Friday, 25 May 2018

பேயாய் உழலும் சிறுமனம் - ஒளிர்நிழல் குறித்து செந்தில் ஜெகன்நாதன்

ஒரு செயலும் செய்யாமல் கண்முன்னே கரைந்துகொண்டிருந்த ஒரு முழு நாளின் நுனியில் மனதைச் சமன் செய்ய நண்பனிடம் இருந்து வாங்கி வந்திருந்த 'ஒளிர்நிழல்' நாவலை வாசித்தேன்.

நாவலின் செறிவான மொழியும், அதனுடைய  மீபுனைவு எனப்படும் Meta-fiction வடிவம் மற்றும் சொல்லும் முறை என பல வகைகளில் இந்நாவல் நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது.

நாவலின் பல இடங்களில் தமிழ் இலக்கியத்தின் அடுத்தகட்ட படைப்பாளியாக சுரேஷ் ப்ரதீப் வெளிப்படுவார் என்பதையும் உணர முடிந்தது.

நாவல், மனித மனங்களின் பல்வேறு வண்ணங்கள் வெளிப்படும் தருணங்களை சொல்வதாக அமைந்திருக்கிறது. ஏனெனில் மனிதனின் முகம் என்பதும் குணம் என்பதும் மனிதனின் 'மனம்'தான் என்று நினைக்கிறேன். சக்தி, குணா, அருணா, ரகு, இன்னும் சில பாத்திரங்களின் மன தத்தளிப்புகள் மற்றும் எண்ண ஓட்டங்களின் மூலம் நாவல் விரிகிறது.

ஒருவனின் பேராசைக்கும், தொடர்ச்சியான கீழ்மை குணத்திற்கும் கிடைக்கக்கூடிய ஆகப்பெரும் தண்டனை என்னவாக இருக்க முடியும்? மரணமா? மரணத்திற்கு முன்பே கிடைக்கக்கூடிய அதைவிடவும் பெரும் தண்டனை ஒன்று உண்டு. அது அவனைச் சுற்றி உள்ளவர்களின் புறக்கணிப்பு. ஒருவனை புறக்கணிப்பதை விடவும் உயிரோடு இருக்கும்போது கிடைக்கும் தண்டனை வேறெதுவும் இருக்க இயலாது. அப்படியாக பெற்ற தாயும், உடன் பிறந்த சகோதரனுமே ஒருவனை புறக்கணித்து அவனை விட்டு விலகிச் செல்கிறார்கள் எனில் அவன் குணாதியசம் பற்றி யூகிக்க முடிகிறதா? சக்தி என்னும் கதாபாத்திரம் இந்நாவலில் அப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. தாயும், சகோதரனுமே புறக்கணித்து ஒதுங்கிப் போகும்படி ஒருவன் ஏன் ஆனான்? என்பதை நாவல்  விவரிப்பதாக நாவலை  நினைவில் அசை போடும்போது எண்ணிக் கொண்டேன்.

குணா என்னும் அகத் தத்தளிப்பும், குழப்பமும், குற்றவுணர்வும் கொண்ட இன்னொரு கதாபாத்திரம் அது எதிர்கொள்ளும் அகச்சிக்கல்கள் சிறந்த தருணங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அருணா என்னும் பெண் கதாபாத்திரம் அதன் மன ஓட்டத்திலும், தன் குறைகளை நியாயப்படுத்த அது முகமூடி அணிந்து கொள்ளும் தருணங்களிலும் அதன் உள்ளம் வெளிப்படுத்துவதை மிகவும் தத்ரூப சித்தரிப்பாக தேர்ந்த சொற்காளால் விவரித்திருக்கிறார் சுரேஷ்.
குறிப்பாக அருணாவும், சக்தியும் உறவு கொள்ளப்போகும் தருணத்தில் இருவரின் மனதையும் சுரேஷ் எழுதியிருக்கும் பக்கங்கள், நாவலின் உச்சம் என்று சொல்லாம்!

பொதுவாக காமம் சார்ந்து எழுதுகிறவர்கள் அதனை ஒரு அதிர்ச்சி மதிப்பீடாக மட்டுமே வைத்து புனையும்போது வாசகனுக்கு சோர்வையே ஏற்படுத்தும் அப்படி இல்லாமல் காமத்தை அடைய முயலுதலில் மனதின் தவிப்புகளை இந்நாவல் எடுத்துரைப்பது சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

மனிதர்கள் தங்களின் குற்றவுணர்விலிருந்து வெளிவரவும், எப்படியாவது அதன் கறையை கழுவிடவும்  கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கிறார்கள், அதை வெறும் சாக்காக மட்டுமே வைத்துக் கொண்டு தொடர்ந்து அவர்கள் மனம் ஒருவித போதை கண்டதாக குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கிறது. இதை நாவலின்  சில இடங்களில் சிலாகித்து உணர முடிந்தது.

உளவியல் சார்ந்த தருணங்களை வலுவான மொழிகொண்டு, நேர்த்தியான நடையில் சொல்வதன் மூலம் வாசகனுக்கு நல்ல உணர்வெழுச்சி ஏற்படுத்துவதாக இருக்கிறது சுரேஷ் பிரதீப்பின் எழுத்து. அது   தமிழ் இலக்கியத்துக்கு மேலும் பல அற்புதமான படைப்புகளை தரும் என்று நம்பிக்கையோடு அவரின் அடுத்தடுத்த படைப்புகளுக்காக காத்திருக்கிறேன்.

இந்தச் சிறந்த புத்தகத்தை நல்ல வாசிப்பனுபவத்தை விரும்பும் நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

