Wednesday 20 July 2016

பெருஞ்சுழி 33

“நீ  செய்வதை  உணர்கிறாயா?” என்று  ஆதிரையை  நோக்கிக் கேட்டார்  தெரிதர். அவரே எண்ணி வியக்கும்  அளவுக்கு  அவர் குரலில்  பணிவும்  எச்சரிக்கையும் மிகுந்திருந்தது.
“அறிவேன்  தந்தையே. என் செயல்கள் குறித்து முதிர்ந்த  இவ்வயதில்  நீங்கள்  ஊகித்தறிவதை விட  நானே  விளக்கி  விடுகிறேன்  அமருங்கள்” என ஒரு மரப்பீடத்தினை எடுத்து போட்டு  தெரிதரின்  வலக்கையை  மென்மையாகப் பற்றி  அமரச்  செய்து  தரையில்  ஆதிரை  அமர்ந்து  கொண்டு  தெரிதரின்  கால்களை  பிடித்துவிட்டுக் கொண்டே  பேசலானாள். அவள் இதழ்களில்  இளநகை ஒட்டியிருந்தது. அவள் விடுப்பது அன்பனா ஆனால்  உறுதியான  கட்டளை 'வயதாகிவிட்டது  விலகி விடு'. அந்நேரமே அவள் கழுத்தை முறித்து கொன்று போடும் வெறி எழுந்தது  தெரிதருக்கு. "ம்" என மீசையை நீவியபடி கோபத்தை அடக்கினார் தெரிதர்.
“தந்தையை  என் தோளில்  ஏற்றி எரியூட்டிய தினத்திலிருந்து  நீங்கள்  நிலையற்று இருந்தீர்கள். உங்களை  கட்டுப்படுத்த நீர் தாவரங்களில்  உருவாக்கிய  ஒரு பானத்தினை கொடுத்து  உறங்க  வைத்தோம். தொடக்கத்தில்  உங்கள் துணையின்றி  எப்படி  ஆழிமேட்டு  சாசனத்தினை புரிந்து  கொள்வதென வருந்தினேன். நாட்களை  வீணடிக்க விரும்பாமல்  அச்சுவடியை நானே  கையிலெடுத்தேன்.அதன் பிறகு  உங்கள்  உடல்  தேறிய  பின்னும்  அந்த  பானத்தினை  கொடுத்து  உங்களை  நானே  உறங்க  வைத்தேன்.  தந்தையின்  ஆழிமேட்டு  சாசனம் ஆழிமேட்டின்  நிலங்களின்  தன்மையையும்   விளைபொருட்களின் தன்மையையும்  விளக்கும்  ஒரு நூல்.  பகுத்துண்டு வாழ்வதை  மட்டுமே  தந்தை  அறிந்திருந்தார். பெருஞ்சுழியில்  தப்பியவர்கள்  சுனத வனத்தினைத் தவிர வேறெங்கும் பெருங்குடிகளாக இல்லையென அவர் நினைத்திருந்தார். ஆனால்  ஆழிமேட்டின்  மையத்திலும்  தெற்கிலும்  தப்பியவர்கள்  உண்டு.  அவர்களின்  குடிகள் தொடர்ந்து பெருகுகின்றன. தந்தையின் எண்ணம்  ஈடேற  நாம்  வெகு தொலைவு  செல்ல  வேண்டும்  என்பதை  உணர்ந்தேன்.  நான்  சுனதனின்  குருதி. உடலென அவர் சீற்றமும் ஆணவமும் பிறந்தெழ சுகத்யை தேவைப்பட்டாள். அது போலவே  ஆழிமேட்டு சாசனம் என் கையில்  கிடைக்க  சுனதனின்  அறிவும்  தெளிவும்  என்னுள்  இறங்கத் தேவைப்பட்ட  கலம் மட்டுமே  நீங்கள்  என்பது  அதனை படிக்கத்  தொடங்கியதுமே உணர்ந்து  விட்டேன்.  சுனதனின்  பாதங்கள்  உணர்ந்ததை என்றோ என்  பாதமும் உணர்ந்தது. அவன்  விழிகளின் பரவசத்தில்  என்றோ என்  கண்ணும்  வழிந்தது. எரிபாலையை நீங்கள்  கடந்த போது  என் தோல் பொசுங்கியது. குளிர் வாட்டும்  ஏரியில்  சுனதன்  மூழ்கியெழுகையில் என் உடல் உறைந்தது. ஆழிமேட்டின்  எல்லைகளை  என் அகம்  கண்டெடுத்தது. இவ்வளவு  துல்லியமான  நில அளவை  மாவலியர்  கையில்  கிடைத்திருந்தால்  என்றோ  சுனதனை  வீழ்த்தி  தன் குடியையே ஒட்டுமொத்த  ஆழிமேட்டிற்குமான தலைமை  கொண்டதாக மாற்றியிருப்பார். என் தந்தையின்  வாழ்நாள் தவம்  இச்சாசனம். சுனதனைப்  போன்ற  வல்லமை  பொருந்தியவர் மட்டுமே  இதை  கருணையோடு  நோக்க  முடியும். ஒரு  வீரன்  நிச்சயம்  இதனை கைக்கொண்டு மண் வெல்லவே நினைப்பான்.  