Thursday, 25 August 2016

கபாலி - என் விமர்சனம்

நாற்பதாண்டுகளுக்கு முன் அலெக்ஸ் ஹெய்லி எழுதிய  "ரூட்ஸ்" அமெரிக்காவில் ஒரு தொலைத்தொடராக (serial) எடுக்கப்பட்டது. ஒரு கருப்பின இளைஞன் பண்ணை அடிமைகளாக ஆப்ரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட தன் மூதாதையர் அடைந்த இன்னல்களை கண்டடைவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அமெரிக்காவை உலுக்கிய ஒரு தொடராக அது இருந்ததாகவும் அந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் புறப்பட இருந்த விமானங்களின் நேரம் மாற்றப்பட்டதாகவும் ஒரு கருப்பின பாதிரியார் தலைமை வகித்த தேவாலயத்தில் வெள்ளையர்கள் சிரம் தாழ்த்தி தங்கள் மூதாதையர் கருப்பினத்தவர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்புக் கேட்டதாகவும் சொல்வார்கள். ஆங்கிலத் தொலைக்காட்சியான ஹிஸ்டரி டிவி அந்தத் தொடரை இன்னும் சில தினங்களில் இந்திய மொழிகளில் வெளியிட இருக்கிறது. சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு போக்கு அழுத்தம் பெறும் போது அது தொடர்புடைய அனைத்தையும் இணைத்துப் பார்க்க முடியும். ஆங்கில அறிவுடைய இந்தியர்கள் மட்டுமே காணக்கூடிய நேஷனல் ஜியோகிராபிக் டிஸ்கவரி போன்ற சேனல்கள் இந்தியாவின் பிராந்திய மொழிகளிலும் தங்களுக்கான வாய்ப்பிருப்பதை உணர்ந்து இந்திய மொழிகளில் தங்களுடைய சேனல்களை ஒளிபரப்பத் தொடங்கின. அறிவுத்தேடல் ஆங்கிலத்தில் மட்டுமே நிகழ்ந்தாக வேண்டிய அவசியமில்லை என்ற உணர்வே டேவிட் ஆட்டன்பரோவிற்கு இந்தியக் குரலைப் பொருத்த வைத்தது.

ரூட்ஸ் இந்திய மொழிகளில் வெளியாவதும் இந்தியாவின் விளிம்புகளில் இருந்து வலுவான குரல்கள் எழத் தொடங்குவதன் அடையாளமே.

இனி....

எந்திரனுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எதையும் நான் பார்க்கவில்லை. தனிப்பட்ட முறையில் அது ஒரு விலகலும் கூட. மேலு‌ம்  எந்திரனுக்குப் பிறகு வந்த திரைப்படங்கள் எதிலும் வணிகத் திரைப்படங்களுக்கு உரிய குறைந்தபட்ச விறுவிறுப்பு கூட இல்லையென நண்பர்கள் சொன்னார்கள். காலமாற்றத்தை ரஜினிகாந்தும் உணர்ந்திருப்பார். இளம் இயக்குநரான ரஞ்சித்துடன் அவர் கை கோர்த்தது இந்தப் பிண்ணனியை உணர்ந்தே என்பது என் எண்ணம். நரைத்த தாடியுடன் வெளிவந்த ரஜினியின் போஸ்டரை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மீண்டும் இன்னொரு "கேங்ஸ்டர்" திரைப்படம் என்ற எண்ணம் சோர்வளித்தது. படம் வெளியானபோது பார்க்கத் தோன்றவில்லை. நான் வேலை செய்யும் திருத்துறைப்பூண்டி சிறிய நகர் என்பதால் வெளியாகி முப்பது நாட்கள் ஓடியது. சிறு நகரங்களில் முப்பது நாட்கள் என்பது படம் பெரு வெற்றி அடைந்ததற்கு சான்று. ஆனால் மீண்டும் "ரசிகர்களின் வேண்டுதலில்" என்ற முன் வாசகத்துடன் விஜிலா திரையரங்கம் கபாலியை மீண்டும் திரையிட்டது. நண்பரும் சக ஊழியருமான பாலமுருகனும் நானும் கபாலி பார்க்கச் சென்றோம்.

