Wednesday, 22 November 2017

உதிர்தல் - கதை

மிகச் சிறிதாக சுதா புன்னகைத்தாள். நிமிர்ந்து பார்க்கவில்லை எனினும் என்னால் உணர முடிந்தது.

நிமிர்ந்த போது அம்முகத்தில் இருந்த புன்னகை அழுத்தி துடைக்கப்பட்டிருந்தது.

"என்னடி" என்றேன். ஒன்றுமில்லை என தலையசைத்தாள்.

"சொல்ல வந்தத சொல்லு"

"அம்மா கூப்டிச்சி"

"என்னையா?"

"என்ன"

"போவேண்டியது தான"

"பயமாருக்கு"

"அடிக்கமாட்டா போ"

"அடிச்சான்னா"

"நீ என்னைய வந்து அடி"

"செரி"

தலையை நொடித்தபடி சுதா ஓடிவிட்டாள். எனக்கு கவனம் குவிவதற்கு சற்று நேரம் பிடித்தது. கொஞ்ச நேரத்தில் சுதா அழும் சத்தம் கேட்டது. பின்னால் ராகினியின் "ம்" என அதட்டும் குரல். சுதா அழுதபடியே ஓடிவந்து "உன்னாலதான் உன்னாலதான்" என என்னை அடிக்கத் தொடங்கினாள்.

"சும்மா தான உட்காந்துட்டு இருக்க. அவளுக்கு ப்ராஜெக்ட் ஒர்க் பண்ண ஹெல்ப் பண்ணா என்ன" என எரிச்சலுடன் கேட்டபடி அலுவலகம் புறப்பட்டுச் சென்றாள். நானும் புறப்பட வேண்டும் வேலையை ராஜினாமா செய்வதற்காக. அந்த எண்ணம் ஒரு குதூகலத்தை அளித்தது. அந்த குதூகலம் வேலையை விட்டு வெளியேறுவதால் மட்டுமல்ல என்று உணர்ந்த போது அது ராகினியை நினைத்துதான் எனப் புரிந்தது. மணமாகி ஐந்து வருடங்கள் ஆகியும் ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு வேலையிலும் தரித்திருக்க முடியாத என்னை அவள் ஒன்றுமே கேட்டதில்லை. என்னைப் பற்றி பிறரிடம் குறையோ பெருமையோ அவள் பட்டுக் கொண்டதில்லை. நான் அவளின் ரகசியம் என நம்பிக் கொள்வதில் ஒரு திருப்தி ஏற்படத்தான் செய்கிறது.

சுதாவை பள்ளியில் விட்டபின் அலுவலகம் செல்லவும் மனம் வரவில்லை. ராகினியின் அலுவலகத்திற்குச் சென்றேன்.

"எதுக்கு வந்த" என காலையில் முறைத்துச் சென்றதன் தொடர்ச்சியை முகத்தில் தேக்கியவாறு சட்டென கேட்டாள்.

"சும்மா பாக்கதான்"

"பணம் வேணுமா"

"இருந்தா கொடு"

"ஃபைவ் ஹண்ட்ரட் தான் இருக்கு. மேல வேணுன்னா விட்ரா பண்ணிக்க" என ஒரு ஏ.டி.எம் கார்டை நீட்டியபின் பாஸ்வேர்ட் "சுதாவோட பர்த் டேட் அண்ட் மன்த்" என்றாள்.

நான் குழம்புவதைக் கண்டதும் "ஞாபகம் இல்லல்ல" என வெறுப்புடன் சிரித்தாள்.

நான் சொன்னேன். ஆனால் அவள் புன்னகைக்கவில்லை. திரும்பிச் சென்றவளை கூப்பிடத் தோன்றியது. ஆனால் அலுவலகம் வந்துவிட்டேன்.

"வாங்க சார். இன்னிக்கும் லேட்டா" என்றபடியே என் மேலாளர் முன்னே வந்தார்.

"நான் ரிசைன் பண்றேன் முரளி" என்றேன்.

சட்டென முகம் மாறி "ஏண்டா" என்றவன் "காஃபி ஷாப் போவலாம் வா" என்றான்.

"வேண்டாம்"

"என்ன பிராப்ளம் உனக்கு"

"நத்திங்"

"செகண்ட் தாட்?"

"இல்ல"

அவன் தோள் கழுத்தை நெருங்கி வருமாறு உயர்த்தினான். நான் வெளியேறினேன்.

