ஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுதாக்கிளவி - நினைவில் நிலைபெறும் வரலாறு (பகுதி - 1)





வரலாறு என்ற சொல்லின் வழியாக நம் நினைவுகளில் சில நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கின்றன. பெரும் போர்கள் சூறையாடல்கள் நிலம் கைப்பற்றல்கள் முக்கிய ஒப்பந்தங்கள் அந்நியப் படையெடுப்புகள் குறிப்பிட்ட இனக்குழுக்களின் எழுச்சிகள் வீழ்ச்சிகளாக நாம் வரலாற்றை நினைவு கூறுகிறோம். இந்த நினைவு கூறல் வழியாகத்தான் சமகால அரசியல் பிரக்ஞை கட்டமைக்கப்பட்டு அதிகாரத்திற்கான போட்டிகளில் பொருளாதார காரணிகளுக்கு சமமான ஒரு பேரப்பொருளாக இந்த வரலாற்றின் வழி கட்டமைக்கப்பட்ட அரசியல் பிரக்ஞை வந்து அமர்கிறது.
முக்கால் நூற்றாண்டாக ஜனநாயகத்துக்கு பழகிய மக்கள் நாம். ஜனநாயகம் கல்வியை தரப்படுத்தி மன ஒருமையை மனிதர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே சில பார்வை பேதங்களுடன் வரலாறு குறித்த நம்முடைய பார்வை ஏறத்தாழ ஒன்று போலவே இருக்கிறது. கல்வியில் அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்ததை விட இன்று எவ்வளவோ நாம் முன்னேறியிருந்தாலும் பொன்னியின் செல்வனை ரசித்து வாசிப்பதில் நமக்கு சிக்கலே இல்லை. நம்முடைய கல்வியும் அறிவும் அனுபவமும் ஏறத்தாழ ஐம்பதுகளில் வாழ்ந்த ஒரு தமிழ் வாத்தியாரின் குணநலன்களை பிரதிபலிக்கும் ராஜராஜ சோழனின் பாத்திர உருவகத்தை மறுக்கவோ குறைகூறவோ வைக்கவில்லை. வரலாறு குறித்து அறிவுப்பரப்பில் விவாதங்கள் நடந்தபடியே இருந்தாலும் அவை வெகுமக்கள் தளத்தில் பெரிதாக பரவவில்லை என்பதற்கு இதுவொரு சிறு உதாரணம்.

வரலாற்றைப் பிரக்ஞை என நாம் கொண்டிருப்பது எல்லாம் மேடைகளிலும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட ஒற்றை வரிகளையே. சற்றேனும் வரலாற்றை அறியப்புகும் ஒருவன் தமிழகத்தின் அரசியல் பிரக்ஞையை கட்டமைத்த குணாம்சங்களை முதல் படியிலேயே நிராகரித்து விடுவான். நம்முடைய வரலாற்றுப் பிரக்ஞை அவ்வளவு பலவீனமானதாக அவ்வளவு எளிமைப்படுத்தப்பட்டதாக உள்ளது. குடும்பம் பொருளியல் வாழ்வு முறை என பலவற்றிலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாம் பல மாற்றங்களை கண்டு வந்திருந்த போதிலும்  அரசியல் தளத்தில் பெரும் மாற்றங்களை சந்திக்காததற்கும் புதிய கருத்தாக்கங்கள் வலிமையோடு எழுந்து வராததற்கும் காரணம் நம்முடைய வரலாறு குறித்து அறியும் ஆர்வமின்மையும் கெட்டிப்பட்டு போன எளிய சூத்திரங்களை வரலாறென மயங்கி வசதியின் காரணமாக அத்தகைய எளிய சூத்திரங்களை அடுத்து வருகிறவர்களுக்கு கடத்துவதுமே ஆகும்.
சமூகம் இப்படி இறுகி நிலைத்து நிற்கும் சூழலில் ஜனநாயகம் நம்முடைய அதிகாரத்தை தேர்ந்தெடுக்கும் வழிமுறையாக மாறியிருக்கும் இன்றைய காலத்தில் கறாரான வரலாற்றுப் பார்வையை அதன்வழியாக சமகால சமூக அசைவியக்கங்கள் குறித்த தெளிவை அதன் வழியாக நேர்மையான அரசியல் பிரக்ஞையை மக்களிடம் உருவாக்குவது சிந்தனையாளின் சிந்தனையாளன் என்று தன்னை எண்ணிக் கொள்பவனின் இன்றியமையாத பொறுப்பாகிறது. ஸ்டாலின் ராஜாங்கம் "எழுதாக்கிளவி - வழிமறிக்கும் வரலாற்று அனுபவம்" என்ற தனது நூலின் வழியாக இப்பணியை மிகச்சிறப்பாக முன்னெடுத்திருக்கிறார்.

