் துரோணருள் எழும் தத்தளிப்பே வஞ்சமாக அவருள் நிறைகிறது.
இந்திரவிழாவில் அர்ஜுனன் தன் தனிமையை உணர்கிறான். புகழும் மக்கள் திரளை கடந்து அத்தனை பேருக்குள்ளும் ஊறும் அவனை வென்று செல்லும் விழைவை காணும் போதே அவன் முதிர்ந்து விடுகிறான். நஞ்சூட்டப்பட்டு கங்கையில் எறியப்பட்டு பாதாளத்தின் கொடுநஞ்சை அருந்தி வெளிவரும் பீமனின் அத்தியாயம் அவனை வகுத்து விடுகிறது. காடுகளுக்குள் அலையும் கசப்பூறியவனாக அக்கசப்பினாலேயே பெரும் கருணை நிறைந்தவனாக மாறுகிறான். அடுமனையில் மந்தரரிடம் அவன் அர்ஜுனனை அமர வைத்து பாடம் கேட்கும் போது அவன் உள்ளம் வெளிப்படுகிறது.
இந்தியாவின் வணிக முறைகளையும் விரிவாக அறிமுகம் செய்கிறது நெற்குவை நகர் பகுதி. அர்க்கபுரியில் இளநாகன் சூரியனை அறிமுகம் செய்து கொள்வதோடு தொடங்குகிறது கர்ணனின் அத்தியாயம். மன்னனின் பாதுகைகளில வைத்து வழங்கப்படும் தங்க மோதிரத்தை ஏழைத்தாய் ஒருத்திக்கு அளிக்கிறான். இயற்கையின் பெரு நிகழ்வுகளை விண்ணக தேவர்களோடு ஒப்பிட்டு விரித்தெடுக்கப்படும் கதைகள் மேலும் துலக்கம் பெறுகின்றன. துருபதனால் அவமதிக்கப்பட்டு வெளியேறும் துரோணர் புல் மீது விழுகையில் குசையெனும் பேரன்னையின் உருவகம் அத்தகைய ஒன்று. அது போலவே சஹஸ்ரபாகுவான இருளுடன் கர்ணன் சண்டையிடுவதும் புலரியில் சூரியனை காண்பதும் விவரிக்கப்படுகிறது. அங்க மன்னனை எதிர்க்கும் இடத்தினில் பெரு வீரனாக வெளிப்பட்டு பீமன் உமிழும் போது குன்றிப் போகிறான். அர்ஜுனனை எதிர்க்கும் இடத்தினில் அவமானப்பட்டு வெளியேறும் கர்ணன் துரோணரில் வெளிப்படும் சீற்றம் வெவ்வேறு விதமாக பொருளளிக்கிறது.
"வில் என்பது ஒரு சொல்" என்பதில் தொடங்குகிறது அர்ஜுனனின் அறிதல்.அஸ்வத்தாமனுக்கும் அர்ஜுனனுக்குமான பகையை துரோணர் அஞ்சி அர்ஜுனனிடம் வாக்கு பெற்று அர்ஜுனனை முதல் மாணவனாக அறிவிக்கும் இடத்தில் அர்ஜுனன் வெறுமையையே உணர்கிறான். நிறைவற்ற பெரு வீரனுக்கான கீதை அப்போதே உருக்கொள்ளத் தொடங்கி விடுகிறது போலும்.
