Sunday 31 July 2016

பெருஞ்சுழி 44

ஆயுத சாலையில்  மயங்கிக் கிடந்தான் அரிமாதரன். "தாதையே! அறிக! போரென்பது அழிவு மட்டுமே. எத்தனை  நியாயங்களை  அள்ளிப் போட்டு மூடினாலும் அழித்தெழும் எண்ணம்  மட்டுமே  போர்! அடங்கா வெறி என்பதே போர்! உள்ளுறங்கும் மிருகம் நா சுழற்றி எழுகிறது! கிளர்ந்து விட்ட காமமும்  விடுபட்ட அம்பும் ஒன்றே என்றறிக!" அவன் செவிகளில்  விறலியின்  குரல் கேட்டது. கடலோசை நிறைந்த ஓரிடத்தில்  கல் மண்டபம்  ஒன்றில்  தலை சாய்த்து அமர்ந்திருப்பதாக தன்னை உணர்ந்தான். அதே நேரம்  தன்னை குனிந்து நோக்கும்  ஆதிரையை கண்டான்.
"இளவரசர் நஞ்சளிக்கப்பட்டிருக்கிறார். போர் நெருங்கும்  சமயத்தில்  உங்கள்  உறுதியை குலைக்கவே இச்செயல்  செய்யப்பட்டிருக்கிறது" என யாரோ சொல்வது கேட்டது.  ஆதிரை எழுந்துவிட்டாள்.
"அம்மா அம்மா" என கண்களில்  நீர்  வழிய அவளை அழைத்தான்  அரிமாதரன். "போருடை அணிவித்து அரிமாதரனை ஆயுத சாலைக்கு அழைத்து வாருங்கள். என் தேர் தட்டில் ஒரு பாதுகாப்பான சிற்றிடம் ஒருங்கட்டும். அவன் போரைக் காண வேண்டும். அவனுக்கு  நஞ்சளித்தவன் அறியட்டும்  என் மகன்  களம் காண பிறந்தவன் என" என்றவாறே வெளியே சென்றாள்  ஆதிரை.
"கணபாரர்  இன்னும்  சவில்யம்  நுழையவில்லை  அரசி. வன்தோளன் ஒரு பெரும்  வீச்சில்  சவில்யத்தை கைப்பற்ற நினைக்கிறார். மூன்று திசைகளில்  இருந்தும்  மூன்று  கூட்டு நாடுகளின் படைகளும் நம்மை சூழ்ந்திருக்கின்றன. மேலும்..." என சொல்ல வந்த அமைச்சர்  நிறுத்திக் கொண்டார்.
"தயங்க வேண்டாம். சொல்லுங்கள்  அமைச்சரே" என்றாள் ஆதிரை  கசந்த புன்னகையுடன்.
"மாரதிரனின்  புதல்வர்களை  நாம் இப்போது  விடுவித்தது பெரும்  பிழையாகியிருக்கிறது அரசி. அவர்கள்  தங்கள்  ஒற்றர்களின் வழியே சவில்யத்தின்  படை நிலைகள் குறித்த துல்லியமான  தகவல்களை அறிந்துள்ளனர். கருவிழி கண்டு தைக்கும்  அம்பென வன்தோளனின்  படை நம் படையினரை குலைக்கிறது. தங்கள்  அணுக்கத் தோழி மோதமதி  ஏனோ வாள் கொண்டு தலை அறுத்துக்  கொள்ள நினைத்தார்கள். அவரை மீட்டு மருத்துவ சாலையில்  வைத்திருக்கிறார்கள்"என்றவர் "கருணை கொண்டு வெளியேற்றப்பட்ட தன் புதல்வர்கள்  உங்களுக்கு துரோகம்  இழைத்ததும் பெற்ற பிள்ளையென வளர்த்த அரிமாதரனுக்கு அரண்மனையிலேயே நஞ்சூட்டப்பட்டதும் அவர்களின்  உளநிலையை மிகவு‌ம்  பாதித்திருக்கிறது என எண்ணுகிறேன்" என முடித்தார்.
ஆதிரை  மோதமதியை காணச் சென்றாள்.
விரிந்து கலைந்து கிடந்த கூந்தலுடன்  விழிகளில்  நீர்   வழிய நெஞ்சில் கைகளை கோர்த்துக் கொண்டு கிடந்தாள்  மோதமதி. ஆதிரையை  கண்டதும்  அவள் அழுகை  உச்சம்  தொட்டது. அவள் தலையை வருடிய வண்ணம்  ஆதிரை  மோதமதியின்  அருகே அமர்ந்தாள்.
"ஆதிரை  ஆதிரை என்னை மன்னித்து  விடம்மா. இல்லை. நான்  மன்னிக்கப்படக் கூடாது. இத்தகைய  பிள்ளைகளை பெற்ற என் கருவறையில்  வேல் பாய்ச்சிக்  கொண்டு இறக்கிறேன். என் செல்லம் அரிமாதரனை ஒரு முறை பார்த்தபின் உயிர் விடுகிறேன்" எனச் சொல்லி  மோதமதி  எழ முயல்கையில்  ஆதிரையின்  விழிகளில்  கருணையும்  குழப்பமும்  தீர்ந்து அவள் முகம்  சுடர்ந்தது. தன்னுள்  பரவும்  அச்சத்தை மோதமதி  உணர்ந்தாள். அவள் தலையை வருடிக் கொண்டிருந்த ஆதிரையின்  கை சட்டென்று  நின்றது. உச்சி மயிர் பற்றி மோதமதியை தரையில்  வீசி எறிந்தாள்  ஆதிரை.
"உன் விழிகளில்  மின்னிய கனவுகளை அறியாதவள் என எண்ணியிருந்தாயா என்னை? நம் படை நிலைகள்  குறித்து தகவல்கள்  சுனதபாங்கம் சென்றது உன் புதல்வர்கள்  வழியே அல்ல உன் வழியே. மோதமதி  உன்னால்  உயர்வானவற்றை எண்ணவே முடியாதென நானறிவேன். உன்னை நான்  சிறை கொண்டிருக்கிறேன்  என எண்ணி என்னினும்  உயர்ந்தவனாக நீ எண்ணும்  உன் தமையனின் புதல்வனை கொண்டு என்னை வீழ்த்தலாம் என நினைத்தாய். ஒருவேளை  அது நடந்திருந்தால்  நீ அவனிடம்  அடிமையாய் வாழ நேர்ந்திருக்கும். அடிமையாய் இருக்க உன் மனம்  விழைகிறது. முதலில்  உன் தந்தை அகீதர்  பின் உன் தமையன் விகந்தர் அதன்பின்  உன் கணவன்  மாரதிரன். இப்போது  உன் மருகன் வன்தோளன். சுனதபாங்கத்தின்  இளவரசியாக சவில்யத்தின்  அரசியாக ஒரு நொடி கூட நீ உன்னை உணரவில்லை. நீ அறிந்த சவில்யத்தின்  படை நிலைகள் என்னால்  உருவாக்கி அளிக்கப்பட்டது. அச்சித்திரம் பொய்யென வன்தோளன்  உணரும்  போது  சவில்யத்தின்  படைகள் முழுமையாக  களம் இறங்கியிருக்கும். அரிமாதரனுக்கு  நஞ்சூட்டியதும் நீ தான். அவன் பிழைத்ததும் என்னிடமிருந்து  தப்பவே உயிர் நீக்கம்  செய்ய  எண்ணி இருக்கிறாய். பேரரசி  நீங்கள்  அப்படி  எளிமையாக இறந்துவிட முடியாது. உன்னுடைய  எளிய வஞ்சத்தால் இறந்து கொண்டிருக்கும்  உயிர்களை நீ காண வேண்டும். உன் மருகன்  உன்னை ஒரு பொருட்டென்றே கொள்ளவில்லை  என்பதை நீ அறிந்தாக வேண்டும். வன்தோளன்  எனும்  பெரு வீரனை உன் வஞ்சத்தால்  என் போர்க்களம்  நோக்கித் திருப்பிவிட்டாய். களம் நின்று  முடிவெடுக்கும்  ஆழிமாநாட்டில் எஞ்சப் போவது ஆதிரையா வன்தோளனா என. புறப்படு உள்ளுறங்கும்  மிருகங்களை எழுப்பி விட்டாயல்லவா? விளைவுகளை வந்து பார்" என்றவள்  வாசலில்  தலை குனிந்து  நின்ற வீரனை நோக்கி "யானைச்சங்கிலியால் இவள் உடலை பிணைத்து என் தேர் தட்டில்  போடு" என்றவாறே வெளியே சென்றாள்.
மூன்று  வீரர்கள்  சேர்ந்து  தூக்கி வரும்  யானைச் சங்கிலியை வெறித்தவாறே அமர்ந்திருந்தாள் மோதமதி.

பெருஞ்சுழி 43

எண்பது  வயதிருக்கும்  என எண்ணத் தக்க அந்த முதியவனுக்கு உண்மையில்  நூறு வயது கடந்திருந்தது. இளமையில்  பெரு வீரனாக இருந்தமைக்கான தடங்கள்  அவன் உடலில்  அழிந்து கொண்டிருந்தன. மதிழ்யம்  எனப் பெயர் கொண்ட ஆழிமாநாட்டின்  தென்னெல்லை தேசத்தை அவன்  அடைந்து மூன்று இரவுகள் கடந்திருந்தன. அன்னையின்  தாலாட்டை நோக்கி நகரும்  மகவென ஆழியை நோக்கி நடந்து கொண்டிருந்தான் முதியவன். கால்கள்  பின்னிட்டுத் தளர்ந்தன. சூரியனின்  இளங்கதிர்களே அவனை சுட்டெரிக்க  போதும்  என்றிருந்தது. ஆர்த்தெழும் கடலோசை கேட்கத் தொடங்கிய போது ஒரு மண்டபத்தை அடைந்தான்  முதியவன். ஏக்கம் நிறைந்த விழிகளுடன்  அவனை வெறித்து நோக்கின சுனதனின் விழிகளில். நிமிர்ந்த  உடலுடன்  எதிரே நின்றிருந்தாள் ஆதிரை.
பாணரும் விறலியருமாக வந்த சிறு குழு மண்டப நிழலில்  அமர்ந்தது. இளம் விறலியின் திறந்த தோள்களை நோக்கி தன் கண்களை  திருப்பினான் முதியவன். 'உப் உப்' எனச் சொல்லி பெரிய விழிகளால்  அவனை நோக்கிச்  சிரித்தது விறலியின் தோளில்  கிடந்த குழந்தை. அன்னையின்  முதுகுப்பின்னே அமர்ந்திருக்கும் முதியவனை நோக்கி கை நீட்டியது குழந்தை. உப்பு மணம் கொண்ட கடற்காற்று  தொண்டையை வறண்டு போகச் செய்தது. கால்களை  பற்றியிருக்கும் அன்னையின்  கரங்களை  விலக்கி முதியவனை ஓட எத்தனித்து முடியாததால் அன்னையை அடிக்கத் தொடங்கியது.
"எனக்கென வந்து தொலைந்தது பார்! சவமே! உன் அப்பன் தான்  அடிக்கிறான் என்றால் ஒரு வயது முடிவதற்குள் நீயும்  என்னை அடித்தே கொன்று விடு" என்று திட்டிவிட்டு மடியில்  குழந்தையை மடியில்  எடுத்துப் போட்டுக் கொண்டாள். புரியாது வெறித்த விழிகளால் அன்னையை நோக்கியது குழந்தை. பின் நெஞ்சதிர்ந்து அழத் தொடங்கியது. "ரோ ரோ ரோ யாரு யாருடா என் தங்கத்தை அடித்தது. இல்ல இல்ல அழக்கூடாது அழக்கூடாது" என சமாதானப்படுத்தத் தொடங்கினாள் அன்னை.
"தண்ணீர்" எனக் கேட்டவாறே தன் பின்னே மண்டபத்திலிருந்து சரிந்து விழும் முதியவனை அப்போது தான்  கண்டாள் விறலி. மற்றவர்களும்  கண்டு விடவே மீண்டும்  முதியவனை மண்டபத்தில்  தூக்கி அமர வைத்தனர். அவர்கள்  மொழி முதியவனுக்கு  புரியவில்லை. விழித்த போது போர்த்தப்பட்ட தன் உடலுக்குள் தான்  உயிரோடிருப்பதை முதியவன் அறிந்தான். மது அருந்திக் கொண்டிருந்த பாணர்களும் விறலியரும் போதையின் உச்சத்தில்  அடித்துக் கொண்டும்  வசை பொழிந்து கொண்டும்  கூவிச் சிரித்துக் கொண்டும்  விளையாடியவாறு இருந்தனர். சில கைக்குழந்தைகள் காரணம்  புரியாமல்  கைகளை கொட்டிக் கொண்டு  சிரித்தன. முதியவனின் விழிகளில் எதையோ நினைத்து கண்ணீர்  வழிந்தது. அக்கண்ணீர் சில  கணங்களில்  அவனை சூழ்ந்திருந்த அனைத்தையும்  கரைத்தழித்தது. விசும்பலென தொடங்கிய  அழுகை ஓலமெனப் பெருகியது. விரும்பிய பொருள்  பிடுங்கப்பட்ட குழந்தை போல அவன் அழுதான். மீட்டுக் கொள்ள முடியாத அதிர்ச்சியே அழுகை. அழுந்தோரும் மீள்கிறோம் என்றொரு எண்ணம்  அப்போதும் அவன் ஆழத்தில்  எழுந்தது. முதலில்  தயங்கி நின்ற விறலியரில் ஒருத்தி அவன் அழுகை உச்சம் தொடவே தாளாது எழுந்து சென்று அணைத்துக் கொண்டாள். நீர்பெருக்கில் சிக்கிய உலர்மரமென அவளை அவன் பற்றிக் கொண்டான். ஆறடி உடல் கொண்ட குழந்தையை அணைத்திருப்பாதாக அவள் உணர்ந்தாள். தன் மகவை அணைத்திருக்கும் போது  எழும் ஊற்றெடுப்பு தன்னுள் நிகழ்வதை அவள் உணர்ந்தாள்.
"அய்யனே! அழாதே! இல்லை  அழு முழுமையாக  அழுது விடு! எத்துயரெனினும் இவ்வணைப்பு உன்னுடன்  இருக்குமென எண்ணிக் கொள். நீ குழந்தையெனில் உன்னை அள்ளி முலை சேர்த்திருப்பேன். ஆணெனில் என்னுடலுடன் உன்னுடலை இணைத்துக் கொண்டிருப்பேன். நீ என் தாதை! ஏது செய்வேன்! தாதையே உன் துயர் ஏதென நாங்கள்  அறியோம். நோய் கண்டு மருந்து சொல்ல நாங்கள்  மருத்துவர் அல்ல. பாணர்கள். நோயறியாது நோய் மூலம் தீர்க்கும்  எங்கள்  பாடல் என்கின்றனர் கேட்போர். மதிழ்யத்தின் அரசன் செவிகளில்  முதலில்  ஒலிக்க வேண்டுமென்றே இப்பாடலை இயற்றி பல காத தூரம்  நடந்தோம். என் தாதையே இன்று அறிகிறேன். அவன் இதனை முதலில்  பெற தகுதி அற்றவன். உன்னிடம்  வைக்கிறோம். உன் குன்றாப் பெருந்துயரை எங்கள்  அழியா சொற்கள்  நீக்கி விட முயலும். முயன்று முயன்று ஆயிரமாயிரம்  ஆண்டுகளாய் தோற்றுக் கொண்டிருக்கின்றன எங்கள்  சொற்கள். இருந்தும்  நாங்கள் முயல்கிறோம். நிழலை பிடிக்க ஓடும்  உடலென உலகின் துயர் பின்னே ஓடுகின்றன எங்கள்  சொற்கள். பாணர்களே! விறலியர்களே! எழட்டும்  நம் கிணைகளும் துடிளும்! தாதையின் தூய துயர் போக்க" என்றவள் சொன்ன பின்னே தன் சொற்களை எண்ணினாள். ஏது சொன்னோம் என அறியாதவளாய் விழி திருப்பினாள். அவளெதிரே முது விறலி கண்களில்  கண்ணீர்  வழிய  நின்றிருந்தாள்.
அழுகை குறைந்து விம்மல்கள் அடங்கி உடல் தளர்ந்து பாடலை கேட்கத் தொடங்கினான் அரிமாதரன். விறலியின்  குழந்தை அவன் மடியில்  இருந்தது.