- செந்தில் ஜெகன்னாதன்

  25-5-2018

Thursday, 24 May 2018

சாத்தான்

ஆழத்தில் கிடப்பவன்
கூரிய விழிகளால் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்
உங்கள் இயல்பின் மீது நான் கருணை கொள்ளும் போது
உங்கள் சிரிப்பினைக் கண்டு  எனக்குள் தாய்மை சுரக்கும் போது
உங்கள் அழகின்மையை அறிவின்மையை நான் பெருந்தன்மையோடு கடக்கும் போது
அவன் கூர்மை சிரிப்பாகிறது
எல்லாம் சரியாகும் என்று உங்கள் தலையை நான் தடவும் போது
தூய ஆடையுடன் உங்கள் அழுக்குடைய நான் தழுவும் போது
உங்கள் சிக்குப்பிடித்த குழந்தைகளை நான் குளிப்பாட்டும் போது
ஏன் ஏன் என்று எக்காளமிடுறான் அவன்
உங்கள் நாற்றங்களை நான் சகித்துக் கொள்ளும் போது
உங்கள் வன்முறையை நான் ஏற்றுக் கொள்ளும் போதாவது அவன் துணுக்குறுவான் என நான் நம்புகிறேன்
அப்போது அவன் மௌனம் மட்டுமே அடைகிறான்
உங்களால் நான் வெறுக்கப்படும் போது
அடிவயிறு அதிர எச்சிலின் துர்மணம் நிறைந்த உங்கள் வாயால் நீங்களென்னை வையும் போது
என்னை நீங்கள் கொல்ல வரும்போது
அவன் அதிர்ச்சியடைகிறான்
நீங்களென்னை கொன்றுவிட்ட பின்பே அவன் கண்மூடுகிறான்
அடுத்த சாத்தானுக்கான விந்துத்துளிகளை வரலாற்றுக் கருவறையில்  திணித்துவிட்ட திருப்தியுடன்

Thursday, 17 May 2018

அபி - கடிதங்கள் 2

அபி-சிறுகதை

அன்பு சுரேஷ் பிரதீப்பிற்கு,

நலமா? அபி சிறுகதை வாசித்தேன். நன்றாக இருந்தது. அக சிக்கல்களை அழகியலோடு சொல்லியிருக்கிறீர்கள். உரையாடல்களும் சம்பவங்களும்

யாருக்கிடையே இடம் பெறுகின்றன என்பதை விளக்காதிருந்ததே கதையை மேலும் உன்னிப்பாக வாசிக்க தூண்டியது.

அபி என்னும் கதை என்ற ரீதியில் பார்க்கையில் சிறப்பாகவே இருந்தது ஆயினும் ஏற்கனவே உங்கள் கதைகளின் சாயல் இதிலும் தொடர்வதாக தோன்றியது. வடிவத்தில் ஆழத்தில் மிதப்பதை ஒத்ததாகவும் அபியின் கதாபாத்திரம் ஒளிர்நிழலின் அருணாவை ஞாபகப்படுத்துவதாகவும் இருந்தது. 

அன்புடன்,

அனு

அன்புள்ள அனு 

நான் நலம். நீங்கள் நலமா?

இது  நான் எண்ணிக் கொண்டிருந்ததும் கூட. ஆழத்தில் மிதப்பது இக்கதைக்கு பிறகுதான் எழுதினேன். உடனடியாக எழுதியதால் வடிவச்சாயல் தென்படலாம் என்று தோன்றுகிறது. மேலும் அருணாவிற்கும் அபிக்கும் ஒரு வகையில் ஒற்றுமை உண்டு. இரண்டு பெண்களையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது மற்றொரு ஒற்றுமை. 

நீங்கள் என் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பது மகிழ்வளிக்கிறது. இக்கதை குறித்து இத்தகைய ஒப்பீடு இதுவரை வரவில்லை. அவ்வகையில் இது மிக முக்கியமான அவதானிப்பாக எனக்குப்படுகிறது.

அன்புடன் 

சுரேஷ் பிரதீப் 

பாஸ் எப்படி பாஸ் உங்களால் இப்படி எல்லாம் எழுத முடியுது. இதை இரண்டு தரப்பினரும் மறுக்க வாய்ப்புண்டு. ஆண் இந்த கதையில் ஊறுகாய் போன்றே வருகிறான். அதனால் என்னை போன்ற ஆணாதிக்கவாதிகளின் மனம் பதிக்கப்படும் அபாயங்கள் உண்டு. பெண்ணின் அக உலகத்தில் குரூரத்தை காட்டியதால் பெண்ணியவாதிகளும் இதை கடுமையாக சாடுவார்கள். இரண்டு பேருமே எதிர்க்கும்  எழுத்து இது. பெண்ணுக்கு பாதுகாப்பாக வேலையும் வலிமையாக கல்வியும் இருக்கும் பட்சத்தில் ஆண் வெறும் இனவிருத்தி காரணி என  செவுளில் அறைகிறது இக்கதை.அக்கால குரங்கு மனிதனின் இயல்பில் இருந்து பிய்த்துக் கொண்டு வெளியேறுகிறது கதை.

ஜெயவேல்

அன்புள்ள   சுரேஷ் அவர்களுக்கு

திருச்சியில் இருந்து daisy. நான் தங்களின் அபி கதையை படிப்பதற்கு முன்னால் லோகமாதேவி அவர்கள் எழுதிய கடிதம் படித்தேன். அதில் இருந்து கதை ஒரு நடுத்தர வயதில் வரும் ஒரு சலனத்தைப் பற்றி பேசும் என்று நினைத்து கதையை படித்தேன். சற்று ஏமாற்றம்.

அபி புதிதாய் கல்யாணம் முடித்த இளம்பெண்தான். கணவனோடு 
வெளிநாட்டிற்கு போகததற்குக் காரணமே வேறு ஒரு தோழமை தான்.

மனைவியின் நடத்தை தெரிந்தும் கோபப்படாமல் விசாரிக்கிற ஒரு கணவன். ஆனால் அபி விரும்புவது சற்று முரட்டுத்தனமான  ஆண்பிள்ளையையோ என்று தோன்றுகிறது.

 அபிக்கும் அர்ச்சனாவுக்கும் இடையில் இருப்பது வேறு மாதிரியான உறவு என்றுதான் நான் புரிந்துக் கொண்டேன். எவ்வளவு நெருக்கமான தோழிகளாய் 
இருந்தாலும் மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு தூங்குவது கொஞ்சம் அதிகம்தான். இதில் 
இருந்துதான் நான் அவர்கள் உறவைப் பார்க்கிறேன். அபியை அனுமானிக்கவே முடியவில்லை. 

அரசனை நம்பி பழமொழிபோல். திருமண வாழ்வின் தொடக்கத்தில் எல்லோருக்கும் சரீரத்திலும், மனதிலும் சிற்சில பிரச்சினை எழுவது சகஜம். 

அதை மேற்கொண்டு நின்றால் நிறைய பெரிய குழப்பங்களைத் தவிர்க்கலாம். தேவி அவர்கள் சொன்னதுபோல் கணவனின் குரல் வெளிப்படவே இல்லை.

 வாழ்த்துகளுடன்.

-- 

With Regards,

T.Daisy,

Trichy. 