நூன்முகம்
பன்னிரெண்டு ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் "நினைவுகளில் நிலைபெறும் வரலாறு" என்ற முதல் பகுதியில் ஆறு கட்டுரைகளையும் "வாசிப்பில் வசப்படும் வரலாறு" என்ற இரண்டாம் பகுதியில் ஆறு கட்டுரைகளையும் கொண்டுள்ளது. ஸ்டாலின் தலித் கோட்பாட்டாளராகவும் செயற்பாட்டாளராகவும் அறியப்படுகிறவர். தலித்துகள் தங்களுக்கென தனித்த அரசியல் பிரக்ஞையை அடைய வேண்டுமென்பது இந்த நூலின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதைத்தாண்டி இந்நூல் பொது வாசிப்புத் தளத்திற்கும் பொதுச்சிந்தனைத் தளத்திற்கும் தன்னை நகர்த்திக் கொள்கிறது. அதற்கான காரணம் நூலின் பின்னிருந்து செயல்படும் சமநிலை கொண்ட பார்வையும் சார்புகளும் காழ்ப்புகளும் முன்முடிவுகளும் கலந்துவிடாத மிகக் கவனமான மொழிநடையுமே ஆகும்.

பொதுவாக கட்டுரை நூல்கள்(அல்லது அபுனைவுகள்) ஒரு "தரப்பு" எடுக்காமல் பேசுவது அரிது. புனைவுகள் போல தன்னிச்சையாக அடையப்படக்கூடிய இடங்கள் கட்டுரைகளுக்கு கிடையாது. அவை திட்டவட்டமான நோக்கும் "உடனடி சமூக சலனங்களை" எதிர்பார்க்கும் தன்மையும் கொண்டவை. இதன் காரணமாகவே கட்டுரையாளன் தன் தரப்பினை திடமாக நிறுவிக் கொள்ள வேண்டியிருக்கிறது. கட்டுரைகளில் "ஆய்வுத்தன்மை" அதிகரிக்கும் போது இந்த தரப்பெடுக்கும் பிரச்சினை வருவதில்லை. ஏனெனில் கட்டுரையாளன் தன் ஆய்வு முடிவுகளை முன் வைப்பவனாக மாறி விடுகிறான். ஆனால் ஆய்வின் செறிவு நிறைந்த மொழி அறிவுத்தளத்துக்குள் மட்டுமே உலவ முடிகிறது. அது மொத்த சமூகத்திற்குமானதாக மாறுவதில்லை. அபூர்வமாக சில நூல்கள் நூலாசிரியனின் சமூகப்பிரக்ஞை மற்றும் ஆய்வு நேர்மையின் காரணமாக இந்த எல்லைகளை கடந்து விடுகின்றன. எழுதாக்கிளவி அத்தகைய எல்லைகளைக் கடந்த அனைவருக்குமான நூல். ஒரே நேரத்தில் ஆய்வாளனின் தரவுகளோடும் அதேநேரம் சமூகத்தின் பொதுப்பிரக்ஞை எதிர்பார்க்கும் சமநிலையுடனும் ஸ்டாலின் ராஜாங்கம் நம்முடன் உரையாடுகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு ஆதங்கத்தில்  தற்செயலாக இப்படிச் சொன்னேன். "ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் விக்டோரிய பேரரசி இதே நாளில் எங்கிருந்தார் மதியம் உண்பதற்கு என்ன எடுத்துக் கொண்டார் என்ற தரவு கூட சரியாக பதியப்பட்டிருக்கும் அல்லவா?" என்று. சமூகங்கள் அதிகாரத்தில் நிலைபெற எழுத்துப்பூர்வமான ஆவணங்களும் அதையொட்டிய கதையாடல்களும் அவசியமாகின்றன. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த போது ஒன்றை கவனித்திருக்கிறேன். நண்பர்களின் பெற்றோர்கள் விடுதியறைக்கு நண்பர்களைப் பார்க்க வரும் போது அதிகாரம் மிக்க ஒரு நபரைச் சுட்டி "எனக்கு அவரைத் தெரியும்" என்று பெருமிதமாகச் சொல்வார்கள். இந்தக் குறிப்புக்கு பின்னிருக்கும் மனநிலை எளிதானது. அதிகாரத்துடன் நான் நெருங்கி இருக்கிறேன் என்பது இதன் அர்த்தம். அதிலும் குறிப்பாக மத்திய வயது கடந்த பெண்கள் இதை அதிகம் செய்வதைக் காண முடியும். அதிகாரத்தை ஒட்டிய ஒரு கதையாடலை உருவாக்கிக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள். தங்களுக்கென தனித்த கதையாடல்கள் அற்றவர்கள் சமூகத்தில் அதிகாரம் அற்றவர்களாக குரல் மழுங்கியவர்களாக உள்ளனர். எழுத்தில் பதிவு செய்யப்படாமல் விடுபட்டு வெவ்வேறு வகைகளில் மக்களால் நினைவுகூறப்படும் வரலாற்றை ஸ்டாலின் ராஜாங்கம் நம் முன் எடுத்து வைக்கிறார். இந்த நூலின் ஆதார நோக்கங்களில் மற்றொன்று இந்த நூல் அளவுக்கே தீவிரமும் ஆய்வு நோக்கும் கொண்ட "எழுதாக்கிளவிகள்" வரவேண்டுமென்பதே. சமூகத்தின் கதையாடல் ஒற்றைப்படையானதாக  சிலரை சிலாகிப்பதாக அல்லாமல் எல்லாத் தரப்புகளையும் கணக்கில் கொள்ளும் பல்பரிணாமம் கொண்டதாக உயிர்ப்பும் வளர்ச்சிக்கான தாகமும் கொண்டதாக மாற வேண்டும் என்பதாக இந்நூலின் திரண்டெழும் உண்மையை நான் தொகுத்துக் கொள்கிறேன்.


நினைவில் நிலைபெறும் வரலாறு பகுதி ஒன்று

மூன்று நாயகர்களின் கதை

சென்ற நூற்றாண்டின் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக நிகழ்ந்த உரிமைக்கான போராட்டங்களின் நாயகர்கள் திட்டவட்டமான எழுத்து வடிவில் இல்லாமல் சிந்துப்பாடல்கள் வழியாக நினைவுச்சின்னம் அமைப்பதன் வழியாக சிலை நிறுவுவதன் வழியாக நினைவில் கொள்ளப்படுவதன் சித்திரத்தை அளிக்கிறது முதல் கட்டுரையான சிந்து சிலை சின்னம். சுதந்திரம் பெறுவதற்கு இருபது வருடங்கள் முன் ராணுவத்தில் பணியாற்றித் திரும்பிய குப்புசாமி என்பவரின் மீது தொடுக்கப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தாண்டி அவர் வென்றதை நினைவில் கொண்டு எழுதப்பட்ட "தற்காப்புச் சிந்து" பாடலை ஸ்டாலின் ஆதாரமாகக் கொள்கிறார். அதனைத் தொடர்ந்து சென்று வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் திரட்டி பதிவு செய்கிறார். இது ஒரு வெற்றியின் கதை. ஆனால் நடுகல்  அமைக்கப்பட்டு வணங்கப்படும் 1987-ல் கொல்லப்பட்ட வஞ்சிநகரம் கந்தனுடையது அப்படிப்பட்டதல்ல. ஒரு தலித் குவாரி எடுத்து தொழில் நடத்துவதை அனுமதிக்கமுடியாத மேட்டிமை மனநிலைக்கு கந்தன் பலியாகிறார். அடுத்ததாக கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடியில் அடையாளங்கள் ஏதுமற்ற மார்பளவு சிலையாக நின்று கொண்டிருக்கும்  பாண்டியனின் கதையும் கந்தனை ஒத்ததே. துக்க நிகழ்வுகளுக்கு பறையடிக்க மறுத்ததால் நடந்த கலவரத்தில் பாண்டியன் 1985-ஆம் ஆண்டு கொல்லப்படுகிறார்.

