Thursday, 4 August 2016

பெருஞ்சுழி 48

புலரியின் முதற்கதிர் மண்ணை அடைந்தபோது புகிந்தத்தின்  அரண்மனையைச் சூழ்ந்து கூடாரம்  அமைத்திருந்த வன்தோளனின்  படைகளுக்கு  அவர்கள்  சுற்றி வளைக்கப்பட்டிருந்தது புரிந்தது. கணபாரரை வன்தோளன்  பெருமிதத்துடன்  உணர்ந்தான். சவில்யத்தின்  பிரதானப்படை முழுவதையும் புகிந்தத்தின்  கிழக்கில்  விரிந்திருந்த ஆழியை நோக்கி அனுப்பிவிட்டு அங்கிருந்து படைகளின் ஒரு பகுதியை சதுப்புக்காடுகள் வழியாக மேற்கே பொட்டல்  நோக்கி அனுப்பியிருந்தார் கணபாரர்.
ஆதிரை வடக்கிலிருந்து  முக்கூட்டு  நாடுகளின்  படைகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தாள். கழுகு போல் சிறகு விரித்து சவில்யத்தை சூழும்  வியூகம்  அமைத்திருந்தான் வன்தோளன். மூன்று பக்கமும்  நாகங்களால் வளைக்கப்பட்ட  கழுகென நடுவில்  நின்றது வன்தோளனின் படை.
வன்தோளன்  அடிபணிந்தால் அவன் நாடு அவனுக்கு  திருப்பி அளிக்கப்படும்  என சவில்யத்தின்  அமைச்சகம்  தூது அனுப்பியது. தூதுவன்  கோட்டையை  அடைந்த அரை நாழிகை நேரத்தில்  புகிந்தத்தின்  அரண்மனையில்  சுனதபாங்கத்தின்  வெண்ணலை கொடி ஏறியது. செந்நிறமான எரியம்பு எழுந்ததும்  வீரர்களின் ஆர்ப்பரிக்கும் ஒலி மூன்று பக்கங்களில்  இருந்தும்  நெருங்கிக் கொண்டிருந்த சவில்யத்தின்  படைகளில்  தெளிவாகக் கேட்டது. தின்பண்டங்கள்  நோக்கி ஓடும் சிறுவன்  என திடீர்  விரைவு கொண்டன சவில்யத்தின்  படைகள். கோட்டையை  சூழ்ந்து  அமைக்கப்பட்ட எரி அரணை கணபாரர்  எதிர்பார்த்திருக்கவில்லை. மூன்று நாழிகைக்குள் எரியரண் அமைக்கப்பட்டிருந்தது. மூன்றடி ஆழத்தில் இரண்டடி அகலத்தில் அரண்மனையைச் சூழ்ந்து  வட்டமான கடவு தோண்டப்பட்டிருந்தது. உலர் மரங்கள் இலுப்பை எண்ணை ஊற்றி  தயார்  நிலையில்  இருந்தன. சவில்யத்தின்  படைகள் அரண்மனையை நெருங்கும்  வரை எரி அரணை கவனிக்கவில்லை. எரியம்புகள்  பாய்ந்து எரியரணில் நெருப்பு  எழுந்து புகை பரவியபோது விரைந்து நெருங்கிய  புரவிகளின் சீர் குலைந்தது. கோட்டை மதிலில் எழுந்த வன்தோளனின் வில்லாளிகள் நெருக்கமாக  அம்புகளை எய்தனர்.
குதிரைகளின் அலறல்  ஒலியும் வீரர்களின் அலறல் ஒலியும் இணைந்து எழுந்தது. புகை சூழ்ந்த பகுதியிலிருந்து சவில்யத்தின்  வீரர்கள்  எய்த அம்புகள் மதிலில் இருந்தவர்களை  சென்று தொட முடியவில்லை. சவில்யத்தின்  படைகள்  பின் வாங்குவது தெரிந்ததும்  விரிந்து பரவியது வன்தோளனின்  சேனை. நேர் களத்திற்கு சவில்யத்தின்  படைகள்  நகருமாறு செய்தான் வன்தோளன்.
