Thursday 25 August 2016

கபாலி - என் விமர்சனம்

நாற்பதாண்டுகளுக்கு முன் அலெக்ஸ் ஹெய்லி எழுதிய  "ரூட்ஸ்" அமெரிக்காவில் ஒரு தொலைத்தொடராக (serial) எடுக்கப்பட்டது. ஒரு கருப்பின இளைஞன் பண்ணை அடிமைகளாக ஆப்ரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட தன் மூதாதையர் அடைந்த இன்னல்களை கண்டடைவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். அமெரிக்காவை உலுக்கிய ஒரு தொடராக அது இருந்ததாகவும் அந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் புறப்பட இருந்த விமானங்களின் நேரம் மாற்றப்பட்டதாகவும் ஒரு கருப்பின பாதிரியார் தலைமை வகித்த தேவாலயத்தில் வெள்ளையர்கள் சிரம் தாழ்த்தி தங்கள் மூதாதையர் கருப்பினத்தவர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்புக் கேட்டதாகவும் சொல்வார்கள். ஆங்கிலத் தொலைக்காட்சியான ஹிஸ்டரி டிவி அந்தத் தொடரை இன்னும் சில தினங்களில் இந்திய மொழிகளில் வெளியிட இருக்கிறது. சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு போக்கு அழுத்தம் பெறும் போது அது தொடர்புடைய அனைத்தையும் இணைத்துப் பார்க்க முடியும். ஆங்கில அறிவுடைய இந்தியர்கள் மட்டுமே காணக்கூடிய நேஷனல் ஜியோகிராபிக் டிஸ்கவரி போன்ற சேனல்கள் இந்தியாவின் பிராந்திய மொழிகளிலும் தங்களுக்கான வாய்ப்பிருப்பதை உணர்ந்து இந்திய மொழிகளில் தங்களுடைய சேனல்களை ஒளிபரப்பத் தொடங்கின. அறிவுத்தேடல் ஆங்கிலத்தில் மட்டுமே நிகழ்ந்தாக வேண்டிய அவசியமில்லை என்ற உணர்வே டேவிட் ஆட்டன்பரோவிற்கு இந்தியக் குரலைப் பொருத்த வைத்தது.

ரூட்ஸ் இந்திய மொழிகளில் வெளியாவதும் இந்தியாவின் விளிம்புகளில் இருந்து வலுவான குரல்கள் எழத் தொடங்குவதன் அடையாளமே.

இனி....

எந்திரனுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எதையும் நான் பார்க்கவில்லை. தனிப்பட்ட முறையில் அது ஒரு விலகலும் கூட. மேலு‌ம்  எந்திரனுக்குப் பிறகு வந்த திரைப்படங்கள் எதிலும் வணிகத் திரைப்படங்களுக்கு உரிய குறைந்தபட்ச விறுவிறுப்பு கூட இல்லையென நண்பர்கள் சொன்னார்கள். காலமாற்றத்தை ரஜினிகாந்தும் உணர்ந்திருப்பார். இளம் இயக்குநரான ரஞ்சித்துடன் அவர் கை கோர்த்தது இந்தப் பிண்ணனியை உணர்ந்தே என்பது என் எண்ணம். நரைத்த தாடியுடன் வெளிவந்த ரஜினியின் போஸ்டரை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மீண்டும் இன்னொரு "கேங்ஸ்டர்" திரைப்படம் என்ற எண்ணம் சோர்வளித்தது. படம் வெளியானபோது பார்க்கத் தோன்றவில்லை. நான் வேலை செய்யும் திருத்துறைப்பூண்டி சிறிய நகர் என்பதால் வெளியாகி முப்பது நாட்கள் ஓடியது. சிறு நகரங்களில் முப்பது நாட்கள் என்பது படம் பெரு வெற்றி அடைந்ததற்கு சான்று. ஆனால் மீண்டும் "ரசிகர்களின் வேண்டுதலில்" என்ற முன் வாசகத்துடன் விஜிலா திரையரங்கம் கபாலியை மீண்டும் திரையிட்டது. நண்பரும் சக ஊழியருமான பாலமுருகனும் நானும் கபாலி பார்க்கச் சென்றோம்.

பெரும்பான்மையாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் திரையரங்கில் இருந்தனர். அப்போது தான் ஒரு ரஜினி படத்தை இவ்வளவு குறைவானவர்களோடு அமர்ந்து பார்க்கிறோம் என்பதை உணர்ந்தேன்.

