Friday 5 August 2016

பெருஞ்சுழி 49

கருமை என்பது முடிவின்மை. மின்னல்களை ஒளித்து வைத்திருக்கும்  மேகங்களில் இளங்கருமை. தலைமுறைகளை விதைத்து வைத்திருக்கும் கருவறையின்  அடர்கருமை. பேரழகை காட்டி நிற்கிறது இவளின் மென்கருமை. நெளியும்  நீள் நாகங்களென சுழல்கின்றன கரங்கள். அசையா நெடுநீள் விழிகளில் அவற்றின்  மேலெழுந்த புருவங்களில் கரும்பளிங்கென மின்னும்  நெற்றியில் நில்லாது வழிகிறது அவளழகு.
மோதிச் சிதறும் சிரங்கள்  வழிந்தொழுகும் வெங்குருதி பிளிறிச் சரியும் களிறுகள் விண் நோக்கி கால் தூக்கி இறக்கும் புரவிகள் அனைத்தையும்  நோக்கும்  அவ்விழிகள்  அக்கணமே அனைத்தையும்  நோக்காது நகர்கின்றன. நடுங்காதவளே நலுங்காதவளே உன் முன் களம் நிற்கவே பிறந்தவன் என்றுணர்கிறேன். புணர்தல் மட்டுமல்ல போரிடுதலும் முழுமையே. வா ஒன்றிணைவோம். பிறிதிலாதாவோம். என் விழிகள் கூர்மை கொள்கின்றன. சீராக எழுந்தமையும் முலைகள்  இதழ் மேல்  பூத்து நிற்கும்  வியர்வை  முத்துக்கள்  சற்றும்  அசையா உதடுகள்  அதரங்களை தொட்டுச் செல்லும்  சுருள் குழல்கள் கருநாகங்களென விரைத்து நெளியும்  நீள் கரங்கள்  மரமென மண் ஊன்றிய பாதங்கள். ஒவ்வொரு  அசைவிலும்  உயிர் பறிக்கிறாய். பெற்று முலையூட்டி வளர்க்கும் அன்னையர் ஆயிரம்  உண்டடி இங்கு. நீ கொன்று குளிர்விக்கிறாய். நாணில் எழும்  சிறு அதிர்வே எதிர் நிற்கும்  உயிரா உனக்கு? 
அன்னையே! அங்கங்கள் ஒவ்வொன்றும்  கூர்மை கொண்டு துடிக்க அவ்விழிகள் சொல்வதென்னடி. தகப்பனை தூக்கச் சொல்லி சிறு கைகள் உயர்த்தும் பேதையின் விழிகள். துள்ளி விளையாடி தாயை துடிக்க வைக்கும்  பெதும்பையின் விழிகள். மலர்ச்சியில் குளிரும்  மங்கையின் விழிகள். அனைத்தையும்  புரக்கும் அன்னையின்  விழிகள். அசையா நீள் விழிகள்! அசையா நீள் விழிகள்! நாகத்தின்  இமையா தீ விழிகள்! உன் விழிகள் திரைச்சீலை. என் வண்ணங்களை  ஊற்றி ஊற்றி வரைந்த பின்னும்  எஞ்சி நிற்கிறது வெண்மை. அனைத்து வண்ணங்களையும் உண்டு மின்னுகிறது உன் கருமை. சிற்றுதட்டின் பூமயிர் பரவலில் விழிகளின் அடியில் துடிக்கும்  சிறு குழந்தையின் ஆர்வத்தில்.