Saturday 30 July 2016

இரண்டாம் இடம் - எம்.டி.வாசுதேவன் நாயர்

மகாபாரதத்தில்  இடம் பெற்றிருக்கும்  ஒரு தொன்மத்தையாவது ஒரு பெயரையாவது அறியாத ஒருவர் நம்மிடம்  இருப்பதற்கான வாய்ப்பு  மிகக் குறைவு. நாமே அறியாமல்  மகாபாரதம்  நம்முடன்  பயணித்துக்  கொண்டே இருக்கிறது  நான்காயிரம்  ஆண்டுகளாக. தொலைக்காட்சிகளின் பரவலாக்கத்திற்கு பிறகு மகாபாரத்தை எண்பதுகளின் இளம் தலைமுறை நீள் தொலைத்தொடர்கள் (Mega serial) வழியாகவே அறியத் தொடங்கியது. தொலைத்தொடர்கள்  மிகத் தீவிரமான  விவாதங்களும் இடைவெளிகளும் நிறைந்த மகாபாரத்தை  தன் வழியே அனுமதிக்க முடியாது. பெரும்  பொருட்செலவில் காவிய நாயகர்கள் பெரும்  மக்கள் திரளை சென்றடையும்  போது அவர்களின்  அத்தனை  கொந்தளிப்புகளையும் மனக்குழப்பங்களையும் அள்ளி வைக்க முடியாது. எனவே  மகாபாரத்தை  ஒட்டி எடுக்கப்பட்ட தொலைத்தொடர்கள்  ஒற்றைப்படையான "நல்லவன்" "கெட்டவன்" சித்திரத்தையே கொண்டிருக்கும். அப்படிப்பட்ட  சித்திரங்களை  உருவாக்குவதன் வழியாக  தர்மனென்றால் நீதி கர்ணன்  என்றால் கொடை அர்ஜுனன் என்றால் வீரம் போன்ற "ஒரு வார்த்தை" விழுமியங்கள்  பரவலாகின. அந்த "விழுமியங்களை" கேள்விக்குட்படுத்தும் எதுவும்  தவறே என எண்ணத் தலைப்பட்டனர் பெரும்பான்மையினர்.

அதே நேரம்  மகாபாரதம்  இன்றைய சூழலில் இந்திய மொழிகள் பலவற்றில்  மொழியாக்கமும் மறு ஆக்கமும்  செய்யப்பட்டது. கிசாரிமோகன் கங்குலியின் ஆங்கில மொழியாக்கம் இந்தியாவைக் கடந்தும்  மகாபாரதம் வாசிக்கப்படுவதற்கு வழி வகுத்தது. பல்வேறு  வழிகளில்  விரித்தெடுக்கக் கூடிய இடைவெளிகளையும் மௌனங்களையும் தன்னுள்  கொண்ட படைப்பு மகாபாரதம்.

எம்.டி.வாசுதேவன் நாயரின் இரண்டாம்  இடம்  ஒரு மலையாள  நாவல். 1983-ல் வெளிவந்தது. தமிழில்  குறிஞ்சி வேலனின் மொழிபெயர்ப்பாக சாகித்திய அகாடமி  வெளியிட்டது. பாண்டவர்கள் ஆட்சியைத் துறந்து மகாபிரஸ்தானம் எனும்  வனம் புகுதலை மேற்கொள்ளும்  சித்தரிப்புடன் தொடங்குகிறது இரண்டாம் இடம். திரும்பி நோக்கக் கூடாது  என்ற நெறியுடன் அவர்கள்  மலை ஏறுகிறார்கள். திரௌபதி  விழுந்து விடுகிறாள். பீமன்  திரும்பி வந்து அவளை நோக்கி நிற்கிறான். அக்காட்சியை தொடக்கமாக கொண்டு பல்வேறு  கேளிக்கை  கதைகளின்  வழியாக  அறிமுகம்  செய்யப்பட்ட பீமனை கதை சொல்லியாகக் கொண்டு இறுதிவரை கருணையும்  கொந்தளிப்பும் கொண்ட ஒரு "எளிய மனிதனாக" அவனை நிறுத்தி மகாபாரத்தை விரித்தெடுக்கும்  முயற்சி  இரண்டாம்  இடம்.

மகாபாரதத்தில்  இடம்பெறும்  தொன்மங்களை முற்றாகத் தவிர்த்து ஒரு கறாரான  நவீனத்துவ பாணியில்  நகரும்  படைப்பு. குந்தியாலும் பின்னர்  திரௌபதியாலும் பீமன் அலைகழிக்கப்படுவதை அவர்களின்  வழியாக  தன் முழுமையை கண்டு கொள்வதை விவரிக்கிறது. சிறு வயது முதலே அர்ஜுனனுக்கு  கிடைக்கும் புகழும்  பெருமையும்  தன் செயல்களுக்கு கிடைக்காததை எண்ணி வருந்தியும் கௌரவர்களால்  அவமானப்படுத்தப்பட்டும் வளர்கிறான் பீமன். துரியோதனன்  அன்புடன்  அழைத்து நஞ்சளித்த பின் நாகர்களிடமிருந்து மீண்டு வரும்  பீமன் இன்னொருவனாக இருக்கிறான். எதிரியின்  மீது இரக்கம்  அற்றவனாக மாறுகிறான்.

அரங்கேற்ற நிகழ்வில்  அவன் விற்திறனை யாரும்  வியக்காதது கண்டு வருந்துகிறான். கர்ணன்  மேல்  வெறுப்பு  கொண்டவன்  எனினும்  குதிரைச்சூதன் என அவன் இகழப்படும் போது அவனுக்காகவும் வருந்துகிறான். அவன் விருப்பங்கள்  புறக்கணிக்கப்படுகின்றன. கருவுற்றிருக்கும் முதல் மனைவி இடும்பியை காட்டில் விட்டு வெளியேறுகிறான். பகனைக் கொல்கிறான். திரௌபதியின் சுயம்வரத்திற்கு  பாஞ்சாலம் செல்கிறான். பீமனின் பார்வையில்  விரியும்  யுதிஷ்டிரனின் சித்திரம் வேறு வகையானது. பயமும்  குழப்பமும்  இச்சையும்  கொண்டவனாக  பீமன் யுதிஷ்டிரனை காண்கிறான். திரௌபதியை ஐவர்  மணங்கொள்வதும் யுதிஷ்டிரனின் இச்சையால் என்றே எண்ணுகிறான்.

ஜராசந்தனை கொன்றதை திரௌபதியிடம் பீமன் விவரிப்பதாக கொண்டு செல்கிறார்  ஆசிரியர்.  அதன் பிறகான கூடலை அவன் விரும்புகிறான். பீமன்  அமைதியாக  ஏற்றுக்  கொள்ள வேண்டியவனாகவே இருக்கிறான். தன் முதல் கடோத்கஜனை நெருங்கவும் விலகவும் முடியாமல் தவிக்கிறான்.

"இக்களத்தில்  இல்லையெனில்  கடோத்கஜனை  நாமே கொள்ள வேண்டியிருந்திருக்கும்" என கடோத்கஜன் கொல்லப்பட்ட பின் கிருஷ்ணன்  சொல்வதைக் கேட்டு அமைதியாக  வெளியேறுகிறான். இறுதிவரை தன்னை உதாசீனம்  செய்தாலும்  குந்தியையும் திரௌபதியையும் அவனால்  வெறுக்க முடிவதே இல்லை.

வாயுதேவனை தந்தையென நம்பி அவனடைந்த பலமனைத்தும் இழந்து போகும்  தருணத்துடன் முடிகிறது  இரண்டாம் இடம். பேராற்றல்  மிக்கவனாகவும் பாண்டவர்களின் முக்கிய  எதிரிகளை நேற் போரில்  கொன்றவனாகவும் உடல் வலுவன்றி வேறெந்த உத்திகளையும் பயன்படுத்தாதவனாகவும் காட்சிப்படுத்தப்படுகிறான் பீமன். பல இடங்களில்  பீமனை  மௌனம்  காக்க வைப்பதன் வழியாகவே அவனை மேலு‌ம்  நெருங்கி உணர வைக்கிறார் ஆசிரியர். திரௌபதிக்காக மலையுச்சியில்  குடிலமைக்கும் பீமன்  அது நிறைவேறாத போது என்ன மனநிலையில்  இருந்திருப்பான் என்பதும்  கர்ணன்  தன் மூத்த சகோதரன்  என பீமன்  மட்டும்  அறிந்து அமைதி காப்பதும்  என மௌனங்கள் வழியாகவே பீமனை உரையாட வைக்கிறார்  ஆசிரியர்.

கிருஷ்ணன்  குறித்து மிகக் குறைவாக சொல்லியிருப்பதும் கௌரவர்களின் தரப்பை முழுமையான  நிராகரிப்பதும் பீமன்  பார்வையில்  கதை நகர்வதால் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. இருந்தும்  சில இடங்களில்  இன்றைய  சமூக ஒழுக்கக் கூறுகளை அன்றைய வாழ்வியலில்  போட்டுப்பார்ப்பது சற்றே நெருடுகிறது.

வெண்முரசின்   மிக விரிவான நாவல் வரிசைக்குள் நுழைய விரும்புகிறவர்கள் விரைவாகவும் எளிமையான நடையிலும்  சொல்லப்பட்டிருக்கும்  இரண்டாம்  இடம் என்ற இந்நாவலை ஒரு முறை வாசிப்பது நன்றே.