பெரும்பான்மையாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் திரையரங்கில் இருந்தனர். அப்போது தான் ஒரு ரஜினி படத்தை இவ்வளவு குறைவானவர்களோடு அமர்ந்து பார்க்கிறோம் என்பதை உணர்ந்தேன்.

மிக எளிமையான "கேங்ஸ்டர்" கதை. புகழ் வாய்ந்த நடிகரை வைத்துக் கொண்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தான் சொல்ல வந்ததை கொண்டு போய் சேர்க்க முயன்றிருக்கிறார் ரஞ்சித். முதல் காட்சியில் சிறையிலிருந்து வெளியேறுகிறார் ரஜினி. "43" என்ற கேங்ஸ்டர் அணியின் முக்கியப் புள்ளிகள் அறிமுகமாகின்றனர். வன்முறைக்கு இழுத்து வரப்படும் இளைஞர்களை தொடக்கம் முதலே சித்தரித்த வண்ணம் முன் செல்கிறது கதை. வன்முறையிலிருந்து மீட்கப்பட்ட இளைஞர்களுக்கான ஒரு பள்ளியை கபாலியின் தோழரான அமீர் நடத்தி வருகிறார். அங்கிருக்கும் மாணவர்களிடம் தன்னுடைய கதையை சொல்கிறார் ரஜினி. கூலியை உயர்த்திக் கேட்கும் தொழிலாளி என்ற நிலையிலிருந்து மெல்ல மெல்ல மேலுறுகிறார் கபாலி. அவருடைய ஆளுமையில் அவர் மனைவியான குமுதவள்ளியின் தாக்கம் அதிகமிருக்கிறது. பொறாமை வஞ்சகம் துரோகம் என்ற வழக்கமான காரணங்களால் தன் மனைவியை இழந்து சிறை செல்கிறார் கபாலி.

43 அணியின் முக்கியப் புள்ளிகளை கொலை செய்கிறார் கபாலி. கபாலியைக் கொல்ல யோகி என்ற பெண்ணை நியமிக்கிறது 43. யோகி தன் மகளென ரஜினி அறிவதோடு முற்பாதி முடிகிறது. தன் மனைவியைத் தேடி தமிழ்நாட்டிற்கு மகளுடன் பயணிக்கிறார் கபாலி. மனைவியைக் கண்டடைந்து மலேசியா திரும்பும் போது நிலைமை அங்கு மாறியிருக்கிறது. 43 வலுவாக தலை தூக்குகிறது. அதனை கபாலி வெல்வது உச்சம்.

மீண்டும் மீண்டும் நம் திரைப்படங்களில் சோர்வடையச் செய்யும் ஒரு அம்சம் கபாலியிலும் பிரதிபலிக்கிறது. தகவல் குறைபாடு. கூலித் தொழிலாளியாக சித்தரிக்கப்படும் இளவயது கபாலி என்ன வேலை செய்கிறார் என்பதற்கு எந்த சான்றும் படத்தில் இல்லை. ஆண் சட்டை போட்டுக் கொண்டு குமுதவள்ளி வேலை செய்வதாகக் காட்டப்படும் இடம் ஒரு பூங்கா! புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியலை சொல்ல முயன்று அதனையும் முழுமை செய்யாமல் நிறுத்தியிருக்கிறார் ரஞ்சித். வன்முறை இயக்கத்திலிருந்து மீளும் திறனும் படபடப்பும் நிறைந்த ஒரு இளைஞன் சிறு வயதில் தாயாகி மனநலம் பாதிக்கப்படும் பெண் தலைவனின் எண்ணத்தை உணர்ந்து செயல்படுத்தி இறந்து போகும் தினேஷ் என ஆச்சரியப்டுத்தும் வேற்றுமைகளை கபாலி காட்டியிருக்கிறது. ரஜினியும் தன் பிம்பத்தை விடுத்து வெகுவாகவே இறங்கி வந்திருக்கிறார். மனைவியின் பிரிவைத் தாளமுடியாத முதியவராக ரஜினி தத்தளிக்கும் இடங்கள் நம்பகத் தன்மையுடன் அமைந்துள்ளன. வெகு நாட்கள் கழித்து மனைவியை சந்திக்கும் இடத்தில் ரஜினி ராதிகா ஆப்டே இருவரின் நடிப்பும் மிகைப்படுத்தப்படாத இயல்பினாலேயே ரசிக்க வைக்கின்றன.