அலுவலகத்தை விட்டு வெளியேறியபோது மனம் வெறுமை அடைந்திருந்தது. மீண்டும் ராகினியின் அலுவலகத்தில் போய் அமர்ந்தேன். ஆனால் அவளை அழைக்கவில்லை. இரண்டு மணி நேரமாக தலையை தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் என்னை அந்த வரவேற்பாளினி சற்றே வித்தியாசமாக பார்த்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. மதிய நேரம் அவளும் எழுந்து சென்றுவிட அவ்விடம் முழு வெறுமையை அடைந்தபோது ராகினி என்னை நோக்கி விரைவாக வரும் காலடிகளைக் கேட்டேன். நான் நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்கும் முன்னே என்னை அறைந்தாள்.

"கெளம்பு" என்றாள்.

நான் தயங்க "நான் ஹாஃப் டே லீவ் சொல்லிட்டேன்" என்றாள்.

வீட்டிற்கு வந்ததும் கைப்பையை சோஃபாவில் வீசிவிட்டு உதட்டில் அழுகையைத் தேக்கியபடி தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்துவிட்டாள்.

நான் "அம்மு" என அவள் கைகளைத் தொட்டேன்.தட்டிவிட்டாள். நான் அவளெதிரே தலை குனிந்து அமர்ந்திருந்தேன். அவிழ்ந்த கூந்தலை முடிந்து கொண்டு எழுந்து என்னருகே வந்து இரண்டு முழுக்கைகளாலும் சவரம் செய்யப்படாத கன்னங்களை அணைத்து அவளை நோக்கி என் முகத்தை தூக்கி "என்னம்மா ப்ராப்ளம் உனக்கு" என்றாள்.

என் முகம் கோமாளியைப் போல அவன் கைகளால் நடுவில் சப்பையாகப் போயிருந்தது. அதோடு கன்னங்களை அழுந்தப் பற்றியிருந்தாள். நான் இடவலமாக அவள் கைகளுக்குள் இருந்த என் தலையை அசைத்தேன். கைகளைத் தளர்த்தி நெற்றியில் முத்தமிட்டாள். நான் முகத்தில் எந்த உணர்வு மாற்றத்தையும் காட்டவில்லை போல. கனிவுடன் இருந்த அவள் முகத்தில் மீண்டும் கோபமும் சலிப்பும் படரத் தொடங்கியது. அவள் ஆர்வமில்லாமல் என்னருகே அமர்ந்தாள். நான் அவளது இடக்கையை எடுத்து என் கைகளுக்குள் வைத்துக் கொண்டேன். அதை அவள் கவனிக்காதது போல அலைபேசியை கிளறிக் கொண்டிருந்தது எனக்கு ஏனோ ஒரு உரிமையுணர்வை அளித்தது.

மீண்டும் "அம்மு" என்றேன்.

"டேய் எதுன்னா சொல்றதுன்னா சொல்லு. இல்லன்னா சும்மாரு. சும்மா அம்மு நொம்முங்காத எரிச்சலா இருக்கு" என்றாள்.

"சரி" என்று அவள் கையை விட்டுவிட்டேன்.

"டயர்டா இருக்கியா" என்றேன் சில நிமிட மௌனத்திற்குப் பிறகு.

"ம்?" என கேள்வியுடன் என்னைப் பார்த்தாள்.

பிறகு "ஆம்" என தலையசைத்தாள். அதன்பிறகு நான் ஒன்றும் கேட்கவில்லை. கொஞ்ச நேரத்தில் அலைபேசியில் ஏதோ வேகமாக எழுதியபடியே என் மேல் சாய்ந்தாள். கொஞ்ச நேரத்தில் தோளில் சாய்ந்தவாறே உறங்கிப் போனாள். சோஃபாவில் தலையணையை எடுத்து வைத்துவிட்டு அவள் கைப்பையில் வீட்டை உள்ளிருந்து திறப்பதற்கான மற்றொரு சாவி இருப்பதை உறுதி செய்து கொண்டு சுதாவை அழைப்பதெற்கென பள்ளிக்குச் சென்றேன்.

"அம்மா வரலயா"

"வீட்ல இருக்கா"

"நீ ஏன் வந்த?"

"அம்மா தூங்குறா"

"நீ எதுக்கு வந்த"

"வரக்கூடாதா"

"காலையில அடிச்சா அம்மா சாய்ங்காலம் ஐஸ்க்ரீம் வாங்கித் தரும்"

"ஃபோன் பண்ணி கேப்பமா?"

"தூங்குறான்னு சொன்னியே"

அவளுக்கு இரண்டு எனக்கு இரண்டாக நான்கு ஐஸ்க்ரீம்கள் தின்ற பிறகு "அப்பா இன்னிக்கு என்னோட டீரீட்" என அவள் புத்தகப் பையிலிருந்து ஒரு இருநூறு ரூபாய் நோட்டை எடுத்தாள்.

நான் சற்று துணுக்குற்று "அம்மா கொடுத்துச்சா" என்றேன்.