Friday 29 July 2016

பெருஞ்சுழி 42

வெங்காற்று வறண்ட மதீமத்தை அழித்து எழுதத் தொடங்கியது. ஆதிரையைக் கூடியவனும் அவன் மேல் விழுந்த பன்றியும் மணலால் உண்ணப்படுவது போல்  மறைந்து கொண்டிருந்தனர். ஆதிரை நடந்தாள். விரிந்த கூந்தலும் வெறி மின்னும்  விழிகளுமான ஆதிபுரம்  நோக்கி நடந்தாள். எதிர் நின்று வரவேற்றார்  ஆதிபுரத்தின் தலைவர்.
"என்னைக் கூடியவன் இறந்தான்" என்றாள் சிவந்த விழிகளில்  கனல் தெறிக்க.
"கருமேனியன் கைக்குழந்தையின் இதழ் சிரிப்புடையோன் வலுத்து விரிந்த மார்புடையோன் காட்டின் அந்தரங்க மணம் பரவிய உடலுடையோன் என் வழியாகவே பெண்ணை அறிந்தவன் இறந்தான். துள்ளி ஓட நினைத்த கரும்பன்றியை குத்திய எடை மிகுந்த ஈட்டி ஒன்று  என்னவனின் கழுத்துடைத்து தொண்டை முழை வழியே வெளியேறியது. அவன் இறந்தான். என்றென்றைக்குமாக இல்லாமல்  ஆனான். ஏன்? எட்டு நாழிகை  நேரம்  மட்டுமே  எனக்கென வாழ்வு வகுக்கப்பட்டுள்ளதா?" என தணியாமல்  கேட்டாள் ஆதிரை.
"ஆணையிடு தாயே! எய்தவனின் உடல் கிழித்து உள் அள்ளி உன் காலடியில் எறிகிறேன். எழட்டும்  நம் படை" என்றவாறே  ஆதிரை  முன் கை கூப்பி நின்றான்  முதிர்ந்த இளைஞன் ஒருவன்.
அதுவரை  மௌனம்  காத்த ஆதிபுரத்தின் தலைவர்  தலை நிமிர்ந்தார். "இறந்தவன் என் மகன்  சுனதன். சுனதரைப் போலவே வாழ்வினை வகுத்துக்  கொண்டவன். இறையினால் இறப்பான் என்றெண்ணியே அவனை மறந்திருந்தேன். அவனை நினைத்து என்னுள்  நிறைவு மட்டும்  ஊறியிருந்தது. முப்பதாண்டுகள் வாழ்ந்தவனை ஆதிபுரம்  முழுமையாகவே மறந்திருக்கிறது. இதுவே அவன் பெற்ற பேறென எண்ணிக் கொள்கிறேன். பழுத்த இலை மரம் நீங்குவது போல் என் மகன்  மண் நீங்கியிருக்கிறான்" எனும்  போது நிதானமாக ஒலித்துக்  கொண்டிருந்த அவர் குரல் ஓலமானது "இரும்பினால் அவன் இறந்தான்  என்பதை ஒப்ப மறுக்கிறதே என் அகம். இல்லை. அவன் முழுதாய்  இறக்கவில்லை. என்னுள்  என்றும்  எஞ்சியிருப்பான் என் சுனதன்" என்றவர் மயங்கி  மண்ணில்  விழுந்தார்.
ஆதிரையிடம்  ஆணையிடச் சொன்ன  இளைஞன் மீண்டும்  அவள் முன் வந்து நின்றான்.
"எதை நோக்கி ஆணையிடச் சொல்கிறாய்? சுனத வனம்  நோக்கி முதலில்  வந்த மாசறியான்  மண்ணின்  கொடுமைகள்  தாழாமல் வனம் அடைந்தவர். அங்கே தொடங்கியது நம் செயலின்மை. வனம்  நீங்கியது சுனதர் மட்டுமே. நாம் வாழவே தன் வாழ்வை அழித்துக் கொண்டவர் சுனதர். ஆனால்  நாம் நிலத்தைக் காணாமல்  இங்கு நிலை பெற்று  வாழ்வதாய் எண்ணிக் கொண்டிருக்கிறோம். என்னவன் நம் அனைவரிலும் தூயோன். அவனைக் கொன்றது நிலத்தின்  நேர் அறங்களில் ஒன்றே. உங்களை  மனிதர்கள்  என்றே நிலம்  இன்று ஏற்காது. உங்கள்  மேல்  வெறுப்புமிழும் உங்களை வதைக்கும்  வதைத்து முன்னேறும்  அதன்பின்  உங்களிடம்  எஞ்சியிருக்கும்  இறுதி நம்பிக்கையும்  தகர்ந்து  அழியும்  நோக்கில் உங்களிடம்  கருணை காட்டும். நிலத்தின் மறத்தினை கானகத்தின் அறம் எதிர்கொள்ள முடியாது. ஒன்று திரள எதிர்த்தடிக்க  நீங்கள்  கற்கிறீர்கள். ஆனால்  உங்களை உயர்வென நீங்களும்  தாழ்வென அவர்களும் எண்ணும்  வரை மீட்பென்பதே கிடையாது. மலை விட்டிறங்கும் காட்டாற்றின் வேகத்துடன் நிலத்தில் அணைவது மட்டுமே  உங்கள்  முன்னிருக்கும் வழி. முதிர்ந்து கருத்த நஞ்சொன்று உண்டு உங்கள்  உடலில். வீரமென்றும் பொறுத்தல் என்றும்  உங்களுள் நடிப்பது அந்நஞ்சே. சுனதனுக்காக அல்ல. சுமதனிக்காக சுகத்யைக்காக ஆதிரைக்காக நான் எழுகிறேன். நிலத்தில்  எத்தனை  கீழ்மைகள்  நிகழ்ந்தாலும் இயங்குவதாலேயே அது மேலானது. உங்கள்  எண்ணங்கள்  எவ்வளவு  மேன்மை கொண்டிருந்தாலும் செயலின்மையாலே நீங்கள்  கீழானவர்கள். அத்தனை கீழ்மைகளையும் நின்றழிக்கும் நெருப்பென என்னை அறிந்தவன் என்னுள்  இருக்கிறான்" என்றவள் மீண்டும்  அவ்விளைஞனை நோக்கி "நான்  ஆணையிடுகிறேன். ஆழிமாநாடு  சுனதனை அறிய. நான்  ஆணையிடுகிறேன்  ஆழிமாநாடு  பேரன்னை ஆதிரையை வணங்க. நான்  ஆணையிடுகிறேன்  என் துயரை இந்நிலம்  அறிய. முடியுமா?  முடியுமா?" என எரிவிழியுடன் அவனை நோக்கி நகர்ந்தாள்  ஆதிரை.
அவன் அஞ்சவில்லை. பின்னகரவிவ்லை. திடமான  குரலில் "அன்னையே! பிறந்தது முதல்  நிறைவென எதையும்  உணராமல்  வளர்ந்தவன் நான். ஆதிபுரத்தில்  உள்ளும் புறமும்  என்னை வெறுக்காதவர் இல்லை. இங்கிருக்கும்  ஒருவராலும்  என்னை விரும்ப முடியாது. இவர்களினும்  உடல் வலு மிகுந்தவன் என்பதாலேயே இவர்கள்  என்னை வெறுத்தனர். என் சொற்கள்  ஆணையாக மட்டுமே  இவர்கள்  முன் எழுந்தன. முதல் முறையாக  உன் முன் என் சிரம் பணிந்தது. உன் மீது  அம்பெய்தவன்  மகோதவன்  அல்ல. நானே. முதலம்பு உன்னை தீண்டிய பிறகே அறிந்தேன்  என் கை உயிர் பறிக்கும்  அம்பை எடுக்கவில்லை  என. என் ஆழம் அன்றே அறிந்து விட்டது உன்னை. என்  அன்னையை. இப்போது  இங்கிருக்கும்  அத்தனை  அன்னையரும்  என்னை சிறுமகவென அள்ளித் தூக்கி முலையூட்ட விழைகின்றனர். அத்தனை தந்தையரும் என்னை மார்போடு இறுக்கிக் கொள்ள விழைகின்றனர். தன்னுள் தாய்மையை உணராத ஆண் வெறும்  ஆயுதம்  மட்டுமே. தாய்மை என்பதென்ன? ஒரு தவிப்பு. எதையும்  தனித்து விடாது தன்னுடன் இணைத்துக்  கொள்ளும்  கனிவு. துயர் துடைக்க  எழும்  பேரன்பு. அத்தவிப்பினை அக்கனிவினை பேரன்பினை என்னுள்  உணர்ந்தேன். இன்றுரைக்கிறேன். உன் சொல் தீண்டும்  இடத்தில்  இந்த கணபாரனின்  வில் தீண்டும். உன் மொழி படும்  இடத்தில்  என் மழு எழும். உன் விழி காட்டும்  எல்லையை என் புரவி வெல்லும். உன் சித்தத்தில்  எழும் நெருப்பை என் சிரம்  ஏற்கும்" என்றான்.
மௌனம்  கணத்தது ஆதிபுரத்தில். ஆதிரை மென்மையாக சிரித்தாள். குளிர் காற்றென அச்சிரிப்பு மக்களிடையே  சிலிர்த்துக் கிளம்பியது. கண்களில்  நீர்  வழிய வெண்பற்கள் வெளித் தெரிய வெடித்துச் சிரித்தாள்  ஆதிரை. எதிரே நின்ற கணபாரனும் சிரித்தான். எரி துளிபட்ட உலர் காடென கணத்துப் பரவியது அச்சிரிப்பு.
அவையீரே! அறிக! அன்னையின்  சிரிப்பு துயரின் உச்சத்தில்  எழுந்தது. அது இன்னும்  அணையவில்லை. பிரமித்த விழிகளுடன்  விகந்தரும்  கணபாரரும்  பாணனை பார்த்து  அமர்ந்திருந்தனர்.