கபாலியின் மிகப்பெரிய பலமாக நான் கருதுவது வன்முறையையும் வன்முறையாளனயும் எவ்விதத்திலும் இத்திரைப்படம் நியாயப்படுத்தவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இழையோடுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி இருப்பதும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. உச்சகட்டத்தில் கபாலியிடம் வீரசேகரன் பேசுவதும் டோனி லீயிடம் கபாலி  பேசுவதும் தலித் தன்மை உடையதாக படத்தை சித்தரிக்கின்றன. மகளால் காப்பாற்றப்படுவது இளம் பெண் ஒருத்தியிடம் திட்டு வாங்குவது என கேங்ஸ்டருக்கு உரிய தோரணைகளைத் தவிர்த்திருப்பது சிறப்பு.

கபாலியை நிச்சயம் கலைப்படம் என்ற வரிசையில் சேர்க்க முடியாது. இது வணிகத் திரைப்படமே. ஆனால் வணிகத் திரைப்படத்திற்கான எல்லைக் கோட்டினை மீற முயல்கிறது. வணிகத் திரைப்படங்களுக்கு புதிய எல்லைகள் நிர்ணயிக்கப்படுவது தரமான வணிகத் திரைப்படங்களை உருவாக்கும் என்பதால் கபாலி வரவேற்கத்தக்க முயற்சி.

Monday, 22 August 2016

நூல் ஐந்து - பிரயாகை

நிலைபெயராமை ஒன்றையே நோக்கமெனக் கொண்டு தவமியற்றும் உத்தானபாதனின் மைந்தன் துருவனின் கதையோடு தொடங்குகிறது பிரயாகை. முற்றாக தோற்கடிக்கப்படுதல் முற்றாக கைவிடப்படுதல் முற்றாக வஞ்சிக்கப்படுதல் எனும் நிலைகளில் இருந்து மீண்டு வருபவர்களில் கூடும் சமநிலையின் சித்திரத்தை அளிக்கிறது. நிலைபெயராத துருவனும் நிலை கொள்ளாத ஆகாய கங்கையும் என சுழற்சியின் இரு பெரும் விசைகளை அறிமுகம் செய்கிறது. கங்கையை மண்ணுக்கு இழுக்கும் பகீரதனின் கதையை சொல்கிறது.

படைக்கல பயிற்சிகள் முடிந்ததும் தன் மாணவர்களிடம் பாஞ்சால மன்னன் துருபதனை வென்று தேர்த்தட்டில் கட்டி இழுத்து வருமாறு ஆணையிடுகிறார் துரோணர். போருக்கான முன்னெடுப்புகள் நிகழ்ந்த பிறகு தருமனின் மனம் கொள்ளும் இரக்க உணர்வுகளை அர்ஜுனனும் பீமனும் கையாளும் விதம் எளிமையான நீதியுணர்ச்சியிலிருந்து விடுபட வைக்கிறது. களத்தையும் வியூகங்களையும் வாய்ப்புகளையும் விரிவாக விளக்குகிறது. கௌரவர்கள் கர்ணன் தலைமையில் துருபதனை எதிர்கொள்கின்றனர். நிலைமை எல்லை மீறும் போது அர்ஜுனன் தலைமையில் பாண்டவர்களின் படை களமிறங்குகிறது. அத்தனை கள நியதிகளையும் மீறி துருபதனை தேர்த்தட்டில் கட்டி இழுத்துச் செல்கிறான் அர்ஜுனன். மனம் பதைத்து அவனைத் தடுக்கும் தருமனிடம் பீமன் சொல்லும் நியாயங்கள் இரக்கமற்றவை எனினும் உண்மையே. துருபதனை துரோணர் எதிர்கொள்வதை அர்ஜுனன் காணும் கணங்கள் நுட்பமானவை. நம்பிக்கை இழப்பிற்கு ஆளாகி வதைபடுகிறான். பீமனும் அர்ஜுனனும் மாறுபடுவதன் வழியாகவே தருமனை அறிய முடிகிறது. மூவருக்குமான தொடர்ச்சியான விவாதங்கள் மூலம் அவர்கள் நுண்மையாக வேறுபடும் இடங்களையும் அவர்களை இணைத்திருக்கும் மையத்தையும் அறிய முடிகிறது. அர்ஜுனனின் நிலையழிவை பீமன் எதிர் கொள்ளும் விதமும் மீண்டும் துருவனையும் கங்கையையும் நினைவுறுத்துகிறது. சிக்கலான அரசு சூழ்தல்களில் தருமனுக்கும் குந்திக்கும் இடையே அர்ஜுனன் அலைகழிகிறான். தருமனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டப்படுவதும் அது அர்ஜுனனின் பார்வையில் விரிவதும் அதற்கு முந்தைய அவன் மனநிலையும் நுண்மையாகப் பொருந்துகின்றன.

