Tuesday, 5 July 2016

பெருஞ்சுழி 18

சுனதன்  மாவலியம்  நுழைந்து எட்டாண்டுகள் கழிந்திருந்தன. அவனை கண்டடைய முடியாமல்  திணறினர் ஒற்றர்களும் அமைச்சர்களும். தடங்களை  அழித்துச் செல்லும்  காற்று போல அவன் நிகழ்ந்தான். வந்ததன் அடையாளமன்றி வரும்  திசையோ மீளும்  திசையோ இல்லாமல்  ஒழிந்தது அவன் பயணம். இருக்கும்  போதே இல்லாமல்  ஆகிக்  கொண்டிருக்கும்  அவனை நோக்கியவாறே மலையேறிக் கொண்டிருந்தார்  தெரிதர்.
“தெய்வங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறோம் தெரிதரே" என வழக்கம் போல்  எந்தவித  முன் குறிப்பும் இன்றி சுனதன்  தொடங்கினான். தொடரட்டும்  எனக் காத்திருந்தார்  தெரிதர்.
"விரிந்த இப்புடவியில் துணையின்றி  கைவிடப்பட்டவர்கள் தெரிதரே நாம். இங்கு  நிகழக் கூடாதது என எதுவுமில்லை. நீங்கள்  உணர்ந்திருக்கிறீர்களா தெரிதரே எவ்வதிர்ச்சியையும் எத்தகைய  மீறலையும் நம் மனம்  தாங்கும்  என்று. அது மேற்பரப்பில்  உருவாக்கும்  அக நாடகங்களைக் கடந்தால் அதனால்  எதையும்  தாங்கிக் கொள்ள முடியும்  என்பதே பெரும் சோர்வளிப்பது இல்லையா?" என நிறுத்தினான். புரிந்தும்  புரியாமலும்  அவன் சொல்வதை கேட்டு வந்தார்  தெரிதர்.
"அதனால்தான்  நமக்கு கடவுள்  தேவைப்படுகிறார். நம் இறுதி நம்பிக்கையாக எஞ்சும் ஒரு பேராற்றல். நம்மால்  இயற்ற முடியாதவற்றை அது இயற்றும்  என நம்புவதால் நம்மால்  இயற்ற முடியாதவற்றை இயற்றிய மனிதர்களும்  அப்பட்டியலில் சேர்கின்றனர்." என்று தெரிதரை பார்த்தான்.
"நான்  அப்படி எண்ணவில்லை  சுனதரே. தன்னினும்  உயர்ந்த ஒருவனை நம் மனம்  ஏற்பதில்லை. நம் ஆணவம் புண்படுவதை தவிர்க்க  அத்தகையவர்களை கடவுளாக்கி விடுகிறோம்" என்றார்.
"நான்  அதனைக் கடந்து செல்லும்  ஒன்றையே காண்கிறேன்  தெரிதரே. மஞ்சாளினி தொடங்கி  எத்தனை  அன்னையரும் தந்தையரும் நம்மை கனிவுடன்  குனிந்து நோக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர் ஒவ்வொருவரின்  பாதத்தையும் என் சிரம் சூடுகிறேன்" என்றான். வறண்டு  கருகியிருந்த அம்மலையின் உச்சியை அடைந்து விட்டனர். பருத்திப் பையில் கிடந்த காய்கறிகளை உண்ணத் தொடங்கினான் சுனதன். தெரிதர்  மாவலியத்தை எண்ணத் தொடங்கினார்.
விழும் ஒவ்வொரு  கசையடியும் எதிர்ப்பின்றி ஏற்கப்பட்டது. மௌனமாய் வெறி கொண்டு  உழைத்தனர் மாவவியத்தின் குடிகள். நம்பிக்கை  என ஒன்று எஞ்சியிருப்பதாக நம்பினர். அரண்மனைக்  கருவூலம்  விரியத் தொடங்கியது. குற்றங்கள்  குறைந்து  கொண்டே வந்தன. அமைச்சர்களும்  வணிகர்களும் அரசுப் பணியாளர்களும் நிம்மதிப் பெரு மூச்சு விட்டனர். மாவலியர் கனவு  கண்ட மாவலியம் உருவாகிக் கொண்டிருந்தது. சமர்வரும் ஒற்றர்களும் சுனதனின்  இருப்பையே மறந்தனர். செழித்து வளரும்  கானகமென மாவலியத்தைக் கண்டு மகிழ்ந்தனர். அதன் ஆழத்து  வேர்கள்  இறுகி நெருங்குவதை அவர்கள்  உணரவில்லை.