Thursday 28 July 2016

பெருஞ்சுழி 41

சகந்தர்  விவாதங்கள்  முடிந்து இறுதியாக  எழுந்தார்.அவை அவர் கூற்றினைக் கேட்க முற்றமைதி  கொண்டு நிலைகொண்டது.
"சுனத சாசனம் மண் நிகழ்ந்த ஒரு பேரற்புதம் என அவையோர் பலர் உரைத்தனர். அத்தகைய  வார்த்தைகளை நான் பயன்படுத்துவதில்லையெனினும் அவர்கள்  கூற்றினை  நான்  மறுக்கவுமில்லை. ஈராயிரம்  ஆண்டுகள்  கடந்த மிகத் தொன்மையான நூல்  சுனத சாசனம். தன் உடல் வழியே நிலங்களை  அறிந்ந சுனதனின்  தெளிந்த சொற்களை கூழாங்கற்கள் மத்தியில்  வைரமென என் அகம் கண்டுகொள்கிறது. சுனத  சாசனம்  முழுவதுமாக சுனதனால் இயற்றப்படவில்லை. ஆதிரையும்  சுனத சாசனத்தை  முழுமை கொள்ளச் செய்யவில்லை. அதிகபட்சம்  எழுநூறு  ஆண்டுகளுக்கு  முன்னர்  தான்  சுனத சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்  நாடுகள்  உருவாகி வந்தன. எனவே சுனத சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்  நூற்றியிருபது  தேசங்களும்  உருவான பின்னரே அப்பெயர்கள் சுனத சாசனத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எங்கள்  பேராசான்  சுனதரின் நோக்கம் அரசமைப்பதோ ஆட்சி செய்வதாகவோ இருக்கவில்லை  என்பதற்கு  அவர் ஆழிமாநாட்டினை உடலை உயிரெனப் பிண்ணி ஆய்ந்த நிலவியல் ஆய்வுகளே சான்று. நிமங்க மரபு சுனதரின் நில ஆய்வுகளை முழுமையாக தொகுத்துள்ளது" என முடித்தார்.
ஆதிரை  புகிந்தத்தின்  அரண்மனைக்கு வருகை புரிந்தாள். சுனதபாங்கத்தின்  எல்லையில்  இருந்த சிற்றூர்களில் நடந்த பூசல்களில் சவில்யத்தின்  வீரர்கள்  சிலர் கொல்லப்பட்டனர்  என செய்தி வந்தது. மோதமதியின்  புதல்வர்களை  விடுவிக்கவும் அன்றைய தினம்  உத்தரவு  பிறப்பித்தாள்.
சுனதபாங்கத்தின் எல்லைக்குள்  கணபாரரின்  புரவிப்படை நுழைந்த  போது  சுனதபாங்கத்தின்  படைத்தளபதி  காமிலர் அவரை எதிர் கொண்டு  வரவேற்றார். நான்கு  அணித்தேர்களில் சிறந்த  வீரர்கள்  தேரோட்டிகளாகவிருக்க மாரதிரனின்  புதல்வர்கள்  கம்பீரமாக  வந்தனர். அதிலிருக்கும்  நகையாடலை உணராது  அவர்களுள்  தெரிந்த  கம்பீரம்  காமிலரை கோபமுறச்  செய்தது.  பொதுவாக இளவரசிகளையும் முதிய  அமைச்சர்களையும் பாதுகாக்கவே சிறந்த  வீரர்களை தேரோட்டிகளாக்குவது வழக்கம்.  தொலைவில்  இரு குதிரைகள்  பூட்டிய  தேர் சகடங்களை காமிலர் கேட்டார். சரளை கற்கள் நெறிபடும் ஒலியுடன் விரைந்து வரும்  அத்தேர் வன்தோளனுடையது என ஊகிக்க அவருக்கு  நேரமெடுக்கவில்லை. இரு தேச வீரர்களும்  அதனை உணரத் தொடங்கி விட்டனர். ஒவ்வொரு  வீரனின்  விழியிலும் ஒளி பற்றி ஏறுவதை காமிலரும் கணபாரரும்  உணர்ந்தனர். மோதமதியின்  புதல்வர்கள்  தவிர அங்கிருக்கும்  அத்தனை உடல்களும்  முறுக்கேறின. மார்பு  வரை  கருந்தாடி அலையடிக்க அடித்து வார்த்த நிமிர்ந்த நெஞ்சுடன் அருளும்  வெறியும்  வழியும்  விழிகளுடன் மேலாடை ஏதுமின்றி தேரை விட்டிறங்கி கணபாரரை நோக்கி வந்தான்  வன்தோளன்.
"ஆழிமாநாட்டின்  பெருவீரரை சவில்யத்தின்  ஒப்பற்ற தளபதியை வணங்குகிறேன்" என வன்தோளன்  கணபாரரின்  காலடியில்  முழு உடலும்  மண் தொட வணங்கி எழுந்தான். காமிலர்  உட்பட  அங்கிருந்த வீரர்கள்  அனைவரும்  எழுச்சி கொள்வது அவர்களின்  விழிகளில்  தெரிந்தது. தன்னை விட உயரமான  வன்தோளனை கணபாரர்  தோள் பற்றித் தூக்கி மார்புடன்  அணைத்துக்  கொண்டார். குனிந்த அவன் தலையில்  கை வைத்து "நீண்ட புகழுடன்  இரு மைந்தா" என வாழ்த்தினார். மோதமதியின்  புதல்வர்கள்  வன்தோளன்  தங்களருகே வருவான் என ஆவலுடன்  நோக்கி நின்றனர். யாரையும்  திரும்பி நோக்காது  அதே வலுவடிகளுடன் மீண்டும்  தேரில்  ஏறிக்கொண்டான்.
கணபாரர்  சுனதபாங்கத்தின்  அரண்மனையை அடைந்த போது எல்லைப் பூசல்கள்  பெருகியிருப்பது குறித்து தகவல்கள்  சவில்யத்தை எட்டியிருந்தன.
"கணபாரர்  சுனதபாங்கம் சென்றிருக்கும்  சமயம்  உகந்ததென்றே இந்நேரம்  பூசல்களை துவங்கி வைக்கின்றன அந்த முக்கூட்டு நாடுகள். நம்முடைய  சில கிராமங்களை இழக்க நேர்ந்தாலும் அது குறித்து  இப்போது பொருட்படுத்தக் கூடாது. கணபாரர்  திரும்பி வரும்  வரை சுனதபாங்கத்தின்  எப்படையையும் சவில்யம்  எதிர் கொள்ளப் போவதில்லை" என்று அவையில்  அறிவித்தாள் ஆதிரை.
சவில்யத்தின்  முக்கிய  வணிக தளங்கள்  முக்கூட்டு நாடுகளின் படைகளின் வசமாகிக் கொண்டிருந்தன. ஆதிரை திகைத்து  நின்றாள். மோதமதியின்  விழிகளில்  மீண்டும்  அரசியாகும் கனவு மின்னியது.
விகந்தரின் அவையில்  மீண்டும்  ஒரு பாணன்  பாட எழுந்தான். கணபாரரும்  விகந்தரும் பாடலில்  மகிழ்ந்திருக்க வன்தோளன் தலைமையில்  படை ஒருக்கங்கள்  நிகழ்ந்து கொண்டிருந்தன. ஆதிரை கணபாரருக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

Wednesday 27 July 2016

பெருஞ்சுழி 40

சவில்யத்தில்  பெருங்கோட்டைகள் எழுப்பப்பட்டன. மூன்று தேசங்கள் வந்து  தொடும்  எல்லையிலும் படை நிரைகள் வலுப்படுத்தப்பட்டன. எந்நேரமும்  சவில்யத்தின்  படை எழலாம்  என அஞ்சிக் காத்திருந்தன திருமீடமும் ஆநிலவாயிலும். சவில்யத்தினும் பெரிய நாடு என்பதாலும்  வன்தோளனின் மீதான  பயத்தினாலும் திருமீடமும்  ஆநிலவாயிலும்  சுனதபாங்கத்திடம் நல்லுறவு கொண்டன. வன்தோளன்  விரும்பினால் சவில்யத்தின்  மீது படை கொண்டு  செல்லவும்  சித்தமாக  இருந்தன இரு தேசங்களும். ஆனால்  மக்களின் எண்ணம்  வேறாக  இருந்தது.  பெரு வணிகர்கள்  பலர்  கடலோர  தேசமான  சவில்யத்தை நோக்கி தினம் தினம்  வந்தனர். நில வழியாக சவில்யம்  நோக்கிச் செல்பவர்களும்  பெருகினர். ஆழிமாநாடு  முழுவதிலிருந்தும்  ஆழியில்  கலக்கும்  ஆறுகளென வணிகர்களும்  மக்களும்  சவில்யம்  நோக்கி வந்தவண்ணமிருந்தனர். ஆழி முகப்பென ஆயின சுனதபாங்கமும்  திருமீடமும்  ஆநிலவாயிலும்.
அத்தேசங்களிலும் வணிகம்  பெருகியது. வணிகம்  பெருகியதால் பூசல் குறைந்தது. சுனதபாங்கத்துடன் கூட்டுறவு கொண்டதால் மூன்று நாடுகளின்  எல்லைப் பூசல்களும்  முடிவுக்கு வந்தன. எதிர்பாராமல்  வந்துகுவியும் செல்வம்  மக்களை  களி வெறி கொள்ள வைத்தது. கண்ணீர்  மல்க  வைத்தது. வெறியின்  உச்சத்தை கருணையென ஏற்று நடிக்க  கடவுள் என ஒன்று வேண்டுமென  உணர்ந்தனர். மகிழ்ச்சியின்  ஊற்றுக் கண் தேடிய போது அவர்கள்  முன் நின்றிருந்தாள் ஆதிரை. அமைந்ததா அமைக்கப்பட்டதா எனத் தெரியாமல்  குழம்பினர் மூன்று  தேசங்களின் சூழ்மதியாளர்களும். சுனதனின்  கதைகளும் ஆதிரையின் கதைகளும் மன்றுகள் தோறும்  பாடப்பட்டன. பெருமையிழந்த துயரவர்கள்  தங்களை மீட்டு நிலைகொள்ளத் தொடங்கினர். சுனதபாங்கத்தின்  மையத்தில்  சுனதன்  எரியூட்டப்பட்ட குன்றில் கூட்டம் கூட்டமாய் குவிந்தனர் கண்ணீர் விட்டனர் கருநிலவு நாளில்  பாறைகளில்  தலை மோதி குருதிக் கொடை அளித்தனர். தோளில்  வில்லும்  வலக்கையில்  வேலும் இடக்கையில்  நூலும்  கொண்ட சுனதனின்  சிற்பங்கள்  வடிக்கப்பட்டன. அப்பெயர்  நோக்கிக் குவிந்தனர். வன்தோளன் தாய் அகல்யை  சுனதபாங்கத்தின்  பூர்வ  குடிகளில் ஒன்றில்  பிறந்தவள் என்பதால்  வன்தோளன்  சுனதனின்  மறுபிறப்பென பாடினர் சுனதபாங்கத்தின்  பாணர்கள். அவன் மாவலியனின்  மறு வடிவு என்றனர் மற்ற தேச பாணர்கள். பேரன்னை ஆதிரையின்  சுனத சாசனம்  அறிஞர்  மன்றுகளில் விவாதிக்கப்பட்டது.
சவில்யத்தின்  அரச சபையிலும் சுனத சாசனம்  குறித்து விவாதம் நடந்தது. அச்சமயம் ஆதிரையும்  கணபாரரும்  கடல் வழி தேசங்களில் பயணம்  மேற்கொண்டிருந்தனர்.
"சுனத சாசனம்  குறித்து விவாதித்து அதன் கூறுகளை  ஆய்ந்து பதியவே சவில்யம் இப்பேரவையை ஒருக்கியுள்ளது. சான்றோர் சொல் எழலாம்" என்றமர்ந்தான் அவை அறிவிப்போன்.
ஆழிமாநாட்டின்  தொல்நூல்கள் அனைத்தையும்  ஆய்ந்துணர்ந்து பரப்பும்  நிமங்க மரபின்  முதல்  மாணவர் சகந்தர்  அவை அமர்ந்திருந்தார். மாரதிரனின் முதலமைச்சர்  நிருவரனின்  தோழர் அவர். வானியல் ஆயும் தனித்ய மரபினரும் மருத்துவ நிபுணர்களும் போர் மரபினரும்  நுண்கலை மாந்தர்களும் அமர்ந்து நிறைந்தது சவில்யத்தின்  அவை. எட்டு மாதங்கள்  அந்த அவை அமைவதற்கான ஒருக்கங்கள் நிகழ்ந்தன. சவில்யத்தின்  தலைநக‌ர் புகிந்தம் எனும்  நகராயிருந்தது. ஆதிரை தலை நகரை கடலோர  பெரு நகரான கூர்மதத்திற்கு மாற்றினாள். புகிந்தத்தில் இருந்த அரண்மனை  சுனத  சாசனம் குறித்த விவாதத்திற்காக மாற்றியமைக்கப்பட்டது.
"அறிவிலும் வீரத்திலும் கலைகளிலும் சிறந்தவர்கள்  கூடிய  அவை என்பதாலேயே அவை நுழைபவர்கள் அத்தனை பேரும்  தருக்கியேபடியே எழுவார்கள். அவர்கள்  ஆணவம்  அடிபட்டு ஓடுடைத்த கருவென அறிவு மட்டுமே இங்கு வழிய வேண்டும்" என்பது கணபாரரின்  கட்டளையாய் இருந்தது. உறங்கிய அரக்கன்  நிமிர்ந்தெழுவது போல புகிந்தத்தின் அரண்மனை  விரிந்தது. வரையப்பட்ட ஓவியங்களின் கூர்மை காண்பவர்களை நடுக்குறச் செய்தது. முத்தமிடுகிறான் ஒருவன். வெட்கி முகம்  கவிழ்கிறாள் ஒருத்தி. அவனை நோக்கும்  போது  அவனாயினர்
அவளை நோக்கும்  போது  அவளாயினர். அவர்களை அமர்ந்த மரக்கிளை  நோக்கும்  போது அக்கிளையாயினர். அத்தனையும்  அமைந்தது ஒரு சிறு தூணின்  சிறு வளைவில்  என்றபோது சிறுத்துப் போயினர். சாதாரண  உரையாடல்களில் கூட பொருளற்ற வார்த்தை  எழுந்துவிடலாகாது என நுண்மை கொண்டனர். அவை தொடங்குவதற்கு சில நாழிகைக்கு முன் சகந்தரிடம் தனித்ய குலத்தின் ஆசிரியரென நிகம்பர் "இங்கு எழுந்து நிற்கும்  பிரம்மாண்டத்தின் முன் அத்தனை  பேரும்  தங்களை  சிறியவர்களாக உணர்கின்றனர். ஆனால்  உங்கள்  முகம்  மட்டும்  அச்சம் கொண்டதாய் இருப்பதேன் சகந்தரே" என்றார்.
சலிப்புடன்  புன்னகைத்த சகந்தர் "அறியேன். இதை அமைத்தவர்களின் நோக்கம் எதுவெனினும்  அறிவும்  ஆணவமும்  முற்றினால் முற்றழிவே நிகழு‌ம்  என எண்ணியிருக்கமாட்டார்கள். நான்  அதை மட்டுமே எண்ணுகிறேன்  நிகம்பரே. பேரழிவை மட்டுமே  என் மனம்  கற்பனிக்கிறது" என்றார்.

