Monday 22 August 2016

நூல் நான்கு - நீலம்

வியாசபாரதத்தில் கிருஷ்ணன் அறிமுகமாவது இளைஞனாகவே. தன் அத்தையான குந்தியிடம் மகதத்திடமிருந்து மதுராபுரியை மீட்பதற்காக படையுதவி கேட்டு வருகிறான் கிருஷ்ணன். நாம் பரவலாக அறிந்த துடுக்கும் ஞானமும் நிறைந்த இறை அவதாரமாக வியாச பாரதத்தில் கிருஷ்ணன் சித்தரிக்கப்படவில்லை. மகாபாரதம் எழுதப்பட்டு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட பாகவதம் எனும் நூலில் தான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் சித்தரிக்கப்படுகிறது.

ஞானாசிரியனாகவும் பெண்கள் மனங்கவர் கள்வனாகவும் பெரு வீரனாகவும் இறை வடிவமாகவும்  ஓங்கி நிற்கும் பெரும் மானுடக்கனவு கண்ணன். நீலம் அக்கனவினை வண்ணம் கொள்ள வைக்கிறது. ராதையின் பார்வையில் கண்ணனை அள்ளி விரிக்கிறது.

வழிபடுகிறவர்களாக பயில்கிறவர்களாக வசைபாடுகிறவர்களாக தூற்றுகிறவர்களாக வியக்கிறவர்களாக என ஏதோவொரு விதத்தில் நம் அனைவருக்கும் கிருஷ்ணன் அறிமுகமானவனே. பொறாமையையும் வியப்பையும் சினத்தையும் ஒருங்கே தூண்டும் சித்திரம் கிருஷ்ணன். கிருஷ்ணன் குறித்து  நம் வரையறை எதுவாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்று எதிர் கொள்கிறது நீலம். மகாபாரத்தின் மையக்கதை ஓட்டத்தை எவ்விதத்திலும் நீலம் பாதிக்காது. இதுவரை ஆசிரியர் எழுதியவற்றில் வாசிப்பவர்களுக்கு பெரும் அறைகூவல்  நீலமே. குறிப்பிட்ட "கதையையோ" "கருத்தையோ" எதிர்பார்ப்பவர்கள் நுழைய முடியாத படைப்பு. மொழியின் உச்ச சாத்தியங்கள் வெளிப்படும் இப்படைப்பு அனைவருக்குமானதல்ல.

/உலகறிந்து எழுந்தவர் ஒருகுணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ/

இவை நீலத்தின் முதல் வரிகள். அன்னையின் மீது கால் போட்டு உறங்குபவளை எழுப்புகிறது இளந்தென்றல். ராதை மலர்கிறாள். கடம்பின் கிளையோடித்து ஆற்றங்கரையில் நிற்கையில் படகில் செல்லும் இளங்குழந்தையின் கால்களை மட்டும் காண்கிறாள். கருநீல வண்ணனைத் தேடிக் கிளம்புகிறாள்.

தேவகரின் மகள் தேவகியை தன் அமைச்சன் வசுதேவனுக்காக சிறையெடுக்கிறான் கம்சன். அவள் கருவில் உதிக்கும் எட்டாம் மகவு கம்சனைக் கொன்று நிலமாளும் என்கிறாள் வெறியாட்டெழுந்த பெண். எட்டாம் குழந்தைக்கு மணிமுடி சூட்டி அவன் சிரம் கொய்து அரியணை அமர எண்ணி கம்சன் வசுதேவனையும் தேவகியையும் சிறையெடுக்கிறான். யசோதையின் பெண் மகவு பலியாகிறது. சினம் கொண்ட கம்சன் அஷ்டமிரோகிணியில் பிறந்த அத்தனை குழந்தைகளையும் கொல்கிறான். ஆயிரம் குழந்தைகளின் பழி ஏற்று மண் அடைகிறான் கிருஷ்ணன்.

