Friday, 16 February 2018

பச்சை நரம்பு - முனைகொள்ளும் சிக்கல்கள்
சிறுகதை என்ற வடிவம் குறித்த புரிதலை தொடர்ச்சியாக சிறுகதைகளை வாசிப்பதன் வழியே அடைய முடியும் என நினைக்கிறேன். வாழ்வின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தை ஒளியேற்றி நிறுத்த சிறுகதை வடிவம் ஏற்புடையது. நாவல் இதற்கு எதிரான வடிவம். ஒரு நாவலை வாசித்து முடிக்கும் போது நம்முள் தங்குவதும் நாம் சிந்திப்பதும் பெரும்பாலும் ஆசிரியனால் முடிவு செய்யப்படுவது கிடையாது. ஒரு வகையில் நாவல் "நோக்கமற்றது". விவாதத்தன்மை உடையாது. எல்லா சாத்தியங்களையும் திறந்து நோக்கிவிட முடியுமா என்ற கேள்வியுடன் நிதானமாக பயணத்தை மேற்கொள்வது. இக்காரணங்களால் நாவல் வாசிப்பு சிந்திப்பதற்கான இடைவெளிகளை தானாகவே உருவாக்கி வழங்கும். ஆனால் சிறுகதை நேரெதிர் தன்மையான வாசிப்பைக் கோருகிறது. முதல் வரியிலிருந்தே உச்சவிசையுடன் இலக்கு நோக்கி பாய்வது போன்ற ஒரு வாசிப்பை சிறுகதைகளுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. அவ்வகையான வாசிப்பு அளிக்கும் போது அந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து அழைத்துச் செல்லும் மொழியும் கூர்மையான சித்தரிப்புகளும் நீட்டி முழக்காமல் "சிதறல்கள்" அற்று உணர்வுகளை கடத்த வேண்டியது ஒரு சிறுகதையின் கட்டாயம் ஆகிறது. வடிவப்புதுமை வித்தியாசமான கருப்பொருள் இவற்றைத்தாண்டி சிறுகதை விரைந்து நகரும் தன்மை கொண்டதாக இருந்தாக வேண்டியிருக்கிறது. அதேநேரம் கச்சிதமான முடிவையும் சிறுகதை அடைந்தாக வேண்டும். வடிவ முழுமையும் இறுதித் திருப்பமும் விரைவான கதையுடலும் சிறுகதையின் இன்றிமையாத கூறுகள். இவற்றை அனோஜன் இளம் வயதிலேயே எட்டியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

பச்சை நரம்பு பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இத்தொகுப்பில் உள்ள வெளிதல் கதையில் ஒரு சித்தரிப்பு. கதையின் நாயகியான பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையைச் சொல்லியபடியே வருகிறது இக்கதை. காமத்திற்கென ஆண் கொள்ளும் பல நுண்ணிய நாடகங்களை ரசித்தபடி அவனைத் தேற்றுவதும் வக்கிரங்கள் வெளிப்படும்  போது மறுப்பதும் என இக்கதை நகர்கிறது. வாசிக்கும் எழுதும் பழக்கமுடைய அவளுடைய தோழனைத் தேடி அவள் செல்கிறாள். அவளைப் புணரும் முன் அவன் "ஆண்களின் தசைகளில் உறையும் தீங்குகளை நீக்கி நீ அவர்களை சுத்தப்படுத்துகிறாய்?" என்கிறான். அதை தீங்கென்று எண்ண முடியுமா என்று அவள் சிந்திக்கிறாள்.
அதுபோல இளவயதில் தன்னை உடல் தேவைக்கென பயன்படுத்திக் கொண்ட தன்னை விட பல வயது மூத்தப் பெண்ணைப் பற்றி பல வருடங்கள் கழித்து நண்பனிடம் கதை சொல்லி கூறும்போது அந்த "சுரண்டலை" சுரண்டலாக அவனால் எண்ண முடியவில்லை. அனோஜனின் புனைவுலகை இச்சித்தரிப்புகளின் வழியாக நான் புரிந்து கொள்ள முயல்கிறேன். கனமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் அனோஜன் அவற்றிலிருக்கும் ஒரு அன்றாடத் தன்மையின் மூலம் அக்களங்களை சித்தரிப்பதன் வழியாக தன் புனைவுகளின் வண்ணங்களை மாற்றிவிடுகிறார்.

இலங்கையில் போர்ச்சூழலில் பிறந்தவரான அனோஜனின் போர் மீதான நடைமுறைத்தன்மை கொண்ட பார்வை இத்தொகுப்பை முக்கியமானதாக மாற்றுகிறது. பத்து கதைகளில் நானூறு ரியால்,பலி,இணைகோடு,மனநிழல் ஆகிய நான்கு கதைகள் போர்ச்சூழலினால் ஒரு இளம் மனம் அடையும் குழப்பங்களை தொட்டிருக்கின்றன. இந்த நான்கு கதைகளிலுமே பிறந்து விழுந்த சூழலின் மதிப்பீடுகளுக்கு எதிராகத் திரும்பும் ஒரு இளம் மனம் தான் சொல்லப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு கதையும் இச்சிக்கலை வெவ்வேறு விதங்களில் எதிர்கொள்கிறது. நானூறு ரியால் கதை மட்டும் இவற்றில் சற்று பலகீனமாகத் தென்படுகிறது. பலியில் வெடிகுண்டு வைக்கப் பழகும் சிறுவனாக,இணைகோட்டில் ராணுவ வீரனொருவனை காதலித்து மணந்து கொள்ளும் தமிழ் பெண்ணிடம் உதவி பெறும் இளைஞனாக,மனநிழலில் நண்பனின் இறப்பைத் தவிர்த்துவிட்டு வெளிநாடு செல்வதெற்கென இறந்தவனின் நண்பனாக இருந்ததையே காரணம் காட்டுகிறவனாக கதை சொல்லி மாறிக்கொண்டே இருக்கிறான். இக்கதைகள் அனைத்திலுமே மதிப்பீடுகள் மீதான ஏக்கமும் நடைமுறை நிர்பந்தத்தால் அதைக் கடந்து செல்ல வேண்டிய குற்றவுணர்வும் வெளிப்பட்டபடியே இருக்கிறது. 
இளைஞன் ஒருவனின் கண்ணிலிருந்து இக்கதைகள் சொல்லப்பட்டிருப்பதாலேயே இன்றைய இளம் மனம் எதிர்கொள்ளும் கொள்ளவிருக்கும் சிக்கல்களை மையப்படுத்துகிறவையாக இக்கதைகள் அமைந்துவிடுகின்றன.

மற்ற ஆறுகதைகளும் ஏதோவொரு விதத்தில் பாலுறவுச் சிக்கல்களை அதைக் கடந்து வருவதற்கு முன் மனம் அடையும் சஞ்சலங்களை கடக்கையில் மனம் பெறும் விடுதலையைப் பேசுகின்றன. முதல் கதையான வாசனை அப்பாவின் காதல் கதையை அம்மாவின் மூலம் தெரிந்து கொள்ளும் பெண்ணின் பார்வையில் சொல்லப்படுகிறது. தன் அப்பா காதலித்த முகம் அறியாத அந்தப்பெண்ணாக கதை சொல்லி தன்னை புனைந்து கொள்வதோடு கதை முடிகிறது. கதையின் துவக்கத்தில் நறுமணம் மிக்கவையாகத் தோன்றும் கணவனின் உடைகள் கதை முடியும் போது அழுக்கானவையாக சித்தரிக்கப்பட்டிருப்பது இக்கதையில் முக்கிய படிமம். அப்பா காதலன் கணவன் என எங்கும் முழுமையைக் கண்டறிய முடியாத கதை சொல்லி முகம் தெரியாத ஒரு பெண்ணாக தன்னை மாற்றிக் கொள்கிறாள்.

இச்சை,உறுப்பு இரண்டு கதைகளுமே ஒரு வகையான மீட்சி குறித்தே பேசுகின்றன. இச்சையில் இளவயதில் தன்னை "உபயோகப்படுத்திக்" கொண்ட பெண்ணின் குழந்தையை கொஞ்சுவதன் வழியாக உறுப்பில் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்களை ஒரு முத்தத்தின் வழியாக கதை சொல்லி கடந்து வருவதை சித்தரிக்கிறார்.
ஒட்டுமொத்தமாக அனோஜனின் புனைவுலகை நான் இவ்வாறு தொகுத்துக் கொள்கிறேன். ஒற்றைப்படையான செயலூக்கத்துடன் இக்கதைகள் எதுவும் பாய்வதில்லை. அவை மறுபக்கத்தைப் பார்க்கின்றன. கதாமாந்தர்கள் தங்கள் மீதும் தவறு இருக்குமோ என ஐயப்படுகின்றனர். இந்த ஐயமும் தயக்கமுமே நவீன வாழ்வை புரிந்து கொள்ள முயலும் மனம் அடைவது. அதை மொழியில் மிகச்சரியாக இக்கதைகள் பிரதிபலிக்கின்றன.