இச்சம்பவங்கள் இன்றளவும் மக்களால் நினைவில் கொள்ளப்பட்டாலும் இவற்றை எழுத்தில் பதிந்ததன் வழியாக ஸ்டாலின் இவற்றை என்றென்றைக்குமானதாக மைய வரலாற்றுக்கு இணையாக பயணிக்கக்கூடிய மாற்று வரலாறாக நம்மிடையே கொண்டு வந்து சேர்க்கிறார். இந்த மூன்று நாயகர்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சமூக பொருளாதார  அந்தஸ்து கொண்டவர்களாக வாழ்ந்த போதிலும் மரபான அமைப்பை உடைக்க முயலும் போது தாக்கப்பட்டிருக்கின்றனர்(குப்புசாமி). கொல்லப்பட்டிருக்கின்றனர்(கந்தன், பாண்டியன்). குப்புசாமி ராணுவத்தில் பணியாற்றியவர் ஆதலால் அந்த ஒழுங்குகளை மக்கள் வாழ்வில் கொண்டு வர முனைந்திருக்கிறார். கந்தன் மரபான ஆதிக்க சாதிகள் கைப்பற்றி வைத்திருந்த தொழிலில் மேலெழ நினைத்திருக்கிறார். பாண்டியன் பிறப்பு சுமத்திய அடையாளத்தை சூட மறுத்ததால் கொல்லப்பட்டிருக்கிறார்.

இக்கட்டுரையின் வாயிலாக ஸ்டாலின் ராஜாங்கம் எதிர்பார்க்கக்கூடியது ஒன்றே. வெகு மக்கள் நினைவுகளில் பதியப்பட்டிருப்பவற்றை அக்காலகட்டத்தின் பிற தரவுகளோடு ஒப்பிட்டு சம்பவங்களை எழுத்து வடிவில் பதிவு செய்வது. தலித் செயற்பாட்டாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் தன் செயலை முன்னுதாரணமாக நிறுத்தி ஆசிரியர் சொல்லும் செய்தி இது.

மாற்றுரு கொள்ளும் மாமனிதர்கள்
ஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுத்துக்களின் ஆதார நோக்கங்களில் ஒன்றாக நான் கருதுவது மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கும் சமூகம் சார்ந்த அறிவுஜீவிகளுக்கான சொல்லாடலை மக்களின் உணர்வுகள் எதிர்வினைகள் வழியாக புரிந்து கொள்ள முயல்வது. சிந்தனையை வெறும் மூளை விளையாட்டு என்ற எல்லையிலிருந்து விடுவித்து அந்த சிந்தனைகள் உருவாகும் கள எதார்த்தம் நோக்கிச் செல்கிறார் ஆசிரியர். வரலாற்றை வழிமறிக்கும் வெகுமக்கள் நினைவுகள் என்ற கட்டுரை ஆனந்த தீர்த்தர், ஜார்ஜ் ஜோசப், பென்னி குயிக் என மூன்று "அந்நிய" ஆளுமைகளை (தமிழ்நாட்டை பொறுத்தவரை) அறிமுகம் செய்கிறது. அரிஜன சேவா சங்கத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய நாராயண குருவின் சீடரான ஆனந்த தீர்த்தர் பற்றிய எழுத்துப் பதிவுகள் குறைவு. 