"ஆமா. இத கேட்டதுக்குதான் என்னைய அடிச்சது"

"நீ ஏன்டி அம்மாட்ட இதெல்லாம் கேக்குற"

"எப்படியும் நீதான் என்ன அழைக்க வருவேன்னு காலைலேயே தோணுச்சு"

அவள் வயதுக்கு அந்த தோணல் எல்லாம் அதிகமெனப்பட்டது.

வீடு பூட்டியிருந்தது. ஆனால் அவள் வீட்டில் இல்லை. இன்றுவரை தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். ராகினி வீட்டுக்குத் திரும்பவேயில்லை. அதன்பிறகு கிடைத்த வேலையை நான் விடவேயில்லை.

Monday, 20 November 2017

நறுமணம் - கதை

குளிக்கச் சென்றிருக்கிறாள் போல. மெத்தையில் வீடு திரும்பியபோது அணிந்திருந்த அதே சுடிதாருடன் தூங்கியிருக்கிறாள் என்பது மெத்தைக்கு கீழே கிடக்கும் காலணிகளால் தெரிகிறது. அவளது காலணிகள் ஓரிடத்தில் நின்று கழற்ற வேண்டியவை. அவளுக்கு நான் தான் அதை வாங்கிக் கொடுத்திருந்தேன்.

"என்ன இம்ச பண்றதுல உனக்கு என்னடா அப்படி சந்தோஷம்" என குறுஞ்செய்தியிட்டு அந்த செருப்பையும் புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தாள். நேரில் பேசுவதை விட அனுவின் எழுத்து மொழி அபாரமான வாஞ்சையும் பரிவும் உடையது.

"அப்புனு சாரிடா உன் ரிங்க அட்டெண்ட் பண்ண முடில. நா பதினஞ்சு நிமிஷத்துல ரெடியாய்டுவேண்டா குட்டிப்புள்ள நீ வந்துடு என்ன?" என காலை எழுந்ததும் அலைபேசி மென் சத்தமிட்டது. விடிகாலையில் பரிசுத்தமான மௌனத்தில் தென்னை ஓலைகளிலிருந்து மரத்தரையில் உதிரும் மழைத்துளிகளின் ஒலியைக் கேட்டுப் படுத்திருந்தேன். துணி கிழிபடும் ஒலியில் ஒரு அழுகையைக் கேட்டேன். நான் தான் அழுகிறேன் என்பதை சற்று நேரம் கழித்தே ஒரு திடுக்கிடலாக உணர்ந்தேன். நெஞ்சு நடுங்கியதால் அழுகை மேலும் பெருகியது. செருமல்களை கட்டுப்படுத்தியவாறு அலைபேசியுடன் ஓடி அந்த ஒலியை பதிந்து கொண்டேன்.

"ஹரி நீ ரொம்ப போலட் அண்ட் ஸ்டபர்னு நெனச்சேன்" என அனு முதன்முறையாக எனக்கு செய்தி அனுப்பியிருந்தாள். அவள் என்னை ஒருமையில் அழைப்பது ஒரு மாதம் கூட பார்க்காத ஒரு நிமிடம் கூட தொடர்ச்சியாக உரையாடாத ஒருத்தி என் குணத்தை கணிப்பது அதுவும் சரியாக கணிப்பது எல்லாம் சேர்த்து என்னை கோபமுறச் செய்தது. நான் பதில் அனுப்பவில்லை. மறுநாள் என்னைக் கண்டு அவள் நடுக்குற வேண்டும் என விழைந்தேன். எதிர்தரப்பில் இருப்பவர்கள் எம்பித் தொடக்கூடிய எல்லை ஒன்று நம்மில் உண்டு. அதற்கப்பால் சென்றுவிட்டால் எத்தகைய உறுதி உடையவரும் ஆடித்தான் போவார்கள். அப்படி அப்பால் போய் நிற்பது எனக்கு எளிதானதாகவே இருந்திருக்கிறது. ஏற்புணர்ச்சியே இல்லாத முகத்துடன் ஒரு வறண்ட புன்னகையை அவளுக்கு அளித்தேன்.

