Monday, 16 January 2017

சில கவிதைகள் - 3

கடவுளர் புணரும் வெளி

எல்லோர் உடலிலும் ஏறியிருந்தது அது

குளிரில்லை என்பதால் வெப்பம் என்றோம் அதை

இன்மை இல்லை என்பதால் இருப்பு என்றோம் அதை

என் கனவுகள் போலன்றி

என் உடலையும் சேர்த்து யாருடலிலும் சட்டையில்லை

யார் கனவும் போலன்றி எல்லோரும் அறிந்திருந்தோம்

எங்கு தொடங்கியது அது என

அச்சிறுவன் சொன்னபோது நம்பவில்லை

நேரில் காட்ட முடியுமா என்றேன்

அல்லது என்றோம்

அழைத்துச் செல்கிறேன் என்றான்

அதிர்ந்த நெஞ்சை அமிழ்த்தி மறைத்து

விருப்பமில்லை என தலையசைத்து

அவனைத் தொடர்ந்தேன்

என் போன்றே  பிறரும் கனவுக்குள் ஒரு கயிற்றை கட்டி

மறுமுனையை பிடித்தபடி அவனுடன் இறங்கினர்

உண்மைதான்

கடவுளர் புணரும் களம் அது

அத்தனை கடவுளும் அங்கே

எண்ணத்தில் மட்டும் மின்னி மறைவது

பேரிருப்பென மூச்சடைக்க வைப்பது

சிற்றுரு கொண்டு சினந்து துள்ளுவது

எண்ண எண்ண

எண்ணெத்திற்கொன்றென

எழுந்து வந்து

பிணைந்து புணர்கிறது

எண்ணாதிருக்கையில்

எண்ணாதே என்பதே எண்ணமென்றாகி எழுகிறது

அஞ்சாதே என எண்ணுகையில்

உடலுக்குள் கை விரிக்கும் பேயென

விரிகிறது பயம்

அருவருக்காதே என்றால்

நத்தையென அத்தனை புலன்களும்

உள்ளொடுங்க சுருங்குகின்றன

திளைக்காதே எனும் போது

சிணுங்கல்

உச்சத்தின் ஒலி

பூ வியர்வை

பெருமூச்சு

மென் சிரிப்பு

முத்தம்

விலகாதே என்றால்

அடுத்த கணம் விலகுகிறது

நீ உருகித் தொழும்

வெறுத்து ஒதுக்கும்

விவாதித்து மறுக்கும்

அல்லது ஏற்கும்

விளையாடும்

காதலிக்கும்

கண்டுருகும்

கட்டுண்டிருக்கும்

ஒவ்வொரு கடவுளின்

உற்பத்தியையும் கண்டவன் நான்

முதிர்ந்து மெலிந்து இறந்த அத்தனை கடவுளுக்கும்

என் வணக்கங்கள்

வலுத்து புணர்ந்து பெருகும்

இன்றைய பெருங்கடவுளருக்கு

என் வாழ்த்து

எழப்போகும்

குட்டிக் கடவுளருக்கு

என் முத்தம்

------

உன்னை நோக்கி நீளும் கை

எல்லா உயிரிலும் எழுகிறது வேட்கை

மேன்மைக்கென

எந்நிலை அடைந்தும்

எவ்வளவு சுருங்கியும்

தரை தட்டித் தாழ்ந்தும்

தன்மானம் இழந்தும்

தவித்துத் துடித்து தாவி ஏற எழுகிறது உள்ளொன்று

நண்பனே தோழியே

உன் கைத்தொட நீளும் என் கரங்களை

எத்தனை நாள் நான் உள்ளிழுப்பது

உன்னை எலும்புகள் நெறிபட அணைக்க

அணைக்கப்பட எத்தனை காலம் காத்திருப்பது

குடித்து பல் இளித்தபடி செல்லும் என் தகப்பனே

உன் ஒயர் கூடை நுனியில் தெரியும் இனிப்பை உண்ணப் போகும்

குட்டிக்கு என் முத்தம்

தோழி உன் முழங்காலை அணைந்தபடி செல்லும்

உன் மூன்று தொடாத மைந்தனுக்கு

என் கிள்ளல்

ஒளிப்புள்ளிகள் மின்னும் விடியல் நதியென

நிமிர்வில் வெட்கம் மின்ன அலைபேசும் தோழியே

உனக்கென் அன்பு

சாகக்கிடக்கும் பொக்கைவாய் பிச்சைக்கார கிழவி

சாக்கடையில் உறங்கும் இளைஞன்