சிந்தனையாளர்,கவிஞர்,செயற்பாட்டாளர் என ஒவ்வொருவர் வாயிலாக திரட்டப்படும் ஆதாரங்களும் நூல்கள் மூலம் பெறப்படும் சித்திரங்களும் ஒருவகைப்பட்டதாக இருக்க ஆனந்த தீர்த்தர் செயல்பட்ட மதுரை மேலூருக்கு அருகில் உள்ள ஒரு தெருவில்  வெகுமக்கள் நினைவுகளில் இருந்து பெறப்படும் சித்திரம் வேறானதாக இருக்கிறது. அவரது பெயரை குழந்தைகளுக்கு சூட்டுவது அவரை "சுவாமி" என அழைத்தது என அனைத்தையும் மக்கள் நினைவில் கொண்டுள்ளனர். அதேநேரம் ஒரு போராட்டத்தின் போது ஆனந்த தீர்த்தருக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டதை மறக்காமல் குறிப்பிடுகின்றனர்.

அடுத்ததாக ஜார்ஜ் ஜோசப். முத்துராமலிங்கத் தேவர் குற்ற பரம்பரை சட்டத்துக்கு எதிராக இருந்தார் என்ற காரணத்தை முன்னிட்டு  அவர் நினைவுகூரப்படுகிறார் என்ற பிம்பத்தின் மூலம் முனை கொண்டிருக்கும் சாதிய ஒருங்கிணைதல்களில் அவர் பெயர் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஜார்ஜ் ஜோசப்பை கொண்டு விளக்குகிறார் ஆசிரியர். மதுரையில் வைகையாற்றுக் கரையில் காந்தி சிலைக்கு அருகே இருக்கும் ஜார்ஜ் ஜோசப்பின் சிலையை பெரும்பாலானவர்களால் அடையாளம் காண முடிவதில்லை என்பதையும் காங்கிரஸ்காரரும் பிரமலைக் கள்ளர்களுக்காக குரல் கொடுத்தவருமான அவரது பெயர் எழுத்துப் பதிவுகளில் இல்லாமலாகியிருப்பதைப் பின்பற்றிச் செல்லும் ஆசிரியர் அவர் பெயர் பிரமலைக் கள்ளர் சமூகத்தில் "ரோசாப்பூ" என்று மருவி நினைவு கூறப்படுவதை சுட்டுகிறார்.

முல்லைப் பெரியாறு சிக்கல்களின் போது அடிபடும் பெயராக மாறியிருப்பதால் பென்னி குயிக் இன்று அரசின் வழியாகவும் முன்னிறுத்தப்படும் ஆளுமையாக மாறியிருக்கிறார். ஒரு பிரிட்டிஷ் பொறியாளரை மக்கள் நினைவில் கொள்ளும் முரணை ஸ்டாலின் இக்கட்டுரையில் விளக்குகிறார். அதிலும் கிறிஸ்துவரான பென்னி குயிக் இந்துவத்தின் அடையாளமாக கட்டமைக்கப்படும் விநாயகர் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படும் நகைமுரணை சொல்கிறது இப்பகுதி.
தமிழர் மண்ணின் மைந்தர் போன்ற அடையாளங்கள் தீவிரமாக கட்டமைக்கப்பட்டு பின்பற்றப்படும் காலத்தில் தமிழர்களைப் பொறுத்தவரை அந்நியர்களான இந்த மூவரையும் வெகுமக்கள் அதிலும் அதிகாரத்தில் பங்கேற்கும் வாய்ப்பற்றவர்கள் நினைவில் கொண்டிருப்பதை முன்னிறுத்துவது தலித் விவாதங்களை ஒட்டிய காந்தி-அம்பேத்கர் இருமைகளைக் களைவதோடு வரலாற்றின் சிக்கலான போக்கினையும் வசதியும் சுயநலமும் கருதி மறைக்கப்படும் முக்கிய ஆளுமைகளை அறிய வேண்டிய பொறுப்பினை நம்மிடம் கோருகிறது. 
பிராமணர், மலையாளி, வெள்ளைக்காரர் என இன்றைய தமிழ்நாட்டு அரசியலுக்கு ஒவ்வாத அடையாளங்களை பிரதானப்படுத்துவதன் மூலம் மைய அரசியல் களத்தில் பன்மையையும் கோருகிறது இக்கட்டுரை.

