Sunday, 18 August 2019

நாயகிகள் நாயகர்கள் குறித்து அகில்குமார்

சுரேஷ் பிரதீப்பின் நாயகிகள் நாயகர்கள்:

மனித மனதின் பாவனைகளும், போலித்தனங்களும் வெளிப்படும் கணங்களை கண்டுணரும் சுரேஷ் பிரதீப்பின் கதைகள், வென்றெடுப்பது அல்லது வெல்லக் கொடுப்பது என்பதாக உறவுகளை வரையறை செய்கிறது. ஆண் ஆதிக்கம், பெண் ஆதிக்கம் என்பதையெல்லாம் தாண்டி ஆதிக்கமற்ற உறவுகளுக்கான சாத்தியக்கூறுகள் எவ்வளவு உள்ளது என கேள்வி எழுப்புகிறது. ஆதிக்கம் என்பதுமேகூட எல்லா வேளைகளிலும் தீர்க்கமாக முன்முடிவு செய்யப்பட்ட ஒன்றாக இல்லாமல், மனம் சூழலுக்கேற்ப எடுக்கும் முடிவாகத்தான் இருக்கிறது. காதல் அல்லது காம உறவு என்பது மாறி மாறி செய்துகொள்ளும் ஆதிக்கத்தினால்தான் காப்பாற்றப்படுகிறது.

நாம் ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கும்போது வேறு ஒருவர் மீது ஏற்படும் அன்பு நம்மை அச்சுறுத்துகிறது. அந்த வேளையில் நாமே நம்மீது சந்தேகம் கொள்கிறோம், குற்றவுணர்வு கொள்கிறொம். ஆனால் அந்த உணர்வு தவிர்க்கமுடியாததாய் இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் மட்டுமே என்கிற பொய்மை அங்கே உடைந்து போகிறது. நாம் நேசிக்கும் அத்தனை பேரிலும் நிரம்ப நேசிக்கும் ஒருவரோடு அதிக நேரம் செலவிட நாம் விரும்புகிறோம், அவர்களை காதலிப்பதாக சொல்கிறோம், ஆனால் அவர்களை மட்டுமே நாம் காதலிக்கவில்லை, மீச்சிறு அளவில் வேறு சிலரையும் காதலிக்கிறோம் என்பதான ஒரு புரிதல் எனக்கு இருக்கிறது. மாசிலன் கதையில் வரும் லெனின் போல. அவன் மனைவி அகல்யா மீது அவனுக்கு அன்பு இல்லாமல் இல்லை, ஆனால் அனிதா மீதும் அவனுக்கு காதல் இருக்கிறது. அனிதாவை கொஞ்சம் காதலித்தால், அகல்யாவை நிரம்பக் காதலிப்பான். இதை அகல்யா எப்படி எடுத்துக்கொள்வாள் என்பது ஒரு விஷயம் என்றால், அகல்யாவுக்கும் இருக்க வாய்ப்புள்ள இத்தகைய உள் மன இச்சைகளை லெனின் எப்படி எடுத்துக்கொள்வான் என்பது இன்னொரு விஷயம். நூறு சத சுய வெளிப்பாடு என்பது எந்த உறவிலும் இருக்கமுடியாது.

இந்த தொகுப்பில் நாயகர்களைவிட நாயகிகள்தான் அதிகம் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அம்மாக்கள் பெரும்பாலான கதைகளில் வந்துவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் மகனைத் தோற்கடித்து அதிகாரம் செலுத்த நினைக்கிறார்கள், மகன்கள் அம்மாவை தோற்கடிக்கிறார்கள், அம்மா இறந்தபின் அதிகாரம் செலுத்த ஆளில்லாமல் தவிக்கும் கணவனை மனைவிகள் தோற்கடிக்கிறார்கள் (குற்றுளம்), இல்லையேல் மகனைப் பயன்படுத்தி அம்மாக்கள் அப்பாவைத் தோற்கடிக்கிறார்கள் (அலுங்கலின் நடுக்கம்), உறவினர்களைத் தோற்கடிக்கிறார்கள் (ஆலரசுக்குளம்). அம்மாக்களை வீழ்த்தி அதிகாரம் செலுத்த மருமகள்கள் முயல்கிறார்கள். இறுதியாக தங்கள் அம்மாக்களை மகள்களும் தோற்கடிக்கிறார்கள் (சொட்டுகள்). எல்லா இடங்களும் ஆதிக்கத்தாலும், அதிகாரத்தாலும் சூழப்படுகிறது. ஆதிக்கம் செலுத்த  ஒவ்வொருவரும் துடிக்கிறார்கள்.

கதை நாயகர்கள் பெரும்பாலும் பால்யத்தில் இருக்கிறார்கள் அல்லது பால்ய நினைவுகளை சுமந்தலையும் இளமையில் இருக்கிறார்கள். மகனின் வெறுப்புக்கு ஆளான அப்பா அவ்வப்போது வந்து போகிறார். பாவனைகளற்ற, ஆதிக்கமற்ற உறவுகள் சாத்தியமில்லை என்பதையே இந்தக் கதைகள் திரும்ப திரும்ப சொல்கின்றன.   பல உட்கதைகளுக்குள் புகுந்து செல்லும் சில கதைகள் நாவல்களுக்கான சொல்லல் முறையைக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது

வெல்தல், வெல்லப்படுதல் என்பதுதான் வாழ்வென்பது அவ நம்பிக்கை ஏற்படுத்துமென்றாலும், உன் இருப்பு முக்கியமற்றதென்றாலும் நீ வெறுமனே வாழ்ந்துகொண்டு இரு, இந்த ஆட்டத்தில் கலந்துகொண்டு ஊருக்கேற்ப நீயும் ஆடு, உன்னால் செய்ய முடிந்தது அவ்வளவே, உனக்கு விதிக்கப்பட்டது அதுதான் என்பதுதான் இந்தக் கதைகளில் ஊடாடி வரும் மையமெனத் தோன்றுகிறது.

கிழக்கு பதிப்பக வெளியீடு.

Saturday, 29 June 2019

எஞ்சும் சொற்கள் - ஒரு வாசிப்பு

சமகால இளம் எழுத்தாளர்களின் கதைகளை தேடிப்பிடித்து படித்து வியப்பதிற்குண்டான ஆர்வத்திற்கேற்ற சரியானத் தீனிப்போட்டிருக்கிறதா இச்சிறுகதை தொகுப்பு என்றால் ஒருசில வகைகளில் மனமுவந்து ஆம் எனலாம். வளரும் எழுத்தாளரான சுரேஷ் பிரதீப்பின் எஞ்சும் சொற்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பன்னிரண்டு கதைகளின் தாக்கத்தின் துல்லியத்தை தெளிவுப்படுத்தக்கூடிய முயற்சியின் ஒரு சிறு துகள் தான் இக்கட்டுரையே தவிர மொத்தமாகவே அக்கதைகளை தராசில் நிறுத்தி பார்த்து தரம் பிரித்துப் பார்க்கும்  முயற்சியால் விளைந்தது அல்ல.

முதல் கதையான ‘வீதிகளி'ல் வரக்கூடிய பிரவீணாவினூடாக ஒரு சிறிய கிராமத்தின் தெருக்களுக்கு அழைத்துச் செல்கிறது கதைக்களம்.  வருடங்கள் பல உருண்டோடிய பின் சந்திக்கும் தோழிகளின் உணர்வு ரீதியான கொந்தளிப்புகளையும் குறுகுறுப்பையும் வர்ணிக்கும் எழுத்தாளரின் சிரத்தை மிளிரும் இடமென்றால் அது தோழிகளில் ஒருத்தி மணமாகி கைக்குழந்தையுடன் இருப்பதையும் அவளை யதேர்ச்சயாக காணும் இன்னொருத்தியின் மனஅலைகளில் விரியும் வியப்புக்கலந்த நுண்ணுர்வுகளின் வெளிப்பாடுகளை விவரித்திருக்கிற விதத்தைச் சொல்லலாம். அதிலும் அவர்களின் உரையாடல்களின் தொனியை சிறிதேனும் கூர்ந்து நோக்கும் தருணங்களில் புலப்படுவது என்னவெனில் மெல்லிய நீரோடையின் சலனமற்ற ஓட்டமானது கிளைப்பிரிகையில் சற்றே ஆர்ப்பரித்தடங்கும் ஓசையை நினைவு கூர்வதாய் இருக்கிறது. இவ்விரு பெண்களின் அகப்போராட்டங்கள் பின்னிப் பிணைந்து புறத்தோற்றம் கொள்ளும் மனிதர்களை நாம் எங்கும் காணலாம். அத்தகையதொரு நிஜ மனிதர்களின் நிகழ்வுகளை எவ்வித்ததிலும் பூசி மொழுகாமல் உள்ளதை உள்ளபடிக்கே வாழ்வியல் யதார்த்தங்களோடு பொருந்திப்போகும் வண்ணம் கதைக்கூறல் முறையாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. திருமணம் என்னும் மையப்புள்ளி எப்படி அதில் இணைந்துவிட்டளுக்குள்ளும் அந்த நிறுவனத்திற்கு வெளியே நிற்பவளுக்குள்ளும் விவரிக்க முடியாத பல மென்சலனங்களை தோற்றுவித்து செல்லும் என்னும் பார்வையில் விரிந்திருக்கக் கூடிய கதையின் சொல்லாடல்களை எல்லாம் நன்றென்கிற இரகத்தில் நிச்சயம் சேர்த்துக்கொள்ளலாம். 

எஞ்சும் சொற்கள் என்ற கதையின் கதைக்களமானது மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் சாதிகள் சான்றிதழ் சரிப்பார்க்கும் பொருட்டு காத்திருப்போர் வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் இளைஞன் ஒருவனின் பார்வையில் விரிகிறது. கீழ்நிலை சாதிகளின் மேல் படிந்திருக்கும் எள்ளல்களும், எளக்காரத் தோரணைகளுடன் கூடிய உதாசீனப்படுத்தல்கள் எல்லாம் சாதீய அடுக்குகளில் மேல்லுள்ளவர்களால் மட்டுமல்ல சமயங்களில் அதிகார வர்க்கத்தினர்களின் எல்லைக்குட்படுகிறப் போது ஒரே பிரிவை சார்ந்தவர்களாலேயும் தரம் தாழ்த்தப்படக்கூடும் என்னும் பார்வை சற்றே புதுமையாய் தெரிகிறது. அதிலும் பொறியியல் படிப்பு முடித்து தற்போது இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் வேலை செய்பவனாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்கிற போதும் சாதீய அடிப்படையில் ஒன்றானவர்களே என்னும் உரிமையில் ஆட்சியர் தன் மீது விட்டெறிந்த வார்த்தைகள் தந்த கணத்தின் வலியையும், அருவருப்பையும் உணரும் இளைஞனின் மனக்கொதிப்பை கதையின் இறுதி வரிகள் மிக கச்சிதமாக படம் பிடித்துக்காட்டுகிறது.   