அவமதிக்கப்பட்ட துருபதனின் மனம் அந்த அவமதிப்பை சந்திப்பது அவர் தோழர் பத்ரரின் பார்வையில் நுணுக்கமாக வெளிப்படுகிறது. தன்னிடமிருந்து தன்னை மறைக்க அகம் கொள்ளும் பாவனைகளும் நடிக்கும் நாடகங்களும் விலக துருபதன் தனித்து நின்று எரிகிறார். மனதில் ஊறிய வஞ்சத்தை களைய முடியாதவராய் அதர்வ வைதிகர்களான யாஜ உபயாஜர்களை கொண்டு நிகழ்த்தும் வேள்வியின் வழியாக தன்னை மீட்டுக் கொண்டு திரௌபதியை பெறுகிறார். நிமிர்வும் கருணையும் கொண்ட பேரழகியாக மண்ணடைகிறாள் பாஞ்சாலி.

இருபதாண்டுகளுக்கும் மேலான காத்திருப்பு பொருளற்றுப் போகவே மீண்டும் காந்தாரம் நோக்கி கிளம்புகிறார் சகுனி. பசித்த கிழ ஓநாயுடனான சகுனியின் விவாதங்கள் பாலைவனத்தின் இரக்கமற்ற கூர்மையைக் கொண்டுள்ளன. ஓநாயால் கடிபட்டு சகுனி மீண்டு வருவதை அவர் அமைச்சர் கிருதர் காண்கிறார். மனதின் பாவனைகள் உடலில் வெளிப்படுவதை சகுனியின் வழியாக காண்கிறார் அவர் தளபதி கிருதர். மருத்துவரான ஊஷரர் சொல்லும் கதையை சகுனியின் ஆழம் நம்பி விடுகிறது. அத்தருணத்தில் கணிகரை சகுனி சந்திக்கிறார். அவருடன் அஸ்தினபுரி மீள்கிறார்.