பச்சை நரம்பு வழக்கமான அம்மா-காதலி-காமம் வகையறாக் கதை. சித்தரிப்புகள் வலுவானவையாக இருந்தாலும் இறுதியில் கதை சொல்லி அடையக்கூடிய தரிசனம் வழமையான ஒன்றே. கிடாய் இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதையென்று சொல்லலாம். தகப்பனின் மீதான வெறுப்பை பெண் மிக நுட்பமாக வெளிப்படுத்துவதாக கூட்டிச் சென்று கதையின் முடிவில் அது வேறு வகையான திறப்பினை அளிக்கும் வகையில் முடித்திருப்பது கச்சிதமான சிறுகதை வாசித்த உணர்வினைத் தந்தது. விமலரூபன்,தேவி என்ற பெயர்கள் கூட வேறு அர்த்தம் தருவதாக சட்டென மாறிவிடுகின்றன. பாலுறவுச் சிக்கல்களை எழுதுவது புனைவுக்கு ஒரு வகையான நம்பகத் தன்மையை வாசகர் உடனடியாகத் தொடர்புறுத்திக் கொள்ளும் தன்மையை அளிக்கிறது. அத்தோடு அச்சிக்கல்களிலேயே உழன்று கொண்டிருக்காமல் அதை மீறிச்சென்று ஒரு தரிசனத்தை முன் வைக்கவும் அனோஜனால் முடிகிறது என்பதும் முக்கியமானதே. அதேநேரம் இவ்வகைக் கதைகளை இவை முன் வைக்கும் தரிசனங்களை முயன்றால் யாரும் எழுதிவிட முடியும் என்பதே இவற்றில் உள்ள சிக்கல். அனோஜனின் வலுவான புனைவுமொழி மற்றும் சித்தரிப்புகள் தாண்டி இக்கதைகளின் "நேர்மறைத்தன்மை" மட்டுமே முக்கியமானவையாகத் தோன்றுகின்றன. ஆகவே அனோஜன் எதிர்வரும் காலங்களில் தன் புனைவின் களங்களை மாற்றிக் கொள்வது தன் படைப்பு மொழியின் வழியாக வாசகனுக்கு மேலும் பல திறப்புகளை அளிக்க உதவும் என நம்புகிறேன்.

நவீன வாழ்வில் முழுமையாகப் பிறந்து விழுந்த ஒரு இளைஞனுக்கு நேற்றின் மதிப்பீடுகள் எப்படி பொருள்படுகின்றன அவற்றில் அவனுக்குள் எவையெல்லாம் திகைப்பினை அளிக்கின்றன எவற்றின் முன்னெல்லாம் ஒவ்வாமை கொண்டு அஞ்சி அவன் விலகுகிறான் எவற்றோடெல்லாம் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறான் என்பதை கூர்மையாக நோக்கி எழுதப்பட்ட கதைகளாக இவற்றை வகைப்படுத்த முடியும்.
அனோஜன் பாலகிருஷ்ணன்


சிறந்த கதைகளை எழுதியதற்காகவும் எழுதவிருப்பதற்காகவும் அனோஜனுக்கு மனம்நிறைந்த அன்பும் வாழ்த்துக்களும்.

Sunday, 11 February 2018

பரிசுப்பொருள் - ஒரு கடிதம்

அன்புள்ள சுரேஷ்,

நீங்கள் எழுதிய பரிசுப்பொருள் சிறுகதையை காலச்சுவடு இதழில் வாசித்தேன். முதல்   வாசிப்பில் மனமொன்றி மகிழ்ந்து மேலும்  இருமுறை வாசித்தேன். மீள் வாசிப்பில் கதை மேலும் துலங்கி வந்தது. தான் பயன்படுத்தப்படுகிறோம் என்று தெரிந்திருந்தும் தன்னைப்  பொருட்படுத்துகிறான்  என்பதாலேயே அவனிடம் தன்னை இழக்கும்  பெண் என்ற கதைக்கரு பழையதுதான் என்றாலும் மொந்தை சிறப்பாக இருந்தது.

மோனிகாவின் பின்னணியும், பிரபாகரனுடனான அவளது உறவும் கதையில் நெய்யப்பட்டுள்ள விதம் சிறப்பு - சிவக்குமாரை சந்தித்த இருமுறையும் கருப்பு சுடிதார், இருப்பதே 2-3, செவிலிப் பணிக்குச் செல்லும்போது அணிவது, நோயாளிகள் உடன் வரும் ஆண்கள் தொல்லை, உடைகள் தீட்டுதுணி போல, அம்மாவுடன் ஆன பேச்சு, குடிகார அப்பாவின் எதிர்வினை என்று இயல்பாக விவரிப்பு நிகழ குடும்பம் அவள் வருமானத்தை நம்பி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லி இருகிறீர்கள்.

அப்படியே பேருந்து, இரு சக்கர வாகனம் வாங்க சேர்க்கும் பணம் குடும்ப செலவுகளில் கரைந்து போவது என்று இயல்பாக தொடர்ந்து பணம் கேட்டு வரும் பிரபாகரன் தம்பி மூலம் பிரபாகரனைத் தொடுகிறது.

மோனிகாவைப் பூக்க வைக்கும் முத்தம், கனிவும் உடல் மணமும் ஏற்படுத்தும் குழப்பம், முதல் புணர்வு, காதல் போய் உடல்சுகத்துக்காகவே உபயோகிக்கப்படுவது, இறுதியில் கருப்பையை விலையாகக் கொடுத்து மீள்வது என இயல்பாக வளர்கிறது கதை.

இந்த இயல்புத்தன்மை என்னை .ஈர்த்தது.  அந்த இயல்புத் தன்மையின் கீழ் இன்னொரு ஓட்டம் இரண்டாம் வாசிப்பில் தெரிந்தது.

சிவகுமாருடன் பேசுவதை பார்க்கும் ஊரார் எதிர்வினைகள் பற்றிய இடம் முதல் வாசிப்பில் அதிகமாகத் தோன்றியது. இரண்டாம் வாசிப்பில்தான் அந்த விவரிப்பு மற்றும் அதையொட்டி வந்த “ அதைப் பற்றிய கவலைகள் தனக்கில்லை என எண்ணிக்கொண்டாள்” என்ற சொற்றொடரின் பொருள் துலங்கியது. (அவள் மணவாழ்க்கையை இழந்துவிட்டாள்).

“அதற்கெனவே நின்றிருந்தது போன்ற ஃபார்ச்சூனர்” வரியும் முதல் வாசிப்பில் அதிகமாகத் தோன்றியது. இரண்டாம் வாசிப்பில் அடுத்த வரியில் ‘பரிசுப்பொருளை’ எடுத்துச் செல்வதற்காகவே வந்த சிவகுமாருடன் இணந்துகொண்டது. ஃபார்ச்சூனர் காரின் பெயர் கூட குறியீடோ?

தீபாவளி சமயம் கதை நிகழ்வதுகூட மோனிகாவின் ஒரு கேள்வியிலும் பட்டாசு வெடிப்பதிலும் கதைபோக்கின் ஊடாகவே சொல்லப்பட்டுள்ளது.

“உடை போல, எப்படி தன்னை கையாண்டாலும், அவன் கற்பனைகளுக்குத் தன் உடலில் இடமளிக்கத் தொடங்கினாள்” என்று மிகக் குறைந்த சொற்களில் மோனிகாவின் பாலியல் இழிவை உணர்த்தியுள்ளீர்கள்.

மிகவும் ரசித்த வருணனை - “ ஒரு செல்லச் சொல்போல விழிகளுக்குக் கிழே ஒரு முடிக்கற்றை தொங்கிக்கிடந்தது.” செல்லச் சொற்கள் எல்லாம்  கன்னத்தில் இடும் மென் முத்தங்கள் என்று தோன்றியது. “இடக்கையின் நடுவிரல் மோதிர விரல்களால் அச்சொல்லைக் கோதித் தலைகேற்றி”.  மனதிலேற்றி மகிழ்வது. ஆஹா! அதை நடித்துப் பார்க்க வைத்தது.

குண்டும் குழிகளிலும் இறங்கி ஆடி ஆடி மெதுவாகச் செல்லும் “ஆர் எம் எஸ் கிராமத்து ரதம்” (Railway Mail Service).

“யாரும் தன்னைப் பொருட்படுத்துவதேயில்லை” என்னும் மோனிகாவின் ஏக்கமே கதையின் அடிநாதமாக இருக்க அதை நிறுவ பி ஐ டி பாதிப்பு சமயம் தவிர மற்ற எந்த சம்பவமும் கதையில் இடம்பெறாதது குறையாகப் பட்டது. அத்தகைய  ஏக்கம் பள்ளிப்பருவம் முதல் ஆனதல்லவா?.

DMLT - Dip in Medical Laboratory Technology படித்துவிட்டு surgical ward இல் செவிலிப் பணியா? மருத்துவ துறை சார்ந்த மற்ற இடங்களை சரியாகக் கையாண்டிருக்கிறீர்கள். (காப்பீடு திட்டத்தில் உதவி பெறுகிறவர்களின் மனநிலையை போகிறபோக்கில் சொன்னது ரசித்தது.)

மோனிகா கருப்பையைப் பரிசாக அனுப்புவது என்னால் ஊகிக்கமுடியாத திருப்பம்.

முதல் வரி வாசிப்பை சற்று முடக்கிவிட்டது. “பாலத்தை கடக்கும் ஆறு” என்ற வழமையை மாற்றிய “ஆற்றை கடக்கும் பாலம்” ஏற்படுத்திய திகைப்பு. முதல் வரியில் ‘விரிந்து’ கிடக்கும் வெயில். இரண்டாவது வ்ரியில் காலைச் சூரியன். “மோனிகா பயணப்பையுடன் கமலாபுரத்தில் இறங்கியபோது” என இரண்டாவது வரியில் இருந்து தொடங்கியிருக்கலாம்.

இறுதியில் வரும் “ஒரு மாதம் கழித்து” என்று தொடங்கும் நீண்ட வரி.

ஒரு மாதம் கழித்து

வேறு நோய்த் தொற்றுகள் ஏதுமில்லை என்ற தகவலுடன்

உடலைத் தேற்றிக்கொண்டு

தன்னுடைய பயணப்பையில்

வெறுப்புடன் சிரித்தபடியே அந்த பெண் மருத்துவர் தன்னிடம் அளித்த தனது கருப்பையை

ஒரு வெல்வெட் உறையை வாங்கிப் போட்டு மூடி

கொண்டுவந்தாள்.

இது எனக்கு a, c, b, e, f, d, g என்ற வரிசையில்தான் பொருள் தந்தது. இரு வரிகளாக்கி இருக்கமுடியுமோ?

