Friday, 29 January 2016

அழகி

அழகி
அங்குதான். அன்றுதான். அக்கணந்தான். அருகாமையின் அர்த்தம்  புரிந்த கணமது. அறியாமையின்  இன்பம்  நுகர்ந்த நாளது. அவள் எனும் பதத்தை ஒவ்வொரு  நொடியும் ஒருமைக்கு வெளியே இழுக்கிறாள். அவளை அவள்கள் எனலாமா? இலக்கணம்  ஒப்ப மறுக்கலாம். ஆம். அவளொரு கூட்டுக் கனவு. அழகின் அத்தனை  அளவைகளுக்கும்  ஒரு அறைகூவல். முழுமைக்கு வெளியே நின்று கொண்டு முகம் பொத்தி பழிக்கிறாள். அவள் முகம் காணும் நேரம் ஒன்றிலும்  நிறையாமல் உள்ளேங்கும் ஒன்று ஒரு நொடி தன்னை மறக்கும். மறுநொடி ஒளிகொள்ளும். மறுநொடி அரசக் கனவு மீண்ட ஆண்டியென தன்னை சுருக்கி  தன்னுள் ஒடுங்கும். ஆனால் முன்பிருந்த ஒன்று நீங்கியிருக்கும். சோர்வு சூடிக் கொண்ட வாழ்வின் ஒருநாளில்  அனைத்தையும்  உதறியெழுந்து அருவியென வியர்வை  பெருக ஆற்றல்  கொண்டு கடுஞ்செயல் புரிந்து  கண்மூடி காற்றினை உள்ளிழுக்கையில் நிறையும் நெஞ்சத்தின்  உற்சாகம்  அவள் விழிநோக்க கிட்டிவிடும்.  குழப்பங்கள்  குடிகொள்ளும்  ஆழ்மனதை மென்சோக இசையொன்று மென்மையாய்  வருடுகையில் இன்னதென்று  அறியாத ஒருவின்பத்தின் பரிதவிப்பு  உள்நுழைவதைப்போல் அவள் மென்குரல் செவிநுழைகிறது. அணுக்கத்தின்  ஆபத்தே நாசி நுகரும் இச்சையின் மணமெனில் அவள் அணுக்கம் அதனைக் கடக்கிறது.  பனிக்குடத்தில் கால் மடக்கிக் கிடக்கையில் நாமுணர்ந்த மணமென்ன? அன்னை முலைகவ்வி விழி மூடிச் சிரிக்கும்  மழலை தன் கனவில்  உணரும் மணமென்ன? வெக்கையின் புழுதியில்  கூதலின் அடர்வில் நாம் உணர்ந்த மணமென்ன? மழை  நனைத்த மலரின் மணமென்ன? நினைவு கடந்த நுகர்வுகள் மீண்டு கொண்டே  இருக்கின்றன  அவள் அணுக்கத்தில். படைப்பின் இரக்கமின்மை  நொடி  நொடியாய் நினைவிலேறுகிறது அவள் நெருங்குகையில். எதற்கு  இத்தனை  வேறுபாடு? உடைமைகள் குறித்து  சிந்தித்தே  ஒடுங்கிப் போன சிந்தனையில் உரமிடுகிறாள்.  அழகென்பது ஒரு நேர்த்தியா? அவள் முகம் காணும்  அத்தனை சமநிலைவாதிகளும் கண்முன் நிற்கும் அவளை கடந்து எதிர்காலத்தில்  இவள் சிதைந்து விடுவாளென்று ஆருடம் சொல்லி அமைதி கொள்கின்றனர்.
நிலை
தேவி!என் கண் நிறைந்த  திருவே! உன் சிற்றுதட்டு மென்வரிகளில் கழுத்தில் தவழும் சுருள் குழலில் நெருங்கினால் புலப்படும்  சிறுபருக்களில் மேலுதட்டில்  பூத்தெழும் வியர்வையில் எழுகதிர் சிவக்கச் செவிகளின் மென்மடலில் குருதியின் கருணையென்றான உள் உதட்டுச் சிவப்பினில் புடவியின் ஆழமென்றான உள்விழியின் ஆழ் சிறு  கருமையில் மென்சதை மூடிய  தோளிணைளில் சிவந்து  நிற்கும்  விரல்களின்  முன்  முனையில்  நகங்களில்  தெரியும்  அரைச்சந்திரனில் முழங்கையின் மேல் நிறைந்த  மென் மயிர்  பரவலில் மென்குமிழ் முலைகளில் அது  நிலைக்கும்  அடிமார்பின் நிழலில்  செவ்வரிகள் சிலப்படர்ந்த சிறு வயிற்றில்  அதைத்தாங்கும் சிற்றிடையின் வலுச்சிறு எலும்புகளில்  ஆழ்மலர் உந்தியில் சதைபிறழா தொடைகளில் கெண்டைக்கால்  கதுப்பில் கணுக்கால்  முட்டினில் மாந்தளிர்  வெண்மையென்றாகும் கால்கள்  பாதமென பிரியும் எல்லையில் அவ்வெல்லை மண்படத் தோன்றும்  பாதச்சிவப்பில் முடிவின்றி எழுந்தமைகிறது என்னுள் திறந்த  தொல்மனம்.
இயக்கம்
        அன்னை  வயிற்றில் நீ  அசைந்தமைந்த போதே அதுவரை  அளந்து  வைக்கப்பட்ட இயற்பியலின்  இயல்புகள்  இல்லாமலாயின. அவள் பிளவில்  உன் சிரம்  கண்ட  உலகன்று இன்றிருப்பது. அழுதாய். உன் உடல் சூழ்ந்த  குருதி  கழுவினர். அக்கணம்  தொடங்கியது உன் விழிகளில் ஒரு விளையாட்டு  படலம். புணரும்  நாகங்களையும் பிறக்கும்  கன்றினையும் இறக்கும்  நாயினையும் வளரும்  மரத்தினையும் விடியும்  இரவினையும் மயங்கும்  பகலினையும் உன் விரிந்த  விழிகளில்  அள்ளிக்  கொண்டாய். மண்ணையும்  தேனையும் ஊனையும் நீரையும் சுவற்றையும் தோலையும் உன் மென்  நாவால்  தொட்டுணர்ந்தாய். மலரையும் வெயிலையும் இருளையும் உடலையும் பயிரையும் பசுவையும் முகர்ந்தெழுந்தாய். ஏங்கும்  மூச்சொலியும் பிரியும்  உதட்டொலியும் விழி  திரும்பலில் கழுத்தில்  எழும்  மெல்லொலியும் அசைவுகளில் ஆடை  எழுப்பும்  சரப்பொலியும் இரு  பொருள்  உரசும்  இசையொலியும் இதயத்தின் துடிப்பொலியும் சிறகுகளின் அசைவொலியும் சருகுகளின் சிற்றொலியும் காற்றுரசும் கண  ஒலியும்  கேட்டறிந்தாய். குளிரையும்   வலியையும்  விழிகளையும் விரல்களையும்  உணர்ந்தாய் உன் தோலில். இடை  வளையா நேர் நடை  இதழ் சுழிக்கா மென் பேச்சு  அதிர்வடையா வன் விழிநோக்கு அடி  வயிறு  தொடும்  சீர்நீள்  மூச்சு. செய்வதென்ன என்று பிறப்புக்கு  முன்னே  அறிந்து  மண் நுழைந்தாயா? உன் கூர் விழிகளில்  சந்திக்கும்  ஒரு பார்வையும்  பித்தாகாமல்  பிழைத்திருக்கப்  போவதில்லை! உன் மென் தீண்டல் அடைந்த  ஒரு கணம்  தவிர  மொத்த வாழ்நாளும் வீணென நினைக்காத  ஆணுயிர் மண்ணிருக்க வாய்ப்பில்லை! அத்தனை  அழகையும்  உன்னுள்  விதைத்து  உலகென்பது  உனை  துதிக்க  மட்டுமே  என்றாக்கியது எவ்வளவு  கருணையற்றது  என்றெண்ணி  சினம்  பொங்கி அழுகிறேன் . உன் முகம்  நோக்குகையில் அதன்  கருணையின்  கணம்  உணர்ந்து  அகம்  பொங்கி அமைகிறேன். என்னவளே! எல்லோர்க்குமானவளே! எதிலும்  இல்லாதவளே! எங்கும்  நில்லாதவளே! யாவையும்  ஆனவளே! உன்னை ஆரத் தழுவுகிறேன்! உன்னடி பணிகிறேன்!  உன்னோடிணைகிறேன்! உன்னுள்  உறைகிறேன்! நீ என்றாகிறேன்!