Tuesday 26 July 2016

பெருஞ்சுழி 39

உவகையன்றி வேறேதும்  அறிந்திருந்தானா அவன்? உவகையன்றி வேறேதும்  உண்டா இவ்வுலகில்?  எதை நினைத்து  உவப்பது என்றெண்ணும்போதே எதை நினைத்து  உவக்காமல் இருப்பது  என்கிறான் அவன். ஒவ்வொரு  துளியும்  மழையே என்றெண்ணும் போதே ஒவ்வொரு  மழையும் துளி என்கிறான். ஒளியையும்  இருளையும்  பிரித்தவனே திசையை அறிகிறான். அவன் ஒளியின்  ஒவ்வொரு  கணுவிலும் இருளை சுவைப்பவன் இருளின்  ஒவ்வொரு  துளியிலும் ஒளியை அறிபவன். கூடியசைந்து செவியறியா மென்மொழி பேசி நெட்டி முறிக்கும்  மூங்கில்களே இறைவனின்  மூச்சு இப்படித்தான்  இருக்குமோ? மதீமம்  என்கின்றனர். அவள் என் பெருந்தோழி மதீமை. நீரின்றி நீண்டு கிடக்கும்  அவள் உடலை மலடென்கின்றனர் மண் என்கின்றனர். மடையர்கள்  கருவறை திறக்காது முலை கனியாது நிற்பவள் கனவில்  சுமக்கிறாள் கோடி புதல்வர்களை என அறிவதில்லை. பன்றியென  பரவிக்  கிடக்கின்றன அவள் முலைகள்.  வாஞ்சையோடு நக்கும் அன்னை நாய் அவள். கன்றிலிருந்து கண்ணெடுக்காமல் குனிந்து  மேயும் பசு. முட்டை திறந்து எட்டிப் பார்க்கும்  குஞ்சுகளை கனிந்து நோக்கும்  அன்னை நாகம். துதிக்கையால் குட்டியைத் துழாவும் பிடியானை. மதீமை  அறிவதில்லையடி  அவர்கள்  உன் மீது படும்  பாதங்களை ஓடும்  நதியென  உடனே நீ அழிப்பதில்லை என. ஆயிரம்  மகவுகளால்  மிதிக்கப்பட்ட அன்னை நீ. இதோ உன் இன்னொரு  மகன். ஒவ்வொரு  பாதத்தையும்  ஒற்றி எடுக்கிறேன். உன்னடியில் எங்கோ ஓடுகிறதொரு குளிர்ச்சுனை.
பச்சை. வேறெப்படி அழைப்பதுன்னை? ஆழியும் குருதியும்  நிறங்கள்  தான். வெறும்  திரவங்கள்  தான்.  ஆனால்  இக்கானகம்? எல்லைக்குள் ஓடும்  வரையில்  தான்  உவக்கின்றன  கடலும் குருதியும். அவை வெளிச்சிந்தினால் வீழ்ந்து விடுகிறது  மனிதம். ஆனால்  இப்பசுமை? எங்கும்  பரவி  நிறைவதொன்றே ஆணையெனப் பெற்று பரவுகிறாள் பசுந்தாய். எதை நோக்கி எழுகிறாள் இவள்? பச்சையாய் அசைந்து  அசைந்து எதை நோக்கிக் கூவுகிறாள் 'இங்கிருக்கிறேன் இங்கிருக்கிறேன்' என? பசுமையே கருமை பிறப்பது உன்னில். கனிவு பிறப்பது உன்னில். கனவு பிறப்பது உன்னில். காதல்  பிறப்பது உன்னில். பசுமையே இருள் விடிவது உன்னில். செயல் எழுவது உன்னில். அருள் வழிவது உன்னில். அனைத்தும்  அடங்குவது உன்னில். பசுமைப் பெருவெளியே இறைவன்  மட்டுமல்ல புல்லென நிற்கும்  நீ கூட கதறிக் கூவும்  எங்கள்  குரலுக்கு பதிலுறுப்பது இல்லை.  பிடுங்கி எறிந்தாலும் உடைத்து வீசினாலும் அறுத்து சாய்த்தாலும் அகழ்ந்தெடுத்தாலும் காற்றுடன்  நீ பேசும் ஒரு பெருஞ்சொல் கடந்து உன்னை  வதைப்பவனை ஒரு பொருட்டெனவே நீ கொள்வதில்லை. அன்னையே உன்னைப் புணர்ந்தே உண்கிறோம் உடுக்கிறோம் அறைகிறோம் வெல்கிறோம் தோற்கிறோம். மன்னிக்க உன்னிடம்  நான்  வேண்டவில்லை. முடிவின்றி மன்னிக்கக் கற்றவள் நீ. மன்னிப்பதாலேயே துன்புற்றழிபவள். அழிவதாலேயே மீண்டும்  பிறப்பவள். துயரயென ஏதுமுண்டோ பெருந்தாயே நீ சுமக்கும் வலியுணரும் உன் மகவுக்கு. வலியென ஏதுமுண்டோ பேரன்னையே குஞ்சு வெளியேறிய ஓடாய் விழா ஓய்ந்த களமாய் ஆடல் முடிந்த மேடையாய் குருவிகள்  ஒழிந்த கூடாய் தனித்துக் கிடக்கும்  உன்னை உணரும்  உயிருக்கு.
உன் ஒவ்வொரு அங்கமாய் பற்றி ஏறுகிறேன் இடைவெளியின்றி இறுக்கிக் கொள்கிறேன் இருந்தும்  நீ தனித்துத்தான் இருக்கிறாய். அள்ளிவிட முடியாதடி உன்னை என் பெருந்தோழி. உன் மடியில்  அணைந்து விடுகிறேன். உன் உடலில்  புகுந்து கொள்கிறேன். ஏற்றுக் கொள் ஏற்றுக்  கொள். ஏற்றுக்  கொள்.
மலையுச்சியிலிருந்து விழ இருந்தவனை இழுத்துத் திருப்பினாள் ஆதிரை. அந்நொடியே  உணர்ந்தாள் தன் உடல் எதை நோக்கி தன்னை தள்ளி வந்திருக்கிறது என. இதழ் விரிய புன்னகைத்து விழி வழிந்து தன் முன்னே நிற்பவன்  யாரென அவள் அறியவில்லை. அவள் உடல்  அறிந்தது. அவள் விழிகளும் வழியத் தொடங்கின. உள்ளிருந்தெழும் அலையென உடல் முழுக்க அலையடித்தது உவகை. அவனை இறுக்கி அணைத்தாள். இத்தனை  நாள்  ஒவ்வொரு  செயலிலும்  ஒழுங்கெனவும் கூர்மையெனவும் நின்றிருந்த ஒன்று விலகுவதை ஆதிரை உணர்ந்தாள். உடலின் ஆதி இச்சைக்கு தன்னை ஒப்புக் கொடுத்து அவனுடன்  இணைந்து இயங்கினாள்.
ஆதிரை  அறிந்திருந்தாள் மூதன்னை  அறிந்ததும் அவனையே என. அவள் ஏதும்  கேட்கவில்லை. விரைந்து நெருங்கிய காட்டுப் பன்றியைத் தூக்கி தோளில்  ஏற்றினான். சில நொடிகள்  அடங்கி அவன் மீதிருந்த அப்பன்றி மீண்டும்  திமிறி ஓடியது. ஆதிபுரத்தில் அவள் கண்ட குடில்களும் மனிதர்களும் எங்கோ தொலைவில்  எனத் தெரிந்தனர். சுனத வனத்தை தன் முற்பிறப்பென்றே எண்ணத் தளைப்பட்டுவிட்டாள். அவள் அவனை சந்தித்து எட்டு நாழிகைகள் கூட கடக்கவில்லை. இரவின் நறுமணத்துடன் மதீமத்தின்  வெதுவெதுப்பான  படுகைகளில்  மீண்டும்  அவனை அணைந்தாள். அவள் கண்கள்  நிறைந்தன. விழிநீரில் அவன்  முத்தமிட்டான். ஆதிரை  அவனை இறுக்கிக்  கொண்டாள். மதியம்  அவனுடன்  விளையாடிய காட்டுப் பன்றி ஒரு பெரும்  ஈட்டியால் குத்தப்பட்டு  அவன் மீது  வந்து விழுந்தது. பன்றியின்  உடலை முழுவதும்  துளைத்திருந்த ஈட்டி அவன் கழுத்தில்  இறங்கி தொண்டை முழையை உடைத்து வெளியேறி அவன் கீழே படுத்திருந்த ஆதிரையின் கழுத்துக் குழியை தீண்டிச் சென்றது. அவள் கழுத்திலிருந்து குருதி பீறிட்டது. அவனை உதறி எழுந்தாள்  ஆதிரை. ஒரு கையால்  கழுத்தை பொத்தியபடி ஆடைய அள்ளிச் சுற்றிக் கொண்டாள். பன்றியும் அவனும்  இறந்து விட்டிருந்தனர். இரு உடலிலும்  இறங்கியிருந்த ஈட்டியை உறுவினாள். அவனிடம்  குழந்தை போல் விளையாடிய பன்றியை கரங்களில்  குழி பறித்து மதீமத்தின்  படுகையில்  புதைத்தாள். அவன் உடலிலும்  ஆடைகளை  அணிவித்து தோளில்  தூக்கிக் கொண்டாள். சிறிது  தூரம்  நடந்தவள் ஏதோ நினைவெழுந்தவள் என  அவனை கீழே கிடத்திவிட்டு புதைத்த கரும்பன்றியை எடுத்து வெளியே வீசினாள். கிடத்தி வைத்திருந்தவனை திரும்பி நோக்காது  நடந்தாள்.
வெறி கொண்டு அவள் நடப்பதை அவள் விழிகள்  ஒளிர்வதை அவள் நடந்த மண் அதிர்வதை நான் கண்டேன். அவள் நடக்கும்  மண் அனைத்தும்  நடுங்கும்  என்றுணர்ந்தேன். அவையீரே அறிக பசுமை என்பது வஞ்சமும்  தான்.