மாதா வழிபாட்டிடம் - மாதாக் கோயில் என்று எங்களூரில் சொல்லுவோம். வழிபாட்டிடம் வழிபடுபவர்களை கொண்டு பெயர் பெறுகிறது என்று தோன்றியது. இந்து வழிபாட்டிடம், கிறித்துவ வழிபாட்டிடம் போல. மாதா வழிபாட்டிடம் என்றால் மாதாக்கள் வழிபடும் இடம் என்று தோன்றியது.

மீன் வாசனை பிடிக்காத சிவக்குமாரிடம் இறந்த கருப்பை? உவ்வே!போய்

மீன் வாசனை பிடிக்காத, பெண்களை பெயர்சொல்லிக் கூப்பிடாத, எதைக் கேட்டாலும் வேறொரு கோணத்தில் பார்ப்பதை தவிர்க்கும், கெட்ட வார்த்தைகளை ரசிக்காத, பார்சலை பிரித்து பார்க்காத ‘சைவ’ சிவக்குமார் - மோனிகாவிற்கு ஏளனம்!

ஏன்?கள் சில.

ஒரு மழையிரவில் இருவரும் ஒன்றாக ஆட்டோவில் வரக் காரணம் என்ன? இருவருக்கும் பள்ளி நாட்களில் காதல்தொடங்கியது. சென்னைக்கு ஓடிப்போய் மீண்ட பிறகு ஏன் அவளைத் தவிர்க்கிறான்?

கண்ணீர், அழுகை, புணர்வு சரி, பிறகு ஏன் பிரபாகரன் முகம் நினைவில் வந்தபோது உறுத்தியது?

ஏன் அவன் காதலை இழந்தான்?

ஏன் மோனிகாவின் காதல் திருமணம் நோக்கிச் செல்லவில்லை?

பிரபாகரனை விடத் தெளிவாக வரும் சிவக்குமார் கதையில் வெறும் கூரியர் மட்டும் தானா?

ஏன் அந்தப் பரிசு?

வாசக இடைவெளி! என்னுடைய அனுபவத்திற்குள் வராதவரை அதை நிரப்புவது துப்பு துலக்குவது போல.

ஒரு நல்ல சிறுகதை படித்த நிறைவு கிடைத்தது. நன்றி.

வளர்க.

அன்புடன்,

பா. ராஜேந்திரன்.

Thursday, 8 February 2018

போரெனும் தலைகீழாக்கம் - சயந்தனின் ஆதிரை


சமூகம் ஒட்டுமொத்தமாக போருக்கு ஆதரவானது, தனிமனிதர்கள் போரின் இழப்புகளை மட்டுமே அறிபவர்கள். ஒவ்வொரு தனிமனிதனும் இவ்விருநிலைகளில் நின்றும் போரைப் பார்க்கிறான்.
-ஜெயமோகன்பல நூற்றாண்டுகளாக போரினைக் கண்டிராத நிலத்தின் குழந்தைகள் கூட போர் குறித்த மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளாமல் தங்களுடைய குழந்தைமையைக் கடந்து இளமையை அடைவதில்லை. கதைகளாக விளையாட்டுகளாக திரைப்படங்களாக போரினை கற்பனித்த அனுபவம் நம் அனைவருக்குமே இருக்கும். நம் கற்பனை செய்யும் போரில் வெற்றியும் தோல்வியும் இருந்திருக்கும். தொழில்நுட்பங்களும் சாகசங்களும் மரணங்களும் இருந்திருக்கும். ஆனால் அப்போர்  தொடங்கி  முடிவடைந்திருக்கும். போருக்கு முன்பான தயாரிப்புகளையோ போருக்குப் பிந்தைய நிலைகளையோ நாம் கற்பனை செய்திருக்கமாட்டோம். போர் களங்களில் மட்டும் நடப்பதாக எண்ணிக் கொண்டு இருந்திருப்போம்.

போரும் வாழ்வும் நாவலைப் படித்தபோது போர் குறித்த இத்தகைய மனச்சித்திரங்கள் கலையத் தொடங்கின. போர் வேறு வகையானதாக முன் ஊகங்களுக்கு வாய்ப்பற்றதாக தென்படத் தொடங்கியது. ஆனால் அந்த நாவலிலும் களம் என்ற ஒன்று உண்டு. அதில்தான் போர் நிகழ்கிறது. ஒரு வகையில் ஒரு கழுகினைப் போல உச்சி மரக்கிளையில் அமர்ந்து கொண்டும் அவ்வப்போது களத்தில் ஊடுருவிப் பறந்தும் அப்போரினை நாம் காண டால்ஸ்டாய் நம்மை அனுமதிக்கிறார். ஆனால் சயந்தனின் ஆதிரை நாவலில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெறுகிறது. ஆனால் சயந்தன் நம்மை எக்களத்துக்கும் கூட்டிச் செல்லவில்லை. பிரம்மாண்டமான படை நகர்வுகளும் வியூக வகுப்புகளும் உணர்ச்சிகரமான உரைகளும் கூர்மையான தத்துவ விவாதங்களும் இந்த நாவலில் இல்லை. ஆனால் ஒரு போரின் நடுவே வாழ நேரும் மனிதர்கள் சந்திக்க நேரும் திகிலையும் வெறுமையையும்  நாவல் கொடுப்பதே இதன் முதன்மையான வெற்றி எனச்சொல்லலாம்.

ஒரு எதார்த்தவாத செவ்வியல் படைப்பு

தமிழில் எழுதப்பட்ட முன்னோடி எதார்த்தவாதப் படைப்புகளின்(ஆழிசூல் உலகு,மணற்கடிகை) அதே வகையான நேரடிக் கதைகூறல் முறையையும் நுணுக்கமான தகவல் விவரணைகளையும் கொண்ட புனைவாக ஆதிரை தன்னை வகுத்துக் கொள்கிறது. நாற்பதாண்டு காலம் மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்வினை வலுவாகச் சித்தரித்துச் செல்கிறது. அந்த சித்தரிப்பினூடாக ஒரு பெரும் போரினை சென்ற நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்டு வரைத் தொடர்ந்த ஒரு பேரழிவினை ஆதிரை விரித்துக் காட்டியிருப்பதே இதனை முதன்மைப் புனைவாக மாற்றியிருக்கிறது.
ஈழம் குறித்து தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் கொந்தளிப்பான சித்திரம் உண்மையில் இலங்கையில் நடந்தவற்றை அறிந்து கொள்வதற்கான ஒரு ஆழமான மனத்தடையை என்னில் உருவாக்கி இருந்தது. சமீபத்தில் வாசித்த சில நூல்கள் வழியாகவே இலங்கை குறித்து ஓரளவு அறிய முடிந்தது. அந்த நூல்கள் வரலாற்றுத் தரவுகளை மட்டுமே தரக்கூடியவை. பாடப்புத்தகங்களை வாசிக்கும் மனநிலையுடன் மட்டுமே அணுகப்படக்கூடியவை. ஆனால் ஆதிரை வாசித்து முடித்தபோது ஒன்று தோன்றியது. போர் குறித்து உருவாக்கப்படும் கற்பனைகளை நம்மவர்களை பெரும்பாலும் மிகையுணர்ச்சி கொள்ளச் செய்கிறது. போரினைப் பற்றி பேசுவதும் அதில் ஈடுபடுவதும் அச்சூழலில் வாழ்வதும் முற்றிலும் வேறுவேறான அனுபவங்கள். ஆதிரை போர்ச்சூழலில் வாழ நேர்ந்த போரால் தொடர்ச்சியாக அலைகழிக்கப்பட்ட கொல்லப்பட்ட மனிதர்களின் கதை.

1991-ஆம் ஆண்டு லெட்சுமணண் சிங்கமலை என்ற இயக்கப் போராளி கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதுடன் நாவல் தொடங்குகிறது. அங்கிருந்து பின் சென்று அவன் தந்தை சிங்கமலை ஏழு வயதான லெட்சுமணனையும் அவனது அக்கா வல்லியாளையும் கூட்டிக்கொண்டு தனிக்கல்லடிக்கு வருவதாக நாவல் பயணிக்கிறது. தனிக்கல்லடியில் அத்தார் - சந்திரா தம்பதிகளிடம் லெட்சுமணன் பணிக்கு சேர்த்துவிடப்படுகிறான். வல்லியாள் கணபதிக்கு மணமுடித்து வைக்கப்படுகிறாள். அத்தாரின் நண்பன் சங்கிலியின் குடும்பமும் சித்தரிப்பின் வழி விரிகிறது. இக்குடும்பங்களின் வாழ்வின் தொடர் சித்தரிப்பாக ஆதிரை நாவலை சொல்லிவிட முடியும். எதார்த்தவாதப் படைப்புகளின் பண்புக்கூறாக ஒன்றைச் சுட்ட முடியும். அவை சற்று பெரிய காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. ஆகவே தொடர்ச்சியாக நிறைய மனிதர்களை அறிமுகம் செய்தபடி அவர்கள் வாழ்வில் எழும் முரண்களைச் சொல்லியபடியே முன் செல்கின்றன. எதார்த்தவாதப் படைப்புகளின் தரிசனம் என்பதே சிலந்தவலைப் போல பின்னப்பட்டிருக்கும் இவ்வாழ்வில் வரலாற்றில் தனிமனிதனின் இடம் என்ன அவன் அகத்துக்கான பெறுமானம் என்பதை விசாரிப்பதே. அவ்வகையில் ஆதிரையின் புறச்சட்டகத்தை இவ்வாறு விவரிக்கலாம். முதலில் தனிக்கல்லடி எனும் ஊரின் சித்தரிப்பு. அதைத் தொடர்ந்து அங்கு இலங்கை ராணுவத்தினரின் வருகையாலும் போராலும் சிங்களக் குடியேற்றங்களாலும் மற்றொரு நிலத்தினை நோக்கி நகரும் புலம் பெயர்வு. புது நிலத்தில் வாழ்வு நிலைத்து கிளைவிட்டு வரும்போது இறுதிப்போர் உக்கிரம் கொள்ள அங்கிருந்து மற்றொரு இடப்பெயர்வு. இந்த இறுதிப் பெயர்வு அதீத இழப்புகளை உண்டு பண்ணுகிறது. இந்த இரண்டு இடப்பெயர்வுகளுக்கு இடையிலான வாழ்க்கையே ஆதிரை நாவலாக விரிந்துள்ளது.