மிக எளிமையான "கேங்ஸ்டர்" கதை. புகழ் வாய்ந்த நடிகரை வைத்துக் கொண்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தான் சொல்ல வந்ததை கொண்டு போய் சேர்க்க முயன்றிருக்கிறார் ரஞ்சித். முதல் காட்சியில் சிறையிலிருந்து வெளியேறுகிறார் ரஜினி. "43" என்ற கேங்ஸ்டர் அணியின் முக்கியப் புள்ளிகள் அறிமுகமாகின்றனர். வன்முறைக்கு இழுத்து வரப்படும் இளைஞர்களை தொடக்கம் முதலே சித்தரித்த வண்ணம் முன் செல்கிறது கதை. வன்முறையிலிருந்து மீட்கப்பட்ட இளைஞர்களுக்கான ஒரு பள்ளியை கபாலியின் தோழரான அமீர் நடத்தி வருகிறார். அங்கிருக்கும் மாணவர்களிடம் தன்னுடைய கதையை சொல்கிறார் ரஜினி. கூலியை உயர்த்திக் கேட்கும் தொழிலாளி என்ற நிலையிலிருந்து மெல்ல மெல்ல மேலுறுகிறார் கபாலி. அவருடைய ஆளுமையில் அவர் மனைவியான குமுதவள்ளியின் தாக்கம் அதிகமிருக்கிறது. பொறாமை வஞ்சகம் துரோகம் என்ற வழக்கமான காரணங்களால் தன் மனைவியை இழந்து சிறை செல்கிறார் கபாலி.

43 அணியின் முக்கியப் புள்ளிகளை கொலை செய்கிறார் கபாலி. கபாலியைக் கொல்ல யோகி என்ற பெண்ணை நியமிக்கிறது 43. யோகி தன் மகளென ரஜினி அறிவதோடு முற்பாதி முடிகிறது. தன் மனைவியைத் தேடி தமிழ்நாட்டிற்கு மகளுடன் பயணிக்கிறார் கபாலி. மனைவியைக் கண்டடைந்து மலேசியா திரும்பும் போது நிலைமை அங்கு மாறியிருக்கிறது. 43 வலுவாக தலை தூக்குகிறது. அதனை கபாலி வெல்வது உச்சம்.

மீண்டும் மீண்டும் நம் திரைப்படங்களில் சோர்வடையச் செய்யும் ஒரு அம்சம் கபாலியிலும் பிரதிபலிக்கிறது. தகவல் குறைபாடு. கூலித் தொழிலாளியாக சித்தரிக்கப்படும் இளவயது கபாலி என்ன வேலை செய்கிறார் என்பதற்கு எந்த சான்றும் படத்தில் இல்லை. ஆண் சட்டை போட்டுக் கொண்டு குமுதவள்ளி வேலை செய்வதாகக் காட்டப்படும் இடம் ஒரு பூங்கா! புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியலை சொல்ல முயன்று அதனையும் முழுமை செய்யாமல் நிறுத்தியிருக்கிறார் ரஞ்சித். வன்முறை இயக்கத்திலிருந்து மீளும் திறனும் படபடப்பும் நிறைந்த ஒரு இளைஞன் சிறு வயதில் தாயாகி மனநலம் பாதிக்கப்படும் பெண் தலைவனின் எண்ணத்தை உணர்ந்து செயல்படுத்தி இறந்து போகும் தினேஷ் என ஆச்சரியப்டுத்தும் வேற்றுமைகளை கபாலி காட்டியிருக்கிறது. ரஜினியும் தன் பிம்பத்தை விடுத்து வெகுவாகவே இறங்கி வந்திருக்கிறார். மனைவியின் பிரிவைத் தாளமுடியாத முதியவராக ரஜினி தத்தளிக்கும் இடங்கள் நம்பகத் தன்மையுடன் அமைந்துள்ளன. வெகு நாட்கள் கழித்து மனைவியை சந்திக்கும் இடத்தில் ரஜினி ராதிகா ஆப்டே இருவரின் நடிப்பும் மிகைப்படுத்தப்படாத இயல்பினாலேயே ரசிக்க வைக்கின்றன.

கபாலியின் மிகப்பெரிய பலமாக நான் கருதுவது வன்முறையையும் வன்முறையாளனயும் எவ்விதத்திலும் இத்திரைப்படம் நியாயப்படுத்தவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இழையோடுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி இருப்பதும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. உச்சகட்டத்தில் கபாலியிடம் வீரசேகரன் பேசுவதும் டோனி லீயிடம் கபாலி  பேசுவதும் தலித் தன்மை உடையதாக படத்தை சித்தரிக்கின்றன. மகளால் காப்பாற்றப்படுவது இளம் பெண் ஒருத்தியிடம் திட்டு வாங்குவது என கேங்ஸ்டருக்கு உரிய தோரணைகளைத் தவிர்த்திருப்பது சிறப்பு.

கபாலியை நிச்சயம் கலைப்படம் என்ற வரிசையில் சேர்க்க முடியாது. இது வணிகத் திரைப்படமே. ஆனால் வணிகத் திரைப்படத்திற்கான எல்லைக் கோட்டினை மீற முயல்கிறது. வணிகத் திரைப்படங்களுக்கு புதிய எல்லைகள் நிர்ணயிக்கப்படுவது தரமான வணிகத் திரைப்படங்களை உருவாக்கும் என்பதால் கபாலி வரவேற்கத்தக்க முயற்சி.

No comments:

Post a Comment