விழிகள் விரிய முகம் புன்னகையில் மலர என்னைக் கடந்தபடியே "ஷேரிட்ல சாங் அனுப்ப சொன்னா ரெக்காடிங்ஸ் எல்லாம் சேத்து அனுப்புறதா?" என்று சொன்னாள். பின்னர் பலமுறை அதை யோசித்திருக்கிறேன். அந்த முகமன்றி அவ்வார்த்தைகளன்றி கடந்து சென்றபடியே சொல்லும் பாவனையன்றி அனு அதை வேறெப்படி சொல்லி இருந்தாலும் நான் அவளை வெறுத்திருப்பேன். வேறெப்படியுமாக அந்த தருணத்தை மாற்றாதது எது? மழைத்துளிகள் சொட்டியதை பதிந்த போது என் குரலின் மென் விசும்பலும் பதிவாகி இருந்திருக்கிறது. நான் புன்னகைத்தேன். ஒருவேளை சத்தமில்லாமல் சிரிக்கப் பழகியபின் நான் உதிர்த்த உண்மையான முதல் புன்னகையாக அது இருந்திருக்கக்கூடும். இல்லையெனில் புன்னகை என்ற சொல்லை அதன் அர்த்தங்களுடன் நான் அறிந்த பிறகு என்னில் எழுந்த முதலும் கடைசியுமான ஒரேயொரு புன்னகையாக அது இருந்திருக்கக்கூடும்.

அனுவும் புன்னகைத்தாள். எந்த இரண்டாவது அப்படி மாற்றிலாமல் பொருந்த முடியுமா? ஒன்றென்றாகி ஒன்றுமில்லாமலாக முடியுமா? அப்படி பொருந்திப் போகும் கணம் காலத்திற்கு எப்படி பொருள்படும்? காலமும் இருந்திருக்குமா அக்கணத்தில்? அக்கணத்தினை அள்ளிப் பிடிக்கத்தான் இத்தனை ஓட்டமா? அந்த கணத்திலும் எங்களைச் சூழ்ந்து சில வெற்று நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கும் தானே. சிலவா? அக்கணத்தில் அதைத்தவிர பொருளுள்ள வேறென்ன நிகழ்ந்திருக்கும் இவ்வுலகில்? எங்கோ எவனோ யாரையோ சுட்டிருப்பான். ஏதாவது ஒரு விஞ்ஞானி எதையாவது கண்டுபிடித்திருப்பான். ஒரு கவிஞன் தன்னுடைய சிறந்த வரியை எழுதியிருப்பான். யாரோ யாரையோ முத்தமிட்டிருப்பார்கள். இவையெல்லாம் முக்கியமா என்ன? பொருந்திப் போதலை விட பெருநிகழ்வு வேறென்ன இருக்க முடியும் இங்கு? உடல்களால் முயங்கிப் பொருந்த முடியுமா? எண்ணங்களால்? புன்னகையால் முடிந்திருந்திருக்கிறது.

அதன்பின் அவள் என்னிடம் வேறெப்படியும் பேசவில்லை. கடந்த காலம் என எனக்கு ஒன்று இருந்திருக்கும் என்று அவள் எண்ணியதாகவே நினைவில் இல்லை. அப்புன்னகையின் வழியே என் இறந்த காலங்களை துடைத்து எறிந்துவிட்டவளாகவே அவள் என்னை நெருங்கினாள்.

"அப்பும்மா எந்திரிடா" என மறுநாளே அவள் செய்தி அனுப்புவாள் என நான் எண்ணியிருக்கவில்லை. ஒரு மாதிரி வயிற்றைப் பிசைவது போல இருந்தது. அழுகை வேறு வந்துவிட்டது. புறங்கையை பற்களால் கடித்துக் கொண்டேன்.

"ம்" என்று மட்டும் பதில் அனுப்பினேன்.

"அழாதடா கண்ணா" என்று பதில்.

அப்படியே அலைபேசித்திரையை முத்தமிட்டேன். ஆனால் அச்சொற்களை அனுவை எண்ணிக் கொள்ள மனம் தயங்கியது. என்னிடம் எதுவுமே சரியாக இல்லை எனப் புலம்பியது. பற்பசையை எடுக்கக்கூட கை பதற்றம் கொண்டு நடுங்கியது. முகத்தில் உரைக்கும் அளவுக்கு வெயிலடித்தும் உடல் வெடவெடத்தது.

"அழாதடா கண்ணா".

குளியறையில் மீண்டும் குறுகி அமர்ந்துவிட்டேன். வெகுநேரம் வாய்பொத்தி அழுதேன். ஏனென்று கேள்விகளற்ற அழுகை. அனுவின் கேசமும் விழிகளும் சிறு உதடுகளும் நினைவில் தோன்றிய போது மேலும் அழுகை பெருகியது. அழுகை ஓய்ந்த போது இன்னும் அழ வேண்டும் என்ற உந்துதல். அழ முடியாததன் ஆற்றாமை. அழுததை நினைத்து வெட்கவுணர்வு. அன்று உடை தரிக்கப் பிடிக்கவில்லை. அவ்வுடையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அவ்வறையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. என் வேலை குடும்பம் எதையும் நான் தேர்ந்தெடுக்கவில்லை. கோபம் வந்தது. பக்கத்தில் இருக்கும் துணிக்கடைக்கு ஓடிப்போய் புது உடைகள் வாங்கி வந்தேன். அதை அணிந்த போது மீண்டும் ஆங்காரம் பொங்கியது. அதை கிழித்து வீசினேன். மீண்டும் பழைய உடைகளை அணிந்து கொண்டு பழைய நானாகிப் போனேன்.