பரிசுப்பொருளில் எதிர்படும் மோனிகாவின் பாத்திரப்படைப்பில் பெரிதானதொரு மாற்றங்களை காணமுடியாவிட்டாலும் கூட நவீன யுகத்தின் பிரபலமானதொரு முழக்கமான உபயோகித்து தூக்கியெறியக்கூடிய பண்டமாகத் தான் பெண்களின் அவலநிலைகள் இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் நீட்சியினை சற்று அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

பதினொரு அறைகள் என்கிற தலைப்பு ஒருவித யூகத்தை தருவிக்கிற போதும் கதையின் விவரணைகள் எல்லாம் மையக் கதாபாத்திரமான இளைஞனுள் உறைந்துப்போய் இருக்கும் தாயை பழிவாங்க துடித்துக்கொண்டிருக்கும் அவனுடைய  வன்மங்கள் வடியும் தருணத்தை நோக்கியே பின்னப்பட்டிருக்கிறது. அதிலும் தாய் என்கிற பிம்பத்தின் எதிர்மறை படிமங்களும் வழக்கத்தில் நைந்துப்போன வாதமான பெற்ற மகன் குறித்த பாசப்பிணைப்பென்பது முற்றாக கட்டவிழும் தருணமானது கைவிடப்பட்ட மகனின் மனதில் எத்தகையதொரு எதிர்மறை தாக்கத்தினை ஊற்றெடுத்து விடக்கூடும் என்பதை கதையின் முடிவில் வரக்கூடிய நிகழ்வில் மிக நேர்த்தியாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொறியியல் மாணவனும் இந்நாள் இளம் எழுத்தாளன் என்கிற அடையாளத்துடனும் தன்னை நிறுவிக்கொள்ள விழையும் அசோக்கின் பாத்திரப்படைப்பானது மடி கதையில் மிக நன்றாகவே புனையப்பட்டிருக்கிறது. அசோக்கின் சலனமற்ற தன்மையிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டிருக்கிற திவ்யாவினுடைய ஆளுமையும், அவளின் தீர்மானிக்கப்பட்ட கேள்விக்கணைகள் எல்லாம் அவன் மீது மோதும் தருணங்களில் வெளிப்பட்டிருக்கும் சிற்சில ஊடல்கள் எல்லாம் ஒரு பறவையின் சிறகு உதிர்தலுக்கிணையாகவே அத்தனை நலினத்துடனும் இயல்புடனும்  வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. திவ்யாவின் உணர்வுப்பூர்வமான கொந்தளிப்புகள் தன்னை சூழ்ந்துக்கொள்ளும் நிமிடங்களை ஒருவித உறுதிதன்மையுடனே கையாண்டுக்கொண்டிருக்கும் அசோக்கின் பாதுகாப்பு வளையமான மென்கர்வங்கள் உடைப்படும் தருணங்களை கடந்துவரும் போது ஒரு கணம் நிஜ மனிதர்களின் உரையாடலை அவர்களின் ஜன்னலுக்கு வெளியே நின்று வேடிக்கைப்பார்ப்பதை போன்றதொரு பிரமிப்பை வாசிப்பு ஏற்படுத்தி தருகிறது.  இன்னும் ஒருப்படி மேலேப்போய் இன்றைய இளம் எழுத்தாளர் என்கிற மிடுக்குடன் சுரேஷ் மிளிரும் இடமென்று சொன்னால் அது கதையின் முடிவில் அவர் கையாண்டிருக்கக்கூடிய நுண்பகடியை சொல்லலாம். “அவளை வாசலில் கண்டபோதே இந்தக்காட்சி வேறெப்படியும் முடியாதென நான் ஊகித்திருந்தேன் என்பது இறுதி முத்தத்திற்கு பிறகு ‘லவ் யூ’ என்று அவள் மார்பில் சாய்ந்தபோது தெரிந்தது.”

கணவன் மனைவிக்கிடையேயான தாங்கிப்பிடித்தலும் தாக்குப்பிடித்தலுக்குமான பெரிதானதொரு சவாலாகவே தொத்தி நிற்கும் உளவியல் சிக்கல்களை அணுவணுவாக ‘மறைந்திருப்பவை’ கதையில் மிக யதார்த்தமாக கட்டியெழுப்ப முனைந்திருக்கும் எழுத்தாளர் தீபாவின் மனப்பிறழ்வின் பிண்ணனியை விவரிக்கும் தருணங்களில் மிதமானதொரு சறுக்கலை சந்தித்திருக்கிறாரோ என்றே எண்ணத்தோன்றியது அவளுடைய சிறுவயது அதிர்வுகளை பதிவு செய்திருக்கிற இடத்தினில். அதிலும் குட்டிகளை ஈன்றதுமே அவற்றில் ஒன்றை தின்றுவிடுகிற தாய் நாயை தீபா மிக அருகில் முதல் முறையாக காணும் போது என்று சொல்லப்பட்டிருக்கிற போதும் அப்படிப்பட்டதொரு குரூரத்தை நிகழ்த்திக்காட்டக்கூடிய ஜீவனாக (அது இயல்பே எனினும்) நாயை கற்பனை செய்துப்பார்க்க மனம் ஒப்பாமல் போய் விடுகிறது. மேலும் திருமணத்திற்கு பின்பான தீபாவின் மனத்தடுமாற்றங்களும் சரி அவளின் தொடர் வதைப்படலுக்கான கதை நகர்தலும் சரி வாசகர்களின் தர்க்க நெறிகளின்று சற்றே தள்ளியிருப்பதைப் போன்றதொரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுவதால் கதையின் மீதான பிடிப்பை தளர்த்திவிட்டதாகவே தெரிந்தது கதையின் நிகழ்வுகளை கடந்து வருகிற போது. குறிப்பாக கதையின் முடிவுமே கூட துரிதகதியில் ஒருவித நாடகத்தன்மையுடன் முடித்து வைக்கப்பட்டு விட்டதாகவே தோன்றியது தீபாவின் மரணச்செய்தியை வாசிக்கும் போதினில்.

சாதீய கட்டமைப்புகளின் இறுக்கத்தை வேறொரு கோணத்தில் பதிவு செய்ய முனைந்திருக்கும் ஆசிரியரின் கதைசொல்லல் தொனியானது “ஆழத்தில் மிதப்பது”வில் சற்றே மாறுப்பட்டிருக்கும் இடமென்றால் அது கதைசொல்லிகளாக மூன்று முக்கிய பாத்திரங்களின் வழியாக கதைபுனையப்பட்டிருப்பதை சொல்ல்லாம். மற்றபடி ரம்யாவின் உயிரியல்  பெற்றோர்களின் அடையாளமானது அவளிடமிருந்து மறைக்கப்படுவதற்கான அவசியம் ஏனோ அவசியமற்றதாக தெரிவதாலோ என்னவோ கதையின் ஆரம்பத்தில் உணரப்படும் சுவாரசியத்தொனியின் அழுத்தம் குறைவதான உணர்வை கொடுப்பதாக இருக்கிறது கதையை முடிக்கும் தருணத்தில்.

பதின்ம வயதுடைய மாணவனின் பார்வையில் விரியும் கதையான 446A கதையின் உள்ளடுக்கில் அவ்வெண் கொண்ட பேருந்தின் சிறு தூர பயணம் போலவே நரேனின் பதற்றத்துடனும், பரப்பரப்புடனும் அசுர வேகமெடுத்து மிதமான வேகத்தில் நகர்ந்து திடீர் திருப்பத்தில் போய் நிற்கிறது. அதிலும் நரேனின் மனதில் தேங்கியிருக்கும்  பெண்கள் குறித்தான நினைவுகள் எல்லாம் அவர்களின் வியர்வை நெடியுடனோ அல்லது மைசூர் சாண்டல் சோப் நறுமணத்துடனோ வந்துப்போவதென்பது அன்றாடங்களில் உழலும் பெண்களின் வாழ்வியல் கூற்றுகளில் ஏதோ ஒன்றுடன் இணைக்கப்பட்டதைப் போன்றதொரு எண்ணத்தை தோற்றுவிப்பதாய் இருக்கிறது. 

நவீனகால யுவதிகளின் குறியீடாகவே ‘அபி’ கதையில் வரும் அபியை காண முடிகிறது. அவளின் தெளிவும், துணிச்சலும், மன உறுதியும் நம்மை புருவமுயர வைத்து வியப்பில் ஆழ்த்துகிறது. கணவன் ஸ்ரீராமிடமோ காதலன் சரணிடமோ உணர்ந்துக்கொள்ள முடியாத நெருக்கத்தையும் அரவணைப்பையும் தோழி அர்ச்சனாவினிடத்தில் உணர்ந்துகொள்கிறாள். பொதுவாகவே சுரேஷின் கதைகளில் பெரிதும் வியக்க வைக்கிற காரணிகளாக தெரிவது எதுவென்றால் ஒரு தேர்ந்த உளவியல் நிபுணருக்கே உரித்தான நிதானத்துடனும் கூரிய அனுமானங்களுடனும் மனிதர்களின் உளவியலின் அடுக்குகளில் உள்புகுந்து அவற்றின் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடிய நுண்ணுர்வுகளையும் ஆழ்மனத்தகவல்களையும் எவ்வித சமரசமோ, மேல்பூச்சோ இன்றி வார்த்தைகளில் வடித்து விடக்கூடிய திறமையால் சற்றே தனித்து தெரிவதை சொல்லலாம். பல சமயங்களில் மனதின் தென்படக்கூடிய சமநிலையின்மையை உள்ளதை உள்ளபடிக்கே எப்படி இவரால் வார்த்தைகளாக கொண்டு வர முடிகிறதென்று வியக்க தோன்றினாலுமே சில சமயங்களில் மனவறையின் ஒருபாதியை பதிவு செய்ததுப்போக அதன் மறுபாதியை பதிவு செய்ய கவனமின்யாக தவறிவிட்டாரோ என்றும் நினைக்க தோன்றிகிறது. அதுப்போல தான் ஸ்ரீராமிடம் அறை வாங்கும் அபியை பார்க்கும் தருணத்தில் அர்ச்சனாவின் மனக்குரலாக எதிர்படும் வார்த்தைகளில் வெளிப்படும் மெல்லிய குரூரமானது அதற்கு பின்பான சிறிய வருத்தத்தையும் வெளிப்படுத்தாமல் முடங்கிப்போய் கிடப்பதில் சிறிய ஏமாற்றத்தை உணர முடிகிறது. “அந்த அறையை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டேன்” என்கிற உணர்வுகளின் அதிர்ச்சியைப்போலவே தோழிகளின் அத்தனை அந்நியோன்த்தை தாண்டியும் அபி மற்றும் ஸ்ரீராம் பிரிவிலோ அல்லது சரணுடன் அவள் இணைய முடியாமல் போனதினாலோ எவ்வித பாதிப்புகளையோ, பதற்றத்தையோ அர்ச்சனாவினுள் காண முடியாததை முழுமையாய் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது.

பொதுவாகவே சிறுகதைகளில் கையாளப்படுகிற கதை சொல்லல்பாணியான ஒருவித நேர்கோட்டுத் தன்மையில் பயணிக்கும் கதைக்களமானது ‘வரையறுத்தல்’ கதையில் பெரிதும் மாறுப்பட்டு  புதுமையை தாங்கி நிற்கிறது. குறிப்பாக காலவரிசைப்படி பலவருட இடைவெளிகளுடன் முன்னும் பின்னுமாக நகர்த்தப்பட்டிருக்கும் நிகழ்வுகளினால் படிப்போர் மனதில் மிதமானதொரு குழப்பத்தையும் ஏற்படுத்திடா வண்ணம் கனக்கச்சிதமாகவே கதையை புனைந்திருக்கிறார் ஆசிரியர். அதனோடுக்கூடவே நவீன காலத்திலும் சாதிகளின் இறுக்கத்தின் பிடி சற்றும் தளர்ந்திடா வண்ணம் மேலும் மேலும்  இறுகிக்கொண்டுப் போவதுப் பற்றியும் அது நீட்சிக்கொள்ளும் விதத்தைப் பற்றியும் அதன் குறியீடுகள் சமகாலத்தில் எவற்றிலெல்லாம் பிரதிப்பலித்துக் கொண்டிருக்கிறது என்பது பற்றியும் ஒரு பெரிய கூட்டத்தின் முன்பாக மாலதியின் உரையாக பதிவு செய்ய விழைந்திருக்கும் ஆசிரியரின் முயற்சி நம்மை சற்றே வியப்பில் ஆழ்த்துகிறது.  இன்னும் சொல்லப்போனால் துளியளவு இடறினாலும் பலத்த சறுக்கலை சந்தித்திருக்கக் கூடிய கதைக்களத்தையும் அதை பலத்த பிரயத்தனுங்களுடன் வடிவமைத்து சலிப்புத்தட்டாதப்படிக்கு சொல்லியிருக்கிற விதத்திற்காகவுமே ஆசிரியருக்கு பெரிதானதொரு பாராட்டுதல்களை வழங்கலாம்.  

இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளிலேயே வாசிப்பிலும், புரிதலிலும் மிகப்பெரிய சவாலாகிப்போன கதையென்றால் அது நிச்சயம் ‘ஈர்ப்பு’ என்பதில் சந்தேகமில்லை. வழக்கமானதொரு சுரேஷின் கதை சொல்லல் பாணியில் அமைந்த கதை என்பதாலோ என்னவோ தனிப்பட்ட மனிதனின் உளவியல் சிக்கல்களின் படிமுடிச்சுக்களை அவிழ்க்க வேண்டி மிகுந்த மெனக்கெடல்களை மேற்கொண்டிருக்கும் ஆசிரியரின் முயற்சிகளை ஒருவாறாக யூகிக்க முடிகிற போதும் வாசகரின் பார்வையில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய பிரமிப்பையும் புரிதலில் உணரப்பட்டிருக்க வேண்டிய நெருக்கத்தைப் பற்றியும் சிறிதேனும் கவனத்தில் கொண்டிருக்கலாமோ என்னும் கேள்வியை தவிர்க்க முடியாமல் போகிறது. குறிப்பாக கதையின் விவரணைகளை உள்வாங்கும் பொருட்டு   பெரிதானதொரு அயர்ச்சியை உணரும் போது. இருப்பினும் ஈர்ப்பை சுமார் ரக கதையென்று புறந்தள்ளிடவும் முடியா வண்ணம் அதன் உள்ளடக்கமானது மிதமானதொரு கனத்தை தாங்கி நிற்கிறது. கதையின் முடிவைத் தவிர வேறெங்கும் உணரப்படாத ஒட்டுதலின்மை வாசிப்பின் போது ஒருவித சலிப்பையும், அயர்ச்சியையும் கொடுக்கிற போதும் கதைசொல்லியாக வரும் நடுத்தர வயது ஆணின் தாழ்வு மனப்பான்மையால் விளையும் வெறுமையையும், பொறுமல்களையும் புதிதானதொரு முறையில் பதிய வேண்டி கதாசிரியர் பயணித்திருக்க கூடிய தொலைவு என்பது ஒருவகையில் பிரமிப்பை ஏற்படுத்தி ஒருசில இடங்களில் புதுமையான வார்த்தைகளுடன் சற்றே விசித்திரமாகவும் தென்படுகிறது.

இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கக் கூடிய இறுதி கதையான ‘பாரம்’ முழுக்கவே மனவியலின் படிமங்களாலும் வடிந்ததுப்போக மிச்சமிருக்கக்கூடிய ஆழ்மன நினைவடுக்குகளின் குறியீடுகள் பற்றிய விவரணைகளால் விரவிக்கிடக்கிறது. மேலும் பாரம் மற்றும் சுமை என்கிற குறியீட்டு சொற்களினூடாக எழுத்தாளர் சொல்ல விழைவது யாதெனில் மனிதர்களுள் உறைந்திருக்கும் வாழ்வியலை நீட்சிக்கொள்ளும் பேரவாவினை வலுப்படுத்தும் அக மற்றும் புறகாரணிகளாக தென்படுவது அவர்தம்மை இறுக்கிப்பிடித்திருக்கும் நினைவோடைகளினால் மட்டுமே என்னும் கருத்தை பதிவு செய்வதற்காக என்பதுப்போலவே இருக்கிறது. இக்கூற்றினை உறுதிப்படுத்தும் விதமாக  “எல்லா செயல்களிலும் இன்பம் என்பது கண நேர உணர்ச்சி தான். சுமை தான் நிரந்தரம். கரையான் அரித்த மரத்தூண் அந்தக் கரையான் உருவாக்கிய மண் படலத்தால் தாங்கப்படுவது போல மனிதர்கள் தங்கள் சுமைகளால் மட்டுமே உலகில் தாங்கப்படுகிறார்கள்” என்கிற வரியினூடாக ஆசிரியர் சற்றே அழுத்தந்திருத்தமாய் பதிவிட்டு செல்கிறார்.

- அசோக மலர் 

(அசோக மலர் இந்த வாசிப்பனுபவத்தை எழுதிய வாசகியின் புனைப்பெயர். ஷோபா சக்தியின் கதையொன்றில் இருந்து இப்பெயரை எடுத்துக் கொண்டதாக மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.)

Wednesday, 1 May 2019

பழியுணர்வின் உளவியல் - நிழலின் தனிமை நாவலை முன்வைத்து


இலக்கிய ஆக்கங்களை ஒரு வசதிக்காக நேரடியானவை பூடகமானவை என இரண்டு வகைமைகளாக பிரித்துக் கொள்ளலாம். நேரடியாகச் சொல்லப்படுவதும் பூடகமாக எழுதப்படுவதும் எழுதும் ஆசிரியனின் தேர்வு மற்றும் படைப்பின் தேவை சார்ந்தது. நேரடியான ஆக்கங்களை தட்டையானவை என்றும் பூடமான ஆக்கங்களை நுட்பமானவை என்றும் கொண்டாடும் ஒரு தட்டையான பார்வையை வாசகர்களிடம் சூழலில் அவதானிக்க முடிகிறது. என் அவதானிப்பில் நேரடியாகவும் எளிமையாகவும் கதைகூறல் முறையை அமைத்துக் கொண்ட ஆக்கங்கள் மானுடத்தின் மையச்சிக்கல்களை பேசுகிறவையாகவும் சிடுக்கான மொழியும் வடிவமும் கொண்ட ஆக்கங்கள் காலமாற்றம் உற்பத்தி செய்யும் சிக்கல்களை பேசுகிறவையாகவும் இருக்கின்றன. காலம் நகர்ந்து செல்லும்போது சிக்கலான ஆக்கங்கள் எளிமையடைவதையும் காண்கிறோம். கரமசோவ் சகோதரர்கள் ஒரு உதாரணம். அதுபோல இன்றின் சிக்கல்கள் மானுடத்தின் ஒரு பகுதியாக ஏற்கப்படும்போது நாளை அவற்றின் வடிவமும் எளிமைப்படும்.

தேவிபாரதியின் நிழலின் தனிமை மனித குலம் சமூகமாகத் திரளத் தொடங்கியதில் இருந்தே எதிர்கொண்டு வரும் ஒரு சிக்கலை பேசுகிறது. கணநேரத்தில் தோன்றி மறையும் ஒரு உணர்வினால் ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்கவும் பீடிக்கப்பட வாய்ப்பிருக்கும் அவலத்தையும் அப்படி பீடிக்கப்படும் ஒரு மனம் அடையும் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் பேசும் படைப்பாக நிழலின் தனிமை நிலைகொள்கிறது. தன்வரலாற்றுத் தொனி கொண்ட, கதை சொல்லியின் பார்வையிலேயே நகரும் எளிமையான கட்டமைப்பை நிழலின் தனிமை கொண்டிருக்கிறது. ஆனால் பழியுணர்வு என்ற ஒற்றை உணர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தன் முழுவாழ்வையும் விசாரித்துக் கொள்ளும் அல்லது வீணடித்துக் கொள்ளும் கதைசொல்லியின் வழியாக மிக அடங்கிய குரலில் நாவல் முன் வைக்கும் சமூக விமர்சனமும் அதிகாரத்துக்கு பின்னிருக்கும் இயல்பான குரூரத்தை நேரடியாகச் சென்று தொட்டிருப்பதும் நிழலின் தனிமையை எத்தரப்பும் மறுக்க முடியாத ஒரு ஆக்கமாக மாற்றி விடுகின்றன.

கதைசொல்லியின் பெயர் நாவல் முழுக்கச் சொல்லப்படுவதில்லை. கதையின் மற்றொரு முக்கிய பாத்திரமான சாரதா கதைசொல்லிக்கு அக்காவாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் சாரதாவுக்கும் கதைசொல்லிக்குமான உறவுநிலை சாரதா,கதைசொல்லி மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யார் வாயிலாகவும் சொல்லப்படுவதில்லை. கதைசொல்லியின் ஊர்ப்பெயரும் அவன் இடம்பெயர நேர்ந்த பிறகு வசிக்க நேரும் ஊர்ப்பெயரும் கூட நாவலில் நேரடியாக இடம்பெறுவதில்லை. பழிவாங்கத் துடிக்கும் ஒரு மனதின் கூர்மையையும் எச்சரிக்கையையும் வெறுப்பையும் பேணிக்கொண்டபடியே தான் முழு நாவலின் கதை சொல்லலும் நீள்கிறது.   இந்தப் பதற்றம் நிறைந்த மொழியின் வழியாகவே தேவிபாரதி இந்த நாவலை நகர்த்திச் செல்கிறார்.இளம் வயதில் சாரதாவை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய கருணாகரனை கதைசொல்லி முப்பதாண்டுகள் கழித்து தன்னுடைய நாற்பதுகளில் இருக்கும்போது சந்திக்கிறான். கதைசொல்லி ஒரு அரசுப்பள்ளியில் எழுத்தராக இருக்கிறான். கருணாகரன் சாரதாவை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய போதிருந்ததை விட இப்போது அதிகாரம் பெருகியவனாக கதை சொல்லி பணிபுரியும் பள்ளிக்கு வருகிறான். சாரதா கணவன் ,மகன் என நிம்மதியான வாழ்க்கையை மேற்கொண்டாலும் கருணாகரன் மீதான பழியுணர்வை அழியாமல் பாதுகாத்துக் கொள்கிறாள். கதைசொல்லியின் உள்ளும் அப்பழியுணர்வு நீடித்தவண்ணமே இருக்கிறது. 

தேவிபாரதியின் பிற ஆக்கங்களை பார்க்கும்போது அதிகாரத்தால் சிதைக்கப்படுகிறவர்களின் மன உணர்வுகளை தொட்டுக்காட்டுவதாக அவை இருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த நாவலிலும் சாரதா கருணாகரனால் அத்தகைய அதிகாரத்தாலேயே சிதைக்கப்படுகிறாள்.
அதிகாரத்தைக் கொண்டு ஆளுகை செலுத்துகிறவர்களுக்கும் அந்த அதிகாரத்துக்குள் அடங்கி வாழ நேர்கிறவர்களுக்குமான மனமோதலே பழியுணர்வு என்று இந்த நாவல் சித்தரிக்க முயல்கிறது. 

