Wednesday 26 September 2018

ஈர்ப்பு குறித்து பவித்ரா

அன்பு  சுரேஷ்,

வணக்கம்.. ஜெயமோகன் அவர்களது தளத்தில் தான் "ஈர்ப்பு" வாசித்தேன்.. அதை ஒட்டி நடந்த விவாதங்களையும் வாசித்தேன்.. எனது கருத்துகளைப் பகிரவே இந்த அஞ்சல்..

ஈர்ப்பு சற்றே நெடுங்கதை தான்..  "எனக்குஎல்லாமும் தோராயமாகத்தான் நினைவிருக்கிறது"  என்று துவங்குவதில் இருந்தே, என் எதிரில் ஒருவர் அமர்ந்து அவரைப் பற்றி பேசுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டு விடுகிறது. இறுதி வாக்கியம் வரை, தொய்வின்றி அந்தச் சரடை  இழுத்துச் செல்வது உங்கள் கதைமொழியின் வலிமை.. அதற்கு பாராட்டுகள்..  ஆண் பெண் உறவு குறித்த எத்தனையோ கதைகளை படித்திருக்கிறேன்.. அவற்றில் எல்லாம் இல்லாத, நிர்த்தாட்சண்யமாக ஸ்கேன் செய்தது போல் பெண் மனதின் அக ஆழத்தை தொட்டு விட்டது தான் இக்கதையின் வெற்றியாக நான் கருதுகிறேன்.. பெண்களைத் தூற்றுவது என்ற தன்மையுடன் இது இல்லை.. ஒரு மனிதன், தன் அனுபவத்திலிருந்து பெண்களின் நடவடிக்கையை, போலித்தனத்தை, கீழ்மையை, அலசி ஆராய்ந்து  அப்பட்டமாக வெளிப்படுத்தியவை தான் ஈர்ப்பு முழுவதும் உள்ளது.  அக்கதை சொல்லியின் பார்வையுடன் பயணித்தால் முழுமையாக உணர முடியும்..

சமீபத்தில் இரு குழந்தைகளைக் கொன்று விட்ட பெண்ணைப் பற்றிய பரபரப்பு செய்திகளை, சமூகம் எவ்வாறு கையாண்டது என்பதை செய்த்தித்தாள், தொலைக்காட்சி, வலைத்தளங்களில் பார்த்த பின், ஈர்ப்புக்கு ஏன் இத்தனை விமர்சனம் வருகிறது என்பதைப் புர்ந்து கொள்வதில் சிரமம் இல்லை.. புனித பிம்பத்தை கிழித்தெறிந்தது தான் எதிர்ப்புக்கு காரணம்..

ஜெயமோகன் அவர்களின் பதிவையும் படித்தேன்.. அதில் அவர்

"
இக்கதையின் தரிசனரீதியான போதாமை ஒன்றுண்டு. எனக்கு அது என்னுடைய அவதானிப்பாகவே உள்ளது. கதைசொல்லி சூழ்ச்சி நிறைந்தவன். ஆகவே மொத்த ஆண்பெண் உறவையும் சூழ்ச்சிகளாக, காய்நகர்த்தல்களாக சித்தரிக்கிறான். ஆகவே கதையே உறவுகள் என்பவை ஒருவகையான சூழ்ச்சிவலைதான் என்ற பார்வையை உருவாக்கி முன்வைக்கிறது
என் அவதானிப்பில் பெரும்பாலும் மானுட உறவுகள் உணர்ச்சிகரமான அசட்டுத்தனத்தாலும், அன்றாடச் சலிப்பிலிருந்து தப்ப விழையும் துடிப்பினாலும்தான் உருவாகின்றன. ஆகவே இக்கதை தன்னளவில் எல்லைக்குட்பட்டது என நினைக்கிறேன்" இவ்வாறு கூறுகிறார்.

என்னைப் பொறுத்தவரை, உறவுகள் முதல் அறிமுகம் வரை இவ்வாறு உருவாகலாம்.. உறவின் இழை நெய்யத் தொடங்கும் போதே கணக்குகளும், மதிப்பீடுகளும்  இருவரிடமும் உருவாகத் தொடங்கி விடுகின்றன என்பதே மானுடத்தின் கீழ்மை.. அதை அப்பட்டமாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.. அந்த கணக்குகளின் அளவு, நுண்மை, வேண்டுமானால் மாறுபடலாம்... ஒருவரையொருவர் ஜெயிக்கும் சூதாட்டமாய் தான் ஆண் பெண் உறவு எல்லா தளங்களிலும் இயங்குகிறது..

சுரேஷ் , உங்களின் புகைப்படம் பார்த்த பின் நீங்கள் தான் இதை எழுதினீர்கள் என்று நம்புவது சற்றே கடினம் தான்.. இத்தனை சிக்கலான கதைக்களனை அழகாய் கையாண்டிருக்கிறீர்கள்..

சுரேஷ்,

இரு விஷயங்கள் என் முந்தைய அஞ்சலுடன் இணைக்கப்பட வேண்டும்..