Wednesday, 16 May 2018

அபி - ஒரு கடிதம்

அபி - சிறுகதை

அன்பின் சுரேஷ்

இன்று எதேச்சையாக உங்களின் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் பார்க்கையில் ‘அபி’ குறித்த லின்க் பார்த்தேன். வேறேதேனும் தலைப்பாக இருந்திருந்தால் பின்னர் கூட வாசித்திருப்பேன் ஆனால் இந்த அபி எனக்கு மிக விருப்பமான பெயர், சங்கமித்ரா, (அக்கா) கருவுற்றிருந்தபோது   அப்பா வீட்டிலிருந்தாள் பிரசவம் வரைக்கும். அப்போது ஷாரூக்கான் முதன் முதலில் சின்னத்திரையில் நடித்த தொலைக்காட்சியில் பிரபலமான ஹிந்தி தொடர் ஒன்று ’சர்க்கஸ்’  அதில்  ஷாரூக்கின் பெயர் அபி, அது எனக்கு மிகப்பிடித்த தொடர். இரவு பல்கலையிலிருந்து வீடு வந்த உடன் நான் செய்யும் முதல்காரியம் இந்த தொடரை பார்ப்பதுதான்

 மித்ராவிற்கு என்ன குழந்தை பிறந்தாலும் அபியென்று தான் அழைக்கப்போவதாக சொல்லிக்கொண்டே இருந்தேன். அவளுக்கு மகன் பிறந்து மகாபாரதத்தின் மீதிருந்த பெருவிருப்பின் காரணத்தால் ’’சந்தனுபரீக்‌ஷித்’’ என்று அவனுக்கு பெயரிட்டாலும் ,கல்லூரியில் மட்டுமே அவன் அப்பெயரால் அழைக்கப்படுகிறான் நாங்கள் அனைவருமே அபியென்றே அழைக்கிறோம் அவனை

எனவே, அபியென்னும் தலைப்பில்  கவரப்பட்டு இன்று பின் மதியம்  வாசிக்கத்துவங்கினேன். பலத்த மழைக்கான ஆயத்தங்களுடன் வானிலையும் நல்ல குளிரும் இருந்ததால் அதிகாலை மட்டுமே  ஒரு சிறிய  கப் காபீ என்னும் வழக்கத்திற்கு விரோதமாக இன்னொரு காபீயும் கலந்துகொண்டு என் பிரிய கல்மேசைக்கு எதிரில் அமர்ந்து  வாசித்தேன்.  ஒரு பகுதி வாசித்தபின்னரே இது Non linear   narrative முறையில் எழுதபட்டது என்று மனசிலானதால் மீண்டும் முதலிலிருந்து வாசித்தேன்.

அபி, அச்சு,ஸ்ரீ,சரண்  நான்கு பேரின்  கதை. அபிக்கும் அர்ச்சனாவிற்கும் இரண்டு வாய்ப்பு தந்திருந்த நீங்கள் ஏன் சரணுக்கு அளித்த  ஒரு வாய்ப்புக்கூட ஸ்ரீக்கு கொடுக்கவில்லை என தெரியவில்லை. ஸ்ரீயின் பார்வையிலும் ஒரு பகுதி இருந்திருக்கலாம். மனைவியின் அலைபேசியை சோதிக்காத கணவர்களே இல்லாத உலகம் போலும் இது, எனினும் ஸ்ரீ குறித்து offensive  ஆக ஏதும் இல்லை இந்தக்கதையில்.  பயிற்றுவிக்கப்பட்ட கண்ணியத்துடனான நல்ல கணவன்,  மனைவியின்  extra marital affair  குறித்து தெரிந்ததும் விலகிக்கொள்கிறான் அவ்வளவே இல்லையா?

ஆனால் ஒரு பெண்ணாக எனக்கு இதில் ஸ்ரீயின் கோணம் என்னவென்று அறிந்துகொள்ளும் ஆவலிருந்தது. இதுபோன்ற தாம்பத்தியத்தை தாண்டின மீறின உறவுகள் மிக வெளிப்படையாக அதிகம் தெரியவந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில்,  இதற்கு பெரும்பாலும் பெண்களின் அடங்காமை அல்லது அதீத பாலுறவு நாட்டமே காரணமாய் சித்தரிக்கப்படுகின்றது. நல்ல துணையொன்றிற்கான தேடல் பெண்களுக்கும் இருக்குமல்லவா? மேலும், பாலுறவைத்தாண்டிய சந்தோஷங்களை அறிந்துகொண்ட பெண்களும் இருக்கிறார்கள்

வேலிதாண்டுவதென்பது ஆண்களின் பிறப்புரிமை யாகவும் , நடத்தை கெட்ட பெண்களே எல்லைகளைத் தாண்டுவார்கள் என்பதுமே காலம் காலமாக நிலவிக்கொண்டிருக்கிறது இங்கு. நடத்தை, அதிலும் நல்ல நடத்தை என்பதற்கான  standardization   யார் நிறுவியது?

Arranged  திருமணங்கள்,  இனிமேல் அவனும் அவளும் ஒரே கூரையின் கீழ் ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டு வாழ்வதற்கான ஒரு ஏற்பாடு , ஒரு ஒப்பந்தம் அவ்வளவே! பலருக்கு மணவாழ்வை பாதி முடித்தபின்னரே தனக்கு  எல்லாவிதத்திலும் இணையான, காதலும் சாத்தியமாகும் ஒருவரைச்சந்திக்கும் வாய்ப்பே வருகின்றது. முன்பைப்போலில்லாமல் இப்போது அப்படியான வாய்ப்புகளை பலரும் உபயோகப்படுத்தியும் கொள்கிறார்கள்.  காலம் மாறிக்கொண்டிருக்கையில் அதற்கேற்றபடி வாழ்வுமுறையும்  பெருமளவில் மாறிக்கொண்டிருக்கின்றது அப்படியான மாற்றமொன்றினை இலகுவாக ஆர்ப்பாட்டமின்றி சொல்லும் கதையே இது

ஜெ அவர்கள் இப்போது  ஊட்டி முகாமில் கூட சொல்லிக்கொண்டிருந்ததுபோல, ஒரு நல்ல கதை அல்லது நல்ல கவிதையை வாசித்து முடித்ததும் ஓகே   so what ? என்று வாசகன் கேட்காதபடிக்கு இருக்கணும் அது. அபி ஸ்ரீயின் மனைவி அவளுக்கு சரணுடன் கூடுதல் நட்பு இதை தோழி அர்ச்சனாவும் அறிவாள் கணவனுக்கு தெரிந்து அவன் விலகிவிடுகிறான்,  so what?  என்று கேட்டிருக்கலாம் இதை linear  கதையாக எழுதி இருந்தீர்களென்றால்.