இதுவரை மட்டுமே நேர்கோடான ஒரு சித்திரத்தை பெற முடியும். அதன்பிறகு ஒவ்வொருவர் சொல்லிலும் வளர்கிறான் கிருஷ்ணன். மயிற்பீலியும் குழலும் அவனுக்களிக்கிறாள் ராதை. குழந்தை கொள்ளும் அத்தனை பேரழகுகளையும் அப்பேரழகினைக் கண்டு ராதை கொள்ளும் பெருவழகுகளையும் சொல்கிறது. அத்தனை அன்னையரும் அள்ளிக் கொள்ளும் குழந்தையாகிறான் கண்ணன். ஆயிரம் பெயர் பெறுகிறான். குழந்தையாய் அவன் நிகழ்த்தும் வதங்களும் பேரழகே. பேரன்னையாகி மடிகிறாள் பூதனை.

யசோதை நீர் மருதுகள் குறித்து ராதையிடம் சொல்வது போன்ற மிக நுண்ணிய சித்திரங்களும் நந்தகோபன் நெருக்கமும் விலக்குமாக கண்ணனை அறிவது போன்ற தந்தையின் பேரன்பும் என ராதையின் விழி வழி செல்லாதவையும் அவள் கொண்ட பித்துடனே முட்டி நிற்கின்றன. கோபியரின் ஆடை கவர்ந்து செல்கையில் சினந்து அவனை நீங்குகிறாள் ராதை. அவளை மணந்தவன் அஞ்சுகிறான். காத்திருப்பும் கருத்தழிதலுமாக நகரும் அத்தியாயங்கள் பித்துநிலை நோக்கி நகர்த்துகின்றன. அவன் ஆடலின் விதிகளை அவன் மட்டுமே அறிவானென்று அமைவது வரை திகைத்து நிற்க வைக்கிறது நீலம். அத்தனை அன்னையருக்கும் அவன் குறித்து சொல்ல ஒன்றிருக்கிறது./கனவில் இனித்து நேரில் கசக்கும் கனி/ அந்தணப் பெண்ணான அனகையின் பார்வையில் வேதங்களை முடிவு நோக்கி கொண்டு செல்பவனாக நிற்கிறான். பாணனொருவன் கோவர்த்தனத்தை கோ பலி தடுத்து குடையென்றாக்கி நிற்பவனை சொல்கிறான்.

சொல்லறிந்த அக்ரூரரின் விழிகளில் இசையாய் விரிந்து நிற்கிறான். கம்சனின் இறப்பு கம்சனின் பார்வையிலேயே. கொலையின் பெருங்கருணையில் இறக்கிறான் கம்சன். பிச்சியாகி நிற்கிறாள் ராதை. அவளை சீண்டுகிறான். சினம் கொள்ள வைக்கிறான். அவளை வணங்குகிறான். எண்ணம் இதுவென்று நில்லாமல் தவிக்கிறாள் ராதை. மதுராபுரியின் மன்னனாக அவன் தந்தை வசுதேவன் அமர்கையில் அறமென்னவென்று உணர வைக்கிறான். ராதையின் தங்கையான அனங்கமஞ்சரி தன் பெயர்த்திக்கு ராதையென பெயரிடுகிறாள். அவள் கொடுக்கும் குழலைக் கொண்டு கடம்பின் முன் கிருஷ்ணர் குழலிசைத்து நிற்பதோடு முடிகிறது நீலம். பேரிருப்பாக நிலைக்கிறாள் ராதை.

மீண்டும் வாசித்துப் பார்க்கையில் நான் எழுதியது எனக்கே அபத்தமாகத் தெரிகிறது. வெண்முரசின் நாவல்களை அறிமுகம் செய்வது மட்டுமே இந்த தொடர் கட்டுரைகளின் நோக்கம். நீலம் குறித்து எழுத வேண்டாம் என்றே நினைத்தேன். அது சரி கிடையாது என்ற எண்ணம் தோன்றவே எழுதினேன். மேற்சொன்னவை அனைத்தும் ஒரு பொதுப் புரிதலை அளிப்பதற்கு மட்டுமே. ஆழ்ந்து படிக்க வேண்டிய படைப்பு. சற்றே பிசகினாலும் திகைத்து நிற்க வைத்து தன்னை மூடிக் கொள்ளும் நீலம். படித்தறிவது மட்டுமே சரி. நீச்சல் போல ஆடல் போல நீலம். அனுபவித்தறிவதே முறை. நீலம் ஒரு பேரனுபவம்.

No comments:

Post a Comment