அதனால்  தான் ஆய்வும் வளர்ச்சியும் கோரும்  ஒரு நூலினை அசைக்க முடியாத கட்டளைகளாய் மாற்றினேன். ஆழிமேட்டு சாசனத்தை சுனத சாசனம்  ஆக்கினேன். ஆழிமேட்டினை ஆழிமாநாடு  என்றாக்கினேன். நூற்றியிருபது  நாடுகளின்  பெயர்களையும்  நானே  உருவாக்கினேன். அதன்  எல்லைகளையும்  அவற்றின்  கட்டுப்பாடுகளையும்  நானே  வகுத்தேன். உங்கள்  இருவரின்  பதினைந்து  வருட  கடும் உழைப்பினை அறுபது நாட்கள்  அதனினும்  கடுமையாக  உழைத்து  முழுமையாக்கினேன். இயற்கை  எனும்  பெருங்கருணையின்  முன்  சுனதனும்  தெரிதனும்  மாவலியனும்  ஆதிரையும் ஒன்றுமில்லை.  ஆனால்  அதன் விளையாட்டின் முன் அடிபணிய  நாம்  ஆணவம்  ஒப்பவில்லை.  அதனால்  தான்  பெருஞ்சுழியில்  சிக்கி  மீண்டும்  இயற்கையை  ஒரு அறைகூவலாய் ஏற்று  சுனதன்  ஆழிமேட்டின்  தன்மை காண  புறப்பட்டான்.  அந்த ஆணவத்தினால் தான் தன்னை விட தாழ்ந்தவனிடம் தன்னை  திறந்து  வைத்ததற்காக  கூசி மாவலியர்  உயிர்  துறந்தார்.  சுனதனின்  ஆணவத்தை  வென்றால்  மட்டுமே  உங்கள்  ஆணவம்  நிறைவுறும் என்ற  எண்ணத்தால்   உந்தப்பட்டே நிழலினும் அதிகமாய்  சுனதருடன்  இருந்து  அவர்  அசைவுகளை அங்குலங்களாய் நீங்கள்  அறிந்தீர்கள். அந்த  ஆணவத்தால்  தான்  நான்   ஆழிமேட்டு  சாசனத்தின்  கூறுகளை  மாற்றினேன்…” என ஆதிரை  சொல்லிக்  கொண்டிருக்கையில்  தெரிதர்  தன கை வாளினை  கழுத்தில்   பாய்ச்சிக் கொள்ள முயன்றார்.
 ஆதிரை  அவர்  கையை  பிடித்து  நிறுத்தி  “இப்போதும் இளையவள் ஒருத்தியின்  முன் உங்கள்  ஆணவம்  புண்படுகிறதென்றே உயிர் விட  நினைக்கிறீர்கள். சுனதனை  கொன்ற குற்றவுணர்வு  என்று  உங்கள்  உயிர்  பிரியும்  போது உங்கள்  ஆணவத்துக்கு திரை  போட்டு  புனிதப்படுத்த  முயல்கிறீர்.” என்றாள்  தீர்க்கமான  விழிகளுடன்.  அவள் பிடியின் அழுத்தம் வலிக்கவே தெரிதர்  உடல் தளர்ந்தார்.
“ எனக்கு   நீங்கள்  இருவருமே  உயர்ந்தவர்கள்  தந்தையே.  தன்  உயிர்  பறிக்கும்  எண்ணத்தை  தன் உள்ளாழத்தில் கொண்டிருக்கும்  ஒருவரோடே வாழ்ந்தார்  சுனதர். சுனதரின்  உயிர்  பறிக்க  நினைத்தும்  அவர் உடலின்  ஒரு பகுதியாய் மாறிவிட்ட  நீங்கள். உங்கள்  கையில்  இறக்கவில்லை  என்றால்தான்  சுனதரின்  ஆணவத்திற்கு இழுக்கு. தான்  யாருக்கும்  கடன்பட்டவனல்ல என்ற  முற்றாணவத்துடன்  அவர் இறந்தார்.” என்றபடியே  தொய்ந்து அமர்ந்திருந்த  தெரிதரை கைதாங்கலாய் அழைத்துச்  சென்று  படுக்கையில்  கிடத்தினாள்.
தான் முதிர்ந்து விட்டதாய் தெரிதர்  உணர்ந்தார். ஆதிரையின் ஒவ்வொரு  அசைவிலும் தெரிந்த நம்பிக்கை  அவரை அச்சுறுத்தியது.