ஆனால் இக்கதையை இப்படி கதாபாத்திரங்களின் கோணங்களில்  மாற்றி மாற்றி வாசிக்கையில்,  அது ஏற்படுத்தும் பாதிப்பே இதன் வெற்றி

அதில் வரும் பல நிகழ்வுகளை  என் சொந்த வாழ்வுடன் தொடர்பு படுத்திக்கொண்டேன், கதை முடிந்தபின்னர் மழை துவங்கியதால் கொடியில் உலர்ந்துகொண்டிருந்த துணிகளை வாரிக்கொண்டுவருகையிலும்  தோழியை பேருந்தில் ஏற்றிவிட சென்ற சரணைக்காணோமென்று காத்திருக்கையிலும், கதையை உள்மனசு அசைபோட்டுக்கொண்டே இருந்தது

அர்ச்சனாவின் தோழமை அருமை கணவருடன் கொஞ்சிக்கொண்டிருந்துவிட்டு பிரிவுத்துயரில் கண்ணீர் விடும் அபிக்கும் ஆறுதல் அளிக்கிறாள், அலுவலகத்தில் புதிய நட்பை முன்பே யூகித்தும் தடையோ , பாக்கியராஜ் கதைகளில் வரும் பெரிய கண்ணாடி போட்டுக்கொண்டு வரும்  முதிர்கன்னியைப்போல புத்திமதியோ சொல்லாமல் அப்பொழுதும் உடனிருக்கிறாள்.  இந்த நேர்மறைத்தோழமை என்னவோ ஆறுதலாக இருந்தது ஏறக்குறைய அபியின் மனச்சாட்சியைபோல அச்சுவின் பாத்திரம்.

 அர்ச்சனாவைப்போல இதை ஆரம்பத்திலிருந்து கவனித்தும், ஸ்ரீயுடனான உறவிலும் சரணுடனான உறவிலும் இரண்டுபேரும் இல்லாத பொழுதிலும் உடனிருக்கும் தோழமை நிஜத்தில் யாருக்கும் கிடைப்பதில்லை.

சரணின் முகம் இறுகியிருந்ததைத்தவிர வேறேதும் சொல்லாமலேயே அவன் என்ன சொல்லியிருப்பானென்று வாசகர்களை யூகிக்க வைத்ததும் அருமை

அபி இறுதியில்  ’இருக்கட்டும் ஒரு சேஃப்டிக்கு’ என்னுமிடத்தில் நானும் புன்னகைத்தேன்

சரண் திரும்பி வந்து எனக்கும் அவனுக்குமாக சிற்றுண்டி சமையலறையில் தயாரித்துக்கொண்டிருந்தான், இந்த கதையை கூடத்திலிருந்து  இன்னொரு முறை வாசித்து  HBO channel  ஐப்போல  suitably modified version  ஆக அவனுக்கும் சிலவற்றை மட்டும் கத்தரித்துவிட்டு சொல்லிக்கொண்டிருந்தேன். சரண் என்னும் பெயரைக்கேட்டதும் நான் வேண்டுமென்றே  அந்தப்பெயரைச்சொல்கிறேன்  என்றெண்ணிக்கொண்டான். வந்து வாசித்து ஊர்ஜிதம் பண்ணிவிட்டே மீண்டும் சமையலறைக்கு  போனான்

முழுக்க கேட்டு முடித்ததும்  எங்கள் வீட்டுக்குப்பின் வீட்டிலிருக்கும் கவிதாவின் இதுபோன்றதொரு சிறு மீறலுடனான வாழ்வொன்றினைக்குறித்து அவன் இக்கதையை  relate  பண்ணி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவனின் இந்த மனமுதிர்ச்சியையையும் இக்கதை அவனைபோன்ற பதின்பருவத்திலிருக்கும் இளைஞர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்குமென்பதையும்  நான் எதிர்பார்க்கவேயில்லை

 இறுதியாக இன்னுமொன்று, சுரேஷ் எழுதுகிறான் என்று முகப்பில் வாசித்தாலும் கதையில் எங்கும் சுரேஷை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. இக்கதை உங்களின் முந்தைய எந்தக்கதையையும் நினைவூட்டவில்லை எந்த வரியிலும்  உங்களின் ஸ்டைல் என்று ஒன்றை அடையாளம் காணவும் முடியவில்லை முழுக்க வேறாகவே இருக்கின்றது உங்களின் ஒவ்வொரு கதையும்

எப்போதுமே விரிவாகவே எழுதுபவள் நான் என்பதை அறிவீர்கள் இக்கதையினைக்குறித்து மட்டும் எதிர்வினையாற்றாமல்  பலதையும் நினைவுக்கு கொண்டு வரும் கதையாகிவிட்டபடியால் இப்போழுதும் இதன் நீளம் அதிகமாகிவிட்டது 

எப்போதும் நினைவிலிருக்கும் கதைகளில் ஒன்று அபி, நன்றி சுரேஷ்

லோகமாதேவி

 

அபி - கடிதங்கள்

அபி - சிறுகதை

அபி நவீன கற்பு உடைந்த சீதை!அவள் ஒரு தொடர்கதை கவிதாவின் நீட்சி!அபி ஶ்ரீராமை மணமுறிவு செய்து விட்டு,சரணுடன் பழகி சரணுடனும் அவள் பிரிவு கொண்டு அவன் திருமணத்துக்கு சென்று வாழ்த்தி விட்டு அர்ச்சானாவிடம் வேலையை விட முடியாது சேஃப்டிக்கு இருக்கட்டும் என கூறுவதில் சேஃப்டி என்பது ஒரு பெண்ணுக்கு வேலையா,இல்லை தன்னை உடல் தாண்டி உண்மையாக நேசிக்கும் நேர்மையான ஆண்மையா எது என்பது அபியின் பார்வை கொண்டு பார்த்தால் தான் நாம் உணர முடியும்.ஒரு பெண்ணுக்கு சுகமும்,சுதந்திரமும் வெறுமனே வியர்வை வெளியேற்றும் அவள் குறியும்,அவன் குறியும் உரசி உராய்வு கொள்வதில் இல்லை.அது நம் எதிரில் உறவாடுபவர்களின் புனிதமான புரிதலில் இருக்கிறது.இந்த சமூகம் பெண்கள் மீது படிய வைத்திருக்கும்,படிய வைக்க முயற்சிக்கும் நூற்றாண்டு கடந்த அழுக்கு படிமங்களின் பிம்பங்களை உடைத்து வாழ நினைக்கும் தனித்துவமான நவீன அழகியாக இந்த அபியை நான் பார்க்கிறேன்.அபி அருமையான கதை பதிவு சுரேஷ் பிரதீப் சார்.உங்கள் கதையை என்னளவில் இப்படி தான் உள்வாங்கி உள்ளேன்.நான் மேற்சொன்ன பதிவு உங்கள் கதை உணர்த்தும் உள்ளார்ந்த அர்த்தத்திற்க்கு சம்பந்தமில்லாமல் போனால் அது என் இலக்கிய அறிவு போதாமையாக கூட இருக்கலாம்.பொறுத்துக் கொள்ளுங்கள்.ஒரு சேஃப்டிக்கு தான்.வாஞ்சையுடனும், வாழ்த்துகளுடனும் நான்.