இளவரசுப்பட்டம் கட்டப்பட்ட பாண்டவர்கள் ஏழாண்டுகள் பயிற்சி முடிந்து சௌவீர மணிமுடியை வென்று திரும்புகின்றனர். திருதராஷ்டிரரை விடுத்து அவர்கள் குந்தியை சந்திக்கும் இடத்தில் முதல் பிறழ்வு நிகழ்கிறது. இளையவர்களான நகுலனும் சகதேவனுமே குந்தியை நோக்கி முதலில் ஓடுகின்றனர். தருமன் தயக்கமின்றி அவர்களைத் தொடர்கிறான். பீமன் திருதராஷ்டிரரை திரும்பி நோக்கியபின் செல்கிறான். அர்ஜுனன் திகைத்து நின்று விடுகிறான். அங்கு நிகழும் உடைவை இயல்பாகவே பெருகிறது. மதுராவை மகதத்திடமிருந்து காக்க உதவி கேட்டு பலராமரின் தூதுடன் துரியோதனன் வருகிறான். எதிரியல்புகளால் தருமனால் அவமதிக்கப்படுகிறான். அர்ஜுனன் மனதில் அக்கணம் தருமனும் இறக்கிறான். கிருஷ்ணனை அர்ஜுனன் சந்திக்கும் இடம் அது. அரசியல் காரணங்களால் துரியோதனனுக்கு படைப்புறப்பாடு மறுக்கப்பட்ட பின் குந்தியிடமிருந்து தனக்கான படையை கிருஷ்ணன் பெறுவதும் விதுரரை விலக்கி நகர்வதும் அவனை நிறுவி விடுகின்றன. அப்படை புறப்பாடும் வெட்டுக் கிளிகள் போல தாக்குவதும் தோழனாகவும் தளபதியாகவும் சிறுவனாகவும் கிருஷ்ணன் அமைவது அர்ஜுனனை உவகை கொள்ளச் செய்கின்றன. தன் ஆசிரியனை கண்டு கொள்கிறான். துரியோதனனின் வஞ்சத்தை கணிகரும் சகுனியும் பெறுக்குகின்றனர். அவரை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார் விதுரர். கௌரவ நூற்றுவர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பாண்டவர்களையும் குந்தியையும் வாரணவதத்தில் எரித்தழிக்க முடிவு செய்கின்றனர் சகுனியும் கணிகரும். விதுரரின் சொற்கள் வழியாக எரிநிகழ்வை உணர்ந்து அங்கிருந்து தப்புகின்றனர் பாண்டவர்கள்.

திரௌபதி இளவயதிலேயே திடமான முடிவுகள் எடுப்பவளாக வளர்கிறாள். அவள் அன்னை பிருஷதியின் விழிகள் வழியாக திரௌபதியின் பேருருவம் வெளிப்படுகிறது. பிருஷதிக்கு விறலி சம்வரணனுக்கும் சூரியனின் மகளான தபதிக்கும் குரு வம்சத்தின் முதலவனான குருவின் பிறப்பு சொல்லப்படுவதன் மூலம் கர்ணனை அறிமுகம் செய்து கொள்கிறாள் திரௌபதி. எரி நிகழ்வில் உயிர் பிழைத்ததும் அரசியாகவே வாழ்ந்த குந்தி அன்னையாகிறாள். அவள் வினதை கத்ரு என இரு சகோதரிகளின் கதையை சொல்வது அவளும் காந்தாரியுமாகவே மனதில் நிற்கிறது. காட்டிற்குள் பாண்டவர்கள் அனைவருமே விடுதலை கொள்கிறார்கள். இடும்பியை பீமன் மணம் கொள்கிறான். குரங்குகள் சூழ நடக்கும் அந்த மணத்தில் சூர்ணன் என்ற குட்டி குரங்கு தருமனை கேலி செய்யும் விதம் புன்னகைக்க வைக்கிறது. குந்திக்கும் தருமனுக்கும் அந்நேரம் நடைபெறும் உரையாடல் கூர்மையானது. கானகத்தினரான இடும்பர்கள் பாண்டவர்களை ஏற்க மறுப்பதற்கான நியாயங்கள் முகத்தில் அறைகின்றன.

கடோத்கஜனின் பிறப்பும் பீமன் அவன் வழியாக தன் நெஞ்சில் ஊறிய கசப்பினை போக்க முயல்வதும் சிலிர்க்கச் செய்கின்றன. வாரணவத எரிநிகழ்வு முடிந்து ஏழு வருடங்கள் கடந்து திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள சாலிஹோத்ர குருகுலத்தில் இருந்து பாண்டவர்கள் புறப்படுகின்றனர். விதுரரின் வழியாக பாண்டவர்கள் உயிருடன் இருப்பதை பீஷ்மர் அறிகிறார். குடிகளின் வழியாகவே சகுனியும் கணிகரும் துரியோதனனுக்கு இளவரசுப்பட்டம் சூட்ட வேண்டிய அவசியத்தை உருவாக்குகின்றனர்.

