Monday 4 July 2016

பகடையாட்டம் யுவன் சந்திரசேகர் - ஒரு வாசிப்பனுபவம்

வாசகர்கள்  மீது கருணையே இல்லாத  எழுத்தாளராக  இருக்கிறார்  யுவன்  சந்திரசேகர். கொஞ்சம்  கவனம்  விலகினாலும்  புரியாமல்  போய் விடுகிற படைப்பு  பகடையாட்டம்.

இந்திய  சீன திபெத்  எல்லைகளில் அமைந்த புனைவு நிலமான ஸோமிட்ஸியா என்ற சிறு "சாம்ராஜ்யம்" தான்  கதைக்களம். உலகம்  தொடங்கியது முதல்  உலகப் போர்கள் வரை தொட்டுச் செல்லும்  படைப்பு. சுந்தர ராமசாமியின்  குழந்தைகள்  பெண்கள்  ஆண்கள்  நாவலில்  கவிஞர்களுக்கே உரிய ஒரு குளிரோட்டம் தெரியும். பகடையாட்டத்தில் அது பெருக்கெடுக்கிறது. புனைவு நிலமான  ஸோமிட்ஸியாவின் பூர்வ கிரந்தம் சிறு வயது முதல்  கேட்டு பரவசம் கொண்ட அத்தனை  கடவுளர் கதைகளையும் ஒரு கவிஞனின் எழுத்தில்  கூர்மையாக  முன்னிறுத்துகிறது.

இந்திய  எல்லையில்  நுழையும்  சிலருக்காக காத்திருக்கத் தொடங்குகிறார் மேஜர் க்ருஷ். அதற்கு  முன்பாகவே அவர் தோழர் நானாவதி கால்களை இழப்பது வீட்டை விட்டு வெளியேறுவது ராணுவத்தில்  இணைவது  நண்பர்  காலினை இழந்ததற்காக வெறி கொண்டு எதிரிகளை வீழ்த்துவது பதவி உயர்வு  பெறுவது என மேஜர் க்ருஷ்ஷின வாழ்க்கை  விரிவடைந்து விடுகிறது. அவ்வளவு  தான். க்ருஷ்ஷை மறந்து விடுகிறார்  யுவன். அதன்  பின் உலகின்  ஆதியாக ஒவ்வொரு  மதமும்  வரித்துக்   கொண்டிருப்பவற்றை தொகுப்பது போலத் தொடங்குகிறது பூர்வ கிரந்தம்.

ஸோமிட்ஸியாவின்  முதற் தந்தை ஸோமிட்ஸுவின் வழி புத்தனையும் ஜீஸஸையும் நபியையும் இணைத்துக்  கோடிழுப்பது போன்ற ஒரு கனவறிமுகம். அதன்பின்  சமகாலம். பாத்திரங்களின் உரையாடல்கள்  வழியாகவே அவர்களின் காலத்தை புரிந்து கொள்ள  முடிகிறது. ஆப்பிரிக்க மலையேறியான ஜூலியஸ் லுமும்பாவும் ஜெர்மானிய ராணுவ வீரனான ஹான்ஸ் வெய்ஸ்முல்லரும் சந்திக்கும்  இடங்களில்  தெறிக்கும்  உக்கிரம் கிழக்கும் மேற்கும் முட்டும் நடுக்கத்தை உண்டாக்குகின்றன. அவர்கள்  சந்திக்கும்  காலம் உலகப்போரின் உக்கிரம்  குறையாத காலம். பொதுவாக  உலகப்போர் தொடங்கி இந்திய-சீனப்போர் வரை காலம் என வகுத்துக்  கொள்ளலாம். லால் பகதூர் சாஸ்திரி  நேரு இந்திரா காந்தி  என இந்திய  நில அரசியலும்  தலாய்லாமா திபெத் மீதான சீன ஆதிக்கம்  என அக்கால வரலாற்றையும் ஊடறுத்துச் செல்கிறது 

ஸோமிட்ஸியாவின் இருபத்தாறாவது ஸோமிட்ஸுவை கண்டறிகிறார் ஈனோங். அரசாங்கம்  என்பதன் உள்ளோடும்  இரக்கமின்மையும் அதன் தேவையையும் எந்த இடத்திலும்  சப்பைகட்டு கட்டாமல் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். நிகழ்வுகளை கலைத்துப் போட்டு முன் பின் நகர்த்துவதன் வழியே வாசிக்கும்  ஒவ்வொரு முறையும்  ஒவ்வொரு சித்திரத்தை  இப்படைப்பு   உருவாக்கும்  என நினைக்கிறேன்.

சீனா தங்கள்  மீது போர் தொடுக்கலாம் என்ற பயத்தினால்  விடலை தாண்டாத இருபத்தாறாவது  ஸோமிட்ஸுவை  அழைத்துக் கொண்டு இந்தியா வருகிறார் ஈனோங். ஆப்பிரிக்க நம்பிக்கை மூத்த லுமும்பாவைக் கொள்கிறது. ஆசிய நம்பிக்கை  ஜூலியஸ்  லுமும்பாவைக்  கொள்கிறது. புலி அறைந்த  பாதி முகம்  கொண்ட லேக்கி ஸோமிட்ஸுவான மகனைப் பிரிந்த தாய் மனைவியால் கொல்லப்படும் பகதூர் சிங்  என ஆங்காங்கே  வந்து செல்பவர்களும் அழுத்தமாகப் பதிகின்றனர்.

ஒரு வார்த்தை கூட கூட்டிச் சொல்லி  விடக்கூடாது என கங்கணம்  கட்டிக்  கொண்டு எழுதுகிறார்  ஆசிரியர்.  தனித்தனியாக  தொங்க விட்ட நூல்களை இணைத்து ஒரு வரைபடம்  அதுவாகவே பின்னி வருவதை காண முடிகிறது. மேஜர் க்ருஷ்ஷை  பதினாறு  வயதான ஸோமிட்ஸிய மன்னரும்  அவர் பாதுகாவலர் ஈனோங்கும் "மன்னரின்" ஆசிரியர்  ஹான்ஸ்  வெய்ஸ்முல்லரும்  தனித்தனியே  சந்திக்கின்றனர். க்ருஷ் ஓய்வுபெற்றபின் வயதானவராக தமிழ்நாட்டில்  தன் மருமகன்  சந்திரசேகரிடம் நடந்ததை விவரிப்பதோடு முடிகிறது  பகடையாட்டம்.

"சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது" என தன் "பின்னுரையில்" சொல்லி  இருக்கிறார்  ஆசிரியர். தன் படைப்பின் வழி இக்கூற்றை நிரூபித்த பின் சொல்வதால் ஏற்காமல்  இருக்க முடியவில்லை.

ஊடறுத்துச்  செல்லும்  கதைப் போக்கிற்காகவே மறுமுறை  வாசிக்கலாம்  என்றாலும்  கொள்கை சார்பற்றவனின் மொழியில்  பேசுவதால் இயல்பாகவே  இன்னும்  நெருங்கி விடுகிறது  என்னை.

அவர் வார்த்தைகளிலேயே முடிக்கிறேன்
"நேரடி அரசியல்  கருத்துக் கள மோதலில் பங்கெடுக்காமல் விலகி நிற்பதும்  அழுத்தமானதொரு அரசியல்  செயல்பாடுதான் என தீர்மானகரமாக அறிவிக்கப்பட்டுவிட்ட காலகட்டம்  இது."

அக்காலத்தில்  ஒருவனாக  நானும்.

No comments:

Post a Comment