வேலு மலையன்

சுரேஷ் பிரதீப், உங்கள் 'அபி' கதையை படித்தேன்.. எனக்கு நீங்கள் சொல்ல வந்தது சரியாக இந்த கதையில் வெளிப்படவில்லை என்று தோன்றுகிறது.

இன்றைய 'நவீன' பெண்களில் ஒரு கும்பலே நிஜ முட்டாள்கள், ஆண்களுக்கு நிகராக. ஒரு வேளை அதை தான் சொல்கிறீர்களா என்று தோன்றுகிறது.

என்றாலும் உங்கள் கதையில் சிறந்தது என்று எனக்கு தோன்றவில்லை.

அபிநயநாதன் யார் என்று யோசித்தேன் - பின் அது  'அபிநயா தான்' என்று புரிந்து கொண்டேன்.

தவிர, வார்த்தைகளில் கொஞ்சம் பால் குழப்பம் தட்டச்சினால் உள்ளதோ என்றும் தோன்றியது.. அது பிழைகள் அல்ல.. narration தாண்டி குதித்து போகும் போது எனக்கு வரும் குழப்பம்...  2ம் முறை படிக்கும் போது அவை இல்லை... அச்சு, சரண், அபி, அச்சு, அபி என்று கதையை சொல்கிறார்கள்.

கண்விண்ஸ் convince என்கிற வார்த்தை கன்வேயன்ஸ் conveyance என்று பதிந்து இருக்கிறதா?

-----

இன்னும் ஒன்றும் தோன்றியது.. சரியா என்று தெரியவில்லை

விடுதியில் தங்கி வேலை பார்க்கும் சக பெண் நண்பர்களின் நட்பு என்று ஒரு விஷயம் உண்டு.. அந்த இடைவேளை பெண்களுக்கு ஒரு சுதந்திரம்... அப்பா கட்டுப்பாடும் கிடையாது  கணவன் மாமியார் தொல்லையும் இல்லை..  குழந்தையில் சரியான அன்பு கிடைக்காத பெண்ணுக்கு அந்த வாழ்க்கை ரொம்ப பிடித்தும் போக வாய்ப்பு உண்டு.  அது ஒரு அளவு நன்றாக வந்துள்ளது.

அந்த நட்பு சில எல்லைகையும் மீறும் நட்பாக ஆகலாம் என்று எக்கு தப்பாக யோசிக்க தோன்றுகிறது.. பணத்துக்கு ஒரு பேக்கப் போல,  அச்சு ஏன் அபியின் ஒரு பேக்கப்-ஆக இருக்க கூடாது ?

ராகவ்

அன்புள்ள ராகவ்

கடைசி வரியில் நீங்கள் சொல்லியிருக்கும் சாத்தியத்தை மற்றொரு நண்பரும் சொன்னார். ஆனால் அது அவ்வகையிலானதாக எனக்குத் தோன்றவில்லை.

மேலும் இது பரஸ்பர முட்டாள்தனங்களின் அன்பிற்கான ஏக்கத்தின் கதைதான். எதுவரை சென்று பார்க்க முடிகிறது ஒருவர் மற்றொருவரின் அந்தரங்கத்துக்குள் என்ற வகையில் தான் எழுதியிருந்தேன்.

மேலும் இந்த narration இயல்பாக அமைந்தது. சவால் அளிக்கக்கூடிய வடிவம் என்று மெனக்கெடுவதில்லை. எளிமையான கதைகூறல்களில் இருந்து "தப்பிச் செல்லவதற்கான" ஒரு விருப்பம் என்ற வகையில் தாவித்தாவி போகிறேன்.

சுரேஷ் பிரதீப்

Tuesday, 15 May 2018

அபி - சிறுகதை

சலவை செய்யப்பட்ட தூய்மையான வெள்ளைப் படுக்கை விரிப்பின் நறுமணம் அந்த நாளின் தொடக்கமாக இருந்தது. சலவையால் ஏற்பட்ட மொடமொடப்பு நிறைந்த சந்தனநிறப் போர்வையை விளக்கி என்னைப் பார்த்தேன். நேற்று அணிந்திருந்த அதே வெண்ணிறச்சுடிதாருடன் உறங்கிப் போயிருக்கிறேன். என்னுடலின் காய்ந்த வியர்வை மணம் கூட அந்த தூய காலைக்கு ஏதோவொரு கிறக்கத்தை கொடுப்பதாகவே இருந்தது. முகம் மட்டும் தெரிவது போல போர்வையை தலையைச் சுற்றி போர்த்தி கைகளை கழுத்துக்குக் கீழே வைத்துக் கொண்டேன். உடலில் எடுத்த உளைச்சல்கள் இனிமையாகச் சூழ்ந்தன. பக்கத்தில் அபி படுத்திருக்கவில்லை. மெல்லிய முனகல் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. கணவனுடன் உரையாடிக் கொண்டிருப்பாள். அவன் ஃப்ரான்ஸில் இருக்கிறான். திருமணமான இரண்டாவது வாரமே அவன்  அங்கு செல்ல நேர்ந்தது குறித்து அபி அடிக்கடி என்னிடம் சொல்லி அழுவாள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஸ்ரீராம் விடுப்பில் வந்து சென்று கொண்டிருந்தான். அவளுக்கு வேலையை விட்டு அவனுடன் சென்று தங்குவதில் விருப்பம் இல்லாமல் இருந்தது.

" உங்க வீட்லயும் யாருக்கும் பிடிக்கல. பின்ன ஏன்டி இந்த வேலையிலேயே கண்டினியூ பண்ற. பேசாம ஸ்ரீயோட ஃப்ரான்ஸ் போயிடலாம்ல" என அவள் அழும் ஒவ்வொரு முறையும் சமாதானம் செய்திருக்கிறேன். என்னைப்போல இந்த வேலை செய்து தான் குடும்பத்தை தாங்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் அபிக்கு கிடையாது.

