Tuesday, 15 May 2018

அபி - சிறுகதை

சலவை செய்யப்பட்ட தூய்மையான வெள்ளைப் படுக்கை விரிப்பின் நறுமணம் அந்த நாளின் தொடக்கமாக இருந்தது. சலவையால் ஏற்பட்ட மொடமொடப்பு நிறைந்த சந்தனநிறப் போர்வையை விளக்கி என்னைப் பார்த்தேன். நேற்று அணிந்திருந்த அதே வெண்ணிறச்சுடிதாருடன் உறங்கிப் போயிருக்கிறேன். என்னுடலின் காய்ந்த வியர்வை மணம் கூட அந்த தூய காலைக்கு ஏதோவொரு கிறக்கத்தை கொடுப்பதாகவே இருந்தது. முகம் மட்டும் தெரிவது போல போர்வையை தலையைச் சுற்றி போர்த்தி கைகளை கழுத்துக்குக் கீழே வைத்துக் கொண்டேன். உடலில் எடுத்த உளைச்சல்கள் இனிமையாகச் சூழ்ந்தன. பக்கத்தில் அபி படுத்திருக்கவில்லை. மெல்லிய முனகல் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. கணவனுடன் உரையாடிக் கொண்டிருப்பாள். அவன் ஃப்ரான்ஸில் இருக்கிறான். திருமணமான இரண்டாவது வாரமே அவன்  அங்கு செல்ல நேர்ந்தது குறித்து அபி அடிக்கடி என்னிடம் சொல்லி அழுவாள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஸ்ரீராம் விடுப்பில் வந்து சென்று கொண்டிருந்தான். அவளுக்கு வேலையை விட்டு அவனுடன் சென்று தங்குவதில் விருப்பம் இல்லாமல் இருந்தது.

" உங்க வீட்லயும் யாருக்கும் பிடிக்கல. பின்ன ஏன்டி இந்த வேலையிலேயே கண்டினியூ பண்ற. பேசாம ஸ்ரீயோட ஃப்ரான்ஸ் போயிடலாம்ல" என அவள் அழும் ஒவ்வொரு முறையும் சமாதானம் செய்திருக்கிறேன். என்னைப்போல இந்த வேலை செய்து தான் குடும்பத்தை தாங்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் அபிக்கு கிடையாது.

"இல்லடி எதுக்கும் ஒரு பேக் அப் இருக்கட்டும். அப்படியெல்லாம் கம்ப்ளீட்டா யாரையும் நம்ப ஐயம் நாட் ரெடி" என்று கண்ணடித்தாலும் அவள் வேலையை நீங்காமல் இருந்ததற்கு வேறு காரணங்களும் இருந்தன. சரணுடனான அவளது நட்பு இவ்வளவு தீவிரமாக வளருமென நான் எண்ணியிருக்கவில்லை. ஆனால் அவனை அபி அதிக ஒவ்வாமையுடன் நோக்கத் தொடங்கியபோதே நான் ஓரளவு யூகித்துவிட்டேன்.

"கொஞ்சம் நீட்டா டிரெஸ் பண்ணிட்டு வந்தா என்னடி இவன். ஷெர்ட் அயர்ன் பண்ணிபோடக்கூட சாருக்கு நேரம் இருக்காது போல" என அவளே உணவு இடைவேளைகளில் சொல்வாள்.

"ஷேவ் பண்ணினா கொஞ்சமாவது பாக்கிற மாதிரி தெரியலாம். அதிலும் இவன பப்ளிக் ரிலேஷன்ல வெச்சிருக்காங்க. க்ளையண்ட்ஸ் இவன் மூஞ்சிய பாத்தே ஓடிப்போயிடுவாங்க இடியட்" என அவள் சொன்னதுபோல அப்பிரியத்தைக் கண்டு நான் திகைத்துப் போய்விட்டேன். ஆனால் அவன் மீது அபி பிரியமாய் இருக்கிறாள் என்பதை அபிக்குச் சொல்ல எனக்குத் தயக்கமாக இருந்தது. 