பாவனைகள் உணர்த்தும் உண்மை
போராட்ட உணர்வை வன்முறை உணர்வோடு இணைத்துப் புரிந்து வைத்திருக்கும் ஒரு காலத்தில் வாழ்ந்து வருகிறோம். உண்மையில் போராட்ட உணர்வென்பது தனக்கான நீதி மறுக்கப்பட்டதாக உணரும்போது மனிதனிடம் இயல்பாகவே கிளர்ந்தெழும் ஒரு எதிர்ப்புணர்வு மட்டுமே. அதனை வன்முறையானதாக ஆபத்தானதாக மாற்றிக் காட்டுவதில் அவ்வுணர்வுக்கு எதிராக நிற்கும் அமைப்பும் ஓரளவு பங்கு வகிக்கிறது. கட்சி போன்ற பெரும் அமைப்புகள் இந்த போராட்ட உணர்வுக்கு தீனி போட்டு வளர்த்துக் கொண்டிருக்க முடியாது. வெகுமக்கள் அல்லது பெரும்பான்மையினருக்கு தோதான உருவகங்களை அல்லது பிம்பங்களை கட்டமைப்பதன் வழியே ஒரு தலைவர் எப்படி நினைவுகூறப்பட வேண்டும் என அமைப்புகள் தீர்மானிக்கின்றன. 

"கக்கன்,சிவாஜி சிலைகள்" என்ற மூன்றாவது கட்டுரையில் பணிவான காலில் செருப்பு கூட இல்லாத ஆளுமையாக கக்கனின் சிலையும் கம்பீரமான ஆளுமையாக சிவாஜி கணேசனின் சிலையும் வடிவமைக்கப்பட்டிருப்பதை ஸ்டாலின் ராஜாங்கம் குறிப்பிடுகிறார்.  கக்கனின் அரசியல் வரலாற்றை சுருக்கமாக விவரிக்கும் இக்கட்டுரை கக்கனுக்குப் பிறகு முதுகுளத்தூர் கலவரங்களின் முகம் மாறுவதை அடிக்கோடிடுகிறது. அதேநேரம் அதிகாரம் கட்டமைக்கும் "பணிவான ஆளுமை" கொண்ட கக்கன் என்பதை அவர் சமூகம் எவ்விதத்திலும் நினைவில் கொள்ளவில்லை. அவரை நினைவில் நிறுத்த எந்த முயற்சியையும் மக்களும் எடுக்கவில்லை என்பதை சுட்டி நிற்கிறது இக்கட்டுரை.

கருத்தியல்களுக்கு வெளியே உலவிய தலைவர்கள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருப்பனந்தாள் எனும் வட்டாரத்தைச் சுற்றி இயங்கி வந்த நீலப்புலிகள் அமைப்பின் தலைவர் டி.எம்.மணி ஜூன் 5 2015 ஆண்டு இறக்கிறார். அவருடைய அமைப்பு குறித்தும் கருத்தியலைக் கொண்டு தங்களை பிம்பங்களாகக் கட்டமைத்துக் கொள்ளும் "பேரளவு தலைவர்களுக்கும்" டி.எம்.மணி போன்ற மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பிருக்கும் வட்டாரத் தலைவர்களுக்குமான வேறுபாட்டையும் இக்கட்டுரை விவரிக்கிறது. முஸ்லிமாக மதம் மாறி உமர் ஃபாருக் என்ற பெயருடன் உயிர் துறந்த டி.எம்.மணி போன்ற தலைவர்களை வட்டார அளவில் கண்டறிவதும் அவர்களை பதிவு செய்வதன் வழியாகவும் இணை வரலாறொன்றை உருவாக்க அறைகூவுகிறது இக்கட்டுரை.