நாவலின் கதையை சுருக்கிச் சொல்வது நிச்சயம் இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்த நாவலை எங்கு நின்று அணுகுவது என்ற புரிதலை அளிப்பது மட்டுமே என் நோக்கமாக இருக்கிறது. நவீன நாவல் இன்று அடைந்திருக்கும் சாத்தியங்களை ஆதிரை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்கிறது. நவீன இலக்கியம் அறிவுஜீவியின் குரலாக தரப்பாக ஒலிப்பதல்ல. அப்படியொரு பாவனையை அது மேற்கொண்டாலும் இலக்கியத்தின் நோக்கம் அகம் நோக்கியத் தேடலே. படைப்பாளியின் அரசியல் நிலைப்பாடோ கருத்தியல் நிலைப்பாடோ அவரின் படைப்புகளை பாதிக்க வேண்டிய கட்டாயமில்லை. எனினும் போர் குறித்து அதிலும் போர் நிகழும் காலத்தையே பேசுபொருளாக கொண்டெழுதப்படும் படைப்புகளில் கருத்தியலின் சாயலோ சாய்வோ புலப்படுவது தவிர்க்க முடியாதது. அது அதிகமாகுந்தோறும் படைப்பின் கலையமைதி குன்றி படைப்பு மற்றொரு பிரச்சாரத் தட்டியாகிறது. அதேநேரம் சூழலின் மனிதர்களின் வலியை இழப்பை பொருட்படுத்தாமல் படைப்பு தன்னை "அப்பால்" நிறுத்திக் கொள்ளுமென்றால் வெறும் தத்துவ விசாரணையாக சுருங்கிவிடுகிறது. ஆதிரை தன்னை யாரின் குரலாக ஒலிக்கவிட வேண்டும் என்ற தெளிவினைக் கொண்ட நாவல். போரினால் அதிகம் இழக்க நேரும் சாமானியர்களின் குரலாக இந்த நாவல் ஒலிக்கிறது. மண்ணோடும் காட்டோடும் நெருங்கி வாழ்ந்த மனிதர்களின் வாழ்வின் சிதைவைச் சுட்டுவதாலேயே இது தலைசிறந்த படைப்பாகிறது.

முன்பே சொன்னது போல எதார்த்தவாதப் படைப்புகள் வாழ்வின் அன்றாடத் தருணங்களையே சித்தரிக்கின்றன. படைப்பாளியின் தனித்தன்மையும் ஆளுமையும் சித்தரிப்பில் வெளிப்பட வேண்டிய ஒரு கட்டாயம் இவ்வகை படைப்புகளுக்கு உண்டு. அவ்வகையில் சயந்தன் கதைக்களமாக எடுத்துக் கொண்ட நிலத்தினை கண்முன் நிறுத்தும் வலிமையான படைப்பு மொழியைக் கொண்டிருக்கிறார். இந்த நாவல் வாசிக்கும் போது நான் அடைந்த திடுக்கிடல்களுக்கு காரணம் இதுவே. தமிழகத்தில் ஏதோவொரு கிராமத்தில் பிறக்க நேர்ந்த யாருக்குமே தனிக்கல்லடி ஒரு அந்நிய கிரமமாகத் தோன்றாது. ஆனால் அங்கு நிகழும் போர்களும் மரணங்களும் நமக்கு அந்நியமானவை. ஏற்றுக் கொள்ள முடியாதவை.

சூழும் போரும் மலரும் வாழ்வும்

சங்கிலி அரசியல் சண்டைகளை காட்டுக்குள் கொண்டு வருவதை விரும்பாத வேட்டைக்காரனாகவும் அத்தார் விடுதலை புலிகளின் ஆதரவாளனாகவும் இருக்கின்றனர். அத்தாரின் மனைவி சந்திரா வெள்ளாளர் சாதிப்பெண். அத்தார் அம்பட்டர் சாதியைச் சேர்ந்தவன். அவர்கள் காதல் மணம் புரிந்தவர்கள். குழந்தையற்ற அந்த தம்பதிகளின் மகனாகவே வளர்கிறான் சிங்கமலையின் மகன் லட்சுமணன். சந்திராவுக்கும் லட்சுமணனுக்குமான உறவு இந்த நாவலின் உயிர்ப்பான சித்தரிப்புகளில் ஒன்று. அதுபோல சங்கிலி மீனாட்சி தம்பதிகளின் மகளான ராணியின் தோழியாக வரும் ஜோதிமலரும் ஒரு வீரகதை நாயகி என்றே சொல்லிவிடும் அளவிற்கு தீரமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.
தனிக்கல்லடியில் இயல்பான போக்கில் நகரும் வாழ்வில்(எளிய பிரியங்கள்,வருத்தங்கள்,பொறாமைகள்) மெல்ல சிங்கள ராணுவமும் விடுதலைப் புலிகளும் ஊடுறுவுகின்றன. புலிகளின் செயல்பாடுகளை தொடர்ந்து நியாயப்படுத்துகிறவனாக அத்தாரும் அதற்கு எதிர்நின்று வாதிடுகிறவர்களாக சந்திராவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். சங்கிலியின் அண்ணன் ராணுவ வீரர்களால் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்படுகிறார். சங்கிலியின் தாயான ஆச்சிமுத்து கொல்லப்பட்ட மகனின் குடும்பத்தை சந்திக்கச் செல்லும் இடம் நிலக்காட்சி வர்ணனைகளின் மிகக்கூரிய சித்தரிப்பு. நாவல் முழுவதுமே இத்தகைய நீண்ட அதேநேரம் விரைவான சித்தரிப்புகளை அளிப்பதன் வழியாக தொடரும் நிகழ்வுகள் மீது ஒரு வகையான பதற்றத்தை உருவாக்கி விடுகிறார் ஆசிரியர். தனிக்கல்லடியினரின் குல தெய்வமாக விளங்கும் இத்திமரம் புயலில் அழிகிறது. சிங்கள ராணுவம் நிலை கொண்டதால் தனிக்கல்லடியை விட்டு இடம்பெயர்கிறார்கள்.

நாவலில் திருமணங்களும் குழந்தை பிறப்புகளும் வந்தவண்ணமே உள்ளன. பெரும்பாலும் பெண் குழந்தைகள். நாமகள்,முத்து,முத்துவின் மகள்களான ஒளிநிலா,இசைநிலா என ஒவ்வொரு பிறப்பின் போதும் அங்கு வாழ்கிறவர்களின் சூழல் மாறியிருக்கிறது. ஒன்றுமே இல்லாதவர்களாக தனிக்கல்லடியைவிட்டு சங்கிலியின்,சிங்கமலையின், அத்தாரின் குடும்பங்கள் வெளியேறுகின்றன. மீண்டும் ஒரு புதுநிலத்தில் வாழ்வினை அமைத்துக் கொள்கின்றனர். மெல்ல மெல்ல வாழ்க்கை நம்பிக்கை நிறைந்ததாக காதலும் சண்டைகளும் நிறைந்ததாக கனவுகளுக்கு வாய்ப்பளிப்பதாக தன்னை மாற்றிக் கொள்கிறது. மீண்டும் போர் அவர்களை சூழ்ந்து தாக்குகிறது. இம்முறை மேலும் உக்கிரமாக.

வெளியேறிச்செல்லும் இளைஞர்கள்

தகப்பனின் தலையை கண்டறிய முடியாத மகனும், வல்லுறவுக்கு ஆளாகி தாயினை இழந்த மகளும் என இயக்கதினை நோக்கி இளைஞர்கள் சென்றபடியே உள்ளனர். தொடக்கத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கும் இயக்கச் செயல்பாடுகள் ஒரு கட்டத்தில் இறுக்கம் கொள்ள கட்டாய ஆள் சேர்ப்புகள் நடக்கின்றன. தோழிகள் இறந்ததால், தனி நாடமையும் என்ற கனவால் வினோதினி, மலர்விழி என பெண்கள் புறப்பட்டுச் சென்ற வண்ணமே உள்ளனர். அறியாச் சிறுமிகளாகத் திரிந்தவர்கள் போராளிகளாகத் திரும்பி வருவதைக் கண்டு உறவினர்கள் அஞ்சுவதும் பதைப்பதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. லெட்சுமணன் வினோதினி என இறுதிவரை மீளாதவர்களையும் நாவல் சித்தரிக்கிறது. லட்சியங்கள் போர் என்று வரும் போது ஒரு புள்ளியில் எளிதாக முனை கொள்கின்றன. அந்த முனைப்பு உந்த சென்றவர்கள் இறுதிப்போரில் படும் துயரும் அலைகழிப்புகளும் மனம் கனக்கச் செய்கிறவை.