Monday 25 July 2016

பெருஞ்சுழி 38

சபையினர் முற்றமைதி கொண்டிருக்க பாணன் தொடர்ந்தான்.
ஆதிரையின் விழிகள்  விரிந்தவண்ணம்  இருந்தன. அவள் முகம்  கண்ட ஒவ்வொரு சிரமும் தாழ்ந்தது. மல் புரிந்த வீரர்கள்  அடுமனை அமர்ந்த பெண்கள்  கூவிச் சிரித்து விளையாடிய  குழந்தைகள் என அனைவரும் அவளருகே வந்தனர். சந்தேகம்  கொண்டவர்களாய் அவளைப் பின்  தொடர்ந்தவர்களில் சிலர் அவள் கூந்தலை  பிடித்திழுத்தனர். மகோதவன்  எவரையும்  கவனிக்காமல்  சென்று கொண்டே இருந்தான். மூங்கில்  மரங்களை நெருக்கமாக ஊன்றி  குறுக்கும் நெடுக்குமாக  பல தடுப்புகளை ஏற்படுத்தி வீடுகளை  அமைத்திருந்தனர். ஆதிரை  அவர்களிடம்  ஒரு அடங்கிய தன்மை வெளிப்படுவதாக எண்ணிக் கொண்டாள்.  சிறு வேலியைக் கடந்து ஒரு மூங்கில் குடில் தனித்து  நின்று  கொண்டிருந்தது. அங்கிருந்து அமைதி பெருகி வழிந்து அனைத்தையும்  மூடுவது போல் அக்குடிலை நெருங்க நெருங்க மௌனம்  பெருகத் தொடங்கியது. குழந்தைகள்  ஓடி விட்டன. மகோதவன்  முன் நடக்க ஒரு கணத்தில்  தன் பின்னே யாரும்  இல்லை  என்பதை ஆதிரை  உணர்ந்தாள். மகோதவன்  நடையிலும்  துள்ளல்  குறைந்தது. தன்னுள்ளும் ஒரு உதறல்  எழுவதை ஆதிரை  உணர்ந்தாள். ஏன் இந்த நிலையின்மை? பெரும்  நிலைகள் அனைத்தும்  நிலையின்மையால் சமப்படுத்தப்படுவதாக ஆதிரை எண்ணிக் கொண்டாள்.
மகோதவனும் குடிலுக்கு  வெளியே நின்று  விட்டான். ஆதிரை  படலைத் திறந்து கொண்டு உள் நுழைந்தாள். குடில் வெளிச்சமாக  இருப்பதைக் கண்டதும்  தான்  ஆச்சரியம்  கொள்வது ஏன் என வியந்தாள். அக்குடில் இருளடைந்து இருக்கும்  என தான் கற்பனை செய்ததே அதற்கு  காரணமென எண்ணித் தெளிந்தாள்.
"வா ஆதிரை" என்றவாறே தலை நரைத்து பேருடல்  கொண்ட ஒருவர்  ஆதிரையின்  முன் வந்து நின்றார்.
கூர்மதி உடைய ஒருவரை சந்திக்கப்போவதாக எண்ணியிருந்த ஆதிரை தான் ஆதிரை என அழைக்கப்பட்டதும் முறுவலித்தபடி "தாங்களும் என்னை குடி தெய்வம்  என எண்ணி விட்டீர்களா? என் பெயர்  அலங்கை" என்றாள்.
"நீ அலங்கனின்  புதல்வியென அறிவேன். உன் மற்றொரு  பெயரைச் சொல்லி அழைப்பதில்  உனக்கு  வருத்தமிருக்காது என்றெண்ணுகிறேன்" என்று ஆதிரையின்  எதிரே அமர்ந்தார்  முதியவர். ஆதிரை ஒரு கணம்  திகைத்தாள். மறுகணம்  தன்னை திரட்டிக்  கொண்டு  "ஏன் என்னை இவர்கள்  தங்கள்  பேரன்னை என எண்ணுகின்றனர்?" என்றாள்.
"உன் தோற்றம் அப்படி. இங்கு வந்தபோது உன்  வயது தான்  உனக்கு மூதன்னை  ஆதிரைக்கும் இருந்திருக்கும். அவளும்  நீ புறப்பட்ட சுனத வனத்திலிருந்து புறப்பட்டு இவ்விடம்  நோக்கி வந்திருக்கிறாள்  நீ வந்த வழியாகவே. உன் போலவே  அவளும் மெலிந்து வலுத்து வந்திருப்பாள். பாறை புடைப்புகளில் தெரியும்  அவள் போலவே நீ எண்ணப்படுவதற்கு ஒரே வழியில்  நீங்கள்  பயணித்ததே காரணம்  என எண்ணுகிறேன்." என்றார்.
ஆதிரை  வியக்கவில்லை. அவரிடம்  தான்  எதையும்  மறைக்க  முடியாது  எனக் கண்டு கொண்டவளாய் "ஆதிரை  அன்னையின் வாழ்வறியும் விழைவு  உந்தியதாலேயே இலக்கற்று பயணிக்கத் தொடங்கினேன். என் ஊழ் என்னை இங்கு வந்து சேர்த்திருக்கிறது." ஆதிரை. அச்சொற்களின்  பொருளின்மையும் நடைமுறைத் தன்மையும்  அவளையே வெறுப்படைய வைத்தது. ஆனால்  அவரிடம்  சிறப்பாக  சொல்லெடுக்க தன்னால்  முடியாது  என்றும்  அவள் அகம்  சொல்லியது.
"நீ அவளைத் தேடி  வரவில்லை. உன்னைத் தேடி  வந்திருக்கிறாய். தமையனின்  தலை  கொய்து சுனத வனத்தின்  தலைமை ஏற்பதை இலக்கென நீ வரித்துக்  கொள்ளவில்லை. உன்னைக் கட்டுப்படுத்தும்  ஒரு தளை அங்கு எழுந்ததும்  எவ்வுணர்வும்  இன்றி அதனை அறுத்தெறிந்து  முன்னேறினாய். ஆட்சியிலும் உன் மனம் அமையவில்லை. நீ சிறு வயது முதல்  கேட்டு வந்த கதைகளின் நாயகியாக நீயே மாறுவதை நோக்கி நின்றாய். ஆனால்  அவளாகவும் மாறி அமைய முடியவில்லை  உன்னால். அதற்கும் மேல் நீ இருப்பதாக  எண்ணியதாலேயே அவளை முற்றறிய இங்கு வந்திருக்கிறாய். உண்டு செறித்து கடந்து செல்லவே எண்ணுகிறாய் மகளே. அமையாத உயிர்  இங்கு எதையும்  ஆற்றவிட முடியாது." என்றார்.
தன் ஆழ் கனவிலிருந்து எழுந்து வந்து பேசும் உருவென அவரை எண்ணிய மறுகணமே  ஆதிரையினுள் கடுஞ்சீற்றம் எழுந்தது. சீற்றம்  வெளிப்படுவது மேலும்  தன்னை கீழிறக்கும் என எண்ணி "கூறுங்கள்  அன்னையின்  கதையை" என்றாள்.
"இப்பெருநிலம்  முழுதும்  தன் சொல் நிற்பதாக  எண்ணி சுனத வனம்  நுழைந்த ஆதிரையாய் அவள் இங்கு வரவில்லை. கனிந்த மனதுடன்  கருணை என்ற எண்ணம்  மட்டும்  கொண்டவளாய் நடந்த அன்னை வனத்தினை அறிந்தாள். ஊழ்கப் பெரு நிலையில்  மூழ்கியிருந்தான் ஒருவன்  அவள் முன். அவனுள் அவள் சுனதனைக் கண்டாள். தெரிதனைக் கண்டாள். மாவலியனைக் கண்டாள். கனிவும் காமமும்  வேறல்ல என்றுணர்ந்தாள் அன்னை. மிச்சமின்றி  அவனைக் கூடினாள். அன்னை அமைந்தாள். அதன்பின்  தான்  கூடியவனை அன்னைக் காணவில்லை. கருவுற்றாள். தாயானாள். மெல்ல  முதிர்ந்தாள். அக்கனிவின் சுரப்பினை மீண்டும்  உணர்கையில்  அவன் மீண்டு வந்தான். அதே இளமையுடன். ஆதிரை  மகவுகளால்  நிறைந்தாள். கனிந்து விண்ணேகினாள். அவள்  மண் நீங்கிய பிறகு  மண்  நீங்கி முழுமை பெற நினைக்கும்  பெரு வீரர்கள்  மட்டுமே  இங்கு நுழைய  முடிந்தது. அவர்களைக் கூடி இக்குடி வளர்ந்தது. இக்காடு நீங்க அன்னை  எங்களை அனுமதிக்கவில்லை. கருணையும் வீரமும்  ஒருங்கே கொண்ட ஒருவனை குடிக்குத் தலைமை கொண்டு வழி நடத்த பல பயிற்சிகளை ஏற்படுத்தினாள் அன்னை. சில காலங்களில்  பயிற்சிகள் குடிச் சடங்குகளாகி தலைமை உதிரத் தொடர் கொண்டவர்களுக்கானது. இன்றும்  ஆதிபுரம் என்றழைக்கப்படும்  இச்சிறு நிலப்பரப்பு போர்களும் பூசல்களும் இன்றித் தொடர்கிறது. ஆதிரையின்  நோக்கமே அதுதான். நாங்கள்  வென்றெடுக்கப் பிறந்தவர்கள்  என அவள் எண்ணவில்லை. அமைதியாய்  வாழவே எங்கள்  வீரம் எங்களுக்கு  துணை நிற்கிறது. இதற்கு  முன்னும்  சுனத  வனம் நீங்கி இங்கு வந்தவர்கள்  சிலருண்டு. ஆனால்  பேரன்னைக்குப் பின் இளையவளென இந்நிலம்  நுழைபவள் நீயே." என முடித்தார் குடித்தலைவர்.
சில நொடிகள்  மௌனம் நீடித்தது.
"தந்தையே" திடீரென  தொடங்கினாள் ஆதிரை "எரியின் நோக்கம் ஒளி மட்டுமல்ல" என்றாள். ஏன் அதைச் சொன்னோம் என எண்ணி வியந்தாள்  ஆதிரை.

Sunday 24 July 2016

பெருஞ்சுழி 37

மூவாயிரம்  இரவுகளும் பகல்களும் அவள் நடந்தாள். பாதி உண்ணப்பட்ட எச்சங்களை  மட்டுமே  மனிதன்  எனக் கண்டாள் ஆதிரை. ஆழிமாநாட்டின்  அத்தனை தேசங்களிலிருந்தும் கூடணையும் பறவைகள்  என எவர்தொடாமேட்டிற்கு வந்த வண்ணமே இருந்தனர் என்பதை ஆதிரை கண்டாள். கருத்த தேகத்தினர்களான தென்னவர்களும் மஞ்சள்  நிறம் கொண்ட கிழக்கு தேசத்தவர்களும் கருஞ்செந்நிற உடல் கொண்ட மலைக்குடியினரும் என ஆழிமாநாட்டின்  குடிகளில் பலர் அங்கு இறந்து கிடந்தனர். ஆதிரையின் உடல் வலு ஏறியபடியே வந்தது. முழுமையான கானக மகளாக அவள் மாறிவிட்டிருந்தாள். அவள் புலன்கள் கூர்மை கொண்டிருந்தன. உறங்கும்  போதும்  விழித்திருந்தது உள் விழி ஒன்று. கருமுத்தென உடல் மின்னத் தொடங்கியது. கரு நிலவு நாளொன்றில் கருத்த தேகத்தினளாய் தன்னெதிரே தான் நிற்பதைக் கண்டாள் ஆதிரை. பின்னரே அதுவொரு பாறை புடைப்பென அறிந்தாள். நிமிர்ந்த தோள்களுடன் நின்றிருந்த அச்சிற்பத்திற்கு கீழாக சில குழந்தைகள்  விளையாடுவதைப் போன்ற உருவங்களும் செதுக்கப்பட்டிருந்தன. அத்தனைக் குழந்தைகளையும்  தான் முன்னரே கண்டிருப்பதாக ஆதிரை எண்ணினாள். அச்சிற்பத்தின விழிகளையே நோக்கினாள். கனவுகளில்  கண்டவை தனித்தமர்ந்திருந்த வேலைகளில் தீண்டிக் கொண்டிருந்தவை தமையனின் தலை கொய்தவன்று தவறெனச் சொன்னவை தருக்கி எழும் போதெல்லாம்  தனித்து நின்று தவித்தவை அனைத்தும்  உதறி எழுந்தவன்று அகன்று சிரித்தவை. ஆம் இவ்விழிகள் தான். இவள் விழிகள்  தான்.இவள் நானா? இவள் நானா? என எண்ணிக் கொண்டே அச்சிற்பத்தை தீண்ட நெருங்கினாள் ஆதிரை. அவள் விரல்களுக்கும் சிற்பத்திற்கும் இடையே இருந்த கால் அங்குல இடைவெளியில் விர்ரென பறந்தது ஒரு அம்பு. அம்பு வந்த திசை நோக்கி ஆதிரை திரும்பிய போது வலத்தோளில் ஓர் அம்பு தைத்தது. அதை பிடுங்க முயல்கையில் இடத்தோளில் தைத்தது மற்றொரு அம்பு. இரு தொடைகளிலும் அடுத்தடுத்து தைத்தன கூரம்புகள். அம்பினை பிடுங்காமல் அம்பு வரும்  திசையை நோக்கி நின்றாள்  ஆதிரை.
"என்னைக்  கொல்லும்  நோக்கம் உண்டெனில்  எதிரே வா! இவ்விளையாட்டை நான் வெறுக்கிறேன்" எனச் சொல்லியவாறே கணப்பொழுதில்  தொடையில் தைத்திருந்த அம்பைப் பிடுங்கி அது வந்த திசையிலேயே எறிந்தாள். அவள் எறிந்த அம்பை ஏந்தியவாறே வெளிவந்தான் பேருடல்  கொண்ட ஒருவன். சில கணங்கள்  ஆதிரையை நோக்கி நின்றவன் "அன்னையே என்னை பொறுத்தருளுங்கள்" என ஆதிரையில்  கால்களில் விழுந்தான்.
"எழுந்திருங்கள். மூவாயிரம்  நாட்கள் கடந்து நான் கண்ட முதல்  மனிதர் நீர். என் மொழியும்  அறிந்திருக்கிறீர். ஏதோவொரு  காவல் நிரை வீரரென உம்மை எண்ணுகிறேன். சொல்லுங்கள்  நான் ஆற்றிய பிழை என்ன?" என்று அம்புகளை பிடுங்கியவாறே கேட்டாள் ஆதிரை. அவனிடம்  எஞ்சியிருந்த அம்புகளுக்கும் அவளை தைத்த அம்புகளுக்கும்  உள்ள வேறுபாட்டினையும் கவனித்துக் கொண்டாள். அவளைத் தைத்தவை கூர் முனை உடைய எடை குறைந்த அம்புகள். எஞ்சியிருந்தவை எடை மிகுந்த அம்புகள். மீன் செதில் போன்ற செதுக்கிய முனை கொண்டவை. ஆழமாக  இறங்கி பிடுங்கும் போது சதையை கவ்விக் கொண்டு வெளியேறுபவை. அவற்றை அவன் தன் மீது செலுத்தாததால் உயிர் பறிக்கும்  நோக்கம் அவனிடமில்லை என ஊகித்து விட்டிருந்தாள்.
விம்மல் அடங்கியவனாக எழுந்தவன் "எங்கள்  மூதன்னை ஆதிரையின்  உருக்கொண்டு வந்திருக்கிறீர்கள்" என்றான். ஆதிரை  ஊகித்தது தான்.
உடலில் குருதி வழிவதை அவள் ஒரு பொருட்டெனவே  கொள்ளவில்லை. "அன்னையே எங்கள்  குடிலுக்கு  வாருங்கள். எங்கள்  மூதாதை உங்களைக் கண்டால் மகிழ்வார்" என ஆதிரையை அழைத்தான் அம்பெய்தவன்.
"தங்கள்  பெயர்?" என்றாள்  ஆதிரை.
"மகோதவன். தாங்கள்?"
"அலங்கை" ஆதிரை தன் மற்றொரு பெயரைச் சொன்னாள்.
மகோதவன் முன்  நடக்க  ஆதிரை அவனைத் தொடர்ந்தாள். வறண்ட ஒரு நதியை கடக்க நேர்ந்த போது ஆதிரை வியந்தாள் "இந்நதியின் பெயரென்ன?" என்றாள்.
"மதீமம். நீங்கள்  இவ்வழியாகத்தானே வந்திருப்பீர்கள்" என்றான்  அவளை திரும்பி  நோக்காது.
"இல்லை" என்றாள் ஆதிரை "மதீமம்  எவர்தொடாமேட்டின் எல்லையில்  நுழைவதை நான் இப்போதே  அறிகிறேன்" என்றாள்.
"வியப்பாக  இருக்கிறது. பெரும்பாலும்  எங்கள்  குடியை அணுகுபவர்கள் தென்நுழைபுனலில் பிரியும் வறண்ட நதி வழியாகவே  வருவார்கள். நீங்கள்  உள் காட்டிலிருந்து எப்படி வந்தீர்கள்?" என்றான்  மகோதவன். சுனத வனம்  குறித்து  ஆதிரை சொல்லவில்லை. மையமாக சிரித்தாள். உணவு சமைக்கும்  மணமெழுந்தது. அவள் எதிர்பார்த்தது கானகத்திற்குள் சிதறிக் கிடக்கும்  குடில்களை. ஆனால்  புடைத்து நீண்டிருந்த பெருவேலியென மூங்கில்களும் ஆல மரங்களும் பிணைந்து வளர்ந்திருந்தன. அது ஒரு உயிர் கோட்டையின் ஒரு பகுதி என ஆதிரை  அறிந்தாள். இடைவெளியின்றி நெருங்கி வளர்ந்திருந்த மரங்களின் கோட்டையைக் கடப்பதற்கு  வழியெதுவும் ஆதிரையின்  கண்களில்  தென்படவில்லை. மகோதவன்  ஆதிரையிடம்  ஒரு நீண்ட கயிற்றை நீட்டினான். புரிந்து கொண்ட ஆதிரை தனித்து வளர்ந்திருந்த மூங்கில்களில் ஒன்றை அக்கயிற்றை எறிந்து வளைத்தாள். வளைந்த மூங்கிலில் தன்னையே அம்பெனப் பொருத்திப் பறந்தனர் இருவரும். உயரப் பறந்தவர்கள் சில நொடிகளில் அழுத்தமான கொடிகள் பரவிய தொட்டிலில் இருந்தனர்.
ஆதிரையின்  எதிர்பார்ப்பு தகர்ந்த வண்ணம்  இருந்தது. நிலம் திருத்தி  வாழும்  மக்களையே அவள் எதிர்பார்த்திருந்தாள். ஆனால்  செம்மண் தளத்தில்  மல்யுத்தம்  புரியும்  உடல் வலுத்தவர்களை கண்டதும்  முதலில்  அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அது கடந்து தன்னுள்  ஒரு உவகை எழுவதையும் ஆதிரை  உணர்ந்தாள்.