நிலப்பிரபுத்துவம் இன்றும் முற்றாக நீங்கிவிடாத நம் சமூகத்தில் நிலமும் அது சார்ந்த ஜாதியப் புனைவுகளுமே அதிகாரமாக முன்வைக்கப்படுகின்றன. இன்றும் நம்மிடம் உலவும் பெருமிதக் கதைகள் பலவும் இந்த நிலப்பிரபுத்துவ கால மனநிலையின் திரிந்த வடிவங்களாகவே இருக்கின்றன. அதிகார அடுக்கு என்ற ஒன்று இல்லாத மானுட சமூகம் ஒட்டுமொத்த மனித குலத்தின் நெடுங்கனவாக இருக்கலாம். ஆனால் யதார்த்தத்தில் சமூகத்தின் இயல்பான ஒழுங்குக்கு அதிகாரம் அவசியமானதாகவே இருக்கிறது. நிறைய பேரை உள்ளடக்கிய ஒரு சமூக ஒழுங்கினை நடைமுறைப்படுத்துவதற்காக மேல் கீழ் என்ற அதிகார அடுக்கு இக்காலத்திலும் நமக்கு தேவைப்படவே செய்கிறது. இந்த அதிகார அமைப்பின் தன்மை மாறினாலும் - உதாரணமாக நிலப்பிரபுத்துவத்தை விட ஜனநாயகம் என்ற அதிகார அமைப்பு மாறுபட்டது. - அவற்றின் சில பொதுக்கூறுகள் பெரிய மாற்றங்களுக்கு உட்படுவதில்லை. அத்தகைய பொதுக்கூறுகளில்  பார்வைக்கு புலப்படும் ஒன்று நாற்காலி. ஆளுகை செலுத்துகிறவர் உயரத்திலும் ஆளுகைக்கு உட்படுகிறவர் சற்றுத் தாழ்ந்தும் அமர்ந்திருக்கும் வடிவம் இன்றுவரை தொடரவே செய்கிறது. சில நவீன அமைப்புகள் இந்த வடிவத்தை மேசையின் இருபுறமும் சமமான உயரமுடைய இருக்கையில் அமரும்படி மாற்றிக் கொண்டிருக்கின்றன. அப்படி மாற்றினாலும் மேசையின் முதன்மை நுனியில் அமர்கிறவரும் அவருக்கு அருகில் அமர்கிறவர்களும் அதிகாரத்தை தங்களிடம் அதிகம் உணர்கிறவர்களாகவே இருப்பார்கள். 

மற்றொரு வெளித்தெரியாத பொதுக்கூறு காமம். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆளுகையில் இருப்பவர்கள் மீது காமம் சார்ந்த தங்களுடைய அதிகாரத்தை செலுத்தலாம் என்பது இன்றும் நடைமுறையில் இருக்ககூடிய ஒரு விஷயமே. ஆண் மைய சமூகத்தில் காமம் சார்ந்த இந்த அதிகார வடிவம் பெரும்பாலும் அதிகாரத்தில் இருக்கும் ஆண் ஆளுகையில் இருக்கும் பெண் மீது செலுத்துவதாக இருக்கிறது. காமம் என்கிற விஷயம் (மண உறவு போன்றவை மூலமாக) வரையறை செய்யப்பட்டதாக இருக்கும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஒரு அதிகார அமைப்பினுள் பல்வேறு இனக்குழுக்கள் வருகின்றன. அதாவது அதிகாரம் என்பது பரஸ்பர பலன்களுக்காக ஆளுகையில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் ஆளுகையில் இருப்பவர்களை பாதுகாப்பது என்ற பொறுப்புணர்வின் அடிப்படையில் ஆளுகிறவர்களிடம் கொடுக்கப்படுவதாகவும் இருக்கிறது. அதிகார மட்டத்தின் நேற்றைய பேரப்பொருளான நிலத்தை உடைமை கொண்டிருக்கிறவர்கள் சமூகத்தை கட்டுப்படுத்தும் விழுமியங்களை பேண வேண்டியது தங்களுடைய அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு வழியாக இருந்தது. அதேநேரம் காமம் சார்ந்த மேலாதிக்கம் சமூகத்தில் உயர் பாவனைகள் வழியாக தங்களை உயர்ந்தோனாக முன்னிறுத்திக் கொள்வது என்கிற எதிர்மறை விஷயங்களும் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களால் தொடர்ச்சியாக செய்யப்பட்ட வந்திருக்கிறது. அத்தகைய எதிர்மறைகளுக்கு எதிரான குரலாக பதிவு செய்யப்படுகிறவையும் அதிகாரம் யாருடைய கையில் இருக்கிறதோ அவர்களின் விழுமியங்கள் சார்ந்ததாகவே இருக்கின்றன. உதாரணமாக ஒரு பெண் அதிகாரத்தால் சிதைக்கப்படுகிறாள் எனில் அவளது "கற்பு" பறிபோய்விட்டது என்பது போன்ற புலம்பல்களும் அவளது எதிர்காலம் சார்ந்த கவலைகளுமாக மட்டுமே அக்குரல் வெளிப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவனுக்கு வாழ்வு மீது தோன்றும் நம்பிக்கை இழப்புகளும் வஞ்சங்களும் பெரும்பாலும் பேசப்படாததாகவே இருக்கிறது. பாதிக்கப்பட்டவன் உள்ளுணரும் பழியுணர்வையும் சாத்தியமான வழிகளில் அது வெளிப்படும் விதத்தையும் சமூகத்தின் மேம்பட்ட விழுமியங்களால் கைவிடப்பட்டவர்களுக்கு அப்பழியுணர்வு அளிக்கும் ஒரு வகையான பாதுகாப்பு உணர்வும் என பழியின் பல தளங்களை தொட்டு விரிகிறது நிழலின் தனிமை.

சாரதாவையும் கதை சொல்லியையும் பழியுணர்வு கொள்ள வைத்த கருணாகரனின் கோணம் நாவலுக்குள் சொல்லப்படவே இல்லை என்பது நாவலின் பலமாகவேத் தோன்றுகிறது. கருணாகரனை பழி தீர்க்கும்  முடிவினை கதைசொல்லி எடுக்கும்வரை அவனுடைய வாழ்வு மங்கியதாகவே இருப்பதை ஆசிரியர் மறைமுகச் சொல்கிறார். அவனுக்கு மணமாகி இருக்கவில்லை. மணமான தங்கை கணவனுடன் சண்டையிட்டு வீட்டில் இருக்கிறாள். அம்மா நோய்ப்படுக்கையில் இருக்கிறார். அக்காவும் ஒரு இயல்பான அன்றாடத்தை கழித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் கருணாகரனை சந்தித்த தினத்தில் இருந்து அவனது வாழ்வுக்கு அர்த்தம் கிடைத்துவிட்டதாக கதைசொல்லி உணர்கிறான். அவனைக்கொல்லப் போவதாக ஒரு கடிதத்தை கருணாகரன் சாரதாவை வன்புணர்ந்த இடத்திற்கு கீழிருக்கும் அஞ்சலகத்தில் இருந்தே அனுப்புகிறான்.

கதைசொல்லியின் பழியுணர்வுகள் வேகங்கொள்ளும் இடமாக இதனை வகுத்துக் கொள்ளலாம். அதுவரையில் உள்ளடங்கியவனாக இருந்த கதைசொல்லி கருணாகரனுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட பிறகு தைரியமானவனாக மாறுகிறான். கருணாகரன் கதைசொல்லியை தன்னுடைய கணக்கு வழக்குகளைப் பார்க்க அவன் பணிபுரியும் பள்ளியில் இருந்து அவ்வப்போது அழைத்துக் கொள்கிறான். கருணாகரன் மகள் சுலோச்சனாவின் காதலைப் பெறுகிறான். அவனது பழியுணர்வு தடுமாற்றம் கொள்கிறது. அதேநேரம் செல்வாக்கான கருணாகரனுக்கு நெருக்கமானவனாக இருப்பதால் அவன் சமூக மதிப்பு உயர்கிறது.  சாரதா அவனால் பழிவாங்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறாள். எதிர்பாராத விதமாக கருணாகரனின் குடும்பம் அவன் மகன் செய்த கொலைகளால் நிலைகுலையத் தொடங்குகிறது. கருணாகரன் நோயில் படுக்கிறான். சுலோச்சனாவுக்கு திருமணமாகிறது. அக்குடும்பம் நசியத் தொடங்குகிறது.
நேரடியாக கதையென இந்த நாவலில் பயின்று வருவது இதுதான். ஆனால் நாவலில் கவனப்படுத்த வேண்டிய விஷயங்கள் விரவிக்கிடக்கின்றன.

உதாரணமாக பழியுணர்வு கதைசொல்லிக்கு அளிக்கும் வேகம். நம்முடைய வழக்கமான கதையாடல்களில் நன்றோ தீதோ ஒரு லட்சியத்தின் அடிப்படையிலேயே வாழ்வைப் பற்றிய எதிர்காலம் பற்றிய கற்பனைகள் கிளைவிட்டிருக்கும். ஏதேனும் ஒரு விஷயத்தை சாதிக்க வேண்டும் ஏதேனும் ஒரு உலகியல் இலக்கை அடைய வேண்டும் என்றெல்லாம் எதிர்காலம் குறித்த கற்பனைகளை நாம் வளர்த்துக் கொள்கிறோம். அன்றாடத்தில் சோர்வின்றி ஈடுபட லட்சியங்கள் ஒருநாள் நனவாகும் என்று நம்பிக்கை ஆதாரமாகிறது. லட்சியங்களோ சென்றடைய வேண்டிய முனைகளோ ஏதுமின்றியும் வாழ்வை நகர்த்தி விடுகிறவர்கள் உண்டு. ஆனால் பழியுணர்வு ஒருவனின் லட்சியமாக மாற முடியுமா என்ற கேள்வியை நாவல் எழுப்புகிறது. கதைசொல்லியின் ஆற்றல் முழுவதும் கருணாகரனை வீழ்த்தும் புள்ளிவரை திரண்டு திரும்பி வருகிறது. சுலோச்சனா அவன் மீது கொள்ளும் காதலையும் அவனது கூர்மையான பழிவுணர்வே கண்டு கொள்கிறது. சுலோச்சனா சீண்டுவதும் விலகுவதுமாக அவனை தவிக்க வைக்கிறாள். ஒரு திருவிழாவுக்குச் செல்லும்போது கதைசொல்லிக்கு கருணாகரனை கொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாய்ப்பினை அவன் வேண்டுமென்றே நழுவ விடுகிறான். பதிலீடாக அன்று அவனை சீண்ட வரும் சுலோச்சனாவுடன் உறவு கொள்கிறான். இதுவொரு நுட்பமான இடம். அவன் மனம் காமத்தாலும் பழியுணர்வாலும் அலைவுறும் சந்தர்ப்பத்தில் அவன் காமத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். சுலோச்சனாவுடம் அதன்பின்னர் பலமுறை உறவு கொள்ளும் போது அவன் மனம் அதனை பழிநிகர் எனவும் காதல் எனவும் மாற்றி மாற்றி சித்தரித்துக் கொள்கிறது.

சுலோச்சனாவுக்கு மணமாகும் போது கருணாகரனின் குடும்பம் சிதைந்திருக்கிறது. கருணாகரன் நோயில் விழுகிறான். சுலோச்சனாவின் குடும்பம் கதைசொல்லியை ஜாதியைச் சொல்லி அவமதிக்கும் போது அவன் மீண்டும் சுலோச்சனாவை காயப்படுத்தி அங்கிருந்து வெளியேறுகிறான். அதன்பின் குடியேறும் நகரில் சுகந்தி என்ற ஏற்கனவே மணமான இன்னொரு பெண்ணுடன் உறவு கொள்கிறான். அவள் கணவனும் அவ்வுறவை எதிர்பின்றியே எதிர்கொள்கிறான். மீண்டும் சுகந்தியிடமிருந்து வெளியேறி கருணாகரனை மரணப்படுக்கையில் கதைசொல்லி சந்திக்கச் செல்லும் இடத்தில் நாவல் முடிகிறது.