"செல்லம்" என மீண்டுமொரு செய்தி.

"அனு ஏன் இப்படி என்ட்ட பேசுற"

"எப்படி?"

"உனக்கே தெரியும்"

"வேற எப்படி பேசுறதாம்?"

நான் யோசித்தேன்.

"வேறெப்படி பேசுறது என் தங்கத்துகிட்ட. என்னோட குட்டிப்பூனக்குட்டி. என் ராஜா. அப்புகுட்டி"

நான் சிலைத்துவிட்டேன். மீண்டும் கைகள் நடுங்கின.

"டேய் அப்பு என்ன உனக்கு பிடிக்காதா?"

நான் எச்சில் விழுங்கினேன்.

"சொல்லுடா"

"பிடிக்கும்"

"பின்ன என்ன?"

"பின்ன என்னன்னா?"

"சரிடா நானே சொல்லித் தொலைக்கிறேன். நீ யோக்கியமாவே இருந்துக்கோ. ஐ நீட் யூ"

"அனு"

"ம்ம்ம்ம்?"

"எனக்கு ஒரு முத்தம் தருவியா?"

"அய்யோ என் செல்லத்துக்கு உடம்பு பூரா முத்தா"

அலைபேசியில்  இவ்வளவு பேசிய பின்னும் அதே புன்னகையுடன் தான் அனு என்னிடம் நேரில் பேசினாள். நான் அவளுக்கு உரிமையானவன் அவளை மீற முடியாதவன் என்ற பிம்பத்தை எங்கும் உருவாக்கினாள். தூரத்தில் இருக்கும் போது விரல் சுண்டியோ பெயர் சொல்லியோ என்னை அழைப்பாள். நானும் அவள் உருவாக்கும் உலகில் சந்தோஷமாக வலம்வரத் தொடங்கினேன். ஆனால் நான் சில நாட்களிலேயே விலகிவிட்டேன் என்பதை "அப்பும்மா இந்த வாரம் நம்ம ஊருக்குப் போறோம்" என்று அவள் அழைத்தபோது மனம் எரிச்சல் அடைந்த போது உணர்ந்தேன். அவள் வீடு கிராமத்தின் திட்டவட்டமோ நகரின் தெளிவோ இல்லாமல் இருந்தது. என்னை எங்கு நிறுத்த வேண்டும் என அவர்களுக்குத் தெரியவில்லை. மகள் ஒரு ஆணை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருவதை அவர்களின் சூழல் எப்படி எதிர்கொள்ளும் என்ற பயம் அவர்களிடம் தெரிந்தது. அனுவின் அப்பா என்னிடம் அறிவுப்பூர்வமாக பேச முனைந்து தன் அறிவின்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

மீண்டும் அலுவலகம் திரும்பியபோது அனுவுக்கு மாற்றலாகி இருந்தது. அதிகமாக அழுதாள். அதன்பிறகே அவளை அடிக்கடி சந்திக்கும்படியானது.

அடிக்கடி முத்தமிட்டாள். அந்த முத்தங்கள் மட்டுமே அவளை சகித்துக் கொள்ளச் செய்தன. எவ்வளவு அழகானப் பெண். வனப்பான உடல். எங்குமே சதை கூடவோ குறையவோ இல்லாத உடல். தூய்மையான முகம். ஆனால் மனதளவில் நான் அவளை விலகினேன் உடலால் நெருங்க நெருங்க.

முதலில் "அனு இனிமே வீட்டுக்கெல்லாம் கூப்பிடாத" என்று சற்று காட்டமாகவே சொன்னேன்.

பெரிய தவறிழைத்துவிட்டவள் போல அவள் முகம் கருத்தது. நான் கனிந்துவிட்டேன்.

"சாரி அனு. ஐ டோன்ட் மீனிட்" என ஏதோ நான் உளறத் தொடங்கியபோது அவள் அழத் தொடங்கிவிட்டாள்.

"எங்கள உனக்கு பிடிக்கலையா?" என அழுகையினூடே கேட்டாள்.

"ஏய் என்ன சொல்ற" என தோளை தொட்டபோது பாய்ந்து அணைத்துக் கொண்டு என்னை முத்தமிடத் தொடங்கினாள். கண்ணீரில் நனைந்த அவள் முகம் உப்புச்சுவையுடன் இருந்தது. உதடுகள் கூடுதலாக கரித்தன.