தேவி! போதுமடி. மஞ்சத்தில்  அல்ல களத்தில்  உன்னை காண்பவனே பேறு பெற்றவன். எத்தனை நேரம் என் சிற்றிதயம் தாங்கும் உன் பேரழகை.சிறு மகவாய் என் மடி தவழ்ந்தவள். மஞ்சத்தில்  மணம் பரப்பியவள். பெற்றெடுத்து அமுதூட்டியவள். இறக்கும்  நேரத்தில்  என் கரம் பற்றி கண்ணீர்  உகுத்தவள். எல்லா பிறவிகளிலும் எனைத் தொடர்ந்தவளே. நானென நான்  உணர்ந்ததனைத்தும் உன்னைத்தான். நாளென என்னைச் சூழ்ந்தவளும் நீதான். நீ மென்மழைத்தூரல் தீராப்பெரும்பசி உடல் களைக்கையில் உயிர் கவ்வும்  நல்லுறக்கம் சிந்தை அற்ற நேரத்தில்  சித்தம்  நிறைக்கும்  சிரிப்பு பயில்கையில் எழும் மகிழ்ச்சி  உழைப்பில் எழும்  வியர்வை தித்திப்பாக மனதில்  எஞ்சும்  தேன் கசக்கும்  கொடுநஞ்சு நாகத்தின்  பளபளப்பு மழையில்  முளைத்த மென் மணல் தடம் விழவுகளில் துடிப்பு இறப்புகளில் துயர் இன்மையின் எண்ணம். என்னவளே இத்தனை  ஆயுதங்கள்  வழி நான் தேடியது உன்னைத்தான். இயற்கை  உனக்குள் ஊற்றிய கனிவனைத்தையும் மகவென ஈன்றாய். நீ உனக்குள் வளர்த்த துணிவனைத்தையும் அம்பென கூரென விரைவென என்னுள் செலுத்து.
எனை ஈன்ற பெருங்கருணையே உனை நோக்கி அம்பெய்துகிறேன். அமுதூட்டிய கனிவே என் அம்பு பட்டு வழிகிறது குருதி. உன் உடல் வழியும்  குருதியெல்லாம் என் மகவுகள். உன்னிலிருந்து நான்  பிறப்பிக்காத என் மகவுகள். வீழாது!கனிவு ஒரு நாளும்  வீழாது. கருணை ஒரு நாளும்  வீழாது. அறம் ஒரு நாளும் வீழாது.
இனியவளே! வீழ்த்து! எஞ்சவிடாமல் ஏதுமில்லாமல் எனை வீழ்த்து!மழைத்துளிகள் என என் மார்பில்  தெறிக்கின்றன உன் அம்புகள். இதோ! உன் இதழ் என எனை நோக்கி  வருகிறதொரு பிறைச்சந்திர அம்பு. முத்தம் முத்தம்  என் முழுக்கழுத்திலும் உன் முத்தம்.
தேர்தட்டில்  தெறித்து விழுந்த வன்தோளனின்  சிரத்தை  பார்த்தான் அரிமாதரன். ஆதிரையை நோக்கி  அவன் முகம்  திரும்பியது. அவள் மொத்த உடலிலும்  என்றும்  இல்லாத  கனிவு வழிந்தது. அன்னையின்  முகம்  கண்டு ஒரு கணம்  நெஞ்சம் மலர்ந்தான் அரிமாதரன். அக்கனிவை ஒரு நாள்  கூட தான்  கண்டதில்லை  என்ற எண்ணம்  எழுந்ததும் எல்லா வழிகளிலும்  அக்குழந்தையின்  நெஞ்சம் அணைந்து போனது. அக்கணம்  அவனை  நோக்கித் திரும்பினாள் ஆதிரை. தீச்சுட்டு சுருங்கும்  மலரென அவள் முகம்  கூம்பியது. அரிமாதரன்  உடலில்  பற்றி எரியும்  அருவருப்பினை உணர்ந்தான்.
"ஆழிமாநாட்டின்  பேரரசி  வன்தோளன்  சிரம் கொய்த கொற்றவை  திருநிறைச் செல்வி வெற்றிச் செல்வி ஆதிரையின் புகழ் எங்கும்  நிறைக! அன்னையின்  வீரம் என்றும்  திகழ்க! அறம் ஓங்குக!" என்றெழுந்தது ஒரு குரல்.
பல்லாயிரம்  ஆர்ப்பரிக்கும்  குரல்களுக்குள் தன் கசப்பு காணாமல்  ஆவதை அரிமாதரன்  உணர்ந்தான்.

1 comment:

  1. எத்தனை நேரம் தாங்கும் என் சிற்றிதயம் உன் பேரழகை..அற்புதமான காதல் கசியும் வரிகள், அருமை��

    ReplyDelete