"இலுப்பை  ஊற்றப்பட்ட பெரு நாவாயென காத்திருக்கிறது  சமர்வரே மாவலியம்" என்றார்  மாவலியர்.
திடுக்கிட்டுத் திரும்பினார்  சமர்வர். மாவலியரின் இறுக்கம்  வெகுவாகக் குறைந்திருந்தது. ஆற்றுவதற்கு ஏதுமற்றவர் என அமைதி கொண்டிருந்தார்.
திரன்யம் என்றொரு  கிராமத்தில்  இருபது  கசையடிகள் ஒருவனுக்கு  தண்டனையாக  வழங்கப்பட்டது. அடித்து  வெறி மீறியவனாய் இருந்த காவலன் ஒரு கசையடி அதிகம்  கொடுத்துவிட்டான்.
"ஏன் அடித்தீர்கள்  அவரை?" என முன் வந்து  கேட்ட சிறுவனை ஓங்கி அறைந்து விட்டு அடி வாங்கியவனிடம் சில நாணயங்களை  விட்டெறிந்தான். கசையடி பெற்றவன் மெல்ல எழுந்து அவனைச் சுற்றி சிதறிக் கிடந்த  நாணயங்களை பொறுக்கி காவலனிடம் கொடுத்தான். குழப்பத்தில்  கசையின் மீதான  அவன் பிடி நழுவியிருந்தது. தண்டனை பெற்றவன்  அக்கசையை பறித்து எண்ணிக்கை  சொல்ல  வேண்டியவனான காவலர் தலைவன் மேல் வீசினான். உடலை இரண்டு  சுற்று சுற்றிய கசை காவலர் தலைவனின்  அடி வயிற்றில்  இருந்து மார்பு வரை சதையை கிழித்து குருதி தெறிக்க  தண்டனை பெற்றவனின் கைக்கு மீண்டது. இலுப்பையின் முதல்  பொறி அது. பெரு நிலப்பரப்புக்கு நீர் செல்கையில்  மடையில் சகதி தேங்குவது இயல்பே. மாவலியரின் ஆட்சியிலும் சகதியாய் தேங்கி  நின்ற  ஓரினம் உருவானது. அவர்களை நோக்கித் திரும்பியது அடக்கி வைக்கப்பட்டிருந்த பெருங்கோபம்.
குடிகளில் இருந்து எழுந்த  ஒரு வீரனும்  யாரையும்  கொல்லவில்லை. கண்களில்  ஒளி மின்ன நடையில்  நிமிர்வு தெரிய வலம் வந்தனர். மாவலியத்தின் ஒவ்வொரு  காவலனும் அவ்விழி ஒளியை அஞ்சினான். மாவலியம் தன்னை மாற்றிக் கட்டிக் கொள்வதை பார்த்து மட்டுமே  நிற்க முடிந்தது  மன்னனாலும் அமைச்சர்களாலும்.
நிமிர்ந்தமர்ந்தார் மாவலியர்.
"அனிந்தரே எழட்டும் நம் படைகள். நிகழட்டும்  இறுதிப் போர்" என்றார்.
குடிகளுக்கும்  மன்னனுக்குமான போர் நிகழ்ந்தது. அழிவின்  உச்சம் என்று  அறிந்தார் சமர்வர். ஏதும்  ஆற்ற முடியாதவராய் வேடிக்கை  பார்த்தார். ஆனால்  மாவலியரின்  படை சென்ற இடங்கள்  அனைத்திலும்  புண்பட்டு மீண்டது. உணவின்றி வீழ்ந்தது. அரண்மனை  நோக்கி குடிகள் படையெடுத்தனர். அவர்களுக்குள்ளாகவே தலைமையும் உருவாகியிருந்தது.
தன் முன் சடசடத்துக் கொண்டிருந்த நெருப்பை நோக்கி சுனதன்  சொன்னான்.
"என்னுள்  ஒரு விழைவெழுகிறது. மாவலியரை நான்  காண வேண்டும். அவருள்ளும் இவ்விழைவு இருக்குமென நம்புகிறேன்".

No comments:

Post a Comment