"இல்லடி எதுக்கும் ஒரு பேக் அப் இருக்கட்டும். அப்படியெல்லாம் கம்ப்ளீட்டா யாரையும் நம்ப ஐயம் நாட் ரெடி" என்று கண்ணடித்தாலும் அவள் வேலையை நீங்காமல் இருந்ததற்கு வேறு காரணங்களும் இருந்தன. சரணுடனான அவளது நட்பு இவ்வளவு தீவிரமாக வளருமென நான் எண்ணியிருக்கவில்லை. ஆனால் அவனை அபி அதிக ஒவ்வாமையுடன் நோக்கத் தொடங்கியபோதே நான் ஓரளவு யூகித்துவிட்டேன்.

"கொஞ்சம் நீட்டா டிரெஸ் பண்ணிட்டு வந்தா என்னடி இவன். ஷெர்ட் அயர்ன் பண்ணிபோடக்கூட சாருக்கு நேரம் இருக்காது போல" என அவளே உணவு இடைவேளைகளில் சொல்வாள்.

"ஷேவ் பண்ணினா கொஞ்சமாவது பாக்கிற மாதிரி தெரியலாம். அதிலும் இவன பப்ளிக் ரிலேஷன்ல வெச்சிருக்காங்க. க்ளையண்ட்ஸ் இவன் மூஞ்சிய பாத்தே ஓடிப்போயிடுவாங்க இடியட்" என அவள் சொன்னதுபோல அப்பிரியத்தைக் கண்டு நான் திகைத்துப் போய்விட்டேன். ஆனால் அவன் மீது அபி பிரியமாய் இருக்கிறாள் என்பதை அபிக்குச் சொல்ல எனக்குத் தயக்கமாக இருந்தது. 

வழக்கம் போல சிரிப்பொலிகளாக நீடித்துக் கொண்டிருந்த அந்த அலைபேசி உரையாடல் மெல்ல கனக்கத் தொடங்குவது அபியின் குரலில் தெரிந்தது. ஸ்ரீயிடம் மீண்டும் மீண்டும் "லவ் யூ லவ் யூ" எனச்சொல்லி அலைபேசியை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அந்த ஒலி இருள் விலகாத காலையில் என்னுடலில் சிலிர்ப்பினை ஏற்படுத்தத் தொடங்கியது. தேம்பிக் கொண்டே வந்து என்னருகில் படுத்தாள். அவள் தேம்பல் எனக்கு தெளிவாகவேக் கேட்டது. அத்தேம்பலில் நான் விழித்திருக்க வாய்ப்பிருக்கும் என எண்ணியபடி தேம்பலை கட்டுப்படுத்தியபோது நான் அவளை நோக்கித் திரும்பினேன்.

என் முகம் பார்த்ததும் மீண்டும் அழத்தொடங்கினாள். அவ்வழுகையுடன் அவளை அப்படியே இழுத்து அணைத்துக் கொண்டேன். அவள் கண்ணீரில் என் மார்பு நனைந்து போக அவளை அணைத்தபடியே உறங்கிப்போனேன். எனக்கு முன்னே என் உடலுக்குள் ஒடுங்கி அவள் உறங்குவதைப் பார்த்தபோது அழவேண்டும் போலிருந்தது.

----------

அபிநயாதான் பேச்சைத் தொடங்கினாள். 

"சரண், ஆஃப்டர் ஃபிஃப்டின் நீ யாரையாவது கிஸ் பண்ணி இருக்கியா?"

நான் அவளை புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அச்செய்கையால் சோர்வுற்று முகத்தை கொஞ்சுவது போல மாற்றிக் கொண்டு "சொல்லு" என தோளில் அடித்தாள்.

"நான் பண்ணல. ஆனா என்ன பண்ணியிருக்காங்க" என்றேன். அவள் முகம் மாறியது. ஏன் உன் கணவனை நீ முத்தமிட்டதே கிடையாதா என்று கேட்க எழுந்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டேன். எனக்கென அபி எடுத்துக் கொள்ளும் அக்கறைகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர மனதை முடிந்தவரை கனிவுடன் மாற்றிக் கொண்டேன்.

"போடா பொய் சொல்லாத" என்று மீண்டும் முகத்தை நொடித்துக் கொண்டாள். அச்செய்கை அழகாக இருந்தது. நான் அதனை மட்டும் ரசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவளாக "சரண் ஆன்ஸர் மீ" என்றாள்.

"அதான் சொன்னனேடி" என்றேன்.

ஒரு முடிவுக்கு வந்தவளாய் "எங்க" என்றாள்.

உதட்டில் கைவைத்தேன். "ஃப்ராடு ஃப்ராடு ஃப்ராடு" என தொடர்ச்சியாக தோளில் குத்தியபிறகே "எந்த ப்ளேஸ்னு கேட்டேன். எந்த ஏஜ்ல" என ஆர்வமில்லாதவளாகக் கேட்டாள்.

"ட்வெல்த் லீவ்ல டி.சி.ஏ க்ளாஸ் போனப்போ டிரெய்னர் அக்கா கிஸ் பண்ணியிருக்காங்க. அதுதான் ஃபர்ஸ்ட் டைம்" என்றேன்.

"எது ஃப்ர்ஸ்ட் டைமா? அப்புறம் கண்டினியூ வேற ஆச்சா" என்றாள்.

"சேச்சா அவங்களுக்கு அதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்" என்றேன்.

"அப்டீன்னா வேற பொண்ணுங்க?" என்றாள்.

"ம் உண்டே" என்று கண்ணடித்தேன். அபியின் முகம் ஒரு கணம் விகாரமாக மாறியது. அது அவளை வெறுப்புக்குரியவளாக காண்பித்தது. அவளது சதைப்பாங்கான கழுத்துக்கு விழிகளைத் திருப்பி அந்த ஒவ்வாமை என் கண்களில் பிரதிபலித்துவிடாதவாறு தடுத்துக் கொண்டேன். மீண்டும் அவள் கண்களை சந்தித்தபோது வேண்டிய அளவு போதை கண்களில் ஏறியிருந்தது.

என் கைகளை எடுத்து தன் தலைமேல் வைத்து "ரியலி?" என்றாள்.

