Friday, 16 February 2018

பச்சை நரம்பு - முனைகொள்ளும் சிக்கல்கள்
சிறுகதை என்ற வடிவம் குறித்த புரிதலை தொடர்ச்சியாக சிறுகதைகளை வாசிப்பதன் வழியே அடைய முடியும் என நினைக்கிறேன். வாழ்வின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தை ஒளியேற்றி நிறுத்த சிறுகதை வடிவம் ஏற்புடையது. நாவல் இதற்கு எதிரான வடிவம். ஒரு நாவலை வாசித்து முடிக்கும் போது நம்முள் தங்குவதும் நாம் சிந்திப்பதும் பெரும்பாலும் ஆசிரியனால் முடிவு செய்யப்படுவது கிடையாது. ஒரு வகையில் நாவல் "நோக்கமற்றது". விவாதத்தன்மை உடையாது. எல்லா சாத்தியங்களையும் திறந்து நோக்கிவிட முடியுமா என்ற கேள்வியுடன் நிதானமாக பயணத்தை மேற்கொள்வது. இக்காரணங்களால் நாவல் வாசிப்பு சிந்திப்பதற்கான இடைவெளிகளை தானாகவே உருவாக்கி வழங்கும். ஆனால் சிறுகதை நேரெதிர் தன்மையான வாசிப்பைக் கோருகிறது. முதல் வரியிலிருந்தே உச்சவிசையுடன் இலக்கு நோக்கி பாய்வது போன்ற ஒரு வாசிப்பை சிறுகதைகளுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. அவ்வகையான வாசிப்பு அளிக்கும் போது அந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து அழைத்துச் செல்லும் மொழியும் கூர்மையான சித்தரிப்புகளும் நீட்டி முழக்காமல் "சிதறல்கள்" அற்று உணர்வுகளை கடத்த வேண்டியது ஒரு சிறுகதையின் கட்டாயம் ஆகிறது. வடிவப்புதுமை வித்தியாசமான கருப்பொருள் இவற்றைத்தாண்டி சிறுகதை விரைந்து நகரும் தன்மை கொண்டதாக இருந்தாக வேண்டியிருக்கிறது. அதேநேரம் கச்சிதமான முடிவையும் சிறுகதை அடைந்தாக வேண்டும். வடிவ முழுமையும் இறுதித் திருப்பமும் விரைவான கதையுடலும் சிறுகதையின் இன்றிமையாத கூறுகள். இவற்றை அனோஜன் இளம் வயதிலேயே எட்டியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

பச்சை நரம்பு பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இத்தொகுப்பில் உள்ள வெளிதல் கதையில் ஒரு சித்தரிப்பு. கதையின் நாயகியான பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையைச் சொல்லியபடியே வருகிறது இக்கதை. காமத்திற்கென ஆண் கொள்ளும் பல நுண்ணிய நாடகங்களை ரசித்தபடி அவனைத் தேற்றுவதும் வக்கிரங்கள் வெளிப்படும்  போது மறுப்பதும் என இக்கதை நகர்கிறது. வாசிக்கும் எழுதும் பழக்கமுடைய அவளுடைய தோழனைத் தேடி அவள் செல்கிறாள். அவளைப் புணரும் முன் அவன் "ஆண்களின் தசைகளில் உறையும் தீங்குகளை நீக்கி நீ அவர்களை சுத்தப்படுத்துகிறாய்?" என்கிறான். அதை தீங்கென்று எண்ண முடியுமா என்று அவள் சிந்திக்கிறாள்.
அதுபோல இளவயதில் தன்னை உடல் தேவைக்கென பயன்படுத்திக் கொண்ட தன்னை விட பல வயது மூத்தப் பெண்ணைப் பற்றி பல வருடங்கள் கழித்து நண்பனிடம் கதை சொல்லி கூறும்போது அந்த "சுரண்டலை" சுரண்டலாக அவனால் எண்ண முடியவில்லை. அனோஜனின் புனைவுலகை இச்சித்தரிப்புகளின் வழியாக நான் புரிந்து கொள்ள முயல்கிறேன். கனமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் அனோஜன் அவற்றிலிருக்கும் ஒரு அன்றாடத் தன்மையின் மூலம் அக்களங்களை சித்தரிப்பதன் வழியாக தன் புனைவுகளின் வண்ணங்களை மாற்றிவிடுகிறார்.