பகனை பீமன் வீழ்த்திய கதை சொல்லும் சூதனுடன் பலராமர் அவை நுழைகிறார். பாண்டவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்து பட்டம் கட்டுதல் தடைபடுகிறது. அனைத்து சம்பவங்களும் ஒன்றிணைந்து திரௌபதியின் சுயம்வரம் எனும் உச்சம் நோக்கி நகர்வது கதையோட்டத்தில் ஒரு ஒருமையை உருவாக்குகிறது. அணுக்கத்தோழி மாயையின் வழியாக இம்முறை திரௌபதி வெளிப்படுகிறாள். லட்சுமி சாவித்ரி சரஸ்வதி துர்கை ராதை என ஐந்து அன்னையரால் ஆளப்படும் பாஞ்சாலத்தின் ஒவ்வொரு அன்னையின் ஆலயத்திலும் திரௌபதி கர்ணனையும் அர்ஜுனனையும் தருமனையும் பீமனையும் இறுதியாக கிருஷ்ணனையும் காண்கிறாள். ஒவ்வொருவரை காணும் போதும் மாயையுக்கும் திரௌபதிக்கும் இடையே நிகழும் அகப்பரிமாற்றங்கள் மட்டுமே தனியொரு நூலாக எழுதத்தக்கவை. திரௌபதியின் மீதான கர்ணனின் காதலை துரியோதனன் உணர்கிறான். பரசுராமரிடம் வில்வேதம் கற்று மீளும் கர்ணன் தன் அனுபவங்களை துரியோதனனிடம் சொல்வது வலி ஏற்படுத்தும் தருணம். ஐந்து கிளிகளை பொறி வில்லால் வீழ்த்தும் போட்டி சுயம்வரத்தில் அமைக்கப்படுகிறது. சொற்கள் இருக்கை நுனிக்கு இழுத்து வர முடியும் என்ற உண்மையை அப்போட்டி மீண்டும் உணர்த்துகிறது. பிராமணர் வரிசையில் அமர்கின்றனர் பாண்டவர்கள். திரௌபதியின் உள்ளம் போலவே ஒவ்வொருவரையும் தூக்கி எறிகிறது அவ்வில். கர்ணனின் இறுதி அம்பு இலக்கை தவற விடும் இடத்தை மனம் ஒப்பவே மறுக்கிறது. கிருஷ்ணன் நான்கு இலக்குகளை வீழ்த்திய பின் மீண்டு வந்து அமர்கிறான். அர்ஜுனன் போட்டியில் வென்று மீண்டும் வெறுமையையே உணர்கிறான்.

துருபதன் மகளை ஐவருக்கும் மணமுடித்து கொடுக்கும் காரணங்கள் நேரடியாக சொல்லப்படவில்லை எனினும் அதன் அரசியல் உட்பொருள் சொல்லப்படுகிறது. திரௌபதி துருவனைக் கண்டு புன்னகைப்பதோடு முடிவடைகிறது பிரயாகை.

மிக நுட்பமான பல தருணங்கள் நிறைந்த நாவல் பிரயாகை. விதுரரை கிருஷ்ணன் மிரட்டி விலக்கிய பின் அவர் அகத்தில் நடக்கும் மோதல்களும் பாண்டவர்களைக் கொல்ல முடிவெடுத்தபின் கௌரவர்களில் ஒருவனான குண்டாசி அடையும் மனப்பிறழ்வும் மிக முக்கிய திருப்பங்களை விளைவிக்கின்றன. நன்மையை ஏற்று நடிக்கும் பாவனையற்றவனாக நன்மைக்கும் தீமைக்கும் நடுவிலேயே நிற்கிறான் கிருஷ்ணன். அவன் மதுராவை மீட்பதும் துவாரகையை அமைப்பதும் பிறர் சொற்களின் வழியே வெளிப்படுகிறது. அறிய முடியாத பேரிருப்பாகவே கிருஷ்ணன் வெளிப்படுகிறான். அவனுடைய நியாயங்களும் இலட்சியங்களும் திகைத்து நிற்க வைக்கின்றன. கானக மக்கள் வெற்றி கொள்ளப்படுவதன் சித்திரமும் பிரயாகையில் வெளிப்படுகிறது. மகாபாரத்தின் மையப்பாத்திரங்களை பிரயாகை விரித்தெடுத்திருப்பதை வாசித்து முடித்த பின்னரே உணர முடிகிறது. கால அளவிலும் பிரயாகை நெடுந்தூரப் பயணமே.