ஒரு மாதமாக அந்த அக்காதான் கணிணியில் தட்டச்சு செய்வதிலிருந்து கோப்புகளை கையாள்வது வரை அனைத்தையும் சொல்லிக்கொடுத்தாள். மாமிசவாடை நிறைந்த அவளது மூச்சுக்காற்று தோள்களையும் நாசியையும் உரசும் போதெல்லாம் நான் நெளிவேன். ஈரம் உலராத மல்லிகையை அவள் தலையில் சூடியவாறு வருகின்றன  தினங்களில் என் நெளிதல் அதிகரிக்கும். ஒரு மாதம் கடந்திருத்தபோது நண்பர்கள் யாரும் வருவதற்கு முன்னே என் கணிணியின் எதிரே சென்று அமர்ந்து கொண்டு அன்றைய பாடங்களை செய்யத் தொடங்கினேன். என் அருகில் வந்து தலையைக் கோதியவண்ணம் நின்றிருந்தாள். கொஞ்ச நேரத்தில் அந்தக்கோதல் முடியைக் கொத்தாகப் பற்றும் பிடியாக மாறியது.

"வலிக்குதுக்கா" என முனகினேன். 

"வலிக்குதா" என முகத்திற்கு அருகே அவள் வந்து கேட்டபோது என் அவள் மூச்சுக்காற்று சூடேறியிருந்தது. கூந்தல் அவள் சூடி இருந்த மல்லிகையுடன் முன்பக்கம் சரிந்து விழுந்திருந்தது. குளித்த வாசம் உடலிலும் ஷாம்பு மணம் கூந்தலிலும் வீசியது. கூந்தலை எடுத்து என் முகத்தில் அவள் படரவிட்டபோது விழிகளை இறுக மூடிக்கொண்டேன். நெஞ்சு ஏறுக்குமாறாக அடித்துக் கொண்டது. அவள் கூந்தல் இருவர் உதட்டிலும் தங்கியிருக்க இறுக்கமாக முத்தமிட்டாள். முத்தத்தின் அழுத்தம் அதிகரித்தபோது அமர்ந்திருந்த என் கை மணிக்கட்டுகளை இறுகப் பற்றினாள். வலித்தது. எச்சில் படிந்த கூந்தலை எடுத்து பின்னுக்கிட்டவள் நின்றவாக்கிலேயே மார்புடன் இழுத்து என்னை அணைத்தாள். முத்தத்தின் கூந்தலின் மணத்திற்கு தொடர்பே இல்லாததாய் அவள் மார்பின் மணம் இருந்தது. மார்பின் மெல்லிய வியர்வை வாடை கூட அப்போது கிறக்கமூட்டுவதாகவே இருந்தது. கலங்கிய கண்களுடன் என்னை குனிந்து பார்த்தவளின் முகம் குற்றம் செய்துவிட்டதைப் போன்று மாறியிருந்தது. அழுத முகத்துடன் மீண்டும் உதட்டில் அவள் உதடு பதித்தபோது கரித்தது.

"சும்மா சொன்னேன்டா" என அபியைப் பார்த்து சிரித்தேன். அவளும் சிரித்தவாறே எழுந்து கொண்டாள்.

-------

இன்று நள்ளிரவுக்கு முன்பே ஸ்ரீயுடன் கூடியது மன சஞ்சலத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. பக்கத்து அறையில் அர்ச்சனா இருந்தாள்.  சற்று நேரம் அணைத்துக் கொண்டிருந்தவன் உறங்கிப் போயிருந்தான். எனக்கு முன்பே அவன் உறங்கிவிடக்கூடாது என அவனுடனான ஒவ்வொரு இரவும் வேண்டிக்கொள்கிறேன். உறங்கும் அவனுடல் எனக்குள் அருவருப்பை நிறைக்கிறது. எழுந்து குளியறைக்குச் சென்று உடலைத் துடைத்துக் கொண்டேன். அர்ச்சனாவின் அறைக்குச் செல்வதற்காக கதவைத் திறந்த சமயம் இரவில் மறுபடியும் தேடுவானோ என்று தோன்றியது எனக்கு. இடக்கையில் இருந்த அலைபேசியை மீண்டும் மேசையில் வைத்துவிட்டு வெளியேவந்தேன். 

அர்ச்சனா உறங்கிக் கொண்டுதான் இருந்தாள். விளக்கினைப் போடாமல் அவள் அருகில் சென்று படுத்துக் கொண்டேன். என் உடலில் அவன் வாடை எஞ்சி இருக்குமோ என்ற எண்ணம் துணுக்குறலை அளித்தது. குளித்துவிட்டே வந்திருக்கலாம் என்று தோன்றியது. என் அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. பின்னர் ஸ்ரீயின் காலடிச் சத்தமும் கதவினை மெல்ல அவன் தட்டும் சத்தமும் கேட்டன. நான் அர்ச்சனாவை அணைத்துக் கொண்டு இறுக கண்களை மூடிக்கொண்டேன். அவள் தோள் மேல் இருந்த என் கையைத் தட்டிக் கொடுத்தவாறே "தூங்கு அபி" என்றாள். எனக்கு ஏனோ அழுகையாய் வந்தது.

--------

மறுநாள் நான் தாமதமாகவே எழுந்து கொண்டேன். அபியும் ஸ்ரீராமும் பேசிக்கொள்வது கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனினும் இளையவள் எனினும் ஸ்ரீராம் என்னை ஒருமையில் இதுவரை அழைத்ததில்லை. அபி அலுவலகத்தில் இருந்து வர தாமதமாகும் நேரங்களில் சில சமயம் அறையில் வந்து அமர்ந்திருப்பான். நான் வந்ததுமே "வாங்க அர்ச்சனா" என புன்னகைத்துவிட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு மாடிக்கோ ரோட்டுக்கோ சென்றுவிடுவான். ஒரு பயிலப்பட்ட கண்ணியம் அவனிடம் எப்போதும் இருந்தது. அபிக்கு சில சமயம் அக்குணம் சலிப்பேற்படுத்தும்.

ஆனால் இன்று அவன் சத்தமாக பேசிக் கொண்டிருந்தான்.அபியின் குரலும் சத்தமாகவே காதில் விழுந்தது.

"மார்னிங் ஃபைவோ க்ளாக் பதினெட்டு மெசேஜ் வந்திருக்கு. நீ சரண் செல்லம்னு கான்டாக்ட சேவ் பண்ணிருக்க. ஆனா இது எதையும் நான் கேட்கக்கூடாது" என முடிந்தவரை குரலைச் சமநிலையுடன் வைத்துக் கொண்டு அவன் அபியிடம் கேட்டது என்னை பதற்றம் கொள்ளச் செய்தது. அம்மாவை அப்பா அடிக்கக் கை ஓங்கும் போது தோன்றும் பயம் அது என அவ்வுணர்வில் இருந்து சற்று விடுபட்ட பிறகே என்னால் உணர முடிந்தது. 