பொசுங்கைத்தனம் என்ற வார்த்தையை, நான் இதற்கு முன்னர் கேள்விப்பட்டதே இல்லை.. ஈர்ப்பின் மையப்புள்ளி அவ்வார்த்தை தான் என்று நினைக்கிறேன்..

"ஆண்கள் பெரும்பாலும் இரண்டுவகை தான். பெண்ணின் விரிசலை சரியாக உணர்ந்து அங்கு தாக்கி அவளுள் நுழைகிறவர்கள். விரிசலை கண்டுபிடிக்கும் நாசூக்கு இல்லாமல் அவளை முட்டிக்கொண்டிருப்பவர்கள்."

இந்தக்கணிப்பு மிகச் சத்தியமானது...

இறுதியில் சொல்லும், சாலையை இருட்டில் கடக்கும் பாம்பு போல என்ற சொல்லாடல் உங்கள் தனித்துவம்.. அதே போல், "பிளக்கப்பட்ட ஆழமான புண் போன்றிருந்தனஅவ்வுதடுகள்."

இந்த வெளிப்பாடு கதைசொல்லியின் நஞ்சூறிய சிந்தனைக்குறியீடு..

அருமை..

வாழ்த்துக்கள்

பவித்ரா

ஈர்ப்பு வாசிக்க

https://solvanam.com/2018/08/ஈர்ப்பு/

Friday 14 September 2018

குட்டியப்பா - கேப்ஸ்யூல் கதை

காவக்காரன் மேட்டுக்கு போனால்தான் சாமிவரும் என்று மாரிமுத்து குட்டியப்பா சொல்லியபோது அவர் விபூதியடித்தால்தான் வீட்டுக்கு வரமுடியும் என்று மண்டபத்தில் காத்திருக்கும் மணமக்களை எண்ணி பீதி கொண்டு மண்டபத்திற்கு எதிர்திசையில் இருக்கும் மேட்டுக்கு செல்வதற்கு முன் டாஸ்மாக்கில் நிறுத்தி குட்டியப்பாவுக்கு ரொம்பவும் எனக்கு கொஞ்சமும் வாங்கி ஊற்றிக்கொண்டு நூறில் வைத்து வண்டியைத்திருகி குட்டியப்பாவை மேட்டில் இறக்கியதும் குடியாலோ கடவுளாலோ அவர் உடற்தசைகள் துள்ள பதமாக அவரை பைக்கில் ஏற்றியதும் "விபூதிய மறந்துட்டண்டா" என்றவர் கத்த யூடர்ன் அடித்து அவசரமாக விபூதியை எடுத்துக்கொண்டு நல்லநேரம் முடிவதற்குள் மண்டபத்துக்குள் நாங்கள் நுழைந்தபோது வெளியேறக்காத்திருந்த மணமக்கள் மீது குட்டியப்பா வந்தவேகத்தில் துள்ளிக்கொண்டே பாலிதீன் பைக்குள் கைவிட்டு விபூதியை எடுத்து ஓங்கி அடிக்கப்போகும் சமயத்தில்தான் அது எறும்பைக் கொல்லும் பூச்சிபௌடர் என்று எனக்குத் தெரிந்தும் தாமதமாகிவிட்டதால் மணமக்கள் சகிதம் குட்டியப்பா மயங்கிவிழுந்தார்.

Monday 3 September 2018

ஈர்ப்பு - சில எதிர்வினைகள்

ஈர்ப்பு கதை இணைப்பு

ஈர்ப்பு நெடுங்கதை, தற்கால நவீன வாழ்க்கையின் ஆண், பெண் உறவு நிலைகளின் உளவியல் ரீதியான சிக்கல்களை கூரிய அனுபவச் சித்தரிப்புகளுடன் எழுதப்பட்டிருக்கிறது. கதையின் நாயகன் நடுந்தர வயதை தொடும் வயதில் இருப்பவன். அவனின் வாழ்வில் பெண்கள் அவனை யாரும் பொருட்படுத்தவில்லை. அவனின் பித்தை அறிவை அவர்கள் சுமையாக நினைத்து விலகிவிடுகிறார்கள், ஒவ்வொரு அனுபங்களின் வழியே அவன் அதற்கான காரணங்களை அறிந்துகொள்கிறான். இரைக்காக காத்திருக்கும் மலைப்பாம்பாய் மாறுகிறான். பாய்ந்து குருதி குடிக்கக் காத்திருக்கும் விலங்கு. சிந்து கூரிய நுண்ணுணர்வால் உணர்ந்து அந்த மிருகத்தை தண்டிக்கிறாள்.