நூல் நான்கு - நீலம்

வியாசபாரதத்தில் கிருஷ்ணன் அறிமுகமாவது இளைஞனாகவே. தன் அத்தையான குந்தியிடம் மகதத்திடமிருந்து மதுராபுரியை மீட்பதற்காக படையுதவி கேட்டு வருகிறான் கிருஷ்ணன். நாம் பரவலாக அறிந்த துடுக்கும் ஞானமும் நிறைந்த இறை அவதாரமாக வியாச பாரதத்தில் கிருஷ்ணன் சித்தரிக்கப்படவில்லை. மகாபாரதம் எழுதப்பட்டு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட பாகவதம் எனும் நூலில் தான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் சித்தரிக்கப்படுகிறது.

ஞானாசிரியனாகவும் பெண்கள் மனங்கவர் கள்வனாகவும் பெரு வீரனாகவும் இறை வடிவமாகவும்  ஓங்கி நிற்கும் பெரும் மானுடக்கனவு கண்ணன். நீலம் அக்கனவினை வண்ணம் கொள்ள வைக்கிறது. ராதையின் பார்வையில் கண்ணனை அள்ளி விரிக்கிறது.

வழிபடுகிறவர்களாக பயில்கிறவர்களாக வசைபாடுகிறவர்களாக தூற்றுகிறவர்களாக வியக்கிறவர்களாக என ஏதோவொரு விதத்தில் நம் அனைவருக்கும் கிருஷ்ணன் அறிமுகமானவனே. பொறாமையையும் வியப்பையும் சினத்தையும் ஒருங்கே தூண்டும் சித்திரம் கிருஷ்ணன். கிருஷ்ணன் குறித்து  நம் வரையறை எதுவாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்று எதிர் கொள்கிறது நீலம். மகாபாரத்தின் மையக்கதை ஓட்டத்தை எவ்விதத்திலும் நீலம் பாதிக்காது. இதுவரை ஆசிரியர் எழுதியவற்றில் வாசிப்பவர்களுக்கு பெரும் அறைகூவல்  நீலமே. குறிப்பிட்ட "கதையையோ" "கருத்தையோ" எதிர்பார்ப்பவர்கள் நுழைய முடியாத படைப்பு. மொழியின் உச்ச சாத்தியங்கள் வெளிப்படும் இப்படைப்பு அனைவருக்குமானதல்ல.

/உலகறிந்து எழுந்தவர் ஒருகுணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ/

இவை நீலத்தின் முதல் வரிகள். அன்னையின் மீது கால் போட்டு உறங்குபவளை எழுப்புகிறது இளந்தென்றல். ராதை மலர்கிறாள். கடம்பின் கிளையோடித்து ஆற்றங்கரையில் நிற்கையில் படகில் செல்லும் இளங்குழந்தையின் கால்களை மட்டும் காண்கிறாள். கருநீல வண்ணனைத் தேடிக் கிளம்புகிறாள்.

தேவகரின் மகள் தேவகியை தன் அமைச்சன் வசுதேவனுக்காக சிறையெடுக்கிறான் கம்சன். அவள் கருவில் உதிக்கும் எட்டாம் மகவு கம்சனைக் கொன்று நிலமாளும் என்கிறாள் வெறியாட்டெழுந்த பெண். எட்டாம் குழந்தைக்கு மணிமுடி சூட்டி அவன் சிரம் கொய்து அரியணை அமர எண்ணி கம்சன் வசுதேவனையும் தேவகியையும் சிறையெடுக்கிறான். யசோதையின் பெண் மகவு பலியாகிறது. சினம் கொண்ட கம்சன் அஷ்டமிரோகிணியில் பிறந்த அத்தனை குழந்தைகளையும் கொல்கிறான். ஆயிரம் குழந்தைகளின் பழி ஏற்று மண் அடைகிறான் கிருஷ்ணன்.