போரெனும் தலைகீழாக்கம்

போர்கள் இரண்டு வகையாக நடைபெறுகின்றன எனலாம். உயர்மட்டத்தில் அது நிலம் கைப்பற்றல்களுக்கான கணக்குகளாக உள்ளது. அதிகார பேரங்களும் ஆயுத பேரங்களும் நிகழும் மேசையாக உள்ளது. அடிமட்டத்தில் அது மனிதர்களின் வாழ்வை அலைகழிப்பதாக உள்ளது. சாமனியர்களிடமிருந்து அவர்களின் நிலம் உடைமை என அனைத்தையும் பறித்துக் கொள்வதாக இருக்கிறது. அரசாங்கம் தனது நிலத்தையும் உடைமைகளையும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையின்பாற்பட்ட ஒப்பந்தமே சாமானியனை அரசாங்கத்துக்கு அடங்கி நடப்பவனாக விதிகளை மதிப்பவனாக வைத்திருக்கிறது. ஆனால் போரின் போது இரண்டு தரப்புகளில் ஒன்று தங்களை அரசாங்கமாக நிறுவிக் கொள்ள முனைப்பு கொள்கின்றன. அங்கு சாமானியன் தான் இத்தனைநாள் கடைபிடித்த அறங்கள் அனைத்தும் பயனற்றுப் போவதைக் காண்கிறான். ஏதேனும் செய்து உயிர்பிழைத்திருந்தால் மட்டும் போதும் என எண்ணுகிறான். கையூட்டு கொடுத்து தப்பிச் செல்கிறான், காட்டிக் கொடுத்து பிழைக்க முடியுமா எனப் பார்க்கிறான். அருகில் இருப்பவனையே சந்தேகிக்கிறவனாகவும் முழுமையான சுயநலம் மிக்கவனாகவும் மாறிவிடுகிறான்.

அதுவரை நிகழ்ந்த வாழ்வின் பாவனைகளை முற்றாக உதறி உயிரோடு இருந்தாக வேண்டிய ஒரு கட்டாயத்தால் மட்டுமே உந்தப்படும் மனிதர்களால் சமூகம் தலைகீழாகிறது. இந்த தலைகீழாக்கத்தை போரின் உச்சக் கொடுமைகளை மிகச் சரியாக சித்தரிக்கிறது படுகளம் பகுதி. ராணுவம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்த மாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான கடற்கரை பிரதேசத்தில் நடைபெறும் சில அத்தியாயங்கள் இப்படைப்பை சிறந்த நாவல் என்ற நிலையில் இருந்து உயர்த்தி ஒரு செவ்வியல் படைப்பாக மாற்றிவிடுகிறது. மூன்று தலைமுறைகளாக புலம்பெயர்ந்தபடியே இருக்கும் சாமானியர்களின் துயர் உச்சம் கொள்கிற தருணங்களை கூர்மையுடன் சித்தரிக்கிறது இப்பகுதி. பிள்ளைகளின்றி வாழ்ந்து இறந்து போகும் அத்தார்-சந்திரா தம்பதியினர், இறுதி நேரத்தில் உயிர் பிழைப்பதற்காக "போலி" கல்யாணம் செய்து வைக்கப்படும் நாமகள், கூடாரத்திலேயே புதைக்கப்படும் மீனாட்சி என இந்த அத்தியாயங்களின் ஒவ்வொரு நிகழ்வும் தீவிரத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இறுதியாக இயக்கத்தில் இருந்து தான் புதைத்த கன்னிவெடிகளை தானே எடுக்க நேரும் வெள்ளையனுடன் நாவல் நிறைவடைகிறது.

செவ்வியல் தன்மை கொண்ட படைப்புகள் வாசித்து முடித்ததும் நமக்குள் நிறைப்பது ஒரு வெறுமையை மட்டுமே. பெரும் திட்டங்கள் செயல்கள் முன் வாழ்வு கொள்ளும் நெருக்கடிகளை மிக நுட்பமாகச் சொல்லும் அதேநேரம் தனிமனித அகம் கொள்ளும் சஞ்சலங்களை நுண்மையாகத் தொட்டெடுக்கும் தன்மையும் கொண்ட படைப்புகளை செவ்வியல் தன்மை கொண்டதாக நான் காண்கிறேன். அதற்கு சிறந்த முன்னுதாரணத்தை போரும் வாழ்வும் அளித்தது. ஸ்லாமென்ஸ்க் மாஸ்கோ பீட்டர்ஸ்பர்க் என பெருநகரச் சித்தரிப்புகள் பெயர்வுகள் என ஒரு பக்கம் நாவல் நகர மறுபக்கம் தனிமனித அகத்தையும் கூர்மையாகச் சொல்லிச் செல்லும் படைப்பது.

அதுபோலவே ஆதிரையிலும் பல முரண்படும் தரப்புகளின் விவாதங்கள் வருகின்றன. இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்குமான உரசல்கள், இயக்கம் ஜாதியிலிருந்து வெளிவர முடியாத அவலம், தமிழ் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்குமான முரண்பாடுகள், விடுதலைப் புலிகளுக்கும் பிற தமிழீழ இயக்கங்களுக்குமான சச்சரவுகள், ஆயுத வியாபாரம் என பல தளங்களை தொட்டுப் பேசிச்செல்கிறது இப்டடைப்பு. அதேநேரம் போரில் கணவனைத் தொலைத்த ராணியின் மன உணர்வுகள், பிள்ளையற்ற வெறுமையில் திளைக்காமல் நம்பிக்கையுடன் மாணவர்களை தேற்றிக் கொண்டுவரும் சந்திரா,இறுதிவரை மகளைத் தேடி அலையும் கணபதி என தனிமனிதர்களையும் மிக உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கிறது இப்படைப்பு.

சூழல் சித்தரிப்பிலும் உரையாடல்களிலும் சயந்தன் காட்டியிருக்கும் கவனமும் தேர்ச்சியும் ஆச்சரியமளித்தாலும் அது நாவலுக்கு ஒரு மெல்லிய செயற்கைத்தனத்தை அளிக்கிறது. பதற்றமான ஒரு சூழலை சொல்லும் மொழி என்பதால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அதீத கவனம் வாசகனிடமும் அப்பதற்றம் எந்நேரமும் தொற்றி இருக்கும்படி செய்து விடுகிறது. கலையமைதியை குலைப்பதாக இந்த ஒரு அம்சம் மட்டுமே இப்படைப்பில் உள்ளது.
போரிலிருந்து ஒரு சமூகம் துயரையும் வஞ்சங்களையும் தவிர வேறெதையும் பெறுவதேயில்லை என்ற போதும் போரை நோக்கியே வாழ்க்கை உந்தப்படுகிறது. அதற்கு எதிரே நின்று போரின்மையை வலியுறுத்துகிறவைகளாகவே அன்றிலிருந்து இன்றுவரை இலக்கியங்கள் உள்ளன. நான் வாசித்த அத்தனை பெரும் படைப்புகளிலும் பேரழிவுச் சித்திரங்கள் இருந்திருப்பதை உணர்கிறேன்(குற்றமும் தண்டனையும் நீங்கலாக). எனினும் வெறும் அழிவுகளை மட்டுமே சித்தரிக்கும் படைப்புகள் பேரிலக்கியங்களாக எழுந்துவிடுவதில்லை. அவை வாழ்வின் மணங்களை கொண்டிருக்க வேண்டும்.ஆதிரை காட்டின் பச்சை மணத்தில் இருந்து துப்பாக்கி வெடிப்பின் கந்தக மணம் வரை தன்னுள் கொண்ட படைப்பு.

எஞ்சும் சொற்கள் - கடிதங்கள்

அன்புள்ள சுரேஷ் பிரதீப் ..நீங்கள் எழுதிய எஞ்சும் சொற்கள் சிறுகதையைப் படித்தேன்.எழுத வேண்டுமா என நினைத்தேன் ஆனால் கதையின் கரு எழுதுவது முக்கியம் என உணர்த்தியது .ஒரு நுண்மை இலையோடல் கதை முழுக்கவே விரவி இருப்பதைப் போன்றதொரு உணர்வு.அது சரியாகவும் இருக்கலாம் வெளிப்படை தான் இலக்கிய தரத்தின் அளவுகோல் எந்த அளவிற்கு அதில் உண்மை கையாளப்படுகிறதோ அந்த அளவிற்கு அதன் வீரியம் வெளிப்படும்.பொதுவாகவே தாழ்த்தப்பட்டவர்கள் செய்யும் பெரும்பணிகள் யாவும் துப்புரவு,மலம் அள்ளுதல் தான்.படித்த தலைமுறை இதில் அடங்காது அவனை படிக்க வைத்த தலைமுறை அடங்கும் .ஆதிதிராவிடர் நலத்துறை என்பது அவர்களுக்கான ஒரு துறை அவர்களின் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் அல்லது கொண்டுசெல்லும் ஒரு அமைப்பு.ஆனால் அதிகாரத்தின் முன்பு அந்த துறையும் அடங்கியே இருக்கிறது.சாதாரண ஜாதி சான்றிதழ் கூட மேற்பார்வையின் கீழ் நடைபெறும் அவலம். சாக்கடையை பார்த்து குமட்டல் வந்தது பற்றிய வர்ணனை வருகிறது இந்த இடம்தான் படைப்பியல் ரீதியாக ஒருவனை 'எழுத்தாளன்'என மதிப்பீடு செய்வது.காரணம் எஸ்.சி வீதிகளும் வீடுகளும் பெரும்பாலும் சாக்கடை கழிவுநீர்கள் சூழ்ந்தே இருக்கும் பெரும்பாலும்.இல்லை என சொல்லிவிட முடியாது.ஆனால் அந்த வாசம் கூட அறியாத ஒருவன் அதே ஜாதியில் இருக்கிறனா என்றால் இருக்கிறான்.அந்த இருக்கிறான் தான் இந்த கதையில் வருபவன்.கலெக்டர்கள் இப்படித்தான் இருப்பார்கள் .தாழ்ந்த ஜாதியை சேர்ந்த யாராவது [படித்தவர்கள்] அவர்களை சந்திக்க சென்றால் 'நீயெல்லாம் நாலு பேருக்கு உதாரணமா இருக்கணும் ..அதுக்கு என்ன பண்ணப் போற ' என்றதும் சிறிய மௌனம் உண்டாகும் உடனே 'பெரிய பதவிக்கு வரணும்யா எத்தன நாளிக்கு பீய அள்ளப்போற ' என பதில் வரும். சிகையை கட்டாத பெண்,மருத்துவ மாணவன் ,நீங்கள், இவர்கள் யாவும் ஒன்றையே பிரதிபலிக்கிறார்கள் .அதாவது அதவாது மேல்தட்டில் இருக்கும் எஸ்.சிகள் எதோ இந்த ஜாதியில் பிறந்துவிட்டோமே என அனுதினமும் எண்ணுகிறவர்கள் அல்லது அதற்காக நடிப்பவர்கள்.' நீங்கல்லாம் பன்னி  மேய்க்கத்தாண்டா லாயக்கி ' என்றவரி ஒட்டமொத்தமாக அந்த ஜாதியை இன்றைய நவீன உலகும் அந்த படியிலே வைத்துப் பார்க்கிறது என்பதை சொல்கிறது.எனக்கு கதை நன்றாகவே புரிந்தது. மனித மனங்களின் நுட்பமும் அதில் அடங்கியிருக்கிறது. 'இடைநாழி' 'ஸ்தூலமாக' போன்ற வார்த்தைகளை தவிர்த்து எளிய வார்த்தையாக எழுதியிருக்கலாம் எனத் தோன்றியது.காரணம் வாசகன் இதற்கு அர்த்தம் தெரியாமல் கோலம் போடக்கூடாது.வட்டப்பொட்டு ,கண்ணாடி என போன்ற வர்ணனைகள் திரும்ப சில இடங்களில் வருவதால் சிறிய தொய்வு.மற்றபடி நல்ல கதை .முகநூலிலே பதியலாம் என இருந்தேன் ஆனால் இந்த முறை எழுத்தாளனை மேலும் உத்வேகப்படுத்தும் .வாழ்த்துகள் -