வாசித்து முடித்தபிறகு மனதில் எஞ்சுவது கதைசொல்லியின் விசித்திரமான இரண்டு வருட வாழ்க்கைப் பயணமே. அதாவது அவன் செல்வாக்கு மிக்கவனாக வளர்ந்திருக்கும் கருணாகரனை முதன்முறையாக சந்திக்கும் காலம் தொடங்கி அவன் மரணப்படுக்கையில் கிடப்பதை காணநேரும் கணம்வரை. இக்காலகட்டத்தில் கதைசொல்லி அதிகாரம் காமம் என அனைத்தையும் ருசிக்கிறான். அவனுடைய வாழ்க்கை தொடக்கத்தை எண்ணிப் பார்க்கும்போது அவனுடைய துய்ப்புகள் அதீதமானவை. ஆனாலும் அவன் நிறைவடைவதில்லை. அவனது இயக்கு விசையாக இருக்கும் பழியுணர்வு அவனை அமைதியாக இருக்கவிடுவதில்லை. அதற்கான காரணம் சுருக்கமாக சொல்லப்படும் அவனது பால்யத்தில் இருக்கிறது. அவனது பால்யத்தை தேவிபாரதி கவனமாக கட்டமைக்கிறார். பள்ளி முடிந்து திரையரங்கில் முருக்கு விற்கும் ஏழைச்சிறுவன் அவன். நாவிதர் இனத்தைச் சேர்ந்தவன். அதனாலோ என்னவோ நாசுவன் குருவியின் மீது அலாதியான பிரியம் அவனுக்கு இருக்கிறது. அக்குருவியை அவன் நண்பன் தங்கவேலுவிடம் காட்டிக்கொடுக்க நேரும்போது அவன் அடையும் அதிர்ச்சி மற்றொரு நண்பனான வின்சென்ட் சாரதாவிற்கு நிகழ்ந்ததை விவரிக்கும் போது வின்சென்ட் எழுந்து சென்று சுய மைதுனம் செய்து வருவது என கதைசொல்லி இளமையிலேயே வாழ்வின் மீது விலக்கம் கொள்வதற்கான அத்தனை காரணங்களையும் அடைகிறான்.
அதிகாரமற்ற அவன் குடும்பம் சாரதாவிற்கு நிகழ்ந்ததற்கு எந்த பதிலீடும் செய்ய முடியுமால் ஊரைவிட்டு வெளியேறுகிறது. ஆகவே  எல்லோரும் கடந்து வருவதற்கு மாறான ஒரு பால்யத்தை கதைசொல்லி அடைந்திருக்கிறான். அப்பாவின் வேலையும் அவனது கல்வியும் ஜாதியின் பெயரால் சுமத்தப்படும் இழிவிலிருந்து அவனை மீட்டாலும் மனதின் ஆழத்தில் தங்கிவிட்ட பதற்றமும் சில எல்லைகளை மீற முடியாத தவிப்பும் மீறினால் கிடைக்கப்பெறக்கூடிய தண்டனையும் அவனை எந்நேரமும் அச்சத்திலேயே ஆழ்த்தி வைத்திருக்கின்றன.

அதிகாரத்துக்கான வேட்கையும் கருணையும் பழியுணர்வும் மாறி மாறி அவன் மனதை அலைகழிக்கிறது. ஒரு புள்ளியில் கதைசொல்லி தன்னையே கருணாகரனாக உணரும் இடம் நாவலின் உச்சம் எனலாம். மூன்று சந்தர்ப்பங்களில் கருணாகரன் சாரதா சிதைக்கப்பட்ட தன்னுடைய சொந்த ஊருக்குச் செல்கிறான். முதன்முறை அந்தப் பயணம் ஒரு யதார்த்த நிகழ்வாக சித்தரிக்கப்படுகிறது. அவன் மனதில் அப்போது பழியுணர்வு மட்டுமே உள்ளது. மறுமுறை கதைசொல்லி கருணாகரனின் குடும்பத்துடன் தொடர்புடையவனாக இருக்கும்போது சாரதாவுடன் செல்கிறான். உண்மையில் அப்பயணத்தின் நம்பகத்தன்மை மீது ஒரு சந்தேகம் விழுகிறது. அவனுடைய பழியுணர்வு குழப்பத்துக்கு உள்ளாகிறது.  மூன்றாம் முறை கருணாகரன் வீட்டைவிட்டு வெளியேறி சுலோச்சனாவைத்தேடிச் செல்கிறான். நாவலின் மிகச்சிறப்பான பகுதி என இந்த அத்தியாயத்தைச் சொல்லலாம். கதைசொல்லி சுலோச்சனாவைத் தேடுவதும் அவனுடைய பால்யமும் ஒரேநேரத்தில் சொல்லப்படுகின்றன. ஒருவித மாயத்தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும் இந்த அத்தியாயங்களில் கதைசொல்லி தன்னை கருணாகரனாகவே உணர்கிறான். பழியுணர்வு அவனை முற்றாக நீங்கியிருக்கிறது.

நாவல் மொத்தமும் கதைசொல்லியின் பார்வையிலேயே நகர்வதால் மற்ற அனைவருமே அவன் கண்ணிலிருந்து பிரதி எடுக்கப்பட்டவர்களாகவே இருப்பதும் ஒரு அரசுப் பள்ளி எழுத்தராக இருக்கும் கதைசொல்லிக்கு அவன் சூழலில் இருந்து அநேகமாக எந்த புறநெருக்கடிகளும் இல்லாமல் இருப்பதும் கதையின் பலகீனமான அம்சங்கள்.  மேலும் சில இடங்களில் மொழிபெயர்ப்பு ஆக்கத்தை வாசிப்பது போன்ற சொற்பிரயோகங்கள் பொருந்தாமல் நிற்கின்றன. திட்டுவதை "கடுமையாக விமர்சித்தான்" என்று எழுதுவதையும் "ஒரு முயலைப் போல பார்த்தாள்" என்று எழுதுவதையும் சற்று திணறுலடனே ஏற்க வேண்டி இருக்கிறது.

 ஒருவகையில் கதைசொல்லி கருணாகரனிடம் இறுதிவரை வேண்டி நிற்பது தன்னை எதிரியாக பாவிக்கும் ஒரு நிலையைத்தான். ஆனால் கருணாகரன் அவனை அறிந்திருக்கவில்லை எனும்போது கதைசொல்லி வன்மம் கொள்கிறான். ஆனால் கருணாகரனின் குடும்பத்தின் சரிவு சுலோச்சனாவின் மீதான காதல் என இயல்பாகவே கதைசொல்லி பழியுணர்வில் இருந்து மீள்வதற்கான வழியினை பற்றிக் கொள்கிறான். இறுதியில் கருணாகரனை சாரதா பார்ப்பதில் நாவல் உச்சம் பெறுகிறது. கருணாகரனை இறுதியாகப் பார்க்க வரும்போது கதைசொல்லி தன் மீட்சியை கண்டு கொள்கிறான் என்றே தோன்றுகிறது. ஆனால் சற்று ஆழ்ந்து பார்க்கும்போது அவனது மீட்சி இனி அவன் வாழ்வில் தொடங்கவிருக்கும் சரிவாகவே இருக்கும் என்று அவதானிக்க முடிகிறது. பழியுணர்வை வெல்லும் வேட்கையாகவும் மீட்சிக்கான ஏக்கத்தை சரிவாகவும் சித்தரித்து இந்த நாவல் செய்திருக்கும் தலைகீழாக்கமே நாவலின் தரிசனம் என்று கொள்ளலாம்.

ஆனந்த சந்திரிகை புத்தாண்டு மலருக்காக எழுதிய கட்டுரை - ஏப்ரல் 2019

Wednesday, 10 April 2019

பொண்டாட்டி - பாலுறவைப் பேசும் நீதிக்கதை

எழுத்தாளன் தன்னை என்னவாக பாவித்துக் கொள்கிறான் என்பது புனைவின் அழகியல் ஒருமைக்கு ஒரு இன்றியமையாத அம்சம். அதோடு எழுத்தாளனின் புனைவு பாவனையை அறிந்து கொள்வது குறிப்பிட்ட எழுத்தாளனின் மனவெழுச்சிகளையும் அக்கறைகளையும் கண்டுகொள்ள வாசகனுக்கு பெருமளவு உதவக்கூடும். மானுடம் என்கிற பெருங்கொந்தளிப்பினை வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்கிறவனாக டால்ஸ்டாய் தன்னை போரும் வாழ்வும் நாவலில் பாவனை செய்து கொள்கிறார். ஜெயமோகனின் பெரும்பாலான ஆக்கங்களில் ஒரு வரலாற்று விசாரணையாளின் பாவனையை நம்மால் காண இயலும். புதுமைப்பித்தன் மதிப்பீடுகள் சரிவதால் கோபமும் கசப்பும் கொள்ளும் கூரிய நல்லுணர்ச்சி கொண்டவராக தன்னை பாவனித்துக் கொள்கிறார். இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுத வந்தவர்கள் பலரின் எழுத்துக்களுக்கு கசப்பும் விலகலும் முக்கியமான புனைவு பாவனையாக மாறியிருக்கிறது. அவ்வகையில் அராத்து என்கிற எழுத்தாளர் தன்னை என்னவாகப் புனைந்து கொள்கிறார் என்ற கேள்வி அவரது இந்த நாவலையும் பிற படைப்புகளையும் புரிந்து கொள்ள அவசியமானது என நினைக்கிறேன்.

/மென்பொருள் துறையில் டிரெயினிங் & கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வரும் இவர், தொழில்முறை எழுத்தாளர் அல்ல. பொழுதுபோக்குக்காக எழுதுபவர். இவர் இதுவரை எந்த விருதும் வாங்கியதில்லை!/

இப்படி ஒரு குறிப்பினை அராத்து எழுதிய சில நூல்களில் காண முடிந்தது. இந்த நூலிலும் அதைக்காண முடிகிறது. இந்த நாவலின் தொனி அவரது பிற புனைவு நூல்களின் வெளிப்பாடு ஆகியவற்றைக் கொண்டு அராத்து தன்னையொரு "தீவிரமற்ற விளையாட்டான எதிர்தரப்பாக" புனைந்து கொள்ள முயல்கிறார் என ஊகிக்கலாம்.  ஆகவே அவர் இயல்பாக தமிழ் இலக்கியம் தீவிரமானது என்றும் விளையாட்டுத்தனங்களை மீறல்களை அனுமதிக்காதது என்றும் அந்த அனுமயின்மையின் வெளிக்கு வெளியே தன் புனைவுகள் இருப்பதாகவும் எண்ணிக் கொள்கிறார். அவர் படைப்புகளில் அழகியல் ஒருமையை பல இடங்களில் குலைப்பது அவரது இந்த புனைவு பாவனைதான். தீவிரமின்மை போலவே தீவிரமும் இலக்கியத்தில் ஒரு பாவனைதான் என்பது இலக்கியம் வாசிக்கத் தொடங்கிய ஒருசில வருடங்களிலேயே வாசகனுக்குத் தெரிந்துவிடும். சமூக அக்கறையுடனும் நம்பகத்தன்மை மிக்க தரவுகளுடனும் எழுதப்பட்டிருந்தாலும் ஒரு படைப்பின் அழகியல் ஒருமையும் தரிசனமுமே வாசகனுக்கு முக்கியமானதாக இருக்குமே ஒழிய அப்படைப்பின் கலகக்குரலோ,மீறல் தொனியோ அவனை எவ்வகையிலும் ஆர்வப்படுத்தாது. ஆகவே அராத்து நாவலின் முன்னட்டையில் "Fake novel" என்று குறிப்பிட்டிருப்பதையோ பின்குறிப்பில் "தொழில்முறை எழுத்தாளர் அல்ல" என்பது போன்ற ஆர்வத்தின் காரணமாகவோ சுயத்தின் மீதான நம்பிக்கையின்மை காரணமாகவோ எழுதப்பட்ட குறிப்பினை நீக்கிவிட்டு இந்த நாவலை வாசித்துச் செல்லலாம் என நினைக்கிறேன்.