Saturday 23 July 2016

பெருஞ்சுழி 36

மரப்பிசிர்களை கவ்விக் கவ்வி மேலேற்றுகின்றன சிட்டுக்குருவிகள். பொத்தென தரையில்  விழுவது போலிறங்கி விர்ரென மேலேறி ஒரு பசுங்கொடியில் கூடமைக்கின்றன. இளஞ்சிட்டொன்று தன்னினும்  பல மடங்கு  நீளம் கொண்ட ஒரு ஓலையை கொடியில் ஏற்ற முயன்று தூக்கி  கொடியை அடைவது வரை வென்று விட்டது. அங்கு ஏற்கனவே  அமர்ந்திருந்த இன்னொரு சிட்டுடன் இணைந்து ஓலையை வளைக்க முயல்கிறது. கவ்விய ஓலையை ஒரே நேரத்தில்  இரு சிட்டுகளும் விட்டுவிடவே காற்றுடன் நாணி நாணி மொழி பேசி மண் தொடுகிறது ஓலை. சில நொடிகள்  திகைத்துப் பார்த்த  சிட்டுகள் இரண்டும்  "கீச் கீச்" என சண்டையிடத் தொடங்குகின்றன. விட்டெறிந்த கல்லென வந்தமர்கிறது இன்னொரு சிட்டு. அது வந்ததும்  சண்டை ஓய்கிறது. அது கூடமைக்கும் மரப்பிசிர் எடுக்க கொடி விட்டு கீழிறங்குகையில் மீண்டும்  சண்டையிலாம் என எண்ணம் கொண்டு விட்டன போலும்  இரு இளஞ்சிட்டுகளும். மிச்சத்தை நாளை பார்க்கலாம்  பெரு மூச்சுடன்  எழுந்து நடந்தால் ஆதிரை.
சிம்மக் குருளைகள் முகம் அறைந்து விளையாடும் முதுகில்  இணையும்  இரு எலும்புகளும் எழுந்தமைய இரையை நெருங்கும் சிறுத்தை புலியின் வால் இழுத்து விளையாடும்  சிங்கவால் குரங்கு இறந்த சிம்மத்தை கிழித்துண்ணும் கழுதைப்புலிகள் மடிசரித்து அருகுறங்க அழைக்கும்  அன்னையென பொந்தடித்த மரங்கள் நின்று புணரும்  நீளுடல் நாகங்கள்  பறவை எச்சங்களால் வெண்மையடைந்த நீரோடை ஓரங்கள் காரணமின்றி மகிழும் கருங்குருவிகள் மணத்தாலே பசியடங்க வைக்கும்  இளந்தென்றல் மலைக்குன்றென குவிந்து கிடக்கும்  யானைச்சாணம் அதிலெழும் பச்சை வாசம் அதில் நெளியும்  புழுக்கள் குட்டிகளை நக்கி உளற வைக்கும்  காட்டு நாய் சிதறும்  எலும்பினைப் போல் கொம்பினை முட்டிக் கொள்ளும்  கலைமான்கள் அவற்றின் உடலில்  ஒற்றியிருக்கும் பெரு உண்ணிகள் மூக்கு விடைத்த காட்டெருதுகள் சோம்பலாய் நெளியும்  மலைப்பாம்புகள் கண் திறக்காமல் கொட்டாவி விடும் நாய்குட்டிகள் அனைத்தையும்  உள்ளடக்கி அசையும்  பெரும் பசுமை. ஆதிரை நடந்தாள். அலங்கனின்  தலைமை ஆதிரையின்  கைக்கு  வந்தவன்று அவள் ஒன்றை உணர்ந்தாள். தன் குடித் தலைமையின்  முடிவு விரைவில்  நெருங்குமென.
சுனதனுக்கு  எரியூட்டிய  பின் பேரன்னை ஆதிரை  முற்றமைதி கொண்டவளாய் மாறிப் போயிருந்தாள். துயரவர்கள் ஆழிமாநாடு  முழுவதும்  பரவினர். அவர்களின்  தொகுப்புத் தன்மையும்  உறுதியான  நோக்கமும்  அவர்கள்  எண்ணிக்கையை பெருகச் செய்தது. ஆதிரை ஆழிமாநாடு  முழுவதும்  அலைந்தாள். தெரிதரும்  சுகத்யையும் அடுத்தடுத்த இறந்தனர். பன்னிரண்டு  வருடங்கள்  கழிந்தபின்  ஆதிரை சுனத வனம்  மீண்டாள் என பெருவயர்  தொகுத்திருந்த குறிப்புகளை ஆதிரை படித்துக்  கொண்டிருந்தாள்.  பெரும்  நிரையாக சுனத வனம்  அடைந்த ஆதிரையிடம் ஏற்கனவே  சுனத  வனத்தை ஆண்டு கொண்டிருந்தவர்கள் பணிந்தனர். பேரழகியெனவும் பேரன்னையெனவும் ஒரே நேரத்தில்  திகழ்ந்தாள் ஆதிரை. அவளைக் காமுறாதவனும் என சுனத வனத்தில்  யாரும்  இருக்கவில்லை. சுனத வனத்தில்  ஒவ்வொரு  பெண்ணும்  ஆதிரையெனவே எண்ணினாள். ஒவ்வொரு  ஆணும்  தன்னவளை ஆதிரையென்றே எண்ணிப் புணர்ந்தனர். ஒவ்வொரு  குடிலிலும் தான்  புணரப்படுவதை தனித்து நோக்கி நின்றாள்  ஆதிரை. விடியலில்  அவள் முகம்  காணும்  போது எழும் குற்றவுணர்வை மறைக்க அவளைத் தொழுதனர். அவள் முகம் பார்க்கக் கூசினர். அக்குற்றவுணர்வு கொடுத்த உந்துதல் பெண்களை  இரவுகளில்  மேலு‌ம்  மேலு‌ம்  ஆதிரையாக்கியது. ஆதிரையாகி தன்னவனை வென்றனர். வெற்றியின்  உச்சத்தில்  அவ்வெற்றிக்காக கூசி அழுதனர்.
ஒரு நாள்  அனைத்தும்  உதறி எழுந்தாள் ஆதிரை. இன்னொரு  உயிரின் இறப்பில் தோன்றும்  ஆனந்தத்தை  மறைக்கவே நாம் கதறி அழுகிறோம் என்று  ஆதிரை எண்ணினாள். அவ்வெண்ணத்தின் எடை அழுத்தவே தலையை உதறிக் கொண்டாள். சுனத வனம்  ஆதிரை வனம்  நீங்கிய அன்று கதறி அழுதது. பெண்கள்  உடலில்  பரயிருந்த இறுக்கம் தளர்ந்து இயல்படைந்தனர். ஆண்கள்  கொடுங்கனவிலிருந்து மீண்டதாக எண்ணிப் பெரு மூச்சு  விட்டனர்.
அலுவல் முடிந்த ஒரு நாளில்  ஆதிரை அலங்கனைக் கேட்டாள்.
"தந்தையே முற்றாகத் துறந்தவர் சுனதன். அவருக்கெனவே அனைத்தையும்  துறந்தவர் சுகத்யை. அவர்களிருவம் இறந்த பின் சுனத வனம்  நீங்கிய  பேரன்னை ஆதிரை  என்ன எண்ணியிருப்பார். தனக்கு யாருமில்லையே என்று ஒரு நொடி அவர் உள்ளம் அதிர்ந்திருக்காதா?" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதிரையின்  கண்கள்  பனித்து விட்டன.
"இல்லையம்மா  மானுடம் வாழ சிலர் தங்களை  அழித்துக் கொண்டே ஆக வேண்டும்" என ஒரு பழைய சொற்றொடரை சொன்னார்  அலங்கன்.
சீற்றம்  எழுந்தவளாக "மூடர்களே  உங்கள்  கீழ்மைகளை மறைக்க உயர்ந்தவர்களை தெய்வமாக்காதீர்கள். அவள் கண்ணீரை இன்று உணர்கிறேன். என் தமையனை  கொன்றேன் நான். என் தலையை அறுத்தெறியும் வெறி எழுந்திருக்க வேண்டாமா உன்னுள்? எப்படி ஒன்றும்  செய்யாமல்  அமைந்தால்  உன் மனைவி? அன்று இறந்தது அவள் மகனல்லவா? உங்களோடு உழன்றால் நீங்கள்  கொடுக்கும்  பட்டங்களை சுமந்து நானும்  இறந்தழிவேன். இன்றே புறப்படுகிறேன். பேரன்னை ஆதிரையின்  பாதங்கள்  எனக்கு வழிகாட்டும். நம் குலத்திலும் சுனத வனம்  கடந்து எவர்தொடாமேட்டின்  உச்சியை  அடைய நினைத்து  இறந்தவர்கள்  உண்டு. என் முடிவும் அதுவெனில் அப்படியே  ஆகட்டும்" என்று சொல்லி குடி நீங்கினாள் ஆதிரை. இரண்டு  வருடங்கள்  குடித்தலைவியாய் கட்டுண்டவள் மெல்ல மெல்லத் தளர்ந்தாள். சுனதன்  மட்டுமே  சென்றிருந்த எவர்தொடாமேட்டின்  உட்காடுகளுக்குள் சென்ற எவரும்  மீண்டதில்லை. பேரன்னை ஆதிரை உட்பட. மீளா வழி தேடி புறப்பட்டாள் ஆதிரை. அறிக பசுமை என்பது நஞ்சும் தான்.
பாணன் நிறுத்தினான்.
"தொடர்க" எனக் கையசைத்து எழுந்து நடந்தான் வன்தோளன்.

பெருஞ்சுழி ஒரு பிழை திருத்தம்

நண்பர்களுக்கு வணக்கம்

பெருஞ்சுழி  அத்தியாயம்  27-ல்  26-வது  அத்தியாயமே  திரும்பவும்  பதிவிடப்பட்டுள்ளதை  இப்போது தான் கண்டறிந்தேன் . இடையில் நிகழ்ந்த குழப்பமாகவும்  இருக்கலாம் . இப்போது சரி செய்துவிட்டேன் .தொடர்ந்து வாசிப்பவர்களிடம்  மன்னிக்க வேண்டுகிறேன் .

சுரேஷ்  ப்ரதீப்  

Friday 22 July 2016

பெருஞ்சுழி 35

படகின்  அமர முகப்பில்  அமர்ந்து வேடிக்கைப் பார்த்து வந்தான் இரண்டரை வயது சிறுவனான வன்தோளன். எவர்தொடாமேட்டின் கிழக்கில்  உற்பத்தியாகும்  மதீமம்  சுனதபாங்கத்தின்  வழியாக தனல்வனம்  மிதஞ்சிகம்  தென்நுழைபுனல்  வழியாகப் பாய்ந்து  கடலில்  கலக்கும். மிதஞ்சிகத்திற்கு நட்புமுறைப் பயணமாக சென்றிருந்தது சுனதபாங்கத்தின்  அரசு நிரை. ஒரு வயதிலிருந்தே ஆசிரியர்களையும்  அமைச்சர்களையும் பார்த்தே வளர்ந்திருந்தான் வன்தோளன். சிறுவர்களின் பொருளில்லாப் பேரின்பங்களை அறியாத குழந்தையாய்  வளர்ந்தான். உப்பரிகையிலிருந்து எட்டிப்  பார்க்கையில்  ஒருவேளை  உணவிற்கும்  வழியில்லாத சிறுவர்கள்  கையில்  விளையாட்டுப்  பொருட்கள்  ஏதுமின்றி கூவிச் சிரித்து விளையாடுவதை அவனால்  புரிந்து கொள்ள முடியவில்லை.