ஷங்கர் சதா

அன்புள்ள சுரேஷ்,

             இன்று ஜெ  தளத்தில் உங்கள் கடிதம் பார்த்தேன்.

நான் முன்னரே நினைத்தேன்,முக நூலில் அதிக நேரம் 

செலவிடுகிறீர்கள் என்று .ஒரு எழுத்தாளருக்கு ஒவ்வொரு 

நிமிடமும் முக்கியம்.உங்கள் நட்பும்,நிர்பந்தங்களும் 

நான் அறியாதவை என்பதால் அது பற்றி சொல்வது நாகரிகம் 

இல்லையென விட்டு விட்டேன்.அறிவார்ந்த விவாதங்கள் 

f b ல் மிகக்குறைவுதான்.1000 நண்பர்களில் 100 வாசகர்கள் 

அமைந்தால் அமோக வெற்றி.வேறு வழியும் இல்லை.

நான் அறவே FB பார்ப்பதில்லை.சுரெஷ்,மேரி க்ரிஸ்டி,போகன்

சங்கர் மட்டும் பார்ப்பேன்.

           எஞ்சும் சொற்கள் இரண்டாம் முறையாக படித்தேன்.

ஆட்சியரக விவரிப்பு துல்லியமாக,மிகுந்த நம்பகத் தன்மையுடன் இருந்தது.பல ஆண்டுகள் வாரம் மூன்று முறையாவது சென்று கொண்டிருந்த இடம்.அதன் விவரிப்பு சிறிது ஏக்கத்தையும், சிறிது விடுதலை உணர்வையும் தந்தது.அந்த அகலமான, சுத்தமான இடைநாழி!

            அணு அனுவாக ரசித்து கண்ணாடியை உடைத்தீர்கள்.

பெல் இரட்டையர்,அலுவலராக விரும்பும் இன்னும் உலர்ந்து 

விடாத  பெண்,எனக்கு கதை பிடித்திருந்தது-கடைசி பகுதியைத் தவிர.

           ஒரு வருமான வரித்துறை ஊழியர் கண்ட இடத்தில் 

தரையில் படுப்பது,ஒரு மாவட்ட ஆட்சியர் என்னதான் தன் 

சாதியை சேர்ந்தவர் என்றாலும்,நீங்களெல்லாம் பன்னி 

மேய்க்கத் தாண்டா லாயக்கு என்று சொல்வதும் நம்பகமே 

இல்லாத பகுதிகள்.ஒரு ஆட்சியர் அந்த சொற்களை சொல்லி

யிருக்க வாய்ப்பே இல்லை என்று நம்புகிறேன்.   நான் அறிந்த 

ஒரு தலித் உயர் அதிகாரி, நான் அறிந்த அனைவரிலும் 

நேர்மையிலும்,கண்ணியத்திலும், திறமையிலும், நாகரிகத்திலும் இணையற்றவர். 

             கடைசி வரி இன்னும் மோசம். கதை சொல்லியின் பரம்பரையில் யாரும் பன்னி மேய்த்ததில்லை என்பதில் என்ன நிம்மதி? என்ன உசத்தி? மேய்த்திருந்தால் அவர் அப்படி பேசியது சரியாகி விடுமோ? ஒவ்வொரு சாதியும் தான் எவ்வளவு கீழ் நிலையினராக கருதப் பட்டாலும் ,தனக்கும் கீழ் உள்ள சாதியை கேவலப் படுத்த தயங்குவதில்லை என்பது 

வியப்பாக உள்ளது. பன்னி மேய்க்கும் பரம்பரையின் வலியையும்,நியாயத்தையும் உணர வேறு கதை சொல்லியின் வேறு கதை படிக்க வேண்டுமோ?

            வீதிகள் படித்து வெகு நாளாயிற்று.மீண்டும் படித்த பின் 

எழுதுகிறேன்.வாழ்த்துக்கள்!

ஜெ.சாந்தமூர்த்தி,

மன்னார்குடி. 


எஞ்சும் சொற்கள்,பரிசுப்பொருள்-கடிதம்

அன்பின் சுரேஷ்

வணக்கம் 

உங்களின் எஞ்சும் சொற்கள்வாசித்தபின்னர் உடன் உங்களுக்கு எழுதணும்னு நினைத்தேன், பணிச்சுமை கூடுதல் என்பதால் முடியவில்லை. இன்று கல்லூரியிலிருந்து  அரைநாளில், பட்டமளிப்பு விழாவென்பதால் வீடு வந்ததும், காலச்சுவடு  வந்திருந்தது, முதலில் வழக்கம் போல கவிதைகள் வாசித்தேன் பின் கதைகளில் பார்த்ததும் உங்களின் பரிசுப்பொருள்  இருந்தது.

காலச்சுவடில் இத்தனை இளம் வயதில் எழுதுகிறீர்கள் என்பதே .பெரும் மகிழ்வளிக்கும் விஷயம். பல வருடங்களாக  காலச்சுவடின் வாசகி நான்.  ஒரு படைப்பாளியாக உங்களுக்கு பல கதவுகள் திறக்கப்பட்டிருக்கும்  எனவே பெரிய விஷயம் என்று ஏதும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நான் பரவசமாகிவிட்டேன் இதில் உங்களின் பெயரைப்பார்த்ததும்.

 வெகு நாட்களுக்கு முன்பு ஜெ தளத்தில் உங்களின் ஒரு பதிவினை வாசித்தபோது யாரு இது என்று உங்கள் புகைப்படத்தை இன்னொரு முறை கவனித்தேன் அத்தனை கவனிக்கும்படி இருந்தது எழுத்து, எதைக்குறித்து என்று நினவுஇல்லை இப்போது, ஆனால் ஒரு கட்டம் போட்ட சட்டையுடன் கம்பியின் அருகில் எடுத்த புகைப்படம் ஒன்று தேசலாக நினவிலிருக்கிறது

ஷாகுலிடம் அப்போது விசாரித்தேன் சின்னப்பையனா இருக்காரு ஆனா இத்தனை தீவிரமா எழுதியிருக்காரே  யாரு தம்பி இது என்று?  ஷாகுல் உங்களைக்குறித்து ம்க சிலாக்கியமாக  பலதும்சொல்லிக்கொண்டிருந்தார் அன்று

பின்னர் ஒளிர் நிழலைக் குறித்து பேச்சுக்கள் பரவலாக வந்துகொண்டிருக்கையில் என்னை அந்த தலைப்பு மிக ஈர்த்தது, காலச்சுவடின் அம்சம் அது என்று நினைத்தேன் இரண்டு முரண்களை ஒன்றிணைத்து தரப்படும் தலைப்புகளே  வெகுவாக கவனத்தை ஈர்க்கும் ‘தள்ளாடும் மதுக்கொள்கை’’ ’’குலமகளும் பொது மகளும்’’ போல ஒளிர் நிழல் என்பதுவும் இருந்தது. நிழலை எப்போதும் எதிர்மறையாகவே கருதிப்பழகியவரகள் நிழலைப்பார்க்கக்கூடாது நிழலை மிதிக்கக்கூடாது என்றெல்லாம் குழந்தைப்பருவத்தில் இருந்தே சொல்லி வளர்க்கப்பட்டவரகள் நாங்கள்,  எனவே நிழலின் இருண்மைக்கு மாற்றான ஒளிர்தலையும் அதனுடன் இணைத்திருந்த  ’’ஒளிரும் நிழல்’’ என்னும் தலைப்பு என்னை கவர்ந்தது இன்னும் எனக்கு எங்களூரில் இருக்கும் ஒரெ ஒரு புத்தகக்டையில் பதிந்து வைத்திருந்தும்   வந்து சேரவில்லை அது வரும் முன்பாக ஒளிர் நிழல் குறித்து எந்த அறிமுகமும் எதிர்வினையும் கேட்கவும் வாசிக்கவும் வேண்டாமென்றிருக்கிறேன்.வாசிக்க ஆவலாக இருக்கேன்