வாசகனுக்கு எதையெல்லாம் இப்படைப்பு கொடுக்காது என எழுத்தாளர் பட்டியல் இட்டிருந்தாலும் "ஜாலியாக" எழுதப்பட்டது என விலகினாலும் ஒரு வாசகனாக நான் அத்தகைய பலகீனமான ஒப்புதல் வாக்குமூலங்களை விலக்கிவிட்டே இப்படைப்பை வாசிக்கிறேன்.நாவலின் களம் பாலுணர்வுதான். பொழுதுபோக்குக்காக எழுதப்படும் பாலுணர்வெழுத்து மற்றும் காணொளிகளில் ஒரு பொதுக்கூறினை நம்மால் அவதானிக்க இயலும். பெரும்பாலான இத்தகைய பாலுணர்வெழுத்து "முறையற்ற" பாலுறவுச் சித்தரிப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதாவது சமூகம் பொதுவில் கணவன்-மனைவி என்ற ஒற்றைப் பரிணாமம் கொண்ட பாலுறவை மட்டுமே அனுமதிக்கிறது. அதைத்தவிர்த்த மற்றதனைத்துமே மீறல்கள். யோசித்துப் பாருங்கள் பெரும்பாலான பால்நுகர்வெழுத்தில் கணவன்-மனைவி உறவே சொல்லப்படாத. கணவனின் தம்பி, மனைவியின் தங்கை,நண்பனின் காதலி,தோழியின் காதலன்,அம்மாவின் தோழி,மகளின் தோழன், இன்னும் தீவிரமாக தந்தை,தங்கை,தம்பி, மகள்,அம்மா என இந்த முறையற்ற உறவுகளின் பட்டியல் நீளும்.  இத்தகைய எழுத்தில் ஒரு பிரபலமான வடிவம் வயது சற்று முதிர்ந்த பெண் முதிரா இளைஞன். இந்த வடிவம் அதிகம் காணப்படுவதற்கான காரணத்தை எளிதாக ஊகிக்கலாம். "கன்னித்தன்மை" உடைய இளம்பெண்களை விட இத்தகைய பேரிளம் பெண்ணின் உடல் காமத்தை நாடும் ஒரு இளைஞனக்கு அதன் போஷாக்கு காரணமாக ஈர்ப்புடையதாக இருக்கும் மற்றும் மேலும் அவ்வயது பெண்களிடம் 'கனிவினை' எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கை. இத்தகைய எழுத்தின் நுகர்வோர் பெரும்பாலும் விடலைகள் என்பதால் அவர்கள் விரும்பும் இந்த 'வடிவம்' அதிகமாக வாசிக்க கிடைக்கும்.  எழுத்தின் வழியாக வாசகன் அடையும் கிளர்ச்சி என்பது காமம் துய்ப்பதை வாசிப்பது என்பதைத்தாண்டி அது பிறழ்வாக இருப்பதால் அடையப்படுவதாகவே இருக்கும்.

இந்த நாவல் சிக்கலான வடிவத்தில் காலத்தை முன்பின் நகர்த்தி எழுதப்பட்டது போலத் தெரிந்தாலும் இரண்டு பகுதிகளாக பிரித்துவிடும்படியாகவே நாவலின் கட்டமைப்பு உள்ளது. மீறல் அளிக்கும் கிளர்ச்சியை வாசகனுக்கு கடத்துவதாகவே முதல் அத்தியாயம் துவங்குகிறது. அன்னம் என்ற பெண் தன்னுடைய கணவன் கங்கநாதனை ஜாஃபர் என்ற அவளுடைய காதலனுடன் இணைந்து கொலை செய்கிறாள். அதற்கான காரணமாக அன்னத்தின் வறுமை சொல்லப்படுகிறது. வறுமை ஒழிந்ததே தவிர ஜாஃபரிடமிருந்தும் அவர் எந்த இன்பத்தையும் அடைவதில்லை. இதுபோல எண்ணிக்கையிடக்கூடிய பல மீறல்கள் ஒரு தலைமுறையில் நடக்கின்றன. உத்திரம்,பெரியய்யா,செந்தாமரை,சுமதி,பாலு,அமிர்தகடேஸ்வரன் என தொடர்ச்சியாக இதுபோன்ற பிறழ்வுறவுகள் சொல்லப்பட்டுக் கொண்டே வருகின்றன. இது நாவலின் ஒரு பகுதி. மற்றொரு பகுதியில் தீப்திகா அறிமுகமாகிறாள். அவளுடன் அவளுடைய தோழிகள்  கன்யா,ஆதிரை,பிரபா என மேலும் சிலர் அறிமுகம் கொள்கின்றனர். இந்தப்பகுதியின் கதைசொல்லல் சமகாலத்தைச் சொல்வதாக இருக்கிறது. ஆனால் முதல் பகுதியைப் போன்றே இப்பகுதியிலும் மீறல்களும் பிறழ்வுகளும் வரிசையாகச் சொல்லப்பட்டுக் கொண்டே வருகின்றன. புணர்வுச் சித்தரிப்புகளையும் முன்புணர்வுச் சித்தரிப்புகளையும் புணர்வுக்கு பிறகான சித்தரிப்புகளையும் அராத்து இந்த நாவலில் மிக விரிவாக எழுதி இருக்கிறார். ஆனால் அவற்றை சித்தரிப்பதில் இருக்கும் கற்பனை வளம் ஒரு போர்ன் திரைப்படத்தை தாண்டவில்லை என்பதே அவற்றை தட்டையாக்குகின்றன. ஒரு தரமான பிரதியில் சித்தரிக்கப்படும் காமம் என்பது நமக்குத் தெரிந்த ஒரு ஆளுமை காமம் துய்ப்பதை அறிய நேரும்போது நமக்குள் தோற்றுவிக்கும் நிம்மதியின்மையையும் கேள்விகளையும் தோற்றுவிக்க வேண்டும். வெண்முரசு நாவல் வரிசையில் திரௌபதி பாண்டவர்களுடன் கொள்ளும் காமம் வாசகனுக்குள் அத்தகைய அதிர்ச்சியை தரக்கூடியது. ஆனால் அராத்து தன் கதாமாந்தர்களை ஒரு போர்ன் படத்தில் நடிக்கும் அல்லது ஒரு தரமற்ற பாலியல் கதையில் எழுதப்படும் பாத்திரங்களைப் போலவே காமத்தில் சித்தரிக்கிறார். உண்மையில் ஆசிரியரின் அக்கறை காமத்தை விரிவாகப் பேசுவதுதான் என்றால் 'இந்த தலைமுறை செக்ஸையெல்லாம் ரொம்ப கேஷுவலா எடுத்துக்குது' என்பதைப் போன்ற மேலோட்டமான மனநிலையில் இருந்து தன்னுடைய பாத்திரவார்ப்புகளை செய்திருக்கமாட்டார்.

நாவலின் மைய இழை தீப்திகா அடைந்து இழக்கும் மூன்று காதல்களே. நாவலில் பொருட்படுத்தி வாசிக்கத்தக்க ஒரே பகுதியாக இருப்பது இதுதான். ஜெயமோகன்,ராமகிருஷ்ணன் மற்றும் சாருநிவேதிதா என்ற மூன்று வெவ்வேறு குண இயல்புகள் கொண்ட ஆண்களை காதலித்து தீப்திகா மீள்வதை மட்டும் ஓரளவு சரியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த மூன்று காதல் தோல்விகளுக்கும் பிறகு தீப்திகா கட்டில்லாமல் குடியிலும் காமத்திலும் ஈடுபட்டு மீள்கிறாள். அதன்பிறகும் அவள் அழகிழக்கவில்லை என்பது ஆசிரியரின் விருப்ப கற்பனையாகவே இருக்க வேண்டும். காமத்தில் நோய்கள் மிக எளிதாகப் பரவும். பால்வினை நோய்களைத்தாண்டி சருமக்கோளாறுகள் முத்தமிடுதலால் பரவக்கூடிய மென்மையான வியாதிகள் என எத்தனையோ இருக்க அவளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்படியான மிதமிஞ்சிய போதை பழக்கம் வேறு இருக்கிறது. ஆனால்  இத்தனைக்கும் பிறகும் கூட ஒரு அழகான ஆண் பொருட்படுத்தி காதலிக்கத்தக்க உடற்கட்டுடன் தீப்திகா இருக்கிறாள் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை.

பாலுறவுச் சிக்கல்கள் பேசப்படக்கூடாதவை அல்ல. மிக விரிவாகவே அவற்றை பேசுவதற்கான தேவை இன்றைய தாராளமய சமூகத்தில் இருக்கவே செய்கிறது. கடவுள்களும் லட்சியங்களும் இறந்து போன ஒரு காலத்தில் தேவைக்கதிகமான பணம் ,பணத்திற்கு இணையாக தேவைகளை பெருக்கிக் கொள்ளச் சொல்லும் நுகர்விய கலாச்சாரம், மரபான சமூக அமைப்புகளில் ஏற்பட்டிருக்கும் சேதம் என்பது போன்ற காரணிகளை கணக்கில் கொள்ளும்போது ஆண்-பெண் உறவிலும் இவற்றின் தாக்கம் பிரதிபலிப்பதை நம்மால் உணர இயல்கிறது. அது பேசப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. ஆனால் அராத்து அவற்றை பேச எடுத்திருக்கும் மொழியும் இணையுடன் காமம் கொள்வதற்கு முன்னும் பின்னும் உறவுகளில் ஏற்படும் நுட்பமான வண்ண மாறுதல்களும் என எவ்வளவோ இருந்தும் காமத்தின் மேல்மட்ட சிக்கல்களை மட்டும் தொட்டிருக்கும் தட்டையான தர்க்கமுமே இதை பாலுறவுச் சிக்கல்களைப் பேசும் படைப்பு என்ற தரத்தில் இருந்து இழுத்து வெறும் பாலுறவுக் கிளர்ச்சி மட்டுமே பேசும் படைப்பு என்றாக்குகிறது.

பாலுறவுச் சிக்கல்கள் தமிழில் எழுதப்படாத களமும் அல்ல. புதுமைப்பித்தனில் தொடங்கி கே.என்.செந்தில் வரை உண்மையான தீவிரத்துடன் பாலுறவுச் சிக்கல்கள் எழுதப்பட்ட பலநூறு பக்கங்களை உதாரணமாக எடுத்துவைக்க இயலும். தி.ஜானகிராமன்,இந்திரா பார்த்தசாரதி,ஆதவன்,சு.வேணுகோபால் என அனைத்து தட்டு மக்களின் பாலுறவுச் சிக்கல்களையும் அடையாளப்படுத்திய ஒரு வரிசை தமிழில் உண்டு.  தன்னை அந்த வரிசையில் பொருத்திக்கொள்ளும் விருப்பமோ இதுபோன்ற வரிசையமைப்பதில் நம்பிக்கையோ கொண்டவராக அராத்து இல்லை என்றே நினைக்கிறேன். அப்படியிருக்க அவர் தனக்கென ஒரு தனி "பாணியை" உருவாக்கி முன்வைக்க முயன்றிருக்கிறாரா இந்த நாவலில் என்றால் அப்படியும் ஏதும் தென்படவில்லை. மீண்டும் மீண்டும் பெரும்பாலானவர்கள் போர்ன் படங்களில் கண்டு சலித்த தட்டையான சித்தரிப்புகள். வேண்டுமெனில் போர்ன் பார்க்காத "நல்ல பிள்ளைகளுக்கு" இந்த நாவல் உத்வேகத்தை ஊட்டலாம்!