இலங்கையில் போர்ச்சூழலில் பிறந்தவரான அனோஜனின் போர் மீதான நடைமுறைத்தன்மை கொண்ட பார்வை இத்தொகுப்பை முக்கியமானதாக மாற்றுகிறது. பத்து கதைகளில் நானூறு ரியால்,பலி,இணைகோடு,மனநிழல் ஆகிய நான்கு கதைகள் போர்ச்சூழலினால் ஒரு இளம் மனம் அடையும் குழப்பங்களை தொட்டிருக்கின்றன. இந்த நான்கு கதைகளிலுமே பிறந்து விழுந்த சூழலின் மதிப்பீடுகளுக்கு எதிராகத் திரும்பும் ஒரு இளம் மனம் தான் சொல்லப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு கதையும் இச்சிக்கலை வெவ்வேறு விதங்களில் எதிர்கொள்கிறது. நானூறு ரியால் கதை மட்டும் இவற்றில் சற்று பலகீனமாகத் தென்படுகிறது. பலியில் வெடிகுண்டு வைக்கப் பழகும் சிறுவனாக,இணைகோட்டில் ராணுவ வீரனொருவனை காதலித்து மணந்து கொள்ளும் தமிழ் பெண்ணிடம் உதவி பெறும் இளைஞனாக,மனநிழலில் நண்பனின் இறப்பைத் தவிர்த்துவிட்டு வெளிநாடு செல்வதெற்கென இறந்தவனின் நண்பனாக இருந்ததையே காரணம் காட்டுகிறவனாக கதை சொல்லி மாறிக்கொண்டே இருக்கிறான். இக்கதைகள் அனைத்திலுமே மதிப்பீடுகள் மீதான ஏக்கமும் நடைமுறை நிர்பந்தத்தால் அதைக் கடந்து செல்ல வேண்டிய குற்றவுணர்வும் வெளிப்பட்டபடியே இருக்கிறது. 
இளைஞன் ஒருவனின் கண்ணிலிருந்து இக்கதைகள் சொல்லப்பட்டிருப்பதாலேயே இன்றைய இளம் மனம் எதிர்கொள்ளும் கொள்ளவிருக்கும் சிக்கல்களை மையப்படுத்துகிறவையாக இக்கதைகள் அமைந்துவிடுகின்றன.

மற்ற ஆறுகதைகளும் ஏதோவொரு விதத்தில் பாலுறவுச் சிக்கல்களை அதைக் கடந்து வருவதற்கு முன் மனம் அடையும் சஞ்சலங்களை கடக்கையில் மனம் பெறும் விடுதலையைப் பேசுகின்றன. முதல் கதையான வாசனை அப்பாவின் காதல் கதையை அம்மாவின் மூலம் தெரிந்து கொள்ளும் பெண்ணின் பார்வையில் சொல்லப்படுகிறது. தன் அப்பா காதலித்த முகம் அறியாத அந்தப்பெண்ணாக கதை சொல்லி தன்னை புனைந்து கொள்வதோடு கதை முடிகிறது. கதையின் துவக்கத்தில் நறுமணம் மிக்கவையாகத் தோன்றும் கணவனின் உடைகள் கதை முடியும் போது அழுக்கானவையாக சித்தரிக்கப்பட்டிருப்பது இக்கதையில் முக்கிய படிமம். அப்பா காதலன் கணவன் என எங்கும் முழுமையைக் கண்டறிய முடியாத கதை சொல்லி முகம் தெரியாத ஒரு பெண்ணாக தன்னை மாற்றிக் கொள்கிறாள்.