விரைந்தடி வைக்கும் சிறுவன்

திரும்பிச் சிரிக்கும் சிறுமி

முட்டாள் நண்பன்

முன்கோபம் மிகுந்த தோழி

திட்டும் அன்னை

அடிக்கும் அப்பா

திகைக்கும் தமையன்

நழுவும் தமக்கை

சலிக்கும் முதுகிழவி

உங்கள் ஒவ்வொருக்கும்

என் காதல்

நண்பனே நீ அறிவாயா

நீ வெடித்து சிரிக்கையில்

உன் கை பிடித்துலுக்கி

'என்னன்னு சொல்லு என்னன்னு சொல்லு' என நச்சரிக்கும்

அச்சிறுமி நானென

தோழி உனக்குத் தெரியுமா

உன் நாணச் சிவப்பில்

சினத்தின்  நிமிர்வில்

தனிமையின் கலக்கத்தில்

கனிவின் சிரிப்பில்

நீ கை தொட்டு பேச விழையும்

அச்சிறுவன் நானென

நண்பனே தோழியே

எதுவும் சாத்தியமல்ல என்றறிருந்தும்

எதற்கிப்படி எக்காளமிடுகிறது

இந்த மட நெஞ்சு

உங்கள் ஒவ்வொருவரையும்

கை சோர

கண்ணீர் வார

உடற்சூடழிய

உள்ளம் நெகிழ

அணைத்து மகிழ்வதே

வாழ்வின் லட்சியம் என ஒருவன் சொன்னால்

நிச்சயம் சிரிப்பீர்கள் தானே

சிரிக்கலாம்

எதிர்முனையில் இப்படி ஒருவன் இருக்கையில்

------

உனக்கான நான்

உனக்கான பீடம் மறுக்கப்படும் போது

உன் குரல் கேட்கப்படாமலாகும் போது

உன் செயல்கள் ஏளனிக்கப்படும் போது

உன் இருப்பு அவசியமற்றதாகும் போது

உன் கண்ணீரில் உப்புச் செறிவு குறையும் போது

நீ மௌனித்து தனித்தழும் போது

சொல்லென மாற்றாத வேதனையை உள் உணரும் போது

எழுந்து நின்று எதிர் கொண்டே ஆகவேண்டும் எனும்போது

நான் என்னை பிறப்பித்துக் கொள்கிறேன்

நான் நீயே

------

எஞ்சல்

குளக்கரை படிகளில் குளித்துச் சென்ற

உன் காலடித்தடம் உலரும் முன்னே

கண்டதிர்கிறது நெஞ்சு

உன் கூந்தல் உதிர்த்த

ஒவ்வொரு துளி முத்தும்

சென்று விழுந்ததிர்கிறது என் ஆழம்

நீயே உதிர்ந்து சென்றும்

எஞ்சியிருப்பது எது தோழி

மணம் விட்டுச் சென்ற மலர் போல

------

முத்தப் பெருவெளி

எவ்வதிர்வில் கண்டான் அவன் இச்சொல்லை

முத்தம்

இடைவெளியற்றது

இறுக்கமானது

மென்மையில் தொடங்கி

வன்மையாய் புணர்ந்து

மென்மையில் முடிகிறது

முத்தம்

நீர்கொடிகளுக்கிடையில்

நெளியும் நாகங்களென

மென்பஞ்சு சேக்கையில்

பிணையும் உடல்களென

மென்மைகளுக்கிடையில் நெளியும் வன்மை

முத்தம்

முதலும் முடிவுமானதாய்

முயங்கலில் முந்திச் செல்வதாய்

முத்தமன்றி வேறென்ன உண்டு இங்கு

மண்ணை முத்தமிடும் பாதம்

நஞ்சாய் முத்துகிறது நாகம்

மீனை முத்தித் தூக்குகிறது கொத்தி

பொட்டலை குனிந்து முத்துகிறது வெளி

முத்தம்

முத்தத்தில் காலமில்லை

ஆனால்

காலத்தை முத்தமிடுகிறது

கருணையெனும் முத்தம்

கருணையின் இதழ் சிவப்பை

பதறித் துடித்து அழித்து

பல் இளிக்கிறது காலம்

முத்தத்தின் குருதி

காலத்தில் உளர்வதேயில்லை

கருணையும் குருதியும் கலந்து துடிக்கிறது

முத்தம்

முத்தம்

ஒரு மீறல்

ஒரு பதற்றம்

ஒரு தவிப்பு

ஒரு அடக்கம்

ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டு முத்துகிறது

முத்தம் முத்தம் எனத் துடிக்கும்

சித்தம்

பார்த்தல் எனும் விழி முத்தம்

தீண்டல் எனும் விரல் முத்தம்

உணர்தல் எனும் உள முத்தம்

இதில் எவ்விடைவெளியில் நுழைகிறது

உன் இதழ் முத்தம்

முத்தங்கள் மோதும் வெளி

முத்தத்தில் உறையும் இறை

முத்தமேயென்றான நியதி

------

நுழை

கானலென கண்மயக்களித்து

அஞ்சி

தயங்கி

நெளிந்து

படர்ந்து

தழுவி

நதி நிறைத்தோடும்

வெள்ளம் போல்

உள்நிறைகின்றன

உன் சொற்கள்

------

Sunday, 15 January 2017

அனுதாபம்

முதலில் தவறெனத் தோன்றியது. ஆனால் தவறுகள் மட்டுமே அளிக்கும் ஒரு கிளர்ச்சி உண்டு. மிகப்பெரிய எதிரான மீறல்களை நிகழ்த்தும் போது மட்டும் மனம் சென்று விழும் விசை மிக்க நதியொன்று உண்டு. கடிவாளம் மீறித் திமிரும் அம்மனம் அச்சமென ஒழுக்கம் என அறம் என போடும் வேடங்களை ஒரு தேர்ந்த கவர்ச்சியான திறன் மிகுந்த தொழில் முறை வேசியாலும் மிஞ்சி விட முடியாது. எழுதாமல் இருக்க முடியவில்லை.

ஒருவேளை அனு அந்த மீறலே உன்னை நோக்கி என்னைத் தூண்டியதா? ஆறு வருடங்கள் நான் அவனை நேசிக்கிறேன் என என்னிடம் நீ சொன்னது வெறும் எண் தானடி. இரண்டாயிரத்து சொச்சம் நாட்கள் ஒருவனை விரும்பினேன் என நீ சொன்னபோதே முடிவு செய்துவிட்டேன் நீ தேர்ந்த நடிகை அல்லது ஏமாளி அல்லது பசப்புகாரி என. இம்மூன்றில் எத்தகைய குணம் ஒரு பெண்ணிடம் இருந்தாலும் அவளைக் கையாள்வது அத்தனை சுலபம் என் கண்மணியே. ஆனால் அத்தனைக்கும் முன்னால் ஒன்றுண்டு. அது பரிசுத்தமான பொறாமை. எனக்கு நடக்கவில்லை அல்லது என்னால் அடையமுடியவில்லை என்று ஏங்கும் தூய்மையான ஆங்காரம். அன்பே அதன்முன் எதுவுமே நிற்க முடியாது. என்னை உலுக்கி உலுக்கி உன்னை நோக்கித் தள்ளியது உன் தெளிவு தானடி. இத்தனை தெளிவும் துணிவும் எவ்வுயிருக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல. எப்படி எல்லாமோ உன்னை நெருங்கினேன். சூழ்ந்தேன். ஆனால் நீ ஆறு வருடங்கள் ஒருவனை உருகி விரும்புவதை கண்ணீர் மின்ன என்னிடம் ஒப்புவித்த போது ஓங்கி அறையும் ஒரு எண்ணம் எழுந்தது. ஆனால் அடுத்த நொடியே இயல்படைந்தேன். உன் அத்தனை தெளிவுகளும் நீ கட்டமைத்தவை. உன் வேடங்கள். உன் ஆழ்மனக் குளத்திற்கு மேலே ஒரு அழகான பாலிதீன் கவரை விரித்து வைத்திருக்கிறாய். அதிலிருக்கும் மெல்லிய விரிசல் வழியே உன் மனக் குளிர்ச்சியை அறிந்து கொண்டிருப்பவன் நீ ஆறு வருடங்கள் காதலிப்பதாக நம்பும் அந்த அப்பாவி. அவ்விரிசலை அவனே முழுதும் அடைத்திருப்பதால் உன் கவர் பரப்பை அனைவரும் உண்மையென நம்பி விடுகின்றனர். தோழி நான் அந்த கவரில் துளியிட்டு உன் மனம் நுழைய விரும்பும் மீனல்ல. அதனை மேன்மையான கொடூரத்துடன் கிழித்தெரிய எழுந்தவன்.