மிதஞ்சிகத்தின் அரண்மனை  சிறுவர் நிரை அவனை உள்ளிழுத்துக்  கொண்டது. தன்னுள்  இருந்து வெளிப்படும்  துள்ளலையும் மகிழ்வையும்  இன்னொருவன்  என உவகையுடன்  பார்த்து நின்றான் வன்தோளன். அகல்யை  அவற்றை விரும்பவில்லை. சுனதபாங்கத்தின் கரை நெருங்கிய போது அமர முகப்பில்  துள்ளலுடன் அமர்ந்து கால்களை  ஆட்டிக் கொண்டிருந்தவனை ஆற்றில்  தூக்கி வீசி எறிந்தாள். ஆறு வயது சிறுவனின்  உடல் நீளம் கொண்டிருந்தாலும் அரண்மனையின் நீச்சல்  குளங்களில்  பயின்றிருந்தாலும் மதீமத்தில் விழுவது அவன் வயதிற்கு  தற்கொலையே. மூழ்குவதற்கு முன் சில நொடிகள்  அவன் விழிகள் அகல்யையின் விழிகளை சந்தித்தன. தெய்வங்களும் அறியா தனி மொழியில் அவை பேசிக் கொண்டன. விகந்தர்  பதறி ஓடி வந்தார். ஆயிரம்  வீரர்கள்  மதீமத்தில்  இறக்கப்பட்டனர். கைகளை இடுப்பில்  பொருத்தியவாறு கருங்கூந்தல் அலையடிக்க ஆற்றைப் பார்த்து  நின்றிருந்தாள்  அகல்யை. அரச நிரையினர் அவள் மீது வசைகளைப் பொழிந்தனரே ஒழிய அவளை நெருங்கும்  துணிவு யாருக்கும்  இருக்கவில்லை. வீரர்கள்  ஒவ்வொருவராக உளம் சோர்ந்து கரை திரும்பினர். விகந்தரும் துக்கத்தை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருந்தார். மதீமத்தின்  ஆழங்களில்  மட்டுமே  கிடைக்கும்  ஒரு மீனை அவர்கள்  முதலில்  கண்டனர். ஐந்தடி நீளம் கொண்ட அதன் தலையை கண்டபோது அதனை சுமந்து வருபவன் வன்தோளன் என யாரும்  எண்ணவில்லை. நீர்க்கொடிகளால் உடலில்  கட்டப்பட்டிருந்த  மீனை அவிழ்த்து எறிந்த பின் ஒருவரையும்  திரும்பி நோக்காது நாகத்தை அஞ்சிப் பதறும்  கூட்டமென மக்கள்  வழிவிட நிமிர்ந்து சென்று அரசணித் தேரில்  ஏறிப் புறப்பட்டான்  வன்தோளன். அதன்பின்  அவனைக் காண்பது  அரிதாயிற்று. சுனதபாங்கத்தின் அடர் காடுகளில்  குடிலமைத்து வில்லும் வாளும் சொல்லும்  பயின்றான் வன்தோளன். சுனதபாங்கத்தின் சிறந்த வீரர்கள்  அவன் பக்கம்  நின்றனர். அவனுடைய  ஆணைகள்  மட்டுமே  அரண்மனை  அடையும்.

ஆதிரை  சவில்யத்தை  கைப்பற்றிய பிறகு வன்தோளனை அவ்வப்போது நாட்டில்  காண முடிந்தது. மாரதிரனின்  அரசி மோதமதி  விகந்தரின் தங்கை. அவள் புதல்வர்களை மூன்று  வருட அகச்சிறைக்குப் பிறகு விடுவிக்க ஆதிரை  உளம் கொண்டிருப்பதாக சவில்யத்தின் தூதுவர்கள்  தகவல்  கொணர்ந்திருந்தனர். அதன் பின்னர்  நடக்கும்  முதல்  அவை கூடலில்  தான் கலந்துகொள்ளவிருப்பதாக வன்தோளன்  விகந்தருக்கு தகவல்  அனுப்பிருந்தான். விகந்தரின் மணிமுடியை  எந்நேரமும்  எடுத்துக்  கொள்ளும் படை பலமும்  மக்களின்  ஆதரவும் இருந்தும்  வன்தோளன்  அரியணை அமர விரும்பவில்லை. விகந்தரை ஈட்டி  முனையில் நிறுத்தவே அவன் அரியணை  கொள்ளாமல்  இருப்பதாக  பேசப்பட்டது.

அழுத்தமான  காலடிகளுடன் பருத்திச் சால்வையை உடலில்  போர்த்தியவாறு இடப்புற மீசையை வலக்கையால் நீவியபடி பீடத்தில்  அமர்ந்தான்  வன்தோளன்.

சாதாரண  அவை நிகழ்வுகளை  விவாதிக்கும்  போதே அனைவருள்ளும்  ஒரு இறுக்கம் பரவியிருப்பதாக விகந்தர் எண்ணினார். முக்கிய  நிகழ்வுகள்  சிற்றமைச்சர்களால் விளக்கப்பட்ட பின் பிரதான  செய்தியான மோதமதியின் மைந்தர்களை சவில்யம்  ஏற்றுக் கொள்ளவது பற்றிய முடிவினை நோக்கி விவாதம் திரும்பியது.

முதலமைச்சர்  காமீயர் "மன்னருடன் ஆழிமாநாட்டின்  பெரு வீரரும்  நம் இளவரசருமான வன்தோளர் அவை அமர்ந்திருப்பதைக் காணும்  பேறு பெற்றவர்களானோம். சவில்யத்தின்  அரசி ஆதிரை  நம் குலம் பிறந்தவரான மோதமதியின்  புதல்வர்களை சுனதபாங்கம்  அனுப்ப விரும்புவதாக தகவல் அனுப்பியுள்ளார். அவை ஒப்புதல்  கேட்டு..."என்று தொடரும் போதே பல குரல்கள்  அவரை மறித்தன.

பிரதானமாக  "அரசி என்றா சொல்கிறீர்கள்?  இரவோடிரவாக மாரதிரன்  தலை வீழ்த்திய தந்திரக்காரி. அவள் மகனை எவனுக்கு  ஈன்றாள் என இன்று வரைத் தெரியவில்லை. சவில்யத்தை விட மும்மடங்கு  பெருந்தேசம் சுனதபாங்கம். இருந்தும்  அவளுடன்  போர் புரிய  எழாமல் பயந்து இருக்கிறோம். நம்மை இழிவுபடுத்தவே மோதமதியின்  புதல்வர்களை இங்கனுப்புகிறாள். இதைக் காரணம்  எனக் கொண்டே சவில்யக் கோட்டத்தின்  மீது படை கொண்டு  செல்வோம்" என்றார்  வணிகர் தலைவரான  புவந்திரர்.

காமீயர்  தொடர்ந்தார். "உங்கள் கோபம்  புரிகிறது  புவந்திரரே. ஆதிரையின்  நோக்கம் என்னவென்று  புரியாமல்  சில மாதங்கள் படை கொண்டு செல்ல சுனதபாங்கம்  தவிர்த்தது  உண்மைதான். ஆனால்  அந்த இடைவெளி ஆதிரைக்கு போதுமானதாக இருந்தது. முப்பக்கமும் நிலங்களால் சூழப்பட்ட தேசம்  சுனதபாங்கம். ஆனால்  சவில்யத்தின்  மேற்கே ஆழி விரிந்து கிடக்கிறது. பெரு நாவாய்கள்  கட்டப்பட்டு இதுவரை ஆழிமாநாட்டில் எத்தேசமும் சென்றதை விட பல மடங்கு அதிக தூரத்திற்கு  சவில்யத்தின்  பயணங்கள்  விரிந்திருக்கின்றன. மேலு‌ம்  தெற்கு வரை அத்தனை  கடலோர நாடுகளிலும்  கடல் வழியாகவே வணிகத்தை  முடுக்கி விட்டிருக்கிறார் ஆதிரை. மாரதிரன் தனக்கு நெருக்கமான  ஒரு குறுங்குழுவுக்கு மட்டுமே  நன்மை விளைவிப்பவராக இருந்தார். அதிருப்தி  கொண்ட பல குழுக்கள்  திருமீடத்திற்கும் ஆநிலவாயிலுக்கும் மாரதிரனை வீழ்த்த படை வல்லமை கோரி தூது அனுப்பின. சுனதபாங்கத்தின்  தலையீட்டால்  மட்டுமே  சவில்யம் நீடித்தது. மாரதிரனை அகற்ற எழுந்த தெய்வமென்றே ஆதிரை  சவில்யத்தின்  குடிகளுக்குத் தெரிகிறாள். மேலு‌ம்  கடல் வணிகம் உயர்ந்ததாலும் புராதன   வணிகக் கட்டுப்பாடுகள் தளர்ந்ததாலும் திறனும்  பொருளும் இருப்பவர் வணிகம்  செய்யலாம் என்ற நிலை சவில்யத்தில்  நிலவுகிறது. கடலோர தேசங்களில்  இருந்தும்  ஏன் சுனதபாங்கத்தில் இருந்தும்  கூட சவில்யம்  நோக்கி குடிகள்  இடம் பெயர்கின்றன. உங்களைப் போன்ற புராதன  வணிகர்களின் அதிகாரத்தை நீக்கினாலே சுனதபாங்கம்  மேலெழ முடியும்  என மன்னருக்கு  பலமுறை  நான்  அறிவுறுத்தி இருக்கிறேன். இப்போது கூட உங்கள்  வணிக முறைகள்  பாதிக்கப்படுவதாலேயே நீங்கள்  கொதிக்கிறீர்களே ஒழிய சனதபாங்கத்தின் மீதான  பற்றினால் அல்ல  என இங்கு  அனைவரும்  அறிவோம். ஆகவே  நடக்க வாய்ப்பிருப்பவற்றைப் பேசலாம்" என நிறுத்தினார்  காமீயர். அவரில் வெளிப்படும்  நிமிர்வு வன்தோளனின் இருப்பால் என அனைவரும்  உணர்ந்தனர். இத்தகைய  நேரடித் தாக்குதலை எதிர்பார்க்காத புவந்திரர்  தலை குனிந்து சொல்லவிந்து அமர்ந்திருந்தார். வன்தோளன் எண்ணும்  வார்த்தைகளை அவையில்  உச்சரிப்பதன்றி தனக்கு  வேறு வழியில்லை  என உணர்ந்தார். வன்தோளனின்  முதன்மைச் சேவகன் அவை நுழைய  அனுமதி கோரினான். அங்கு நடப்பவற்றுக்குத் தொடர்பற்றவனாக மீசையை நீவியபடி சாளரங்களுக்கு வெளியே  பார்த்து  அமர்ந்திருந்தான் வன்தோளன்.

முதன்மைச் சேவகனுடன் கனவில்  மிதக்கும்  விழிகள்  கொண்ட பாணன் ஒருவன்  நடந்து வந்தான். அவையின்  அத்தனை  விழிகளுடன்  அவனே வெறுத்தன. அதற்கு காரணம்  தாங்கள்  ஏதோவொரு  கணத்தில்  இழந்தவிட்ட குழந்தைமை இன்னும்  அவன் விழிகளில்  மின்னுவதே எனத் தெளிந்தனர். அவன் உதடுகள்  முனுமுனுத்த வண்ணமே இருந்தன. அவனை ஒரு பீடத்தில்  அமரச் செய்தான் வன்தோளனின்  முதன்மைச் சேவகன். அன்னையின்  மடியில்   சிரிக்கும்  குழந்தை போல் ஒருக்களித்து  பீடத்தில்  அமர்ந்து கொண்டான். சேவகன் அவையை வணங்கி "அவையீரே நம் இளவரசர்  வன்தோளர் தன் தந்தை இந்தப் பாணனின்  சொற்களை கேட்க வேண்டுமென விழைகிறார். அவை ஒப்புதல்  அளிக்குமா?" என்றான். அதிலிருந்த  அப்பட்டமான  கட்டளை விகந்தரை எரிச்சல்  கொள்ளச் செய்தது. முகத்தை  முடிந்தவரை கனிவுடன்  வைத்துக்  கொண்டு  "ஆகட்டும்" என்றார்.

பாணன் அதற்குள்  உறங்கிப் போயிருந்தான். அவனுடைய  கிணையை மெல்லச் சுண்டினான் தலைமைச் சேவகன். பத்தி விரித்த நாகமென விழிகள் ஒளி கொள்ள எழுந்தமர்ந்தான் பாணன்.

"பசும்பரப்பு. பனிவெளி" கம்பீரமாக  எழுந்தது அவன் குரல். "அவையீரே  அறிக. ஞானம் என்பது  வெண்மை. வீரம்  கருமை. வேகமே செந்நிறம். ஞாலம் என்பது நீலம். இவை அனைத்தையும்  அளிக்கும்  தாய்மையே பசுமை" பாணன் சொன்னான்.