மையமின்மை விளையாட்டாக கலைத்து கலைத்து கதையை அடுக்குவது என்பது போன்ற பின்நவீனத்துவ விஷயங்களாலும் நாவல் கட்டப்படவில்லை. நாவலில் ஒரு பலகீனமான தரிசனமும் உள்ளது. அதை தரிசனம் என்பதைவிட ஒருவகையான எளிய பெண்ணிய முன்முடிவு எனலாம்.

/ஆண்களால் காமத்திற்கென பெண்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனர். ஒரு பெண்ணை 'அனுபவித்ததும்' ஆண் அவளிடமிருந்து விலகிவிடுகிறான்./

இந்த தியரியை மெய்ப்பிப்பதற்காக தந்திரமான (ஜெயமோகன்,சாரு நிவேதிதா) குரூரமான (அமிர்த கடேஸ்வரன்,லக்ஷ்மணன்) பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத (ஒரு லோகோ பைலட் பாத்திரம்,அர்ஜித்) என விதவிதமான "ஆண் எதிர்கதாப்பாத்திரங்களை" உருவாக்கி உலவவிட்டிருக்கிறார். பெண்கள் மீண்டும் மீண்டும் இந்த ஆண்களின் சதுரங்கத்தில் வெட்டப்படுகின்றனர் அல்லது தோற்கடிக்கப்பட்டு கீழே தள்ளப்படுகின்றனர். பெண் அன்புக்கு ஏங்குகிறவளாகவும் ஆண் காமத்துக்கு ஏங்குகிறவனாகவுமே எளிமையாக சித்தரிக்கப்படுகின்றனர். ஆண்-பெண் என்ற இருநிலைகளுக்கு இடையே பல்வேறு பால்நிலைகள் இருப்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன. அப்படியிருக்க அராத்து தன் நாவலில் வெறும் ஆண்களையும் பெண்களையும் மட்டுமே சித்தரித்து - இப்படிச் சொல்லக் காரணம் இது பாலுறவு நாவல் என்பதே - அவர்களின் எந்த உளநுட்பங்களுக்குள்ளும் அகநகர்வுகளுக்குள்ளும் செல்லாமல் வெறுமனே உடலையே மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்படி உடலை எழுதிவதிலும் ஒரு கள்ளமற்ற குழந்தைத்தனம்தான் வெளிப்படுகிறது. இந்த நாவலில் பெரும்பாலான பாத்திரங்களின் சிக்கல்கள் எப்படி கற்பிதங்களாகவே இருக்கின்றனவோ அதுபோலவே ஆதிரை,பிரபா,தீப்திகா போன்ற கதாப்பாத்திரங்களின் வழி நாவல் முன்வைக்கும் தீர்வுகளும் கற்பிதங்களாகவே இருக்கின்றன.

நேற்றைய ஒரு ஆணின் பகற்கனவில் பெண் சேவகியாக, துணிச்சலானவளாக,கல்வி கற்றவளாக,சுதந்திரமானவளாக அதேநேரம் நல்ல மனைவியாகவும் இருந்தது போல இந்த நாவல் முன்வைக்கும் பகற்கனவில் பெண் மேற்சொன்ன எல்லா குணநலன்களுடனும் "அன்புக்கு ஏங்குகிறவள்" என்ற ஒரு கூடுதலான விஷயமும் சேர்க்கப்பட்டுள்ளது. நல்ல மனைவி என்ற  ஷரத்து நீக்கப்படுகிறது.வாசிப்பதற்கு எந்த தடையையும் ஏற்படுத்தாத விரைவான நடை , திடீரென திறந்து கொள்ளும் மர்மங்கள் ,வாய்விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை சித்தரிப்புகள் போன்றவை நாவலை நிறுத்தாமல் வாசிக்க வைக்கின்றன. அதேநேரம் நாவல் குறித்து இவ்வளவு விரிவாக எழுதக் காரணம் இது போன்ற வேறு சில ஆழமற்ற படைப்புகளை வாசிக்க நேர்ந்ததும் அவற்றுக்கான இடம் வரையறுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும்தான். ஏனெனில் தமிழில் வெளிவந்தபோது கண்டுகொள்ளப்படாத ஆக்கம் பின்னர் எடுத்து வைக்கப்பட்டு அதீதமாக சிலாகிக்கப்படும். அந்த சிலாகிப்புகளைக் கடந்து அப்படைப்பை அணுகுவதற்கு மேலும் தாமதம் ஏற்படும்.

ஒட்டுமொத்தமாக இந்த நாவலின் அதிர்ச்சிகர சித்தரிப்புகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் ஆண்களுக்கு புத்திசொல்லும் ஒரு எளிய ஆக்கமாகவேத் தெரிகிறது.


Thursday, 7 February 2019

தனிமையெனும் நிரந்தர நிலை

/இக்கேள்வியை வெவ்வெறு வகைகளில் நண்பர்களிடமிருந்து எதிர்கொண்டபடியே இருக்கிறேன். இக்கேள்வியின் ஊற்றான உளக்கசப்பை அடைந்து அதைக் கடக்கும் முனைப்பில் இருப்பவன் என்ற முறையில் தோழி ஒருவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்ட இக்கேள்வியையும் அதற்கு நான் சொன்ன பதிலையும் அவரது அனுமதியுடன் பகிர்ந்து கொள்கிறேன்/

தனிமை வரமா, சாபமா? எதுவாயினும் மனித மனத்தை பொறுத்து தான், எனினும், தனிமையை விட கடுமையானது எதுவும் உண்டோ என்பது போல தோன்றி விடுகிறது, சில சமயங்களில் நம்முடைய எண்ண ஓட்டத்தின் வீரியத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் போது.

-----

அன்புள்ள -----

தனிமையை வரம் சாபம் என்றெல்லாம் பொதுமைபடுத்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் தனிமையின் சாதக பாதக அம்சங்களை நன்கறிவேன். இளவயதில் மனித உறவுகளில் மற்ற எல்லோரையும் விட சற்று அதிகமான புனிதத்தை கற்பனை செய்ததாலோ என்னவோ உறவுகள் அப்படி இல்லை என்ற விஷயத்தை உணரத் தொடங்கியபோது உள்ளொடுங்கியவனாகி விட்டேன். மனித உறவுகளை இரக்கமேயின்றி கீறி பார்க்கும் ஒரு மனநிலை ஏற்பட்டுவிட்டது. சமீபமாக அதிலிருந்தும் சலித்து வெளியேறுகிறேன். ஆனால் உறவுகளை நம்பியபோதும் கசந்து விலகியபோதும் தனிமையில் தான் இருந்திருக்கிறேன். அத்தனிமை ஒன்றை உணர்த்தியது. உறவுகள் சமூகம் என்ற அமைப்பினால் மனிதனுக்குள் தோன்றிய உணர்வுகளுக்கு வடிகால்களாக அமைபவை மட்டுமே. இப்படிச் சொல்லலாம். ஒரு அலுவலகத்தில் புறச்சூழல் மாற மாற அலுவலக விதிகள் மாறிக்கொண்டே இருக்கிறது அல்லவா. உதாரணமாக நேரம் தவறாமல் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்ற கட்டாய விதியை அலுவலகத்தின் மேற்பார்வையாளர் ஒருவர் முன்பு கண்காணித்துக் கொண்டிருந்தார். இன்று அதற்கென ஒரு இயந்திரம் இருக்கிறது. விதி தளரவில்லை. அதை கட்டாயமாக பாவிக்கும்படியான சூழலை இந்த இயந்திரம் உருவாக்கி விடுகிறது.

அதுபோலத்தான் எல்லா மனித உறவுகளும். தேவை சார்ந்தவை. புறத்தின் ஒழுக்க விதிகளும் உறவு வரைமுறைகளும் மாறுவதற்கு ஏற்றது போல மாறிக்கொண்டிருப்பவை. அவற்றை நிரந்தரமானவை புனிதமானவை என்று நம்ப வைப்பது சமூகம் நீடிப்பதற்கு தேவையானதொரு தந்திரம்.  இந்தப் புரிதல் நான் உணர்ந்து அடைந்தது.இந்த சமூக ஏற்பாட்டிற்குள் வாழும் நாம் நம்மைச்சுற்றி புழங்கும் உறவுகளை தவிர்த்து விலகி நிற்க இயலாது. ஆனால் அவ்வுறவுகள் எதுவும் நம் தனிமையை போக்கிவிட முடியாது.

உறவுகள் பொழுதுபோக்குக்காக மட்டுமே. கணவன் மனைவி காதல் குழந்தை என எதுவானாலும் அனைத்தும் ஒருவகையான உணர்வுப்பூர்வமான பொழுதுபோக்குதான்.  மனிதர்களின் உணர்வு வீரியத்தைப் பொறுத்து உறவுநிலைகள் அமைகின்றன. நமக்கு இந்த உணர்ச்சி பொழுதுபோக்கில் ஆர்வமிருப்பின் அதில் நாம் ஈடுபடலாம். திளைக்கலாம். இதை அறிந்தோ அறியாமலோதான் அத்தனைபேரும் உறவில் திளைக்கிறார்கள். இதை அறிந்து திளைப்பதும் வெளியேறுவதும் நம்மை சமநிலையில் வைத்திருக்கும்.

நான் இதை அறிந்து வைத்திருப்பதாகவே நம்புகிறேன். உறவுகளை வெறும் தேவை சார்ந்து அணுகாமல் அதேநேரம் ரொம்பவும் உணர்வுபூர்வமாக மாற்றிக் கொள்ளாமல் ஒரு நடுநிலை பேணுகிறேன். நடுநிலையை நீடித்துக் கொள்ள சிரமமாகவே இருக்கிறது. ஆனால் அதுவே சரியான புள்ளி என்றொரு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவற்றை கழித்துவிட்டு பார்த்தால் என் அன்றாடம் முழுத்தனிமையால் ஆனது. அது எனக்கு பல வகையிலும் நலம் பயப்பதாகவே அமைகிறது. தனிமைப்பட்டு இருக்கிறோம் என்ற எண்ணம் எழும்போதெல்லாம் தனிமை அளிக்கும் சுதந்திரத்தை மனதில் கொண்டு அவ்வெண்ணத்தைக் கடக்கிறேன்

சுரேஷ் பிரதீப்

Friday, 1 February 2019

காதலெனும் உடன்பாடும் ஐக்கியமும் - பஷீரின் பால்யகால சகியை முன்வைத்து

காதல் இலக்கியத்தில் பல்வேறு விதங்களில் சொல்லப்பட்டுவிட்டதாகச் சொல்வார்கள். ஆனால் வாசிப்பு கூடக்கூட ஒரு சில மேதைகளன்றி காதல் யாராலும் சரியாகச் சொல்லப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கூர்மையும் நுட்பமும் கொண்ட எழுத்தாளன் காதல் என்ற விஷயத்தை அவ்வளவு எளிதில் தன் படைப்பின் பேசுபொருளாக்கி விடுவதில்லை. அவன் அறிவான் காதல் என்ற அந்த மிக எளிய அனைவராலும் சொன்னாலே உணர்ந்து கொள்ளப்படக்கூடிய எல்லோருக்குள்ளும் ஒரு ரகசிய மௌனவெளியை உருவாக்கி அந்த வெளியினுள் மனம் கசிந்து புன்னகைக்கச் செய்யும் அவ்வுணர்வு எழுதும் போது அவ்வளவு எளிதான ஒன்றாக ஆகிவிடுவதில்லை என. யோசித்துப் பார்த்தால் எளியவைகள்தான் எழுதுவதற்கு பெரும் சவால்களை அளிக்கக்கூடியவை என்ற எண்ணம் எழுகிறது. காதல் என்கிற எளிய விஷயமும் அனைவரும் அறிந்தது அனைவருக்குள்ளும் ஏதோவொரு வடிவில் நீடிப்பது. அதை எத்தனையோ வகையில் சொல்ல முயன்று சொல்ல முயன்று கலை தோற்கிறது. பல சமயங்களில் காதல் வெறும் வியாபாரமாகக்கூட ஆகிவிடுகிறது.