Wednesday, 13 January 2016

ஏற்கனவே செத்தவன்

ஏற்கனவே  செத்தவன்
ஏற்கனவே  செத்தவனுக்கு
எதற்கிந்த  வாழ்வு
பயணம்  முடிந்தபின்னே
நீள்கிறது  பாதை
அறிதல்  தொடங்குமுன்னே
ஆழமாய்  அடித்தீர்கள்
வலிக்காத  நாளெல்லாம்
வாழாத  நாளென்று வகுத்தீர்கள்
நித்தியம் இருப்பதாய்
நித்தம்  நித்தம்  உரைத்தீர்கள்
சத்தியம்  உணர்வது
சாத்தியம்  என்றீர்கள்
எப்படி  எனக்கேட்க
பைத்தியம்  என்றீர்கள்
ஏற்கனவே  செத்தவனுக்கு
எதற்கிந்த வாழ்வு
நேர்கோட்டில்  நடப்பவனுக்கு
முடிவென்பது முன்னே
வட்டத்தில்  உழல்பவன் நான்
ஏறலும் இறங்கலுமே என் இயக்கம்
வலியோடு உந்துவது என் ஏற்றம்
பரவசமாய் சறுக்குவது என் இறக்கம்
இரங்க வேண்டாம்  எனைக்  கண்டு
ஏற்கனவே  செத்தவனுக்கு
எதற்கிந்த வாழ்வு
நீ  வகுத்த வழியொன்றே எனக்குண்டு
நான்  பகுக்க ஒன்றுமில்லை
பின் நானெதற்கு
நீயே  அறிவாய்
ஏற்கனவே  செத்தவனுக்கு
எதற்கிந்த வாழ்வு
உன் ஆடையே தோல்  எனக்கு
என் தோலினை  நீ ஆடையெனக் கொள்ள
வரும்  ஒருநாள்
அன்று  பிறப்பேன்
அதுவரை
ஏற்கனவே  செத்தவனுக்கு
எதற்கிந்த வாழ்வு