நீ ஒவ்வொரு முறை பலகீனமாக உணரும் போதும் உன் ஆறு வருடக் காதலை மார்புக் கவசமாக மாட்டிக் கொள்கிறாய். இவ்வருடங்களில் ஒரு முறை மட்டுமே அவன் உன்னை புணர்ந்ததாக நீ சொன்ன போது அதன் அடியில் மின்னிய மெல்லிய மிக மெல்லிய மிக மிக மெல்லிய ஏமாற்றத்தை என்னுள் இருக்கும் நானே வெறுக்கும் ஒரு கீழானவன் கண்டு கொண்டான். ஆனால் என் அணுக்கத்தினளே நீ அறிவாயா நீ என்னிடம் மிக விரும்பியது அக்கீழானவனையே என. ஆம் என் ஆருயிரே என்னை மிக விரும்புவதற்கும் மிக வெறுப்பதற்கும் எப்போதும் காரணமாய் நிற்பது அந்த கீழ்மையே. அதனை கைவிடு கைவிடு என தனிமையில் கதறியிருக்கிறேன். என்னை நானே வதைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னவளே நானே அஞ்சும் வகையில் அக்குணம் பிறரை ஈர்க்கிறது. அனு நீ அவன் குறித்து சொல்லிய ஒவ்வொரு சொல்லும் சதையில் கொட்டிய ஈயமென உருகிக் குழிந்து விட்டதடி.

மலங்க விழித்தபடி "ஹலோ அருண்" என அவனை அழைத்த உன் குரலுக்காக அந்த முகத்திற்காக அந்த கபடின்மைக்காக அந்த படபடப்பிற்காக அப்போது உன் உதட்டில் பூத்த வியர்வைக்காக உன் நெஞ்சில் ஏறிய துடிப்பிற்காக உன் உள்ளே பரவிய பரவசத்திற்காக அச்சத்திற்காக  ஆயிரம் முறை இறப்பேன். அதை எதிர் நின்று ஏற்ற அல்லது ஏற்கத் தெரியாத அவனை கோடி முறைக் கொல்வேன். மலரும் சூரியனை ஏற்கும் கடலடிவானென நானிருக்க ஏனடி உன் கதிர்களை முழுதாய் ஏற்றுச் சிவக்கத் தெரியாத அடர்காட்டில் மலர்ந்தாய். அய்யோ! அந்நொடிக்கென எத்தனை முறை இறந்து எத்தனை முறை நான் பிறப்பது. ஆடையற்ற உன் மழலைப் படத்தை என்னிடம் காண்பித்தாய். அந்த உடல் முழுதும் முத்தமிடும் அன்பே என்னுள் எழுந்தது. சென்ற வாரம் எடுக்கப்பட்ட இன்னொரு படத்தை காண்பித்தாய். அரை விழி கனத்து சரிந்திருந்த படமது. அப்படியே உன்னை அள்ளித்தூக்கி அனைத்து இறுக்கி இருப்பவை இரு உடல்கள் என்ற எண்ணமே அற்றுப் போக ஒட்டிக் கொள்ளும் வெறி எழுந்தது. ஆனால் என் சின்னஞ்சிறு பிரபஞ்சமே நீ கனிந்து நின்ற கணத்தில் கண்டிருக்கிறாய் அவனை. உன் மழலையும் மதர்ப்பும் முட்டித் தழுவிய உடல் பெண்மையும் பேதைமையும் ஒட்டிப் பிணைந்து உருகி வழிந்த கணங்களது.

அனு

அனு

அனு

அனு...

நீயே நினைத்தாலும் அக்கணத்தை எனக்கு கொடுத்து விட முடியுமா? முடியாதடி. இனியது முடியவே முடியாது. இனிப்பு பிடுங்கப்பட்ட குழந்தையென ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்தில் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்ட ஓட்டக்காரனென ஒற்றை மகனை இழந்த தந்தையென உறவுகள் இன்றி இருக்கும் கிழவனென என் மனம் கொள்ளும் பெரு வேதனையை உன்னால் புரிந்து கொள்ள முடியும். உன்னால் மாற்றியிருக்கவும் முடியும். ஆனால் என் கண்மனியே அக்காலம் முடிந்து விட்டது. உன்னில் ஊறிய அமிர்தத்தின் முதல் துளியை அவன் முன் வைத்து விட்டாய்.