எஞ்சும் சொற்கள்,  இதில் ஒரு அரசு நலத்துறை அலுவலகத்தின் சூழல் விவரிக்கப்பட்டிருந்தது முதல் வரியிலேயே  அது ஒரு சிறிய எந்த கூடுதல் வசதிகளும் அற்ற  நாம் அனைவரும் எப்படியும் சிலமுறை சென்று வந்திருக்கும் அடைசலான அறை என்பதை ’’மேசை நாற்காலிகள்  எடுத்துகொண்டது போக மீதி இடம் மனிதர்கள்  நடமாட’’ என்பது போல சொல்லி இருந்தது, ’அட என்ன சொல்ல வராரு இவர்’  என்று வாசிக்கறவங்களை கவனிக்கவும் நிமிர்ந்து எழுந்து விருப்பமுடன் வாசிக்கவும் வைத்தது

மதிய உணவுப்பையையும் தோளில் இன்னொரு பையுமாக அந்தப்பெண் பதற்றமாக வரும்போதே எனக்கு அவளைப்பிடித்துவிட்டது அதே போல இரண்டு பைகளை கையிலும் தோளிலும் எடுத்துக்கொண்டு தினம் வேலைக்கு போகிறவளாக

 ஆபத்தற்றவனாக பெண்களால் எளிதில் அடையாளம் காணப்படுபவனின் பார்வையில் அந்த சிறுகதை எழுதப்பட்டிருந்தது

//திறம்பட வேலை செய்கிறவர்களிடம் ஏற்படும்பிரியம் அங்கு வந்த எல்லோருக்குமே அவள்மீது இருந்தது. // இந்த வரிகள்  பலகால அனுபவத்தின் பேராலேயே எழுதப்பட்டவை என நினைத்தேன்

அந்தப்பெண்னை முறைத்த இளைஞனிடமும் அவனை பொருட்டாக எண்ணிய அந்த பெண்ணிடமும் ஒரே சமயத்தில் கதைசொல்லிக்கு ஏற்படும் கோபம்,  பின் //அரசு அலுவலகங்களில்காத்திருக்கும் போது அந்த நாள் வீண்தான்என்ற எண்ணம் எப்படியோஎழுந்துவிடுகிறது//  ஆம் உண்மை, பல சமயங்களில் நான் உணர்ந்திருக்கிறேன் இவற்றை

எஞ்சும் சொற்கள்  சொல்லவருவது என்ன என்று நானும் என் நண்பரும் காரசாரமாக ஒரு நாள் விவாதித்துக்கொண்டோம் அவர் ஒரு சாதீய சங்கத்தின் தலைவர் அவர் பார்வை வேறு அந்தக்கதையைப்பொருத்தவரையிலும்

எனக்கு எந்தக்கதையானாலும் அதுசொல்ல வரும் சமூக நீதி, அறம், அறிவுரை இவற்றைக்காட்டிலும் கதையில் சொல்லப்படும் நுண் விவரங்கள். ஒப்பு நோக்கல்கள், படிமங்கள், சொல்லாட்சி, மொழியாட்சி, அழகிய காட்சிச்சித்தரிப்புகள் போன்றவையே கவரும் எனவே அன்று நானும் அவருமாக இக்கதையை அப்படி அலசி சண்டை போட்டுக்கொண்டோம்

பத்மாவதி திரைப்படத்தை ஒரு வரலாறாக திருத்தப்பட்ட, திரிக்கப்பட்ட வரலாறாக, இழிவுபடுத்தபட்ட ஒரு கதாபாத்திரத்தின் கதையாக எடுத்துக்கொண்டு கச்சைகட்டிக்கொண்டு பஸ்ஸெல்லாம் எரித்துக்கொண்டிருக்கிறார்கள் அலலவா? என்னைப்பொருத்தவரை பத்மாவதி ஒரு திரைப்படம்

ஒன்றேபோலிருக்கும் தினசரிகள் தரும் அலுப்பிலிருந்து வெளியேற ஒரு மாற்றாக நான் தேடிபோய் 3 மணி நேரம் அமர்ந்து வாழ்வின் அவலங்கள் பலவற்றை  மறந்து பார்க்கும் ஒன்று அதில் நான் காமிராக்கோணங்கள் அழகிகள் ஒப்பனைகள், காட்சிச்சித்தரிப்புகள், வசனங்கள், பாடல்கள், இப்படி பலதிலும் ஈர்க்கபட்டுவிடுவேனே ஒழிய கதை சொல்லும் அறமோ கதை யாரை உயர்த்துகிறது, யாரை இழிவுபடுத்துகிறது என்றெல்லாமோ கவலைபட்டுக்கொணிட்ருக்கமாட்டேன். இதுவேதான் அன்று என்னிடம்  ஏராளமாக விவாத்தித்த நண்பருடனும் எஞ்சும் சொற்கள் குறித்துப்பேசிக்கொண்டிருந்தேன்

எளியவள்  நான். அப்படித்தான் உங்களின், மற்றவர்களின் கதைகளையும் எப்போதும் எடுத்துக்கொள்கிறேன்

அதன்படி எஞ்சும் சொற்களில் என்னை மிகக்கவர்ந்தது உங்களின் சொல்லாட்சிதான் சுரேஷ்

இருண்ட இடங்களில் எப்பொதும் உணரப்படும் குளிர்                                                                                                                     , நாயின் நாக்கை இடைநாழிக்கு உவமையாக்கியது, பெரிய வட்டப்பொட்டு நினைவுபடுத்திய உஷா உதுப், பிரேதப்பரிசோதனையின் பிறகு மூட்டை கட்டித்தரப்படும் உடலை மீசையினை வைத்து ஆணென அறிவது,கணவனின் சவத்துடன் வண்டியில் ஏறும் பெண் சித்தப்பாவிடம் அலைபேசியில் பேசும் ஒருசில வரிகளிலேயே அவளின் மொத்த வாழ்வின் துயரத்தையும் உங்களால் சொல்லிவிட முடிந்திருக்கிறது என்று ஆச்சர்யப்பட்டேன் மீண்டும் தவிர்க்க முடியாமல் இவ்வளவு சின்ன வயசில் எப்படி இத்தனை தீவிரமா எழுதுது சுரேஷ்? என்றும் மறுபடி நினைத்தேன்

சாக்கடைநாற்றத்தில் பசி எடுப்பது, உண்டு ,உமிழ்ந்து, மீண்டும் உண்டு பிண்வறையின் பின்னிருக்கும் கோரைப்புற்களுக்கிடையில் உடல்முழுவதுமாய் பரவிய தூக்கத்தில் ஆழ்வதெல்லாம் மிக வித்தியாசமான வாழ்வின் இயங்குநிலைகள் வாசிப்பவர்களும் அதே வாழ்வில் இருப்பதாக உணரவைப்பதுபோல இயல்பாக ஆனால் அழுத்தமாக சொல்லிச்செல்கிறீர்கள்

மெலிந்த பெண் தண்ணீர் குடித்தபின் வழிந்து, தாடையில் தயங்கி நின்ற நீர்த்துளி கதைசொல்லிக்கு தரும் அதிர்வில் சுரேஷ் பிரதீப் எனும் கவிஞர் அடையாளம் தெரிந்தார்

எஞ்சும் சொற்கள் என்று எப்போது நினைத்தலும் இந்த நீர்த்துளி நினைவுக்கு வருகிறது

//நெஞ்சிலிருந்து பதினைந்து முதல்இருபத்தைந்து சென்டிமீட்டர் வரை வயிறுவெளித்தள்ளியிருக்கும்//

//இரண்டு பேருடல் கொண்டவர்கள்கட்டிப்புரளும் அளவு பெரிதாக இருந்தமேசையின்//

இதுபோன்ற நுண்ணிய விவரிப்புகள்  உங்கள் signature style  என்றெண்ணுகிறேன்.  பொதுவில் இவை என்னை பெரிதும் கவர்பவை

 

//இயல்பான புன்னகை அவருக்கோஅவ்வறைக்கோ அவர் எதிரே அமர்ந்திருக்கும்மானுடவியலாளருக்கோ என் அருகே நிற்கும்ஆதிதிராவிட நலத்துறை அலுவலருக்கோசற்றும் அந்த தருணத்தில் உரித்தானது அல்லஎன நான் உணர்ந்த போது நிலைமைகைமீறியிருந்தது.// இதுவும் அப்படித்தான் மிகுந்த ஆழத்தைத்தொட்டு எழுதப்பட்டவை. சுலபத்தில் இதை எல்லாரும் எழுதிவிட முடியாது

சில வரிகள் ஜெயமோகன் சார் எழுதியதைப்போன்ற மயக்கம் தந்தது   அத்தனை ஆழமிருந்தது அவற்றில்

வலுவான ஒரு கதை படித்த உணர்வினை அளித்தது இந்தக்கதை

நினைவிலிருத்திக்கொள்ள பல வரிகள் எப்பொதும் எப்போதுமிருக்கும் என் மனதில்

இனி காலச்சுவடு ‘’பரிசுப்பொருளுக்கு’’ வருகிறேன் அதற்கு முன்பாக இன்னொன்றையும் சொல்லிக்கொள்கிறேன் பிரதீப்

 எழுதினால் நெடுங்கடிதம் இல்லாவிட்டால் இல்லை என்னும் வழமையிலிருக்கிற நான் உங்களின் சிறுகதைகளைக்குறித்து இத்தனை நீண்ட பதிவு எழுதுவது உங்களுக்கு எரிச்சலேற்படுத்துமோ என்னவோ அறியேன்