மெல்லிய இவ்வுணர்வை சொல்ல முயன்று மெல்லுணர்வு கிசுகிசுப்பாக மாறிவிடும் பல கதைகளுக்கு மத்தியில் எழுதப்பட்டு எழுபதாண்டுகள் கடந்த பின்னும் காதலின் மிக முக்கியமான ஒரு பரிணாமத்தை மிக அழகாக கடத்துகிறது பஷீரின் பால்யகால சகி. கச்சிதமான சொல்லாட்சி என்பதைத் தவிர வேறெந்த நுட்பங்களையும் எழுபது பக்கங்களுக்கும் குறைவான இக்குறுநாவலில் நம்மால் காண இயலாது. மிக எளிய நேர்க்கோட்டுத் தன்மையிலான (நனவோடை கூட கிடையாது) கதை. கதை சொல்லலிலும் பஷீர் அந்த எளிமையின் இறுக்கமின்மையை பரவவிட்டிருக்கிறார். பணக்கார வீட்டுப் சிறுவனான மஜீதும் ஏழைவீட்டு சிறுமியான சுகறாவும் வழக்கமான எல்லா சிறுவர்களையும் போலவே தொடக்கத்தில் முட்டிக்கொண்டு பின்னர் நட்பாகின்றனர்.

கணக்குப்பாடம் சரியாக வராத மஜீதை ஆசிரியர் "ஒண்ணும்  ஒண்ணும் எவ்வளவு" என்று கேட்க "கொஞ்சம் பெரிய ஒண்ணு" என்கிறான். சுகறாவை ராஜகுமாரி என்று வர்ணித்தே தன்னை பயமுறுத்தும் அவள் கைகளில் இருக்கும் நகங்களை வெட்டச்செய்கிறான் மஜீது. இந்த கொஞ்சம் பெரிய ஒண்ணும்,ராஜகுமாரியும் தங்களையறியாமலேயே பிரியங்களை பரிமாறிக் கொள்கின்றனர். சுகறாவின் அப்பா இறந்துவிட அவள் உயர்நிலை பள்ளியில் சேர முடியாமலாகிறது. உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் மஜீது ஒரு நோயுற்ற தருணத்தில் சுகறாவின் மீதான தன் காதலை கண்டு கொள்கிறான். சுயம் பரிபூரணமாக துளிர்த்து நிற்கும் அவ்வயதில் அப்பாவுடன் பிணக்கு ஏற்பட வீட்டைவிட்டு வெளியேறுகிறான். அவனது நாடோடி வாழ்க்கை தொடங்குகிறது. அவ்வாழ்க்கையில் ஒரு கணமும் அவன் சுகறாவை மறப்பதில்லை. அதேநேரம் அவளுக்கு கடிதம் எழுதவும் அவனுக்குத் தோன்றுவதில்லை. மஜீது வீட்டுக்கு வரும்போது நிலைமை தலைகீழாகி இருக்கிறது. அப்பாவின் சொத்துகள் பரிபோயிருக்கின்றன. தங்கைகள் திருமணத்துக்கு வளர்ந்து நிற்கின்றனர். சுகறா மணமுடித்தவளாக தன் அழகையெல்லாம் இழந்து நிற்கிறாள். மஜீது சுகறாவை தன் கொடுமைக்கார கணவனிடம் திரும்பச்செல்ல வேண்டாம் என்கிறான். அவளை தான் மணமுடித்துக் கொள்வதாகச் சொல்கிறான். அதற்கு முன் தங்கைகளுக்கு மணமுடித்து வைக்க வேண்டும் என்ற பொறுப்பினை ஏற்று மறுமுறை வீட்டுவிட்டுக் கிளம்புகிறான். இம்முறை நாடோடியாக அல்ல ஒரு குடும்பத்தை தாங்க வேண்டிய கட்டாயத்தால் உந்தப்பட்ட இளைஞனாக. மஜீது வெளியேறிய பிறகு மஜீதுக்கும் சுகறாவுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் நடைபெறும் துயரங்களே இக்குறுநாவல்.

எளிமையான கதைக்கட்டுமானம் கொண்ட இந்த நாவலில் முக்கியமான அம்சமாக நான் எண்ணுவது காதல் கொண்டவர்களுக்கு இடையேயான பரிபூரண உடன்பாட்டினை தொட்டுக்காட்டிய இதன் பான்மையைத்தான். நினைக்க நினைக்க ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அம்சம் இது. வேறெந்த படைப்பும் காதலிணைகளின் இவ்வுடன்பாட்டினை இவ்வளவு இயல்பாகத் தொட்டிருக்கின்றனவா என்று சந்தேகம் எழுகிறது. அதென்ன உடன்பாடு? பார்க்கலாம்.

காதல் என்றல்ல எந்தவொரு உண்மையான மானுட உறவுமே முரண்பட்டு மோதிக்கொண்ட பிறகு உருவாகும் ஒரு சமநிலையில்தான் தன்னை நீட்டித்துக் கொள்கிறது. ஒரு புது இடத்தில் பணியில் சேர்கிறோம். அதன் சூழல் பழகும் வரை பதற்றமும் அலைகழிப்பும் நம்மை நிலைகுலையச் செய்கிறது. பணிச்சூழலின் லயத்துடன் ஒத்துப்போகத் தொடங்கும்போது பதற்றம் குறைகிறது. ஒரு புது மனிதர் நமக்கு அளிக்கக்கூடிய எரிச்சல் விலக்கம் பரவசம் உற்சாகம் என்று அனைத்துமே அவருக்கும் நமக்கும் இடையேயான லயம் உருவாகி வருவதன் படிநிலைகளே. மணவுறவு போன்ற நிரந்தர உறவு நிலையாயினும் சக பணியாளர் போன்ற தற்காலிக உறவாயினும் பிறருக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு நம்மை தொடர்ச்சியாக திருகிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இதை நாம் எவ்வளவு மழுப்பினாலும் பெரும்பாலும் பிரக்ஞைபூர்வமாகவே செய்கிறோம். ஆனால் அப்படி இல்லாமல் பிரக்ஞை இல்லாமல் இயல்பாக ஒருவரை ஒருவர் பரிபூரணமாக உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு மஜீதுக்கும் சுகறாவுக்கும் கிட்டிவிடுகிறது. இதுவரை உலகில் உயிரோடு வாழ்ந்து இறந்த ஒருவருக்கும் அது கிட்டாமல் போயிருக்கலாம். ஆனால் இவர்களுக்கு கிட்டியிருக்கிறது.

மஜீது இரண்டுமுறை வீட்டைவிட்டு கிளம்பவும் சுகறாவே காரணமாகிறாள். (முதல்முறை மறைமுகமாகவும் மறுமுறை நேரடியாகவும்). அதுபோல முதல் பயணத்தில் மஜீது சுகறாவின் நினைவாகவே இருக்கிறான். ஆனால் அவளுக்கு கடிதம் எழுதுவதில்லை. அதுபோல சுகறாவும் அவனை எண்ணிக் கொண்டிருந்தாலும் குடும்பம் கட்டாயப்படுத்த மணம்புரிந்து கொள்கிறாள். அந்த மணம் எவ்விதத்திலும் மஜீதின் மீதான அவள் நேசத்தை குறைப்பதில்லை. தர்க்கப்பூர்வமாக இது சிலருக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்படியொரு ஏற்பின்மை உருவானால் அதுவே இப்படைப்பின் வெற்றி என்பேன்.

நான் முன்பு சொன்ன பரிபூரண உடன்பாடு என்பது இதுதான். 'நீ எங்கிருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் நமக்கிடையே உருவான புரிதல் மாறிவிடுவதில்லை'.

உண்மையில் நட்பு என்று வரும்போது இது ஓரளவு சாத்தியமானது. பத்து வருடங்கள் கழித்து சந்திக்கும் போது கூட நேற்று பேசிப்பிரிந்தவர்களைப் போல நண்பர்களால் உரையாடிக்கொள்ள இயலும். நட்பினை நாம் ஆழத்துக்குள் அனுமதிப்பதில்லை. நீருக்கு மேலே இருவர் கைகோர்த்து நிற்பதைப் போன்றது அது. ஆனால் காதலுறவு அப்படியானதல்ல. ஆழத்தில் கைகோர்ப்பது அது. ஒவ்வொரு நொடியும் நம்மை நெட்டி மேலே கொண்டுவர முயன்று கொண்டிருக்கும் அக புற அழுத்தங்களில் நீந்திக்கொண்டு உடன்பாட்டினை மேற்கொள்வது எளிதல்ல. குறிப்பாக சுகறாவின் வாழ்வில் வேறு ஆண் இருப்பதோ ஜமீது பல பெண்களை கடந்து வந்ததோ இருவரையும் பாதிப்பதில்லை. அவர்கள் தங்கள் ஆழத்தில் அவ்வளவு இறுகிப் பிணைந்திருக்கிறார்கள்.

இறுதியாக வறுமையில்  ஒருகால் போன நிலையில் பாத்திரம் துலக்கும் மஜீதுக்கு சுகறாவின் இறப்புச் செய்தி வருகிறது. சாதாரணமாக ஒருவன் அழுது புரண்டு தன் வாழ்வின் ஒளி தொலைந்துவிட்டதாக புலம்பும் தருணம் அது. ஆனால் மஜீது அந்தச் செய்தியை உள்வாங்கிக்கொண்டு மீண்டும் பாத்திரம் துலக்கத் தொடங்குகிறான். "அவன் நிலையாமையை பொருளின்மையை ஏற்றுக் கொண்டுவிட்டான்" என்று வறுமையான தத்துவத்தை உதிர்க்கலாம். அது மஜீதுக்கும் சுகறாவுக்குமான பரிபூரண உடன்பாட்டினை உணர முடியாதவர்கள் காதுகளில் ஒலிக்கட்டும். ஆனால் மஜீது உணர்வதாக நான் நினைப்பது வேறு. அவன் தன்னுடலிலேயே இனி ஜொகராவையும் சுமக்க வேண்டும். ஆம் அவள் மஜீதுடனான  தன்னுடைய மாற்றில்லாத உடன்பாட்டின் வழியாக அவனுள் ஐக்கியமடைந்து விடுகிறாள்.  கடைசியாக அவளைப் பார்த்த போது தன்னிடம் ஏதோ சொல்லவந்து சொல்ல முடியாமல் தயங்கி நின்ற ஜொகராவை ஜமீது நினைவுகூர்கிறான். அவள் என்ன எண்ணியிருப்பாள் என நினைத்துப் பார்க்கிறான். எனக்கென்னவோ ஜமீது அதை கண்டுபிடித்துவிடுவான் என்றுதான் தோன்றுகிறது.