இதுவரை மட்டுமே நேர்கோடான ஒரு சித்திரத்தை பெற முடியும். அதன்பிறகு ஒவ்வொருவர் சொல்லிலும் வளர்கிறான் கிருஷ்ணன். மயிற்பீலியும் குழலும் அவனுக்களிக்கிறாள் ராதை. குழந்தை கொள்ளும் அத்தனை பேரழகுகளையும் அப்பேரழகினைக் கண்டு ராதை கொள்ளும் பெருவழகுகளையும் சொல்கிறது. அத்தனை அன்னையரும் அள்ளிக் கொள்ளும் குழந்தையாகிறான் கண்ணன். ஆயிரம் பெயர் பெறுகிறான். குழந்தையாய் அவன் நிகழ்த்தும் வதங்களும் பேரழகே. பேரன்னையாகி மடிகிறாள் பூதனை.

யசோதை நீர் மருதுகள் குறித்து ராதையிடம் சொல்வது போன்ற மிக நுண்ணிய சித்திரங்களும் நந்தகோபன் நெருக்கமும் விலக்குமாக கண்ணனை அறிவது போன்ற தந்தையின் பேரன்பும் என ராதையின் விழி வழி செல்லாதவையும் அவள் கொண்ட பித்துடனே முட்டி நிற்கின்றன. கோபியரின் ஆடை கவர்ந்து செல்கையில் சினந்து அவனை நீங்குகிறாள் ராதை. அவளை மணந்தவன் அஞ்சுகிறான். காத்திருப்பும் கருத்தழிதலுமாக நகரும் அத்தியாயங்கள் பித்துநிலை நோக்கி நகர்த்துகின்றன. அவன் ஆடலின் விதிகளை அவன் மட்டுமே அறிவானென்று அமைவது வரை திகைத்து நிற்க வைக்கிறது நீலம். அத்தனை அன்னையருக்கும் அவன் குறித்து சொல்ல ஒன்றிருக்கிறது./கனவில் இனித்து நேரில் கசக்கும் கனி/ அந்தணப் பெண்ணான அனகையின் பார்வையில் வேதங்களை முடிவு நோக்கி கொண்டு செல்பவனாக நிற்கிறான். பாணனொருவன் கோவர்த்தனத்தை கோ பலி தடுத்து குடையென்றாக்கி நிற்பவனை சொல்கிறான்.

சொல்லறிந்த அக்ரூரரின் விழிகளில் இசையாய் விரிந்து நிற்கிறான். கம்சனின் இறப்பு கம்சனின் பார்வையிலேயே. கொலையின் பெருங்கருணையில் இறக்கிறான் கம்சன். பிச்சியாகி நிற்கிறாள் ராதை. அவளை சீண்டுகிறான். சினம் கொள்ள வைக்கிறான். அவளை வணங்குகிறான். எண்ணம் இதுவென்று நில்லாமல் தவிக்கிறாள் ராதை. மதுராபுரியின் மன்னனாக அவன் தந்தை வசுதேவன் அமர்கையில் அறமென்னவென்று உணர வைக்கிறான். ராதையின் தங்கையான அனங்கமஞ்சரி தன் பெயர்த்திக்கு ராதையென பெயரிடுகிறாள். அவள் கொடுக்கும் குழலைக் கொண்டு கடம்பின் முன் கிருஷ்ணர் குழலிசைத்து நிற்பதோடு முடிகிறது நீலம். பேரிருப்பாக நிலைக்கிறாள் ராதை.

மீண்டும் வாசித்துப் பார்க்கையில் நான் எழுதியது எனக்கே அபத்தமாகத் தெரிகிறது. வெண்முரசின் நாவல்களை அறிமுகம் செய்வது மட்டுமே இந்த தொடர் கட்டுரைகளின் நோக்கம். நீலம் குறித்து எழுத வேண்டாம் என்றே நினைத்தேன். அது சரி கிடையாது என்ற எண்ணம் தோன்றவே எழுதினேன். மேற்சொன்னவை அனைத்தும் ஒரு பொதுப் புரிதலை அளிப்பதற்கு மட்டுமே. ஆழ்ந்து படிக்க வேண்டிய படைப்பு. சற்றே பிசகினாலும் திகைத்து நிற்க வைத்து தன்னை மூடிக் கொள்ளும் நீலம். படித்தறிவது மட்டுமே சரி. நீச்சல் போல ஆடல் போல நீலம். அனுபவித்தறிவதே முறை. நீலம் ஒரு பேரனுபவம்.