அருகநெறியினர் அறைசாலை அமைத்து சமணத்தின் முதல் ஐந்து படிவர்களை வழிபடும் சித்திரத்தையும் இளநாகன் காண்கிறான். ஆசுர நாடுகளை அடையும் போது ஒரு தலைகீழ் வரலாறு விரிகிறது. மாபலியும் இரண்யனினும் அணுக்கமாகின்றனர். இரண்யனுக்கும் பிரஹலாதனுக்குமான விவாதங்கள் ஜடவாதம் பிரம்மத்துடன் நிகழ்த்தும் விவாதமாக சித்தரிப்பது இன்றைய பொருள்முதல் வாத கருத்துமுதல் வாத சித்தாதங்களுடன் பொருந்துகிறது. அசுர குலத்தின் கதைகளுடன் அறிமுகமாகிறான் ஏகலவ்யன். துரோணர் அவனிடம் கட்டை விரலை கோரும் இடத்தினில் அவன் அன்னை சுவர்ணை கழுத்தறுத்து விழும் இடத்தில் மனம் திகைத்து நின்று விடுகிறது. ஏதாவது ஒரு வழியை கண்டறிந்து ஒழுகி விடத் துடிக்கும் நீரோடை போல மனம் யார் மீதாவது பழி சுமத்தி தப்பிக்க நினைக்கிறது. நான்கு விரல்களால் தன் குலத்தவர்க்கு அம்பெய்ய கற்றுக் கொடுக்கும் ஏகலவ்யனை எண்ணும் போது மனம் மெல்லிய அமைதியை உணர்கிறது.
இளநாகன் அஸ்தினபுரியை நெருங்க நெருங்க கதை நகர்வின் போக்கும் தெளிவடைந்தபடியே உள்ளது. அரங்கேற்ற நிகழ்வில் அர்ஜுனனை எதிர்க்கும் கர்ணனுக்கு மணிமுடி சூட்டப்படுவதோ வண்ணக்கடல் நிறைவுகிறது.
அசுரர்கள் குறித்தும் நிஷாதர்கள் குறித்தும் வண்ணக்கடல் அளிக்கும் சித்திரம் புதுமையானது. பெருவிழைவாலும் பெருஞ்சினத்தாலும் உந்தப்படுகிறவர்களாக விவரிக்கப்படும் அசுரர்கள் ஒரு குலம் என்பதைக் கடந்து அசுரனாக தன்னை உணர்வது வலிமையின் எல்லை என்ற எண்ணத்தையும் விதைக்கிறது.
வண்ணக்கடலின் தொடக்கம் முதலே தேர்ந்த நகையாடல்களும் அவற்றினூடாக கூரிய வினாக்களும் எழுந்தவண்ணமே உள்ளன. மொழியிலும் நுண்ணிய வேறுபாடுகள் தெரிகின்றன. மதுரை மூதூரின் மொழியும் கலிங்கத்தின் மொழியையும் ஒப்பு நோக்கும் போது தொடங்கிய இடத்திலிருந்து வெகுதூரம் கடந்து வந்துவிட்ட உணர்வேற்படுகிறது. தொன்மங்களும் தத்துவ விளக்கங்களும் மனித மனத்தோடு கொள்ளும் உறவுகளை உணர முடிகிறது. துரோணரின் வழியாக வெளிப்படும் தனுர்வேத சொற்களும் குதிரையேற்றத்தின் போதும் யானை ஏற்றத்தின் போதும் அவரின் வெளிப்பாடுகளும் தனியே எழுதப்பட்டு விவாதிக்கப்பட வேண்டியவை. புல்லின் தழல் என்ற குறு நாவலாக துரோணரின் அத்தியாயங்கள் மட்டும் தனித்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் மகாபாரதத்தை பொதுவாக அறிந்திருப்பதால் பின்வரும் நாட்களில் நடைபெற இருப்பவையோடு வண்ணக்கடல் கொண்டிருக்கும் தொடர்பினை உணர்ந்தறிய முடியும். அஸ்வத்தாமன் எனும் யானை அர்ஜுனனுள் விதைக்கும் அலைகழிப்பும் துருபதன் முன் துரோணர் வெகுண்டு நிற்பதும் அத்தகைய தருணங்கள். முழுக்கவே கலைஞர்களின் சொல்லில் நிற்பதால் வண்ணக்கடலின் வாசிப்பனுபவம் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. அதேநேரம் ஆழமான உள்ளோட்டங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் நுண்தகவல்களை மேலும் நெருங்க பாரதவர்ஷம் குறித்து மேலும் அறிய வேண்டும். மற்றொரு மறு வாசிப்பினை கோரும் நூலாக நிற்கிறது வண்ணக்கடல்.
Comments
Post a Comment