பொன்னுத்தாய் ஸ்கூல்
அறுபது வருடங்களுக்கு முன்னர் பொன்னுத்தாய் என்ற தலித் பெண் தொடங்கிய பள்ளியின் வரலாற்றை விவரிக்கிறது இக்கட்டுரை. பொன்னுத்தாய் கல்வி கற்பதற்கும் ஆசிரியையாக பணியில் அமர்வதற்கும் தடையெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால் ஒரு கலவர வழக்கில் அவர் கணவர் கைது செய்யப்பட்ட போது பொன்னுத்தாய் போராடி அவரை மீட்கிறார். அவரது பணி பரிபோகிறது. பின்னர் அவரே தொடங்கி நடத்திய பள்ளியையும் அப்பள்ளி எதிர்கொண்ட சிக்கலையும் இன்று மூடப்படும் நிலையில் உள்ள (மூடப்பட்டும் இருக்கலாம்) பள்ளியின் சூழலையும் விவரித்துச் செல்லும் கட்டுரை அறுபதாண்டுகளுக்கு முன்னதாக ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்திய தலித் பெண்மணியின் துணிச்சலையும் நிமிர்வையும் பதிவு செய்யமால் விட்ட தலித் இயக்கங்களின் மீதான கோபத்தையும் கொண்டுள்ளது.
பௌர்ணமி குப்புச்சாமி

டி.எம்.மணி போலவே பௌர்ணமி குப்புச்சாமியும் இறந்த பிறகே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆனால் அஞ்சலிக் கட்டுரையாகவோ புகழ்ச்சி உரையாகவோ அல்லாமல் குப்புச்சாமி அவர்களின் பணியை மிக விரிவாக அறிமுகம் செய்கிறது இக்கட்டுரை. அயோத்திதாசரின் பௌத்தத்துக்கும் அம்பேத்கர் முன் வைத்த பௌத்தத்துக்கும் இடையேயான இடைவெளிகளை நிரப்பும் வகையில் அவரது எழுத்து அமைந்திருப்பதை ஸ்டாலின் ராஜாங்கம் பதிவு செய்கிறார். 1987 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக குப்புச்சாமி அவர்கள் நடத்திய பௌர்ணமி எனும் இதழ் அதில் எழுதிய ஆளுமைகள் அயோத்திதாசரின் பௌத்தம் திராவிட இயக்கத்துக்கு முந்தைய தலித் அரசியல் வரலாறு என பலவற்றைப் பதிவு செய்திருக்கும் ஒரு ஆவணக் களஞ்சியமாகவும் குப்புச்சாமி திகழ்ந்திருக்கிறார்.
சமகால தலித் அரசியல் இயக்கங்கள் குப்புச்சாமி போன்ற முன்னோடி சிந்தனையாளர்களிடம் இருந்து அறிய வேண்டியவற்றையும் அவர்கள் கவனப்படுத்து வேண்டிய தேவையையும் குறிப்பிடுகிறார்.

இக்கட்டுரையுடன் நூலின் முதல் பகுதியான நினைவில் நிலைபெறும் வரலாறு முடிகிறது. செயற்பாட்டாளர்கள், தலைவர்கள், சிந்தனையாளர்கள் என கடந்த நூறாண்டுகளில் பன்முகம் கொண்ட ஆளுமைகளின் வழியாக உருவான ஒரு வரலாறு இப்பகுதியை படித்து முடிக்கும் போது துலங்கி வருகிறது. பெரும்பாலான செயற்பாட்டாளர்களின் களம் மதுரையைச் சூழ்ந்ததாக உள்ளது. காந்திய மக்கள் இயக்கம் ஆனந்த தீர்த்தர் எல்.இளையபெருமாள் என விரிவான பணிகளை மேற்கொண்ட இயக்கங்களும் மனிதர்களும் மறக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. இறுதியாக இப்போது நினைவுக்கு வரும் தகவல். கல்லூரியில் முதலாமாண்டு என்னுடன் அறையைப் பகிர்ந்து கொண்ட தோழனின் பெயரும் இளையபெருமாள் தான். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவன். வரலாறு எப்படியெல்லாமோ முடிச்சிட்டுக் கொள்கிறது. 

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024