அவர்கள் ஹாலில் அமர்ந்து தான் பேசிக் கொண்டிருந்தனர். அபியின் முகம் இறுகிப் போயிருந்தது.

"என்னோட மொபைல நீ எதுக்கு எடுத்த?" என்றாள். குரலில் அவளிடம் எப்போதும் இருக்கும் கொஞ்சலும் குழைவும் இல்லாமல்.

ஸ்ரீராமின் முகம் மெல்லக்குழப்பம் அடைந்து மீள்வது தெரிந்தது. 

பின்னர் முகத்தை கூடுமானவரை கனிவுடன் வைத்துக் கொள்ள முயன்றபடி "ஏன் நான் கூட உன் மொபைல பார்க்கக்கூடாதா?" என்றான்.

"நான் கூடன்னா? நான் கூடன்னா என்ன அர்த்தம் அதுக்கு?உன்னோட நியூடா படுத்துகிறதால செக்ஸ் வெச்சிக்கிறதால என்னோட பர்சனல் எல்லாம் நீ தெரிஞ்சிக்கணும்ங்கிற அவசியம் இல்ல" என்றாள்.

அந்த அறையை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டேன்.

ஸ்ரீராமின் முகம் மீண்டும் இறுகியது. 

"இனிமே அவன்கூட அதிகம் பேசாத" என்றான். அவன் குரல் பரிதாபப்படும் அளவிற்குத் தாழ்ந்திருத்தது.

"அதை முடிவு செய்ய வேண்டியது நான். நீ தெரிந்து கொள்ள விரும்புவது இதுதானே. நான் இதுவரை அவனுடன் புணரவில்லை போதுமா?" என ஆங்கிலத்தில் சொன்னாள். நான் எச்சில் கூட்டி விழுங்கினேன். ஸ்ரீராம் அன்று மாலை ஃப்ரான்ஸ் புறப்பட்டுவிட்டான். அதன்பின் அபியும் அவனும் அலைபேசியில் அதிகம் உரையாடுவதில்லை. 

ஒருநாள் அலைபேசியில் "அச்சு இது ஓகேவான்னு பாருடி. டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்காரு வக்கீல்" என்றாள். நான் அதிர்ந்து போயிருந்தேன். அவன் வீட்டுக்கும் அவள் வீட்டுக்கும் செய்தி தெரிந்தபிறகு அபியின் அம்மா வந்து அவளிடம் அழுதுவிட்டுச் சென்றாள். அவள் மாமியார் வந்து அவளது குறிதூய்மையானதல்ல என்பதை பல வகைகளில் சொல்லி வசைபாடினாள். அக்குறியில் நுழைக்கப்பட்ட அவள் மகனின் குறியும் தூய்மை இழந்துவிட்டதை அதேமொழியில் அபி மறுமொழியாகச் சொன்னபோது இடியிறங்கியது போல ஒரு வார்த்தை பேசாமல் அந்த முதியவள் வெளியே சென்றாள்.

சரணுக்கு இது அனைத்தும் தெரிந்துதான் இருந்தது. ஆனால் அவன் பெரிதாக பட்டுக்கொள்ளவில்லை.ஒருநாள் என்னையும் அழைத்துக் கொண்டு சரணைப் பார்ப்பதற்கு புறப்பட்டாள்.

அவன் கதவைத் திறந்ததுமே "எனக்கு டைவர்ஸ் கெடச்ச பிறகு நாம கல்யாணம் பண்ணிக்கலாமா" என்றாள். அவன் குழப்பத்துடன் "உள்ள வா. நீங்களும் வாங்க அர்ச்சனா" என்றான்.

"நீ பதில் சொல்லு. நான் கன்சீவா இருக்கேன்" என்றாள்.

"வா பேசலாம்" என்று சொன்னபோது அவன் குரல் இறுகியிருந்தது.

-----
எனக்கு பணி மாறுதல் கிடைத்தபிறகும் அர்ச்சனா தொடர்ந்து அந்த அலுவலகத்திலேயே பணியாற்றிக் கொண்டிருந்தாள்.

வயிற்றைத் தள்ளிக்கொண்டு மெல்ல நடப்பதை இன்னொருத்தியாக எதிரே நின்று கற்பனை செய்துபார்த்தேன். சிரிப்பாக இருந்தது. அர்ச்சனா தயாராகிவிட்டாளா என்று ஒருமுறை அழைத்து உறுதி செய்து கொண்டேன்.

"நான் ரெடியாதாண்டி இருக்கேன். நீ ரூமுக்கு வா" என்றாள்.

இரவில் தனியாக நானூறு கிலோமீட்டர் பயணித்திருக்க வேண்டாம் என்று இப்போது தோன்றுகிறது. அம்மாவை அழைத்து வந்திருக்கலாம். என்னவென்று சொல்லி அழைப்பது?

அர்ச்சனாவுக்கு என்னைப் பார்த்ததும் விழிகளில் நீர்கோத்துக் கொண்டது. அழுதவாறே என்னை முத்தமிட்டாள்.

"ஏய் நான் இன்னும் குளிக்கலடி" என அவளை மெல்ல உந்தித் தள்ளினேன். 

திருமண மண்டபம் அர்ச்சனாவின் அறைக்கு அருகில்தான் இருந்தது. அதோடு விவாகரத்து வழக்கு இங்குள்ள நீதிமன்றத்தில் நடப்பதால் ஒருவார விடுமுறையில் வந்திருந்தேன்.

சரணுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் அர்ச்சனா கேட்டாள்.

"ஏன்டி கஷ்டப்பட்ற. வேலைய ரிசைன் பண்ணிடலாம்ல. அப்பா ஃபோன் பண்ணி இருந்தாருடி. உன்ன கன்வெய்ன்ஸ் பண்ணி வேலைய விடச் சொல்ல சொன்னார். உன்ன எங்க கன்வெய்ன்ஸ் எல்லாம் பண்றது" என சலித்துக் கொண்டாள்.

"இல்ல அச்சு. இருக்கட்டும் ஒரு சேஃப்டிக்கு" என்று அவளைப் பார்த்து கண்ணடித்தேன். மீண்டும் அவள் விழிகளில் நீர்கோத்துக் கொண்டது ஏன் என்று உடனடியாக எனக்குப் புரியவில்லை.