முட்டாள். உன்னிலும் கீழான முட்டாள் முட்டாள் இவ்வுலகில் இருக்க முடியுமா! பேதை. பெரும் பேதை. நக்கித் தின்ன மட்டுமே தெரிந்தவனுக்கு அளிக்க வேண்டியது உணவல்லடி. ஊன். எல்லா உணவும் ஊன் தான் என்கிறாய். பின் எதற்கு சமைத்தல்.

"அயம் அனுராதா. பர்ஸ்ட் இயர் ஈசிஈ" என்று பல் இளித்திருக்கிறாய்.

பழிகாரி அதற்கெனவே உன்னை ஆயிரம் முறை வெட்டுவேன். உன்னை அறியவில்லையா நீ? உன்னுள் அத்தருணத்தில் எழுந்த காதலை உணர்ந்திருந்தாள் இன்றுவரை அந்த மடையனுடன் இருக்க மாட்டாய். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் கொண்டாடி வளர்த்த பேருணர்வடி அது. அது இறை. அது இன்மை. அது இனிமை. அது இவையனைத்தும். அதுவன்றி இங்கு எதுவுமே இல்லை. கருணை என்றனர் சிலர் அதை. கடவுள் என்றனர். தர்மம் என்றனர் அறம் என்றனர். அத்தனை மேன்மைகளும் ஒன்றிணைந்து உருகிச் சொட்டிய துளியை நாய் கண்ணோரம் விழுந்த நீர்த்துளியை புறங்காலால் துடைத்தெறிவது போல துடைத்தெறிந்து அவன் சொல்லி இருக்கிறான் "பர்ஸ்ட் இயரா? இந்த ரெக்கார்ட் நோட் நாளைக்கு சம்மிட் பண்ணனும். பினிஷ் இட் அண்ட் கிவ் இட் இன் த மானிங்."

சீ கேடுகெட்டவளே. நீயெல்லாம் செத்துப் போகலாம். அடிமையாய் இருப்பதற்கென்றே பரிணாமம் நிமிர்த்திய முதுகை கூனிக் கொள்ளும் வீணனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம். மகத்தானவளாக எழுந்திருக்க வேண்டாமா? உன் கேடு கெட்ட ஒழுக்கமும் உன் எலிப் பொந்து வீட்டு வாழ்க்கையும் உன்னைத் தடுத்ததா? பேதையே! அத்தனை ஆணும் பெண்ணை உள்ளூர அஞ்சுபவனே. அந்த அச்சத்தை அவன் முன் சமர்ப்பிக்காது இங்கு வீரனென ஒருவனும் எழுந்து விட முடியாது. அவனை உருகிக் காதலித்தாலாம். அவனை முதலில் பார்த்த நாள் அவனிடம் காதலை சொல்லிய நாள் அவனுடன் படுத்த நாளென அனைத்தையும் குறித்து வைத்திருக்கிறாய். அறிவில்லையா உனக்கு? ஆதவி அவள் ஒளியூட்டிய இவ்வுலகை குனிந்து தான் பார்ப்பாள். மண்ணுக்கடியில் நுழைந்து அண்ணாந்து பார்க்க மாட்டாள்.

நீ அவனிடம் காதலைச் சொன்ன அக்கணம். நான் எண்ணி எண்ணி சிரிக்கும் கசப்பான நகைச்சுவை நாடகத் தருணம் அது.

அவன் "அனும்மா."

அவன் அப்படி அழைத்த மிறட்சியுட்ன் நீ "ம்."

அவன் சிறுநீர் கழிக்க ஆசிரியையிடம் அனுமதி பெறும் சிறுவனின் தொணியுடன் "ஐ கேன்ட் கன்ட்ரோல் அனு. ஐ லவ் யு."

உன் கண்களில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறான் தேர்ந்த வேசியை அலற மெய்யாக அலற வைக்கும் உத்வேகத்துடன். என் செல்ல மடச்சியின் முகத்தில் மாறுதல் இல்லை. அன்றிலிருந்து இன்று வரை பெண்ணை ஈர்த்திழுக்கும் ஆணின் இறுதி ஆயுதம் தன்னிரக்கம். அதை எடுக்கிறான்.