வழக்கம் போல சிரிப்பொலிகளாக நீடித்துக் கொண்டிருந்த அந்த அலைபேசி உரையாடல் மெல்ல கனக்கத் தொடங்குவது அபியின் குரலில் தெரிந்தது. ஸ்ரீயிடம் மீண்டும் மீண்டும் "லவ் யூ லவ் யூ" எனச்சொல்லி அலைபேசியை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அந்த ஒலி இருள் விலகாத காலையில் என்னுடலில் சிலிர்ப்பினை ஏற்படுத்தத் தொடங்கியது. தேம்பிக் கொண்டே வந்து என்னருகில் படுத்தாள். அவள் தேம்பல் எனக்கு தெளிவாகவேக் கேட்டது. அத்தேம்பலில் நான் விழித்திருக்க வாய்ப்பிருக்கும் என எண்ணியபடி தேம்பலை கட்டுப்படுத்தியபோது நான் அவளை நோக்கித் திரும்பினேன்.

என் முகம் பார்த்ததும் மீண்டும் அழத்தொடங்கினாள். அவ்வழுகையுடன் அவளை அப்படியே இழுத்து அணைத்துக் கொண்டேன். அவள் கண்ணீரில் என் மார்பு நனைந்து போக அவளை அணைத்தபடியே உறங்கிப்போனேன். எனக்கு முன்னே என் உடலுக்குள் ஒடுங்கி அவள் உறங்குவதைப் பார்த்தபோது அழவேண்டும் போலிருந்தது.

----------

அபிநயாதான் பேச்சைத் தொடங்கினாள். 

"சரண், ஆஃப்டர் ஃபிஃப்டின் நீ யாரையாவது கிஸ் பண்ணி இருக்கியா?"

நான் அவளை புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அச்செய்கையால் சோர்வுற்று முகத்தை கொஞ்சுவது போல மாற்றிக் கொண்டு "சொல்லு" என தோளில் அடித்தாள்.

"நான் பண்ணல. ஆனா என்ன பண்ணியிருக்காங்க" என்றேன். அவள் முகம் மாறியது. ஏன் உன் கணவனை நீ முத்தமிட்டதே கிடையாதா என்று கேட்க எழுந்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டேன். எனக்கென அபி எடுத்துக் கொள்ளும் அக்கறைகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர மனதை முடிந்தவரை கனிவுடன் மாற்றிக் கொண்டேன்.

"போடா பொய் சொல்லாத" என்று மீண்டும் முகத்தை நொடித்துக் கொண்டாள். அச்செய்கை அழகாக இருந்தது. நான் அதனை மட்டும் ரசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவளாக "சரண் ஆன்ஸர் மீ" என்றாள்.

"அதான் சொன்னனேடி" என்றேன்.

ஒரு முடிவுக்கு வந்தவளாய் "எங்க" என்றாள்.

உதட்டில் கைவைத்தேன். "ஃப்ராடு ஃப்ராடு ஃப்ராடு" என தொடர்ச்சியாக தோளில் குத்தியபிறகே "எந்த ப்ளேஸ்னு கேட்டேன். எந்த ஏஜ்ல" என ஆர்வமில்லாதவளாகக் கேட்டாள்.

"ட்வெல்த் லீவ்ல டி.சி.ஏ க்ளாஸ் போனப்போ டிரெய்னர் அக்கா கிஸ் பண்ணியிருக்காங்க. அதுதான் ஃபர்ஸ்ட் டைம்" என்றேன்.

"எது ஃப்ர்ஸ்ட் டைமா? அப்புறம் கண்டினியூ வேற ஆச்சா" என்றாள்.

"சேச்சா அவங்களுக்கு அதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்" என்றேன்.

"அப்டீன்னா வேற பொண்ணுங்க?" என்றாள்.

"ம் உண்டே" என்று கண்ணடித்தேன். அபியின் முகம் ஒரு கணம் விகாரமாக மாறியது. அது அவளை வெறுப்புக்குரியவளாக காண்பித்தது. அவளது சதைப்பாங்கான கழுத்துக்கு விழிகளைத் திருப்பி அந்த ஒவ்வாமை என் கண்களில் பிரதிபலித்துவிடாதவாறு தடுத்துக் கொண்டேன். மீண்டும் அவள் கண்களை சந்தித்தபோது வேண்டிய அளவு போதை கண்களில் ஏறியிருந்தது.

என் கைகளை எடுத்து தன் தலைமேல் வைத்து "ரியலி?" என்றாள்.