அனு தாங்கிக் கொள்ள முடியாதவளாக மாறிக் கொண்டிருந்தாள். அவளை ஏதேதோ பேசி அழச்செய்து முத்தங்கள் நோக்கியே கொண்டு சென்றேன். கண்ணீரும் முத்தங்களும் அற்ற விடைபெறல் போலியானது என அவள் நம்பும் அளவு அவளை இன்னொருத்தியாக மாற்றியே எடுத்துக் கொண்டேன். அன்பு தேயத்தேய நாங்கள் ஓயாமல் பேசினோம். சுற்றினோம். கண்ணீர் மல்கினோம். முத்தமிட்டுக் கொண்டோம். அவள் உடல் உடை இவற்றை மட்டுமே கவனிப்பவனாக நான் மாறிப்போயிருந்தேன்.

அனு என்னிடம் நெருங்கியே இருந்தாள். விழிகள் தொட்டிருக்கும் கணம் முழுக்க விரல்களும் தொட்டிருக்க வேண்டுமென விரும்பினாள்.

ஆனால் எனக்கு வேறொரு அனு வேண்டியிருந்தது."அழாதடா கண்ணா" என்று சொல்லிய அனு.

நான் அவள் மெத்தையில் உட்கார்ந்திருந்தேன். அவள் குளித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது. அவள் நேற்றிரவு அணிந்திருந்த சுடிதாரில் அவள் உடல் மணத்தை வியர்வை வாசம் காத்து வைத்திருக்கிறது. அந்தச் சுடிதாரில் இரவில் அவள் கண்ட கனவுகளின் சில துளிகள் எஞ்சி இருக்கலாம். என்னைக் கொஞ்சியவள் கூட அதில் இருந்திருக்கலாம். அவள் புன்னகை கூட அதில் உறைந்திருக்கலாம். முகத்தோடு சேர்த்து அவளை இறுக்கிக் கொண்டேன். உடல் எனும் தடையற்ற மனம். தூய மணம். ஏதோவொரு கணத்தில் என் சட்டையை கிழித்தெறிந்து அந்த சுடிதாரை உடுத்திக் கொண்டேன்.

அனு வெளியே வந்தாள்.

"இத நான் எடுத்துக்கவா?"

அதன்பின் அனு உட்பட பிற பெண்கள் என்னிடம் பேசுவதில்லை. ஆண்களும் தான்.

பெண்ணுடல் என்னும் பண்பாட்டு உருவகம்

தன்னை பதிவிரதையாக நிறுத்திக் கொண்டு பரத்தைகளுக்காக பேசும் குரலோ பரத்தையாகவே நின்று பச்சையாக சமூகத்தை வசை பாடும் குரலோ ஒலித்திருக்கலாம். ஆனால் இரண்டுமே உள்ளீடற்றவை. கங்கா பரத்தையோ பதிவிரதையோ அல்ல. ஒரு விபத்தின் வழியாக இரண்டையும் கடந்து அவள் “இன்றுக்கு” வந்து விடுகிறாள். வாழ்வின் முதல் திருப்பமே ஒரு ஆணுடலால் நிகழ்ந்ததான அச்சம்பவத்தில் தொடர்புடையவனை வஞ்சகனாக எண்ண முடியாத தவிப்புடன் யாரையும் வெறுக்க முடியாத குழப்பத்துடன் ஆண்களை அஞ்சும் பதற்றத்துடன் தான் கங்கா பேசுகிறாள். அக்குரல் இதுவரை கேட்டறியாதது. நடுக்குற வைப்பது. லட்சியத்துக்கும் நடைமுறைக்கும் இடையே அச்சுறுத்தும் வேகத்தில் பயணிப்பது.

http://solvanam.com/?p=50751


Sunday, 12 November 2017

லக்ஷ்மி ஒரு பதிவு

லக்ஷ்மி என்ற குறும்படம் பத்து லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. அந்த திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

இரு வகையான எதிர்வினைகளை அத்திரைப்படம் உருவாக்கியிருக்கிறது.

பெண் தன் உடலின்  மலர்வினை கண்டு கொள்ளும் தருணத்தை சுட்டுவதாக அத்திரைப்படத்தை ஏற்பவர்கள் சொல்கின்றனர். மறுப்பவர்களில் கலாச்சார காரணம் சொல்பவர்கள் மீது எனக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் தங்கள் வீட்டு அடுப்படியில் தமிழ் கலாச்சாரமும் தமிழ் பண்பாடும் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதாக நம்புகிற மூடர்கள். மறுப்பவர்களில் மற்றொரு தரப்பையே நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன். உருவாக்கப்பட்ட உறுத்தும் செயற்கைத்தனம் ஒன்று இத்திரைப்படத்தில் உள்ளது என பலர் அதை மறுக்கின்றனர். அந்த செயற்கைத்தனத்தின் உச்சம் பின்னணியில் ஒலிக்கும் பாரதியின் வரிகள்.