"அனு நீ இப்பவே ஓகே சொல்ல வேண்டாம்" என்றவன் சற்று நேரம் கழித்து முகத்தை முடிந்த மட்டும் சுருக்கிக் கொண்டு "சரி எப்பவுமே சொல்ல வேண்டாம். ஆனா இந்த செகண்ட் என்னோட லைப் முடிஞ்சது. உங்கிட்ட லவ்வ சொன்னது என்னோட பெஸ்ட் மொமண்ட். அது போதும் அனு" என்றவனின் விழிகளில் சில நீர்த்துளிகளை பார்த்துவிட்டாய்.

அனு அழுது அடம்பிடித்து அம்மாவிடம் இனிப்பு வாங்கித் தின்னும் எளிய குழந்தையின் கண்ணீர் அது. கண்ணீரைக் காணாமல் வளர்ந்தவளே நீ இரங்க அதுவே போதுமானதாய் இருந்திருக்கிறது. எது வேண்டுமானாலும் சொல் அவன் மேல் உனக்குப் பிறந்தது இரக்கம். அதை கெஞ்சிக் கெஞ்சி கொஞ்சிக் கொஞ்சி மிஞ்சி மிஞ்சி உன்னை காதலென நம்ப வைத்திருக்கிறான். பாவம் அவனும் அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறான்.

"அருண் ஐ லவ் யூ" என்று நீ சொன்னதே உன்னையும் அறியாமல் நீ சொன்ன மிகப்பெரிய பொய்.

என் சிறுமியே அறிய முடிகிறதா உன்னால் நீ இழந்ததென்னவென்று? 

அடைய முடியாதவற்றால் அடைத்துக் கிடக்கிறது என் இறந்தகாலம்.

அடியேய் உனக்கும் அப்படித்தான். எல்லாம் அடைந்து விட்டேன் பெருங்காதலை உணர்ந்து கொண்டேன் என மீண்டும் பசப்பாதே. நீயும் அறிவாய் நீ இழந்ததென்னவென்று.

அனு நீ இழந்தது சீண்டலை. அவமானத்தை. பெருந்துயரை. தற்கொலை செய்து கொள்ளும் வெறியை. புறக்கணிப்பை. ஏளனத்தை. பயத்தை. வெற்றியை. பெருங்காமத்தை. தவிப்பை. ஒன்றும் செய்ய முடியாமையை. வெறுப்பை. வெறுத்தால் மட்டுமே அடையக்கூடிய மகத்தான புரிதலை. அப்புரிதலால் மட்டுமே தொடக்கூடிய ஆணின் ஆழத்தை. அதன் வழியே அவன் ஆணவத்தை. அந்த ஆணவத்தை இறுகப் பற்றி இருக்கும் அவன் ஆளுமையை. அவ்வாளுமையால் அவன் அடைந்த அன்பை. அதுவே உன்னில் பெருக்கெடுத்திருக்கும் பேரன்பென.

தோழி நீ அறியவேயில்லை. பொருட்களும் நேரமும் அல்ல அன்பை வெளிப்படுத்தும் வழி. பொருட்படுத்தாமையே அன்பு. எந்நேரமும் உன்னையே எண்ணிக்கொண்டு உன்னிடம் அதை சொல்லத் தயங்கி ஒவ்வொரு பார்வையிலும் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு செயலிலும் அந்த அக்கறையின் அன்பின் பதற்றத்தின் களிம்பினை பூசிவிட்டு விடும் செயலின்மையே பெருங்காதலடி என் உயிர்த்தோழி.

இத்தனை சொற்களும் உனக்கல்ல. எனக்கு.

எத்தனை மகத்தானவள் நீ. மகத்தானவை மட்டுமே மட்டமானவற்றை தேர்ந்தெடுக்கின்றன.

அவனுடைய விந்தினைப் பெற்று ஒரு சதைத்திரளை உலகில் உலவ விடுவாய்.

உன் விழிகளின் தடுமாற்றங்களை உன் முக மாற்றங்களை உன் மென் குறும்புச் சிரிப்பை கல்லென முகமிருகும் உன் ஆழமறிய முடியாப் பெருங்கோபத்தை எரித்து விடும் மூச்சின் பெருந்தாபத்தை நிமிர்ந்து விழி நோக்கும் உன் கம்பீரத்தை விழி சரிய நிலம் நோக்கும் உன் நாணத்தை அவன் அறியவே போவதில்லை.