ஒரு மாதமாக அந்த அக்காதான் கணிணியில் தட்டச்சு செய்வதிலிருந்து கோப்புகளை கையாள்வது வரை அனைத்தையும் சொல்லிக்கொடுத்தாள். மாமிசவாடை நிறைந்த அவளது மூச்சுக்காற்று தோள்களையும் நாசியையும் உரசும் போதெல்லாம் நான் நெளிவேன். ஈரம் உலராத மல்லிகையை அவள் தலையில் சூடியவாறு வருகின்றன  தினங்களில் என் நெளிதல் அதிகரிக்கும். ஒரு மாதம் கடந்திருத்தபோது நண்பர்கள் யாரும் வருவதற்கு முன்னே என் கணிணியின் எதிரே சென்று அமர்ந்து கொண்டு அன்றைய பாடங்களை செய்யத் தொடங்கினேன். என் அருகில் வந்து தலையைக் கோதியவண்ணம் நின்றிருந்தாள். கொஞ்ச நேரத்தில் அந்தக்கோதல் முடியைக் கொத்தாகப் பற்றும் பிடியாக மாறியது.

"வலிக்குதுக்கா" என முனகினேன். 

"வலிக்குதா" என முகத்திற்கு அருகே அவள் வந்து கேட்டபோது என் அவள் மூச்சுக்காற்று சூடேறியிருந்தது. கூந்தல் அவள் சூடி இருந்த மல்லிகையுடன் முன்பக்கம் சரிந்து விழுந்திருந்தது. குளித்த வாசம் உடலிலும் ஷாம்பு மணம் கூந்தலிலும் வீசியது. கூந்தலை எடுத்து என் முகத்தில் அவள் படரவிட்டபோது விழிகளை இறுக மூடிக்கொண்டேன். நெஞ்சு ஏறுக்குமாறாக அடித்துக் கொண்டது. அவள் கூந்தல் இருவர் உதட்டிலும் தங்கியிருக்க இறுக்கமாக முத்தமிட்டாள். முத்தத்தின் அழுத்தம் அதிகரித்தபோது அமர்ந்திருந்த என் கை மணிக்கட்டுகளை இறுகப் பற்றினாள். வலித்தது. எச்சில் படிந்த கூந்தலை எடுத்து பின்னுக்கிட்டவள் நின்றவாக்கிலேயே மார்புடன் இழுத்து என்னை அணைத்தாள். முத்தத்தின் கூந்தலின் மணத்திற்கு தொடர்பே இல்லாததாய் அவள் மார்பின் மணம் இருந்தது. மார்பின் மெல்லிய வியர்வை வாடை கூட அப்போது கிறக்கமூட்டுவதாகவே இருந்தது. கலங்கிய கண்களுடன் என்னை குனிந்து பார்த்தவளின் முகம் குற்றம் செய்துவிட்டதைப் போன்று மாறியிருந்தது. அழுத முகத்துடன் மீண்டும் உதட்டில் அவள் உதடு பதித்தபோது கரித்தது.

"சும்மா சொன்னேன்டா" என அபியைப் பார்த்து சிரித்தேன். அவளும் சிரித்தவாறே எழுந்து கொண்டாள்.

-------

இன்று நள்ளிரவுக்கு முன்பே ஸ்ரீயுடன் கூடியது மன சஞ்சலத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. பக்கத்து அறையில் அர்ச்சனா இருந்தாள்.  சற்று நேரம் அணைத்துக் கொண்டிருந்தவன் உறங்கிப் போயிருந்தான். எனக்கு முன்பே அவன் உறங்கிவிடக்கூடாது என அவனுடனான ஒவ்வொரு இரவும் வேண்டிக்கொள்கிறேன். உறங்கும் அவனுடல் எனக்குள் அருவருப்பை நிறைக்கிறது. எழுந்து குளியறைக்குச் சென்று உடலைத் துடைத்துக் கொண்டேன். அர்ச்சனாவின் அறைக்குச் செல்வதற்காக கதவைத் திறந்த சமயம் இரவில் மறுபடியும் தேடுவானோ என்று தோன்றியது எனக்கு. இடக்கையில் இருந்த அலைபேசியை மீண்டும் மேசையில் வைத்துவிட்டு வெளியேவந்தேன். 