அறிவு ஜீவி காதலில் விழமுடியாது. அவன் அகங்காரம் பெண்மையின் காலடியில் வணங்குவதை ஏற்றுக்கொள்ளாது. வணங்காமல் பெருங்காதலை அளிக்க அறிவுஜீவிப் பெண்களும் விரும்புவதில்லை.  Suresh Pradheep

தண்டபாணி முருகேசன்

உங்களது மொழியிலோ, உங்களது பானியிலோ இதை
விமர்சிப்பது கடினம்! ஆனாலும் தமிழில் முழுக்க முழுக்க
புது பாணியிலான கதை இது என்பது, குறைந்த வாசிப்பு அனுபவம் உள்ள எனது அபிப்ராயம்.
சில ஆண்களையும், நிறைய பெண்களையும் உளவியல்
அடையாளத்தைத்தவிர வேறெந்த அடையாளமுமின்றி சித்தரித்திருப்பது
முற்றிலும் புதுமை.
ஆனாலும் பல இடங்களில் பெண்மனதின் பிரத்யேகமான அடையாளங்கள்
பொதுமைப்படுத்தப்பட்டிருப்பது விவாதத்திற்கு உரியது,
அதேசமயம்,நிறைய பெண்களிடத்தில் ஊறிக்கிடக்கக்கூடிய
பொதுவான ஆழ்மன ரகசியங்களை தோண்டித்துருவி விசிறி
அடித்திருக்கிறீர்கள்.
காமத்தை ஒளித்து ஆண் நிகழ்த்தும் காதல் நைச்சியங்கள் பெண்களை
விஞ்சியவை அதனால்தான் பெண் எப்போதும் அச்சத்துடனும்,
எச்சரிக்கையுடனும், நம்பிக்கையின்மையுடனும் நடந்து கொள்கிறாள்.
இந்த கதையின் நாயகனும், ஒரேஒரு பெண்ணின் நம்பிக்கையையேனும்
வஞ்சத்தால்கூட வென்றெடுக்க இயலாத நம்பிக்கை இல்லாதவனாக
இருக்கிறான்.
ஒரு கலைஞனைப்போல சதா மனித மனங்களை உற்றுநோக்கி அதன் கயமைகளை கண்டறிந்துவிடக்கூடிய , ஒரு பெண்ணிடத்தில் முட்டாள்தனமாக கூட காதலில்விழ இயலாத அவஸ்தை நிறைந்தவனாகத்தான் எனக்குப்படுகிறான்.
உங்கள் மொழியில் அவன் ஒரு பொசுங்கையாயிருப்பது
சூழலின் துரதிர்ஷ்டம்தான்.
எனது பார்வையில் இருக்கும் விலகலைக்கூட நீங்கள்தான் குறிப்பிட்டுச்
சொல்லமுடியும். மற்றபடி எவரும் குறைத்து மதிப்பிடமுடியாத அருமையான
முயற்சி.

நந்தி செல்லதுரை

புரிந்திட சற்று கடினத்தன்மை கொண்டிருந்தாலும், கதை என்ன சொல்ல வருகிறது என்னும் சமன்பாட்டை சுற்றியே சகலமும் கட்டமைக்கப்படுகிறது.
   மற்றவர்களிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்தி காட்டணும் என்ற பெரும் முயற்சியில் இவ்விதம் புதிது புதிதான உத்திகளைக் கையாள்வது சவாலான விசயம்தான். இதில் உங்களுக்கு வெற்றி கிட்டவே செய்திருக்கிறது.
    * அறை எடுத்து தங்கியிருப்பவன்- வீட்டு கடனை அடைக்க முடியாதவன்
   * அப்பா,அம்மா, உறவினர் இல்லாதவன், நாற்பது வயதை நெருங்கியும் திருமணம் ஆகாதவன் ...... வயதான பெற்றோரைக் கொண்டவன்
   * பெண்களால் வெறுக்கப்படுகிறவன்...... துப்பிய எச்சிலை சூழும் எரும்புகளைப் போல பெண்களால் சூழப்பட்டவன்
    * தான் உண்டு தன் வேலை உண்டு என நினைப்பவன்........ மற்றவர்களுக்கு உதவி செய்பவன்
    * மிக பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டவன் ........ சுயநலவாதி
    * மோசமான நிகழ்வுகளால் நடத்தப் படுகிறவன் ......... பிறந்தநாள் கடந்து விட்டதையெண்ணி ஏங்குபவன்
   * சுயமைதுனம் செய்பவன் ....... நோயாளி
     இப்படி காட்டப்படும் இருவரும் ஒருவரே என்பது என்னுடைய அனுமானம். இது தவறாகவும் இருக்கலாம்.

    சிந்துவை புணர முற்படுகையில் அவன் தன் மேல் சட்டையை கழற்றி விட்டு அவளை முத்தமிடுகிறான். இந்த இடம் கதையில் முக்கியத்துவமானது என நினைக்கிறேன். அவளுக்கு ஏமாற்றமும் எரிச்சலும் உண்டாகும்படியாக அப்பொழுது என்ன நேர்ந்து விடுகிறது. வாசகனை குழப்பி தெளிவடைய வைக்கும் சூட்சமம் நிறைந்த முடிவிது.
  பாராட்டுகள்.... தோழா.

யேசுராஜ்