நீங்கள் ஒரு புகழ்பெற்ற சமையல் நிபுணரென்றால் நான் விதம் விதமாக சாப்பிட்டு  நாக்கு ருசிகண்டவளென்று வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் சமையலை, படைப்பை பாராட்டுகிறேன் மேலும் இப்படி சமைத்தால் இன்னின்ன சேர்மானங்கள் இருந்தால் இப்படி இப்படி பறிமாறப்பட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும் என்று சொல்கிறேன் அவ்வளவே எந்த இடத்திலும் வாசகியான  நான் என் எல்லையை மீறுவதில்லை. மேலும் எனக்கு சாப்பிடமட்டும்தான் தெரியும் சமைக்கத்தெரியாது

 

பரிசுபொருளாகட்டும் எஞ்சும் சொற்களாகட்டும் கதைசொல்லியின் வரிகளாக அழகிய தமிழ்படுத்துதல்களும் கதை மாந்தர்களின் சம்பாஷணைகளில் இயல்பாக ஆங்கிலமும் வருவது நன்றாக இருக்கிறது, கிளாஸ் மேட் தானே/?  என்பதுவும் உடற் சமனிலையும் உதாரணங்கள்

 விளிம்பு நிலை மக்களின் தினசரி கணங்களை ஃபார்ச்சூன் காரின் கருப்புக்கண்ணாடியிலும், உடற்சமநிலையை இழக்க வைக்கும் பேருந்துப்பயணங்களிலும் சொல்லியிருக்கிறீர்கள்

தீபாவளிக்கு கனக்கும் பைகளுடன் வீடு வந்துகொண்டிருக்கும் சிவகுமாருக்கும்  மோனிகாவிற்குமான நடையிலும் உரையாடலிலுமே கதையைக்கொண்டுபோயிருக்கிறீர்கள், மோனிகா சொல்லும் பலவற்றில் அவளின் அங்கீகாரமினமை அளித்திருக்கும் வலியை உணர முடிகின்றது

என்கூடவெல்லாம் பேசினா தப்பா நினைகக்மாட்டாங்க , சிவக்கும் முகம், 6 மாதங்களுக்கு முன்னர் அணிந்த அதே உடையின் நினைவில் திடுக்கிடுவது இப்படி

ஒரு மழை நாளின் தனிமையில் தவிர்க்கமுடியாதபடிக்கு அவளுக்கு கிடைத்த முத்தத்தை அவள் காதலென்று எண்ணிக்கொண்டு அவளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமாகவும் எண்ணிக்கொள்கிறாள்

ஏழ்மையும் அங்கீகாரமின்மையும் திறக்கும் அல்லது பின்னங்கழுத்தைப்பிடித்துத் தள்ளிவிடும் பல கதவுகளில் ஒன்றுதான் மோனிகா நுழைந்த கதவும் உலகும்

பிரபாகருக்கு சேமிப்பையும் அவள் உடலையும் அவ்வப்போது தந்துகொண்டிருக்கும் அவள் அளிக்கும் அந்த  வெல்வெட் பார்சலில் என்னவென்று அறியும் ஆவலை வாசிப்பவர்களுக்கு  ஏற்படுத்தியவாறே இருக்கின்றது தொடரும் உரையாடல்கள்

அவளுக்கு வந்திருக்கும் பால்வினை நோயைக்கூட யாரும் கவனிக்காததிலும் கூட வருந்தும் அளவிற்கு அவள் அங்கீகரமினமையில் காயம்பட்டிருக்கிறாள் என்பதில் ஒரு பெண்ணாக எனக்கும் வருத்தமே

 

சுரேஷ், எனக்கு உடன்பாடில்லாத ஒன்றென்றால் இக்கதையின் முடிவே ஏன் அவள் நீக்கிய கருப்பையை பிரபாகரனுக்கு பரிசாக கொடுத்தனுப்புகிறாள்?

 

ஏழ்மையிலிருக்கிற, அங்கீகாரமினமையால் துவண்டுபோகிற, பணிப்புலத்திலும் ஆண்களால் சீண்டலுக்கு உள்ளாகின்ற, பிரபாகர் தன்னை உபயோகபடுத்திகொள்வதை முழுமனதுடன் அறிந்திருக்கிற, அதன் பிறகும் அதற்கு வலிய இடம் கொடுக்கிற, கனவுகள் நிறைந்த 3 உடைகளே இருக்கும், கல்யாணம் பற்றி சிந்திக்கும், மோனிகா ஏன் கர்ப்பப்பையை பரிசாகக் கொடுக்கணும்?

சுரேஷ், இவர்களிருவருக்கும் மேலோங்கியிருந்த பாலுணர்வும் அடிக்கடி நிகழ்ந்த உடலுறவும் அன்னைமை தொடர்புடையதல்லவே?

எந்த இடத்திலும் மோனிகா அன்னையாக இருக்க விழைந்ததையோ, அன்னைமைக்காக ஏங்கியதையோ சொல்லவே இல்லையே?

பேருந்துப் பயணத்தில் ஒரு குண்டுக்கன்னங்களுடனான ஒரு குழந்தையை மோனிகா பார்த்ததாக ஒரு கோடிட்டு காட்டியிருந்தால், பிரபாகருடன் இருந்த ஒரு இரவின் பின்னால் மோனிகாவின் அம்மா பிசைந்து உருட்டித்தரும் கவளமொன்றினை விழுங்கமுடியாமல்  கண்ணீர் விட்டிருந்ததாகச் சொல்லி இருந்தால், பிரபாகரிடம் அந்தரங்கமாக உரையாடும் போது குடும்பம் குழந்தைபற்றிய ஏக்கமெல்லாம் மோனிகா கொட்டி இருப்பதாகக் காட்டியிருந்தால் கூட இந்த  இந்தப்பரிசுப்பொருளை என்  மனம் ஏற்றுக்கொண்டிருக்கும் ஆனால் பிரபாகருக்கு அவள் கழற்றிபோட்ட ஆடை, இவளும் அடிக்கடி கருத்த்டைமாத்திரைகள் எடுத்துக்கொள்கிறாள்

எந்த விதத்திலும் பொருட்படுத்தப்படாத வேதனையில் உடலுறவுக்கென தன்னை பொருட்படுத்தும் உபயோகப்படுத்தும் பிரபாகருடன் இணைந்துகொண்ட மோனிகா கருப்பையை அவனுக்கு அளிப்பதற்கு பதிலாக தொற்றக்கூடிய ஒரு நோயை அளித்திருக்கலாம் உடலுறவின் வாயிலாகவே

 அல்லது இக்கதைக்கு வேறு முடிவுகள்  கூட சாத்தியமாகி இருக்கலாம் ஒரு அன்னையாக பெண்ணாக என்னால் கருப்பையை பிரபாகருக்கு மோனிகா பரிசாக அளிக்கும் முடிவை ஏனோ ஏற்றுக்கொள்ளவே  முடியவில்லை

நிச்சயம் இதற்கு அதாவது இம்முடிவிற்கு உங்களிடம் ஏதேனும் வலுவான காரணம் இருக்கும் அதனால் தான் கதையின் துவக்கத்திலும் முடிவிலும் பேசப்படுகின்ற ஒரு பொருளான கருப்பையை பரிசளிப்பதை தலைப்பாக வைத்திருகிறீர்கள்

எனக்கு இம்முடிவு ஏனோ சஙகடமாயிருந்தது

சுரேஷ் இந்த என் கருத்து உங்கள் கதைக்கு எதிரே நான் வைக்கும் குற்றச்சாட்டெனெ எண்ணாதீர்கள்,  அன்னையும் ஆசிரியையும் வாசகியுமல்லாது வேறெதுவுமல்லாத ஒரு எளிய பெண்ணாக என் விமர்சனம் அல்லது அபிப்ராயத்தை உங்களுக்கு முன்னெ அளிக்கிறேன் என்று மட்டும் நினையுங்கள்

ஜெயமோகன் அவர்களின் அணைப்பிலும், காலச்சுவடின் பதிப்பிலும் இருக்கும் உங்களுக்கு இப்படி பலதரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வரும் அதிலொன்று என்னுடையது

மொத்தத்தில் எனக்கு உங்கள் எழுத்துக்கள் மீது பெரும் அபிமானம் இருக்கிறது, கல்லூரியிலிருந்து திரும்பும் வழியில் காரில் உங்களின் எஞ்சும் சொற்கள் வாசித்து விட்டு வழக்கம் போல பாடல்கள் கேட்காமல் பிரமை பிடித்தவள் போல அமர்ந்திருந்தேன் வலிமை மிகுந்த எழுத்துக்களை ஜெயமோகனுக்குப்பிறகு கெ என் செந்தில் பின்னர் நீங்கள் எழுதுகையில் தான் வாசிக்கிறேன்

இன்னும் இன்னும் என இலக்கிய உலகில் பிரகாசிக்க மூத்தவள் என்னும் முறையில் என் வாழ்த்துக்கள்

இந்தகடிதத்தை கொங்குப்பிரதேசத்தில் ‘’பொடிச்சுடுது ’’ என்பார்கள் ஒருசில எட்டுக்கள் கூட எடுத்து வைக்க இயலாத அளவிற்கு காந்தும் வெயிலை ,அப்படி ஒரு பின்மதிய வெயிலில், மரங்கள் சூழ்ந்த வீடென்பதால், கல்பாவிய திண்ணையின் குளிர்ச்சியை உணர்ந்துகொண்டெ,  செடிகளுக்கு நேற்று தண்ணீர் விட்டிருப்பதால் அந்த ஈரத்தில் பூச்சிகளை தேடி  3  குஞ்சுகளுடன் வந்திருந்த இரண்டு பெண் மயில்களை,  அவற்றின் சுவாதீனத்தை பார்த்துக்கொண்டே எழுதிக்கொண்டிருக்கிறேன்

இனி தாடையில் சொட்டும் நீரில் எஞ்சும் சொற்களிருக்குமென்றால், மயில்களைப்பார்க்கையில் பரிசுப்பொருள் நினைவுக்கு வரும்

அன்புடன்

தேவி

எஞ்சும் சொற்கள் (சுட்டி)