அர்ச்சனா உறங்கிக் கொண்டுதான் இருந்தாள். விளக்கினைப் போடாமல் அவள் அருகில் சென்று படுத்துக் கொண்டேன். என் உடலில் அவன் வாடை எஞ்சி இருக்குமோ என்ற எண்ணம் துணுக்குறலை அளித்தது. குளித்துவிட்டே வந்திருக்கலாம் என்று தோன்றியது. என் அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. பின்னர் ஸ்ரீயின் காலடிச் சத்தமும் கதவினை மெல்ல அவன் தட்டும் சத்தமும் கேட்டன. நான் அர்ச்சனாவை அணைத்துக் கொண்டு இறுக கண்களை மூடிக்கொண்டேன். அவள் தோள் மேல் இருந்த என் கையைத் தட்டிக் கொடுத்தவாறே "தூங்கு அபி" என்றாள். எனக்கு ஏனோ அழுகையாய் வந்தது.

--------

மறுநாள் நான் தாமதமாகவே எழுந்து கொண்டேன். அபியும் ஸ்ரீராமும் பேசிக்கொள்வது கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனினும் இளையவள் எனினும் ஸ்ரீராம் என்னை ஒருமையில் இதுவரை அழைத்ததில்லை. அபி அலுவலகத்தில் இருந்து வர தாமதமாகும் நேரங்களில் சில சமயம் அறையில் வந்து அமர்ந்திருப்பான். நான் வந்ததுமே "வாங்க அர்ச்சனா" என புன்னகைத்துவிட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு மாடிக்கோ ரோட்டுக்கோ சென்றுவிடுவான். ஒரு பயிலப்பட்ட கண்ணியம் அவனிடம் எப்போதும் இருந்தது. அபிக்கு சில சமயம் அக்குணம் சலிப்பேற்படுத்தும்.

ஆனால் இன்று அவன் சத்தமாக பேசிக் கொண்டிருந்தான்.அபியின் குரலும் சத்தமாகவே காதில் விழுந்தது.

"மார்னிங் ஃபைவோ க்ளாக் பதினெட்டு மெசேஜ் வந்திருக்கு. நீ சரண் செல்லம்னு கான்டாக்ட சேவ் பண்ணிருக்க. ஆனா இது எதையும் நான் கேட்கக்கூடாது" என முடிந்தவரை குரலைச் சமநிலையுடன் வைத்துக் கொண்டு அவன் அபியிடம் கேட்டது என்னை பதற்றம் கொள்ளச் செய்தது. அம்மாவை அப்பா அடிக்கக் கை ஓங்கும் போது தோன்றும் பயம் அது என அவ்வுணர்வில் இருந்து சற்று விடுபட்ட பிறகே என்னால் உணர முடிந்தது. 

அவர்கள் ஹாலில் அமர்ந்து தான் பேசிக் கொண்டிருந்தனர். அபியின் முகம் இறுகிப் போயிருந்தது.

"என்னோட மொபைல நீ எதுக்கு எடுத்த?" என்றாள். குரலில் அவளிடம் எப்போதும் இருக்கும் கொஞ்சலும் குழைவும் இல்லாமல்.

ஸ்ரீராமின் முகம் மெல்லக்குழப்பம் அடைந்து மீள்வது தெரிந்தது. 

பின்னர் முகத்தை கூடுமானவரை கனிவுடன் வைத்துக் கொள்ள முயன்றபடி "ஏன் நான் கூட உன் மொபைல பார்க்கக்கூடாதா?" என்றான்.

"நான் கூடன்னா? நான் கூடன்னா என்ன அர்த்தம் அதுக்கு?உன்னோட நியூடா படுத்துகிறதால செக்ஸ் வெச்சிக்கிறதால என்னோட பர்சனல் எல்லாம் நீ தெரிஞ்சிக்கணும்ங்கிற அவசியம் இல்ல" என்றாள்.

அந்த அறையை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டேன்.

ஸ்ரீராமின் முகம் மீண்டும் இறுகியது. 

"இனிமே அவன்கூட அதிகம் பேசாத" என்றான். அவன் குரல் பரிதாபப்படும் அளவிற்குத் தாழ்ந்திருத்தது.

"அதை முடிவு செய்ய வேண்டியது நான். நீ தெரிந்து கொள்ள விரும்புவது இதுதானே. நான் இதுவரை அவனுடன் புணரவில்லை போதுமா?" என ஆங்கிலத்தில் சொன்னாள். நான் எச்சில் கூட்டி விழுங்கினேன். ஸ்ரீராம் அன்று மாலை ஃப்ரான்ஸ் புறப்பட்டுவிட்டான். அதன்பின் அபியும் அவனும் அலைபேசியில் அதிகம் உரையாடுவதில்லை. 