நான் இந்த இரண்டு தரப்புகளிடமிருந்தும் மெல்லிய வேறுபாட்டினை ஏற்படுத்திக் கொள்கிறேன். திரைப்படத்தின் நுணுக்கங்களை தொட்டெடுக்கும் அளவுக்கு ஆழமான சினிமா ரசிகனோ சினிமா குறித்து வாசித்தவனோ அல்ல நான். என் ஒரே தகுதி சிறு வயது முதல் படம் பார்க்கிறேன் என்பது மட்டுமே. அதனால் சமூகத்தின் பொது ரசனையில் சென்று சேர்க்கக்கூடிய சில ரசனைகள் எனக்கும் உருவாகியிருக்கும் அல்லவா? அந்த ரசனையை துணைக்கு வைத்துக் கொண்டு பொதுவாக கலையாக்கம் என நான் நம்புகிறவற்றை மனதில் கொண்டு இதை எழுதுகிறேன்.

எல்லாக் கலைகளையும் ஒரு பொதுவரையறைக்குள் கொண்டு வர முடியும் என நினைக்கிறேன். சமூக  விழுமியங்கள்(நீதி சமத்துவம் வாய்மை போன்றவை) என்பவற்றை மனித குலம் பல்லாயிரம்  வருடங்களாக திரட்டித் தொகுத்து அடுத்த தலைமுறைகளைக்கு கடத்திக் கொண்டே இருக்கிறது. சடங்காக மதமாக கல்வியாக ஆசாரங்களாக நம்மிடம் இந்த விழுமியங்கள் வந்து சேர்கின்றன. நாமும் நம் வாழ்வின் தொன்னூறு சதவீதத்தை இதற்குள் தான் வாழ்கிறோம். புரட்சி மாற்றம் போன்றவை எல்லாம் அவரவர்களுக்கு "கட்டுப்படியாவதை" பொறுத்தது. அவை பெரும்பாலும் கட்டுப்படியாவதில்லை. கலை (ஏறத்தாழ எல்லா கலைகளையும்) விழுமியங்களால் கட்டப்பட்ட இந்த வாழ்வின் மீதான விமர்சனமே. அதாவது முன்வைக்கப்படும் விழுமியத்தினும் மேலான அல்லது இணையான மாற்றாக கலை எழும் போது மட்டுமே அது அர்த்தமுடையதாகிறது. கலையின் நேர்மை அது தனக்குத்தானே உருவாக்கிக் கொள்வது. கலையில் தோய முடியாத யாரும் அதிகாரத்தைக் கொண்டு அதற்குள் அது வரக்கூடாது இது வரக்கூடாது என்று கட்டுப்படுத்தக்கூடாது. அப்படிச் செய்வதென்பது அச்சமூகத்தின் பண்பாட்டுக் கருவறையை அறுப்பதற்குச் சமம். ஆனால் கலையின் உள்ளாக ஒரு படைப்பு நேர்மை செயல்பட வேண்டும். இங்கு "நேர்மை" என நான் சொல்வது வழக்கமாக பயன்படுத்தப்படும் அர்த்தத்தில் அல்ல. ஒரு இலக்கியப் பிரதியில் இசையில் திரைப்படத்தில் தோய முடிகிறவர்களுக்கு நான் சொல்லும் நேர்மையின் அர்த்தம் விளங்கும் என எண்ணுகிறேன். வணிகத்
தன்மை கொண்டவற்றையும் அது இல்லாதவற்றையும் எளிதாக பிரித்துவிட முடியும். ஆனால் படைப்பு நேர்மை உடையவற்றையும் அது இல்லாதவற்றையும் பிரித்துப் பார்ப்பது கடினமானது. அவ்வகையில் இக்குறும்படத்தில் படைப்பு நேர்மை செயல்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

கலையூடகம் சமூகம் பேச அஞ்சும் விலகும் வெறுக்கும் விஷயங்களை பேசுவதில் தவறே கிடையாது. கலை அதற்கென உத்தேசிக்கப்பட்டதே. ஆனால் அப்படிப்பட்டவற்றை தங்கள் ஊடகத்தின் வாயிலாக பேச விரும்புகிறவர்கள் வெகுஜனத் தன்மை கொண்டவர்களைவிட நேர்மையானவர்களாக சப்பைகட்டு கட்டாதவர்களாக தங்களை உருமாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இக்குறும்படத்தில் அதற்கான நிழல் கூட தெரியவில்லை.

பெண்ணியம் பண்பாட்டுக் காவல் என இரண்டு ஆயுதத்தை தூக்கிக் கொண்டு வருகிறவர்களை நான் தவிர்த்து விடுகிறேன். அந்தக் கண்ணாடிகளை அணியாதவர்கள் சிந்திக்க மட்டும் சில உண்டு.