உன் அத்தனை அழகுகளும் அழகின்மைகளும் அடர்ந்து மண்டிய காடடி என் ஆழ்மனம்.

அங்கொரு புழுவென புதர் மிருகமென மீனென மானனெ சிம்மமென வேங்கையென தென்றலென புயலென மழையென இரவென மணமென மந்தகாசமென நிறைந்து கிடக்கிறாயடி என் பெருந்தேவி.

நான் உன்னை வாழ்த்தப் போவதில்லை. என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Sunday, 1 January 2017

சில கவிதைகள் - 2

இனிப்பு

உப்புச் சுவையும் எச்சில் மணமுமே

உதட்டு முத்தம்

தோழி

பிறகு இனிப்பென்பதென்ன?

முத்தம் இனிப்பல்ல

ஒவ்வொரு இனிப்பும்

முத்தமே

------

பூசனை இலைப் பீப்பிகள் போல

சுற்றி அழுகின்றன குழந்தைகள்

நெரிசலான பேருந்து

------

அது மட்டுமெனில் அது மட்டும்

பால் மணம் மறந்த நாட்களில்

அம்மாவின் அடிவயிறோடு ஒட்டி உறங்கிய பொழுதுகளில் உணர்ந்த உடல்மணம்

தன்வலுவறிய எட்டொண்பது வயதுகளில்

இரு கை நீட்டித் தூக்கிய ஓடிய அக்கைகளின் முலை மணம்

அடர் மழைச் சாரலில் ஆட்டோவின் ஓரம் அமர்ந்திருந்தவனை இழுத்தருகமர்த்திய அறியா மூத்தவளின் உடற்சூடு

இவற்றில் நான் உணர்ந்தது நீ எண்ணும் ஒன்று தான் எனில்

தோழி

தவறில்லை

உன்னை நோக்க வரளும் என் உதடுகளும்

தவித்துத் துடித்து விலகும் விழிகளும்

காமம் காமம் என மட்டும் துடிப்பதாய் எண்ணிக்கொள்

------

ஒன்று மற்றொன்று

பிறர் கண் படா

கண நேரத்தில்

கன்னம் உப்ப வைத்து

நுனி நா நீட்டி

புருவமுயர்த்தி

ஒரு கண் மூடி

இதழ்கள் குவித்து

பழிப்பு காட்டுபவளை

உள்ளங்கைக்குள் சுருட்டித் தூக்கி

உள்ளுக்குள் உறைத்து விடச் சொல்கிறது

ஒன்று

நெற்றியில் கை வைத்து

புறங்கை தொட்டு

உடல் சூடுணர்பவளின்

உகந்தது கொணர்ந்து

தெளிகையில் மலர்ந்து

நடுங்குகையில் நகுந்து

இமைக்கும் கணத்திலும்

மறவாதவளின்

பேருருவக் கனிவில்

கைமகவென

கண் மூடி

களித்துறங்கத் துடிக்கிறது

மற்றொன்று

------
கோரிக்கை

என்னால் மன்னிக்கப்படுவதற்கான

எல்லாத் தகுதிகளையும்

வளர்த்துக் கொண்டிருக்கிறாய்

மன்னிப்பு கேள் என்பதையும்

நானே நினைவுறுத்துகிறேன்

மன்னித்துவிடுகிறேன்

தயவு செய்

தயவு செய்து

என்னிடம் மன்னிப்பு கேள்

பொய்யாகவேணும்

------

தயக்கச்சலிப்புடன்

வேகம் குறைத்த வலக்கை

விர்ரென ஏற்றுகிறது

விடுபட்ட வேகத்தை

எதிர்வருவது

ஆம்புலன்ஸ் அல்ல

அமரர் ஊர்தி என

விழியறிந்ததும்

------

மருந்து கொடுங்கள்

எதிர்வரும் ஒவ்வொரு இணையுதடுகளிலும்

அழுந்தப் பதிக்கச் சொல்லும்

என் உதடுகளின்

நமைச்சலுக்கு

-----

பேயன்பு

அம்மா

இல்லாத பயத்தினை

இழுத்து வரவழைத்து

உன் அடிவயிற்றுச் சூட்டின்

அனலில் பயந்து ஒளிந்து

புதைந்து நெளிகையில்

ஆதூரத்துடன் என் முதுகை வருடுகிறது

பேய்

----