ஒருநாள் அலைபேசியில் "அச்சு இது ஓகேவான்னு பாருடி. டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்காரு வக்கீல்" என்றாள். நான் அதிர்ந்து போயிருந்தேன். அவன் வீட்டுக்கும் அவள் வீட்டுக்கும் செய்தி தெரிந்தபிறகு அபியின் அம்மா வந்து அவளிடம் அழுதுவிட்டுச் சென்றாள். அவள் மாமியார் வந்து அவளது குறிதூய்மையானதல்ல என்பதை பல வகைகளில் சொல்லி வசைபாடினாள். அக்குறியில் நுழைக்கப்பட்ட அவள் மகனின் குறியும் தூய்மை இழந்துவிட்டதை அதேமொழியில் அபி மறுமொழியாகச் சொன்னபோது இடியிறங்கியது போல ஒரு வார்த்தை பேசாமல் அந்த முதியவள் வெளியே சென்றாள்.

சரணுக்கு இது அனைத்தும் தெரிந்துதான் இருந்தது. ஆனால் அவன் பெரிதாக பட்டுக்கொள்ளவில்லை.ஒருநாள் என்னையும் அழைத்துக் கொண்டு சரணைப் பார்ப்பதற்கு புறப்பட்டாள்.

அவன் கதவைத் திறந்ததுமே "எனக்கு டைவர்ஸ் கெடச்ச பிறகு நாம கல்யாணம் பண்ணிக்கலாமா" என்றாள். அவன் குழப்பத்துடன் "உள்ள வா. நீங்களும் வாங்க அர்ச்சனா" என்றான்.

"நீ பதில் சொல்லு. நான் கன்சீவா இருக்கேன்" என்றாள்.

"வா பேசலாம்" என்று சொன்னபோது அவன் குரல் இறுகியிருந்தது.

-----
எனக்கு பணி மாறுதல் கிடைத்தபிறகும் அர்ச்சனா தொடர்ந்து அந்த அலுவலகத்திலேயே பணியாற்றிக் கொண்டிருந்தாள்.

வயிற்றைத் தள்ளிக்கொண்டு மெல்ல நடப்பதை இன்னொருத்தியாக எதிரே நின்று கற்பனை செய்துபார்த்தேன். சிரிப்பாக இருந்தது. அர்ச்சனா தயாராகிவிட்டாளா என்று ஒருமுறை அழைத்து உறுதி செய்து கொண்டேன்.

"நான் ரெடியாதாண்டி இருக்கேன். நீ ரூமுக்கு வா" என்றாள்.

இரவில் தனியாக நானூறு கிலோமீட்டர் பயணித்திருக்க வேண்டாம் என்று இப்போது தோன்றுகிறது. அம்மாவை அழைத்து வந்திருக்கலாம். என்னவென்று சொல்லி அழைப்பது?

அர்ச்சனாவுக்கு என்னைப் பார்த்ததும் விழிகளில் நீர்கோத்துக் கொண்டது. அழுதவாறே என்னை முத்தமிட்டாள்.

"ஏய் நான் இன்னும் குளிக்கலடி" என அவளை மெல்ல உந்தித் தள்ளினேன். 

திருமண மண்டபம் அர்ச்சனாவின் அறைக்கு அருகில்தான் இருந்தது. அதோடு விவாகரத்து வழக்கு இங்குள்ள நீதிமன்றத்தில் நடப்பதால் ஒருவார விடுமுறையில் வந்திருந்தேன்.

சரணுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் அர்ச்சனா கேட்டாள்.

"ஏன்டி கஷ்டப்பட்ற. வேலைய ரிசைன் பண்ணிடலாம்ல. அப்பா ஃபோன் பண்ணி இருந்தாருடி. உன்ன கன்வெய்ன்ஸ் பண்ணி வேலைய விடச் சொல்ல சொன்னார். உன்ன எங்க கன்வெய்ன்ஸ் எல்லாம் பண்றது" என சலித்துக் கொண்டாள்.

"இல்ல அச்சு. இருக்கட்டும் ஒரு சேஃப்டிக்கு" என்று அவளைப் பார்த்து கண்ணடித்தேன். மீண்டும் அவள் விழிகளில் நீர்கோத்துக் கொண்டது ஏன் என்று உடனடியாக எனக்குப் புரியவில்லை.

No comments:

Post a Comment