"ஆதிரை  இன்று நாம்  ஆழிமேட்டின்  மையத்தில்  இருக்கிறோம். நம் குடியினரோ சில ஆயிரம்  பேர் மட்டுமே. உன்னிடம்  இருப்பது  நிலங்களின்  தன்மையையும்  பருவ மாற்றங்களையும்  ஆய்ந்து  உருவாக்கப்பட்ட ஒரு நூல். ஒரு குடிக்கு உத்வேகம்  அளித்து இப்பெரு நிலத்தில்  பரவச் செய்ய  இச்சாசனம்  போதும்  என எண்ணுகிறாயா?" என்றார் தெரிதர்  ஏளனமும் வெறுப்பும்   கலந்த குரலில்.
அவர் நெஞ்சை வருடிவிட்டவாறே ஆதிரை  பேசினாள்.
"உங்களின்  இவ்வறியாமை நான் ஊகித்தது தான்  தந்தையே. சுனதரும் இப்படியே எண்ணியிருப்பார். கனவிற்கும் நனவிற்கும் இடையே தடித்த சுவர் இருப்பதாய் நம்பியவர் தந்தை. நீங்களும்  அப்படியே. என் கனவுக்கும் எனக்கும் இடையே நான்  காண்பது பனிப்படலங்களையே. பெண் தன்னை காதலிப்பவனை விட திறம்படக் கையாள்பவனையே எளிதில்  ஏற்பாள். நிலமும்  அப்படியே. இங்கு பரவும் குடிகள்  தங்கள்  நிலங்களை  வணங்குபவர்கள். சுனதன்  தன்  உள்ளாழத்தில்  நிலத்தினை  வெல்ல நினைத்தவன். அவன் உருவாக்கியது இச்சாசனம். படை கொண்டு சென்றோ பலம் கொண்டு பொருந்தியோ ஆழிமாநாட்டின்  நாம்  வென்றெடுக்கப் போவதில்லை. நரம்பில் ஏறும் நஞ்சென எலும்பைக் குதறும் குளிரென பற்கள்  கிட்டித்துப் போகும்  கூச்சமென சுவாசம் நிறுத்தும் எரி சாம்பலென பரவும்  துயரவர் நிரை. அறத்திற்கும் அன்பிற்கும்  துணை நின்றனர் துயரவர். என்ன  நிகழ்ந்தது  அவர்களுக்கு? ஏளனம்  செய்தனர். கொன்று வீழ்த்தினர். விலகி ஓடினான்  மாசறியான். விட்டார்களா? 'காத்தருளுங்கள்' எனத் துரத்தினர். அருளல் முடிந்ததும் அவன் குலத்தையும் துரத்தினர். முடிந்தது  தெரிதரே. இனி இந்நிலம்  அணிவகுக்கும் ராணுவம்  எனத் திரளும். ஆணையென  சுனதனின்  சொல் நிற்கும். அச்சொல்லின் காவலென ஆதிரை  நிற்பாள்." என எழுந்தாள் ஆதிரை.
தெரிதர் அவள் வலக் கையைப் பற்றினார். முகம் கனிந்து அமர்ந்தாள்  ஆதிரை.     ஓசையின்றி  தெரிதர்  அவள் முகத்தை  வருடினார். ஆதிரை  அவர்  கைகளைப்  பற்றிக்  கொண்டாள். “ நீ உனக்கே சொல்லிக்  கொள்ளும்  சமாதானங்கள் குழந்தை  இவை.   நீ அறிவாய் உன்னுள்  ஊறும்  கனவுகளுக்கு  எத்தனை உயிர்களையும் பலியிட  உன் அகம்  தயங்காதென." ஆதிரை முகம்  முறுக்கவிழ்ந்தது. தெரிதர்  மெல்லப் புன்னகை  புரிந்தார்.
"உன் முகம் இன்னும்  மழலை  கடக்கவில்லை. ஆனால்  மனம்  என்னிலும்  முதிர்ந்துவிட்டது. ஏன் உன் தந்தையினும் முதிர்ந்த  மனத்தவள் நீ.  உனக்கு  களம்  அமைக்கவே  மாவலியனும் சுனதனும்  தெரிதனும்  சுகத்யையும்  பிறந்தது. இனி ஆழிமேடு  உன் களம். நீ  விளையாடு” என பெருமூச்சுடன்  கண் மூடி  உறங்கினார் தெரிதர்.  அவரையே  பார்த்து  நின்ற  ஆதிரை  அவர்  ஆழ்ந்த  உறக்கத்திற்கு  சென்றதும்  அவர் முகத்தில்  தெரிந்த  நிம்மதியின் ஒளி கண்டு  நிறைவுடன் வெளிவந்தாள். இருந்தும்  மனதின் மிக  ஆழத்தில்  ஒரு முள் குத்தியவண்ணமே இருந்தது.
மோதமதி  கதை சொல்லி முடிக்கும்  போது அரிமாதரன்  தூங்கிப்  போயிருந்தான்.

No comments:

Post a Comment