இச்சை,உறுப்பு இரண்டு கதைகளுமே ஒரு வகையான மீட்சி குறித்தே பேசுகின்றன. இச்சையில் இளவயதில் தன்னை "உபயோகப்படுத்திக்" கொண்ட பெண்ணின் குழந்தையை கொஞ்சுவதன் வழியாக உறுப்பில் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்களை ஒரு முத்தத்தின் வழியாக கதை சொல்லி கடந்து வருவதை சித்தரிக்கிறார்.
ஒட்டுமொத்தமாக அனோஜனின் புனைவுலகை நான் இவ்வாறு தொகுத்துக் கொள்கிறேன். ஒற்றைப்படையான செயலூக்கத்துடன் இக்கதைகள் எதுவும் பாய்வதில்லை. அவை மறுபக்கத்தைப் பார்க்கின்றன. கதாமாந்தர்கள் தங்கள் மீதும் தவறு இருக்குமோ என ஐயப்படுகின்றனர். இந்த ஐயமும் தயக்கமுமே நவீன வாழ்வை புரிந்து கொள்ள முயலும் மனம் அடைவது. அதை மொழியில் மிகச்சரியாக இக்கதைகள் பிரதிபலிக்கின்றன.

பச்சை நரம்பு வழக்கமான அம்மா-காதலி-காமம் வகையறாக் கதை. சித்தரிப்புகள் வலுவானவையாக இருந்தாலும் இறுதியில் கதை சொல்லி அடையக்கூடிய தரிசனம் வழமையான ஒன்றே. கிடாய் இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதையென்று சொல்லலாம். தகப்பனின் மீதான வெறுப்பை பெண் மிக நுட்பமாக வெளிப்படுத்துவதாக கூட்டிச் சென்று கதையின் முடிவில் அது வேறு வகையான திறப்பினை அளிக்கும் வகையில் முடித்திருப்பது கச்சிதமான சிறுகதை வாசித்த உணர்வினைத் தந்தது. விமலரூபன்,தேவி என்ற பெயர்கள் கூட வேறு அர்த்தம் தருவதாக சட்டென மாறிவிடுகின்றன. பாலுறவுச் சிக்கல்களை எழுதுவது புனைவுக்கு ஒரு வகையான நம்பகத் தன்மையை வாசகர் உடனடியாகத் தொடர்புறுத்திக் கொள்ளும் தன்மையை அளிக்கிறது. அத்தோடு அச்சிக்கல்களிலேயே உழன்று கொண்டிருக்காமல் அதை மீறிச்சென்று ஒரு தரிசனத்தை முன் வைக்கவும் அனோஜனால் முடிகிறது என்பதும் முக்கியமானதே. அதேநேரம் இவ்வகைக் கதைகளை இவை முன் வைக்கும் தரிசனங்களை முயன்றால் யாரும் எழுதிவிட முடியும் என்பதே இவற்றில் உள்ள சிக்கல். அனோஜனின் வலுவான புனைவுமொழி மற்றும் சித்தரிப்புகள் தாண்டி இக்கதைகளின் "நேர்மறைத்தன்மை" மட்டுமே முக்கியமானவையாகத் தோன்றுகின்றன. ஆகவே அனோஜன் எதிர்வரும் காலங்களில் தன் புனைவின் களங்களை மாற்றிக் கொள்வது தன் படைப்பு மொழியின் வழியாக வாசகனுக்கு மேலும் பல திறப்புகளை அளிக்க உதவும் என நம்புகிறேன்.

நவீன வாழ்வில் முழுமையாகப் பிறந்து விழுந்த ஒரு இளைஞனுக்கு நேற்றின் மதிப்பீடுகள் எப்படி பொருள்படுகின்றன அவற்றில் அவனுக்குள் எவையெல்லாம் திகைப்பினை அளிக்கின்றன எவற்றின் முன்னெல்லாம் ஒவ்வாமை கொண்டு அஞ்சி அவன் விலகுகிறான் எவற்றோடெல்லாம் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறான் என்பதை கூர்மையாக நோக்கி எழுதப்பட்ட கதைகளாக இவற்றை வகைப்படுத்த முடியும்.
அனோஜன் பாலகிருஷ்ணன்


சிறந்த கதைகளை எழுதியதற்காகவும் எழுதவிருப்பதற்காகவும் அனோஜனுக்கு மனம்நிறைந்த அன்பும் வாழ்த்துக்களும்.

No comments:

Post a Comment