பின் மதியத்தில்  போர் உக்கிரம்  அடைந்தது. சவில்யத்தின்  படை சமநிலை  இழக்காமல்  போரிட்டது. சுனதபாங்கத்தின்  வீரர்கள்  விரைவையே தங்கள்  ஆயுதம்  எனக் கொண்டிருந்தனர். இரு குதிரைகள்  பூட்டிய  விரைவுத் தேரில்  ஆதிரை களத்தின்  எல்லா பக்கங்களையும்  நிறைத்தாள். நடுங்கும்  விழிகளுடன்  அவள் போர் புரிவதை பார்த்திருந்தான் அரிமாதரன். எடை குறைந்த இரு நீளமான  வாட்களை உறுவினாள் ஆதிரை. மழைச்சரடென அவ்வாட்கள் தீண்டிய இடமெங்கும் செந்நீர்  கொப்பளித்தது. மலைகளை மோதும் பெருங்காற்றென மாறினான் வன்தோளன். அவன் கதையில்  அறைபட்டு இறப்பவர்களின்  ஓலம்  அப்பெரும் போர் களத்தில்  தனியே கேட்டது. ஆழியில்  பெய்யும்  மென் மழையின் அமைதியுடன்  கொலை புரிந்தாள்  ஆதிரை.
ஆதிரை கணபாரரை ஓர விழிகளால்  கண்டபோது அவர் பொறுமை இழந்திருப்பது தெரிந்தது. தளபதியின்  கூர் நோக்கும்  படபடப்பும் அப்போதைக்கு அவசியம்  இல்லையென முடிவெடுத்தார். இமையா விழிகளுடன்  இரு கைகளிலும் ஏந்திய கதையுடன்  தேர்தட்டினை விட்டு குதித்தார்  கணபாரர். மார்பில்  பாய்ந்த அம்புகளை ஒடித்து எரிந்தவராய் முக்கூட்டு நாடுகளின்  ஒவ்வொரு  உபதளபதியின் தேரின் சக்கரங்களையும் அடித்து உடைத்தார். மயிர் பற்றி அவர்களை தரையில்  குப்புற இழுத்துப்போட்டு முதுகெலும்பை உடைத்தார். அவர்கள்  அலறும் ஒலியை அவர்களின்  வீரர்கள்  தெளிவாகவே கேட்டனர். ஈரம் சொட்டும்  துணியென உடல் குலைந்த அவர்களை கையால் தூக்கி அவர்கள் வழிநடத்திய வீரர்கள்  நடுவே தூக்கி எறிந்தார். தன் வீரர்களின் உறுதி குலைவதை வன்தோளன்  கண்டான். கதையினை வீசிவிட்டு  மீண்டும் வில்லினை எடுத்தான். பன்மடங்கு விரைவு கூடியிருந்தது  அவன் வில்லில். கணபாரர்  அவன் இலக்கானார். எதிர்பட்ட யாவரும்  வெறும் தடைகளாக மட்டுமே  அவன் கண்ணுக்குத் தெரிந்தனர். விரைவு கூடிய போது புலன்கள்  நுணுக்கம் பெற்றன. பின் வாங்கியது போல் தெரிந்த வன்தோளனின்  படைகள்  முன்னேறின. இறந்த வீரர்களின் மீது தேர்ச்சக்கரங்கள் ஏறி இறங்கியதால் சேற்றுக் குழிகள்  போல் குருதி  வழுக்கியது.
கணபாரரை மண்ணில்  தெறிக்கச் செய்தான்  வன்தோளன். இடைவெளியின்றி  அவர் உடல்  முழுக்க  அம்புகளால்  நிறைத்தான். அத்தனை அம்புகளையும் ஏந்தியவாறே  அவனை நோக்கி  கதை சுழற்றி நெருங்கினார் கணபாரர்.
"கோடி முறை முயன்றாலும் நிலத்தை வெல்ல காட்டினால் முடியாது  மூடனே" என்றவாறு அவன் எய்த அம்பு கணபாரரின்  தோளில்  தைத்தது.
"அன்னையே" என வெறி கொண்டு கூவியவராய் வன்தோளனின் தேரில்  பூட்டியிருந்த  குதிரைகளின்  கால்களை உடைத்தார். அவன் தேரினை உடைத்து  தெறிக்கச்  செய்து அவர் நிமிர்ந்த போது தன் கண்ணெதிரே  ஒரு கதை எழுவதை கண்டார்.
அடுத்த கணம்  முட்டை  உடைவது போல் கணபாரர்  மண்டை சிதறி தரையில்  விழுவதை ஆதிரை கண்டாள்.

No comments:

Post a Comment