இத்திரைப்படத்தின்  காட்சிப்படுத்தல்கள் சுவாரஸ்யமானவை. இப்படத்தை பார்த்தவர்களில் தொன்னூறு சதவீதத்தினர் முதல் இருபது நொடிகளுக்கு உள்ளாகவே படத்துக்குள் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். அலுப்பேற்படுத்தும் சித்தரிப்புகள் ஏறக்குறைய இல்லை. நாயகியின் வாழ்வு ஒரே மாதிரியாகச் செல்வதாக சொல்லும் காட்சிகளில் கூட அந்த அலுப்பு தட்டவில்லை. மகன் அருகில் உறங்கும் போது புணர்வதெல்லாம் ஒரு சிறந்த ரசிகனுக்கு எந்த அதிர்ச்சியையும் உருவாக்காது. அவன் இவற்றையெல்லாம் கடந்தவனாகவே இருப்பான். வாழ்வின் சலிப்பில் அல்லது அபத்தத்தில் இருந்து மீள அவள் விரும்புகிறாள் என்பதையெல்லாம் ஏற்றுக் கொள்ளலாம். வாழ்வு அளிக்கும் சலிப்பு பெண்களுக்கான ஒன்று மட்டும் அல்ல.

அவள் இன்னொரு ஆணின் வீட்டிற்குச் செல்ல முடிவெடுக்கும் தருணம் தான் இத்திரைப்படத்தை போலியானதாக மாற்றுகிறது. அந்த ஆணின் பாத்திர வார்ப்பும் அப்படியே. அவள் தன் எல்லைகளை மௌனமாக உடைக்க விரும்புவதை ஒன்று அப்பட்டமாக செய்யலாம் அல்லது அது ஒரு விபத்தென நிகழலாம். இந்த இடத்தில் தெளிவினை ஏற்படுத்திக் கொள்ளாததே இத்திரைப்படத்தை வெகுஜனத் தளத்திற்குள்ளும் நிற்க விடாமல் "மீறிச்செல்லவும்" விடாமல் தடுத்துவிடுகிறது. வலிந்து உருவாக்கப்பட்ட போலித்தனத்தை திணிக்கிறது.

பெண் மீறுவதுதான் கதை என்றால் அந்த மீறலில் கள்ளத்தனத்தை பொதிய வேண்டுமா என்ன? இல்லை சலிப்பேற்படுத்தும் எதார்த்தத்தில் இருந்து எழுந்து பறப்பது தான் நோக்கமெனில் பறத்தல் எனும் செயல் மனித வாழ்வை காலுக்கு கீழே கொண்டுவரும் துணிச்சலை இப்படம் கொண்டிருந்திருக்க வேண்டும். இவையிரண்டும் இல்லாமல் ஒரு அரௌசல் காட்சியின் பின்னணியில் அபத்தமாக ஒலிக்கும் பாரதியின் வரிகள் இப்படத்திற்கு எந்த மதிப்பையும் அளிப்பதில் இருந்து தடுக்கிறது.

ஆண் பெண் கலைஞன் என அத்தனை உருவகங்களும் மெல்ல மெல்ல உருவாகி வந்தவை மட்டுமே. தன் வசதிக்கு ஏற்றார் போல இந்த உருவகங்கள் மீது விமர்சனம் வைக்க கலைஞனுக்கு உரிமை உண்டு. ஆனால் அப்படி வைக்கப்படும் விமர்சனம் தன்னளவில் நேர்மையானதா என்பதை ஒரு கலைஞன் கேட்டுக் கொள்வதே நல்லது.

சமீபத்தில் the wolf of wall street படம் பார்த்தேன். அப்படத்தில் என்னை வியக்க வைத்தது அதன் படைப்பு நேர்மையே. இயக்குநர் ஒரு திறன்வாய்ந்த பணக்காரன் "சீரழிவதை" சித்தரிக்க விரும்பவில்லை. மாறாக ஒரு தனிமனிதனின் ஊக்கம் அவனை எந்த இடத்திற்கு இழுத்துச் செல்லும் என்பதையும் அவன் வென்றெழுந்து தோற்று விழும் எல்லா தருணங்களிலும் அவனை விட்டுச் செல்லாதது எது என்பதை மட்டுமே காட்சிப்படுத்தியிருப்பார். அதில் வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் காட்சி கூட அநாவசியமாகத் தோன்றாது.

அதே கேள்வியை இக்குறும்படத்தின் மீதும் கேட்டுப் பார்ப்பது நலம் என நினைக்கிறேன். இத்திரைப்படத்தை நான் மறுப்பதற்கு காரணம் இப்படத்தின் படைப்பு நேர்மையின்மை தான்.